Tuesday 30 November 2010

பாகிஸ்தானில் இருந்து கிரிக்கெட் நிபுணர்கள்


ராகுல் பட்டாச்சாரியாவின் Pundits from Pakistan ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறந்த கிரிக்கெட் புத்தகங்களில் ஒன்று. காரணம்: கிரிக்கெட் தான் ஆதாரம் என்றாலும் நூல் கிரிக்கெட்டை தாண்டி கலாச்சாரம், வரலாறு, மீடியா தந்திரங்கள் எனும் பல்வேறு விஷயங்களை கிரிக்கெட் லென்ஸ் வழி சொல்லுகிறது. என்னவொரு நடை. நடை என்றால் ஒரு மனிதனின் நிலைப்பாடு, மனப்போக்கு மற்றும் ஆளுமையின் வெளிப்பாடு தானே. இதனால் நடை ஒருவித  பார்வையும் ஆகிறது. வாழ்க்கையிலும் நம்மை ஸ்டைலான ஆட்கள் எளிதில் கவர்வதற்கு இதுவே காரணம். ஸ்டைல் உள்ளவர்களிடம் வாழ்க்கை பீறிடுகிறது. தற்போது ஆங்கிலத்தில் எழுதி வரும் இந்தியர்களில் ராகுல் பட்டாச்சாரியாவை அருந்ததிராயுடன் ஒப்பிடலாம். “சமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்த கிரிக்கெட் புத்தகம் என்று இந்நூலைப் பற்றி பீட்டர் ரீபக் (ஆஸ்திரேலிய கிரிக்கெட் விமர்சகர்) சொல்வது மிகையல்ல. ராகுலின் நகைச்சுவை நுட்பமான சாமர்த்தியமான குறுக்கீடற்ற விவரணைகளால் ஏற்படுவது. நடை மற்றும் நகைச்சுவைக்காகவே இந்நூலை படிக்கலாம். கூடவே இது ஒரு முக்கிய வரலாற்று ஆவணமும்.
2002-04இல் இந்தியா-பாக் நட்பு புதுப்பிக்கப்பட்டு மீடியா துணையுடன் மிகையாக கொண்டாடப்பட்ட தருணத்தில் இந்திய அணி கங்குலி தலைமையில் பாகிஸ்தானில் ஒருநாள் மற்றும் டெஸ்டு ஆட்டங்கள் ஆட செல்கிறது. அப்போது Guardian இதழுக்காக இத்தொடரை பதிவு செய்ய அங்கு பயணித்த ஒரு வங்காளி பத்திரிகையாளர் தான் ராகுல் பட்டாச்சாரியா. இத்தொடரின் போது கிரிக்கெட் பார்ப்பதற்காக பதினோராயிரம் இந்தியர்கள் எல்லை கடந்து பாகிஸ்தான் செல்கிறார்கள். கிரிக்கெட் பார்ப்பது என்பது ஒரு வெறும் சாக்கு. மக்களுக்கு எல்லைக்கு அப்பால் சென்று தம் வரலாற்று சகோதர-எதிரிகளை காண, கவனிக்க, கலாச்சார மாற்று அல்லது ஒருமையில் ஊற ஒரு வாய்ப்பு. பாகிஸ்தான் அரசு முஷாரபின் கீழ் தன்னை ஒரு நவீனப்பட்ட இஸ்லாமிய அரசாக முன்னெடுக்க பிரயத்தனிக்கும் காலம். எதிரி பிம்பத்தை சற்று நேரம் உறையிலிட்டு கைகுலுக்க முனையும் சந்தர்ப்பம். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளூர் தீவிரவாத பொறியில் மாட்டி பெரும் நட்டத்தில் மூழ்குகிறது. தொடர்குண்டு வெடிப்பு பீதியால் சொந்த மண்ணில் கிரிக்கெட் ஆடாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் கண்கள் மங்கி தலை பரட்டையாகி வயிறு ஊதி சவலையான நிலையில் இருக்கிறது. இந்திய பயணம் பாக் கிரிக்கெட்டுக்கு ஒரு புத்தியிர்ப்பு நிகழ்வு மில்லியன் கணக்கில் கிரிக்கெட் விளம்பர மற்றும் டீ.வி நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. ஒளிபரப்பு உரிமையை வாங்கின Ten Sportsஇடம் இருந்து கடன் வாங்கி இந்தியாவில் ஆட்டத்தை காட்டும் தூர்தர்ஷன்  விதிமுறைகளை இந்தியத்தனமாய் மீறி உள்ளூர் விளம்பர நிறுவனங்களுக்கு விற்கிறது. பாகிஸ்தானில் ஹோட்டல்கள் இந்த ஒரு மாதத்தில் அறைகளை ஒருநாளைக்கு ரூபாய் இருபதினாயிரத்துக்கு மேல் வாடகைக்கு விட்டு அதுவரையிலான 9/11 பொருளாதார மந்தநிலை நட்டத்தை ஈடுகட்ட முயல்கின்றன. ஒருநாள் ஆட்டங்கள் முடியும் ஒவ்வொரு மாலையும் வாஜ்பாய் கங்குலியை போனில் அழைத்து சௌகரியம் விசாரிக்கிறார். மக்களும் எல்லைதாண்டிய கலாச்சார பங்கிடலும், வணிகமும், மீடியா சித்தரிப்புகளும் வாமன வளர்ச்சி காண்கின்றன. ஒரு போலியான மிகைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பவாத வளர்ச்சியாகவும் இந்த வரலாற்று வீக்கம் உள்ளது. பாகிஸ்தானியர் இந்திய பயணிகளிடம் மிகுந்த வாஞ்சையுடன் நடந்து கொள்கின்றனர். இந்திய வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கி கடைக்காரர்கள் புன்னகையுடன் மறுக்கிறார்கள். இந்தியன் என்ற துருப்புச்சீட்டு இருந்தால் பாகிஸ்தானில் மக்கள், அரசுத்துறை, போலீஸ், கலைஞர்கள் என்ற எந்த மட்டத்திலும் கவனமும் உதவிகளும் தாராளமயமாகின்றன. இந்தியா நம் நண்பன் என்ற அரசின் மிகை பரப்புவாதம் எளிதில் மக்களிடம் தொற்றிக் கொள்கிறது. ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றி பெற பெரும்பான்மையான பார்வையாளர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்யும் சர்ரியலான காட்சி ஒன்றை ராகுல் பதிவு செய்கிறார். “நல்லவேளை இந்தியா ஜெயித்தது, அப்பாடா என்பது பாகிஸ்தானியரின் அடிப்படையான மனநிலையாக அப்போது உள்ளது. டெஸ்டு தொடரை பாகிஸ்தான் இந்தியாவிடம் இழக்கும் போதும் “கோழைத்தனமாக இழந்தது தான் மக்களையும் மீடியாவையும் கோபமுற செய்கிறது. மக்கள் பொதுவாக இந்த தொடர்களின் முடிவுகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதாய் நம்புகிறார்கள். தெருவிலும் கடைத்திண்ணைகளிலும் எந்த குழுமத்திலும் பரபரப்பாகவும் சரணடைதல் மனநிலையுடனும் இதை பேசிக் கொள்கிறார்கள். பொருளாதார மற்றும் சர்வதேச சூழல் காரணமாய் ஏற்பட்ட அரசின் இந்திய ஆதரவு நிலைப்பாடு பொதுமக்களாலும் எப்படி ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள் என்பது தான் இந்த புத்தகம் முன்வைக்கும் முக்கியமான சுவாரஸ்யங்களுள் ஒன்று.
பாகிஸ்தானியர் இந்தியா தங்கள் எதிரி என்பதை உள்ளூர உணர்ந்து தான் இருக்கிறார்கள். ஜின்னா பிரிட்டிஷ் அரசிடம் தனிநாடு கோரிய நாள் மார்ச் 23. இந்நாள் பாகிஸ்தான் தினமாக கொண்டாடப்படுகிறது. அப்போது லாஹூர் தாண்டி ஒரு கால்வாய்க்கு ராகுல் தன் நண்பன் சாதுடன் செல்கிறார். அப்பால் விரிந்து கொழிக்கும் நிலவெளி. “அது என்ன? என்ற ராகுல் கேட்கிறார். அதற்கு சாத் ஒரு உணர்ச்சிகர மனநிலையில் “அது பாகிஸ்தானின் நிலம்; இந்தியாவுடையது அல்ல என்கிறார். ராகுல் பின்னர் “நான் அங்கு என்ன விளைகிறது என்று கேட்க விரும்பினேன் என்று திருத்திக் கொள்கிறார். இருவரும் சங்கடத்தால் நெளிகிறார்கள். அவர்களின் நட்பு பின்னர் பாகப்பிரிவினை முரண்பாடு கொண்ட சகோதரர்களிடையே போல் கொணலாகிறது; மாற்றிக் கொள்ள முடியாதபடி செயற்கையான அன்பு பரிவர்த்தனை கொண்டதாகிறது. இந்த சிறுசம்பவம் இந்திய பாகிஸ்தான் பொதுமக்களின் ஆதார பரிவர்த்தனையின் உருவகம் எனலாம். அவர்கள் அரசியல் வரலாற்று நாயகர்களின் கைப்பாவைகள். விரல் அசைவுக்கு பொம்மை உற்சாகமாய் கைதூக்க வேண்டும் அல்லது தோளை தொங்கப் போட வேண்டும். பின்னணிக் குரலுக்கு இருக்கவே இருக்கிறது மீடியா. ஆனாலும் மக்கள் இந்த அரசியல் வாய்ப்பை பயன்படுத்தி முடிந்த வரை கொண்டாடுகிறார்கள். ஏதோ இந்த அபத்தத்தின் உண்மையை புரிந்து கொண்டவர்கள் போல் அவர்கள் எதிரியான நண்பனையும் நண்பனான விரோதியையும் மீண்டும் விரோதியாகப் போகும் நண்பனையும் தங்கள் அணைக்கும் கைகளுக்குள் சில தருணங்கள் பத்திரப்படுத்தி தங்கள் வெம்மையை காட்ட விரும்புகிறார்கள். மனிதன் எப்படியும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறான். வரலாற்றின் அத்தனை மூர்க்க மடத்தன அழிவுகளுக்கு மத்தியிலும் மனிதனை இந்த விழைவு தான் பைத்தியமாகாமல் இருக்க காப்பாற்றி இருக்கிறது போலும். எப்போதும் இந்த இரண்டு உலகமும் இருக்கிறது. அரசும் பிற நிறுவனங்களும் நம்மை வாழ நிர்பந்திக்கும் உலகம். நாமாக உள்விழைககளின் தூண்டலில் வாழும் உலகம். இந்திய பாக் நட்பு பரிபாலனை போன்ற ஒரு வரலாற்று சந்தர்பத்தில் இந்த உண்மை மேலெழுகிறது. வெவ்வேறு நுண்தகவல்கள் மூலம் ராகுல் பட்டாச்சாரியா இதை பல்வேறு நிலையிலான ஒவ்வொரு இந்திய-பாக் சந்திப்பின் போது சித்தரிக்கிறார். ஒரு எளிய நிலையில் இது நிகழ்வதை இச்சம்பவம் காட்டுகிறது. மூன்றாவது டெஸ்டில் ராகுல் திராவிட் 270 அடிக்கிறார். பாகிஸ்தான் தோற்கிறது. அன்று மாலை தெருவில் சில இளைஞர்கள் இன்சுலேஷன் டேப் சுற்றப்பட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆடுகிறார்கள். ராகுல் பட்டாச்சாரியா அவர்களுடன் சேர்ந்து ஆட விரும்புகிறார். அவ்விளைஞர்களில் ஒருவன் வேடிக்கையாக மறுக்கிறான் “முடியாது உன்னை சேர்த்துக் கொள்ள முடியாது. எங்களுக்கு எதிராக 270 அடித்தது நீ தானே. ஆனாலும் ராகுல் அவர்களுடன் சேர்ந்து மிகுந்த உற்சாகத்துடன் விளையாடுகிறார்.
ஒரு பயண நூலாகவும் Pundits from Pakistan மிக வசீகரமான காட்சிகளை கொண்டது. மிக முக்கியமாக கலாச்சார அரசியல் ஆழங்கள் வெளிப்பட்டாலும் பட்டாச்சாரியா இதை ஒரு கிரிக்கெட் ஆவணமாக முன்னிறுத்தவே பிரயத்தனப்படுகிறார். கிரிக்கெட் வழி அவர் மற்றொரு உலகத்தை காட்டுகிறார். வெளித்தோல். உரிக்க உரிக்க கிரிக்கெட் வந்து கொண்டே இருக்கும்படி அவர் தன் உரைநடையில் பல்வேறு தகவல்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார். இப்புத்தகம் ஒரு பயணி நேரிடும் அதீத அனுபங்களின் களைப்பு மற்றும் வெறுமையுடன் முடிகிறது. ஒரு புது நாடும், அதன் மக்களும், அவர்கள் எதிரிடும் வரலாற்று தருணமும் ஏற்படுத்தும் மனஎழுச்சி அந்த ஒருமாத கிரிக்கெட் பயணத்தின் கொடை இத்தனையும் அடைய, மக்களின் ஆதார அன்பின் மேலிடலை உணர, அவர்களின் பாதுகாப்பின்மையை உள்வாங்க, மனிதர்களின் அசட்டுத்தனங்கள் எல்லைக்கு எப்பக்கமும் ஒன்றே என்பதை உணர, இத்தனைக்கும் மேலாக பாகிஸ்தான் ஆன்மாவின் பரிமாணங்களை புரிய முயல ராகுல் பட்டாச்சாரியாவுக்கு கிரிக்கெட் ஒரு தோரணை மட்டுமே. ஆனால் புத்தகத்தில் அது தோரணையற்ற தோரணை என்பதே முக்கியம். ஒன்றை உணர்த்த மற்றொன்றை செய்வதை உணராமலே நமக்கு வெளிப்படையாக உணர்த்தாமலே செய்வது உச்சபட்ச எழுத்துக்கலை. அப்பட்டமான சில பத்திரிகையாள ஆர்ப்பாட்டங்கள், மேட்ரொபொலிடன் மனநிலை ஆகியவை உதிர்த்தால் ஒரு வறட்டுப்புன்னகையை உதட்டுடன் ஒட்டி விட்டால் ராகுல் பட்டாச்சாரியா நம்மூர் அசோகமித்திரன் தான் இந்நூலுடன் தமிழில் ஒப்பிடக்கூடிய (சற்றே அடங்கின தொனியிலான) புத்தகம் “பதினெட்டாவது அட்சக்கோடு. ஆக அசோகமித்திரன் வாசகர்களுக்கு “Pundits from Pakistanகட்டாயம் பிடிக்கும் எனலாம்.
புத்தக பதிப்பு Picador
விலை 200 (flipkart.comஇல் கிடைக்கிறது)
Read More

Saturday 27 November 2010

தேர்வு குளறுபடிக்கு யார் பலிகடா?


 கிரிக்கெட்டில் ஒரு வீரரை தேர்வு செய்ய அடிப்படை என்ன?
திறமை. இத்திறமையை உள்ளுணர்வு சார்ந்து தேர்வாளர் கண்டறியலாம். அல்லது ஆட்ட ரிக்கார்டை வைத்து முடிவு செய்யலாம். மற்றொன்று ஆட்டவகைமைக்கான பொருத்தம்.
T20க்கு பொருத்தமானவர் பலசமயம் ஒருநாள் அட்டத்துக்கு கூட தோதாக இருப்பதில்லை. மனநிலை மற்றும் தன்னம்பிக்கை ஆகிய காரணங்களுக்கு ஓஜ்ஹா, யூசுப் பதான் என உதாரணங்கள் சொல்லலாம். திறமைக்கு இன்றைய ஆட்டத்தில் (இந்தியா-நியுசிலாந்து ஒருநாள் ஆட்டம்) ஆடின சாஹாவை சொல்லலாம். சாஹாவின் மட்டையாட்டம் சற்று மட்டம் என்பது நமக்குத் தெரியும். மன உறுதி கொண்ட ஒரு சராசரி மட்டையாளர் அவர். அவரது கீப்பிங்கும் ஒன்றும் அபாரம் அல்ல. அவர் விசயத்தில் தேர்வாளர்கள் சிறு தவறு செய்கிறார்கள். சீனியர்கள் நடுக்கமான ஒரு மட்டையாட்ட வரிசையில் அவரை தேர்ந்ததால் அணியின் சமநிலை சற்று குலைந்து விட்டது. ஐந்து விக்கெட் இழந்தால் இந்தியாவின் மென்மையான அடிவயிறு எளிதாக இனி வெளிப்பட்டு விடும். கடைசி பத்து ஓவர்களில் பந்து வீச்சாளரில் ஒருவர் இனி பொறுப்பெடுத்து ஆட வேண்டி இருக்கும். சாஹாவால் மட்டையாட முடியாதா?
முடியும். ஒரு தீயணைப்பு வீரராக. 35-40 ஓவர்களுக்கு 5க்க்கு மேற்பட்ட விக்கேட்டுகள் இழந்து தடுமாறும் நிலையில் சாஹாவால் பொறுமையாக போராடி இன்னிங்சை இறுக்கி கட்டி முடிச்சிட முடியும். சுருக்கமாக, சாஹா நிச்சயம் ஒரு வளமையான முதலீடு அல்ல. சாஹா எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்? அவரது கீப்பிங் திறமைக்காக என்கிறார் அணித்தலைவர் காம்பிர். ஆனால் ஒருநாள் ஆட்டத்துக்கு கீப்பிங்கை விட அதிரடி மட்டையாட்டமே அதி முக்கியம். ஒரு நல்ல கீப்பரை விட அதிக வசூல் ஆகக் கூடியவர் ஒரு பாதுக்காப்பான கீப்பரும் ஆனால் மிக நல்ல மட்டையாளறுமான ஒரு ஆல்ரவுண்டரே. தேர்வாளர்கள் தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல் அல்லது கர்நாடகாவின் கவுதம் போன்றோரில் முத்லீடு செய்ய வேண்டும். பார்த்திவுக்கு போதுமான ஒருநாள் வாய்ப்புகள் தரப்படவில்லை. அவரை விட நல்ல கீப்பரான தினேஷ் துவக்க வரிசையில் வீணடிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் (276 மட்டுமே அடித்துள்ள நிலையில்) இந்தியா தோல்வியுறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வெற்றி தோல்வி குறித்து அதிகம் அலட்டிக் கொள்ள ஒன்றும் இல்லை. இன்று தோற்று விட்டால் அடுத்த ஆட்டத்திற்கு யார் அணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று யோசிக்கலாம்.
நிஜத்தில் இன்றைய முக்கிய மட்டையாட்ட திணறலுக்கு காரணம் சமநிலையின்மை. அதற்கு காரணம் சாஹாவின் தேர்வு. ஆனால் சமநிலையை மீட்க சாஹாவை விலக்க முடியாது. அணியில் அவர் மட்டுமே கீப்பர். இன்றைய ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகள் எடுத்தால் கூட தோற்கிற நிலையில் அஷ்வின் விலக்கப்படுவார். அல்லது ஐந்து விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். அஷ்வினின் இடத்தில் சவுரப் திவாரி அல்லது சுழலர் ஜடேஜா அடுத்த ஆட்டத்தில் கொண்டு வரப்படுவார். இன்றைய ஆட்டத்தில் நமது பந்து வீச்சு நன்றாக உள்ள பட்சத்தில் (பதான் நன்றாக வீசும் பட்சத்தில்) மட்டையாளர் உள்ளே வர வாய்ப்பு அதிகம் இருக்கும். நியுசீலாந்து சுழலை நன்றாக ஆடி இலக்கை எளிதாக அடைந்தால் ஜடேஜா வருவார். இதனை நான் சொல்லக் காரணம் தேர்வாளர்கள் செய்யும் ஒரு அடிப்படை தவறால் நடக்கும் அநியாயத்தை சுட்டத் தான். ரஞ்சி தொடர்களில் இரண்டு பருவங்களிலுமாக நன்றாக ஆடி, இப்போது ஹர்பஜனும் இல்லாத பட்சத்தில், ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு இத்தொடரில் தொடர்ச்சியாக ஒரு ஐந்து ஆட்டங்கள் ஏனும் ஆட வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். தேர்வாளர்கள் மட்டையாட்ட தன்னம்பிக்கை உள்ள ஒரு நபரை கொண்டு வந்திருந்தால் இது எளிதாகி இருக்கும். அறுவை சிகிச்சையின் போது கத்தியையும் சேர்த்து உள்ளே வைத்து தைத்து விடுவது போன்ற நிலைமை இது. அவசரமாக ஒரு பலிகடா தேவை!
Read More

Friday 26 November 2010

தென்னாப்பிரிக்க தொடர்: சாத்தியங்கள் மற்றும் ஊகங்கள்

சமகாலம் கிரிக்கெட்டில் பந்துவீச்சின் இலையுதிர் பருவம் எனலாம். தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்டு எந்த அணியுமே ஒரு ஆட்டத்துக்கு முன்னால் தன் மட்டையாட்ட வலிமையைத் தான் பெரிதும் நம்புகிறது; எந்த அணியும் டாஸ் வென்று மிக அரிதாகவே பந்து வீச விரும்புகிறது. பயணப்படும் அணிகள் எதிர்பார்ப்பது தம் மட்டையாளர்கள் ஓட்டங்களைக் குவிக்க வேண்டும் என்பதே. 500க்கு மேற்பட்ட ஓட்டங்கள் ஏற்படுத்தும் நெருக்கடி பந்து வீச்சுக்கு இல்லாத ரெண்டு கோரப் பற்களை தந்து விடுகிறது. உலகமெங்கும் ஆடுகளங்கள் சோர்வுற்று மெதுவாகி வருவதும் மேற்சொன்ன பந்து வீச்சின் அந்திம பருவமும் இந்த போக்குக்கு காரணங்கள். இந்த பின்னணியில் தென்னாப்பிரிக்காவுக்கு பயணப்படப் போகும் இந்திய அணி நிச்சயம் பந்து வீச்சை பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளாது எனலாம். நமது எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கும்?

தோனி தெ.ஆப்பிரிக்க பயணம் முழுக்க சஹீர்கான் வலுவான உடல்தகுதியுடன் இருக்க எதிர்பார்ப்பார். துணை வீச்சாளர்களான ஸ்ரீசாந்தும் இஷாந்தும் கட்டுப்பாடோடு வீச வேண்டும். இந்த மூவரணி தொடர் முழுக்க கவனச்சிதறல்களோ சேதங்களோ இன்றி நிலைத்தாலே தோனி ஒரு பெருமூச்சு விடுவார். தென்னாப்பிரிக்காவின் அனைத்து ஆடுகளங்களும் எகிறாது. சோதனையான களங்களிலும் நமது மட்டையாட்ட வரிசையால் சுதாரிக்க முடியும். திறமையும் அனுபவமும் ஆட்டநிலையில் இருந்து வேறுபட்டவை. ஆட்டநிலை அன்பைப் போல் சீக்கிரம் காணாமல் போய் எதிர்பாராமல் பின் வந்து அணைப்பது. ஏழு பேரில் நால்வர் நல்ல ஆட்டநிலையில் ஆடினாலே இந்தியாவால் தெ.ஆப்பிரிக்க தொடரில் நிலைக்க முடியும். திறன்நிலையைப் பொறுத்து அணி முழு ஆரோக்கியத்தோடு இருந்தால் ஒழிய தோனிக்கு இத்தொடரை வெல்வதை விட டிரா செய்வதே ஆதார நோக்கமாக இருக்கும். 96இல் இருந்து இதுவரை தென்னாப்ப்ரிக்காவுடன் இந்தியா ஆடிய டெஸ்டு ஆட்டங்களை நினைவுபடுத்தி பாருங்கள். பந்து வீச்சு ஒருசில செஷன்களில் மட்டுமே நம்மை சேதப்படுத்தி உள்ளது. தொடர்ந்து நமக்கு நெருக்கடி அளித்து வந்துள்ளது என்ன?
இரண்டு விசயங்கள். ஒன்று தென்னாப்பிரிக்காவின் மட்டையாட்டம். அது பொறுமை மற்றும் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டது. நீண்ட நேரம் ஆடி பெரும் ஸ்கோர்களைக் குவிக்கக் கூடியது. தென்னாப்பிரிக்கா கட்டாயம் இலவச விக்கெட்டுகளை தராது. தென்னாப்ப்ரிக்க மட்டையாளர்களை நெருக்கடியில் தொடர்ந்து வைக்க அபாரமான பொறுமை, கட்டுப்பாடு மற்றும் திறமை வேண்டும். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தென்னாப்பிரிக்க மட்டையாட்ட தேருக்கு எப்படி கட்டை போட்டு நிறுத்துவது என்பதே முக்கிய பிரச்சனையாக நமக்கு இருந்துள்ளது. வரப்போகும் பயணத்தில் தென்னாப்பிரிக்காவின் மட்டையாட்டம் சீர்குலைந்தால் சுவாரஸ்யமாக இருக்கும். அது வேறுவிதங்களில் இந்தியாவை தாக்கி சரிக்க முயலும். ஆட்டத்தில் எதிர்பாரா தன்மை, நாடகீய தருணங்கள் உருவாகும். இல்லாத பட்சத்தில் இத்தொடரின் டெஸ்டுகள் ஒரு புல்வெட்டும் எந்திரத்தை தொடர்ந்து பார்க்கும் அனுபவத்தை மட்டுமே தரும். சிறந்த கிரிக்கெட் மலைகளின் எழுச்சியையும், பள்ளத்தாக்குகளின் வீழ்ச்சிகளாலும் அடையாளப்படுவது.
அடுத்து ஒரு அணியுடன் சமமாக போராட வைப்பது எது? திறன்களா? இல்லை. இந்தியா எப்போது ஆஸ்திரேலியாவால் மன எழுச்சியுற்று தனது ஆட்டத்தரத்தை பலமடங்கு உயர்த்துவதும் ஆனால் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை மண்ணில் திணறுவதும் ஏன்? கிரிக்கெட்டில் மட்டும் இரு முரணான தன்மை கொண்ட இருப்புகள் மோதினால் தசாவதார தரிசனங்கள் கிடைப்பதில்லை. கிரிக்கெட் சமபலம் கொண்ட அசுரர்கள் மோத வேண்டிய ஆட்டம். ஆவேசமாக தாக்கி ஆடக் கூடிய அணியுடன் எதிரணி அதே பாணியிலே ஆட வேண்டும். தென்னாப்பிரிக்காவுடன் வெல்ல இந்தியா கல்லும் முள்ளுமற்ற ஒரு பாதையை தேர்ந்து கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்க பாணியில் தூங்கும் எதிரியை மட்டுமே நெரித்து கொல்ல வேண்டும்.
Read More

Wednesday 24 November 2010

அப்பாவின் புலிகள்


அப்பாவின் கட்டில் வெற்றாய் கிடந்தது. மெத்தை இல்லை, தலையணை இல்லை, அவரது சிவப்பு துண்டை யாரோ விரித்திருந்தார்கள். அப்பா ஓய்வு பெற்ற நாளில் அலுவலக பிரிவுபசார விழாவின் போது வழங்கியது. அப்பா அன்று மிக மகிழ்ச்சியாக இருந்தார்; வழக்கத்துக்கு மிகுதியாக மது அருந்தியிருந்தார். அக்காவின் அறைக் கட்டிலில் அமர்ந்தபடி அவளை அணைத்தபடி பேசிக் கொண்டே இருந்தார். குழறியபடி, நினைவுகளை, மனநிலைகளை குழப்பி அடுக்கியபடி சொப்பு சாமன்களை விளையாடத் தெரியாமல் பரப்பி முழிக்கும் குழந்தையைப் போல். அவர் அவளது இடுப்பை மெல்ல அணைத்தபோது அக்காவுக்கு சிரிப்பாக வந்தது, அம்மாவின் கண்களில் கலவரம் தெரிந்தது. அடிக்கடி அடுக்களை சென்று எட்டிப் பார்த்தவள், அக்காவிடம் எதையாவது குற்றம் சொல்லி வைது கொண்டு வந்தவள், திடீரென்று அப்பாவை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அவரது அறையில் இட்டு கதவை சாத்தினாள்.

அக்காவுக்கு அப்பாவை நன்றாக தெரிந்திருந்தது, அவள் மனதில் அப்பா பற்றி இருந்த தெளிவான சித்திரம் நேர்க்கோட்டில் ஆனது. அவள் மிகச் சின்ன வயதிலிருந்தே அப்பாவுடன் தொடர்ந்து இருந்திருக்கிறாள். அப்பாவின் தோற்றம் அவளுக்கு வாய்த்திருந்தது. நெடுகின கறுத்த உருவம், கூர்மையான நாசி மற்றும் மூக்கு, பளிச்சிடும் கண்கள். மனதளவிலும் அவள் அப்பாவின் மற்றொரு பிரதிபிம்பம் தான். வெளிப்படையான, வாழ்க்கையை கொண்டாட விழையும் போக்கு, தடங்கலற்று வெளிப்படும் ஆற்றல், கூர்மையான அறிவு, சட்டென்று ஒட்டிக் கொள்ளும் நினைவுத்திறன், இத்துடன் நிறைய சோம்பலும். அம்மா இருவரையும் பாண்டிகள் என்பாள். எனக்கு அப்பா பற்றி இருந்த நினைவுகள் ஒரு மொண்டாஜ் போல குழப்பமானது. அப்பாவை பற்றிய முதல் நினைவு சற்று பதற்றமானது. எனக்கு மூன்று வயதிருக்கும். தென்னந்தோப்பில் மடல்களையும் ஓலைகளையும் வெட்டி குவித்திருந்தனர். அப்பா என்னை தூக்கிப் பிடித்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார். இத்துடன் நினைவுச் சரடு அறுபடுகிறது, அடுத்து நான் கீழே ஒலைக் குவியல் மேல் விழுந்து கதறி அழுததாக அம்மா சொன்னாள். எனக்கு அழுத நினைவு இல்லை, ஆனால் அப்போதைய அப்பாவின் சிலநொடிகளுக்கான முகபாவம் சன்னமாய நினைவில் உள்ளது. இல்லை அதுவும் கற்பனையா? எப்படியும் அம்மா குறிப்பிட்ட விபத்து நிகழ்வுதான் நான் இன்னும் அதை நினைத்துக் கொண்டிருக்க அல்லது அப்படி ஒரு கற்பனையை உருவாக்கி இருக்க காரணமாக இருக்கலாம். அப்பா அப்போது இதே போல் ஒடிசலாக ஆனால் மேலும் உற்சாகமாக ஆரோக்கியமாக இருந்ததாக அம்மா குறிப்பிடுவாள். அடுத்த நினைவு நெய்யாற்றங்கரையில் ஒரு வைத்திய சாலையில் நான் எண்ணெய் தேய்த்து பிழியப்பட்டு சிலவேளை பனஞ்சிலாம்புகளால் போலியோ கால்கள் கட்டப்பட்டு வலியில் அல்லது அலுப்பில் (என் கற்பனையை பொறுத்து) விடாது அழுத போது அப்பா தொட்டுள்ள தோப்பில் வாதாம் மரங்களில் ஏறி காய் பறித்து வந்து நொறுக்கி பருப்பு எடுத்து தந்ததை பற்றியது. இதுவும் முதல்பாதி மட்டுமே எனக்குள் பச்சையாக இருப்பது. மிச்சம் பாட்டி சொன்னது. அப்பா மரம் ஏறி என்றுமே பார்த்தது இல்லை. அதனால் வியப்புணர்வு காரணமாக இந்நினைவும் மீளமீள தோன்றுவது.
மூன்றாவது நினைவு காட்சிபூர்வமானது அல்ல. அப்பாவே சொன்ன ஒரு சிறுதகவல். எனக்கு போலியோ காய்ச்சல் முற்றி ஜன்னி வந்து ஆஸ்பத்திரியில் கிடந்த போது ஓரு நள்ளிரவில் சில மருந்துகள் அவசரமாக தேவைப்பட்டன. அப்பா தனது லேம்பி ஸ்கூட்டரில் படுவேகமாக பல கடைகளுக்கு சென்று தேடி கடைசியில் ஒருவழியாக ஷட்டர் இழுத்து மூடப்போகும் நிலையில் ஒரு கடையில் இருந்து அம்மருந்துகளை அதிர்ஷ்டவசமாக பெற்று வந்தார். இதைப் பற்றி அம்மா சொன்ன தகவல் சற்று முரண்பட்டது. அப்பா அன்று வீட்டில் தனிமையில் இருந்தபடி பக்கத்து வீட்டு சௌதாமினியிடம் “கைகால் காண்பித்துக் கொண்டிருந்தார். இதை அம்மா ஆஸ்பத்திரியில் இருந்தபடி எப்படி கண்டுபிடித்தாள் என்பது அப்போது புதிராக இருந்தது. அப்பாவின் இத்தகவல் பற்றிய மற்றொரு முரண்பாடும் உண்டு. அப்பாவுக்கு ஸ்கூட்டரை மிகுந்த தயக்கத்துடன் கிட்டத்தட்ட 15-20 கி.மி வேகத்திலேயே செல்வார். அவரோடு செல்லும் போது பலசமயம் வெட்கம் பிடுங்கித் தின்னும், பாதசாரிகள் அவரை தாராளமாய் தாண்டி சென்று சில சமயம் பரிகாசமாய் திரும்பிப் பார்க்க வேறு செய்வார்கள். இப்படி கூடப் படிக்கிற மாணவர்களை பின்சீட்டில் இருந்தபடி எதிரிட நேரும் போது இறங்கி நடந்து போய் விடுவேன். “என்னால் ஜெட் வேகத்திலே எல்லாம் போக முடியாது, வேணும்னா எறங்கிப் போ என்று இறங்கிய பின் அப்பா முடிவாய் சொல்வார்.
அந்த நீல-வெள்ளை லாம்பி அப்பாவுக்கு பழகி பழகி கொஞ்சம் அவர் குணம் ஒட்டி விட்டிருந்தது. ஓய்வுக்கு பிறகு அப்பா வெளியில் செல்லும் போது வண்டி எடுப்பதில்லை. கைநடுங்குவதாக, சமன் செய்ய முடிவதில்லை என்று காரணங்கள் சொன்னார். உதைத்து கண்ணை மூடி விட்டால் தானே தன்னை வீடு சேர்த்து விடும் என்று அப்பா பெருமைப்பட்ட ஸ்கூட்டர் மீது அவருக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டிருந்தது. பின்னர் நான் அதில் தான் வண்டி பழகினேன். இருமுறை விழுந்து சியாய்த்து சுளுக்கிய பின் நண்பர்களின் வண்டியில் பழகுவதாக முடிவு செய்தேன். சமீபமாக அவ்வண்டியை சென்னைக்கு கொண்டு வரும் போது நிறைய சிரமங்கள் ஏற்பட்டன. மரண சான்றிதழ் உடனே கிடைக்காததால் அப்பாவின் பேரில் போலிக் கடிதம் ஒன்று எழுதி ரெயில்வே அதிகாரியை திருப்திப் படுத்தி பார்ஸலில் அனுப்பினேன். அப்பா இல்லாத நிலையில் அவர் கையெழுத்தை போலியாக சாய்வாக எழுதிய போது மிக சுலபமாக வந்தது. பத்து வருடங்களுக்குப் பின் அப்பா கையெழுத்தை போல செய்கிறேன், அவ்வளவு சரளமாக வந்தது, யாரிடமும் சொல்லவில்லை என்றாலும் உள்ளுக்குள் நடுக்கம் இருந்தது. சரளமாக எது வந்தாலும் இந்த வயதில் பயமும் பதற்றமும் கலந்து வருவது ஏன்?

லாம்பி ஓடும் நிலையில் இல்லை. அதை துருவேற பாதுக்காக்கவும் வாடகை வீட்டில் இடமில்லை. வீட்டு சொந்தக்காரர் வண்டியை எப்போ எடுக்கப் போறீங்க என்று பல மாதங்களாக கேட்டுக் கொண்டிருந்தார். மிக சமீபமாக சொன்ன போது அது கோபத்தில் இருந்து, கேலியில் இருந்து பழக்க விசாரணையின் தொனிக்கு மாறி இருந்தது. லாம்பியை ரிப்பேர் செய்து ஓடும் நிலைக்கு கொண்டு வருவதிலும் தொடர்ச்சியான பிரச்சனைகள்; கிக்கர் உள்சக்கரம் பழுது, கியர் அறுந்தது, இப்படி ஆரம்பித்து விடாமல் பெட்ரோல் ஒழுகுவது வரை எதாவது ஒரு கோளாறு வண்டியில் மிச்சமிருந்து கொண்டே இருந்தது. சென்னையில் அவ்வண்டியை பழுது பார்க்கும் உத்தேசத்துடன் கைவக்காத மெக்கானிக்குளே இல்லை. ஒருவர் மட்டும் வெளிப்படையாக கிடைக்கிற விலைக்கு கொடுத்து விடுங்கள் என்றார். ஆர்.சி புத்தகத்தில் பெயர் மாற்றாமல், கண்டுபிடிக்கப்படாத கோளாறுகளுடன் அதை வாங்க ஒருவர் தயாரானார், ஆனால் பாருங்கள் அப்போது பார்த்து சாவி தொலைந்து விட்டது. பூட்டை உடைத்து மாற்றி அவருக்கு கைமாறும் போது ஒரு பழகின செல்லப்பிராணி போல் தயங்கியபடி நகர்ந்ததாய் தோன்றியது; அல்லது அந்த வண்டி நகரும் பாணியே அப்படியாக இருக்கலாம்.

அப்பாவின் நினைவுகள் காலவரிசைப்படி இல்லை என்று சொன்னேன். அதாவது எனது ஐந்து வயதிற்கு பிறகு அப்பா எப்படி இருந்தார், பேசினார், நடந்தார், சிரித்தார், அழுதார் எதுவுமே மனப்பரப்பில் இல்லை. அப்பா அப்போது கடுமையான் போதையில் அலுவலகத்தில் தகராறு செய்து மொட்டை மாடியில் நின்று குதிப்பதாய் மிரட்டியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். தொழிற்சங்கவாதிகளுடன் முரண்பட்டதால் பணிநீக்கம் நீண்டு கொண்டே சென்றது. அதோடு அப்பாவுக்கு அம்மாவின் பாலியல் ஒழுக்கம் மீது தேவையற்ற சந்தேகங்கள் வலுத்து வந்தது. ஒவ்வொரு நாளும் புதிய ஒரு கள்ளக்காதலனோடு இணைத்து பேசி அவளை அடித்து வதைத்து வந்தார். ஒரு நாள் இப்படி அம்மாவை தாத்தாவுடன் கோர்த்து பேசியதில் அவர் காயப்பட்டு எங்கள் வீட்டுக்கு பின்னர் வரவே இல்லை. அப்பாவின் அடி உதைகளை, வசைகளின் வன்மத்தை விட அவரது அபாரமான கற்பனை எங்களை மிக மோசமாக பயமுறுத்திய காலம் அது. சென்னையில் உள்ள மாமா (அம்மாவின் அண்ணன்) என்னை அழைத்து சென்று விட்டார். அப்பாவை ரெண்டு வருடங்களுக்கு நான் பார்க்கவே இல்லை. மாமா வீட்டுக்கு என்னை தேடி வந்திருந்த போது அவர் மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு வேலைக்கு ஒழுங்காய் செல்வதாக சொன்னார்கள். ஆனால் அன்று அவர் கண்கள் சிவப்பாய் பழுத்திருந்தது. அவருடன் வெளியே சென்று வர மாமா அனுமதிக்க இல்லை. அப்பா அன்று நள்ளிரவே சொல்லாமல் ஊருக்கு கிளம்பி விட்டார். அப்புறம் கொஞ்ச நாட்கள் பள்ளிக்கு செல்லும் போது சாலைகளில் அவரை தேடியிருக்கிறேன். நான் அப்பாவை போலவே கோணலாக சிரிக்க ஆரம்பித்து விட்டதாய் அத்தை சொன்னார்கள். அது பொய். அப்பா சிரிப்பதே இல்லை. கூடிய மட்டும் ஒரு பெரிய புன்னகை. கசப்பையும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்த அதே புன்னகைதான் எப்போதும்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் அப்பா திடீரென காணாமல் போனார். ஊர் சுற்றப் போனதாக, தேசாடனம் என்று ஆரம்பத்தில் இருந்த நம்பிக்கை சிறுக சிறுக அம்மாவுக்கும் உறவினருக்கும் இல்லாமல் போனது. ஒரு கட்டத்தில் அவர் கொல்லப்பட்டதாக, விபத்தில் இறந்ததாக நம்பத் தொடங்கிய போது, அலுவலகத்தில் அவர் காணாமல் போனவராக உறுதி செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் பிரத்யட்சமானார். அவர் நிலைமை மிக மோசமாக இருந்ததாக அம்மா போனில் அழைத்து மாமாவிடம் சொன்னாள். குடிப்பதை முழுக்க நிறுத்தி விட்டிருந்ததாகவும் தெரிவித்தாள். மாமாவுக்கு நம்பிக்கை வரவில்லை. என்னை திரும்ப ஊருக்கு அனுப்ப அவர் மிகவும் தயங்கினார். படிப்பு பாதிக்கப்படும் என்று வலியுறுத்தி சொன்னார். பிறகு ஊருக்கு திரும்ப சென்ற போது இரு விசயங்கள் அதிர்ச்சியளிப்பதாக இருந்தன.
அப்பா முன்னை விட அதிகமாய் குடிப்பவராக துன்புறுத்துபவராக மாறி இருந்தார். அலுவலகத்திலும் அவர் ஒரு மிதமான போதையுடன் இயங்குவதை அனுமதித்தார்கள். என்னை ஒரு வளர்ந்த ஆண் போல் அவர் நடத்தினார். கற்பனை செய்திருந்த வாத்சல்யமும் நெருக்கமும் சாத்தியப்படாது என்றும், அப்படி ஒருவேளை எங்கள் உறவு உருக்கமாக அமைந்தால் செயற்கையாக சங்கடமாக இருக்கும் என்று எனக்கு பட்டது, அவரும் அப்படி நினைத்தாரா என்று தெரியவில்லை. நாங்கள் சேர்ந்து குளத்துக்கு ஒரே துவர்த்து சொப்புக் கட்டியுடன் சென்றோம், என்னை லாம்பியில் பள்ளிக்கு கொண்டு விட்டார், இழவு, நிச்சயதார்த்தம், திருமணம் என எல்லா சடங்குகளுக்கும் கூடவே அழைத்து சென்றார், அல்லது பதிலாக அனுப்பினார். பன்னிரெண்டு வயதுக்கு மேல் நான் தெருப்பெண்களை நோட்டம் விடுவதை அவர் பொருட்படுத்தவே இல்லை. மழை பெய்து தணிந்த ஒரு மௌனமான மாலையில் நான் கட்டிலில் மல்லாந்து கிடந்தேன். வெறுமனே யோசித்தபடி, தூங்க முயன்றபடி. அப்போது அப்பா வந்து “இப்போது ஒரு பெண்ணை கட்டிப் பிடித்து கிடந்தால் கதகதப்பாக இதமாக இருக்கும் இல்லையாடே? என்றார். எத்தனை யோசித்தும் அவர் அக்கறையாகவா கேலி தொனியிலா கேட்டார் என்பது நினைவு வரவில்லை. இரண்டும் சாத்தியம் தான்.
பிறகு அப்பாவிடம் இருந்த கொஞ்ச நஞ்ச அணுக்கமும் விலகி வெறுக்கத் தொடங்கினேன். தொடர்ந்து மோதினோம். ஒருமுறை என் முகத்தில் கொதிக்கிற டீயை ஊற்றினார். அண்டை வீட்டாரும் தெருவும் பார்த்திருக்க வாசலில் இருந்து என்னை பிடித்து வெளித்தள்ளி கதவை சாத்தினார். பல மாதங்கள் நாங்கள் பேசிக் கொள்ளாமல் இருந்தது உண்டு. ஆனால் திடீரென்று எல்லாம் மறந்து என்னிடம் சாதாரணமாக பேச ஆரம்பிப்பார். எங்கள் உறவு மேலும் மேலும் முரடு தட்டிப் போனதற்கு இந்த மன்னிப்புகளோ, அரவணைப்புகளோ அற்ற இணைதல்கள் காரணம் என்று நினைத்தேன். பின்னர் சிதைக்கு தீ வைத்த போது அப்படி வெறுத்து மறுப்பதிலும் அலாதியான உரிமை கொண்டாடலும், பிரீதியும் இருந்ததாய் தோன்றியது. யாரும் இல்லாத பகல் வேளைகளில் சுடுகாட்டு சாம்பல் குவியல் பக்கமாய் குத்திட்டிருந்து சிந்திக்கையில் டீ மூஞ்சியில் பட்டு எரிந்த நினைவு புல்லரிக்க வைத்தது. அவர் என்னை அறைந்ததை, நிராகரித்ததை, திட்டியதை, மிகச்சிக்கனமாய் அன்பு காட்டிய காட்சிகளை நினைத்து நினைத்து சேகரித்துக் கொண்டேன்.

அக்காவுக்கு அப்பாவுடன் முரண்பாடுகள், தகராறுகள் வருவதுண்டு, ஆனால் அவள் அப்பாவை உள்ளார ஆதர்சித்தாள், அது அவருக்கும் தெரிந்திருந்தது. அவளுடைய அப்பா முழுமையானவராக இருந்தார். தொட்டிலில் தூங்க வைத்தவராக, சினிமாவுக்கு, ஹோட்டலுக்கு அழைத்துப் போனவராக, கொஞ்சி சீராட்டியவராக, பாடம் சொல்லித் தந்தவராக, பாதுகாத்தவராக இருந்தார். ஒவ்வொரு பள்ளி வகுப்பிலும் அப்பா வாங்கித் தந்த புத்தாடைகளை, விளையாட்டுப் பொருட்களை இப்போதும் சேமித்து வைத்திருக்கிறாள். வீட்டில் என் நினைவாக மிகச் சில பொருட்களே இருந்தன. ஆல்பங்களில் அப்பாவும் அக்காவும் அவளது தோழிகளுமே மீண்டும் மீண்டும் வந்தார்கள். அப்பாவை நியாயப்படுத்த வசதியாக அவள் நினைவுகள் இருந்தன. அப்பாவின் குடியை, ஒழுங்கீனங்கள் மற்றும் வன்முறையை நோக்கி எப்படி நகர்ந்தார் என்பதை தர்க்கபூர்வமாய் காலஒழுங்குபடி அவளால் விளக்க முடிந்தது; சில சந்தர்பங்கள் மாறி இருந்திருந்தால் அவர் வாழ்க்கை எப்படி எல்லாம் இருந்திருக்கும் என்பது பற்றிய கூட்டல் கழித்தல்களை படிப்படியாக வரைந்து காட்டினாள். அப்பா யார் என்பது பற்றி அவள் தெளிவாக தீர்மானமாக இருந்தாள், விளைவாக பிணத்தை எடுக்கும் வரை ஆர்ப்பரித்து அழுது புலம்பவும் ரெண்டே நாளில் இயல்பு நிலைக்கு திரும்புவது மட்டுமல்ல சிரித்து அரட்டை அடிக்கவும் அவளால் முடிந்தது. அவளுடைய அப்பா அத்தனை நேரடியாகவும் சிக்கலில்ல்லாமலும் இருந்தது தான் இதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும். அம்மா அக்காவின் இந்த பலவட்டறை நடவடிக்கையை கண்டித்தாள்; அவள் தனக்கு அம்மாவை போல நடிக்கவோ என்னைப் போல குழப்பிக்கவோ தெரியாது என்றாள். என் வரையில் இது உண்மை தான். பிணத்தருகே இரவெல்லாம் உலர்ந்த கண்களுடன் இருந்த எனக்கு ஒரு வார்த்தை கூட வெளிவர இல்லை. வெறித்தபடியே மறுநாள் மதியம் வரை இருந்தேன் இயல்பாக என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை.

அன்றிரவு போல் வேறெப்போதும் இருள் அத்தனை அடர்த்தியாய் கிட்டத்தட்ட பாசித்தாவரம் போன்ற உயிர்ப்புடன் இருந்ததில்லை. வீடெல்லாம் உறவினர்கள் நிறைந்திருந்தார்கள், தரைகளில், கிடைத்த கட்டில்களில் நெருக்கியபடி, வராந்தா மற்றும் அடுக்களை, சேமிப்பு அறைகளில் புழுக்கம் மறந்து அசந்து தூங்கிக் கிடந்தார்கள். குழந்தைகள் தூங்க மறுத்து சிணுங்கினர், சிலர் சத்தமில்லாமல் டீ.வி பார்த்தனர், அம்மாக்களிடம் அடி வாங்கி ஓலமிட்டனர், கட்டுப்படாமல் உடம்புகள் இடையே அரைகுறை ஆடைகளில் ஓடி தடுக்கியும் களைத்தும் விழுந்தனர். முன்பந்தல் நாற்காலியில் சில கிழவர்கள் நட்சத்திரங்களை பார்த்து ஒரே விசயங்களை அதிக சுவாரஸ்யமில்லாமல் திரும்ப திரும்ப பேசிக் கொண்டனர். மத்திய வயதினர் சிலர் தொப்பையை டீ பாயில் சாய்த்துக் கொண்டு சீட்டாடிக் கொண்டிருந்தனர். அவ்வப்போது நிறுத்தி விட்டு முட்டி அல்லது முழங்கால் சொறியும் வாக்கில் இறந்தவரை அல்லது பொதுவாக இறந்த காலத்தை பற்றி தீவிர பாவத்துடன் அவதானித்துக் கொண்டனர். சொந்தக்கார இளைஞர்கள் தண்ணியடிக்கவும், புகைக்கவும் தோப்பு, குளம் பக்கமாய் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். இத்தனை நடவடிக்கைகளுக்கு பிறகும் வீட்டுக்குள் ஒரு அசாத்திய அமைதி இருந்தது. குறிப்பாக கண்ணாடி பெட்டிக்குள் இருந்து அப்பா எழுந்திருக்க எத்தனிப்பதாக, புரள்வதாக, கை கால்களை உதறுவதாக தோன்றும் போது வீட்டில் வேறு எந்த உயிர்ப்பும் இருப்பதில்லை. இந்த அசைவுகளை நிறுத்தத்தான் பிணத்தை எரிக்கிறார்களோ என்று எனக்கு சில கணங்கள் தோன்றியது. எரிசிதையை கற்பித்தபோது ஒரு குரூரமான திருப்தியை ஏற்பட்டது. பெட்டியை நான் இருமுறை நெருங்கி எட்டிப் பார்த்த போதும் மாமா என்ன வேண்டும் என்றார். குளிர்மை அளவு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதாக சொன்னேன். தலையசைத்து திரும்பிக் கொண்டார்.
எங்கள் வீடு ஒரு பழைய பிராமணர் வீட்டை புனரமைத்து உருவாக்கியது. மரபான நவீன கட்டிடக் கலையின் அழகியலற்ற கலவை. மொஸைக் தரை இருக்கும், ஆனால் தேக்கு உத்தரம் மற்றும் யானைக் கால் தூண்களுடன் பழைய மோஸ்தரும் தெரியும், உள்ளே மழை பெய்தால் மடை வழி தண்ணீர் ஒழுகி  செல்லக் கூடிய அங்கணம் எனப்படும் ஒரு நடுவீட்டு தொட்டி இருந்தது. மாடியில் மூன்று அறைகள். அதற்கு மேல் மச்சு இருந்தது. ரெண்டு மாதங்களுக்கு முன்னால் அப்பா ஒருநாள் மச்சில் போய் ஒளிந்திருந்தார். அவர் மீண்டும் எங்கோ ஓடிப் போய் விட்டார் என்று ஊர் முழுக்க பரபரப்பாக கவலையுடன் தேடினோம். பிறகு மறுநாள் அவராக இறங்கி வந்து ஒன்றுமே நடக்காதது போல் டீ வாங்கி குடித்தார்.

வீட்டுக்குள் வெளிச்சம் அணைந்தும் அணையாமலும் கலவையாக தெரிந்தது; தூங்காதவர்களும், முனைபவர்களும், தவிப்பவர்களும், விழிப்பு நிலையில் இயங்குபவர்களும் சிலசமயம ஒருசேரவும், சிலபோது தனித்தனியாகவும் மூச்சு விட்டனர், இதெல்லாம் கேட்கும்படியாக நிலவியது அமைதி. அப்பாவின் ஐஸ்பெட்டி இருந்த முன்னறையில் நானும், மாமாவும், ஐயப்பன் சித்தப்பாவும் மட்டும் இருந்தோம். குழந்தைகள் கீச்சிட்டு கத்துவது கண்ணாடி டம்ளர் விழுந்து உடைவது போல் துல்லியமாக அவ்வப்போது கேட்டது. தாய்மார்கள் அவர்களை மெல்ல அதட்டி மெல்ல அறைந்து தூங்க வைக்க முயல்வதும் விசித்திரமாகவே பட்டது. நேர்த்தியான இடைவேளைகள் விட்டு அப்பாவின் ஒடுங்கின நெஞ்சுக் கூடு ஏறி இறங்கியது. காற்று இருக்கும் போது மூச்சு விடலாம் தானே என்று எனக்கு வினோதமாக தோன்றியது. அவரது உயிர்ப்பை பரிசோதிப்பதோ அல்லது பீதி கொள்வதோ அதை விட பொருத்தமற்றதாக இருந்திருக்கும். அவரை கழுத்து வரை வெள்ளைத் துணியால் கட்டியிருந்த விதம் என்னை சற்று துன்புறுத்தியது. “சேமிப்பறையில் வாழைக் குலையை உறை போட இப்படித்தான் சுற்றி சாக்கால் கட்டி வைப்போம்”. மாமா சட்டென்று திடுக்கிட்டார். என்னைப் சற்று நேரம் பார்த்து விட்டு “உள்ளே போய் படு என்றார். நான் அவரை இப்போதெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. பிணத்தை போல் மனிதனும் அனைத்தையும் புறக்கணிக்கும் நிலைக்கு சிலவேளை வந்து விடுகிறான்; பிறகு அதிலிருந்து நகர்ந்தும் விடுகிறான்.

மாமா பல்வேறு தொலைவு நிலைகளில் எரியும், பூச்சிகள் வட்டமிட்ட, விளக்குகளை கோபமாக பார்த்தார். ஒவ்வொரு விளக்கும் அதன் கீழ் சயனிக்கும் ஆளின் மனம் என்று நினைத்தேன். ஒரு அறையில் விளக்கை யாரோ அணைத்து அணைத்து இயக்குவதன் பிரதிபலிப்பு எதிர்சுவரில் கீழே உறங்குபவரின் உடல்களில் நடனமாடியது. இதைப் பார்த்த போதுதான் எனக்கு அப்பிடி தோன்றியது. மாமா திரும்பவும் கண்களை சுருக்கியபடி “எழுந்து தூங்கப் போ என்றார். என் பக்கமிருந்து வரும் வெளிச்சம் அவர் கண்களை கூச வைத்திருக்க வேண்டும். அவர் கண்கள் ஐஸ் பெட்டியை நோக்கி திரும்பி இருந்தன. எனக்கு அது வேடிக்கையாக தோன்றியது. தாடியை சொறிந்த படி அரைத் தூக்கத்தில் இருந்த சித்தப்பா சட்டென்று எழுந்து சித்தி தூங்கும் அறைக்கு சென்றார். மாமா அவரை விசித்திரமாக பார்த்தார். அப்பாவின் வாயமைப்பு மாறியபடி வந்தது. சாயந்தரம் பாதியில் நின்ற கேள்வியை கடித்தது போல் தெரிந்த உதடுகள் இப்போது சிறு புன்ன்கையை பெற்றிருந்தன. நானும் கவனமாய் புன்னகைத்தேன். அப்பாவின் முகம் மெல்ல மெல்ல விகசித்து வந்ததில் அவர் இளமையை திரும்பப் பெறுவதாய் பட்டது.

கூனன் தாத்தா ஓலை வேய்ந்த கழிப்பறையில் இருந்து கட்டை ஊன்றியபடி வெளிப்பட்டார். அவரது பழுத்த வேட்டி நிலவில் மெழுகுப் பளபளப்பு பெற்றிருந்தது. அவர் சுற்றுப் பாதையில் நடந்து வரும் போது வீட்டு சுவர் மீது யாரோ முட்டி அழைப்பதான ஓசை தொடர்ச்சியான அதிர்ந்தபடி கேட்டது. தாத்தா முன்வாசலை அடைந்து படிக்கட்டில் ஏறி அமர்ந்து கொண்டு அப்பாவின் ஐஸ்பெட்டியை ஒருமுறை பார்த்தார். கலங்கலான பார்வை. தாத்தாவின் முகத்தில் உள்ள கோடுகளில் அசைவில்லை. யானைச் செவிகள் கூர்மையாக விடைத்து நின்றன. நிலவொளி மரக்கிளைகள் வழி சல்லடையாகி முற்றத்தில் விழுந்து கொண்டிருந்தது; அந்த சன்னமான பின்னொளியில் அவரது யானைச் செவிகள் ஊடுருவப்பட்டது போன்று சிவப்பை பெற்றன. தலையின் முன்மயிர்களின் நுனிகள் மட்டும் ஒளிர்ந்தன. தாத்தாவின் உடல் எங்கும் உள்ள தடிமனான சுருக்கங்கள் அவரது அசைவுகளுக்கு ஒரு தனி உயிர்ப்பை அளித்தன. சுருங்கி சுருங்கி விரியும் ஒரு தாவரத்தை போல் அந்த வேளையில் தோன்றினார். வாசலை நோக்கி திரும்பின தாத்தா தலைகுனிந்த சூரியகாந்தி செடியைப் போல் சாலையை அல்லது நெடுகி நின்ற மரங்களை அல்லது அவற்றை கடந்து தோன்றின கட்டற்ற வானப் பரப்பை பார்த்தபடி இருந்தார். அவருக்கு அசைவதில் அதிகம் நம்பிக்கையோ விருப்பமோ இருப்பதாக தெரியவில்லை. எழுந்து சென்று நின்றேன். ஐஸ்பெட்டியின் சன்னமான உறுமல் அப்பாவின் இதய ஒலி என்றூ நினைத்துக் கொண்டேன். அல்லது ரத்த ஓட்டமாகவும் இருக்கலாம். அந்த பெரிய வீட்டின் கூறு கட்டப்பட்ட வெளிகளில் அப்பெட்டியின் அருகாமையில் உள்ள காலடி இடம் மட்டுமே எனக்கு உரிமையானது என்று அர்த்தமில்லாமல் தோன்றியது. அந்த இரவின் சூழலுக்கு, பிரத்தியேக வெளிச்சத்துக்கு, ஓசைகளுக்கு இப்படி புரியாமல் யோசிப்பது தான் உகந்ததாக இருந்தது. என் காலடிகள் கூனன் தாத்தாவுக்கு கேட்கவில்லை. நிலவு கடந்து விட அங்கு இருள் மீண்டும் அடர்ந்திருந்தது. தாத்தாவின் பளிச்சென்ற கண்கள் முன்னால் வெறித்தபடியே தலைக்கு மீதாக என்னையும் பார்ப்பதான பிரமை. அவை படிகத்தாலான வெளிச்சத்தில் அலைவுறும் இரு கோலி குண்டுகள். கூனன் தாத்தா எனது குழந்தைப் பருவத்திலும் இதே வயதில் தான் இருந்தார். அல்லது இப்போதும் அதே வயதில் தான் தங்கி இருக்கிறார். அக்காலத்தில் குழந்தைகளிடத்தில் தாத்தாவை பற்றிய ஒரு காத்திரமான நம்பிக்கை, பழங்கதை அல்லது ஜோக் ஒன்று இருந்தது. அவர் கூனி வளைந்து வளைந்து பூமிக்குள் புகுந்து பாதாள லோகம் போய் விடுவார் என்பதே அது. தாத்தாவை சபிக்கும் போது விசாலாட்சி பாட்டி இதை வலியுறுத்துவார். பாட்டியின் சிதைக்கு தீ மூட்டிய போது தாத்தா தரையை பார்த்தபடி இருந்தது நினைவில் வந்தது. இதற்கு பின் தாத்தா மேலும் ஒரு சுற்று கூனி தொலைவில் பார்த்தால் சற்றே தள்ளாட்டத்துடன் உருண்டு செல்லும் பந்தின் தோற்றம் தந்தார்.

சித்தியும் சித்தப்பாவும் இருந்த அறையின் கட்டில் ஒரு கொசுவடி-தும்மலுக்கே பூங்கா ஊஞ்சலைப் போல் உலோக ஒலி எழுப்பக் கூடியது. மாமா இருந்த இடத்தில் நிரங்கிக் கொண்டே இருந்தார். பிறகு சட்டென்று எழுந்து அறைக் கதவை தட்டி “ஐயப்பா என்றார் சத்தமாக. கட்டில் மௌனமானது. கட்டிலை கட்டுப்படுத்தியவாறு தூங்குவது அவர்களுக்கு சாத்தியம் என்று படவில்லை. ஒரு குழந்தை போல் அதட்டி வைக்கப்பட்ட கட்டில் மேல் எனக்கு பரிதாபம் வந்தது. கூனன் தாத்தாவும் மாமாவும் எதிரெதிர் திசைகளில் அமர்ந்து வீட்டை ஆகர்சித்து வலுவாக இழுத்தார்கள். அழுத்தத்தில் வீடு மேலும் மௌனமானது. ஐஸ்பெட்டியும், மின்விசிறியும், தூங்கும் தேகங்களின் நெஞ்சடிப்புகளும், தெருப்புழுதியை இழுத்துச் செல்லும் காற்றும், நிலவொளியை துரத்தியபடி நெடுநேரமாய் குலைக்கும் நாயும், போட்டியிட்டு அடிக்கடி ஊளையிடும் மற்றொரு இருப்பும் அந்த அழுத்தத்தில் தட்டையாகின. அடித்தள விரிசலின் ரேகைகள் உள்ளங்கால்கள் வழி ஓடின. கால் மாற்றி கால் மாற்றி வைத்து நான் மாடிப்படியை நெருங்கினேன்.

சிறுவயதில் எனக்கு குடல் பிடித்தமான உறுப்பாக இருந்தது. அதன் சிடுக்குகள், வளைவு நெளிவான பாதைகள் மற்றும் உள்பயணத்தின் புதிரும் தந்த கற்பனைக் கிளர்ச்சி என் ஆர்வத்தை தூண்டியபடியே இருக்கும். பிறந்த குழந்தைகளின் துருத்தின தொப்புள் பகுதியை தொட்டுப் பார்த்துக் கொள்வேன். அப்போது அக்குழந்தை என் விரல் வழி பயணிப்பதாக நினைப்பேன். ஒருமுறை மாமாவுக்கு ஹிரண்யா அறுவை சிகிச்சை நடந்தது; அவர் கட்டுடன் ஆஸ்பத்திரியின் வெள்ளை இரும்புக் கட்டிலில் கிடக்கையில் பக்கத்தில் இருந்து அவர் வயிற்றையே பார்த்துக் கொண்டிருந்தேன். மயக்கம் தெளிந்த போதெல்லாம் மாமா என்னை விரட்டினார். நான் காயமுற்ற குடலை உற்றுக் கேட்க முயல்வேன். எங்கள் வீட்டின் மிக உயிர்ப்பான பகுதியாக மாடிப் படியை நினைத்துக் கொள்வேன். மாடிப்படிதான் வீட்டின் குடல். அதன்படி அதற்கு இளம்ரோஜா பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. வீட்டின் மாடியும் அதற்கு மேலான மச்சு அறையும் எனக்கு அந்தரங்கமான கிளச்சியை அளிக்கக் கூடிய அறைகள். மச்சு அறையில் பெருச்சாளிகளும் வவ்வால்களும், என் பிறப்புக்கு முன்னரே பிறவிப்பயனை இழந்த சாயமும் தோற்றமும் தொலைத்து பரிணமித்த பொருட்கள் பலவும் சேர்ந்து வாழ்ந்தன. சிறுவனாக அங்கு சென்று பொழுது போக்குவேன். கோடை விடுமுறையில் சுத்தம் செய்து என் புத்தகங்களை அங்கு அடுக்கி பகல் வேளைகளில் வாசிப்பேன். அங்கு நேராக அமர முடியாது; அமர்ந்தால் சட்டென்று திரும்ப முடியாது; முதுகு வளைத்து முட்டியிட்டு தொழுகை செய்வது போல் இருக்க வேண்டும். காற்று வர கதவைத் திறந்தால் மட்டும் போதாது என்று சில ஓடுகளை கழற்றி வைத்திருந்தேன். அங்கிருந்து கைநீட்டி வானத்தில் துழாவுவேன்; ஒவ்வொரு பருவமும் வீட்டிலிருந்து மேலாக சில இஞ்சுகள் வளர்ந்திருப்பேன். கூரை அறையில் இருந்து தடபுடல் சத்தம் கேட்டால் அம்மா என்னையும் பெருச்சாளியையும் குழப்பிக் கொள்வாள். நான் எதிரில் எங்காவது இருப்பதை கவனிக்காமல் “சவம் இந்த பயல் கிடந்து என்ன பண்ணுறானோ என்று எரிச்சலுடன் சலித்துக் கொள்வாள். இப்படி பெருச்சாளிகளுக்கும் சிலவேளை அர்ச்சனை கிடைக்கும். இரவில் புழுக்கையிட்டு பழவாசனை கிளப்பும் ஒற்றை வவ்வால் ஒன்று பகலில் ஒருமுறை மச்சு அறையின் திறந்து ஓட்டு துவாரம் வழி இறங்கி தடதடத்தது; நான் வாசித்துக் கொண்டிருந்தேன்; முதலில் பதறி பின்னர் அது நிதானமானது. சிலசமயம் பெருச்சாளிகள் இருட்டு வாலை மூலைக்கு மூலை இழுத்தபடி ஓடும். பின்னர் பல வருடங்கள் கழித்து அப்பா அங்கு சாரத்தை விரித்துக் கொண்டு ஒருநாள் முழுக்க ரகசியமாக பதுங்கி தூங்கினார்; அல்லது ஏற்கனவே சொன்னது போல் காணாமல் போனார். அவர் படுத்த தடம் இன்னும் தூசுப் படிவத்தில் பதிந்துள்ளது; மச்சு அறைகளுக்கே உள்ள வினோத தன்மை இது.

அன்றைய இரவில் எனக்கு மச்சு அறைக்கு செல்லும் விருப்பமும், ஆழ்மன கட்டாயமும் ஏற்பட்டது. நினைவுகளால் உந்தப்பட்டு கூட அங்கு செல்ல தலைப்பட்டிருக்கலாம். இருளில் மாடிப்படி பக்க கிரில்லின் இளஞ்சிவப்பு இன்னும் தனித்து தெரிந்தது. மாடிக்கு போகும் படிகள் ஈரமாக இருந்தன. தண்ணீர் நுரையிட்டு ஓடும் சத்தம் மேலே செல்ல செல்ல அதிக ஓசையுடன் துல்லியமாக கேட்டது.. கால் வைத்ததும் படிகள் என்னை சுவீகரித்துக் கொண்டன. மேலே ஏற ஏற வீடு சில சத்தங்களை தணிக்கை செய்து விடுகிறது. உறங்குபவர்கள் தமக்குள் பேசிக் கொள்வது, முனகுவது, வார்த்தைகளை குமிழிகளாக மூக்கு வழி விடுவது தனித்து ஆழ்ந்து கேட்டது. கூனன் தாத்தா ஊன்று கட்டையால் தரையை தட்டுவது மேலேறி வந்தது. கீழே முன்னறையில் தூங்கிக் கொண்டிருந்தன கால்கள். கசிந்து வந்த வெளிச்சம் அவற்றை தவிர்த்தும் மீதாக ஊர்ந்தேறியும் விளையாடியது. அக்கால்கள் அசைவது அரவணைப்பில் தூங்கும் குழந்தையின் மொட்டைத் தலையை நினைவுபடுத்தியது. ஓய்வு கொள்ளும் அக்கால்கள் எந்நேரமும் வீரிட்டழலாம் என்று ஒரு சங்கடத்துடன் எனக்கு தோன்றியது. மெல்ல மெல்ல நடந்தேன். ரெட்டைத் தடிமனுள்ள மாடி வெளிக்கதவு. அதன் கொண்டியை தளர்த்தி கதவை இழுத்துத் திறந்தேன். காத்திருப்பு வரிசை போல் தயக்கமாக மெல்ல அது திறந்தது.
கதவைத் திறந்ததும் நிலவு பளிச்சென்று அறைந்தது; அல்லது நிலவு மொட்டைமாடியில் பட்டு சிதறி பல நூறு கிரணங்களாக திரும்பி என் மீது பாய்ந்ததாக இருக்கலாம். இப்படி ஒரு ஒளி வெள்ளத்தை பார்த்ததில்லை என்பதால் தரையில் கால் வைக்காமலே கிட்டத்தட்ட நிலைப்படியில் எம்பி நின்றேன். நான் அப்போது பூமியில் விளிம்பில் நின்று வானில் இறங்கி தயங்கி நிற்கும் மனிதன் என்று எண்ணிய போது தமாஷாக இருந்தது. உதட்டின் கீழ் பால்யத்தின் மென்மயிர்களுடன் மனம் ஒரு புறம் சிரித்தும் வேடிக்கை பார்த்தபடியும் தான் உள்ளது. அது விழித்துக் கொள்ளும் போது எல்லாமே வேடிக்கையாகி விடுகிறது. நான் அப்போது மாடியின் பரப்பை கவனிக்கவில்லை, அபரித ஒளிப் பாய்ச்சலின் ஆட்கொள்ளலில் மனம் வானிலே நிலைத்து  உலவியது. போகப் போக கண்களால் வாங்கி தணிக்கை செய்ய முடியாத படி தகித்தது அதன் ஜுவலிப்பு. மனிதனின் கண்கள் பழகி மட்டுப்படும் முன் ஆதியில் ஒளி இப்படித்தான் அதன் முழுமையில், எண்ணற்ற சிதறிய அலகுகளில் இருந்திருக்க வேண்டும். ஒளி காற்றைப் போல வீசியது, சுற்றிலும் நடுங்கும் மரங்களை, கட்டிடங்களை குறுக்குவெட்டாய் அரிந்து தள்ளியது, புயலாய் ஓலமிட்டது, நுண் துணுக்குகளாய் என் மீது கொட்டியது. மெல்ல மெல்ல ஒளி பகல் சூரியனைப் போல் சாய்ந்தது, மங்கி பூமி மேல் கவிந்தது. நான் ஒளியை உள்வாங்கியிருக்க வேண்டும் என்று அசட்டுத்தனமாய் எண்ணினேன். ஒளிக்கு அஸ்தமனம் உண்டு என்று நம்ப நிச்சயமாய் தோன்றவில்லை. அதனால் வேறெப்படி என்னால் இதை நியாயமாக விளக்க முடியும்.
அப்போது நான் மொட்டை மாடியில் அலைபரப்பி தொடர்ந்து சிலிர்த்த நீர்ப்பரப்பை கவனித்தேன். இறங்கி நடந்தேன். இது சாத்தியமே இல்லை. இத்தனை நீர் இங்கு வந்திருக்க, தேங்கி அலையடிக்க, ஒரு ஏரியைப் போல் ஆழத் தோற்றம் அளிக்க எப்படி முடியும்? நடக்க நடக்க தரை சிலசமயம் தட்டுப்படுவதும் பின் மறைவதுமாக இருந்தது. முழங்காலில் இருந்து முட்டி வரை மாறி மாறி மூழ்கி வந்தேன். நான் மையம் நோக்கி நடந்தேன். இவ்வளவு வெள்ளத்தின் தோற்றுவாயை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே நோக்கம். மையம் நெருங்கியதும் நீர்ப்பரப்பு தெளிவாக அலையற்று ஆழம் குறைந்து தெரிந்தது. பெரிய தொட்டியின் பின்னால் மறைந்து கொண்டேன். அங்கிருந்து பார்க்க பெரிய பெரிய அலைகள் வட்டமடித்து புதிய சிற்றலைகளை இணைத்துக் கொண்டு தொட்டி நோக்கி உள்-அணைவது தெரிந்தது. அவை விரியும் சுருள் வாட்களாய் கண்களை தாக்கின. கண்களை தொடர்ந்து மூடி சுதாரித்து பார்க்க வேண்டி இருந்தது. தொலைவில் தோற்றங்கள் மயங்கி வேறாய் அல்லது விரூபமாய் தெரிந்தன. சுவர்கள் வெளியே மடிந்து மடிந்து நீருக்கு பின்வாங்கின, குறுகி நீண்டன. சுவர்களுக்கு வெகுஅருகாமையில் கோடுகளால் ஆன அவ்வுருவம் மேல்ல அசைந்தது, வாலால் துழாவியபடி மேல் எழும்பியது.புலி மூடுபனியில் என் மூச்சு கோடிழுத்தது. புலியைப் பார்த்ததும் அச்சத்தை விட அதன் மாபெரும் பௌதிக இருப்பும், கற்பனைக்கெட்டாத வலிமையும் பெரும் வியப்பையே தந்தன. புலியின் நிதானமும், காலத்தை இறுக்கமாய் கைப்பற்றி வைத்திருப்பதான அதன் நம்பிக்கையும் எண்ணங்களை ஆக்கிரமித்தன. அதன் எதிரே ஒரு பிரதிபிம்பம் போல் மற்றொன்று. அந்த ஜோடிப் புலிகள் தங்கள் அசைவுகளில் ஒன்றையொன்று போலச் செய்கின்றன. அவற்றுக்கு வேறெந்த நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. முன்னும் பின்னும் வெவ்வேறு திசைகளிலுமாய் அவை திரும்பியும் காலடிகள் வைத்தும் எதையோ உறுதி செய்கின்றன. அந்த மொட்டை மாடிக்குள் அவை ஏன் வந்தன, எப்படி நுழைந்தன மற்றும் வெளியேறப் போகின்றன போன்ற கேள்விகளுக்கு பொருளில்லை. வெகுநேரம் ஒன்றை ஒன்று பார்த்தபடி நின்றன. வால்கள் மட்டும் விடுபட்டு நிழல்கள் போல் தனி மொழி ஒன்றில் உரையாடின. அவை பக்கம் பக்கமாய் நின்ற போது எனக்கு தொண்டைக்குள் எதுவோ வழுவியது, நீருக்குள் வேர்த்து உடல் உதறியது.
என்னை முழுதும் மறைக்க தொடர்ந்து முயன்றேன், என் தேகம் தொட்டியின் பின் அடங்காமல் ஒவ்வொரு அங்கமாய் வெளிநீட்டியது. கைகளை மறைத்தால் கால்கள் வெளியே அளைந்தன. முக்குளித்தால் கைகள் தொட்டிக்கு மேலே தாறுமாறாய் துடித்தன. ஒளிய முயன்ற அக்கணம் முதல் புலிகள் என்னை விடாமல் பார்வையால் தொடர்ந்தன. என் உடல் வழி ஓராயிரம் விரல்கள் நீண்டு புலிகளின் கோடுகளை குறுகுறுப்பாய் தீண்டின. புலிகள் தங்கள் உடலால் என்னை விடாமல் பார்த்தன. ஒரு வேட்டையாடியின் பிரம்மாண்ட தேகம் கொல்வதற்கு மட்டும் அல்ல என்று நினைத்துக் கொண்டேன். பிறகு சிறுக சிறுக மாடிப் பரப்பு சிறுகியது, நீர் பொங்கி சீறி அடித்தது, நீந்தி வாசல் நோக்கி பாய்ந்த என்னை வளைத்து வளைத்து அறைந்தது. புலிகள் அனாயசமாக நகர்ந்து இரு திசைகளிலாய் என்னை வளைத்துக் கொண்டன. “அப்பா கீழே தூங்கிக் கொண்டிருக்கிறார், அவரை எப்படி எழுப்புவது, கூவலாமா அல்லது கதறி அழலாமா, கேட்குமா, கேட்டால் வருவார்களா? அப்பாவால் அப்போது என்னை காப்பாற்ற முடியும் என்று உறுதியாக பட்டது, அப்பா பயந்து போய் என்னிடம் அங்கு வராமல் கூட இருக்கலாம், ஆனால் ஒரே நம்பிக்கையாக அவர் இருந்தார். மாடிச் சுவர்களில் அலைகள் அறைந்ததில் அவை பனிப் பாளங்களாய் ஊடுருவி மினுங்கின. தடித்த கருங்கோடுகளில் சுவர்களில் நுழைந்து நெளிந்து கரைந்தன. மாடி வீட்டுக்கு மேலாக ஓட்டுக் கூரையில் புலி அமர்ந்திருப்பதாக தெரிய நான் அப்பாவை அழைத்து கதறினேன். தண்ணீரில் நீந்துவதை விட ஓடுவது எளிதாக இருந்தது, நீர்ப்பரப்பு விலகி வழி விட்டது. பின்னால் தண்ணீரை அடித்து துழாவியவாறு கை அறைதல்களின் அதிர்வும், அச்சமூட்டும் உறுமலும் தொடர்ந்து என்னை தாண்டி எங்கும் நிறைந்தன. ஒரு கணம் தண்ணீர்ப் பரப்பு முழுவதும் ஒரு சயனித்த புலியின் நெளியும் உடலாக தெரிந்தது. அப்பாவும் கூட அம்மாவும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். யாரும் என் விளிகளை, வயிற்றில் இருந்து கிளம்பிய பெருங்குரலை கேட்டிருக்க வாய்ப்பில்லை. நான் சுவர்களில் பற்றி ஏறி திறந்த ஓடுகள் வழி மச்சு அறைக்குள் நுழைய முயன்றேன். ஒரு கை தூக்கி உள்ளே இழுத்து விட்டது அல்லது நானாகவே ஏறிக் கொண்டேன்.

நான் நிமிர்ந்து உட்கார்ந்த போது அன்று மிகச் சீக்கிரமாகவே காலை வெயில் வெறித்திருந்தது தெரிந்தது. கூனன் தாத்தா குளித்த வெள்ளை வேட்டி துண்டுடன் இடம் மாறாமல் அமர்ந்து மூக்குப் பொடி போட்டு துடைத்து துண்டை மேலும் பல இடங்களில் கறையாக்கிக் கொண்டிருந்தார்; அவர் வெயிலில் சுடப்பட்டு அதையே பிரதிபலித்துக் கொண்டிருந்தார். உலோகம் கூட ஆவியாகி விடும் வெப்பம் அந்த விடிகாலை வெயிலில் வெளியேறியது. தாத்தா மேல் நோக்கி ஆனால் லாவகமாக வெற்றிலை சாறை புளிச்சென்று துப்பினார், வெயிலின் குருதி போல் அது மடிந்து விழுந்தது. நான் உட்கார்ந்து களைப்பில் தள்ளாடிக் கொண்டிருந்தேன். அப்பாவிடம் என்ன ஒரு தேஜஸ். அத்தை என் அருகில் வந்தாள். தன் வாதக் காலை பாதியும் மற்றக் காலை முழுக்கவும் மடித்து சப்பணம் கோட்டி அமர்ந்தாள். என்னிடம் எதிர்பாராமல் சொன்னாள், “அப்பாவை போலவே சிரிக்க வருகிறது உனக்கு.
 தாமரையில் வெளிவந்த சிறுகதை
Read More

Monday 22 November 2010

நீட்சே அறிமுக குறிப்புகள் 6

வாக்னர்: குரு எனும் பாலம் (தொடர்ச்சி)

நீட்சே அம்மாவுடன்
வாக்னருக்கும் நீட்சேவுக்குமான ஆவேசமான நட்பை பேசும் போது முன்னவரின் ஒரு பிரத்தெயேக குனநலனை முதன்மையாக குறிப்பிட வேண்டும். பிறரை தனக்கேற்றபடி பயன்படுத்தும், நடந்து கொள்ளத் தூண்டும் மற்றும் எந்நிலையிலும் தன்னை மட்டுமே முன்னிறுத்தும் விழைவு. இத்தனைக்கும் பின்னுள்ள வாக்னரின் ஈகோயிசம். நட்சத்திர மற்றும் பெரும் ஆளுமைகள் பலரும் வித்தியாசமான விதங்களில் வேறுபட்ட காரணங்களுக்கு தங்கள் ஈகோவை வெளிப்படுத்துகிறவர்கள் தாம். மத்திய மற்றும் கீழ்நிலை சமூக மட்டங்களில் மட்டுமே ஈகோ ஒரு தீமையான குணம் என்ற ஒருவித taboo நிலவுகிறது. ஆனால் கலைஞர்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும், அதிகாரவர்க்கத்தினருக்கும் ஈகோ சிலவேளைகளில் கொசுவலை போல் பயன்படுகிறது; அனாவசியமாய் தொந்தரவு தருபவர்களையும், காயப்படுத்துகிறவர்களையும் தொலைவில் வைக்க ஒரு ஆணவ ஒளிவட்டத்தை போலியாக தம்மைச் சுற்றி சுழல விடுகிறார்கள். தமது ஞானரத கேள்வி-பதில் ஒன்றில் இதைச் சொல்லும் ஜெயகாந்தன் அசலான சிந்தனாவாதிகள் அவர்கள் அவ்வாறு நடிக்கலாமே தவிர எந்த ஈகோவும் கொண்டிருப்பதில்லை என்கிறார். ஏன் என்றால் ஈகோ ஒருவித போதாமையின், உள்ளார்ந்த அச்சத்தின் திரிபான நிலை தான். ஆக ஈகோ ஒரு தற்காப்புக் கலை. 
இதை முடிக்கும் முன் ஈகோ என்பதை வெறும் ஆணவம் என்பதாக நீட்சேயிய விவாதத்தின் போது நாம் கொள்ளலாகாது என்பதையும் சொல்லியாக வேண்டும். நீட்சே ஆதிக்கத்தை ஒரு நேர்மறைப் பண்பாக கண்டார். ஏனெனில் அது ஒரு உயிருக்கு இயல்பானது என்று கருதினார். ஒவ்வொரு உயிருக்குள்ளும் பிற உயிரைத் தோற்கடித்து ஆதிக்கம் செலுத்தி முன்னே செல்லும் ஒரு விழைவு இயங்குகிறது. இது மட்டுமல்ல தன் மீது செலுத்தப்படும் அதிகாரத்தை எதிர்த்து முறியடித்து பிறகு ஒரு கட்டத்தில் தன்னையே கடந்து மேலேக ஒரு உயிர் விழைகிறது. வாழ்க்கையை கொந்தளிப்பான கடலாக கொள்வோமானால் அங்கு மனிதன் அசுர அலைகளை எதிர்த்து நீந்துபவனாக இருக்க வேண்டும். இப்படி நீந்தும் வலிமையும் ஊக்கமும் தான் நீட்சேவை பொறுத்த மட்டில் ஈகோ. இப்படி நீந்துவதன் நோக்கம் கடலில் தாக்குப் பிடிப்பதல்ல கடலைத் தாண்டி கரையை அடைவது என்பதையும் இதே உருவக மொழியின் தொடர்ச்சியாக் சொல்லி விடுகிறேன். நீட்சே இவ்வாறு ஈகோவை ஒரு உள்ளார்ந்த இயல்பாக, வலிமையாக, அவசியமாக கருதினார். ஈகோவை கொண்டிருப்பதல்ல அதை அச்சம் மற்றும் துடிப்பின்மை காரணமாக உள்ளடக்குவது தான் குற்றம் என்று நீட்சே கருதினார். அதாவது கொந்தளிக்கும் அலைகள் மீது மரக்கட்டை போல மிதப்பது நீட்சேயிய பாணி அல்ல. நீட்சே இந்த மரக்கட்டைகளை தான் வீரியன் பாம்புக்குட்டிகளே என்று அழைப்பார் என்று ஊகிக்கலாம். (இந்த மிதத்தலை நாம் இந்திய இறையியலின் பொருளில் புரியலாகாது). பின்னர் ஷோப்பன்ஹெர் பற்றி விவாதிக்கும் போது நமக்கிது மேலும் தெளிவாக விளங்கும்.


வாக்னரின் திமிறும் ஈகோ இந்த காரணங்களினாலே நீட்சேவுக்கு உவப்பானதாக இருந்தது. வாக்னரின் ஈகோ நீட்சேவுக்கு வெறும் ஆரம்பகட்ட கவர்ச்சியாக மட்டுமே இருந்திருக்க முடியாது. பொதுவாக பெரும் ஆளுமைகளை நாடிச் செல்லும் சீடகோடிகளுக்கு முன்னவரின் ஈகோ சுவையாகத் தான் இருக்கும். பின்னவரின் போதாமையே இதற்கு காரணம்.
வாக்னர் தன் பண்ணை பங்களா தோட்டத்தில் bust எனப்படும் தனது மார்புக்கு மேலான சிலைகளை அங்கங்கே நிறுவி வைத்திருப்பாராம். அங்கு தன் சிலைகளுக்கு நடுவே உலவியபடி தான் தான் இளைஞரான நீட்சேவுடன் அவர் தனது இசையைப் பற்றி விதந்தோம்புவார். நீட்சேவின் இருப்பிடம் அப்போது வாக்னரின் பங்களாவுக்கு அருகாமையில் இருந்ததால் அவர் அடிக்கடி தமது இசைமேதை குருவை நாடி செல்வார். இந்த சந்திப்புகளின் போது வாக்னர் தனது சிலைத் தோட்டத்தின் நடுவில் அமர்ந்து தனது ஓபரா இசைகளை வாசித்து காண்பிக்கும் பழக்கம் கொண்டிருந்தார்.
ஜெயமோகனை நேரில் பார்த்து உரையாடியவர்களுக்கு வாக்னரின் ஆளுமை மேலும் நன்றாகப் புரியும் (இருவரையும் வேறெந்த விதத்திலும் நான் ஒப்பிட இல்லை). ஜெயமோகனைப் போலவே வாக்னரும் தன்னையும் தன் படைப்புகளையும் பற்றி மட்டுமே 24 மணிநேரமும் பேசும் விருப்பம் கொண்டவர். தனது நம்பிக்கைகளை, கற்பிதங்களை மற்றும் அபிப்பிராயக் கருத்துக்களை அசாத்திய தன்னம்பிக்கையுடன் அழுத்திக் கூறக் கூடியவர் இதுவே ஆரம்பத்தில் அவரை வாசிப்பவர்களும் ஒரு பெரும் வசீகரமாய் இருப்பது (பிற்பாடு நீர்த்துவிடும் என்பது வேறுகதை). வேடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, ஜெயமோகன் மற்றும் வாக்னரின் சீடர்கள் கைகுலுக்கக் கூடிய புள்ளி ஒன்று உள்ளதை சுட்டத்தான் இந்த ஒப்பீடு. இருகட்சி ஆதரவாளர்களுக்கும் நீட்சேவுக்கும் இடையில் இவ்விசயத்தில் ஒரே வித்தியாசம் வாக்னரிடம் உள்ள இந்த தன்மை. நீட்சேவிடம் மேலோட்டமான சிலாகிப்பை மட்டும் ஏற்படுத்தவில்லை.என்பது எளிய தமிழ் வாசகனைப் போல் அல்லாது நீட்சே மேலான ஒரு நிலையில் இருந்து வாக்னரின் ஆளுமையை கவனிக்கிறார். அவர் வாக்னரின் ஆதிக்கவாத செயல்பாட்டை கருத்தியல் அடிப்படையில் ஏற்றுக் கொண்டு அதை லட்சியப்படுத்தினார்.
நீட்சேவின் ஆரம்ப அதிமனித அச்சு வாக்னரின் ஆளுமையின் அமைப்பின் அடிப்படையில் தான் உருவாகியிருக்கக் கூடும். நீட்சே தன் இளமையில் மனித குலத்தின் கலாச்சார மீட்பு சக்தியாக இசையை கருதினார். ஆக அவர் வாக்னரை ஒரு அதிமனித மீட்பராக கருதியதில் அதிக வியப்பில்லை. மனித உளவியல் பற்றின நீட்சேயின் கருத்துக்கள் இந்த நேரத்து அவதானிப்புகளில் இருந்து உருவானதாக கருதப்படுகிறது. நீட்சேயின் “The Birth of Tragedy” நூலில் வாக்னரின் பாதிப்பை நம்மால் கருத்தாக்க ரீதியாக காண முடிகிறது. இந்த படைப்பு விமர்சகர்களாலும் அறிஞர்களாலும் தத்துவபேராசிரியர்களாலும் நிராகரிக்கப்பட்டது. நீட்சேயின் ஆய்வு ஒழுங்கற்ற எழுத்து முறைமை இதற்கு ஒரு காரணமென்றால் (நீட்சே தன்னை ஒரு ஆய்வாளன் என்றல்லாமல் எழுத்தாளன் என்றே கருதினார்; அதனால் அவர் தடுக்கினதற்கெல்லாம் மேற்கோள் காட்டி நகரும் நண்டு நடன ஆய்வு முறைமையை பின்பற்றவில்லை) வாக்னரை மிகையாக புகழ்ந்து அவரை தனது கலை கோட்பாடுகளும் வாழும் உதாரணமாக முன்வைத்தது வாக்னரியவாதிகளைத் தவிர பிறருக்கு ரசிக்க வில்லை என்பது மற்றொரு காரணம். வாக்னர் மீதான குருட்டு ஆதர்சம் கலைந்து அவரிடம் இருந்து பிரிந்த பின்னர் தான் நீட்சே தன் பட்டுக்கூட்டில் இருந்து வெளிப்பட்டு தனித்துவமான குரலை கண்டடைந்தார் என்கிறார் விமர்சகர் ரோய் ஜேக்சன்.

நீட்சேயை பாதித்த வாக்னரின் கருத்துக்களை அறிய வாக்னரின் மூன்று கட்டுரைகள் மற்றும் ஒரு புத்தகத்தின் கருத்து சுருக்கங்களை நாம் அடுத்து பார்க்கலாம்.
  • கலையும் புரட்சியும் (Art and Revolution, ஜூலை 1849)
கலை என்பது உலகை அறிவதற்கான மார்க்கம். அது தான் அதன் முதன்மை நோக்கம். இந்த நோக்கத்துடன் கலை இயங்கியது கிரேக்கர்களின் பொற்கால்த்தில் தான் என்று வாக்னர் நம்புகிறார். ஏனெனில் கலை அப்போது முழுமை கொண்டிருந்தது. நாடகம், இசை, கவிதை எல்லாம் இணைந்து ஒரே வடிவமாக இயங்கியது. அது மக்களின் ஒருமித்த கலாச்சார அனுபவத்துக்கு வழிவகுத்தது. பிற்பாடு இத்தகைய பண்பாட்டு வடிவம் சிதைந்து தனித்தனி கலை வடிவங்களாக பிரிந்தது. இன்று மக்கள் தங்கள் அறிவுத் தேடலுக்கு தத்துவத்தை நாடுகிறார்கள். இது கலையின் தற்போதைய போதாமை நிலையைத் தான் காட்டுகிறது. ஆக கலை தன் உச்சத்தை அடைந்த கச்சிதமான வடிவைக் கொண்டிருந்தது கிறித்துவத்துக்கு முந்தின காலத்தில் தான் என்கிறார் வாக்னர் இக்கட்டுரையில் “The Birth of Tragedy” நூலில் நீட்சே இக்கருத்தை தான் தனது பார்வையில் வளர்த்தெடுத்திருப்பார். நாடகமும் தத்துவமும் இசையும் ஒன்றிணையும் வடிவம் தான் அசலான கலை என்பது வாக்னரின் இசை சித்தாந்தம்.

  • எதிர்காலத்துக்கான கலைப்பணி (The Artwork of the Future, செப்டம்பர் 1849)
இக்கட்டுரையில் வாக்னர் கலையின் அழகியல் நோக்கம் பற்றி பேசுகிறார். கலை தனிமனித அனுபவத்தால் உருவாவதல்ல. மாறாக தனிமனிதர்களின் ஈகோக்கள் ஒரு குழுவாக இணைகையில் அந்த குழு உணர்வில் அவை கரைகின்றன. கடலில் உப்பு கரைவது போல். இது ஒரு மெய்யுணர்வு குழு நிலை. மக்கள் பெருந்திரளாக இணைந்து பங்கேற்கும் கலை வடிவங்களை (நாடகம், சினிமா) வாக்னர் இங்கு உத்தேசிக்கிறார். இப்படி கரைதலை வாக்னர் வோல்க் பிரக்ஞை என்கிறார். கார்ல் யுங்கின் collective unconscious கோட்பாட்டை இது சற்று நினைவுபடுத்தினாலும் இது வேறுபட்டது. யுங் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு அபோத மனம் இருப்பது போல் சமூகத்துக்கும் ஒரு அபோத மனம் உள்ளது என்கிறார். மழை துளி துளியாக இணைந்து ஆறாக பெருகுவது போல் தனிமனித மனங்கள் இணைந்து சமூக அபோத மனம் ஆகிறது. இப்படி ஒரு மனம் இருப்பதாலே நாம் பல சமயங்கள் சில குறியீடுகளுக்கு ஒரே போன்று எதிர்வினையாற்றுகிறோம். இவற்றை நாம் archetypes என்கிறோம். இதனாலேயே இன்றும் ஹோட்டல்களுக்கு சிவப்பு வண்ணம் தீட்டப்படுகின்றன; கதாநாயகிகள் மழையில் நனைகிறார்கள் (வெள்ளையாடையில் நனைவது வேறு நோக்கம்), இறையியலில் கிறித்துவின் பிறப்பை உள்ளிட்டு படைப்புகளில் கூட குழந்தைப் பிறப்பு மறுமலர்ச்சியின், புத்தெழுச்சியின் நம்பிக்கையை ஏற்படுத்தும் உருவகமாகிறது. தஸ்தாவஸ்கி தீமையை அலசும் தன் Brothers Karamazov நாவலை இப்படியான குழந்தை ஆர்கிடைப் ஒன்றுடன் தான் நேர்மறையாக முடிக்கிறார். (எத்தனை தமிழ் சினிமாக்களில் குழந்தைகள் இப்படி பயன்படுத்தப்படுகிறார்கள் யோசித்து பாருங்கள்). வாக்னரின் வோல்க்கலெக்டிவ் அன்கான்ஷியஸ் அல்ல. மாறாக, கலெக்டிவ் அன்கான்ஷியஸ் இருப்பதாலே வாக்னர் உத்தேசிக்கும் வோல்க்அனுபவம் பார்வையாளனுக்கு சாத்தியமாகிறது. ஒரு படத்தை டிவிடியில் பார்ப்பதற்கும் திரையரங்கில் பார்ப்பதற்கும் நுட்பமான ஒரு வேறுபாடு இருப்பதை கவனித்திருப்பீர்கள். ஒவ்வொரு திரையிடலின் போதும் மொத்த பார்வையாளர்களின் மனோபாவம் மற்றும் அவ்வப்போதைக்கான எதிர்வினைகள் ஒவ்வொரு தனிபார்வையாளனையும் மறைமுகமாக பாதிக்கும், இயக்கும். திரையரங்கில் ஒரு பொது சமூக மனம் அபோத நிலையில் இயங்குகிறது. படத்தின் தனிப்பட்ட தரத்தை கடந்து இந்த அபோத அனுபவம் உங்களை மற்றொரு நிலைக்கு எடுத்து செல்கிறது. இப்படி சமூக அபோதத்தில் ஒன்று கலப்பதே லட்சிய கலை அனுபவம் என்று வாக்னர் நம்பினார். பின்னர் தனது Ring Cycle இசை நாடகங்களில் அவர் இதை முயன்று பார்த்தார். நீட்சேயிய கண்ணோட்டத்தில் ஈகோவின் முக்கியத்துவம் பற்றி முன்பு பார்த்தோம் ஆனால் கலையில் வாக்னரும் நீட்சேயும் ஈகோவை வேறுவிதமாய் பார்க்கிறார்கள். தனது The Birth of Tragedy நூலில் நீட்சே இந்த சமூக அபோத நிலையை கிரேக்கர்களின் டயோனிசிய தெய்வ வழிபாட்டு பண்பாட்டுடன் இணைத்து விளக்குகிறார். நீட்சே இதனை பண்பாட்டு வாழ்வின் கொண்டாட்டமாக மாற்றுகிறார்.

  • ஓபராவும் நாடகமும் (Opera and Drama)
இந்த நூலில் வாக்னர் தனது நாடகமான Nibelung’s Ringஐ முழுமையான கலைக்கான உதாரணமாக முன்வைத்து புகழ்கிறார்; அதே மூச்சில் ரோசினி போன்ற தனது சமகால படைப்பாளிகளை எதிர்மறையாய் விமர்சிக்கிறார். நீட்சேயும் இதைப் பின்பற்றி தனது The Birth of Tragedyஇல் வாக்னரை ஜெர்மானிய கலையின் ஒரே மீட்பராக பாராட்ட பல பக்கங்களை ஒதுக்குகிறார். இந்த வாகனரிய போதையில் இருந்து விடுபட அவருக்கு சற்று காலம் பிடித்தது.

  • நண்பர்களுக்கு ஒரு சேதி (A communication to my Friends)
தனது முந்தின நாடகங்களின் பிழைகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டும் வாக்னர் ஒரு புதுமாதிரியான நாடகத்தை (ரிங் நாடக முத்தொகுதி) தான் உத்தேசித்திருப்பதாக சொல்கிறார். இந்நாடகத்தின் திட்டத்தையும் அதை ஒரு விழாவில் அரங்கேற்ற உத்தேசித்திருப்பதையும் சொல்கிறார்.

மேற்சொன்ன நாடக அரங்கேற்றம் 1876இல் பெய்ரூத் விழாவில் மன்னர் லுட்விக்கின் பொருளாதார உதவியுடன் நடந்தது. இந்த விழா நீட்சேயின் ஆளுமை பரிணாமத்தில் ஒரு முக்கிய கட்டத்தை குறிக்கிறது. பல முக்கிய ஆளுமைகளுக்கு குரு என்பவர் ஒரு சதுர்த்தி பொம்மையாகவே இருக்கிறார். பிள்ளையாரை நீட்சே கரைத்திடும் நாளும் வந்தது. Ring நாடகத்தை பார்த்த போது தான் நீட்சே வாக்னர் மீது கடும் ஏமாற்றம் கொண்டார். குறிப்பாக வாக்னரின் தேசியவாதமும், யூதவெறுப்பும் நீட்சேவுக்கு ஒவ்வாதவையாக இருந்தன. இந்த பிரிவுக் கட்டம் வரும் முன் வேறு சில முக்கிய நிகழ்வுகள் நடந்தன.
1872இல் வாக்னர் தான் அதுவரை தங்கியிருந்த டிரிபிஸ்கனில் இருந்து பெய்ரூத் என்ற ஒரு சின்ன நகரத்துக்கு சென்றார். இந்த ஊர்மாற்றம் காரணமாக நீட்சேவுக்கு அடிக்கடி வாக்னரை சென்று சந்திக்க முடியாமல் போனது. வாக்னரின் மீட்பர் பிம்பம் மீது நீட்சேவுக்கு ஐயங்கள் முளைத்த காலம் இது. ஆனாலும் 1876இல் நீட்சே தான் எழுதிய “Untimely Meditations” புத்தகத்தின் நாலாவது கட்டுரையை வாக்னர் படைப்புகளை பிரபலப்படுத்தவே பயன்படுத்தினார். ஆக முழுக்க அவர் வாக்னரின் பக்கம் இருந்து விலகி விட்டிருக்கவில்லை. இப்படி இவ்வுறவு ஒற்றை இழையில் ஆடிக் கொண்டிருந்த போது வாக்னர் தனது வாழ்வின் பெரும்படைப்பான ரிங் நாடகத்துக்கான கடுமையான தயாரிப்பில் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தார். இக்கட்டத்தில் நீட்சேவுக்கும் வாக்னருக்கும் இடையில் உருவாகி வந்த மெல்லிய உராய்வை ஒரு நிகழ்ச்சி சுட்டுகிறது.
வாக்னரின் புது வீட்டுக்கு செல்லும் நீட்சே அங்குள்ள பரபரப்பு நிலைமையை பொருட்படுத்தாமல் தன் குருநாதரை தொந்தரவு பண்ணியபடி இருக்கிறார். நட்பு முறிவதற்கு சற்று முன்பான அதிருப்தி கட்டத்தில் ஒருவன் தன் நண்பனிடத்து நேரடியாய் புகார் சொல்வதில்லை. மாறாக சீண்டிக் கொண்டே இருப்பான். இவ்வாறு வாக்னருக்கு இடையூறு கொடுப்பது நீட்சேயின் நோக்கமாக இருக்கிறது. வாக்னரின் இசை எதிரியான பிராம்சின் இசைத்தட்டுகளை அங்கு கொண்டு செல்கிறார். அது போதாதென்று வாக்னரின் பியோனாவில் பிராம்சின் பாடல்களை வேறு வாசிக்கிறார். கடுமையான பணிநெருக்கடியில் இருந்த வாக்னருக்கு அவர் ஈகோவை சேதப்படுத்த நீட்சே கொண்டை ஊசியோடு முயன்று கொண்டிருந்தது பெரும் அவஸ்தையாக இருந்திருக்கும். நீட்சேயின் எழுத்திலும் ஆளுமையிலும் உள்ள குசும்புக்கும் இந்நிகழ்வு ஒரு நல்ல அறிமுகம்.
பேய்ரூத் நாடக விழா வாக்னரின் இசைவாழ்வில் ஒரு வெறும் அரங்கேற்ற மற்றும் கவன ஈர்ப்பு சந்தர்ப்பம் மட்டுமல்ல. அவர் உலக இசையின் ஒரு திருப்புமுனை சக்தியாக தன்னை முன்னிறுத்த உத்தேசித்த ஒரு வாய்ப்பு இது. நாம் முன்னர் விவாதித்த வோல்க் கோட்பாட்டை வாக்னர் முயன்று பார்க்க எண்ணிய தருணம் இது. இசைநாடகம் ஒரு சிறுமேல்தட்டு குழுவின் ரசிக அங்கீகாரத்துக்கு என்று இல்லாமல் அது ஒரு பெரும் மக்கள் திரளின் முன் நடத்தப்பட்டு சமூக அபோத மனதுடன் மின் இணைப்பு கொண்டு ஒரு மேலான நிலைக்கு செல்ல வேண்டும் என்று வாக்னர் கனவு கண்டார். அவ்விசயத்தில் பேய்ரூத் நாடக விழாவின் விளைவு வாக்னருக்கு மாபெரும் ஏமாற்றமாக இருந்தது. பண்டைய கிரேக்க ஆம்பிதியேட்டருக்கு ஆவேசமான மகாஜனங்கள் பெருக்கெடுத்து வருவது அவர் லட்சியமாக இருந்தது. ஆனால் வரலாறு அவ்வளவு எளிதில் தலைதிரும்பி முதுகுபார்க்க கூடியதல்லவே! வந்தவர்கள் வழமையாக நம்மூர் கானசபா வகையறா தாம். சக்கரவர்த்திகள், மன்னர்கள், ஜமீன்கள், அதிகாரிகள், அவர்களின் மனைவிகள் மற்றும் ஏனைய பட்டாடை மேட்டுக்குடியினர் அவர்கள் உணர்வு வயப்பட்டு தம்மை இழப்பதைக் காட்டிலும் இறுகின போத நிலையில் இசைவிதிகளின் சிக்கலான போக்கை கணக்கிட்டு சபாஷ் சொல்வதிலேயே பெருமை கொள்பவர்கள். உச்சபட்சமாய் குழந்தை முதல் முதலில் நடக்கும் ஓசையில் கைதட்டுவார்கள். அது மட்டுமின்றி வாக்னரின் பரிட்சார்த்த முயற்சிகள் பார்வையாளர்களால் எளிதில் உள்வாங்க முடியாத வண்ணம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஏமாற்றங்களுக்கு மத்தியில் வாக்னரை மீட்பர் என்று அதுவரை போற்றி வந்த நீட்சே எங்கே போனார்? நீட்சே வாக்னர் வட்டத்திற்கு வெளியே உற்சாகமின்றி இருந்தார். Ring நாடக முத்தொகுதியின் முதல் கட்டத்தை மட்டும் தான் அவர் பார்த்தார். மிச்ச தொகுதிகளை காண்பதற்கான அனுமதி சீட்டுகளை அவர் தன் நண்பர்களுக்கு கொடுத்து விட்டார். நீட்சேயின் உடல்நிலை மோசமாக இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. வாக்னர் மீதான லட்சிய கனவு கலைந்ததே இதற்கு மேலும் முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. இந்த ஏமாற்றம் நீட்சேயின் ஆளுமை மலர்ச்சியில் ஒரு முக்கிய கட்டம் என்பதையும் மீண்டும் வலியுறுத்தலாம். அடுத்து நீட்சே வாக்னரை சந்தித்தது 1876இல் இத்தாலியில். தன்னை மேலானவன் என்று காட்டிக் கொள்ள அல்ல என்றாலும் நீட்சே மரியாதையுடன் நடந்து கொண்டார். பண்பை விடவும் மரியாதை நட்பின் மரணத்தை தான் எளிதில் சுட்டுகிறது.
Read More

Sunday 21 November 2010

சொந்தம் கொண்டாடும் தேரை



ஆன் ஆட்வுட்
இறுதியாய்
லில்லியின் வெண்குழலில் இருந்து
பகல் வெளிக்கசியும்
Ann Atwood
Finally
from the lily's white funnel
day trickles out

எம்.எல் பிட்டில் டி-லாப்பா
வெளிறும் அந்தி
கருங்கிளைக்குப் பின்னே
கருங்கிளைக்குப் பின்னே
M.L. Bittle de-Lapa
paling twilight
behind the black branch
behind the black branch

மரியன் புளூகர்
மழை-அலம்பின அந்தி
அசைவற்ற ஒரு தேரை
நடைபாதையை சொந்தம் கொண்டாடும்

MARIANNE BLUGER
rain-rinsed twilight
a motionless toad
claims the walk
Read More

Thursday 18 November 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 26



இது என் மனதை இளக்கியது; ஏனெனில் எங்களை மதிய தூக்கத்தில் இருந்து எழுப்பிய கற்களின் வசைமாரி போன்ற அந்த ஒற்றை இடிமுழக்கம் இப்போதும் நினைவில் உள்ளது; ஆனால் அது மூன்று மணிக்கு மட்டுமே நிகழ்ந்தது என்பதை நான் ஒரு போதும் அறிந்திருக்க இல்லை.
பொதுவறை வழிப்பாதைக்குப் பிறகு முக்கிய தருவாய்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட வரவெற்பறை இருந்தது; சாதாரண வருகையாளர்கள் அவர்கள் ஆண்களாயிருக்கும் பட்சத்தில் அலுவலகத்திலும், பெண்கள் என்றால் பெகோன்னியேக்கள் கொண்ட பொதுவறை வழிப்பாதையிலும் குளிர்பீருடன் வரவேற்கப்படுவர். பிறகு படுக்கை அறைகளின் புராணிக உலகம் ஆரம்பமாகியது. முதலில் என் தாத்தா பாட்டியின் அறை, தோட்டத்தை எதிர்நோக்கிய ஒரு பெருங்கதவு மற்றும் கட்டுமானத் தேதி (1925) கொண்ட மரச்செதுக்கு ஓவியமுடையது. அங்கு என்னை தூக்குவாரிப் போடும்படியான அதிர்ச்சியை அம்மா வெற்றிகரமான அழுத்தத்துடன் அளித்தாள்: “இங்கே தான் நீ பிறந்தது!”. இது எனக்கு முன்பு தெரிந்திருக்க இல்லை; அல்லது நான் மறந்திருக்கக் கூடும்; ஆனால் அடுத்த அறையில் நான் நான்கு வயது வரை தூங்கின, என் பாட்டி எப்போதும் வைத்திருந்த, மரத்தொட்டிலை கண்டெடுத்தோம். நானதை மறந்து விட்டிருந்தேன்; ஆனால் அதைப் பார்த்த உடனே முதன்முதலாய் அணிந்த சிறு நீலப்பூக்கள் அச்சிட்ட தளராடையில் யாரேனும் வந்து பீயால் ரொம்பின என் டயப்பரை கழற்றி விடும்படி நான் கதறி அழுதது நினைவு வந்தது. மோசசின் கூடையை போன்று சிறிதாயும் பலவீனமாகவும் இருந்த அந்த மரத்தொட்டிலின் கம்பிகளை பற்றிக் கொண்டு தடுமாறியபடியே என்னால் நிற்க முடிந்தது. இது என் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே ஒரு வழக்கமான விவாத மற்றும் வேடிக்கை நிமித்தமாக விளங்கியது. இவர்களுக்கு எனது அந்நாளைய வெப்புறாளம் வயதுக்கு மீறின தர்க்க சிந்தனையாக படுகிறது; இதற்கெல்லாம் மேலாய், எனது துயரத்துக்கு காரணம் எனது மலம் மீதான அருவருப்பு அல்ல, எனது தளர் மேலாடையை எங்கே அழுக்காக்கி விடுவேனோ என்ற அச்சமே என்று நான் வற்புறுத்தி சொன்ன பின்னரும் கூட. அதாவது அது ஒரு சுகாதார முன்முடிவு பற்றிய கேள்வியல்ல, மாறாய் அழகியல் அக்கறையே; மேலும் அது என் ஞாபகத்தில் நீடித்துள்ள முறையைக் கொண்டு அதுவே எனது முதல் எழுத்தாள அனுபவம் என்று நம்புகிறேன். அந்த படுக்கை அறையில் நிஜவாழ்க்கை அளவிலான, தேவாலயங்களில் உள்ளவற்றை விட அதிக எதார்த்தமாகவும், துயர வாட்டத்துடனும் தோன்றிய புனிதர்களின் சிலைகள் கொண்ட வழிபாட்டுத்தலம் ஒன்று இருந்தது; அத்தை பிரான்ஸிஸ்கா சிமோபோசியா மெழியா எப்போதும் அங்குதான் தூங்கினாள்; நாங்கள் ஆன்ட் மாமா என்றழைத்த இவர் தாத்தாவின் முதல் அத்தை மகள்; அந்த வீட்டின் தலைமகளாகவும், சீமாட்டியாகவும் தன் பெற்றோரின் மரணத்துக்கு பின் வாழ்ந்திருந்தாள். அனைவரது மரணம் வரையில், அணைக்கப்படாத சாஸ்வத விளக்கின் ஒளியில் கண்சிமிட்டும் புனிதர்களிடத்து கிலி கொண்டு ஒருபக்கம் நான் தொங்கு படுக்கையில் தூங்கினேன்; என் அம்மா கூட திருமணத்துக்கு முன், புனிதர்கள் மீதான பெரும்பீதியால் வதைக்கப்பட்டு, அங்குதான் தூங்கினாள்.
எனக்கு விலக்கப்பட்டிருந்த இரு அறைகள் பொதுவறை வழிப்பாதையின் முடிவில் இருந்தன. முதல் அறையில் என் அத்தைப் பெண் சாரா எமிலியா மார்க்வெஸ் வாழ்ந்தாள்; என் மாமாவுக்கு திருமணத்துக்கு முன் பிறந்த இவள் என் தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்டாள். சிறுவயதில் இருந்தே அவளிடம் இருந்த இயல்பான வேறுபாட்டு பண்போடு, ஒரு அற்புதமான கதைகளின் தொகுப்பு என்னிடம் இருந்து உருவாக காரணமாய் என் முதல் இலக்கிய பசியை தூண்டிய ஒரு வலிமையான ஆளுமையையும் அவள் கொண்டிருந்தாள்; சல்லேஜாவால் முழுவண்ண ஓவியங்களுடன் பிரசுரிக்கப்பட்ட அவற்றை நான் அலங்கோலப்படுத்தி விடுவேன் என்று பயந்து அவள் எனக்கு தரவில்லை. இதுவே எழுத்தாளனாய் என் முதல் ஏமாற்ற எரிச்சல். பழைய மரசாமான்கள் மற்றும் காலங்காலமாய் என் குறுகுறுப்பை தூண்டிய ஆனால் என்றுமே எனக்கு திறந்து பார்க்க அனுமதி கிடைக்காத பெரிய பயணப்பெட்டிகளுக்குமான சேமிப்பறையே கடைசி அறையாக இருந்தது. என் அம்மா தன் வகுப்புத் தோழிகளை தன்னுடன் விடுமுறை நாட்களை கழிக்க வீட்டுக்கு அழைத்தபோது, என் தாத்தா பாட்டி வாங்கின எழுபது சிறு நீர்க் கலங்களும் அங்கே பாதுகாக்கப்பட்டிருந்தன என்று நான் பின்னர் அறிந்து கொண்டேன்.
எதிர்நோக்கியபடி அதே பொதுவறை பாதையில் பழங்கால, நகர்த்த ஏதுவான, சுட்ட கல்லாலான மூடு-உலை அடுப்புகள் கொண்ட ஒரு பெரிய அடுக்களை இருந்தது; என் பாட்டியின் பணிக்கான பெரிய மூடு-உலை அடுப்பும் அங்கிருந்தது; அவள் அப்பம் சுடுவதை வாழ்வுப் பணியாய் கொண்ட தலைமை சமையற்காரர்; அவளது சிறு மிட்டாய் மிருகங்களின் சாறு நிரம்பின வாசத்தில் அந்திப் பொழுது தோயும். வீட்டில் வாழ்ந்த அல்லது பணி செய்த பெண்களின் ஆட்சிப் பகுதி அது; என் பாட்டிக்கு பல பணிகளில் உதவி செய்யும் போது அவர்கள் ஒரே குரலில் பாடுவர். மற்றொரு குரல் எங்கள் பாட்டாபாட்டியிடம் இருந்து சொத்தாய் வந்த நூறுவயது கிளி லோரன்சோ மேக்னிபிக்கோவின் உடையது; அது ஸ்பானிய எதிர்ப்பு கோஷங்களை கத்தும், சுதந்திரத்திற்கான போரின் போதான பாடல்களை பாடும். அதற்கு எந்த அளவுக்கு கிட்டப்பார்வை என்றால் ஒரு நாள் ஸ்டியூ தயாராகும் பானையில் விழுந்து, பிறகு நீர் அப்போதுதான் சூடாக ஆரம்பித்திருந்ததால் அற்புதம் எனக்கருதும் படியாக காப்பாற்றப்பட்டது. ஜூலை 20-அன்று மதியம் மூன்று மணிக்கு தனது பீதியிலான கீச்சிடல்கள் கொண்டு வீட்டில் இருப்போரை தூக்கத்தில் இருந்து எழுப்பியது: “காளை, காளை, காளை வருது!” தேசிய விடுமுறையான அன்று ஆண்கள் உள்ளூர் காளைச்சண்டை காண போயிருந்ததால், வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தனர்; கிளியின் கத்தல்களை முதுமை தளர்ச்சி காரணமான நினைவிழப்பின் வெறிப்பிதற்றல்களாகவே அவர்கள் கருதினர். சதுக்கத்தில் உள்ள கொட்டகையை உடைத்துக் கொண்டு தப்பித்த ஒரு வெறி பிடித்த காளை அடுக்களைக்குள் படுவேகத்தில் நுழைந்த போது தான் கிளியிடம் பேசத் தெரிந்த வீட்டில் உள்ள பெண்கள் அது எதைப் பற்றி கத்துகிறது என்பதைப் புரிந்து கொண்டனர்; காளை ஒரு நீராவிக் கப்பல் போல் உக்காரமிட்டு தன்னிலை இழந்த கோபவெறியில் அப்பஞ்சுடும் அறையின் சாமான்களை, அடுப்புகள் மேலிருந்த பானைகளை நோக்கி பாய்ந்தது. எதிர்திசையில் போய்க் கொண்டிருந்த நான் அச்சமுற்ற பெண்களின் புயலால் காற்றில் எறியப்பட்டு சேமிப்பறையை அடைந்தேன். ஓடி வந்த காளையின் சமையலறை முழக்கம் மற்றும் சிமிண்டு தரையில் அதன் குளம்புகள் தாவி ஓடின ஒலியும் வீட்டை அதிர வைத்தது. முன்னறிவிப்பு ஏதும் இன்றி காற்று வசதிக்கான கூரை ஜன்னலில் அது தோன்றியது; அதன் அனல் தெறிக்கும் குறுமூச்சுகள் மற்றும் பெரும் சிவப்பேறிய கண்கள் என் ரத்தத்தை உறைய வைத்தன.

அதைக் கையாள்பவர்கள் அதனை காளைப் பட்டிக்குள் திரும்பக் கொண்டு சென்ற போது அந்த அதிரடி நிகழ்வுகளின் வெறியாட்டம் வீட்டில் ஆரம்பித்து விட்டிருந்தது; எண்ணற்ற காப்பிக் கலயங்கள் மற்றும் ஸ்பாஞ்சு கேக்குகளின் துணையுடன் கலவரப்பட்டு பிழைத்தவர்களால் பல்லாயிரம் தடவை திரும்பத் திரும்ப, ஒவ்வொரு தடவையும் முன்னதை விட அதிக சாகசமிக்கதாய், அது கதைக்கப்படும்.

சுற்றுக்கட்டு அத்தனைப் பெரிதாக தெரியவில்லை; ஆனால் பல்வெறுபட்ட மரங்கள், மழை நீர் சேகரிக்கும் சிமிண்டு தொட்டியுடன் கூடிய மூடப்படாத குளியல் தொட்டி மற்றும் மூன்று மீட்டர் உயரத்தை ஒரு பலவீனமான ஏணியில் ஏறி அடைய வேண்டிய உயர்த்தப்பட்ட தளமேடையும் இருந்தன. கைப்பம்பால் என் தாத்தா விடிகாலையில் நிரப்பக் கூடிய இரண்டு பெரும் பீப்பாய்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. அதற்கு அப்பால் கரடுமுரடான பலகைகளினால் எழுப்பப்பட்ட தொழுவம் மற்றும் வேலையாட்கள் குடியிருப்பு இருந்தன; வெகு முடிவில் பழமரங்கள் கொண்ட பிரம்மாண்ட புழக்கடை மற்றும் இரவுபகலாய் செவ்விந்திய வேலைக்காரிகள் வீட்டின் கழிவறைக் கலன்களை காலி செய்யும் ஒரே கழிவறை இருந்தன.

Read More

Tuesday 16 November 2010

நீட்சே: அறிமுகக் குறிப்புகள் 5

 வாக்னர்: குரு எனும் பாலம்
வாக்னர்

நீட்சேவை பாதித்த ஆளுமைகளாக ஷோப்பன்ஹெர், வாக்னர், புக்ஹார்ட், எப்.ஏ லேங், டார்வின் ஆகியோர் கருதப்படுகின்றனர். இந்த பாதிப்பாளர்கள் பற்றின பரிச்சயம் நீட்சேவை நெருங்க எந்தளவு முக்கியம்? மேற்சொன்னவர்களின் பரிச்சயம் நீட்சேவின் கருத்துக்களும் நம்பிக்கைகளும் உருவாகும் விதத்தை பின் தொடர்ந்து கவனிக்க பயன்படும். அவரை புரிவது என்பதை விட அவரது எண்ணங்கள் எப்படி உருக்கொண்டிருக்கும் என்று ஊகிக்கக் கூடிய சுவாரஸ்யம் ஒரு முக்கிய நோக்கம். மேற்சொன்னவர்களில் நீட்சேவின் தத்துவப் பார்வையின் மீது தீவிர பாதிப்பு செலுத்தியவர் ஷோப்பன்ஹெர். ஆனால் நீட்சேவை நேரடியாக பாதித்தவர் வாக்னர். வாக்னரிடம் நீட்சேவுக்கு தீவிர பற்றுதல் இருந்தது. நீட்சே வாக்னரை ஒரு தேவதூதனாக வழிபட்டார். அவரது கருத்தியலை உள்வாங்கி வளர்த்தெடுத்தார். 


நீட்சேவின் முதல் நூலான “துயரநாடகத்தின் பிறப்பு (The Birth of Tragedy) என்ற நூல் வாக்னரிடம் இருந்து அவர் பெற்ற ஒளிக்கீற்றால் உருவானதது தான். இந்நூலின் ஒரு பாதி வாக்னரை கொண்டாடி அவரை தம் காலத்தின் கலாச்சார மீட்பராக மிகையாக புகழ பயன்படுத்தும் அளவுக்கு நீட்சேவுக்கு வாக்னர் போதை தலைக்கேறிய ஒரு காலகட்டம் இருந்தது. இவ்வளவு வலுவான நிர்தாட்சண்ணிய குரலாக நாம் புத்தகங்களில் எதிர்கொள்ளும் நீட்சே வாக்னரிடம் சேவை செய்வதற்கு தன் படைப்பு மற்றும் தத்துவ வாழ்வை தியாகம் செய்ய தயாராக இருந்தார் என்பது நமக்கு வியப்பான சேதி. வாக்னரும் நீட்சேவின் எழுத்துக்கு தோதான களத்தை, பதிப்பு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். பின்னர் அர்ப்பணிப்பு மற்றும் ஆசீர்வாதத்தின் விளிம்பில் வளர்ந்து கொண்டிருந்த இந்த உறவு மெல்ல மெல்ல பள்ளத்தாக்குக்கு வந்தது. நீட்சேவுக்கு வாக்னர் மீது அவநம்பிக்கை ஏற்பட்டது. உறவு கசந்தது. வாக்னர் மீதான் இந்த ஏமாற்றத்தை நீட்சே பதிவு செய்தார். வாக்னரும் கூட நீட்சேவின் “Human all Too Human” நூலை “நான் படிக்காததற்கு நீட்சே நன்றி சொல்ல வேண்டும் என்று கேலி செய்தார். (சற்று அநியாயமாக பட்டாலும்) வாக்னர் தமிழ் நவீனத்துவத்தின் சு.ரா. நீட்சேக்கள் யாரென்று சொல்லத் தேவையில்லையே.

நீட்சேயின் கருத்தியல் பரிணாமத்தை அறிவது மட்டுமல்ல, இந்த உறவின் கதை நமக்கு நீட்சேயின் உளவியலை பார்வையிடவும் பயன்படும். அடுத்து வரும் சுமார் பத்தாண்டுகளில் சக்கரங்கள் ஒவ்வொன்றாய் கழன்று போகும் அதிவேக வாகனம் போல் நீட்சேவின் வாழ்வில் இருந்து நெருக்கமான உறவுகள் ஒவ்வொன்றாய் நிரந்தரமாக விலகுகின்றன. எழுத்தும் சிந்தனையும் தேவதையின் இருகரங்களாக அவரை இந்த தனிமைக் காலத்தின் போது பத்திரமாய் சுமந்து செல்கின்றன. இதை மேலும் விரிவாக நாம் அடுத்து வரும் அத்தியாயங்களில் பார்க்கவிருக்கிறோம். முதலில் வாகனரைப் பற்றி பேசலாம்.
வாக்னர் ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டு இசை அமைப்பாளர், இசைநடத்துநர், கட்டுரையாளர் மற்றும் நாடக இயக்குநர். வாக்னர் அவரது ஓபரா அல்லது இசைநாடகங்களுக்காக அதிகம் அறியப்படுபவர். யூதவெறுப்பாளராக அவரது மற்றொரு பக்கம் சர்ச்சைக்குரியது. வாக்னரின் தீவிர விசிறியாக ஹிட்லர் இருந்ததால் அவரது இசை யூதவதை முகாம்களில் ஒலிபரப்பட்டது. அவரது இசைநாடகங்களில் பாத்திரங்கள், களம், கருத்துக்கள், இடங்கள் என ஒவ்வொன்றுக்கும் இசைத் துணுக்கு ஒன்றை உருவகமாக பயன்படுத்தி வாக்னர் உலக இசைநாடகத்துக்கு ஒரு மிக முக்கியமான பங்களிப்பு செய்தார். இசையை Leitmotif எனும் மையக்கருத்தை நினைவூட்டும் மீள் உருவகமாக பயன்படுத்தியும் புரட்சி செய்தார். தளபதியில் ரயிலின் விசில் சத்தத்தை இளையராஜா ஒரு நினைவூட்டலாக பயன்படுத்தியிருப்பது உங்களுக்கு நினைவிருக்கும். இதை எல்லாம் ஆரம்பித்து வைத்தது வாக்னர் தான். ஒரு இசைக் கோட்பாட்டாளராக, சமூக, அரசியல் சிந்தனையாளராகவும் வாக்னரின் பாதிப்பு குறிப்பிடத்தக்கது. இப்படி வாக்னர் பலபரிமாணங்கள் கொண்ட மாபெரும் ஆளுமையாக தன் காலகட்டத்தில் திகழ்ந்தார். ஒரு ராட்சத காந்தமாக உதிரி கலாச்சார மற்றும் அறிவுலக ஆளுமைகளை வாக்னர் தன் பக்கம் மிக இயல்பாக ஈர்த்துக் கொண்டிருந்தார். காந்தி தன் பால் கவரப்பட்ட வந்த ஒரு நபரிடம் காபி குடிக்கும் பழக்கத்தை கைவிடக் கேட்டாராம். வாக்னரும் காந்தியைப் போன்று வீங்கின ஈகோ கொண்டவர். எப்படி காந்தியின் அருகாமையில் ஒருவர் காந்தியவாதியாக மட்டுமே இருக்க முடியுமோ அது போல் அக்கால ஜெர்மனியில் வாக்னரின் ஆதரவாளர்கள் வாக்னரியவாதிகளாக இருந்தார்கள். எதிர்தரப்பில் வாக்னர் வெறுத்த ஜொஹன்னெஸ் பிராம்ஸின் ஆதரவாளர்கள் இருந்தனர். இவ்விரு கோஷ்டிகளாக அக்கால ஜெர்மானிய இசையுலகம் பிளவுண்டிருந்தது. நீட்சே வாக்னரின் Tristan and Meistersinger ஓபராவை கேட்டதினால் தான் முதலில் கவரப்பட்டார். இளமையில் இருந்தே நீட்சே இசையின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார் என்பதையும் அவருக்கு பியோனா பயிற்சி இருந்தது என்பதையும் நாம் இங்கு நினைவுகூரலாம். இவ்விசையைக் கேட்டு பதினொராவது நாளில் நீட்சே வாக்னரை நாடிச் சென்றார். 
ஷோப்பன்ஹெர்


அங்கு இரு விஷயங்கள் அவரை வாக்னரின் பால் அதிக ஈர்ப்பையும் ஆன்னியோன்யத்தையும் ஏற்படுத்தின. முதலில் வாக்னர் நீட்சேவைப் போன்று தத்துவவாதி ஷோப்பன்ஹெரால் தீவிர பாதிக்குள்ளாகி இருந்தார். இருவழிபாட்டாளர்களும் தமக்கு ஒரே தெய்வம் என்றறிந்து அகமகிழ்ந்தனர். அடுத்து, வாக்னருக்கு நீட்சே தான் இளமையிலேயே இழந்த தனது அப்பாவின் தோற்றச் சாயல் இருந்தது. இப்படி வாக்னர் அவருக்கு இசை தேவதூதனாக, அறிவுத்தந்தையாக, நிஜத்தந்தையின் தொடர் நினைவூட்டலாக திகழ ஆரம்பித்தார்.
Read More

Monday 15 November 2010

நட்பின் சமநிலை

  

நண்பனை அதிகம் புகழக் கூடாது என்கிறார் சாக்ரடெஸ். நெருங்கிய நண்பனை எந்நேரமும் எதிரியாக நேரிட தயாராக இருக்க வேண்டும் என்கிறார் நீட்சே. இரண்டும் உஷாராக இருக்கும்படியான அறிவுறுத்தல்கள் அல்ல. இரண்டும் நடுவில் உள்ள சமன்நிலை தான் நட்பு பாராட்டல் என்று படுகிறது
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates