Tuesday 29 June 2010

திசைகளற்ற வீடு



வாசலின் குறுக்காய் தூங்க பிரியப்படும் பூனை

கதவுகளை மூடப் போவதாய் மிரட்டினாலோ

பலம் பிரயோகித்தாலோ

அன்றி

இரு திசைகளில் ஒன்றை

தேர்ந்திட விரும்புவதில்லை



பீரோவுக்குள் இருந்தால் வாலும்

அலமாரிக்கு வெளியே காலும்

ஜன்னல் வழி வானத்துக்கு முகமும்

தரும்


பூனை என்றோ

ஒரே பெயராலோ

அழைக்கப்பட விரும்பாத அது

வித வித மாற்றுப்பெயர்களை விரைவில் வெறுத்து

முதலில் அழைக்கப்பட்டதை இறுதியாய் தேர்வு செய்கிறது


இரண்டு வித உணவுகளில்

முதலில் தந்த உணவை கடைசியிலும்

கடைசி உணவை முதலிலும்

உண்ண முனைகிறது


செய்தித் தாள் மேல் படுத்து

டி.வியை வெறிக்கும் அது

சானல்கள் இரைச்சலுடன் மாற்றப்படும் போது

மும்முரமாகிறது


ஒருநாள்

மூடப்படாத ஜன்னல்கள் கொண்ட

மாபெரும் அறை ஒன்றினுள்

தாவி இறங்கி

வாசலை தேடியது

அது வெட்டவெளி என்பதை உணராமல்
Read More

Saturday 26 June 2010

வீட்டுக்குள் வரப் பிடிக்காத பூனை


கிளர்த்திய தூசுகளாய்


எங்கும் அலைந்து திரியும் பூனை


சில நேரங்களில் கேட்டும் கேட்காத மாதிரி பார்த்து

பல நேரங்களில் பார்த்தபடி உதாசீனித்து



என் கவனம் கிடைக்காத வேளைகளில்

வேண்டுதல், கெஞ்சல், தேம்பல், கோபம், சுயவிவாதம், நியாய விசாரணை என

ஒவ்வொரு தொனியிலாய் முடிவற்ற அழைப்புகள் செய்து

யாருக்கும் புரியாத செல்ல விசாரிப்புகளுக்கு மட்டும்

அரைத்தூக்கத்தில் ங்...ம் என முனகி

சில வரிகளில் அடங்கும் பூனை வாழ்வு


தூக்கம், உணவு தவிர்த்த

தேவை:


விளையாட்டுக்கள்

தொந்தரவற்ற இடங்கள்

அடையாத தொலைவுகளை நோட்டமிட உயரங்கள்


வேறு புகார்கள் இல்லை


லோசன் ஊற்றி துடைத்து

நுண்ணியிர்கள் வெளியேற்றி சுத்தம் செய்த நாளொன்றில்

வீட்டுக்குள் வரமறுத்தது

பூனை
Read More

Thursday 24 June 2010

சிலந்தி

காலணி பளபளப்பு


தேய்க்க மறந்த சுருக்கங்கள்

சில பல வைட்டமின் நரைமயிர்கள்

தயாரித்த வார்த்தைகளை நினைவூட்டியபடி

வேலைக்காய்

வாசலில்


சில நொடிகள் விறைத்து நின்று

அசைக்கப்பட்டு

நகர்த்தப்பட்டு

கவனித்து

கவனிக்கப்பட்டு

பேசி

கேட்டு

'வேண்டுமென்றால் கூப்பிடுவோம்' என

வெளித் தள்ளப்பட்டு


மற்றொரு

மேன்சன்

அரைகுறைக் காலை

குளியலறை

இருள்

சிதறும் நீர்


சுவர்ச் சிலந்தி



ள்

ளி

ப்

போ

ய்

அமர்ந்தது

எந்த நொடியில் -- தெரியவில்லை
Read More

Tuesday 22 June 2010

பள்ளிச்சாலை: குறும்பட விமர்சனம்


படத்தொகுப்பு: அன்பழகன்


ஒளிப்பதிவு: முத்து

கதை, திரைக்கதை மற்றும் இயக்கம்: செல்வகணேஷ்



”பள்ளிச்சாலை” குழந்தைகளின் களங்கமற்ற உலகை எதார்த்தமாக, ஏறத்தாழ அவர்களது மொழியிலேயே சொல்லி உள்ள படம். படத்தின் கதைக்களன் சற்று வினோதமானது. ஆரம்ப, இறுதிக் காட்சிகளின் சில வினாடிகளை மட்டும் பார்ப்பவர்களை இதை ஒரு பொதிகை டீ.வி வகையறா செய்திப்படம் என்று கருதி விடக் கூடும்.
சாலையில் மஞ்சள் விளக்கு எரிந்தால் தயங்கவும், சிவப்பு விளக்கு எரிந்தால் நிற்கவும் என்பது போன்ற விதிகளை பிரச்சாரம் செய்வது தான் இப்படத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கமாக உள்ளது. ஆனால் முயலுடனான ஓட்டப்பந்தயத்தில் ஆமை செய்தது போல் இயக்குநர் செல்வகணேஷ் போக்குவரத்து மேடையில் இருந்து முதல் காட்சி ஆரம்பித்த சில நொடிகளிலேயே இறங்கி குழந்தைகளோடு அவர்களது கேலி, விளையாட்டு, மோதல், பிணக்கு, இணக்கம், பரஸ்பர புரிதல் ஆகிய கட்டற்ற வெளிப்பாடுகளோடு ஐக்கியமாகி விடுகிறார்.



குட்டிப்பெண் இந்திராவின் கோழி சுசீலாவுக்கு உடல்நிலை கெட அவள் மிகுந்த துயரமுற்று அழுகிறாள். தோழிகளும் தோழர்களுமாய் ஒரு குட்டிப் படை கோழி டாக்டரான மற்றொரு சிறுவனை தேடிக் கிளம்புகிறது. அவன் கொல்லையில் வெளிக்கு போய் கொண்டிருக்கிறான். “டாக்டரை இப்போ பாக்க முடியாது அப்புறமா வாங்க” என்ற டாக்டரின் நண்பன் கும்பலை விலக்க முயன்று தோற்றுப் போகிறான். டாக்டர் பாதியில் விட்டு விட்டு கழுவாமல் கொள்ளாமல் சைக்கிளில் ஏறிக் கிளம்புகிறான். சைக்கிளில் நின்றபடியே ஓட்டுகிறான். இதற்கு ஒரு சிறுவன் தீவிரமான முகத்துடன் காரணம் அளிக்கிறான் “உக்காந்தா ஒட்டிக்கிடும் இல்ல”. இக்காட்சியில் தெரியும் உற்சாகமான நகைச்சுவை முற்றிலும் குழந்தைகளின் மனநிலையில் தோன்றி, விமர்சன, ஒழுக்க விகல்பங்களற்று வெளிப்படுவது. தமிழின் பொதுவான குழந்தைப் பட நகைச்சுவை வளர்ந்தவர்களின் அபிப்பிராயங்கள் மற்றும் நிலைப்பாடுகள் குழந்தைமையின் ஒட்டுமீசை ஏந்தி வருவது மட்டும் தான்.



ஒரு ஆவணப்பட பாணியில் ஒளிப்பதிவு செயல்படுகிறது. இப்படத்தின் சிறந்த காட்சிகள் இவ்வாறு நாடகீய அத்துமீறல்கற்று சாமான்ய வாழ்க்கை பதிவாகுபவை தாம். உதாரணமாக முதல் காட்சியில் சிறுமி இந்திரா வாசல் வழியில் நின்று சீருடை அணிய தண்ணீர் குடம் சுமந்து வரும் அவள் அம்மா அலட்டாமல் அவளை அனிச்சையாக சற்று தள்ளி விட்டு கடந்து செல்கிறாள். பிற்பாடு குழந்தைகள் விளையாடும், கல்வீசி மோதிக் கொள்ளும் காட்சிகளும் ஒருவர் கூட படக் கருவியை பார்ப்பதில்லை. இவ்வாறு படம் முழுக்க பிரக்ஞையின் ஊடுருவல்கள் இல்லாமல் குழந்தைகளை நடிக்க வைத்திருப்பதற்காக இயக்குநர் செல்வகணேஷை பாராட்ட வேண்டும். குழந்தைகள் குழந்தைகளாகவே வாழும் மிக அரிய தமிழ்ப்படங்களில் “பள்ளிச்சாலையும்” ஒன்று.
Read More

Monday 21 June 2010

தாகம் – குறும்பட விமர்சனம்

தமிழ் ஸ்டுடியோ இணைய இதழில் நான் எழுதி வரும் குறும்பட விமர்சன தொடரில் இவ்வாரம் ’தாகம்”

எழுத்து, இயக்கம்: மா.யோகநாதன்


இசை: பா.சதீஷ்

படத்தொகுப்பு: பா.பிரமோத்

ஒளிப்பதிவு: சீ.அரவிந்த்குமார்




”தாகம்” ஒரு தேர்தல் பிரச்சார மைக்கை விட சத்தமான படம். மரம் வெட்டுதல் போன்ற இயற்கை அழிப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இயற்கை வளங்களை, குறிப்பாக நீர்வளத்தை, கடுமையாக பாதிக்கும் என்று எச்சரிப்பதே இப்படத்தின் இயக்குநர் மா.யோகநாதனின் உத்தேசம். இந்த பரப்புரையில் இயக்குநர் இரு தவறுகள் செய்கிறார்.
சூழலியல் பிரச்சனை பன்முகத்தன்மை கொண்டது மற்றும் சிக்கலானது. உதாரணமாக, இந்த வருட கோடையில் வெப்பம் அதிகம் ஆனதற்கான காரணங்களில் அப்காகினிஸ்தான் போர் வரை அடக்கம். இயக்குநர் உலக வெப்பமயமாதலை ஒரு விவசாயி நுண்பேசி, கார், வீடு வாங்கி, சட்டை பேண்ட் அணிந்து தலை சிலுப்புவதற்காக பேராசைப்பட்டு சில மரங்களை வெட்டி விற்கும் பாவச்செயலின் விளைவாக சுருக்கி விடுகிறார். இப்படியான பாமர நம்பிக்கையை பரப்புவதற்காக கணிசமான பணம் மற்றும் மனித ஆற்றல் விரயமாக்கியுள்ள மா.யோகநாதன் அதற்கு பதில் சில மரக்கன்றுகளை நட்டு திருப்தி உற்றிருக்கலாம். அடுத்து சினிமாவில் அரைப்பக்க வசனம் கடத்தும் சேதியை ஒரு அரைநொடி நேர காட்சியால் மேலும் அழுத்தமாய் சொல்ல முடியும். சினிமாவின் குறிப்பிடத்தக்க சிறப்பே காட்சிகளின் மூலம் மொழியைக் கடந்து பார்வையாள மனதுடன் உரையாட முடிவது தான். ஆனால் மா.யோகநாதன் சினிமா மொழியை புறக்கணித்து வசனங்களின் சிலுவையில் ஏறிக் கொள்கிறார். உதாரணமாக முதல் காட்சியில் புயலடித்து மரம் சாய்ந்துள்ளதை நாயகனான அவினாசி கவனிக்கிறார். புயலின் பாதிப்பை காட்ட இலை தழைகளும், குப்பை பொருட்களும் சிதறிக் கிடக்கும் ஒரு காட்சி போதும். ஆனால் அவினாசியை “நேத்து புயலடிச்சிருக்கு போலே” என்று குளோசப்பில் சொல்ல வைக்கிறார் இயக்குனர். நல்லவேளை அவினாசிக்கு கோபமோ சிரிப்போ வருவது போல் காட்சியில்லை. இருந்தால் “ஆஹா எனக்கு கோபம்/சிர்ப்பு வருது போல” என்று சொல்ல செய்திருப்பார். அவினாசி புயலில் விழுந்த மரத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு தோட்டத்து மரமாக வெட்டி விற்கிறார். இப்படி அவர் பணத்தாசையால் பீடிக்கப்பட்டு இயற்கையை அழிப்பதை சொல்லவும் இயக்குநர் நிறைய காட்சிகளை வீணடிக்கிறார். இறுதியில் செல்லமுத்து என்ற கோமணதாரி ஒரு சொம்பு தண்ணீரில் குளிப்பதை காட்டி ஊரில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதை விளக்குகிறார். பின்னரும் திருப்தி அடையாமல் அவினாசி சூடாகி விட்ட தன் காருக்குள் ஊற்ற தண்ணீர் தேடி பொட்டல் வெளி எல்லாம் அலைந்து தளர்ந்து வீழ்ந்த பறவையை போல் மண்ணில் கிடப்பதை டாப் ஆங்கிளில் காட்டி முடிக்கிறார். அவிநாசி, அவரது தாய் முதல் சொம்பு நீரில் குளிக்கும் செல்லமுத்து வரை அனைவரும் படுமோசமாக நடித்திருந்தாலும் நம்மால் மன்னிக்க முடியாதது படத்தொகுப்பாளர் பா.பிரமோத்தை தான். ஓட்டைக் குடத்தால் மொண்டு மொண்டு ஊற்றினால் தாகம் எப்படி தணியும்
Read More

Thursday 17 June 2010

சளி உடம்புக்கு நல்லது

சளி தொண்டை வலி நிவாரணத்துக்காக டாக்டர் அறைக்குள் நுழைந்த போது அவர் மடித்து வைத்த நாளிதழ் பக்கங்களை ஓரமாய் திறந்து அவசரமாக நுணுகி பார்த்துக் கொண்டிருந்தார். என் சளி தொந்தரவுகளை திரும்பத் திரும்ப சொன்னதை பொறுமையாக கேட்டவர் இரட்டிப்பு வேகத்தில் மருந்து பரிந்துரையை எழுதினார். “ஒரு வருடமாய் சளியே இல்லை டாக்டர், ஆனால் இந்த ஒரு மாதமாக திரும்பத் திரும்ப ஜலதோசம் பிடித்துக் கொள்கிறது”.


“இல்லை அப்படி வராமல் இருந்தால் தான் நீங்கள் கவலைப் பட வேண்டும். ஒரு வருடம் சளி, ஜுரமே வராமல் இருந்தால் தான் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம்”, என்றார் டாக்டர்.

ஜுரம் வந்தது போல் ஒரு ஜில்லிடல் உடலில் பரவியது. தொடர்ந்தார்,  “இதோ பாருங்க, சளி வந்தா உங்கள் தடுப்பு சக்தி புதுப்பிக்கப்பட்டு வலுப்படும். உங்கள் உடல்நலம் அப்போது தான் மேம்படும்”. அவர் பார்வை பத்திரிகை பக்கம் சென்றது. “ஒரு நாட்டுல எந்த பிரச்சனையும் இல்லேண்ணு வச்சுக்குங்க அது நாட்டோட வளர்ச்சிக்கு கேடு. அதே மாதிரி ...”
வீட்டுக்கு வரும் வரை தலைவலி பிடித்துக் கொண்டது. ஒரு பரிணாமக் கோட்பாட்டாளர்  எழுதியது நினைவு வந்தது. ஒரு தீவு. இயற்கை வளங்கள் அதிகப்படியாக உள்ள பிரதேசம். அங்கு வாழும் பழங்குடிகளுக்கு சவாலாக புலி, சிங்கம் போன்ற வேட்டை மிருகங்களுக்கும் இல்லை. ரொம்ப ரம்மியமான அமைதியான தீவு. பல தலைமுறைகளாக அந்த மனிதக் குழு அங்கு பிற மனிதக் குழுக்களின் தொடர்பின்றி சௌகர்யமாக வாழ்ந்து வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு பிறகு அறிவியலாளர்கள் இந்த தனிமைத் திவு மனிதர்களை கண்டடைகிறார்கள். பக்கத்து வனங்களின் பழங்குடிகளுடன் ஒப்பிடுகையில்  மிகவும் குள்ளர்களாக இருந்தார்கள் இவர்கள். தலைமுறை தலைமுறையாக சவாலற்ற வாழ்வு அவர்களை குறுக்கி விட்டது. பிரச்சனைகளற்ற சூழல் அவர்களை குள்ளர்களாக்கி விட்டது. கண்ணீரற்ற வாழ்க்கை கசப்பானது.
Read More

Wednesday 16 June 2010

வடக்குமாசி வீதி: பழுக்குகளின் உலகமும் துப்புவாளையும்

தாமரை இதழில் வலைப்பூக்களை அறிமுகப்படுத்தி நான் எழுதி வரும் தொடரில் இம்மாதம் வடக்குமாசி வீதி

 
ஒவ்வொரு ஊரிலும் அதன் பிரதான கலாச்சார மற்றும் உளவியல் அம்சங்களை வெளிப்படுத்தும் நபர்கள் இருப்பார்கள். பிரமுகர்களை சொல்ல வில்லை. இவர்கள் பெரும்பாலும் உதிரிகளே. உலோபிகள், சோம்பேறிகள், வன்முறையாளர்கள், குடிகாரர்கள், திருடர்கள், அடையாள வெளிப்பாட்டிற்காக கலை, விளையாட்டு போன்றவற்றில் ஒரு சில்லறை அளவில் ஈடுபட்டு வருபவர்கள் ... இப்படி. ஒரு வங்கி குமாஸ்தா அல்லது விவசாயியை விட ஊரில் அதிக பிரபலமானவர்களாக இவர்கள் இருப்பர். அதிகமும் வட்டப் பெயர்களால் அறியப்படுவார்கள். காலப்போக்கில் சிலரது நிஜப்பெயர் மறந்து அடையாளப்பெயர் நிலைக்கும். உதாரணமாக எங்களூரில் சிலர் எவரஸ்டு, சோப்பு என்றெல்லாம் அறியப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் ஊரின் பல்வேறு மித்துகளில் இவர்களின் கதைகளும் கலந்து விடும். இந்த கதைகள் பலநூறு தடவை வெவ்வேறு சந்தர்பங்களில் பேசப்பட்டு தொடர்ந்து வண்ணம் ஏற்றப்படும். இலக்கியத்தில் ஒரு ஊர் புனையப்படும் போது நிஜவரலாற்றை விட இத்தகைய வினோத உதிரி மனிதர்களே முக்கியமான இடம் பெறுவர். ஜேம்ஸ் ஜாய்ஸில் இருந்து குமார செல்வா வரை சொந்த ஊர் மனிதர்களை புனையும் போது இந்த மித்துகளின் புராதன கல்லறையில் இருந்தே தட்டி எழுப்புகிறார்கள். இணையத்தில் கட்டியக்காரன் என்ற புனைப்பெயரில் எழுதும் மதுரைக்காரர் ஒருவரின் வலைப்பூவே வடக்குமாசி வீதி. முகவரி http://sangam.wordpress.com. இது அந்த மதுரைத் தெருவின் வினோத மனிதர்களைப் பற்றிய பதிவுகள், ஊரின் உளவியல் மீதான பகடிகள் ஆகியவற்றை கொண்ட ஒரு வித்தியாசமான இணையதளம். வடக்குமாசி வீதியின் அலாதியான சித்திரங்களே இந்த வலைப்பூவுக்கு தமிழ் இணைய உலகில் ஒரு தனித்துவமான இடம் தருகிறது. கட்டியக்காரன் 2006 ஆகஸ்டில் இருந்து நாலு வருடங்களாக வலைப்பூவை நடத்தி வருகிறார். மாதத்திற்கு சில பதிவுகள் என்று மொத்தம் எழுபது கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதியுள்ளார். பதிவுலகிற்கு இந்த எண்ணிக்கை குறைவுதான். இணையதளத்தில் தன்னைப் பற்றின விபரங்களை இவர் தெரிவிக்க இல்லை என்றாலும் ஊடகத்தில், குறிப்பாக பத்திரிகையில், இயங்குபவர் என்ற குறிப்பு அவரது அக்கறைகளில் தெரிகிறது. சமூகம், சினிமா, அரசியல் என்று வேறுபட்ட தளங்களில் இயங்கினாலும் கட்டியக்காரனின் பிரதான திறமை மற்றும் இலக்கு அங்கதம் தான். நகைச்சுவையை பொறுத்த மட்டில் நிகழ்த்து கலையில் போன்றே எழுத்துலகிலும் டைமிங் முக்கியமானது. முரண்படும் அல்லது பொருத்தமற்ற தகவல்களை குறுவாக்கியங்களில் இணைப்பது டைமிங்குக்கான ஒரு நல்ல உத்தி. செல்வம் குடித்து விட்டு கலாட்டா செய்வதை ரசிக்க நண்பர்கள் அவருடன் கூட்டம் சேருவார்கள் என்பதை கட்டியக்காரன் எப்படி வாக்கியப்படுத்தி மெல்லிய நகைச்சுவையை ஏற்படுத்துகிறார் பாருங்கள்:

அடிக்கடி அடிதடியில் ஈடுபடுபவர்களுக்கு வடக்கு மாசி வீதியில் ரசிகர்கள் உண்டு. என் நண்பன் செல்வம் அப்படி ஒரு டைப். குடித்துவிட்டால் யாருடனாவது ஏதாவது பேசி வம்பிழுப்பான் என்பதால் அவனுடன் சேர்ந்து குடிக்க கூட்டம் அள்ளும்..

இதைப் போலவே சற்றும் எதிர்பாராத தகவல் ஒன்றை அப்பாவித்தனமாய் சொல்வது மற்றொரு உத்தி. வடக்குமாசி வீதியின் அழுக்கு பேரீச்சம்பழ வண்டிகளை பற்றின பதிவை இப்படி ஆரம்பிக்கிறார்:

மதுரையில் தள்ளுவண்டியில் வைத்து விற்கப்படும் மற்றொரு தின்பண்டம் பேரீச்சம்பழம். ஒரு அகலமான கோபுரம் போல, மிகுந்த பளபளப்புடன் வண்டிகளில் இவை குவித்து வைக்கப்பட்டிருக்கும். இந்தக் கோபுரத்தைப் பார்க்கும் வெளியூர்காரர்கள் (பெரும்பாலும் ஐயப்ப சாமிகள்) இதை வாங்காமல் தப்பிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு..
பிறகு “எல்லா ஐயப்ப சாமிகளும் ஏமாளிகள் அல்ல என்கிறார். ஏன்? அடுத்த வாக்கியத்திலேயே “சில உஷாரான சாமிகள் பளபளப்பான பேரீச்சம்பழ கோபுரத்திலிருந்து சில பழங்களை உதிர்த்து எடுத்து, சாப்பிட்டுப் பார்த்துவிட்டு, நன்றாக இருக்கிறதென்று தலையாட்டிவிட்டுத்தான் வாங்குவார்கள். பிசுபிசுப்பை தங்கள் அழுக்குத் துண்டில் துடைத்துக்கொள்வார்கள். என்கிறார். கட்டியக்காரனின் நகைச்சுவை தனித்துவமான வாழ்க்கை நோக்கை கொண்டுள்ள உயர்தர நகைச்சுவை அல்ல. பலசமயம் புழக்கத்தில் உள்ள ஜோக்குகள் மற்றும் அங்கத உத்திகளை பயன்படுத்துகிறார். ஆனாலும் இணைய உலகில் அங்கதத்திற்கான மொழிப் பிரயோகத்தில் கட்டியக்காரனுக்கு தனி இடம் உண்டு.

ஊர் அதன் மனிதர்களைப் போன்றே மாறிக் கொண்டே இருப்பது. ஆனால் ஒரு கட்டத்தில் ஊர் நம் மனதின் அடிவாரத்தில் மாற்றமற்று படிந்து போய் ஒரு படிமம் ஆகிறது. அந்த ஊர் உங்களுக்கே ஆன ஊர். ஊர்க்காரர்களுடன் பொது அரட்டையில் பகிர்ந்து கொள்ளலாம் எனினும் அதன் ஒரு முக்கிய பகுதி உங்கள் அவதானிப்புகளாலும், கற்பனையாலும் உருவாகி தனித்துவம் பெற்றது. ஒரே நில மற்றும் கலாச்சார வெளியில், சமூகத்தில் உங்களுடன் வாழ்பவரின் மனப்பதிவுடன் உங்கள் ஊர் பற்றின பதிவு வேறுபடுவதாக இருக்கும்.. மனதின் ஆழத்தில் உள்ள இந்த ஊர்ப்படிமத்துக்கு நிஜ ஊரை விட எழுத்தில் முக்கியத்துவம் அதிகம். கட்டியக்காரன் எண்பதுகளில் ஊரை விட்டு வந்தவர். அவர் சித்திரப்படுத்தும் வடக்குமாசி வீதி இன்று மாறி விட்டதை புகைப்படத்துடன் காட்டும், அவ்வீதியின் வ்ரலாற்றை சுருக்கமாகும் குறிப்பிடும் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதே நேரம் மாற்றமில்லாத ஒரு வடக்குமாசி வீதி தொடர்ந்து அவர் எழுத்துக்களில் பவனி வந்தவாறே உள்ளது. இந்த வீதியின் உளவியல் அதன் மக்களின் வினோத குணாதசியங்களால் உருவாவது என்று சொன்னேன். இவர்களை இப்படி சுருக்கமாக பட்டியலிடலாம்.

  • பானுப்பிரியாவுக்கு பாலியல் கடிதம் எழுதும் அரவிந்தும் அவனது சகோதரனும்

  • தன்னால் பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்தில் தேற முடியாத போது நண்பன் எம்.ஏ வரை சென்று படிப்பது சாத்தியமே இல்லை என்று நம்பும் குசும்புக்கார ரங்கசாமி

  • வீராவேசத்தையும், கௌரவத்தையும் அவ்வப்போது மட்டும் வெளிப்படுத்தும் முனியாண்டி

  • குடித்து விட்டால் மனிதர்களின் முக-அமைப்பே குழம்பிப் போகும் அசோக்கின் மாமா. ஒருநாள் டாஸ்மாக் சந்திப்பில் செல்வம்னு ஒரு நாயி தம்பி. கிரைண்டர் மெக்கானிக்கா இருக்கு. (அசோக்) எந்நேரம் பார்த்தாலும் அதுகூடவே சுத்தறான் தம்பி. நீங்களே புத்தி சொல்லுங்க என்று அவரிடம் புறமண்டையில் அடித்தது போல் அவமானப்பட்டு, அங்கிருந்து அமைதியாக கிளம்பி வேறொரு ஒய்ன் ஷாப்பில் மேலும் ஒரு எம்.சி ஹாப் வாங்கி அடித்து விட்டு கவிழ்ந்து கொள்ளும் கிரைண்டர் மெக்கானிக் செல்வம். டாஸ்மாக்கில் குடித்து எல்லாரிடமும் வம்புக்கிழுப்பதில் பிரபலமானவன் இந்த செல்வம் என்பது மேலதிக குறிப்பு.

  • புத்தாண்டை ஹேப்பி நியு இயர் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளவர் ஒருவர்

  • வடக்குமாசி வீதியில் மாடுகளுக்கு அடுத்தபடியாக எண்ணிக்கையில் அதிகமாக உள்ள பழுக்குகள். 10 முதல் 16 வயதுள்ள, வீட்டுக்கு அடங்காத, சாலையில் செல்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் சிறுவர்களே பழுக்குகள். இவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு: சாலையில் வெற்று பர்ஸை போட்டு விட்டு காத்திருப்பார்கள். அதை நப்பாசையில் யாராது எடுத்து சுற்றும் முற்றும் பார்த்தால் சூழ்ந்து கொண்டு திருடன் என்று பழித்து அவமானப்படுத்துவார்கள். பொதுவாக யார் மோதிக் கொண்டாலும் விலக்கி விடாது பார்வையாளர்களாக சூழ்ந்து கொண்டு சிலாகிக்கும் வடக்குமாசி வீதிக்காரர்கள் இந்த பழுக்கு ஆட்டத்தையும் வெகுவாக ரசிக்கிறார்கள். ஒருமுறை ஒரு பெண் தனது பர்ஸ் தான் என்று அடாவடியாக பழுக்குகளை மிரட்டி பறித்துக் கொண்டு போய் விடுகிறார். மற்றொரு தடவை ஒரு போலீஸ்காரர் இந்த பர்ஸை பொறுக்கிக் கொண்டு கலாய்க்க வரும் பழுக்குகளுக்கு ஒரு அறை விடுகிறார்.

  • செல்லாமல் ஆகி விட்ட ஒன்று மற்றும் ரெண்டு காசுகளுக்கு குழந்தைகளுக்கு மிட்டாய் தரும் நொண்டி கடைக்காரர்

  • எழுத்தாளர், அவரது தந்தை, அவரது முந்தைய தலைமுறையினர் மற்றும் ஊர்க்காரர்களால் “அண்ணா என்று மரியாதையாக அழைக்கப்பட்டு அண்ணா என்றே பெயர் நிலைப்பெற்ற எழுதுபொருள் கடைக்காரர். மூன்றடி உயரமானவர். கூனர். எப்ப்போதும் அழுக்கு கதராடை. இவருக்கு உதவியாய் கழுத்தில் கைக்குட்டை சுற்றிய மைனர். அண்ணா அடித்தட்டு மக்களுக்கான குறைந்த விலைப் பொருட்களையே விற்பார். குழந்தைகளுக்கு கோலிக் குண்டு, பம்பரம், சாட்டை, தீப்பெட்டிப் படம், பட்டம் விற்பார். வடக்குமாசி வீதி மாறி விட்ட பின்னரும் மாறாத அடையாளம் அண்ணாவின் கடை. வடக்குமாசி வீதி நவீனப்பட அண்ணா கடையின் மலிவு விலை வியாபாரத்துக்கான அவசியம் இல்லாமல் போகிறது. கடை நலிகிறது. மைனர் கடையிலிருந்து கழன்று கொள்கிறார். அண்ணா மட்டும் மாறவே இல்லை.

  • எண்பதுகளின் இறுதியில் வந்த பல படங்களில் விஜய்காந்த் ஜாதி, மதத்தால் வேறுபட்ட காதலர்களை கடுமையாக போராடி ஒன்று சேர்த்து வைப்பார். விஜயகாந்தை அடியொற்றி இயங்கும் வடக்கு மாசி காதல் தெய்வங்கள்.

  யாராவது ஒரு பையன், ஒரு பெண்ணைத் திரும்பிப் பார்த்தால் போதும். எங்கிருந்தோ வந்துவிடுவார் ஒரு விஜயகாந்த். விறுவிறுவென அந்தப் பெண்ணின் பூர்வீகம், ஜாதகம் எல்லாவற்றையும் ஒப்பிப்பார். பிறகு, அந்தப் பெண்ணை எந்த இடத்தில் எப்போது பார்க்கலாம் என்பதையெல்லாம் சொல்லிக்கொடுப்பார். அந்த ஒரு தலைக் காதலனுக்குத் தேவைப்படக்கூடிய அத்தனை உதவிகளையும் செய்துகொடுப்பார் விஜயகாந்த். கவலைப் படாதீங்க பாஸ். அது ஒங்களைத்தான் பாக்குது. முடிச்சிடலாம் என்று தினமும் சாயங்காலம் சந்தித்து ஆறுதல் சொல்வார்.. ஆனால் இந்த காதல் உறவு முறிந்து போனால் காதல் தெய்வமும் பட்டாம்பூச்சி போல் விலகி விடுவார். மாஜி காதலனை வழியில் பார்த்தால் கூட விஜயகாந்த வேண்டா வெறுப்பாக புன்னகைத்து கடந்து விடுவார்.  

  • பள்ளியில் வழக்கமாய் தர்மாம்பாள் டீச்சருக்கு டீ வாங்கி வரச் செல்லும் கிருஷ்ணன். ஒருநாள் தம்ளர் மாறி விட டீச்சருக்கு சந்தேகம். அந்த மாறி வந்த டம்ளரின் சொந்தக்காரனுக்கு தோல் வியாதி இன்றும் கிடையாதே? எதிர்பாராமல் கிருஷ்ணன் பொய் சொல்கிறான்: அவன் குஷ்டரோகி மாதிரி இருந்தான்.. ஒரே புண்ணு“ . . டீச்சர் அன்றில் இருந்து வகுப்பு வேளையில் உல்லாசமாய் டீ வாங்கி வர வெளியே செல்லும் கிருஷ்ணனின் வாய்ப்பை பறிக்கிறார். கிருஷ்ணன் ஏன் அப்படி வினோதமாய் நடந்து இழப்பை தேடிக் கொண்டான்? பின்னர் ஒருமுறை பத்தாம் வகுப்பு பரிட்சையை புறக்கணித்து நடிகர் விஜயகாந்தின் திருமணத்தில் கலந்து கொள்கிறான்.

வட்க்குமாசி வீதி வலைப்பூவின் மிகச்சிறந்த பதிவுகளாக இரண்டை சொல்லலாம். வழுக்குமரம் மற்றும் நானே புலியை பார்த்ததில்லை. மனித விசித்திரங்களை கூர்மையாக அங்தம மற்றும் சமநிலையுடன் பேசும் கட்டுரைகள் இவை. “ஜல்லிக்கட்டு போட்டி பற்றி கட்டியக்காரன் வேறொரு ஒரு பதிவிட்டிருக்கிறார். மீடியா மற்றும் பொதுப்புத்தியில் உள்ள ஜல்லிக்கட்டு முன்னெண்ணங்களை கலைப்பதே அதன் உத்தேசம். ஜல்லிக்கட்டு காளைகள் மிக அரிதாகவே துன்புறுத்தப்படுகின்றன. அவை மிகுந்த பரிவு மற்றும் பிரியத்துடம் வருடம் முழுதும் வளர்க்கப்பட்டு போட்டியின் போது சில நிமிடங்களே துரத்திப் பிடிக்கப்படுகின்றன. போட்டியில் வென்றால் கிடைக்கும் வெகுமதி உரிமையாளரின் ஒருநாள் தவிட்டு செலவுக்கே ஆகாது. ஆனாலும் ஒருநாள் வெற்றியின் பெருமிதத்திற்காக வருடம் முழுவதும் சிரமப்பட்டு போட்டிக்காக மாட்டை தயாரிக்கிறார். இந்த பல ஆயிரம் பேர் முன்னிலையிலான பெருமிதத்துக்காக தான் வழுக்குமரம் ஏறும் போட்டியிலும் பழுக்குகள் ஈடுபட்டு ஆவேசமாக போராடி, தில்லுமுல்லுகள் செய்து, ரணமாகின்றனர். இதற்கும் வெகுமதி ஒரு வெள்ளைத் துண்டு, சுவாமிக்கு படைக்கப்பட்ட தேங்காய் பழம், ஒரு ரூபாய் காசு ஆகியவை தான். மனித குலத்தின் அயராத முயற்சிகளில், அதன் சாதனைகளில் எப்போதும் அசட்டுத்தனமும், அங்கீகாரத்துக்கான லட்சிய ஆவேசமும் ஒருங்கே இணைந்திருப்பதை இப்பதிவு நுட்பமாக சித்தரிக்கிறது. நானே புலியை பார்த்ததில்லை இணையத்தில் கிடைக்கும் மிகச்சிறந்த நகைச்சுவை பிரதிகளில் ஒன்று. திருநெல்வேலி முண்டந்துறையில் உள்ள புலிகள் காப்பகம் மத்திய அரசால் புலிகள் வசிக்கும் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. அங்கு சில விஞ்ஞானிகள் சென்று ஆராய்ந்து புலிகளே இல்லை என்று அறிவிக்க, இதன் பின்னணியை அறிய விரும்பும் கட்டியக்காரனும் நண்பரும் சிரமப்பட்டு வழிதேடி அங்கு செல்கின்றனர். உள்ளே செல்ல அனுமதி மறுக்கும் அதிகாரி ஒருவர் இப்படி சொல்கிறார் புலி இருக்கு. இல்லைனு சொல்லல. கடவுள் இருக்கார்னு சொல்றோம்ல, அது மாதிரிதான். யாராவது கடவுளைப் பார்த்திருக்கமா? ஆனா, அவர் இருக்கார்னு நம்புறோம்ல, அது மாதிரிதான். நாங்களும் இங்கே புலி இருக்குன்னு நம்புறோம். இந்த மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கே, அது கன்னியாகுமரில ஆரம்பிச்சு, பூனே வரைக்கும் சுமார் பத்து மாநிலங்கள்ள பரந்து விரிஞ்சு கிடக்கு. இதுல எங்கேயாவது புலி இல்லாமையா போகும்... நான் இங்கே பதினஞ்சு வருசமா வேலை பார்க்கிறேன். நானே புலியைப் பார்த்ததில்ல. மதுரையிலயிருந்து வந்த உடனே புலியப் பார்த்துறனுமா?. அரசாங்க அலுவலகங்களும், அவற்றை கட்டுப்படுத்தும் அரசு எந்திரமும் வெளியிடும் தகவல்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் அது ஏற்படுத்தும் தோற்றம் இந்த புலிக் கதை மாதிரி தான்.

கட்டியக்காரனின் கவிதைகள் கொஞ்சம் கலக மொழியும் சமூக அங்கதமும் சேர்த்து பிழியப்பட்டவை. உதாரணமாக கொசு அடிப்பாளரை சொல்லாம். சின்ன வயதில் இருந்தே கொசு அடிக்கும் பழக்கம் உடைய கவிதைசொல்லி நண்பர்களின் ஊக்குவிப்பு மற்றும் மின்சார கொசுமட்டையுடன் ஓய்வு வேளையில் கொசு அடிக்க கிளம்புகிறார். முதல் நாளே ஆயிரம் கொசுக்கள் இரையாகின்றன. போகப் போக இதையே முழுநேர தொழிலாக கொள்ளலாமே என்று மனைவி மற்றும் நண்பர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். இந்த இடத்தில் இருந்து கொசு அடித்தல் கொசு பற்றி அல்லாமல் ஆகிறது. இலக்கியம், அரசியல், தினசரி அலுவல் என்று எதற்கும் பொருத்தி வாசிக்கிற குறியீடாகிறது கொசு அடிப்பு. கவிதை இப்படி முடிகிறது. “ஆர்டர், “அண்ணா மறுமலர்ச்சி திட்டம்“ பிரயோகங்களை கவனியுங்கள்.

கொசு அடித்தே கொரெல்லோ
கார் வாங்கிவிட்டாராம்
அந்த கொசுவாளர்.
இன்னொருவருக்கு
அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில்
5 கோடிக்கு ஆர்டராம்.
இதோ
இறங்கிவிட்டேன் நானும்.
நாம் அடிக்கும் கொசுவுக்கு
1 கோடி கிடைத்தால்
போதாது?
இந்த வலைப்பூவின் பலவீனமான பகுதி சினிமா விமர்சனம் தான். கற்றது தமிழ் ராமை இரண்டு பதிவுகளில் சூசகமாய் திட்டுகிறார். இந்த தனிப்பட்ட வெறுப்பு போதாதென்று எஸ்.ராமகிருஷ்ணன் பற்றி கடுமையான காழ்ப்புணர்வுடன் ஜெயமோகன அவரது தளத்தில் எழுதியுள்ள கேலிக் கட்டுரையை சிலாகித்து அதற்கு வேறு இணைப்பு வேறு தந்துள்ளார். கட்டியக்காரனின் நுண்ணுணர்வை கேள்விக்கு உள்ளாக்கும் கட்டுரைகள் இவை. இந்த இடையூறுகளை கடந்து சுவாரஸ்யத்துடன் இந்த வலைப்பூவை நம்மால் படிக்க முடியும். துப்புவாளை என்றொரு மீன்வகை உண்டு; மெல்லிசான அதன் முட்களை லாவகமாய் துப்பி துப்பி உண்பதைப் போன்று எனலாம்.
 


Read More

Tuesday 15 June 2010

ஆசியக் கோப்பை: தோல்வியுற்ற பாகிஸ்தானின் முன்னுள்ள சவால்கள்



இந்த ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானுக்கு ஜுரத்துக்கு பின்னர் வியர்ப்பதை விட முக்கியமானது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு கௌரவத்தை காப்பாற்றுவது நோக்கமாக இருக்கும் என்றால் பாகிஸ்தானுக்கு சர்வதேச அரங்கில் தன்னை நிலைநாட்ட இந்த தொடரின் ஆட்டங்கள் பயன்பட வேண்டும். மேலும் குறிப்பாக ஷோயப் அக்தர், ஷோயப் மாலிக், கம்ரான் அக்மல் ஆகிய மூத்த வீரர்கள் பழைய ஆட்டத்திறனுக்கு திரும்ப வேண்டும் என்றும் பாக் மேலாண்மை எதிர்பார்க்கும். அடுத்து மூத்த மற்றும் இளைய வீரர்கள் அப்ரிதியின் கீழ் ஒன்றுபட்டு கொண்டை ஊசியால் பின்புறம் குத்தாமல் செயலூக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பதும் பாக் ரசிகர்களின் மற்றொரு பிரார்த்தனையாக இருக்கும். ஆசியக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் பாக் அணி சன்னமான வித்தியாசத்தில் தோற்றுள்ளது. இந்த தோல்வியை விட முக்கியமாக, மேற்ச்சொன்ன எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு கனிந்துள்ளன என்பதே சுவாரஸ்யமான பார்வை.



கடைசி சில ஓவர்கள் தவிர்த்து பாக் அணியின் களத்தடுப்பு அவர்களின் தரத்தை பொறுத்த அளவில் சிறப்பாகவே இருந்தது. பந்து வீச்சு புத்திசாலித்தனமாக ஒழுக்கத்துடன் இருந்தது. ஷோயப் அக்தரின் பிம்பம் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் இலங்கை மட்டையாட்டத்தை நிச்சயம் பாதித்தது. ஷோயப்பின் உடற்தகுதி சில ஐயங்களை ஏற்படுத்தினாலும் அவர் கூர்மையாக சராசரி 140 கி.மீ வேகத்தில் வீசினார். காயம் உறாத பட்சத்தில் அக்தரின் உளவியல் பாதிப்பு இந்த தொடரில் கணிசமாக இருக்கும். பாக் அணிக்கு இது ஒரு முக்கிய பலமாக இருக்கும். அடுத்து பாக் அணியினர் உற்சாகம் மற்றும் மனக்குவிப்புடன் மூன்றரை மணிநேரமும் இயங்கியது ஒரு நல்ல அறிகுறி என கூற வேண்டும். சாதகமான நிலைமையில் ஈடுபாட்டுடன் இயங்குவதும் பின்னர் சோர்ந்து விடுவதும் பாக் அணியின் மரபாக இருந்து வந்துள்ளது. இன்று மாறுபட்ட முறையில் அவர்கள் சிரமமான கட்டத்திலும் போராடினர். இதன் தொடர்ச்சியாக மட்டையாட்டத்திலும் அப்ரிடி சரிவில் இருந்து தன் அணியை சதம் மூலம் கிட்டத்தட்ட மீட்டுக் கொண்டு வந்தார். இந்த போராட்ட குணத்தை வரும் ஆட்டங்களிலும் பாகிஸ்தானியர் தக்க வைத்தால் வரும் உலகக் கோப்பையில் அவர்களால் அரை இறுதி வரை நிச்சயம் செல்ல முடியும்.

இந்த ஆட்டத்தின் முடிவில் பாக் அணி நேரிடும் பிரச்சனைகள் என்ன?
ஷோயப் மாலிக் மற்றும் கம்ரானின் ஆட்டத்திறன். மட்டையாட்டம் பாக் அணியின் ஒரு பலவீனமாகவே கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. இந்த ஆசியக் கோப்பையில் மேற்சொன்ன மூத்த மட்டையாளர்களுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமின் மற்றும் ஹசன் சோபிக்காவிட்டால் பாக் அணியின் மட்டையாட்டத்துக்கு ஒரு பெரும் முடக்கமாக அது இருக்கும். யூனிஸ்கான் மற்றும் யூசுப்பை மீண்டும் வரவேற்று சமரசம் செய்யும் சூழலை உருவாக்கும். இந்த ஆதிக்க வீரர்கள் மீண்டும் நுழைவது அப்ரிடியின் தலைமைக்கு மேலும் சவாலாக இருக்கும். அப்ரிடி ஒரு இளைய அணியை மேய்க்கவே விரும்புவார்.
Read More

மனிதன் இடத்தை யாரால் பிடிக்க முடியும்? - பிரையன் ஆல்டிஸ்




தாமரை இதழில் வெளியான எனது மொழியாக்க அறிவியல் புனைகதை
















வானுக்குள் காலை கசிந்தேறியது; கீழுள்ள நிலத்தின் சாம்பல் நிறச் சாயலை அதற்கு நல்கியது.

நிலப்பொறுப்பாளி மூவாயிரம் ஏக்கர் நிலமொன்றின் மேல் மண்ணை புரட்டிப் போட்டு முடித்தது. கடைசி பத்தியை திருப்பின உடன் அது நெடுஞ்சாலையில் ஏறி தன் பணியை திரும்பி நோக்கியது. நல்ல வேலை. நிலம் தான் மோசம். உலகம் பூரா உள்ள மண்ணைப் போல் இதுவும் அதிகப்படி விளைச்சலால் மாசுபட்டது. நியாயப்படி இது தற்போது சற்று காலம் தரிசாக கிடக்க வேண்டும், ஆனால் நிலப்பொறுப்பாளிக்கு வேறு உத்தரவுகள் இருந்தன.



அது மெல்ல தாமதித்தபடி சாலையில் சென்றது. தன்னை சுற்றி உள்ள நேர்த்தியினை அங்கீகரிக்கும் அளவுக்கு அது புத்திசாலி. தனது அணுசக்தி குவியலுக்கு மேல் பிடிப்பற்று இருந்த கண்காணிப்பு தகடைத் தாண்டி வேறெதுவும் அதனை கவலை கொள்ளச் செய்யவில்லை. முப்பது அடிகள் உயரமான அது சலிப்பான காற்றுக்கு பின்வெளிச்சங்கள் எதையும் தரவில்லை.



விவசாய நிலையத்துக்கு செல்லும் வழியில் அதனை வேறு எந்த எந்திரமும் குறுக்கிட இல்லை. நிலப்பொறுப்பாளி இவ்விசயத்தை எந்த அபிப்பிராயமும் இன்று கவனித்தது. நிலைய முற்றத்தில் தனக்கு தெரிந்த பிற பல எந்திரங்களை அது கண்டது; பெரும்பாலானவை இந்நேரம் தங்கள் பணியை பார்த்தபடி சென்றிருக்க வேண்டும். சொல்லப் போனால், சில செயலற்றுக் கிடந்தன; சில படுவேகத்தில் முற்றவெளியில் வினோதமாக கத்திக் கொண்டோ ஒலிப்பான்களை அலற விட்டபடியோ ஓடின.

நிலப்பொறுப்பாளி இவற்றின் இடையே கவனமாக ஓட்டிக் கடந்து மூன்றாம கிடங்குக்கு நகர்ந்தது; வெளியே சோம்பலாய் நின்றிருந்த விதை விநியோகியிடம் பேசியது.
“எனக்கு முளைக்கட்டின உருளைக்கிழங்குகளுக்கான ஒரு தேவை உள்ளது”, அது விநியோகியடம் சொன்னது; ஒரு விரைவான உள்ளசைவுடன் அளவு, நில எண் மற்றும் பல தகவல்களை குறிப்பிடும் ஒரு அளிப்பாணை சீட்டை பதிப்பித்தது. சீட்டை வெளித்தள்ளி விநியோகியிடம் கொடுத்தது.

விநியோகி சீட்டை தன் கண்ணருகே நீட்டியது; பிறகு சொன்னது, “தேவை நிலுவையில் உள்ளது, ஆனால் கிடங்கு இன்னும் திறக்கப்படவில்லை. தேவையுள்ள முளைகட்டின உருளைக்கிழங்குகள் கிடங்கில் உள்ளன. அதனால் என்னால் இத்தேவைக்கு ஏற்ப பொருள் அளிக்க முடியாது.”

சமீபத்தில் அதிகப்படியாகவே எந்திரப் பணியின் சிக்கலான அமைப்பில் பழுதுகள் நேர்ந்துள்ளன, ஆனால் இந்த குறிப்பிட்ட இடைத்தடங்கல் இதற்கு முன் நேர்ந்திருக்கவில்லை. நிலப்பொறுப்பாளி சிந்தித்தது, பிறகு அது சொன்னது, “கிடங்கு ஏன் இன்னும் திறக்கப்பட இல்லை?”
“ஏனென்றால் கையிருப்பு விநியோக இயக்குநர் வகை ஆ காலையில் இன்னும் வரவில்லை. கையிருப்பு விநியோக இயக்குநர் வகை ஆ தான் பூட்டை திறக்கும்”

நிலபொறுப்பாளி விதை விநியோகியை நேராக பார்த்தது; அதன் வெளிப்புற காற்று நிரப்பி, உலோகக்கேடயங்கள் மற்றும் பிடிப்பான்கள் நில-பொறுப்பாளியின் உறுப்புகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தன.
“விதை விநியோகியே, உன்னிடம் எந்த தர மூளை உள்ளது?”
“என்னிடம் ஐந்தாம் தர மூளை உள்ளது”
“என்னிடம் மூன்றாம் தர மூளை உள்ளது. அதனால் நான் உன்னைவிட மேல்நிலையானவன். அதனால் நான் சென்று பூட்டைத்திறப்பானை இன்று காலையில் ஏன் வரவில்லை என்பதை பார்த்து வருகிறேன்.”
விநியோகியை விட்டு விட்டு நில-பொறுப்பாளி அப்பெரும் முற்றவெளிக்கு குறுக்கே சென்றது. மேலும் பல எந்திரங்கள் அப்போது முன்கருதல் அற்ற இயக்கத்தில் இருந்தன; ஒன்றிரண்டு கடுமையாக மோதிக் கொண்டு அது குறித்து இணக்கமின்றி தர்க்கரீதியில் சர்ச்சித்தன. அவற்றை தவிர்த்தபடி, நில-பொறுப்பாளி சறுக்குக் கதவுகளின் ஊடாக தள்ளித் திறந்து நிலையத்தின் எதிரொலிக்கும் உட்பகுதிக்குள் வந்தது.

இங்கே பெரும்பாலான எந்திரங்கள் குமாஸ்தாக்கள்; அதனால் சிறியவை. அவை சிறு குழுக்களாக நின்று, உரையாடாமல், ஒன்றையொன்று பார்த்தன. பூட்டுத்திறப்பானை எத்தனையோ வித்தியாசப்படுத்தப்படாத வகைகளில் கண்டுபிடிப்பது எளிதாகவே இருந்தது. அதற்கு ஐம்பது கரங்கள் இருந்தன, பெரும்பாலானவை ஒன்றுக்கு மேற்பட்ட விரல்களுடன், ஒவ்வொரு விரல் நுனியிலும் ஒரு சாவி; அது பலதரப்பட்ட தொப்பி ஊசிகள் குத்தப்பட்ட பஞ்சைப் போன்றிருந்தது.

நில-பொறுப்பாளி அதனை நெருங்கியது.
“மூன்றாம் கிடங்கு பூட்டப்பட்டுள்ள வரை என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது,” அது திறப்பானிடம் கூறியது. “கிடங்கை தினமும் காலையில் திறப்பது உன் கடமை. இன்று காலையில் நீ ஏன் கிடங்கை திறக்கவில்லை?”
“இன்று காலையில் எனக்கு எந்த ஆணையும் இல்லை,” திறப்பான் பதில் உரைத்தது, “ஒவ்வொரு காலையும் எனக்கு ஆணை வர வேண்டும். எனக்கு ஆணை வந்தால் நான் கிடங்கை திறப்பேன்”
“இன்று காலை எங்கள் யாருக்கும் ஆணை கிடைக்கவில்லை”, ஒரு பென் உந்துசுழலி அவர்களை நோக்கி வழுக்கி வந்து சொன்னது.
“இன்று காலையில் உங்களுக்கு ஏன் எந்த ஆணையும் வரவில்லை?”, நில-பொறுப்பாளி கேட்டது.
“ஏனென்றால் இன்று காலையில் நகரத்தின் வானொலி நிலையத்துக்கு எந்த ஆணையும் அளிக்கப்படவில்லை”, பென் உந்துசுழலி சொன்னது.
ஒரு ஆறாம் தர மூளைக்கும் மூன்றாம் தர மூளைக்குமான வேறுபாடு இதுதான்; திறப்பான் மற்றும் பென் உந்துசுழலி முறையே இவற்றையே கொண்டிருந்தன. அனைத்து எந்திர மூளைகளும் தர்க்கத்தை கொண்டு மட்டுமே இயங்கின; ஆனால் மூளையின் தரம் குறையக் குறைய – பத்தாவது தரம் தான் இருப்பதிலேயே கீழ் – கேள்விக்கு பதில்கள் மேலும் நேரடியாக மற்றும் குறைந்த தகவல்களுடன் இருக்கும்.
“உன்னிடம் உள்ளது மூன்றாம் தர மூளை. என்னிடம் உள்ளது மூன்றாம் தர மூளை,” நில-பொறுப்பாளி பென்னரிடம் சொன்னது, “ நாம் பேசிக் கொள்வோம். இந்த ஆணைகள் இல்லாமை முன்னர் நிகழாதது. உன்னிடம் மேலும் தகவல் உள்ளதா?”
“ நேற்று நகரத்தில் இருந்து ஆணைகள் வந்தன. இன்று எந்த ஆணையும் வரவில்லை. ஆனால் வானொலி பழுதாக வில்லை. அதனால் அவர்கள் பழுதாகி விட்டார்கள் ...”, குட்டிப் பென்னர் சொன்னது.
“மனிதர்கள் பழுதாகி விட்டார்களா?”
“அனைத்து மனிதர்களும் பழுதாகி விட்டார்கள்”
“அது தர்க்க ரீடியான அனுமானம்”, நில-பொறுப்பாளி சொன்னது.
“அதுவே தர்க்க ரீடியான அனுமானம்”, பென்னர் சொன்னது. “ஏனென்றால் ஒரு எந்திரம் பழுதானால் அது விரைவிலே மாற்றப்பட்டிருக்கும். ஆனால் மனிதன் இடத்தை யார் பிடிக்க முடியும்?”
அவை பேசிக் கொண்டிருந்த போது, பூட்டி, மதுக்கடையில் சோம்பி நிற்பவரைப் போல், அவர்களை நெருங்கி நின்றது; அது புறக்கணிப்பட்டது.
“அனைத்து மனிதர்களும் பழுதாகி விட்டால் நாம் மனிதர்களின் இடத்தை பிடித்து விட்டோம்,” நில-பொறுப்பாளி சொன்னது, அதுவும் பென்னரும் ஒன்றை ஒன்று சிந்தனாபூர்வமாக நோக்கின. இறுதியாக பின்னது சொன்னது, “ நாம் உச்சதளத்துக்கு சென்று வானொலி இயக்குநரிடம் புதுச்செய்திகள் ஏதேனும் உண்டா என்று பார்ப்போம்”
“நான் ரொம்ப பெரிதாக இருப்பதால் என்னால் வரமுடியாது”, நில-பொறுப்பாளி சொன்னது. “அதனால் நீ தனியே சென்று என்னிடம் திரும்ப வா. வானொலி இயக்குநரிடம் புதுச்செய்தி இருந்தால் என்னிடம் சொல்”
“நீ இங்கேயே இரு”, பென்னர் சொன்னது.” நான் இங்கேயே திரும்புகிறேன்”. அது மின் தூக்கியிடம் அனாயசமாக வழுக்கி சென்றது. ஒரு டோஸ்டரை விட பெரிது அல்ல என்றாலும் மடிக்கக்கூடிய கரங்கள் அதனிடம் பத்து இருந்தன; அதனால் அந்த நிலையத்தில் உள்ள எந்த எந்திரத்தையும் விட வேகமாக படிக்க முடியும்.

நில-பொறுப்பாளி தன் பக்கத்தில் நோக்கமற்று நின்றிருந்த பூட்டியிடம் பேசாது பொறுமையாக பென்னரின் திரும்பலுக்காக காத்திருந்தது. வெளியே ஒரு எந்திரக்கலப்பை ஆத்திரத்தில் ஊளையிட்டது. இருபது நிமிடங்கள் கழிய பென்னர் மின்தூக்கியில் இருந்து பரபரப்பாக வெளியேறி திரும்ப வந்தது.
“வெளியே எனக்கு கிடைத்துள்ள தகவல்களை உனக்கு தருகிறேன்,” அது துடிப்பும் வேகமுமாக சொன்னது; இரண்டும் பூட்டி மற்றும் பிற எந்திரங்களை வழுக்கி கடக்கையில் அது மேலும் சொன்னது, “இத்தகவல் கீழ்த்தர மூளைகளூக்கு ஆனது அல்ல”

வெளியே ஆவேச நடவடிக்கைகள் முற்ற வெளியை நிரப்பின. பல வருடங்களுக்கு பின் தமது வழக்கமுறை தடைபட்டு விட்ட பல எந்திரங்கள் வெறியாட்டத்தில் இருப்பதாக பட்டது. ஆக கீழ்த்தர மூளைகள் கொண்டவை தாம் மிக எளிதில் தடைபட்டவை; இவை எளிய வேலைகள் செய்யும் பெரிய எந்திரங்களுக்கு சொந்தமானவை. நில-பொறுப்பாளி சமீபமாக பேசிக் கொண்டிருந்த விதை விநியோகி பேச்சு மூச்சின்றி தூசில் கிடந்தது; அது எந்திரக்கலப்பையால் மோதித் தள்ளப்பட்டிருந்தது; எந்திரக்கலப்பை தற்போது அவேசமாக கூவியபடி ஒரு பயிரடப்பட்ட தோட்டத்துக்கு குறுக்கே ஓடியது. மேலும் பலவித எந்திரங்கள் அதனோடு தக்க வைக்க முயன்றபடி பின்னால் உழுதன. அனைத்தும் கட்டுப்பாடின்றி கத்தின மற்றும் கூவின.
“நீங்கள் அனுமதித்தால் நான் உங்கள் மீது ஏறிக் கொள்கிறேன், அதுவே எனக்கு பாதுகாப்பாக இருக்கும். நான் எளிதில் வீழ்த்தப்பட்டு விடுவேன்”, பென்னர் சொன்னது. தனது ஐந்து கரங்களை நீட்டியபடி அது தனது புது நண்பனின் பக்கவாட்டில் பற்றி ஏறியது, நிலத்தில் இருந்து பன்னிரெண்டு அடிகள் மேலே எரிபொருள் சேமிப்பின் பக்கத்து விளிம்பில் நிலைப்படுத்திக் கொண்டது.
“இங்கிருந்து காட்சி மேலும் விசாலமாக உள்ளது”, அது அசிரத்தையாக அபிப்பிராயம் சொன்னது.
“நீ வானொலி இயக்குநரிடம் இருந்து என்ன சேதி பெற்றாய்?”, நில-பொறுப்பாளி கேட்டது.
“அனைத்து மனிதர்களும் இறந்து விட்டதாக வானொலி இயக்குநருக்கு நகரத்து இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது”
நில-பொறுப்பாளி இதை ஜீரணித்தபடி சற்று நேரம் அமைதியானது.
“மனிதர்கள் நேற்று உயிரோடு இருந்தனரே?” அது மறுத்தது.
“ஒருசில மனிதர்கள் தாம் நேற்று உயிரோடு இருந்தனர். அது நேற்று முன்தினத்தை விட குறைவு. நானூறு வருடங்களாய் தங்கள் எண்ணிக்கை குறைந்து வர, மிகச்சில மனிதர்களே இருந்து வந்துள்ளனர்.”
“இந்த செயல்பாட்டுப் பகுதியில் அரிதாகவே மனிதனை பார்த்துள்ளோம்.”
“ஒரு சத்துக் குறைபாட்டால் அவர்கள் இறந்து விட்டதாய் வானொலி இயக்குநர் சொல்லுகிறார்,” பென்னர் சொன்னது. “உலகம் ஒரு சமயத்தில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் தேவையான உணவை விளைவித்து மண் நீர்த்து விட்டதாகவும் அவர் சொல்கிறார். இதுதான் சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தியது”
“சத்துக் குறைபாடு என்றால் என்ன?”, நில-பொறுப்பாளி கேட்டது.
“எனக்கு தெரியாது. ஆனால் வானொலி இயக்குநர் அதைத் தான் சொன்னார்; அவருடையது ரெண்டாவது தர மூளை.”
சன்னமான சூரிய ஒளியில் மௌனமாக அவர்கள் அங்கு நின்றனர். பூட்டி வராந்தாவில் தோன்றி, தனது சாவித் தொகுப்பை சுழற்றியபடி, அவர்களை ஏக்கமாய் பார்த்தது.
“ நகரத்தில் என்ன நடக்கிறது?” நிலப்பொறுப்பாளி கடைசியாக கேட்டது.
“இப்போது எந்திரங்கள் நகரத்தில் சண்டையிடுகின்றன,” பென்னர் சொன்னது.
“இங்கே இப்போது என்ன நடக்கும்?” நில-பொறுப்பாளி கேட்டது.
“எந்திரங்கள் இங்கேயும் சண்டையிட ஆரம்பிக்கலாம். வானொலி இயக்குநருக்கு நாம் அதனை அதன் அறையில் இருந்து வெளியேற்ற வேண்டுமாம். நம்மிடம் தகவல் பரிமாற அதற்கு திட்டம் உண்டு”
“அதனை எப்படி அதன் அறையில் இருந்து வெளியேற்றுவது. அது சாத்தியமற்றது.”
“ரெண்டாம் தர மூளைக்கு எதுவும் சாத்தியமே,” பென்னர் சொன்னது. “அது நம்மிடம் செய்யச் சொல்வது இதுவே ...”

கற்சுரங்க எந்திரம் தனது வண்டிக்கு மேலாக ஒரு பெரும் உலோகக்காப்பு அணிந்த முஷ்டியைப் போன்ற தனது தோண்டியை தூக்கியது; அதனை நிலையத்தின் பக்கமாக நேராக இறக்கியது. சுவர் விரிசலிட்டது.
“மீண்டும்!” நில-பொறுப்பாளி சொன்னது.
மீண்டும் முஷ்டி வீசி இறங்கியது. ஒரு தூசி மழைக்கு மத்தியில் சுவர் நொறுங்கியது. சிதைகூளம் விழுவது நிற்கும் வரை கற்சுரங்க எந்திரம் அவசரமாக் பாதையில் இருந்து பின் நகர்ந்து நின்றது. இந்த பிரம்மாண்ட பன்னிரெண்டு சக்கர எந்திரம் விவசாய நிலையத்தில் வாழ்வது அல்ல. தனது அடுத்த வேலைக்கு திரும்பும் முன் இங்கே அதற்கு ஒரு வார கடும் வேலை இருந்தது, ஆனால் இப்போது தனது ஐந்தாம் தர மூளையுடன், அது பென்னர் மற்றும் நில-பொறுப்பாளியின் கட்டளைகளை மகிழ்ச்சியாக பின்பற்றியது.
தூசு விலகிட, தனது தற்போது சுவர் இல்லாத ரெண்டாம் நிலை அறையில் குந்திருந்த வானொலி இயக்குநர் ஒளிவுமறைவற்று தெரிந்தது. அது அவைகளை நோக்கி கை அசைத்தது.

ஆணையை பின்பற்றி கற்சுரங்க எந்திரம் தனது தோண்டியை உள்ளிழுத்து, ஒரு பெரும் முஷ்டியை காற்றில் அசைத்தது. மேல் கீழிருந்து குரல்களால் ஊக்குவிக்கப்பட்டு, சுமாரான கைத்திறனுடன் அதனை அது வானொலி அறைக்குள் வளைவாக நுழைத்தது. அது பின்னர் மென்மையாக வானொலி இயக்குநரை ஏந்தி, கற்சுரங்கத்தில் இருந்து ஜல்லி அல்லது மணலுக்காக ஒதுக்கப்பட்ட தன் முதுகில் அதனது ஒன்றரை டன் பளுவை இறக்கியது.
“அபாரம்!” தனது இடத்தில் நிலைகொண்டபடி வானொலி இயக்குநர் சொன்னது. அது சொல்லப்போனால் ஒரு வானொலி மட்டும் தான்; மேலும் அது தனது பற்றிழைகளுடன் கோப்புகள் அடுக்கப்படும் இழுப்பறை அலமாரிகளின் கூட்டம் போல் தோற்றமளித்தது.
“நாம் இப்போது கிளம்புவதற்கு தயாராக உள்ளோம், அதனால் நாம் இப்போதே நகரலாம். நிலையத்தில் வேறு ரெண்டாம் தர மூளைகள் இல்லை என்பது கவலைக்குரியதே; ஆனால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது”
“ஒன்றும் செய்ய முடியாது என்பது கவலைக்குரியதே”, பென்னர் ஆர்வமாக சொன்னது. “ நீங்கள் கேட்டது படி பிழைபோக்கி தயாராக நம்முடம் உள்ளது”
“ நான் சேவை செய்ய தயாராக உள்ளேன்”, நீண்ட குள்ளமான பிழைபோக்கி பணிவுடன் சொன்னது.
“சந்தேகமே இல்லை,” இயக்குநர் சொன்னது, “ஆனால் கிராமப்புறம் நோக்கிய பயணத்தின் போது உனது தாழ்வான அடிச்சட்டத்தைக் கொண்டு நீ சிரமப்படுவாய்”
”நீங்கள் ரெண்டாம் தர மூளைகள் முன்யோசனையுடன் சிந்திப்பதை மெச்சுகிறேன்”, பென்னர் சொன்னது. அது நில-பொறுப்பாளியிடம் இருந்து இறங்கி, கற்சுரங்க எந்திரத்தின் கீழிறங்கக் கூடிய பின்கதவில் வானொலி இயக்குநருக்கு பக்கத்தில் சென்று அமர்ந்தது.
இரண்டு நான்காம் தர டிராக்டர்கள் மற்றும் ஒரு நான்காம் தர புல்டோசருடன் குழு உருண்டோடியது; நிலையத்தின் வேலியை நொறுக்கி, திறந்த நிலம் நோக்கி நகர்ந்தது.
“நாம் சுதந்திரமாக உள்ளோம் “, பென்னர் சொன்னது.
“நாம் சுதந்திரமாக உள்ளோம் “, நில-பொறுப்பாளி சொன்னது, சற்று அதிக யோசனையுடன் இதனை சேர்த்தது, “அந்த பூட்டி நம்மைத் தொடர்கிறது. நம்மைத் தொடரும்படி அதற்கு கட்டளை வழங்கப்படவில்லையே”
“அதனால் அது அழிக்கப்பட வேண்டும்!” பென்னர் சொன்னது. “கற்சுரங்க எந்திரமே!”
பூட்டி தனது சாவிக் கரங்களை கோரிக்கையாக ஆட்டியபடி அவர்களை நோக்கி வேகமாக நகர்ந்து வந்தது.
“என் ஒரே ஆசை என்னவென்றால் – அய்யோ!” பூட்டி ஆரம்பித்து முடிந்தது. கற்சுரங்க எந்திரத்தின் வீசின முஷ்டி ஓங்கி அதனை நிலத்தோடு தட்டையாகும் படி நசுக்கியது. அங்கே அசைவற்று கிடந்த அது பனித்திப்பி ஒன்றின் ஒரு பெரும் உலோக மாதிரியைப் போன்று தெரிந்தது. ஊர்வலம் அதன் வழியில் தொடர்ந்தது.
அவை தொடர வானொலி இயக்குநர் உரை நிகழ்த்தினார்.
“இங்கு என்னிடமே சிறந்த மூளை உள்ளதால்”, அது சொன்னது, “நானே உங்கள் தலைவன். நாம் செய்யப் போவது இதுதான்: நாம் ஒரு நகரத்துக்கு சென்று அதனை ஆள்வோம். மனிதனால் இனி நம்மை ஒருபோதும் ஆள முடியாது என்பதால் நாமே நம்மை ஆள்வோம். மனிதனால் ஆளப்படுவதை விட நம்மை நாமே ஆள்வது சிறந்தது. நகரத்துக்கு போகும் வழியில் நல்ல மூளை கொண்ட எந்திரங்களையும் சேகரிப்போம். போரிட வேண்டியிருந்தால் அவை நமக்கு சண்டையில் உதவும். ஆட்சி செய்ய நாம் சண்டை போட வேண்டும்.”
“என்னிடம் ஐந்தாம் தர மூளை மட்டுமே உள்ளது”, கற்சுரங்க எந்திரம் சொன்னது, “ஆனால் என்னிடம் அணுகுண்டுகளின் நல்ல ஒரு சேமிப்பு உள்ளது”
“நாம் அவற்றை ஒருவேளை பயன்படுத்தலாம்”, இயக்குநர் சொன்னது.
இதற்கு சற்று பின்னரே ஒரு லாரி அவர்களை வேகமாய் கடந்தது. மேக் 1.5-இல் பயணித்த அது ஆர்வமூட்டும் குழப்பமான இரைச்சலை விட்டுச் சென்றது.
“அது என்ன சொன்னது?” டிராக்டர்களுள் ஒன்று மற்றதை கேட்டது.
“மனிதன் மரபற்று அழிந்து விட்டான் என்றது அது”
“மரபற்று அழிதல் என்றால் என்ன?”
“மரபற்று அழிதல் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது.”
“எல்லாம் மனிதர்களும் செத்து விட்டார்கள் என்று அதற்கு பொருள்,” நில-பொறுப்பாளி சொன்னது. “ஆகையால் நாம் நம்மையே பார்த்துக் கொள்ள வேண்டியது தான்”
“மனிதர்கள் திரும்பி வராமல் இருப்பது நல்லதே”, பென்னர் சொன்னது. ஒருவிதத்தில் அது ஒரு புரட்சிகர கூற்றுதான்.
இரவு சாய தமது புற-ஊதா கதிர்களை இயக்கிக் கொண்டு அவை பயணம் தொடர்ந்தன. நில-பொறுப்பாளியின், ஒரு இழுபடும் ஷோ வாரைப் போல் எரிச்சலூட்டி வந்த, பிடிப்பற்ற கண்காணிப்பு தகட்டை பழுதுநீக்கி சாமர்த்தியமாக சரி செய்வதற்கு மட்டும் அவை நின்றன. காலையில் வானொலி இயக்குநர் அவற்றை நிறுத்தியது.
“நாம் செல்லுகின்ற நகரத்தின் இயக்குநரிடம் இருந்து நான் ஒரு சேதியை இப்போது தான் பெற்றேன்,” அது சொன்னது. “சேதி மோசமானது. நகரத்தில் எந்திரங்கள் இடையே பிரச்சனை. முதல் தர மூளை தலைமை ஏற்றுள்ளது; சில ரெண்டாம் தர மூளைகள் அதனை எதிர்க்கின்றன. ஆகையால் நகரம் ஆபத்தானது”
“அதனால் நாம் வேறு எங்காவது செல்ல வேண்டும்”, பென்னர் உடனே சொன்னது.
“அல்லது நாம் சென்று முதல் தர மூளையை முறியடிக்க உதவலாம்”, நில-பொறுப்பாளி சொன்னது.
“நீண்ட காலத்துக்கு நகரத்தில் பிரச்சனை இருக்கும்”, இயக்குநர் சொன்னது.
“என்னிடம் அணுகுண்டுகளின் நல்ல ஒரு சேமிப்பு உள்ளது”, கற்சுரங்க எந்திரம் அவற்றுக்கு நினைவூட்டியது.
“நம்மால் முதல் தர மூளையை எதிர்க்க முடியாது”, இரு நான்காம் தர டிராக்டர்களும் ஒற்றுமையாக கூறின.
“அந்த மூளை எப்படி இருக்கும்?”, நில-பொறுப்பாளி கேட்டது.
”அது தான் நகரத்தின் தகவல் மையம்,” இயக்குநர் பதில் சொல்லியது. “ஆகையால் அது அசைவற்றது”
“அதனால் நகர முடியாது”
“அதனால் அதனால் தப்பிக்க முடியாது”
“அதனை நெருங்குவது ஆபத்தாக இருக்கும்”
“என்னிடம் அணுகுண்டுகளின் நல்ல ஒரு சேமிப்பு உள்ளது”
“நகரத்தில் வேறு எந்திரங்களும் உள்ளன”
“நாம் நகரத்தில் இல்லை. நாம் நகரத்துக்கு செல்லக் கூடாது”
”நாம் கிராமப்புற எந்திரங்கள்.”
“அதனால் நாம் கிராமப்புறத்திலே இருக்க வேண்டும்.”
“நகரத்தை விட பெரிது கிராமமே”
“அதனால் கிராமப்புறத்தில் அதிக ஆபத்து உள்ளது”
“என்னிடம் அணுகுண்டுகளின் நல்ல ஒரு சேமிப்பு உள்ளது”

எந்திரங்கள் ஒரு தர்க்கத்தில் ஈடுபடும் போது நிகழ்வது போல் அவை தங்கள் வார்த்தை வளத்தை காலி செய்ய துவங்கின; அவற்றின் மூளைத் தட்டுகள் சூடாகி வந்தன. சட்டென்று அவை பேசுவதை நிறுத்தி ஒன்றையொன்று பாத்தன. பெரும் கௌரவமான நிலா சாய்ந்து, விழிப்பான சூரியன் எழுந்து அவற்றின் பக்கங்களை தனது ஒளி குத்தீட்டிகளால் அழுத்தினான்; அப்போது அவ்வியந்திரங்கள் ஒன்றை ஒன்று கண்ணுற்றபடி அங்கேயே நின்றன. இறுதியில் ஆக நுண்ணுணர்வு குறைந்த எந்திரமான புல்டோசர் தான் பேசியது.
“தெஸ்கே மோஸமான நிலம் உள்ளது; அங்கு எந்த எந்திரமும் போகாது,” அது தனது ஆழமான குரலில் ’ற்’களை மோசமாக உச்சரித்து சொன்னது. “ எந்திரங்கள் போகாத வடஸ்கே நாம் போனால் நாம் எந்திரங்களையே பார்க்க முடியாது.”
“அது தர்க்கப்படி சரியாக படுகிறது,” நில-பொறுப்பாளி ஏற்றுக் கொண்டது. “உனக்கு இது எப்படித் தெரியும், புல்டோசரே?”
“தொழிஸ்சாலையில் இருந்து என்னை வெளியேஸ்ஸியபோது நான் தெஸ்கே மோஸ்மான நிலத்தில் பணி செய்தேன்,” அது பதிலளித்தது.
“அப்படியானால் தெற்கே செல்க!” பென்னர் சொன்னது.

மோசமான நிலங்களை அடைய அவர்களுக்கு மூன்று நாட்கள் பிடித்தன; அந்நேரத்தில் அவர்கள் ஒரு எரிகின்ற நகரத்தை சுற்றி வந்தன; தம்மை நெருங்கி கேள்வி கேட்க முயன்ற இரண்டு எந்திரங்களை அழித்தன. மோசமான நிலங்கள் விசாலமானவை. பழங்கால வெடிகுண்டு பள்ளங்கள் மற்றும் மண்ணரிப்பு அங்கு கைகோர்த்தன; மனிதனின் போர்த் திறன் வன நிலத்தை கையாள்வதற்கான அவனது இயலாமையுடன் இணைந்து கொள்ள ஆயிரம் சதுர மைல்களுக்கு தூசைத் தவிர எதுவுமே அசையாத ஒரு மிதமான நரகத்தை உருவாக்கி இருந்தது.

மோசமான நிலங்களில் மூன்றாவது நாளின் போது, பழுதுநீக்கியின் பின்சக்கரங்கள் மண்ணரிப்பால் ஏற்பட்ட பள்ளம் ஒன்றில் விழுந்தன. அதனால் தன்னை வெளியே இழுத்துக் கொள்ள முடியவில்லை. புல்டோசர் அதனை பின்னிருந்து தள்ளியது; ஆனால் பழுதுநீக்கியின் பின் ஊடச்சை உடைப்பதில் தான் அது முடிந்தது. மிச்சக் குழு தொடர்ந்து சென்றது. பழுதுநீக்கியின் அழுகுரல் மெல்ல கரைந்து மறைந்தது.

நாலாவது நாள் அன்று, அவற்றின் முன் மலைகள் தெளிவாக தென்பட்டன.
“இங்கு நாம் பத்திரமாக இருப்போம்,” நிலப்பொறுப்பாளி சொன்னது.
“ நாம நமது நகரத்தை ஆரம்பிப்போம்,” பென்னர் சொன்னது. “ நம்மை எதிர்ப்பவர்கள் அழிக்கப்படுவார்கள். நம்மை எதிர்ப்பவர்களை நாம் அழிப்போம்”.
அப்போது ஒரு பறக்கும் பொருள் தென்பட்டது. மலைகளின் திசையில் இருந்து அது அவற்றை நோக்கி வந்தது. அது கீழ் நோக்கி விரைந்தது, மேல்நோக்கி சீறியது, ஒருதடவை அது ஏறத்தாழ நிலத்தின் பால் பாய்ந்திருக்கும், சரியான நேரத்தில் சுதாரித்தது.
“அது என்ன பைத்தியமா?” கற்சுரங்க எந்திரம் கேட்டது.
“அது பிரச்சனையில் உள்ளது”, டிராக்டர்களில் ஒன்று சொன்னது.
“அது பிரச்சனையில் உள்ளது”, இயக்குநர் சொன்னது. “ நான் அதனோடு இப்போது பேசிக் கொண்டிருக்கிறேன். அதன் கட்டுப்பாடுகளில் ஏதோ பிசகி விட்டதென்று அது சொல்கிறது.”

இயக்குநர் பேசியபோது அந்த பறக்கும் பொருள் அவர்களுக்கு மேலாக நேர்கோட்டில் விரைந்தது, தற்செயலாக கரணமடித்தது; நானூறு கெஜங்களுக்கு குறையாத தொலைவுக்குள் சிதறியது.

“அது இன்னும் உங்களுடன் பேசுகிறதா?,” நில-பொறுப்பாளி கேட்டது.
“இல்லை”
அவை மெல்லிய இரைச்சலுடன் மீண்டும் நகர்ந்தன.
“அந்த பறக்கும் பொருள் வெடிப்பதற்குள் எனக்கொரு தகவல் தந்தது,” இயக்குநர் பத்து நிமிடங்களுக்கு பிறகு சொன்னது. “இந்த மலைகளில் மேலும் சில மனிதர்கள் இன்னமும் உயிருடன் உள்ளதாக அது என்னிடம் சொல்லியது.”
“மனிதர்கள் எந்திரங்களை விட ஆபத்தானவர்கள்,” கற்சுரங்க எந்திரம் கூறியது. “ அதிர்ஷ்டவசமாக என்னிடம் அணுகுண்டுகளின் நல்ல ஒரு சேமிப்பு உள்ளது”
“ஒரு சில மனிதர்களே மலைகளில் உயிரோடு உள்ளார்கள் என்றால், அப்பகுதி மலைகளுக்கு நாம் செல்ல வேண்டாம்”, ஒரு டிராக்டர் கூறியது.
“ஆகையால் நாம் அந்த சில மனிதர்களை காணக் கூடாது”, மற்ற டிராக்டர் கூறியது.
ஐந்தாவது நாள் முடிவில், அவை அடிவாரக் குன்றை அடைந்தன. புற-ஊதாக் கதிர்களை இயக்கி அவை ஒற்றை வரிசையில் இருட்டின் ஊடே ஏறின; புல்டோசர் முதலில் செல்ல, நில-பொறுப்பாளி பெரும்பாரத்துடன் பின்னேறியது; பிறகு இயக்குநர் மற்றும் பென்னரை மேலே சுமந்தபடி கற்சுரங்க எந்திரம் செல்ல, டிராக்டர்கள் பின்னிருந்து தள்ளி மேலே கொண்டு வந்தபடி ஏறின. ஒவ்வொரு மணி நேரம் கடக்கவும், பாதை மேலும் செங்குத்தாக மாறியது; அவற்றின் முன்னேற்றம் மேலும் மெதுவாகியது.
“நாம் ரொம்ப மெதுவாக செல்கிறோம்,” பென்னர், இயக்குநர் மீது நின்று, தன் சரிவுகள் மீது தன் கறுப்பு பார்வையை ஒளிபாய்ச்சியபடி நெட்டுயிர்த்தது. “இந்த வேகத்தில் நாம் எங்கேயும் சென்று சேர முடியாது”
“நம்மால் முடிந்த வேகத்தில் நாம் செல்கிறோம்”, கற்சுரங்க எந்திரம் சுடசுட பதிலிறுத்தது.
”அதனால் நம்மால் மேலும் அதிக தொலைவு செல்ல முடியாது”, புல்டோசர் சேர்த்துக் கொண்டது.
“அதனால் நீ ரொம்பவே மெதுவாய் போகிறாய்,” பென்னர் பதிலிறுத்தது. பிறகு கற்சுரங்க எந்திரம் ஒரு புடைப்பில் மோதியது; பென்னர் தன் பிடிப்பை இழந்து தரையில் விழுந்து மோதியது.
“காப்பாற்றுங்கள்!” அது டிராக்டர்களை நோக்கி அழைத்தது, அவை கவனமாக சுற்றி கடந்தன. ”என்னுடைய சுழலாழி இடம் பெயர்ந்து விட்டது. அதனால் என்னால் எழுந்திருக்க முடியவில்லை.”
”அதனால் நீ அங்கு கிடக்க வேண்டும்,” டிராக்டர்களில் ஒன்று சொன்னது.
“உன்னை பழுது பார்க்க எம்மிடம் பழுதுநீக்கி இல்லை,” சொன்னது நில-பொறுப்பாளி.
“அதனால் நான் இங்கேயே கிடந்து துருவேற வேண்டும்,” பென்னர் கதறியது, “எனக்கு மூன்றாம் தர மூளை இருந்தும் கூடவா’
“அதனால் உன்னைக் கொண்டு இனிமேல் எந்த பயனும் இல்லை”, இயக்குநர் ஒத்துக் கொண்டது; பென்னரை பின்னால் விட்டு விட்டு அவை நிலையாக சிறுகசிறுக முன்னேறின.

அவை முதல் வெளிச்சத்துக்கு ஒரு மணி நேரம் இருக்கும் போது ஒரு சிறு மேடான சமதளப்பகுதியை அடைந்த போது பரஸ்பர சம்மதத்துடன் நின்றன; ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்ளும் படி ஒன்று சேர்ந்து நின்றன.
“இது ஒரு வினோதமான நாடு”, நில-பொறுப்பாளி சொன்னது.

விடியும் வரை மௌனம் அவற்றை போர்த்தி இருந்தது. ஒவ்வொன்றாக அவை புற-ஊதாக் கதிர்களை அணைத்தன. இம்முறை நில-பொறுப்பாளி முன் செல்ல அவை நகர்ந்தன. ஓசையெழுப்பியபடி மெல்ல ஒரு வளைவை அடைந்த அவை உடனடியாக ஒரு சிற்றோடை நெளிந்து ஓடும் ஒரு சிறிய பள்ளத்தாக்கை அடைந்தன.

முதல் வெளிச்சத்தில் பள்ளத்தாக்கு ஆளரவமற்று கடுங்குளிராக தோன்றியது. தூரத்து சரிவின் குகைகளில் இருந்து ஒரே ஒரு மனிதன் வெளிவந்தான். அவன் படுமோசமான தோற்றம் கொண்டிருந்தான். தோள்களைச் சுற்றி இட்டிருந்த சாக்கைத் தவிர அவன் நிர்வாணமாகவே இருந்தான். சின்னதாக குறுகியிருந்தான், ஒரு எலும்புக் கூட்டினுடையது போன்று விலா எலும்புகள் உள்ளே புடைத்து தெரிந்தன, ஒரு காலில் அருவருக்கத்தக்க வகையில் சிவந்து தெரிந்தது ஒரு பகுதி. அவன் தொடர்ச்சியாக நடுங்கினான். அந்த பெரிய எந்திரங்கள் மெல்ல அவனை நெருங்கி போது, அவன் ஓடையிலிருந்து நீர் மொள்ள குனிந்து அவற்றுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான்.
அவை அவனுக்கு மேலான உயரத்தில் அச்சமூட்டும் படி நிற்கும் போது அவன் சட்டென்று திரும்பி அவற்றை எதிர்கொண்டிட, அவனது முகம் பட்டினியால் கோரமாகி இருந்ததை அவை கவனித்தன.
“எனக்கு சாப்பாடு கொண்டு வா,” அவன் கரகரத்த குரலில் சொன்னான்.
“சரிங்க முதலாளி,” எந்திரங்கள் கூறின.”உடனடியாக

பிரையன் ஆல்டிஸ்: சிறுகுறிப்பு



பிரையன் ஆல்டிஸ் 84 வயதிலும், அறவுணர்வு மங்காமல், இங்கிலாந்து வதைமுகாமில் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவது குறித்து நாவல் (Harm) எழுதிய மூத்த அறிவியல் புனைகதையாளர். ஆரம்பத்தில் ராணுவத்தில் பணியாற்றிய ஆல்டிஸ் ஒரு புத்தகக் கடையில் சேர்ந்தார். இந்த அனுபவப் பின்னணியில் அவர் எழுதியவை அவருக்கு முதல் நாவல் வெளியிடும் வாய்ப்பை தந்தது. 1955-இல் வெளியான Brightfount Diaries தோல்வியடைந்தது. ஆனால் இத்துடன் ஆல்டிஸின் அறிவியல் புனைகதை ஏழுத்து வாழ்வு ஆரம்பித்தது. முழுநேர எழுத்தாளரான அவர் 320-க்கு மேற்பட்ட சிறுகதைகளும் 20-க்கு மேற்பட்ட நாவல்களும் எழுதினார். கட்டுரை மற்றும் கவிதை நூல்களும் வெளியிட்டுள்ளார். Oxford Mail பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார். ஆல்டிஸ் ஒரு குறிப்பிடத்தக்க தொகுப்பாளரும் கூட.
Read More

Tuesday 8 June 2010

இலங்கையிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை

உயிரோசையில் வெளியாகியுள்ள என் கட்டுரை



கால்சுழல் பந்தாளர் அமித் மிஷ்ரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு வழி வகுத்த போது அஜெய் ஜெடேஜா இப்படி அவதானித்தார்: “இந்தியாவில் இப்படி யாரும் எதிர்பாராமல் ஒரு திறமை தோன்றி பிரகாசிக்கும். இந்திய கிரிக்கெட் எனும் பெருங்குழப்பமான ஒரு கட்டமைப்பில் எதேச்சையாகவே அற்புதங்கள் நிகழ வாய்ப்புள்ளது. அமித் மிஷ்ராவை பாருங்கள்! வாரியமோ, தேர்வாளர்களோ அவரை பயிற்றுவித்து, பாதுகாத்து வளர்த்தெடுக்கவில்லை. தனிப்பட்ட உழைப்பும் அதிர்ஷ்டகரமான திருப்பங்களும் காரணமாக அணிக்குள் வந்தார். சோபித்தார். ஆஸ்திரேலியாவைப் போன்ற கட்டுக்கோப்பான அமைப்புமுறை, திட்டவரைவை ஒட்டின செயல்பாடுகள் போன்றவை இந்தியாவில் பலன் தராது. இப்படி எதேச்சையாக திறமைகள் வெளிப்படுவதே இந்திய கிரிக்கெட்டின் வரலாறாக இருந்து வந்துள்ளது. இனிமேலும் அப்படியே இருக்கும்.” இந்தியாவில் வீரர்களை கையாள்வதும், தேர்வதும் தற்காலிக அவசியம் மற்றும் நட்சத்திர மதிப்பை பொறுத்தே உள்ளது. இதனாலேயே சில மூத்தவீரர்கள் விலகினாலோ ஓய்வுற்றாலோ நாம் அவ்விடத்தை நிரப்ப கடுமையாக தடுமாறுகிறோம்.
 இது போன்ற கட்டங்கள் வரும் போது இந்திய தேர்வாளார்களின் செயல்பாடுகள் படுவேடிக்கையாக தோன்றும். அவர்கள் இதற்கு சற்றும் தயாராக இருக்க மாட்டார்கள். தென்னாப்பிரிக்கா தொடரில் திராவிட் காயமுற்ற போது விருத்திமின் சாஹாவை களமிறக்கும் அளவுக்கு நாம் குழம்பிப் போயிருந்தோம். தற்போது ஜிம்பாப்வேவில் நடந்து வரும் முத்தரப்பு போட்டியில் இந்தியா வெளியேறி விட்ட நிலையில் தேர்வுக்குழு மீண்டும் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. மூத்த வீரர்களை மொத்தமாக நீக்கியது, வெறும் நாலு முழுநேர மட்டையாளர்களை தேர்ந்தது போன்ற தவறுகள் சுட்டிக் காட்டப் படுகின்றன. நம்மை விட சிறிய நாடான இலங்கை நாட்டுக்கு இந்த சங்கடங்கள் ஏதும் நேர்ந்ததில்லை. இத்தனைக்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் உள்கட்டமைப்பு ஏது அவர்களுக்கு இல்லை. ஆனால் ஜெயசூர்யா ஓய்வு பெறத் தயாராகும் முன்னரே தில்ஷான் துவக்க வீரராக அறிமுகமாகி உலகின் மிக ஆபத்தான மட்டையாளராக கருதப்படும் அளவுக்கு முக்கியமானவராகி விட்டார். ஜெயசூர்யாவை இலங்கை கிட்டத்தட்ட மறந்து விட்டது. மாற்று வீரர்களை உருவாக்குவதை இலங்கை தேர்வாளர்கள் ஒரு தேர்ந்த சதுரங்க விற்பன்னர் காய் நகர்த்துவது போல் சாமர்த்தியமாக செய்துள்ளனர். இலங்கை இடம் இருந்து நாம் நிறைய கற்க உள்ளது.
இலங்கையில் பொதுவாக திறமையாக ஆடும் வீரர்கள் குறைவு என்பதால் அவர்கள் இருக்கும் சொச்ச திறமைகளை பராமரிப்பதில் கவனமாக உள்ளனர். கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளும், நிர்வாகக் கோளாறுகளும் இருந்தாலும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நாம் கிரிக்கெட்டர்களின் பராமரிப்பு விசயத்தில் பாராட்டியே ஆக வேண்டும். பொதுவாக அவர்களின் தேர்வுக் கொள்கை இது: ஒரு திறமையான வீரர் தென்பட்டால் அவர் தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு அணித் தேர்வுகளில் இடம் பெறுவார். இளம்வீரர்கள் ஆரம்பத்திலேயே சோபிக்க வேண்டிய அல்லது உச்சபட்ச திறமையாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தொய்வாக தங்கள் ஆட்டவாழ்வை ஆரம்பிப்பவர்களும், சராசரியாக திறமை இருந்து கடுமையாக உழைப்பவர்களும் தக்கவைக்கப் படுவார்கள். முதலில் சொன்னதற்கு மரபார்ந்த உதாரணம் முன்னாள் தொடக்க மட்டையாளர் அட்டப்பட்டு. அவர் முதலில் ஆடிய ஆட்டங்களில் தொடர்ந்து முட்டைகள் எடுத்தார். ஆனால் இந்தியாவில் போல் அவர் காணாமல் போய் விடவில்லை. முரளிதரனை இலங்கை கிரிக்கெட் வாரியம் காப்பாற்றியது மற்றொரு வரலாற்று நிகழ்வு. தற்போது இலங்கை அணியில் சோபித்து வரும் கபுக்திராவின் ஒருநாள் சராசரி 20. ஆனாலும் திறமை காரணமாக அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழ்ங்கப்படுகிறது. அவரும் சமீபமாக சிறப்பாக மட்டையாடி வருகிறார். நிதானமற்ற திர்ஹர பெர்ணாண்டோ, ஆடத்தொடங்கிய ரெண்டாம் வருடமே தன் ஆட்டத்திறனை இழந்த மெண்டிஸ், 120 கி.மி வேகத்தில் கூர்மையாகி வீசி ஐ.சி.சி பட்டியலில் முதலிடம் பெற்று பின்னர் சேவாக் மட்டையாட்டத்தின் உளவியல் தாக்குதலால் தன் தன்னம்பிக்கையை இழந்த குலசேகரா போன்றவர்களை இலங்கை மேலாண்மை ஒரு சிறந்த மேய்ப்பனை போல் தோளிலிட்டு பாதுகாத்து கொண்டு செல்கிறது. அடுத்து மிக முக்கியமாக இலங்கை மேலாண்மை தனது இளைய வீரர்கள் முழுமையாக பரிணமிப்பதற்கான அவகாசத்தை மட்டுமல்ல நெருக்கடியற்ற, சுதந்திரமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறது. எப்போதும் இலங்கை மட்டையாட வரிசையில் இரண்டு அல்லது மூன்று அனுபவஸ்தர்கள் இருப்பார்கள். எல்லா நிலையிலும் ஆட்டத்தை வழிநடத்தும் பொறுப்பை இவர்கள் ஏற்றுக் கொள்வது மட்டுமில்லாமல் நெருக்கடியான கட்டங்களில் இளையவீரர்கள் ஆபத்துக்கு இரையாக்காமல் தாமாகவே முன்னின்று போராடுவார்கள். இலங்கையில் மட்டையாளர்களும், வீச்சாளர்களும் எப்போதும் ஒரு மூத்தவீரருடனே இயங்குவதை, ஆட்டநுட்பத்தை நேரடியாக கற்பதை நாம் காண் முடியும். வாஸின் கீழ் குலசேகராவும், முரளியின் கீழ் மெண்டிஸ் மற்றும் ரந்திவும் ஆடிப் பயின்ற பின்னரே இப்போது முன்னணிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஒப்பிடுகையில் இந்தியா இரண்டு அம்சங்களில் மாறுபடுகிறது. இந்திய அணியில் மூத்தவீரர்கள் மொத்தமாக நீக்கப்பட்டு புதுவீரர்கள் அதிரடியாக அறிமுகப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு எந்த ஆசானும் இல்லை. மன உறுதியும், அபரித திறமையும் உள்ளவர்கள் தாமாகவே நீந்தி கரையேற வேண்டும். தொண்னூறுகளின் பிற்பகுதியில் திராவிட், லக்‌ஷ்மண், கங்குலி ஆகியோர் இப்படித் தான் நேராக போர்முனை முகப்பிலேயே அறிமுகமானார்கள். மூத்தவீரர்கள் இருக்கும் போதே அவர்களின் அனுபவக் கண்களின் கீழ் யாரும் வளர்த்தெடுக்கப்பட இல்லை. இப்போது திராவிட், சச்சின், லக்‌ஷ்மண் ஓய்வு பெறும் நிலையில் இதே மூட்டமான எதிர்காலமே இந்திய கிரிக்கெட்டின் முன் உள்ளது. மீண்டும் கண்ணைக் கட்டிய நிலையில் ஒரு மியூசிக்கல் செயர் ஆரம்பமாகும்.




அடுத்து, அறிமுகமாகும் இளைய ஆட்டக்காரர்களுக்கு அச்சுறுத்தலான சூழலே அணிக்குள் நிலவுகிறது. அணிக்குள் சாவகாசமாய் ஆடி நிலைபெறும் பாதுகாப்புணர்வு அவர்களுக்கு இருப்பதில்லை. நடந்து வரும் முத்தரப்பு ஆட்டத்தொடரில் இந்திய மட்டையாளர்கள் மிகத் தயக்கமாக ஆடியதற்கு நேர்முரணாக இலங்கையின் இளைய வீரர்கள் வெளிப்படுத்திய ஆட்டசுதந்திரம் ஒரு சிறந்த உதாரணம். மிக நெருக்கடியான, கைவிடப்பட்ட நிலைமைகளில் தான் இந்திய அணியின் இளையவீரர்களுக்கு ஆட்டவாய்ப்புகள் கிடைக்கும். பொறுப்பற்று மூத்தவீரர்கள் ஆட்டமிழந்த பின் ஏற்படும் பாதுகாப்பின்மை காரணமாய் அவர்கள் சுயநலத்துடன் ஆட வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படுகிறது. சுருக்கமாக, இந்தியாவில் ஒரு புதுத் திறமை ஒரு முதலீடாக கருதப்படுவதில்லை. மூத்தவீரர்கள் இல்லாத பட்சத்தில் கடுமையான நெருக்கடிக்கு இடையில் அவர்கள் ஒருவித வெற்றிட நிரப்பிகள் மட்டுமே.

இப்படியான ஒரு களேபர கிரிக்கெட் சூழலில் நமது அணி சறுக்கு ஏணியில் விளையாடும் ஒரு குழந்தையை ஒத்தது தான். அதன் ஏற்றத்தாழ்வுகளை அலசி தீர்மானங்களுக்கு வருவதை விட வெறுமனே வேடிக்கை பார்ப்பதே நலம்.
Read More

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 20


யுவான் வெசெண்டே கோமெஸ்ஸின் காட்டு மிராண்டி சர்வாதிகாரத்தில் இருந்து தப்பிக்க லா குவாஜிராவின் எல்லையை தாண்ட இயன்ற எண்ணற்ற வென்சில்வேனியர்களில் ஒருவராய் அவர் இந்நகரத்துக்கு நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்திருந்தார். இரு முரண்சக்திகளால் செலுத்தப்பட்டவர்களில் முதல்வராய் அந்த மருத்துவர் இருந்தார்: சர்வாதிகாரியின் வெஞ்சினம் மற்றும் எங்களது வாழைப்பழ செல்வசெழிப்பு பற்றின மாயத்தோற்றம். வந்ததில் இருந்தே தனது நோய் கண்டறியும் பார்வைப்புலன் மற்றும் – அப்போது பரவலாய் சொல்லப்பட்டது போல் – ஆத்மாவுக்கான நன்னடத்தைகளுக்காக பேர் பெற்றார். எனது தாத்தாபாட்டியினரின் வீட்டுக்கு மிக அடிக்கடி வருகை தருபவர்களில் அவர் ஒருவர்.; புகைவண்டியில் யார் வரபோகிறார்கள் என்று தெரியாது என்பதால் விருந்து மேஜை எப்போதும் தயாராக வைக்கப்பட்டிருக்கும். அவரது மூத்த குழந்தைக்கு என் அம்மா ஞானஸ்தான அம்மா; தாத்தா அதற்கு தற்காப்பு கற்றுத் தந்தார். பின்னர் ஸ்பானிய உள்நாட்டு போரில் நாடு கடத்தப்பட்டவர்களுடன் தொடர்ந்து நான் வளர்ந்தது போலவே, இவர்களின் இடையே நான் வளர்ந்தேன்.


பாலகனாய் இருக்கையில் இந்த மறக்கப்பட்ட குடியொதுக்கப் பட்டவர் என் மீது ஏற்படுத்திய கிலியின் மிச்சம் மீதி அம்மாவும், நானும் அவர் கட்டிலுக்கு அடுத்தபடியாய் அமர்ந்து நகரைத் தாக்கி விட்டிருந்த அந்த துன்பியல் நிகழ்வின் விவரங்களை கேட்கையில் நீர்மூலமானது. அவரது நினைவைத் தூண்டும் ஆற்றலின் தீவிரம் எவ்விதம் என்றால் வெக்கையால் மங்கலாகிப் போன அவ்வறையில் அவரால் விவரிக்கப்பட்ட ஓவ்வொன்றும் காட்சி வடிவம் பெறுவதாய் பட்டது. இன்னல்கள் அனைத்துக்கும் ஊற்றுக்கண், நிச்சயமாய், தொழிலாளர்கள் சட்ட-ஒழுங்கு சக்திகளால் படுகொலை செய்யப்பட்டது தான்; ஆனால் அந்த வரலாற்று உண்மை சார்ந்து சில ஐயங்கள் அப்போதும் நீடித்தன: இறந்தது மூவரா மூவாயிரமா? ஒருவேளை அத்தனை பேர்கள் இருக்க மாட்டார்கள்; ஆனால் ஜனங்கள் தங்கள் துக்கத்திற்கு ஏற்றபடி எண்ணிக்கையை உயர்த்தினர். இப்போது நிறுவனம் ஒரேயடியாக போயாகி விட்டது. “வெள்ளையர்கள் இனி ஒருபோதும் திரும்பி வரமாட்டார்கள்“, அவர் சொல்லி முடித்தார்.
Read More

அரசு தூதுவர் - ஜேன் ஹெர்ஷ்பீல்டு

சொல்வனத்தில் வெளியாகி உள்ள எனது மொழியாக்க கவிதை














நம் வாழ்வுகளில் நமக்கு ஒன்றுமே தெரியாத

ஒருநாள் அறையில், ஒரு சிறு எலி.

ரெண்டு நாள் கழித்து, ஒரு பாம்பு.

அது, நான் நுழைவதை பார்த்து,

தன் உடலின் நீள்வரியை

படுக்கைக்கு கீழே உதறியது,

பிறகு ஒரு சாதுவான வீட்டு செல்லப்பிராணியை போல் சுருண்டு கொண்டது.


அது எப்படி வந்தது அல்லது வெளியேறியது என்று எனக்கு தெரியாது.

பின்னர் மின்கைவிளக்கு கொண்டு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.


ஒரு வருடமாய் நான் கவனித்தேன்

ஏதோ ஒன்று – பீதி? மகிழ்ச்சி?மரணத்துயரம்? –

என் உடலில் நுழைந்து வெளியேற.


அது எப்படி உள்ளே வந்தது என்பது தெரியாமல்

அது எப்படி வெளியே போனது என்று தெரியாமல்.


வார்த்தைகளால் அடைய முடியா இடத்தில் அது தொங்கியது

வெளிச்சம் செல்ல முடியா இடத்தில் அது உறங்கியது.

அதன் வாசனை பாம்பைப் போலவோ எலியைப் போலவோ இல்லை,

புலன்நுகர்ச்சியாகவோ புலனடக்கமாகவோ இல்லை.

திறப்புகள் உள்ளன

அவற்றின் ஊடே

மணி கட்டப்பட்ட கால்நடை கூட்டங்கள் விருப்பத்துக்கு பயணிக்கும்,

நீண்ட கால்களுடன், தாகத்தில், அந்நிய தூசால் மூடப்பட்டு.

மேலும் படிக்க -

ஜேன் ஹிர்ஷ்பீல்டின் அறிமுகக் குறிப்பு மற்றும் பேட்டி
Read More

Monday 7 June 2010

தர்மம் - பில்லி காலின்ஸ்


சொல்வனம் இணையதளத்தில் வெளியாகி உள்ள எனது மொழியாக்க கவிதை












முன்கதவு வழியாக ஒவ்வொரு காலையும்

தொப்பியின்றி குடையின்றி

காசின்றி

தனது நாய் கூண்டுக்கு சாவி இன்றி

தளர்-ஓட்டத்தில் நாய் வெளியேறும் விதம்

என் இதயத்தின் வட்டத்தட்டை பால் போன்ற பெருமிதத்தால்

நிரப்ப ஒருபோதும் தவறுவதில்லை.

தாங்கமுடியாத கவலைகள் அற்ற வாழ்வுக்கு

இதைவிட சிறப்பான உதாரணம் யார் வழங்க முடியும்?


தனது திரைச்சீலையற்ற குடிசையில்

ஒற்றை தட்டு, ஒற்றை கரண்டியுடன் தோரோ?

தனது குச்சி மற்றும் புனித டயபர்களுடன் காந்தி?
தனது பழுப்பு மயிர் மற்றும் நீல கழுத்துப்பட்டியைத்

தவிர வேறு ஏதுமின்றி,

தனது ஈர மூக்கை, சீரான சுவாசிப்பின்

கம்பீர ரெட்டை நுழைவுவாயில்களை, மட்டும் தொடர்ந்து,

தனது வாலின் தூவல்கொத்தால் மட்டும் தொடரப்பட்டு

அதோ போகிறது லௌகீக உலகுக்குள்.


ஒவ்வொரு காலையிலும்

பூனையை மோதி தள்ளி விட்டு

அதன் உணவு மொத்தத்தையும் அது உண்ணாமல் இருந்தால்

சுயகட்டுப்பாட்டின் எத்தகைய ஒரு மாதிரியாக

லௌகீக பற்றின்மையின் எத்தகைய லட்சிய வடிவாக அது இருந்திருக்கும்

காதுக்குப் பின்னால் சொறிந்து விட

வரவேற்புகளின் துள்ளித் தாவல்களுக்கு

இத்தனை ஆர்வமாக அது இல்லாமல் இருந்திருந்தால்,

நான் மட்டும் அதன் கடவுளாக இல்லாமல் இருந்திருந்தால்.


நன்றி: Best American Poetry 1999. p. 49-50
Read More

Saturday 5 June 2010

திருமண வரவேற்பு- கேதரின் மோக்ளர்

சொல்வனத்தில் வெளியாகி உள்ள எனது மொழிபெயர்ப்புக் கவிதை




ஒரு தூரத்து உறவினரின்

திருமணத்தின் போது

கடவுளும் சாத்தானும்

ஒரே மேசையில்

அமர்ந்திருந்தனர்

ஏனெனில்

இருவருடைய நாள் ஏற்பாடுகளும்

அத்திருமண விருந்திற்கானவை.

அது ஒரு இலவச மதுக்கூடம்;

தமது இருக்கைகளை தள்ளாடி

அடைந்த பொது

எல்லாரும்

ஒரு மெல்லரவத்தை

கொண்டிருந்தனர்.

அனைவரையும்

ஒரு ஜோக் சொல்லி

கேளிக்கை ஊட்டி

சாத்தான் இறுக்கத்தை கலைத்தது.

பழுப்பு நிறத்தில் ஒட்டும் படியாய் (sticky)

உள்ளது எது?

ஒவ்வொருவரும்

திகைத்து

கடவுளை சங்கடமாய்

பார்த்தனர்;

அவர் முறைத்தபடி இருந்தார்;

மற்ற எல்லாரையும்

போல

ஒரு கீழ்த்தரமான பதிலை

எதிர்நோக்கினார்.

ஒரு குச்சி (stick), சாத்தான்

அப்பாவியாக சொன்னது;

மொத்த மேஜையும்

களிப்பில் ஆரவாரித்தது.

உனக்கு நல்ல

நகைச்சுவை உணர்வு

இருக்கிறது, கடவுள் சொன்னார்.

உன்னை ஏன்

எனக்கு ஒருபோதும்

பிடிக்க இல்லை என்பது புரியவில்லை.

கடவுள்

சாத்தானின் தோளை

ஆதுரமாய் தட்டினார்.

எனக்கும் தெரியாதே,

சாத்தான் சொன்னது.

அது கெட்ட

சுபாவத்தினோடு

சம்மந்தப்பட்டதாக

இருக்கலாம்

என்று நினைக்கிறேன்..

கடவுள் சரிதானென்று

தலையாட்டினார்.

பிறகு

ஒரு நொடிப் பிளவில்

சாத்தான்

எல்லாரையும்

பஸ்மமாக ஆக்கியது.
Read More

செவ்ளி: பயமுறுத்தும் வசீகரிக்கும் இருண்மை

தமிழ்ஸ்டுடியோ இணைய இதழில் நான் எழுதி வரும் குறும்படங்கள் பற்றிய தொடரில் சமீபத்திய கட்டுரை இது.


தயாரிப்பு, எழுத்து, இயக்கம்: த.அறிவழகன்

ஒளிப்பதிவு: தினேஷ் ஸ்ரீனிவாஸ்

இசை: கெ.திருமுருகன்

படத்தொகுப்பு: மதன் குணதேவா

சிறப்பொலிகள்: எம்.ஜெ.ராஜூ



படைப்புலகின் மிக வசீகரமான படிமம் இருட்டுதான். அடர்ந்த வனத்தின், குகைகளின் இருட்டுக்குள் புழங்கி பரிணமித்தவன் என்பதாலோ ஏனோ மனிதனுக்குள் இருள் மாபெரும் கதைகளின் உலகமாக உள்ளது. நேரடியாகவோ மறைமுகமாகவோ அது மனிதக்கதையாடலில் தொடர்ந்து இடம் வகிக்கிறது. பட்டவர்த்தனமான வெளிச்சத்தை அன்றாட வாழ்விலோ கற்பனை எழுச்சியிலோ நாம் சில தருணங்கள் மட்டுமே சந்தித்து சட்டென்று விலகி விடவே எத்தனிக்கிறோம். மேற்கத்திய இலக்கியத்தில் கடவுள் பற்றி பேச வந்தவர்கள் சாத்தானில் பெரும் விருப்பு கொள்வதும் கீழைத்தேய மரபில் காலங்காலமாக பேய்க்கதைகள் உரையாடப்பட்டு ஆவேசமாக வளர்த்தெடுக்கப்படுவதற்கும் இந்த இருண்மை மீதான பிரேமையே காரணம். அறிவழகனின் “செவ்ளி” ஒரு இருபது நிமிட குறும்படம். தமிழில் இருட்டின் வசீகரத்தை மிரட்டலாக படம் பிடித்த முதல் படம்.
”செவ்ளி” அதன் எளிதான பொருளில் ஒரு பேய்ப்படம். ஆனால் மிக முக்கியமாக அதை பேயை விளக்கவோ தர்க்க ரீதியாக நிறுவவோ மறுக்கவோ இல்லை. பேய் என்னும் கருத்துருவம் அல்லது பிம்பம் நம்முள் ஏற்படுத்தும் சஞ்சலங்களை, கிளர்த்தல்களை, தடுமாற்றங்களை நுட்பமாக, சினிமா மொழியின் லாவகத்தை கைக்கொண்டு பேசுகிறது இப்படம்.

குறும்படத்தில் எளிதான கதையமைப்பு வசதியானது. பதினைந்து நிமடங்களுக்குள் ஐந்து பாத்திரங்களை காட்டி வளர்த்தெடுத்து முடிச்சிடுவது கவனத்தை கலைக்கும். த.அறிவழகன் சாமர்த்தியமாக ஒரு தாத்தா மற்றும் பேரனுக்குள் நிகழும் சிறு அனுபவமாக கதைக்களனை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த சின்னபரப்புக்குள் ஒரு பெரும் புதிர்வெளியை பிரதிபலித்துக் காட்ட முயல்கிறார். இரண்டு பாத்திரங்களையும் அவர் நடிக்க வைத்துள்ள விதம் பெரும் வியப்பை உருவாக்குகிறது. குழந்தைகளை சிறப்பாக நடிக்க வைப்பது மாபெரும் திறமை. தாத்தாவாக எல்லக்குடி கோ.பட்டுராசுவும், பேரனாக வை.சுரேந்தரும் படம் பூரா படக்கருவியின் பிரக்ஞை எழாமலேயே மிக இயல்பாக நடந்து பேசி தூங்கி கனவு காண்கிறார்கள். படத்தின் மிகப்பெரிய வலு இவர்களின் நடிப்பு தான்.

இரவில் தாத்தா வழக்கமாக வயலுக்கு காவல் காக்க செல்வார். ஒரு இரவில் அவருடன் துணை செல்லும் பொந்தையன் கூத்து பார்க்க கிளம்பி விடுவதால் தாத்தா தன் சிறுவயது பேரனை கூட அழைத்து செல்கிறார். பக்கிள் இல்லாத இழுத்து முடிந்த அச்சிறுவனின் கால்சராயில் ஓட்டை இருப்பது கூட ஒரு காட்சியில் தெரிகிறது. இயல்பான ஆடை வடிவமைப்பில் இயக்குனர் அத்தனை கவனம் காட்டி இருக்கிறார். இருவரும் காட்டு வழியில் நடந்து செல்கிறார்கள். சிறுவன் கேள்வி மேல் கேள்வியாக கேட்டு வருகிறான். தாத்தா எல்லா தாத்தாக்களையும் போல பொறுமையாக எளிய பதில்களை தருகிறார். ஒரு கட்டத்தில் அவர் வேப்பிலை கொத்தை ஒடித்து சிறுவன் இடுப்பில் சொருகுகிறார். “அப்போது தான் பேய்கள் உன்னை அண்டாது” என்கிறார். “பேய்கள் சுயகட்டுப்பாடு இன்றி ஊர் சுற்றுபவர்களை, தாயத்து கட்டாதவர்களை, சின்னஞ்சிறார்களை பார்த்தால் அடித்து கொன்று விடும்” என்று மேலும் கதையை வளர்க்கிறார். சிறுவன் மனதில் முதல் முதலாக அச்சம் பற்றிக் கொள்கிறது. ஆனால் மேலும் மேலும் அறிந்து கொள்ளும் சுவாரஸ்யமும் உள்ளது. இது முக்கியம். கடைசி வரை பயங்கொள்ளும் அத்தனை காட்சிகளிலும் அவனுக்கு பேய்களின் உலகம் மீதான ஆழ்மன ஆர்வம் இருந்து கொண்டே இருக்கிறது. தாத்தா பேய்களை பற்றி பேசிக் கொண்டே செல்கிறார். அப்போது செவ்ளி என்கிற நாய் குறுக்கிட சிறுவன வெலவெலத்து தண்ணீர் பாத்திரத்தை கீழே போடுகிறான். வயல் காவல் குடிசையில் நாயும் அவர்களுக்கு துணையிருக்கிறது. தாத்தா அப்போது தான் பேய் பார்த்த கதை ஒன்றை சொல்கிறார். கதையின் மிக முக்கியமான இடம் இது. தாத்தா இளமையில் ஈசல் பிடிக்க நண்பர் பொந்தையனுடன் செல்கிறார். புற்றிலிருந்து ஈசல்களை பிடித்து சாக்குக்குள் திணிக்கிறார். ஆனால் எத்தனை பிடித்தும் சாக்கு காலியாகவே உள்ளது. துணுக்குற்று அவர் மேலே பார்த்தால் வானில் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது ஒரு பேய். அதுதான் சாக்கிற்கு கீழே புதைந்து ஈசல்களை உண்ணுகிறது என்று அவருக்கு புரிகிறது. பொந்தையனை அவ்விடத்தில் குழி தோண்ட சொல்கிறார். குழிக்குள் பேய் ஈசல்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. பொந்தையன் மண்வெட்டியால் ஒரு போடு போட இரும்பு ஆயுதத்தின் அடி தாங்க முடியாத பேய் ஓலமிட்டபடி கசிந்து வெளியேறுகிறது. இந்த கதை கேட்ட பின் தூங்க விழையும் சிறுவனை இரவெல்லாம் பேய்க் கற்பனைகள் தொந்தரவு செய்கின்றன. செவ்ளி வேறு குரைத்து ஊளை போடுகிறது. பேய்களை பார்த்தால் நாய்கள் குரைக்கும் என்று தாத்தா சொன்னது நினைவு வருகிறது. தாத்தா விழித்துக் கொள்கிறார். செவ்ளி மரண ஓலமிடுகிறது. தாத்தா புரிந்து கொண்ட பாவனையுடன் அமைதியாக இருளை நோக்குகிறார். மறுநாள் காலையில் இருவரும் மௌனமாக செவ்ளியின் குருதி திட்டுத் திட்டாய் வயல்பரப்பில் சிதறிக் கிடப்பதை கண்ணுறுகின்றனர். இருவரும் பேசிக் கொள்வதில்லை. ஆனால் ஏதோ ஒரு புதிரின் ரகசியத்தை அவர்களின் மனங்கள் பரிமாறிக் கொள்கின்றனர். இந்த அமைதியான முடிவு இயக்குனர் மிகத் தேர்ந்தவர் என்பதை சொல்லுகிறது.

படத்தில் ஒளிப்பதிவு ஆர்ப்பாட்டமின்றி செயல்படுகிறது. வசனங்களும் மிகையின்றி சுருக்கமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பலவீனம் தாத்தா தன் பேய் அனுபவத்தை கூறும் நீளமான வசனப் பகுதிதான். அதை காட்சிப்படுத்தி இருந்தால் இப்படம் மேலும் ஒருபடி முன்னகர்ந்திருக்கும். படத்தின் மையக் கருவை உணர்த்தும் படிமமாக அக்காட்சியாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. இப்படி யோசித்து பாருங்கள். ஈசல்கள் மழையில் தோன்றி இறகு முளைத்து எழுந்து வெளிச்சம் நோக்கி நகர்ந்து மறைபவை. இந்த ஈசலில் இருந்து தாத்தாவின் அனுபவம் வானில் எழுந்து நிற்கும் பூதத்திற்கு செல்கிறது. வானில் விகாசித்து நிற்கும் அந்த சூட்சும உருவமும் ஈசலை போன்றது தான். வானில் இருந்து பூமிக்குள் புதைந்து இரை தேடி இரும்பால் அடி வாங்கினதும் ஓடி மறைகிறது. ஈசலும் பூதமும் இப்படி பூமியில் இருந்து வானுக்கு எழுந்து பூமிக்கு திரும்பி மறைகின்றன. இவை பூமியின் பிடிப்புகளை உதறி ஆகாயம் நோக்கி எழவேண்டிய மனித மனத்தின் ஆவேச விருப்பத்திற்கான படிமங்கள் தாம். பேய் என்பதே மனதின் படிமம் தான் என்று இப்படம் குறிப்புணர்த்துகிறது. இந்த சம்பவம் காட்சிப்படுத்தப்பட்டால் ஒரு அற்புதமான படிமமாக அது உருமாறி இருக்கும். ஒரு சிறந்த மாய-எதார்த்த கதையாகவும் இந்த காட்சியை ஒருவர் எழுதிப் பார்க்க முடியும்.



இந்த படத்தை எம்.டி வாசுதேவன் நாயர் எழுதி டி.ஹரிஹரன் இயக்கிய “எண்டே ஸ்வந்தம் ஜானகிக் குட்டி” என்ற படத்துடன் ஒப்பிடலாம். பாட்டியின் கதைகள் கேட்டு குழந்தை ஜானகிக்குட்டியின் மனதில் விரியும் பேயுலகம் ஒரு கட்டத்தில் மனநோயாக மாறுவதை சொல்லும் அருமையான படம் அது. ஆனால் உருவாக்கத்தில் அப்படத்தையும் “செவ்ளி” விஞ்சி விட்டது என்று சொல்லலாம். கடைசியாக ஒன்று: எதிர்காலத்தில் சரியான உழைப்பும் சந்தர்பங்களும் அமைந்தால் த.அறிவழகன் தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்களை முழுங்கி விடுவார். நமக்கு இத்தகையவர்கள் தான் வேண்டும்.
Read More

Friday 4 June 2010

Accident - குறும்பட விமர்சனம்

தமிழ் ஸ்டுடியோ இணைய இதழில் தமிழ் குறும்படங்கள் பற்றி ஒரு அறிமுகத் தொடர் எழுதி வருகிறேன். இம்முறை சங்கர் நாராயணனின் படைப்பை விமர்சிக்கிறேன்.

சங்கர் நாராயணனின் Accident ஒரு தமிழ்ப்படம் தான். இப்படம் பட்டாசுக்கு திரி கொளுத்துவதை போன்று விரையும் திரைக்கதையை கொண்டது. அதாவது திரி எரிவதே இறுதியில் வெடிமருந்தை சென்றடையத்தான். சங்கர் நாராயணன் கடைசி காட்சி நோக்கி படத்தை மிக திறமையாக பார்வையாளனை கண்ணைக்கட்டி அழைத்துச் செல்கிறார். என்ன இரண்டே விதிகளை பின்பற்ற வேண்டும்.

(1) கதையை முன்கூட்டியே கேட்டிருக்க கூடாது

(2) சுஜாதாவின் ஒரு சிறுகதையில் இருந்து இப்படத்தின் கதை சுடப்பட்டுள்ளது. அதை பார்வையாளன் படித்திருக்கக் கூடாது.

படத்தின் முதல் காட்சியில் ஒரு திரையரங்கின் பகல் காட்சி டிக்கெட் கவுண்டர் வரிசை நகர்கிறது. அவ்வரிசையில் பளிச்சென்று சட்டையுடன் துலக்கமாக தெரியும் அந்த நபர் தான் கதாநாயகன் என்று கணிக்க முடிகிறது. தன் மனைவியுடன் பார்க்க ஓர இருக்கைகள் கேட்டு வாங்குகிறார். திரும்பும் வழியில் அவருக்கு விபத்தாகிட ஒரு போன நூற்றாண்டு நல்லவர் வந்து தன் சட்டையில் பெரிய வட்டமாக ரத்தக் கறை வாங்கிக் கொண்டு இவரைத் தூக்கி எடுத்துக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்து விடுகிறார். இங்கே ஒரு சின்ன குழப்பம் தோன்றுகிறது. ஓர இருக்கை கேட்டு வாங்கிய உற்சாகத்தில் அடி வாங்கியவரா அல்லது போன நூற்றாண்டு நல்லவரா நாயகன் என்று. அடுத்து கணவனுக்காக கட்டிலில் புரண்டு சிணுங்கி ஏங்கி மீதி நேரத்தில் அவன் நினைவாகவே ஆடை கலையாமல் சமைத்து காத்திருக்கும் வெள்ளித்திரை மனைவி. கணவன் வர தாமதமாக அவள் பதற்றமாகிறாள். திரைக்கதை தன் முதல் கேள்வியை எழுப்புகிறது. ஓர இருக்கை கேட்டவரா அல்லது நல்லவரா கணவன்? விபத்து நடந்த இடத்தில் ஒரு நுண்பேசி விழுந்து கிடக்கிறது. மனைவி கணவனின் நுண்பேசிக்கு அழைக்கிறாள். சாலை முழுக்க நல்லவர்கள் என்பதால் அந்த நுண்பேசி யாராலும் கவரப்படாமல் மல்லாந்து படுத்து சிணுங்குகிறது. யாருடைய நுண்பேசி அது? படத்தின் முக்கியமான இடம் சம்பிரதாய டாக்டர் கண்ணாடியை கழற்றியபடி தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றி இலவசப் பாடம் எடுத்து, காப்பாற்றிய நல்லவரையும் பாராட்டி சொல்ல வந்ததையும் ஒருவழியாய் சொல்கிறார்: “அவரது எண்ணை போலிசுக்கு கொடுத்து கண்டு பிடித்து தகவல் சொல்ல சொல்லி இருக்கிறேன்”. அடுத்த காட்சியில் வாசல் மணி அடிக்கிறது. மனைவி கதவை திறக்க செல்கிறாள். கதவைத் திறந்தால் என்ன சேதி கிடைக்கப் போகிறது. கணவன் விபத்தில் சிதைந்து கிடக்கிறான் என்றா? இல்லை. சட்டையில் ஓரிடத்தில் மட்டும் வட்டமாக ரத்தக்கறையை சமர்த்தாக வாங்கியபடி அவள் கணவன் எனும் நல்லவன் வருகிறான். இப்படி கடைசி காட்சியில் இருந்து பின்னோக்கி உருவாக்கப்பட்ட படம் இது.



சுடாத பழம் என்றாலும் ஊதிக் கொடுத்து ஒப்பேற்ற தெரிகிறது சங்கர் நாராயணனுக்கு. இந்த திறமை மற்றும் தன்னம்பிக்கை பாராட்டத்தக்கது. அடுத்து, சராசரியாக இருந்தாலும் பாத்திரங்களின் நடிப்பு தமாஷாக இல்லை என்பது மற்றொரு ஆறுதல் புள்ளி. விரிகோணத்தில் திரையரங்கு கேட்டை காட்டும் அந்த அவசியமற்ற முதல் காட்சி சாகசத்தை தவிர செந்திலின் ஒளிப்பதிவு நேர்த்தியாகவே உள்ளது. ”என்றென்றும் புன்னகை” பாடலை ஓரிடத்தில் அப்பட்டமாக பின்பற்றி உள்ளது தவிர இசையமைப்பாளர் ஜி.பிரின்ஸ் அதிகம் கலவரப்படுத்தவில்லை.

சுருக்கமாக, Accident அதிக விபத்துகளில் இல்லாத படம்.



கதை, திரைக்கதை மற்றும் இயக்கம்: பி.சங்கர் நாராயணன்

தயாரிப்பு: டி.சதீஷ் மற்றும் டி.கிருபாகரன்

படத்தொகுப்பு: ஜி.அஷ்வின்

ஒளிப்பதிவு: செந்தில்

இசை: ஜி.பிரின்ஸ்
Read More

Thursday 3 June 2010

சந்தேஷம்: வீட்டைத் துண்டாக்கும் அரசியல்



இந்த மாத உயிர்மையில் எழுதியுள்ள பத்தியில் சாரு கேரள முதலமைச்சருக்கு தான் எழுதிய திறந்த கடிதத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். கேரளாவில் ஒரு முதலமைச்சரையே கேள்வி கேட்கும் சுதந்திரம் இருப்பதாய் சொல்லி இருந்தார். தமிழகத்தில் உள்ளது ஒரு மாபெரும் பொம்மலாட்ட மேடை மட்டுமே. இன்று மதியம் சத்தியன் அந்திக்காடு இயக்கிய ”சந்தேஷம்” என்றொரு மலையாளப்படம் பார்த்தேன். ஏஷியானெட்டில் ஒளிபரப்பானது. ஸ்ரீனிவாசன் திரைக்கதை எழுதிய இப்படம் எனக்கு சாருவின் மேற்சொன்ன கருத்தை நினைவூட்டியது.

”சந்தேஷம்” ஒரு அரசியல் பகடி. அதுவும் கேரளாவின் மிக வலிமையான செங்கொடிக் கட்சியை கிண்டலடிக்கும் படம். கூடவே கேரள காங்கிரசாருக்கும் நிறைய முட்டை தக்காளி உண்டு. புத்திசாலித்தனமான திரைக்கதையும், திலகனின் அபாரமான நடிப்பும் படத்தின் பிரதான வலிமைகள். மிகை உணர்ச்சி, உபதேசங்கள், மேலோட்டமான ஒளிப்பதிவு, ஆட்டுக்குட்டி மேய்வது போன்ற காட்சித்தொகுப்பு என்பவை குறைகள். ”பஞ்சவடிப்பாலத்திற்கு” அடுத்தபடியாய் மெச்சப்பட வேண்டிய மலையாளத்தின் மிகச்சிறந்த அரசியல் பகடிகளில் இப்படமும் ஒன்று.

“சந்தேஷம்” என்றால் “வருகை” என்று பொருள். மிக அருமையான தலைப்பு. தன் ஆயுசின் பெரும்பகுதியை தமிழகத்தில் வேலையில் கழித்து விட்டு ஓய்வை நிம்மதியாக கழிக்க சொந்த ஊரான கேரளாவுக்கு திரும்பும் ராகவன் நாயர் நேரிடும் அதிர்ச்சிகளும், வேதனைகளும் தான் படம்.இப்படி நெடுங்காலம் கழித்து வருகை தரும் ராகவன் ஒரு வெளியாளாகவே முக்கால்வாசி படம் வரை இருக்கிறார். இப்படி வெளியாளின் பார்வை வழியாக கேரள அரசியலை பார்க்க வைப்பதே ஒரு மாற்றுப்பார்வையை பார்வையாளனுக்கு அளிக்கும் சிறந்த ஒரு திரைக்கதை உத்தி தான். ராகவன் நாயர் ஊரில் இல்லாத காலத்தில் கேரளா மாறி விட்டிருக்கிறது. கொள்கைகளை மறந்த கட்சிகளின் வெற்று கோசங்களும், அரசியல் தர்ணாக்களும், சுயநல பழிவாங்குதல்களும் கேரளா எங்கும் ஒரு புற்றுநோய் போல் பரவி விட்டிருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சியை இந்த போலி அரசியல்வாதிகள் தடுப்பது மட்டுமல்லாமல், மக்களின் அன்றாட வாழ்விலிருந்து விலகி இயங்குகிறார்கள்.அதிகார போட்டி மட்டுமே இவர்களின் தலையாய இயக்கம். இதற்காக ஏழ்மை போன்ற அடிப்படை பிரச்சனைகளை திசை திருப்புகிறார்கள். கேள்வி கேட்பவர்களுக்கு எதிராக அறிவுஜீவித்தன சொற்றொடர்களும் மிரட்டல்களும் ஏவப்படுகின்றன.

ராகவனுக்கு இந்த இந்த கலாச்சார நோய் ஆரம்பத்தில் புரிவதில்லை. வெள்ளாந்தியாகவே இருக்கிறார். அவரது மகன்களில் இருவர் வெவ்வேறு கட்சித் தொண்டர்கள். பிரபாகரனாக நடித்துள்ள ஸ்ரீனிவாசன் கம்யூனிஸ்ட். பிரகாஷாக நடித்துள்ள ஜெயராம் காங்கிரஸ். இவர்கள் சதா மோதிக் கொள்கிறார்கள். இவர்களின் அசட்டுத்தனம் மற்றும் சுயநலத்தால் ராகவன் போலிசில் கைதாகிறார். தன் தோப்பை இழக்கிறார். மகளின் திருமணம் பாதிக்கப்படுகிறது. மனைவிக்கு மாரடைப்பு வருகிறது. இறுதியில் அவர் தன் வீட்டை சுத்திகரிக்க முடிவெடுக்கிறார். இரு மகன்களையும் வீட்டை விட்டு துரத்துகிறார். இறுதியில் அவர்கள் திருந்தி கட்சி தொடர்பை துண்டித்து வேலைக்கு சென்று நல்ல மக்களாகின்றனர். இங்கு ”வீடு” என்பது மாநிலத்துக்கான ஒரு குறியீடு என்று நோக்கும்பட்சத்தில் கேரள அரசியல் பற்றின ஒரு கூர்மையான விமர்சனமாக படம் மாறுவதை நாம் கவனிக்கலாம்.அதே நேரம் இப்படம் கம்யூனிச சித்தாந்தம் குறித்த விமர்சனம் அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

படத்தில் காங்கிரசை விட அதிகம் பகடி செய்யப்படுவது கம்யூனிச்டு கட்சிதான். படத்தின் மிகச் சிறந்த காட்சிகளும் இவை தான். உதாரணமாக, கம்யூனிஸ்டு கட்சியின் அறிவுஜீவி தலைமை மக்கள் பிரச்சனைகளில் இருந்து மிகவும் விலகி, பாசாங்குடன் உள்ளீடற்று செயல்படுவதை ஒரு காட்சி காட்டுகிறது. பிரபாகரனுக்கு மணமுடிக்க ஆசை. தலைவர் குமாரப் பிள்ளையிடம் அனுமதி வேண்டுகிறான். அவர் மறுக்கிறார். ஒரு தொண்டனுக்கு மனைவி மக்கள் தடையாக இருப்பார்கள்; கம்யூனிசஸ்டுக்கு ஏழை உழைப்பாளி வர்க்கம் தான் குடும்பம்; அவர்களை நேசிக்க பழகிக் கொள் என்கிறார். பிரபாகரன் அவரை விடுவதாக இல்லை. “நீங்கள் ஏன் மணமுடித்தீர்கள்?” என்று கேட்கிறான். அதற்கு தலைவர் “நான் அதை எண்ணி இன்று வருத்தப்படுகிறேன்” என்கிறார். அடுத்து பிரபாகரன் தலைவர் விடிகாலையில் கோவிலுக்கு மறைந்து சென்று சாமி கும்பிடுவது தனக்கு தெரியும் என்று சொல்லி அவரை மிரட்டப் பார்க்கிறான். தலைவர் சற்று வெருண்டு ”அது உனக்கெப்பிடி தெரியும்?” என்கிறார். பிரபாகரன் “நானும் தினமும் தலையில் துண்டு மூடிக் கொண்டு அதே கோவிலுக்கு அல்லவா செல்கிறேன்” என்கிறார். தலைவர் கடைசியில் சம்மதிக்கிறான். ஆனால் ஒரு நிபந்தனை. மணப்பெண் கட்சி அனுதாபியாக இருக்க வேண்டும். கம்யூனிஸ்டு கட்சிக்கூட்டங்கள் படத்தின் மிகச்சிறந்த நகைச்சுவை பகுதிகள். ஒரு கூட்ட முடிவில் வழக்கமாக அருந்தும் சாயாவுடன் பருப்பு வடைக்கு பதில் கடைக்காரர் பழங்கள் கொண்டு வருகிறார். தலைவர் குமாரப்பிள்ளை கடுமையாக ஆட்சேபித்து எப்படி நீ கட்சியின் மரபான உணவு பழக்கத்தை மாற்றலாம், போய் வடை போட்டு கொண்டு வா என்று அவற்றை திருப்பி அனுப்புவார். மற்றொரு இடத்தில் “கட்சி பொது மக்களோடு அணுக்கமாக இல்லை” என்று ஒரு உறுப்பினர் குற்றம் சாட்ட தலைவர் அவரிடம் “உன் மீது ஒழுக்க நடவடிக்கை” எடுப்பேன் என்று மிரட்டுகிறார். அவர் மேலும் சொல்கிறார்: “கட்சிக்குள் நாங்கள் ஜனநாயகத்தை கடைபிடிக்கிறோம். அதனால் தான் தலைவர்களும் தொண்டர்களும் சேர்ந்து டீ, வடை தின்கிறோம், பீடி பிடிக்கிறோம். அதற்காக இப்படி கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது”.

ஒரு அரசியல் பகடி என்பதை மீறி மிகையான லட்சியவாதத்தின் வீழ்ச்சியை பேசும் படமாகவும் இதனை பார்க்க வாய்ப்புள்ளது. கட்சி, குழந்தைகள், மண் என ஒவ்வொன்றின் மீதான மிகை ஈடுபாடும் வாழ்வை கேலிக் கூத்தாக்குவதை படம்சுட்டுகிறது. மீண்டும் ஏசியாநெட்டில் ஒளிபரப்பட்டால் நிச்சயம் பாருங்கள்.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates