Sunday 27 November 2011

காதல் சந்திக்கும் சவால்கள் – குருதியும் ஊடகங்களும்



காதலுக்காக எக்காலத்திலும் குருதி சிந்தப்பட்டுள்ளது. இது பணம், சமூக அந்தஸ்து, சாதிப் பற்று ஆகிய காரணங்களினால் நடந்து வருவது. வடக்கில் இதற்கு honor killing என்று பெயர் உண்டு. ஆனால் சமகாலத்தில் தான் காதலுக்காக அல்ல காதலை தடை செய்யும் காரணத்துக்காக கடுமையான வன்முறை செயல்களில் குறிப்பாய் இளம் தலைமுறையினர் ஈடுபட்டு வருவதை காண்கிறோம்.
காதலில் ஈடுபவதை எதிர்த்ததற்காக அம்மாவை அம்மிக் குழவியால் இடித்து கொன்று தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கி கொல்லும் பெண்கள். பெற்றோர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து காதலன் துணையோடு நெரித்து கொல்லும் சகோதரிகள், வேறு பெண்தொடர்புகள் கொண்டிருந்ததால் உடற்பயிற்சி நிலைய பயிற்சியாள கணவனை கூலிப்படையை ஏவி மின்வயர்களை சுற்றி கொல்லும் மனைவிகள், காதலனை பழிவாங்க அவனது குழந்தையை கொல்லும் கள்ளக்காதலிகள் என இன்று நாம் காணும் இந்த வன்முறை வெளிப்பாட்டில் ஒரு விநோத தன்மை உள்ளது. இது சாதியம், மதம், ஒழுக்கம், காதல் என்ற லட்சியங்களுக்காக செய்யப்படும் கொலைகள் அல்ல. உறவுகளுக்குள் நாம் சகிப்புத்தன்மையை இழந்து வருவதை, பரஸ்பர சந்தேகத்தினால் தனிமையுணர்வை அடைந்து வருவதை காட்டுகின்றன. இவை காதலுக்கான கொலைகள் அல்ல, வெறும் காதல் கொலைகள்.
காதல் எனும் வெட்டவெளி
நுண்பேசி படக்கருவியும் முகநூல் போன்ற சமூகவலைதொடர்பு தளங்களும் ஆண் பெண் உறவை பொதுமேடைக்கு நகர்த்தி உள்ளன. ஒரு உறவை திரைகளுக்கு பின்னே இருட்டில் ஒளித்து வைப்பதும் வெட்டவெளியில் பலர் முன்னிலையில் கொண்டு வருவதற்கும் ஒரே நோக்கம் தான். அந்த உறவின் நெருக்கடியில் இருந்து தப்பித்தல்.
நுண்பேசியில் படம்பிடிக்கப்பட்ட ஏகப்பட்ட அந்தரங்க காட்சிகள் எம்.எம்.எஸ்களாகவும் இணையத்தில் மலிந்து வருகின்றன. இவை ரகசியமாக அல்ல இருசாராரின் அறிவுடன் தான் படம் பிடிக்கப்படுகின்றன. படக்கருவி முன் நிர்வாணமாய் தோன்றுவதிலும் உறவில் ஈடுபடுவதிலும் நமக்கொரு கிளர்ச்சி உள்ளது. இக்காட்சிகள் பின்னர் நண்பர்களிடம் பரவி இணையத்தில் சென்று போர்னோவாகின்றன. இணையத்தில் போர்னோ பார்ப்பவர்களுக்கு எந்நேரமும் தமக்கு தெரிந்த ஒரு முகம் அதில் தோன்றி அதிர்ச்சியுறும் அபாயம் உள்ளது. இணையை பின்னர் மிரட்டவும், பிறரிடம் தன் பாலியல் அந்த ஆற்றலை காண்பிக்கவும் உத்தேசித்தாலும் படம் பிடிப்பவர்கள் அந்தரங்க காட்சிகள் பல்கி பெருகும் ஒரு வைரஸ் கிருமி போன்றது என்பதை அதை செய்யும் போது உணர்வதில்லை. ஒரு கட்டத்தில் அவர்களின் அந்தரங்கம் அவர்களுக்கு அல்லாததாகிறது. அது கோடானுகோடி கோடி கண்களால் கொட்டாமல் பார்க்கப்படுவதை அவர்களால் என்ன முயன்றும் தடுக்க முடியாது.  இப்படி வெட்டவெளிச்சத்துக்கு காம உறவை கொண்டு வருவதன் மூலம் நமது தலைமுறை ஆண்-பெண் உறவை அதிக மதிப்பற்ற ஒரு தற்செயல் நிகழ்வாக மாற்றுகிறது. இன்று ஒரு பிரபலம் மீது ஊடகத்தில் பாலியல் புகார் ஆதாரத்துடன் வந்தாலும் அது ஒரு போர்னோவாக விரைவில் மாற்றப்பட்டு பரவலாக புழங்கியபின் மறக்கப்பட்டு விடுகிறது. பாலியல் குற்றங்களை நாம் இன்று அசட்டையாக பார்ப்பது போல் ஒன்றை நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் கற்பனையே செய்ய முடியாது. இதற்கு ஊடகங்கள் ஒரு முக்கிய காரணம்.
ஒரு திருமணமான நண்பர் தனக்கு நல்ல வாழ்க்கை துணை இல்லாமல் தவிப்பதாய் முகநூல் நிலைத்தகவலில் கூறுகிறார். அவரது ஆயிரக்கணக்கான நண்பர்களில் ஒருவர் அவரது சுவரில் “உங்களுக்கு விரைவில் திருமணமாகி நல்ல வாழ்க்கை துணை அமையட்டும் என்று வாழ்த்துகிறார். இதை அவர் மனைவி வாசித்தால் எப்படி குழம்பி போவார். பல தம்பதிகள் தமது குடும்ப விரிசல்களை இப்படி நிலைத்தகவல்கள் மூலம் பிரஸ்தாபித்து கோபத்தை வெளிக்காட்டுகிறார்கள். உதாரணமாக கீர்த்தனா மோகந்தாஸுக்கு தன் கணவனை பிடிக்காமல் போனால் உடனே இரண்டாவது பெயரை மாற்றி அப்பா பெயரை போட்டு கீர்த்தனா சந்திரசேகர் ஆகி விடுகிறார். இதன் மூலம் தனது திருமண உறவு நிலையை நண்பர்களை ஊகிக்க விடுகிறார். வேறு பல திருமண ஜோடிகள் முகநூலில் நேரடியாக ஒருவரை ஒருவரை தாக்கிக் கொள்கிறார்கள். தனிப்பட்ட வெளியில் நமது உறவுச் சிக்கல்களின் தீர்க்கும் சாத்தியங்களோ மன உறுதியோ நேர்மையோ இல்லை என்ற நிலையில் தான் முகநூல் போன்ற பொதுவெளியில் தம்பதிகள் மோதிக் கொள்கிறார்கள். ஜனநெரிசலில் பாதுகாப்பு உள்ளதாய் நினைக்கிறார்கள். நெருக்கமான நண்பர்களிடம் பிரச்சனையை விவாதிப்பதற்கும் நம்மை பரிச்சயமே இல்லாத ஆயிரக்கணக்கான முகநூல்வாசிகளிடம் தனிப்பட்ட கவலைகளை பகிர்வதற்கும் வித்தியாசம் உண்டு. இது நமது தனிமனித உறவுகள் எவ்வளவு பலவீனப்பட்டு போயுள்ளது, கட்டற்று தொடர்பு சாத்தியங்கள் உள்ள யுகத்தில் நாம் நம் முன் உள்ள ஒரு மனிதரிடம் மனம் திறந்து பேச எவ்வளவு அஞ்சுகிறோம் என்று காட்டுகிறது. வெளிப்படைத் தன்மையை சதா ஊக்குவிக்கும் ஊடகங்களால் சூழப்பட்ட இந்த வேளையில் தான் நாம் தினசரி வாழ்வில் நேரடியாக பேச கூட தயங்குகிறோம்.
நமக்குத் தேவை சில சொற்களை தனிமையில் பயமின்றி பேசும் அவகாசம். நான்கு கண்கள் மட்டுமே உள்ள அந்தரங்கம். அந்த கணத்தில் நம் மீதே நமக்கு நம்பிக்கை பிறக்கிறது. உடனே காதலியை / காதலனை முழுமையாக நம்பத் தொடங்குகிறோம்.
Read More

Saturday 26 November 2011

ஹர்பஜன் சிங்கிடம் இல்லாத ஒன்று அஷ்வினிடம் உள்ளது



97 நவம்பரில் அனில் கும்பிளே இண்டிபெண்டன்ஸ் கோப்பை அரையிறுதியில் சயத் அன்வரால் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக சிக்சர்கள் விளாசப் பட்ட காரணத்தால் அணியில் இருந்து சற்று காலம் விலக்கி வைக்கப்பட்டார். அனில் உள்ளூர் பயிற்சியாளர்களிடம் அலோசித்து தன் பிழையை அறிந்து தயார் ஓட்டத்தில் சில அடிகள் குறைத்து திருத்தி ரஞ்சி கோப்பைக்கு திரும்பு விக்கெட்டுகள் குவித்து தேசிய அணிக்கு திரும்பிய போது அவரது இடம் பத்திரமாக இருந்தது. இது போல் கும்பிளே தன் ஆட்டவாழ்வில் ஏகப்பட்ட மறுவரவுகளை நிகழ்த்தினார். 2002இல் கங்குலிக்கு கீழ் தொடர்ந்து இரு டெஸ்டுகள் வெளியேற்றபட்ட போது மூன்றாவது டெஸ்டில் உடைந்த தாடையில் பெரிய கட்டுடன் பந்து வீசி அதிர்ச்சியான பிரையன் லாராவை ஒரு உயரப்பந்தால் வெளியேற்றியது, வெளியூரில் அவர் வெறும் மிதவேக வீச்சாளர் சுழலர் அல்ல என்ற தொடர் புகாரை பொய்யாக்க ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சோபித்து டெஸ்டு ஆட்டங்களை வென்று தந்தது என ஒரு சுயமுன்னேற்ற நூலுக்கான பல கிளாசிக்கல் தருணங்கள் கும்பிளேவின் ஆட்டவாழ்வில் உள்ளன. அவர் தொடர்ந்து தன் குறைபாடுகளை கடந்து விஞ்சியவராக இருந்தார். அவருக்கு முன் இருந்த பேடி, பிரசன்னா, சந்திராவிடம் இருந்தும், பின் வந்த ஹர்பஜன் இடமிருந்தும் கும்பிளே இவ்வாறு வேறு பட்டார் முன்னோடி மூவர் இயல்பான திறமையை கொண்டு போதுமான அளவு சாதித்தனர்; கும்பிளே சுமாரான திறமையை கொண்டு போதுமானதற்கும் அதிகமாக சாதித்தார்; ஹர்பஜன் மிக அதிகமான திறமையிருந்தும் தொடர்ந்து தனக்குத் தானே நிழல் யுத்தம் புரிந்து சோர்ந்து போகிறார். கும்பிளேவின் முன்னோடிகள் தம்மளவில் திருப்தியடைந்த தூய கலைஞர்கள் என்றால் ஹர்பஜன் முன்னூறு டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தும் தோல்வி பயமும் அவநம்பிக்கையும் மிக்கவராக இருக்கிறார். இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் தொடர்களில் அணியில் இருந்து விலக்கப்பட்ட பின் ஐ.சி.எல் மற்றும் செலஞ்சர், ரஞ்சி தொடர்களில் அவர் அணித்தலைவராக ஆடினார். தோனி, கிரெம் ஸ்மித், லாரா, ஸ்டீவ் வாஹ், பாண்டிங் போன்ற வீரர்கள் அணித்தலைவர்களாக மிக சிரமமான அழுத்தம் மிகுந்த சூழ்நிலைகளில் பொறுப்பெடுத்து ஆடி அணியின் பிற வீரர்களுக்கு உதாரணங்களாக திகழ்ந்தனர். இது எல்லா நல்ல அணித்தலைவர்களிடமும் நாம் காணும் பொதுவான பண்பு. ஹர்பஜன் மட்டும் மாறாக மேற்சொன்ன மூன்று தொடர்களிலும் நெருக்கடி மிகுந்த கட்டங்களில் பந்து வீச மறுத்து இளைய வீரர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து தப்பித்து கொண்டார். உதாரணமாக சென்னைக்கு எதிரான ஒரு ஐ.சி.எல் ஆட்டத்தில் அவர் பந்தை இளம் கால்சுழல் பந்தாளர் சாஹலிடம் ஒப்படைத்ததை சொல்லலாம். வேறு வழியில்லாமல் போனாலோ நிலைமை சுமூகமானாலோ மட்டும் ஹர்பஜன் திரும்ப பந்து வீச வந்தார். நடந்து வரும் ரஞ்சி தொடர் ஆட்டங்களிலும் ஹர்பஜன் ஒவ்வொரு இன்னிங்சும் முப்பது ஓவர்களுக்கு மேல் வீசி விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் திணறுவதை கவனிக்கலாம். உள்ளூர் ஆட்டங்களில் கூட அவர் நிதானமாக இல்லை, ஒரு தோற்கடிக்கப்பட்ட படைவீரனை போல் வந்த பாதையிலேயே ஆவேசமாக திரும்ப ஓடுகிறார், துரதிர்ஷ்டவசமாக அவருக்கு முன்னோ பின்னோ யாரும் இல்லை. வெகுதொலைவில் அஷ்வின் உள்ளார். ஆனால் தொலைவில் உள்ள அப்புள்ளி ஹர்பஜனுக்கு பூதாகாரமாக தெரிகிறது.
இந்திய அளவில் கும்பிளே மற்றும் கபிலுக்கு அடுத்தபடியாய் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தின, உலகளவில் முன்னூறுக்கு மேல் விக்கெட்டுகள் பெற்றுள்ளதில் தற்போதும் ஆடிவரும் இரு சுழலர்களில் ஒருவரான ஹர்பஜனை இப்படி நெருக்கடிக்கு உள்ளாக்க, பின்னுக்கு தள்ள ஒரு இளம் அஷ்வினால் எப்படி முடிந்தது? ஹர்பஜனை தொடர்ந்து விமர்சித்து வந்துள்ள சஞ்சய் மஞ்சிரேக்கர் சொல்வது ஹர்பஜன் கடந்த ஐந்தாண்டுகளில் பரிணமிக்கவில்லை மாறாக தேங்கிப் போய் விட்டார் என்பது. இதன் பொருள் ஹர்பஜன் தன் திறன்களை இழந்து விட்டார் என்பதல்ல, அவரது திறன்கள் மழுங்கி விட்டன என்பதே. அப்படி மழுங்கக் கூடியனவா திறன்கள்? தூஸ்ராவை அவர் வீசுவதில்லை என்பது போக ஹர்பஜனால் இப்போதும் பந்தை எகிற வைக்கவும், நேர்பந்தால் மட்டையாளரை ஏமாற்றவும் முடியும். ஆப்ஸ்பின் எனப்படும் உள்வரும் பந்து என்றுமே அவரது இயல்பான பலமாக இருந்ததில்லை. நாடகீயமாக அகவெழுச்சியுடன் கதை சொல்லுகிற ஜெயமோகனுக்கு நகைச்சுவை வரவில்லை என்பதாலோ, எளிய மொழியில் அடக்கமாய் பெரும் மனித அவலத்தை பேசிய அசோகமித்திரனால் ஆர்ப்பாட்டமாய் வன்முறை சித்தரிக்க வராது என்பதால் அவர்கள் மோசமான எழுத்தாளர்கள் ஆவதில்லையே? எரப்பள்ளி பிரசன்னா ஹர்பஜனுக்கு சில தொழில்நுட்ப கோளாறுகள் உண்டு என்கிறார். அதையும் திருத்திக் கொள்ள முடியும். கங்குலி கூட கால்பக்கம் ஆடுவது எப்படி என்பதை ரொம்ப பிற்பாடே கற்றுக் கொண்டார். ஹர்பஜனின் பிரச்சனை உண்மையில் உள்ளார்ந்தது.
அவருக்கு நிகராக முன்னூறுக்கு மேல் விக்கெட்டுகள் கொண்ட உலகின் மற்றொரு மூத்த சுழலரான டேனியல் வெட்டோரி தனது ஆட்டவாழ்வின் முதல் பாதியை வேகவீச்சாளர்களின் நிழலில் கழித்தார். நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அவர் அப்போதெல்லாம் பத்து ஓவருக்கு மேல் ஒரு இன்னிங்ஸில் வீச முடியாது இருந்தது. ஏனென்றால் நியூசிலாந்து பாரம்பரியமாக மிதவேக, வேக பந்து வீச்சை நம்பி இயங்கும் ஒரு அணி. அவ்வணியில் வெட்டோரி தலையான வீச்சாளரானது கெயிர்ன்ஸ், நாஷ் ஆகியோர் ஓய்வுற்று அவர்களின் வேகவீச்சு துறை பலவீனமான பின்பு தான். பின்னர் வெட்டோரி கடுமையான முதுகு காயம் காரணமாக இடதுகை சுழலருக்கு முதன்மையான பந்தாகிய வெளியே செல்லும் பந்தை வீச முடியாது போனது. பெரும்பாலான வீச்சாளர்கள் இக்கட்டத்தில் கிரிக்கெட்டில் இருந்தே வெளியே சென்றிருப்பார்கள். ஆனால் வெட்டோரி தன்னை வேறுபட்ட சுழலராக தகவமைத்துக் கொண்டார். உள்வரும் மற்றும் நேரே செல்லும் பந்துகளை வெவ்வேறு வேகங்களில் வீசுவது, பொறுமை, கற்பனை மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றை பயன்படுத்தி தொடர்ந்து இன்றும் ஒரு அபாயகரமான சுழலராக நிலைக்கிறார். ஹர்பஜன் அறிமுகமான புதிதில் அவருக்கு சில அனுகூலங்கள் இருந்தன.
அவரது தூஸ்ரா எனப்படும் வெளியே செல்லும் பந்து, உள்வரும் பந்தின் உயரம் மற்றும் அவரது பொதுவான புதுமை. அவரை அடித்தாட பல மட்டையாளர்களும் ஆரம்பத்தில் முயன்று வெளியேறினர். இந்திய ஆடுகளங்களில் எதிரணியினர் அதிரடியாக ஆடும் போது தூஸ்ரா அவருக்கு உதவியது. தடுத்தாடினால் பவுன்ஸ் காரணமாக ஷார்ட் லெக், சில்லி பாயிண்டில் பிடிக்கப்பட்டு மட்டையாளர்கள் வெளியேறினர். கும்பிளே மறுமுனையில் ஆடினால் மட்டையாளர்கள் துரியோதனன் காந்தாரி முன் நின்றது போல் ஹர்பஜனிடம் எளிதில் மாட்டிக் கொண்டனர். ரெண்டாயிரத்தின் முதல் பாதி இவ்வாறு ஹர்பஜனுக்கு பொற்காலமாக விளங்கியது. பின்னர் கும்பிளே விலகினதும் ஹர்பஜன் மேல் நெருக்கடி அதிகமானது. ஆனால் ஹர்பஜன் பொறுப்பின் பாரத்தை தாங்க தயாராக இல்லை. அவர் தனிப்பட்ட சவால்களை ஆக்ரோஷமாக சந்திக்க விரும்பும் சர்தார்ஜியே அன்றி பொறுமையாக பெரும் காலச்சுமைகளை, வரலாற்று எதிர்பார்ப்புகளை தோளில் ஏந்தும் கும்பிளே அல்லது முரளிதரன் அல்ல. இதனால் தனக்கு தோதாக இல்லாத சூழல்களில் பாதுகாப்பாக மட்டும் வீச முற்பட்டார். சவாலாக அவற்றை ஏற்றுக் கொண்டு இங்கிலாந்தின் கிராம் ஸ்வான் போல் எதிர்தாக்குதல் தொடுக்க முயலவில்லை. சுவாரஸ்யமாக அசருதீன் மற்றும் தோனியை போல் அல்லாது ஹர்பஜனை அதிகமாக தலைமை தாங்கின கங்குலி எதிரணியை வேக வீச்சாளரர்களால் பிரதானமாய் விக்கெட் வீழ்த்தி தாக்க விரும்பியவர். அவரின் கீழ் சாதகமற்ற சூழல்களில் ஹர்பஜன் ஒரு வாளாக அல்ல கேடயமாகவே இருந்தார். இந்தியாவில் ஆடும் போது மட்டுமே ஹர்பஜன் ஒரு வீரியமிக்க வீரராக நோக்கப்பட்டார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ஒரு கட்டத்தில் பிடி கழன்று உறையிலேயே தங்கிப் போய் விட்டார். திராவிடின் தலைமையின் கீழ் இந்தியா பெற்ற அநேகமான தொடர் வெற்றிகளும் சரி, தோனியின் வெற்றிகளும் சரி ஸ்ரீசாந்த், ஆர்.பி சிங், சஹீர், இஷாந்த், அமித் மிஷ்ரா, ஓஜ்ஹா ஆகிய வீச்சாளர்களின் முக்கியமான பங்களிப்புகளுடன் ஹர்பஜனின் சிறிய ஆதரவுடனும் நிகழ்ந்தது. திராவிட் மற்றும் தோனியின் இரண்டாயிரத்தின் பிற்பகுதியிலான தலைமை கட்டங்களில் இப்படி இந்திய பந்து வீச்சும், ஒட்டுமொத்தமாக அணியின் தரமும் மேலோங்கிய போது ஹர்பஜன் மெல்ல மெல்ல வீழ்ந்து கொண்டிருந்தார். தனது அணியின் பொற்காலங்களில் ஒரு முரளிதரன், வார்னெ, கும்பிளே போல் அவர் தலைமை வீச்சாளராக அல்லாமல் எளிய காரணிகளில் ஒன்றாக மாறிப் போனார். இக்காலகட்டத்தில் அணி ஹர்பஜனை மீறி செல்ல முடிந்தது அல்லது முயன்றது. இதே வேளையில் தான் ஹர்பஜன் தன் மட்டையாட்டத்தை மெருகேற்றி பல முக்கியமான நெருக்கடி தருணங்களில் அணியை மீட்டவராக விளங்கினார். சொல்லப் போனால் ஆஸ்திரேலியா, நியுசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக ஹர்பஜன் தன் மட்டையால் தான் பல ஆட்டங்களை வென்றளித்தார். சுவாரஸ்யமாக ஹர்பஜன் மட்டையாடும் போது மேலும் சுதந்திரமாக தோல்வி மனப்பான்மை இன்றி ஆடினார்.
இதே காலகட்டத்தில் இந்திய துணைக்கண்டத்தின் ஆடுகளங்கள் மெத்தனமானவையாக ஹர்பஜனுக்கு தோதற்றதவையாக மாறியதும் கவனிக்கத்தக்கது. அதனால் இந்தியாவில் ஆடினாலும் ஹர்பஜனை எதிர்கொள்வது மட்டையாளர்களுக்கு எளிதாயிற்று. மெத்தனமான ஆடுதளத்துக்கு ஈடுசெய்ய ஹர்பஜன் வேகமாக பந்தை திணிப்பார். ஜெயவர்தனே, காலிஸ் போன்ற மட்டையாளர்கள் அவரை பின்காலில் ஆடும் ஒரு முறையை வழமையாக வெற்றிகரமாக பின்பற்றினர். ஆப் மற்றும் மத்திய குச்சிகளில் இருந்து விலகி நாலு ஓட்டங்களுக்காய் லேட்கட் அல்லது குச்சிகளுக்கு குறுக்கே சென்று மிட்விக்கெட் பக்கமாய் ஒற்றை ஓட்டம். இந்த இரண்டு ஷாட்டுகள் கொண்டே நூற்றுகணக்காக ஓட்டங்கள் அவருக்கு எதிராய் எடுக்கப்பட்டன. ஹர்பஜன் ஓய்வுற்ற தாத்தா போல் தொலைவில் பதித்த விழிகளுடன் தான் தொடர்ந்து தட்டையாகி வருவதை ஏற்றுக் கொண்டார். இப்படி வீட்டுக்கு வெளியிலும் வீட்டுக்கு உள்ளேயும் ஹர்பஜன் எலியாகவே பரிணமித்தார்.
ஹர்பஜனை நாம் ஷோயப் அக்தருடன் ஒப்பிடலாம். இருவரும் அபரிதமான திறமை படைத்தவர்கள். ஆனால் தமக்குள் உள்ள சாத்தானை எதிர்த்து போராடியே சோர்ந்து போனவர்கள்.
ஹர்பஜன் இன்றும் அஷ்வினை விட மேலான திறமையாளர் மட்டும் அல்ல இந்தியாவின் சிறந்த ஆப்-சுழலரும் தான். அவர் முன்னூறு விக்கெட்டுகளை வீழ்த்திய போது சற்று சோர்வாகவே பேட்டியளித்தார். அந்த சாதனை வேளையில் தனக்கு வாழ்வின் தோல்விகளும் ஏமாற்றங்களுமே நினைவு வருவதாய் சொன்னார். அவர் மிக இளமையிலேயே சில ஏமாற்றங்களையும் பின்னடைவுகளையும் சந்தித்தார். முதலில் தேசிய அணிக்குள் வரும் முன் ஒழுக்கமின்மை காரணமாய் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அணிக்கு வந்து பிரபலமடைய துவங்கிய போது அவரது பந்துவீச்சு பாணி சந்தேகத்துக்குள்ளாகியது. இந்த விசயங்கள் ஹர்பஜனை தளர்த்திட அவர் கிரிக்கெட்டை விட்டு மனதளவில் அகல தொடங்கினார். அப்போது அவரது அப்பா இறந்து விட குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய எதிர்பார்ப்பும், ஏமாற்றத்தின் கசப்பும் அவரை ஊக்கப்படுத்தி அணிக்குள் மீள்வருகை நடத்த தூண்டின. ஒருவிதத்தில் ஹர்பஜன் முதிர்ச்சி அடைந்தாலும் அவர் தோல்விக் கூச்சம் மிக்கவராகவும் ஆனார். ஒரு தோல்வியுற்ற ஐ.பி.எல் ஆட்டத்தின் போது தன் அணியை வெறுமனே கேலி செய்ததற்காக ஸ்ரீசாந்தை சீரியசாக எடுத்துக் கொண்டு அறைந்தது ஒரு உதாரணம். அடுத்து இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் பொதுவாக அனுபவிக்கும் கோடானுகோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அழுத்தமும் அவரை எதிர்மறையாக பாதிக்கிறது.
அஷ்வினை விட ஹர்பஜன் காற்றில் பந்தை நன்றாக சுழல விட்டு லூப் எனப்படும் மிதவைப் பந்தை வீசுபவர். அஷ்வினை விட தந்திரம் மிக்கவர் மற்றும் நல்ல மட்டையாளர். மாறாக அஷ்வினிடம் மூன்று அனுகூலங்கள் உள்ளன. ஒன்று அவரது வேறுபட்ட பந்துகள். அநேகமாக அவரிடம் நான்கு பந்துகள் உள்ளன. ஒன்று உள்ளே வருவது, அடுத்து வெளியே செல்வது, மூன்று நேரே செல்வது, நான்கு டென்னில் பந்து எனப்படும் லெக் கட்டர். அஜெந்தா மெண்டிஸை அல்லது சக்லைன் முஷ்டாக் செய்த தவறு ஒன்றை அஷ்வின் தன் ஆட்டவாழ்வின் துவக்கத்திலேயே தவிர்த்து விட்டார். அதாவது, தன் வேறுபட்ட பந்துகளை அதிகமாக வீசி அதனையே மிகையாக நம்பியிருப்பதில்லை. அவர் பத்து ஓவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று டென்னிஸ் பந்துகளை தான் வீசுவார். பெரும்பாலும் பயன்படுத்துவது உள்வரும் மற்றும் நேராக போகும் பந்துகள் என்றாலும் மட்டையாளருக்கு எப்போதும் லெக் கட்டர் பற்றின ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருப்பதால் உள்வரும் பந்து அபாயகரமானதாக மாறுகிறது. அஷ்வின் இவ்வாறு சமயோஜிதமாக தன் வேறுபாடுகளை பயன்படுத்தி தன் முதல் இரு டெஸ்டுகளில் அதிக விக்கெட்டுகளை சாய்த்தார். முதல் கொல்கத்தா டெஸ்டில் ஓவர் தெ விக்கெட் முறையில் பந்து வீசினால் சுலபமாக ஆடி வந்த சந்தர்பாலை சமாளிக்க அவர் ரவுண்ட் த விக்கெட் வந்து குச்சிகளை நேராக தாக்கியது அவரது மாறுபட்ட சளைக்காத கற்பனைக்கு நல்ல உதாரணம். இதுவே ஹர்பஜன் என்றால் லெக் குச்சிக்கு வெளியிலோ ஆப் குச்சிக்கு வைடாக வீசி ஓட்டங்களை கட்டுப்படுத்த மட்டுமே முயன்றிருப்பார். அப்படி ஆகும் என்று எதிர்பார்த்து தான் சந்தர்பால் மிடில் குச்சிக்கு கார்டை மாற்றி நின்றார். உடனே அஷ்வின் ஒரு நேர்பந்தை நழுவ விட சந்தர்போல் எல்.பி ஆனார். அஷ்வினின் இந்த அமைதியான புத்திசாலித்தனத்தை அடுத்து பேசுவோம்.
அவர் ஐ.பி.எல்லில் ஜொலிக்க துவங்கிய போதில் இருந்தே மிக நிதானமாக கிரிக்கெட்டை எளிமையான ஒரு ஆட்டமாக புரிந்து கொண்டு செயல்படும் பாங்கு கவனிக்கப்பட்டது. இதே அமைதி தான் அவருக்கு டெஸ்டு ஆட்டங்களிலும் ஒருநாள் ஆட்டங்களின் நெருக்கடியான சந்தர்பங்களிலும் பயன்படுகிறது. குறிப்பாக அவர் ஒரு ஆட்டத்தில் தான் பந்துவீசும் ஓவர்களை சிறுசிறு கட்டங்களாக பிரித்து அந்தந்த போதுகளில் வேண்டிய சவால்களை மட்டும் எதிர்கொள்ள முயல்கிறார். வேண்டிய நேரத்தில் வந்து ஒரு மட்டையாளரை வீழ்த்த பார்க்கிறார். முடியாவிட்டால் அடுத்த சந்தர்பத்திற்காக காத்திருந்து மற்றொரு மட்டையாளருக்கு குறி வைக்கிறார். அவர் ஒரு ஆட்டத்தில் மொத்தமாக சோபிக்க வேண்டும் என்ற அழுத்தத்திற்கு தன்னை ஆட்படுத்துவதாக தெரியவில்லை. அஷ்வினால் இந்த பண்பை ஒரு பத்தாண்டுகளுக்கு தக்க வைக்க முடியுமா என்பது இப்போதைக்கு கணிக்க முடியாது என்றாலும் ஹர்பஜனுக்கு இதில் ஒரு பாடம் உள்ளது.
ஹர்பஜன் முன்னூறு விக்கெட்டுகள் வீழ்த்தின சாதனை வேளையில் ஒரு நிருபரிடம் தனக்கு ஐநூறு விக்கெட்டுகளாவது வீழ்த்த வேண்டும், அதற்கு அடுத்த ஐந்தாண்டுகள் ஆட வேண்டும் என்றொரு செயல்திட்டத்தை வெளியிட்டார். அது தன்னை சிறப்பாக ஆடத் தூண்டுவதாக இருக்கும் என்றார். சுருக்கமாக ஹர்பஜன் கும்பிளேவின் சாதனையை முறியடித்து இந்தியாவின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தின பந்துவீச்சாளராக விரும்புகிறார். ஆனால் அவர் புரிந்து கொள்ள வேண்டியது ஒரு வீரர் ஓய்வு கொள்ளும் போது மக்கள் நினைவில் கொள்வது அவரது விக்கெட் அல்லது ஓட்ட எண்களை அல்ல வரலாற்றில் அவர் செலுத்திய பங்கையே. உதாரணமாக கபில்தேவ் 83 உலகக்கோப்பைக்காகவும் கங்குலி தனது அணித்தலைமைக்காகவும், கவாஸ்கர் மற்றும் சச்சின் தமது தேச மத்தியவர்க்கத்தின் தன்னம்பிக்கையை நட்சத்திரமாக திகழ்ந்து இந்திய கிரிக்கெட்டை சுமந்ததற்காகவும் தாம் இன்றும் நினைத்துப் பார்க்கப் படுகிறார்கள். கவாஸ்கர் எத்தனை சதங்கள் அடித்தார் என்றோ கபில்தேவின் விக்கெட் எண்ணிக்கை என்னவென்றோ நாம் கவலைப்படுவதில்லை. வரலாறு எண்களால் கட்டப்படுவதில்லை. தற்செயல்களாலான வரலாற்றுடன் மனிதன் இணைவது தன் அகங்காரம் களைந்து ஈடுபாடு காட்டும் போதே. அதற்கு, ஒரு விளையாட்டை அதன் சவாலுக்காக ஆடும் மனப்பான்மையை ஹர்பஜன் மீட்டெடுக்க வேண்டும். இனிமேல் அவர் சாதனைகளை துரத்துவது பயனற்றது.
தன் ஆட்டத்தில் மகிழ்ச்சி காண முயன்றால் தான் ஹர்பஜனின் ஆட்டம் இனி மேம்படும். அவரிடம் தற்போது இல்லாததும் அஷ்வினிடம் நிரம்ப உள்ளதும் கொண்டாட்டமே..அடுத்தமுறை பந்துவீச தயாராகி சிறகடிக்கும் பறவை போல் இருப்பக்கமும் கைகளை வீசுகையில் நிஜமாகவே அவரது சிறகுகள் திறக்கட்டும்.
Read More

Sunday 20 November 2011

இன்றைய இலக்கிய வாசகன்



இன்றைய இலக்கிய வாசகன் ஜனரஞ்சக வாசிப்பில் இருந்து சமீபமாக தீவிர இலக்கியம் நோக்கி வந்தவன் அல்லது எந்த வாசிப்பு பயிற்சியும் அற்றவன். அவனுக்கு வாசிப்பு என்பது ஒரு அடையாள அட்டை. முன்னெப்போதையும் விட ஊடகங்களில் நேர்ந்துள்ள திறப்பு காரணமாய் அவனுக்கு எழுத்தாளர்களையும் சகவாசகர்களையும் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது. அவன் இரண்டு காரியங்களை செய்கிறான். மின்னஞ்சல்கள் அனுப்பி, தொலைபேசியில் பேசி எழுத்தாளன் முன் ஒரு தாசனாக பணிகிறான். கையில் பிரசாதம் வாங்கியதும் தான் ஒரு இலக்கிய வாசகன் என்ற அங்கீகாரம் வாங்குகிறான். ஆம் அவன் எதையும் அடைவதில்லை. சிக்கனமாக எளிதாக வாங்கி பத்திரப்படுத்துகிறான்.
இன்றைய வாசகன் எழுத்தாளனுக்கு நிகராக தன்னை பாவித்துக் கொள்வதில்லை. தன் வீட்டில் உள்ள ஒரு புத்தம் புது எல்.சி.டி டீவி மட்டுமே அவனுக்கு தான் புதிதாய் அபகரித்த ஒரு முன்னணி தீவிர எழுத்தாளன். எழுத்தாளனுக்கோ இந்த புதுவாசகன் தன் இணையதள வருகைப்பட்டியலில் சேர்ந்துள்ள ஒரு உபரி எண், தன் நுண்பேசி கால் லிஸ்டில் ஒரு அநாமதேய நபர். முதிர்ச்சியின்மை, அவசரம் மற்றும் பயிற்சியின்மையால் தான் இந்த பரஸ்பர அக்கறையின்மை நேர்கிறது.
நெடுங்காலமாய் வாசகனே இல்லாமல் இருந்த தீவிர எழுத்தாளனுக்கு இன்று தன்னை நோக்கி வரும் ஒரு பத்தாயிரம் வாசகர்கள் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்கள். இதே பத்தாயிரம் பேர்கள் தாம் தன் போட்டி எழுத்தாளனையும் வாசிக்க போவதாய் சற்று பதற்றம் ஏற்படுகிறது. கற்பனை பெயர்களில் கூட வாசகர்களை உருவாக்கி தமக்குத் தாமே கடிதம் எழுதி தங்கள் இணையதளங்களில் வெளியிடுகிறார்கள். ஒரு கதையில் நீங்கள் அம்மா என்று எழுதிய சொல்லை படித்து நான் நேற்று இரவெல்லாம் அழுதேன் என்று இதே வாசகன் அசட்டுத்தனமாக சொன்னால் ஒரு தீவிர எழுத்தாளன் பத்து ஆண்டுகளுக்கு முன் அதை வறட்டுப் புன்னகையுடன் நிராகரித்திருப்பான். இன்றோ அதை பொருட்படுத்தி உங்களைப் போல் நூற்றுக்கணக்கானோர் கடிதம் எழுதி உள்ளார்கள். அதை எல்லாம் படித்து நானும் அழுதேன் என்று பதில் எழுதுகிறான். மற்றொரு வகை வாசகன் புத்தகத்தை விடுத்து எழுத்தாளனை நாயகனாக்கி கொண்டாடுகிறான். ஒரு எளிய சினிமா ரசிகன் போல் நடந்து கொள்கிறான். கடந்த சில ஆண்டுகளில் நமது வாசகப் பரப்பு மாறி உள்ளதற்கு இது ஒரு உதாரணம்.
மற்றொரு பரிமாணம் உள்ளது. அசலான வாசகனுக்கு தொலைபேசி மற்றும் இணையம் வழியாக புத்தகங்களை அடைவது இன்று எளிதாகி உள்ளது. Facebook மூலம் சக-ஆர்வலர்களை தொடர்பில் வைப்பதும், இலக்கிய நடப்புகளை அறிவதும், தம் கருத்துக்களை சுதந்திரமாக உடனடி பதிவு செய்வதும் லகுவாகி உள்ளது. ஆங்கிலம் அறிந்த தமிழ் வாசகனுக்கு இன்று திறந்துள்ள சாத்தியங்கள் எண்ணற்றவை. ஆனால் இத்தகைய வாசகர்கள் ஒரு சிறுபான்மையினர் மட்டுமே.
(2011 டைம்ஸ் நவ் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)
Read More

Saturday 19 November 2011

இணையம் இன்று இலக்கியத்தை எப்படி பாதித்துள்ளது


கடந்த சில வருடங்களில் இணையம் தமிழ் உரைநடையை கவனிக்கும்படியாய் மாற்றி உள்ளது. சுஜாதா ஒருமுறை குறிப்பிட்டது போல், தொண்ணூறுகளில் தீவிர உரைநடையாளர்கள் சிடுக்காக நீளமாக எழுதுவதை கௌரவமாக கருதினார்கள். பொதுவாகவும் தனிப்பட்ட முறையில் நம்பப்படுவது போல் எனக்கு சளி பிடித்துள்ளது என்பதை சொல்லியாக வேண்டும் என்று நினைக்கிறேன் என்பது போல் எதையும் வளைத்து சுழித்து சொன்னால் மேலானது என்று நினைத்தார்கள். ஒரு புத்தகத்தை சற்று குதர்க்கமாய் பார்க்க முடிந்தால் “கட்டுடைத்ததாய் கோரினார்கள். இணைய வருகையால் நேரடியாக கிளர்ச்சியாக சுருக்கமாக எழுதும் பாணி பிரபலமாகி உள்ளது. இணைய பாதிப்பை நாம் கடந்த பத்து வருடங்களில் தமிழில் புத்தகப் பதிப்பு அடைந்த அபரித வளர்ச்சி மற்றும் இடைநிலை பத்திரிகைகள் பெற்றுள்ள வெற்றியையும் கணக்கில் கொண்டே புரிய வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளில் ஜெயமோகன், எஸ்.ரா, சாரு உள்ளிட்ட எழுத்தாளர்கள் புனைகதைக்கு நிகராக பத்திகளும் எழுதினார்கள். வாசகர்களை பெருக்கினார்கள். கவனத்தை தொடர்ந்து தக்க வைத்தார்கள். இது அவர்களின் புத்தக விற்பனையை அதிகப்படுத்தியது. எஸ்.ரா இடைநிலை, ஜனரஞ்சக இதழ்களிலும், சாரு மற்றும் ஜெ.மோ தம் இணையதளங்களிலும்.
சாரு இணைய பத்தி எழுத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். வாசகனுக்கு அணுக்கமாக, தன்னிலையாக, கொஞ்சம் அதிரடியாக, நிறைய சுவாரஸ்யமாக படுக்கையறை ரகசியங்கள், சமையலறை விவகாரங்கள், புலம்பல்கள், புகார்களில் இருந்து துவங்கி லத்தீன் அமர இலக்கியத்தில் சென்று முடிவது சாருவின் பாணி. இன்று ஏராளமான இளம் எழுத்தாளர்கள் இணையத்தில் உருவாகி அங்கிருந்து பத்திரிகைகளுக்கும் வருகிறார்கள். இவர்களிடம் சாருவின் வலுவான பாதிப்பை காண முடிகிறது. கட்டுடைக்கும் ஆர்வமின்றி தன்னிலையாக கிளர்ச்சியாக எழுத முயல்கிறார்கள். உடனடியான ஆனால் நிலையற்ற கவனமே நோக்கம்
ஜெ.மோ தன் இணையதளத்தில் வழமையானவற்றை தான் எழுதினாலும் அவரது உரைநடை லகுவாகி நேரடியானதாக மாறி உள்ளது. உலோகம் “அனல் காற்று போன்ற அவரது சமீப நாவல்களும் “சோற்றுக்கடன் போன்ற சிறுகதைகளும் எளிய லட்சியங்களும் வளவள சித்தரிப்புகளும் மிகையான உணர்ச்சிகளும் கொண்டவை. ஜனரஞ்சக வாசகனை தக்க வைக்கும் பதற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம்.
கனமான கவித்துவ மொழிக்காக அறியப்பட்ட எஸ்.ரா இன்று எளிமையான சற்று உணர்ச்சிகரமான மொழியையே பயன்படுத்துகிறார். “உபபாண்டவத்தில் இருந்து உறுபசியில் இருந்து “துயிலில் அவரது மொழி குறிப்பிடும்படியாய் மாறி உள்ளது. உருவக இறுக்கத்தில் இருந்து உலர்வான சொற்களில் இருந்து இன்று அது மாறி இளகிப் போய் உள்ளது. இதற்கு கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த மேற்சொன்ன மாற்றங்கள் ஒரு காரணம் எனலாம்.
வேறெந்த இந்திய மொழியை விடவும் தமிழில் தான் அதிகபட்சமாக இணையத்தில் இலக்கியம் வாசிக்க கிடைக்கிறது. 10,000 இலக்கிய வாசகர்களில் கணிசமானோர் இணையத்தில் மட்டும் வாசிப்பவர்கள். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இணையதளம் உள்ளது. பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து கடந்த ஐம்பது வருட நவீன இலக்கியம் வரை அநேகமாய் அனைத்து எழுத்தாளர்களின் பல அல்லது ஒரு மாதிரி படைப்பாவது வாசிக்க கிடைக்கிறது. முன்பிருந்த அறியப்படாத எழுத்தாளன் என்ற மர்மவெளி இன்றில்லை. இணையம் நல்கும் சுயபிரசுர வாய்ப்பு எழுத விரும்புபவர்களுக்கு இன்று தரும் சுதந்திரம் அபாரமானது. சுயமேம்பாட்டுக்கும் பரஸ்பர தாக்குதலுக்கு அது மலினப்படுத்தப்பட்டாலும் எதிர்காலம் நம்பிக்கை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
(2011 டைம்ஸ் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)
Read More

Thursday 17 November 2011

ஆங்கிலம் – நமக்கு இடையிலான ஒரு பள்ளத்தாக்கு


ஒரு சமூக அந்தஸ்து, நாகரிக அடையாளம் என்பதை விட ஆங்கில கற்பதன் நோக்கம் இன்று வேறொன்றாக இருக்கிறது. அது நம்மை நோக்கி விரிந்துள்ள பல்துறை அறிவை பெற, சமூக வலைதளங்களை அணுக மற்றும் பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்புகளை அடைவதே ஆங்கிலம் வெறும் ஒரு மொழி, நமது பண்பாட்டிலே எல்லா அறிவுப் பொக்கிஷங்களும் உள்ளன, வெறும் திருக்குறள் படித்தாலே உலக தத்துவ நூல்களை படித்ததற்கு நிகர் போன்ற அசட்டு வாதங்கள் இன்று பின்னே தள்ளப்பட்டு விட்டன. மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த ஐம்பதுகளில் மொழி உணர்வை வழிபட்டதற்கான ஒரு சமூக அரசியல் தேவை இருந்தது. அது இன்று இல்லை.
இன்று கட்டற்ற அறிவும் உயர்ந்த வேலைகளும் நம் விரல் நுனியின் அருகில். நம்மை அணுக முடியாமல் செய்வது ஆங்கில பரிச்சயமின்மை. இது கலாச்சார அந்தஸ்து பற்றின சிக்கல் அல்ல, ஒரு நடைமுறை பிரச்சனை. இதை மிக அதிகமாக சந்தித்து வருபவர்கள் நமது நகர் மற்றும் மாநகர்வாழ் கீழ், கீழ்மத்திய மற்றும் மத்திய வர்க்க இளைஞர்கள்.
இன்று பன்னாட்டு நிறுவனங்களில் உள்ள வேலைகளில் நமக்கு தொழில்நுட்ப அறிவும் மொழியறிவும் தேவையாக உள்ளது. இரண்டும் தனித்தனியாக தேவைப்படும் வேலைகளும் உள்ளன. அந்த தேவைப்படும் மொழி அதிகமும் ஆங்கிலம். ஜப்பானிய மொழி, பிரஞ்சு ஆகியவற்றும் நல்ல சந்தை மதிப்பு உள்ளது. ஆனால் சமீப காலத்தில் திறந்துள்ள இந்த எண்ணற்ற வாய்ப்புகளுக்கும் நம் இளைஞர்களுக்கும் இடையில் ஒரு பெரும் பள்ளத்தாக்கு உள்ளது.
கல்லூரி ஆசிரியனாக என்னுடைய முதல் வகுப்பில் மாணவர்கள் ஆங்கிலத்தை தமிழில் கற்பிக்க கேட்ட போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. மொழியல்லாத பிற பாடங்களை கூட பல ஆசிரியர்கள் தமிழில் கற்பிக்க தயங்குகிறார்கள். ஒவ்வொரு தமிழக கல்லூரியிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆங்கிலம் புரியாததால் பாடம் புரியாமல் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். இளங்கலையில் தேர்வுகளை தமிழில் எழுதலாம். ஆனால் ஆங்கிலத்தில் வகுப்புகள் கேட்டு புரியாத போது தமிழிலோ அர்மேனியாவிலோ தேர்வு எழுதுவதில் அர்த்தமில்லை.
முதல் வருடத்தில் இப்படியான ஏமாற்றத்தை சந்திக்கும் மாணவர்கள் சுயமுயற்சியில் ஆங்கிலம் கற்க முயல்கிறார்கள். சின்ன சின்ன வார்த்தைகளை கற்க முயல்வது, இலக்கணம் படிப்பது ஆகிய முயற்சிகளில் ஈடுபடுகிறார். ஆனால் தோதான சூழல் இன்றி இந்த ஆர்வத்தை தக்க வைக்க முடிவதில்லை. சிலர் ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தி Veta போன்ற அரைவேக்காட்டு ஆங்கில பயிற்சி வகுப்புகளில் சேர்கிறார்கள். பெரும்பாலும் இதிலும் ஏமாற்றம் தான். கல்லூரியில் ஆங்கில ஆசிரியர்கள் மாணவர்களின் போதாமை பள்ளிக்கூட கல்வி அமைப்பின் தவறு என்கிறார்கள். மற்றொரு புரிதல் உள்ளது. ஆங்கிலம் கற்க ஆங்கிலம் மட்டும் கற்றால் போதாது, ஆங்கிலம் புழங்கும் சூழலில் வாழ வேண்டும் என்பது. இதற்காக ஐந்து வயது குழந்தைக்கு ஐம்பதினாயிரத்துக்கு மேல் கட்டணம் கட்டி மேற்தட்டு பள்ளிகளில் சேர்க்கிறார்கள். பெற்றோர்களின் இந்த மிகை ஆர்வத்தில் நியாயம் உள்ளது. ஆனால் இந்த சமூகப் போக்கு கீழ்த்தட்டினரை ஒரேயடியாய் அந்நியப்படுத்துவதிலும் குழந்தைப்பருவத்தில் இருந்தே வர்க்க உணர்வை வலுவாக ஏற்படுத்துவதிலும் போய் முடிகிறது. ஆங்கிலம் பேசினால் தண்டனை, ஆங்கிலம் பேசாத குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது போன்ற பாசிஸ விதிமுறைகள் உருவாகின்றன. நாம் என்ன செய்து இந்த “ஆங்கில மாயையை எதிர்கொள்ள முடியும்?
முதலில் நமது இளையதலைமுறையினர் அனைவரும் மேற்தட்டினர் போல் சரளமாக உடனடியாக பேசப் போவதில்லை என்று உணர வேண்டும். நமது நோக்கம் அதுவல்ல. ஒரு பரந்துபட்ட திட்டம் அமைக்க வேண்டும். அதன் நோக்கம் பள்ளி அளவில் மொழிக் கல்வியை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். சமீபமாக நமது பள்ளிக் கூட ஆங்கில நூல்களில் ஏகப்பட்ட இலக்கண பயிற்சிகள் இருப்பதை கவனிக்கிறோம். உண்மையில் ஆங்கிலம் பழக நமக்கு ஏட்டுப் பயிற்சி மட்டும் போதாது. முதலில் நாம் பள்ளிக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் அதிக சம்பளம் கொடுத்து உயர்ந்த மதிப்பெண்கள் உடன் முதுகலை வரையாவது படித்தவர்களை மட்டுமே நர்சரி அளவில் இருந்தே நியமிக்க வேண்டும். அடுத்து நடைமுறையில் ஆங்கிலம் கற்பதற்கான சூழலை, உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஊடகங்களை பள்ளியில் மேலும் அதிக அளவில் மொழிப் பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும். ஏட்டைத் தாண்டி பண்பாட்டு கலை செயல்பாடுகளை தொடர்ந்து நிகழ்த்துவதன் வழி நமது மொழி அறிவை இன்னும் எளிதாக வளர்க்க முடியும்.
ஒரு மொழியில் சரளமாக மூன்று மாதங்கள் அதில் முழுக்க “இருக்க வேண்டும் என்றொரு கோட்பாடு உள்ளது. இதனை மூழ்குதல் என்கிறார்கள். அதாவது எந்த ஒரு கவனச் சிதறலோ பிறமொழி குறுக்கீடோ இன்றி ஒரு மொழியில் தொடர்ந்து ஈடுபடுதல். தொடர்ந்து மூன்று மாதங்கள் ஒரு மொழியை கேட்டுக் கொண்டே, பேசிக் கொண்டே, படித்துக் கொண்டே, எழுதிக் கொண்டே இருந்தால் சுளுவில் படித்து விடலாம். ஆனால் கல்விக்கூடங்களில் நாம் படிப்பதை மட்டுமே பிரதானமாக செய்கிறோம். நம் கல்வியியலில் உள்ள குறை அது. BCL நூலகத்தில் சென்னையில் நடத்தும் ஆங்கில பயிற்சி வகுப்புகளில் சின்ன சுவாரஸ்யமான விளையாட்டுகள் மூலம் மாணவர்களை பங்கேற்க வைக்கிறார்கள். ஆசிரியரின் கண்காணிப்பின் கீழ் சுயமாக கற்கிறார்கள். ஓரளவு அடிப்படை அறிவு கொண்டவர்களுக்கு அடுத்த படியில் ஏற இந்த முறை மிகவும் உதவும். உதாரணமாக பள்ளியில் அரைமணி நேரம் வெர்ட்ஸ்வொர்த்தின் Daffodils எனும் பழம் ஆங்கில கவிதையை விளக்குவதை விட உரையாடல் மிகுந்த ஒரு ஆங்கில படக்காட்சியை சப்டைட்டிலுடன் போட்டுக் காட்டி அதே வசனங்களின் பொருளை சொல்லி மாணவர்களை உச்சரிக்க வைக்கலாம். இத்ற்கு மொழி ஆய்வகங்களை பயன்படுத்தலாம். டப்பிங் தியேட்டர்களில் கூட பழகலாம். சொற்களின் பொருள் அறியும் அளவுக்கு அச்சொற்கள் நம் காதுகளில் மீள மீள ஒலிப்பதும், நாமே பேசிக் கேட்பதும் முக்கியம்.
வேற்றுமொழிக்காரர்களுடன் படித்து வளரும் சூழல் ஆங்கிலம் போன்ற ஒரு பொதுமொழியை கற்பதற்கு தகுந்தது. இணைய பயன்பாடும் சமூக வலை தளங்களும் கூட ஆங்கில பயன்பாட்டை ஊக்குவிக்கின்றன. மேலும் மேலும் நாம் வாழும் உலகம் மேற்சொன்ன கலவை கலாச்சாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆங்கிலம் - தமிழ் என்றில்லை எந்த மொழியும் இனி அதன் கலாச்சார சாரத்தை மற்றொன்றிடம் இழந்து வேறொரு வடிவில் திரும்ப பெறப் போகிறது. மொழி இனி ஒரு தொடர்புக்கான நடைமுறை சாதனமாக மட்டுமே இருக்கும். உள்ளூர் மொழியை போன்று ஒரு பொதுமொழியும் நமக்கு இனி தொடர்ந்து தேவைப்படும். ஆங்கிலம் வீழ்ந்தாலும் அது மற்றொரு மொழியாக இருக்கும். வீட்டில், வெளியே நிறுவனங்களில், சமூக சந்திப்புகளில் நாம் கலாச்சார தூய்மையை காப்பாற்றுவதை விட ஒரு கலவை மொழி சூழலை ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். ஒரு மொழியை ஆழமாக தெரிந்து கொள்வதை விட பல மொழிகளை அரைகுறையாய் புரிந்து கொள்வது மேல் என்று நம்ப தலைப்படுவோம். சமூகத்தின் அனைத்து தட்டினரும் இப்படியான ஒரு பல்மொழி கலாச்சாரத்தை நோக்கி நகர்வதே ஒரு சூழல் கட்டாயம். வலுவான மரபை கொண்ட மொழி நமது என்றால் அது இச்சூழலில் இருந்து வளமடையுமே அன்றி அழியாது. காப்பிக்கடையை குளம்பியகம் என்றும் கோழிக்கடையை இறைச்சியகம் என்றும் கடை பெயர்ப்பலகைகளை திருத்தும் வேளையில் நாம் ஒரு புது பண்பாட்டை நோக்கி நம் மனதை திறக்கும் ஒரு புது வேற்றுமொழிச் சொல்லை கற்றுக் கொள்ளலாம்.
(2011 டைம்ஸ் தீபாவளி மலரில் வெளியானது)
Read More

Sunday 13 November 2011

தமிழக வானிலை அறிக்கை – மோனிகா, ரமணனில் இருந்து கடவுள் வரை



ஆரம்பத்தில் வானிலை அறிக்கைகள் தொலைக்காட்சி செய்தியின் முடிவில் சில அசுவாரஸ்யமான வாக்கியங்களாக சுருக்கப்படுவதில் இருந்து இன்று கிராபிக்ஸ் மற்றும் வரைபடங்களையும் கொண்டு செல்வி மோனிகாக்கள் திக்கித் திக்கி தலையை ஆட்டி ஆட்டி விளக்குவது வரை வளர்ந்துள்ளது. பருவநிலை அறிக்கைகள் அறிவியல்பூர்வமாகிய சூழலில் அறிவிப்பாளினியும் மரபான சேலையில் அல்லாமல் நவீன ஆடையில் வருவதும் கவனிப்புக்குரியது. இந்த மசாலா சேர்க்கைக்கு ஒரு காரணம் இந்தியாவில் பொதுவாக மழைக்காலங்களில் தான் வானிலை அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது என்பது.
காய்கறி விலை ஏற்றம், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு செய்திகளில் இருந்து அன்றாட போக்குவரத்தை பாதிக்கும் இன்று குடை மழைகோட்டு எடுக்க வேண்டுமா, சாலையில் எந்தளவு நீர்த்தேக்கம் போன்ற கேள்விகள் வரை உயிர் பெறுகின்றன. நமது பருவகாலம் நான்காக பிரிக்கப் படுகிறது. குளிர்காலம், கோடை, முன்மழைக்காலம், மழைக்காலம். ஆனால் நமது பருவச்சூழல் ஐரோப்பாவில் போல் இங்கு தினசரி வாழ்வை தொடர்ந்து பாதிக்கிற ஒன்றாக இல்லை. போக்குவரத்தை பாதிக்கும் கடும் பனிப்பொழிவு, புயல், காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்கள் இங்கு குறைவே.
போலாந்து இயக்குநரின் டெகலாக்ஸ் எனும் தொலைக்காட்சி படங்களில் ஒன்றில் ஒரு விஞ்ஞானி தனது மகனுக்கு வெளியே விளையாடுவதற்கு தோதாக சூழல் உள்ளதா என்று வானிலையை சில அறிவியல் சூத்திரங்கள் கொண்டு ஆய்ந்து சொல்வார். வெளியே தரையில் அடர்த்தியான பனி படர்ந்துள்ளது. குறிப்பாக, உறைந்துள்ள ஒரு ஏரியில் பனிச்சறுக்கு விளையாட குழந்தைகள் பிரியப்படுகிறார்கள். வானிலை நிமிடத்துக்கு நிமிடம் மாறக் கூடியது. அப்பாவின் விஞ்ஞான கணிப்புக்கு எதிராக ஏரி உருகி அவரது மகன் மூழ்கி இறந்து போகிறான். நாத்திகவாதியான அப்பா தேவாலயத்திற்கு சென்று மண்டியிட்டு அழுகிறார். ஒருவிதத்தில் மனித அறிவு எவ்வளவு குறைபாடுள்ளது, நாம் வாழும் பிரபஞ்சம் எவ்வளவு பிரம்மாண்டமான எளிதில் வரைவறுக்க முடியாத கணித சூத்திரங்களால் இயங்குவது என்பதை நடைமுறை வாழ்வில் அடிக்கடி நினைவுபடுத்துவதற்கான ஒரு கருவியாகவும் வானிலை அறிக்கைகள் இயங்குகின்றன. இவ்வாறு மழை நாட்களில் ரமணனின் சொற்களில் அடிக்கடி கடவுளும் எட்டிப் பார்க்கிறார்.
மனித அறிவின் எல்லை பற்றி இப்படியான உயர்ந்த தத்துவ விசாரங்களில் இருந்து டீ.வியில் ரமணனின் கணிப்புகளும், அவரைத் தொடர்ந்து “இன்று டீவியில் மழை பெய்யாது என்றால் கண்டிப்பாக பெய்யும் என்று நக்கலாக குடை எடுத்துக் கொண்டு செல்லும் சினிமா நகைச்சுவை பாத்திரம் வரை நமது மீடியாவிலும் பொதுமக்கள் பிரக்ஞையிலும் நீங்காத இடம் பெற்றுள்ளது. வானிலை கணிப்பின் நிச்சயமின்மை ஜோதிடத்தை போன்றே அதனளவிலான சுவாரஸ்யம் கொண்டது. இதனாலேயே கிரகங்களின் நிலையை அவதானித்து வாழ்வைப் போன்றே பருவநிலையையும் கணிக்க இந்தியர்கள் கி.மு 300இலேயே முயன்றிருக்கிறார்கள். 
(2011 டைம்ஸ் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)
Read More

Saturday 12 November 2011

மனச்சோர்வும் நகரத்து பெண்களும்




உலகமெங்கும் நகரவாசிகள் அதிகமாக மனச்சோர்வினால் பாதிக்கப்படுகிறார்கள். நகரங்களில் மிகுதியான மக்கள் தொகை மற்றும் போதிய உறவுநிலைகள் இன்மை ஆகியன ஒரு முக்கிய காரணங்கள். மனிதர்கள் பொதுவாக ஜனநெருக்கடி உள்ள இடங்களில் ஒருவித பதற்றத்தை, பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள். மேலும் பரிச்சயமற்ற மனிதர்கள் பொருளாதார தேவை எனும் பொதுநோக்கத்திற்காக தொடர்ந்து வந்து குவிந்து விலகிக் கொண்டிருக்கும் நகரத்தில் இருநூறு பேர் நிரந்திரமாய் வசிக்கும் ஒரு கிராமத்தில் உள்ள சாஸ்வதமான உறவுகள் ஒரு மனிதனுக்கு எளிதில் அமைவதில்லை. கோடிக்கணக்கானோர் வாழும் நகரத்தில் ஒரு மனிதன் தனிமையில் தவிப்பதற்கு இதுவே காரணம். இது மனச்சோர்வை தூண்டாவிட்டாலும் அதற்கு ஏற்ற ஒரு சூழலை உருவாக்குகிறது. நகரங்கள் மனச்சோர்வுக்கு தோதாக நம் மூளை அமைப்பையே மாற்றுகின்றன என்னும் ஒரு தரப்பும் உண்டு. நியூயார்க்கில் இவ்வருடம் நடந்த ஒரு ஆய்வில் நகரங்களில் பிறந்த வளர்ந்தவர்கள் எதிர்மறை விமர்சனங்களை நேரிடும் மனவலிமை அற்றவர்கள் என்கிறது. மாறாக கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் ஒரு சிறுபுன்னகையுடன் எதையும் தாங்கிக் கொள்கிறார்கள்.

மத்தியபிரதேசத்தில் உள்ள டாட்டாமோட்டார்ஸ் ஆஸ்பத்திரியில் பணி புரியும் டாக்டர் அகர்வால் தனது ஆஸ்பத்திரியில் நூற்றுக்கணக்கானோர் தினமும் வரிசையில் நிற்பதாக சொல்கிறார். பெரும்பாலானோர் இளைஞர்கள். வேலை நெருக்கடி ஒரு முக்கிய காரணம் என்கிறார். 2009இல் சென்னை நீரிழிவு ஆய்வு நிறுவனம் டாக்டர் மோஹன் நீரிழிவு சிறப்பு மையத்துடன் இணைந்து ஒரு முக்கிய ஆய்வு நடத்தியது. 26,000 சென்னைவாசிகள் உள்ளடக்கிய இவ்வாய்வில் புரிய வந்தது இங்கு 15% மனச்சோர்வாளர்கள் உண்டு, அவர்களில் அதிகம் பேர் பெண்கள், திருமணமாகாதவர்கள், மணமுறிந்தவர்கள். மேலும் கீழ்த்தட்டை சார்ந்த மக்கள் எளிதில் மனச்சோர்வடைகின்றனர். நகரம் மனச்சோர்வை தூண்டினாலும் குறிப்பாக பெண்களும், துணையற்றவர்களும், பணவசதி இல்லாதவர்களும் அதிகம் பலியாகின்றனர் என்ற தகவல் மனச்சோர்வை பொறுத்தவரையில் உயிரியல், குடும்பம் சார் மற்றும் பொருளாதார காரணிகள் மேலும் அபாயகரமானவை என்று புரிய வருகிறது.
குடும்ப துணையற்றவர்களும் ஏழைகளும் பாதிப்புக்குள்ளாவதை எளிதில் புரிந்து கொள்ளலாம். பெண்கள் ஏன் ஆண்களை விட அதிகம் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள்?
பூப்படையும் போது பெண் உடல் அடையும் மாற்றங்கள், குடும்ப வாழ்வையும் வேலையயையும் ஒருமித்து சமாளிக்கும் போராட்டத்தின் நெருக்கடிகள், உடலழகு குறித்த கவலைகள் ஆகியன பொதுவான காரணங்கள். மேலும் பிரசவத்திற்கு முன்னரும் பின்னருமான மாதங்களிலும், மாதவிடாய் காலங்களிலும் பெண்களின் உடலில் நேரும் ஹார்மோன் சுரப்பு மற்றும் பிற ரசாயன மாற்றங்கள் அவர்களை எளிதில் மனசோர்வுக்கு தள்ளுகின்றன. பெரும்பாலான சமூகங்களில் பெண்கள் கடுமையான கண்காணிப்புக்குள் வாழ்வதால் தங்கள் மனச்சோர்வை,ஏமாற்றத்தை, நிராசையை ஆண்களைப் போன்று போதைப் பழக்கங்கள் மற்றும் வெளிப்புற செயல்பாடுகள், சமூக தொடர்புறுத்தல்கள் வழி வெளிப்படுத்தும் வாய்ப்புகள் குறைவு. அவர்கள் வெளிப்பாட்டு மார்க்கமின்றி தமக்குள்ளே புழுங்கி மேலும் சோர்ந்து போகிறார்கள். அடுத்து பொதுவாக ஆண்கள் தமது எளிதில் தீராத பிரச்சனைகளை எளிதில் தள்ளிப் போடும் மனப்போக்கு கொண்டவர்கள். பெண்கள் அதே பிரச்சனைக்கு முடிவு காணும் வரை மனதுக்குள் உழன்று கொண்டிருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் பெண்கள் பிரச்சனைகளுக்கு அழுவதன் மூலம் தீர்வு காணும் உள்விழைவு கொண்டவர்கள். அழுகை ஒரு நல்ல நிவாரணமாக இருந்தாலும் அது ஒருவிதத்தில் நம் துக்கத்தை பௌதிக ரீதியாக உறுதிப்படுத்துகிறது. அழுது முடித்து விட்டு எந்த பிரச்சனையும் இல்லை என்று ஒருவர் மறந்து போக முடியாது. வருத்தப்பட்ட அனுபவங்களை விட அழுகின்ற பௌதிக அனுபவங்கள் தான் நம் நினைவில் தங்கி நிற்கின்றன. அழுகை கசப்பான நினைவுகளின் ஊற்று.
மேலும் நமது பல்லாண்டு கால ஆணாதிக்கவாத வரலாற்றின் விளைவாக பெரும்பான்மையான பெண்கள் தம்மை பலவீனர்களாக பாதுகாப்பற்றவர்களாக உள்ளுக்குள் கருதி வருகின்றனர். இந்த சுயபிம்பம் மனச்சோர்வுக்காக மனதை தயாரிப்பதில் முக்கிய பங்களிக்கிறது. சமூகத்தில் ஆண்களை விட ஏழ்மையின் கரம் பெண்களை நோக்கித் தான் எளிதில் நீள்கிறது.
மனச்சோர்வுற்ற நகரம் ஆணை விட பெண்ணையே அதிகம் நசுக்குகிறது.
(டைம்ஸ் தீபாவளி மலர் 2011இல் வெளியான கட்டுரை)
Read More

Thursday 10 November 2011

மனு ஜோசப்பின் “தீவிர மனிதர்கள்” (Serious Men): வெங்காயம் தேவைப்படாத நாவல்



2010இன் தெ ஹிந்து சிறந்த புனைவுக்கான விருதை வென்ற மனு ஜோசப்பின் இந்நாவல் ஆங்கில இந்திய நாவல் மரபில் தனித்துவம் பொருந்தியது. ஆர்.கெ நாராயண், அருந்ததி ராய், அனிதா நாயரை விட தென்னிந்திய சமூக வாழ்வை அவர் தீவிரமாக அணுகியுள்ளார். வழக்கமாக ஆங்கில இந்திய நாவல்களில் காண்பது போல் ஒரு பிராந்திய அடையாளத்தை மொத்த இந்தியாவுக்கான அடையாளமாக மாற்றி உள்ளார். ஒரு நாஞ்சில்நாடன் நாவலில் தமிழன் மும்பையில் வேலை பார்த்து வாழ்கிறான் என்றால் அது முழுக்க தமிழகத்து கிராமம் ஒன்றின் சில குடும்பங்களையும் சாதி பண்பாட்டையும் பேசி மேலும் மேலும் ஒரு குறிப்பிட்ட புள்ளியை நோக்கி நுணுகி போகும். மனு ஜோசப் போன்ற ஆங்கில இந்திய எழுத்தாளர்களை இதே களத்தை எடுத்துக் கொண்டால் நாஞ்சில் பிரதேசத்தில் இருந்து மும்பை வரை மக்களையும் அவர்களின் அரசியல் பண்பாட்டை ஒரே போன்ற பண்புகளால் தட்டையாக்கி முணுசாமியை ஆங்கிலம்-இந்தி பேசும் இந்திய பிரஜை ஆக்கி விடுவார்கள். “தீவிர மனிதர்களிலும் இதுவே நடக்கிறது. அய்யன் மணி என்கிற தமிழக தலித்தும் ஆச்சாரியா, ஜன நம்பூதிரி ஆகிய கேரள பிராமணர்களும், ஒபர்ணா என்கிற வங்காளியும் ஒரே புள்ளியில் சந்தித்து தமது சாதியில் இருந்து அறிவியல், மனித சிருஷ்டி வரை வெவ்வேறு பிரச்சனைகளை எடை தூக்கி பார்த்துக் கொள்கிறார்கள். வெவ்வேறு பாத்திரங்களின் மோதலில் விளையும் சிடுக்குகள் தாம் நாவலின் எளிய களன். இக்களனுக்கு “போரும் வாழ்வின் ஐம்பது பக்கங்களுக்கான கனம் தான். இருந்தும் மூன்று விசயங்களுக்காக நாவல் முக்கியத்துவம் பெறுகிறது.
முதலில், இந்திய மக்கள் ஏன் சாதனை பிரியர்களாக இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. நமக்கு அறிவார்ந்த தேடல்களிலோ, விளையாட்டு, கலாச்சார சாதனைகளிலோ அல்ல, உபயோகமற்ற லிம்கா புத்தக சாதனைகளிலே மிகுந்த ஆர்வம். உதாரணமாக ஒருவர் திருக்குறளை புதுக் கண்ணோட்டத்தில் விளக்க முயன்றால் யாரும் சீந்த மாட்டார்கள். ஆனால் ஐந்து வயது குழந்தை திருக்குறளை முன் பின்னாக, பின் முன்னாக, நடுவில் இருந்து ஆரம்பத்திற்கு ஒப்பிக்கும் என்றால் விழா எடுப்போம். டிஸ்கவரி சேனலில் ஒரு இந்தியர் பேட்டி அளித்தார். அவரது விதைப்பையில் ஐம்பது முறை கூட ஓங்கி மிதிக்கலாம். வலிக்கவே வலிக்காது. கடுமையாக முயன்று அப்படி விதைப்பையை பழக்கி இருக்கிறார். இதே போல் மணிக்கணக்காக தலைகீழ் தொங்குபவர், ஊசிகளை விழுங்குபவர், மின்சார வயரை உடம்பில் இணைத்து புன்னகைப்பவர் என இந்தியாவில் விநோத அசட்டு சாதனைகள் முயல்பவர்கள் ஏராளம். சன்நியூஸ் விளையாட்டு செய்திகளில் விநோத சாதனை நிகழ்வுகளையே முன்னிலைப்படுத்துவார்கள். பிஞ்சு குழந்தைகளை அலங்கரித்து ரியாலிட்டி ஷோக்களில் “தீம்தனக்கா தில்லானா என்று அர்த்தமற்ற வகையில் இடுப்பை வளைக்க ஏன் அனுப்புகிறோம்? அபஸ்வரத்தில் பொருந்தாக பாடல்களை இசைத்து போட்டியிட டீ.வி முன் தள்ளுகிறோம்? அரசியல் அறிவு இல்லாத குழந்தைகள் வசனங்களை மனப்பாடம் செய்து அரட்டை அரங்கத்தில் அரசை விமர்சனம் செய்து பேசுவதை பார்த்து ஏன் ரசிக்கிறோம்? நாமே ஒரு கதை புனைந்து அதில் நாமே ஒரு பாத்திரமாக ஏன் ஆகிறோம்?
செவிடனான தன் பத்து வயது குழந்தையை சமூகத்தில் முன்னிலைப்படுத்த அவனை prodigy எனப்படும் ஒரு குழந்தைப்பருவ மேதையாக போலியாக சித்தரிக்கிறார் அய்யன் மணி. அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் இந்நாவலின் கூர்மையான ஒரு பகுதி. அதிரடியாக மாறி வரும் சமூகத்தில் குழந்தைகள் தம்மை ஈடுகொடுக்க எண்ணற்ற பிரேமைகளை தம் மேல் திணித்து சிலாகித்து ஒரு கட்டத்தில் சுய அடையாளத்தை மறந்து போகிறார்கள். பெற்றோர்களால் ஒரு சூப்பர் மேனாக சிறுக சிறுக இரு பத்தாண்டுகள் பயிற்றுவிக்கப் பட்டு இறுதியில் டை கட்டின பன்னாட்டு குமாஸ்தாவாக முடிகிறார்கள். ஐயன் மணி தன் குழந்தைக்கு தினமும் சிரமமான அறிவியல் வினாக்களை மனப்பாடம் செய்வித்து அதை பள்ளிக் கூட வகுப்பில் ஆசிரியர்களிடம் கேட்டு திணறடிக்குமாறு செய்கிறான். மெல்ல மெல்ல அவன் பிரத்யேக திறமை கொண்ட சிறுவன் என்று பெயர் பெறுகிறான். அடுத்து பெல்ஜியம் நாட்டு அரசால் நடத்தப்பட்ட அறிவியல் தேர்வு ஒன்றில் தேறி அவன் வெளிநாட்டுக்கு செல்ல உதவித் தொகை கிடைத்துள்ளதாக ஒரு பொய்த்தகவலை லஞ்சம் கொடுத்து மராத்தி பத்திரிகை ஒன்றில் வெளியிடுகிறான். அடுத்து பள்ளிக் கூட விநாடிவினா தாள்களை திருடி அதிலும் தன் மகனை சரியாக பதில் சொல்ல வைக்கிறான். மற்றொரு ஏமாற்றின் மூலம் அவனால் ஆயிரம் பிரைம் எண்களை ஒப்பிக்க முடியும் என்று ஒரு செய்தியை ஒரு ஆங்கில பத்திரிகையில் கொண்டு வருகிறான் மகன் பெரும் புகழ் பெறுகிறான். அண்டை வீட்டார்களும், கூட வேலை பார்ப்பவர்களும், பள்ளிக் கூடத்திலும் அவனை மேதை என்று கொண்டாடுகிறார்கள். இத்தோடு இந்த நாடகத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்று அய்யன் முடிவு செய்கிறான். ஆனால அவன் உதவியாளனாக வேலை பார்க்கும் அறிவியல் ஆய்வு மையத்தில் பிராமண அறிவியல் அறிஞர்கள் அவனது தலித் அடையாளத்தை கேலி செய்கிறார்கள். அம்பேத்கரையும், இடஒதுக்கீட்டையும் பழிக்கிறார்கள். காயமுறும் அய்யன் இதற்கு பதிலாக ஆய்வு மையம் நடத்தும் மிக சிரமமான நுழைவுத் தேர்வில் தன் மகனை பங்கேற்க வைத்து மற்றொரு ஏமாற்று வழியில் தேறவும் வைக்கிறான். பத்து வயது சிறுவன் இருபது முப்பது வயதினராலே வெல்ல முடியாத தேர்வில் உயர்ந்த மதிப்பெண் பெற்றுள்ளது தேசிய செய்தியாகிறது. இதன் பொருள் தலித்துகள் தமது சமூக அநீதியை சூதால் வெல்கிறார்கள் என்றல்ல. இங்கு அய்யன் தலித் என்றாலும் அவன் இந்தியாவின் கீழ் மத்திய, கீழ் மட்ட மக்களை பிரதிநுத்தப்படுத்துகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தலித் பாத்திரம் இங்கு பொதுமைப்படுத்தப்படுகிறது. பொதுமைப்படுத்தலின் ஒரு அனுகூலம் அதன் விரிவு. மனு ஜோசப் அய்யன் மூலம் முன்னேற முடியாத பாதை அடைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குமுறலை, பிரயத்தனங்களை, மனக்கசப்பை வெளிப்படுத்துகிறார். தலித் ஒரு விளிம்புநிலை இந்தியனாக விரிவு பெறுகிறான்.
நாவலின் அடுத்த முக்கியமான பரிமாணம் மதத்துக்கும் அறிவியலுக்கும்/தலித் அரசியலுக்குமான உரையாடல். அய்யன் மணி அம்பேத்கர் வழியில் பௌத்தத்தை தழுவுகிறான். வீட்டில் பிராமண மதமான இந்துமதத்தை தடை செய்கிறான். அவன் மனைவி ஒரு எளிய பிறவி. அதனால் பிள்ளையார் விக்கிரகங்களை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து கும்பிடுகிறாள். மணி அவற்றை கண்டெடுத்து குப்பைத் தொட்டியில் வீசுகிறான். மதத்தை பகிஷ்கரிப்பதால் தான் தனது குழந்தைக்கு செவிடாக போயிற்று என்று அவள் குற்றவுணர்வு கொள்கிறாள். அய்யன் மணிக்கு மற்றொரு பிரச்சனை. அவனுக்கு தன் மகனுக்கு ராமாயண, மகாபாரத கதைகள் சொல்லித்தர வேண்டும், கலாச்சாரம் அறிவுறுத்தும் விழுமியங்களை கற்றுத்தர வேண்டும். அதற்கு இந்துமத இதிகாசங்கள், சடங்குகள் தேவையானவை. ஆனால் அவற்றை சொல்லித் தந்து தன் மகனை ஒரு சாதி அடிமையாக்கவும் அவன் தயாரில்லை. வளர்ந்த பிறகு அக்கதைகள் மற்றும் சடங்குகளின் பின்னுள்ள சாதி ஒடுக்குமுறையை தன் மகன் புரிந்து கொள்ளுவானோ என்று அவர் ஐயப்படுகிறார். கடவுள் இல்லாமல் மதத்தையும் சடங்குகளையும் எப்படி கற்றுத் தருவது? அப்பமும் தின்ன வேண்டும். அதில் உள்ள குழிகளையும் எண்ண வேண்டும். அவரது மனம் தான் மறுத்தாலும் தன் மகன் அம்மாவை பேச்சைக் கேட்டு இந்துமதத்தை பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த ஊசலாட்டமும் அதன் நகைமுரணும் மிக சுவையான பகுதி. அடுத்து பள்ளிக் கூடத்தில் மகனின் தலைமையாசிரியர் சிஸ்டர் சேஸ்டிட்டி அவனை கிறுத்துவத்துக்கு மதம் மாற தூண்டுகிறார். “நீங்கள் தலித்துகள் ஏன் இப்போதும் சாதிவெறி பிடித்த இந்து மதத்தில் இருக்கிறீர்கள்? கிறுத்துவத்துக்கு வரலாமே, உங்கள் மகனுக்கு ஊக்கத்தொகை. கல்வி வேலை வாய்ப்புகள் அதிகமாகும், அவனது எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும் என்று கேரட்டுகளை வரிசையாக நீட்டுகிறார். அய்யன் சொல்கிறார் “நான் இந்து அல்லவே
“பின்?
 நாங்கள் பௌத்த மதம்
“அட நீங்க வேற, பௌத்தம் என்பது இந்துமத்தின் மற்றொரு பெயர்
நாவலின் மற்றொரு முக்கிய பாத்திரமான் ஆச்சாரியா இறைநம்பிக்கையுடன் சஞ்சலம் கொண்டுள்ள மற்றொரு பகுத்தறிவுவாதி. அவர் தேசிய ஆய்வு மையத்தின் இயக்குநர். நோபல் பரிசுக்காக அடிக்கடி பரிந்துரைக்கப்பட்ட உலகப்புகழ் வாய்ந்த விஞ்ஞானி. உலகில் ஜீவராசிகள் வெற்றுகிரக வாசிகளில் இருந்து தோன்றின, இந்த வெற்று கிரகவாசிகள் வேறொருவரும் அல்ல வெறும் நுண்கிருமிகள் தாம். அவை காற்றின் மேல்தளத்தில் இருந்து பூமி மீது தூவப்பட்டவாறே உள்ளன. இப்படியாக பூமியை கண்டடைந்து நுண்கிருமியில் இருந்து தான் மனிதன் தோன்றினான். இது தான் ஆச்சாரியாவின் கோட்பாடு. இதை நிறுவ அவர் விண்வெளிக்கு ராட்சத பலூன்கள் ஏவுகிறார். அவற்றில் உலோக பாத்திரங்களை இணைத்து விடுவார்கள். பலூன்கள் திரும்ப வந்திட ஆய்வு செய்து அவற்றில் நுண்கிருமிகள் கண்டால் தன் கோட்பாடு நிரூபணம் ஆகும் என்று நம்புகிறார். இப்படியாக தன் கற்பனையை நிரூபிக்கும் ஆவேசத்தில் அவர் இயங்கிக் கொண்டிருக்க சில அதிரடி திருப்பங்களால் அவர் தன் பதிவியையும் அந்தஸ்தையும் இழந்து குடும்பத்தையும் மனைவியையும் தொலைத்து பாதி பைத்தியமாக ஆக நேர்கிறது. அப்போது அவர் முன்னெப்போதும் இல்லாத அகசுதந்திரத்தை உணர்கிறார். தனது உள்ளார்ந்த ஈடுபாடு உண்மையில் நுண்கிருமிகளை மனிதர்களை சிருஷ்டித்ததாக வறட்டுத்தனமாக நிரூபிப்பதல்ல, இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை மேலும் நுணுக்கமாக அறிவது என்று புரிந்து கொள்கிறார். சமூக மைய நீரோட்டத்தில் இருந்து விலகிய பின் ஆச்சாரியாவுக்கு இனி அவர் அறிவது அனைத்தையும் நிரூபிக்க வேண்டியதில்லை. சுதந்திரமாக ஒரு தத்துவவாதி போல் சிந்தித்துக் கொண்டு போகிறார். பிரபஞ்சத்தின் அனைத்து அசைவுகளும் நிகழ்வுகளும் மாற்றங்களும் முன்-தீர்மானிக்கப்பட்டவை என்று அனுமானிக்கிறார். முன்னர் இதே விஞ்ஞானி உலகம் ஒரு பெருவெடிப்பில் இருந்து தோன்றியது என்ற Big Bang கோட்பாட்டை அது உலகத்திற்கு தீர்க்கமான ஆரம்பம் உண்டு என்கிற கிறுத்துவ சிந்தனை பாதிப்பில் இருந்து தோன்றியது என்று கூறி வன்மையாக நிராகரித்தவர். தன் வாழ்நாள் முழுக்க Big Bang கோட்பாட்டை எதிர்த்ததற்காக நோபல் பரிசு பெறும் வாய்ப்பை இழந்தவர். ஆனால் அதே மனிதர் பிற்பாடு பிரபஞ்ச மனம் என்று ஒன்று உண்டு, அதன் தீர்மானங்கள் தான் மனித வாழ்வின் செயல்கள் என்று ஒரு சற்றே இறையியல் வாடை வீசும் கருத்துக்கு வந்து சேர்கிறார். மிகச் சின்ன வயதில் இருந்தே அவருக்குள் இந்த கருத்தின் விதை விழுந்துள்ளது. தன் இறுதிக் காலத்தில் இதனை விஞ்ஞான ரீதியாக நிரூபிப்பதற்காக ஆய்வுகள் செய்வதில் ஈடுபடுகிறார். இவ்வாறு ஆச்சாரியா நுண்ணுயிரில் இருந்து கடவுளை சென்றடைவது மனித மனம் குறித்த ஒரு சுவாரஸ்யமான அவதானிப்பு. நாம் கற்பனைகளை பின்னிக் கொண்டு அதற்கு ஒரு கோட்பாடு உருவாக்குகிறோம். நேர்மாறாக கூட செய்கிறோம். இவ்விசயத்தில் எளிய பாமரனும் விஞ்ஞானியும் ஒன்று தான். தர்க்கம் அல்லாத ஒன்றை ஏற்பதற்கு அவிசுவாசிக்கு தயக்கம் உள்ளது. ஆனாலும் அவன் மனம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் பிரபஞ்ச மனம் நோக்கி விழைகிறது. விசுவாசத்திற்கும் அவிசுவாசத்திற்கும் இடையில் அவன் ஊசலாடியபடியே இருக்கிறான். மதம் மட்டுமல்ல அறிவியலும் ஒரு வசதியான புனைவே என்பது நீட்சேயில் இருந்து பின்நவீனத்துவ வாதிகள் வரை முன்வைத்து வரும் ஒரு விமர்சனம். உதாரணமாக வெற்றுகிரக மனிதர்கள் பற்றின தேடல். அண்டத்தை அறிந்த மனிதன் தான் இந்த பிரபஞ்சத்தில் தனியாக இருக்கிறோம் என்ற தனிமையை தீர்க்க ஏற்பட்டதாக, அதனாலேயே மனிதன் வெற்றுகிரக வாசிகளை கற்பனை பண்ணிக் கொள்வதாக, அவர்களை தனது மனித எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி வனைந்து கொண்டுள்ளதாக விமர்சிக்கும் ஒரு தரப்பினர் உள்ளனர்  இந்த பிரபஞ்ச தனிமையை தணிக்கும் கற்பனைக்கு ஆதரவாக ஒரு தர்க்க கட்டுமானம் அறிவியலால் உருவாக்கப்படுக்கிறது. அதற்கு கோடானுகோடி பணம் இறைக்கப்படுகிறது. இந்த அர்த்தத்தில் மதமும் அறிவியலும் ஒன்றிற்கொன்று நிகரானவை. ஒன்று கடவுளை தேடுகிறது, மற்றது வெற்றுகிரக வாசியை தேடுகிறது.
மூன்றாவதாக கவனிக்கத்தக்கது மனு ஜோசப்பின் அங்கதமும் தனித்துவமும் கூடிய மொழி. மனித வாழ்வின் அபத்தத்தை சுட்டும் எண்ணற்ற வரிகள் இந்த புனைவில் உள்ளன. உதாரணமாக வாமன் என்றொரு தலித் தலைவரும், மத்திய அமைச்சரும் வருகிறார். அவர் மைக்கேல் ஜேக்சனை சந்தித்தது பற்றி பெருமிதமாக குறிப்பிடுகிறார் “ஜாக்சன் மிக பணிவானவர். இயல்பானவர். வெள்ளைக்காரர்களில் இப்படி ஒருவரை காண்பது மிக அரிது என்கிறார். வெற்றுகிரக வாசிகள் ஆச்சாரியார் அனுப்பின பலூன் பாத்திரத்தில் நுண்கிருமிகள் உள்ளதாய் தவறுதலாய் கண்டறியப்படுகிறது. மீடியாவுக்கு இதனை அறிவுக்கும் ஆச்சாரியா சொல்கிறார் “மனிதனை சிருஷ்டித்ததை விடுங்கள் நம் வீட்டு தயிரை உறைய வைப்பது கூட வெற்றுகிரகவாசிகள் தாம்.
அய்யன் தன் மனைவியிடம் சொல்கிறான் “தீவிரமான மனிதர்களை போதுமான படி நீண்ட நேரம் முறைத்துப் பார்த்தோமானால் அவர்கள் வேடிக்கையாக தோன்ற ஆரம்பிப்பார்கள். இந்த வாசகத்தில் இருந்து தான் நாவல் ஆரம்பிக்கிறது எனலாம். மனித வாழ்வு எவ்வளவு அற்பத்தனமானதோ அந்தளவு நாடகத்தன்மையும் விளையாட்டுத்தனமும் கொண்டதாக உள்ளதை காட்டுகிறார். விஞ்ஞானிகளில் இருந்து வீட்டு மனைவி வரை ஒரு புனைவை உருவாக்கி வசதியாய் அதைத் தமது பட்டுக் கூடாக்கி கொள்கிறார்கள். மற்றொரு தருணத்தில் அய்யன் அவளிடம் சொல்கிறான் “மக்கள் ஏன் எதையாவது செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு வேறொன்றும் மேலானதாய் இல்லை என்பதாலே. ஐன்ஸ்டினுக்கு சார்புக் கொள்கை என்ற ஒன்று இருந்தது. நீ தினமும் இருமுறை தரை துடைக்கிறாய்.
மற்றொரு பக்கத்தில் இந்த உரையாடல் வருகிறது.
 உனக்குத் தெரியுமா ஓஜா (அவனது மனைவி), அவன் சொன்னான், தான் வழக்கமாய் இவ்விசயங்களை ஆரம்பிக்கும் பாணியில் “பணக்காரர்களுக்கு எல்லாவற்றுக்கும் ஒரு பெயர் உண்டு. ஒருவன் தன் குடும்பத்துடன் செல்வழிக்கும் பெயருக்கு கூட ஒரு சொல் உண்டு
“நிஜமாகவா?, அவள் திரும்பாமலே கேட்டாள்.
“அவர்கள் அதை தரமான நேரம் (Quality Time) என்கிறார்கள்
ஆங்கிலத்தில் அப்படி ஒரு சொல் உண்டுமா என்ன?
“ஆமாம்
“ஏன் அப்படி ஒன்றுக்கு பெயர் சூட்ட வேண்டும்?
“அவர்கள் தம் உலகில் எல்லாவற்றுக்கும் பெயர் சூட்டுவார்கள், அவன் சொன்னான். “உனக்குத் தெரியுமா ஓஜா, அந்த நெடுதுயர்ந்த கட்டிடங்களில் உள்ள மனிதர்கள் திடீரென்று ‘நான் யார்? நான் எப்படியானவன்என்றெல்லாம் வியக்க தொடங்குவார்கள் அதற்கும் அவர்களிடம் ஒரு பெயர் உண்டு

மனிதர்களின் இந்த அறிவார்ந்த பாவனை நாவலின் மையம் எனலாம்.
மனு ஜோசப்பின் உவமைகள் சற்று பிரத்யேகமானவை. உதாரணத்துக்கு பாருங்கள்:
மாலைகளில் அவர்கள் (பள்ளிக்குழந்தைகள்) வாயிற்கதவுகளை நோக்கி, நம்மூரில் பி.பி.ஸி நிருபரை நோக்கி நிலநடுக்கத்தில் இருந்து தப்பினவர்கள் ஒடுவதைப் போல் மகிழ்ச்சியாக ஓடுவார்கள்
“அய்யன் மணியின் அடர்த்தியான கரும் தலைமயிர் பக்கவாட்டாய் வாரப்பட்டிருந்தது, பகையான அண்டை நாடுகளுக்கு இடையில் பிரிட்டிஷார் உருவாக்கும் எல்லைக்கோடுகளைப் போன்ற அசிரத்தையான ஒரு ஒழுங்கற்ற வகிடு சிகையை பிரித்தது
நாவலின் முக்கிய குறைகள் என்ன? ஒன்று அது இயல்பான போக்கில் விரிய மறுக்கிறது. அப்படி நிகழ்கிற போது மிகையாகவும் தேய்வழக்காகவும் மாறுகிறது. மனு ஜோசப் வேகம் மற்றும் விறுவிறுப்புக்காக நாவலை சில இடங்களில் நாடகீயமாக்குகிறார். நாடகீயத்தை கையாளுவதற்கான மொழி வன்மை அவருக்கு இல்லை. அவரது பேனா அங்கதத்திற்கு மட்டுமே நன்றாக வளைந்து கொடுக்கிறது. முரணான பாத்திரங்களை அவற்றின் போக்கில் கதையாடலின் ஊடே வளர விடுகிறார். இது பாராட்டத்தக்கது.
முழுக்க முழுக்க அங்கதம் சொட்டும் நாவல்களின் விதி பாத்திரங்கள் சவலையாகி விடும் என்பது. எழுத்தாளன் இடையிடையே யதார்த்தமோ, மிகு-எதார்த்தமோ கலந்து தான் பாத்திரங்களுக்கு உயிர்ப்பளிக்க முடியும். மனு அதை செய்யவில்லை. இது ஒரு சின்ன பலவீனம்.
மற்றபடி சாமர்த்தியமான மொழிநடைக்காகவும், கூர்மையான எண்ணவோட்டத்திற்காகவும் படிக்க விரும்புபவர்களுக்கு தடையில்லை. மேற்தட்டு இந்திய வாசகர்களுக்கு வெங்காயம் பிடிக்காது என்பதாலோ ஏனோ இந்நாவலை படித்து விட்டு நாளெல்லாம் அழுதேன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
(உயிரோசையில் வெளியான கட்டுரை)
Read More

ஷோயப் அக்தரின் உலகம்: சர்ச்சையும் சிறுபிள்ளைத்தனமும்



பாகிஸ்தான் அணியின் ஷோயப் அக்தர் துணைக்கண்டத்தின் முதல் முழுவேக பந்து வீச்சாளர். தன் ஆட்டவாழ்வின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆடுகளத்தின் ஆதரவு தேவைப்படாத ஒரே வேகவீச்சாளர். ஸ்விங் செய்வது பற்றிக் கூட அதிகம் அலட்டிக் கொள்ளாதவர். மிகுவேகத்தில் குச்சிக்கு நேராக வரும் பந்து, தோள்பட்டை உயரத்தில் எழும் பந்து எனும் இரு ஆயுதங்களை மட்டுமே பிரதானமாய் நம்பியவர். இதே காரணத்தினாலே கூர்மையான ஒரு விக்கெட் கீப்பரோ ஸ்லிப் கேட்சர்களோ ஷோயப்புக்கு முக்கியமல்ல. புத்திசாலித்தனமான கள அமைப்பு கூட பொருட்டல்ல. பாகிஸ்தானின் மூன்று சிறந்த வேகவீச்சாளர்களாகிய அக்ரம், வக்கார் மற்றும் இம்ரான் ஆகியோர் பந்தை பேச வைக்கும் திறனாலும் தங்களது கட்டுப்பாட்டினாலும் தான் கூட்டாக பாகிஸ்தானுக்கு ஆயிரத்துக்கு மேல் விக்கெட்டுகள் குவித்தனர். இம்ரானுக்கு கீழ் அக்ரம் மலர்ந்தார். பின்னர் வகாரும், அகுப் ஜாவிதும் உருவானார்கள். அக்ரமுக்கு கீழ் சக்லைன் முஷ்டாக் சிறந்தார். ஷோயப் மட்டும் என்றுமே இரு தனியாள் படை. ஒரு ஒற்றை பீரங்கி. அவரை யாரும் செலுத்த தேவை இல்லை. இயக்கி விட்டால் போதும். ஷோயப் எந்த கேப்டனுக்கு கீழும் சோபித்ததில்லை. அவர் தனக்கு கீழ் தனக்காக ஆடும் போது மட்டுமே அணிக்காக ஆட்டங்களை வென்றளித்தார். அதே வகையில் அக்ரமுக்கு பிறகு தனது பந்து வீச்சுக்காக ஏகப்பட்ட ரசிகர்களை வென்ற நட்சத்திர பந்து வீச்சாளரும் ஷோயப்தான். ஒரு பேட்டியில் தனக்கு தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர் கடிதங்கள் வருவதாக தெரிவித்தார். அவரது நீண்ட தயாரிப்பு ஓட்டம், இறுதியாக பந்தை விடுவிக்கும் வேகம், விக்கெட் வீழ்த்தியதும் இறகுகளை விரித்தோடும் கொண்டாட்டம் ஆகியன கிரிக்கெட் வன்மத்தின், மூர்க்கத்தின் காட்சிபூர்வ உச்சம். ஷோயப்பின் ஆட்டவரலாற்றுக்கு இருபக்கங்கள் உண்டு. ஒன்று அவர் ஒரு முன்னணி வீச்சாளராக அக்ரம் மற்றும் யூனிசுக்கு பிறகான காலகட்டத்தின் பாகிஸ்தானின் பந்துவீச்சை முன்னெடுத்தார். இது ஒரு முக்கியமான பங்களிப்பு. ஏனெனில் இப்போது போல் அல்லாது அந்த கட்டத்தில் பாகிஸ்தான் தற்போதுள்ள இந்தியாவை போல் மிதவேக வீச்சாளர்களையே (ரசாக், அசர் மஹ்மூத்) உருவாக்கியது. மிக சமீபமாக அமீர், ஆசிப், ரியாஸ் போன்ற தரமான வேகவீச்சாளர்கள் தோன்றும் வரையில் பாகிஸ்தானின் வேகவீச்சின் முகமாக அக்தரே இருந்தார். அடுத்து ஆணவமும் தன்முனைப்பும் மிகுந்த ஒரு கிரிக்கெட் நட்சத்திரமாக அவர் பாக் அணியின் ஆட்டப்போக்கு, திட்டமிடல் ஆகியவற்றுக்கு எதிரானவராக இருந்தார். இருசக்கர வாகனங்கள் இடையே நகரும் ஒரு புல்டோசர் போல் தனது ஆகிருதியால் அவர் அணிக்கு ஒரு இடைஞ்சலாக, தொந்தரவாக, வளர்ச்சிக்கு தடையாக இருந்தார். வாசிம் மற்றும் இன்சமாம் இருவரும் ஷோயபுக்கு அதிக ஆட்டங்களில் அணித்தலைவராக இருந்தவர்கள். இருவரும் அவர் விசயத்தில் மிகவும் அதிருப்தி உற்றிருந்தனர். அநேகமாக நம்மால் கற்பனையே பண்ண முடியாத வகையில் அணித்தலைவர்களால் எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாதவராக அவர் இருந்தார். பலமுறை அணியில் இருந்து விலக்கப்பட்டார். பெரும்பாலும் அவரது ஒழுக்கத்துக்காகத் தான். பிறகு முப்பது வயதை நெருங்க ஷோயப் உடற்தகுதி காரணமாய் அணியில் இருந்து விலக்கப்பட்டார். சக வீரரான ஆசிப்பை அடித்தது, அணித்தலைவர்களுடன் தொடர்ந்து மோதியது போன்ற சம்பவங்கள் அவரை தேர்வாளர்களின் பார்வையில் இருந்து மேலும் மேலும் தள்ளி வைத்தன. மேலும் அவரது சேட்டைகளை சகித்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லாமல் ஆகி இருந்தது. பாக் பந்துவீச்சு அவர் இல்லாமலே வலுவாக இருந்தது. ஷோயப் நீக்கப்பட்ட போதெல்லாம் பாக் சுலபமாக வென்றது. ஆக ஷோயப் தான் பாக் அணியின் முன்னேற்றத்திற்கு எதிரி என்று மீடியா சித்தரிக்க இந்த சூழ்நிலை உதவியது. உலகின் மிகச் சிறந்த வேகவீச்சாளர் இப்படித்தான் மெல்ல மெல்ல தன் வீழ்ச்சிக்கு தானே காரணமானார். ஒரு நட்சத்திரம் பூமியில் இறுதியாய் விழுந்த போது அது வெறும் கரித்துண்டாக மாறி இருந்தது. அதற்கு பின் 2011 உலகக் கோப்பை அணியில் அவர் ஆடிய போதும் பின்னர் சமீபமாக தனது கிரிக்கெட் வெளியேற்றத்தை ஒப்புக் கொண்டு அவர் சர்ச்சைக்குரிய Controversially Yours எனும் சுயசரிதையை எழுதியுள்ள போதும் பரிதாபமும் கேலியுமே அனைவரின் எதிர்வினையாக உள்ளது. வாசிம் அக்ரம் “ஷோயப் தான் ஆடிய போதும் சரி இப்போதும் சரி எல்லாருக்கும் ஒரு தொல்லையாகவே இருக்கிறார் என்றார். பிஷன் சிங் பேடி அவரது நூலை பற்றி பேசும் போது ஷோயப் ஒரு முட்டாள் என்று பொருள்பட பேசினார். காரணம் ஷோயப் அக்ரம் உள்ளிட்ட சகபாக் வீரர்களையும், சச்சின், திராவிட் ஆகியோரையும் பரிகாசம் செய்து பழி கூறியிருந்தார் என்பது இந்த எதிர்வினைக்கு உபரி காரணங்கள். ஆனால் இந்த நூல் வருவதற்கு முன்னரே ஷோயப் தன்னை ஒரு வேடிக்கை பாத்திரமாக மாற்றி இருந்தார். நட்சத்திரங்களுக்கு மட்டுமே இப்படியான இரட்டை வாழ்வு அமையும். முதல் பாதியில் அபரிதமாக போற்றப்படுவார்கள். அடுத்த பாதியில் கேலிச்சித்திரமாவார்கள்.
ஷோயப் ஏன் ஷோயப் ஆனார் என்பதற்கான விடை அவரது சுயசரிதையில் உள்ளது. நிழல் உலகம், பெட்டிங் வியாபாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் முன்னேற ஒருவருக்கு சூழ்ச்சியும், முதுகில் குத்தவும், உள் அரசியல் செய்யவும், செல்வாக்கை பெருக்கவும் தெரிய வேண்டும் என்கிறார் ஷோயப். கடந்த பத்தாண்டுகளில் பாகிஸ்தான் அணியை போல் வீரர்களின் மாற்றங்களை, தலைமை நிலையாமையின் அதிர்வுகளை, தீவிரவாதத்தின் நேரடி விளைவுகளை சந்தித்த அணி பிறிதொன்றில்லை. ஆதரவற்ற ஒரு தனியனாக திரிந்த ஆரம்ப காலத்தில் இருந்து பின்னர் அணியில் நுழைந்த பின்பான போராட்டங்கள் வரை இந்நூலில் விவரிக்கிறார். சுவாரஸ்யமாக ஷோயப் சச்சின் மற்றும் திராவிட் குறித்த எழுப்பிய விமர்சனங்களே இந்தியாவில் இந்நூலுக்கு மீடியா கவனம் பெற்றுத் தந்தது.
இரண்டு குற்றங்களை முன்வைக்கிறார். ஒன்று சச்சின் அவரது வேகப்பந்து வீச்சை சந்திக்க பயந்து நடுங்கினார் என்பது. அடுத்தது திராவிடால் இந்தியாவை வெற்றி இலக்குகளை நோக்கி வழிநடத்த முடிந்ததில்லை. சச்சின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத தொடைநடுங்கி. திராவிட் இறுதிவரை போராட முடியாத மனதிடம் அற்றவர். இந்திய கிரிக்கெட்டை ஓரளவு பின் தொடரும் பார்வையாளர்களுக்கே இது சுத்த அபத்தம் என்று விளங்கும். கடந்த முறை பாகிஸ்தானில் நாம் டெஸ்ட் தொடர் ஆடிய போது அதனை வென்றதற்கு முக்கிய காரணமே திராவிடின் இரட்டை சதம் தான். பாகிஸ்தானுக்கு எதிரான 2003 உலகக் கோப்பை ஆட்டத்திலும் திராவிடின் அரைசதம் தான் பிற்பகுதியில் இந்தியாவை வழிநடத்தியது. அதே போன்று ரெண்டாயிரத்தின் ஆரம்பத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்டுகள் வென்றதற்கு திராவிட் தான் ஆதார காரனமாக இருந்தார். அடுத்து சச்சின் விவகாரம்.
சச்சின் என்றுமே வேகவீச்சை விரும்புபவராக மிதவேக பந்துவீச்சை வெறுப்பவராக இருந்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் வேகவீச்சாளர்கள் அல்ல, பொலாக், ஹேன்சி குரோனியே போன்றவர்கள் தாம் அவரை அதிக முறை வீழ்த்தினர். அதே போன்று சச்சினை ஆதிக்கம் செலுத்திய மெக்ராத், சமிந்தா வாஸ் போன்றோரும் வேகவீச்சாளர்கள் அல்ல. பாகிஸ்தானியர்களில் ரசாக் தான் ஒருகட்டத்தில் சச்சினை தொடர்ந்து பவுல்டு செய்து வெளியேற்றினார். அவரும் மிதவேக வீச்சாளரே. மிதவேக ஸ்விங்குக்கு அடுத்தபடியாய் சச்சினின் பலவீனமாக ஆரம்பம் தொட்டே இருந்து வந்துள்ளது இடதுகை சுழல் பந்து. மிக சமீபமாக தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடர் ஆடிய போது ரயன் ஹாரிஸின் இடதுகை சுழல் பந்து சச்சினை பலவேளைகளில் திணறடித்தது. இந்தியாவில் வேகவீச்சுக்கு நடுங்குபவர்கள் வேறுபலர் இருக்கிறார்கள். அந்த பட்டியலில் சச்சின் நிச்சயம் இல்லை. சொல்லப்போனால் அவர் பல முக்கியமான ஆட்டங்களில் ஷோயப்பை துவம்சம் செய்துள்ளார். 2003 உலகக்கோப்பை ஆட்டம் ஒரு கிளாசிக் உதாரணம். சுவாரஸ்யமாக ஷோயப் கேலி பண்ணுவதற்கு தன்னை மிக நன்றாய் எதிர்த்தாடின இருவரையே எடுத்துள்ளார். விளையாட்டு திடலில் அவரால் திருப்பி தர முடியாததை இப்போது புத்தகத்தின் மூலம் கண்ணாடி முன் நின்று ஒண்ணு ரேண்டு என்று மாறி மாறி அறைந்து பார்க்கிறார். எதிரிகளை நொந்துகொள்வது தன் புண்ணை நோண்டி ஆய்வதை ஒத்தது. எதிரிகள் நமது பிரதிபிம்பம். சச்சின் அவரை அடித்தாலும் அவரிடம் ஆட்டம் இழந்தாலும் இரண்டுமே அக்தருக்கு பெருமைதான். அதை அவர் புரிந்து கொள்ள வில்லை என்பது அவரது ஆளுமையின் ஒரு முக்கிய பலவீனத்தை காட்டுகிறது.
(நவம்பர் 2011 அமிர்தாவில் வெளியான கட்டுரை)
Read More

Wednesday 9 November 2011

வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் ...



நேர்மறைவாதம் ஒரு வலுவான சமூக தொடர்புறுத்தல் பண்பு. பொதுவாக முழுக்க நேர்மறையானவர்கள் எதிர்மறையானவர்கள் என இருசாராரையும் உடனடியாக நம்ப மக்கள் தலைப்படுகிறார்கள். இவர்களில் நேர்மறையானவர்களுக்கு ஆரம்பத்தில் மக்களிடையே பரவலான வரவேற்பு இருக்கும். நேர்மறையானவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவார்கள் என்று எண்ணற்ற முறை பேசி, எழுதப்பட்டுவிட்டது. வெற்றிப்படிக்கட்டுகள் என்பது நமது ஊடகங்களில் அதிகம் தொய்ந்து போன ஒரு உருவகம். வாழ்வில் வெற்றிபெறுவது எப்படி என்று மேடையில் நீங்கள் பேச்சை ஆரம்பித்தால் எந்த கூட்டத்திலும் பார்வையாளர்கள் நிமிர்ந்து கவனிப்பார்கள். தோல்வி வெற்றியின் முதற்படி, ஆகையால் துவளாதீர்கள்,.தொடர்ந்து போராடுங்கள் என்று கர்ஜித்தால் பலத்த கைத்தட்டுகள் நிச்சயம். வாழ்வில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு, தோல்விகள் என்பது மாயை என்று நாம் நம்ப தலைப்படுகிறோம். தொடர்ந்து நம்ப வைக்கப்படுகிறோம். இப்படி தோல்விக்கு அப்பாற்பட்டவர்களாக கருதிக் கொள்பவர்கள் அதிகமான மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். நீண்ட நெடும் வெற்றிப் படிக்கட்டுகளை கீழே நின்று நிமிர்ந்து பார்த்து கொண்டிருப்பவர்கள் கடும் கழுத்துவலிக்கு ஆளாகி மீட்க முடியாத துயரத்துக்குள் ஆழ்வதாக சொல்கிறது நவீன உளவியல்.
நேர்மறையானவர்கள் வெளிமுகமானவர்களாக (extrovert) அதிகம் இருக்கிறார்கள். அரசியல், ஊடகங்கள், மக்கள் தொடர்பு, வணிகம் என எங்கும் இவர்கள் இயல்பாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இப்படி அதிகம் சமூகப்பார்வையில் உள்ளவர்களும் வெற்றியின் குறியீடுகளாகவும் தெரிபவர்களும் இவர்களே. வாழ்க்கையில் வெற்றி அடைய நினைப்பவர்கள் எளிதாக ஒரு ஊடகக் காட்சி போல் ஆக உத்தேசிக்கிறார்கள். நமது ஊடக அறிவுஜீவியாக கோபிநாத்தும், கலை உலக அறிவுஜீவியாக சினிமாக்காரர்களும் (முன்னர் நடிகர்களும் தற்போது உலகசினிமா எடுக்கும் தமிழ் இயக்குநர்களும்) முன்னிறுத்தப்படுகிறார்கள். மேற்தட்டினருக்கு ஸ்டீவ் ஜோப்சும், நாராயண மூர்த்தியும். ஆக பள்ளியில் இருந்து வேலை பார்க்கும் இடங்களில் வரை ஒருவர் நேர்மறையாக, வெளிமுகமானவராக வெற்றியாளராக இருக்கும்படி நெருக்கடி உள்ளது. இயல்பாக உள்முகமானவர்கள் (introvert) கூட தம்மை வெளிமுகமானவர்களாக போலியாக காட்டிக் கொள்ள தலைப்படுகிறார்கள். சமகால ஜப்பானிய நாவலாசியர்களில் உலகப்புகழ் பெற்றவரான ஹருகி முராகாமி ஆரம்பத்தில் ஒரு இசைத்தட்டு கடை வைத்து இருந்தார். அப்போது அவர் தினமும் ஏராளமான வாடிக்கையாளர்களுடன் பேச வேண்டி இருந்தது. முப்பது வயது தாண்டின பின் தனது வியாபாரம் தொய்வடையவதை, தான் நாள்தோறும் மிகவும் சோர்ந்து சுரத்தின்றி மாறி வருவதை உணர்ந்தார். அவரது பிரச்சனை அவருக்கு பிற்பாடு தெரிய வந்தது. அவர் இயல்பில் ஒரு உள்முகமானவர். தொடர்ந்து மக்களோடு பேசி தொடர்புறுத்துவது அவரது ஆளுமை பண்பல்ல. சுயவிருப்பமின்றி தினமும் நூற்றுக்கணக்கானவரோடு பேசும் ஒரு வேலையை வருடக்கணக்காய் செய்து கொண்டிருந்தார். விழித்துக் கொண்டதுடன் முராகாமி தான் இனி விருப்பமின்றி யாரிடமும் பேசப் போவதில்லை என்று முடிவு செய்தார். எழுத்தாளராகின பின் அவரது “நார்வேஜியன் வுட் நாவல் 36 லட்சம் பிரதிகள் ஜப்பானில் மட்டுமே விற்றது. வாசகர்கள் அவரை வழிபட்டார்கள். இளைஞர்கள் மத்தியில் ஒரு மைக்கேல் ஜாக்சன், செகுவேரா, ரஜினி காந்த் போல ஆனார். பலரும் தம்மை முராகாமியன் என்று சொல்லிக் கொள்ள விரும்பினார்கள். மீடியாவில் மழை பெய்தாலும் வெயிலடித்தாலும் அவரிடம் கருத்து கேட்டார்கள். சுருக்கமாக முராகாமி நமது சமூகம் மற்றும் வணிக நிறுவனங்களால் ஒரு விளம்பர லேபிளாக, பிராண்ட் பெயராக மாற்றப் பட்டார். ஆனால் இந்த புகழ் மழையில் நனையும் சாக்கில் ஒரு விற்பனைப் பண்டமாகும் விபத்துக்கு ஆளாகாமல் முராகாமி ஜப்பானை விட்டு ஓடி தலைமறைவானார். பல காலம் அமெரிக்காவில் ஐரோப்பிய நாடுகளிலுமாக வாழ்ந்தார். வெற்றி கிடைத்தாலும் இல்லாவிடிலும் அது ஒரு உபாதை தான். நமது நவீன கலாச்சாரத்தில் வேகமாக பரவி வரும் ஒரு வைரஸ் இது.
சினிமாவில் பெரும் துரதிஷ்டங்களை சந்திக்கும், சுமக்கும் விளிம்புநிலை பாத்திரங்கள் கூட தன்னம்பிக்கை சுடர்விடும் ஒரு புன்னகையுடன் வாழ்வை ஏற்றுக் கொண்டு இயல்பானவர்களுக்கான நேர்மறை உதாரணங்களாகத் தான் வருகிறார்கள். கடைசியாக நாம் பார்த்த எதிர்மறையான நோயுற்றவரோ குருடனோ யார்?
வாழ்வின் பிரச்சனைகள் சிக்கலானவை. பெரும்பாலானவற்றுக்கு நேரடியான சுமூகமான தீர்வுகள் இல்லை. ஊடகங்கள், பொதுநம்பிக்கைகள், மித்துகளுக்கு வெளியே நாம் பிரச்சனைகளை ஏற்று வாழும் எண்ணற்ற ஜன்மங்களை தான் காண்கிறோம். வாழக் கற்றுக் கொள்வது அது என்னவென்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டே முடிப்பது தான். மாறாக வாழ்க்கை கலை என்ற ஒன்றே இல்லை. வணிகப் போட்டியாளர்கள் சொல்வது போல் வெற்றியை ஒருவர் நாடி அடைய முடியாது. சமீபமாக பல அறிவியல் ஆய்வு முடிவுகள் இந்த வெற்றி எனும் தொன்மத்தின் காற்றை இறக்கி உள்ளன.

அடுத்து மகிழ்ச்சியாக அல்லது நிம்மதியாக இருப்பது. அதுவும் எளிமைப்படுத்தலுக்கு ஆளாகிறது. வெற்றி அடைந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நாம் வெற்றிக்கு பின்னால் பாய்கிறோம். மற்றொரு தரப்பு வெற்றியாளர்கள் நிம்மதி இழக்கிறார்கள் என்று மறுத்து ஆன்மீகமும் சமூகத் தொண்டும் மட்டுமே நிம்மதியை தரும், அதை நாங்கள் அரைமணி நேரத்தில் தருகிறோம் கட்டணம் இவ்வளவு என்று நம்மை இழுக்கிறார்கள். சற்று நின்று நிதானித்து பார்த்தால் மகிழ்ச்சியும் நிம்மதியும் முழுமுதல் பொருட்களாக அனுபவங்களாக நம் வாழ்வில் என்றுமே இருந்ததில்லை, மிக சின்ன வயதில் இருந்தே நாம் அவற்றை தேடியதில்லை என்று புரிய வருகிறது. உண்மையில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தேடி சிந்திக்கும் வரையில் நாம் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் தான் இருக்கிறோம். துக்கம் கூட இதே அளவில் கட்டி விநியோகிக்கப்படுகிறது. “ஸ்டீவ் ஜோபுஸுக்காக உலகமே கண்ணீர் வடிக்கிறது என்ற கட்டுரை ஒன்றை படித்து விட்டு உலகமே கலங்கும் இவ்வேளையில் நீ ஏன் ஸ்டீவ் ஜோபுசுக்காக வருத்தப்படவில்லை என்று ஒரு நண்பன் என்னை திரும்பத் திரும்ப கேட்கிறான். என்ன பதில் சொல்ல? அந்த பிரச்சனை முடியும் முன் முருகதாஸ் குழுவினர் ஒரு மைக்கை எடுத்துக் கொண்டு “போதி தர்மர் யார் என்று தெரியுமா? என்று சென்னை மகாஜனங்களை கேட்கிறார்கள். அதற்கு தாறுமாறாக பதில் அளித்தால் ஜப்பானில் எல்லாருக்கும் தெரிந்த ஒரு மாபெரும் பல்லவ-பௌத்த துறவியை, ஒரு மாபெரும் தமிழரை உங்களுக்கு தெரியவில்லையா, ஐயோ பரிதாபம் என்று கேட்கிறார்கள். எதற்கு தெரிய வேண்டும்? ஏன் தமிழ்ப் பெருமை அல்லது குற்றவுணர்வு என்ற இருமை நிலைக்கு தள்ளப்பட வேண்டும்? இதனிடையே, சாமிப் பாட்டு இசைத்தட்டு விற்பவர்கள் பாடல்கள் நடுவே வந்து  “பக்தர்களே திருட்டு சி.டி வாங்காதீர்கள். அப்படி செய்தால் உங்களுக்கு கண்டிப்பாய் புண்ணியம் கிடைக்காது என்று எச்சரிக்கிறார்கள். இதே வரிசையில் வரும் மத்தியவர்க்க ஊழல் எதிர்ப்பு போராளிகள் தாம் பின்வாசல் வழியாக ஊழலை ஆதரித்தபடியே அன்னா ஹசேராவுக்காக உண்ணாவிரதம், பேரணி என்று திரள்கிறார்கள். அன்னா பக்கம் நிற்காதவர்கள் சமூகப் பொறுப்பற்றவர்கள் என்கிறார்கள். “நீயா நானாவில் முத்துக்கிருஷ்ணன் சில வலுவான வாதங்களை அன்னாவின் அமைப்புக்கு எதிராக வைத்த போது கிட்டு போன்ற பிரபல அறிவுஜீவுகள் “இவனெல்லாம் ஒரு மனிதனா என்று கிருஷ்ணனை நோக்கி அருவருப்பான பார்வையை பார்த்தார்கள். எந்த அசட்டுத்தனமும் ஆயிரக்கணக்கான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நேர்மறையான ஒரு உடனடி தீர்வை தருவதாக பட்டால் அதனை உடனடியாய் ஏற்றுக் கொண்டு கொண்டாடுவதே இன்றைய பிரபல அறிவுவாத போக்கு. ஆழமான விசாரணைக்கும் தொலைநோக்குக்கும் இடமில்லை. யாருக்கும் அவகாசமில்லை. இவர்கள் பரவாயில்லை. அன்னா ஹசாரேயை ஆதரித்து தொடர்கட்டுரைகள் எழுதின ஜெயமோகன் அன்னாவை ஆதரிக்காதவர்கள் வாழ்வை எதிர்மறையாக பார்க்கும் இடதுசாரி சிந்தனையாளர்கள் மட்டுமே என்றார். ஜப்பானில் அணு உலைகள் கசியும் முன்னர் பலகாலமாய் அவற்றின் கடும் விமர்சகர்களாய் இருந்து வந்த ஒரு சிறுபான்மை குழுவினரை பெரும்பான்மை சமூகம் இதே போன்று எதிர்மறைவாதிகள் என்று தான் திட்டியது. கதிரியக்கம் எங்கும் நிறைந்ததும் ஜப்பானிய மக்கள் இன்று கையில் கதிரியக்கம் அளக்கும் கருவியுடன் ஆறு, குளம், குட்டை என்று நீரை மொண்டு எடுத்து ஆராய்ந்தபடி பித்து பிடித்து அலைகிறார்கள். ஒரேயடியாக நேர்மறை மனநிலையில் இருந்து எதிர்மறைவாதத்துக்கு தாவி விட்டார்கள்.
புஷ் அரசின் போர் வெறியாட்டத்தில் அமெரிக்கர்களுக்கும் கூட பொருள் உயிர் இழப்புகள் இருந்தன. பொருளாதாரம் மெல்ல மெல்ல சாய்ந்து வந்தது. பல்-இன கலாச்சாரம் ஒரு சமூக ஆபத்தாக கருதப்பட்டது. வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து மீடியாவில் விவாதிக்கப்பட்டது. அதற்கு இந்தியா போன்ற மூன்றாம் உலக பி.பி.ஓ நாடுகள் குற்றம் சாட்டப்பட்டன. இதனை அடுத்து ஒபாமா “நம்மால் முடியும் என்ற ஒரு பிரபல ஊக்குவிக்கும் பேச்சுடன் புத்துணர்ச்சி ஊட்டும் மாற்றுத் தலைவராக தன்னை மீடியாவில் முன்னிறுத்தி வெற்றி பெற்றார். இன்று ஒபாமா அன்னாவை போல் அதிகார மிக்க பன்னாட்டு நிறுவனங்களின் கருவி மட்டுமே என்று வெளிப்படையாகி விட்டது. புஷ்ஷின் அதே வேகத்துடன் அமெரிக்காவின் உலகப் போர் தொடர்கிறது. அவர்களின் உள்ளூர் பொருளாதார சரிவையும் அவரால் தடுத்த நிறுத்த முடியவில்லை. திரும்பவும் we can என்றால் காறித் துப்புவார்கள். அன்னா ஹசாரே தான் தூய்மையான காந்தியவாதி என்று பட்டம் விட்டவர். ஆனால் அவரது இயக்கத்துக்கு கோடிக்கணக்கிலான பண ஆதரவு எங்கிருந்து வந்தது, என்.ஜி.ஓக்களின் நிதிநிலவரத்தை விசாரனை செய்ய அவர் ஏன் மறுக்கிறார் என்பது போன்ற முக்கிய கேள்விகளுக்கு அச்சுபிச்சென்று அவர் பதில் உளறுவதும், தன்னை விமர்சிக்கும் அரசியல் தலைவர்களை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்ப பணிப்பதும், ஆர்.எஸ்.எஸ் தன் பின்னே தானே சேர்ந்த கூட்டம், நானாக அழைக்கவில்லை என்று ரஜினி வசனம் பேசுவதும் அவர் எந்த பிரச்சனைக்கும் தொலைநோக்காக யோசிக்க தெரியாத பிரச்சனைகளின் ஆழம் புலப்படாத ஒரு எளிய அரசியல்வாதி என்று புரியவருகிறது. ஜெயமோகன் இத்தகைய அசட்டு களப்பணியாளர்கள் தான் நமது சமூகத்துக்கு இன்று தேவை என்கிறார். ஆனால் விழிப்புணர்வற்றவர்கள் இன்றைய சமூகத்தில் எளிதில் கைப்பாவையாகி கட்டுப்படுத்தப்படுவார்கள். அவர்கள் ஆபத்தானவர்களாக் மாறுவார்கள். முராகாமி இதே போன்றதொரு பெரும் சமூகப் புயலில் இருந்து தப்பித்து போனதன் காரணம் இது தான். ஒபாமாவின் ஆளுமையை ஆராயும் உளவியல் நிபுணர்கள் அவர் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு நாடும் ஒரு வெளிமுகமான மனிதர். ஆழமான பிரச்சனைகளை ஏற்றுக் கொள்ள மறுத்து அதனோடு தொடர்ந்து மோதி காயம் பட்டு ஒரு கட்டத்தில் முழுக்க மனம் தளர்ந்து போகக் கூடியவர் என்கிறார். எதற்கும் பொறுமையற்றவர்களாக, இந்திய அரசியலமைப்பையே நிராகரித்து (அவ்விடத்தில் சர்வாதிகாரி வரவேண்டும் என்று விரும்பும் காவி) எண்ணம் கொண்டவர்களாக அன்னாவின் கட்சியினர் இருப்பதும் இந்த எளிமையான நேர்மறைவாதத்தால் தான்.
நவீன உளவியல் நேர்மறையானவர்களை விட எதிர்மறையானவர்கள் தாம் பிரச்சனைகளை நடைமுறை சாமர்த்தியத்தத்துடன் சமாளிக்கிறார்கள் என்கிறது. ஒரு பிரச்சனையை இரண்டு விதத்தில் நேரிடலாம். எளிதில் தீர்க்க முடிவது முடியாதது என்று பிரச்சனையை வகைப்படுத்தலாம். நேர்மறையானவர்கள் இப்படி வகைப்படுத்துவதில்லை. அவர்கள் எல்லாவற்றுக்கும் தம்முன் ஒரு தீர்வு உள்ளது, அதை அடைவது தான் தம் பணி என்று மூர்க்கமாய் முனைகிறார்கள். இதனால் ஒரு போக்குவரத்து நெருக்கடியில் மாட்டினாலோ கழிவுநீர் தேங்கி சாலை குளமானாலோ அதற்கு காரணம் என்ன என்று நின்ற வாக்கில் யோசித்து “நாட்டை படித்த எலைட்டுகள் ஆண்டால் எல்லாம் சரியாகி விடும், ஊழலை கடுமையாக தண்டித்தால் இந்தியா ஒரே நாளில் ஒளிர்ந்து விடும் என்று கற்பனை செய்கிறார்கள்..ஒரு தீவிரவாத குண்டுவெடிப்பு நிகழ்ந்தால் அப்சல் குருவையோ கசாப்பையோ தூக்கிலிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று குரலெழுப்புகிறார்கள். எதிர்மறைவாதிகள் பிரச்சனைகள் எளிதில் மாயாது, அவை இருந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறார்கள். ஆக போக்குவரத்து நெரிசலில் நின்று சமூகப் புரட்சியை சிந்திக்காமல் வேறு பாதையில் சிந்தனையை திருப்பி விடுகிறார்கள். தீராத பிரச்சனையை தற்காலிகமாய் மறப்பது நல்லது தான். வாழ்க்கை சிக்கல்களின் பிரம்மாண்டம் உணரும் மனிதன் எளிமையுடன் அவற்றின் முன் தலைவணங்குகிறான். வேளை வரும் போது தீர்வை நாடுகிறான். அதுவரை பொறுமையுடன் கவனிக்கிறான். வெற்றிப்படிக்கட்டுகளில்ஏறிக் கொண்டே இருப்பேன் என்று விரைகிறவர்கள் பிரச்சனை என்பது முட்டுசந்து என்றாலும் அதை தொடர்ந்து மோதினால் ஒரு வாசலாக மாற்றிடலாம் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் தூக்கம் இழந்து உடல் மன நலத்தை இழந்து வீழ்ச்சியை நோக்கி சறுக்குகிறார்கள். பிறகு சற்று சுதாரித்து மீண்டும் ஒரு விட்டிலை போல் சுடரை நோக்கி எகிறுவார்கள். இப்போதைக்கு ஊழல், அடுத்து காஷ்மீர் என்று அன்னா கூறுவது இதனால் தான்.

கொஞ்சம் எதிர்மறையாகவும், அவநம்பிக்கையுடனும் இருப்பது தொடர்ந்து பொய்கள் விற்கப்படும் சமூகத்தில் நல்லது. தராசின் எந்த தட்டிலும் ஏற மறுப்போம். நாம் ஊழலை எதிர்க்கவும் வேணாம், வெற்றியை துரத்தவும் வேண்டாம். துக்கப்படவும் வேண்டாம் பெருமைப்படவும் வேண்டாம். நாளை ஒரு டாக் ஷோவில் கலந்து கொண்டால் நீங்களும் நானும் கூட எண்ணற்ற கதைகளில் ஒன்றாக மாற்றப்படுவோம். நமது அசலான வாழ்க்கை இவற்றுக்கு வெளியே இருக்கிறது.
(நவம்பர் 2011 உயிர்மையில் வெளியானது)
Read More

Sunday 6 November 2011

எங்கு போகிறது இந்திய கிரிக்கெட்?



உலகக் கோப்பையை வென்று டெஸ்ட் தரப்பட்டியலில் முதல் இடத்தையும் முதன் முறை கைப்பற்றிய நிலையில் இந்தியா ஏகப்பட்ட சவால்களை எதிர்கொள்கிறது. இது ஒரு நகைமுரண். 99இல் இருந்து ஆஸ்திரேலியா தொடர்ந்து மூன்று முறை உலகக்கோப்பை வென்ற போதும், இலங்கை அதற்கு முன் வென்ற போதும் இவ்வணிகள் தமது வெற்றியை தொடர்ந்து சில அல்லது பல வருடங்கள் மிக தரமாக ஆடின. வலுவான அரண்கள் போல நின்றன. ஆனால் இரட்டை சாதனைகளின் அடுத்த நிமிடமே இந்தியா மணல் கோட்டை போல சரிகிறது. இதனால் தான் உலகக்கோப்பை வெற்றிக்கு பின் தோனி சொன்னார் “நமது அணி சேதமாகி துருப்பிடித்த ஒரு பழைய காரை போன்றது; அதை கடைசி வரை ஒழுங்காய் ஓட்டி வந்து இலக்கை அடைந்தது பெரும் திருப்தி அளிக்கிறது. அவர் எதிர்பார்த்தது போல் அணியின் சக்கரங்களும் நட்டும் போல்டுகளும் இப்போது திசைக்கொன்றாய் தெறிக்கின்றன என்பதை மே.இ தீ மற்றும் இங்கிலாந்து பயணங்கள் தெளிவாக்கின. மூத்தவீரர்கள் காயம் காரணமாக விலகுகிறார்கள். அவர்கள் இடத்தில் திணிக்கப்பட்ட இளைய வீரர்கள் மூழ்கும் கப்பலில் இருந்து எலிகளைப் போல் சிதறி ஓடுகிறார்கள். மூத்த வீரர்கள் திரும்புகிறார்கள். அப்போது அணி மேலும் கொஞ்சம் மூழ்குகிறது. உலகக்கோப்பை சாம்பியன்கள் ஆகின கொஞ்ச காலத்திலே இங்கிலாந்திடம் மூன்று ஆட்டங்களை அவசரமாய் இழந்து டெஸ்ட் தரவரிசை முதல் இடத்தில் இருந்து திருதிருவென்று விழித்தபடி இறங்குகிறோம். இது ஒரு பெரும் அவமானமோ இந்திய ரசிகர்களின் நெஞ்சைப் பிழியும் ஏமாற்றமோ அல்ல. இங்கிலாந்து தொடர் முடிந்ததும் நாம் சேம்பியன்ஸ் டுராபி ஆடுவோம். அதற்கு அடுத்து ஆஸ்திரேலியா, இலங்கை, மே.இ தீ ஆகிய அணிகளை சந்திப்போம். கொண்டாடுவதற்கும் கைதட்டுவதற்குமான வாய்ப்புகளின் போது நாம் இந்த அவசர யுகத்தில் ஒரு இங்கிலாந்து தொடரின் கசப்பான நினைவுகளை உள்ளங்கைக்குள் வைத்து அழுத்த என்ன மடையர்களா? கிரிக்கெட் இன்று ஆடப்படும், பார்க்கப்படும் பின்னர் அலசப்படும் வேகத்தில் ஆட்டபலன்கள் ஒன்றும் பொருட்டல்ல. திருவிழா குழந்தை போல் நாம் எல்லா காட்சிகளையும் ஓரப்பார்வையால் கடந்து செல்லவே பிரியப்படுகிறோம். ஆக இந்த வீழ்ச்சியின் சந்தர்பத்தை நாம் ஒரு மீள்நோக்குதலுக்கு பயன்படுத்தலாம். நாம் எங்கே இருக்கிறோம், இங்கிருந்து எங்கே போகிறோம்?
நமது நிலவியலும் வரலாறும் மேற்கத்தியர்களை போன்று சுயக்கட்டுப்பாடு, அணி ஒற்றுமை, தியாகம், மூர்க்கமான போராட்ட குணம் ஆகியவற்றை போதிக்கவில்லை. காலநிலையும் பொதுவான ஆசிய உடலமைப்பும் வலுவான கால்களையும் திடமான தோள்களையும் நமக்கு வழங்கவில்லை. எதையும் திட்டமிட்டு ஒரு வரைமுறைக்குள் தொலைநோக்குடன் செய்யும் பண்பாடு நமக்கிலை. மாபெரும் விசயங்களை வியக்கும்படியாக செய்து காட்டி முக்கியமான சிறுவிசயங்களை கோட்டை விட்டு அதனால் பலத்த நஷ்டமடைவது நம் பழக்கம் தான். நம் அரசியல் எந்திரமும் கல்வி உள்ளிட்ட அறிவுத்துறைகளும் சமூக ஆன்மீக அமைப்புகளும் இதனால் தினமும் நம் எதிர்காலம் பற்றின குழப்பங்களை தினமும் உருவாக்குகின்றன. பல்வேறு சாதி மத மொழி இன மக்கள் இணைந்து வாழும் இத்தேசத்தில் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு தன்முனைப்புடன் எதிர்கால கவலை இன்றி அன்றன்றைய தினத்துக்காக வாழ்வது தான் வெற்றியின் தாரக மந்திரம். இந்திய கிரிக்கெட்டும் இந்திய தேசத்தை போலவே பெரும் குழப்பத்திலும் ஒன்றும் புரியாத இரைச்சலிலும் மூழ்கி இருக்கிறது. தன்முனைப்பு மட்டும் கொண்ட, சுயக்கட்டுப்பாடு அற்ற, நெருக்கடிகளின் போது போராட்ட குணம் குறைவான பலவீன தேகம் கொண்டவர்களாக நாம் இருப்பது ஒரு தனிமனித தனி அமைப்பின் தவறல்ல. கடலின் ஒரு துளி அதே சுவையையும் மணத்தையுமே தானே கொண்டிருக்கும்.
நீண்ட நேரம் ஒரு அணியாக நிலைத்து ஆட வேண்டிய கிரிக்கெட்டிற்கு கொடூரமான பனிக்காலங்களாலும் மூர்க்கமான நிலவியலாலும் தகவமைக்கப்பட்ட மேற்கத்தியர்கள் இயல்பாகவே பொருந்திப் போகிறார்கள். அதனால் வேகப்பந்து வீச்சு, களத்தடுப்பு, வலுவான உடல்தகுதி, அணி உணர்வு, போராட்ட குணம் ஆகியவற்றை நாம் பள்ளி அணியில் இருந்து தேசிய அணி வரை கீழிருந்து மேலாக மெல்ல மெல்ல வளர்த்தெடுக்க வேண்டும். நமது தனிச்சிறப்பு தனிநபர் மேதைமையும் மேதைமையின் இயல்பான சாகச விருப்பமும். கடந்த பதினைந்து வருடங்களில் உலக கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு இணையாக மேதைகளை உருவாக்கிய அணி இந்திய அணி தான். சச்சின், திராவிட், கங்குலி, லக்‌ஷ்மண், சேவாக், யுவ்ராஜ், கும்பிளே, சகீர் கான், ஹர்பஜன் என சிறந்த உலக 11இல் இடம்பெற தகுதியான வீரர்களை பிறப்பித்திருக்கிறோம். இந்த மேதை உற்பத்தி தான் நம் வலிமை. இவர்களின் ஒருமித்த ஆற்றலாலும், இன்னபிற பலவீனங்களை திறமையாக மறைத்த தோனியின் தலைமையாலும் தான் நாம் உலகக்கோப்பையை, டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை அடைந்தோம்.

இன்று இந்திய அணி பலவீனமாகி உள்ள நிலையில் நாம் நமது கட்டமைப்பு, வாரியத்தின் நடத்தை, ஐ.பி.எல்லின் தீயவிளைவு, வீரர்களின் சுயநலம் ஆகியவற்றை பற்றி விவாதிப்பதில் பொருளில்லை. ஏனென்றால் ஒரு அமைப்பின் உள்ளார்ந்த சீரழிவை விவாதங்கள் மாற்றாது. மே.இ.தீ மற்றும் இங்கிலாந்து பயணங்கள் நமது இளைய வீரர்களின் போதாமையை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. அடுத்த தலைமுறையை வழிநடத்தி செல்ல நம்மிடம் போதுமான நட்சத்திரங்கள் இல்லை. நமது இளைய திறமைகள் எங்கே என்பது தான் நாம் தற்போது கேட்க வேண்டிய கேள்வி.
தோனி தலைவரான போது மூத்தவீரரான சவுரவ் கங்குலி மீடியாவாலும் தேர்வாளர்களாலும் ஓய்வு கொள்ளும்படி மறைமுகமாக வற்புறுத்தப்பட்டார். அன்று இந்திய மட்டையாட்டம் ஆரோக்கியமாக இருந்ததாலும் யுவ்ராஜ் சிங் ஆறாவது எண்ணை சுவீகரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டதுமே காரணம். யுவ்ராஜ் ஏமாற்றமளித்தாலும், அவருக்கு பதில் வந்த ரெய்னா அநேகமாக அதே குறைபாடுகள் கொண்டவர் என்றாலும், கங்குலிக்கு அடுத்து திராவிட் ஓய்வு நெருக்கடிக்கு உள்ளானார். ஒரு மூத்தவீரர், அவர் சிறந்த திறமையாளராகவும், நல்ல ஆட்டநிலையிலும் உள்ள பட்சத்தில், ஓய்வு நெருக்கடிக்கு உள்ளாவது அடுத்து வரும் இளையவீரர்களின் திறமைக்கு சான்று. திராவிட் இடத்தை விராத் கோலி எடுத்துக் கொள்வார் என்று கும்பிளே உற்பட்ட முன்னாள் வீரர்களாலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மே.இ.தீ பயணத்தில் கிடைத்த டெஸ்ட் வாய்ப்பை கோலி சரியாக பயன்படுத்தாததால் அத்தொடரில் ஒரே ஒரு சதம் அடித்த நிலையிலும் திராவிடின் இடம் அடுத்த ஒரு வருடத்திற்கு பத்திரமானது. அடுத்து வந்த இங்கிலாந்து தொடரில் திராவிட் இரண்டு சதங்கள் அடிக்க இளைஞர்களுக்கு வாய்ப்பளித்திட கோரும் குரல்கள் ஒரேயடியாய் அமுங்கிப் போயின. இந்திய மீடியா வேறெப்போதும் வழங்காத புகழ்ச்சியையும் கவனத்தையும் திராவிடுக்கு வழங்கியது. திராவிட் ஒருநாள் போட்டிகளில் ஆடி இரண்டு வருடங்கள் ஆகின்றன. பத்தாயிரத்துக்கு மேல் ஒருநாள் ஓட்டங்கள் பெற்றிருந்தாலும் அவரால் சமகால ஆட்டவேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது என்ற காரணத்தால் இதுவரை வாய்ப்பளிக்கப்படாமல் இருந்தார். தற்போது இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஆடுவதற்காக திராவிட் மீண்டும் அழைக்கப்பட்டார். அதற்குப் பொருள் அவர் ரெய்னா அல்லது யுவ்ராஜுக்கு இணையாக அதிரடியாக ஆடப் பழகி விட்டார் என்பதல்ல. சிரமமான ஆடுதளங்களில் ஆட நமது இளைஞர்கள் தற்போது தயாராக இல்லை என்று தேர்வாளர்களும் அணி நிர்வாகமும் கருதுகிறது என்பதாலே. இந்திய தேர்வு போர்ஹெஸின் கதைகளில் வரும் ஒரு புதிர்சுற்றுப்பாதையில் மாட்டிக் கொண்டுள்ளது. ஒரு சீனியர் நன்றாக ஆடவில்லை என்றால் நாம் அவருக்கு பதில் அவரையே கொண்டு வருகிறோம்.  இனி சச்சின் என்று ஓய்வு பெறுகிறார் என்று கேட்பதை விட அவர் எத்தனைக் காலம் ஆட முடியும் என்று விரல்களை மடித்து கணக்கிடுகிறோம். நூறு சதங்கள் அடித்து உலகில் மிக நீண்ட ஆயுள் வரை கிரிக்கெட் ஆடியவர் என்ற சாதனையை அவர் படைக்க மாட்டாரா என்று ஏங்குகிறோம். ஜெயகாந்தன் ஏன் இன்று எழுதவில்லை என்றொரு இலக்கியவாசகர் வருந்துவதை போல் பரிதாபகரமானது இது. அநேகமாக இதே நிலை ஆஸ்திரேலியாவிலும் நிலவுகிறது. கடந்த ஆஷஸை அவர்கள் இழக்கும் தறுவாயில் இருந்த போது அணியை காப்பாற்ற நான் ஓய்வில் இருந்து திரும்ப தயார், ஆனால் என்னை அணித்தலைவராக்க வேண்டும் என்று ஷேன் வார்ன் அறிக்கை விட்டார். உலகக்கோப்பை அணியில் காயம் காரணமாக சேர்க்கப்படாத ஹஸ்ஸியை தொடர் பாதியில் டக் பாலிஞ்சருக்கு காயம் என்று போலியான காரணம் காட்டி உள்ளே கொண்டு வந்தார்கள். பின்னர் உலகக்கோப்பையில் சொதப்பிய பிறகும் தேர்வாளர்கள் அணியில் பெரும் அளவிலான மாற்றத்தை கொண்டு வரவில்லை. தற்போது நடக்கும் இலங்கை தொடருக்கான அணியில் 36 வயதான ரிக்கி பாண்டிங்கும் தான் ஹஸ்ஸியும் இரு தூண்கள். அவர்களின்றி அணியில்லை. ஆஸ்திரேலியா தொண்ணூறுகளில் இருந்து ரெண்டாயிரத்தின் ஆரம்பம் வரை ஸ்டீ வாஹ், மார்க் வாஹ் போன்ற உலகத்தர வீரர்களை வலுக்கட்டாயமாக அணியில் இருந்து விலக்கி புதிய வீரர்களை கொண்டு வரும் சற்று கருணையற்ற மரபை கொண்டிருந்தது. ஆனால் சமீபமாக ஆஸி தேர்வாளர்களால் இதே கரார் நிலைப்பாட்டை மூத்த வீரர்கள் மீது எடுக்க முடியவில்லை. புதிய வீரர்களின் போதாமை வயதானவர்களின் நிலைப்பை காப்பாற்றுகிறது. இருசாராருக்கும் இது பெருமைக்குரியதல்ல. ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் பண்பாடும், தரமும், உள்கட்டமைப்பும் உலகில் சிறந்ததாகவும் அவர்களின் ரெண்டாயிரத்துக்கு பிறகான ஆதிக்கத்திற்கு காரணமாக சொல்லப்பட்டது. இருந்தும் ஆஸ்திரேலியா இன்று இந்தியாவின் வெகுஅருகிலேயே அதே முட்டுசந்தை வெறித்துக் கொண்டு நிற்பதை எப்படி விளக்க? மேதைகளும் அதிதிறமையாளர்களும் தோன்றும் ரகசியம் என்றும் புதிராகவே உள்ளது. பண்பாடு, உள்கட்டமைப்பு போன்ற வெளிக்காரணிகள் தூண்டுதலையும் ஆதரவையும் மட்டுமே தரமுடியும். இவை ஊற்றுமுகம் என்று கருதுவது ஷேக்ஸ்பியர் சின்ன வயதில் மான்வேட்டையாடியதால் நாடகாசிரியர் ஆனார் என்றும் மனுஷ்யபுத்திரனை லேனா தமிழ்வாணன் கண்டுபிடித்தார் என்று சொல்வதையும் போன்றது.
நமது உள்ளூர் கிரிக்கெட் பலவீனமாக உள்ளது என்பதும் நமது இளையவீரர்கள் பழுதான ஆட்ட தொழில்நுட்பம் கொண்டவர்கள் என்பதும் உண்மை தான். உள்ளூர் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துவதும், A பயணத்தொடர்கள் வாயிலாக நமது இளைய வீரர்களுக்கு மேற்கத்திய ஆடுதளங்களை பரிச்சயப்படுத்துவதும், புதிய திறமை கண்டுபிடிப்பில் மேலும் அக்கறை செலுத்துவதும் நிச்சயம் பயன்படலாம். சர்வதேச வீரர்களுக்கு அதிக ஓய்வளிக்கும்படியாய் ஆட்டநிரலை அமைக்க வேண்டும், ஐ.பி.எல்லுக்கு சர்வதேச போட்டிகளுக்கு நிகரான முக்கியத்துவம் வழங்கப்படக் கூடாது ஆகிய கோரிக்கைகளை ஆர்வலர்களும் நிபுணர்களும் முன்வைக்கின்றனர். இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்கு இவை அவசியமே. ஆனால் எந்த ஒரு அற்புதத்திற்கும் இவை உத்தரவாதம் அல்ல.
கும்பிளேவின் தலைமைக்குப் பிறகு காயம் மற்றும் ஆட்டநிலை சரிவு காரணமாய் நமது வேகப்பந்து வீச்சு நிலைகுலைந்தது. இர்பான் பதான், பாலாஜி, ஆர்.பி சிங், முனாப் படேல் போன்றோர் காயம் காரணமாக வீரியம் இழந்தனர். முழுக்க சகீர்கானை நம்பியிருக்க வேண்டிய நிலையை அடைந்தோம். ஆக இந்நிலையை மாற்ற வேகப்பந்து வீச்சை ஊக்குவிக்க வேண்டும் என்று பரவலாக விவாதிக்கப்பட்டு வலியுறுத்தப்பட்டது. இந்தியாவை ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து போல் ஆக்கும் அவசர நடவடிக்கைகளின் பகுதியாக கடந்த ஐந்தாண்டுகளில் நமது மரபான ஆடுதளங்கள் மாற்றப்பட்டு அந்நிய நாட்டு மண்ணால் புது ஆடுதளங்கள் உருவாக்கப்பட்டன. 2009-10 ரஞ்சி தொடரின் போது வேகவீச்சாளர்களுக்கு மிகையான ஆதரவு தருபவையாய் ஆடுதளங்கள் இருந்தன. விளைவாக மிதுன், தியாகி போன்ற சராசரி வீரர்கள் மலிவான விக்கெட்டுகள் வீழ்த்திக் குவித்தனர். மிகையான அங்கீகாரம் பெற்று இவர்கள் சர்வதேச அணியில் தோன்றின பின் சாயம் வெளுத்து வந்த வேகத்திலே வெளியேறினார்கள். மேலும் அதிகப்படியான பரிசோதனை முயற்சிகள் காரணமாக நமது ஆடுதளங்கள் மிக மந்தமாகி தற்சமயம் எந்தவித பந்துவீச்சுக்கும் தோதற்றதாக மாறியுள்ளன. மற்றொரு எதிர்விளைவாக நமது மரபான வலிமையாக கருதப்பட்ட சுழலர்கள் இன்று சவலையாகி விட்டனர். நம்மூரில் எந்த அவசர முயற்சியும் கண்மூடித்தனமாக அமைந்து மேலும் சீரழிவை ஏற்படுத்தக் கூடும் என்பதால் நம்முன் உள்ள ஒரே வழி அந்த இரண்டாயிரமாண்டு பழமையான கொக்கை போல் அமைதியாக காத்திருப்பதே.
இந்த இருட்டில் இருந்து ஒரு ஒளிக்கீற்று தோன்றும்; அது ஒரு நட்சத்திரமாக சந்திரனாக அல்லது சூரியனாகவே மாறி சிறிது காலம் வெளிச்சம் கொடுக்கும். அப்படித்தான் கவாஸ்கரும் சச்சினும், கங்குலியும் திராவிடும், கபில்தேவும் கும்பிளேவும் தோன்றினர். இனிமேலும் தோன்றுவர் என்பது தான் நமது நம்பிக்கை. இவர்கள் வலுவான கட்டமைப்புக்குள் ஒழுங்குக்குள் பயிற்சி முறைக்குள் இருந்து உருவானவர்கள் அல்ல. நமது இந்தியத்துவமான அத்தனை குறைகளில் இருந்தும் தோன்றி அவற்றை கடந்து வளர்ந்து மேலோங்கி வந்தவர்கள். அதற்கு இவர்களுக்கு உதவியது அபார திறமையும் தீராத மன ஊக்கமும். அடுத்த நட்சத்திரத்துக்காக இருட்டில் கண்களை பதித்து காத்திருப்போம்.

(2011 டைம்ஸ் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates