Wednesday 29 February 2012

இந்தியாவில் ஆல்ரவுண்டர் சாத்தியமா?




இப்போதை மூன்று பேர் இருக்கிறார்கள். பதான், அஷ்வின், மற்றும் ஜடேஜா. ஆனாலும் அணித்தலைமையை பொறுத்தவரையில் இவர்கள் பந்து வீச்சாளர்கள் தாம். ஏனென்றால் நமக்கு அப்படி ஆல்ரவுண்டர்களின் பாரம்பரியம் இருந்ததில்லை. அவர்களின் அணியின் அவசியமான ஒரு பகுதியாக நாம் கருதுவதில்லை. அதனாலேயே கபில் தேவுக்கு பின் நாம் யாரையும் உருவாக்கவில்லை. அகார்க்கரும் ஜோஷியும் ராபின் சிங்கும் அப்படி வந்திருக்க வேண்டியயவர்கள். ஆனால் நாம் அவர்களை உதாசினப்படுத்தினோம்.
முதலில் இந்திய சீதோஷண நிலையில் ஆடுதளங்களில் ஆல்ரவுண்டராக இருப்பது மிக சிரமம். இங்கே பந்து வீசுவது கடின வேலை. மட்டையாடுவது கேளிக்கை. அதனால் கடின உழைப்புக்கு பதிலாக இந்தியர்கள் கேளிக்கையை தேர்கிறார்கள். அதனாலே ஆல்ரவுண்டர் என்ற கருத்தாக்கம் நமக்கு அந்நியமாக உள்ளது.
இவ்விசயத்தில் வரலாறும் முக்கியம்.

இருவகையான ஆல்ரவுண்டர்கள் உண்டு. Batting மற்றும் bowling. இங்கிலாந்து பவுலிங் ஆல்ரவுண்டர்களையும் ஆஸ்திரேலியா மட்டையாட்ட ஆல்ரவுண்டர்களையும் விளையாட வைப்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறார்கள். இயல்ஹம், ஹோலியோக், காலிங்வுட்டில் இருந்து இன்று சமீத் பட்டேல் வரை இத்தகைய வீரர்கள் இங்கிலாந்து அணியில் ஐந்து அல்லது ஆறாவது வரிசையில் ஆடுவார்கள். அவர்களை bits and pieces வீரர்கள் என்பார்கள். அதாவது இரண்டிலும் முழுமையானவர்கள் அல்ல. ஆனால் இத்தகையவர்கள் அணிக்கு ஒரு flexibility அளிப்பதால் அவர்களை அணியில் மதிப்புடன் வைத்திருக்கிறார்கள். நியுசிலாந்து முழுக்க துக்கடா ஆல்ரவுண்டர்களை நம்பின ஒரு காலம் உண்டு. ஆஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அற்புதமான பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு இது ஒரு கொள்கையாக இல்லை. ஹூப்பர், பிராவோ, ரஸல் போன்ற பலர் இருந்தாலும் மேற்கிந்திய தீவுகளும் ஆல்ரவுண்டர் விசயத்தில் ரொம்ப சீரியஸாக இருந்ததில்லை. தொண்ணூறுகளில் பொலாக், மெக்மில்லன், பொலாக், சிம்காக்ஸ், இப்போது ஏ.பி டிவில்லியர்ஸ் என முழுமையான ஆல்ரவுண்டர்களை கொண்டிருந்த ஒரே அணி தென்னாப்பிரிக்கா.

இந்திய சூழலில் ஆல்ரவுண்டர்களுக்கான இடம் உருவாக்கப்பட்டது கங்குலியின் காலத்தில். அப்போது ஸ்பின் ஆல்ரவுண்டர்களுக்கு மவுசு ஏற்பட்டது. பல மட்டையாளர்கள் பந்து வீச துவங்கினார்கள். சேப்பலின் பயிற்சியால் பதான் ஒரு நல்ல வேகவீச்சு ஆல்ரவுண்டராக பரிணமித்தார். ஆனால் அதற்குப் பின் சில வருடங்கள் நாம் வெளிநாடுகளில் ஆடியதாலும் பதான் பார்மில் இல்லாததாலும் ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் ஆடப்படவில்லை; தேவைப்படவில்லை. ஆக நாம் உலகக் கோப்பை இந்தியாவில் நடந்தது என்பதால் மட்டுமே ஜடேஜாவை ஆல்ரவுண்டராக வளர்த்தெடுத்தோம். யுவ்ராஜ் காயத்தில் இருந்து திரும்ப வேண்டும் என்று பிரார்த்தித்தோம். மட்டையாட்டத்துக்காக அல்ல, பந்து வீச்சுக்காக. அதற்குப் பின் மீண்டும் வெளிநாடுகளில் ஆட ஆரம்பித்ததும் ஆல்ரவுண்டரின் பாத்திரம் மீண்டும் தேவையா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது ஏனென்றால் நமக்கு தெளிவான நிரந்தரமான கொள்கை இல்லை என்பதே.
அஷ்வின் டெஸ்டிலும் ஒருநாளிலும் மிக நன்றாக மட்டையாடுகிறார். ஆனாலும் அவர் விலக்கப்பட்டார். பதான் சில வருடங்களுக்கு முன் அணியில் இருந்து விலக்கப்பட்ட போது அவர் மிக நன்றாக மட்டையாடி வந்தார். இங்கிலாந்து அணியில் என்றால் இந்த வீரர்கள் ஐந்து அல்லது ஆறாவது வரிசையில் கட்டாயம் ஆடியிருப்பார்கள். ஆனால் இந்தியாவில் நடக்காது. ஏனென்றால் நமக்கு ஆல்ரவுண்டர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெரிய விசயமில்லை.
இந்த மனநிலை மாற சற்று காலம் பிடிக்கும்.

சேவாக்கை அடுத்த அணித்தலைவர் ஆகலாமா?

சேவாக் இயல்பான ஒரு தலைவர் அல்ல. ஏனென்றால் சச்சினைப் போல் அவர் தனித்துவமானவர். அவருக்கு வெற்றிகரமான வழிமுறை அணியில் உள்ள அவரை விட வேறுபட்ட சற்று தரம் குறைந்த பிற வீரர்களுக்கு உதவாது. தலைவராக ஒரு தனித்தீவாக இருக்கிறார். அதே போல் ஒரு அணித்தலைவர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மோசமான களத்தடுப்பாளரும், உடற்தகுதி கொண்டவருமான சேவாக் எப்படி கோலி, ஜடேஜா, ரெய்னாவை தலைமை தாங்க முடியும்? மேலும் அவருக்கு ஆட்டத்தின் போக்கில் மாற்றங்கள் பண்ண தெரியாது. ஒரே திட்டத்துடன் களத்துக்கு வருவார். அது சொதப்பினால் பின்னர் ஊருக்கு திரும்பும் பணத்தை தொலைத்த குழந்தை மாதிரி முழிப்பார். ஐ.பி.எல்லில் மற்றும் மே.இ தீவுகள் தொடரில் அவர் தலைமை கூட இப்படித் தான் இருந்தது. சேவாகின் தலைமை வெள்ளைக்காரர் ஸ்பூனால் தோசை சாப்பிடுவது மாதிரி. சாப்ஸ்டிக்கால் அல்வா சாப்பிடுவது மாதிரி. நியுசிலாந்து ஒருநாள் தொடரின் ஐந்து ஆட்டங்களையும் காம்பிர் மிக சிறப்பாக தலைமை தாங்கி வென்று தந்தார். அதற்கு பின் தேர்வாளர்கள் மே.இ தொடரில் சேவாகை மீண்டும் தலைவராக்கியது மிக பிற்போக்கான அசட்டுத்தனமான ஒரு முடிவு.

தோனி ஏன் மீண்டும் மீண்டும் தடை செய்யப்படுகிறார்?

தோனி தடை செய்யப்படுகிறாரா தடை வாங்குகிறாரா என்பது சற்று குழப்பமாக உள்ளது. இரண்டு முறையும் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசி தடை வாங்கியுள்ளதால் நமக்கிந்த சந்தேகம் தொடர்ந்து எழுகிறது. ஜடேஜாவுக்கு ரெண்டு ஓவர் கொடுத்திருந்தாலே பிரச்சனை முடிந்திருக்கும். ஆனால் அவர் வேண்டுமென்றே அணி மெத்தனமாக செயல்பட விட்டார். தடை வாங்கினார். ஏனென்றால் தோனிக்கு தலைமையில் முன்னிருந்த விருப்பம் இப்போதில்லை. அவரது செய்கை பரீட்சை பிடிக்காமல் குழந்தைகள் ஜுரம் வயிற்றுவலி என்று மட்டம் போடுவது போல் இது உள்ளது.
பொதுவாக அணித்தலைவர்கள் காயத்துடன் கூட ஓய்வு பெறாமல் ஆடுவார்கள். ஏனென்றால் தலைமை தாங்குவது அவ்வளவு முக்கியமாக அவர்களுக்கு இருக்கும். தேசிய அணி தனது சொந்த குடும்பமாக அவர்களுக்கு இருக்கும். தோனி கூட அப்படித் தான் முன்னர் இருந்தார். கடுமையான ஜுரத்துடன் ஆடியிருக்கிறார். உலகக்கோப்பை இறுதியின் போது அவருக்கு உடல்நலமில்லாமல் தான் இருந்தது. ஒருமுறை ரிக்கி பாண்டிங் ஓவர் ரேட்டை அதிகரிப்பதற்காக பங்களூரில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்டில் தனது அணி வெற்றி பெறும் நிலையில் இருந்த போது அபாயகரமாக வீசிக் கொண்டிருந்த வாட்சனை நீக்கி சுழலர்களை வீச வைத்தார். இந்தியா தோல்வியில் இருந்து தப்பித்தது. கடுமையான கண்டனங்கள் அவருக்கு எதிராக எழுந்தன. ஆனால் பாண்டிங் தடை வாங்குவதை விட அணி ஒரு ஆட்டம் தோற்பது மேல் என்று எண்ணினார். ஆனால் இன்று இந்த அவசிய தேவை தோனிக்கு இல்லை. ஏனென்றால் அணி தன்னில் இருந்து நழுவிப் போவதாய் உணர்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் அணி போல் உட்பூசல்களுடன் உள்ளது. சேவாக், சச்சின், காம்பிர் ஆகியோர் மெத்தனமானவர்கள் என்று வெளிப்படையாக விமர்சிக்கிறார். இது இந்திய கிரிக்கெட்டில் நடப்பது முதல் முறை. உலகக்கோப்பை வரை அவர் மூத்தவர்களை பொறுத்தார். இப்போது தோனி தனக்கே விசுவாசமான ஒரு அணியை உருவாக்க தெளிவாக விரும்புகிறார். அப்படி செய்வதற்கு அனுமதித்தால் அவர் தலைவராக தொடர்வார். அதுவே இந்திய அணிக்கு நல்லது அல்லாவிட்டால் இது போல் பல தமாஷான குழப்படிகளை அவர் பண்ணிக் கொண்டே இருப்பார். தோனி குழந்தை அல்ல, கிரிக்கெட்டும் வெறும் வேடிக்கை அல்ல.
Read More

Saturday 25 February 2012

ஒரு இரங்கற்பாவின் துணுக்குகள் - டேன் பாகிஸ்



உன் கண்களை மூடி விட்டேன்.
உன் கரங்களை திரும்ப வைத்து விட்டேன் அவற்றின் இடத்தில்.
உனது பாதங்கள் என்னை பரிதாபத்துடன் பார்க்கின்றன:
நான் அநாவசியம்.
என் கைகளை பார்க்கிறேன்.
என் கைகளை வைத்து என்ன பண்ணப் போகிறேன்?
என் கட்டின ஷூவார்களை கட்டுகிறேன்.
பொத்தானிட்ட அங்கிக்கு பொத்தானிடுகிறேன்.

புது கல்லறைத்தோட்டம் நல்ல இடவசதி உள்ளது,
முழுக்க எதிர்கால தொழில்நுட்பம் பொருந்தியது. தொலைவில், பக்கமாய், விடாமல் தொடர்ந்து
தேவாலய சேர்ந்திசை இயக்குநர்கள் பாடுகிறார்கள்.

நீ அமைதியாக, சற்று சங்கோஜப்பட்டது போல் இருக்கிறாய்:
ஒருவேளை பிரிவு நீண்டதாக இருக்கும்.
நகங்கள் வளர்கின்றன, மெல்ல, ஒரு அமைதி ஒப்பந்தம் தீட்டுகின்றன.
வாய் துவாரம் அதை படைத்தவனுடன் அமைதி கொண்டு விட்டது.

ஆனால் இப்போது பூமியின் முஷ்டிகள்
பொறியின் பலகைகளில் முட்டுகின்றன:
எங்களை உள்ளே அனுமதி,
எங்களை உள்ளே அனுமதி.
Read More

Friday 24 February 2012

எதிர்பாரா சந்திப்புகள் -டேன் பாகிஸ்



ஒரு கண்ணாடியை எதிர்பாராது பார்க்கிறோம்; திரும்பிக் கொள்ள சற்று தாமதமாகி விடுகிறது.
என்ன புதுசு, நாம் மாறவே இல்லை என்பது தான் குட்பை பார்த்து ரொம்ப நாளாகிறதே.

கிட்டத்தட்ட ரகசியமாய், சந்திக்கிறீர்கள் பழைய காகிதங்களின் கத்தை ஒன்றை.
நீங்கள் தாக்குப்பிடித்து விட்டீர்கள், அவையும் தான். நீங்கள் வேறென்ன தான் சொல்ல முடியும்?

நாளங்களில், தமனிகளில் உங்கள் இதயத்துடிப்பை நோக்கி, பிறகு வேறுபட்ட ஒரு துடிப்பை நோக்கி, அலைந்து திரிகிறீர்கள். அந்த ரத்தமும் கூட போய் விட்டது.

பிறகு திடீரென, அலமாரிக்குள், உங்களது அந்த புகைப்படம்: முக எலும்புகள் துருத்தி தெரிய அந்த பேயறைந்த தோற்றம்,

ஆமாம் அதே எலும்புகள் தாம். இப்போது உங்களுக்கு புரிகிறது:
நீங்கள் சாகக் கூட இல்லை. நீங்கள் துறந்தது எல்லாம் வீண்.

பிறகு என்ன விடையுடன் நீங்கள் திரும்பப் போகிறீர்கள்? எந்த கேள்வியும் இல்லாத பட்சத்தில்.
நீங்கள் எதிர்பாரா சந்திப்புக்கு தயாராகி விட்டீர்கள், எழுந்து, கதவை உடையுங்கள்;
பாதாள அறையின் படிக்கட்டுகளில் இறங்கி அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் உங்களை
சுவரிடம்.
Read More

Thursday 23 February 2012

நீட்சேவும் செந்திலும்



நீட்சேயின் “அவ்வாறு சொன்னான் ஜாருதுஷ்டிரன் கதையில் ஜாருதுஷ்டிரன் பல வருடங்கள் மலையில் துறவியாய் வாழ்ந்த பின் மனிதர்களை சந்திக்க ஒருநாள் இறங்கி வருவான். அப்போது ஒரு வயதான துறவி அவனை தடுப்பார். “வேண்டாம். மிருகங்கள் மத்தியில் மேலும் பாதுகாப்பாய் இருப்பாய். ஆனால் இந்த மனிதர்கள் மோசமானவர்கள். அவர்களிலும் மேலானவர்களை அவர்களுக்கு பிடிக்காது. உன்னை கொன்று போட்டு விடுவார்கள் என்பார். அதற்கு ஜாருதுஷ்டிரன் “ஏன் அப்படி சொல்கிறீர்கள். நான் பெற்ற ஞானத்தை மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? என்பான். அதற்கு முதியவர் “மனிதர்களுக்கு உன்னதமானவர்களை தாங்க முடியாது. அவர்களுக்கு தேவை பொழுதுபோக்குக்கு ஏற்ற கோமாளிகள் தாம் என்று பக்குவமாய் சொல்லிப் பார்ப்பார். பிறகு ஜாருதுஷ்டிரன் கேட்காமல் மனிதர்களிடத்து சென்று உதாசீனப்படுத்தப்பட்டு வருந்துவான். இருநூறு வருடங்களுக்கு பின்னரும் இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டே வருகிறோம்.
ஒரு மனிதன் முன்னேறாமால் சீரழிந்தால் அவனை அன்புகாட்டி விசனிப்பார்கள். அதே மனிதர் உயர்ந்து வந்தால் கரித்துக் கொட்டுவார்கள். மனிதர்களுக்கு தம்மிடையே ஒருவன் வளர்வது தமது தாழ்வை சுட்டிக் உணர்த்தி உறுத்தல் தரும். அதனாலே அவர்கள் பிச்சைக்காரர்களையும் குஷ்டரோகிகளையும் அடிமைகளையும் சுற்றி வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். படையப்பா படத்தில் பெண் பார்க்க போகும் செந்தில் உணர்வது போல் என்னதான் செய்தாலும் பக்கத்தில் இரும்பு இருப்பதால் வெண்கலம் தங்கமாகி விடப் போவதில்லை.
Read More

Friday 10 February 2012

புசிக்கப்படுவதன் அவலம்



ஒரு கசப்பான கனியை
எனக்குத் தருகிறாய்
மனமும்
உடலும்
சின்ன சின்ன
எண்ணங்களும் உணர்வுகளும்
கசக்கின்றன

கசப்பாய்
ஊறித் ததும்புகிறேன்

பிறகு
கருணையே இன்றி
ஒரு புது மிட்டாயை அறிந்த
குழந்தையை போல
சுவைக்கிறாய் என்னை
அவ்வளவு இனிப்பாய்

நான் உண்டதற்கும்
நீ உண்டதற்கும்
இடைப்பட்ட காலத்தில்
நிகழ்ந்தது தான்
அன்பு
என்கிறாய்

உமிழ்நீரோ
உடலின் நீர்களோ
குருதியோ
அல்ல
ஆனாலும்
கசிந்து பெருகுகிறேன் நான்
கசப்போ இனிப்போ
அற்ற ஒன்றாக
மாறியிருக்கிறேன்

அது
எப்போதென்றோ
எவ்வளவு காலத்துக்கென்றோ
அறிய மாட்டாய்

ஆனால்
மனித வரலாற்றில் என்றுமே
புசிக்கப்பட்டதன் அவலம்
அது மட்டுமே
என சொல்லிக் கொள்கிறாய்

அதாவது
புசிக்கப்படும் எதுவும்
சுவைப்பதும் இல்லை
அழிவதும் இல்லை

அந்த துர்பாக்கியத்தை கடந்து
மீண்டும்
ஒரு கசப்பான கனியாக
அது
காத்திருக்கிறது
Read More

இஷிகாவா தொக்குபுக்கு (ஜப்பான், 1885-1912) - தமிழில் ஆர்.அபிலாஷ்




1. ஒரு போதும்
மறக்க முடியாது
எனக்கு காட்ட
கண்களில் நீர் வழிய
ஒரு கைப்பிடி மணலை
எடுத்து நீட்டியவனை

2. “மகத்துவமானது
என்று நூறு முறை
மணலில் எழுதி
சாவை ஒத்திப் போட்டு
வீடு சென்றான்

3. அவனுக்கு நான்
ஒரு உபயோகமற்ற கவிஞனைத் தவிர
வேறொன்றுமில்லை
அவனிடம்
கடன் வாங்கி இருக்கிறேன்

4. சும்மா வேடிக்கைக்காக
அம்மாவை முதுகில் ஏற்றுகிறேன்
ரொம்ப லேசாய் உணர
அழ ஆரம்பிக்கிறேன்
மூன்று அடிகள் கூட
எடுத்து வைக்க முடியவில்லை

5. சாலையோரமாய்
நீண்ட கொட்டாவி விடுகிறது
நாய் ஒன்று
திரும்பி விடுகிறேன் நானும்
வெறும் பொறாமையினால்

6. உழைக்கிறேன்
இன்னும் உழைக்கிறேன்
ஆனாலும் வாழ்வு
சதா வறுமையிலே
கைகளை வெறிக்கிறேன்

7. புதைச் சேற்றில்
  வெண் தாமரை மலர்வது போல்
  குழம்பும் என் மனதில்
  மிதக்கிறது துக்கம்

8. தற்செயலாய்
  ஒரு தேநீர் கோப்பையை உடைக்க
எதையாவது உடைப்பதன்
உவகையை அறிந்தேன்
இன்று காலையிலும் என் மனதில்
அதுதான் உள்ளது
Read More

Thursday 9 February 2012

நித்திய இச்சையின் தங்க ஆப்பிள் - மிலன் குந்தெரா (தமிழில் ஆர்.அபிலாஷ்)




... அவர்கள் அறிவதில்லை தாம் நாடுவது
வேட்டைப் பிராணியை அல்ல, துரத்தலை என்று
-         பிளைஸ் பாஸ்கல்
-          
மார்டின்
எனக்கு சாத்தியமில்லாத ஒன்று மார்டினுக்கு இயலும். எந்த தெருவிலும் எப்பெண்ணையும் நிறுத்துவது. அவனை அறிய வந்திருந்த நீண்ட காலத்தில் நான் அவனது இந்த திறனால் மிகவும் லாபமடைந்திருந்தேன் என்று சொல்லியாக வேண்டும்; ஏனென்றால் அவன் அளவுக்கு எனக்கும் பெண்களை பிடிக்கும், ஆனால் அவனது தயக்கமற்ற துணிவு எனக்கு இல்லை. அதே வேளை, மார்டின் பரிச்சயப்படுவதை ஒரு பெரும் கலைத்திறன் என்பதன் எல்லைக்குள் சுருக்கும் ஒரு தவறை இழைத்தான். ஆக அவன் தான் சாக்கர் விளையாட்டில் தடுக்க முடியாத பந்துகளை தன் அணிவீரர்களுக்கு சுயநலமின்றி அனுப்பும் ஒரு தாக்கி ஆடும் வீரனை போன்றவன் என்று சற்று கசப்புடன் சொல்வான்; சகவீரர்கள் இப்பந்தை எளிதாக கோல் அடித்து மட்டமான புகழை அடைவார்கள்.

கடந்த திங்கள் பின்மதியம் வேலைக்கு பிறகு நான் வாகளேவ் சதுக்கத்தில் ஒரு கபேவில் யுட்ரேசியன் கலாச்சாரம் பற்றிய ஒரு தடிமனான ஜெர்மானிய நூலை பார்த்தபடி அவனுக்காக காத்திருந்தேன். ஜெர்மனியில் இருந்து இதை கடனாக ஒப்பந்தம் பேசி வாங்க பல மாதங்கள் எடுத்து விட்டது; இப்போது ஒருவழியாய் அது அன்று வந்து விட்ட நிலையில் நான் அதை ஏதோ ஒரு திருப்பண்டம் போல் ஏந்தி வந்தேன்; மார்டின் தாமதப்படுத்தினான் என்பது எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது; ரொம்ப காலமாக கபே மேஜை ஒன்றில் நான் எதிர்பார்த்த நூலை புரட்டிப் பார்க்கலாமே.

எப்போதெல்லாம் புராதன கலாச்சாரங்களை பற்றி யோசிக்கிறேனோ அப்போதெல்லாம் கடந்த கால நினைவேக்கம் என்னை ஆட்கொள்ளும். அக்கால வரலாற்றின் இனிய மெத்தனம் மீதான பொறாமையாக ஒருவேளை இருக்கலாம். பழைய எகிப்திய கலாச்சார யுகம் பல ஆயிரம ஆண்டுகள் நீடித்தது; கிரேக்க பழமையே ஒரு ஆயிரம் ஆண்டுகள் போல நீடித்தது. இவ்விசயத்தில் ஒரு தனி மனிதவாழ்வு மனித வரலாற்றை போல செய்கிறது; ஆரம்பத்தில் அது நகர்வற்ற மெத்தனத்தில் மூழ்கி உள்ளது, பிறகு தான் மெல்ல மெல்ல அது மேலும் மேலும் வேகம் பிடிக்கிறது. ரெண்டு மாதங்களுக்கு முன்பு தான் மார்டினுக்கு நாற்பது வயதானது.

சாகசம் ஆரம்பமாகிறது

சிந்தனைவயப்பட்ட நிலையில் இருந்து என்னை எழுப்பி விட்டது அவன் தான். கபேயின் கண்ணாடி கதவின் அருகே திடீரென்று தோன்றி என் திசையில் பக்கத்து மேஜையில் காபி குடித்தவாறிருந்த ஒரு பெண்ணை நோக்கி நாடகீயமாய் சைகைகள் மற்றும் முகச்சுளிப்புகள் காட்டியபடி நுழைந்தான். அவளிடம் இருந்து பார்வையை எடுக்காமல் என்னருகே அமர்ந்து சொன்னான் “இதைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

நான் அசிங்கப்படுத்தப்பட்டதாய் உணர்ந்தேன்; அந்த கெட்டியான புத்தகத்தில் அப்படி மூழ்கி போயிருந்தபடியால் அப்பெண்ணை அப்போது தான் பார்த்தேன்; அவள் அழகி தான். அத்தருணம் அப்பெண் நிமிர்ந்து கறுப்பு டை அணிந்த ஒருவனை அழைத்து பில் கேட்டாள். “நீயும் பில்லை கட்டி விடு, மார்டின் எனக்கு ஆணையிட்டான்.

அந்த பெண்ணை பின் தொடர நேரும் என்று தான் நினைத்திருந்தோம். ஆனால் அதிர்ஷ்டவசடமாக அவள் பொருள் வைப்பறையில் தாமதித்து வெளியே வந்தாள். தனது ஷாப்பிங் பையை அங்கே கைமறதியாய் விட்டு விட்டு வந்திருந்தாள். பொருள் வைப்பறை உதவியாளன் அவளுக்காக சற்று தேடிய பின்னர் தான் கவுண்டரில் அவளை கண்டைந்து அவளுக்கு முன் அதை வைக்க முடிந்தது. அவனுக்கு அவள் சில்லறைகள் தரும் போது மார்டின் என்னிடம் இருந்து ஜெர்மானிய நூலை பிடுங்கினான்.
“இதை இங்கே வைப்பதே உசிதம் என்று அவன் தனது அஞ்சா நெஞ்ச அலட்சியத்துடன் சொல்லி விட்டு நூலை அவளது பைக்குள் கவனமாக வைத்தான். அப்பெண் வியப்புற்றதாய் தோன்றியது; ஆனால் அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“இதை கையில் தூக்கி செல்வது சிரமமாக உள்ளது, மார்டின் தொடர்ந்தான்; அப்பெண் தானாகவே தனது பையை எடுக்க சென்ற போது அவன் தோதானபடி நடந்து கொள்ளாததற்காக என்னை கண்டித்தான்.

அந்த இளம்பெண் ஒரு கிராம மருத்துவமனையில் செவிலி. அவள் பிரேகிற்கு வெறுமனே சுற்றிப் பார்க்க வந்திருந்தாள்; தற்சமயம் டிராம் நிறுத்தம் நோக்கி அவசரமாய் கிளம்பிக் கொண்டிருந்தாள். அவசியமானவை எல்லாவற்றையும் சொல்லி சனிக்கிழமை நாங்கள் அந்த இளம்பெண்ணையும், மார்டின் அர்த்தபூர்வமாய் சுட்டிக் காட்டியது போலவே, அவள் ஏற்பாடு செய்யப் போகிற அவளது அலுவலக தோழி ஒருத்தியையும் சந்திக்க B நகரத்துக்கு விஜயம் செய்யப் போவதாய் ஏற்றுக் கொள்ள எங்களுக்கு நிறுத்தம் வரையிலான குறுகின தூரம் போதுமானதாக இருந்தது.

டிராம் வந்தது. நான் அந்த இளம்பெண்ணுக்கு அவளது பையை அளித்தேன்; அவள் அதில் இருந்து புத்தகத்தை வெளியே எடுக்க ஆரம்பித்தாள், ஆனால் மார்டின் ஒரு ராஜகம்பீர சைகை மூலம் அதை தடுத்தான், அதை வாங்குவதற்கு நாங்கள் சனிக்கிழமை வரப் போவதாகவும், இடைப்பட்ட நேரத்தில் அவள் அப்புத்தகத்தை கவனமாக படிக்க வேண்டும் என்றும் சொன்னான். இளம்பெண் திகைத்துப் போய் சிரித்தாள், டிராம் அவளை சுமந்து சென்றது; நாங்கள் கையசைத்தோம்.

வேறொன்றும் செய்வதற்கில்லை; இவ்வளவு காலமாய் நான் எதிர்பார்த்திருந்த புத்தகம் திடீரென்று தொலைதூரத்திற்கு சென்று விட்டது; யோசித்துப் பார்த்தால் ரொம்ப எரிச்சல் ஏற்பட்டது; இருந்தும் ஒரு குறிப்பிட்ட பைத்தியக்காரத்தனம் உடனடியாய் தனது சிறகுகளை விரித்து என்னை அவற்றில் மகிழ்ச்சியாக ஏற்றிக் கொண்டது. மார்டின் தனது இளம் மனைவியிடம் சனிக்கிழமை மதியம் மற்றும் இரவுக்கு என்ன சாக்கு சொல்வது என்று உடனடியாக சிந்திக்க தொடங்கினான் (ஏனென்றால் நிலைமை இது தான்: வீட்டில் அவனுக்கு ஒரு இளம் மனைவி உண்டு; இன்னும் மோசம் என்னவென்றால் அவன் அவளை நேசிக்கிறான்; அதை விட மோசம் என்னவென்றால் அவளை அஞ்சுகிறான்; உள்ளதிலே ஆக மோசம் என்னவென்றால் அவளைக் குறித்து பதற்றம் கொள்கிறான்).

ஒரு வெற்றிகரமான பார்வையிடல்

எங்களது சிற்றுலாவுக்காக நான் ஒரு அழகான சிறு பியட் காரை கடன் வாங்கினேன்; சனிக்கிழமை 2 மணிக்கு மார்டினின் அடுக்குமாடி குடியிருப்புக்கு ஓட்டி சென்றேன்; மார்டின் எனக்காக காத்துக் கொண்டிருந்தான்; நாங்கள் கிளம்பினோம். அது ஜூலை மாதம்; கொடுமையான வெக்கை.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக Bயை போய் அடைய விரும்பினோம்; ஆனால் நாங்கள் கடந்து போகும் ஒரு கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் நீச்சல் ஆடைகள் மற்றும் சரளமான ஈர தலைமயிருடன் செல்வதை பார்த்து வண்டியை நிறுத்தினோம். ஏரி உண்மையில் ரொம்ப தொலைவில் இல்லை, சில அடிகள், சில எட்டுகள் தொலைவில் இருந்தது. எனக்கு குளித்து புத்துணர்வு பெற வேண்டி இருந்தது; மார்டினுக்கும் நீச்சலில் ஆர்வம்.

நாங்கள் எங்கள் நீச்சல் உடைகளை அணிந்து நீருக்குள் குதித்தோம். நான் வேகமாய் மறுகரைக்கு நீந்தி சென்றேன். ஆனால் மார்டின் வெறுமனே அரைகுறையாய் ஒரு முழுக்கு போட்டு தன்னை கழுவிக் கொண்டு வெளியே வந்து விட்டான். நான் திருப்தியாய் நீந்தி விட்டு கரைக்கு வந்ததும் அவன் ஒரு தீவிரமான விசாரத்தில் இருப்பதை காணலுற்றேன். கரையில் சிறுவர்களின் கும்பல் ஒன்று கத்திக் கொண்டு இருந்தது, இன்னும் தொலைவில் உள்ளூர் இளைஞர்கள் சாக்கர் விளையாடிக் கொண்டிருந்தனர், ஆனால் மார்டின் வெறித்து பார்த்தது எங்களில் இருந்து அநேகமாய் பதினைந்து மீட்டர்கள் தள்ளி தன் முதுகை காட்டி இருந்த ஒரு இளம் பெண்ணின் உறுதியான சின்ன உருவத்தை தான். சற்றும் அசைவற்று அவள் தண்ணீரை கவனித்துக் கொண்டிருந்தாள்.

“பார் என்றான் மார்டின்.
“நான் பார்க்கிறேனே
“என்ன நினைக்கிறாய்?
“நான் என்ன நினைக்க?
“அதைப் பற்றி என்ன சொல்ல என்று உனக்கு தெரியவில்லை இல்லையா?
“அவள் திரும்பும் வரை நாம் காத்திருக்க வேண்டும், நான் யோசனை சொன்னேன்.
“தேவையே இல்லை. அவள் திரும்பும் வரை நாம் காக்க வேண்டியதில்லை. இந்த பக்கத்தில் இருந்து அவள் காட்டுவதே எனக்கு போதுமாக இருக்கிறது
“சரி தான். ஆனால் நாம் அவளுடன் நேரம் செலவழிக்க தேவை இல்லையே
“பார்வையிடுவது என்றால் பார்வை இடுவது தான், மார்டின் சொன்னான்; அவன் அருகில் நின்று தனது நீச்சல் ஆடைகளை போட்டுக் கொண்டிருந்த ஒரு சின்ன பையனை நோக்கி திரும்பினான்: “டேய் தம்பி, அங்கே நிற்கிற அந்த பெண்ணின் பெயர் தெரியுமா உனக்கு?; ஏதோ நூதனமான உணர்ச்சியற்ற நிலைக்குள் இருந்த அவள் தொடர்ந்து அவ்வாறே நின்று கொண்டிருந்தாள்.
“அங்கே நிற்கிற அவளா?
“ஆமாம் அங்குள்ள அவளே தான்
“அவள் இங்குள்ளவள் அல்ல, என்றான் அந்த சின்ன பையன்.

மார்டின் அருகே சூரியக்குளியல் போடும் ஒரு பன்னிரண்டு வயது சிறுமியிடம் திரும்பினான்.
“ஏம்மா உனக்கு அங்கு நிற்கும் அப்பெண்ணை தெரியுமா சொல்லு, அந்த நீரின் விளிம்பில் நிற்பவள்?
அந்த சின்ன பெண் பணிவாய் நிமிர்ந்து அமர்ந்தாள். “அங்குள்ள அவளா?
“ஆமா அவள் தான்
“அது மேரி __
“மேரியா? எந்த மேரி?
“மேரி பேனிக், டிரெப்ளிஸை சேர்ந்தவள்
அந்த பெண் தண்ணீரை பார்த்தபடி தொடர்ந்து தன் முதுகை காட்டி நின்றாள். இப்போது தனது குளியல் தொப்பிக்காக குனிந்தாள்; அவள் மீண்டும் தலையில் அதை அணிந்தவாறு நிமிர்ந்த போது மார்டின் ஏற்கனவே என்னருகே வந்து சொல்ல ஆரம்பித்திருந்தான்: “அது தான் டிரெப்ளிஸை சேர்ந்த மேரி பேனிக். இனி நாம் வண்டியை எடுத்து பயணம் தொடரலாம்

அவன் முழுக்க அமைதியுற்று திருப்தியடைந்திருந்தான்; வெளிப்படையாகவே அவன் மிச்ச பயணம் அன்றி வேறெதையும் குறித்து அதன்பிறகு சிந்திக்க வில்லை.

ஒரு சின்ன கோட்பாடு


இதைத் தான் மார்டின் பார்வையிடுதல் என்கிறான். உயர்ந்த கணித திறன்கள் உள்ள தன்னால் ஒரு பெண்ணை கவர்வது என்பது இதுவரை தான் கவர்ந்திராத பெண்களை போதுமான எண்ணிக்கையில் பரிச்சயப்படுவதில் இருந்து வித்தியாசம் ஆனது அல்ல என்று தனது பரவலான அனுபவம் மூலம் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

அதனால் எங்கே ஆனாலும் பரவாயில்லை, கிடைக்கிற எந்த வாய்ப்பையும் பயன்படுத்தி ஒரு பெண்ணை திட்டமிட்ட முறையில் பார்வையிடுவது அவசியம் என்று அவன் வலியுறுத்துகிறான், அதாவது எங்களைக் கவர்ந்த, நாங்கள் எதிர்காலத்தில் வண்டியில் ஏறக் கூடிய பெண்களின் பெயர்களை ஒரு குறிப்பு நூலில் அல்லது எங்களது நினைவில் பதிவு செய்வது
வண்டியில் ஏறுவது என்பது ஒரு மேலும் உயர்ந்த நிலை நடவடிக்கை; அதன் பொருள் நாங்கள் ஒரு குறிப்பிட்ட பெண்ணுடன் தொடர்பு கொண்டு, அவளது பரிச்சயத்தை பெற்று, அவள் பால் அணுக்கம் அடைவோம் என்பது.

தற்பெருமையுடன் நினைவு மீட்ட விரும்புவோர் தாம் புணர்ந்த பெண்களின் பெயர்களை அழுத்துவார்கள்; ஆனால் எதிர்காலத்தை எதிர்நோக்குபவர்கள் கட்டாயமாக தாம் ஏகப்பட்ட பெண்களை பார்வையிட்டு வண்டி ஏறி உள்ளதாய் உறுதி செய்ய வேண்டும்.

வண்டியேறுவதற்கு அப்பால் ஒரே ஒரு இறுதி நிலை நடவடிக்கை மட்டுமே உள்ளது; இவ்விசயத்தில் மார்டினிடம் மாறுபட்டு நான் ஒன்றை சுட்டிக் காட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்; இந்நிலையை மட்டுமே நாடுபவர்கள் கேவலமான, காட்டுமிராண்டிகள், கிராமத்து சாக்கர் விளையாட்டில் சதா எதிர் அணி கோலை நோக்கி முன்னே பந்தை அடிக்கும், ஒரு உதைப்பவனின் வெறியேறிய ஆவேசம் மட்டுமே ஒரு கோல் அடிக்க (பல கோல்களும் தாம்) போதாது, அதற்கு மாறாக முதலில் ஒரு மனசாட்சிக்கு உட்பட்ட, திட்டமிட்ட விளையாட்டை ஆடுகளத்தில் ஆட தெரிவது அவசியம் என்று அறியாத பந்தாட்டக்காரர்களை எனக்கு இவர்கள் நினைவு படுத்துகிறார்கள்.

“டிரப்ளிஸில் நீ அவளை தேடிப் போவாயா என்ன?, நாங்கள் மீண்டும் வண்டி ஓட்டி கொண்டிருந்த போது நான் மார்டினை கேட்டேன்.

“யாருக்கு தெரியும், என்றான் மார்டின்.

பிறகு நான் சொன்னேன் “எப்படியும் இந்நாள் மிக சுபிட்சமான வகையில் தான் ஆரம்பித்து உள்ளது

விளையாட்டும் அவசியமும்

நாங்கள் Bயில் உள்ள மருத்துவமனைக்கு மிகச்சிறந்த உற்சாகத்துடன் வந்து சேர்ந்தோம். மூன்று முப்பது இருக்கும். லாபியில் உள்ள தொலைபேசியில் எஙகள் செவிலியை அழைத்தோம். விரைவில் அவள் தனது சீருடையில் வெள்ளை தொப்பி சகிதம் வந்தாள்; அவள் வெட்கத்தில் சிவப்பதை நான் கவனித்தேன்; இதை ஒரு நல்ல அறிகுறியாக எடுத்துக் கொண்டேன்.

மார்டின் உடனே பேச துவங்கி விட்டான்; அப்பெண் தான் தனது வேலையை முடிக்க ஏழாகி விடும் என்றும், நாங்கள் அப்போது அவளுக்காக மருத்துவமனைக்கு முன்பாக காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தாள்.

“நீ ஏற்கனவே உன் தோழியுடன் ஏற்பாடு செய்து விட்டாயா?, மார்டின் அவளிடம் கேட்டான்; அவள் தலையாட்டினாள்.
“ஆமா நாங்கள் இருவரும் அங்கிருப்போம்
“நல்லது, மார்டின் சொன்னான், “ஆனால் நாம் எனதிந்த நண்பனை ஒரு முடிவுற்ற செயலுக்கு பங்காற்ற சொல்ல முடியாது
“சரி, அவள் சொன்னாள், “நாம் அவளிடம் செல்லலாம்; அவள் இங்கே அறுவை சிகிச்சை பிரிவில் இருக்கிறாள்

நாங்கள் மருத்துவமனை முற்றம் கடந்து மெல்ல நடந்து போகையில் நான் கூச்சத்துடன் சொன்னேன் “நீ இப்பவும் அந்த தடிமனான நூலை வைத்திருக்கிறாயா என்ன?

செவிலி தலையாட்டியபடி தன்னிடம் உள்ளதாய் சொன்னாள்; சொல்லப்போனால் அது இங்கே மருத்துவமனையில் தான் உள்ளது. என் இதயத்தில் இருந்து ஒரு பாரம் இறங்கியது; முதலில் சென்று அதை எடுத்து வரலாம் என்று வற்புத்தினேன்.

விரைவில் எனக்கு விருந்தாகப் போகும் ஒரு பெண்ணிடம் ஒரு புத்தகம் பற்றி குறிப்பிடுவது தகாதது என்று நிச்சயமாக மார்டினுக்கு தோன்றியது, ஆனால் என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. யுட்ரேசியன் கலாச்சரம் பற்றின அந்நூல் என் கையில் இல்லாத அந்த சில நாட்கள் நான் கடும் துயரத்துக்கு உள்ளானேன் என்பதை இங்கு ஒப்புக் கொள்ள வேண்டும். இளமையில் இருந்தே நான் மதித்து, தற்போது எனது தனிப்பட்ட ஆர்வங்கள் மற்றும் ஆசைகள் அனைத்தையும் தியாகம் செய்து ஆடி வரும் அவ்விளையாட்டை எந்த ஒரு சூழ்நிலையிலும் நாசமாக்க விரும்பாததனாலே நான் மிகுந்த சுயகட்டுப்பாட்டுடன் இதனை உறுதிப்பாட்டுடன் தாங்கினேன்.

நான் எனது புத்தகத்துடன் ஒரு உணர்ச்சிகரமான மறுசந்திப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது, மார்டின் அந்த அழகிய செவிலியுடன் தன் உரையாடலை தொடர்ந்தான்; லேக் ஹோட்டர் அருகே தனது கூட வேலை செய்பவரிடம் இருந்து ஒரு சிறு அறையை அன்று மாலைக்காக கேட்டு வாங்கிடும் படியாக அவளை ஒத்துக் கொள்ள செய்யும் அளவுக்கு அதை வளர்த்திருந்தான். நாங்கள் எல்லாரும் முழுமையாக மகிழ்ச்சியாக இருந்தோம். இறுதியாக நாங்கள் மருத்துவமனை முற்றத்தை கடந்து அறுவைசிகிச்சை பிரிவு இருந்த ஒரு சிறு பச்சை கட்டிடத்துக்கு சென்றோம்.

அப்போது ஒரு செவிலியும் ஒரு மருத்துவரும் எங்களை நோக்கி நடந்து வந்தனர். அந்த மருத்துவர் நீண்டு துருத்திய காதுகள் கொண்ட வேடிக்கையான நெட்டைக்கோலன்; செவிலி என்னை முழங்கையால் இடித்து குறிப்புணர்த்த அக்காதுகள் என்னை கவர்ந்தன: நான் குளுக்கென்று சிரித்தேன். அவர்களை எங்களை கடந்த பின் மார்டின் என்னிடம் திரும்பி சொன்னான்: “நீ அதிர்ஷ்டசாலி டா. இவ்வளவு கவர்ச்சியான பெண் உனக்கு கொஞ்சம் அதிகம் தான்

நெட்டைக்கோலனை மட்டுமே பார்த்து விட்டதறகு நான் வெட்கமுற்றேன், அதனால் நான் என்னை அவன் கண்டிப்பான் என்று எதிர்பார்த்தேன். எப்படி இருந்தாலும், என்னிடம் எந்த பாசாங்கும் இல்லையே. இதன் பொருள் நான் என் ரசனையை விட மார்டினின் ரசனையை அதிகம் நம்புகிறேன் என்பது, ஏனென்றால் அவனுடைய ரசனை என்னுடைய ரசனையை விட மிகுந்த ஆர்வத்தில் உண்டானது. நான் எல்லாவற்றிலும் புறவயத்தன்மை மற்றும் ஒழுங்கை விரும்புவேன், காதல் உறவுகளில் கூட; விளைவாக ஒரு கலை அபிமானியின் கருத்தை விட கலை அறிஞனின் கருத்துக்கே அதிக மதிப்பளிப்பேன்.

என்னை நான் கலை அபிமானி என்று அழைப்பது சிலருக்கு பாவனையாக படலாம் இப்போது (எவ்விதத்திலும் தனிச்சிறப்பு இல்லாத) தனது காதல் சங்கதி ஒன்றை இப்போது சொல்லும் ஒரு மணமுறிவு பெற்ற ஆண். இருந்தும் நான் ஒரு கலை அபிமானி தான். மார்டின் வாழ்ந்து வரும் ஒன்றில் நான் விளையாடுகிறேன் என்று சொல்லலாம்.

எனது மொத்த ஸ்திரி லோல வாழ்வும் பிற மனிதர்களை போல செய்வதன் விளைவு தான் என்ற உணர்வு எனக்குள்ளது; இருந்தும் இந்த போல செய்வதில் நான் விருப்பம் கொண்டுள்ளேன் என்று நான் மறுக்கவில்லை. எதோ முழுமையாக சுதந்திரமான, விளையாட்டுத்தனமான, ரத்து செய்யக் கூடிய ஒன்று, கலை அருங்காட்சியகங்கள் அல்லது வெளிநாடுகளை சுற்றிப் பார்ப்பதை குணாம்சப்படுத்தும் ஒன்று, மார்டினின் காம வாழ்வின் பின்னுள்ள ஒரு நிபந்தனையற்ற கட்டாய விழைவிற்கு அடிபணியாத ஏதோ ஒன்று இந்த இந்த விருப்பத்தில் உள்ளது என்ற உணர்வை என்னால் தவிர்க்க முடியவில்லை. என் மதிப்பில் மார்டினை  உயர்த்தியது இந்த நிபந்தனையற்ற கட்டாய விழைவு தான். ஒரு பெண்ணை பற்றிய அவனது முடிவு இயற்கையின் முடிவாகவே எனக்கு தோன்றும், அவனது உதடுகள் வழி அவசியமே பேசுவதாக தோன்றும்.

வீடு அழகான வீடு

மருத்துவமனைக்கு வெளியே வந்த போது எல்லாமே நினைத்தபடி பிரமாதமாய் நடக்கிறது என்று விட்டு சொன்னான் “நிச்சயம் நாம் இன்று சாயந்தரம் சீக்கிரமாக கிளம்ப வேண்டும். ஒன்பது மணிக்கு எனக்கு வீட்டில் இருக்க வேண்டும்

எனக்கு ஆச்சரியமாகியது “ஒன்பதுக்கா? அப்படியென்றால் நாம் எட்டுக்கே கிளம்ப வேண்டுமே. நாம் என்ன காரணமில்லாமலா இங்கு வந்தோம்! நான் முழு இரவையும் கழிக்கலாம் என்று அல்லவா நினைத்தேன்
“ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்கிறாய்?
 “பிறகு ஒரு மணிநேரமாய் இங்கு வரை வண்டி ஓட்டி வந்ததற்கு அர்த்தமென்ன? ஏழில் இருந்து எட்டுக்குள் என்னதான் பண்ணி விட முடியும்?
“எல்லாமும் தான். உனக்கே தெரியும், நான் ஒரு சின்ன அறைக்கு ஏற்பாடு செய்தாகிற்று, எல்லாம் தடையின்றி நடக்கும். எல்லாம் உன்னை பொறுத்தது தான், நீ தான் தேவையான அளவுக்கு மனஉறுதியுடன் உள்ளதாக காட்ட வேண்டும்
“ஆனால் ஏன் நீ ஒன்பதுக்கு வீட்டில் இருக்க வேண்டும் என்கிறாய் என்பது தான் என் கேள்வி
“ஜிரின்காவுக்கு உறுதியளித்து விட்டேன். அவள் சனிக்கிழமைகளில் பொதுவாக ரம்மி ஆடிய பிறகு தான் தூங்கப் போவது வழக்கம்
“ஓ கடவுளே, நான் பெருமூச்சு விட்டேன்.
“நேற்று ஜிரின்காவுக்கு அலுவலகத்தில் மீண்டும் நிறைய பிரச்சனைகள், அதனால் நான் அவளுக்கு சனிக்கிழமை சிறிது மகிழ்ச்சி அளிக்க வேண்டும் அல்லவா? உனக்கு தெரியுமே, நான் பார்த்ததிலேயே ஆக சிறந்த பெண் அவள் தான். மேலும், அவன் தொடர்ந்தான், “எப்படியும் பிரேக் போகும் முன் உனக்கு ஒரு முழு இரவும் கிடைக்கும் என்பது குறித்து நீ சந்தோசப்படலாம் அல்லவா

அவனிடம் மறுப்பதில் பயனில்லை என்று புரிந்து கொண்டேன். மார்டினுக்கு தனது மனைவியின் மன அமைதி பற்றி உள்ள சந்தேகங்களை நம்மால் ஒருக்காலும் தீர்க்க முடியாது; ஒவ்வொரு மணிநேரம் அல்லது நிமிடத்தில் உள்ள முடிவற்ற காம சாத்தியங்கள் பற்றின அவனது விசுவாசத்தையும் எதுவும் அசைக்க முடியாது.

“வா, என்றான் மார்டின், “ஏழு மணிக்கு இன்னும் மூன்று மணிநேரங்கள் உள்ளன! நாம் சும்மா இருக்க வேண்டாம்

ஒரு பிரமை

அங்கு வாழ்பவர்களுக்கு உலாவீதியாக பயன்பட்ட உள்ளூர் பூங்காவின் அகலமான பாதையில் நடந்தோம். எங்களுக்கு பக்கமாய் நடந்து சென்ற அல்லது பெஞ்சுகளில் அமர்ந்திருந்த பல ஜோடி பெண்களை பார்வையிட்டோம், ஆனால் அவர்களின் தோற்றம் எங்களுக்கு பிடிக்கவில்லை.

ஒன்றை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும், மார்டின் இரு பெண்களுடன் பரிச்சயமாகி அவர்களுடன் ஒரு உரையாடலை துவக்கினான்; இறுதியாக ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தான், ஆனால் அது வெறுமனே தான் என்று எனக்கு தெரிந்தது. இது வண்டியேற்ற பயிற்சி என்றழைக்கப்பட்டது, அவன் அடிக்கடி தனது திறன் துருவேறக் கூடாது என்பதற்காக இதில் ஈடுபட்டான்.

அதிருப்தியுற்று நாங்கள் பூங்காவில் இருந்து வெளியேறி தெருக்களில் நடந்தோம், சிறு நகரங்களின் வெற்றிடம் மற்றும் சோம்பலுடன் அவை கொட்டாவி விட்டன.
 ஏதாவது குடிப்போம் வா; தாகமெடுக்கிறது, என்றேன் மார்டினிடம்.
கபே என்று பலகை வைத்த ஒரு கடையை கண்டோம். நாங்கள் உள்ளே சென்று பார்த்தால் அங்கு சுயசேவை மட்டுமே என்று அறிந்தோம். டைல்கள் பதித்த அவ்வறை அநிச்சை மற்றும் பகைமையின் தொனியை கொண்டிருந்தது. நாங்கள் கவுண்டரை நோக்கி சென்று ஒரு முசுடு பெண்ணிடம் இருந்து தண்ணீர் அதிகமாய் கலந்த லெமனேடுகள் வாங்கினோம்; அவற்றை ஒரு மேஜைக்கு எடுத்து சென்றோம், அது சேர்வை படிந்து ஈரமாக இருந்ததால் அங்கிருந்து சீக்கிரம் கிளம்பி விட எங்களை தூண்டியது.

“அதைப் பற்றி கவலைப்படாதே, மார்டின் சொன்னான். “நம் உலகில் அசிங்கத்திற்கும் அதற்கான நேர்மறையான பணி உள்ளது. யாரும் எங்கும் நிலைத்திருக்க விரும்புவதில்லை, மக்கள் அவசரமாக கிளம்புவார்கள்; இது வாழ்வுக்கு அவசியமான ஒரு வேகத்தை அளிக்கிறது. ஆனால் இதனால் தூண்டப்பட நாம் நம்மை அனுமதிக்கக் கூடாது. இந்த அசிங்கமான இடத்தின் பாதுகாப்பில் நாம் இப்போது எல்லா விதமான விசயங்கள் குறித்தும் பேச முடியும். அவன் சிறிது லெமனேடு குடித்து விட்டு கேட்டான்: “நீ அந்த மருத்துவ மாணவியை வண்டியேறி விட்டாயா?
“இயல்பாகவே, நான் பதிலளித்தேன்.
“அவள் எப்படி, சொல்லேன்? அவள் பார்ப்பதற்கு எப்படி என்று துல்லியமாக சொல்லேன்!

நான் மருத்துவ மாணவியை அவனுக்கு விவரித்தேன். அது எனக்கு அவ்வளவு சிரமமாக ஒன்றும் இருக்கவில்லை, அப்படி ஒரு மருத்துவ மாணவி இல்லாத போதும் கூட. ஆமாம். இதைக் கேட்க என்னை பற்றி உங்களுக்கு ஒரு மோசமான எண்ணம் ஏற்படலாம், ஆனால் நடந்தது இப்படி: நான் அவளை சிருஷ்டித்தேன்.

நான் இதை கெட்ட எண்ணத்தில் ஒன்றும் செய்ய வில்லை, அல்லது மார்டினுக்கு முன் பந்தா செய்ய வேண்டும் என்றோ அவனை ஏமாற்ற வேண்டும் என்றோ அல்ல என்று சத்தியம் செய்கிறேன். மருத்துவ மாணவியை ஏன் சிருஷ்டித்தேன் என்றால் மார்டினின் வற்புறுத்தலை தாங்க முடியாமல் தான்.

எனது செயல்பாடுகள் பற்றின மார்டினின் நினைப்புகளுக்கு ஒரு அளவில்லை. நான் தினமும் புதுப்பெண்களை சந்திப்பதாக அவன் நம்பினான். நான் அற்ற பிறிதொன்றாக அவன் என்னை கண்டான் நான் ஒரு வாரத்தில் ஒரு பெண்ணை கூட அடையவில்லை என்பது மட்டுமல்ல, ஒரு பெண்ணின் பக்கம் கூட நெருங்கவில்லை என்பதை சொல்லி இருந்தால் என்னை பாசாங்கு செய்பவன் என்று அவன் நினைத்திருக்க கூடும்.

இந்த காரணத்தினாலே சில நாட்களுக்கு முன் மருத்துவ மாணவி ஒருத்தியை பார்வையிட்டதாக நான் சொல்லும்படி வற்புறுத்தப்பட்டேன். மார்டின் திருப்தி உற்றான்; அப்பெண்ணை வண்டி ஏற என்னை தூண்டினான். இன்று அவன் எனது முன்னேற்றத்தை பற்றி விசாரித்து கொண்டிருந்தான்.

 அவள் எந்த நிலையில் இருக்கிறாள்? அவள் அந்த குறிப்பிட்ட... அவன் தன் கண்களை மூடி இருட்டுக்குள் ஒரு ஒப்பீட்டை தேடினான்: பிறகு அவன் ஒரு பொது தோழியை நினைவுகூர்ந்தான்: “...அவள் மர்கெட்டாவின் நிலையில் தான் இருக்கிறாளா?
“அவள் அதை விட மேலானவள்
“சும்மா விளையாடுகிறாய், மார்டின் வியந்தான்.

“அவள் உனது ஜிரிங்காவின் நிலையில் இருக்கிறாள்

மார்டினுக்கு தனது மனைவி தான் உச்சபட்ச உரைகல். எனது அறிக்கையால் மார்டின் மிக திருப்தியுற்று ஒரு பகல் கனவில் ஆழ்ந்தான்.

ஒரு வெற்றிகரமான வண்டியேறுதல்

பின்னர் கர்டுராய் நீள்கால்சட்டையும் குறுகின கோட்டும் அணிந்த ஒரு பெண் அறைக்குள் வந்தாள். அவள் கவுண்டரை நோக்கி சென்றாள், ஒரு குளிர்பானத்துக்காக காத்திருந்து ஒன்றை வாங்கி எடுத்துப் போனாள். எங்களுக்கு அருகாமையில் உள்ள ஒரு மேஜைக்கு சென்று கோப்பையை உதடுகளுக்கு கொண்டு சென்று அமராமலேயே குடித்தாள்.

மார்டின் அவளை நோக்கி திரும்பினான்: “மிஸ், அவன் சொன்னான், “நாங்கள் இங்கே புதியவர்கள், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?
அப்பெண் புன்னகைத்தாள். அவள் பார்க்க அழகாகத் தான் இருந்தாள்.
“வெக்கை தாங்கவில்லை, என்ன பண்ணுவதென்றே எங்களுக்கு தெரியவில்லை
“நீச்சலுக்கு போங்க
 அது தான் சரி. எங்களுக்கு இங்கே எங்கே நீச்சலுக்கு போவதென்றே தெரியவில்லை
“இங்கே நீச்சல்குளமொன்றும் இல்லை
“அதெப்படி இல்லாமல் போகும்?
“இங்கே ஒரு நீச்சல் குளம் உள்ளது, ஆனால் ஒரு மாதமாக அது வறண்டு கிடக்கிறது
“ஆறு உள்ளதல்லவா?
 அதை தூர்வாரிக் கொண்டிருக்கிறார்கள்
“அப்படியென்றால் எங்கே தான் நீச்சலடிக்க போவது?
“லேக் ஹோட்டரில் மட்டும் தான் முடியும், ஆனால் அது ஏழு கிலோமீட்டர் தள்ளி உள்ளது
“அது ஒன்றும் விசயமில்லை, எங்களிடம் கார் உள்ளது; நீங்கள் கூட வந்தால் நன்றாக இருக்கும்
“எங்கள் வழிகாட்டியாக, நான் சொன்னேன்.
“எங்களது வழிகாட்டும் ஒளிவிளக்காக, மார்டின் என்னை திருத்தினான்.
“எங்கள் நட்சத்திர வெளிச்சம், என்றேன் நான்.
“எங்கள் வடக்கு நட்சத்திரம், என்றான் மார்டின்
“எங்கள் வீனஸ் கிரகம், என்றேன் நான்.
“நீங்கள் தான் எங்கள் நட்சத்திர தொகுதி; நீங்கள் எங்களுடன் கூட வந்தே ஆக வேண்டும், என்றான் மார்டின்.

அந்த பெண் எங்களது அசட்டு சீண்டல்களால் குழம்பிப் போனாள்; முடிவாக அவள் எங்களுடன் வருவதாக சொன்னாள், ஆனால் வேறொரு விசயத்தை அவள் முதலில் சமாளிக்க வேண்டும்; அதற்கு பின் அவள் தனது நீச்சல் உடையை எடுத்துக் கொண்டு வருவாள்; நாங்கள் இன்னும் ஒரு மணிநேரத்தில் அவளுக்காக அதே இடத்தில் காத்திருக்க வேண்டும் என்றாள்.

நாங்கள் மகிழ்ச்சியானோம். அவள் தனது பின்புறத்தை சமர்த்தாக இடம்வலம் ஆட்டியபடி, தனது கருங்குழல் சுருள்களை குலுக்கியபடி நடந்து போவதை வேடிக்கை பார்த்தோம்.

“இங்கே பார், மார்டின் சொன்னான், “வாழ்க்கை குறுகியது. ஒவ்வொரு நிமிடத்தையும் நாம் பயன்படுத்தியாக வேண்டும்

நட்பை போற்றி

நாங்கள் மீண்டும் பூங்காவுக்கு சென்றோம். மீண்டும் பெஞ்சுகளில் அமர்ந்திருந்த பல ஜோடிப் பெண்களை ஆராய்ந்தோம்; அன்று பல இளம்பெண்கள் அழகாய் இருக்க நேர்ந்தது, ஆனால் அவர்களின் ஜோடி அழகாய் இருக்க ஒருபோதும் நேரவில்லை.
“இவ்விசயத்தில் ஏதோ ஒரு சிறப்பு விதி உள்ளது, நான் மார்டினிடம் சொன்னேன்.
“ஒரு அசிங்கமான பெண் தனது அழகான தோழியின் பளபளப்பில் இருந்து ஏதாவது அடையலாம் என்று எதிர்பார்க்கிறாள்; ஒரு அழகான பெண்ணோ, தன் பங்குக்கு, ஒரு அசிங்கமான பெண்ணின் பின்னணியில் தான் மேலும் பளபளப்பாக தனியே திகழக் கூடும் என்று எதிர்பார்க்கிறாள்; இதன் மூலம் நமக்கு என்ன புரிய வருகிறதென்றால் நமது நட்பானது தொடர்ச்சியான சோதனைகளுக்கு உட்படுகிறது. நான் குறிப்பாக இதைத் தான் மதிக்கிறேன், அதாவது நிகழ்வுகளின் எதேச்சையான வளர்ச்சிக்கு நாம் நமது விருப்ப தேர்வுகளை பலியாக்குவதில்லை, ஏதாவது பரஸ்பர போராட்டத்துக்காக கூட பலியாக்குவதில்லை என்பதை தான்; நம்மைப் பொறுத்தவரையில் விருப்பத்தேர்வு என்பது எப்போதுமே பணிவன்புக்கான விசயம். ஒரு அறைக்குள் முதலில் செல்வது தானாக இருக்கக் கூடாது என்ற் எண்ணத்தில் ஒருபோதும் ஒரு அறைக்குள் தனியே நுழைய முடிந்திராத பழங்கால கனவான்களை போன்று நாம் ஒருவருக்கொருவர் அழகிய பெண்களை தர முன்வருகிறோம்

“ஆமாம் மார்டின் உண்ர்ச்சிகரமாக சொன்னான். “நீதான் உண்மையான நண்பன். வா சற்று நேரம் உட்காருவோம், எனக்கு கால் வலிக்கிறது

இவ்வாறு நாங்கள் சூரியனை நோக்கி முகம் காட்டியபடி சௌகரியமாக அமர்ந்தோம்; எங்களைச் சுற்றி யாரும் கவனிக்காமல் உலகம் விரைவதை அனுமதித்தோம்.

வெண்ணிற ஆடையில் வந்த பெண்

சட்டென்று மார்டின் எழுந்தான் (நிச்சயமாய் ஏதோ ஒரு புதிரான உணர்வால் தூண்டப்பட்டு தான்); பூங்காவில் ஒரு தனியான பாதையை நோக்கி வெறித்தான். எங்கள் வழியே வெண்ணிற ஆடையணிந்த ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள். அவளது உடலின் விகித சமம் அல்லது முகத்தோற்றத்தை முழுநம்பிக்கையுடன் அளவிடுவது சாத்தியமாகும் முன், ஏற்கனவே தொலைவில் இருந்தே அவள் மறுக்க முடியாத, சிறப்பான, மிக நன்றாக தனியே தெரியும் ஒரு கவர்ச்சியை கொண்டிருப்பதை, அவளது தோற்றத்தில் ஒரு குறிப்பிட்ட தூய்மை அல்லது மென்மை இருப்பதை நாங்கள் கண்டோம்.

அப்பெண் வெகுவாக எங்கள் அருகில் வந்தவுடன் அவள் ரொம்பவே இளமையானவள், ஒரு குழந்தை மற்றும் இளம்பெண்ணுக்கு ஒருமாதிரி இடைப்பட்டவள் என்பதை உணர்ந்தோம்; இது எங்களை ஒரு முழுமையான கொந்தளிப்பு நிலைக்கு இட்டு சென்றது. மார்டின் பெஞ்சில் இருந்து குதித்தெழுந்து சொன்னான்: “மிஸ் நான் தான் இயக்குநர் போர்மன், சினிமா இயக்குநர்; நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும்

அவன் அவளிடம் கைநீட்டினான்; அப்பெண் முழுமையான ஒரு அதிர்ச்சி முகபாவனையுடன் கை குலுக்கினாள்.

மார்டின் என் பக்கமாய் தலையசைத்து சொன்னான் “இவர் தான் எனது அதிர்ஷ்டசாலியான படப்பிடிப்பாளர்
“என் பெயர் ஒண்டிரிசெக், நான் என் கையை நீட்டியபடி சொன்னேன்.

அப்பெண் தலையசைத்தாள்.
“நாங்கள் ஒரு சங்கடமான சூழ்நிலையில் மாட்டி உள்ளோம். நான் எனது படத்துக்காக வெளிப்புற இடங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த பிரதேசத்தை நன்கு அறிந்துள்ள எனது உதவியாளர் எங்களை இங்கே வந்து இந்நேரம் சந்தித்திருக்க வேண்டும், ஆனால் அவர் இன்னும் வரவில்லை, அதனால் இந்த நகரத்தில் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு எப்படி சென்று வருவது என்று நாங்கள் வியந்து கொண்டிருக்கிறோம். என் நண்பர் ஒண்டெரிக் இருக்கிறார் இல்லையா, மார்டின் தமாஷாக சொன்னான், “அவர் எப்போதும் ஒரு குண்டான ஜெர்மானிய நூலை படித்துக் கொண்டிருக்கிறார், ஆனால் அதையும் இங்கே கண்டுபிடிக்க முடியவில்லை

ஒருவாரமாக இல்லாமல் நான் தவித்த அந்த புத்தகம் பற்றின குறிப்பு என்னை எப்படியோ சட்டென்று எரிச்சலாக்கியது: “நீங்கள் அந்த நூலில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை என்பது வருத்தத்துக்குரியது, நான் என் இயக்குநரை சாடினேன், “நீங்கள் போதுமான அளவு தயாரித்திருந்து, புத்தகம் வாசிப்பதை உங்கள் படப்பிடிப்பாளருக்கு விட்டிருந்தால், உங்கள் படங்கள் இவ்வளவு மேலோட்டமாய ஒருவேளை இருந்திருக்காது, அவற்றில் இவ்வளவு அசட்டுத்தனமும் இல்லாமல் இருந்திருக்கும். இவ்வளவும் சொன்னதற்கு மன்னியுங்கள். நான் பிறகு அப்பெண்ணை நோக்கி மன்னிப்புடன் திரும்பினேன். “எப்படியும், எங்களது பணி குறித்த சச்சரவுகளை கொண்டு நாங்கள் உங்களை இனி தொந்தரவு செய்ய மாட்டோம்; எங்களது படம் பொஹிமியாவில் உள்ள எட்ருஸ்கன் கலாச்சாரம் பற்றின ஒரு வரலாற்று படமாக இருக்கும்

“ஆமாம், அப்பெண் தலையாட்டினாள்.

 இது ஒரு சுவாரஸ்யமான புத்தகம் தான் பாருங்களேன். நான் அப்பெண்ணிடம் புத்தகத்தை கொடுத்தேன், அவள் அதை ஒருவகை தெய்வீக பயமரியாதையுடன் தன் கைகளில் வாங்கினாள்; நான் எதிர்பார்ர்த்ததை அறிந்து அதனை மெல்ல புரட்டவும் செய்தாள்.
“பாசெக் கோட்டை கட்டாயம் இங்கிருந்து ரொம்ப தொலைவு இருக்க முடியாது, நான் தொடர்ந்தேன். “அது பொஹிமியன் எட்ரூசியர்களின் மையமாக இருந்தது ஆனால் நாங்கள் அதை சென்றடைவது எப்படி?
“அது பக்கம் தான், அந்த பெண் பெருமிதத்துடன் கூறினாள், ஏனென்றாள் பாசெக்கை நோக்கிய சாலை பற்றின அறிவு அவளுக்கு எங்களுடனான குழப்பமான உரையாடலின் நடுவே ஒரு வலுவான பிடிமானத்தை அளித்தது.
“அப்படியா? இதை சுற்றிய பிரதேசம் உங்களுக்கு நல்ல பரிச்சயம் உண்டா?, மார்டின் பெரும் நிம்மதியை நடித்தபடி சொன்னான்.
“கட்டாயமா தெரியும், என்றாள் அப்பெண், “இங்கிருந்து ஒரு மணிநேரம் தான்
“நடையிலா?, என்று கேட்டான் மார்டின்.
“ஆமாம் நடையில் தான், என்றாள் அப்பெண்.
“ஆனால் அதிர்ஷ்டவசமாக நாங்கள் கார் வைத்திருக்கிறோம், நான் சொன்னேன்.
“நீங்கள் எங்களது வழிகாட்டியாக இருக்க விரும்ப மாட்டீர்களா?, என்றான் மார்டின், ஆனால் நான் இந்த வழமையான நையாண்டி சடங்குகளை தொடர விரும்பவில்லை, ஏனெனில் எனக்கு மார்டினை விட மேலும் துல்லியமான உளவியல் நுண்ணுணர்வு இருந்தது; இந்த விவகாரத்தில் அசட்டையான வேடிக்கைகள் எங்களுக்கு அதிக தீங்கு தான் விளைவிக்கும் என்றும் எங்களது சிறந்த ஆயுதம் முழுமையான தீவிரத்தன்மை மட்டும் தான் என்று உணர்ந்தேன்.
 மிஸ் நாங்க உங்களை எப்படியும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை, நான் சொன்னேன், “ஆனால் எங்களுடன் சற்று நேரம் செலவு பண்ண நீங்கள் காருண்யம் காட்டினால், நாங்கள் பார்க்க விரும்புகிற இடங்களை காட்டித் தந்தால், எங்களுக்கு பெரிய அளவில் நீங்கள் உதவ முடியும் நாங்கள் உங்களிடம் நிறைய கடன்பட்டிருப்போம்
“நிச்சயமாக, அப்பெண் மீண்டும் தலையாட்டினாள், “நான் சந்தோசமாக செய்வேன் ஆனால்.... அப்போது தான் அவள் கையில் ஒரு ஷாப்பிங் பை இருப்பதை, அதில் இரு லெட்யூஸ்கள் இருப்பதை கவனித்தோம். “நாம் அம்மாவுக்கு இந்த லெட்யூஸ்களை வழங்க வேண்டும், ஆனா வீடு பக்கம் தான், போய் வந்து விடுகிறேன்
“கட்டாயமாக நீங்க அம்மாவுக்கு லெட்யூஸ்கள் கொண்டு தந்து தான் ஆக வேண்டும், நான் சொன்னேன். “நாங்கள் உங்களுக்காக இங்கே காத்திருக்கிறோம்
“ஆமா பத்து நிமடத்துக்குள் வந்து விடுவேன், அப்பெண் சொன்னாள்.
மீண்டும் அவள் தலைவாட்டினாள்; பிறகு ஆர்வமாக கிளம்பினாள்.
“கடவுளே!, என்றான் மார்டின்.
“முதல் தரம் தான், என்ன?
“நிச்சயமா. அந்த இரண்டு செவிலிகளையும் இவளுக்காக தியாகம் பண்ண நான் தயார்

மிகை விசுவாசத்தின் நயவஞ்சகப் பண்பு

ஆனால் பத்து நிமிடங்கள் கடந்தாகி விட்டது, கால் மணிநேரம் போயிற்று; அப்பெண் திரும்ப வரவில்லை.

“பயப்படாதே, மார்டின் தேற்றினான். “எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் அவள் வருவது உறுதி. நமது நடிப்பு அவ்வளவு முழுமையாக நம்பும்படியாய் இருந்தது; அப்பெண் பேருவகையில் இருந்தாள்

நானும் அதே கருத்தை தான் கொண்டிருந்தேன்; அதனால் ஒவ்வொரு நொடியும் அக்குழந்தைத்தனமான பெண்ணுக்கான் ஆர்வம் மேலும் மேலும் பொங்க நாங்கள் தொடர்ந்து காத்தோம். இதற்கிடையே கர்டுரோய் நீள்கால்சட்டை அணிந்த பெண்ணை நாங்கள் சந்திக்க வேண்டிய வேளையும் கடந்து போயிற்று,.ஆனால் வெண்ணிற ஆடை அணிந்த எங்களது அச்சிறு பெண்ணின் மீது நாங்கள் அவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்ததால் நாங்கள் கிளம்ப வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை.

கூட நேரமும் கடந்து கொண்டிருந்தது.

“கேளு மார்டின், அவள் திரும்ப வருவாள் என்று எனக்கு தோன்றவில்லை நான் கடைசியில் சொன்னேன்.
“அதை நீ எப்படி விளக்குவாய்? எப்படியும் அப்பெண் கடவுளுக்கு நிகராக நம்மைத் தானே நம்பினாள்
“ஆமாம் நான் சொன்னேன், “அங்கு தான் நம் துரதிர்ஷ்டம் உள்ளது. இதன் பொருள் அவள் நம்மை சற்று மிகுதியாக நம்பி விட்டாள்
“என்ன? ஒருவேளை நம்மை அவள் நம்பி இருக்க வேண்டாம் என்று நினைக்கிறாயா?
“அது இதை விட மேலானதாய் இருந்திருக்கும். அளவு கடந்த விசுவாசம் தான் ஆக மோசமான பக்கத்துணை. ஒரு எண்ணம் என் ஆர்வத்தை தூண்டியது; நான் அதில் சற்று அதிகமாகவே மூழ்கிப் போனேன்: “நீ எதையாவது நேரடியாக நம்பினால் உனது விசுவாசம் காரணமாய் அதை அபத்தமான ஒன்றாக மாற்றி விடுவாய். ஏதாவது ஒரு அரசியல் தரப்பின் அசலான பின்பற்றுவோனாக நீ இருப்பதாய் கொண்டால் அதன் விதண்டாவாதங்களை நீ சீரியசாக எடுக்க கூடாது, அவற்றின் பின் ஒளிந்துள்ள அதன் நடைமுறை நோக்கங்களை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். அரசியல் அலங்கார சொல்லாட்சி மற்றும் விதண்டாவாதங்கள் உண்மையில் நம்மை நம்ப வைப்பதற்காக இல்லை, அவை, சொல்லப்போனால், ஒரு பொதுவான நம்பகமான சப்பைக்கட்டு ஆகத் தான் பயன்படுகின்றன. இவற்றை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் முட்டாள்கள் விரைவிலோ தாமதமாகவோ அவற்றில் உள்ள முரண்பாடுகளை கண்டறிவார்கள், எதிர்க்க துவங்குவார்கள், அவப்பேருக்குரிய அவிசுவாசியாக துரோகியாக போய் முடிவார்கள். வேண்டாம், அளவுகடந்த விசுவாசம் எந்த நன்மையையும் தராது அரசியல் மத அமைப்புகளுக்கு மட்டுமல்ல, நம் அப்பெண்ணை நம்ப வைக்க பயன்படுத்திய நமது சொந்த அமைப்புக்கு கூடத் தான்
“ஏனோ எனக்கு நீ சொல்வது புரியவில்லை
“ரொம்ப எளிது: அப்பெண்ணுக்கு நாம் தீவிரமான மரியாதைக்குரிய இரு கனவான்கள்; அவள் ஒரு முதிய மனிதருக்கு டிராமில் தனது இருக்கையை தரும் ஒரு பண்பான குழந்தையை போல் நம்மையும் மகிழ்விக்க பார்த்திருக்கிறாள்
“அப்படியென்றால் அவள் ஏன் நம்மை மகிழ்விக்க இல்லை?
“ஏனென்றால் அவள் நம்மை முழுமையாக நம்பி விட்டாள். அம்மாவுக்கு லெட்யூஸ்களை கொடுத்து விட்டு உடனடியாக உற்சாகத்துடன் நம்மைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லி விட்டாள்: வரலாற்று சினிமா, பொஹிமியாவில் உள்ள யுட்ரஸ்கன்கள் பற்றி, அத்தோடு அம்மாவும்...
“சரி, மிச்ச விசயங்கள் எனக்கு துல்லியமாய் தெளிவாகின்றன... மார்டின் குறுக்கிட்டு விட்டு பெஞ்சில் இருந்து எழுந்தான்.

நம்பிக்கை துரோகம்

நகரத்தின் கூரைகள் மீது சூரியன் ஏற்கனவே மெல்ல இறங்கிக் கொண்டிருந்தது; சற்று குளிரத் துவங்கியது; நாங்கள் சோகமானோம். கர்டுரோய் நீள்கால் சட்டை அணிந்த பெண் ஒருவேளை தவறுதலாக இன்னும் எங்களுக்காக காத்திருக்கக் கூடும் என்று கபேவுக்கு மீண்டும் சென்றோம். ஆம், அவள் அங்கு இல்லை தான். மணி ஆறு முப்பது. காரை நோக்கி நடந்தோம்; ஒரு வெளிநாட்டு நகரத்தில் இருந்தும் அதன் சுகங்களில் இருந்தும் நாடுகடத்தப்பட்ட இருவரை போல் சட்டென்று உணர்ந்திட, எங்களது எல்லைகடந்த வாழ்நிலமான காருக்கு திரும்புவதை தவிர வேறு ஒன்றும் எங்களுக்கு அப்போதைக்கு செய்ய இல்லை என்று சொல்லிக் கொண்டோம்.

“சரி சரி காருக்குள் மார்டின் என்னை கண்டித்தான் “எப்படியும் ஆகட்டும் இப்படி முகத்தை தொங்கப் போடாதே! அதற்கான எந்த காரணமும் நமக்கில்லை! ஆக முக்கியமான விசயம் இன்னும் நம் முன் தானே உள்ளது!

ஜிரின்கா மற்றும் அவளது ரம்மி ஆட்டம் காரணமாய் அந்த ஆக முக்கியமான சமாச்சாரத்துக்கு எங்களுக்கு இன்னும் ஒரு மணிநேரமே  மிச்சம் உள்ளது என்று நான் மறுக்க விரும்பினேன் ஆனால் அமைதி காக்க முடிவு செய்தேன்.
“எப்படியும், மார்டின் தொடர்ந்தான், “இன்று ஒரு பயனுள்ள நாள் தான்; டிரிப்ளிசில் இருந்து வந்த அப்பெண்ணை பார்வையிட்டது, கர்டுரோய் நீள்சட்டை பெண்ணை வண்டி ஏறியது; என்ன இருந்தாலும் எல்லாமே நாம் விரும்பிய போது அடையும் படி தயாரித்து விட்டோமே. மீண்டும் இங்கே கார் ஓட்டி வருவதை தவிர வேறு ஒன்றும் இனி மிச்சம் இல்லை!

நான் மறுக்கவே இல்லை. பார்வையிடுவதும் வண்டியேறுவதும் நன்றாகத் தான் நடந்தேறின. அவை திட்டப்படி நிகழும். ஆனால் கடந்த வருடத்தில் எண்ணற்ற பார்வையிடல்கள் மற்றும் வண்டி ஏற்றங்களுக்கு மேல் மார்டினால் வேறு ஒன்றும் உருப்படியாக சாதிக்க முடியவில்லை என்று அத்தருணத்தில் எனக்கு தோன்றியது.

நான் அவனை நோக்கினேன். எப்போதும் போல அவனது கண்கள் காமவேட்கையில் ஜொலித்தன. அந்நொடியில் நான் மார்டினை ரசித்தேன்; அவன் தன் வாழ்வு முழுதும் வீறுநடையிட ஏந்திய பதாகையை ரசித்தேன்: பெண்கள் பின்னான சாஸ்வத நாட்டத்தின் பதாகை.

காலம் கடந்து கொண்டிருந்தது; மார்டின் சொன்னான்: “ஏழு மணி ஆகி விட்டது

ஆஸ்பத்திரி வாயிலுக்கு பத்து மீட்டர் தொலைவிருக்கையில் வண்டியை நிறுத்தினோம், அங்கிருந்து பின்தோற்ற கண்ணாடி வழி வெளிவருபவர்களை பத்திரமாக கவனிக்க முடியும் என்பதால்.

நான் அப்போதும் அப்பதாகையை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அதனோடு வருடாவருடம் அவனது பெண்கள் பின்னான இந்த தொடர்தல் பெண்களை பற்றியதாக அல்லாமல் அதிகமும் பின்தொடர்தலுக்கானதாகவே மாறியிருந்தது. பின்தொடர்தல் என்பது பயனற்றது என்று முன்கூட்டியே முடிவு செய்து விட்டால் எவ்வளவு பெண்களை வேண்டுமானாலும் பின் தொடரலாம்; இவ்வாறு பின்தொடர்தலை ஒரு அறுதியான பின்தொடர்தலாக்கலாம். ஆமாம்: மார்டின் ஒரு அறுதியான பின்தொடர்தல் நிலையை அடைந்து விட்டான்.

நாங்கள் ஐந்து நிமிடங்கள் காத்திருந்தோம். அப்பெண்கள் வரவில்லை.

இது என்னை சற்றும் அவஸ்தைக்குள்ளாக்க இல்லை. அவர்கள் வந்தாலும் இல்லையென்றாலும் எனக்கு அவ்விசத்தில் முழுமையான அக்கறையின்மை தான் இருந்தது. அவர்கள் வந்தாலும் கூட ஒரு மணிநேரம் வண்டி ஓட்டி தனிமையான சிற்றறைக்கு சென்று, அவர்களுடன் நெருக்கம் பாராட்டி, புணர்ந்து, மேலும் எட்டு மணிக்கு இனிமையாக குட்பை சொல்லி கிளம்ப முடியுமா? இல்லை, எங்களுக்கு கையிலுள்ள நேரத்தை மார்டின் எட்டுமணியுடன் சுருக்கி விட்டதால் அவன் ஒரு சுயஏமாற்று விளையாட்டின் உலகுக்கு மொத்த சமாச்சாரத்தையும் மாற்றி விட்டான்.

பத்து நிமிடங்கள் கடந்தன. யாரும் வாயிலில் தோன்றவில்லை.

மார்டின் தர்மாவேசம் கொண்டான்; அநேகமாக கத்தியே விட்டான்: “அவர்களுக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் அளிப்பேன்! அதற்கு மேல் காத்திருக்க மாட்டென்!

மார்டின் இளமையை கடந்து சற்று காலம் ஆகி விட்டது என்று நான் மேலும் ஊகித்தேன். அவன் தன் மனைவியே நிஜமாகவே நேசித்தான். சொல்லப்போனால் அவனுடையது மிக வழமையான ஒரு திருமணம். இது தான் எதார்த்தம். ஆனால் இருந்தும் இந்த எதார்த்தத்துக்கு அப்பால் (அதனோடு ஒரே சமயத்திலும்) மார்டினின் இளமை தொடர்கிறது, ஒரு அமைதியற்ற, உல்லாசமான நெறிபிழைத்த இளமை ஒரு வெறும் விளையாட்டாக உருமாறியது, இனி ஒருபோதும் எதார்த்த வாழ்வில் குறுக்கிடாத தன்னையே ஒரு நிஜமாக உணர்கிற ஒரு விளையாட்டு. இவ்வாறு அவசியத்தால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு வீரத்திருத்தகை தான் மார்டின், அவன் தனது காதல் உறவுகளை ஒரு விளையாட்டின் தீமையின்மையாக, தன்னை அறியாமலே, மாற்றி உள்ளான்: அதனால் அவற்றில் தனது இச்சையுற்ற ஆன்மாவை முழுக்க ஈடுபடுத்திக் கொண்டே இருக்கிறான்.

சரிதான், நான் எனக்கே சொல்லிக் கொண்டேன். மார்டின் தனது சுயஏமாற்றின் கைதி தான், அப்படியென்றால் நான் யார்? இந்த வேடிக்கையான விளையாட்டில் அவனுக்கு நான் ஏன் உதவி செய்கிறேன்? இது அத்தனையும் ஒரு பிரமை என்றறிந்த நான் ஏன் அவனோடு சேர்ந்து பாசாங்கு செய்கிறேன்? அப்படியென்றால் மார்டினை விட அதிக வேடிக்கையானவன் நான் அல்லவா? அதிகபட்சம் எனக்கு முன் உள்ளது அந்நியமான அக்கறையற்ற பெண்களுடன் கழிப்பதற்கான, நோக்கமற்ற ஒரு மணிநேரம் என்று அறிந்திருந்தும் ஏதோ எனக்கு முன் ஒரு காம சாகசம் காத்திருக்கிறது எனபது போல் ஏன் நான் நடந்து கொள்கிறேன்?

அந்த தருணத்தில் மருத்துவமனை வாயில் அருகே இரு இளம்பெண்களை நான் கண்ணாடியில் காணுற்றேன். அவ்வளவு தொலைவில் இருந்தும் அவர்கள் பவுடர் மற்றும் சிவப்பு பூச்சின் பளபளப்பை வெளிப்படுத்தினர். அவர்கள் கண்ணைக்கவரும்படியாய் நளினமாய் தோன்றினர்; அவர்களின் தாமதம் அவர்களின் இந்த அலங்கார தோற்றத்துடன் தொடர்புடையது என்பது வெளிப்படை. அவர்கள் திரும்பிப் பார்த்து விட்டு எங்கள் காரை நோக்கி வந்தனர்.

“மார்டின் நாம் இனி ஒன்றுமே செய்ய முடியாது. நான் அப்பெண்களை கைவிட்டேன். “பதினைந்து நிமிடங்கள் மேல் முடிந்து விட்டது. நாம் போகலாம். ஆக்சிலேட்டரில் காலை அழுத்தினேன்.

பச்சாதாபம்
நாங்கள் Bயில் இருந்து வெளியேறினோம். இறுதியான சிறு வீடுகளை கடந்து வயல்வெளிகள் மற்றும் கானகங்கள் ஊடே கிராமப்புறங்களுக்குள் ஓட்டி சூரியன் அஸ்தமிக்கும் மர உச்சிகளை நோக்கி சென்றோம்.

அமைதியாக இருந்தோம்.

நான் யூதாஸ் இஸ்காரியத்தை பற்றி நினனித்தேன், அவன் ஏசுவை காட்டிக் கொடுத்தது அவரை முடிவற்று அவன் விசுவசித்ததனாலேயே என்று அவனைக் குறித்து ஒரு அற்புதமான எழுத்தாளர் சொல்கிறார்: அனைத்து யூதர்களுக்கும் ஏசு தனது தெய்வீக ஆற்றலை காட்டுவதற்கான அந்த அற்புதத்துக்காக அவனால் காத்திருக்க முடியவில்லை, அதனால் அவரை எப்படியேனும் செயலுக்கு தூண்டுவதற்காக அவரது வதையாளர்களிடம் அவன் அவரை ஒப்புவித்தான்; அவன் அவரது வெற்றியை விரைவுபடுத்துவதற்காக அவரை காட்டிக் கொடுத்தான்.

ஓ, ஆண்டவா, நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன், நான் மார்டினை அவனை இதைவிட கீழான லட்சியங்களில் இருந்து கைவிட்டேன்; சொல்லப்போனால் நான் அவனை (பெண்களை வசியம் செய்யும் அவனது தெய்வீக அற்றலை) நம்புவதை நிறுத்தியதானாலே தான் அவனை கைவிட்டேன்; யூதாஸ் இஸ்காரியத் மற்றும் சந்தேகிக்கும் தாமஸின் கீழ்த்தரமான கலவை தான் நான். எனது இந்த தவறினால் மார்டின் பாலான எனது கருணை வளர்ந்து வருவதாக உணர்ந்தேன்; நித்திய பின்தொடர்தலுக்காக அவனது பதாகை (அது எங்கள் தலைக்கு மேல் படபடப்பதை எங்களால் அப்போதும் கேட்க முடிந்தது) என்னை கண்ணீர் சிந்த வைத்தது எனது அதிஅவசர செயலுக்காக சுயநிந்தனை செய்ய ஆரம்பித்தேன்.

இளமையை குறிக்கும் இந்த சைகைகளை கைவிடுவதற்கு நான் தயாராக இருக்கிறேனா? அவற்றை போல செய்வது மற்றும் எனது மற்றபடியான அர்த்தபூர்வமான வாழ்வுக்குள் இந்த அசட்டு நடவடிக்கைக்கு ஒரு சிறிய பாதுகாப்பான இடத்தை கண்டடைய
முயல்வதைக் காட்டிலும் வேறேதாவது எனக்கு உள்ளதா? இதெல்லாம் ஒரு அர்த்தமற்ற விளையாட்டு என்பது ஒரு பொருட்டா என்ன? எனக்கு அது தெரியும் என்பதுவும் ஒரு பொருட்டா? அது அர்த்தமற்றது என்பதால் நான் அந்த விளையாட்டை ஆடுவதை நிறுத்துவேனா என்ன?

நித்திய இச்சையின் தங்க ஆப்பிள்


அவன் என்னருகே அமர்ந்திருந்தான்; மெல்ல மெல்ல அவனது தர்மாவேசம் அடங்கியது.
“கேள், அவன் சொன்னான், “அந்த மருத்துவ மாணவி முதல் தரமா என்ன?
“அவள் ஜிரின்காவின் நிலையில் இருப்பவள் என்று நான் சொன்னேனே

மார்டின் என்னிடம் மேலும் கேள்விகள் கேட்டான். மருத்துவ மாணவியை மீண்டும் அவனுக்கு விவரிக்க வேண்டி வந்தது.

பிறகு அவன் சொன்னான்: “ஒருவேளை நீ அவளை பிற்பாடு என்னிடம் தரலாம் இல்லையா?

நான் நம்பகத்தன்மையுடன் தோன்ற விரும்பினேன்: “அது கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். நீ என் நண்பன் என்பது அவளுக்கு பிரச்சனையாக இருக்கலாம். அவள் உறுதியான கொள்கைகள் வைத்திருக்கிறாள்
அவள் உறுதியான கொள்கைகள் வைத்திருக்கிறாள், என்று மார்டின் சோகமாக சொன்னான்; அவன் இதனால் வருத்தமடைந்துள்ளான் என்பது வெளிப்படை.
அவனை வருத்தமடைய வைக்க நான் விரும்பவில்லை.
“எனக்கு உன்னை தெரியாது என்று நான் நடித்தால் பிரச்சனை இல்லை தான், நான் சொன்னேன். “ஒருவேளை நீ மற்றொருவராக நடித்து அவளை ஏமாற்றி விடலாம்
“நல்லது! இன்றைக்கு மாதிரி, நான் ஒருவேளை போர்மெனாக நடிக்கலாம்
“அவள் பட இயக்குநர்களை சற்றும் பொருட்படுத்துவதில்லை. அவளுக்கு தடகள வீரர்களை தான் அதிகம் பிடிக்கும்
“ஏன் கூடாது? மார்டின் சொன்னான், “எல்லாமே சாத்தியத்தின் எல்லைக்குள் தான் உள்ளன; நாங்கள் இந்த விவாதத்தில் சற்று நேரம் கழித்தோம். அவ்வப்போது இத்திட்டம் மேலும் தெளிவாகும்; சற்று நேரத்திற்கு பின் வரப்போகும் அந்தியில் அது எங்கள் முன் ஒரு அழகான, பழுத்த, பளபளப்பான ஆப்பிளை போல தொங்கி ஆசையை தூண்டும்.

இந்த ஆப்பிளுக்கு, சற்று பகட்டாக, நித்திய இச்சையின் தங்க ஆப்பிள் என்று பெயரிட என்னை அனுமதியுங்கள்.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates