Wednesday 26 December 2012

சாகித்ய அகாதமியை திட்டலாமா?



-    

தமிழில் ஒரு தட்டையான எண்ணம் உள்ளது. அது ஒரு குறிப்பிட்ட வகையை சேர்ந்த எழுத்தாளர்கள் எழுதுவது அனைத்தும் இலக்கியம், முப்பது வருடங்கள் தொடர்ந்து இயங்கி மூத்த எழுத்தாளர் ஆனால் உடனே தனி அந்தஸ்து மரியாதை இடம் எல்லாம் தந்து விட வேண்டும் என. இது வெறும் குழு அரசியலும் மூத்தோரை கண்மூடித்தனமாய் மதிக்கும் இந்திய மனோபாவமும் தான்.

இக்காரணத்தினால் தான் நாம் “தீவிர” இலக்கிய வகையை சேர்ந்தவர்கள் சாகித்ய அகாதமி பெறும் போது போல கொண்டாடி புகழ்ந்து மகிழ்வதும் த.மு.எ.ச எழுத்தாளர் அல்லது ஒரு பழந்தமிழ் ஆய்வாளர் விருது பெறும் போது கசப்போடு மறுத்து விமர்சிப்பதும் நடக்கிறது. எந்த குழு அல்லது வகையை சேர்ந்தவர் என்றாலும் படைப்பு உலகத்தரமானதா என கராறாக நாம் அலசுவதே இல்லை. கடந்த முறை சு.வெங்கடேசனுக்கும் இம்முறை டி. செல்வராஜுக்கும் கிடைத்த போது அவர்கள் லாபி செய்து பெற்றதாக விமர்சனங்கள் எழுந்தன. அதேவேளை இன்னொரு தீவிர எழுத்தாளருக்கு சமீபத்தில் கிடைத்த போது அவரது படைப்புகள் எந்தளவுக்கு எதார்த்தமும் ஆழமும் கலைத்தன்மையும் கொண்டவை என நாம் பரிசீலிக்கவே இல்லை. செண்டிமெண்டலாக கண்கலங்கி வாழ்த்துகிறோம். பழைய எம்.ஜி.ஆர் படங்களில் ஒரு பாட்டு பாடினதும் விட்டுப் பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேர்வார்களே அது போல் இருக்கிறது மரியாதை தெரிவிக்க வருபவர்களைப் பார்த்தால்.
தொடர்ச்சியாக த.மு.எ.ச ஆட்கள் வாங்கிக் கொண்டே இருப்பதா என கேள்வி எழுகிறது. இது ஜாதி அடிப்படையிலான தொகுதிப் பங்கீடு போல உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் இந்த பரிசு வாழ்நாள் அங்கீகாரமாக மாறி வருவது தான் தவறு. அது வாசகனுக்கு ஒருநாளும் பயன்படாது. புக்கர் பரிசு போல அவ்வருடத்தில் மிக வித்தியாசமான தரமான நூல் ஒன்றை கண்டறிந்து அதற்கு அப்பரிசை அளிக்க வேண்டும். சாகித்ய அகாதமியும் பெயரளவில் அதைத் தான் செய்கிறது என்றாலும் அதன் நோக்கம் மூத்த எழுத்தாளர்களின் வாழ்நாள் சாதனையை அங்கீகரிப்பதாய் தெரிகிறது. சு.வெங்கடேசன் ஒரு விதிவிலக்கு எனலாம்.
உதாரணமாக எனக்கு எஸ்.ராவின் நெடுங்குருதி அல்லது ஜெ.மொவின் பின் தொடரும் நிழலின் குரல் பிடிக்கும். ஆனால் அவர்களின் வாழ்நாள் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என்பதால் அவர்கள் பின்னால் எழுத நேர்ந்த ஒரு சாதாரண நூலுக்கு விருதை கொடுக்க மாட்டேன். அதற்கு தனியாக எழுத்தாள அறக்கட்டளைகளை ஏற்படுத்தி நிதியளிக்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் இவ்விருது வரும் போதும் வாசகர்களுக்கு எதிர்பார்ப்பு தோன்றும். புத்தகம் அதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஏதோ கடவுளுக்கு படையல் போடுவது போல் விருதை சடங்காக மாற்றி நம் நன்றிக் கடனை தெரிவிப்பது தான் தவறான போக்கு.
உண்மையில் சாகித்ய அகாதமியால் அனைவரையும் திருப்திப் படுத்தும் வகையிலான தேர்வுகளை பண்ண முடியாது. முதல் பிரச்சனை இங்குள்ள குழு அரசியல். அது இந்தியர்களின் சாதிய மனப்பான்மையில் இருந்து வருகிறது. அதனை எளிதில் ஒழிக்க முடியாது. சாகித்ய அகாதமி மட்டுமல்ல சமீபத்தில் தோற்றுவிக்கப்பட்ட பல தனியார் விருதுகளும் கூட பூணூல் பார்த்து கைகுலுக்கும் வகையறாவாக இருக்கின்றன. நீங்கள் பாரபட்சமின்றி ஒரு விருது தர வேண்டும் என்றாலும் கூட தேர்வாளர்கள் பலவிதங்களில் தமது சார்பை உள்ளே கொண்டு வந்து விடுவார்கள். உதாரணமாக ஒரு புத்தகத்துக்கு நான்கு தேர்வாளர்கள் என்றால் மிச்ச மூவரும் பாரபட்சமின்றி மதிப்பெண் அளிக்கும் நிலையிலும் கூட ஒருவர் தமக்கு அணுக்கமானவரின் நூலுக்கு பத்துக்கு ஒன்பது மதிப்பெண் போட்டால் தராசு முழுக்க ஒரு பக்கம் சாய்ந்து விடும்.
இன்னொரு பக்கம் தேர்வுக்குழுவுக்கு பணம் கொடுப்பது, அவர்களை தொடர்ந்து ஜால்ரா அடிப்பது எல்லாம் நடக்கிறது. கடந்த வருடம் ஒரு எழுத்தாளர் ஒரு தேர்வுக்குழு தலைவரை தனது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க அழைத்து அவர் முன் தன் விஸ்வரூபத்தை நிகழ்த்திக் காட்டினார். இது நடந்தது குறிப்பிட்ட விருது அறிவிக்கப்படுவதற்கு ஒரு மாதம் முன். ஆனால் வேறு ஒருவருக்காக பணம் முன்கூட்டியே கைமாறப்பட்ட நிலையில் முயற்சி தோல்வி அடைந்தது. இன்னொரு முறை அவர் ஒரு அயல் விருது வழங்கப்படுவதற்கு சில வாரங்கள் முன் அவ்விருதை தீர்மானிக்கும் முக்கிய புள்ளியைப் பற்றி அரைமணி நேரம் சிலாகித்து ஒரு மேடையில் பேசினார். ஆனால் இம்முறை கடவுள் சோதிக்கவில்லை. அவருக்கு விருது கிடைத்தது.
இன்னொரு படி மேலே போய் எழுத்தாளர்கள் தமக்கு இனி விருதே வேண்டாம் என்கிற நிலைக்கு வருவார்கள். ஏனென்றால் தாம் விருதைக் கடந்தவர்கள் விருது வாங்குவதை விட குடுப்பதே தம் அந்தஸ்துக்கு ஏற்றது என்கிற தன்னம்பிக்கை அவர்களுக்கு வந்து விடும். மேலும் விருது கொடுப்பதன் வழி தமது ஆதரவாளர்களின் படையில் எண்ணிக்கை கூட்டவும் சக எழுத்தாளர்களுக்கு சின்னதாய் ஒரு அச்சத்தை ஏற்படுத்தவும் விருதை ஸ்தாபிப்பது தான் நல்ல உத்தி என அவர்கள் அறிவார்கள். அவர்கள் மிகத் தெளிவாக தமது இலக்கிய குல கோத்திரத்தை சேர்ந்தவர்களைத் தவிர வேறொருவரின் பெயரைக் கூட பரிசீலிக்க மாட்டார்கள். எழுத்தாளருக்கு விடிகாலை சட்டென்று தூக்கம் கலைந்து எழுந்த உடனான திகைப்பில் ஒரு பெயர் தோன்றும். இவருக்கு தான் இந்த வருடம் என உடனே தன் தொண்டர் படைக்கு அறிவித்து விடுவார். இப்படியான ஒரு ஊழல் மிக்க சூழலில் ஒரு விருதை பாரபட்சமின்றி கொடுப்பது மிக மிக சிரமம்.
இன்னொரு சிக்கல் தமிழில் தீவிரமான நூல்கள் குறைவாகவே பிரசுரமாகின்றன. சில நல்ல நூல்கள் ஒரு சின்ன பதிப்பகம் மூலம் வந்து அறியப்படாமலே போய் விடலாம். அல்லது சுயபிரசுரமாகி ஒரு இருண்ட அறையில் தூங்கலாம். இதனோடு விருதுக்காக அதிகம் நாவல்களே பரிசீலிக்கப்படுவதால், அவையே வாசகர்களிடையே பிரபலம் என்பதால், நாவல்களும் மிக மிக குறைவாகவே இங்கு எழுதப்படுகிறது என்பதாலும் பரிசீலனைப் பட்டியல் மிகக் குறுகினதாகவே இருக்க நேர்கிறது. அபுனைவு, ஆய்வு நூல், அரசியல், சமூகவியல், அறிவியல், வரலாற்று நூல்களைக் கூட பொருட்படுத்தி விருது கொடுப்பது ஒரு தீர்வு. அதன் மூலம் மிகச் சிறந்த ஏதாவது ஒரு நூலை வாசகனுக்கு அறிமுகப்படுத்த முடியும். எழுத்தாளனை கௌரவிப்பதை விட நூலை அறிமுகப்படுத்துவது நோக்கமாக இருத்தல் முக்கியம்.
கடந்த வருடம் சு.வெங்கடேசனுக்கு இவ்வளவு சின்ன வயதில் எப்படி ஒருவருக்கு வழங்கலாம் என்று தான் பலருக்கும் கோபம் ஏற்பட்டது. நான் சு.வெங்கடேசனை கடுமையாக விமர்சித்த ஒரு எழுத்தாளரிடம் “ஒரு சுமாரான வயதான எழுத்தாளருக்கு தந்தால் அமைதியாக ஏற்றுக் கொள்கிறீர்கள். அந்த நூல் தரமானதா என்று கூட யாரும் ஆய்வு செய்யவில்லை. ஆனால் சு.வெங்கடேசன் என்றால் மட்டும் பக்கம் பக்கமாக அவரது புத்தகத்தை அலசி விமர்சிக்கிறீர்களே. ஏனிந்த பாரபட்சம்? என்றேன்”. அதற்கு அவர் “தமிழில் எத்தனையோ எழுத்தாளர்கள் இந்த விருது வராதா வராதா என எண்பது தொண்ணூறு வயது வரை காத்திருந்து செத்திருக்கிறார்கள். சீனியாரிட்டி பிரகாரம் சு,வெங்கடேசன் ரொம்ப பின்னால் இருக்கிறாருங்க. அவருக்கு தருவது நியாயமல்ல” என்றார் நக்கலாக.
சு.வெங்கடேசன் பக்கமிருந்து ஒரு கோரிக்கை வைக்கிறேன். தமிழில் உள்ள தனியார் விருதுகளை யாராவது ஒழுங்குபடுத்த வேண்டும். விருதின் பண மதிப்பைப் பொறுத்து ஒரு EMI திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இளைய எழுத்தாளர்கள் வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட தொகைய செலுத்தி தம் எதிர்கால விருதை முன்பதிவு செய்து கொள்ளலாம். விருது ஸ்தாபகத்தினர் 25% பங்களிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள இருபது முப்பதினாயிரம் எனும் பரிசுத் தொகையை நம்மால் லட்சக்கணக்கில் உயர்த்த முடியும்.
எப்படியும் தமிழ்ச் சூழலில் விருதுகளுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் ஆகி விட்டது. ஆனால் பணத்துக்கு என்றும் மதிப்பு உண்டு. இங்கு அதிகமாய் எழுதியும் சம்பாதிக்க முடியாது. அதனால் எழுத்தாளனுக்கான ஒரு காப்பீடாக அல்லது சேமிப்பாக இத்தகைய விருதுகளை மாற்றுவது நலம் பயக்கும். இருபத்தைந்து வயதில் எழுத ஆரம்பிக்கிறவர்கள் பெரும்பாலும் ஐம்பதில் ஓய்வு பெறுகிறார்கள். அவர்களுக்கு நாம் ஒரு மொத்தத் தொகையை விருதுடன் கொடுத்து விடலாம். இத்தனை நாள் எழுதி ஒன்றும் அடையவில்லையே என்கிற ஆற்றாமையும் எழுத்தாளனுக்கு ஏற்படாது. அங்கீகாரத்துக்கு அங்கீகாரமும் ஆச்சு. மூப்பு, அனுபவம் பொறுத்து விருதளிக்கிறோம் என்பதால் சு.வெங்கடேசனுக்கு நேர்ந்தது போல் அவப்பெயரும் நேராது. அதே போன்று புதிய இளம் எழுத்தாளர்களை இத்துறைக்கு ஈர்க்கவும் இத்திட்டம் பயன்படும்.
இந்த விருது பற்றி சர்ச்சையெல்லாம் வேடிக்கையாக பொழுதுபோக்காக நடக்கிறது என்பது சற்று நிம்மதி அளிக்கிறது. ஆனால் இது ஒவ்வொரு வருடமும் நரை கூட கூட விருதை எதிர்பார்த்து தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கும் தம் கணவனுக்கு கிடைக்கவில்லையே என ஆற்றாமல் கோபத்தில் இடது முலை திருகி காஸ் அடுப்பில் தீ பற்ற வைக்கும், பாண்டிய மன்னர்களின் காதை போனில் கடித்துத் துப்பும் அவர் தம் மனைவியர்க்கும் பொருந்தாது தான்.
Read More

Saturday 22 December 2012

தோனி எனும் துர்கனவு



சமீப காலத்தில் இந்திய கிரிக்கெட்டுக்கு நிகழ்ந்து விட்ட ஆகப்பெரிய அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் தோனி தான்.


அவருடைய தலைமை மற்றும் ஆளுமையின் சாதகமான தாக்கங்கள பற்றி பக்கம் பக்கமாக படித்தும் பேசியும் விட்டோம். பாதகமான அம்சம் அவரது பிடிவாதம், ஈடுபாடின்மை மற்றும் செயல்பாட்டு இறுக்கம்.
கடந்த ஒரு வருடத்தில் மே.இ தீவுகள் மற்றும் வங்கதேசம் கூட இந்தியா அளவுக்கு அவமானகரமான தோல்விகளை சந்திக்கவில்லை. உண்மையைத் தான் சொல்கிறேன். கடந்த முறை மே.இ தீவுகள் இங்கிலாந்து சென்று தோற்றுத் திரும்பிய போதும் அவர்களுக்கு சில முன்னேற்றங்கள் தென்பட்டன; அவர்கள் தோல்வியை பொருட்படுத்தாமல் போராடியது மனதை நெகிழ வைப்பதாக இருந்தது. சந்தர்பால் இங்கிலாந்து வீரர்களுக்கு தொடர்சவால்களை தந்தார்; சாமுவல்ஸும் ராம்தினும் சதமடித்து தம் மீள்வருகையை உறுதிப்படுத்தினார்கள். டினோ பெஸ்டின் மட்டையாட்டமும் பந்து வீச்சும் உற்சாகமளிப்பதாக் இருந்தது. மே.இ தீவுகளின் பயணம் நெடுக இந்தியாவினுடையதை போல சாவுக்களை மட்டுமே புலப்படவில்லை. இயலாமையை, இழப்பை, பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும் மனப்பான்மை அங்கங்கே மிளிர்ந்தது. அதே போன்றே வங்க தேசம் கடந்த முறை இங்கிலாந்து சென்ற போதும் அவர்கள் ஓரளவுக்கு இந்தியாவை விட மேலாக மட்டையாடினார்கள்.
ஆனால் இந்தியா மட்டுமே பயணம் துவங்கிய சில மணிநேரங்களில் எந்த அக்கறையோ நம்பிக்கையோ அற்று ஆடினார்கள். இந்தியாவின் இங்கிலாந்து மற்றும் ஆஸி பயணங்களை ஒரு நீண்ட சுயவதை என அழைக்கலாம். இப்போது அவற்றுடன் இந்தியாவிலே நடக்கும் இங்கிலாந்து தொடரையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு அணி தொடர்ந்து தோற்பதில் தவறில்லை. ஆனால் தோல்வியை பற்றின எந்த கூச்சமோ கவலையோ இன்றி மேலும் மேலும் கண்முன்னே சீரழிவது ஒரு தேசிய அவமானமாகவே உள்ளது. ஏனெனில் ஒரு அணி என்பது வெறும் விளையாட்டு வீரர்களின் குழு அல்ல; அவர்கள் நாட்டின் பண்பாட்டுப் பிரதிநிதிகள். அவர்களின் அணுகுமுறை, உடல்மொழி, ஆட்டமுறை, கடப்பாடு என ஒவ்வொன்றும் இந்த நாட்டைப் பற்றின ஒரு சேதியை அயல்நாட்டினருக்கு தெரிவிக்கிறது. “நாங்கள் நன்றாக ஆடின போது பெருமைப்பட்டது போல மோசமாக ஆடும் போது பொறுத்துக் கொள்ள வேண்டும்” என கோரிட தோனிக்கு உரிமை இல்லை. ஏனெனில் பிரச்சனை மோசமாக ஆடுவது அல்ல, இந்த அணி வெளிப்படுத்தும் அருவருக்கத்தக்க மனப்பாங்கும் அது கொண்டுள்ள மோசமான உடல்தகுதியும் தான்.
கடந்த இங்கிலாந்து தொடரில் சஹீர்கானும் சேவாகும் மோசமான உடற்தகுதி மற்றும் ஆட்டத்திறனுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். வேறு எல்லா நாடுகளிலும் காயத்தில் இருந்து திரும்பும் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் சோபித்தும் தன் உடற்தகுதி மற்றும் ஆட்டத்திறனை நிரூபித்தாக வேண்டும். ஆனால் ஸ்ரீகாந்த தேர்வுக்குழு தலைவராக இருந்த போது எளிய உடற்தகுதி தேர்வுகளை நடத்தி பல வேகவீச்சாளர்களை நேரடியாக அணிக்கு அனுப்பும் அவலம் தொடர்ந்து நடந்தது. உச்சபட்சமாக மாதத்திற்கு ரெண்டு முறை காயம்பட்டு ஓய்வெடுக்கும் சஹீர்கான இங்கிலாந்து தொடரின் முதல் டெஸ்டில் எந்த தயாரிப்பும் இன்றி கலந்து கொள்ள அவர் முதல் சில ஓவர்களிலேயே காயம்பட்டு முழுமையாக ஆட்டத்தில் இருந்து வெளியேற நேர்ந்தது. அதை விட கொடுமை என்னவென்றால் அணித்தலைமை சஹீரின் காயம் பல மாத ஓய்வுக்கும் சிகிச்சைக்கும் அவசியம் ஏற்படுத்துவது என்பதை ஏற்க மறுத்து ஒரு மாதம் போல் அவரை அணியிலேயே தொடர்ந்து வைத்திருந்தார்கள். இந்த இடைவெளியில் புது வீரரை பதிலுக்கு அனுப்பவும் இல்லை.
இங்கு இன்னொரு பிரச்சனை தோன்றுகிறது. அது தோனியின் தேர்வு சார்ந்த இறுக்கமனநிலை. கங்குலி, திராவிட் ஆகியோரின் தலைமை காலங்களோடு ஒப்பிடுகையில் தோனியின் பருவத்தில் மிக மிக குறைவாகவே புதிய வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். தொடர்ந்து மோசமான ஆட்டநிலையில் இருந்தாலும் ஒரே வீரர்களை மீண்டும் மீண்டும் களமிறக்குவது தோனிக்கு ஒரு மனநோயாகவே மாறியுள்ளது. இங்கிலாந்தில் நடந்த 20-20 உலகக் கோப்பையில் இஷாந்த் ஷர்மா, அடுத்து மே.இ தீவுகளில் நடந்த 20-20 உலகக் கோப்பையில் ஜடேஜா, ஆஸ்திரேலிய பயணத்தில் வி.வி.எஸ் லக்‌ஷ்மண், சமீபமாக இலங்கையில் நடந்த ஒருநாள் தொடரில் ரோஹித் ஷர்மா என அவர் ஆகமட்டமான ஆட்டநிலையில் இருந்த வீரர்கள் சிலரை தொடர்ந்து கடுமையான மீடியா கண்டனங்கள் மத்தியிலும் ஒரு ஆட்டத்தொடரையே அதனால் இழக்க நேரிடும் ஆபத்திருக்கும் பட்சத்திலும் பிடிவாதமாய் ஆதரித்து அநியாயமாய் அணியில் வாய்ப்பளித்து வந்திருக்கிறார். இன்னொரு பக்கம் நியாயமாக இடத்தைக் கோரும் ஒரு இளைய வீரருக்கு ஒரு எளிய அணிக்கு எதிரான முக்கியமற்ற ஆட்டத்தில் கூட ஒரு சின்ன வாய்ப்பு தராமல் மாதக்கணக்காய் வருடக்கணக்காய் காத்திருக்க வைப்பார். ரஹானேவுக்கு நிகழ்வது போல.
தோனியிடம் உள்ள இன்னொரு விநோதப் பண்பு குறையை ஏற்றுக் கொள்ள மறுப்பது. முன்னூறு அல்லது நானூறு ஓட்டங்கள் வித்தியாசத்தில் தன் அணி தோற்றிருக்கும் – அவர் இதெல்லாம் சாதாரண விசயம் என்று பேட்டியளிப்பார். சரி நேர்மறை சிந்தனை என்று சமாதானப்படலாம் என்றால் அதற்கும் வாய்ப்பளிக்க மாட்டார். அவரது மட்டையாளர்கள் ஒரு டெஸ்டில் இரு இன்னிஸிலும் நூறு ரன்களுக்குள் ஆட்டமிழந்திருப்பார்கள். அப்போதும் தோனி விடாப்பிடியாக “நாங்கள் நன்றாகவே மட்டையாடினோம்” என சாதிப்பார். பல சமயங்களில் இவர் எந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என எல்லாருக்கும் வியப்பேற்படும். கொஞ்சம் கொஞ்சமாய் இந்த வியாதி அணியை முழுக்க பற்றிக் கொண்டுள்ளது. இப்போது அணியின் எல்லா வீரர்களும் கடந்த ஒன்பது டெஸ்டுகளை தோற்ற நிலையிலும் தாம் மிக நன்றாகவே ஆடி வருவதாக நம்பிக்கையோடு பேச ஆரம்பித்துள்ளனர். ஆனால் ஆடும் போது மட்டும் வாழ்க்கையில் வெற்றி என்பதே அறியாத பலவீனர்கள் போல் தலைகுனிந்து தோள் சாய்ந்து தோல்வியை ஏற்றுக் கொண்டே முதல் பந்தில் இருந்து தத்தளிக்கிறார்கள்.

ஒருவேளை தன் அணியை ஊக்கப்படுத்த இவ்வாறு “நாங்கள் மிக நன்றாக ஆடித் தான் ஆக மட்டமாக தோற்றோம்” என ஒவ்வொரு பேட்டியிலும் கூறுகிறாரோ என நமக்கு ஐயம் தோன்றலாம். ஆனால் நடைமுறையிலும் தோனி தனது அணி எந்த பிரச்சனையையும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பது நமக்கு ஆஸ்திரேலிய பயணத்தில் அவர் கிட்டத்தட்ட அதே அணியுடன் சென்று அனைத்து டெஸ்டுகளையும் தோற்று அந்த நிலையிலும் தான் ஆடும் 11ஐ மாற்ற மறுத்த போது தெளிவாகவே விளங்கியது. சமீபத்தில் இத்தோல்விப் பயணங்களைக் குறிப்பிட்ட தோனி “அப்பயணங்களில் எங்களுக்கு வெற்றி பெறும் நம்பிக்கை துளியும் இருக்கவில்லை” என சொல்லியிருக்கிறார். எந்த நம்பிக்கையும் இல்லாத ஒரு அணி வெறுமனே தோல்வி பெறும் பொருட்டு ஒரு நாட்டு மக்களின் பணத்தை செலவழித்து சில தனிநபர்களின் ஆட்டவாழ்வை தக்க வைப்பதற்காக எதற்கு ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட வேண்டும்? அதற்குப் பதில் இப்படியான அவநம்பிக்கைகள் இல்லாத குறைந்தபட்சம் தம்மால் இயன்றவரை போராடக் கூடிய இளைய வீரர்களின் ஒரு அணியையாவது அனுப்பி இருக்கலாமே? தோனியின் மிகப்பெரிய துரதிர்ஷ்டம் தன் கண் முன் நிகழும் ஒரு பெரும் வீழ்ச்சியை சீரழிவை தோல்வியை விதியின் விளையாட்டு என ஏற்றுக் கொண்டு விலகல் மனப்பான்மையுடன் தன் வேலையை பார்த்துக் கொண்டிருப்பார் என்பது.
ஒரு விசயம் நம் கைமீறிப் போகிறதென்றால் அதை அப்படியே விட்டு விடலாம் என்கிற இந்த இந்திய மனப்பான்மை தான் தோனியின் மிகப்பெரிய குறைபாடு. அதுவும் அரசியல் பண்ணுவதற்கு தன் நிலையை அறிவிப்பதற்கு அவர் எந்த எல்லைக்கும் செல்ல துணியக்கூடியவர். இதே விலகல் மனப்பான்மையுடன். உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் சீனியர்கள் சேவாகின் தலைமையில் கலகம் பண்ணினார்கள். மூன்றாவது டெஸ்டும் தோல்வியில் முடியும் தறுபாயில் அணி முழுதும் சீரழிந்து போயிருந்ததால் சேவாக் தன்னை விட மேலான தலைவராக இருக்க முடியாது என ஸ்தாபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என உணர்ந்த தோனி வேண்டுமென்றே அணி குறைந்த பட்ச ஓவர்கள் வீசாதபடி ஏற்பாடு செய்து அடுத்த ஆட்டத்துக்கு தடை வாங்கிக் கொண்டார். அவர் எதிர்பார்த்தது படி அடுத்த டெஸ்டில் சேவாகின் தலைமையின் கீழும் இந்திய அணி மட்டமாக தோற்றது. சேவாகின் தலைமை எதிர்காலம் அத்தோடு பூஜியமானது. உலகில் வேறெந்த அணியிலாவது எதிரியை பழி தீர்ப்பதற்காக ஒரு சர்வதேச டெஸ்டு ஆட்டத்தை பலியாக்குவார்களா? அதுவும் ஒரு அணித்தலைவர், தன் அணியை உலகின் ஆட்டவரிசையில் முதலில் கொண்டு வந்த அணித்தலைவர், உலகக்கோப்பையை வென்றுத் தந்த ஒரு அணித்தலைவர்?

தோனி செய்வார். வெற்றி தோல்வி மட்டுமல்ல. தான் இருக்கிற சூழல், தன்னுடன் இருப்பவர்கள், தனக்கு எதிரே இருப்பவர்கள் இவர்கள் அனைவரிடம் இருந்தும் தன்னை பிரித்து தனியாக காணும் ஒரு அரிய மனப்பண்பு கொண்டவர் அவர். ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் அவருடன் ஆடிய ஆகாஷ் சோப்ரா ஒரு சம்பவத்தை உதாரணம் சொல்லுகிறார். அப்போது தோனி ஒரு இரண்டாம் நிலை கீப்பர். தினேஷ் கார்த்திக் தான் அப்போது அணியின் நிரந்த கீப்பர். ஆனாலும் பயிற்சியின் போது தோனி கார்த்திக்கிற்கு பந்து வீசிக் கொண்டே இருப்பார். இதை கவனித்த சோப்ரா தோனியிடம் “ உனக்கு பந்து வீசும் திறமை அதிகம் இல்லை. உன்னுடைய கீப்பிங் மற்றும் மட்டையாட்டத்தை மெருகேற்றுவதை விட்டு விட்டு ஏன் உனக்கு போட்டியாளனான கார்த்திக்கிற்கு போய் உதவி செய்கிறாயே?” என கேட்டு அறிவுரை சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால் தோனி ஒரு புன்னகையுடன் மறுத்து விட்டு அதே உற்சாகத்துடன் தொடர்ந்து கார்த்திக்கிற்கு பந்து வீசிக் கொண்டே இருந்தார். தன்னால் ஒரு பந்து வீச்சாளனாக முடியாது என் தோனிக்கு தெரியும். ஆனால் அதை விட முக்கியமாக, தனக்கு யாருமே இந்த உலகில் போட்டி இல்லை எனவும் அவருக்கு தெரியும். அதனால் தான் கார்த்திக்குக்கு பயிற்சியின் போது உதவி செய்வதில் அவருக்கு எந்த பதற்றமோ அச்சமோ இல்லை.
தான் தொடர்ந்து முயன்று கொண்டிருந்தால் தன்னால் விரும்புகிற உச்சங்களுக்கு போக முடியும் என அவர் வலுவாக நம்பினார். அணி, தலைவர், தேர்வாளர், சூழல்,காலம் எல்லாம் அவரது முயற்சிக்கு புறம்பான வஸ்துக்கள். இன்னும் முக்கியமாக இந்த புறக்காரணிகளை தன்னால் கட்டுப்படுத்த முடியாது என அறிந்திருந்தார். அதனால் வானின் மீது ஒரு ஏணியை வைத்து தனியாக ஏறிப் போய்க் கொண்டிருந்தார். இன்று எந்த இந்தியக் கிரிக்கெட் வீரனும் கற்பனை செய்ய முடியாத இலக்குகளை எட்டி விட்டார்.
ஆனால் ஒரு அணித்தலைவராக இந்த பண்பு தான் அவருக்கு எதிராக இருக்கிறது. எதிர்காலம் குறித்த திட்டமிடல்கள், கடுமையான கராறான முடிவுகள் எடுக்கும் உறுதி, பொறுப்புணர்வு ஆகியவை ஒரு தலைவனுக்கு அவசியம். தோனியிடம் தற்போது இல்லாததும் இவை தான். கடந்த உலகக்கோப்பையின் போது எல்லா அணிகளும் தமக்கான அணியை குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பாவது தீர்மானித்து விட்டன, இந்தியாவைத் தவிர. இந்திய அணியின் சீனியர்கள் அனைவரும் காயமுற்று தடுமாறிய நிலையில் இருந்தார்கள். அப்போது அவர் திடீரென அணிக்குள் பியுஷ் சாவ்லாவை கொண்டு வந்தார். சாவ்லா தேவை எனப் பட்டிருந்தால் குறைந்தது நான்கு அல்லது ஐந்து தொடர்களிலாவது அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து அவருக்கு நம்பிக்கை ஏற்படுத்து ஆட்டநிலையை மேம்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் தோனி ஒரு கட்டத்தில் ஹர்பஜன் மீது நம்பிக்கை இல்லாமலோ அல்லது ஜடேஜாவின் பந்துவீச்சு மட்டமாக மாறினதினாலோ எந்த ஒரு மாற்று ஏற்பாடும் இல்லாத நிலையில் வருடக்கணக்காய் இந்தியாவுக்காக ஆடாத பியூஷ் சாவ்லாவை திடீரென பயன்படுத்த முடிவு செய்தார். உலகக்கோப்பையில் சாவ்லா மிகப்பதற்றமாக அவநம்பிக்கையுடன் இயங்கினார். அது அவர் தவறல்ல். அவர் அவ்வளவு நெருக்கடியான பிரம்மாண்டமான தொடர் ஒன்றுக்கு தயாராகவே இருக்கவில்லை. பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டமொன்றில் அவர் காரணமாகவே இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது.
அதே போன்று கடந்த இங்கிலாந்து பயணத்தில் சஹீர் கானை இழந்த நிலையில் இந்தியாவுக்கு மாற்றுவீரர் யாரும் இருக்கவில்லை. ஏனெனில் கடந்த சில வருடங்களில் அவர்கள் புது வீச்சாளர்கள் யாருக்கும் வாய்ப்பளிக்கவில்லை. அதனால் வேறு வழியின்றி புனித யாத்திரை ஒன்றுக்கு சென்றிருந்த ஆர்.பி சிங்கை அவசரமாக இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார். அங்கு தொப்பையோடு ஆர்.பி சிங் மூச்சிரைக்க பந்து வீசியது ஒரு காட்சிபூர்வ வதையனுபவமாக பார்வையாளர்களுக்கு இருந்தது.
தற்போது இங்கிலாந்து டெஸ்டு தொடரிலும் இவ்வாறு இறுதி டெஸ்டுக்கு திடீரென்று அவர் திரும்பவும் சாவ்லாவை அணிக்கு கொண்டு வந்தார். ஆனால் ஏற்கனவே அணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் உள்ள ரஹானேவுக்கு ஒரு வாய்ப்பு கூட அவர் தொடர் முழுக்க வழங்கவில்லை. இத்தனைக்கும் தற்போதைய பிரச்சனை பந்து வீச்சல்ல. மட்டையாட்டம் தான். அவர் நியாயப்படி சச்சின், காம்பிர், சேவாக் ஆகியோரில் ஒருவரையாவது நீக்கி விட்டு ரஹானேவுக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும். ஆனால் ஒற்றை இலக்கங்களில் தொடர்ந்து ஆட்டமிழக்கும் தன் மட்டையாளர்கள் நன்றாக அடுவதாக அவர் வழக்கம் போல் சாதித்து வருகிறார்.
இந்திய அணிக்கு தற்போது தேவை திறந்த மனம் படைத்த ஒரு அணித்தலைவர். நிறைய பரீட்சார்த்த முயற்சிகள் செய்யும், தோல்வியை தோல்வி என ஒப்புக்கொண்டு மாற்றங்களை கொண்டு வரத் தயங்காத, இளம் வீரர்களை தொலைநோக்கோடு அணிக்குள் கொண்டு வந்து சுதந்திரமாக இயங்க அனுமதிக்கும், வீரர்களின் கடந்த கால சாதனை வரலாற்றுக்காக அவர்களை முப்பது நாற்பது ஆட்டங்களாக சொற்ப ஓட்டங்களே எடுத்தாலும் அணியின் நலனுக்கு எதிராக பொறுத்துக் கொள்ளாத கராறான ஒரு அணித்தலைவர்.
தோனி மிகச் சிறந்த தலைவர் தான். ஆனால் அவரது எதிர்மறையான ஆளுமைப்பண்புகள் அணியின் எதிர்கால வளர்ச்சிக்கு தடையாக இருப்பதால் அவரை நீக்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது. ஆனாலும் இது விரைவில் நிகழுமா என்பது சந்தேகம் தான்.
கடந்த ஆஸ்திரேலிய பயணத்தின் போது இந்தியா தொடர்ந்து எட்டு டெஸ்டுகளை இழந்த போது தேர்வாளர்கள் தோனியை விலக்கி கோலியை தலைவராக்க முயன்றதாகவும் ஆனால் இந்திய வாரியத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன் தனது சென்னை சூப்பர் கிங்ஸின் தலைவரை ஆவேசமாக பாதுகாத்ததாகவும் அப்போதைய தேர்வுக்குழு தலைவர் அமர்நாத் சமீபத்தில் குற்றம் சாட்டினார். ஆக ஸ்ரீநிவாசன் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக இருக்கும் வரையில் நாம் அணித் தலைமையில் சிறுமாற்றத்தைக் கூட எதிர்பார்க்க முடியாது.
ஒருவேளை அடுத்து வரும் ஆஸ்திரேலிய தென்னாப்பிரிக்க டெஸ்டு தொடர்களையும் இந்தியா இழந்தாலும் கூட ஒன்றுமே நடக்காதது போல் இதே அணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம். 2015இல் அடுத்த உலகக்கோப்பை நடந்து முடியும் வரை இந்த மந்தநிலை தொடரக் கூடும். ஏனெனில் ஒரு உலகக்கோப்பையை வென்றளித்த நன்றி மற்றும் நம்பிக்கைல்காக நாம் இன்னொரு உலகக்கோப்பையை இழக்கும் மகத்தான வாய்ப்பை தோனிக்கு அளிக்க கடமைப்பட்டிருக்கிறோம். அதற்குப் பின் தான் இந்திய அணியின் நிஜமான கவுண்டவுன் துவங்கும்!
Read More

Friday 21 December 2012

உடல் எடை, நீரிழிவு தொன்மங்களும் உலக அழிவு பிரச்சாரமும்



நவம்பர் 14ஆம் உலக நீரிழிவு தினம். நீங்கள் இதைப் படிக்கும் போது உ-நீ-தினத்தை ஒட்டி நிறைய உடல்நலக் கட்டுரைகளை படித்திருப்பீர்கள். மீடியா ஒரு சடங்கைப் போல இந்தியா ஒரு நீரிழிவு நாடாக மாறி வருவதைப் பற்றி கண்ணை உருட்டி மிரட்டியிருக்கும். மருத்துவர்களும் தாம் படித்ததை வைத்து அச்சு பிசகாமல் உடலுழைப்பின்மை, அதிகமாக டி.வி பார்த்தல், துரித உணவு ஆகிய நவீன வாழ்க்கை நோய்க் காரணிகளை பட்டியலிட்டு அனைவரும் அரைமணிநேரம் நடைபழகி, காய்கறிகள் உண்டு எடையை குறைத்தால் நீரிழிவில் இருந்து தப்பலாம் என்றொரு பாராயணத்தை முடித்திருப்பார்கள்.
இந்த மீடியா பிரசங்கத்தில் ஒரு பிரச்சனை எளிமைப்படுத்தலும் நடைமுறையில் இருந்து விலகின தன்மையும். இன்னும் ஒரு முக்கிய விசயம் மெட்டொபொலிக் நோய்கள் எனப்படும் உணவு ஆற்றலாக மாற்றப்படுதலில் உள்ள கோளாறுகளை முன்னிட்டு ஊடகங்களும் மருத்துவத் துறையும் சேர்ந்து எளிய மனிதர்களை தொடர்ந்து குற்றவாளிகாக சித்தரித்தல். இதைக் குறித்தெல்லாம் நாம் விரிவாக பேசலாம்.
 நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, ரத்தக்கொழுப்பு, பருமன் போன்ற மெட்டொபொலிக் நோய்களின் பட்சத்தில் பெரும்பான்மையான ஆரோக்கிய பராமரிப்பு பொறுப்பு நோயாளிகளிடம் தான் இருக்கிறது. பொறுப்பு எப்போதுமே பெரும் தனிமனித நெருக்கடியை ஏற்படுத்தும். அதனாலே இத்தகைய நோயாளிகள் பிறரை போலல்லாது சதா குற்றவுணர்வுடன் நெருக்கடியுடன் திரிகிறார்கள். கூடுதலாக, அவர்களுக்கு நம் சமூகம், பண்பாடு மற்றும் சூழலில் (குடும்பம், அலுவலகம், மற்றும் சுற்றுப்புற) இருந்து எந்த ஆதரவும் கிடைப்பதில்லை. மாறாக விசுவாமித்திரனுக்கு நேர்ந்ததும் போல தொடர்ந்து அவர்களின் நோய் நிலைமை மேலும் சீரழிக்கும் படியே நமது பண்பாடும் சூழலும் செயல்படுகின்றன.
பொதுவாக நீரிழிவாளர்கள் குறைவான கொழுப்பு, மாவுச் சத்துக்கள் கொண்ட உணவை உட்கொள்ள வேண்டும் என மருத்துவ அறிக்கைகள் திரும்பத் திரும்ப சொல்லுகின்றன. இவை மேற்கத்திய சூழலின் அடிப்படையில் உருவான நம்பிக்கைகள். மேற்கில் கடந்த ஐம்பது வருடங்களாக துரித உணவுக் கலாச்சாரத்துக்கு இணையான வலுவான பத்திய உணவுக் (diet food) கலாச்சாரமும் உள்ளது. அங்கு அதிகமாக காய்கறிகளை பச்சையாக புசித்தல், செயற்கை இனிப்புகளை பயன்படுத்துதல், முடிந்தவரை உணவை பொரிக்காமல் கிரில்லிங் முறையில் சுட்டு தின்பது ஒரு நவீன மோஸ்தராக, உயர்வர்க்க பண்பாட்டு அடையாளமாக உள்ளது. மேலும் பெண்கள் உடலை ஒல்லியாக வைத்திருப்பதற்காக சாப்பிட்டு வேண்டுமென்றே தொண்டைக்குள் விரல்விட்டு வாந்தியெடுக்கும் பழக்கம் ஒரு உளவியல் கோளாறாக தோன்றி சீரழியும் அளவுக்கு உடல் தோற்ற பிரக்ஞை வலுவாக உள்ளது. ஆனால் இந்தியாவில் ஆரோக்கியமாக இருப்பதென்றால் பருமனாக இருப்பது என்ற நம்பிக்கை மக்களின் உளவியலில் ஆழமாக வேரூன்றி உள்ளது.
எங்களூரில் பெண்கள் வயதுக்கு வந்ததும் அவர்களுக்கு தொடர்ச்சியாக பாலில் முட்டையடித்து கொடுத்து குண்டாக வைப்பார்கள். குண்டான பெண்கள் தான் தமிழ் சினிமாவில் கவர்ச்சிக் குறியீடுகளாக இருந்து வருகிறார்கள். கேரளாவில் ஆண்கள் தொப்பை வைத்திருப்பது கலாச்சார மனதின் ஒரு பகுதியாகவே உள்ளது. அவர்களின் பண்பாட்டு உடையான வேட்டி சட்டைக்கு கொஞ்சம் தொப்பை இருந்தால் எடுப்பாகவும் உள்ளது. கேரளப் பெண்கள் பற்றி பொதுவாக தமிழில் உள்ள அந்த கமெண்டை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஆக நாம் பருமனை கொண்டாடும் ஒரு சமூகம். அதற்கு பல்லாயிரம் வருடங்களாக நாம் தொடர்ந்து சந்தித்து வந்துள்ள உணவுப் பஞ்சங்கள் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
 உணவுப்பஞ்சத்தை தொடர்ந்து நேரிடும் ஒரு சமூகத்தில் மக்களின் உடலில் இயல்பாகவே உணவை ஆற்றலாக செரிக்கும் ஆற்றல் குறைகிறது. கொழுப்பை அதன் வழி சேமிப்பது தேவையாகிறது. மேலும் குறைவாக உணவுள்ள சூழலில் மக்கள் ஆற்றல் குறைவால் மயங்கி விழாதிருக்கும் பொருட்டு உடல் இயல்பாகவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகமாக்கி வைக்கிறது. விளைவாக மரபியல் ரீதியாக இந்தியர்கள் உடலில் கொழுப்பும் ரத்த சக்கரையும் அதிகமாகவே உள்ளது. நாம் நமது வரலாற்றின், அதில் உள்ள விபத்துகளின் சந்ததிகள். நம் குருதியில் இன்றும் பசியால் தவித்த ஒரு சமூக மக்களின் அழுகுரல் உள்ளது. நமது மரபணுக்கள் நம்மை மற்றொரு பஞ்சத்தில் இருந்து நம்மை காப்பாற்றும் பொருட்டு கொழுப்பை சேகரித்தபடியும் ரத்தசக்கரையை அதிகப்படுத்தியபடியும் உள்ளது.
இப்படியான வரலாறு மற்றும் பண்பாட்டில் வரும் மக்களிடம் வந்து திடீரென குறைந்த கொழுப்பு சக்கரை உள்ள உணவை உட்கொள்ளுங்கள், உடலை ஒல்லியாக வைத்திருங்கள் என வலியுறுத்துவது அபத்தமானது. நம் மக்களோ பண்பாடோ அதற்கு தயாராக இல்லை.
என் நண்பரின் வீட்டுக்கு தீபாவளிக்கு சென்றிருந்தேன். அவர் பல வருடங்களாக நீரிழிவுக்கு மருந்துண்டு வருகிறார். அவரது மனைவி மிக சாதாரணமாக ஒரு தட்டில் அதிரசங்களை கொண்டு வந்து நீட்டினார். அவரும் அசட்டையாக அவற்றை நொறுக்கி தின்னத் துவக்கினார். அவரது மனைவிக்கு அவருக்கு அதிரசம் ஆகாது எனத் தெரியாதா? தெரியும். ஆனால் தீபாவளிப் பண்டிகைக்கு இனிப்புண்ணுவது நம் பண்பாட்டில் நீண்ட காலமாக உள்ள ஒரு சமாச்சாரம். இதெல்லாம் அதிக சிந்தனை பரிசீலனை இன்றி இயல்பாகவே நிகழும் ஒன்று. பத்திய உணவை உட்கொள்ளும் ஒருவர் நமது அத்தனை பண்பாட்டு சடங்குகளையும் நிராகரிக்க வேண்டும். அவர் ஒரு அலுவகலத்தில் வேலை பார்க்கக் கூடும். மாலையில் நண்பர்களுடன் கேண்டீனில் சாப்பிடும் போது அவர் தன் நண்பர் வட்டத்தில் இயல்பாக இணைந்திருக்க வேண்டும் என்றால் சமோசாவும் பஜ்ஜியும் தான் தின்றாக வேண்டும். ஒன்றும் வேண்டாம் என்று வாயைப் பிளந்து கொண்டிருந்தாலோ ஒரு டப்பாவில் சாலட்டோ பட்டாணியோ கொண்டு வந்து மென்றாலோ அவர் மிக இயல்பாக தன் அலுவலக குழுக்களில் இருந்து தனிமைப்பட்டுப் போவார். மற்றொரு பிரச்சனை நமது உணவுப் பண்பாட்டில் பொரித்த இனிப்பில் ஊறின பண்டங்கள் தாம் அதிகம் என்பது. சீனப் பண்பாட்டில் கூட வேக வைத்த உணவுப் பண்டங்கள் அதிகம் உள்ளன. ஆனால் இங்கே பத்தியம் இருக்கும் ஒரு இந்தியனுக்கு கொழுப்பு மற்றும் மாவுச்சத்து மிக்க உணவுகள் தான் பிரதானமாய் கிடைக்கின்றன. உணவுப்பழக்கத்தை திருத்தும்படி அறிவுறுத்தும் மீடியாவும் மருத்துவ நிபுணர்களும் அது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே நம் பண்பாட்டில் இருந்து திருப்ப வலியுறுத்தும் செயலாகும் என அறிவதில்லை.
பெரும்பாலான வீடுகளில் ஒருவருக்கு நீரிழிவு என்றால் ஒட்டுமொத்த குடும்பமும் அதற்கான தியாகங்களை பண்ண வேண்டி இருக்கும். பாரம்பரிய உணவுகளில் பலவற்றை சாப்பிட முடியாது. இதனால் ஒன்றில் பிற குடும்ப அங்கத்தினரும் சேர்த்து தம் உணவு பழக்கத்தை மாற்ற நேரிடும்  அல்லது ஒருவர் மட்டும் உணவு மேஜையில் தனிமைப்படுத்த நேரிடலாம். உதாரணமாக குழந்தைகள் பூரியும் கிழங்கும் உண்ண விரும்பலாம். ஆனால் ஒரு சகோதரன் அப்பா அல்லது அம்மாவுக்கு ரத்த சக்கரையோ கொழுப்போ இருந்தால் இப்படியான உணவுகளை பரிமாறுவதில் குடும்பத்துக்கு தயக்கங்கள் ஏற்படும். பல சமயங்களில் நோயாளி அங்கத்தினர் அடுத்தவர்களுக்கு ஏன் சிரமம் என்றோ அல்லது தமது சுயபச்சாதாபம் காரணமாகவோ ஒவ்வாத உணவை உட்கொள்ள முன்வருவர். பல குடும்பங்களில் நீரிழிவு வந்த அப்பா அல்லது அம்மாவால் தமக்கு பல இடையூறுகள் வருவதாக குழந்தைகள் தொடர்ந்து புகார் கூறி குற்றம் சுமத்துவதை கண்டிருக்கிறேன்.
இன்னொரு பக்கம் நீரிழிவு உற்றவர்கள் குறைவாக உண்ண வேண்டியதை அவர்களுக்கு சமைத்து பரிமாறுபவர்கள் எதிர்ப்பதும் நிகழும். பல மனைவிகள் தாம் சுவையாக சமைத்த உணவை ஏன் கணவன் குறைவாக சாப்பிடுகிறான் என கசப்புறுவார்கள். அவர்கள் இரண்டு தோசைக்கு பதில் நான்கு சாப்பிடுங்கள் என்று வலியுறுத்தி ரத்த சக்கரையை எகிற வைப்பார்கள். இதை அவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை. அன்புத்தொல்லையும் அல்ல. அவர்களின் ஆழ்மனதில் ஆரோக்கிய உணவருந்தல் என்றால் தட்டு நிறை வைத்து புசிப்பது தான்.
நீரிழிவு போன்ற நோய்கள் மனிதனின் உள்ளுணர்வுக்கு நேர்மாறாக மூளையை மட்டுமே ஆலோசித்து சாப்பிட வேண்டிய நிலையை ஏற்படுத்துகின்றன. மனிதன் அடிப்படையில் இனிப்பான கொழுப்பு மிகுந்த உணவைத் தான் விரும்புகிறான். நார்ச்சத்து மிகுந்த தாவர உணவு அவனுக்கு விருப்பத்தையோ நிறைவையோ தருவதில்லை. இது பழக்கம் சார்ந்த உணர்வல்ல. இது நம் உயிரியல் இயல்பு. ஏனென்றால் இனிப்பான உணவு உடனடியாக நமக்கு அபரிதமான ஆற்றலை வழங்கும். கொழுப்பு நம் அணுக்களின் கட்டுமானத்துக்கு அவசியம். நீரிழிவின் போது மூளைக்கும் உள்ளுணர்வுக்கு இடையே ஒரு தொடர் போராட்டமே நிகழ்கிறது. உடல் தருகின்ற சமிக்ஞைகளை ஒருவன் உதாசீனித்தபடியே இருக்க நேர்கிறது. ஆனால் இது எப்போதும் சாத்தியம் அல்ல. ஒரு உதாரணம் தருகிறேன்.
ஒரு டீக்கடையில் ஒரு முதியவர் வந்து சக்கரை கம்மியாய் டீ கேட்டார். பொதுவாக பாதி சக்கரை கூட நீரிழிவுக்கு நல்லதல்ல. ஆனால் நம் மக்கள் சக்கரை இல்லாமல் சாப்பிடுவதில்லை. அவர் டீ குடித்தபடி தன் நண்பரிடம் தனக்கு அன்று ரத்த சக்கரை அளவு குறைந்து மயக்கம் ஏற்பட்ட அனுபவத்தை விவரித்துக் கொண்டிருந்தார். அவர் மதியம் அன்று உணவருந்தவில்லை. வேலை விசயமாய் சில தெரிந்தவர்கள் வீட்டுக்கு செல்ல நேர்ந்தது. அவர்கள் உணவருந்த கேட்டனர். ஆனால் இவர் கௌரவத்துக்காக மறுத்து விட்டார். வெளியே வந்ததும் மயக்கம் அதிகமாக ஒரு பெட்டிக்கடைக்கு சென்று ஒரு பாக்கெட் பிஸ்கட் வாங்கி முழுவதும் தின்று விட்டதாக கூறினார். உண்மையில் அவர் சகஜ நிலைக்கு திரும்ப ரெண்டு ஸ்பூன் சர்க்கரையை முழுங்கினால் போதும். அவர் ஏன் ஒரு பாக்கெட் பிஸ்கட் முழுதையும் தின்கிறார்? ஏன் என்றால் உடல் சர்க்கரை முழுக்க வற்றின நிலையில்பெரும் போதாமை உணர்வை அவருக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும். நான்கு நாள் முழுப்பட்டினியில் கிடந்தது போன்ற உணர்வு அவருக்கு ஏற்படும். இனிப்பான கலோரி மிகுந்த உணவால் வயிற்றை நிரப்ப வேண்டும் எனும் கட்டுப்படுத்த முடியாத ஆவேசம் அவருக்கு ஏற்படும். ஆனால் ஒரு பாக்கெட் பிஸ்கட் 500-800 கலோரியாவது இருக்கும். மேலும் அதிலுள்ள நேரடி சர்க்கரை உடனடியாக அவரது ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும். விளைவாக குறை ரத்த சர்க்கரையால் தவித்த நபர் சில நிமிடங்களில் உயர் ரத்த சர்க்கரையால் பாதிக்கப்பட துவங்குவார். அவர் இதை நண்பரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவரது ரத்தசர்க்கரை அளவு நிச்சயம் 250-3002க்கு மேல் உயர்ந்திருக்கும். ஆனால் இதன் அறிகுறிகளை அவர் எளிதில் அறிய மாட்டார். உயர் ரத்தசர்க்கரை மெதுவான சத்தமில்லாமல் ஏறும் விஷம். அவர் மருத்துவரிடம் போகிறார் என்றால் மருத்துவர் அவருக்கு உணவுக்கட்டுப்பாடு இல்லை என்று கண்டிப்பார். அவருக்கு குற்றவுணர்வு ஏற்படுத்துவார். நீரிழிவாளனின் உணவு வாழ்வில் உள்ள சிக்கல்கள் குழப்பங்களில் பல மருத்துவர்கள் அக்கறை காட்டுவதில்லை. அல்லது அவர்கள் இச்சிக்கல்களை அறிவதில்லை. அநேகமான மருத்துவர்கள் இந்த நோய்களுக்கு வெளியே இருந்து கருத்தியல் பூர்வமாக மட்டும் இவற்றை அணுகுபவர்கள். அவர்கள் எப்போதுமே எளிமைப்படுத்துவார்கள். குறைவான கலோரி உணவு, அரைமணி நடைபயிற்சி இருந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று. ஆனால் இது எளிதில் சாத்தியமா?
நீங்கள் ஒரு அலுவலக ரீதியான கூட்டத்தில் இருக்கிறீர்கள். எல்லோருக்கும் தேநீரும் கொறிப்பதற்கான உணவும் தருகிறார்கள். இந்தியாவில் இன்னும் போதுமான விழிப்புணர்வு இல்லாததால் சர்க்கரை கலந்த தேநீர் மட்டுமே கிடைக்கும். உணவும் இனிப்பும் கொழுப்பும் மிகுந்ததாக இருக்கும். நீங்கள் என்ன செய்வீர்கள்? கையில் சுண்டலும் மோரும் எடுத்துப் போய் கூட்டத்தின் மத்தியில் அமர்ந்து சாப்பிடுவீர்களா அல்லது பசிக்கவில்லை என்று பொய்யாக மறுப்பீர்களா? விருந்தினராக ஏதாவது வீட்டுக்கு போனாலும் இதே சிக்கல் தான் எழும். அங்கு உங்களுக்கு என்று தனியாக தயாரிக்கப்பட்ட உணவை கோர முடியாது. இன்னொரு பக்கம் இன்று மட்டும் கொஞ்சம் இனிப்பு சாப்பிட்டால் ஒன்றும் செய்யாது என்று விருந்தோம்பல் பொருட்டு அவர்கள் வலியுறுத்தியபடியே இருப்பார்கள். ஆனால் ஒரு துண்டு இனிப்பை சாப்பிட்டால் உங்கள் ரத்த சக்கரை அளவு ஒரு வாரத்துக்கு அதிகமாகவே இருக்கும் என அவர்கள் அறிவதில்லை. இந்தியாவில் நன்கு படித்த மக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு இருப்பதில்லை. அதை விட முக்கியமாக உணவருந்தல் என்பது ஒரு சமூகமாக்கல் நடவடிக்கை. நம் சமூகத்தில் மட்டுமல்ல உலகம் முழுக்க மனிதர்களும் மிருகங்களும் உணவையும் செக்ஸையும் பகிர்ந்து தான் நட்புவலையை விரிவாக்குகின்றனர். பரஸ்பர அக்கறையை காட்டுகின்றனர். திடீரென்று தனி உணவுப்பழக்கத்துக்கு போகும் நீங்கள் ஒரு சமூகத்தில் இருந்து முழுக்க வெளியேற்றப்படுகிறீர்கள். இதே காரணத்தினால் தான் மருத்துவர்களும் மீடியாவும் என்னதான் வலியுறுத்தினாலும் நம்மூரில் நீரிழிவாளர்கள் தம் உணவில் தொடர்ந்து சமரசம் செய்து கொண்டே வருகிறார்கள். குறிப்பாக 30இல் இருந்து 50 வயதுக்கு உட்பட்டு சமூக வாழ்வில் முழுமையாக ஈடுபட்டு வருபவர்கள். கவனித்தீர்கள் என்றால் நீரிழிவுக்கு ஏற்ற பத்திய உணவை துல்லியமாக பின்பற்றுவர்கள் ஓய்வுற்ற முதியவர்கள் எனக் காணலாம். அவர்களின் பலவீனமான உடல்நிலை சமரசங்களை அனுமதிப்பதில்லை என்பது ஒரு காரணம். அதை விட முக்கியமாக ஓய்வுக்கு பின் அவர்கள் சமூகம் மற்றும் குடும்ப அமைப்பில் இருந்து இயல்பாகவே வெளியேறி தனிமைப்படுகிறார்கள். வீட்டுக்குள் முடங்குபவர்களுக்கு தான் பத்திய உணவை பின்பற்றுவது எளிதாகிறது. பொதுவாக நீரிழிவு ரத்தக்கொழுப்பு எல்லாமே முதுமையின் நோய்கள் தாம். துரதிஷ்டவசமாக கடந்த நூற்றாண்டில் இவை இளைஞர்களின் நோயாகி விட்டதால் மனித குலம் இளமைக்காலத்தில் முதியவர்களின் சமூக வாழ்க்கையை எப்படி வாழ்வது என புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறது.

அடுத்து நாம் இன்னொரு கேள்வியை கேட்க வேண்டும். உணவு, அதனால் ஏற்படும் உடல்பருமன், இதைக் குறைக்க உடற்பயிற்சி எனும் இந்த ஆலோசனை எந்த அளவுக்கு பயன்படும் என்று. முதலில் மனிதர்கள் பருமனாய் இருப்பதற்கும் அவர்களின் உணவுப்பழக்கத்திற்கும் அதிக சம்மந்தம் இல்லை என்பது புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு தொன்மம் மட்டுமே. நடைமுறையிலே நமக்கு ஏகப்பட்ட உதாரணங்கள் கிடைக்கும். குண்டாயிருக்கிற பலர் ”நான் ரொம்ப கம்மியாய் தான் சாப்பிடுகிறேன்” என்று லேசாய் குற்றவுணர்வு தொனிக்க கூறுவதைக் கேட்டு நக்கலாய் அதற்கு புன்னகை புரிந்திருப்போம். நம் சந்தேகம் எளிது. கம்மியாய் சாப்பிட்டால் எப்படி உடம்பு இவ்வளவு பெரிதாகும். ஆக சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்கள், சோம்பேறிகள், ஒழுக்கம் இல்லதவர்கள் தாம் பருமனாக இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வருகிறோம்.

கிராமப்புறங்களுக்கு போய் பாருங்கள். எத்தனையோ பேர் வாழ்நாள் முழுக்க குண்டாக இருப்பதான பிரக்ஞை இல்லாமலே வாழ்ந்து மறைந்திருப்பார்கள். அவர்களிடம் யாரும் போய் ஏன் குண்டாக இருக்கிறாய் என்று விசாரிப்பதில்லை. நேர்மாறாக அங்கு ஒல்லியாய் இருப்பவர்கள் பார்த்தால் தான் “ஏன் சவலையாய் இருக்கிறாய்” என வருத்தத்தோடு விசாரிப்பார்கள். தனிப்பட்ட அனுபவத்தில் நான் கிராமங்களில் பலர் உடம்பை ஏற்ற பெரும் முயற்சிகளை செய்வதைத் தான் அதிகம் பார்த்திருக்கிறேன். ஆக பருமன் குறித்த விசனிப்புகள் ஒரு நகர்மய பண்பாட்டு மனநிலை தான். மேற்கில் இது குறித்த ஆய்வுகள் செய்த சாண்டர் கில்மன் (Fat Boys: A Slim Bookஇவரது நூல்) இது இன்று ஒரு ஒழுக்கப் போராக மீடியா மற்றும் மேற்தட்டினரால் பிறர் மீது பிரயோகிக்கப்படுவதாக கூறுகிறார். பிற கலாச்சார ஆய்வாளர்கள் ஹிட்லரின் இனதூய்மைவாதம், மத்திய, பின்மத்திய ஐரோப்பாவில் சூனியக்காரிகளை வேட்டையாடும் போர்வையில் மாற்று மதக்காரர்களை கம்பத்தில் கட்டி வைத்து கொளுத்தப்பட்டது, 50 மற்றும் 60களில் அமெரிக்காவில் கம்யூனிஸ்டுகள் மீது போலியான பீதி கிளப்பப்பட்டு பல அப்பாவிகள் கொல்லப்பட்டது (மெக்கார்த்தியிசம்) ஆகியவற்றின் ஒரு தொடர்ச்சி இப்போதைய பருமன் தீண்டாமை என்கிறார்கள். நவீன காலத்தில் உணவின் அபரித உற்பத்தி, துரித உணவுகளின் அவேசமான சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் கலாச்சாரம் காரணமாய் நகர்மய சமூகத்துக்கு உணவு சார்ந்த ஒரு குற்றவுணர்வு ஏற்படுகிறது. மனிதனுக்கு என்றுமே தன் உடலை மகிழ்விப்பது, பெருக்குவது சார்ந்த குற்றவுணர்வும் உண்டு. ஊன்வெறுத்தல் என்பது காலங்காலமாக மதங்கள் நம் ஆழ்மனதில் உருவாக்கின ஒரு ஆன்மீக வடு. நாம் இதில் இருந்து என்றுமே மீளப் போவதில்லை. இந்த உளவியல் வடுவினால் தான் நாம் பருமனான உடல் எனும் படிமத்தின் மீது மிகுந்த வெறுப்பு கொள்கிறோம்.

இன்னொரு பக்கம் நவீனமயமாக்கலால் அநேகமான உணவுகளை அடைதல் அனைத்து தரப்பினருக்கும் சாத்தியமாவதால் மேல்தட்டினருக்கு படிநிலையை தக்க வைப்பதில் சிக்கல் வருகிறது. ஒரு எளிய நபர் கூட நாற்பது ரூபாவுக்குள் பிரைட் ரைஸோ, பிட்ஸாவோ புசிக்கலாம். அனைத்து உணவுகளுக்கும் மலிவான வகைகள் இன்று கிடைப்பதால் மேல்தட்டினர் எளிய உணவுகளின் அளவு மற்றும் கொழுப்பு சதவீதத்தை அதிகப்படுத்தி கூடிய விலைகளில் வாங்க விரும்புகின்றனர். ஐந்து நட்சத்திர ஓட்டலில் அமர்ந்து சப்பாத்தி குருமாவை 400 ரூபாய்க்கு வாங்கி புசிக்கிறார்கள்.

என் மேலதிகாரி ஒரு முறை தன் வீட்டு வேலைக்காரியின் உணவுப் பழக்கத்தை கண்டித்து திருத்தியதை பற்றி ஒரு கதை சொன்னார். மேலதிகாரி வீட்டில் அவ்வப்போது மேகி நூடுல்ஸ் செய்து உண்ணுவதை பார்த்து அறிந்த வேலைக்காரியும் அதே போல் தன் குழந்தைக்கும் வாங்கி தினசரி தர துவங்கினார். இதை ஒருநாள் அறிய நேர்ந்த மேலதிகாரி நூடுல்ஸ் உடல்நலத்துக்கு கேடானது, அதை புசிக்கக் கூடாது என தன் வேலைக்காரிக்கு நீண்ட அறிவுரை ஒன்று தந்தாராம். எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. நூடுல்ஸ் அவர் சாப்பிட்டால் மட்டும் பிரச்சனை இல்லை, வேலைக்காரி உண்டால் மட்டும் உடல்நலக்கேடா? பிரச்சனை நூடுல்ஸ் போன்ற உயர்தர உணவுகள் இன்று மலிவாகி விட்டதும் அதை இன்று தன் வேலைக்காரி தனக்கு இணையாக புசிப்பதும் அவருக்கு ஒரு அந்தஸ்து பதற்றத்தை ஏற்படுத்தி விட்டது தான்.

இன்னொரு புறம் கீழ்தட்டினர் கடந்து வந்து விட்ட நாட்டுப்புற அரிய உணவுகளை பணக்காரர்கள் அதிக விலைக்கு வாங்கி உண்கின்றனர். இல்லாவிட்டால் முன்னர் கீழ்த்தட்டு மக்கள் வறுமையால் உண்ண நேர்ந்த பத்திய உணவை கூட சமைக்காத காய் கறிகளுடன் சேர்த்து அதிக விலைக்கு வாங்கி சாப்பிடுகிறார்கள். அதிதீவிர நிலைக்கு போய் சிலர் பட்டினி கிடக்கிறார்கள், வெறும் காய்கறி மற்றும் பழச்சாறு மட்டும் அருந்துகிறார்கள். இன்று உணவை குறைவாக சுவையின்றி அருந்துவது மேற்கத்திய ஸ்டைலாகி விட அதிக கொழுப்பும் இனிப்பும் மிக்க உணவை கவலையின்றி சாப்பிடுவது மத்திய கீழ்மத்திய பாங்காகி வருகிறது. ஒரு புறம் குற்றவுணர்வு மற்றொரு புறம் அந்தஸ்தை தக்க வைக்கும் விருப்பம் ஆரோக்கிய உணவை நோக்கி மேற்தட்டினரை இட்டு செல்கிறது. இன்று மிக விலையுயர்ந்த உணவு ஆரோக்கிய உணவு தான்.

இந்த உணவு சார்ந்த அந்தஸ்து சிக்கலை “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தில் ஒரு காட்சியில் கையாண்டிருப்பார்கள். நாயகி ஹன்சிக்கா பருமனானவர். அவரை பெண் பார்க்க வரும் உயர்தட்டை சேர்ந்த இளைஞர் ஒரு உணவகத்தில் வைத்து அவரது BMI ஐ கணக்கிட்டு அதிர்ந்து போய் “ரெண்டு பிளேட் பிரியாணி சாப்பிடுறியா?” என கேலி செய்து நிராகரிப்பார். ஆனால் நாயகன் மத்திய வர்க்கத்தை சேர்ந்தவர். ஆனால் கீழ் வர்க்க “கலீஜ்” பண்பாட்டை சேர்ந்தவர். அதனாலே அவருக்கு ஹன்சிக்காவின் “சின்னத்தம்பி குஷ்பு மாதிரியான தளதளவென்ற” பருமனான உடல் பிடித்துப் போகும். உடல் பருமன் வர்க்க அடிப்படையிலானது என்ற புரிதலை இயக்குநர் பதிவு செய்திருப்பார். அதேவேளை இன்று ஒல்லியான பெண்களுக்கே மவுசு என்பதாலும் சமூக மேல்நிலையாக்கத்துக்கு பருமன் எதிரியாக கருதப்படுவதாலும் ஹன்ஸிகாவின் பருமன் பற்றின மெல்லிய கேலியை படம் முழுக்க ஒலிக்க வைத்து சமரசம் செய்திருப்பார். ஒரு வெகுஜன இயக்குநருக்கு ஒரு எடை அதிகமான பெண்ணை அழகியல் ரீதியாக திரையில் நிறுவ குஷ்புவைத் தொட்டு கோடிழுத்து என்னவெல்லாம் அரசியல் செய்ய வேண்டி வருகிறது பாருங்கள். அந்தளவுக்கு உடல் எடை குறித்த மக்களிடையே மனநோய் பரவியிருக்கிறது.

கில்மன் தனது நூலில் முன்பு ஐரோப்பாவில் குண்டாயிருப்பது எப்படி மேற்தட்டினரின் அடையாளமாக இருந்தது என்று சொல்கிறார். மன்னர் பதிநானாவது லூயிஸ் தன் உடலைச் சுற்றி பஞ்சுப் பொதியை சுற்றி தன்னை குண்டாக காட்டிக் கொண்டார். அது மட்டுமல்ல அன்று குண்டானவர்கள் பாலியல் திறன் மிக்கவர்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஷேக்ஸ்பியரின் பால்ஸ்டாப் கதாபாத்திரம் ஒரு நல்ல உதாரணம். ஷேக்ஸ்பியர் தனது ஜூலியஸ் ஸீஸர் நாடகத்தில் குண்டானவர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொழில்மயமாக்கலும் அதனாலான உணவுப்பெருக்கமும் நிலைமையை தலைகீழாக்கியது. கீழ்த்தட்டினர் அதிக குண்டாக பருமன் ஆற்றலின்மையின் மலடுத்தன்மையின் குறியீடானது.

இன்று தன்னை மேற்தட்டாக காட்ட விரும்பும் பெண்கள் ஒல்லியாக முயற்சிக்கிறார்கள். அமெரிக்காவில் கறுப்பின மற்றும் மெக்ஸிக்க பெண்களை ஒடுக்குவதற்கு மீடியா இந்த உடல் பருமன் என்கிற விழுமியத்தை திணிப்பதாக சொல்கிறார் தனது Revolting Bodies எனும் நூலில் லெ பெஸ்கோ எனும் ஆய்வாளர். இன்று டயட் உணவு உற்பத்தியாளர்கள் அதிகமாக கண்வைப்பது இத்தகைய சிறுபான்மையினரைத் தான். அங்கு தேசிய இதய, நுரையீரல் மற்றும் ரத்த நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தி சொன்னது கறுப்பினப் பெண்கள் பருமனாக இருப்பதை நேர்மறையாகப் பார்ப்பதாகவும் இதனாலே அவர்களை ஒல்லியாக்கும் முயற்சிகள் வெற்றி அடைவது மிக சிரமம் என்றும். ஒருவர் தான் அழகானபடி குண்டாக இருப்பதாக நம்பினால் என்ன தவறு? அவரை ஏன் சிரமப்பட்டு “பண்படுத்த” வேண்டும். இதை ஒட்டி இன்னொரு கேள்விக்கு வருவோம்: பருமனாய் இருப்பதனால் நோய் வருமா?

இது வெறும் தொன்மம் என்கிறார்கள் சமகால ஆய்வாளர்கள். உதாரணமாக அமெரிக்காவில் உள்ள டாலாஸில் உள்ள கூப்பர் நிறுவனம் நடத்திய ஆய்வில் ஒருவர் சரியான BMI வைத்திருப்பதால், ஒல்லியாக இருப்பதால் அவர் ஆரோக்கியமானவர்கள் என்று பொருளில்லை என நிறுவியுள்ளது. சுருக்கமாக உடல் எடையை ஆரோக்கியத்துக்கான அளவுகோலாக கருதுவது ஒரு நவீன தொன்மம் மட்டுமே. ஆனால் ஆண்டாண்டு காலமாய் இதையே பேசி வந்துள்ள மருத்துவர்களும் மரபார்ந்த ஆய்வாளர்களையும் இந்த உண்மையை ஏற்க தயங்குகின்றனர். மேலும் அதை ஏற்றால் இன்று மருத்துவ உலகமும், டயட் உணவு நிறுனங்களும் தாம் இதுவரை செய்த கருத்தியல் முதலீடான நோயாளிகளை பூச்சாண்டி காட்டலை வைத்து அறுவடை செய்ய முடியாது.

டயட் வேதாந்திகள் மற்றும் மீடியாவின் உணவுப்பிரச்சாரம் இன்று நம்மை அந்தளவுக்கு குழப்பி வருகிறது. மது அருந்தினால் இதயத்துக்கு நல்லது என வலியுறுத்தும் ஆய்வுகள் உண்டு. மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு எனும் அரசு பிரச்சாரமும் உண்டு. இதே உள்முரணை நாம் வெண்ணெய்க் கட்டி, காப்பித் தூள், கோதுமை, கொக்கோவா என பல விசயங்களில் நாம் பார்க்கலாம். கொக்கோவாவில் பிளேவனாயிடுகள் உள்ளதால் இது இதய நலத்துக்கும் நீரிழிவை குறைப்பதற்கும் மிக நல்லது என பல ஆய்வுகள் சொல்லுகின்றன. ஆனால் கொக்கோவாவை நாம் சாக்லேட்டுகள் வழியாகத் தான் பிரதானமாக உட்கொள்ளுகிறோம். இந்த சாக்லேட் இனிப்புகள் கொழுப்பு மற்றும் இனிப்பு அதிகமானவை. ஆக கொக்கோவாவை தொடர்ந்து உட்கொள்ளும் போது இதய நோய் மற்றும் நீரிழிவை வரவழைக்கும் வேலையைத் தான் அதிகம் செய்கிறோம். எண்ணெய் உடலுக்கு மிகவும் கேடு என்ற தொடர் மருத்துவ பிரச்சாரம் எண்ணெய் நிறுவனங்களை அச்சுறுத்தி உள்ளது. அதனால் இந்நிறுவனங்கள் தினமும் நான்கு ஸ்பூன் எண்ணெய் உடலுக்கு நல்லது என விளம்பரம் செய்ய ஆரம்பித்து உள்ளன. இதன் பொருள் நாம் சுத்தமாக உணவுகளில் தவிர்த்து விட்டு நான்கு ஸ்பூன் எண்ணெயை தினமும் குடிக்க வேண்டும் என்பதா அல்லது சமையலில் அளந்து நான்கே ஸ்பூன்களை பயன்படுத்த வேண்டும் என்பதா? நமக்கு உடலுக்கு தேவையான கொழுப்புச் சத்து முந்திரி, கடலை, பாதாம் ஆகியவற்றில் இருந்து இயல்பாகவே கிடைக்கிறது என்கிறது அறிவியல். ஆக நாம் வெளியே இருந்து தனியாக எண்ணெய் உட்கொள்ளுவதற்கான அவசியங்கள் ஏதும் இல்லை. அதேவேளை பொரித்த உணவுகளால் நாம் ஒரேயடியாய் இறந்து விடப் போவதும் இல்லை.

நம்மை இன்று அச்சுறுத்தக் கூடிய அநேக நோய்கள் பாரம்பரியமானவை. பருமனும் உள்ளிட்டு. உடம்பில் மெட்டொபொலிசம் குறைவாக உள்ளவர்கள் சாதாரணமாக சாப்பிட்டாலே குண்டாவார்கள். இவர்களை ஒல்லியாக்கிறோம் பேர்வழி என்று விரதமிருக்க வைத்து ஏகத்துக்கு உடற்பயிற்சி செய்ய வைத்து அதிரடியாய் 15 கிலோ குறைத்தால் கூட விரைவில் திரும்ப ஏறி விடும். அப்படி இழந்த எடை திரும்ப போடுவது தான் உடலுக்கு அதிக ஆபத்தானது. உண்மையில் ஒருவர் பருமனாயிருப்பதில் ஆபத்தில்லை. அவர் தன்னளவில் தன்னை சுறுசுறுப்பாக வலுவாக வைத்துக் கொண்டால் போதும். இன்னொரு விசயம் தினசரி உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்தாக இருக்கும் பல பேருக்கு கூட இதயநோய் வருகிறது என ஆய்வுகள் நிரூபித்து உள்ளன. அதாவது ஒல்லியாக அல்லது கட்டுறுதியாக இருப்பதால் ஒருவருக்கு நீரிழிவோ மாரடைப்போ வராது என எந்த உறுதியும் இல்லை. தொடர்ந்து ஆரோக்கியமான வாழ்வு வாழ்பவர்கள் நீண்ட நாள் வாழ்வார்கள் என இதுவரை நிரூபிக்கப்பட்டதும் இல்லை. மாறாக உடற்பயிற்சியே செய்யாமல் தினசரி குடித்து கொழுப்பு இனிப்பு மிகுந்த உணவுகளை உண்டும் வாழ்ந்த எத்தனையோ பேர் எண்பது நூறு வயது வரை எந்த மெட்டொபொலிக்கல் பிரச்சனையும் இன்றி வாழ்ந்ததை நாம் அன்றாட வாழ்விலே பார்த்திருக்கிறோம். பிரபல உயிரியல் எழுத்தாளர் டெஸ்மண்ட் மோரிஸ் ஒரு கட்டுரையில் தனது அம்மா எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி தன்னிச்சையாக உணவு உண்டு 99 வயது வரை வாழ்ந்ததை குறிப்பிடுகிறார். “நமக்குப் பிடிக்கிற உணவுகளே சரியான உணவுகள்” என்பது அவரது அம்மாவின் தத்துவம். இதனடிப்படையில் மோரிஸ் நமது நவீன வாழ்வின் உணவுக் குழப்பத்தை அலசுகிறார்.

நமது பிரச்சனை நாம் பிரக்ஞைபூர்வமாக உண்ணத் துவங்கி விட்டோம் என்பதே என்கிறார் டெஸ்மண்ட் மோரிஸ். எந்த உணவை எடுத்தாலும் இது நமக்கு நல்லதா என மூளையால் அலசுகிறோம். பதற்றப்படுகிறோம். பதற்றப்படும் போது இயல்பாகவே நமது இதயத்துடிப்பு எகிறுகிறது. பஞ்சம் மற்றும் பிற ஆபத்துக்கள் வருகின்றன என உடல் குழம்புகிறது. அதனால் அது நாம் உண்ணும் பத்திய உணவை கூட முழுமையாக செரித்து உறிஞ்சாமல் அதில் உள்ள கொழுப்பை செலவழிக்காது எதிர்காலத்துக்காக சேகரிக்க தலைப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஏற்றுகிறது. மேலும் இதே காரணத்தினால் விரதம் இருப்பவர்களுக்கு அதிகமாக உண்ணும் தூண்டுதல் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. விளைவாக குறைவாக உண்ண வேண்டுமே என்ற எண்ணமே ஒருவரை அதிகமாக உண்ண வைக்கிறது. இந்த உணவினால் எனக்கு நோய் ஏற்படுமோ என்று கலக்கத்துடன் உண்பவர்களுக்கு எளிதில் உடல் பருக்கிறது. நமது உண்மையான பிரச்சனை உணவில் உள்ள கொழுப்பும் இனிப்பும் அல்ல. அது மருத்துவர்களும் உணவு நிறுவனங்களும் சேர்ந்து உருவாக்கிய போலியான பீதியும் தொன்மங்களும் தான்.

இந்த உடல்நலம் குறித்த தொன்மங்கள் நமக்கு பண்பாட்டு ரீதியான தாக்குதல்களை தனிநபர்கள் மற்றும் குழுக்கள் மீது தொடுக்கவே அநேகமாக பயன்படுகிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வேலையிடங்களிலும் திருமண சந்தர்பங்களிலும் பருமனானவர்கள் கேலி செய்யபட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். ஒருகாலத்தில் குண்டாவது எப்படி என்று அறிவுரை தந்தவர்கள் இன்று இலவசமாக எடைகுறைப்பது பற்றி அறிவுரைகளால் நம்மை உளவியல் வதை செய்கிறார்கள். எடை பற்றின எளிமைப்படுத்தல் நமக்கு தந்திரமான ஒரு தாக்குதல் முறையாகவே பயன்படுகிறது.

சமீபமாக இந்திய சுழலர் அஷ்வின் குறித்து கிரிக்கெட் விமர்சகர் மஞ்சிரேக்கர் ஒரு விமர்சனம் வைத்தார். அவர் மிகத்திறமையானவர். அடுத்த இந்திய நட்சத்திரம் அவர் தான் என்று புகழ்ந்து விட்டு, அதற்கு அவர் தன் எடையை குறைத்து உடலை வலுப்படுத்த வேண்டும் என்று ஒரு மர்ம அடி கொடுக்கிறார். கிரிக்கெட்டில் எத்தனையோ குண்டான வீரர்கள் வெற்றிகரமாக இயங்கி இருக்கிறார்கள். அஷ்வினாக தன்னை கடுமையாக ஜிம்மில் வருத்திக் கொண்டாலும் அவர் உமேஷ் யாதவ் போல் ஆகப் போவதில்லை. ஏனென்றால் அஷ்வினின் உடல்வாகு அப்படி. அவரது மெட்டொபொலிஸம் அளவு குறைவானது. கொஞ்சமாக உண்டாலே அவருக்கு அதிக எடை போடும். இதனால் அவருக்கு ஓரளவு தன் எடையை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். கட்டுறுதியான உடலைப் பெறுவது அவரைப் போன்ற மரபணு கொண்டவர்களுக்கு வெறும் கனவு தான். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு அது தேவையும் இல்லை. தனது உடலின் எல்லை என்ன என்று அவர் அறிந்து கொண்டு போதுமான அளவுக்கு அவர் முயன்றால் போதும். அவரால் பெரும் சாதனைகள் செய்ய முடியும். இதே உடல்பருமன் பிரச்சனை இருந்தும் இன்சமாம் தனது அத்தனை குறைபாடுகளையும் கடந்து பெரும் உயரங்களைத் தொடவில்லையா! ஒருவர் தன் இயல்பை அறிந்து அதன் வழி முன்னேறுவதே சாத்தியம் மற்றும் உசிதம். மஞ்சிரேக்கர் போன்று அஷ்வினின் உடல்குறித்த விமர்சனங்களை வைப்பவர்கள் அவரை இன்னொரு ஆளாக மாற்ற முயல்கிறார்கள். இது ஒரு மனிதனின் தனி-அடையாளத்தை மறுக்கும் வன்முறை. இனவாத தூய்மைப்படுத்துதலுக்கு நிகரானது.

டெஸ்மண்ட் மோரிஸ் ஒரு தீர்வை முன்வைக்கிறார். மனிதன் தன் உடலின் உள்குரலை கேட்க கற்க வேண்டும். உடலுக்கு என்ன தேவை என்பதை நம் வாசனையையும் சுவையும் அறியும் திறன்களே சொல்லும். சராசரி மனிதர்கள் அதன்படி வாழ்ந்தாலே நீண்ட ஆயுள் இருக்கலாம். நீரிழிவு போன்ற நோயுள்ளவர்கள் தம் உடலுக்கு எந்த வகை உணவு சரியானது என அறிய வேண்டும். இது ஆளாளுக்கு மாறுபடும். மற்றபடி சரியான மருந்துகள் உட்கொள்ள வேண்டும். தன் உடலை வாழ்வை கட்டுப்படுத்தும் மிகையான விழைவை முதலில் கைவிட வேண்டும். உடற்பயிற்சி நமக்கு மிகுதியான ஆற்றலையும் உடலுக்கு வலுவையும் நெகிழ்வுத்தன்மையும் தரும். தேவை என்றால் செய்து கொள்ளலாம். ஆனால் தினமும் நடைபழகி அருகம் புல் ஜூஸ் குடித்தால் நூறு வயது வாழலாம் என நம்புவது Seventh Day Methodist கிறித்துவர்கள் இதோ அதோ உலகம் அழியப்போகிறது, அப்போது நாங்கள் மட்டும் சொர்க்கத்தில் குலாவுவோம் பாவிகள் நீங்கள் அழிவீர்கள் என்று கற்பனை தீர்ப்புகள் எழுதுவதைப் போன்றது.
நீண்ட ஆயுள்மருத்துவ அறிவியல்சொர்க்கம்கடவுள் ஆகியன ஒரு விநோதமான புள்ளியில் இணைகின்றன. அது எதிர்கால நிலைப்பு எனும் கற்பனை பீதி. அறிவியலும் மதமும் ஒன்றை ஒன்று எதிர்ப்பது போல் நடித்து அதே நாடகத்தை தான் இந்நாள் வரை அரங்கேற்றி வருகின்றன.

(டிசம்பர் மாத உயிர்மையில் வெளிவந்த கட்டுரை)


Read More

Thursday 20 December 2012

மூப்பனாரும் இன்றைய தலைமுறையும்





தால்ஸ்தாய் எப்படி தன் பண்ணைகளில் வேலை பார்த்த நூற்றுக்கணக்கான அடிமைகளை விடுவித்தார் என்பதைப் பற்றி வகுப்பில் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஜி.கெ.மூப்பனாரை, அவருக்கு சொந்தமாக கிராமங்களே இருந்ததை, குறிப்பிட்டேன்.
எந்த சலனமும் இல்லை. ஒருவேளை ஜி.கெ மூப்பனாரை தெரியவில்லையோ என பழைய காங்கிரஸ் தலைவர், தமிழ்மாநில காங்கிரஸை உருவாக்கினாரே என்றெல்லாம் நினைவை தட்டியெழுப்ப பார்த்தேன். ம்ஹும். தமக்கு அவரை தெரியவே தெரியாது என்று விட்டார்கள். அப்போது தான் எனக்கு உறைத்தது.
ஜி.கெ மூப்பனார் இறக்கும் போது இந்த மாணவர்களுக்கு பத்து வயதிருக்கும். அதனால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். ஆனாலும் ஒரு மூத்த தலைவர் எவ்வளவு சீக்கிரம் ஒரு தலைமுறையின் நினைவிலிருந்தே இல்லாமல் போகிறார் என நினைத்துக் கொண்டேன். இருந்தாலும் இந்த மாணவர்கள் பரவாயில்லை. மூன்று வருடங்களுக்கு முன் ஒரு வகுப்பில் ஒருவருக்கு கூட தந்தைப் பெரியாரைத் தெரிந்திருக்கவில்லை. நமது ஊடகங்களும் எழுத்தாளர்களும் இவ்வளவு அரசியல் பேசி என்ன பிரயோஜனம் எனப் புரியவில்லை. இவர்கள் நாளை வாக்களிக்கும் போது எப்படி சிந்தித்து முடிவெடுப்பார்கள் என இப்போது நினைக்கவே பீதியாக இருக்கிறது.
வரலாற்று மறதி நமது மிகப்பெரிய அவலம்.
Read More

Friday 14 December 2012

அஷ்வின் ஒரே நாளில் எப்படி மட்டமான சுழல் வீச்சாளர் ஆனார்?




ரவிச்சந்திரன் அஷ்வினின் கிரிக்கெட் வாழ்வு இரண்டே வாரங்களில் தலைகீழாய் சரிந்து விட்டது. எங்கிருந்தோ வந்து உலகை வெற்றி கண்ட ஒரு இளம் சுழலர் மீண்டு வந்த இடத்திலேயே சென்று நிற்கிறார். கடந்த ஆஸ்திரேலிய பயணம் மற்றும் தற்போதைய இங்கிலாந்து டெஸ்டு தொடர்களில் அஷ்வினால் அதிக விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல அவரை ஆடுவது எதிரணியினருக்கு அநியாயத்துக்கு சுலபமாகி உள்ளது.
நூற்றுக்கணக்கான ஓட்டங்களை கொடுத்து ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்துவதே அவரை மூச்சு வாங்க வைக்கிறது. இரண்டு விசயங்கள் இந்த விக்கெட் வறட்சியை இன்னும் கசப்பானதாக்குகின்றன.
ஒன்று ஆஸ்திரேலிய தொடருக்கும் இங்கிலாந்து தொடருக்கும் இடையே மே.இ தீவுகள் மற்றும் நியுசீலாந்துக்கு எதிராக அஷ்வின் மிக ஆபத்தான வீச்சாளராக தோன்றினார். ஆனால் ஆஸி மற்றும் ஆங்கிலேய மட்டையாளர்களை எதிரிடுகையில் அவர் முற்றிலும் மாறுபட்ட அல்லது குறைபட்ட சுழலராக தோன்றுகிறார். வெளிப்படையாகவே இதிலிருந்து பார்வையாளர்கள் பெறும் செய்தி அஷ்வினால் தரமான மட்டையாளர்களை வீழ்த்த முடியாது; மே.இ தீவுகள் மற்றும் நியுசிலாந்தினரின் தரமின்மையே அஷ்வினின் மிகையாக உயர்த்திக் காட்டியது என்பது. இந்த அவதானிப்பில் ஓரளவு உண்மை உள்ளது.
முதலில், ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து மட்டையாளர்கள் சரளமாக இயல்பாக சுழல்பந்தை ஆடுபவர்கள் அல்ல. ஆனால் அவர்களால் அஷ்வினை திட்டவட்டமான முறையில் எதிர்கொண்டு சமாளிக்க மட்டுமல்ல அவரை குழப்பவும் மனதளவில் முறியடிக்கவும் முடிந்தது. நியுசிலாந்துத் தொடரில் அஷ்வினுக்கு பல மலிவான விக்கெட்டுகள் கிடைத்தன. நியுசிலாந்தினரால் அதிக நேரம் மனம் குவித்து ஆடவோ பொறுமை காக்கவோ முடியவில்லை. ஆனால் இங்கிலாந்து இங்கு வந்து மட்டையாடத் துவங்கிய போது அலிஸ்டர் குக், பீட்டர்ஸன், பிரையர் போன்ற மட்டையாளர்கள் அவரை வெவ்வேறு விதங்களில் வெற்றிகரமாக கையாண்டனர். அவர்கள் விக்கெட்டை சுலபமாக தரவில்லை என்பது மட்டுமல்ல, அஷ்வினுக்கு வசதியான முறையில் தொடர்ந்து வீசவும் அனுமதிக்கவில்லை. அவரது ஒவ்வொரு அஸ்திரமாக பறித்தெடுத்து முறித்தனர். அவர் பெரியவர்களின் விளையாட்டில் நுழைந்த குழந்தை போல் முழிக்கத் தொடங்கினார். அதெப்படி ஒரு சுழலரின் அத்தனை தந்திரங்களும் ஒரே நாளில் உதவாமல் போக முடியும்?
அதற்குக் காரணம் அஷ்வின் சம்பிரதாயமான சுழலர் அல்ல என்பதே. பொதுவாக இந்தியாவில் இவ்வளவு உயரமான சுழலர்களை காண இயலாது. நடுத்தர உயரம் தான் பந்தை மட்டையாளனின் கண் அளவுக்கு மேலே மிதக்க விட நல்லது. ஆனால் உயரத்தில் இருந்து வீசும் போது பந்துக்கு நல்ல துள்ளல் கிடைக்கும். தமிழக அணியில் அறிமுகமாகிய புதிதில் அஷ்வின் இவ்வாறு தன துள்ளலின் மூலமாகத் தான் ஷாட் லெட், சில்லி பாயிண்ட் பகுதிகளில் காட்ச் பெற்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் அவர் மெல்ல மெல்ல தன் ஆட்டத்தில் நுட்பங்களை சேர்க்கத் துவங்கினார். ஆனால் அஷ்வினின் பந்து வீச்சில் நாம் ஹர்பஜனிடம் பார்க்கும் லூப் எனப்படும் பந்தின் மிதப்பை காண முடியாது. ஹர்பஜன் பந்தை சில நொடிகள் உபரியாக காற்றில் நிற்க வைப்பார். விளையாக பந்து உள்ளே வருவது போல தோன்றி சட்டென்று வெளியே போகும். 2001இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டு தொடரில் இவ்வாறு தான் அவர் மட்டையாளர்களை திணறடித்தார். தற்போது இங்கிலாந்து சுழலர் கிரேம் ஸ்வானிடம் ஒருவித driftஐ காண முடிகிறது. வித்தியாசம் இந்த drift காற்றின் திசையை நம்பி உள்ளது என்பது. இங்கிலாந்தில் வீசும் வலுத்த காற்றும் ஸ்வான் பொதுவாக பந்துக்கு தரும் அபரிதமான சுழற்சிகளும் இதற்கு உதவுகின்றன.
ஆனால் இப்படியான மாயங்களை அஷ்வினிடம் எதிர்பார்க்க இயலாது. அவர் ஒரு நடைமுறைவாத தந்திரமான சுழலர். நடு மற்றும் கால் குச்சிகளை நோக்கி பந்தை நேராக வீசுவதே அவர் பாணி. அவர் பொதுவாக இரண்டு விதங்களில் விக்கெட் வீழ்த்துவார். பந்தை பிளைட் செய்து நல்ல நீளத்தில் வீசி மட்டையாளனை அடித்தாட செய்து வீழ்த்துவார். இந்த இங்கிலாந்து தொடரில் மட்டையாளர்கள் அவ்வாறு அவரது பொறியில் எளிதில் விழவில்லை. அவர்கள் அஷ்வினை பெரும்பாலும் ஸ்வீப் செய்தார்கள். அவர் நேராக வீசுவதன் மூலம் பல எல்.பி.டபிள்யோக்களை முன்னர் பெற்றிருக்கிறார். ஆனால் இங்கிலாந்தின் குக்கும் பிரையரும் அதற்கு அனுமதிக்காமல் அவ்வளவு முழுமையாக சுத்தபத்தமாக ஸ்வீப் செய்தார்கள். சரி, ஆப் குச்சிக்கு வெளியே வீசலாம் என அஷ்வின் முயலும் போதெல்லாம் கடுமையாக வெட்டி ஆடினார்கள். இவ்விசயத்தை இங்கிலாந்தினர் மிக தெளிவாக திட்டமிட்டே செய்தார்கள். பொதுவாக பிற அணிகள் அஷ்வினை எப்படி கையாள்வது, தடுத்தாடுவது, ஒற்றை ஓட்டங்கள் எடுப்பது என வியந்த போது குக் வேறொரு திட்டம் வைத்திருந்தார். அவர் அஷ்வினின் பந்தை ஒற்றை ஓட்டங்களை எடுக்க பிரயத்தினிக்க்கவில்லை. அவர் தன்னை விரட்டி அடிக்க தூண்டும் பந்துகளை குக் தடுத்தாடினார். ஏனென்றால் அஷ்வின் பந்தின் நீளம், வேகம் மற்றும் திசையை தொடர்ந்து மாற்றுவதால் அவரை மட்டைக்கு குறுக்கே போய் ஒற்றை ஓட்டம் எடுக்க முயல்பவர்கள் வெளியேற சாத்தியங்கள் அதிகம். அதனால் குக் அஷ்வினின் பொறுமையோடு விளையாடினார். அவர் பந்தை எக்ஸ்டுரா கவர் பகுதிக்கு அடிக்காததால் பொறுமை இழந்த அஷ்வின் பந்தை கொஞ்சம் குறை நீளத்தில் வெளியே வீசுவார். அதற்காகவென காத்திருக்கும் குக் அவரை வெட்டி நாலு அடிப்பார். குக்கின் பெரும் சிறப்பு என்னவென்றால் அவர் பிற அணி மட்டையாளர்களை போலன்றி வெட்டி அடிப்பதற்கான ஒரு வாய்ப்பை கூட தவற விடவில்லை. போனமுறை இங்கிலாந்து இங்கே வந்த போது அவர்களது அப்போதைய தலைவரான அண்டுரூ ஸ்டுராஸ் இதே போன்று தொடர்ந்து square மற்றும் point பகுதிகளில் பந்தை இடைவிடாது வெட்டி நாலு அடித்து மட்டுமே சென்னையில் இரட்டை சதம் அடித்தார். குக்கும் இதே பாணியை பிற்பற்றினார். அப்போது ஹர்பஜன் என்றால் இம்முறை இலக்கானது அஷ்வின். ஆனால் ஸ்டுராஸின் பாணியில் இருந்து குக் ஒரு முக்கியமான விதத்தில் மாறுபட்டார்.
அகமதாபாதில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் குக்கை அஷ்வின் ஒருவழியாய் பந்தை விரட்ட வைத்து ஸ்லிப்பில் பிடிக்க வைத்து வெளியேற்றினார். இதனால் குக் இரண்டாம் இன்னிங்ஸில் அஷ்வின் பந்தை வெளியே சுழற்றி வீசிய போது அற்புதமாக இரண்ரொரு முறை கவர் பகுதியில் விரட்டி நாலு அடித்தார். இந்த நாலுகள் அஷ்வினை குழப்பவும் தளர்த்தவும் செய்தன. ஏனென்றால் குக் பொதுவாக ஆப் பகுதியில் பந்தை விரட்டவே மாட்டார். அது அவரது வலிமை அல்ல. அது அவரது பலவீனம். ஆனால் எப்படி கடந்த நியுசிலாந்து பயணத்தொடரில் தன் மீது வீசப்படும் உயரப்பந்துகளை எதிர்கொள்ள சேவாக் பந்துகளை புல் செய்து ஆறுகள் அடித்தாரோ அதே போன்றே குக்கும் அஷ்வின் விசயத்தில் நடந்து கொள்கிறார். சேவாக் அத்தொடர் முடிந்ததும் புல் செய்வதை மறந்தே விட்டார். ஏனென்றால் அது அவரது பலவீனம் – ஆனால் எதிரியை வீழ்த்துவதற்கு நாம் பல சமயம் நமது பலவீனங்களை பலமாக மாற்றிக் காட்ட நேரிடும். குக் இந்த அற்புதத்தை தான் நிகழ்த்திக் காட்டினார்.
அத்தோடு அவர் அஷ்வின் பந்தை நேராக விரட்டும் நீளத்தில் வீழ்த்திய போது ஸ்வீப் செய்தார். வலுவான ஸ்வீப். அதன் உக்கிரத்தில் சில்லி பாயிண்டில் நின்ற ரஹானேவின் முதுகில் பட்டு காயம் ஏற்பட்டு விட்டது என்றால் பாருங்களேன். ஏனென்றால் இங்கும் அவரது உத்தேசம் ஒன்று இரண்டு ஓட்டம் எடுப்பதல்ல. அஷ்வினை அந்த குறிப்பிட்ட நீளம் மற்றும் திசையில் வீச விடாமல் செய்வது. அதாவது நாம் பொதுவாக குக்கை ஒரு தடுப்பாட்டக்காரர் என்று கற்பனை செய்தால் அவர் இங்கிலாந்து அணியில் பீட்டர்ஸனுக்கு அடுத்தபடியாக அதிரடியாக ஆடக் கூடியவராக இருக்கிறார் – என்ன கொஞ்சம் பவிசாக, நுணுக்கமாக, மென்மையாக ஒரு அதிரடி.
மேற்சொன்ன இரண்டு ஷாட்கள் காரணமாய் அஷ்வின் குறைநீளத்தில் அல்லது மிக முழு நீளத்தில் குக்குக்கு வீசத் தொடங்கினார். அதுதான் குக்குக்கும் வேண்டும். ஏனென்றால் அவர் பின்காலாட்டத்தில் வித்தகர். அஷ்வினின் முதல் வீழ்ச்சி இங்கிருந்து துவங்கியது. அவர் தொடர்ந்து தன்னை கவர் டிரைவ் செய்ய அனுமதிப்பதன் மூலம்  குக்கை வீழ்த்த முயலவில்லை. ஒருநாள் பந்து வீச்சாளரைப் போல ஓட்டங்களை குறைப்பதே அவரது இலக்காக இருந்தது. அவர் பதற்றப்பட துவங்கினார். ஏனென்றால் குக் மேற்சொன்ன உத்திகளை தொடர்ந்து இரண்டு நாட்கள் மனம் தளராமல் அக்கறை இழக்காமல் உடல் களைக்காமல் பிரயோகித்தபடியே இருந்தார். இப்படியான ஒரு மராத்தான் மனக்குவிப்பை, சுயகட்டுப்பாட்டை ஒரு மட்டையாளரிடம் இருந்து அஷ்வின் இதற்கு முன் பார்த்ததில்லை. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய அஷ்வின் முற்றிலும் வேறொருவராக இருந்தார். இரண்டாம் இன்னிங்ஸில் குக்கின் மராத்தான் சதம் முடிந்த நிலையில் அஷ்வின் தன் தன்னம்பிக்கையை, ஆட்டத்திறனை முற்றிலும் இழந்து விட்டவராகத் தோன்றினார்.
விக்கெட் வீழ்த்துவதில் அஷ்வினின் இரண்டாவது உத்தி மாறுபட்ட பந்துகளான நேர்ப்பந்து, காரம் பந்து ஆகியவற்றை தொடர்ந்து எதிர்பாராத வேளைகளில் வீசுவது. தூஸ்ரா அவருக்கு சரியாக வராது. நடந்து வரும் இங்கிலாந்து தொடரில் அவர் ஒரு கால்சுழல் பந்து கூட வீச முயன்றார்; அது படுகண்றாவியாக வீழ்ந்து என்னை அடி அடி என்று இறைஞ்சியது. மட்டையாளர்கள் வேடிக்கையாக அந்த பந்தை அடித்து துரத்தினார்கள். மெண்டிஸுக்கு அடுத்தபடியாக இவ்வளவு மாறுபட்ட பந்துகளை ஒரே ஓவரில் பயன்படுத்துவது அஷ்வின் தான். அவரது முறை இது: ஒரு பந்தை சம்பிரதாயமான முறையில் உள்ளே சுழலும் படி அனுப்புவார். இரண்டு அல்லது மூன்றாவது பந்து சற்று வேகான நேர்ப் பந்தாக இருக்கும். அப்புறம் மட்டையாளன் அவரை நேராக அல்லது கால் பக்கத்தில் அடிக்காமல் இருக்க ஒரு எச்சரிக்கையாக ஒரு காரம் பந்து. இந்த காரம் பந்து கால் பக்கம் விழுந்து மிடில் குச்சிக்கு சுழன்று துள்ளும். அஷ்வினை ஆடத் துவங்கிய புதிதில் பல எதிரணி வீரர்களுக்கு இந்த முறை தான ஆக சவாலாக இருந்தது. ஏனென்றால் பெரும்பாலான ஆப் சுழலர்கள் உலகம் முழுக்க பந்து ஒரே நீளத்தில் ஒரே திசையில் வீசுவார்கள். ஆனால் அஷ்வின் ஒன்றை உள்ளே, ஒன்றை நேராக மற்றும் இன்னொன்றை நேரெதிர் திசையில் வெளியே போகும்படியும் வீசுகிறார். ஒவ்வொரு பந்தும் வெவேறு வேகம் மற்றும் நீளம். கொஞ்சம் அசந்தால் குச்சிகள் சிதறும் அல்லது எல்.பி.டபிள்யோ முறையில் வெளியே. சற்றே கும்பிளேவை நினைவுபடுத்தும் பாணி வீச்சு இது. அஷ்வினுக்கு இந்தியாவில் உள்ள மெத்தன வேகத்தில் பந்து நின்று எழும் ஆடுதளங்களில் இந்த முறை நிறைய விக்கெட்டுகளை வீழ்த்த கைகொடுத்தது. இங்கிலாந்து வீரர்கள் இந்த முறையை வெற்றி கொள்ளவும் தந்திரம் வகுத்தனர்.
அவர்கள் அஷ்வினின் நேர் வரும் பந்துகளை எப்போதும் தடுத்தாடினர். இப்பந்துக்கு குறுக்கே சென்று எல்.பி.டபிள்யோ ஆகக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள். அவரது சம்பிரதாயமான ஆப்சுழல் பந்து மையக்குச்சியில் விழும் கால்திசைக்கு செல்வது. இதை மட்டும் அதிக ஆபத்தில்லாமல் ஸ்வீப் செய்தார்கள். அஷ்வின் காரம் பந்துகளை இத்தொடரில் மிகவும் குறைநீளத்தில் வீசியதும் அவருக்கு உதவவில்லை. ஏனென்றால் ஸ்வீப் செய்த பின் அவர்கள் அவரை வெட்டி ஆட தயாராக இருந்தனர். அவரது ஒவ்வொரு மாறுபட்ட பந்தையும் முதலில் அவர்கள் அவரது கையில் இருந்தே சரியாக கணித்தார்கள். அதனால் குழப்பம் அதிகம் ஏற்படவில்லை. மேலும் பிரையர் பீட்டர்ஸன் போன்றவர்கள் ரொம்ப முன்னால் வருவது, ஒரேயடியாக பின்னால் போவது போன்ற உத்திகளால் அவருக்கு ரொம்ப நெருக்கடி கொடுத்தனர்.
தனது விக்கெட் வீழ்த்துவதற்கான இரண்டு வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் அஷ்வின் நிஜமாகவே அயர்ந்து போனார். முன்னர் இருபது ஓவர்களுக்கு அநாயசமாக ஐந்து விக்கெட்டுகள் எடுக்கக் கூடியவர் இப்போது ஐம்பது ஓவர்களுக்கு மேல் ஒரு இன்னிங்ஸில் வீசி ஒரு விக்கெட் பெறுவதே பெரிய காரியம் என்றாகியது. தனது பிரதான சுழலரின் இந்த உளவியல் வீழ்ச்சியை தோனி கவனித்திருக்கக் கூடும். அவர் அதனால் மும்பையில் நடந்த இரண்டாம் டெஸ்டில் அஷ்வினின் போட்டியாளரான ஹர்பஜனை அணிக்குள் கொண்டு வந்தார். இந்த புது நெருக்கடியும் தனக்கு அதிஷ்டம் போதவில்லை என்கிற நினைப்பும் அஷ்வினை கடுமையாக விக்கெட் வீழ்த்த பிரயத்தனிக்க வைத்தது.
பொதுவாக கிரிக்கெட்டில் ஒருவர் நினைத்தபடி விக்கெட் வீழ்த்த முடியாது. அதுவும் டெஸ்டில் பொறுமையும் கட்டுப்பாடும் முக்கியம். ஆனால் அஷ்வின் மிகுதியாக முயன்றதனால் அவர் கட்டுப்பாட்டை இழந்து மோசமான பல பந்துகளை எதிரணியினருக்கு பரிசளித்தார். நான் கட்டுரை ஆரம்பத்தில் குறிப்பிட்ட அஷ்வினின் விக்கெட் வறட்சியை இன்னும் கண்டனத்துக்குள்ளாக்கும் இரண்டாவது காரணம் மும்பை டெஸ்டின் ஆடுதளம் சுழலுக்கு அபரிதமாக உதவியது என்பது. இங்கிலாந்தின் இடதுகை சுழலர் தனிமனிதராக இந்திய மட்டையாளர்களை ஊர்வலமாக வெளியேற்ற அஷ்வின் ஓட்டங்களை கட்டுப்படுத்தவே திணறினார்; விக்கெட் எடுப்பதை தற்காலிகமாக மறந்து விட்டவர் போன்று தோன்றினார்.
அஷ்வின் முன்னர் மிக வெற்றிகரமான T20 சுழலராக இருந்த போது அவர் டெஸ்டில் நன்றாக ஆடுவாரா என்கிற அவநம்பிக்கை இருந்தது. T20யில் அவரது முக்கிய வலிமை அதிரடியாக அடிக்கப்படும் போதும் மனம் தளராக கூர்மையாக சாகசமாக வீசுவது. ஆனால் டெஸ்டு போட்டிகள் இவ்வாறாக மட்டையாளர்கள் தாராள மனப்பான்மையுடன் விக்கெட்டுகளை வழங்க மாட்டார்கள்; அஷ்வினுக்கு டெஸ்டுக்கான பொறுமை இல்லை என ஒரு தரப்பினர் அவரை விமர்சித்தனர். மாறாக டெஸ்டு போட்டிகளில் அஷ்வினுக்கு அபாரமான துவக்கம் ஏற்பட்டது. முதல் ஐம்பது விக்கெட்டுகளை அவர் அவ்வளவு சுலபமாக வீழ்த்திய போது ஒரேயடியாக ஹர்பஜனின் ஆட்டவாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என பலரும் கருதினார்கள். ஆனால் இன்று அஷ்வினின் திறனின்மை காரணமாகவே ஹர்பஜன் உள்ளூர் ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகள் எடுக்காமலே இந்திய அணிக்கு திரும்பிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு போதுமான பொறுமை இல்லை என்கிற குற்றச்சாட்டை தானாக நிரூபித்தும் உள்ளார்.
அஷ்வின் தன்னளவில் ஒரு சிறந்த சுழலர் தான். மஞ்சிரேக்கர் உள்ளிட்ட பலரும் கூறுவது போல இந்த ஏமாற்றமளிக்கும் ஆட்டத்தொடர் அனுபவம் அவர் மேலும் முதிர்ச்சியான ஒரு சுழலராக எதிர்காலத்தில் பரிணமிக்க பயன்படலாம். அதேவேளையில் அவருக்கு ஒரு நேர்மையான சுயபரிசீலனையும் தேவை உள்ளது.
அஷ்வின் ஹர்பஜன் அல்லது கும்பிளேவின் தரத்திலான சுழலர் அல்ல. குறைந்த திறன்களை தனது உழைப்பு, மனவலு மற்றும் மன சமநிலை காரணமாக மேம்படுத்தி இந்தியாவின் முதல்நிலை சுழலராக உயர்ந்தவர் அவர். அதே வேளை அவர் பாகிஸ்தானின் அஜ்மல் போன்று அற்புதமான தூஸ்ரா மற்றும் போர்க்குணமும் கொண்டவரல்ல. அவரது மாறுபட்ட பந்துகளை ஊகிப்பதும் தற்போது மட்டையாளர்களுக்கு எளிதாகி வருகிறது. அதனால் முழுக்க தன் மாறுபாட்ட பந்துகளைக் கொண்டு விக்கெட் வீழ்த்தும் பாணியை நம்பியிருப்பதை அவர் கைவிட வேண்டும். அதை அவர் ஒருநாள் போட்டிகளில் செய்யலாம். ஆனால் டெஸ்டு போட்டியில் ஒரே நீளத்தில் திசையில் ஆறுபந்துகளை வீசத் துவங்க வேண்டும். ஒரு திட்டமிட்ட கள அமைப்புக்கு ஏற்றபடி தொடர்ந்து அலுக்காமல் வீசி ஓட்டங்களை வறண்டு போக வைக்க அவர் முயலவேண்டும். தொடர்ந்து கட்டுப்பாடாக வீசினால் விக்கெட்டுகள் தானாகவே விழும் என்பதே உண்மை. அஷ்வினின் முக்கிய பிரச்சனை அவர் விக்கெட்டுகளை வீழ்த்தும் அவசரத்தில் தனக்கான திரைக்கதை ஒன்றை எழுதி அதில் ஏன் எதிரணியினர் நடிக்க மறுக்கிறார்கள் என குழம்புவதும் விசனிப்பதுமே, வாழ்க்கையில் மட்டுமல்ல ஒரு சிக்கலான கிரிக்கெட் போட்டிக்குக் கூட அதற்கான ஒரு போக்கு உள்ளது. அப்போக்குக்கு ஏற்றாற் போல் தன்னை அமைதியுடன் மனக்குவிப்புடன் ஈடுபடுத்த முயலவேண்டும்.
அத்தோடு அவர் தன் ஆட்டத்தை மேலும் எளிமைப்படுத்த வேண்டும். கிரேம் ஸ்வான் உள்ளிட்ட பல முக்கிய பந்து வீச்சாளர்களின் ஆட்டமுறை அடிப்படையில் எளிதானது. அவர்கள் வெற்றி பெறக் காரணம் அந்த எளிய முறையை சலிக்காமல் திரும்பத் திரும்ப பின்பற்றுகிறார்கள் என்பது. கிரிக்கெட்டில் அற்புதங்கள் ஒன்றும் இல்லை. அங்கு ஒருவர் தன்னை மந்திர வித்தைக்காரனாக கருதிக் கொண்டால் முகத்தில் அறையும் ஏமாற்றங்களே கிடைக்கும். சுருக்கமாக பெரும் சக்தி பெற துரியோதனன் பிறந்த மேனியில் தன் அம்மா முன் நின்றது போல் ஆகும்.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates