Thursday 28 April 2011

உலகக்கோப்பை: பிரதிகளின் குழப்ப சீட்டாட்டம்



இந்திய கிரிக்கெட் தன்னளவில் குழப்பமானது. உலகக்கோப்பைக்கு பின் அது வழக்கம் போல் உலகக் கிரிக்கெட்டையும் பார்வையாளர்களையும் மீடியாவையும் நிபுணர்களையும் குழப்புகிறது.

இந்திய அணி தலைசிறந்த அணி அல்ல என்பது தன்னடக்கம் குறைந்த ஒரு இந்தியனுக்கே தெரிந்ததே. ஒரு சமநிலையோ தொடர்ச்சியான தரமோ அற்ற அணி உலக கோப்பை வென்றது நமக்கு தேசியவாத பெருமிதமும் கிளர்ச்சியும் ஏற்படுத்தினாலும் உலக பார்வையாளர்களுக்கு மாத்திரையை மாற்றி முழுங்கின நோயாளியின் உணர்வை ஏற்படுத்தி இருக்கும். இந்திய மீடியா சீட்டு குலுக்கி போட்டு தோனியின் தான் கோப்பையை வென்று தந்தார் என்று ஒருமித்து கண்டுபிடித்தது. தோனி தனது முன்னோடிகளான திராவிட், கங்குலி போன்றோரை அங்கீகரிக்க தவறவில்லை. ஆனாலும் ஆதார காரணம் ஜார்கண்ட் துர்க்கை அம்மன் என்பதால் ஜோதிடர் குறித்து கொடுத்த நள்ளிரவு வேளையில் மொட்டையிட்டு முடியை காணிக்கையாக்கினார். இந்திய பண்பாட்டின் படி மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்த அவர்களின் கால் நம் தலைக்கு சற்று கீழோ அல்லது மேலோ இருக்க வேண்டும். கோப்பை கொண்டாட்டத்துக்கு பின்னது தேர்ந்தெடுக்கப்பட்டது; பயிற்சியாளரும், மற்ற மூப்பரான சச்சினும் அணி வீரர்களால் மைதானத்தை சுற்றி சுமக்கப்பட்டனர். சுவாரஸ்யமாக இந்த கோப்பை தொடரில் இந்தியாவுக்கு ஒரு தெளிவான ஆட்டநாயகன், ஒரு பிரகாசமான நட்சத்திரம், இல்லை. யுவ்ராஜ் சில மலிவான விக்கெட்டுகளை வீழ்த்தினார். கோலி, ரெய்னாவுக்கு இணையாக அவர் களத்தடுப்பாடினார். ஆனால் அனைத்து முக்கியமான ஆட்டங்களையும் அவர் மட்டையாடி தொடர்ச்சியாக வென்று தரவில்லை. அவர் சேர்த்த ஒரே முக்கியமான அரைசதம் ஆஸி அணிக்கு எதிராக காலிறுதியில் தான். சஹீர்கான் தனிப்பட்ட வகையில் எந்த ஆட்டத்தையும் வென்று தரவில்லை என்பது மட்டுமல்ல அவர் தன் ஆட்டதிறனின் உச்சத்திலும் இருக்கவில்லை. காயம் காரணமாய் சற்றுகாலம் களிம்பேறி போயிருந்த சஹீர் ஒவ்வொரு படியாக ஏறி ஆட்டத்தொடர் முடியும் போது குன்றின் பாதி உயரமே எட்டியிருந்தார். அவர் இந்திய மழுங்கின பந்துவீச்சின் ஒரு பக்கத்தை கூர்மையாக காப்பாற்றினார் என்பதே நினைவுகொள்ளத்தக்கது. ஒப்பிடும் போது 96இல் சச்சினும், 99இல் திராவிடும், 2003இல் சஹீர்-நெரா-ஸ்ரீநாத் ஜோடியையும் போல் யாரும் இம்முறை நட்சத்திர வீரராக திகழவில்லை. சொல்லப்போனால் சச்சினுக்கு இந்த உலகக்கோப்பை ஒரு anticlimax தான். தென்னாப்பிரிக்க சதத்துக்கு பின் அவர் முன்னோ பின்னோ போகாமல் ஓரிடத்தில் மாட்டிக் கொண்டார். நினைவுகளை கிளரும் ஒரு அழகான vintage காரை போல் அணிக்குள் இருந்தார், அவ்வளவே. பிறரை விட அவர் தன்னை தானே பெரும்பாரமாக உணர்ந்திருப்பார். சச்சின் உலகக்கோப்பையை வென்று தர வேண்டும் என்ற கோஷம் சச்சினுக்காக உலகக்கோப்பை என்று மாறியது இதனை உத்தேசித்தோ என்னவோ. தோனி இறுதி ஆட்டத்தில் அரைசதம் அடித்தது தான் மீடியா எழுத நினைத்த எண்ணற்ற கிளைமேக்ஸ் காட்சிகளில் சிறந்ததாக இருந்தது. ஆகவே தோனி வருடத்துக்கு எத்தனை மட்டைகள் உடைக்கிறார் என்பது வரை செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இந்த ஒரு சின்ன இலையை பற்றிக் கொண்டு மீடியா மெல்ல நீந்தி கரையேறி விட்டாலும் கோப்பை வென்ற இரவு அவர்களுக்கு மிக திகைப்பாகவும் குழப்பமாகவுமே விடிந்தது. மேற்கத்திய ஊடகங்கள் ஒரு காரணத்தை கண்டுபிடித்தன. சுழல்சாதக ஆடுகளங்களில் வெள்ளை அணிகளால் அதிக ஓட்டங்கள் சேகரிக்க முடியவில்லை. காரணம் அவர்களால் சுழலர்களை தாக்கி ஆடமுடியவில்லை. விளைவாக ஓவருக்கு நான்கு அல்லது அதிக பட்சம் ஐந்து ஓட்டங்களே அவர்களால் சராசரியாக எடுக்க முடிந்து உயர்ந்த ஸ்கோர்களை எட்ட இயலவில்லை. இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். முன்னர் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இந்திய ஆடுகளங்களில் பந்து பம்பரமாக சுழலும், எதிர்பாராத உயரத்தில் எழும்பும். இம்முறை பந்து மெதுவாக வந்ததே அன்றி 96 உலகக்கோப்பை கால் இறுதியில் இந்தியாவை ஜெயசூரிய சுற்றி விட்டது போல் ஒருமுறை கூட நிகழவில்லை. வெள்ளை அணிகளால் ஆடும் முறையில், தொழில்நுட்பத்தில் இந்திய ஆடுதள மெத்தனத்துக்கு ஈடுகொடுக்கும் படியான மாற்றத்தை செய்ய முடியவில்லை என்பது உண்மையே. ஆனால் சிறந்த மட்டையாளர்கள் அந்நிய சூழல்களில் தான் பெரும்பாலும் சாதித்துள்ளார்கள். மேற்சொன்ன மேற்கத்திய மீடியா கண்டுபிடிப்பின் மிட்டாய் உறையை கழற்றினால் மற்றொரு உண்மை தெரியவரும். இம்முறை உலகக்கோப்பையில் பந்தை வெளியே அடிக்கக் கூடிய நிறைய பேர் இருந்தார்கள். ஆனால் அசலான அதிதிறமையாளர்கள் இல்லை. பதிலுக்கு முகமூடிக்கு பின் சில நல்ல வீரர்களும், அவர்களுக்கு பின்னால் சுமாரான திறமையாளர்களும், இருசாராருக்கும் பக்கபலமாக சச்சின், காலிஸ் போன்ற அனுபவஸ்த முன்னாள்களும் இம்முறை களமிறங்கினார்கள். எந்த சூழ்நிலையையும், தடையையும் மேலாதிக்கம் செலுத்தும் மனவலுவும், அதிதிறமையும் கொண்ட ஆளுமைகளின் காலம் 2003உடன் முடிந்து விட்டது. இந்த உலகக் கோப்பை நமக்கு உணர்த்தியது இது ஆளுமைகளின் பிரதிகளின் காலம் என்பதே.
இந்தியா தன் அணி ஒற்றுமையால், 11பேரின் ஒருங்கிணைந்த பங்களிப்பால் வென்றதா? ஒருவருக்காக மற்றவர் ஆடினோம் என்பதே இந்த வெற்றியின் தாரக மந்திரம் என்று தோனி கூறியுள்ளது கூடிவாழ்ந்தால் கோடி நன்மை, தோல்வி வெற்றியின் படிக்கட்டு போன்ற மற்றொரு வெற்று வாசகமே. நாம் ஒருவரை ஒருவர் கைவிட்ட ஏகப்பட்ட உதாரணங்கள் இந்த உலகக்கோப்பை முழுக்க பார்க்கலாம். நம்மை விட அதிக அணி உணர்வுடன் போராடின ஆஸ்திரேலியா ஏன் காலிறுதி தாண்டவில்லை? ஆக இந்த உலகக் கோப்பையில் அணிகளின் பொதுவான ஆட்டப் போக்கை இவ்வாறு சுருக்கலாம்: எங்கெல்லாம் சற்று சறுக்குமோ அங்கெல்லாம் அனைத்து கால்களும் சறுக்கின. யார் விரைவில் சுதாரித்தார்களோ அல்லது தாமதமாக பொருட்படுத்தப்படாத வகையில் சறுக்கினார்களோ அவர்கள் மெல்ல மெல்ல முன்னேறி பின்னர் கடைசியாக ஒரே சறுக்கில் இலக்கை அடைந்தனர். இந்த சறுக்கல் போக்குக்கு ஒரு உதாரணம் தரலாம். தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் போன்ற சிறந்த பந்துவீச்சுகளும், இந்தியா போன்ற மட்டையாட்ட வரிசைகளும் ஒரே ஆட்டத்தில் மிகச்சிறப்பாகவும் படுகேவலமாகவும் ஆடியதை பார்த்தோம். ஒரே நபர் விதூஷகனாகவும் ஹீரோவாகவும் தொடர்ந்து தோன்றுவதை பார்த்தோம். இதற்கு காரணம் பதற்றம் மற்றும் தோல்வி மனப்பான்மை. இவற்றின் அடிப்படை சராசரி ஆட்டத்தரம். வேறெந்த உலகக்கோப்பையிலும் அனைத்து அணிகளும் கடுமையான பதற்றத்தில், வெற்றிக் கோட்டின் முன்னும் பின்னுமாய் அடி வைத்து அணி வகுத்ததை நாம் பார்த்திருக்க முடியாது. முன்னதான உலகக்கோப்பைகளில் திரைக்கதை திருப்பங்கள் ஒரு சிறந்த பந்துவீச்சு ஸ்பெல்லினாலோ மட்டையாட்டத்தினாலோ ஏற்பட்டன, அதற்கு இன்சமாம், வாஸிம் அக்ரம், ஜெயசூரியா, டிசில்வா, மெக்ராத், கில்கிறிஸ்ட், சச்சின் என தனிப்பட்ட நாயகர்கள் இருந்தார்கள். ஏகப்பட்ட செவ்வியல் தருணங்கள் இருந்தன. இம்முறை நமக்கு கிளைமேக்ஸ்களின் போது பந்து எகிறுவதோ, மட்டை வீசப்படுவதோ அல்ல கட்டுப்பாடற்று அடிக்கும் உரத்த இதயத்துடிப்புகள் தாம் கேட்டன. 2011ஐ பதற்றத்தின் உலகக்கோப்பை எனலாம். பிரதிகள் மட்டுமே கலைத்து கலைத்து அடுக்கப்பட்ட ஒரு ஒரு புதிர் சீட்டாட்டம்.
இம்முறை மிக குறைவாக எதிர்பார்க்கப்பட்ட அணி நியூசிலாந்து. அவர்கள் எப்போதும் போல் கறுப்புக்குதிரைகளாக இருந்தனர். அது அவர்களின் மரபு. இந்தியா அதிகம் பந்தயம் கட்டப்பட்ட சோர்வுற்ற குதிரையாக இருந்தது. ஆனால் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் நாம் சற்றும் எதிர்பாராதது போல் கால்-அரை-இறுதி ஆட்டங்களில் இந்தியா இரட்டிப்பு மட்டையாட்ட திறன் பெற்ற நியுசீலாந்தை போல் ஆடியது.
இந்தியாவின் எதிர்பாரா உலகக்கோப்பை வெற்றிக்கு இப்படியும் ஒரு விளக்கம் தரலாம். 
Read More

Tuesday 12 April 2011

“ஊருநேச்சை”: கடவுள்களாலும் சாத்தான்களாலும் நெருக்கப்படும் மனம்



ஹாமீம் முஸ்தபாவின் ஊருநேச்சை தொகுப்பில் உள்ள கவிதைகளில் ஒரு விமர்சன குரலை தொடர்ந்து கேட்கிறோம். சமூக அவலங்கள், பண்பாட்டு கூறுகள் மற்றும் சிக்கல்கள், பெண்ணியம், வரலாற்று நினைவுகள், மதத்தின் நடைமுறை முரண்பாடுகள் ஆகியவற்றை நேரடியான மொழியில் விவாதிக்கும் இக்கவிதைகள் எந்த பாசாங்குமற்றவை. இக்கவிதைகளை தனது விமர்சனங்களை தெரிவிக்கவும் கலாச்சார ஆவணமாக்கவும் பிரதானமாய் ஒரு புறம் உத்தேசிக்கிறார். இக்கவிதைகளுக்கு ஒரு நுட்பமான தளமும் உண்டு. அது குழந்தைகளின் களங்கமற்ற கூர்மையான கேள்விகளாலும், எளிய பாமர மனதின் பேய் சார்ந்த விசித்திர கற்பனைகளாலும் ஆனது. அதாவது முஸ்தபாவற்ற ஒரு இடம் இக்கவிதைகளில் உள்ளது.

குழந்தைகளுக்கு நாம் நமது தர்க்கத்தை மெல்ல மெல்ல புரிய வைக்கிறோம். ஆனால் அவர்களுக்குள் ஏற்கனவே ஒரு தனிப்பட்ட தர்க்கம் உள்ளது. நாம் நம்புவது போல் அது பிழையானது அல்ல, சற்று வேறுபட்டது. ஏனென்றால் நமது நம்பிக்கைகள், அறிவியல், ஒழுக்க, நீதி சார் நம்பிக்கைகளும் சேர்த்து, பாதிக்கு மேல் கற்பிதங்களின் மேல் எழுப்பப்பட்டவை தாம். தத்துவவாதிகள் கூட தமக்கு சௌகர்யமாக உள்ளவற்றையே நம்ப தலைப்படுகிறார்கள் என்கிறார் நீட்சே (“நன்மை தீமைக்கு அப்பால்). குழந்தைகள் தமது சுடரும் கற்பனை கொண்டே ஒவ்வொரு பொருளையும் அர்த்தப்படுத்தி ஒளியேற்றிக் கொண்டே செல்கின்றனர். அவர்கள் வளர்ந்தவர்களை போல் அல்லாமல் எந்த அர்த்தத்தையும் நிரந்தரமாய் வலியுறுத்துவதில்லை. அதனாலேயே “குழந்தைகளிடம் பேசும் ஒவ்வொரு வாட்டியும் தோத்துப் போகிறேன் என்கிறார் முஸ்தபா. அல்லா மழையை பெய்விப்பதாய் வாப்பா சொல்லும் போது குழந்தை அல்லா “வானத்தில இருந்து மழையை தூக்கி போத்துண்ணு போடுவானா என்று கேட்கிறது. இது வெறும் மதம் மீதான கேலி அல்ல. மழை என்பது தண்ணீர் ஆவியாகி குளிர்ந்து பெய்வது என்று சொன்னால் கூட பாதிக்கு மேல் பழுதுபட்ட உண்மையாகவே முடியும். ஒவ்வொரு இயற்கை உண்மையும் மிக சிக்கலானதாக மனிதனால் எளிதில் தர்க்கத்தால் வசப்படுத்த முடியாததாக உள்ளது. உண்மையை நெருங்க குழந்தையின் தர்க்கம் வேண்டும் தொடர்ந்து மாறும் அதீத கற்பனையின் மீதெழுந்த விளையாட்டு தர்க்கம். கடவுளால் மழை பெய்கிறது என்பது கூட மிக கற்பனாபூர்வமான அவதானிப்பு தான். ஆனால் நாம் கச்சிதமான ஒரு தர்க்கத்தை நுழைத்து அதை பொய்யாக்குகிறோம். அல்லா மழையை பொத்தென்று தூக்கி போடுவது அல்லா வானத்தில் இருந்து மழையை அனுப்புகிறார் என்பதை விட நிஜமான உண்மை. ஏனென்றால் நாளை அக்குழந்தை வேறொன்றை தன் தீராக் கற்பனை மூலம் கண்டடைந்து சொல்லும். அது மேலும் நிஜமான அவதானிப்பாக இருக்கும்.
இதை விட சுவாரஸ்யமான மற்றொரு கவிதையில் குழந்தை அப்பாவிடம் அல்லாக்கு கண்ணுண்டா என்று கேட்க ஆரம்பிக்கிறது. கண் இருக்கிறதென்றால் அது அறிந்த எல்லா ஊரில் உள்ளவர்களையும் அல்லாவால் பார்க்க முடியும் அல்லவா! சரி இதை பேசிக் கொண்டிருக்கிற நம்மையும் அல்லா பார்ப்பானா? பார்ப்பான். அது எப்படி இரண்டு கண் கொண்டு இத்தனை பேரை இறைவனால் பார்க்க முடியும்? நியாயமான கேள்வி தான். நமது மொழியின், அதன் தர்க்கத்தின், போதாமையை சொல்லும் கவிதை இது. இக்கவிதையில் நம்மளையும் பார்ப்பானாஎன்று குழந்தை கேட்குமிடத்தில் கவிதையின் ஆழம் கூடி விடுகிறது. முதலில் குழந்தை உலகத்தை அறிந்து அவ்வறிவு கொண்டு சுயத்தை (நம்மளையும்) அறிய முயல்கிறது. நாம் இதை பொதுவாக திருப்பி செய்வோம். அடுத்து, சுயத்தை அல்லா பார்ப்பானா என்று இவ்வரியை நாம் விரித்து வாசிக்கும் போது பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம் குறித்த சிறு திகைப்பும் நமக்கு ஏற்படுகிறது. இத்தனைக்கும் எத்தனை எளிய வரிகளால் கட்டப்பட்டுள்ளது இக்கவிதை.
அடுத்து கிட்டத்தட்ட இதே அளவில் கற்பனை தீவிரமடைவது பைத்தியம் கொண்ட, தொன்மங்கள் வாழும் மனதில் தான். அதனாலே இத்தொகுப்பில் உள்ள பேய், மாந்திரிகம் குறித்த கவிதைகள் வசீகரமாய் உள்ளன. முதலில் ஒரு எளிய கேள்வியை கேட்டுக் கொள்வோம்? கடவுளும் பேய்களும் நமக்கு எதற்கு? ஏன் நோயும் தீனமும் எழுச்சியும் மீட்பும் இவர்களால் நடப்பதாய் நம்பப்படுகிறது? புல்லின் நுனியில் இருக்கும் பனித்துளி மெல்ல மெல்ல பிரபஞ்சத்தை தனக்குள் நிரப்பி தனதாக்க முயல்வது போல் மனித மனம் ஆதி காலம் தொட்டே முயன்று வருகிறது. நமது அறிவின் போதாமை குறித்த பிரக்ஞையும் நமக்கு நெடுங்காலமாகவே உண்டு. சாமியாடுவதும் பேயாடுவதும் கொஞ்சம் புனிதம் கூடிக் குறைந்தாலும் ஏறத்தாழ ஒரே நோக்கத்துக்காக தான். நாம் உடலை கொண்டு அந்த சிறு பனித்துளி போல் பிரபஞ்சத்தை, அதன் இயக்கத்தை நடிப்பதன் மூலம் கற்பனை பண்ணிக் கொள்கிறோம். தொன்மங்களில் இந்த உடல் நாடகத்தை பாதுகாத்து வைக்கிறோம். நாட்டார் நம்பிக்கைகளில் நன்மையும் தீமையும் வெவ்வேறாக உருப்பெறவில்லை. ஒன்றின் இருவேறு வடிவங்கள். அதனாலே இரவுக் காட்சி பார்த்து விட்டு தனியாய் வருபவனை பீடிக்கும் பேய் மறுமுறை பார்க்கும் போது இன்னும் திருந்தலையான்னு அவனிடமே கேட்கிறது. இக்கடைசி வரியில் ஏற்படும் நகைச்சுவையும் விசித்திரமும் கவிதைக்கு ஒளியேற்றுகிறது. இந்த பேய் அவனது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக, வட்டார மொழியினூடு கலந்ததாக, ஆளுமையின் இன்னொரு பிளவாக உள்ளது. இன்னும் சொல்வதானால், இவ்வுலகை இந்த துக்கையின்மூலமாகவே விளங்கிக் கொள்கிறான். அம்மா, அப்பா, புணர்ச்சி துணை ஆகியோர் எப்படி ஆதிபடிமங்களோ அது போன்றே இந்த பேயும். இந்த பேய் அவனது தனி மொழி. உலகின் நுணுக்கங்களை, அதன் பிரம்மாண்டத்தை அவன் அறிய அவன் பயன்படுத்தும் ஒரு நுண்ணோக்கி. ஏகப்பட்ட கற்பனை சாத்தியங்கள் கொண்ட கவிதை இது.
மற்றொரு கவிதையில் பள்ளிக் கிணற்றில் நீர் இறைக்கும் ஒரு பெண்ணை ஒரு பேய் பயம் காட்ட அவள் துர்கனவுகள் காண்கிறாள். நாம் எளிதில் கடந்து செல்ல வாய்ப்புள்ள இவ்வரியில் கிணறு ஒரு குறியீடு என்பதை கவனிக்க வேண்டும். நோயும் அதனாலான வாதைகளும் ஏன் வருகின்றன? நுண்ணியிரிகளால் என்பது நவீன சிகிச்சைக்கு வசதியான ஒரு பாமர நம்பிக்கையாகும். பெரும் நோய்களில் மாட்டிக் கொண்டு வெளிவர முடியாமல் தவிப்பவர்கள் நோய்மை மருத்துவம் கடந்தது என்பதை உணர்வார்கள். எண்ணிலங்கா நுண்ணியிரிகளும், ஆபத்துகளும் அதற்கு சமமான மருத்துகளும் முறைகளும் கொண்ட உலகில் எப்படி சிலர் பத்திரமாகவும் சிலர் அவஸ்தைப்பட்டுக் கொண்டும் வாழ்கிறார்கள்? நாம் வைக்கும் ஒவ்வொரு அடுத்த காலடியிலும் மரணத்தின் படுகுழி ஒன்று உள்ளது. இங்கு நாம் எப்படி உயிருடன் இருக்கிறோம்? காரணமற்ற காரணம் ஒன்று நம் உயிர் நிலைப்பை சாத்தியமாக்குகிறது. அது சம்பங்களின் தொடர்பற்ற இணைவோ இறைவனின் பகடையாட்டமோஆகட்டும். இதனால், மிகக் கராறான அறிவியல் முறைகளை பின்பற்றும் மருத்துவர் கூட பலி ஆட்டின் கழுத்தை குறி வைக்கும் ஒரு குருட்டு பூசாரியை போன்றவர் தான். பல சமயங்களில் மனக்கிணற்றுக்குள் நமது நிலையை பார்க்கும் ஒருவர் நோய்மையில் விழுந்து விடக் கூடும். அல்லது மற்றொரு கவிதையில் முட்டியை சுற்றி பொக்களம் வந்தவருக்கும் ஆலிம்சா சொல்லுவது போல் (எப்போதும் நம் வெகுஅருகிலே இருக்கிற) பேய் (தீமை) கடந்து போனதனாலும் இருக்கலாம். இன்னொரு கவிதையில் கொள்ளை நோய் வந்து ஊரில் உள்ள மக்கள் கொத்து கொத்தாக செத்து விழுகிறார்கள். இப்போது போல் “மருந்தும் டாக்டறும் அப்போது இல்லை என்கிறார் கவிதை சொல்லி. ஆக கவிதை இங்கிருந்து அறிவியலின் கரார்தன்மை இல்லாத ஒரு கடந்த காலத்துக்கு, விசித்திர நம்பிக்கைகளின் உலகுக்கு செல்கிறது. அங்கு மனிதர்கள் நோய்மையை கடக்க இறைபாடல்களை பாடுகிறார்கள். “பகுதாது தன்னில் வாழும் குதுபொலி நாயகமே என்று சத்தமாக பாடுகிறார்கள். அப்போது ஒரு யானை தெருமுக்கில் வந்து நின்று மூன்று முறை  பிளிறிக் கொண்டு போகிறது. அதோடு கொள்ளை நோய் விலகி மக்கள் தப்பிக்கிறார்கள். கவிதை சொல்லி யானை பிளிறலை விளித்தல் என்கிறார். யானை விளிப்பது வாங்கு விளிப்பது போல் என்று நாம் கற்பனை பண்ணிக் கொள்ளலாம். யானை பிரம்மாண்டத்தின் குறியீடு. இயற்கை என்றும் கொள்ளலாம். மனித மனங்கள் ஒன்று கூடி இயற்கையின் பகுதியாக மேலெழுவது என்று இந்த வரியை நாம் விரித்து கொள்ளலாம். நோய்மை ஒரு பேருண்மையின் பகுதி என்று மனம் புரிந்து கொள்கிறது. அத்தோடு நோய்மையும் விலகுகிறது.

இந்த உலகை ஒரு ராட்சத ராட்டினமாக கற்பனை பண்ணி கொள்ளுங்கள். நாம் படுவேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறோம். கோடிக்கணக்கான சம்பவங்கள் நம்மை சுற்றி பறக்கின்றன. இந்த காட்சிகளில் ஒன்றில் இறைவனும் மற்றொன்றில் சாத்தானும் இருக்கலாம். அல்லது சுற்றும் வேகத்தில் இறைவன் சாத்தானாகவும் சாத்தான் இறைவனாகவும் தெரியலாம். வாழ்வில் தினசரி இருவரும் நம்மை கடந்து போய்க் கொண்டே இருக்கிறார்கள். யாரை பார்க்கிறோம் என்பதை பொறுத்து நாம் ஒரு நாள் பக்தனாகவும் மறுநாள் நோயாளியாகவும் இருந்து கொண்டு இருக்கிறோம். நாம் எப்படி இருக்கிறோம் என்பதல்ல; கடவுளர்களின் சாத்தான்களின் மத்தியில் இருக்கிறோம் என்பதே முக்கியம். ஹாமீம் முஸ்தபாவின் கவிதைகளில் இந்த புரிதல் நமக்கு சாத்தியமாகிறது.

வெளியீடு: திணை வெளியீட்டகம்
விலை: ரூ 25
Read More

Wednesday 6 April 2011

உலகக் கோப்பை வெற்றி தோல்விகள், பாகிஸ்தான் மற்றும் தயார்நிலை எதிர்வினைகள்




பாகிஸ்தான் ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் ஏறத்தாழ ஒரே மாதிரி ஆடி ஜெயிக்கும் தோற்கும். அது இதுவரை யாரையும் ஏமாற்றியதோ நிறைவடைய வைத்ததோ இல்லை. ஒரே அணிக்குள் பலமாதிரி அணிகள் இருக்கும். அதே போல் ஒரே அணி பலமாதிரியும் ஒரே சமயத்தில் ஆடும். பதினொரு பேரும் பரஸ்பர சந்தேகத்துடன் வெவ்வேறு திசைகளில் ஆடுவார்கள்; சகோதர பிணைப்புடன் தனிப்பெரும் ஆற்றலாகவும் எதிரி மீது பாய்வார்கள். பதற்றமான இரவில் காணும் துண்டு துண்டு கனவுகள் தாம் பாக் அணியின் பொதுவான ஆட்டவகை. பாகிஸ்தான் எப்போதும் போல சரியாகத் தான் ஆடுகிறது என்று நம்புவோம்; ஆனால் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறினவுடன் அணிக்கு எதிராக ஊழல் குற்றசாட்டுகளும், விசாரணையும், பேட்டிகளும், அறிக்கைகளும் கல்லறை ஆவிகள் போல் போல் கிளம்பும். அணி துண்டு துண்டாக்கப்பட்டு மூத்த வீரர்கள் வனவாசம் அனுப்பப்பட்டு இளம் வீரர்கள் அறிமுகமாவார்கள். ஒரே மரபணுவில் இருந்து உருவானது போல் அவர்களும் முந்தைய அணி போலவே அடுவார்கள். அவர்களின் ஊழிக்காலம் அடுத்த உலகக் கோப்பை முடிவில். ஊழல் விசாரணை முடியாத நிலையில் திடீரென மன்னிக்கப்பட்டு மூத்த வீரர்கள் திரும்புவார்கள். இடையே சுணக்கத்தால் ஓய்வு அறிவித்தவர்களும் மீண்டு அணிக்கு திரும்புவார்கள். அதன் அத்தனை குறை நிறைகளுடன் ஒரு பாகிஸ்தான் அணி நேரிடப் போகும் முடிவு ஒரு இன்பியல் அல்லது துன்பியல் நாடகத்தின் பாதியில் இருக்கும் பார்வையாளனை போல் நமக்கு தெளிவாகவே தெரிகிறது. பச்சாதாபப்படவோ பரிகசிக்கவோ நமக்கு அவகாசம் இருப்பதில்லை. நாம் பாகிஸ்தானுடன் மனமொன்றி அத்தனையையும் நம்பி விடுகிறோம். அல்லது அப்படி செய்வதே அவசியம் என்று கருதுகிறோம். இன்பியலும் துன்பியலும் வாழ்வை சரிசமமாய் கொண்டாடுகிறது. கரிப்பிலும் இனிப்பிலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டும் அதையே செய்கிறது. 2011 உலகக்கோப்பை அரையிறுதியை இழந்து ஊர் திரும்பியதும் பாகிஸ்தானின் மேடையில் அரங்கேறும் காட்சிகளும் சொல்லப்படும் வசனங்களும் ஒரு பார்வையாளனாய் இருப்பதன் அதிர்ஷ்டத்தையும் துரதிர்ஷடத்தையும் உறுதிப்படுத்துகிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே விதமான நோய்மைகளை வேறு விதமாய் பார்ப்பவை. பாகிஸ்தான் கிரிக்கெட்டிலும் குழு அரசியல் உண்டு. அங்கு கிரிக்கெட் வெளியாட்களின் சார்பில் அது இயங்குகிறது என்பதே வித்தியாசம். இங்கும் ஊழல் உண்டு. ஆனால் அங்கு வறுமையின் தராசில் அது உயரத் தூக்கப்படுகிறது. உதாரணமாய் இங்கு அசார், ஜடேஜா, மோங்கியா மீதெல்லாம் பச்சாதாபப்பட பாவமன்னிப்பு வழங்க யாரும் தயாராக இல்லை. மீடியாவில் கூட இவர்களுக்கு சொற்ப இடமே. அங்கு இன்சமாம், அக்ரம் போன்றோர் ஒவ்வொரு பெட்டிங் பரபரப்புக்கு பிறகு அணியில் திரும்பியது மட்டுமல்ல தலைமை பொறுப்பையே பெற்றிருக்கிறார்கள். வகார் தற்போதைய அணியின் பயிற்சியாளர். அக்ரமை பந்துவீச்சு பயிற்சியாளராக பெற இந்தியர்களே விரும்பினார்கள். ஊழல் காரணமாக நிரந்தரமாக விலக்கப்பட்ட முஷ்டாக் அகமது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர். உலகின் தலைசிறந்த வேகவீச்சாளர்களில் ஒருவரான பாக் அணியின் ஆமிர் பெட்டிங் ஊழலில் அகப்பட்டு ஐ.சி.சி விசாரணையில் உள்ளார். அவர் மாட்டிக் கொண்ட போது பாகிஸ்தானியர்கள் மட்டுமல்ல இங்கிலாந்து, ஆஸ்திரேலிய ஊடக நபர்களின் அணுகுமுறை சற்று விநோதமாக இருந்தது: “ஆமிர் போன்றவர்கள் ஊழலை ஒரு ஒழுக்க குற்றமாக கருத மாட்டார்கள்; வறுமையாலும் தீவிரவாதத்தாலும் திண்டாடும் ஒரு வறிய கிராமத்தில் இருந்து வரும் இவரை போன்றோர் எப்படியும் நிறைய சம்பாதித்து தம்மை சார்ந்தோருக்கு உதவ வேண்டும் என்று தான் நினைப்பார்கள்என்று ஆமிரை ஒரு ராபின்ஹுட்டாக சித்தரித்தனர். இம்ரான்கான் மட்டும் அமீரை தாண்டிக்க கோரினார். சமீபமாக உலகக் கோப்பை அணியில் ஆமிர் இருந்திருந்தால் எவ்வளவு அற்புதமாய் இருக்கும்என்று பாக் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் எச்சில் முழுங்கினார்; பின்னர் கண்டனங்கள் வர பின்வாங்கினார். பாகிஸ்தான் கிரிக்கெட் ஊழலை உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் ஒரு உள்ளார்ந்த பண்பாகவே பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் தாம் குற்றசாட்டுகளின் பட்டியலையும், விசாரணை கமிஷனையும், ஒரு நீண்ட சாட்டையையும் ஊழல் நிகழ்வதற்கு முன்னரே தயாராக வைத்திருப்பவர்கள். ஊழலின் பலிபிடத்தில் பாகிஸ்தானில் போல் வேறெங்கும் இத்தனை தலைகள் உருண்டிருக்காது. கடந்த சில வருடங்களில் எண்ணிக்கையிலடங்காத வகையில் அணி வீரர்கள் தலைவர்களும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். உலகக்கோப்பை ஆரம்பிப்பதற்கு சற்று முன் வரை அணித் தலைவரை தீர்மானிப்பதில் தேர்வாளர்கள் தயங்கினார்கள். ஒரு இளம் கீப்பர் ஊழலுக்கு பணியாததால் தன் மீது கொலை மிரட்டல் இருக்கிறது என்று அணியில் இருந்து தலைமறைவாகி இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்து மீடியா முன் பேட்டியளித்தார். பாப் உல்மர் விவாகாரமும் இதற்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் நிழலுலக தாதாக்களால் கட்டுப்படுத்தப் படுவதாக சந்தேகத்தை கிளப்பியது. ஆனால் இந்த புகைச்சல் குறித்த முன்னாள் வீரர்களும் பாக் கிரிக்கெட் நிர்வாகிகளும் கனத்த மௌனம் சாதித்தனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் தான் அணியும் எத்தனையோ முகமூடிகளின் கீழ் இதனையும் மறைத்து கொண்டது. உண்மையில் ஊழலை பாகிஸ்தான் எப்படி விளங்கி கொள்கிறார்கள் என்று கேட்பது ஒரு கூட்டத்தில் யார் குசு விட்டார்கள் என்று கேட்பதை போன்றது.
எப்போதும் நாம் கற்பனையான சாத்தியப்பாடுகளுடன் தயாராகவே இருக்கிறோம். எம்.டியின் சுகிர்தம் என்றொரு படத்தில் மம்முட்டி புற்றுநோய் முற்றி சாகும் தறுவாய்க்கு சென்று மீண்டு திரும்புவார். அலுவலகத்துக்கு சென்று தன் மேஜை இழுப்பறையை திறந்தால் அவருக்கு ஒரு இரங்கல் குறிப்பு தயாராக இருப்பதை காண்பார். அதில் அவரது பிறந்த நாளும், இறந்த நாள் இருக்க வேண்டிய இடத்தில் நிரப்பப்படாமலும் இருக்கும். இந்த உலகக் கோப்பை தொடரில் மீடியா எதிர்வினைகள் தலைசுற்றும் படியான எளிமையை கொண்டிருந்தன. நாம் என்ன சொல்ல போகிறோம் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்திருப்பது தெரியாமலே ஆட்டத்தை பார்த்து அது குறித்து பேசி கேட்டு படித்தோம். அவ்விசயத்தில் நாம் ஏமாற்றமடையவே இல்லை. நாம் என்ன எதிர்பார்த்தோம்? தோல்விக்கு பிறகு: ஆஸ்திரேலியா வெளியேறினால் பாண்டிங் தலைமையின் எதிர்காலம் இருளில் சென்று முடியும். தென்னாப்பிரிக்கா என்றால் நெருக்கடி கட்டங்களில் பதற்ற ஆட்டம் ஆடுபவர்கள் என்ற chokers அடையாளப் பட்டி மீண்டும் கழுத்தை சுற்றி பிணைக்கப்படும். மேற்கிந்திய தீவுகள் என்றால் எண்பதுகளின் பொற்காலத்தில் இருந்து எப்படி அந்திம காலத்துக்கு வந்து விட்டார்கள் என்று பிலாக்காணம் வைக்கப்படும். இந்தியா என்றால் ஐ.பி.எல், தொடர்ந்து ஆடும் களைப்பு, மீடியா தரும் நட்சத்திர மதிப்பு ஏற்படுத்திய அகங்காரம், விளம்பரங்களில் மிகுதி ஈடுபாடு, தேர்வு குளறுபடிகள் என்று ஒரு பழைய பட்டியல் தூசு களையப்பட்டு தயாராகும். இங்கிலாந்து டெஸ்டு ஆட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்ற புகார் அதிக சுவாரஸ்யமின்றி சொல்லப்பட்டு விரைவில் மறக்கப்படும். வங்கதேசம் கூட பாவம் பெரும்பாடு பட்டு விமர்சன வளையத்தில் நுழைய வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு உலகக் கோப்பை தடுமாற்றத்தின் பிறகும் அவர்களுக்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டது தவறு என்று வலியுறுத்தப்படும். இம்முறை மிச்சமிருந்த அவகாசத்தில் மீடியா நிபுணர்கள் ஜிம்பாப்வே கூட நன்றாக ஆடவில்லை என்று கண்டனம் தெரிவித்தார்கள். குறைவான மக்கள் தொகை கொண்ட இலங்கையும் நியுசிலாந்தும் சறுக்கினாலும் எழுந்தாலும் நாம் எப்போதும் பரவாயில்லையே என்று நெற்றி சுளிக்கவே தலைப்படுகிறோம். உண்மையில், ஒரு அணி வெற்றி பெறும் போது நாம் ஒரு பெரும் திகைப்பை அடைகிறோம். இம்முறை இந்தியா உலகக் கோப்பையை வென்ற போது நமக்கு நியாயமாய் செய்ய முடிந்தது உளறிக் கொட்டுவதும் வியப்பில் மூச்சுவாங்குவதுமே.

இம்முறை இந்தியா பாகிஸ்தான் கால்-இறுதியில் மோதிக் கொண்ட போது ஆவேசமான மேற்கோள்களை மீடியாவுக்கு தர இரு சாராரும் தயங்கினர். பாக் பிரதமர் இந்தியா வந்து ஆட்டத்தை மன்மோகன் சிங்குடன் பார்க்கும் ஒரு வரலாற்று பூர்வ தருணத்தில் கண்ணியம் காக்கவே அனைவரும் தலைப்பட்டனர். “இந்தியாவை அரை-இறுதியில் வீழ்த்தி மும்பைக்கு சென்று அம்மக்கள் முன் ஆட அவர்கள் துணிய மாட்டார்கள் என்று பேச ஆரம்பித்த கவாஸ்கரே பிறகு மௌனித்தார். ஆனால் ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே ரமீஸ் ராஜா போன்றோர் எதுவோ தீய்கிறது என்று ஐயப்பட்டார்கள். “பாகிஸ்தான் அவர்களாகவே தான் இனிமேல் தோற்க முடியும் என்றார் ரமீஸ். ஆட்டம் முடிந்ததும் அவர் தன் பெட்டிங் சந்தேகத்தை மீண்டும் மீண்டும் குறிப்புணர்த்தினார். இந்திய வர்ணனையாளர்களும் அவருடன் சேர்ந்து கொண்டர். குறிப்பாக யூனிஸ் கான் மற்றும் உல் ஹக் ஆகியோர் மெத்தனமாக ஆடியதும், நாலு காட்சுகள் தவற விட்டதும் தோதான காரணங்களாக அமைந்தனர். இதே தவறுகளை பாகிஸ்தான் வேறொரு ஆட்டத்தில் செய்திருந்தால் பொருட்படுத்தப்பட்டிருக்காது என்பதை கவனிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கான காரணங்களை இறைவன் ஒவ்வொரு தானிய மணியின் மீதும் எழுதி வைத்திருக்கிறான் போலும். பாகிஸ்தானின் குற்றங்களை பாகிஸ்தான் மட்டுமே செய்ய முடியும். உதாரணமாக, இறுதி ஆட்டத்தில் இலங்கை முதல் பத்து ஓவர்களில் முப்பது ஆட்டங்கள் மட்டுமே எடுத்தது. தில்ஷான் ஏன் வழமை போல் அதிரடியாக ஆட வில்லை என்று ஒருவரும் குற்றம் சாட்டவில்லை. ஆட்டப் போக்கை கவனித்தால் இலங்கையின் ஆரம்ப மட்டையாளர்கள் எப்போதும் போல் ஆடியிருந்தால் இறுதி இலக்காக 300ஐ தொட்டிருக்கலாம் என்பது விளங்கும். ஆனால் தில்ஷானின் தவறு நியாயப்படுத்தப்படும்; இதையே யூனிஸ்கான் செய்தால் சிலுவைக்கு தயாராக வேண்டும். ராணுவ வீரன் இறந்தால் தேசப்பற்று, சாமியார் இறந்தால் ஜீவசமாதி போன்றதொரு அசட்டு நம்பிக்கை தான் இது.
ஒரு பொம்மையின் விளையாட்டு பொருட்கள் போல பாக் அணி மீண்டும் கலைத்து போடப்படுகிறது. கம்ரான் அக்மால் உள்ளிட்டோர் மீது ஊழல் விசாரணை நடக்க உள்ளது. மூத்த வீரர்களை விலக்க வேண்டும் என்பதை பணிவாக “மூத்த வீரர்களுக்கு ஓய்வளித்து இளம் வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்று அப்ரிடி கேட்டு கொண்டுள்ளார். கிட்டத்தட்ட இதையே தான் வெற்றிக்கு பின்னர் மீடியாவிடம் தம் அணி குறித்து வேறொரு மொழியில் தோனியும் கூறியுள்ளார். ஒவ்வொரு அணியும் சரக்கு தீர்ந்தவர்களை இறக்கி விட்டு விட்டு 2015ஐ நோக்கி தம் அடுத்த பயணத்தை ஆரம்பி உள்ளது. அவரவர் வழியில் என்பது தான் வித்தியாசம். இருவேறு பக்கங்களில் எழுதப்பட்ட ஒரே கிரிக்கெட் வரலாற்றை கொண்ட இந்தியாவும் பாகிஸ்தானும் வெவ்வேறு விதங்களில் கையாள்பவை அநேகமாய் ஒரே பிரச்சனைகள் தாம். அவர்கள் அவற்றுக்கு கண்டடையும் நியாயங்கள் மட்டும் எப்போதும் வேறுபட்டவையாகவே.
இம்முறை மீடியாவின் உலகக் கோப்பை ஒரு இந்திய மசாலா படம் போல் கச்சிதமாக இருந்தது. கடைசி காட்சியை பார்த்தாலே மிச்ச கதை சுலபமாய் புரிந்து விடும்படியாக.
Read More

Sunday 3 April 2011

மீண்டும் ஒரு திருமண நாள் கவிதை




இவளை மணக்க கொடுத்து வைத்திருக்கிறேன்
பலரும் சொல்கிறார்கள்
நம்ப முடியவில்லை
சோதிடர் அன்றே சொன்னார்
வேண்டாமென்று
நம்ப முடியவில்லை
இது திருமணமில்லை
அவள் பச்சாதாபப்பட்டு என்னுடனும்
நான் அறிவிழந்து அவளுடனும்
இருக்கிறோம்
அதையும் தான்
நாம் பிரிவதற்கான காரணங்களின்
பட்டியல் தயாரிப்பவருக்கு மூச்சுவாங்குகிறது
இணைவதற்கு காரணம் தேடும் எனக்கு
ஒன்றுமே கிடைக்கவில்லை
காரணமின்மையின் பரிசுத்தம் தவிர

நாமாக ஒப்பந்தம் இடவில்லை என்பதால்
இதை மறுக்கவும்
நாமாக சேர்க்கவில்லை என்பதால்
குவிந்த பொருட்களை விட்டுவிடவும்
நாமாக எதையும் கட்டவில்லை என்பதால்
எந்த வீட்டை விட்டு வெளியேறவும்
நாமாக எதையும் மறுக்கவில்லை என்பதால்
அனைத்திற்கும் இசையவும்
தயாராக உள்ளோம்

நான்கு வருடங்கள்
ஆக மெதுவாகவும்
பெரும் வேகத்திலும்
சென்று கடந்ததும் கூட
ஒரு பந்தயத்தில் இல்லை
ஒரு பந்தயத்தை தொடர்கிறோம்
என்பதால் இருக்கலாம்

ஒவ்வொரு புது வீட்டிலும்
ஒவ்வொரு மாதிரி இருந்திருக்கிறோம்
ஒவ்வொரு வேலையிலும்
நண்பர்கள், வளர்ப்புபிராணி, பொம்மை, புத்தகம்
புதிதாய் வந்த போதும்
புதுவீடு வேறு மாதிரி ஆயிருக்கிறது
நாம் நம்மை மெல்ல மெல்ல மாற்றியபடி
இறுதியில் ஒத்திசைவு காணும்
சற்று முன்
மீண்டும் மீண்டும் மாறியபடி இருந்திருக்கிறோம்


கசப்பு மருந்துக்கு பிறகு ஒவ்வொரு முறையும்
இனிப்பு தரப்படுகிறது
அல்லது இனிப்பு முன்னால் என்றும் கொள்ளலாம்
மதுவருந்தும் நபர் போதைக்குள் நுழைவது போல்
அல்லது
போதையில் நுழைந்து மதுவருந்துவது போலவும்
எனலாம்
நமது மணம்
இதற்கு முன்னரோ இனி பிறகோ
எப்போதென்று கணிக்க முடியாத
மற்றொரு தருணத்திலோ
அநேகமாய் மணநாள் மறந்து போய் நினைவுகொள்ள முயல்கிற எந்த நாளிலும்
நிகழட்டும்
Read More

Saturday 2 April 2011

“தேகம்”: பிரியமும் வதையும் ஒன்றா?




சாரு நிவேதிதாவின் சமீப நாவல் தேகம் பொதுவாக ஒரு வதையை பற்றின நாவல் அல்ல. அதனாலே ஒரு தொழில்முறை வதையாளனின் குறிப்பிட்ட தொழில் அனுபவத்தை சொல்ல தொடங்கி வேறு பல நினைவுகளுக்கும் கேள்விகளுக்கும் செல்கிறார். எதையும் முடிக்காமல் அங்கங்கே தாவி சென்றாலும் நாவலின் உத்தேசத்திற்கு அவர் நியாயம் செய்திருக்கிறார். காமம், நட்பு, மணவாழ்வு உள்ளிட்ட உறவுகளில் அடுத்தவர்களையும் சுயமாக நம்மையும் ஏன் வதைத்து கொள்கிறோம் என்ற தீவிரமான விசாரணை நாவலில் உள்ளது. ஆனால் பொதுவாசகனுக்கு இரண்டு சிறு பொறிகள் உள்ளன. முதலில், சாரு தன் எழுத்தில் ஒரு மேம்போக்குத் தனத்தை அல்லது frivolousness ஐ கொண்டு வர பிரயத்தனிக்கிறார். இதை நம்பி பொழுதுபோக்காக படித்து முடித்து விடலாம். ஒரு காற்றை போல் நாவலும் கடந்து விடும். ஆனால் அதே நபர் வாசிப்பின் முடிவில் இலக்கியம் எங்கே என்று குற்றவுணர்வும் குழப்பமும் ஏற்பட்டு சற்று வியர்க்க நேர்ந்தால் ஒரு குப்பை நாவல் என்று எளிதில் புறமொதுக்குவார். இவ்விபத்து நேர்கிறது, நேர்ந்து கொண்டே இருக்கும். எலிப்பொறியில் கை மாட்டுவது போன்றது இந்த வாசிப்பு. அடுத்து மரபான வடிவ ஒழுங்கமைவு தேடுபவர்களுக்கும் நிறைய வழுக்குமிடங்கள் நூலில் உள்ளன. இந்த இரண்டையும் கோட்பாடாக கருதி ஆதரித்து விமர்சிப்பது நம் மூளை தசைகளுக்கு பயன்படும் என்றாலும் அது வாசிப்பல்ல. இந்நாவலில் அதன் அத்தனை திசைதிருப்பிகளையும் கடந்து சாரு விவாதிகிக்கும் கலாச்சாரத்தை கவனிக்க வேண்டும். அது என்ன?
நாவல் ஆரம்பத்தில் பன்றிகள் கொடூரமாக அடித்து கொல்லப்படுகின்றன. பன்றியை கழுத்தறுக்க முடியாது என்ற நடைமுறை காரணத்துக்காகவே இந்த வதையில் நாவலில் சேரிக்காரர்கள் ஈடுபடுகிறார்கள். சாரு இதை பன்றியின் துரதிர்ஷ்டம் என்கிறார். நாவலின் நாயகர்களில் ஒருவனான தர்மாவின் சாதிக்காரர்கள் இந்த பன்றிகளைப் போன்றே மலத்துடன் வாழும் இழிநிலையில் இருக்கிறார்கள். பின்னர் அவன் இந்த சேரியில் இருந்து பொதுநீரோட்டத்துக்கு வெளியேறுகிறான். அங்கு அவன் பல தொழில்கள் முயன்று பின் மனிதர்களை வதை செய்யும் பணியை ஒரு தாதாவின் கீழே இருந்து செய்கிறான். தர்மா ஒரு இலக்கியவாதி, தத்துவவாதி, காதலன் இப்படி இத்தியாதியாக இருந்தும் ஏன் வதை எனும் அநீதியில் ஈடுபடுகிறான்? அதற்கு காரணம் ஆதிக்க சாதியினர் மீதான சமூக கோபம் அல்ல; அது ஒரு கலாச்சாரம். ஏனென்றால் ஒரு பெண்ணை கற்பழித்ததற்காக ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர் மகனையும் காடை எனும் தாதாவையும் வதைக்கும் அதே தர்மா தான் பின்னொரு இடத்தில் ஒரு நாயை கல்லடித்ததற்காக ஒரு சிறுவனையும் வதைக்கிறான். ஒரு பெண்ணை கற்பழிப்பதும் நாயை கல்லடிப்பதும் ஒரே மாதிரி குற்றங்களா? போலீஸ் இன்ஸ்பெக்டர் பையனை வதைக்கும் போது “ஏன் அந்த பெண்ணை அப்படி செய்தாய்? என்று திரும்ப திரும்ப தர்மா கேட்கிறான். அவன் வாயில் மலத்தை கரைத்து ஊற்றும் போது “எத்தனை நூற்றாண்டுகளாய் எங்களை வாயில் மலத்தை கரைத்து ஊற்றி இருக்கிறாய்? என்றும் கேட்கிறான். இந்த உதிரி நியாயங்கள் தர்மாவின் வெறும் போலி மதிப்பீடுகளோ என்ற ஐயம் தொடர்ந்து எழும்படியாக தான் நாவலின் கதையாடல் உள்ளது. அடுத்து நேரடி வதை என்பது ஒரு பகுதி மட்டும் தான். செலின் என்ற காதலியை நிறைவாய் புணராமல் மறைமுகமாய் அவளை வதைக்கிறான். அவனும் வதைக்குள்ளாகிறான். இருவருக்கும் புணர்ச்சி முழுமையடையாததால் அடிவயிறும் உறுப்புகளிலும் வலி ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. காமம் வடியாமல் அவர்களின் உடல் வேதனையில் விம்முகிறது. இது அவர்கள் தமக்கே வருவித்து கொண்டது தான். காமமும் வதைக்கான ஒரு கருவியே. அடுத்து நேஹா என்றொரு காதலி. அவளை மேலும் நுட்பமாக தனது விலகலின் மூலம் உளவியல் ரீதியாக வதைக்கிறான். அவள் பைத்தியம் பிடித்து சாகிறாள். கடைசியாக அவன் மீனா என்றொரு மிடில் கிளாஸ் பெண்ணை மணந்து கொள்கிறான். நாவலின் ஆக சுவாரஸ்யமான இடம் இது தான். அவள் ஒரு சாத்விகவாதி. தர்மாவை ஒரு எறும்பை நசுக்கி கொல்ல கூட அனுமதிப்பதில்லை. கட்டெறும்பை பார்த்தால் ஒரு காகிதத்தில் அதை ஏற்றி வெளியே கொண்டு போய் விட வேண்டும்; பாம்பிடம் மிக பரிவுடம் போய் விடு என்றால் உடனே போய் விடும்; ஆனால் மாமிசம் உண்பதில் கூட நியாயம் உள்ளது, நாம் எல்லாம் அம்மாவின் ரத்தமாகிய முலைப்பாலை குடித்து தானே வளர்ந்தோம் ஆகிய பல வலுவான தர்க்க வாதங்களை கொண்டே அவள் தர்மாவை வதைக்கிறாள். அவன் அவளை மிகவும் அஞ்சுகிறான். ஏன் என்றால் அவளிடம் எல்லாவற்றுக்குமே தகர்க்க முடியாத தயார்நிலை பதில்கள் உள்ளன. இது தான் அஹிம்சையின் ஹிம்சை. உச்சபட்ச வதை. கபிலா என்றொரு பெண் தனக்காக லட்சக்கணக்கில் செலவு செய்த மூன்று வருடம் காதலித்த ஒருவனை கழற்றி விட்டு ராமசந்திரன் என்ற ஒரு அமெரிக்க வேலையுள்ளவனை மணமுடிக்க முடிவு செய்கிறாள். துரோகம் தாங்க முடியாத அவளது முதல் காதலன் தன் கையை கிழித்து அந்த ரத்தத்தால் அவளுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதுகிறான். தர்மாவின் நண்பனான கிருஷ்ணாவை தனது உடல் வதையை காட்டி அழுது படுத்துகிறான். மறுப்பக்கம் கபிலா அதே கிருஷ்ணாவிடம் சென்று முதல் காதலனிடம் இருந்து தப்பிக்க வழி சொல்லுமாறு நெருக்கடி கொடுக்கிறாள். கடைசியில் அவள் இரண்டாம் காதலனையும் கைவிட்டு விடுகிறாள். தர்மா தர்ம அடி வாங்குவதற்காகவே பேருந்தில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்கிறான். ஒரு முதிய ஆங்கிலோ இந்திய பெண்ணின் மலம் அலம்பாத குதத்தில் புணர்ந்து பின் நாற்றம் பொறுக்காமல் வாந்தி எடுக்கிறான். ஜேப்படி திருடனாக, ஆண் விபச்சாரியாக தன்னை சமூகத்தின் விளிம்பு நிலையில் இருத்தி அங்கீகாரமின்மையின் அவமானத்தின் வதையை அனுபவிக்கிறான். பட்டினி கிடந்து உடலை வதைக்கிறான். அவன் ஏன் இப்படி எல்லாம் செய்ய வேண்டும்? இதுவரை குறிப்பிட்டவர்கள் ஏன் உறவுநிலைகளில் வதை பயில வேண்டும்? பிறரையும் தன்னையும் தொடர்ந்து வதைத்து நாம் அடைவது என்ன?
இந்த கேள்விகளுக்கு நாவல் நேரடியான விடைகளை தருவதில்லை. நாவல் இவற்றை குறிப்புணர்த்துகிறது: தொடர்ந்து குறைப்பட்டதாக உணரும் ஒரு சமூகத்தின் கலாச்சாரமாக இந்த வதை மனப்பான்மை இருக்கலாம். அச்சமும், வன்மமும், காமமும் நமக்குள் ஊறிப் போயுள்ளன. இவற்றை நாம் வதை மூலம் எளிதில் வெளிப்படுத்துகிறோம். அப்படியெனில் வதைப்பது ஒரு அடிப்படை மனித பண்புமே. வதையை ஒரு கலையாக பல்வேறு வடிவங்களில் வளர்த்தெடுப்பதை தேகம் சித்தரிக்கிறது. நாம் மிகுந்த பண்பாட்டு அறிவுடன் நாகரிகத்துடன் ஒரு மறைவான கத்தியை போல் வதையை எப்போதும் கையுடனே வைத்துள்ளோம். அது நம் கலாச்சார இருப்பின் தவிர்க்க முடியாத பகுதி. மேற்சொன்ன ஆழமான சித்தரிப்பே நாவலின் ஆக முக்கியமான சிறப்பு. இந்த வதை பண்பாட்டில் இருந்து நாம் மீண்டு போகலாகாதா? பிரியமும் காதலும் காமத்தின் உன்மத்தமும் வதையின் மறுதரப்பாக சாருவால் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் மிகுந்த அன்பின் விளைவாக நாம் விருப்பமான உறவுகளை வதைக்கவும் செய்கிறோம். இது ஒரு முடிவுறா வட்டம். அன்பின் வழியாக வெளியேறி வதைக்குள் நுழைகிறோம். அதில் இருந்து வெளியேறி அன்பை அடைகிறோம். இதனாலே நாவல் முழுக்க தர்மா தீரா காதலனாகவும் தளராத வதையாளனாகவும் இருக்கிறான். காதலிக்கப்பட்டும் வதைக்கப்பட்டும் இருக்கிறான். அவனால் இரண்டில் இருந்தும் தப்ப முடிவதில்லை.
சமூகத்துடனும், குடும்பத்துடனும், நண்பர்கள் மற்றும் உறவுகளுடனும் உறவாடுவதன் மூலம் அடையும் பிரியத்தின் உன்மத்தமும், வன்மத்தின் வலியும் ஒரு உச்சத்தை அடைந்துள்ள காலவிளிம்பில் இன்று நிற்கிறோம். இதில் மிகை எது உண்மை எவ்வளவு என்று விசாரிப்பதும் சாத்தியமில்லை. இன்றைய கலாச்சாரம் மனிதர்களை ஏனோ கொதிநிலையில் வைத்திருக்கிறது. ஊடகங்களிலும் நேரடியாகமும் நாம் மனிதர்களிடம் காண்பது பரஸ்பர சந்தேகமும் அழித்தலும் தான். தொடர்ந்து விருப்பம் காட்டியும் வெறுத்தும் பிரிந்தும் நாம் இருப்பதற்கு காரணம் பொதுவாக கோரப்படுவது போல் விழுமியங்களின் போதாமையினால் அல்ல என்கிறார் சாரு. நம்மால் வேறெப்படியும் வெளிப்படுத்திக் கொள்ள தெரியவில்லை. நீரில் மூழ்கும் ஒருவனின் வெளியே நீளும் கரம் போல் உள்ளது பிரியத்தினால் நம்மை நோக்கி வரும் ஒவ்வொரு கரமும். உறவுகளின் பண்பாட்டில் உள்ள இந்த மிகுஇயல்பும் அதற்கு நாம் வழங்கும் அங்கீகாரமும் தான் நமது அரசியலையும் போர்களையும் தொடர்ந்த வரலாற்று திரிபுகளையும் பிற சமூக மற்றும் கலாச்சார செயல்பாடுகளையும் கூட வியப்பின்றி ஏற்றுக் கொள்ள வைக்கிறது. பிரியமும் மனிதநேயமும் இன்று எதற்கும் முற்றுப்புள்ளியாக முடியாது. அதற்காக நாம் ஒரு இருத்தலிய முட்டுசந்தில் நிற்பதாகவும் இந்நாவல் கூறவில்லை. நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்றால் நாம் இப்படியே இருக்க முடியும் நம் சமகால சமூகத்தின் பண்பாட்டு சிடுக்கு ஒன்றை அவிழ்க்க முயல்கிறது “தேகம்
Read More

ஆஸி, தெ.ஆ வெளியேற்றங்கள்: வீழ்ச்சியின் தொலைவும் கசப்பின் சுவையும்



இந்த உலகக் கோப்பையில் மிக மௌனமாக இரு நட்சத்திரங்கள் உதிர்ந்துள்ளன. ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் நுழைய வேண்டிய வாசல் வழி மிகுந்த குழப்பத்துடன் வெளியேறி விட்டன. மிக இனிமையான ஒரு நாளின் முடிவில் வந்த எதிர்பாரா துர்கனவை போல் இத்தோல்வியை எப்படி விளக்க என்றே இரு தோல்வியுற்ற அணித் தலைவர்களுக்கும் புரியவில்லை. இந்த அணிகளின் கசப்பான புன்னகை காண பார்வையாளர்கள், நிபுணர்களின், எதிரணி ஆதரவாளர்கள் அனைவருக்கும் சற்று விசனமாகத் தான் இருந்தது. அவர்கள் இத்தோல்விகளை விளக்க சன்னமான சொற்களை, வருத்தாத வாதங்களை தேடினார்கள்.
இவ்வணிகள் தங்கள் நெடுங்கால மற்றும் சமீப வரலாறுகள் காரணமாய் தோல்வியடையும் போது, ஒரு நெடும் ஆட்டத்தொடரில் இருந்து வெளியேறும் போது அது வெறும் தோல்வியாய் இருப்பதில்லை. அணிகளின் வெற்றி தோல்விகள் மித்துகளால் கட்டி எழுப்பப்படுகின்றன. ஒரே ஆட்டத்தில், அது உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றமாய் அமைந்தாலும் கூட, இவை விழுவதில்லை. பிரம்மாண்ட வரலாறு கொண்ட அணியொன்றின் வீழ்ச்சி நெடுந்தொலைவை கடந்து வரும் எரிகல்லினுடையதை போன்றது. இடைப்பட்ட காலம் ஏகப்பட்ட கற்பனைகளால் நிரப்பப்பட வேண்டியது. ஆஸ்திரேலியாவின் பத்தாண்டு வெற்றிப் பருவத்தில் எழுதப்பட்டதை விட பலமடங்கு அதிக சொற்கள் அவர்களின் மெதுவான தோல்வி ஊர்வலத்தை வர்ணிக்க அலச தீர்ப்பு வழங்க செலவழிக்கப்பட்டு உள்ளன. தென்னாப்பிரிக்கா அநாயசமாய் அடையும் வெற்றிகளை விட அது சுலபமாய் இழக்கும் முக்கிய ஆட்டங்களே நமது கற்பனையை அதிகம் தூண்டுகின்றன.
தென்னாப்பிரிக்கா ஏன் கால்-இறுதியில் தோற்றது? தென்னாப்பிரிக்காவின் மன இறுக்கம் கொண்ட ஆட்டமரபு அவர்களை சில சமயங்களில் பதற்றமடைய விநோதமாய் தோல்வியை தட்டிப் பறிக்க செய்கிறது என்றனர் நிபுணர்கள். தெ.ஆ உலகக்கோப்பை கால், அரைஇறுதிகளில் ஐந்தாவது முறையாய் தடுமாறி வீழ்ந்துள்ளது. ஆனால் இதே அதி-கவன, சுயகட்டுப்பாட்டு ஆட்டமுறை தான் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக எண்ணற்ற ஆட்டங்களை உத்திரவாதமாய் வெல்ல அவர்களுக்கு உதவியுள்ளது. இன்றைய ஒருநாள் அணிகளில் தெ.ஆ தான் அனைத்து துறைகளிலும் மிகத் திறமையான தன்னிறைவான அணி. தெ.ஆ தன்னை உடனடியாக மாற்றிக் கொண்டு ஆசிய அணிகளை போல் வாலில்-தீப்பிடித்த-கிரிக்கெட் ஆடப் போவதில்லை.  அவர்களை இத்தனை வருடங்களாய் சீராய் வழிநடத்திய உருவாக்கிய ஆட்டமரபையும் துறக்க போவதில்லை. தெ.ஆ தனது வலிமையையும் பலவீனத்தையும் ஒருங்கே கொண்டே வளரப் போகிறது. அதுதான் அவர்களின் தனித்தன்மை. வரலாற்றை திருத்தி எழுதும் நோக்கில் ஒரு அணி தன் ஆளுமையை இழக்க கூடாது. நவீன கிரிக்கெட் அணிகளின் வரலாறு வணிக, விளம்பர நிறுவனங்கள், மீடியா வியாபாரிகள் மற்றும் நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்களின் கற்பனையால் ஒன்றன் மேல் ஒன்றாய் படலம் படலமாய் உருவாக்கப் படுவது. தென்னாப்பிரிக்கா இப்படியே இருப்பதனாலும் ஒன்றும் இழப்பில்லை. தெ.ஆ மிகச் சின்ன ஓட்டை கொண்ட பிரம்மாண்ட பலூனாக இருப்பதில் ஒரு நாடகீயம் உள்ளது. இது கிரிக்கெட் சூழ் உலகுக்கு பிடித்து தான் இருக்கிறது. இந்த ஓட்டையை மூடி விட்டால் தெ.ஆ தன் பாத்திரத்தை மாற்றி கொள்ள வேண்டி வரும். அதாவது, அது ஆஸ்திரேலியாவின் முள்கிரீடத்தை பெற வேண்டும். ஒரு அதி-ஆரோக்கியமான உடலை போல் அனைவரையும் சலிப்பூட்டியபடி மெல்ல மெல்ல மரிக்க வேண்டும்.

ஆஸ்திரேலியா ஏன் கால்-இறுதியில் தோற்றது?
ஆஸ்திரேலியாவின் சுழலர்கள் மோசமாக வீசியதே காரணம் என்றனர் நிபுணர்கள். ஆனால் ஆஸி அணியின் ஒரே சுழலரான வயதான கிரேஜ்ஹா விக்கெட்களை கொய்வார் என யாரும் எதிர்பார்க்க இல்லையே. தெ.ஆ, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியுசிலாந்து, ஏன் இந்திய அணிக்கு கூட முக்கியமான கட்டங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை அமைத்து தந்தது சுழலர்கள் அல்ல வேகவீச்சாளர்களே. இலங்கை மட்டுமே இதற்கு விதிவிலக்கு. ஆக மொத்தமாய் விக்கெட்டுகளின் எண்ணிக்கையை அல்ல தரத்தை கருதுகையில் இந்த உலகக் கோப்பை தொடரில் சுழலர்கள் செய்ததெல்லாம் எச்சிற் பருக்கைகளை கூட்டி பெருக்கியது தான்.
ஆஸ்திரேலியா தோற்றதற்கு அசல் காரணம் அவர்களின் வேகவீச்சாளர்கள் மோசமாக வீசினது தான். அவர்கள் திறமையாக ஆவேசமாக இயங்கினார்களே ஒழிய தந்திரமாக சமயோசிதமாக வீசவில்லை. கால்-இறுதி ஆட்டத்தில் பிரெட் லீக்கு அடுத்த படியாய் அச்சுறுத்தக் கூடியவராக இருந்தவர் பகுதி நேர மிதவேக வீச்சாளர் வாட்சன். காரணம் அவர் இந்திய ஆடுதளங்களின் சிணுங்கல் குணத்தை அறிந்தவராக இருந்தார். திசையையும் நீளத்தையும் வேகத்தையும் தொடர்ந்து மாற்றி எதிர்பாராத வகையில் வீசினார். வேகத்தை விட கூர்மையும் மதிநுட்பமும் ஆசிய ஆடுதளங்களில் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தினார். அவர் எறிந்த இரு மெதுவான பந்துகள் சச்சினின் மட்டை ஓரத்தை உரசி கீப்பரையும் உரசி போயின. சச்சினுக்கு அவரை வாசிக்க நேரம் பிடித்தது. வாட்சனுக்கும் பிரெட் லீக்கும் இங்கு ஐ.பி.எல் ஆடின அனுபவம் பயன்பட்டிருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியாவின் ஒட்டு மொத்த ஆட்டதிட்டம் நேர்முரணாக இருந்தது. அவர்கள் வேகத்தை கொண்டு அதிரடியாய் விக்கெட்டுகளை வீழ்த்த உத்தேசித்தனர். இது பலவீன அணிகளுக்கு எதிராக பயன்பட்டு, வலுவான அணிகளுக்கு எதிராக சொதப்ப செய்தது. ஆனால் லீக் கட்டத்தை அடையும் வரை ஆஸியினரின் வேக வீச்சு பெரும் வலிமையாக அச்சுறுத்தலாக கருதப்பட்டது. கால்-இறுதியில் ஆஸி அணிக்கு எதிராக இந்தியா இரண்டாவதாக மட்டையாடினால் அநேகமாய் தோல்வி தான் என்று கணித்தார் கவாஸ்கர். ஆனால் எது பலமாக கருதப்பட்டதோ அதுவே பலவீனமாக அமைந்தது. வாழைப்பழம் விழுங்கியவாறே வழுக்கியும் விழுந்தனர்.
ஆனால் ஆஸ்திரேலியாவிடம் ஒரு அஸ்திரமே இருந்தது. அவர்கள் இது போன்றதொரு நெருக்கடி ஆட்டத்தில் வேறு ஒன்றுமே செய்திருக்க முடியாது. அந்த அஸ்திரமும் எய்த போது தேர்க்கால் தரைக்குள் அழுந்தி விட்டது. இந்த வெளியேற்றம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் எழுச்சியின் கடைசி மூச்சோ என்று அதிக சுவாரஸ்யமின்றி மெல்ல கேட்கிறோம். அதற்கு இன்னும் பெரும் தொலைவு இருக்கிறது. அவசரப்படாமல் நாம் இந்த இரு அணிகளின் சறுக்கல்களை கவனிக்கலாம். மீள்-எழுச்சிகளை எதிர்பார்க்கலாம். கசப்பை விட ரசிக்கத்தக்க சுவை வேறொன்றில்லை.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates