Saturday 18 December 2010

நிலவு தீண்டிய மரம்




பியாட்ரைஸ் பிரிஸ்மேன் (வட அமெரிக்கா)
BEATRICE BRISSMAN (வட அமெரிக்கா)
மௌனம் மீள மீள காத்துக் காத்திருக்கும்
விதம் ... அடுத்த
லூன் பறவைக் கத்தலுக்கு
The way silence waits
and waits ... for the next
cry of the loon

நவோமி வொய். பிரவுண் (வட அமெரிக்கா)
NAOMI Y. BROWN (வட அமெரிக்கா)
அந்தி சாயும் --
மெஸ்கீட் மர விதைத் தோடுகளின் சடசடப்பில்
சிள்வண்டின் சன்னமான குரல்
dusk settles-
in rattling mesquite pods
a cicada's faint voice

ராபேல் டி கிரட்டுல்லா (வட அமெரிக்கா)
RAFFAEL DE GRUTTOLA (வட அமெரிக்கா)

நிலவு தீண்டிய
தேவதாரு மரம்
பனியில் கனத்து
touched by the moon
pines
heavy with snow

முடிவற்ற நாள் --
ஒரு ரயில் விசில் விகாசிக்கும்
குளிர் காற்றில்
endless day—
a train whistle widens
in the cold air
Read More

இந்தியா ஏன் வெல்ல வேண்டும்?


தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் டெஸ்டு ஆட்டத்தில் இந்தியாவால் ஆட்டத்தை காப்பாற்ற முடியும் மற்றும் வெல்லக் கூட முடியும் என்று மீடியா விமர்சகர்கள் நம்பத் தொடங்கி உள்ளனர். இதற்கு காரணம் எந்த ஒரு கிரிக்கெட் தர்க்கமோ விவேகமோ அல்ல.
இன்று ஒரு செஷன் நமது துவக்க ஆட்டக்காரர்கள் நேர்மறையாக ஆடி தாக்குப்பிடித்து ஓட்டம் எடுத்தது தான். தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தும் ஒரு சிறுவனைப் போல் நம் மீடியா உடனே பரபரப்பாகி விட்டது. இந்த மனப்போக்கின் அடிப்படையில் ஒரு அசட்டுத் தனம் உள்ளது.
முதலில், கிரிக்கெட் எண்களின், முடிவுகளின் ஆட்டம் அல்ல. வெற்றி தோல்விகளை விட பார்வையாளர்களின் நினைவில் நிற்பவை உயர்ந்த மனிதப் பண்புகளை சோதித்த காவிய ஆட்டங்களே. உதாரணமாய் 2000இல் இந்தியாவுக்கு வந்த ஆஸ்திரேலிய அணியின் டெஸ்டு ஆட்டங்கள். அதற்கு பின் அவர்கள் திரும்ப வந்து ஜெயித்தார்கள். அடுத்து இருமுறை வந்து தோற்றார்கள். ஆனால் நம் கற்பனையை கவர்ந்தவை கொல்கத்தாவிலும், சென்னையிலும் நடந்த அந்த தராசு முள் ஆட்டங்கள். ஏன்? கிரிக்கெட் ஆடுகளம் ஒரு போராட்டத்தை, அபார பொறுமையை, அதிர்ஷட்டத்தின் குரூர சாய்வுகளை, உடல்ரீதியான சாகசங்களை, இறுதியாய் தனிமனித ஆற்றல்களை அழகியல் பூர்வமாய் நிகழ்த்திக் காட்டும் ஒரு மேடை. மனிதனின் சிலுவை விளைவுகள் பற்றின கவலை தான். கிரிக்கெட்டில் இந்த சிலுவையில் அறையப்பட்ட எந்த அணிக்கும் உயிர்த்தெழுப்பு இல்லை. மேற்சொன்ன ஆஸ்திரேலிய டெஸ்டுகளை போல் மிகச் சிறந்த காவிய ஆட்டங்கள் வெற்றி தோல்விகளை கடந்தவை.
இனிவரும் இரண்டு நாட்களுக்கு இந்தியா தாக்குப் பிடிக்காவிட்டால் என்ன என்று நாம் கேட்க வேண்டும். இந்த தொடரில் மீண்டு வர இந்தியாவுக்கு எப்போதும் வாய்ப்பிருக்கும். இத்தொடரின் முடிவு என்னவாக இருந்தாலும் அடுத்த தொடருக்குள் மறந்து விடுவோம். இங்கிலாந்திலும் மே.இ தீவுகளிலும் நாம் டெஸ்டு தொடர்களை வென்றுள்ளதை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறோம். உயர் மனிதப் பண்புகளை காட்சிப்படுத்துவது தான் இத்தொடரின், எந்த டெஸ்டு தொடரின்,  முக்கிய லட்சியமாக இருக்கும். எந்த நொடிய்ல் இருந்து இந்தியா இந்த ஆட்டத்தை காப்பாற்றுவது பற்றி யோசிக்க ஆரம்பிக்குமோ அப்போதில் இருந்து அவர்கள் ஏறுவது ஒரு வழுக்கு மரமாகத் தான் இருக்கும்.
இப்படியும் யோசிக்கலாம். இயற்கை விதியின் படி யார் இந்த ஆட்டத்தை வெல்ல தகுதியானவர்கள். இதுவரை குறைவான தவறுகளே செய்துள்ள தென்னாப்பிரிக்கர்கள் தாம். ஆக இந்தியா கடிகார முள்ளை திருப்பி விட முயலாமல் இந்த நிலைமை சகஜமாக நடைமுறை ஞானத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். மட்டையாளர்கள் ஆளுக்கு சதமோ அரை சதமோ அடித்து தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். அடுத்து வரும் ஆட்டங்களுக்கு தம்மை தயாரிக்க முயலவேண்டும். ஒரு வேளை இந்த ஆட்டத்தை காப்பாற்ற முடிந்தால் அது ஒரு உபரி வெகுமதி மட்டும் தான். இரண்டு நாள் ஆட்ட வரலாற்றின் பாரத்துடன் ஆடினால் இந்தியாவால் நாளை மதியம் வரை கூட தாக்குப் பிடிக்க முடியாது.
தென்னாப்ப்ரிக்கா இரண்டு தவறுகளை செய்கிறது. ஒன்று அவர்கள் கறுப்பின சலுகை தேர்வு. இது சமீபமாக பெரும் சர்ச்சையை தோற்றுவித்து வந்த ஒன்று. தென்னாப்பிரிக்க அணியில் தகுதியை மீறி கறுப்பர்களுக்கு ஒதுக்கீட்டை வழங்க அரசு நெருக்கடி கொடுக்கிறது. இது தற்போது ஒரு மறைமுக கொள்கையாக உள்ளது. டூமினி நீக்கப்பட்டால் அந்த இடத்திற்கு ஆஷ்வல் பிரின்ஸ் எனும் மற்றொரு கறுப்பர் வருகிறார். நித்தினி எனும் வேக வீச்சாளர் ஓய்வு பெற்ற பின் அந்த இடத்திற்கு சொட்சொபெ எனும் மற்றொரு சுமார் ரக கறுப்பரான வீச்சாளர் கொண்டு வரப்படுகிறார். அவரால் நடந்து வரும் ஆட்டத்தில் எந்தவொரு பாதிப்பையும் மட்டையாளர்கள் மீது ஏற்படுத்த முடியவில்லை. வேடிக்கை என்னவென்றால் அவர் பந்து வீசும் முன்னரே அவர் மொத்தமாக இந்த ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளாவது எடுக்க வேண்டும் என்று அணியில் 11 பேருமே பிரயத்தனப்படுகிறார்கள். அணித்தலைவர் ஸ்மித்துக்கும் சொட்சொபேவின் வெற்றி ஒரு தனி அழுத்தமாகவே உள்ளது. அவர் அணியின் வெற்றிக்கு நிகராக சொட்சொபேவின் நிலைப்பையும் வேண்டுகிறார். அந்த அழகான பெயரைத் தவிர சொட்சொபேவிடம் விசேசமாக ஒன்றும் இல்லை. முன்பு குரோன்யேவின் குற்றமன்னிப்பு பரபரப்பில் சில தலைகள் உருண்ட போதும் கிப்ஸ் இந்த இன ஒதுக்கீட்டு பரிவினாலே அணியில் பாதுகாக்கப்பட்டார். தென்னாப்ப்ரிக்கா போன்ற ஒரு சீரிய அணியில் அரசியல் தான் ஒரே கோளாறு. ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதும் இதன் அடிப்படையில் அணித்தலைமையும் தேர்வாளர்களும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி சுமப்பதும் மாபெரும் கிரிக்கெட் வேடிக்கைகளில் ஒன்று. சமூக அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் இருந்தாலும் கிரிக்கெட்டில் நிச்சயம் இல்லை. கிரிக்கெட்டில் ஒரு நிறபேதம் மட்டும் தான். அது பந்தின் நிறம்.
Read More

Thursday 16 December 2010

தென்னாப்பிரிக்க டெஸ்டு தொடர் அம்பலமாக்குவது என்ன?



இந்திய அணி உள்ளூர பீதியுற்று இருக்கிறது என்பதைத் தான். 16 டிடம்பர் 2010 தொடங்கிய டெஸ்டு ஆட்டத்தின் முதல் நாளில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு எந்தளவுக்கு ஆதரவு அளித்தது என்பது விவாதத்துக்கு உரியது. ஸ்விங் குறைவாகவே இருந்தது.
மழைக்கால இங்கிலாந்து ஆடுதளங்களுடன் ஒப்பிட்டால் சூப்பர்ஸ்போர்ட் பார்க்க் ஆடுதளத்தின் குணாதசியம் விளங்கும். இந்த ஆடுதளம் சற்று மெதுவாக ஆனால் எகிறக் கூடியதாக இருந்தது. தென்னாப்பிரிக்க வீச்சாளர்கள் குறைவாகவே ஸ்விங் செய்தார்கள். அவர்களது ஸ்விங் அல்ல, வேகமும் பந்தின் உயரமுமே மட்டையாளர்களை அடிப்படையில் அச்சுறுத்தியவை. இந்திய மட்டையாளர்கள் உயரப்பந்தை சந்திக்கும் கச்சிதமான தொழில்நுட்பம் கொண்டவர்கள் அல்ல. இது நமக்குத் தெரிந்தது தான். ஆனால் உயரப்பந்தை ஆட ஒருவர் ரிக்கி பாண்டிங்காக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்றில் உயரப்பந்தை ஆடுவதில் அசௌகரியம் இல்லை என்று வீச்சாளருக்கு உணர்த்தும் படியாக தடுப்பாட்டம் ஆட வேண்டும். அல்லாவிட்டால் உயரப்பந்துகளை அடித்தாடி அதிக ஓட்டங்கள் எடுக்க வேண்டும். முதல் நாளில் தோனி இதைத் தான் செய்தார். சமன் செய்ய அவர் கத்திரிக் கோல் போல காலை தூக்க வேண்டி வந்தாலும் கூட உயரப் பந்துக்கு அவர் அதிரடியாய் ஓட்டங்கள் எடுக்க ஆரம்பித்ததும் தென்னாப்பிரிக்கர்களின் வீச்சு நீளம் முழுமையான நீளமாக மாறியது. மாறாக திராவிடும் காம்பிரும் லக்‌ஷ்மணும் ஆடுதளத்தில் ஆழமாக நின்று உயரப் பந்தை சமாளிக்க முயன்றனர். குறிப்பாக ஊக்கமற்ற தடுப்பாட்டம் இவர்களின் அச்சத்தை பட்டவர்த்தமாக்கியது. இது பந்து வீச்சாளர்களை ஊக்குவித்தது.

அச்சம் ஆட்டக்காரர்களுக்கு பொதுவானது என்றாலும் தந்திரம் அதை வெளிக்காட்டாமல் இருப்பது தான். இதனாலே கிரிக்கெட்டை ஒரு உளவியல் ஆட்டம் என்கிறார்கள். உயரப்பந்துக்கு தகுந்த பதிலை தர முடியாவிட்டால் இந்த தொடரில் இந்தியாவால் ஒரு இன்னிங்சில் நூறு ஓட்டங்களுக்கு மேல் எடுக்க முடியாது. சங்கீத மேடையில் ஊமைகளுக்கு என்ன இடம்?
Read More

விடியலுக்கு முன்னான மழை

ஜான் பிராண்டி
John Brandi

காற்றிறங்கின டயர்
பசுக்கள் வெறுமனே நிற்கும் பிறகு மெல்ல
திரும்பும் நோக்க
flat tire
the cows just stand and slowly
turn to look
மந்தார பிற்பகல
ஒரு வெண்-கிறைசாந்தெமப் பூ
ஒன்று மட்டும்
cloudy afternoon
a white chrysanthemum
just one
 
சர்ச்சைக்குப் பிறகு
-- ஒரு கார்டீனியூ இதழ்
மேசையில்
After the argument
-a gardenia petal
on the table.

விடியலுக்கு முன்னான
மழையில்: நத்தைகள்
இடம்பெயரும்
In the rain
before the dawn: snails
migrating

Read More

Tuesday 14 December 2010

நீட்சே: அறிமுகக் குறிப்புகள் 7


ஷோப்பென்ஹெர்: உள்ளிருந்து இயக்கும் ஆற்றல் - 1

 
ஒரு புத்தகத்தாலோ அல்லது மனிதராலோ தூண்டப்படும் முன் ஒரு மனிதனின் தேடல் எங்கிருக்கிறது? ஒரு மனிதனின் தேடல் அவனது நீண்ட சிந்தனை மரபின் அவனறியாத ஒரு தொடர்ச்சியா?
ஷோப்பென்ஹெர் (1788-1860) ஒரு ஜெர்மானிய தத்துவஞானி. இவரது சோர்வுவாத கோட்பாடு தத்துவவரலாற்றில் ஒரு திருப்புமுனை. ஷோப்பென்ஹெரின் ஊக்க கோட்பாட்டை நாம் இவ்வாறு எளிதாக விளக்கலாம். ஷோப்பென்ஹெர் மனிதர்கள் அனைவரையும் ஒரு பிரபஞ்ச ஊக்க ஆற்றல் இயக்குவதாக கூறினார். இந்த ஊக்க ஆற்றல் நன்மை தீமைகள் கடந்தது. இதற்கு மனிதனின் ஷேமம் பற்றின எந்த கவலையும் இல்லை. மனித வாழ்க்கை துயர் மிகுந்ததாகவும் அசட்டுத்தனமாகவும் இருப்பதற்கு இந்த துஷ்ட ஊக்க ஆற்றலே காரணம். ஷோப்பென்ஹெர் ஒரு தனிப்பட்ட அசல் சிந்தனையாளராகவும், வரலாற்றின் பெரும் சிந்தனையாளர்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை தீவிரமாக பாதித்த வகையிலும் மிகவும் குறிப்பிடத்தக்கவர். ஷோப்பன்ஹெரால் பாதிக்கப்பட்டவர்களில் நீட்சே, வாக்னர், பிராயிட், தல்ஸ்தாய், ஜேம்ஸ்ஜாய்ஸ் ஆகியோர் முக்கியமானவர்கள். தல்ஸ்தாய் தனது போரும் வாழ்வும் நாவலில் போரின் வெற்றி தோல்வி விளக்க முடியாத ஒரு ஆற்றலால் உருப்பெறுவதாக அவதானிப்பார். போர் எந்தளவு துல்லியமாக கவனமாக திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறதோ அந்தளவு அது அத்திட்டத்தின் எல்லைகளை வெகு இயல்பாக தாண்டி தனதான ஒரு உள்ளுணர்வுடன் செயல்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காட்சியில் ரஷ்ய படையின் தலைமை தளபதியான ஒரு முதியவர் ஒரு தீவிரமான யுத்த தந்திர விவாதத்தின் போது நன்றாக தூங்கி விடுவதை இங்கு நினைவுபடுத்தலாம். என்னதான் வழிநடத்தினாலும் போர் அதன் போக்கிலே வழிநடக்கும் என்று அம்முதிய தளபதி நம்புகிறார். இந்த அவதானிப்பை தல்ஸ்தாய் ஷோப்பென்ஹெரின் பாதிப்பிலே உருவாக்குகிறார். பிராயிடின் நனவிலி கோட்பாடு நாம் நன்கு அறிந்ததே. சுருக்கமாக பிராயிட் சொல்லும் நனவிலி நமது அடிமனம். அமைதியான எரிமலையின் உள்ளார்ந்த கொதி நிலை. இதை பிராயிட் ஒரு காமப் பெருங்கடலாக கருதினார். இதன் சீற்றங்கள் மீது நாவாய்கள் நாம். இந்த கோட்பாட்டில் ஷோப்பென்ஹெரின் நிழல் அசைவதை நாம் கவனிக்க முடியும். ஷோப்பென்ஹெர் தத்துவப் பரப்பில் ஒரு புதிய பாதையை உருவாக்கினவர் மட்டுமல்ல அவர் கூர்மையும் பகடியும் பளிச்சிடும் எழுத்தாளரும் கூட. நீட்சேவைப் போன்று தனது ஆளுமையின் மையத்தில் இருந்து சிந்தனைகளை தோற்றுவித்தவர். ஆனால் ஷோப்பென்ஹெரின் ஆளுமையில் ஒரு ஆழமான முரண்பாடு இருந்ததாக தத்துவ விமர்சகர் போல் ஸ்டுரேதெர்ன் கருதுகிறார். பிராயிடிய மொழியில் இது அவரது id மற்றும் super-egoவுக்கு இடையிலான உரசல் என்று ஸ்டுராதெர்ன் ஊகிக்கிறார். காரணம் ஷோப்பென்ஹெரின் சோர்வுவாத தத்துவ கோட்பாடுகளுக்கு அவரது வாழ்க்கை முறை மற்றும் மனப்போக்குக்கும் குறிப்பிடும்படியான வேறுபாடுகள் இருந்தன. வாழ்வு அடிப்படையில் தீமையானது என்றும், இத்தீமையில் இருந்து விடுபட ஒருவர் இச்சைகளில் விலகி ஒரு துறவியின் விடுதலை நிலையை அடைய வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால் நிஜவாழ்வில் ஷோப்பென்ஹெர் ஒரு மைனராகவே வாழ்ந்தார். ஒருபக்கம் உணவும், காமமும் அவரது லௌகீக இலக்குகளாக இருந்தன. மற்றொரு பக்கம் அவர் கலை, இலக்கிய ஈடுபாடுகளின் வழி தனது ஆன்மீக விடுபடலை நாடினார். நீட்சேயையும் வாக்னரையும் போன்று தனது படைப்புக்கு சமமாகவே வாழ்க்கையின் விபரீதங்களால் அறியப்படுபவரானார்.

1819-இல் நீட்சே ஒரு பழைய புத்தகக் கடையில் எதேச்சையாக ஷோப்பென்ஹெரின் உலகம் எனும் ஊக்க ஆற்றல் மற்றும் கருத்து (The World as Will and Idea) என்னும் நூலை கண்டெடுத்து அங்கேயே சில பக்கங்கள் படித்து பார்க்கிறார். நீட்சே எளிதில் எந்த புத்தகத்தையும் வாங்கக் கூடியவரல்ல. ஆனால் அந்த சிறு நூல், அதிகம் அறியப்படாத அந்நூல், அவரது அவநம்பிக்கையை கடந்து பெரும் ஆர்வத்தை தூண்டுகிறது. வீட்டுக்கு போன பின் சோபாவில் படுத்து ஒரே மூச்சில் மொத்த நூலையும் படித்து விடுகிறார். நீட்சே ஷோப்பென்ஹெரால் ஆட்கொள்ளப் படுகிறார். நீட்சே அவரது கருத்துக்களை மட்டுமல்ல ஆசான்களையும் எதேச்சையாக கண்டுபிடித்தவர் ஆகிறார். நீட்சேவின் பிரபலமான அதிகாரத்துக்கான ஊக்க ஆற்றல் என்ற கருத்தாக்கம் ஷோப்பன்ஹெரின் கருத்தாக்கத்தில் இருந்தே துவக்கம் கொள்கிறது. இந்த சிந்தனைத் தாவல் மட்டுமல்ல ஷோப்பென்ஹெருக்கு சற்று பின்னால் சென்று தத்துவ மரபில் நீட்சேயியத்தின் முளை எங்கு உள்ளது என்று தேடுவதும் அதிக வெளிச்சம் தருவது. ஆக நாம் ஷோப்பன்ஹெரின் தூரத்து தத்துவ உறவுக்காரர்களின் கண்டுபிடிப்புகளை சுருக்கமாக அறிமுகம் செய்யலாம்.

பிளேட்டோவில் இருந்து காண்ட் வரை
தத்துவம் தனது பரப்பில் உண்மை என்ன என்ற கேள்வியையே மீண்டும் மீண்டும் வரைந்து பார்த்துள்ளது. வெவ்வேறு காலகட்டங்களில் இதற்கு வெவ்வேறு பதில்கள் காணப்பட்டுள்ளன. கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ நாம் உண்மை என்று அறிவன நம் புலன்களால் ஏற்படும் ஒரு தோற்றம் மட்டுமே என்று நம்பினார். அவர் அறிவை அசல் உண்மை, பிரதிநுத்துவ உண்மை என்று இருவாறாக பிரித்தார். மனிதனின் உலகம் பிரதிநுத்துவ உண்மையாலே உருவாகிறது. பொய்யான உலகம் யாருக்கு தேவை? நமது சமதளமான வாழ்வில் இருந்து கைக்கு எட்டிய உலகம் தாண்டிய ஒரு உன்னத உண்மைக்காகத் தானே மனம் ஏங்குகிறது! நகல்களின் திரைக்கு அப்பால் அசல் எங்குள்ளது? அதை எப்படி கண்டடைவது? பிளேட்டோ இதற்கு பகுத்தறிவை ஒரு கருவியாக முவைக்கிறார். இது எளிய கறுப்பு சட்டை பகுத்தறிவு அல்ல. தத்துவத்தின் பகுத்தறிவு கூர்மையான தர்க்கத்தால் வழிநடத்தப்படுகிறது. பிளேட்டோவின் இருள்குகை கதை அவரது மேற்சொன்ன இருபொருள் வாதத்துக்கு (அசல்-பிரதுநுத்துவ உண்மைகள்) பிரபலமான உதாரணம். இந்த கதைப்படி உலகம் ஒரு பெரும் குகை. அங்கு சிறைப்பட்டுள்ள மனிதர்கள் இருளை மட்டுமே அறிந்தவர்கள். அவர்களுக்கு முன் ஒரு வெற்று சுவர். பின்னால் நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது. நெருப்பின் முன் அசையும் பொருட்களின் நிழல்கள் முன்னுள்ள சுவரில் விழுகின்றன. சிறைப்பட்ட குகைவாசிகள் நெருப்பையோ அசையும் பொருட்களையோ பார்ப்பதில்லை. அவர்கள் நிழலை மட்டுமே கண்டு அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர். ஒரு தத்துவஞானி இந்த குகையில் இருந்து வெளியே வந்து நிழல் தோற்றங்கள் உண்மை அல்ல என்று கண்டறிபவனாக இருப்பான் என்றார் பிளேட்டோ.
அடுத்து நாம் ஒரு தாவு தாவி ரெனெ டெகார்டே எனும் பிரஞ்சு சிந்தனையாளருக்கு செல்லலாம். நான் சிந்திக்கிறேன்; அதனால் நான் இருக்கிறேன்(I think therefore I am) என்ற மேற்கோளுக்காக மிக பிரபலமானவர் இவர். இந்த உலகம் இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? இதை படித்து கொண்டிருக்கும் நீங்கள் இந்நொடி இறந்து போனால் நான் எழுதியுள்ளது இக்கடைசி எழுத்துவரை இல்லாமல் போய் விடுமா? அதாவது நீங்கள் வாசிப்பதனால் தான் என் எழுத்தும், அதனால் நானும் இருக்கிறோமா? இதற்கு ஆம், இல்லை என்று இருவிதமாய் பதில் சொல்லலாம். ரெனெ டெகார்டே ஆம் என்பார். நீங்கள் வாழும் உலகம் புலன்களால் தான் தெரிய வருகிறது; அதனால் அது புலன்களால் கட்டுப்படுத்தப்பட்டது ஆகிறது. டெகார்டே இதை திருப்பிப் போட்டு நான் பார்த்து கேட்டு முகர்ந்து தொட்டு உணரும் இந்த உலகம் நிஜம் தான். ஏனென்றால் அது என்னில் இருந்து ஆரம்பிக்கிறது. நான் சிந்தித்துக் கொண்டு இருக்கும் வரை அதுவும் இருக்கிறது. என் சுயம் உலகை நிர்மாணிக்கிறது என்றார். ஆக டெகார்டே பிளேட்டோவின் இருபொருள்வாதத்துக்கு (dualism) வேறொரு வடிவம் அளிக்கிறார். இரண்டே உண்மைகள்/இருப்புகள் தாம். ஒன்று நான் என்கிற சுயம். வெறும் சுயம் அல்ல, சிந்திக்கும் சுயம். மற்றொன்று, இதன் நீட்சியான பொருள். அதுவே வெளியே தெரியும் உலகம்.
பதினேழாவது நூற்றாண்டை சேர்ந்த தத்துவவியலாளர் பரூக் ஸ்பினோசா ஒரு டச்சுக்காரர். அவர் டெகார்டேவின் இருபொருள்வாதத்தை பாதி மட்டுமே ஒத்துக் கொள்கிறார். மீதிப் பாதியில் கடவுளை சேர்த்துக் கொள்கிறார். ஆக சிந்திக்கும் சுயமும் அதன் நீட்சியான சுயமும் கடவுளில் இருந்தே ஏற்படுகின்றன. இது அனைத்திறைக் கொள்கை (pantheism) எனப்படுகிறது.
(தொடரும்)
Read More

Monday 6 December 2010

நந்தலாலா: உருவகக் குப்பையில் ஒரு மாணிக்கம்



 செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் எப்படி தமிழின் முதல் மாயஎதார்த்த படமோ நந்தலாலாவும் தமிழின் முதல் உருவகப் படமே. உருவகம் மிஷ்கினின் சினிமா மொழியாக என்றும் இருந்துள்ளது. காட்சியமைப்பில் இருந்து நடிப்பு வரை உருவகத்தன்மையை கொண்டு வர அவர் எதார்த்தத்தை கத்தரிக்கிறார். சித்திரம் பேசுதடி, “அஞ்சாதே ஆகிய படங்களில் இருந்து நாம் இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் தர முடியும். இதில் ஒரு அசட்டை இருப்பதாக தெரியலாம். மிகையான பாவனை என்று சந்தேகம் எழலாம். காரணம் தமிழ் சினிமாவுக்கு அப்படி ஒரு மரபு இல்லை. இன்று சத்யஜித் ரேயை கல்லறையில் இருந்து சுலபமாக தட்டி எழுப்பி தமிழில் ஒரு படம் பண்ண வைக்க முடியும். யாருக்கும் முரண்பாடாக இராது. மாறாக அது நமக்கு நிச்சயம் நவீனமாகவும் இருக்கும். கடந்த பத்தாண்டுகளில் தமிழின் எதார்த்த சினிமா மேலும் சற்று எதார்த்த்த்தை, பண்பாட்டுக் கூறுகளை தொழில்நுட்ப மெருகை சேர்த்துக் கொண்டுள்ளது. அவ்வளவே. மொழிதலின் பல்வேறு சாத்தியங்களை நாம் இன்னும் முயலவில்லை. தத்துவம், அரசியல், சமூகவியல் என்று எந்த தளங்களையும் தொடவில்லை. தமிழ் சினிமா இதுவரை என்ன பேசி வருகிறது? மூன்றாக நமது சினிமாவின் பேசுபொருளை வகுக்கலாம். காதல், வன்மம் போன்ற உணர்ச்சிகளின் நாடகியம்; குடும்பச் சிக்கல்கள் எழுப்பும் எளிய கேள்விகள்; மற்றும் ஒழுக்க பிரச்சனைகள். அதாவது காதல் அடிதடி படங்கள், குடும்பப் படங்கள் மற்றும் சமூக சீர்திருத்தப் படங்கள். நமது மாபெரும் இயக்குநர்களை அநேகமாக இந்த முட்டை ஓட்டுக்குள் அடக்கி விடலாம். இந்த ஓட்டின் மேல் நாம் தற்போது மிகச்சில விரிசல்களை காண்கிறோம். அதில் ஒன்று நந்தலாலா.

முதல் இரு படங்களில் மிஷ்கினின் இந்த திரைமொழியை யாரும் அதிக கேள்விக்கு உள்ளாக்கவில்லை. அவை மையநீரோட்ட படங்கள் என்பதால் மிஷ்கின் மேற்சொன்ன பகுப்புகளில், சற்றே கைகால் வெளியே நீட்டிக் கொண்டிருந்தாலும், அடங்கும்படியாகவே எதார்த்தமான கதைத் தளத்தில் உருவாக்கி இருந்தார். இதுவரை மிஷ்கினுக்கு ஒரு தனித்துவத்தை பெற்றுத் தந்த உருவக மொழி இப்போது நந்தலாலாவில் ஒரு சாராரிடம் எதிர்ப்பையும் நிராகரிப்பையும் ஏற்படுத்தி உள்ளது..மற்றொரு சாராருக்கு இப்படம் உணர்ச்சிகரமாக பங்கேற்க அனுமதிக்க இல்லை என்ற புகார் உள்ளது. நாம் இங்கு கவனிக்க வேண்டியது மிஷ்கின் தமிழின் முப்பகுப்பு இயக்குநர்களில் ஒருவர் அல்ல, அவர் ஒரு எதார்த்த கதை சொல்லி அல்ல என்பது.

உருவகம் ஒரு உயர்ந்த கருவி அல்ல என்று நமக்குத் தெரியும். அதை விட குறியீடு மேலானது. குறியீட்டை விட படிமம் சிறந்தது. ஆனால் உருவகங்களால் பேசுவது ஒருவரின் மொழி சுதந்திரம். கோணங்கியும், எஸ்.ராவும், மேலும் பலரும் நூற்றுக்கணக்கான உருவகக் கதைகளை எழுதியுள்ளார்கள். சினிமாவில் ரேயும், குரசேவாவும், கீஸ்லாவஸ்கியும் பல உருவகங்களை பிரேமுக்குள் வைப்பதை காண்கிறோம். உதாரணமாக Three Colors Whiteஇல் மையபாத்திரம் ஒரு சூட்கேசுக்குள் அமர்ந்து விமானத்தில் வருகிறான். மற்றொரு காட்சியில் அவன் படிக்கட்டில் ஏறும் போது வானத்து புறாக்களை வியக்கிறான். அவை அவன் மீது எச்சமிடுகின்றன. இங்கு சூட்கேஸ், புறா, வானம் எல்லாமே கீஸ்லாவஸ்கியால் உருவகமாக உத்தேசிக்கப்படுகின்றன. இதை அவர் ஒரு பேட்டியில் நேரடியாக சொல்லுகிறார். உருவகமாக சொல்ல உத்தேசிப்பதை அவர் ஏன் எதார்த்த காட்சி மூலம் சொல்லவில்லை?. ஏன் என்றால அது அவரது மொழிதல் முறை.  உருவக மொழிக்கு அதற்கான வலிமையும் பலவீனமும் உண்டு. இந்த இரண்டுடனும் நாம் மிஷ்கினின் திரைமொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏன்? ஏனென்றால் மிஷ்கின் தனது கறுப்புக் கண்ணாடியை நமக்கு அணிவித்து தமிழின் இதுவரையிலான முப்பகுப்பு சினிமாக்களில் தொடாத ஒரு தளத்தை காட்டுகிறார். அது தேடல். ஏன் வாழ்க்கை வலி நிரம்பியதாக உள்ளது என்ற தேடல். மனித துக்கத்தின் விடை என்ன என்கிற தேடல்.
இங்கு இதே போன்ற தேடலை முன்னெடுத்த வேறு இரண்டு இயக்குநர்களை நாம் இந்த விவாதத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் பாலா மற்றும் செல்வராகவன். இவர்கள் இருவரும் மிஷ்கினைப் போன்று விளிம்புநிலை வாழ்வின் தளத்தில் நின்று துக்கத்தின் அடிப்படையை வெவ்வேறு விதமாய் தேடினவர்கள். பாலாவுக்கு இறையியலும் செல்வராகவனுக்கு உளவியலும் இந்த தத்துவத் தேடலுக்கு வெவ்வேறு நிறங்கள் அளித்தன. பாலா அழிவின் மூலமாக படைப்பாக்கம் செய்யும் அழிவுக் கடவுளை இந்த துக்கத்தின் விடையாக முன்வைத்தார். பாலாவின் படங்களில் அழிவு நிறைவைத் தருகிறது. இதை மேலும் ஆழமாக அணுக அவர் இறுதியாக ஒரு முழு உருவகப் படத்தை எடுத்தது நமக்கு நினைவிருக்கும். அதில் ஹீரோ ஹீரோயினை தின்று துக்கத்தை முடித்து விடுவார். எதார்த்த படம் பார்த்து பழகின நாம் ஊனமுற்றவளை கொல்வது ஒரு பாசிசம் என்று நினைத்தோம். பாலாவின் மிகையான உருவகமும் அதற்கு நாம் செய்த பாசிச எதிர்வினையும் சமமாக வேடிக்கையானவை. செல்வராகவனின் மையபாத்திரங்கள் தொடர்ந்து மீட்க முடியாத ஒரு இழப்பை அல்லது முழுமையின்மையை எதிர்கொள்ள பயணிப்பவர்கள். அவரது சமீபத்திய படமான ஆயிரத்தில் ஒருவனில் இது ஒரு வரலாற்று இழப்பாக நிறைவடைந்தது. இப்படமும் எதார்த்த படம் அல்ல. மாயஎதார்த்த மொழி என்பதால் செல்வராகவனுக்கு பாலா மற்றும் மிஷ்கினை விட அதிக சுதந்திரம் இருந்தது. அவர் இப்படத்தில் சில அற்புதமான படிமங்களை உருவாக்கினார். இவர்களைத் தொடர்ந்து இந்த வரிசையில் தான் மிஷ்கினின் நந்தலாலாவை பார்க்க வேண்டும். மனிதத் துயரத்திற்கு விடையாக சுடலை நெருப்பை, காலத்தின் முன்னான கையாலாகத்தனத்தை சொல்வதைக் கடந்து மிஷ்கின் நந்தலாலாவில் களங்கமற்ற அன்பை முன்வைக்கிறார். சுவாரஸ்யமாக செல்வராகவன் மற்றும் மிஷ்கினிடம் மேற்கத்திய பாதிப்பை அதிகமும், பாலாவிடம் மரபான இந்தியத்தன்மையையும் பார்க்க முடிகிறது. உதாரணமாக, செல்வா மற்றும் மிஷ்கினின் காட்சிகளில் கர்த்தரை சுமந்த மேரிமாதா அடிக்கடி வரும் உருவகம். இதே காரணத்தினாலே பாலாவை விட மற்ற இருவரிடமும் நவீன நுண்ணுணர்வு அதிகமாக இருக்கும். இந்த மூவரின் எதார்த்தமற்ற இறுதிப் படங்கள் அவை பயணித்த புதிய தடங்கள் காரணமாகவே முக்கியமானவை. நமக்கு சலிப்பாக, புரியாமல், வேரற்று தெரிந்தாலும் கூட நாம் கவனிக்க வேண்டியவை இந்த படங்கள். நந்தலாலாவின் பார்வை அனுபவத்தில் உருவகங்கள் இடறிக் கொண்டே சென்றாலும் அது வகுக்கும் பாதையில் ஒரு எட்டு நடந்து போய் வருவது நல்லது. நந்தலாலா என்ன சொல்ல வருகிறது? நந்தலாலாவை நாம் எப்படி பார்க்க வேண்டும்?

முழுமையான உருவக குறியீட்டுப் படங்கள் ஒரு வினோதமான கதையமைப்பை கொண்டிருத்தல் உசிதம். இது கதை வேறொன்றை சொல்ல வருகிறது என்று பார்வையாளனை தயார்படுத்தி விடும். Clockwork Orange ஒரு நல்ல உதாரணம். ஆனால் நந்தலாலா தாய்ப்பாசம் பற்றின படமாக தோற்றம் அளிக்கிறது. இருவர் சேர்ந்து அம்மாவைத் தேடி பயணிக்கிறார்கள். சிறுவன் அம்மாவை பற்றி நேர்மறையான எண்ணங்களுடன் செல்கிறான். இறுதியில் அவன் எதிர்மறையான அனுபவத்தை அடைகிறான். வளர்ந்தவன் அம்மாவை பற்றி எதிர்மறையான எண்ணத்துடன் சென்று நேர்மறையான மனநிலையை அடைகிறான். இவர்களின் இலக்குகளான ஊர்கள் அன்னை வயல், தாய்வாசல் போன்ற பெயர்கள் கொண்டுள்ளன. படத்தில் தொடர்ந்து அம்மா நினைவுபடுத்தப்படுகிறாள். ஆக ஒரு நெகிழ்ச்சியான தாய்ப்பாச படத்தை குறைந்த பட்சம் தாய்மை பற்றின விளக்கத்தை அல்லது இந்த உறவின் பரிணாமத்தை எதிர்பார்த்து ஒரு பார்வையாளன் தன் விழிகளை திறந்து வைத்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அம்மா தொடர்ந்து தேடப்படுகிறாளே ஒழிய அம்மா குறித்த நினைவுகளோ, சம்பவங்களோ, நெகிழ்ச்சியான நினைவு கூறல்களோ படத்தில் இல்லை. அம்மாவை விட படத்தின் பரப்பை தேடுபவர்களும் பயணிப்பவர்களும் பாதைகளுமே ஆக்கிரமிக்கின்றன. ஆக இப்படத்தில் பார்வையாளனின் உணர்வுசார் பங்கெடுப்பை தக்கவைப்பது ஒரு சவால். அவன் இவர்கள் எல்லாம் ஏன், எங்கு செல்கிறார்கள், என் அன்றாட வாழ்வில் நான் இப்படி எல்லாம் செய்வதில்லையே என்று கேட்கிறான். அன்றாட வாழ்வை புரிவதற்கான பல முக்கியமான தகவல்களை இயக்குநர் வேண்டுமென்றே கத்திரித்து விடுகிறார். உதாரணமாக அகியின் அம்மா யார், அப்பா யார், என்ன பொருளாதார, நிலவியல், சாதிப் பின்னணி என்று ஒவ்வொன்றாக கத்தரிக்கப்பட்டு வால் ஒட்ட வெட்டப்படுகிறது. எதார்த்த பார்வையாளன் இயல்பாகவே இப்படியான ஒரு கதைத்தளத்தில் தத்தளித்து போகிறான். மிஷ்கின் ஏன் இப்படி செய்கிறார்? இது ஒரு குடியிருந்த கோவில் அல்ல என்று வலியுறுத்தத் தான். இந்த வலியுறுத்தலின் விளைவுகள் என்பவை வேறு. நாம் உத்தேசத்தை கவனிக்க வேண்டும். இணையத்தில் எழுதப்படும் சில விமர்சனங்களில் சொல்வது போல் மிஷ்கின் தன்னை ஒரு மேதாவியாக காட்ட முயல்வதாக நான் நம்பவில்லை. ஒரு வினோதமான குறியீட்டுப் படத்தில் இந்த தத்தளிப்புகள் நிகழாது. தொடர்ந்து வியப்பை உருவாக்கியே இயக்குநர் உங்களை படத்தின் ஓட்டத்தோடு பங்கேற்க வைத்து விடுவார். நந்தலாலா எதார்த்தத்துக்கும் விநோதத்துக்கும் இடைப்பட்ட படம். அது இயல்பான வாழ்வின் நம்பகத்தன்மையை கத்தரித்து விட்டு அதே இயல்பு வாழ்வின் எளிய அற்புதங்களை காட்ட முயல்கிறது. அற்புதங்கள் மூலம் இரு மனிதர்கள் முதிர்ச்சி அடைவதை சொல்லும் இந்த coming-of-age படம் அதை மிகை எதார்த்ததின் மூலம் அல்ல எளிய அன்றாட வாழ்க்கை தருணங்களின் மூலமே செய்கிறது; படித்த அறிவாளிகளை அல்ல எளிய படிப்பறிவற்ற, குற்றங்களில் வழுக்கிய மனிதர்களையே திசைகாட்டிகளாக அல்லது மீட்பர்களாக காட்டுகிறது. கதைகூறலில் உள்ள இந்த சின்ன முரண்பாடு தான் படத்தை சற்று குழப்பமானதாக, சில இடஙகளில் உணர்வுரீதியாக எட்ட முடியாததாக ஆக்குகிறது. கிக்குஜீரோவில் நம்ப முடியாத காட்சிகளை இயக்குநர் ஒரு குழந்தையின் பார்வையில் இருந்து நாட்குறிப்பில் இருந்து சொல்வதால் தப்பித்து விடுகிறார். இப்படியான சுதந்திரத்தை மிஷ்கின் எடுத்துக் கொள்வதில்லை.அவரது கதைக்களன் ஒரு வீடியோகேமொ, கனவுநிலையோ, குழந்தையின் கற்பனை கலந்த நாட்குறிப்போ அல்ல. தரையில் இருந்து மேலெழுந்து மிதக்கும் எதார்த்த களன். இதற்கு உலகசினிமாவில் முன்னோடிகள் உண்டு என்றாலும் சற்று குழப்பத்தை ஏற்படுத்துவது தான். ஆனால் இது ஒரு எளிய தடை என்பது விளங்கினால் நமக்கு இப்படம் உத்தேசிக்கும் மனவெழுச்சிகளை அடைய முடியும்.


நந்தலாலாவில் மைய பாத்திரங்களின் முதல் பிரச்சனை தனிமை. இந்த தனிமை ஒரு தாயின் கைவிடப்படலினால் மட்டும் விளைவதல்ல. அகி, பாஸ்கர் மணி தங்கள் பயணத்தில் சந்திக்கும் லாரி ஓட்டுநர், ஊனன், விபச்சாரி உள்ளிட்ட சிறுபாத்திரங்களும் அவர்கள் தேடிச் சொல்லும் அம்மாக்களும் பல்வேறு பட்ட கைவிடல்களுக்கு உள்ளாகி தனிமையில் இருக்கிறார்கள். அங்கீகாரமின்மையும் ஏமாற்றமும் இத்தனிமையான நிலைமையின் பரிமாணங்கள். எல்லாரும் வெவ்வேறு கட்டங்களில் கோபப்படுகிறார்கள். “ஏன் இப்படி வாழ நேர்கிறது என்று கேள்வி கேட்கிறார்கள். யாரிடம் கேட்கிறார்கள்? வாழ்க்கையிடம் தான். வாழ்வின் அநியாயம் மீது கோபம் கொள்கிறார்கள். இந்த கோபம் அதிகபட்சமாக பாஸ்கர்மணி எனும் பைத்தியக்காரனிடம் தான் வெளிப்படுகிறது. அவனே கோபத்தை முதலில் ஏந்திச் செல்பவன். ஆனால் இறுதியாகவே அவன் அங்கு சென்றடைகிறான். அவனே கடைசியில் அதிக நிதானம் பெறுபவனாகவும் காட்டப்படுகிறான். இது முக்கியம். யார் மிக அதிக வறுமை கொண்டு அல்லாடுகிறார்களோ அவர்கள் ஆத்மார்த்தமாய் செல்வந்தர் ஆகிறார்கள்.
இதை மனித துக்கம் பற்றின படம் என்றேன். இந்த துக்கம் எப்படி ஏற்படுகிறது. படத்தில் பாத்திரங்கள் துக்கவயப்பட்டு தான் அறிமுகம் ஆகிறார்கள். ஏன் அப்படி ஆகிறார்கள் என்பது காட்டப்படுவது இல்லை. மாறாக அது வசனங்களில் குறிப்புணர்த்தப்படுகிறது. பாஸ்கர் மணி “அம்மா கெட்டது என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறான். அகி அம்மா நல்லவள் என்று சொல்லி வருகிறான். விபசாரி வெள்ளை உடை அணிந்த, வெள்ளை பற்கள் கொண்ட கார் ஓட்டுநரால் ஆகர்சிக்கப்பட்டு இருண்மைக்குள் தள்ளப்படுகிறாள். இந்த நன்மை-தீமை இருமை தான் துக்கத்தின் ஆதாரமாக படத்தில் வருகிறது. இம்மூவரின் கோபமும் இந்த இருமை கண்ணாடி வழி வாழ்க்கையை பார்ப்பதனாலேயே ஏற்படுகிறது. ஏதோ ஒரு சந்தர்பத்தில் இந்த கண்ணாடியை எடுத்து விட்டு பார்க்க வாழ்க்கை அதன் முழுமையில் அவர்களுக்கு தென்படுகிறது. இந்த தரிசனம் அன்பின் வழியாகவே அவர்களுக்கு சாத்தியப்படுகிறது. விழுமியங்களுக்கும் லாபங்களுக்கும் உட்பட்ட அன்பு அல்ல இது. அப்பாற்பட்டது. சரி அன்புக்கா வாழ்வில் பஞ்சம். ஏதாவது ஒரு வடிவில் அன்பு நம்மோடு இருந்து கொண்டு தான் இருக்கிறது. பிறகு மேற்சொன்ன தரிசனம் ஏன் எளிதில் வாய்ப்பதில்லை?. ஏன் வாழ்க்கை துயரமாகவே கசப்பாகவே மூடப்பட்டதாகவே இருக்கிறது?

இதற்கான விடையை படம் பூரா மிஷ்கின் குறிப்புணர்த்திக் கொண்டே வருகிறார்: குழந்தைமை தரும் களங்கமின்மை. பைத்தியக்காரர்கள் குழந்தைமை கொண்டவர்களோ களங்கமற்றவர்களோ அல்ல. இங்கே நாம் தஸ்தாவஸ்கியின் பேதை நாவலை நாம் நினைவுகூரலாம். மிஷ்கினும் கிறிஸ்துவின் வடிவில் தான் பாஸ்கர் மணியை உத்தேசித்திருக்கிறார். சகமனிதர்களுக்கு துயரம் ஏற்படும் போது பாஸ்கர் மணி அங்கு மீட்பராக முயல்கிறான். அவன் அற்புதங்களை நிகழ்த்துவது இல்லை என்றாலும் அவனது காப்பாற்றும் படலங்கள் ஒரு அற்புதத்தின் எதிர்பாரா தன்மையுடன் தான் முடிகின்றன. தூய குழந்தைமை ஒரு லட்சிய வடிவம் மட்டும் தான். பைத்தியத்தை ஒரு நோயாக இங்கு மிஷ்கின் காட்டுவது இல்லை. மையத்தில் இருந்து ஒரு பிறழ்வு. அவ்வளவு தான். இந்த பிறழ்வு அவனிடம் குழந்தைத்தனமான விளையாட்டுத்தனத்துடன் வெளிப்படுகிறது. எல்லையற்ற அன்பை சாத்தியமாக்குகிறது. ஆக அன்புக்கு முதல் தடை குழந்தைமை இழந்து விடுவது. பித்துநிலைக்கு செல்லாமலே நம்மால் குழந்தைமையை தக்க வைத்துக் கொள்ள முடியும். கலையும், அன்பும், வாழ்வின் எளிய நுட்பமான திறப்புகளை கவனிப்பதும் இதை சாத்தியமாக்கும். மிஷ்கின் அன்பை எடுத்துக் கொள்கிறார். அன்பு நமக்கு பக்கத்தில் மட்டுமே இருக்கிறது. பறவையை, பட்டாம்பூச்சியை, மின்மின்மினியைப் போன்று. ஆனால் அது நம் உள்ளங்கையில் அமர்வது இல்லை. அன்பு இருந்தும் நாம் அன்பற்று இருக்கிறோம். ஏன்? அச்சத்தினால்.

பாஸ்கர் மணி எதையும் துணிந்து செய்பவனாக இருக்கிறான். சகமனிதருக்கு வலி ஏற்பட்டால் அதை துடைக்க முயல்கிறான். இந்த அன்பின் முயற்சிகள் அவனுக்கு எதிர்மறை பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. கற்பழிக்கப்படும் பெண்ணை காப்பாற்றுகிறான். அவள் அவனிடம் “என்ன சாதி என்று கேட்டு வெறுப்பேற்றுகிறாள். அடுத்து விபச்சாரம் நடக்கும் போது கற்பழிப்பென்று நினைத்து இறங்கி ஒரு கிராக்கியை துரத்தி விடுகிறான். அப்பெண் ஐம்பது ரூபாய் கூலியை இழக்கிறாள். “உன்னை யார் எம்.ஜி.ஆர் மாதிரி வந்து காப்பாத்த சொன்னது? என்று அவனை வைகிறாள். அடுத்த முறை அவளை நிஜமாகவே ஒரு கும்பல் கற்பழிக்க கடத்தும் போது பாஸ்கர் மணி உதவ தயங்குகிறான். ஆக மனிதர்கள் தங்கள் பிரதேசத்துக்குள் யாரையும் அன்பு செய்யக் கூட எளிதில் அனுமதிப்பதில்லை. நாம் நான்கு பக்கமும் மூடப்பட்டவர்களாக இருக்கிறோம். ஆனால் பாஸ்கர்மணி காற்றைப் போல் தடையற்றவனாக இருக்கிறான். அவன் மனிதர்களின் தனிப்பட்ட இடத்தில் கேட்காமலே நுழைகிறான். இதனால் பட இடங்களில் கடிந்து கொள்ளப்பட்டு, அடிக்கப்பட்டு, காயப்படுகிறான். பாஸ்கர் மணியின் சாகசங்கள் நமக்கு சற்று டான் குவிக்சோட்டை நினைவுபடுக்கின்றன. அவன் மனிதர்களிடம் இருந்து பொருட்களை எடுத்துக் கொள்கிறான். திருடுவதில்லை. மனிதர்களை அடிக்கிறான். ஆனால் அதில் வன்மம் இல்லை. காரணம் அவன் யாரையும் வேறாளாக நினைப்பது இல்லை. நமது தனிமனித இடத்துக்குள் அந்நிய பிரவேசத்தை நாம் தடுப்பதற்கு காரணம் அச்சம். ஆனால் பாஸ்கர் மணி தயக்கமின்றி உரிமை கொண்டாடுகிறான். அவனிடம் இருந்து இந்த தயக்கமற்ற அன்பை பிற பாத்திரங்கள் மெல்ல மெல்ல பெற்றுக் கொள்கிறார்கள். அவர்களின் சீர்திருத்தம்அப்படித்தான் நிகழ்கிறது. கிகுஜீரோவில் இருந்து நந்தலாலா வேறுபடும் இடம் இது. குழந்தைமையின் களங்கமின்மையும், தயக்கமின்மையும், அன்பின் பாலான மனிதர்களின் அச்சமும், அதில் இருந்து விடுபட்டு மேலெழுவதும் மிஷ்கினின் முக்கிய பங்களிப்புகள். 

ஜப்பானிய படத்தில் கிக்குஜிரோ தன் மனநலமற்ற தாயை தொலைவில் இருந்து பார்த்து விட்டு மௌனமாக திரும்பி விடுகிறான். மிஷ்கின் இக்காட்சியை நாடகீயமாக்குவதகாக பார்வையாளனுக்கு படலாம். மிஷ்கின் இங்கு மிகையாகவே ஆர்ப்பாட்டமாகவே நடிக்கிறார். சுருக்கமாக அல்லாமல் இத்தருணத்தை நீட்டுகிறார். இந்த குறையையும் மீறி இந்த காட்சி முக்கியமானது தான். பாஸ்கர்மணி தனது துயரத்தை காட்டிலும் அம்மாவின் துயரம் மிகப்பெரியது என்று உணர்ந்து கொண்டு அவளை ஏற்றுக் கொள்கிறான். நமது எதிர்பார்ப்பை மீறி, அவன் அன்பினால் அல்ல துயரத்தைக் கொண்டே தனது துயரத்தை கடக்கிறான். துயரத்தின் வழி அவன் தன் மீட்சியை அடைகிறான். இங்கு தகாஷி கிட்டானோவிடம் இருந்தும் தஸ்தாவஸ்கியிடம் இருந்தும் இரு சரடுகளை மிஷ்கின் முடிச்சிடுகிறார். இந்த முடிச்சிடல் ஒரு அவதானிப்பு.
இப்படம் அறிதலைப் பற்றின அறிதல். தமிழின் மரபான எளிய உணர்ச்சிகளின் உச்சம், உறவுகளின் சிக்கல், ஒழுக்க பிரச்சனைகள் போன்றவற்றை கடந்து வாழ்வின் ஆதாரமான கேள்விகளை தீவிரமாக கேட்க முயன்றிருக்கும் ஒரு படம். மிகைகள், செயற்கையான இடங்கள், பாம்பு, மழை, கால்கள், பாதை, மேரிமாதாவின் விளக்குள் போன்ற எண்ணற்ற உருவகங்கள் மற்றும் இளையராஜாவின் இசை போன்ற தடைகள் இருந்தாலும் நந்தலாலா அது கேட்கும் கேள்விகளுக்காகவும் நிகழ்த்தும் கண்டுபிடிப்புகளுக்காகவும் ஒரு முக்கியமான படைப்பு தான்.
Read More

Saturday 4 December 2010

பிறந்த நாளின் போது



நேற்று பிறந்தநாளின் போது எப்படி முப்ப்து வயது வரை வாழ்ந்தோம் என்று வியப்பு ஏற்பட்டது. 


கிராமத்து குழந்தைகளுக்கு திருவிழா போல் தான் எனக்கும் பிறந்த நாள் இருந்து வந்துள்ளது.  பருப்பு அப்பளம் கடலை பாயச மதிய உணவுக்காக ஏற்பட்ட நாள். அந்நாளில் வீட்டில் இருந்து பூதத்தான் கோவிலுக்கு அரிசிப் பாயசம் படையல் வைத்து பெரிய போணியில் பள்ளிக் கூட குழந்தைகளுக்கு விளம்புவார்கள். அப்பாயசம் வேறு ஒரு சுவை கொண்டிருக்கும். எத்தனையோ குழந்தைகள் குடித்த பாயச பாத்திரத்தின் ஒரு கரண்டி தரும் ஆழ்நிறைவு தனியானது. இளமையின் பிறந்தநாள் காரணமற்ற உற்சாகம், புத்துணர்ச்சி, தன்னம்பிக்கையின் கூட்டுசேர்க்கை. கல்லூரி வரை பிறந்த நாள் காலத்தின் நினைவூட்டலே அல்ல. அது காலத்தை நினைக்காத காலம். மாநகரத்தில் பிறந்த நாட்கள் வாழ்த்துக்களின், பரிசுகளின், உணவக மதுக்கூட பங்கேற்புகளின் நாள். கிராமத்தில் என்னை யாரும் வாழ்த்தியதாக, பரிசு தந்ததாக நினைவில்லை. என் மிகச் சிறந்த நண்பர்களின் பிறந்த நாளைக் கூட நான் நினைவு வைத்தது இல்லை. அவர்களுமே.
மேற்சொன்ன பண்பாட்டு மாறுபாடு காரணமாக மாமியார், நண்பர்கள், அறிமுகமானவர்கள், கூட பணி செய்பவர்கள் யாருக்கும் சொல்லவில்லை. அப்படி பிறந்த நாளை அறிவிக்கவே கூச்சமாக இருந்தது. அதற்கு வேறொரு காரணம் உள்ளது.
கடந்த சில மாதங்களாக ஒரு கசப்பான மாத்திரையைப் போல நாட்களை விழுங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு இரவு கூட நன்றாக தூங்கவில்லை. தினமும் ஒரு எரிமலை வாயின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதான உணர்வு. இரவு தூங்க முற்படும் போது எப்படி இவ்வேளை வரை உயிரோடு இருந்தோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. பூனையின் கால்நகங்கள் உள்ளடங்கியவை. திடீரென்று பூனையால் தன் நகங்களை வெளிப்படுத்த முடியாமல் போனால் என்னாகும்? இவ்வளவு சலிப்பான அசட்டுத்தனமான வாழ்வை எப்படி அர்த்தமானதாக இதுவரை ஆக்கினோம் என்று வியப்பேற்படுகிறது. வாழ்வில் ஒளி காண்பது நிஜமாகவே ஒரு திறன். அத்திறனை இழப்பது ஒரு புலன் சட்டென்று மூடிக் கொள்வது போல். அப்போது மொழியில் இருந்து கிடைக்கும் பிரதிபலிக்கப்பட்ட வெளிச்சத்தை நம்பி இருக்க வேண்டியதாகிறது. இந்த மாதங்களில் கசப்பு கலந்த வியப்பு மட்டுமே மேலோங்கிய  உணர்வு. ஒரு நிறக்குருடனின் முன் நிறங்களால் பளபளக்கும் உலகம்.
ஆக ஒரு பெரும் கடனாளியான சூதாடியாக உணர்ந்தேன். என் கைகளை யார் பற்றி குலுக்கினாலும் சற்று நெகிழ்ச்சியாகவும் நிறைய கூச்சமாகவும் இருந்தது. கைகளை ஆழமாக சட்டைப்பைக்குள் புதைத்துக் கொண்டேன். நண்பர்கள் மற்றும் பிற உறவுகள் பாலான அவநம்பிக்கையால் அல்ல. இணையம் மூலம் அறிந்து வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.
Read More

Thursday 2 December 2010

கல்கியின் சுண்டு: சுருங்குகிறதா விரிகிறதா உலகம்?




கல்கியின் சுண்டுவின் சந்நியாசம்என்ற சிறுகதை சற்று மிகையான ஒரு வேடிக்கை கதை. கல்கியின் நகைச்சுவை அ.மித்திரன் (அல்லது சுஜாதா) போல் அல்லாது சற்று அட்டகாசமான நகைச்சுவை. மேற்சொன்ன மிகை காரணமாகவே கலைத்தன்மை குறைவாக் இருந்தாலும் இது ஒருவிதத்தில் ஒரு முக்கியமான கதை. எப்படி என்பதை பார்க்கப் போகிறோம்.
சுப்பிரமணியன் என்பவன் தன் பெயரை சுண்டு என்று சுருக்கிக் கொண்டிருக்கிறான். இது ஒரு கவனிப்புக்குரிய தகவல். அவன் வாழ்க்கையை இப்படி சின்ன சின்ன சாகச கனவுகளாக சுருக்கும் மனப்போக்கு கொண்டவன். அவனுக்கென்ற பல உயரிய லட்சியங்கள் உள்ளன. என்ன நடைமுறை படுத்துமுன்னே அவை முடிந்து போகின்றன!. அந்த காலத்தய சாத்தியங்களுக்கு ஏற்றபடியான லட்சியங்கள். அவை பணம் சம்பாதிப்பது மற்றும் உலகை உய்விப்பது என்று இருவகையானது. ஐ.சி.எஸ் பரிட்சையில் அவன் ஒரு மார்க் வித்தியாசத்தில் தோற்றுப் போனதால் உயர்வேலைக்கு போக முடியாதிருப்பதாக கதைசொல்லியான கிருஷ்ணசாமியிடம் அல்லது நாராயணசாமியிடம் சலித்துக் கொள்கிறான்.(இந்த இரட்டைப்பெயர் கதைக்கு பின்னால் வருவோம்) உலகம் பணக்காரர்களின் பேச்சையே நம்புகிறது என்று புகார் சொல்கிறான். அடுத்து கதைசொல்லி சுண்டுவை சந்திக்கும் போது அவன் மேலும் ஒரு புகார் கூறுகிறான். பணக்காரர்களால் உலகம் சீரழிந்து வருகிறது. அதனால் சமூகத்தை உத்தாரணம் செய்ய எழுத்தாளனாகப் போவதாய் சூளுரைக்கிறான். ஏன் அதற்கு எழுத்தாளனாக வேண்டும்? அதற்கு சுண்டுவின் பதில் சுவாரஸ்யமானது: “ஒரு விஷயம் அச்சில் வந்து விட்டதானால் முட்டாள் ஜனங்கள் அது எவ்வளவு அபத்தமானாலும் அப்படியே முழுங்கி விடுகிறார்கள்! இந்த உலகத்தை முன்னுக்கு கொண்டு வருவதற்கு எழுத்தாளனாவது தான் ஒரே வழி. சுண்டுவின் இந்த அசட்டையை கவனியுங்கள். அடுத்து சுண்டு திரும்பி வந்து எழுத்தாளனை பத்திரிகை ஆசிரியர்கள் அங்கீகரிக்கவில்லை என்ற ஒரு மடிப்பு கலையாத மரபான புகாரை சொல்கிறான்: “தெருக்கூட்டலாம்; ஹோட்டல் வைக்கலாம்; மந்திரி வேலை வேண்டுமானாலும் பார்க்கலாம்; ஆனால் எழுத்தாளனாகவே ஆகக் கூடாது என்கிறான். அடுத்த படி என்ன? அதுவும் நம் மரபில் உள்ளது தான். பத்திரிகை ஆரம்பிப்பது. அதுவும் சுண்டுவுக்கு சீக்கிரமே சலிப்பாகி விடுகிறது. உலகத்தை ஷேமிப்பதில் இருந்து அவன் சற்று லௌகீக அக்கறைக்கு வருகிறான். கொஞ்ச நாள் பங்குசந்தை சந்தை ஜுரத்தில் இருக்கிறான். பத்தே நாளில் ஒரேயடியாய் லட்சக்கணக்காய் சம்பாதிப்பதை பற்றி விதந்தோம்புகிறான். மைசூர் நிலக்கரியில் ஆயிரம் ரூபாய்க்கோ, திருவாங்கூர் கடலை பிண்ணாக்கில் ரெண்டாயிரம் ரூபாய்க்கு பங்கு வாங்கிட சாமியை வற்புறுத்துகிறான். அடுத்து சுண்டு பள்ளிக்கூடம் கட்டி சட்டமன்றத்தினருக்கு கல்வி அளித்து சமூக சேவை செய்து அத்தோடு கல்விதந்தையாகி கோடீவரனும் ஆகிடலாம் என்று திட்டமிட்டு அதைப் பற்றியும் சாமியிடம் ஆவேசமாய் பேசுகிறான். கடைசியில் தான் சுண்டுவுக்கு (நமது மூத்த தீவிர இலக்கியவாதிகளைப் போல்) தாமதமாக அது புரிய வருகிறது. தமிழர்களை மேம்படுத்த வேண்டுமானால் எழுத்தாளனாகவோ, பத்திரிகையாளனாகவோ, பங்குசந்தை நிபுணனனாகவோ, கல்வித்தந்தையாகவோ ஆனால் பயனில்லை. தமிழர்களுக்கு புரியும் ஒரே மொழி சினிமா. “சினிமாவைக் கொண்டு நமது யுனிவர்ஸிட்டி வைஸ் சான்ஸலர்களையும் பாட்புத்தக கமிட்டி அங்கத்தினர்களையும் கூட புதுப்பித்து விடலாம். ஆனால் சினிமா மோகம் கொண்ட புத்திஜீவிகளையும் வெளியாட்களையும் போல் அவனுக்கும் ஒரே கவலை: “சினிமா உலகம் கெட்டுக் கிடக்கிறது. அதனால் சினிமாவையும் சீர்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சுண்டு கோலிவுட்டில் நுழைகிறான். சினிமாவின் அரிச்சுவடி தெரியாத போதிலும் பத்துலட்சம் பணம் முடக்கி, “அப்புறம் என்ன என்று கேட்காத ஒரு தயாரிப்பாளர் கிடைத்தால் அவன் சினிமா உலகையே தலைகீழாய் திருப்பிட துடிக்கிறான். காலக் கொடுமையால் சுண்டு ஒரு இயக்குநரின் கீழ் உதவியாளனாகவே தன் திரைவாழ்வை ஆரம்பிக்கிறான். ஒரு திரைக்கதை எழுதி லீலா மனோகரி என்ற லுல்லுவை நாயகியை தேர்வு செய்து தயாரிப்பாளரையும் பிடித்து விடுகிறான். காதலி, கரிய மேகங்களும் கண்டு வெட்கும்படியான கன்னங்களிலே குமிழ் விட்டுக் கொப்புளிக்கும் அழகு வெள்ளத்தின் ஆழத்திலே ஆழத்திலே என்பதான வசனங்களும் அவன் படத்தில் உண்டு. ஆனால அங்கும் சுண்டுவின் கவனம் சிறிது சிதறுகிறது. கதையை விட லுல்லுவைப் பற்றி அதிகம் யோசிக்கிறான்; காதலிக்கிறான்; அவளை எப்படியும் “உலகம் மெட்சும் சினிமா நட்சத்திரமாக்கி விட வேண்டும்என்று அவன் கங்கணம் கட்டிய நிலையில் லுல்லு படத்தின் தயாரிப்பாளரை காதலித்து மணந்தும் விடுகிறாள். தயாரிப்பாளர் புதுநாயகியைப் போட்டு படமெடுக்க தயார்தான். ஆனால் சுண்டு தான் வெறுத்தொதுக்கி சந்நியாசம் போவதாய் இறுதி முடிவெடுக்கிறான். இதிலும் அவன் உறுதியாய் இருக்கப் போவதில்லை; தற்காலிக மனமாற்றங்கள் இருக்கும் என்று சாமியும் நாமும் நினைக்கும் போது சுண்டு நிஜமாகவே சாமியாராகித் தோன்றுகிறான். என்ன படப்பிடிப்பு தளத்தில் சினிமா சாமியார் வேடத்தில். இந்த கதையில் சொல்லப்படும் மனநிலை 60 வருடங்களுக்கு மேலாகி விட்ட பின் இன்று நனவாகியிருக்கிறது என்பதுதான் நமக்கு முதலில் வியப்பேற்படுத்துவது.
சுண்டுவின் பிரச்சனை முடிவெடுப்பது அதில் நிலைத்து நிற்பது என்பது மட்டுமல்ல. அது வெறும் மேலோட்டமான நிலையே. முதலில் அவனுக்கு எந்த துறையிலும் ஆழ்ந்த ஈடுபாடோ நம்பிக்கையோ ஏற்படுவதில்லை. அனைத்திலும் அவன் ஒரு பரிகாச மனநிலையில் தான் ஈடுபடுகிறான். எதுவுமே பயன் தராது என்ற ஒரு உள்ளார்ந்த எண்ணம் அவனுக்கு உள்ளது. அடுத்து எதிலும் அவனுக்கு ஆர்வத்தை தக்க வைக்க முடிவதில்லை. ஆரம்ப நிலையில் தங்கின பின் உடனே வெளியேறுகிறான். இதற்கு காரணம் அவனுக்கு உண்மையை அறிந்து செயல்படுவதை விடவும் தற்காலிக உச்சபட்ச கிளர்ச்சி தான் தேவையாக இருக்கிறது.என்பதே ஒவ்வொன்றாக அவன் கிளை தாவுவது இதற்குத் தான். முதலில் இந்த அவநம்பிக்கையும் ஆர்வமிழப்பும் கல்கியின் கால மனிதர்களுக்கு இருந்ததா என்று நமக்கு வியப்பேற்படுகிறது. சுதந்திரத்துக்குப் பின் லட்சியவாதம் ஓங்கியிருந்த காலம் அல்லவா அது. இன்று நிலைமை வேறு என்பது நமக்குத் தெரியும். வேலை, கலைத்துறை, சமூகம், உறவுகள் என ஒவ்வொன்றிலும் நாம் இன்று சக்கர கால்களுடன் தான் விரைகிறோம். நாம் அனைத்திலும் இருக்கிறோம்; ஆனால் அனைத்திலும் இல்லை. நமக்கு தொடர்புவலைகளில் ஆயிரக்கணக்கான நண்பர்கள்; ஆனால் அந்தரங்கமாய் பேச ஒரு நண்பர் கூட இல்லை.

சுண்டுவைப் போல் நாம் அனைத்தையும் சுருக்கி கடந்து விடவே பிரயத்தனிக்கிறோம். The Depreciated Legacy of Cervantes என்ற கட்டுரையில் மிலன் குந்தெரா இன்றைய அறிவு மற்றும் கலாச்சாரத் துறைகள் விரிவும் ஆழமும் இழந்து விட்டன என்கிறார். தொழில்நுட்ப வளர்ச்சியால் பரந்து பட்டதான உலகை நம்மால் எளிதில் விரைவில் அணுக முடியும் என்பதான தோற்றம் இருந்தாலும் மனதளவில் நாம் சுருங்கியே வருகிறோம். மீடியாவும் அரசியலும் இன்னபிற அதிகார நிறுவனவாதிகளும் பலகுரல்களில் ஒரே கருத்தியலைத் தான் பேசுகின்றன என்கிறார் குந்தெரா. இரண்டு உலகப் போரிலும் அதற்கு பின் நடந்து வரும் பல்வேறு போர்களிலும் அதிகாரம் பொருளாதாரம் போன்றவை வெளிப்படையான நோக்கங்கள் மட்டுமே. நிஜத்தில் அவை காரணமே அல்ல. போர்களை ஒரு வெளி ஊக்கம் உள்ளார்ந்து செலுத்துகிறது. அதாவது இன்றைய அதிகாரப் போர்கள் அதிகாரம் கடந்த ஒரு நோக்கமற்ற நோக்கத்திற்காய் நடத்தப்படுகின்றன என்கிறார் அவர். தனிநபர் மட்டத்திலும் இன்று அத்தகைய நோக்கமற்ற நோக்கம் காணப்படுகிறது. நுகர்வோராகவும், அதிகாரவிரும்பிகளாகவும், வன்முறையாளர்களாகவும் நாம் புரியாத ஒரு சக்தியால் செலுத்தப்படுபதை பார்க்க முடியும். சுண்டுவின் அலைகழிப்பு இத்தகைய தனிமனித மட்டத்தில் தான் நடைபெறுகிறது.

இன்று, கிளர்ச்சி தராத எதுவும் நிஜமில்லை/பயனில்லை என்றோ அல்லது நிஜமாக இருக்க அருகதை இல்லை என்றோ நம்புகிறோம். ஆக துறவியாவது என்றாலும் சினிமாவில் காஷாயம் அணிவது தான் வசதி, அப்போது தான் சீக்கிரம் அப்பாத்திரத்தில் இருந்து வெளியேறி மற்றொன்றுக்குள் நுழைய முடியும். சுண்டு நம் ஒவ்வொருவரையும் போல் பாசி படியாதிருக்க சாமர்த்தியமாய் உருண்டு கொண்டே இருக்கும் ஒரு உருளைக்கல். சமகாலத்தின் பிரதிநிதி. அவனுக்கும் கதைசொல்லிக்குமான உறவு கூட கவனிக்கத்தக்கது; சுவாரஸ்யமானது.
பள்ளி ஆசிரியர்களின் சொற்பொழிவு ஒன்றின் போது கதைசொல்லியை சுண்டு தனக்கு பரிச்சயமானவன் என்று நினைத்து முதுகில் அறைந்து “என்ன தெரியவில்லையா என்று புரியவைக்கிறான். கதைசொல்லி தான் வேறாள் என்று சொல்லும் போதும் அவன் பொருட்படுத்துவதில்லை. அவனுக்கு யாராக இருந்தாலும் சரிதான். அவன் கிருஷ்ணசாமி என்று அழைக்க கதைசொல்லி தன் பெயர் அதுவல்ல என்கிறான். மாட்டிக் கொள்ளாமல் இருக்க தன் பெயர் நாராயணசாமி என்று ஒரு பொய்ப் பெயரை சொல்கிறான். உடனே சுண்டு “ஏதோ உன் பெயர் கிருஷ்ணசாமி என்று சொல்லி டிமிக்கி கொடுக்க பார்க்கிறாயோ என்று சோதித்தேன் என்கிறான். இப்படி சுண்டுவுக்கே தனிநபர் அடையாளமே முக்கியம் அல்ல. கடைசி வரை அவன் இப்படி தவறான பெயரிலேயே அழைத்து தொடர்பு கொள்கிறான். ஒவ்வொரு முறை வீம்பளந்து விட்டு கதைசொல்லியிடம் இருந்து ஐந்து பத்து கடன் பெற்றும் செல்கிறான். இருவரும் இப்படி எதிர்பாராது பலமுறை சந்தித்து நண்பர்களாகி விடுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களைப் பற்றின தனிப்பட்ட விவரங்களை பேசிக் கொள்வதும் இல்லை. கல்கி கதைசொல்லியின் நிஜமான பெயரை தருவதில்லை என்பதும் சுப்பிரமணியத்தை சுண்டு என்றே கதைமுழுக்க அழைப்பதும் இந்த உறுதிப்பாடற்ற வேடிக்கையான உறவை சுட்டத் தான் எனலாம். ஒருவிதத்தில் இது இன்றைய வாசக-எழுத்தாள உறவையும் பிரதிபலிக்கிறது. இன்றைய வாசகன் தீவிரனா, ஜனரஞ்சகனா, கலை இலக்கிய பரிச்சயமுள்ளவனா என்பதும் எழுத்தாளனுக்கு புதிரே. அவன் நாராயணசாமியாய் இருந்தாலென்ன கிருஷ்ணசாமியாய் இருந்தால் என்ன!
Read More

Tuesday 30 November 2010

பாகிஸ்தானில் இருந்து கிரிக்கெட் நிபுணர்கள்


ராகுல் பட்டாச்சாரியாவின் Pundits from Pakistan ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறந்த கிரிக்கெட் புத்தகங்களில் ஒன்று. காரணம்: கிரிக்கெட் தான் ஆதாரம் என்றாலும் நூல் கிரிக்கெட்டை தாண்டி கலாச்சாரம், வரலாறு, மீடியா தந்திரங்கள் எனும் பல்வேறு விஷயங்களை கிரிக்கெட் லென்ஸ் வழி சொல்லுகிறது. என்னவொரு நடை. நடை என்றால் ஒரு மனிதனின் நிலைப்பாடு, மனப்போக்கு மற்றும் ஆளுமையின் வெளிப்பாடு தானே. இதனால் நடை ஒருவித  பார்வையும் ஆகிறது. வாழ்க்கையிலும் நம்மை ஸ்டைலான ஆட்கள் எளிதில் கவர்வதற்கு இதுவே காரணம். ஸ்டைல் உள்ளவர்களிடம் வாழ்க்கை பீறிடுகிறது. தற்போது ஆங்கிலத்தில் எழுதி வரும் இந்தியர்களில் ராகுல் பட்டாச்சாரியாவை அருந்ததிராயுடன் ஒப்பிடலாம். “சமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்த கிரிக்கெட் புத்தகம் என்று இந்நூலைப் பற்றி பீட்டர் ரீபக் (ஆஸ்திரேலிய கிரிக்கெட் விமர்சகர்) சொல்வது மிகையல்ல. ராகுலின் நகைச்சுவை நுட்பமான சாமர்த்தியமான குறுக்கீடற்ற விவரணைகளால் ஏற்படுவது. நடை மற்றும் நகைச்சுவைக்காகவே இந்நூலை படிக்கலாம். கூடவே இது ஒரு முக்கிய வரலாற்று ஆவணமும்.
2002-04இல் இந்தியா-பாக் நட்பு புதுப்பிக்கப்பட்டு மீடியா துணையுடன் மிகையாக கொண்டாடப்பட்ட தருணத்தில் இந்திய அணி கங்குலி தலைமையில் பாகிஸ்தானில் ஒருநாள் மற்றும் டெஸ்டு ஆட்டங்கள் ஆட செல்கிறது. அப்போது Guardian இதழுக்காக இத்தொடரை பதிவு செய்ய அங்கு பயணித்த ஒரு வங்காளி பத்திரிகையாளர் தான் ராகுல் பட்டாச்சாரியா. இத்தொடரின் போது கிரிக்கெட் பார்ப்பதற்காக பதினோராயிரம் இந்தியர்கள் எல்லை கடந்து பாகிஸ்தான் செல்கிறார்கள். கிரிக்கெட் பார்ப்பது என்பது ஒரு வெறும் சாக்கு. மக்களுக்கு எல்லைக்கு அப்பால் சென்று தம் வரலாற்று சகோதர-எதிரிகளை காண, கவனிக்க, கலாச்சார மாற்று அல்லது ஒருமையில் ஊற ஒரு வாய்ப்பு. பாகிஸ்தான் அரசு முஷாரபின் கீழ் தன்னை ஒரு நவீனப்பட்ட இஸ்லாமிய அரசாக முன்னெடுக்க பிரயத்தனிக்கும் காலம். எதிரி பிம்பத்தை சற்று நேரம் உறையிலிட்டு கைகுலுக்க முனையும் சந்தர்ப்பம். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளூர் தீவிரவாத பொறியில் மாட்டி பெரும் நட்டத்தில் மூழ்குகிறது. தொடர்குண்டு வெடிப்பு பீதியால் சொந்த மண்ணில் கிரிக்கெட் ஆடாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் கண்கள் மங்கி தலை பரட்டையாகி வயிறு ஊதி சவலையான நிலையில் இருக்கிறது. இந்திய பயணம் பாக் கிரிக்கெட்டுக்கு ஒரு புத்தியிர்ப்பு நிகழ்வு மில்லியன் கணக்கில் கிரிக்கெட் விளம்பர மற்றும் டீ.வி நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. ஒளிபரப்பு உரிமையை வாங்கின Ten Sportsஇடம் இருந்து கடன் வாங்கி இந்தியாவில் ஆட்டத்தை காட்டும் தூர்தர்ஷன்  விதிமுறைகளை இந்தியத்தனமாய் மீறி உள்ளூர் விளம்பர நிறுவனங்களுக்கு விற்கிறது. பாகிஸ்தானில் ஹோட்டல்கள் இந்த ஒரு மாதத்தில் அறைகளை ஒருநாளைக்கு ரூபாய் இருபதினாயிரத்துக்கு மேல் வாடகைக்கு விட்டு அதுவரையிலான 9/11 பொருளாதார மந்தநிலை நட்டத்தை ஈடுகட்ட முயல்கின்றன. ஒருநாள் ஆட்டங்கள் முடியும் ஒவ்வொரு மாலையும் வாஜ்பாய் கங்குலியை போனில் அழைத்து சௌகரியம் விசாரிக்கிறார். மக்களும் எல்லைதாண்டிய கலாச்சார பங்கிடலும், வணிகமும், மீடியா சித்தரிப்புகளும் வாமன வளர்ச்சி காண்கின்றன. ஒரு போலியான மிகைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பவாத வளர்ச்சியாகவும் இந்த வரலாற்று வீக்கம் உள்ளது. பாகிஸ்தானியர் இந்திய பயணிகளிடம் மிகுந்த வாஞ்சையுடன் நடந்து கொள்கின்றனர். இந்திய வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கி கடைக்காரர்கள் புன்னகையுடன் மறுக்கிறார்கள். இந்தியன் என்ற துருப்புச்சீட்டு இருந்தால் பாகிஸ்தானில் மக்கள், அரசுத்துறை, போலீஸ், கலைஞர்கள் என்ற எந்த மட்டத்திலும் கவனமும் உதவிகளும் தாராளமயமாகின்றன. இந்தியா நம் நண்பன் என்ற அரசின் மிகை பரப்புவாதம் எளிதில் மக்களிடம் தொற்றிக் கொள்கிறது. ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றி பெற பெரும்பான்மையான பார்வையாளர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்யும் சர்ரியலான காட்சி ஒன்றை ராகுல் பதிவு செய்கிறார். “நல்லவேளை இந்தியா ஜெயித்தது, அப்பாடா என்பது பாகிஸ்தானியரின் அடிப்படையான மனநிலையாக அப்போது உள்ளது. டெஸ்டு தொடரை பாகிஸ்தான் இந்தியாவிடம் இழக்கும் போதும் “கோழைத்தனமாக இழந்தது தான் மக்களையும் மீடியாவையும் கோபமுற செய்கிறது. மக்கள் பொதுவாக இந்த தொடர்களின் முடிவுகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதாய் நம்புகிறார்கள். தெருவிலும் கடைத்திண்ணைகளிலும் எந்த குழுமத்திலும் பரபரப்பாகவும் சரணடைதல் மனநிலையுடனும் இதை பேசிக் கொள்கிறார்கள். பொருளாதார மற்றும் சர்வதேச சூழல் காரணமாய் ஏற்பட்ட அரசின் இந்திய ஆதரவு நிலைப்பாடு பொதுமக்களாலும் எப்படி ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள் என்பது தான் இந்த புத்தகம் முன்வைக்கும் முக்கியமான சுவாரஸ்யங்களுள் ஒன்று.
பாகிஸ்தானியர் இந்தியா தங்கள் எதிரி என்பதை உள்ளூர உணர்ந்து தான் இருக்கிறார்கள். ஜின்னா பிரிட்டிஷ் அரசிடம் தனிநாடு கோரிய நாள் மார்ச் 23. இந்நாள் பாகிஸ்தான் தினமாக கொண்டாடப்படுகிறது. அப்போது லாஹூர் தாண்டி ஒரு கால்வாய்க்கு ராகுல் தன் நண்பன் சாதுடன் செல்கிறார். அப்பால் விரிந்து கொழிக்கும் நிலவெளி. “அது என்ன? என்ற ராகுல் கேட்கிறார். அதற்கு சாத் ஒரு உணர்ச்சிகர மனநிலையில் “அது பாகிஸ்தானின் நிலம்; இந்தியாவுடையது அல்ல என்கிறார். ராகுல் பின்னர் “நான் அங்கு என்ன விளைகிறது என்று கேட்க விரும்பினேன் என்று திருத்திக் கொள்கிறார். இருவரும் சங்கடத்தால் நெளிகிறார்கள். அவர்களின் நட்பு பின்னர் பாகப்பிரிவினை முரண்பாடு கொண்ட சகோதரர்களிடையே போல் கொணலாகிறது; மாற்றிக் கொள்ள முடியாதபடி செயற்கையான அன்பு பரிவர்த்தனை கொண்டதாகிறது. இந்த சிறுசம்பவம் இந்திய பாகிஸ்தான் பொதுமக்களின் ஆதார பரிவர்த்தனையின் உருவகம் எனலாம். அவர்கள் அரசியல் வரலாற்று நாயகர்களின் கைப்பாவைகள். விரல் அசைவுக்கு பொம்மை உற்சாகமாய் கைதூக்க வேண்டும் அல்லது தோளை தொங்கப் போட வேண்டும். பின்னணிக் குரலுக்கு இருக்கவே இருக்கிறது மீடியா. ஆனாலும் மக்கள் இந்த அரசியல் வாய்ப்பை பயன்படுத்தி முடிந்த வரை கொண்டாடுகிறார்கள். ஏதோ இந்த அபத்தத்தின் உண்மையை புரிந்து கொண்டவர்கள் போல் அவர்கள் எதிரியான நண்பனையும் நண்பனான விரோதியையும் மீண்டும் விரோதியாகப் போகும் நண்பனையும் தங்கள் அணைக்கும் கைகளுக்குள் சில தருணங்கள் பத்திரப்படுத்தி தங்கள் வெம்மையை காட்ட விரும்புகிறார்கள். மனிதன் எப்படியும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறான். வரலாற்றின் அத்தனை மூர்க்க மடத்தன அழிவுகளுக்கு மத்தியிலும் மனிதனை இந்த விழைவு தான் பைத்தியமாகாமல் இருக்க காப்பாற்றி இருக்கிறது போலும். எப்போதும் இந்த இரண்டு உலகமும் இருக்கிறது. அரசும் பிற நிறுவனங்களும் நம்மை வாழ நிர்பந்திக்கும் உலகம். நாமாக உள்விழைககளின் தூண்டலில் வாழும் உலகம். இந்திய பாக் நட்பு பரிபாலனை போன்ற ஒரு வரலாற்று சந்தர்பத்தில் இந்த உண்மை மேலெழுகிறது. வெவ்வேறு நுண்தகவல்கள் மூலம் ராகுல் பட்டாச்சாரியா இதை பல்வேறு நிலையிலான ஒவ்வொரு இந்திய-பாக் சந்திப்பின் போது சித்தரிக்கிறார். ஒரு எளிய நிலையில் இது நிகழ்வதை இச்சம்பவம் காட்டுகிறது. மூன்றாவது டெஸ்டில் ராகுல் திராவிட் 270 அடிக்கிறார். பாகிஸ்தான் தோற்கிறது. அன்று மாலை தெருவில் சில இளைஞர்கள் இன்சுலேஷன் டேப் சுற்றப்பட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆடுகிறார்கள். ராகுல் பட்டாச்சாரியா அவர்களுடன் சேர்ந்து ஆட விரும்புகிறார். அவ்விளைஞர்களில் ஒருவன் வேடிக்கையாக மறுக்கிறான் “முடியாது உன்னை சேர்த்துக் கொள்ள முடியாது. எங்களுக்கு எதிராக 270 அடித்தது நீ தானே. ஆனாலும் ராகுல் அவர்களுடன் சேர்ந்து மிகுந்த உற்சாகத்துடன் விளையாடுகிறார்.
ஒரு பயண நூலாகவும் Pundits from Pakistan மிக வசீகரமான காட்சிகளை கொண்டது. மிக முக்கியமாக கலாச்சார அரசியல் ஆழங்கள் வெளிப்பட்டாலும் பட்டாச்சாரியா இதை ஒரு கிரிக்கெட் ஆவணமாக முன்னிறுத்தவே பிரயத்தனப்படுகிறார். கிரிக்கெட் வழி அவர் மற்றொரு உலகத்தை காட்டுகிறார். வெளித்தோல். உரிக்க உரிக்க கிரிக்கெட் வந்து கொண்டே இருக்கும்படி அவர் தன் உரைநடையில் பல்வேறு தகவல்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார். இப்புத்தகம் ஒரு பயணி நேரிடும் அதீத அனுபங்களின் களைப்பு மற்றும் வெறுமையுடன் முடிகிறது. ஒரு புது நாடும், அதன் மக்களும், அவர்கள் எதிரிடும் வரலாற்று தருணமும் ஏற்படுத்தும் மனஎழுச்சி அந்த ஒருமாத கிரிக்கெட் பயணத்தின் கொடை இத்தனையும் அடைய, மக்களின் ஆதார அன்பின் மேலிடலை உணர, அவர்களின் பாதுகாப்பின்மையை உள்வாங்க, மனிதர்களின் அசட்டுத்தனங்கள் எல்லைக்கு எப்பக்கமும் ஒன்றே என்பதை உணர, இத்தனைக்கும் மேலாக பாகிஸ்தான் ஆன்மாவின் பரிமாணங்களை புரிய முயல ராகுல் பட்டாச்சாரியாவுக்கு கிரிக்கெட் ஒரு தோரணை மட்டுமே. ஆனால் புத்தகத்தில் அது தோரணையற்ற தோரணை என்பதே முக்கியம். ஒன்றை உணர்த்த மற்றொன்றை செய்வதை உணராமலே நமக்கு வெளிப்படையாக உணர்த்தாமலே செய்வது உச்சபட்ச எழுத்துக்கலை. அப்பட்டமான சில பத்திரிகையாள ஆர்ப்பாட்டங்கள், மேட்ரொபொலிடன் மனநிலை ஆகியவை உதிர்த்தால் ஒரு வறட்டுப்புன்னகையை உதட்டுடன் ஒட்டி விட்டால் ராகுல் பட்டாச்சாரியா நம்மூர் அசோகமித்திரன் தான் இந்நூலுடன் தமிழில் ஒப்பிடக்கூடிய (சற்றே அடங்கின தொனியிலான) புத்தகம் “பதினெட்டாவது அட்சக்கோடு. ஆக அசோகமித்திரன் வாசகர்களுக்கு “Pundits from Pakistanகட்டாயம் பிடிக்கும் எனலாம்.
புத்தக பதிப்பு Picador
விலை 200 (flipkart.comஇல் கிடைக்கிறது)
Read More

Saturday 27 November 2010

தேர்வு குளறுபடிக்கு யார் பலிகடா?


 கிரிக்கெட்டில் ஒரு வீரரை தேர்வு செய்ய அடிப்படை என்ன?
திறமை. இத்திறமையை உள்ளுணர்வு சார்ந்து தேர்வாளர் கண்டறியலாம். அல்லது ஆட்ட ரிக்கார்டை வைத்து முடிவு செய்யலாம். மற்றொன்று ஆட்டவகைமைக்கான பொருத்தம்.
T20க்கு பொருத்தமானவர் பலசமயம் ஒருநாள் அட்டத்துக்கு கூட தோதாக இருப்பதில்லை. மனநிலை மற்றும் தன்னம்பிக்கை ஆகிய காரணங்களுக்கு ஓஜ்ஹா, யூசுப் பதான் என உதாரணங்கள் சொல்லலாம். திறமைக்கு இன்றைய ஆட்டத்தில் (இந்தியா-நியுசிலாந்து ஒருநாள் ஆட்டம்) ஆடின சாஹாவை சொல்லலாம். சாஹாவின் மட்டையாட்டம் சற்று மட்டம் என்பது நமக்குத் தெரியும். மன உறுதி கொண்ட ஒரு சராசரி மட்டையாளர் அவர். அவரது கீப்பிங்கும் ஒன்றும் அபாரம் அல்ல. அவர் விசயத்தில் தேர்வாளர்கள் சிறு தவறு செய்கிறார்கள். சீனியர்கள் நடுக்கமான ஒரு மட்டையாட்ட வரிசையில் அவரை தேர்ந்ததால் அணியின் சமநிலை சற்று குலைந்து விட்டது. ஐந்து விக்கெட் இழந்தால் இந்தியாவின் மென்மையான அடிவயிறு எளிதாக இனி வெளிப்பட்டு விடும். கடைசி பத்து ஓவர்களில் பந்து வீச்சாளரில் ஒருவர் இனி பொறுப்பெடுத்து ஆட வேண்டி இருக்கும். சாஹாவால் மட்டையாட முடியாதா?
முடியும். ஒரு தீயணைப்பு வீரராக. 35-40 ஓவர்களுக்கு 5க்க்கு மேற்பட்ட விக்கேட்டுகள் இழந்து தடுமாறும் நிலையில் சாஹாவால் பொறுமையாக போராடி இன்னிங்சை இறுக்கி கட்டி முடிச்சிட முடியும். சுருக்கமாக, சாஹா நிச்சயம் ஒரு வளமையான முதலீடு அல்ல. சாஹா எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்? அவரது கீப்பிங் திறமைக்காக என்கிறார் அணித்தலைவர் காம்பிர். ஆனால் ஒருநாள் ஆட்டத்துக்கு கீப்பிங்கை விட அதிரடி மட்டையாட்டமே அதி முக்கியம். ஒரு நல்ல கீப்பரை விட அதிக வசூல் ஆகக் கூடியவர் ஒரு பாதுக்காப்பான கீப்பரும் ஆனால் மிக நல்ல மட்டையாளறுமான ஒரு ஆல்ரவுண்டரே. தேர்வாளர்கள் தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல் அல்லது கர்நாடகாவின் கவுதம் போன்றோரில் முத்லீடு செய்ய வேண்டும். பார்த்திவுக்கு போதுமான ஒருநாள் வாய்ப்புகள் தரப்படவில்லை. அவரை விட நல்ல கீப்பரான தினேஷ் துவக்க வரிசையில் வீணடிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் (276 மட்டுமே அடித்துள்ள நிலையில்) இந்தியா தோல்வியுறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வெற்றி தோல்வி குறித்து அதிகம் அலட்டிக் கொள்ள ஒன்றும் இல்லை. இன்று தோற்று விட்டால் அடுத்த ஆட்டத்திற்கு யார் அணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று யோசிக்கலாம்.
நிஜத்தில் இன்றைய முக்கிய மட்டையாட்ட திணறலுக்கு காரணம் சமநிலையின்மை. அதற்கு காரணம் சாஹாவின் தேர்வு. ஆனால் சமநிலையை மீட்க சாஹாவை விலக்க முடியாது. அணியில் அவர் மட்டுமே கீப்பர். இன்றைய ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகள் எடுத்தால் கூட தோற்கிற நிலையில் அஷ்வின் விலக்கப்படுவார். அல்லது ஐந்து விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். அஷ்வினின் இடத்தில் சவுரப் திவாரி அல்லது சுழலர் ஜடேஜா அடுத்த ஆட்டத்தில் கொண்டு வரப்படுவார். இன்றைய ஆட்டத்தில் நமது பந்து வீச்சு நன்றாக உள்ள பட்சத்தில் (பதான் நன்றாக வீசும் பட்சத்தில்) மட்டையாளர் உள்ளே வர வாய்ப்பு அதிகம் இருக்கும். நியுசீலாந்து சுழலை நன்றாக ஆடி இலக்கை எளிதாக அடைந்தால் ஜடேஜா வருவார். இதனை நான் சொல்லக் காரணம் தேர்வாளர்கள் செய்யும் ஒரு அடிப்படை தவறால் நடக்கும் அநியாயத்தை சுட்டத் தான். ரஞ்சி தொடர்களில் இரண்டு பருவங்களிலுமாக நன்றாக ஆடி, இப்போது ஹர்பஜனும் இல்லாத பட்சத்தில், ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு இத்தொடரில் தொடர்ச்சியாக ஒரு ஐந்து ஆட்டங்கள் ஏனும் ஆட வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். தேர்வாளர்கள் மட்டையாட்ட தன்னம்பிக்கை உள்ள ஒரு நபரை கொண்டு வந்திருந்தால் இது எளிதாகி இருக்கும். அறுவை சிகிச்சையின் போது கத்தியையும் சேர்த்து உள்ளே வைத்து தைத்து விடுவது போன்ற நிலைமை இது. அவசரமாக ஒரு பலிகடா தேவை!
Read More

Friday 26 November 2010

தென்னாப்பிரிக்க தொடர்: சாத்தியங்கள் மற்றும் ஊகங்கள்

சமகாலம் கிரிக்கெட்டில் பந்துவீச்சின் இலையுதிர் பருவம் எனலாம். தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்டு எந்த அணியுமே ஒரு ஆட்டத்துக்கு முன்னால் தன் மட்டையாட்ட வலிமையைத் தான் பெரிதும் நம்புகிறது; எந்த அணியும் டாஸ் வென்று மிக அரிதாகவே பந்து வீச விரும்புகிறது. பயணப்படும் அணிகள் எதிர்பார்ப்பது தம் மட்டையாளர்கள் ஓட்டங்களைக் குவிக்க வேண்டும் என்பதே. 500க்கு மேற்பட்ட ஓட்டங்கள் ஏற்படுத்தும் நெருக்கடி பந்து வீச்சுக்கு இல்லாத ரெண்டு கோரப் பற்களை தந்து விடுகிறது. உலகமெங்கும் ஆடுகளங்கள் சோர்வுற்று மெதுவாகி வருவதும் மேற்சொன்ன பந்து வீச்சின் அந்திம பருவமும் இந்த போக்குக்கு காரணங்கள். இந்த பின்னணியில் தென்னாப்பிரிக்காவுக்கு பயணப்படப் போகும் இந்திய அணி நிச்சயம் பந்து வீச்சை பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளாது எனலாம். நமது எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கும்?

தோனி தெ.ஆப்பிரிக்க பயணம் முழுக்க சஹீர்கான் வலுவான உடல்தகுதியுடன் இருக்க எதிர்பார்ப்பார். துணை வீச்சாளர்களான ஸ்ரீசாந்தும் இஷாந்தும் கட்டுப்பாடோடு வீச வேண்டும். இந்த மூவரணி தொடர் முழுக்க கவனச்சிதறல்களோ சேதங்களோ இன்றி நிலைத்தாலே தோனி ஒரு பெருமூச்சு விடுவார். தென்னாப்பிரிக்காவின் அனைத்து ஆடுகளங்களும் எகிறாது. சோதனையான களங்களிலும் நமது மட்டையாட்ட வரிசையால் சுதாரிக்க முடியும். திறமையும் அனுபவமும் ஆட்டநிலையில் இருந்து வேறுபட்டவை. ஆட்டநிலை அன்பைப் போல் சீக்கிரம் காணாமல் போய் எதிர்பாராமல் பின் வந்து அணைப்பது. ஏழு பேரில் நால்வர் நல்ல ஆட்டநிலையில் ஆடினாலே இந்தியாவால் தெ.ஆப்பிரிக்க தொடரில் நிலைக்க முடியும். திறன்நிலையைப் பொறுத்து அணி முழு ஆரோக்கியத்தோடு இருந்தால் ஒழிய தோனிக்கு இத்தொடரை வெல்வதை விட டிரா செய்வதே ஆதார நோக்கமாக இருக்கும். 96இல் இருந்து இதுவரை தென்னாப்ப்ரிக்காவுடன் இந்தியா ஆடிய டெஸ்டு ஆட்டங்களை நினைவுபடுத்தி பாருங்கள். பந்து வீச்சு ஒருசில செஷன்களில் மட்டுமே நம்மை சேதப்படுத்தி உள்ளது. தொடர்ந்து நமக்கு நெருக்கடி அளித்து வந்துள்ளது என்ன?
இரண்டு விசயங்கள். ஒன்று தென்னாப்பிரிக்காவின் மட்டையாட்டம். அது பொறுமை மற்றும் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டது. நீண்ட நேரம் ஆடி பெரும் ஸ்கோர்களைக் குவிக்கக் கூடியது. தென்னாப்பிரிக்கா கட்டாயம் இலவச விக்கெட்டுகளை தராது. தென்னாப்ப்ரிக்க மட்டையாளர்களை நெருக்கடியில் தொடர்ந்து வைக்க அபாரமான பொறுமை, கட்டுப்பாடு மற்றும் திறமை வேண்டும். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தென்னாப்பிரிக்க மட்டையாட்ட தேருக்கு எப்படி கட்டை போட்டு நிறுத்துவது என்பதே முக்கிய பிரச்சனையாக நமக்கு இருந்துள்ளது. வரப்போகும் பயணத்தில் தென்னாப்பிரிக்காவின் மட்டையாட்டம் சீர்குலைந்தால் சுவாரஸ்யமாக இருக்கும். அது வேறுவிதங்களில் இந்தியாவை தாக்கி சரிக்க முயலும். ஆட்டத்தில் எதிர்பாரா தன்மை, நாடகீய தருணங்கள் உருவாகும். இல்லாத பட்சத்தில் இத்தொடரின் டெஸ்டுகள் ஒரு புல்வெட்டும் எந்திரத்தை தொடர்ந்து பார்க்கும் அனுபவத்தை மட்டுமே தரும். சிறந்த கிரிக்கெட் மலைகளின் எழுச்சியையும், பள்ளத்தாக்குகளின் வீழ்ச்சிகளாலும் அடையாளப்படுவது.
அடுத்து ஒரு அணியுடன் சமமாக போராட வைப்பது எது? திறன்களா? இல்லை. இந்தியா எப்போது ஆஸ்திரேலியாவால் மன எழுச்சியுற்று தனது ஆட்டத்தரத்தை பலமடங்கு உயர்த்துவதும் ஆனால் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை மண்ணில் திணறுவதும் ஏன்? கிரிக்கெட்டில் மட்டும் இரு முரணான தன்மை கொண்ட இருப்புகள் மோதினால் தசாவதார தரிசனங்கள் கிடைப்பதில்லை. கிரிக்கெட் சமபலம் கொண்ட அசுரர்கள் மோத வேண்டிய ஆட்டம். ஆவேசமாக தாக்கி ஆடக் கூடிய அணியுடன் எதிரணி அதே பாணியிலே ஆட வேண்டும். தென்னாப்பிரிக்காவுடன் வெல்ல இந்தியா கல்லும் முள்ளுமற்ற ஒரு பாதையை தேர்ந்து கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்க பாணியில் தூங்கும் எதிரியை மட்டுமே நெரித்து கொல்ல வேண்டும்.
Read More

Wednesday 24 November 2010

அப்பாவின் புலிகள்


அப்பாவின் கட்டில் வெற்றாய் கிடந்தது. மெத்தை இல்லை, தலையணை இல்லை, அவரது சிவப்பு துண்டை யாரோ விரித்திருந்தார்கள். அப்பா ஓய்வு பெற்ற நாளில் அலுவலக பிரிவுபசார விழாவின் போது வழங்கியது. அப்பா அன்று மிக மகிழ்ச்சியாக இருந்தார்; வழக்கத்துக்கு மிகுதியாக மது அருந்தியிருந்தார். அக்காவின் அறைக் கட்டிலில் அமர்ந்தபடி அவளை அணைத்தபடி பேசிக் கொண்டே இருந்தார். குழறியபடி, நினைவுகளை, மனநிலைகளை குழப்பி அடுக்கியபடி சொப்பு சாமன்களை விளையாடத் தெரியாமல் பரப்பி முழிக்கும் குழந்தையைப் போல். அவர் அவளது இடுப்பை மெல்ல அணைத்தபோது அக்காவுக்கு சிரிப்பாக வந்தது, அம்மாவின் கண்களில் கலவரம் தெரிந்தது. அடிக்கடி அடுக்களை சென்று எட்டிப் பார்த்தவள், அக்காவிடம் எதையாவது குற்றம் சொல்லி வைது கொண்டு வந்தவள், திடீரென்று அப்பாவை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அவரது அறையில் இட்டு கதவை சாத்தினாள்.

அக்காவுக்கு அப்பாவை நன்றாக தெரிந்திருந்தது, அவள் மனதில் அப்பா பற்றி இருந்த தெளிவான சித்திரம் நேர்க்கோட்டில் ஆனது. அவள் மிகச் சின்ன வயதிலிருந்தே அப்பாவுடன் தொடர்ந்து இருந்திருக்கிறாள். அப்பாவின் தோற்றம் அவளுக்கு வாய்த்திருந்தது. நெடுகின கறுத்த உருவம், கூர்மையான நாசி மற்றும் மூக்கு, பளிச்சிடும் கண்கள். மனதளவிலும் அவள் அப்பாவின் மற்றொரு பிரதிபிம்பம் தான். வெளிப்படையான, வாழ்க்கையை கொண்டாட விழையும் போக்கு, தடங்கலற்று வெளிப்படும் ஆற்றல், கூர்மையான அறிவு, சட்டென்று ஒட்டிக் கொள்ளும் நினைவுத்திறன், இத்துடன் நிறைய சோம்பலும். அம்மா இருவரையும் பாண்டிகள் என்பாள். எனக்கு அப்பா பற்றி இருந்த நினைவுகள் ஒரு மொண்டாஜ் போல குழப்பமானது. அப்பாவை பற்றிய முதல் நினைவு சற்று பதற்றமானது. எனக்கு மூன்று வயதிருக்கும். தென்னந்தோப்பில் மடல்களையும் ஓலைகளையும் வெட்டி குவித்திருந்தனர். அப்பா என்னை தூக்கிப் பிடித்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார். இத்துடன் நினைவுச் சரடு அறுபடுகிறது, அடுத்து நான் கீழே ஒலைக் குவியல் மேல் விழுந்து கதறி அழுததாக அம்மா சொன்னாள். எனக்கு அழுத நினைவு இல்லை, ஆனால் அப்போதைய அப்பாவின் சிலநொடிகளுக்கான முகபாவம் சன்னமாய நினைவில் உள்ளது. இல்லை அதுவும் கற்பனையா? எப்படியும் அம்மா குறிப்பிட்ட விபத்து நிகழ்வுதான் நான் இன்னும் அதை நினைத்துக் கொண்டிருக்க அல்லது அப்படி ஒரு கற்பனையை உருவாக்கி இருக்க காரணமாக இருக்கலாம். அப்பா அப்போது இதே போல் ஒடிசலாக ஆனால் மேலும் உற்சாகமாக ஆரோக்கியமாக இருந்ததாக அம்மா குறிப்பிடுவாள். அடுத்த நினைவு நெய்யாற்றங்கரையில் ஒரு வைத்திய சாலையில் நான் எண்ணெய் தேய்த்து பிழியப்பட்டு சிலவேளை பனஞ்சிலாம்புகளால் போலியோ கால்கள் கட்டப்பட்டு வலியில் அல்லது அலுப்பில் (என் கற்பனையை பொறுத்து) விடாது அழுத போது அப்பா தொட்டுள்ள தோப்பில் வாதாம் மரங்களில் ஏறி காய் பறித்து வந்து நொறுக்கி பருப்பு எடுத்து தந்ததை பற்றியது. இதுவும் முதல்பாதி மட்டுமே எனக்குள் பச்சையாக இருப்பது. மிச்சம் பாட்டி சொன்னது. அப்பா மரம் ஏறி என்றுமே பார்த்தது இல்லை. அதனால் வியப்புணர்வு காரணமாக இந்நினைவும் மீளமீள தோன்றுவது.
மூன்றாவது நினைவு காட்சிபூர்வமானது அல்ல. அப்பாவே சொன்ன ஒரு சிறுதகவல். எனக்கு போலியோ காய்ச்சல் முற்றி ஜன்னி வந்து ஆஸ்பத்திரியில் கிடந்த போது ஓரு நள்ளிரவில் சில மருந்துகள் அவசரமாக தேவைப்பட்டன. அப்பா தனது லேம்பி ஸ்கூட்டரில் படுவேகமாக பல கடைகளுக்கு சென்று தேடி கடைசியில் ஒருவழியாக ஷட்டர் இழுத்து மூடப்போகும் நிலையில் ஒரு கடையில் இருந்து அம்மருந்துகளை அதிர்ஷ்டவசமாக பெற்று வந்தார். இதைப் பற்றி அம்மா சொன்ன தகவல் சற்று முரண்பட்டது. அப்பா அன்று வீட்டில் தனிமையில் இருந்தபடி பக்கத்து வீட்டு சௌதாமினியிடம் “கைகால் காண்பித்துக் கொண்டிருந்தார். இதை அம்மா ஆஸ்பத்திரியில் இருந்தபடி எப்படி கண்டுபிடித்தாள் என்பது அப்போது புதிராக இருந்தது. அப்பாவின் இத்தகவல் பற்றிய மற்றொரு முரண்பாடும் உண்டு. அப்பாவுக்கு ஸ்கூட்டரை மிகுந்த தயக்கத்துடன் கிட்டத்தட்ட 15-20 கி.மி வேகத்திலேயே செல்வார். அவரோடு செல்லும் போது பலசமயம் வெட்கம் பிடுங்கித் தின்னும், பாதசாரிகள் அவரை தாராளமாய் தாண்டி சென்று சில சமயம் பரிகாசமாய் திரும்பிப் பார்க்க வேறு செய்வார்கள். இப்படி கூடப் படிக்கிற மாணவர்களை பின்சீட்டில் இருந்தபடி எதிரிட நேரும் போது இறங்கி நடந்து போய் விடுவேன். “என்னால் ஜெட் வேகத்திலே எல்லாம் போக முடியாது, வேணும்னா எறங்கிப் போ என்று இறங்கிய பின் அப்பா முடிவாய் சொல்வார்.
அந்த நீல-வெள்ளை லாம்பி அப்பாவுக்கு பழகி பழகி கொஞ்சம் அவர் குணம் ஒட்டி விட்டிருந்தது. ஓய்வுக்கு பிறகு அப்பா வெளியில் செல்லும் போது வண்டி எடுப்பதில்லை. கைநடுங்குவதாக, சமன் செய்ய முடிவதில்லை என்று காரணங்கள் சொன்னார். உதைத்து கண்ணை மூடி விட்டால் தானே தன்னை வீடு சேர்த்து விடும் என்று அப்பா பெருமைப்பட்ட ஸ்கூட்டர் மீது அவருக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டிருந்தது. பின்னர் நான் அதில் தான் வண்டி பழகினேன். இருமுறை விழுந்து சியாய்த்து சுளுக்கிய பின் நண்பர்களின் வண்டியில் பழகுவதாக முடிவு செய்தேன். சமீபமாக அவ்வண்டியை சென்னைக்கு கொண்டு வரும் போது நிறைய சிரமங்கள் ஏற்பட்டன. மரண சான்றிதழ் உடனே கிடைக்காததால் அப்பாவின் பேரில் போலிக் கடிதம் ஒன்று எழுதி ரெயில்வே அதிகாரியை திருப்திப் படுத்தி பார்ஸலில் அனுப்பினேன். அப்பா இல்லாத நிலையில் அவர் கையெழுத்தை போலியாக சாய்வாக எழுதிய போது மிக சுலபமாக வந்தது. பத்து வருடங்களுக்குப் பின் அப்பா கையெழுத்தை போல செய்கிறேன், அவ்வளவு சரளமாக வந்தது, யாரிடமும் சொல்லவில்லை என்றாலும் உள்ளுக்குள் நடுக்கம் இருந்தது. சரளமாக எது வந்தாலும் இந்த வயதில் பயமும் பதற்றமும் கலந்து வருவது ஏன்?

லாம்பி ஓடும் நிலையில் இல்லை. அதை துருவேற பாதுக்காக்கவும் வாடகை வீட்டில் இடமில்லை. வீட்டு சொந்தக்காரர் வண்டியை எப்போ எடுக்கப் போறீங்க என்று பல மாதங்களாக கேட்டுக் கொண்டிருந்தார். மிக சமீபமாக சொன்ன போது அது கோபத்தில் இருந்து, கேலியில் இருந்து பழக்க விசாரணையின் தொனிக்கு மாறி இருந்தது. லாம்பியை ரிப்பேர் செய்து ஓடும் நிலைக்கு கொண்டு வருவதிலும் தொடர்ச்சியான பிரச்சனைகள்; கிக்கர் உள்சக்கரம் பழுது, கியர் அறுந்தது, இப்படி ஆரம்பித்து விடாமல் பெட்ரோல் ஒழுகுவது வரை எதாவது ஒரு கோளாறு வண்டியில் மிச்சமிருந்து கொண்டே இருந்தது. சென்னையில் அவ்வண்டியை பழுது பார்க்கும் உத்தேசத்துடன் கைவக்காத மெக்கானிக்குளே இல்லை. ஒருவர் மட்டும் வெளிப்படையாக கிடைக்கிற விலைக்கு கொடுத்து விடுங்கள் என்றார். ஆர்.சி புத்தகத்தில் பெயர் மாற்றாமல், கண்டுபிடிக்கப்படாத கோளாறுகளுடன் அதை வாங்க ஒருவர் தயாரானார், ஆனால் பாருங்கள் அப்போது பார்த்து சாவி தொலைந்து விட்டது. பூட்டை உடைத்து மாற்றி அவருக்கு கைமாறும் போது ஒரு பழகின செல்லப்பிராணி போல் தயங்கியபடி நகர்ந்ததாய் தோன்றியது; அல்லது அந்த வண்டி நகரும் பாணியே அப்படியாக இருக்கலாம்.

அப்பாவின் நினைவுகள் காலவரிசைப்படி இல்லை என்று சொன்னேன். அதாவது எனது ஐந்து வயதிற்கு பிறகு அப்பா எப்படி இருந்தார், பேசினார், நடந்தார், சிரித்தார், அழுதார் எதுவுமே மனப்பரப்பில் இல்லை. அப்பா அப்போது கடுமையான் போதையில் அலுவலகத்தில் தகராறு செய்து மொட்டை மாடியில் நின்று குதிப்பதாய் மிரட்டியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். தொழிற்சங்கவாதிகளுடன் முரண்பட்டதால் பணிநீக்கம் நீண்டு கொண்டே சென்றது. அதோடு அப்பாவுக்கு அம்மாவின் பாலியல் ஒழுக்கம் மீது தேவையற்ற சந்தேகங்கள் வலுத்து வந்தது. ஒவ்வொரு நாளும் புதிய ஒரு கள்ளக்காதலனோடு இணைத்து பேசி அவளை அடித்து வதைத்து வந்தார். ஒரு நாள் இப்படி அம்மாவை தாத்தாவுடன் கோர்த்து பேசியதில் அவர் காயப்பட்டு எங்கள் வீட்டுக்கு பின்னர் வரவே இல்லை. அப்பாவின் அடி உதைகளை, வசைகளின் வன்மத்தை விட அவரது அபாரமான கற்பனை எங்களை மிக மோசமாக பயமுறுத்திய காலம் அது. சென்னையில் உள்ள மாமா (அம்மாவின் அண்ணன்) என்னை அழைத்து சென்று விட்டார். அப்பாவை ரெண்டு வருடங்களுக்கு நான் பார்க்கவே இல்லை. மாமா வீட்டுக்கு என்னை தேடி வந்திருந்த போது அவர் மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு வேலைக்கு ஒழுங்காய் செல்வதாக சொன்னார்கள். ஆனால் அன்று அவர் கண்கள் சிவப்பாய் பழுத்திருந்தது. அவருடன் வெளியே சென்று வர மாமா அனுமதிக்க இல்லை. அப்பா அன்று நள்ளிரவே சொல்லாமல் ஊருக்கு கிளம்பி விட்டார். அப்புறம் கொஞ்ச நாட்கள் பள்ளிக்கு செல்லும் போது சாலைகளில் அவரை தேடியிருக்கிறேன். நான் அப்பாவை போலவே கோணலாக சிரிக்க ஆரம்பித்து விட்டதாய் அத்தை சொன்னார்கள். அது பொய். அப்பா சிரிப்பதே இல்லை. கூடிய மட்டும் ஒரு பெரிய புன்னகை. கசப்பையும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்த அதே புன்னகைதான் எப்போதும்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் அப்பா திடீரென காணாமல் போனார். ஊர் சுற்றப் போனதாக, தேசாடனம் என்று ஆரம்பத்தில் இருந்த நம்பிக்கை சிறுக சிறுக அம்மாவுக்கும் உறவினருக்கும் இல்லாமல் போனது. ஒரு கட்டத்தில் அவர் கொல்லப்பட்டதாக, விபத்தில் இறந்ததாக நம்பத் தொடங்கிய போது, அலுவலகத்தில் அவர் காணாமல் போனவராக உறுதி செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் பிரத்யட்சமானார். அவர் நிலைமை மிக மோசமாக இருந்ததாக அம்மா போனில் அழைத்து மாமாவிடம் சொன்னாள். குடிப்பதை முழுக்க நிறுத்தி விட்டிருந்ததாகவும் தெரிவித்தாள். மாமாவுக்கு நம்பிக்கை வரவில்லை. என்னை திரும்ப ஊருக்கு அனுப்ப அவர் மிகவும் தயங்கினார். படிப்பு பாதிக்கப்படும் என்று வலியுறுத்தி சொன்னார். பிறகு ஊருக்கு திரும்ப சென்ற போது இரு விசயங்கள் அதிர்ச்சியளிப்பதாக இருந்தன.
அப்பா முன்னை விட அதிகமாய் குடிப்பவராக துன்புறுத்துபவராக மாறி இருந்தார். அலுவலகத்திலும் அவர் ஒரு மிதமான போதையுடன் இயங்குவதை அனுமதித்தார்கள். என்னை ஒரு வளர்ந்த ஆண் போல் அவர் நடத்தினார். கற்பனை செய்திருந்த வாத்சல்யமும் நெருக்கமும் சாத்தியப்படாது என்றும், அப்படி ஒருவேளை எங்கள் உறவு உருக்கமாக அமைந்தால் செயற்கையாக சங்கடமாக இருக்கும் என்று எனக்கு பட்டது, அவரும் அப்படி நினைத்தாரா என்று தெரியவில்லை. நாங்கள் சேர்ந்து குளத்துக்கு ஒரே துவர்த்து சொப்புக் கட்டியுடன் சென்றோம், என்னை லாம்பியில் பள்ளிக்கு கொண்டு விட்டார், இழவு, நிச்சயதார்த்தம், திருமணம் என எல்லா சடங்குகளுக்கும் கூடவே அழைத்து சென்றார், அல்லது பதிலாக அனுப்பினார். பன்னிரெண்டு வயதுக்கு மேல் நான் தெருப்பெண்களை நோட்டம் விடுவதை அவர் பொருட்படுத்தவே இல்லை. மழை பெய்து தணிந்த ஒரு மௌனமான மாலையில் நான் கட்டிலில் மல்லாந்து கிடந்தேன். வெறுமனே யோசித்தபடி, தூங்க முயன்றபடி. அப்போது அப்பா வந்து “இப்போது ஒரு பெண்ணை கட்டிப் பிடித்து கிடந்தால் கதகதப்பாக இதமாக இருக்கும் இல்லையாடே? என்றார். எத்தனை யோசித்தும் அவர் அக்கறையாகவா கேலி தொனியிலா கேட்டார் என்பது நினைவு வரவில்லை. இரண்டும் சாத்தியம் தான்.
பிறகு அப்பாவிடம் இருந்த கொஞ்ச நஞ்ச அணுக்கமும் விலகி வெறுக்கத் தொடங்கினேன். தொடர்ந்து மோதினோம். ஒருமுறை என் முகத்தில் கொதிக்கிற டீயை ஊற்றினார். அண்டை வீட்டாரும் தெருவும் பார்த்திருக்க வாசலில் இருந்து என்னை பிடித்து வெளித்தள்ளி கதவை சாத்தினார். பல மாதங்கள் நாங்கள் பேசிக் கொள்ளாமல் இருந்தது உண்டு. ஆனால் திடீரென்று எல்லாம் மறந்து என்னிடம் சாதாரணமாக பேச ஆரம்பிப்பார். எங்கள் உறவு மேலும் மேலும் முரடு தட்டிப் போனதற்கு இந்த மன்னிப்புகளோ, அரவணைப்புகளோ அற்ற இணைதல்கள் காரணம் என்று நினைத்தேன். பின்னர் சிதைக்கு தீ வைத்த போது அப்படி வெறுத்து மறுப்பதிலும் அலாதியான உரிமை கொண்டாடலும், பிரீதியும் இருந்ததாய் தோன்றியது. யாரும் இல்லாத பகல் வேளைகளில் சுடுகாட்டு சாம்பல் குவியல் பக்கமாய் குத்திட்டிருந்து சிந்திக்கையில் டீ மூஞ்சியில் பட்டு எரிந்த நினைவு புல்லரிக்க வைத்தது. அவர் என்னை அறைந்ததை, நிராகரித்ததை, திட்டியதை, மிகச்சிக்கனமாய் அன்பு காட்டிய காட்சிகளை நினைத்து நினைத்து சேகரித்துக் கொண்டேன்.

அக்காவுக்கு அப்பாவுடன் முரண்பாடுகள், தகராறுகள் வருவதுண்டு, ஆனால் அவள் அப்பாவை உள்ளார ஆதர்சித்தாள், அது அவருக்கும் தெரிந்திருந்தது. அவளுடைய அப்பா முழுமையானவராக இருந்தார். தொட்டிலில் தூங்க வைத்தவராக, சினிமாவுக்கு, ஹோட்டலுக்கு அழைத்துப் போனவராக, கொஞ்சி சீராட்டியவராக, பாடம் சொல்லித் தந்தவராக, பாதுகாத்தவராக இருந்தார். ஒவ்வொரு பள்ளி வகுப்பிலும் அப்பா வாங்கித் தந்த புத்தாடைகளை, விளையாட்டுப் பொருட்களை இப்போதும் சேமித்து வைத்திருக்கிறாள். வீட்டில் என் நினைவாக மிகச் சில பொருட்களே இருந்தன. ஆல்பங்களில் அப்பாவும் அக்காவும் அவளது தோழிகளுமே மீண்டும் மீண்டும் வந்தார்கள். அப்பாவை நியாயப்படுத்த வசதியாக அவள் நினைவுகள் இருந்தன. அப்பாவின் குடியை, ஒழுங்கீனங்கள் மற்றும் வன்முறையை நோக்கி எப்படி நகர்ந்தார் என்பதை தர்க்கபூர்வமாய் காலஒழுங்குபடி அவளால் விளக்க முடிந்தது; சில சந்தர்பங்கள் மாறி இருந்திருந்தால் அவர் வாழ்க்கை எப்படி எல்லாம் இருந்திருக்கும் என்பது பற்றிய கூட்டல் கழித்தல்களை படிப்படியாக வரைந்து காட்டினாள். அப்பா யார் என்பது பற்றி அவள் தெளிவாக தீர்மானமாக இருந்தாள், விளைவாக பிணத்தை எடுக்கும் வரை ஆர்ப்பரித்து அழுது புலம்பவும் ரெண்டே நாளில் இயல்பு நிலைக்கு திரும்புவது மட்டுமல்ல சிரித்து அரட்டை அடிக்கவும் அவளால் முடிந்தது. அவளுடைய அப்பா அத்தனை நேரடியாகவும் சிக்கலில்ல்லாமலும் இருந்தது தான் இதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும். அம்மா அக்காவின் இந்த பலவட்டறை நடவடிக்கையை கண்டித்தாள்; அவள் தனக்கு அம்மாவை போல நடிக்கவோ என்னைப் போல குழப்பிக்கவோ தெரியாது என்றாள். என் வரையில் இது உண்மை தான். பிணத்தருகே இரவெல்லாம் உலர்ந்த கண்களுடன் இருந்த எனக்கு ஒரு வார்த்தை கூட வெளிவர இல்லை. வெறித்தபடியே மறுநாள் மதியம் வரை இருந்தேன் இயல்பாக என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை.

அன்றிரவு போல் வேறெப்போதும் இருள் அத்தனை அடர்த்தியாய் கிட்டத்தட்ட பாசித்தாவரம் போன்ற உயிர்ப்புடன் இருந்ததில்லை. வீடெல்லாம் உறவினர்கள் நிறைந்திருந்தார்கள், தரைகளில், கிடைத்த கட்டில்களில் நெருக்கியபடி, வராந்தா மற்றும் அடுக்களை, சேமிப்பு அறைகளில் புழுக்கம் மறந்து அசந்து தூங்கிக் கிடந்தார்கள். குழந்தைகள் தூங்க மறுத்து சிணுங்கினர், சிலர் சத்தமில்லாமல் டீ.வி பார்த்தனர், அம்மாக்களிடம் அடி வாங்கி ஓலமிட்டனர், கட்டுப்படாமல் உடம்புகள் இடையே அரைகுறை ஆடைகளில் ஓடி தடுக்கியும் களைத்தும் விழுந்தனர். முன்பந்தல் நாற்காலியில் சில கிழவர்கள் நட்சத்திரங்களை பார்த்து ஒரே விசயங்களை அதிக சுவாரஸ்யமில்லாமல் திரும்ப திரும்ப பேசிக் கொண்டனர். மத்திய வயதினர் சிலர் தொப்பையை டீ பாயில் சாய்த்துக் கொண்டு சீட்டாடிக் கொண்டிருந்தனர். அவ்வப்போது நிறுத்தி விட்டு முட்டி அல்லது முழங்கால் சொறியும் வாக்கில் இறந்தவரை அல்லது பொதுவாக இறந்த காலத்தை பற்றி தீவிர பாவத்துடன் அவதானித்துக் கொண்டனர். சொந்தக்கார இளைஞர்கள் தண்ணியடிக்கவும், புகைக்கவும் தோப்பு, குளம் பக்கமாய் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். இத்தனை நடவடிக்கைகளுக்கு பிறகும் வீட்டுக்குள் ஒரு அசாத்திய அமைதி இருந்தது. குறிப்பாக கண்ணாடி பெட்டிக்குள் இருந்து அப்பா எழுந்திருக்க எத்தனிப்பதாக, புரள்வதாக, கை கால்களை உதறுவதாக தோன்றும் போது வீட்டில் வேறு எந்த உயிர்ப்பும் இருப்பதில்லை. இந்த அசைவுகளை நிறுத்தத்தான் பிணத்தை எரிக்கிறார்களோ என்று எனக்கு சில கணங்கள் தோன்றியது. எரிசிதையை கற்பித்தபோது ஒரு குரூரமான திருப்தியை ஏற்பட்டது. பெட்டியை நான் இருமுறை நெருங்கி எட்டிப் பார்த்த போதும் மாமா என்ன வேண்டும் என்றார். குளிர்மை அளவு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதாக சொன்னேன். தலையசைத்து திரும்பிக் கொண்டார்.
எங்கள் வீடு ஒரு பழைய பிராமணர் வீட்டை புனரமைத்து உருவாக்கியது. மரபான நவீன கட்டிடக் கலையின் அழகியலற்ற கலவை. மொஸைக் தரை இருக்கும், ஆனால் தேக்கு உத்தரம் மற்றும் யானைக் கால் தூண்களுடன் பழைய மோஸ்தரும் தெரியும், உள்ளே மழை பெய்தால் மடை வழி தண்ணீர் ஒழுகி  செல்லக் கூடிய அங்கணம் எனப்படும் ஒரு நடுவீட்டு தொட்டி இருந்தது. மாடியில் மூன்று அறைகள். அதற்கு மேல் மச்சு இருந்தது. ரெண்டு மாதங்களுக்கு முன்னால் அப்பா ஒருநாள் மச்சில் போய் ஒளிந்திருந்தார். அவர் மீண்டும் எங்கோ ஓடிப் போய் விட்டார் என்று ஊர் முழுக்க பரபரப்பாக கவலையுடன் தேடினோம். பிறகு மறுநாள் அவராக இறங்கி வந்து ஒன்றுமே நடக்காதது போல் டீ வாங்கி குடித்தார்.

வீட்டுக்குள் வெளிச்சம் அணைந்தும் அணையாமலும் கலவையாக தெரிந்தது; தூங்காதவர்களும், முனைபவர்களும், தவிப்பவர்களும், விழிப்பு நிலையில் இயங்குபவர்களும் சிலசமயம ஒருசேரவும், சிலபோது தனித்தனியாகவும் மூச்சு விட்டனர், இதெல்லாம் கேட்கும்படியாக நிலவியது அமைதி. அப்பாவின் ஐஸ்பெட்டி இருந்த முன்னறையில் நானும், மாமாவும், ஐயப்பன் சித்தப்பாவும் மட்டும் இருந்தோம். குழந்தைகள் கீச்சிட்டு கத்துவது கண்ணாடி டம்ளர் விழுந்து உடைவது போல் துல்லியமாக அவ்வப்போது கேட்டது. தாய்மார்கள் அவர்களை மெல்ல அதட்டி மெல்ல அறைந்து தூங்க வைக்க முயல்வதும் விசித்திரமாகவே பட்டது. நேர்த்தியான இடைவேளைகள் விட்டு அப்பாவின் ஒடுங்கின நெஞ்சுக் கூடு ஏறி இறங்கியது. காற்று இருக்கும் போது மூச்சு விடலாம் தானே என்று எனக்கு வினோதமாக தோன்றியது. அவரது உயிர்ப்பை பரிசோதிப்பதோ அல்லது பீதி கொள்வதோ அதை விட பொருத்தமற்றதாக இருந்திருக்கும். அவரை கழுத்து வரை வெள்ளைத் துணியால் கட்டியிருந்த விதம் என்னை சற்று துன்புறுத்தியது. “சேமிப்பறையில் வாழைக் குலையை உறை போட இப்படித்தான் சுற்றி சாக்கால் கட்டி வைப்போம்”. மாமா சட்டென்று திடுக்கிட்டார். என்னைப் சற்று நேரம் பார்த்து விட்டு “உள்ளே போய் படு என்றார். நான் அவரை இப்போதெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. பிணத்தை போல் மனிதனும் அனைத்தையும் புறக்கணிக்கும் நிலைக்கு சிலவேளை வந்து விடுகிறான்; பிறகு அதிலிருந்து நகர்ந்தும் விடுகிறான்.

மாமா பல்வேறு தொலைவு நிலைகளில் எரியும், பூச்சிகள் வட்டமிட்ட, விளக்குகளை கோபமாக பார்த்தார். ஒவ்வொரு விளக்கும் அதன் கீழ் சயனிக்கும் ஆளின் மனம் என்று நினைத்தேன். ஒரு அறையில் விளக்கை யாரோ அணைத்து அணைத்து இயக்குவதன் பிரதிபலிப்பு எதிர்சுவரில் கீழே உறங்குபவரின் உடல்களில் நடனமாடியது. இதைப் பார்த்த போதுதான் எனக்கு அப்பிடி தோன்றியது. மாமா திரும்பவும் கண்களை சுருக்கியபடி “எழுந்து தூங்கப் போ என்றார். என் பக்கமிருந்து வரும் வெளிச்சம் அவர் கண்களை கூச வைத்திருக்க வேண்டும். அவர் கண்கள் ஐஸ் பெட்டியை நோக்கி திரும்பி இருந்தன. எனக்கு அது வேடிக்கையாக தோன்றியது. தாடியை சொறிந்த படி அரைத் தூக்கத்தில் இருந்த சித்தப்பா சட்டென்று எழுந்து சித்தி தூங்கும் அறைக்கு சென்றார். மாமா அவரை விசித்திரமாக பார்த்தார். அப்பாவின் வாயமைப்பு மாறியபடி வந்தது. சாயந்தரம் பாதியில் நின்ற கேள்வியை கடித்தது போல் தெரிந்த உதடுகள் இப்போது சிறு புன்ன்கையை பெற்றிருந்தன. நானும் கவனமாய் புன்னகைத்தேன். அப்பாவின் முகம் மெல்ல மெல்ல விகசித்து வந்ததில் அவர் இளமையை திரும்பப் பெறுவதாய் பட்டது.

கூனன் தாத்தா ஓலை வேய்ந்த கழிப்பறையில் இருந்து கட்டை ஊன்றியபடி வெளிப்பட்டார். அவரது பழுத்த வேட்டி நிலவில் மெழுகுப் பளபளப்பு பெற்றிருந்தது. அவர் சுற்றுப் பாதையில் நடந்து வரும் போது வீட்டு சுவர் மீது யாரோ முட்டி அழைப்பதான ஓசை தொடர்ச்சியான அதிர்ந்தபடி கேட்டது. தாத்தா முன்வாசலை அடைந்து படிக்கட்டில் ஏறி அமர்ந்து கொண்டு அப்பாவின் ஐஸ்பெட்டியை ஒருமுறை பார்த்தார். கலங்கலான பார்வை. தாத்தாவின் முகத்தில் உள்ள கோடுகளில் அசைவில்லை. யானைச் செவிகள் கூர்மையாக விடைத்து நின்றன. நிலவொளி மரக்கிளைகள் வழி சல்லடையாகி முற்றத்தில் விழுந்து கொண்டிருந்தது; அந்த சன்னமான பின்னொளியில் அவரது யானைச் செவிகள் ஊடுருவப்பட்டது போன்று சிவப்பை பெற்றன. தலையின் முன்மயிர்களின் நுனிகள் மட்டும் ஒளிர்ந்தன. தாத்தாவின் உடல் எங்கும் உள்ள தடிமனான சுருக்கங்கள் அவரது அசைவுகளுக்கு ஒரு தனி உயிர்ப்பை அளித்தன. சுருங்கி சுருங்கி விரியும் ஒரு தாவரத்தை போல் அந்த வேளையில் தோன்றினார். வாசலை நோக்கி திரும்பின தாத்தா தலைகுனிந்த சூரியகாந்தி செடியைப் போல் சாலையை அல்லது நெடுகி நின்ற மரங்களை அல்லது அவற்றை கடந்து தோன்றின கட்டற்ற வானப் பரப்பை பார்த்தபடி இருந்தார். அவருக்கு அசைவதில் அதிகம் நம்பிக்கையோ விருப்பமோ இருப்பதாக தெரியவில்லை. எழுந்து சென்று நின்றேன். ஐஸ்பெட்டியின் சன்னமான உறுமல் அப்பாவின் இதய ஒலி என்றூ நினைத்துக் கொண்டேன். அல்லது ரத்த ஓட்டமாகவும் இருக்கலாம். அந்த பெரிய வீட்டின் கூறு கட்டப்பட்ட வெளிகளில் அப்பெட்டியின் அருகாமையில் உள்ள காலடி இடம் மட்டுமே எனக்கு உரிமையானது என்று அர்த்தமில்லாமல் தோன்றியது. அந்த இரவின் சூழலுக்கு, பிரத்தியேக வெளிச்சத்துக்கு, ஓசைகளுக்கு இப்படி புரியாமல் யோசிப்பது தான் உகந்ததாக இருந்தது. என் காலடிகள் கூனன் தாத்தாவுக்கு கேட்கவில்லை. நிலவு கடந்து விட அங்கு இருள் மீண்டும் அடர்ந்திருந்தது. தாத்தாவின் பளிச்சென்ற கண்கள் முன்னால் வெறித்தபடியே தலைக்கு மீதாக என்னையும் பார்ப்பதான பிரமை. அவை படிகத்தாலான வெளிச்சத்தில் அலைவுறும் இரு கோலி குண்டுகள். கூனன் தாத்தா எனது குழந்தைப் பருவத்திலும் இதே வயதில் தான் இருந்தார். அல்லது இப்போதும் அதே வயதில் தான் தங்கி இருக்கிறார். அக்காலத்தில் குழந்தைகளிடத்தில் தாத்தாவை பற்றிய ஒரு காத்திரமான நம்பிக்கை, பழங்கதை அல்லது ஜோக் ஒன்று இருந்தது. அவர் கூனி வளைந்து வளைந்து பூமிக்குள் புகுந்து பாதாள லோகம் போய் விடுவார் என்பதே அது. தாத்தாவை சபிக்கும் போது விசாலாட்சி பாட்டி இதை வலியுறுத்துவார். பாட்டியின் சிதைக்கு தீ மூட்டிய போது தாத்தா தரையை பார்த்தபடி இருந்தது நினைவில் வந்தது. இதற்கு பின் தாத்தா மேலும் ஒரு சுற்று கூனி தொலைவில் பார்த்தால் சற்றே தள்ளாட்டத்துடன் உருண்டு செல்லும் பந்தின் தோற்றம் தந்தார்.

சித்தியும் சித்தப்பாவும் இருந்த அறையின் கட்டில் ஒரு கொசுவடி-தும்மலுக்கே பூங்கா ஊஞ்சலைப் போல் உலோக ஒலி எழுப்பக் கூடியது. மாமா இருந்த இடத்தில் நிரங்கிக் கொண்டே இருந்தார். பிறகு சட்டென்று எழுந்து அறைக் கதவை தட்டி “ஐயப்பா என்றார் சத்தமாக. கட்டில் மௌனமானது. கட்டிலை கட்டுப்படுத்தியவாறு தூங்குவது அவர்களுக்கு சாத்தியம் என்று படவில்லை. ஒரு குழந்தை போல் அதட்டி வைக்கப்பட்ட கட்டில் மேல் எனக்கு பரிதாபம் வந்தது. கூனன் தாத்தாவும் மாமாவும் எதிரெதிர் திசைகளில் அமர்ந்து வீட்டை ஆகர்சித்து வலுவாக இழுத்தார்கள். அழுத்தத்தில் வீடு மேலும் மௌனமானது. ஐஸ்பெட்டியும், மின்விசிறியும், தூங்கும் தேகங்களின் நெஞ்சடிப்புகளும், தெருப்புழுதியை இழுத்துச் செல்லும் காற்றும், நிலவொளியை துரத்தியபடி நெடுநேரமாய் குலைக்கும் நாயும், போட்டியிட்டு அடிக்கடி ஊளையிடும் மற்றொரு இருப்பும் அந்த அழுத்தத்தில் தட்டையாகின. அடித்தள விரிசலின் ரேகைகள் உள்ளங்கால்கள் வழி ஓடின. கால் மாற்றி கால் மாற்றி வைத்து நான் மாடிப்படியை நெருங்கினேன்.

சிறுவயதில் எனக்கு குடல் பிடித்தமான உறுப்பாக இருந்தது. அதன் சிடுக்குகள், வளைவு நெளிவான பாதைகள் மற்றும் உள்பயணத்தின் புதிரும் தந்த கற்பனைக் கிளர்ச்சி என் ஆர்வத்தை தூண்டியபடியே இருக்கும். பிறந்த குழந்தைகளின் துருத்தின தொப்புள் பகுதியை தொட்டுப் பார்த்துக் கொள்வேன். அப்போது அக்குழந்தை என் விரல் வழி பயணிப்பதாக நினைப்பேன். ஒருமுறை மாமாவுக்கு ஹிரண்யா அறுவை சிகிச்சை நடந்தது; அவர் கட்டுடன் ஆஸ்பத்திரியின் வெள்ளை இரும்புக் கட்டிலில் கிடக்கையில் பக்கத்தில் இருந்து அவர் வயிற்றையே பார்த்துக் கொண்டிருந்தேன். மயக்கம் தெளிந்த போதெல்லாம் மாமா என்னை விரட்டினார். நான் காயமுற்ற குடலை உற்றுக் கேட்க முயல்வேன். எங்கள் வீட்டின் மிக உயிர்ப்பான பகுதியாக மாடிப் படியை நினைத்துக் கொள்வேன். மாடிப்படிதான் வீட்டின் குடல். அதன்படி அதற்கு இளம்ரோஜா பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. வீட்டின் மாடியும் அதற்கு மேலான மச்சு அறையும் எனக்கு அந்தரங்கமான கிளச்சியை அளிக்கக் கூடிய அறைகள். மச்சு அறையில் பெருச்சாளிகளும் வவ்வால்களும், என் பிறப்புக்கு முன்னரே பிறவிப்பயனை இழந்த சாயமும் தோற்றமும் தொலைத்து பரிணமித்த பொருட்கள் பலவும் சேர்ந்து வாழ்ந்தன. சிறுவனாக அங்கு சென்று பொழுது போக்குவேன். கோடை விடுமுறையில் சுத்தம் செய்து என் புத்தகங்களை அங்கு அடுக்கி பகல் வேளைகளில் வாசிப்பேன். அங்கு நேராக அமர முடியாது; அமர்ந்தால் சட்டென்று திரும்ப முடியாது; முதுகு வளைத்து முட்டியிட்டு தொழுகை செய்வது போல் இருக்க வேண்டும். காற்று வர கதவைத் திறந்தால் மட்டும் போதாது என்று சில ஓடுகளை கழற்றி வைத்திருந்தேன். அங்கிருந்து கைநீட்டி வானத்தில் துழாவுவேன்; ஒவ்வொரு பருவமும் வீட்டிலிருந்து மேலாக சில இஞ்சுகள் வளர்ந்திருப்பேன். கூரை அறையில் இருந்து தடபுடல் சத்தம் கேட்டால் அம்மா என்னையும் பெருச்சாளியையும் குழப்பிக் கொள்வாள். நான் எதிரில் எங்காவது இருப்பதை கவனிக்காமல் “சவம் இந்த பயல் கிடந்து என்ன பண்ணுறானோ என்று எரிச்சலுடன் சலித்துக் கொள்வாள். இப்படி பெருச்சாளிகளுக்கும் சிலவேளை அர்ச்சனை கிடைக்கும். இரவில் புழுக்கையிட்டு பழவாசனை கிளப்பும் ஒற்றை வவ்வால் ஒன்று பகலில் ஒருமுறை மச்சு அறையின் திறந்து ஓட்டு துவாரம் வழி இறங்கி தடதடத்தது; நான் வாசித்துக் கொண்டிருந்தேன்; முதலில் பதறி பின்னர் அது நிதானமானது. சிலசமயம் பெருச்சாளிகள் இருட்டு வாலை மூலைக்கு மூலை இழுத்தபடி ஓடும். பின்னர் பல வருடங்கள் கழித்து அப்பா அங்கு சாரத்தை விரித்துக் கொண்டு ஒருநாள் முழுக்க ரகசியமாக பதுங்கி தூங்கினார்; அல்லது ஏற்கனவே சொன்னது போல் காணாமல் போனார். அவர் படுத்த தடம் இன்னும் தூசுப் படிவத்தில் பதிந்துள்ளது; மச்சு அறைகளுக்கே உள்ள வினோத தன்மை இது.

அன்றைய இரவில் எனக்கு மச்சு அறைக்கு செல்லும் விருப்பமும், ஆழ்மன கட்டாயமும் ஏற்பட்டது. நினைவுகளால் உந்தப்பட்டு கூட அங்கு செல்ல தலைப்பட்டிருக்கலாம். இருளில் மாடிப்படி பக்க கிரில்லின் இளஞ்சிவப்பு இன்னும் தனித்து தெரிந்தது. மாடிக்கு போகும் படிகள் ஈரமாக இருந்தன. தண்ணீர் நுரையிட்டு ஓடும் சத்தம் மேலே செல்ல செல்ல அதிக ஓசையுடன் துல்லியமாக கேட்டது.. கால் வைத்ததும் படிகள் என்னை சுவீகரித்துக் கொண்டன. மேலே ஏற ஏற வீடு சில சத்தங்களை தணிக்கை செய்து விடுகிறது. உறங்குபவர்கள் தமக்குள் பேசிக் கொள்வது, முனகுவது, வார்த்தைகளை குமிழிகளாக மூக்கு வழி விடுவது தனித்து ஆழ்ந்து கேட்டது. கூனன் தாத்தா ஊன்று கட்டையால் தரையை தட்டுவது மேலேறி வந்தது. கீழே முன்னறையில் தூங்கிக் கொண்டிருந்தன கால்கள். கசிந்து வந்த வெளிச்சம் அவற்றை தவிர்த்தும் மீதாக ஊர்ந்தேறியும் விளையாடியது. அக்கால்கள் அசைவது அரவணைப்பில் தூங்கும் குழந்தையின் மொட்டைத் தலையை நினைவுபடுத்தியது. ஓய்வு கொள்ளும் அக்கால்கள் எந்நேரமும் வீரிட்டழலாம் என்று ஒரு சங்கடத்துடன் எனக்கு தோன்றியது. மெல்ல மெல்ல நடந்தேன். ரெட்டைத் தடிமனுள்ள மாடி வெளிக்கதவு. அதன் கொண்டியை தளர்த்தி கதவை இழுத்துத் திறந்தேன். காத்திருப்பு வரிசை போல் தயக்கமாக மெல்ல அது திறந்தது.
கதவைத் திறந்ததும் நிலவு பளிச்சென்று அறைந்தது; அல்லது நிலவு மொட்டைமாடியில் பட்டு சிதறி பல நூறு கிரணங்களாக திரும்பி என் மீது பாய்ந்ததாக இருக்கலாம். இப்படி ஒரு ஒளி வெள்ளத்தை பார்த்ததில்லை என்பதால் தரையில் கால் வைக்காமலே கிட்டத்தட்ட நிலைப்படியில் எம்பி நின்றேன். நான் அப்போது பூமியில் விளிம்பில் நின்று வானில் இறங்கி தயங்கி நிற்கும் மனிதன் என்று எண்ணிய போது தமாஷாக இருந்தது. உதட்டின் கீழ் பால்யத்தின் மென்மயிர்களுடன் மனம் ஒரு புறம் சிரித்தும் வேடிக்கை பார்த்தபடியும் தான் உள்ளது. அது விழித்துக் கொள்ளும் போது எல்லாமே வேடிக்கையாகி விடுகிறது. நான் அப்போது மாடியின் பரப்பை கவனிக்கவில்லை, அபரித ஒளிப் பாய்ச்சலின் ஆட்கொள்ளலில் மனம் வானிலே நிலைத்து  உலவியது. போகப் போக கண்களால் வாங்கி தணிக்கை செய்ய முடியாத படி தகித்தது அதன் ஜுவலிப்பு. மனிதனின் கண்கள் பழகி மட்டுப்படும் முன் ஆதியில் ஒளி இப்படித்தான் அதன் முழுமையில், எண்ணற்ற சிதறிய அலகுகளில் இருந்திருக்க வேண்டும். ஒளி காற்றைப் போல வீசியது, சுற்றிலும் நடுங்கும் மரங்களை, கட்டிடங்களை குறுக்குவெட்டாய் அரிந்து தள்ளியது, புயலாய் ஓலமிட்டது, நுண் துணுக்குகளாய் என் மீது கொட்டியது. மெல்ல மெல்ல ஒளி பகல் சூரியனைப் போல் சாய்ந்தது, மங்கி பூமி மேல் கவிந்தது. நான் ஒளியை உள்வாங்கியிருக்க வேண்டும் என்று அசட்டுத்தனமாய் எண்ணினேன். ஒளிக்கு அஸ்தமனம் உண்டு என்று நம்ப நிச்சயமாய் தோன்றவில்லை. அதனால் வேறெப்படி என்னால் இதை நியாயமாக விளக்க முடியும்.
அப்போது நான் மொட்டை மாடியில் அலைபரப்பி தொடர்ந்து சிலிர்த்த நீர்ப்பரப்பை கவனித்தேன். இறங்கி நடந்தேன். இது சாத்தியமே இல்லை. இத்தனை நீர் இங்கு வந்திருக்க, தேங்கி அலையடிக்க, ஒரு ஏரியைப் போல் ஆழத் தோற்றம் அளிக்க எப்படி முடியும்? நடக்க நடக்க தரை சிலசமயம் தட்டுப்படுவதும் பின் மறைவதுமாக இருந்தது. முழங்காலில் இருந்து முட்டி வரை மாறி மாறி மூழ்கி வந்தேன். நான் மையம் நோக்கி நடந்தேன். இவ்வளவு வெள்ளத்தின் தோற்றுவாயை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே நோக்கம். மையம் நெருங்கியதும் நீர்ப்பரப்பு தெளிவாக அலையற்று ஆழம் குறைந்து தெரிந்தது. பெரிய தொட்டியின் பின்னால் மறைந்து கொண்டேன். அங்கிருந்து பார்க்க பெரிய பெரிய அலைகள் வட்டமடித்து புதிய சிற்றலைகளை இணைத்துக் கொண்டு தொட்டி நோக்கி உள்-அணைவது தெரிந்தது. அவை விரியும் சுருள் வாட்களாய் கண்களை தாக்கின. கண்களை தொடர்ந்து மூடி சுதாரித்து பார்க்க வேண்டி இருந்தது. தொலைவில் தோற்றங்கள் மயங்கி வேறாய் அல்லது விரூபமாய் தெரிந்தன. சுவர்கள் வெளியே மடிந்து மடிந்து நீருக்கு பின்வாங்கின, குறுகி நீண்டன. சுவர்களுக்கு வெகுஅருகாமையில் கோடுகளால் ஆன அவ்வுருவம் மேல்ல அசைந்தது, வாலால் துழாவியபடி மேல் எழும்பியது.புலி மூடுபனியில் என் மூச்சு கோடிழுத்தது. புலியைப் பார்த்ததும் அச்சத்தை விட அதன் மாபெரும் பௌதிக இருப்பும், கற்பனைக்கெட்டாத வலிமையும் பெரும் வியப்பையே தந்தன. புலியின் நிதானமும், காலத்தை இறுக்கமாய் கைப்பற்றி வைத்திருப்பதான அதன் நம்பிக்கையும் எண்ணங்களை ஆக்கிரமித்தன. அதன் எதிரே ஒரு பிரதிபிம்பம் போல் மற்றொன்று. அந்த ஜோடிப் புலிகள் தங்கள் அசைவுகளில் ஒன்றையொன்று போலச் செய்கின்றன. அவற்றுக்கு வேறெந்த நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. முன்னும் பின்னும் வெவ்வேறு திசைகளிலுமாய் அவை திரும்பியும் காலடிகள் வைத்தும் எதையோ உறுதி செய்கின்றன. அந்த மொட்டை மாடிக்குள் அவை ஏன் வந்தன, எப்படி நுழைந்தன மற்றும் வெளியேறப் போகின்றன போன்ற கேள்விகளுக்கு பொருளில்லை. வெகுநேரம் ஒன்றை ஒன்று பார்த்தபடி நின்றன. வால்கள் மட்டும் விடுபட்டு நிழல்கள் போல் தனி மொழி ஒன்றில் உரையாடின. அவை பக்கம் பக்கமாய் நின்ற போது எனக்கு தொண்டைக்குள் எதுவோ வழுவியது, நீருக்குள் வேர்த்து உடல் உதறியது.
என்னை முழுதும் மறைக்க தொடர்ந்து முயன்றேன், என் தேகம் தொட்டியின் பின் அடங்காமல் ஒவ்வொரு அங்கமாய் வெளிநீட்டியது. கைகளை மறைத்தால் கால்கள் வெளியே அளைந்தன. முக்குளித்தால் கைகள் தொட்டிக்கு மேலே தாறுமாறாய் துடித்தன. ஒளிய முயன்ற அக்கணம் முதல் புலிகள் என்னை விடாமல் பார்வையால் தொடர்ந்தன. என் உடல் வழி ஓராயிரம் விரல்கள் நீண்டு புலிகளின் கோடுகளை குறுகுறுப்பாய் தீண்டின. புலிகள் தங்கள் உடலால் என்னை விடாமல் பார்த்தன. ஒரு வேட்டையாடியின் பிரம்மாண்ட தேகம் கொல்வதற்கு மட்டும் அல்ல என்று நினைத்துக் கொண்டேன். பிறகு சிறுக சிறுக மாடிப் பரப்பு சிறுகியது, நீர் பொங்கி சீறி அடித்தது, நீந்தி வாசல் நோக்கி பாய்ந்த என்னை வளைத்து வளைத்து அறைந்தது. புலிகள் அனாயசமாக நகர்ந்து இரு திசைகளிலாய் என்னை வளைத்துக் கொண்டன. “அப்பா கீழே தூங்கிக் கொண்டிருக்கிறார், அவரை எப்படி எழுப்புவது, கூவலாமா அல்லது கதறி அழலாமா, கேட்குமா, கேட்டால் வருவார்களா? அப்பாவால் அப்போது என்னை காப்பாற்ற முடியும் என்று உறுதியாக பட்டது, அப்பா பயந்து போய் என்னிடம் அங்கு வராமல் கூட இருக்கலாம், ஆனால் ஒரே நம்பிக்கையாக அவர் இருந்தார். மாடிச் சுவர்களில் அலைகள் அறைந்ததில் அவை பனிப் பாளங்களாய் ஊடுருவி மினுங்கின. தடித்த கருங்கோடுகளில் சுவர்களில் நுழைந்து நெளிந்து கரைந்தன. மாடி வீட்டுக்கு மேலாக ஓட்டுக் கூரையில் புலி அமர்ந்திருப்பதாக தெரிய நான் அப்பாவை அழைத்து கதறினேன். தண்ணீரில் நீந்துவதை விட ஓடுவது எளிதாக இருந்தது, நீர்ப்பரப்பு விலகி வழி விட்டது. பின்னால் தண்ணீரை அடித்து துழாவியவாறு கை அறைதல்களின் அதிர்வும், அச்சமூட்டும் உறுமலும் தொடர்ந்து என்னை தாண்டி எங்கும் நிறைந்தன. ஒரு கணம் தண்ணீர்ப் பரப்பு முழுவதும் ஒரு சயனித்த புலியின் நெளியும் உடலாக தெரிந்தது. அப்பாவும் கூட அம்மாவும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். யாரும் என் விளிகளை, வயிற்றில் இருந்து கிளம்பிய பெருங்குரலை கேட்டிருக்க வாய்ப்பில்லை. நான் சுவர்களில் பற்றி ஏறி திறந்த ஓடுகள் வழி மச்சு அறைக்குள் நுழைய முயன்றேன். ஒரு கை தூக்கி உள்ளே இழுத்து விட்டது அல்லது நானாகவே ஏறிக் கொண்டேன்.

நான் நிமிர்ந்து உட்கார்ந்த போது அன்று மிகச் சீக்கிரமாகவே காலை வெயில் வெறித்திருந்தது தெரிந்தது. கூனன் தாத்தா குளித்த வெள்ளை வேட்டி துண்டுடன் இடம் மாறாமல் அமர்ந்து மூக்குப் பொடி போட்டு துடைத்து துண்டை மேலும் பல இடங்களில் கறையாக்கிக் கொண்டிருந்தார்; அவர் வெயிலில் சுடப்பட்டு அதையே பிரதிபலித்துக் கொண்டிருந்தார். உலோகம் கூட ஆவியாகி விடும் வெப்பம் அந்த விடிகாலை வெயிலில் வெளியேறியது. தாத்தா மேல் நோக்கி ஆனால் லாவகமாக வெற்றிலை சாறை புளிச்சென்று துப்பினார், வெயிலின் குருதி போல் அது மடிந்து விழுந்தது. நான் உட்கார்ந்து களைப்பில் தள்ளாடிக் கொண்டிருந்தேன். அப்பாவிடம் என்ன ஒரு தேஜஸ். அத்தை என் அருகில் வந்தாள். தன் வாதக் காலை பாதியும் மற்றக் காலை முழுக்கவும் மடித்து சப்பணம் கோட்டி அமர்ந்தாள். என்னிடம் எதிர்பாராமல் சொன்னாள், “அப்பாவை போலவே சிரிக்க வருகிறது உனக்கு.
 தாமரையில் வெளிவந்த சிறுகதை
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates