Saturday 28 November 2009

ஒரு சந்திப்பு முறிவின் நினைவாக

நண்பனுக்கு – இது ஒரு திறந்த கடிதம்.

நீ சட்டென்று பேங்களூர் சென்று விட்டது அறிந்தது வருத்தம். மிக சுய நலமான வருத்தம். இங்கே இருந்த போதும் நாம் அடிக்கடி சந்தித்துக் கொண்டதில்லை தான். ஆனால் உன் அண்மை இருப்பு ஒரு ஆசுவாசம் தருகிறது. இதோ இப்போதே நான் குறும்பேசியில் பேச முடியலாம். வெளி அத்தனை சுருங்கியதாக இருக்கட்டும். ஆனால் தொலைதொடர்பின் வெளி அத்தனை காத்திரமாக இல்லை.



இது இரண்டாம் அல்லது மூன்றாம் முறை. நாம் சந்தித்து நீண்ட உரையாடல்கள் நிகழ்த்தின பின் உடனே வேறு ஊருக்கு சென்று விடுகிறாய்.

கல்லூரியில், நாம் ஒன்றரை வருடங்கள் சந்தித்து பழகியும் இறுதி கட்டத்தில் தான் நண்பர்கள் ஆனோம். ஒரே விடுதியில் இருந்தும் நாம் ஒரு உரையாடலுக்கு சந்திக்க திட்டமிட்டு அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. உனக்கு முடிந்தும் என் தேர்வுகள் தொடர்ந்தன. எனக்காக சில வாரங்கள் ஊருக்கு போவதை தள்ளிப் போட்டு விடுதியில் காத்திருந்தாய். இறுதியில் நாம் மைதானப் புல்வெளியில் சந்தித்து என்ன உரையாடினோம் என்று நினைவில்லை. பேச்சின் சுவை பொருளில் இல்லைதானே.

மற்றொரு முறை தண்ணி அடித்தபடி என்னுடன் பேச விரும்பியதால் பாருக்கு போனோம். இரவு பதினோரு மணி வரை பேசியிருப்பேன். அது போதாதென்று தன்னை ஒரு முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் என்று கூறிக் கொண்டவரை நட்பாக்கி அவர் தன் மகள் குறித்து கூறியதை இன்றும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு அப்பா தன் மகள் குறித்து ஒரு குடிகாரனிடம் குறிப்பிடுவாரா, அதுவும் இரவில், அதுவும் திருமணம் குறித்து. அடுத்து நினைவில் உள்ளது கிளம்புகையில் வண்டி மக்கர் செய்ய மாறி மாறி நாம் சொதப்ப ஆபத்பாந்தவன் தோன்றி மூக்கை பொத்திக் கொண்டு வண்டியை உதைத்து கிளப்பி விட்டார். மறு நாள் என்னிடம் சொன்னாய்: “நேத்து ரொம்ப எரிச்சலாய்ட்டேன், என்னை நீ பேசவே வுடல”. இப்படி ஆகும் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தது என்று தாமதமாக சொல்கிறேன்.

அப்பாவின் வற்புறுத்தலால் நீ சென்னையிலிருந்து கிளம்பி, பாளையங்கோட்டையில் பி.எட் ஒரு வருடம் தங்கிப் படித்த காலத்தை விரும்பியிருக்க மாட்டாய். அப்போது எனக்கெழுதிய கடிதத்தில் “சென்னையில் உன் கையை பிடித்த படி சுற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தாய். இப்போதுதான் நினைவு வருகிறது. நான் உன் கையை ஸ்பரிசித்ததே இல்லை. கல்லூரியில் ஒரு பெண்ணின் முத்தம் உதட்டுக்கு வந்ததை கூச்சத்தில் நான் கன்னத்தில் வாங்கியதை தான் இதுவரை நினைத்து வந்திருக்கிறேன். அந்த பெண் ரொம்ப தாமதமாக பிறகொரு நாள் தன்னுடன் மருத்துவமனைக்கு வருமாறு அழைத்தாள். அப்போது தற்போதைய மனைவியை கருத்தாக காதலித்துக் கொண்டிருந்தேன். நிறைய யோசித்து முடிவுக்கு வராமல் மறுத்து விட்டேன். சற்று கழித்து மற்றொரு தோழி இங்கிலாந்திலிருந்து திரும்பினாள். வரும் நாள் விபரம் சொல்லி விமான நிலையம் வரச் சொன்னாள். செல்ல வில்லை. பார் இதையெல்லாம் நினைத்து வந்திருக்கிறேன். நீ சொன்னதை …

இரண்டாம் மூன்றாம் முறைகள் நீ சென்னைக்கு முழுக்கு போட்டதும் இதே போன்ற நீண்ட சந்திப்பு அல்லது சந்திப்பு திட்டத்தின் பிறகு என்பதால் எனக்கு குற்ற-உணர்ச்சி ஏற்படுகிறது. அதனாலே இக்கடிதம். சகுனம் செரியில்லை. அல்லது வேறெதாவது சரியில்லை. இன்று படித்த சார்லஸ் சிமிக்கின் கவிதை ஒன்றில் கைக்கடிகார வட்டத்தை பறக்கத் துடித்தபடி அமரும் பட்டாம்பூச்சியுடன் ஒப்பிடுகிறார். எதற்கு வீணாக அலட்டிக் கொள்கிறேன். இது பட்டாம்பூச்சியின் தவறு. காலச்சக்கரம் சுற்றி வரும் போது நீ சென்னையில் இருக்க வேண்டும். அப்போது நாம் பிசிறின்றி ஆரம்பத்தில் இருந்து துவக்கலாம். புல்வெளியில் இருந்து டாஸ்மாக்கிற்கு. இம்முறை நீ ஏமாற மாட்டாய். நான் தண்ணி அடிப்பதை நிறுத்தி ரொம்ப காலமாகிறது.

என் காதலியாக மாறின பின் அவளை முதலில் மவுண்ட் ரோடில் சந்திக்க ஏற்பாடாகியது. ஒரு மணி நேரம் காத்த பிறகு அவள் நண்பி அழைத்து காதலியின் மாமா சுனாமி வந்ததாய் அச்சுறுத்தியதால் அவளால் வீட்டிலிருந்து கிளம்ப முடியாதாகையால் ரத்து என்று அறிவித்தாள். பிறகு சந்திப்புகளுக்கு எந்த தடையும் இல்லாமல் திருமணம் வரை சென்றது. இம்முறை சுனாமி நினைவு தினத்தன்று வெளியே செல்ல திட்டமிட்டு பிறகு கைவிட்டோம். மூட நம்பிக்கை காரணமல்ல. ஒரு சந்திப்பு முறிவின் நினைவாக.
Read More

Wednesday 25 November 2009

ஒரு வறண்ட நாளின் வளமையான பக்கங்கள்

இன்று எழுந்து காப்பி பல் துலக்கம் முடிந்து எழுதலாம் என்று அமர்ந்து பிடிக்காமல் இணையம் மேய்ந்து ... இதோ இப்போது இரவு 12:45-க்கு எழுதுகிறேன். காப்பிக்கும் இணையத்துக்கும் இடையே ஒரு கசப்பான ஞாபகம் தொந்தரவு செய்தது. எனது “இந்திய குறுக்குவிதிகளும் ...” கட்டுரை (http://thiruttusavi.blogspot.com/2009/11/blog-post_17.html) பற்றி புலன்விசாரித்து ஒரு நபர் என் நண்பரை அழைத்து அபிலாஷ் தெரியுமா உங்களைப் பற்றி எழுதியுள்ளாரே என்று போட்டுக் கொடுக்க நண்பர் ”என்னைப் பற்றி எழுதியதை என்னிடமே ஏன் சொல்லவில்லை” என்று கோபித்துக் கொண்டார். கட்டுரைகளில் குறிப்பிட்டதற்காக ஏற்கனவே இரண்டு நண்பர்களை இழந்த நான் நிஜமாகவே பயந்து போனேன். பதற்றத்தில் தத்துபித்தென்று உளறினேன். என் முகக்கலவரத்தை பார்த்து, என் உளறலைக் கேட்டு தவறாக ஊகித்த நண்பர் “என்னைப் பற்றி ஏதோ விவகாரமாக சொல்லியுள்ளீர்கள்” என்றார். அவரது ஆளுமை தவறாக பதிவாகி விட்டதோ என்ற கவலையில் நான் கூறிய இந்த முக்கியமான கருத்தை கவனித்தாரா தெரியவில்லை: “ நான் எழுதும் போது பார்த்தது, கேட்டு, படித்த உயிருள்ள உயிரற்ற பொருட்கள் வெறும் தரவுகள் தாம். நான் இத்தரவுகளை பற்றி எழுதுவதில்லை; ஒரு விவாதப் பொருளை, அவதானிப்பை அல்லது கற்பனையை நிறுவ இவை பயன்படுகின்றன, அவ்வளவே”. நேரடியாக / மறைமுகமாக குறிப்பிடப்படும் ஒரு தனி நபர் பற்றின சித்திரம் எத்தனை சரியானது என்பது பற்றி அந்த நபர் கவலைப்படுவது வீணானது. நம்மைப் பற்றின அடுத்தவர் மனதிலுள்ள பிம்பத்தை பற்றி எப்படி பொருட்படுத்தக் கூடாதோ அப்படியே இதுவும். பொதுவான அக்கறைகள் அல்லது தேடல் தவிர்த்து எனக்கு உங்கள் உலகம் குறித்தோ உங்களுக்கு எனது பற்றியோ கவலை இல்லை.



என்னைப் பற்றி ஜெயமோகன் தனது வலைதளத்தில் எழுதியிருந்த குறிப்பில் (http://jeyamohan.in/?p=3684) தகவல் பிழைகள் உண்டு. நான் ஏன் பொருட்படுத்த இல்லை என்றால் அவரது கட்டுரை அந்த தகவல்கள் பற்றியது அல்ல என்பதால். உதாரணமாக அவர் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் உரையாற்றின போது எனது சிவப்பு அபிமானம் காரணமாய் நான் அங்கு செல்லவில்லை என்கிறார். இரண்டுமே உண்மையல்ல. ஆனால் இப்பிழைகள் முக்கியமல்ல. காரணம் முதற்பத்தியின் கடைசி வரியில்.



நான் இதுவரை சொன்னதற்கு மற்றொரு பக்கமும் உண்டு என்பதை அறிவேன். கீஸ்லாவஸ்கி தனது Camera Buff படத்தில் படைப்புக்கும் அந்தரங்க மீறலுக்குமான உறவு பற்றி பேசியிருப்பார். இப்படத்தின் நாயகன் இனிமேல் பிறரை பதிவு செய்யக் கூடாது என்ற தீர்மானத்துடன் இறுதிக்காட்சியில் படக்கருவியை தன்னை நோக்கி திருப்பி ஓட விடுவான். ஊனம் பற்றின எனது சில கட்டுரைகளை பற்றி கூறுகையில் மனுஷ்யபுத்திரன் “இதில் பலவும் எனக்கும் நிகழ்ந்தன” என்றார். ”நீங்கள் எழுதியிருக்கலாமே” என்றேன். “பலரை காயப்படுத்த வேண்டியிருக்கும்” என்றார். விரல் சுட்டினாலே காயப்படுவது ஒருவித மனநோய். ஒரு பத்திரிகை ஆசிரியராக, பிரபல ஆளுமையாக, பிரதான கவிஞராக எத்தனை அனுபவங்களை இப்படி உறை போட்டு மூடியிருப்பார்.



சூழலின் நோய்மை எழுத்தாளனின் சுட்டு விரலை இப்படி மடித்து விடுகிறது. நான் பேசியிருந்த கருத்துக்களை மேலும் வலுவாக, நுட்பமாக அவரால் வெளிகொணர்ந்திருக்க முடியும். அக்கட்டுரைகளை நான் வலியுடன் எழுதியிருக்க வேண்டியிராது. படக்கருவியை நம்மை நோக்கி திருப்பியதும் அதில் புறவுலகின் பிம்பங்களும் விழுகின்றன. படக்கருவியின் பிம்பங்கள் தனதல்ல என்று புறவுலகம் புரிந்து கொள்ள வேண்டும்.




இன்று Terrorists, Victims and Society என்றொரு நூல் படித்தேன். அதைப் பற்றி நாளை எழுதுகிறேன். இன்று வலையில் காணக்கிடைத்ததில் இந்த இரு தளங்களை குறிப்பிட வேண்டும்:
http://cybersimman.wordpress.com/
மற்றும்
http://www.athishaonline.com/

சிம்மன் மிக எளிமையாக, நேரடியாக, சுவாரிசியமாக எழுதுகிறார். இணையம் இவரது ஏரியா. ஏழு வருடங்களுக்கு மேல் எழுதி வருவதாக தனது அறிமுகத்தில் சொல்வது அவரது அவரது மொழியின் ஒழுக்கில் தெரிகிறது. குறிப்பாக, அடுத்து எதைப் பேச வேண்டும் என்கிற குழப்பம் இல்லை. அப்புறம் உணர்ச்சிவயபடாமல் ஒரு வியப்பை தக்க வைக்கிறார். எழுத்தாளக் குறுக்கீடுகள், நெடுமூசெறிதல்கள் இல்லை.இது மாமன் மச்சான் பரிந்துரை அல்ல. தைரியமாக இவரை படியுங்கள்.

ஆதிஷா ஒரு பெண் அல்ல. அவரது அறிமுகம் படிக்காமல் நடை வைத்தே ஓரளவு இதை ஊகிக்கலாம். ஆதிஷா நிஜப்பெயரான வினோத்தின் பக்கத்து வீட்டு பெண்ணுருவமோ, பள்ளிக் காதலியோ, மாமன் மகளோ அல்ல. ஒரு பௌத்த துறவியின் பெயராம். ஹும். சரளமும், அலப்பறையும், நகைச்சுவையும் தான் இந்த ஆதிஷா. இத்தனை வீராப்பாக, ஊக்கமாக பகடி செய்பவர்களை தமிழில் அதிகம் படித்ததில்லை. இவரது ஜென் பகடி கதைகளை கட்டாயம் படியுங்கள். பொதுவாக ஞானக்கதைகளின் சொல்லலில் ஒரு போலியான பாவனை இருக்கும். அந்த இடுப்புக் குடத்தை கல்லடிப்படிப்பதில் தான் வினோத்தின் ஆர்வம். முக்கியமான முயற்சி. ஒரு கதையில் ஞானம் கேட்கும் சிஷ்யனிடம் குரு தின்ற பாத்திரத்தை அலம்பி வர சொல்கிறார். அவனுக்கு ஞானம் வருகிறது. இதன் மொழியை வட்டார வழக்கில் வசை சொற்களுடன் சரேலென்று சொல்லி முடிப்பதில் தான் அவரது நகைச்சுவை ஏற்படுகிறது. மற்றொரு கதையில் ஞானம் கிடைத்த சிஷ்யனுக்கு அது படு பேஜாராக உள்ளது.

பகடிக்கு இலக்கிய எழுத்தின் அந்தஸ்து உண்டு. ஆதிஷாவின் தேடல் தீவிரமடையும் போது அவரது இயல்பான எழுத்துத் திறன் மற்றொரு இடத்துக்கு அவரை எடுத்துச் செல்லும். அதுவரையில் ”பிட்டுப்படம் பார்ப்பது எப்படி?”, ”கொலைகாரன் காதல்” போன்ற கவனத்தை ஈர்க்கும் பதிவுகள் வீண் முயற்சிகள் என்று சொல்ல மாட்டேன்.
Read More

பூனை மற்றும் நவீன மனிதன்: ஒரு வளர்ப்புப் பிராணியின் ஆளுமை



இதைச் எழுதும் போதும் என்னை முறைக்கும் பூனை தனிப்பட்ட ஆளுமை கொண்டது. அவ்வாளுமை மீது தீர்மானமான நம்பிக்கையும். ஆர்.கே நாரயணின் The Musical Cat எனும் கட்டுரையில் ஒரு கானசபா பூனை ஜி.கே பட்டம்மாளின் பாட்டுக்கு மட்டும் மேடையில் வரும். அது அமர்ந்திருப்பது யாருக்கும் தெரியாது. ரொம்ப நாள் கழித்து நாராயணுக்கு தெரிய வருகிறது. பூனைக்கு இசை விருப்பமா என்பதற்கு எந்த ஆய்வுபூர்வ சான்றும் இல்லை. ஆனால் பூனைக்கு மிக சன்னமான ஒலிகளும் பெரிதாக தெளிவாக கேட்கின்றன. குட்டியாக இருக்கையில் எங்கள் பூனை டீ.வியில் ரஹ்மானுடையது போன்று பிரத்யேக ஒலிகள் தனிப்பட்டு துல்லியமாக ஒலிக்கும் இசையை கவனமாக கேட்பதை பார்த்து ஒருவேளை இசை பயிலுமோ என்று சங்கடத்துடன் வியந்திருக்கிறேன். ஆனால் பூனையின் ஆர்வம் இசை ஒழுங்கில் அல்ல தனித்தனி இசை எழுப்பல்களை கவனிப்பதிலே உள்ளது.

சும்மா ஒரு வேடிக்கைக்கு உங்கள் முகத்தின் கண், வாய் மற்றும் மூக்கின் அளவை காதுடன் ஒப்பிடுங்கள். ஏறத்தாழ சமம். ஆனால் பூனையின் காதுகள் அதன் (திறவாத) வாயை விட பெரிது; திசைக்கு ஏற்றாற்போல் உயர்த்த திருப்ப கூர்மைப்படுத்தி கேட்க உகந்தது. பூனை காதை உயர்த்தினால் தீவிர/விழிப்பான/கோபமான மன நிலையில் உள்ளதென்று பொருள். ஒருமுறை என் குறும்பேசியின் திறந்து மூடும் பகுதியை எதேச்சையாக மீண்டும் மீண்டும் திறந்து மூடினேன். பக்கத்து அறையில் ஓய்வு கொண்டிருந்த பூனை திரும்பிப் பார்க்கவில்லை; ஆனால் அதன் முதுகுப் பகுதியில் ஒரு தசை துடித்து அடங்கியது. நான்கு முறை அவ்வொலியை எழுப்பி சோதித்துப் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் அதே எதிர்வினை. ஆனால் ஐந்தாவது முறை துடிப்பில்லை. இந்த ஒலிக்குறிப்பின் ஒரு வார்ப்பு அதன் நரம்பணுவில் உருவாகி விட்டது. இப்படி ஒவ்வொரு ஓசைத் துணுக்கையும் அது உள்வாங்குகிறது. நோபல் பரிசு வென்ற பிரஞ்சு எழுத்தாளர் லே கிளேசியோ தனது பேட்டி ஒன்றில் எழுத்தாளன் காலத்துடன் எதிர்வினை செய்பவனல்ல; அவன் ஒரு சாட்சி மட்டுமே என்கிறார். பரிணாப் பாதையில் மனித சமூகத்தின் இரு முக்கிய விலங்குகளான நாயும் பூனையும் இவ்வாறு மாறுபட்ட திசைகளில் பிரிந்து சென்றன. நாய் செயல்வீரன்; பூனை சாட்சி. ஒலி மற்றும் வாசனைக் குறிப்புகளை சேகரிப்பதே அதன் வாழ்க்கைப் பணி. எலி பிடிப்பது?




வேட்டை என்பது உணவுத் தேவைக்காகவே. Whiskas போன்ற பதப்படுத்தப்பட்டு அறிவியல் முறைப்படி தயாராகும் உணவு கொறித்து வளரும் ஒரு அபார்ட்மெண்ட் பூனைக்கு எலி குறுக்கிடும் அன்னியன் மட்டுமே. பூனை-எலி விரோதம் பெரும் மானிடக் கற்பனைகளில் ஒன்று. கல்யாணமாகி விட்ட நீங்கள் உங்கள் மச்சினிச்சியை பார்த்து எவ்வளவு உணர்ச்சி வசப்படுவீர்களோ அவ்வாறே பூனையும் எலியிடம் எதிர்வினையாற்றும். எங்கள் கிராமத்தில் மதில்மேல் கோழி சிறகு விரித்தவுடன் பூனை கவர்ந்து போகும். ஆனால் பொரிந்து சில நாட்களே ஆன, சில இஞ்சுகள் நகர மட்டுமே முடிகிற புறாக்குஞ்சுகளை முதன்முறை பார்த்த என் அபார்ட்மெண்ட் பூனை பயத்தில் நாலடி தள்ளி நின்று கொண்டது.

பல்லி, அணில் குஞ்சு போன்றவற்றை பிடிக்கும் வீட்டு பூனை மணிக்கணக்காக விளையாடும், தின்னாது. வேட்டையில் தோற்றாலோ அல்லது இழந்து விட்டாலோ Whiskas பூனை கடுமையான இழப்புணர்வுடன் அலையும். ஏங்கி நீளமாய் கத்தும். அதன் பிடியிலிருந்து பிராணிகளை மீட்டதற்கு என் பூனை ஒரு நாள் முழுக்க மன-அழுத்தம் கொண்டிருந்தது. ஆம் மன-அழுத்தம். மருத்துவ நூலில் உங்களுக்கு தரப்பட்டுள்ள பல மன-அழுத்த அறிகுறிகள் பூனை பொருந்தியது:
• உணவு மற்றும் தண்ணீரில் ஆர்வம் இன்மை.
• தூக்கக் குறைவு
• எளிய அசைவுகளை அல்லது செயல்களை தவறாக கற்பனை பண்ணிக் கொண்டு கலவரப்படுவது …

உங்கள் படுக்கை அறையில் ஒரு அன்னிய லுங்கி தொங்கினால் நீங்கள் கலவரப்படலாம். ஆனால் பூனை தன் அதிகார வரம்புக்குள் காட்சிபூர்வ ஊடுருவலை பொருட்படுத்தாது. என் உடலில் இருந்து புது வாசனை கிளம்பினால் முகர்ந்து பார்த்து சமாதானப்படும். அன்னியர்கள் இரண்டாம் முறை வீட்டுக்கு வர, எட்டத்தில் நின்று முகர்ந்து நினைவுக் கோப்புகளை சரி பார்க்கும். ஆனால் வாசனை மற்றும் ஒலிக் குறிப்புகள் இல்லாத பொருட்களையோ உயிர்களையோ பூனை பொருட்படுத்தாது.

பூனையின் மீசைகள் மீசைகளல்ல. “மீசையில்லாத ஒரு போலீஸ்காரரை உங்களால் கற்பனை பண்ண முடியுமா” என்று மலையாள ஹாஸ்ய நடிகர் இன்னசெண்ட் ஒரு பேட்டியில் கேட்டார். “மீசையில்லா பூனை” எனும் கந்தசாமி பாடல் வரி அதைவிட விகாரமானது. “மூக்கு துண்டிக்கப்பட்ட மச்சானே” என்பது போன்றது. மீசை பூனையின் மூன்றாவது செவி. நம் காதில் விழாத ஒலிக்குறிப்புகள் கூட வரைபடமாக பூனைக்கு தெரிவது விஸ்கர்ஸ் எனப்படும் இந்த மீசை மயிர்களாலே.

“திருட்டுப் பூனை” என்பது மற்றொரு மகாபொய். ரஜினி புவனேஸ்வரி விவகாரத்தில் குறிப்பிட்டது போல் “இரண்டு வேளை சோற்றுக்கு” கூட பூனை திருடுவது இல்லை. அது வேட்டையாடுகிறது. ஓசை எழுப்பாத பம்மலும், நகர்வும், அதிரடி வேகப் பாய்ச்சலும் வேட்டையின் அம்சங்கள். பூனை பொதுவாகவே சந்தடி இரைச்சலை விரும்பாது. தன் அடையாளத்தை எங்கும் விட்டுச் செல்லாமல் ஒரு ரகசிய இடத்தில் எல்லை வகுத்து வாழும் சிறு மாயாவி அது. நாய் குழு-வாழ்க்கையை சார்ந்து பரிணமித்த விலங்கு. அது வாசனை, ஒலி மற்றும் உடல் மொழி மூலம் தன் இருப்பை தொடர்ந்து தன் சகாவுக்கு அறிவித்தபடி உள்ளது. கூட்டு வேட்டைக்கு இந்த இயல்பு மிக உபயோகமானது. நாய் இவ்வாறு கூட்டத்தை நம்பும்போது பூனையை கூட்டுவேட்டை மீது அவநம்பிக்கை கொள்கிறது. அது தனியாக ரகசியமாக உணவு தேடி அடைய விரும்புகிறது. சமையலறையில் திருடும் பூனை குமாஸ்தா வேலை பார்க்க செல்லும் எழுத்தாளனை போலவே பரிதாபத்துக்கு உரியது. குமாஸ்தா பணியைப் போன்றே பூனைக்கு அசைவம் தவிர்த்த பதார்த்தங்கள் பிடிக்காது. பெரும்பாலான மனித உணவுகள் அதற்கு ஒவ்வாதது. புலியையும், எழுத்தாளனையும் போல பூனை பசித்தால் பாலும் குடிக்கும். ஆனால் உண்மையில் பாலை செரிக்கும் திறன் கூட அதற்கு இல்லை. திருட்டுத்தனத்தை போன்றே பூனை பால் குடிக்கும் என்பதும் ஒரு மித்துதான்.

பூனை தனிமைவாதியா?



எழுத்தாளனைப் போன்றே பூனையும் தனிமையை விரும்புவதில்லை; ஆனால் தனிமை இருவருக்கும் தேவைப்படுகிறது. நாய்களைப் போன்று மனிதனும் கூட்டுவேட்டையாளியே. சில வருடங்களுக்கு முன் கேரளாவில் ஏழைப் பெண்களை திருமணம் என்ற பெயரில் வட-இந்தியர்கள் கடத்தி செல்வதாய் புகார் எழுந்தது. இந்த பெண்கள் வட-இந்திய குடும்பத்தின் மாடு முதல் மைத்துனர் மாமனார் வரை திருப்தி செய்ய வேண்டும். மணமுடிப்பதற்கு பிற பல தகுதிகளையும் புறமொதிக்கி விட்டு தமிழக ஆண்கள் குடும்பப் பெண்களையே கேட்கிறார்கள். கூட்டுவேட்டை பற்றி சொன்னதற்கு இதுவே தகுந்த உதாரணம். ஆப்பிரிக்க காட்டு நாய்கள் சமூக வேட்டைக்கான தொழில் நேர்த்தி, ஒருங்கிணைவு, திட்டமிடல் திறனை உள்ளுணர்வு ரீதியாய் பெற்றவை. ஒரு ராணுவப் படையை போல் இந்நாய்கள் இரையை முற்றுமையிட்டு உயிருடன் ஆளுக்கொரு பாகமாய் படுவேகத்தில் கவ்வி விழுங்கும். சில நாய்கள் இப்படி கவ்வியதை வாய்க்குள் சேமித்து தன் குடும்பத்து வயோதிகர்கள், குட்டிகள், மற்றும் அவர்களை பேணும் பெண் நாய்களுக்கு கொண்டு வரும். ஆனால் சில சமயம் கூட்டாக வாழ நேரும் பூனைகள் கூட தனித் தனியாகவே வேட்டையாடும். தனியாக வேட்டையாடுபவர்கள் ஒலி, வாசனை போன்ற வாசனைகளை துறக்க வேண்டும். பூனையும் தன் கோடி வருட பயணத்தில் இதையே செய்தது.

பூனைக்கு தண்ணீர் ஒவ்வாது (வங்காளப் பூனை தவிர). நீரென்றால் பத்தடி விலகும். பல பூனைகள் வாழ்நாளில் ஒருமுறை கூட குளித்திராது. ஆனால் நம்மால் முகர்ந்து பார்க்க கூடியவற்றில் வாசமே அற்ற ஒன்றாக பூனை உள்ளது. எப்படி? பெரும்பாலும் அது தூங்கும் முன் தன் சொரசொர நாக்கு மற்றும் டியோடரண்ட் உமிழ்நீர் கொண்டு நக்கி சுத்தம் செய்யும். இப்படியான உறக்க முனைப்பின் போது என் மனைவி பூனையை பற்றி ஆதுரத்துடன் முத்தமிட்டால் அது முடிக்கும் வரை பொறுத்துக் கொள்ளும்; அடுத்து பட்ட இடங்களை நக்கி சிரத்தையாக சுத்தம் செய்யும். பல்ப்! தூங்கும் போது, முக்கியமாய் எதிரிக்கு, எந்த தடயமும் விட்டு வைக்க கூடாதென்று நினைக்கிறது பூனைக்குள் இருக்கும் ஒரு ஆதி விலங்கு. ஏறத்தாழ, நாம் படுப்பதற்கு முன் கதவு சாத்துவது போன்றது இது.



பூனை தனிமைவாதி அல்ல. தனித்த வேட்டையாளி. பன்னெடுங்காலம் முன் எகிப்தியரின் தெய்வமாக விளங்கிய பின் இன்று அமெரிக்காவில் மட்டும் 80,240,000 பூனைகள் வளர்ப்பு பிராணிகளாக உள்ளன. இது நாய்களின் தொகையை விட அதிகம். மேற்சொன்ன இரு காலப்புள்ளிகளுக்கும் இடையே மனிதனின் வரலாற்றில் பூனைக்கு இடமே இல்லை. காரணம், மனிதனுக்கு வேட்டைத் துணையாகும் அனைத்து குணங்களும் நாய் பெற்றிருந்ததே. மனிதனுக்கு சேவகம் செய்ய தலைப்படாத பூனை அங்கீகரிக்கப் படாததன் காரணம் அப்பா / கணவனால் பேண்ட் சட்டை அணிய அனுமதிக்கப்படாத ஒவ்வொரு சமகால பெண்ணுக்கும் புரியும். அதன் சுயசார்பு, சற்றே அதிகபிரசிங்கித்தனமான சுயநலம், குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக செயலாற்றும் பொறுப்பு இல்லாமை, தனிமைவாதம் ஆகியன், மீண்டும் ஒரு எழுத்தாளனைப் போன்று, பூனையை சமூகத்தின் பொருந்தாக் கண்ணி ஆக்கியது. பல இணைத்தேர்வு நிபுணர்களால் நிராகரிகச் செய்தது. பிறகு எந்திரமயமாக்கல் எழுத்தாளனுக்கும், பூனைக்கும் நாகரிக சமூகத்தில் ஒரு தனித்த வெளியை எற்படுத்தி தந்தது. பன்னெடுங்காலமாக தனித்திறன் மற்றும் இயல்புகள் தேர்ந்தெடுத்து இணை சேர்க்கப்பட்டு லாப்ரடார் போன்று் நூற்றுக்கணக்கான மனிதக் கட்டளைகளை பின்பற்றும் நாய் இனங்கள் உருவாக்கப்பட்டு விட்டன. ஆனால் பூனை இதுவரை புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. இதனால் இன்னமும் அது பாதி காட்டுவிலங்காக உள்ளது. வளர்ப்பு விலங்குகளின் வரிசையில் பூனை இரண்டாம் இடத்தில் உள்ளதற்கு இது முக்கிய காரணம்.
பூனையை பயிற்றுவிக்க முடியுமா? பூனைக்கு குறுகிய நேரத்துக்கு மேல் எதிலும் கவனம் தங்காது. அந்நேரத்துக்கு மட்டும், ஒரு எழுத்தாளனை போல், தன் முழுஆற்றலையும் ஆவேசமாய் வெளிப்படுத்தி ஓயும். பின்னர் படுத்தபடி பிரபஞ்சத்தை கவனிக்க தொடங்கி விடும். ஒரு திட்டவட்டமான நிரலுக்குள் நீடித்து செயல்படும் மனிதர்களுடன் ஈடு கொடுக்க நாயால் மட்டுமே முடியும். ஆனால் இக்குறை கடந்து வர பூனையால் முடிகிறது. அதனால் மிக நுட்பமாக மனிதனுடன் உரையாட முடியும்.
பல்வேறு உணர்வு நிலைகளை அல்லது தேவைகளை வெளிப்படுத்தும் குரல் லாவகம் பூனைக்கு உண்டு. ”அவள் க்ளுக் என்று சிரித்தாள்” என்பதில் உள்ள உண்மையின் அளவே “பூனை மீயாவ் என்றது” என்பதிலும் உள்ளது. “க்ளுகும்” “மீயாவும்” வசதி கருதியே. பல்வேறுபட்ட ஒலிவடிவங்களின் கூட்டு மேம்போக்கு சொல்லே “மீயாவ்”. அதை ஒரு மனிதச் சொல்லாகவே அகராதியில் ஏற்றி விடலாம். பூனை மொழியில் உள்ள ஏகப்பட்ட நுட்பங்களை வருடக்கணக்கில் பக்கத்தில் இருந்து கவனித்தாலே விளங்கும். அப்போதும் கூட புதிதாக ஒரு குரல் கொடுக்கும் முறையை அல்லது தொனியை வெளிப்படுத்தி அது நம்மை ஆச்சரியப்படுத்தும். பூனையால் நான்கைந்து மனநிலைகள் அல்லது உணர்வுகளை அடுக்கடுக்காக வேகமாய் தன் பேச்சில் காட்ட முடியும். இது ஒரு அசாதாரண திறன். மனிதர்களுக்கு உணர்ச்சி மாற்றங்களை கூர்மையாக வெளிக்காட்ட அபாரமான மொழித் திறன் மற்றும் உடல்மொழி அவசியம். அப்படியும் நம்மால் பேசும் போது தோன்றும் உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் அனைத்தையும் எளிதில் வெளிப்படுத்த முடிவதில்லை. அதற்கு முன் எதிர்தரப்பாளர் உரையாடலில் அடுத்த படிக்கு தாவி சென்று விடுவார். ஆனால் ஒரு பூனையுடன் உரையாடும் போது நாம் சுதாரிக்கும் முன்னரே அது பணிவான வேண்டுகோள், ஏக்கம், ஏமாற்றம், கோபம், கண்டனம், மீண்டும் பணிவு என ஒரு சுற்று விசயங்களை படுவேகமாய் சொல்லி விடுகிறது. வேகத்தடத்தில் நம்மை பேசித் தோற்கடிக்க குழந்தைகளுக்கு அடுத்த படியாய் பூனை. காட்டில் வாழும் பூனைகள் அரிதாகவே குரல் எழுப்பும். அவை பெரும்பாலும் மௌனிகளே. மனிதனோடு சேர்ந்து வாழ ஆரம்பித்த பிறகு அவனோடு உரையாடவே அது ஒரு அந்தரங்க மொழியை பயின்றுள்ளது.
கூட்டு வாழ்வில் இருந்து, அதன் தொடுபுலன் அன்னியோன்யத்தில் இருந்து கொஞ்ச கொஞ்சமாய் விலகி வரும் மனிதனின் பண்புக்கூறுகள் சிலவற்றை பூனையில் காணலாம்.



அதனாலே எம்.டி வாசுதேவன் நாயர், அசோகமித்திரன் போன்ற நவீனத்துவ கதையாளர்களின் பிரதிகளில் பூனை மனிதனின் குறியீடாக வருகிறது.



பூமா ஈஸ்வரமூர்த்தியின் ”ஒரு பூனை” கவிதையும் குறிப்பிடத்தக்கது. நவீன மனிதனும் பூனையும் சந்தித்துள்ள புள்ளி முக்கியமானது. பூனையை நவீன மனிதன் வளர்க்க அவன் இணைந்துள்ள சமூக/பொருளாதார/அரசியல் அமைப்பு அவனை வளர்க்கிறது. இருவருமே தம்மை வளர்ப்புப் பிராணியாய் கருதுவதில்லை. இருவருமே பாதி நவீனர்கள்; பாதி வனவிலங்குகள். தப்பிக்க வழிவகையற்ற நெருக்கடி வெளியில் இருவரையும் தனியாக சந்திக்காமல் இருப்பது நன்று.

பூனை புகைப்படங்கள்: ஆர்.காயத்ரி தேவி
மேலும் பார்க்க: http://www.flickr.com/photos/mindspeephole/
Read More

Tuesday 17 November 2009

இந்திய குறுக்குவிதிகளும், பனிக்கரடியும்

என் ஐந்து வருட கல்லூரிப் படிப்பின் மிக முக்கியமான வகுப்பு ஐந்தாவது வருட இறுதியில் நிகழ்ந்தது. மார்க்ஸிய-காந்திய-கிறுத்துவரும், மிதிவண்டியில் மட்டுமே எங்கும் பயணிக்கும் பேராசியர் செரியன் குரியன் அதை சொன்னார்: ”படித்து முடித்து என்னதான் கிழித்தாலும் உங்களுக்கு எல்லாம் பரிந்துரை இருந்தால் தான் வேலை கிடைக்கும். தொடர்புகள் இல்லாவதர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்”. அவரது கனத்த குரலுடன் குழல்விளக்கு விட்டில் போட்டி போட ஒவ்வொரு வார்த்தையாக திரும்பத் திரும்ப யோசித்தேன். என் அம்மாவுக்கு வேலை பற்றி இருந்த மற்றொரு அபத்தமான கவலை நினைவு வந்தது. பதின்பருவத்தில் சமூக ஊனம் என் கல்விக்கு பெரும் தடையாக இருந்தது. நான் எதிர்காலத்தில் வீட்டை வாடகைக்கு விட்டுத்தான் புசிக்க வேண்டி வரும்; வீட்டை எத்தனைக்கு வாடகைக்கு விடலாம் என்றெல்லாம் அம்மா அப்பாவிடம் உள்ளார்ந்த கவலையுடன் விசாரித்துக் கொண்டிருந்ததை ஒருநாள் ஒட்டுக் கேட்டேன். படிப்பதற்கான உந்துதல் அப்போதுதான் ஏற்பட்டது. ஐந்து வருடங்கள் ஒவ்வொரு செமிஸ்டரிலும் முதலாவதாக வந்தேன். வேலை கிடைத்து விடும் என்ற உறுதியில் நெஞ்சு உயர்த்திய போதுதான் செரியன் இப்படி சொன்னது. ஐந்து வருடமா செரியனா? என் நெஞ்சு மேலும் பொங்கியது.

நான் படித்த கடைசி வருடத்தில் எங்கள் கல்லூரியில் படித்து தங்கப் பதக்கம் பெற்ற ஒரு சிரியன் கிறித்துவ இளைஞர் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்த்தவர்கள் “தங்கப் பதக்கம், பதக்கம்” என்று பரபரப்பாக பேசினர். எனக்கும் அவ்வருடம் அதே பதக்கம் தந்தார்கள். பேராசிரியர்கள் மத்தியில் நல்ல பேரும் பரிச்சயமும் இருந்தது. ஆனால் வேலைதர மட்டும் முரண்டு பிடித்தார்கள். இதற்கான தனிப்பட்ட காரணங்கள் முக்கியமல்ல. பின்னர், பதக்கம் மற்றும் நான் பெற்ற பரிசு சான்றிதழ்களை நேர்முகங்களில் கேள்வியாளர்களின் முகங்களுக்கு நீட்டி அவசரமாக பேசும் பழக்கம் எனக்கு இருந்தது. ஒரு முறை ஒரு பேட்டியாளர் மறதியில் தன் போண்டாவை என் சான்றிதழில் துடைக்க முயன்றதில் இருந்து நான் நிறுத்திக் கொண்டேன். சுவாரஸ்யமான பகுதி வேலையை தீர்மானிக்கும் வெளிக்காரணிகள் தாம். என் நண்பர் ஸ்ரீதரின் கதைக்கு வருகிறேன்.

ஸ்ரீதர் என் ஊரில் இருந்து என்னைப் போன்றே மத்திய வர்க்க, எளிய கல்விப் பின்னணியில் இருந்து சென்னைக்கு முதுகலை ஆங்கிலம் படிக்க வந்தவர். நான் பிரபல்யம் மிக்க எம்.சி.சியை தேர்வு செய்ய, அவர் ஒரு ஒளிகுறைந்த சிறுபான்மை கல்லூரியில் இணைந்தார். இறுதித் தேர்வு மதிப்பெண்கள் வெளியான போது என் வகுப்பில் 4 பேர் முதல் வகுப்பு பெற்றிருந்தார்கள். ஸ்ரீதர் தன்னுடைய பிற வகுப்பு நண்பர்களை விட சிறப்பாக மதிப்பெண் பெற்றிருந்ததாலும், வகுப்பில் அவர் சுட்டி என்பதாலும் துறைத்தலைவர் அவருக்கு அங்கு வேலை தந்தார். அங்கு மூன்று வருடங்கள் பணி புரிந்தார். நான் கல்லூரிகளில் வேலை கிடைக்காமல் தனியார் நிறுவனங்களில் கங்காரு போல் துள்ளிக் கொண்டிருந்தேன். ஆறு வருடங்களுக்குப் பின் கைகால் பிடித்து நான் கல்லூரி ஒன்றில் நுழைந்த போது அங்கு பணிபுரிந்த ஸ்ரீதரை சந்தித்தது இரு வாழ்க்கை துருவங்கள் நேருக்கு நேர் பார்த்தது போல் இருந்தது. ஒரு கால-எந்திரம் இருந்தால் கொடுங்கள்; நான் என் அம்மா-அப்பா சர்ச்சித்துக் கொண்டிருந்த அந்த பொழுதுக்கு திரும்ப வேண்டும்.

வேலை மற்றும் சமூக அங்கீகாரத்தை சூழலும் தொடர்புகளும் தாம் பெருமளவில் தீர்மானிக்கின்றன. ஏழை எளியவர்கள் படித்தால் தான் முன்னேற முடியும் என்று குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுவது ஒரு கற்பிதம். சற்று ஆபத்தான உபதேசமும் கூட. மதிப்பெண்கள் மிகச்சிறிய பங்கைத்தான் ஆற்றுகின்றன. தவமாக படித்து கிம்பளம் தராமல், ஆள்பிடிக்காமல் அரசு வேலை பெறும் சில விதிவிலக்குகளை தவிர்க்கிறேன். இந்த போக்குக்கு ஒரு சமூகவியல் பின்னணி உள்ளது; அதற்கு பிறகு வருகிறேன். அடுத்து ஸ்ரீதரின் வகுப்பு நண்பனான சீனிவாசன் என்கிற சீனுவின் கதைக்கு போக வேண்டும். அது நமக்கு இவ்விவாதத்தின் ஒரு புதிய கோணத்தைக் காட்டும்.

சீனு வலுவான பிராமண சாதியை சேர்ந்தவர். பாலசந்தர் போன்றவர்கள் பார்த்தால் கண்ணீர் வடிக்கும் வறிய பிராமணன். ஆனால் எங்கு சென்றாலும், அவரது மீசையில்லாத முகம் பார்த்து புரிந்து கொள்பவர்கள், உடனே அகதூண்டல் பெற்று சீனுவை அவரது சராசரி உயரத்தில் இருந்து ஒரு அடி உயர்த்தியே காண்பார்கள். அதற்கு மேல் சில குச்சிகள் அடுக்கி எட்டி காலகட்டி நடந்து அவர் பல பொருளாதார, அங்கீகார அடுக்குகளை கடந்தார். எப்படி? சீனு தன் இஸ்லாமிய துறைத்தலைவருக்கு செல்லப் பிள்ளை. தத்துபித்தென்று ஆங்கிலம் பேசினாலும் துறைத்தலைவர் வராத நாட்களில் சீனு வகுப்புக்கு வந்து தன் நண்பர்களுக்கே போதிக்கும் உரிமையை அடையும் அளவிற்க்கு உயர்ந்தார். சும்மாவெல்லாம் அல்ல. கடுமையாக உழைத்து அவ்விடத்தை அடைந்திருந்தார். எப்புடி? அது பற்றி சீனுவே என்னிடம் குறிப்பிடும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. துறைத்தலைவரின் வீட்டுக்கு சென்று ”பலவிதங்களில்” (எப்படி என்றெல்லாம் பற்றி குறைந்தபட்ச தகவல்களே கிடைத்தன) பணிவிடைகள் செய்துள்ளான். “எத்தனை டப்பா மாவடு, சீடை எல்லாம் கொண்டு கொடுத்திருக்கிறேன் அவருக்கு “ என்று எந்தவொரு குற்ற்வுணர்வும் இன்றி குறிப்பிட்டான் ஒருமுறை. தகவல் போதாமல் நான் ஸ்ரீதரை மேலும் நோண்டினேன். ஸ்ரீதர் திரும்பத் திரும்ப இதையே சொன்னான்: “அக்காலத்தில் எல்லாம் சீனு ரொம்ப லட்சணமாக இருப்பான்; பார்ப்பவருக்கு எல்லாம் அவனைப் பிடிக்கும்”. இத்தகவல் ஆபாசமாக இருந்ததால் நான் அதற்கு மேல் அவனை பேச விடவில்லை. நீங்களும் மறந்து விடுங்கள். முக்கியமான கட்டம் தேர்வு மதிப்பெண் வெளியான போது தான் வருகிறது. சீனு ஒரு பாடத்தில் மட்டும் தோற்று விட்டான். ஆனாலும் அதே கல்லூரியில் விரிவுரையாளர் வேலைக்கு முயன்றான், துறைத்தலைவரின் பரிந்துரைக் கடிதத்துடன். “சீனிவாசன் மிகத் திறமையானவன். மதிப்பெண்கள் பற்றி கவலைப்பட வேண்டாம். அவன் மீது எனக்கு தீர்க்கமான நம்பிக்கை உள்ளது. ... வேலை தரவும்” இப்படியாக துறைத்தலைவர் எழுதியிருந்தார். ஸ்ரீதருக்கும் சீனுவுக்கும் ஒரே நேரத்தில் வேலை கிடைத்தது. இதை எழுதும் போது தங்கப்பதக்கத்தை மாட்டியிருந்த என் கழுத்து செயினை கழற்றி கணினி மேசை மீது பவ்யமாக வைத்து விடுகிறேன். நம்புங்கள்.

சீனுவின் தொழில்முறை வாழ்வின் இரண்டாவது கட்டம் இதைவிட சுவாரஸ்யமானது. அதற்கு முன் அரசு விரிவுரையாளர் பணிக்கான தகுதிகள், விரிவுரையாளர் பணிக்கான உழைப்பு, சமூகப் படிமம் பற்றின விபரங்கள் ...

கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு ஒருவர் NET எனப்படும் பரீட்சையில் தேர்வாகியிருக்க வேண்டும். அல்லது PhD முடித்திருக்க வேண்டும். இரண்டுமே மிகுந்த உழைப்பை கோருபவை, ஆனால் அறிவை அல்ல. இதில் ஏதாவதொரு தகுதியை பெற்று வரும் ஆங்கில விரிவுரையாளர்களில் பலரும் ஒரு புதிய கவிதையை கூட புரிந்து கொள்ள முடியாமல் மூத்த பேராசிரியர்களிடம் பாடம் கேட்டு அதை வகுப்பில் சென்று ஒப்பிப்பதை பார்த்திருக்கிறேன். ஏன் இந்த நிலைமை? PhD ஆய்வுக்கட்டுரை எழுத ஒருவருக்கு எழுத்துத் திறமையோ சொந்தமான அவதானிப்புகளோ தேவையில்லை. புத்தகங்களில் இருந்து காப்பி அடித்து சற்று மழுங்கடித்து ஒப்பேற்றி விடலாம். காசு கொடுத்தும் எழுதி வாங்கலாம். ஒரு பிரபல தமிழ் எழுத்தாளர் பண நெருக்கடியின் போது இப்படி ஒருவருக்கு PhD ஆய்வுக்கட்டுரை எழுதித் தந்து பயன்பெற்றதாக என்னிடம் குறிப்பிட்டார். PhD ஆரம்பிக்க ஒப்புதல் பெறுவது சிரமம் என்கிறார்கள். வழிநடத்தும் ஜடாயு பேராசிரியரின் தயவு தேவை. அவரை சமாளிப்பதற்கான நடைமுறை பாடே பெரும் போராட்டமாக இருக்கும் சிலருக்கு. உதாரணமாக என் நண்பர் ஒருவரின் வழிநடத்துநர் காலை 6 மணிக்கு தன்னை சந்திக்க ஒரு மருத்துவமனைக்கு வரச் சொன்னார். நண்பர் சென்று காத்திருப்பு வரிசையில் தன் பேராசிரியருக்காக இடம் பிடித்து 8 மணி வரை காத்திருந்து, அவர் காரில் வந்து இற்ங்கியதும் இடத்தை பத்திரமாக ஒப்படைத்து, இட்லி டீ வாங்கித் தந்து கிளம்பிருக்கிறார். ஒருநாள் ”பங்களூரில் இருந்து சென்னைக்கு உடனே வா” என்றாராம். நண்பர் விமானம் பிடித்து அவசரமாக பிரசன்னமாக அவர் ”நீ ஏன் இப்போது வந்தாய், உன்னை வரவே சொல்லவில்லையே” என்று கதவை சாத்தியிருக்கிறார்.. இதுதான் PhDக்கான நிஜமான உழைப்பு.



NET தேர்வு ஒரு நபரின் தகவல் அறிவையும் ஓரளவு எழுத்துத் திறனையும் சோதிப்பது. ”மில்டன் எத்தனை வயதில் குருடானார்?” “ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்டுராட்போர்டு அபான் ஏவனில் உள்ள ஏவன் ஆறா நகரமா?” போன்ற இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகள் எல்லாம் கேட்பார்கள். இதை விட முக்கியமாய் ஒரு அடிப்படைத் தகுதியை அறிய NET கோட்டை விடுகிறது. குறிப்பாய் கலைத்துறைகளை பொறுத்தமட்டில், விரிவுரையாளர் பணி ஒரு நிகழ்த்து கலை. புத்தகப் புழுக்களை விட பேச்சாளர்களே இப்பணியில் சிறப்பார்கள். நான் படிக்கும் போது செபாஸ்டியன் என்றொரு பேராசிரியர் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் பிரபலமாக இருந்தார். அவன் நுண்வாசிப்பாளரோ தீவிர இலக்கிய ஆர்வலரோ ஒன்றும் கிடையாது. ஆனால் சிறந்த மேடை நடிகர். அவரால் துறையில் உள்ள பல புத்தகவாசிகளை எளிதில் விஞ்ச முடிந்தது. எம்.சி.சியிலும் ஆங்கில மற்றும் தமிழ்த்துறைகளில் கணேஷ், பாலுசாமி போன்ற பேச்சாள பேராசிரியர்களின் வகுப்பையே மாணவர்கள் விரும்பிக் கேட்கிறார்கள். நம்மில் பலருக்கும் ஒரு கூட்டத்துக்கு முன் சரளமாய் பேச முடியாத படி பல ஆளுமைச்சிக்கல்கள் இருக்கலாம். சிலர் வாழ்வெல்லாம் மோசமான பேச்சாளர்களாகவே இருப்பர். இவர்கள் NET-இல் தேர்வாகி வேலை பெறுவதில் ஒரு பேச்சாளனை முந்தி விட முடியும். இது ஒருவித கட்டாய திருமணம் போல. காலமெல்லாம் அவஸ்தை. இதை விடக் கொடுமை, NET-இல் தேர்வாகும் நபர் மேடை பார்த்தால் உடன் திக்கத் தொடங்குபவராக, விறைத்து நடுங்குபவராக இருந்து விட்டால்? இந்த வேலை புணர்ச்சி போல; மூட் சரியில்லை என்று பாதி உரையில் நிப்பாட்டி எழுந்து போய் டீயடித்து புகை கக்கி திரும்ப வர முடியாது. சரியான NET தேர்வு பெரும்பான்மையாக பேச்சுத் திறனை அளப்பதாக இருக்க வேண்டும். ஏன் இல்லை? ஒரு காரணம் நம் மத்தியில் உள்ள பேராசிரியர் பற்றின அறிவுஜீவி பிம்பம்.




பேராசிரியன் சதா படித்து சிந்தித்து மாணவர்களுடன் பகர்பவன் என்ற சித்திரம் போலியானது. அப்படியான விதிவிலக்கு மண்டை-வீங்கிகளும் கணினி, டீவி போன்ற செயல்-எதிர்ச்செயல் (interactive ) ஊடகங்களின் இந்த யுகத்தில் காலாவதி ஆகி விட்டார்கள். கீழ்ஸ்தாயில் கால்விரல் பார்த்து போதிக்கும் ஆசிரியர்களின் வகுப்பில் இன்றைய மாணவர்கள் இருப்பதில்லை. பேராசிரியர்கள் வெறும் தகவல் தரும் எந்திரங்களாகவும் இந்த காலகட்டத்தில் ஓட்ட முடியாது. அவர்களின் தகவல் மூட்டைகள் இன்றைய தகவல் யுகத்தில் திரௌபதியின் வஸ்திர உரிதல் போல் அபத்தமாகி விட்டது. வகுப்பில் ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் தகவல்களை அத்தனையும் இணையத் தொடர்புள்ள ஒரு நுண்பேசியை சொடுக்கினால் மாணவனுக்கு ஒரு சில நொடிகளில் கிடைத்து விடுமே? அதற்கு ஒரு கோடை பிரதேச பனிக்கரடியை நம்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. கரடிக்கு 65,000 வரை சம்பளம் கொடுத்து யு.ஜி.சி புஜம் முறுக்கி செய்யும் வேலையை ஒரு நுண்பேசி செய்து விடுகிறதே!




நான் பாளையங்கோட்டையில் வேலைபார்த்த பி.எஸ்.என் கல்லூரியின் சேர்மன் சுயம்புலிங்கம் ஒரு முறை விரிவுரையாளர்க்ளை கூட்டி ஒன்று சொன்னார்: “நீங்கள் ஆசிரியர்களாகவும் மாணவர்கள் உங்களுக்கு கீழும் உள்ளார்கள் என்றால் அதற்கு காரணம் நீங்கள் மேதாவிகள் என்தால் அல்ல. ஏனென்றால் உங்களை விட விசயஞானம் உள்ள மாணவர்கள் நம் கல்லூரியிலே இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு படிப்பிக்க தெரியாது. இதுதான் உங்களை இங்கே அமர வைத்துள்ளது”. இதே சேர்மன் ஒருமுறை துறைகளில் சோம்பிக் கிடந்து அரட்டை அடிக்கும் விரிவுரையாளர்களை பூங்காவில் உள்ள புல்வெட்ட அவர்களை அனுப்பப் போவதாக மிரட்டினார். அப்போது அடக்குமுறையாக பட்டாலும் கல்லூரி ஆசிரியர் பற்றின மேதை படிமத்தை அவர் உடைத்து வந்தது முக்கியமாக படுகிறது.

NET தகுதியின் மற்றொரு அபத்தத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். கல்லூரி மேலாண்மை நினைத்தால் NET / PhD இல்லாதவரையும் வேலைக்கு அமர்த்தலாம். கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கான விலை 15 லட்சம் தாண்டி விட்டது.

சீனுவுக்கு வருவோம். அவன் பின்னர் தன் பீஷ்மபிதாவிடம் கோபித்துக் கொண்டு மற்றொரு கல்லூரிக்கு சென்றான். அங்கு அந்தண பேராசிரியர்களின் ஒரு வலுவான வலைத்தொடர்பை ஏற்படுத்திக் கொண்டான். பின்னர் கிறித்துவரான தன் துறைத்தலைவரிடம் மோதல் ஏற்பட இதே தொடர்புகளைக் கொண்டு அவரை நுட்பமாக அவமதித்தான். உதாரணமாக எதிரில் அவனது துறைத்தலைவரும் ஐயரான மற்றொரு துறையின் தலைவரும் பிரதியட்சப்பட்டால் பின்னவரை நமஸ்கரித்து முன்னவரை காணாதது போல் முகம் திருப்புவான். துறைத்தலைவரால் அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை; கர்ண கவச குண்டலத்தின் வலு அப்படி. சீனுவுக்கு விரிவுரையாளர் தகுதிகளான NET / PhD இல்லை. ஆனாலும் அவனுக்கு சென்னையில் ஒரு ஆர்.எஸ்.எஸ் புலால்-மறுப்பு கல்லூரியில் நிரந்தர அரசு வேலை கிடைத்தது. எப்படி என்கிறீர்களா? ஊழல், கவசகுண்டல்ம் என்று பல காரணங்கள் இருக்கலாம். நம் கவலை அதுவல்ல. சீனு தேர்ந்த முறை எத்தனை எளிதாக, வெற்றிகரமாக, சமூக அங்கீகாரம் கொண்டதாக இருக்கிறது, இதன் முன் நானும், ஸ்ரீதரும் எத்தனை முட்டாள்களாக நிற்கிறோம் என்பதே நாம் இங்கு ஆராய வேண்டிய பாடம்.

சுகீது மேத்தா தன்வரலாறு மும்பை மாநகரின் வரலாறு இரண்டையும் கலந்து Maximum City என்றொரு நூல் எழுதியிருக்கிறார்.



சுகீது பெரும்பாலான இளமையை அமெரிக்காவில் கழித்து விட்டு நூல் எழுதும் நோக்கத்துடன் இந்தியாவில், மும்பையில், வசிக்க குடும்பம் சகிதம் வருகிறார். அரசு எந்திரம் அவருக்கு பலவித நெருக்கடிகள் கொடுக்கிறது. குறிப்பாய், சில சிக்கலான விதிமுறைகளை முன்னிட்டு அவருக்கு சமையல்வாயு இணைப்பு தர மறுக்கிறது. சுகீது நிரப்பின விண்ணப்பங்கள், சான்றுகளுடன் பலமுறை ரேசன் அலுவலகம் சென்று மோதுகிறார். பலன் இல்லை. வெந்நீர் போட்டுக் குடிக்கக் கூட வழியின்றி மொத்த குடும்பமும் தவிக்கிறது. அப்போது சுகிதுவின் அத்தை ஒருவர் உதவிக்கு வருகிறார். அவர் விண்ணப்ப படிவஙகளை தூக்கி கடாசி விட்டு நேரடியாக ரேசன் அலுவலகத்து குமாஸ்தாக்களிடம் முறையிடுகிறார். உடனே அவர்கள் மனம் இளகி, ”கடுமையான” விதிமுறை சிக்கல்களை ஒதுக்கி விட்டு அடுத்த நாளே ரேசன் அட்டை வழங்கி சமையல் வாயு இணைப்புக்கும் வழிவகை செய்கின்றனர். அத்தை சொன்னது இதுதான்: “இவர் வீட்டில் ஒரு பச்சைக் குழந்தை பாலில்லாமல் அழுது தவிக்கிறது; பால் காய்ச்ச கேஸ் வேண்டாமா. நீங்கள் தாய் தந்தையர் தானே, உஙகளுக்கு கருணை உள்ளதல்லவா. ஒரு குழந்தையின் ஜீவனை முன்னிட்டு உதவுங்கள்”. இந்தியாவில் எதுவும் விதிமுறைப்படி நேரடியாக முயன்றால் வேலைக்கு ஆகாது என்று சுகீது புரிந்து கொள்கிறார்.



இப்படியான நிலைமையை நம்மில் பலரும் சந்தித்திருப்போம். இந்தியர்கள் விதிமுறைகள், ஒழுங்குமுறை, காத்திருப்பு வரிசை போன்றவற்றை விட தொடர்புகளையே அதிகம் நம்புகிறார்கள்; பல துறைகளில், தளங்களில் தொடர்புகளின் மூலம் காரியம் சாதிப்பது தான் எளிதானது. இதன் ஒரு உபரி விளைவு தான் லஞ்சம். பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட சில மூன்றாம் உலக நாடுகளுக்கு போய் வந்துள்ள என் நண்பன் ஒருவன் இது மூன்றாம் உலக நாடுகளுக்கான பொது சமூகவியல் தன்மை என்கிறான். ஆனால் ஒரு நாடு நகரம் நோக்கி வளர்ந்து கலாச்சார உச்சம் அடையும் போது அதன் மக்கள் விதிமுறைகளை, ஒழுக்கத்தை, எந்திரங்களை தீர்மானமாய் நம்ப ஆரம்பிக்கிறார்கள். என் மனைவியின் அமெரிக்க முதலாளி இந்தியா வந்ததும் முதலில் வியந்தது “இந்த போக்குவரத்தில் எப்படி ரோட்டில் செல்கிறார்கள்?” என்றுதான். இந்திய சாலை நம் மாநகர கலாச்சாரத்தின் குறியீடு தான். நம் சாலைகளில், நகரங்களிலும், செல்லுபடியாவது காட்டு விதிகள் தாம். அடுத்த மனிதன் மீதான அபார நம்பிக்கை தான் இந்தியக் குழப்படியில் நம்மை முன் செலுத்துகிறது. எல்லாம் நேர்த்தியாக நடைபெற வேண்டும் என்பதை விட எப்படியாவது உய்ய வேண்டும் என்பதே சமூகத்தின் பொது நோக்கம். இந்த நெரிசல் பந்தயத்தில் ஒருவர் கையை மற்றவர் இறுக்கமாய் பற்றி பயணிக்கிறோம். தலித்துகள், பெண்கள், ஊனமுற்றோர் ஆகியோரின் நலன்கள் நசுக்கப்படுவது ஒரு நெரிசல் கலாச்சாரத்தில் தவிர்க்க முடியாதது. தனிமனித அடையாளத்துக்கு அங்கீகாரம் இல்லை ஆதலால் தனிமனிதத் திறன்களுக்கு இடையிலான நுண்ணிய வித்தியாசங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. திறமையும், தகுதியும் இன்றி கூட்டு சேரும் வலுவும், உழைப்பும் கொண்டு இத்தகைய ஒரு சமூகத்தில் ஒருவர் ஆகப்பெரிய இடங்களை எல்லாம் அடைய முடியும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் தேர்வில் தோற்றவர் விரிவுரையாளர் ஆகும் அநியாயம் நடக்காது தான். தலித்துகள், குழந்தைகள், ஊனமுற்றோரை சமூகம் மரியாதையுடன் நடத்தலாம்.

லண்டனில் சிலுவை ராஜ் என்ற பயண நூலில் ராஜ் கௌதமன் இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்குமான இந்த கலாச்சார வேறுபாட்டை நுட்பமாக இனம் காண்கிறார். மக்கள் அங்கு மந்திரித்தது போல் விதிகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் அக்கலாச்சாரத்தில் ஒரு எந்திரத் தன்மை உள்ளது. துணையும் சூழலும் அமையப் பெறாதவன் அங்கு கடுமையாக தனிமைப்படுவான். டீக்கடையில், ரயிலில் காத்திருப்பு வரிசையில் பார்ப்பவரிடம் எல்லாம் குடும்ப வரலாறு கதைக்க முடியாது. லண்டனில் “காக்காயை” கூட கண்ணால் பார்க்க முடியாது என்று பகடி செய்கிறார் ராஜ்.

சீனுவுக்கு நிரந்தர வேலை கிடைத்ததில் என் கல்லூரி விரிவுரையாள நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் யாரும் கோபப்பட்டதாக தெரியவில்லை. அதனால் எழுத்தாளனுக்கு ஒழுக்க-அறவுணர்வு கட்டாயம் வேண்டும் என்ற சாரு நிவேதாவின் சொற்படி நான் அவ்விடம் தர்மாவேசப் பட்டேன். அதற்கு ஸ்ரீதரின் பதில்: “சீனுவுக்கு அந்த வேலை கிடைத்தது அநியாயம் தான். ஆனால் அவன் அதற்கு ரொம்ப ஆசைப்பட்டான். அவனது சாதி மக்கள் பொதுவாக உயர்குடியை சேர்ந்தவர்களாக இருப்பதால் சீனுவுக்கு தான் மத்திய வர்க்கமாக இருப்பதில் தாழ்வு மனப்பான்மை உண்டு. சாலையில் ஏதாவது இறக்குமதி கார் போகப் பார்த்தால் நான் எப்போடா இது மாதிரி ஒண்ணு வாங்குறது? என்று ஏங்கி சொல்வான். அவனுக்கு குடும்பம் வேறு இருக்கிறது. அவனுக்கு நல்லது நடந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான் ...” . சிலுவை ராஜுக்கு லண்டனில் காணக் கிடைக்காத காக்கா இந்த மீ-தர்க்க உணர்வு தான். நியாய, ஒழுக்கம் மீறி வெளிப்படும் கருணை எனும், ஆப்பிரிக்க வேட்டை நாய்களிடம் காணப்படும், குழு உணர்வு.
Read More

Tuesday 10 November 2009

மோகமுள்: இந்த உடல் என்ன பாபம் செய்தது?




மோகமுள்ளின் நோக்கம் என்ன? பாபு என்கிற முதிரா இளைஞன் யமுனா என்கிற மத்திய வயது பெண் மீதான மோகத்தை எப்படி அடைகிறான் என்பதை சொல்வதா? இல்லை. நாவல் பாபுவின் மனக்கோந்தளிப்புகளை பற்றியது; அவனது கொந்தளிப்புகளால் நகர்த்தப்படுகிறது. தஸ்தாவஸ்கியின் ரஸ்கல்னிக்கோ போன்ற நாயகர்களும் சதா கோபாவேசங்கள், தடுமாற்றங்கள் மற்றும் கொந்தளிப்புகளில் வாழ்பவர்கள் தாம். ஆனால் அவை லட்சிய, அறம்சார் ஆவேசங்கள்.
பாபுவினுடையவை பெரும்பாலும் தனிமனித விருப்பு சார்ந்த கொந்தளிப்புகள். இந்நிலைகளின் பின்னால் ஒரு ஆத்மீகத் தேடல் உள்ளது; அதற்கு பிறகு வருகிறேன். பாபு இந்த தீவிர அலைகழிப்புகளைக் கடந்து எப்படி சமநிலையை (சமாதியை?) அடைகிறான் என்பதே நாவலின் கரு. ஒருவித coming-of-age பாணி கதை. பாபுவின் லட்சிய நாயகர்களான ராஜம், அப்பா வைத்தி, இசை குரு ரங்கண்ணா ஆகியோர் வெவ்வேறு நிலைகளில் \ தளங்களில் சமநிலை அடைந்தவர்கள்; நாவல் ஆரம்பத்தில் இருந்தே அவ்வாறே இருக்கிறார்கள். பாபுவுக்கு இவர்களே முன்மாதிரிகள். இதனால் தானோ, இவர்கள் மாற்றமின்றி சாலைகளில் சிலையாக பெருமளவில் நிற்கும் தலைவர்கள் மாதிரி சற்றே தட்டையாக உள்ளனர்.

யமுனாவும் தங்கம்மாவும்

பாபு யமுனாவின் உடல் வனப்புடன் அவளது எளிதில் ஏமாற்றத்தை வெளிக்காட்டாத, ஏமாற்றத்துக்கு விழுந்து விடாத நிதானம் மற்றும் தன்மானத்தையும் சேர்த்தே பிரியப்படுகிறான். உரையாடலில் கூடும் சுயபரிகாசமும், சன்னமான எள்ளலும் அவளை வாழ்வின் சரிவை உறுதியுடன் நேரிடும் அவகாசம் அளிக்கின்றன. யமுனா இறுதி வரை ஓரளவு ஒரு புதிர்த்தன்மையை முக்காடாக அணிந்திருக்கிறாள். இதுவும் மற்றொரு ஈர்ப்பு. இந்த உள்வலுவும், மறைபொருளும் தங்கம்மாவிடம் இல்லை. அவளும் யமுனாவைப் போன்று சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவதிப்படுகிறாள். இருவரையும் ஆண் சமூகம் தொடர்ந்து விலை பேசி முடக்கப் பார்க்கிறது. யமுனா பாபுவின் சமநிலை-முன்மாதிரிகளின் பட்டியலில் கடைசியாக இருக்கிறாள். அவளது பாத்திரத்தில் அதிக ஆழம் கூடாததன் காரணம் இதுவே. ஆனால் தங்கம்மா பாபுவைப் போன்று ஆவேசமானவள். தள்ளாத கிழவருக்கு மணமாகி புணர்ச்சி வாழ்வு அநியாயமாக மறுக்கப்பட்ட அவள் பாபுவின் அறைக்கு மாடியேறி குதித்து வருவது அசாதாரணமானது தான். நாவலில் பிற பெண் பாத்திரங்களும் உறவுகளைப் பொறுத்த மட்டில் கையறு நிலையில் செயலற்று இருப்பவர்கள். பொருளாதார சுயசார்பு அற்றவர்கள். விதவைக் கோலம் பூணும் பார்வதி பாயும், பாலம்மாளும், மூன்று வயதில் இருந்தே விதவை வாழ்வுக்கு அனுசரித்து போகும் தைலுப்பாட்டி போன்றவர்களுக்கு மாடி ஏறி வந்து கூடுவது கற்பனைக்கு அப்பாலானது. பாபு தன் அடிப்படை உந்துதல்களை சமூக நியதிகளுக்காக தியாகம் செய்ய மறுப்பவன். ஒழுக்கத்தை ஆன்மீக எழுச்சிக்கான அடிப்படையாக வைத்தியும், ரங்கண்ணாவும் அவனுக்கு போதிக்கிறார்கள். தங்கம்மா இரண்டாவது முறையாக அவனை புணர்ச்சிக்கு அழைக்கும் போது அவன் ”சிரம்மப்பட்டு” மறுப்பது இந்த ஒழுக்கக் கடமையிலிருந்து வழுவாது தன்னைக் காப்பதற்கே; அதாவது ஒரு உயர்ந்த லட்சியத்துக்காக. தங்கம்மாவுடனான அவனது பாலுறவை வெளியுலகம் அறிவதில்லை என்பதை கவனியுங்கள். கும்பகோண சாலைகளில் தினமும் சுற்றினாலும் அவன் வாழ்வு மனம் எனும் ஒரு ஒற்றை அலையின் எண்ணற்ற வட்டங்களுக்குள் தான். அவன் அறிந்த தங்கம்மா என்ற பெண் பற்றி வெளி மனிதர்களுக்கு, ஏன் அவளது கிழக்கணவனுக்கே தெரியாது. தங்கம்மா பாபுவின் மற்றொரு பக்கம். ஆன்மீக தேடலற்ற தூய உயிரியல் விழைவு. குருதியும், விந்தும் பொங்கும் போது துடிக்கும் ஆழ்மனதின் கண் அவள். அதனாலேயே முதல் கூடலின் போது பாபு நடுங்க, அவள் திடமாக இயங்குகிறாள். கார்ல் யுங்ஙின் சித்தாந்தத்தில் சுதந்திரம் எடுத்துக் கொண்டு, பாபுவை தங்கம்மாளின் ஆழ்மனதின் பொருந்தாத முகமூடி எனலாம். சுடுகாட்டில் அவளது எரிந்து சாம்பலான மீதத்தை பார்க்கும் பாபுவுக்கு தோன்றுகிறது:

”எவ்வளவு சாம்பல்! இவ்வளவு சாம்பலா உன் உடம்பில் இருந்தது? இவ்வளவு இராது. இது வரட்டியின் சாம்பல்! உன் உடம்பின் சாம்பல் எங்கே? இந்த வரட்டி சாம்பலுக்குள் புடம் போட்டுக் கிடக்கிறா? தங்க பஸ்பம் மாதிரி!

தங்கம்மா! இவ்வளவு சாம்பலுக்கு அடியில் நீ எப்படி படுத்திருக்கிறாய்!”

தங்கம்மா பாத்திரத்தை படலம் படலமாக நாம் உரிக்கலாம். கலப்படமில்லாத தங்கம்; அழிவற்ற இயற்கையின் ஆதி சக்தி. புலப்படாத ஆழ்மனம்.

பாபுவின் பயணத் தடங்களும், குறியீடுகளும்

பாபுவின் கொந்தளிப்பான பயணத்தில் இசையும், ஆன்மீகமும் துணைத் தடங்கள். பாபுவுக்கு சம்பிரதாய வழிபாட்டில், மத ஆசாரங்களில் ஈடுபாடு குறைவே. ஆரம்பத்தில் கோயில் வழிபாட்டாளர்களின் நோக்கம் காமமே என்று விமர்சிக்கிறான். அப்பாவுக்காகவே பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுகிறான். ராஜூ என்கிற ஆன்மீகவாதி அல்லது சித்தரிடம் அவனுக்கு ரங்கண்ணாவிடம் ஏற்படும் ஒன்றுதல் ஏற்படவில்லை. அவரது மந்திரத்தை உருவிட்டு அதற்காக ஒழுக்கம் பழகுவது பாபுவுக்கு சிரமமாகவே உள்ளது. ராஜூ தனது அபார மந்திர சக்திகளை ஏன் சமூகத்துக்காக பயன்படுத்த இல்லை என்ற கேள்வி அவனிடம் உள்ளது. ஆனாலும் மதமும், சாதியும் வளர்த்த ஆசார நம்பிக்கைகள் அவன் உள்ளுக்குள் உள்ளனதாம். பாபுவுக்கு அவனது பின்புலம் காரணமாய் தவிர்க்க முடியாத உபபாதை ஆகிறது ஆன்மீகம். இசை அளவுக்கு அவனை இது உக்கிரமாய் தாக்குவதில்லை என்றாலும்.

பாபு தங்கம்மாளை நிராகரிப்பது ஒரு சுய நிராகரிப்பே. அதனாலே கதையாடலில் இங்கு நகைமுரண் ஏற்படுகிறது. அதை அவன் சற்றும் உணர்வதில்லை என்பதே தி.ஜாவின் நுட்பம். இதே சரடில், நாவலின் ஓட்டத்தில் உளவியல், தத்துவ சித்தாந்த விவாதங்களை அவர் நுழைப்பதில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதை கதாசிரியனின் முக்கியமான முடிவாகவே கருதுகிறேன்.

குறும்பாத்திரங்கள்

இந்நாவலின் பெரும்வலு பாபுவுக்கு முற்றிலும் மாறுபட்ட குறுபாத்திரங்கள். அவர்களை சுருக்கமாகவே சித்தரிக்கிறார். முதல் காட்சியில் வரும் மேலக்காவேரி சாஸ்திரிகள் நல்ல உதாரணம். பாபு சிறுஅலைவட்டத்துக்குள் நீச்சலடிக்க அவர் கரை மேல் நின்று மனிதர்களையும் வாழ்க்கையும் புறவயமாக கவனிக்கிறார். அதைப் போன்றே மாடிக்கும், தெருவுக்குமான பாபுவின் பயணத்தில் எக்காலமும் விழித்து இருந்து தகவல் சொல்லும் கைலாசம் பாத்திரமும் முக்கியம் பாபுவின் இந்த மாடி-வெளி பயணத்தின் படிமத்தை அவர் நாடகீயமாக்குகிறார். மாடிக்கு இவ்வாறு அவன் அடிக்கடி ஏறி இறங்குவது, ஜன்னல் வழி காவேரியை பார்ப்பது, அதன் அதிகம் பயன்படாத துறையில் குளித்து மனதை ஆற்றிக் கொள்வது ஆகிய நிகழ்வுகளுக்கு ஒரு குறியீட்டு பொருள் ஏற்படுவதை கவனித்து, தஸ்தாவஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கால்னிக்கோவின் இத்தகைய பயணத்துடன் ஒப்பிடலாம்; பாவம் ரஸ்காலுக்கு காவேரியும், இசையும் இல்லை.

உரையாடல் வழி பாத்திரங்கள்

உரையாடல்களுக்காகவே மோகமுள்ளை திரும்பத் திரும்ப படிக்கலாம். வைத்தியின் மனைவி ராமு எனும் முன்னாள் சந்தர்ப்பவாதி சீடர் ஒருவர் பற்றின் சொல்வதை படியுங்கள்:

“ மோட்டாரில் வந்திருந்தானோ ராமு?” என்று கேட்டவாறே கிழவி எழுந்து வந்தாள்.
“ஆமாம். மோட்டர்லேதான்” (ரங்கண்ணா)
“ அவன் மோட்டார்லெ வந்தா என்ன? புஷ்பக விமானத்திலே வந்தா என்ன? அண்ணா ஆறு குடகாரஞ்சுக்கு மேலே பொற மாடார்னு புள்ளி போட்டிருக்கானே: நல்ல சமத்து!” என்று அண்ணாவின் முன் இருந்த அரை டஜன் குடகாரஞ்சுகளை பார்த்தாள் கிழவி.

“சாவகாசமா வரேன்னு போயிருக்காண்டி. அப்ப குரு தட்சிணை ரண்டு டஜனாயிடும். உரிச்சு திங்கலாம். கவலைப் படாதே” என்று சிரித்துக் கொண்டே பாபுவைப் பார்த்தார் ரங்கண்ணா.

இந்த சம்பாஷணையிலிருந்து என்னவெல்லாம் தெரிய வருகிறது? ராமுவை சமர்த்து எனும் போது கிழவி குறிப்பது ரங்கண்ணாவுக்கு லௌகீக சமர்த்து போராது என்பதுதான். ராமுவின் போலியான குருபக்தி மீதான நக்கலும் தெரிகிறது. ரங்கண்ணா தன் மனைவியின் அங்கலாய்ப்பை பொருட்படுத்துபவர் அல்ல. அதற்காக கோபிப்பதும் இல்லை. அவரின் பரந்த உலகில் இசையின் மன எழுச்சிகளுடன் அவளது பொருமல்களின் பிசிறல்களுக்கும், ராமுவின் சுய நலத்துக்கும் இடம் உண்டு. “உரிச்சுத் திங்கலாம்” என்று சிரிக்க முடிகிறது அவரால். இம்மூவரையும் இரு உரையாடல்களுக்குள் காட்ட முடிவது தி.ஜாவின் அலாதியான மொழித்திறமை. இங்கு நாம் அவரது கதை சொல்லலை மேலும் ஆராயலாம்.

படர்க்கையிலிருந்து தன்னிலைக்கான தாவல்

பாபுவின் கண்களில் தாரை தாரையாக நீர் பெருகிற்று. கண்ணை மூடிக் கொண்டு இசையின் தூய்மையான இனிமையில் திளைத்தான் ... நாமும் காலத்தை இப்படி வீணடிக்காமலிருந்தால்? இந்த சங்கீதத்தை பயின்றிருந்தால்?

முதலில் படர்க்கை நிலையில் இருந்து வேற்றாள் மாதிரி பாபு பற்றி அவர் பேசுகிறார். பிறகு மொழி தன்னிலைக்கு தாவுகிறது. நாவலில் இந்த தாவல் தொடர்ந்து நிகழ்கிறது. தன்னிலை இட கதை கூறலின் நோக்கம் பேசப்படும் பாத்திரத்தின் தனிப்பட்ட தகவல்களை, தீவிர உணர்வு நிலைகளை நம்பும்படியாக வர்ணிப்பது. தி.ஜா இப்படி பாபுவாக மாறும்போது உணர்ச்சிகரம் கூடுகிறது. கதைசொல்லலுடன் வாசகனுக்கு அந்தரங்க உறவாடல் ஏற்படுகிறது. ஆனால் மோகமுள்ளை பாபுவின் தன்வரலாறாக சுருக்காமல் பல்வேறுபட்ட மனிதர்கள் மற்றும் அவர்களின் மாறுபட்ட பரிமாணங்கள் உள்ளிட்ட பெரும்பரப்பாக மாற்ற விரும்பியிருக்க வேண்டும். அதனாலே படர்க்கை இட கதைசொல்லல். பாபு யமுனாவின் சொத்து விசயமாக அவளது அப்பாவின் முதல் மனைவியின் மகன் சுந்தரத்தை சந்திக்கும் இடத்தை இங்கு குறிப்பிட வேண்டும். அப்பா இறந்த பின் சுந்தரம் தன் சகோதரி மற்றும் சித்திக்கு நெல்லும் பணமும் தந்து உதவ மறுக்கிறான். கொடூர மனம் கொண்டவன். சுயநலமி. நீசன் என்றெல்லாம் ஆளாளுக்கு அவனை பொரிகிறார்கள். மேற்சொன்ன சந்திப்பில் சுந்தரம் பாபுவுக்கு தன்னைப் பற்றி வேறொரு பார்வையை அளிக்கிறான். விவசாயத்தில் இரவு பகலாய் உழைத்து அவன் பெறும் ஒவ்வொரு நெல்மணியும் அவனுக்கு மதிப்பு வாய்ந்தது. யமுனா குடும்பத்தினர் உழைப்பினால் விளையும் பணத்தின் மதிப்பறியாத ஊதாரிகள் என்று குற்றம் சாட்டுகிறான். இதுவரையில் அவர்கள் உழைக்காமலே செழிப்பாக வாழ்ந்து விட்டாயிற்று; இனிமேல் தன்னால் இந்த அநியாயத்தை ஆதரிக்க முடியாது என்கிறான். இந்த கட்டத்தில் இருந்து சுந்தரத்தின் தரப்பு தெளிவடைகிறது. இந்த கோணத்தில் பார்த்தால் பாபு, ரங்கண்ணா உள்ளிட்ட நாவலின் மகத்தான லட்சியம் கொண்ட பாத்திரங்கள் கூட உடல் உழைப்பின் மதிப்பை அறியாதவர்கள் தாம். சமூகத்தின் ஒரு பகுதி இந்த சேறும் சகதியுமான வாழ்வை தேர்ந்து கொள்வதால் தான் இவர்களால் இசை, காதல், பக்தி, இலக்கியம் என மாய முடிகிறது. இது குற்றசாட்டல் அல்ல. பாபுவின் மனவுலகின் கண்ணாடிப் பரப்பில் வந்து விழும் சிறுகல். அதன் அதிர்வு. அவன் நாடும் சமநிலைக்கு இந்த அதிர்வு தரும் புரிதலும் அவசியம். கட்டுக்கோப்பான நாவல் என்று க.நாசுவை பாராட்ட வைத்ததற்கு பாபுவின் தீவிர மன நிலைகளில் இருந்து வெளிவந்து இந்த சிறுபாத்திரங்கள் கதைக்கு தரும் மாறுபட்ட பார்வைகள் ஒரு காரணம் என்று யூகிக்கிறேன்.

ஆனால் இதையும் மீறி பாபு சதா தீவிர உணர்வு நிலையில் இருப்பது நம்பும்படியாக இல்லை. நாவல் ஆரம்பிக்கும் போது சங்கீதத்தால் ஆட்பட்டு அவன் அழுகிறான். பிறகு கடமை, காமம், குற்றவுணர்வு என்று தொடர்ச்சியாக ஓய்வின்றி அலைகழிக்கப்படுகிறான். நிதர்சனத்தில் ஒருவர் தொடர்ச்சியாக இவ்வளவு உணர்வு கொந்தளிப்புகளுக்கு ஆட்படுவதில்லை. ஆட்பட்டாலும் தாங்க முடியாது. நம் வாழ்வின் சிறு சதவீதம் மட்டுமே இத்தகைய தீவிர மனநிலைகள். மனுஷ்யபுத்திரன் ஒரு தனிப்பட்ட உரையாடலில் இலக்கியமும் கலைகளும் மனிதன் வாழ்வின் சலிப்பில் இருந்து தப்பத்தான் என்று குறிப்பிட்டார். பாபுவுக்கு சலிப்பே இல்லை. மூன்றாவது கியரிலே எப்போதும் ஓடுவது பாபுவின் பாத்திர அமைப்பின் முக்கிய பலவீனம்.

இறுதி கட்டம்

மோகமுள்ளில் பாத்திரங்களிடையே வருகிற ஒரே நேரடி தீவிர சர்ச்சை சங்கீதத்தில் ஞானமா குரலா முக்கியம் என்பது. வித்வான் ராமு ஞான உபாசகர். பாபு இசை அதன் அறிவுத்தளத்தை கடந்து மனித நிலையின் பல்வேறு பரிமாணங்களை பிரதிபலிக்க கூடியதாக இருக்க வேண்டும்; அதற்கு தோதாக குரல் பதப்படுவதே நிஜமான தேர்ச்சி என்கிறான். இங்கு நாம் பாபு வைத்தி மற்றும் ராஜுவின் ஆன்மீகக் கட்டுப்பாடு மற்றும் அறிவுரைகளை தொடர்ந்து பின்பற்ற முடியாமல் தோற்பதை நினைவுகூரலாம். மனிதன் தன் உயிரியல், மனவியல் உந்துணர்வுகளை நிந்தித்து மறுக்காமல் அவற்றின் வழியிலேயே கடந்து சமநிலை அடைவதே பாபுவின் விருப்பத்தேர்வாக இருக்க வேண்டும். வைத்தி, ராஜூ, ராமு வலியுறுத்தும் பிரம்மச்சரிய \ ஏகபத்தினி விரத ஏற்பாடுகளை பாபு வெகுஇயல்பாகவே மீறுகிறான். கட்டமைக்கப்பட்ட சட்டகத்துள் உயிரற்ற விழுமியங்களை அவனால் பின்பற்ற முடிவதில்லை. அவனது ஆரவாரிக்கும் மனதை அமைதிப்படுத்துவது ராஜூ உபதேசித்த மந்திரமோ தியானமோ அல்ல: அது நிகழ்வது யமுனாவுடனான கூடலுக்கு பின்பே.

நாவலின் இறுதியில் பாகவதர் ராமு பாபுவுடனான தனது உரையாடலில் பாலியல் ஒழுக்கத்தை போற்றுகிறார்: “அந்த மந்த்ர ஷட்ஜமத்தை பிடித்து உலுக்குவதானால் சரீரத்தை, சூட்சுமம் பலத்தை காப்பாற்றினால்தான் முடியும் .. பிரம்மச்சாரியாக இருப்பது பெரிய அதிர்ஷ்டம் ஐயா”
நாவலின் ஆரம்பத்தில் வரும் பாபு ஒருவேளை இதற்கு இசைந்திருப்பான். ஆனால் இப்போது தரிசனத்தின் கீற்று அவனை நோக்கி விழுந்து விட்டது; பாபு முதிர்ந்து விட்டான். அவனது சிந்தனை இது: “இந்த உடல் என்ன பாபம் செய்தது? அழகுக்கும் சக்திக்கும் ஆதாரமான இந்த உடல் என்ன பாபம் செய்தது? இவ்வளவு கரிப்புக்கும் எச்சரிக்கைக்கும் ஆளாகும்படி என்ன பாபம் செய்தது?”. இந்த அவதானிப்பை பாபுவின் இசை பற்றிய முன்னர் குறிப்பிட்ட நம்பிக்கையுடன் பொருத்தி யோசிப்பது புதிய திறப்புகளை தரும்.

பாபு தன் உடல், உள்ளம், மற்றும் இசையை பரிசோதனைப் களங்களாக மாற்றுகிறான். அவனுக்கும் பிற பாத்திரங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இதுவே. இதனாலே வாழ்வு அவனுக்கு அசாதாரணமாக அமைகிறது: படித்தும் எந்த வேலையிலும் ஈடுபாடு கொள்ளாமல்; காதலித்தும் அப்பெண்ணை முழுக்க அடையாமல்; இசை பயின்றும் கச்சேரி செய்யாமல் அவன் வாழ்வு சென்றடையாத பயணமாகவே இருக்கிறது. இம்மூன்று நிலைகளிலும் அவன் தன்னை கறாராக சுயபரிசீலனை செய்தபடி உள்ளான். இந்த நிறைவற்ற நிலைகளும் ஒரு நிறைவே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவனது எதிர்காலம் எதிர்பாராத தருணங்களால் நிரம்பியுள்ளது. முழுக்க முன்-தீர்மானிக்கப்பட்ட சலிப்பான வாழ்க்கை வாழும் சாமான்யர்களைக் குறித்து பாபு கொள்ளும் கோபாவேசத்தை பாருங்கள். பாபு பேருந்தில் சில் குமாஸ்தாக்களை கவனிக்கிறான்:

“வேலை செய்துவிட்டு வருகிற முகங்கள் எண்ணெய் வழிந்து சோர்ந்து கிடந்தன ... இன்னொரு முகம் எல்லா வேதனைகளையும் கடந்து விட்டது போல் தோன்றிற்று; இந்த சில்லறை இம்சைகள் இனி எனக்கு உரைக்காது என்று. எல்லாவற்றையும் விதியின் கையில் போட்டுவிட்டு அடித்துப் போட்டாற்போல் உட்கார்ந்திருந்தது. வீட்டுக்குப் போய் டிபன் சாப்பிட்டு சாய்வு நாற்காலியில் இரண்டு மணி நேரம் சாய்ந்திருந்து, மீண்டும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கி விடும் போலிருக்கிறது. இப்படியே விதியின் கையில் போட்டுக் கொண்டே நாளைப் போக்கி பிள்ளையின் கையிலோ வறுமையின் கையிலோ மூப்பைக் கொடுத்து விட்டு, எரிந்து புகையும் குப்பையுமாகி விடும். அவரை அப்படியே குண்டுக்கட்டாக தூக்கி ஜன்னல் வழியாக வெளியே எறிந்து விட்டால் என்ன? ”

நாவலின் மொத்த பரப்பிலும் மிக முக்கியமான பத்தி இது. ஒரு சம்பிரதாய அமைப்பினுள் தன்னை முழுக்க ஒப்புவித்து, வாழ்வின் பால் ஆயாசம் கொள்வது ஒரு எதிர்வாழ்வு நிலைப்பாடுதான்.

நாவலின் முடிவில், பாபுவின் எதிர்காலம் நிச்சயமற்றதாக தெரிந்தாலும், அவன் தனதேயான ஒரு சமநிலையை, முதிர்ச்சியை அடைந்திருப்பதை இறுதிப்பக்கத்தில் கடைசிக்கு முந்தி வருகிற இந்த உருவக வரிகள் குறிக்கின்றன:
“அடிவானத்தில் உள்ள மரங்கள் கூட நகர்ந்து வந்தன. வானையும் விண்ணையும் சேர்த்தன அம்மரங்கள்”. இந்த விண்—மண் இணைவு ஒரு மரத்தினால் மட்டுமே சாத்தியம். அம்மரம் ஒரு முள்ளாகவும் இருக்கலாம்.
Read More

Tuesday 3 November 2009

ஆஸ்திரேலியா: ஒரு சூதாடியின் நிழல்




இந்தியாவுக்கு எதிராக 29-10-09 அன்று நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பரிதாபமாக தோற்றது. ஓட்டங்களில் வித்தியாசத்தை உத்தேசிக்கவில்லை. மூன்றரை மணி நேர மட்டையாட்டத்தில் எந்த ஒரு கட்டத்திலும் அவ்வணி பின் தங்கியே இருந்தது. குறிப்பாக குழப்பமான திட்டமிடலுடன் ஆஸியினர் களமிறங்கினர். எப்போதுமே தன்முனைப்பால் ஆட்டத்தை திசை திருப்பியுள்ள ஆஸியினர் 29-அன்று வெற்றிக்கு ஒரு புறக்காரணியை நம்பி இருந்தனர்: பனித் துளிகள். அவர்களின் திட்டம் இதுவாக இருந்தது: முதல் இருபது ஓவர்களில் விக்கெட்டுகளை அதிகம் கொடுக்காமல் நிதானமாக ஆடுவோம். மைதானத்தில் பனித்துளிகள் கொட்ட ஆரம்பித்ததும் இந்திய சுழலர்கள் கையிலிருந்து பந்து வழுவும். புல்டாசும், குறை உயரப் பந்துமாக வீசி சொதப்புவார்கள்; எளிதாக பத்து ஓட்டங்கள் கூட ஒரு ஓவரில் தொடர்ந்து அடிக்கலாம். ஆனால் நாக்பூரில் சில இரவுகளில் பனி குறைவாகவே இருக்கும் என்று அங்கு ஆடி பரிச்சயமுள்ள தோனி குறிப்பிட்டிருந்தார். அன்று பனிப்பொழிவு மிதமாகவே இருந்தது. இந்திய சுழலர்கள் ஹர்பஜனும் யுவ்ராஜும் சிறப்பாக பந்து வீசத் துவங்கிய போது ஆஸி மட்டையாளர்கள் முகம் இருண்டது; நெற்றியில் கவலைக் கோடுகள். கண்களில் குழப்பம். பனித்துளிகளை நம்பி ஆட இறங்கியது தான் ஆஸி அணியின் ஆதாரத் தவறு; மேலும் குறிப்பாய் அது அணித் தலைவர் ரிக்கி பாண்டிங்கின் தவறு. திட்டமிடல் பாண்டிங்கின் பலவீனம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பெவன் உட்பட, சுட்டியுள்ளனர். நேற்று அடித்துக் கழித்து பார்த்ததில் ரிக்கி பாண்டிங்கின் கணக்கு புத்தகத்தில் மீண்டும் மீண்டும் முட்டையே வந்தது.


கோழியின் கழுத்தை அறுத்த பின் அது பண்ணுகிற அழிச்சாட்டியம் தாங்காது. கசாப்பு கடைகளில் அதனால் முதலில் கோழியை தண்ணீரில் முக்கி மயக்கமடைய வைத்து பின் அறுப்பார்கள். கிரிக்கெட்டிலும் இது போல் எதிரணியினருக்கு மூச்சு விடவும் அவகாசம் வழங்காது நெருக்கடி வழங்குவது உசிதம் மற்றும் வழக்கம். ரிக்கி பாண்டிங் கோழியை பிடித்து சாவகாசமாய் அறுக்கலாம் என்று பறக்க விடுகிறார்; பிறகு அது மதில் மேல் கொக்கரிக்க வாயைத் திறந்து வியக்கிறார். பல உதாரணங்கள். 2003 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இரண்டாவதாக ஆடிக் கொண்டிருந்த இந்தியா சச்சின், கங்குலியை இழந்து, நம்பிக்கை இழந்து ஆஸி உள்ளங்கையில் தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது வானம் மந்தாரமாக தெரிந்தது. டர்க்வர்த் லூயிஸ் கணக்கை போட்டுப் பார்த்த ரிக்கி நிலைமையை மறந்து இருபத்தைந்து ஓவர்களை முடிக்கும் அவசரத்தில் பகுதி நேர சுழலர்களை கொண்டு வந்தார் இந்தியர்கள் மீதான அழுத்தத்தை விடுவித்தார். அதிமுக்கியமான ஒரு தருணத்தில் சேவாக் அன்று ரன் அவு ஆகாமல் இருந்திருந்தால் ரிக்கிக்கு அந்த ஆட்டம் நிஜமாகவே இறுதி ஆட்டமாக இருந்திருக்கும். 2008 நவம்பரில் விதர்பாவில் நடந்த டெஸ்டு ஆட்டத்தில் இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 166 க்கு 6 விக்கெட்டுகள் இழந்து திகைத்து நின்ற கட்டம். வாட்சனின் உள்வரும் பந்துக்ளை இந்தியர்களால் புரிந்து தடுக்க முடியவில்லை. மேலும் ஐந்து ஓவர்கள் தந்திருந்தால் தனி மனிதராக அனைவரையும் காலி செய்திருப்பார். ஆனால் ஓவர் ரேட் கவலை பாண்டிங்குக்கு. அன்றைய ஆட்டத்திலும் சீக்கிரமாக ஓவர்களை முடிக்காவிட்டால் தென்னாப்பிரிக்க உடனான அடுத்த தொடரில் அவர் தடை செய்யப்படுவார். வாட்சனை நிறுத்தி விட்டு பகுதி நேர சுழலர்களை வீசச் செய்தார். தனக்காக அணியின் வெற்றியை தியாகம் செய்தார். எதிர்கால கவலைக்காக இன்றின் கொண்டாட்டத்தை துறந்தார். 28-ஆம் தேதி நடந்த ஆட்டத்திலும் ஏறத்தாழ இதே நிலைமையே இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்களிடம் மூன்று முக்கிய விக்கெட்டுக்ளை இழந்து இந்தியா நெருக்கடியில் இருந்தது. ஒரு நல்ல ஆடுதளத்தில் சுழல் பந்து வீச்சை எதிர்கொண்டு ஆடும் போது இந்தியர்கள் இயல்பாகவே தன்னம்பிக்கையும் ஊக்கமும் பெறுவார்கள் என்பது தெரிந்திருந்தும் பாண்டிங் இருமுனையிலும் உடனடியாக சுழல் பந்து அறிமுகம் செய்தார். இந்திய மட்டையாளர்களின் முகங்கள் ஒளி விட்டன. பாண்டிங் கோழியை பறக்க விட்டார்.


31-10-09-அன்று பிரோஷாகோட்லாவில் நடந்த ஆட்டத்தில் மட்டையாடுவதற்கு முன்னரே தனது அணியின் ஸ்கோர் 200 என்று தீர்மானித்து டாஸின் போது சொன்னார் ரிக்கி. ஆஸியினர் மட்டையாடிய போது ரிக்கி பாண்டிங் மற்றும் பிறரின் ஆட்டம் பெரும்பாலும் எதிர்பார்க்கும் படியாக எதிர்மறையாக இருந்தது. அவர்கள் மனதிலிருந்த குறைந்த ஸ்கோர்தான் இந்த அணுகுமுறைக்கு முக்கிய காரணம். ஆடுதளம் மெதுவாக இருந்ததே அன்றி ஏற்ற இறக்கமெல்லாம் இல்லை. ஆனாலும் ரிக்கி எதிர்காலம் குறித்து மிகுந்த அச்சம் கொண்டிருந்தார். என்ன அச்சம்? இந்த ஆடுதளத்தில் தன் அணியினர் வழக்கமான ஆக்ரோசமான ஆட்டம் ஆடினால் எளிதில் வெளியேறி விடுவார்கள் என்ற அச்சம். இந்த அச்சம் இந்திய சுழலர்களின் பணியை எளிதாக்கியது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் 54 பந்துகளில் 73 ஓட்டங்கள் எடுத்த மைக்கேல் ஹஸ்ஸிடம் ஒரு பேட்டியாளர் ”இன்று மட்டையாடும் போது எப்படியான இறுதி ஸ்கோரை திட்டமிட்டிருந்தீர்கள்” என்று கேட்டார். ஹஸ்ஸியின் பதில்: “எந்த திட்டமும் இல்லை. வாய்ப்புகள் கிடைக்கும் போது அடித்தாடினேன். மற்றபடி ஆட்டத்தின் போக்கில் தான் மட்டையாடினேன்”. கிரிக்கெட் மூளை ஆட்டம் தான்; கற்பனை ஆட்டம் அல்ல. ரிக்கி ஹஸ்ஸி சொன்னதை கவனித்திருக்க வேண்டும்!


ரிக்கி பாண்டிங்குக்கு ஆஸ்திரேலியர்கள் ”பண்டர்” என்று ஒரு வட்டப்பெயர் வழங்கியிருக்கிறார்கள். அதன் பொருள் “சூதாடி”. அவரது பணயப் பொருள்: ”நிகழ்காலம்”.


திட்டம் ”அ” தோற்றால் சீட்டுக் கட்டிலிருந்து ஆஸ்திரேலியர்கள் திட்டம் ”ஆ”வை விடுவிப்பார்கள். பத்தாண்டுகளுக்கு மேலாக ஆஸி அணியின் முக்கிய வலுவாக இதுவே விளங்கி வந்தது. ஆனால் கில்கிறிஸ்ட், பாண்டிங், சைமண்ட்ஸ் போன்றோர் விலகிய பின் ஆஸி அணி இந்த இரண்டாவது சீட்டை இழந்து விட்டது. 28-ஆம் தேதி ஆட்டத்தில் பிரட் லீ காயத்தால் விலகி விட பந்து வீச்சிலும் ஆஸியினர் ஒற்றை சீட்டுடனே ஆடினர். உதாரணமாக வாட்சன், மிச்சர் ஜான்சன் போன்றோரை துவக்க ஓவர்களில் பயமின்றி ஆட சொல்லி அதிரடியான ஆரம்பத்தை ஆஸியினர் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இதை செய்ய ரிக்கிக்கு ஏதோ மனத்தடை இருந்தது. அவர் தனது மத்திய வரிசை மட்டையாளர்கள் பொறுப்பை முழுக்க எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். இந்த தன்மறுப்பு அணுகுமுறையை, தயக்கத்தையே பரிதாபம் என்று முதலில் சொன்னேன்.


இயன்சாப்பல் சச்சின் குறித்து முன்பு சொன்னது போல், ரிக்கி பாண்டிங்கும் முழு நீளக் கண்ணாடி நின்று தன்னையே கண்டு பிடிக்க வேண்டும். பிறகு கால்சட்டை பைக்குள் கைவிட்டு அந்த இரண்டாவது சீட்டை எடுக்க வேண்டும்.
Read More

Sunday 1 November 2009

மூரியல் ஸ்பார்க் கவிதைகள்

லண்டன் சுற்றுலா


கென்சிங்டன் பூங்கா


முதிய பெண்கள் மற்றும் துலிப் பூக்கள், மாதிரிப் படகுகள்

கையடக்கக் குழந்தைகள், நடமாட்ட அம்மாக்கள்,

கிளிகள் போல் தூரத்து பேருந்துகள்

தனியான ஆண்கள் மழை அங்கிகளை

கைமேல் கொண்டு – எங்கே போகிறார்கள்? தற்போது கோடையின்

மூட்டை முடிச்சுக்கள் மற்றும் வண்ணத் தெளிப்பு

ஒரு வருடத்துக்கு முன் விதைத்தது போல் வெளிவந்து விட்டபடியால்.



அந்நியள் வியந்தது என்ன?


லண்டனில் தனியாய் காபி உறிஞ்சியபடி

இவள் எங்கிருந்து வருகிறாள்?

ஷூக்கள், கூந்தல் – வங்கியில் அவளுக்கு ஏதுமிருப்பதாக எனக்கு படவில்லை.

அவளுக்கு ஆண்துணை உண்டா, எனில் அவன் எங்கே,

பத்தரை மணிக்கு லண்டனில் புத்தகம் படித்தபடி

ஏன் அமர்ந்து இருக்கிறாள்?


அவளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது

ஆண்துணை இன்றி, வேலையற்று, மளிகைக் கடையில் நாயுடன் அவசரமாக ஓடாமல்

தனித்து இருக்கும் படியாக. உறிஞ்சிடும் படியாக.



ஓய்வு நாள்


மூன்றே கால் மணிக்கு கடிகாரம் நின்று போனது;

மேலும் கைகளை அகலமாக விரித்து கொட்டாவி விட்டு அங்கே இருந்தது,

மேலும் அதை திரும்ப ஓட வைக்கவில்லை யாரும்,

ஞாயிற்றுக்கிழமை ஆகையால், நாங்கள் வேலையில் மூழ்கி இருந்தமையால்.


ஆகையால் அந்நாள் நிகழ்ந்தது, மறைந்தது.

ஆனால் துண்டுத் துண்டாய் கிழிக்க, தைக்க, நேசிக்க, வெறுக்க

நாங்கள் பின்பற்றின நேரம் சரியானதா

என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை; நிகழந்தவை எல்லாம்

ஞாயிற்றுக் கிழமை, லண்டன், மணிமுழக்கங்கள், பேச்சு, விதி.




மூரியல் ஸ்பார்க்: சிறுகுறிப்பு

The Mandelbaum Gate, The Prime of Miss Jean Brodie போன்ற தனது நாவல்களுக்காகவே பிரதானமாக அறியப்பட்ட ஸ்காட்லாந்து எழுத்தாளர் மூரியல் ஸ்பார்க் கவிஞராகவே எழுத்தை ஆரம்பித்தார். ஆங்கிலேய அம்மாவுக்கும் யூத அப்பாவுக்கும் பிறந்த ஸ்பார்க் பின்னர் கத்தோலிக்க மதத்துக்கு மாறி, அது தனக்கு நாவல் எழுத ஒரு விரிவான பார்வை அளித்திருப்பதாய் அறிவித்தார். இந்த மதமாற்றம் காரணமான மனஸ்தாபம் மூன்று வருடங்களுக்கு முன் 88 வயதில் சாகும் வரை அவரை தன் மகனிடம் இருந்து பிரித்து வைத்தது. வாழ்வின் ஒழுக்கில் ஒவ்வொரு பிடிமானமாக நாடி சென்றுள்ள மூரியலின் எழுத்தின் முக்கிய தேடல் வஸ்து அடையாளம். இங்கு தமிழாக்கப்பட்டுள்ள கவிதைகள் All the Poems என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.
Read More

ஜார்ஜ் சிர்ட்டெஷ் கவிதைகள்: 1

மழைப்பருவ இறகுகள் (விண்டஹெம் அபே)

எத்தனை பிரகாசமாக சூரியன்

ஒரு கணம் நீட்டி நடக்கிறது

கண்ணாடி ஊடே

பிறகு ஒளிகிறது

அது சற்று நேரமே வருடின

அதே இடைபாதைகளின்

ஆழ் உள்ளிடங்களில்

பதுங்குகிறது


அப்படி இதயம் நின்று திரும்ப ஆரம்பிக்கிறது

அது நின்றதை

கவனிக்காமல்,

ஒரு ஊஞ்சல்

கைவிடப்பட்டு,

ஒரு விழி பாதி சிமிட்டலில்

தொலைந்து, கரும்பறவைகள்

முழுவேகத்தில், தூசுகளின் ஊடே நீந்திட



மறப்பது


அம்மா


சுவர்க்கத்தில் இருந்து கீழ்வரும் முதல் கை அவள் கை

அவள் உனக்கு மேல் வட்டமிடுகிறாள். அது வரப்போகும் வாழ்வின்

முன்னுணர்வு, தரை இறங்க தயாராகும் ஒரு பறவை.

உன் அம்மாவின் வெம்மை. அவள் முலைகள் மென்மையின்

தீவிரம் பற்றின மனப்பதிவு, பிறகு அவளது

கைமுட்டின் எலும்புகள். கன்னங்கள். கழுத்து. அவள்

தலையின் அசைவு, இடுப்பின் முன்பின் ஆட்டம். அவள் முலைக்கண்களின்

மிருதுவான கூம்புகள். அவள் தொப்புளின் புதிர்த்தன்மை. வெப்பம்

குளிர்மை, ஈரம், உலர்வு. பால் மணங்களும், பிரமோன்களும்.

எங்கு நீ ஆரம்பிப்பாய்? பாதங்களை விரல்கள் கிச்சுகிச்சு மூட்டுவதிலா

உதடுகள் தோலில் படுவதிலா? உயரத் தூக்கப்பட்டு

பத்திரமானதற்கு பின் சுழற்றப்படுவதிலா? தெருவின் இரைச்சல்களிலா?

உனது எளிய பேரிடர்களில்? உனது சொந்த அழுகை

உன் தலைக்குள் எதிரொலிக்க கேட்பதில்? ஏதோ தொலைந்து போய்

ஏதோ ஆழ புதைக்கப்பட்டு உள்ளது நீ பார்க்க முயலும் விழியின் அடியில், உன்

நுரையீரலுக்கு உள்ளே

படிந்த தூசு போன்ற மெல்லிசாக ஒன்று,

உன் உடலின் மடிப்புகளுள் வார்ப்பு போல திணிக்கப்பட்ட ஒரு வரலாறு.

வானொலி முணுமுணுக்கிறது. ஒரு மணி திடீரென முழங்குகிறது.

தரைக்கு மேல், கூரை மேல் நகரும் ஒளி.

ஒரு பறவை சரசரக்கிறது. அவளது கூந்தல். ஜன்னல் மீதாக

முட்டிடும், வீறிடும் ஒரு மரத்தின் கிளைகள்.


ஜார்ஜ் சிர்ட்டெஷ் பற்றின சிறுகுறிப்பு




ஜார்ஜ் சிர்ட்டெஷ் தனது எட்டாவது வயதில் ஹ்ங்கெரியிலிருந்து அகதியாக இங்கிலாந்து வந்தார். ஓவியராக பயிற்சி பெற்ற சிர்ட்டெஷ் 1973-ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் கவிதைகள் பிரசுரிக்க ஆரம்பித்தார். இவரது முதல் கவிதைத் தொகுப்பான The Slant Door ஜெப்ரி பேபர் மெம்மோரியல் பரிசை வென்றது. பிறகு சோல்மொண்டெலெய் விருது இவருக்கு வழங்கபபட்டது. இங்கு தரப்பட்டுள்ள கவிதைகளை உள்ளடக்கின அவரது Reel தொகுப்பு 2004-இல் டி.எஸ்.எலியட் பரிசை வென்றது. ஹங்கெரியன் மொழியிலிருந்து செய்துள்ள ஆங்கில மொழியாக்கப் பணிக்காக இவர் European Poetry Translation Prize மற்றும் Derry Prize ஆகிய பரிசுகளை வென்றார். Golden Star விருதும் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கான எழுத்திலும் ஆர்வம் காட்டியுள்ளார். தற்போது மல்யுத்தம் பற்றி நாவல் எழுதி வரும் சிர்ட்டெஷ் University of Ear Anglia-வில் கவிதை மற்றும் படைப்பிலக்கியம் பயிற்றுவித்து வருகிறார். மேலும் படிக்க: http://www.georgeszirtes.co.uk/
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates