Friday 30 March 2012

ஆல்பர்ட் நாப்ஸ்: ஒரு பெண்ணியவாதி ஆணாக வேண்டுமா?




சமீபத்திய ஆஸ்கா விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட படங்களில் ஒன்றான அல்பர்ட் நாப்ஸ் (Albert Nobbs) பால்நிலை பற்றின ஒரு சிக்கலான பிரச்சனையை சற்று மிகையான கற்பனையுடன் பேசுகிறது. அது ஒரு பெண் எத்தனை சதம் ஆண் மற்றும் பெண்ணாக இருக்கிறாள் என்பது. பௌதீகமாக இப்பிரச்சனையை சட்டபூர்வமாகவும் கலாச்சார நடைமுறைரீதியாகவும் தீவிரமாக சந்திப்பவர்கள் ஓட்டப்பந்தய வீராங்கனைகள் மற்றும் திருநங்கைகள். தமது பண்பு மற்றும் ஆளுமையில் பால் சமநிலை இல்லாதவர்கள் அதை மறைக்க தொடர்ந்து முயன்றபடியே இருப்பார்கள். சிலர் அறிந்தும் அறியாமலும் bisexualஆக வாழ்கிறார்கள். மகாபாரதத்தில் கிருஷ்ணன் ஒருவர் தான் 100% முழுமையான ஆண் என சொல்லப்படுகிறது. அதனாலே அப்போரில் ஆகக்குரூரமான ஒரு அரசியல் ஞானியாக அவர் இயங்குகிறார். பெண்ணியவாதிகள் தொடர்ந்து பெண்ணின் சமூக பாத்திரம் அவர்களின் இயல்பு சார்ந்ததல்ல, சமூகத்தால் திணிக்கப்பட்டது என்று வாதிட்டு வந்திருக்கிறார்கள். சிமன் டி பூவர் தனது “இரண்டாம் பாலினம் (The Second Sex) நூலில் இந்த தரப்பை நிறுவ உயிரியல் தரவுகள் பல தருகிறார். இயற்கையில் பெண்ணின் பாத்திரத்தை எடுத்து செயல்படும் உயிரினங்கள் உள்ளன. பரிணாம கோட்பாடு படி கருத்தரித்து குழந்தையை வளர்ப்பது என்பது மனித இனத்திற்கு பெரும் காலம் மற்றும் பிரயாசையை வேண்டும் பணி. அதனாலேயே பெண்கள் கருத்தரிப்பவர்களாக துவங்கி வேட்டையாடும் சமூகத்தில் இருந்து விவசாய, உற்பத்தி சமூகமாக மாறிய கட்டத்தில் முழுமையாக குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகள் சார்ந்த ஒரு பாத்திரத்துக்குள் மாட்டிக் கொண்டிருக்கலாம். இந்த பாத்திர ஏற்பு மனித இன வளர்ச்சிக்கு தோதானதாக இருந்ததால் அது உலகம் முழுக்க ஏற்கப்பட்டு பின்பற்றப்பட்டிருக்கலாம். பரிணாமவியலை பொறுத்தமட்டில் இதில் ஆணாதிக்க சதி எல்லாம் இல்லை. பெண் அடக்குமுறை ஒரு பண்பாடாக, மித்தாக மாற்றப்படுவதை தான் நாம் எதிர்க்க முடியும். வரலாற்றுக்கு பிரக்ஞை இல்லை, அதை அலசலாம், ஆனால் கேள்வி கேட்க முடியாது.

ஆல்பர்ட் நாப்ஸில் ஒரு பெண் பாதுகாப்பு மற்றும் சம்பாத்தியத்துக்காக ஆணாக முப்பதாண்டு காலம் வாழ்கிறாள். ஒரு நட்சத்திர ஹோட்டலில் வெயிட்டர் அவள். ஐயர்லாந்தில் அக்காலத்தில் (19 நூற்றாண்டு) ஆண்கள் வெயிட்டர், வணிகம் போன்ற பல முக்கிய பணிகளில் நுழைய முடியாது. அவளது ஹோட்டலில் பல பெண்கள் சலவை, சுத்தம் செய்வது, சமையல் போன்ற குறைந்த ஊதிய பணிகளை செய்கிறார்கள். ஆல்பர்ட் நாப்ஸும் இதில் ஏதாவதொரு பணியை செய்து பெண்ணாகவே வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவளுக்கு இரு பிரச்சனைகள். ஒரு உயர்வகுப்பு பெண்ணின் கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தையாகிய அவள் அநாதை இல்லத்தில் வாழ்கிறாள். பின்னர் ரகசியமாக பணம் அனுப்பி வந்த அம்மா இறந்து போக அவள் கடுமையான வறுமையில் வாழ நேர்கிறது. பெரும் செல்வந்த வகுப்பை சேர்ந்த தனது துர்விதியை எண்ணி வருந்தும் அவளுக்கு பணக்காரியாகும் ஆழ்ந்த விருப்பம் ஒன்று உருவாகிறது. 14 வயதில் அவள் கூட்டு கற்பழிப்பு செய்யப்படுகிறாள். இவ்வுலகில் பெண்ணாக வறுமையில் வாழ்வது ஆபத்தானது என்று முடிவு செய்து ஆண் வேடம் பூணுகிறாள். அதற்குப் பின் 30 வருடங்கள் அவள் கடுமையான தொடர் அச்சத்தில் வாழ்கிறாள். அவளது பழக்கவழக்கம், பேச்சு, செயல் அனைத்தும் மிக பதற்றமாக மாறுகிறது. உணர்ச்சியற்ற தட்டையான முகம். உலர்ந்த குரல். பதுங்கின தோற்றம். அவள் யாரிடமும் மனம் திறந்து பேசுவதில்லை. அதனால் அவளுக்கு நண்பர்களே இல்லை. அவளது ஒரே லட்சியம் சிக்கனமாக வாழ்ந்து பணம் சேர்த்து சொந்தமாக ஒரு புகையிலை கடை வைப்பது. இந்த லட்சியம் தனிமையில் இருந்து அவளை பாதுகாக்கிறது. பிறகு ஒருநாள் அவள் ஒரு புதுநபரை சந்திக்கிறாள். அவர் நாப்சுடன் அவளது படுக்கையில் ஒரு இரவு தூங்க வேண்டிய தவிர்க்க இயலாத நிலை வருகிறது. அவர் தான் முதன்முதலில் அவள் ஆண் அல்ல என கண்டுபிடிக்கிறார். பார்த்தமட்டிலே அவருக்கு தெரிகிறது. ஏனென்றால் அவரும் நாப்ஸை போல ஆண் வேடத்தில் இருக்கும் ஒரு பெண். பெயர் ஹியூபர்ட் பேஜ். அலட்சியமான அடாவடித்தனமான உடல்மொழியும் புகைப்பழக்கமும் தன்னம்பிக்கையும் அவருக்கு ஆண் வேடத்தில் இயங்க மிகவும் உதவுகின்றன. பின்னர் ஒரு காட்சியில் அவர் பெண் உடையில் தோன்றுகிறார். அப்போதும் ஒரு ஆண் பெண் வேடமணிந்ததை போன்றே தெரிகிறார். பேஜ் நாப்ஸின் ரகசியத்தை மறைக்க ஒப்புகிறார். இருவரும் எளிதில் நண்பர்களாகின்றனர். நாப்ஸுக்கு பேஜிடம் இருந்து ஒரு புது விஷயம் தெரிய வருகிறது. அது ஒரு ஆண்வேடமிட்ட பெண் திருமணம் புரிந்து குடும்பமாக வாழ முடியும் என்பது. இது முக்கியம். நாப்ஸுக்கு எளிதில் நம்பக்கூடிய துணை என்று யாரும் இல்லை. ஒரு மனைவி அமைந்தால் தனது தனிமை அகலும் என்பதுடன் எதிர்கால புகையிலை கடையை பார்த்துக் கொள்ளவும் ஆள் கிடைக்கும். மேலும் மனைவி என்பது ஒரு சமூக அங்கீகாரத்துக்கான ஒரு வழி. படம் இங்கிருந்து தான் ஒரு விநோத திருப்பம் எடுக்கிறது.

நாப்ஸின் ஹோட்டலில் ஹெலன் என்றொரு அழகான பெண். அவள் மீது நாப்ஸ் காதல் வயப்படுகிறாள். ஹெலனின் வாழ்க்கை லட்சியம் ஒரு பணக்கார ஆணை கட்டிக் கொண்டு வசதியாக வாழ்வது. நாப்ஸ் ஹெலனை அடிக்கடி வெளியே அழைத்துப் போய் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கிறார். அவளை மகிழ்ச்சிப்படுத்த முயல்கிறார். இங்கு ஒரு முக்கியமான தகவல் நாப்ஸ் சற்று பாலியல் விழைவுகள் அற்ற ஒரு விட்டேந்தி மனப்பான்மை கொண்டவராக தெரிகிறார் என்பது. எப்படி அவரது ஆடை மற்றும் தோற்றத்தில் அவரது சுயம் இல்லையோ அது போன்றே ஹெலனை காதலிக்கும் போதும் அவர் அந்த சூழல் மற்றும் அனுபவத்தில் இருந்து மனதளவில் வெகுவாக விலகி இருக்கிறார். வெயிட்டர் வேலை போல் மிக கச்சிதமாக நேர்த்தியாக கவனமாக காதலையும் செய்கிறார். ஹெலனுக்கு இது எரிச்சல் ஏற்படுத்துகிறது. அவள் “ஏன் இப்படி என் கையை பிடித்து இடுப்பை அரவணைக்காமல் முத்தமிடாமல் விநோதமாக நடந்து கொள்கிறாய்? என குற்றம் சாட்டுகிறாள். நாப்ஸ் முத்தமிடுகிறார். அவள் அது முத்தமேயில்லை என மறுத்து ஆவேசமாக முத்தமிட்டு காட்டி அவரை விட்டு வெறுப்பில் கண்ணீர் மல்க விலகி செல்கிறாள்.

ஹெலன் ஜோ மேக்கின்ஸ் என்கிற ஒரு நேர்மையற்ற பொறுப்பில்லாத இளைஞனை விரும்புகிறாள். அவன் மூலமாக கர்ப்பமாகிறாள். அவன் அமெரிக்கா சென்று பிழைப்பதற்காக ஹெலனை உதறுகிறான். இதையறிந்த ஆல்பர்ட் ஹெலனையும் அவளது குழந்தையையும் ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி அளிக்கிறார். தனது அவல நிலை ஹெலனை உருக்குலைய வைக்கிறது. அவளது பிரச்சனை ஆண்மை மிகுந்த ஒருவனை அடையும் பெண்கள் சந்திப்பது. அசலான ஆண் ஒரு வேட்டையாளி. அவன் ஊர்சுற்றி. பல பெண்களை அடைந்து வம்சவிருத்தி செய்து தனது மரபணுக் குட்டையை விரிவாக்க விரும்புபவன். குடும்பத்தனமான ஆண்கள் சற்று பெண்மையானவர்கள். இது ஒரு அறிவியல் உண்மை. ஹெலன் ஆல்பர்ட்டை கணவனாக ஏற்க முடிவு செய்கிறாள். அவளது காமம் ஆணை தேர்ந்தால் நடைமுறை வாழ்வு அந்த முடிவு ஆபத்தானது என்பதை நிரூப்பிக்கிறது. சமரசமாக ஒரு பெண்ணையே தேர்கிறாள்.

நாப்ஸ் ஒரு ஆண் என ஆரம்பத்தில் நம்பினாலும் ஒரு விபத்தில் நாப்ஸ் காயமுற்று இறக்க அவரது பெண்நிலை வெளியாகிறது. ஊரே கேலி பேசுகிறது. நாப்ஸின் ஆண்வேட சர்ச்சை பிரபலமாகிறது. இந்நிலையில் ஹெலன் தனது ஆண் குழந்தைக்கு ஆல்பர்ட் எனும் பெயரையே வைக்கிறாள். அவள் மானசீகமாக ஆல்பர்ட்டை தனது கணவனாக வரிக்கிறாள்.

பேஜின் பாத்திரம் படத்தை மிக சுவாரசியமாக மாற்றுகிறது. ஆல்பர்ட்டை போல் பேஜ் பாலியலற்றவரல்ல. அவர் ஆண் பாத்திரத்தில் தயக்கமின்றி சாமர்த்தியத்துடன் பெண்களுடன் பழகுகிறார். ஆண் பாத்திரத்தில் இருப்பவரின் பிரச்சனை பெண்களை எதிர்கொள்வதே. ஆல்பர்ட் பலமுறை ஒரு ஐயத்தை தனக்குள் கேட்டுக் கொள்கிறார். அது பேஜின் மனைவி காத்லீனுக்கு தனது கணவன் ஒரு பெண் எனத் தெரியுமா, அவ்வெளிப்பாடு எப்போது நிகழ்ந்திருக்கும், முதலிரவுக்கு முன்னரா பின்னரா என்பது. சிலமுறை அவர் பேஜிடம் கேட்க உத்தேசித்து பின் வாங்குகிறார். ஆல்பர்ட் பேஜின் வீட்டுக்கு சென்று பேசும் காட்சி படத்தில் மிக சிறப்பானது. கேத்லீன் அங்கு முழுமையான குடும்ப பெண்ணாகவும் பேஜ் ஒரு சோம்பலான புகைபிடிக்கும் அலட்சிய கணவனாகவும் இருக்கிறார்கள். உரையாடலின் போது பேஜ் தனது மனைவியை சீண்டுவதற்காக ஹெலனை பற்றி ஆல்பர்ட்டிடம் விசாரிப்பார். “இத்தோடு பலமுறைகள் அப்பெயர் இந்த வீட்டில் குறிப்பிடப்பட்டுவதை கேட்டு விட்டேனே என்று பேஜின் நாற்காலி கைப்பிடியில் ஒருக்களிப்பாக அமர்ந்தபடி கேத்லீன் பொறாமை தொனிக்க கண்டிப்பார். அதை பேஜ் மிகவும் ரசிப்பது அவரது பாவனையில் தெரியும். இதைக் கண்டு ஆல்பர்ட்டுக்கு குழப்பமாக இருக்கும். பேஜுக்கும் கத்லீனுக்குமான உறவு தான் எப்படியானது? இது படத்தில் மிக பூடகமாகவே உள்ளது. கத்லீன் எதேச்சையாக தன் வீட்டுக்கு வந்து தங்க நேர்ந்ததாகவும் ஊர்வாயை மூட தான் அவளை மணம் புரிந்ததாகவும் பேஜ் சொல்லுகிறார். இருவரும் ஒருபால் உறவு கொள்பவர்களாக இருக்கலாம். பொதுவாக லெஸ்பியன்களில் ஒருவர் சற்று தூக்கலான ஆண்மையுடன் இருப்பார். இத்தகைய பெண்கள் சற்று பணிவான கூச்சப்படும் பெண்களிடம் ஈர்க்கப்படுவார்கள். பேஜ் இயல்பிலேயே இத்தகைய பெண்ணாக இருப்பது அவரது பால்நிலையை இயல்பானதாக மாற்றியிருக்கலாம். ஆண்பாத்திரத்தில் இருக்கும் ஒரு லெஸ்பியன் என பேஜை கருத வாய்ப்புண்டு.

கத்லீன் ஒரு கொள்ளைநோயில் இறக்கிறார். கைக்குழந்தையுடன் நிராதரவாக இருக்கும் ஹெலனை பேஜ் கம்பீரமான ஒரு ஆணை போல் அரவணைப்பதாக படம் முடிகிறது. இரண்டு விஷயங்களை இயக்குநர் ரோட்ரிகோ கார்சியா குறிப்புணர்த்துகிறார். ஆண்மை மிக்க ஆண்கள் பெண்களை எளிதில் காயப்படுத்தி கைவிடுபவர்களாக இருக்கிறார்கள். படத்தில் இரு பெண்கள் கணவனாக பெண்களையே தேர்வது இதனால் தான். அடுத்து, பால்நிலை என்பது பாத்திரம் மட்டுமே என்பது. ஒரு சட்டையை போல் பால்நிலையை அணிகிறோம் என்கிறார் கார்சியா. இன்று நம்மிடையே அலுவலகத்துக்கு போகும் பெண்களும் வீட்டுவேலைகள் செய்யும் ஆண்களும் இயல்பாக மாறி இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு ஆல்பர்ட் நாப்ஸ் தான். இதில் கீழ்மையோ இயல்புபிறழ்வோ இல்லை என்கிறது இப்படம். இது சிமன் டி பூவரின் வழிப்பட்ட பெண்ணியவாதிகளின் தரப்பே.

ஆனால் பால்நிலை காமத்தை அதிகம் பாதிப்பதில்லை. ஒருவரின் இயல்பை பொறுத்து பெண்மை மிகுந்தோ ஆண்மை மிகுந்தோ அது வெளிப்படுகிறது. வாழ்வில் நாம் இயல்பாக ஒரு பாத்திரத்தை ஏற்று நடிக்கலாம். அதே பாத்திரப் புனைவின் ஊடாக நம்மால் இயல்பான காமத்தை வெளிப்படுத்தவும் முடியும். பேஜால் செய்ய முடிந்ததும் நாப்ஸின் இயலாததும் அது தான். பேஜ் ஒரு “ஆணாகவே மாறியதற்கும் நாப்ஸ் உயிர்ப்பற்று ஒரு கோட்டோவியமாக வாழ்ந்ததற்கும் அது தான் காரணம்.
Read More

Wednesday 21 March 2012

கால்கள் நாவலை இணையம் வழி வாங்க

Read More

கால்கள் என்பவை மனதின் சிறகுகள் - உமா சக்தி

ஆர்.அபிலாஷ் எழுதியுள்ள “கால்கள் நாவலை வாசித்து முடித்ததும் நினைவுக்கு வந்தது பிரமிளின் கவிதையொன்று.  “திரை இரைச்சல் என்ற அக்கவிதை (நீண்ட கவிதை)

கால்கள் நாவலுக்கும் இக்கவிதைக்கும் தொடர்பிருக்கிறது. “கால்கள் செயல் இழந்தவர்களின் உலகம் அஸ்தமனமுற்றதாகவே பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் அந்தக் கால்களின் கீழே உள்ள சிறகுகளை பலரும் உணர்வதில்லை. ஆர்.அபிலாஷ் எழுதியுள்ள “கால்கள் எனும் இந்நாவலின் மையப் பாத்திரமான மதுக்‌ஷராவின் சிறகுகள் அவளுடைய மனதில் இருக்கிறது. அவள் அவற்றின் மூலம் பெரும் பயணம் செய்கின்றாள்.

இநாவலைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் Ravishing. ஆங்கில இலக்கணத்தில் oxymoron என்று உண்டு. அதாவது Dark Light, Noisy Silence, Bitter Sweet என்று அடுத்தடுத்து முரண் வார்த்தைளை கொண்டது. கால்கள் நாவலின் வாசிபானுபவம் painful pleasure என்று சொல்ல வேண்டும்.

இந்நாவல் இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று கதை நாயகி மதுக்‌ஷராவுக்கும் அவளைச் சுற்றி உள்ளவர்களுக்குமான உரையாடல்களின் வழியே. மற்றது மதுவுக்குள் இயங்கும் அவளது அந்தரங்கமான அக உலகம்.

முதல் தளத்திலும் இரு வகைப்பாடுகள். அதாவது மதுவுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் அவளுடன் நெருங்கிய close circle people. நெருங்கிய வட்டத்தில் பேராசிரியர் மதுசூதனன், அவர் மகன் பாலு, மெக்கானிக் கண்ணன், உடன் படிக்கும் கார்த்திக், கோஷி, சுமா, ஷீனா போன்றவர்கள். இவர்களில் சிலர் மதுவுடன் நெருக்கமாக இருப்பதைப் போல தோன்றினாலும் மது மிகவும் தனிமையானவள். அவளது எளிய உலகத்தில் நெருங்கிய நட்பு இல்லை. அவளை உணர்வுபூர்வமாக நெருங்குபவர்களை மது தள்ளியே வைக்கிறாள். அறிவுபூர்வமாக நெருங்க முயன்றாலோ ஆவேசமாக தடுக்கிறாள். தனது தனிமையை மிகவும் தந்திரமாகவும் பத்திரமாகவும் பாதுகாக்கின்றாள். யாருடைய அங்கிகாரமும் அவளுக்குத் தேவை இருக்கவில்லை. தன்னைச் சுற்றியுள்ள ஆணுலகத்தை கூர்மையாக அவதானித்தாலும் தன்னை நெருங்கி வரும் ஆணை எப்படி எதிர்கொள்வது என்று பலமுறை குழப்பம் அடைந்திருக்கிறாள். பிறரால் தொடப்படுவது அவளுக்கு கிளர்ச்சியை அல்ல, பெரும்பாலும் அயர்ச்சியும், ஆசூசையையுமே ஏற்படுத்துகிறது. அவள் வயதையொத்த கார்த்திக்கிடமும் கண்ணனிடமும் மெல்லிய ஈர்ப்பிருந்தாலும் அதை எந்த சந்தர்ப்பத்திலும் வெளிக்காட்டவோ எவ்வித செய்கையின் மூலமோ அதை பகிர்ந்து கொள்ளவோ மது முயன்றதில்லை. கார்த்திக் அவனது காதலியுடன் ஐஸ் க்ரீம் பார்லரில் கைப் பிடித்து உரையாடிக் கொண்டிருக்கும் காட்சி அவளுள் வலியை ஏற்படுத்தி இருந்தாலும் கண்டும் காணாமல் கடந்து போய்விடுகிறாள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் முதன் முறையாக மது சேலை உடுத்தியுள்ளாள். கார்த்திக்கின் அந்தக் காதலியும் விலை உயர்ந்த சேலையை அணிந்து அதைப் பற்றிய நுண் விபரங்களை அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த விபரங்கள் பிடித்ததோ இல்லையோ கார்த்திக் தன் வாழ்வின் முக்கியமான பேச்சு அதுதான் என்பதைப் போல உலகையும் சுற்றுப் புற சூழலையும் மறந்து அவள் பேச்சில் லயித்திருந்தான். இதை சற்று தூரத்திலிருந்து பார்த்த மதுவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வலிய கார்த்திக்கின் வீட்டுக்கு அவள் போக ஆசைப்பட்டதும், அவனின் வீட்டினரை சந்திக்க ஆசைப்பட்ட அவளின் காதல் மனசு அங்கே அழிந்தது. சொல்லப்படாத காதலொன்றின் கடைசி அத்யாயத்தை முதல் அத்யாயம் தொடங்கும் முன்பே கண்முன்னே முடிந்துவிட்ட காட்சி அவளுக்குள் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தாவிட்டாலும் அவள் மனம் உடைந்து சுக்கு நூறாய் போகவில்லை. ஐஸ்கீரிம் சாப்பிட தயாராக தான் இருந்தது. ஊமை வலிகளைத் தாங்கிய பழக்கம் அவளுக்கு இயல்பாய் அமைந்துவிட்டது.

கார்த்திக் மதுவை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லும் போது நமக்கு அவன் மீது நம்பிக்கை வந்தது. கடைசியில் மதுவைவிட நாமே இவ்விஷயத்தில் ஏமாற்றம் அடைகிறோம். ஏனென்றால் மது புத்திசாலி. எளிதில் உணர்ச்சி வசப்பட்டுவிடமாட்டாள். கார்த்திக்கிடம் அவள் நிறுவ முயன்றது தான் ஒரு புத்திஜீவி என்பது மட்டும்தான். அவனறியாத இந்தப் பக்கத்தை அவள் திறக்கவே இல்லை.

கார்த்திக்குடனும், கண்ணனிடமும், பேசாசிரியரிடமும் மது அடிக்கடி வாதம் செய்வாள். மதுவைப் பொருத்தவரை ஆணித்தரமான கருத்துக்களும், தெளிவான சிந்தனையும், தானே தேடிக் கண்டடைந்த உண்மைகளும் அவளுடைய வாதப் பிரதிவாதங்களுக்கு பக்க பலம். சில சமயம் வீணாக வாதம் செய்கிறோம் என்று தெரிந்திருந்தாலும் எளிதில் compromise ஆகமாட்டாள். அவளுடைய மூர்க்கமான பிடிவாதம் எதிராளியின் சமன் நிலையைக் குலைக்கும் சக்தி உடையது. மதுவின் இயல்பை அறிந்த நண்பர்கள் அவளுடன் அதிகம் முட்டி மோத மாட்டார்கள். ஒரு கட்டத்தில் சரெண்டர் ஆகிவிடுவார்கள். மதுவுக்கு அதுவும் உவப்பானது இல்லை. தன்னை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதல்ல மதுவின் எதிர்ப்பார்ப்பு. அவளின் சுயத்தைக் காயப்படுத்தாமல் இருந்தால் போதும் என்பதை தனது செய்கைகள் மூலம் சொல்கிறாள். ஆனால் முன்கோபி என்றும், பிடிவாதக்காரி என்றும் எப்போதும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகிறாள். அப்பா நம்புவது போல எதாவது மிராக்கிள் நடந்து மறுநாள் காலையில் தன்னால் நடக்க முடியும் என்றாகிவிட்டால் எப்படி இருக்கும் என்று அடிக்கடி கனவில் ஏங்குகிறாள். கனவு மெய்ப்படும் என்கிறார்கள் ஏன் நடக்க வேண்டும் என்ற தனது சாதாரண கனவு மட்டும் கனவாகவே இருக்கிறது, எல்லோருடைய வாழ்விலும் இயல்பாக இருக்கும் ஒரு விஷயம் தனக்கு மட்டும் கனவாக இருந்து கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி அவளைத் துரத்திக் கொண்டே இருக்கிறது.

புத்தகங்களும் ஜன்னல் வழியே பார்க்கும் உலகின் அனுபவங்களும் அவள் வாழ்வின் போக்கை கட்டமைக்கின்றன. வீட்டின் ஒரு அறைக்குள் அரை மயக்கத்திலும் தூக்கத்திலும் அவளின் நாளும் பொழுதும் கரைந்து கொண்டிருந்தாலும் அவளுடைய தன்னுணர்வு எப்போதும் விழிப்பு நிலையிலேயே தான் இருக்கும். டாக்டர் ஆப்ரஹாம் மதுவை ஷார்ப் கேர்ல் என்று பாராட்டிப் பேசிய போது நாமும் ஆமோதித்து மகிழ்கிறோம். மதுவின் extra ordinary observation and brilliance நாவல் முழுவதும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். நாம் ஒரு கோணத்தில் நினைக்கையில் அதற்கு முற்றிலும் வேறான புதிய கோணத்தில் சிந்திப்பவள் மது. அதெப்படி என்று ப்ரபசரோ கார்த்திக்கோ கேட்க முயன்றால் ஏன் அப்படி இல்லாம இருக்கக்கூடாதா என்று அடுக்கடுக்காய் விளக்கத்தை அவர்கள் வாயடைத்து போகும் வரை கொடுப்பாள். ப்ரபஸர் தவறாக நினைத்தாலும் கூட பரவாயில்லை அவர் தன் மகனை நடத்திய விதமும் அவர் சேர்த்திருந்த அந்த ஹாஸ்பிடலும் சரியில்லை என்ற தன் கருத்தை பல தடவை அவரிடம் நேரடியாக சொல்லி இருக்கிறாள்.

மதுவின் அக உலகம் மிகவும் ஆழமானது. அவளின் நுட்பமான அறிவு கடவுளில் ஆரம்பித்து கால்கள் வரை நிறைய கேள்விகளை உள்ளடக்கியது. அவள் மனதின் கேள்விகளுக்கு யாராவது எப்படியாவது பதில் சொல்லிவிடுவார்கள். ஒரே ஒரு துரத்தும் கேள்வி மட்டுமே அவளிடம் எப்போதும் எஞ்சியிருக்கும். அதற்கு மட்டும் விடை கிடைத்துவிட்டால் அவளது வாழ்வு வெற்றி பெற்றுவிடும். எல்லாத் துயரிலிருந்தும் தனக்கு விடுதலைக் கிடைத்துவிடும் என்றே நம்புகிறாள்.

மது ஒவ்வொரு முறை கீழே விழும் போது உள்ளுக்குள் நொறுங்கிப் போகிறாள். தன்னால் உடல் வலியைத் தாங்க முடியவில்லை என்கின்ற மன அவசம் பெரும் வலியை அவளுக்கு தந்து கொண்டே இருக்கிறது. மதுவின் அப்பாவின் அலுவலக நண்பரின் மகள் பவித்ராவும் போலியோ அட்டாகினால் பாதிக்கப்பட்ட பெண். மது அவளைச் சந்தித்துப் பேசினாள் நம்பிக்கையடைவாள் என்ற நம்பிக்கையில் மகளை அழைத்துப் போகிறார் அப்பா. பவித்ராவை உற்றுப் பார்த்தால் தான் கால்களை லேசாய் சாய்த்து நடப்பது தெரியும். மிகவும் அலட்சியமாக வண்டி ஓட்டுகிறாள், தன்னம்பிக்கையுடன் பெரிய வங்கி ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறாள். எல்லாவற்றுக்கும் மேல் இனிமையாகவும் சந்தோஷமாகவும் குறையற்றவள் போன்ற இயல்புடையவளாகவும் அவள் இருப்பதைப் பார்த்து அப்பா அவளை புகழ்கிறார். மதுவும் அப்படி ஆகவேண்டும் என்ற ஆசையில் அவளைப் பற்றி பவித்ராவிடம் சொல்கிறாள். மதுவுக்கு இது பெரும் எரிச்சலை ஏற்படுத்துகின்றது. அப்பாவிடம் தீர்மானமாக என்னால் இனி ஒரு போதும் நடக்கவே முடியாது என்று முகத்தில் அடிப்பதைப் போல சொல்லிவிட்டு வெளியே வந்து நின்றுவிடுகிறாள். மதுவுக்கு உள்ளுக்குள் பவித்ராவின் ஆளுமை பிடித்திருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது பிரச்சனையை அடுத்தவர்கள் முன்னால் அப்பா போட்டு உடைப்பதை அவள் சுய மரியாதை உள்ளத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மது தன் அப்பா அம்மாவிடம் காட்டும் மூர்க்கத்தனமான பிடிவாதம் மற்றும் adamancyக்கு காரணம் தன்னுடைய போலியோ பாதிப்புக்கு ஏதோ ஒரு வகையில் அவர்களின் அலட்சியம் காரணமாக இருக்கக் கூடும் என்ற வெளியே சொல்ல முடியாத அவளால் வகைப்படுத்த முடியாத ஒரு கோபம். தடுப்பூசி என்ற ஆப்ஷன் இருந்தும் அவர்கள் அதைக் கடைபிடிக்காமல் இருந்து விட்டதன் விளைவு வாழ்நாள் முழுவதும் அவள் தன்னுடலை சிலுவையாய் சுமக்க நேரிட்டுவிட்டது. டாக்டர் ஆப்ரஹாமின் விளக்கத்துக்குப் பிறகு பெற்றோர் அவளுடைய பிரச்சனைக்கு காரணமல்ல என்று அறிவுக்குத் தெரிந்தாலும் மனசுக்குத் தெரியாமல் போகிறது. ஒரு love-hatred relationship தான் அந்த மூவர் உலகில் நடந்து கொண்டிருக்கிறது. தன்னை அடித்து துவைக்கும் குடிகார கணவனுக்கு குற்றேவல் செய்வதிலிருந்து போலியோவால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் ஒரே மகளுக்கு, அவள் தன்னை எந்த அளவு காயப்படுத்தியிருந்தாலும் அதை கவனம் கொள்ளாமல் மகளின் ஒவ்வொரு தேவையையும் மிகப் பரிவுடன் நிறைவேற்றுகிறாள் மதுவின் தாய். சில சமயம் சலிப்பில் மதுவைத் திட்டினாலும் தன் கடமையை ஒரு நாளும் அவள் செய்ய மறந்ததில்லை. மது அவர்களிடம் total dependant ஆக இருப்பதை வெறுத்தாள். ஆனால் அவளுக்கு வேறு வழியே இல்லை. எல்லாக் கதவுகளும் ஜன்னல் உட்பட ஆரம்பம் முதலே அவளின் வாழ்வில் அடைத்துவைக்கப்பட்டது. மேலும் அவள் நடக்கும் வரை அவள் வாழ்வை நடத்துவதை அவர்கள் நிறுத்தப் போவதில்லை என்ற பயம் மதுவை பிடித்து ஆட்டுகிறது. என்ன ட்ரெஸ் போடவேண்டும் என்பதில் ஆரம்பித்து சிகிச்சை முறைகளில் தொடந்து வண்டி ஓட்டியே ஆக வேண்டும் என்பது வரையில் பல விஷயங்கள் கட்டாயமாக்கப்பட்டிருந்ததை வெறுத்தாளோ. அவளது நன்மைக்கே என்றாலும் தன் விருப்பு வெறுப்புகளை தேர்வு செய்யும் உரிமை மறுக்கப்படும் போது படிப்பாளியான மது ஆவேசம் கொள்கிறாள், சில சமயம் மனசுக்குள் ஒடுங்கிப் போகிராள். அதன் எதிரொலியே அம்மாவை பல சமயம் ill-treat செய்வது, பெரும் மழையில் தனியாக வெளிநடந்து செல்வதும், அடிக்கடி எங்கேயோ எதைத் தேடியோ மனம் வெறுமையுற்றுக் கிளம்பிச் செல்வது போன்ற நடவடிக்கைகள் எல்லாம்.

மேலும் பல தளங்களுக்கு நம்மை நோக்கி பயணிக்கும் இந்நாவலின் மூலம் நாமும் பல திசைகளுக்கு செலுத்தப்படுகின்றோம். நாவலின் பலவீனமான அம்சம் எதுவென்று கூற வேண்டுமாயின் ஏகபட்ட சம்பவங்கள் அடுக்கப்படுதலும் ஏராளமான பாத்திரங்களின் பிரசன்னமும் ஆகும்.   
குறிப்பாக மதுவின் அப்பா பற்றிய விரிவான நினைவுக் குறிப்புகள், எழுத்தாளர் மார்க்கண்டேயனின் விஷயங்கள், இரண்டு பஸ் பயணத்தின் சம்பவங்கள், செளதாமினி பற்றிய விரிவான விளக்கங்கள் இன்னும் சில விஷயங்கள் இந்த நாவலுக்கு தேவை இல்லையோ என்று தோன்றுகிறது.

பெண்களின் உலகிற்குள் பல நுட்பமான விஷயங்களை அபிலாஷ் பதிவு செய்திருந்தாலும் சில இடங்களில் நெருடலாக உள்ளது. குறிப்பாக சுயப்புணர்ச்சி செய்த ஒருவனது விந்து போன்றது என்ற உதாராணம் ஓரிடத்தில் வரும். எவ்வளவு படித்த பெண், அனுபவம் மிக்கவள் ஆணுடனே வாழ்பவள் என்றிருந்தாலும் ஒரு பெண்ணால் விந்தின் கொழகொழப்பை எல்லாம் கற்பனை செய்து கம்பேர் பண்ண முடியாது. மது திருமணம் ஆகாத பெண். அவளுக்கு எப்படி இந்த மாதிரி ஒரு தாட் வரும்?

மதுவுடன் சேர்ந்து நாமும் ஆங்கில இலக்கியம் படிப்பதைப் போன்ற பிரம்மை நாவல் முழுவதும் நமக்கு ஏற்படுகிறது. எழுத்தாளர் ஆங்கில விரிவுரையாளர், சைக்காலஜி தெரிந்தவர் என்பதால் அவரின் கூற்று பல இடங்களில் மதுவாகத் தென்படுகிறது. இது அவரின் முதல் நாவல் என்று அறிவதால் அதை குறையாக நினைக்கவில்லை.

இன்னொரு நெருடல் மது தன் அப்பாவை கூட சில இடங்களில் வியந்து அவரிடம் இணக்கமாக இருந்திருக்கிறாள். ஆனால் தன் அம்மாவை ஆரம்பம் முதல் நாவலின் முடிவு வரை எரிச்சல் படுத்திக் கொண்டே இருக்கிறாள். அம்மா திட்டும் போது கூட அதைக் கண்டு கொள்ளாமல் பல தடவை சைலண்ட் டார்ச்சர் கொடுத்திருக்கிறாள். சில சமயம் குற்றவுணர்வு பொங்கி எழும் போது மட்டும் அம்மாவுக்கு கிச்சன் வேலைகளை அதுவும் அவள் தூங்கும் போதோ அல்லது உடல் நலம் சரியில்லாத போதோ செய்து தருகிறாள். மற்றபடி வழமையாக அம்மாவிடம் எரிச்ச்லுடனும் கோபத்துடனுமே தான் இருக்கீறாள். இதன் உளவியல் காரணம் புரிந்தாலும் தாய் மகளுக்கு இடையே intimate ஆக ஒரு தருணம் கூடவா இல்லாமல் போகும்?  அம்மாவின் தியாகம் பல சமயங்களில் மதுவுக்கு பிடிக்காமல் போகிறது. அவள் தருபவளாகவும் இவள் பெறுபவளாகவும் இருப்பது அவள் மனதை வாடிப் போகச் செய்கிறது. மிக நுட்பமாக வளர்ந்து வந்த வன்மம் சில சமயம் கொடூரமான வார்த்தைகள் மூலம் செய்கைகள் மூலமும் வெளிப்பட்டு விடுகிறது. மேலும் அம்மா அவள் கண் எதிரே நடமாடும் பெண். பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் நல்ல தோற்றமுடையவள். எத்தனை புத்தகங்கள் படித்து அறிவினை கூர்மை படுத்தியிருந்தாலும் சில அடிப்படை விஷயங்கள் நமக்கு இல்லாதது நம் நேரிதிரில் உள்ளவர்களுக்கு இருந்தால் பெரும்பாலோர்க்கு பொறாமை வந்துவிடும். ஆனாலும் தன் அப்பாவையோ அம்மாவையோ பெரிதாக டார்ச்சர் கொடுப்பதில்லை. தன்னுடைய அதிருப்தியை மட்டுமே மது பதிவு செய்கிறாள். அவர்கள் தமது ஆசையை தன் தலைமேல் தூக்கி வைப்பதை மது ரசிக்கவில்லை. அம்மாவின் அழுகைகள், பிரார்த்தனைகள். அப்பாவின் பழைய பாடல்கள், அவரின் குடிப்பழக்கம், அவரது விருப்பம் எல்லாம் மதுவுக்கு பழகிவிட்டது, அவளின் நடக்க முடியாத கால்களைப் போலவே....ஏதோ ஒரு வகையில் தன்னையொத்த தன்யா, பாலு ஹாஸ்பிடலில் பார்த்த சிறு குழந்தை ஆகியோர் மதுவை சலனப்படுத்துகிறார்கள். அவர்களுக்காக அவள் நிறைய யோசிக்கிறாள். அவளால் தீர்வு சொல்ல முடியாவிட்டாலும் தன்னை மறந்து அவர்கள் நலனுக்காக ஏங்குகிறாள். அவளின் தாயுள்ளத்தைக் கண்டு நாம் நெகிழ்ந்து கரைகிறோம்.

நாவல் முழுவதும் கவித்துவமான வரிகள் தென்படுகின்றது. மெல்லிய அங்கதம் ஆங்காங்கே நம்மை புன்முறுவலுடன் வாசிக்க வைக்கிறது. நாகர்கோவில் வட்டார வழக்கு அருமையாக கையாளப்பட்டுள்ளது. மொழிநடை சிக்கலாகவும் இல்லாமல் மிகவும் சாதாரணமாகவும் இல்லாமல் இடைப்பட்ட விதத்தில் எளிமையின் அழகியலுடன் நகர்ந்தோடுகிறது. இதுவரை யாரும் உட்செல்லாத ஒரு பிரத்யேக உலகுக்குள் நம் கையைப் பிடித்து மெதுவாக மிக மெதுவாக அழைத்துச் செல்கிறது. நாம் வேகமாகச் சென்றால் இடறிவிடுவோம், மதுவை புரிந்து கொள்ள முடியாமல் போய்விடக் கூடும், எனவே நாவல் கொடுக்கும் மொழ்நடையில் அதன் ரிதத்தில் நாமும் உடன் சென்றால் அது நமக்கு வியப்பளிக்கும். டாக்டர் ஆப்ரஹாமின் வார்த்தைகள்
சற்று மிகையாக இருந்தாலும் அவர் கூறிய உண்மையை உள்வாங்கிக் கொள்கிறாள் புத்திசாலியான மது.

அபிலாஷின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால் “நிஜத்தின் பிரச்சனை மிக எளிய விஷயம் தான். என்றாலும் யாருக்கும் இது பிடிப்பதில்லை. ஆர்.அபிலாஷின் இந்நாவல் கூறும் ஒட்டு மொத்த விஷயங்களின் சாரம் இதுதான்.

கால்கள் பரந்த வாசிப்பைப் பெற்று மேலும் பல சிறந்த ஆக்கங்களை ஆர் ஆபிலாஷ் தருவார் என்ற நம்பிக்கையில் அவரை வாழ்த்துகிறேன்.



Read More

Saturday 17 March 2012

தினமணியில் “கால்கள்”

16 மார்ச் 2012 தினமணியில் எனது நாவல் கால்கள் குறித்த ஒரு பதிவு


Read More

Thursday 8 March 2012

யுவ்ராஜ் சிங்: எதிர்பார்ப்புகளின் அவலம்

இந்திய கிரிக்கெட்டில் மிக அதிகமாக எதிர்பார்ப்புகளுக்கும் அதனாலே ஏமாற்றங்கள் கண்டனங்கள் விமர்சனங்களுக்கு உள்ளான சமகால வீரர் யுவ்ராஜ் தான். இன்று ரெய்னா, ரோஹித் ஷர்மா, மனோஜ் திவாரி, கோலி, சுவரப் திவாரி, மனிஷ் திவாரி என இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால பட்டியலில் நிறைந்துள்ள ஆர்ப்பாட்டமான அதிரடி ஆட்டமும், மீடியா தளுக்கும் மிக்க இளைய வீரர்களுக்கு ஒரு முன்னோடி அவர் தான். யுவ்ராஜுக்கு முந்தின தலைமுறை ஒருநாள் கிரிக்கெட்டில் தனது ஒற்றைபட்டையான திறன்கள் மற்றும் திட்டமிடல் சுயகட்டுப்பாடு ஆகிய விழுமியங்களை பிரதானப்படுத்தியது. சச்சின், கங்குலி, திராவிட் ஆகியோர் நிலைத்து ஆடுவதை, குறைவாக ஆபத்துகளை எதிர்கொள்வதில், வளமான சராசரியை தக்க வைப்பதில் கவனம் மிக்கவர்கள். அவர்களின் காலகட்டம் இந்திய கிரிக்கெட்டின் கல்லும் முள்ளும் நிறைந்த மலையேற்றம் எனலாம். அவர்கள் அணியின் வீழ்ச்சிக்கு சரிவுக்கு எப்போதும் தயாராக இருந்தார்கள். மோசமாக தோற்காமல் இருப்பதே பிரதானம். பிறகு மெல்ல மெல்ல எதிரணிக்கு சமமாக போட்டியிட தமது அணிக்கு உதவினர். ஆனால் யுவ்ராஜின் தலைமுறை பின்வாங்குதலை, தற்பாதுகாப்பை, சுதாரிப்பை அறியாதது. யாரையும் அஞ்ச வேண்டியதில்லை, எதற்கும் தயங்க வேண்டியதில்லை என அவர்கள் முழங்கினர். தனித்தே தம்மால் வெற்றியை வாங்கித் தந்து படக்கருவிகளின் பிளாஷுக்கு முன்னால் பளிச் புன்னகை செய்து பேட்டி தருவதே சாதனை என்று கருதினர். ஓட்ட சராசரி அளவுக்கு மீடியாவில் கிடைக்கும் நல்ல பெயரும் பிரபலமும் முக்கியம் என்று அறிந்தனர். கிரிக்கெட் வீரர் கிரிக்கெட் மட்டும் ஆடுபவன் அல்ல, அவன் விளம்பர நாயகன், அபிப்ராயங்களை சதா முழங்குபவன், கேட்டாலும் கேட்காவிட்டாலும் தொடர்ந்து சவால்களை விடுப்பவன், யாரும் கவனிக்காமல் இருந்தாலும் யாரையாவது பரிகசித்து அவமானித்து கண்டித்து கவனத்தை பெறுபவன் என்று நிலைப்பாடு உருவானது. இப்படியான பரிணாமத்துக்கு 2000இல் ஐ.சி.சி நாக் அவுட் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவ்ராஜ் தனது இரண்டாவது ஆட்டத்தில் அடித்த 84 ஒரு நல்ல உதாரணம்.

சச்சின் அதுவரை சதம் அடித்து மட்டும் தான் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு ஏற்படுத்துவார். ஆனால் யுவ்ராஜ் இதெல்லாம் போதாது என்று நிரூபித்தார். ஒரு நவீன கிரிக்கெட் வீரன் வெற்றிக்காக காத்திருப்பதில்லை; யுவ்ராஜ் தானாகவே அதிக ஓட்டங்கள் அடித்து அன்று அணியை ஒரு நல்ல ஸ்கோருக்கு உயர்த்தினார். அப்போதும் அணி மெல்ல சரிந்து வந்த போது வெறுமனே நகம் கடித்து “இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்று கல்லியில் நின்று யோசிக்காமல் பாய்ந்து வந்து ஒரு காட்ச் பிடித்தார். இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் நமது வீரர் ஒருவர் இவ்வளவு வேகமாக எளிதாக சரளமாக மைதானத்தில் காற்றில் பறந்ததில்லை. அப்போதும் இந்தியா மீண்டும் துவண்டு வந்த போது நன்றாக ஆடி வந்த பெவனை ரன் அவுட் செய்தார்.. இனிமேலும் ஒன்றும் இல்லை என்ற நிலையில் இந்தியா அந்த ஆட்டத்தை வெல்ல நேர்ந்தது. பின்னர் நடந்த ஆட்டங்களிலும் பந்துவீச்சாளராக யுவ்ராஜ் பல முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டீவ் வாஹை போல யுவ்ராஜை ஆட்டத்தில் இருந்து ஓய்வாக வைக்கவே முடியாது. இப்படி தன்னை யுவ்ராஜ் வலுவாக அறிவித்த போதும் சரி பின்னரும் சரி ஒரு மேலான மட்டையாளராக அல்லது அனைவரும் அங்கீகரிக்கக் கூடிய ஒரு கிரிக்கெட்டராக அவர் உயரவே இல்லை. ஆனால் அவர் வெற்றி நாயகனாக இருந்தார். சச்சினுக்கு மாறாக யுவ்ராஜ் நன்றாக ஆடிய போதெல்லாம் இந்தியா வென்றது. 2006இல் மே.இ தீவுகளில் யுவ்ராஜ் 90 அடித்து அணிக்கு வெற்றி பெற ஒரு ஓட்டம் தேவையிருந்த நிலையில் அவர் ஆட்டமிழக்க நடந்த இரண்டாவது ஒருநாள் ஆட்டம் மட்டுமே விதிவிலக்கு. ஒரு நல்ல கிரிக்கெட்டர் தரமானவராக உலக அங்கீகாரம் பெற்றவராக வலுவான தொழில்நுட்பமும் பொறுமையும் கொண்டவராக தன் பொறுப்பை நன்றாக உணர்ந்து ஆடக் கூடியவராக இருக்க வேண்டும் என்று பிம்பம் யுவ்ராஜின் வருகையுடன் உடைந்தது. இந்திய கிரிக்கெட்டில் அவருக்கு பின் தோன்றியர்கள் அனைத்தையும் செய்பவர்களாக தாம் ஆடினால் அணி தானே வெல்லும் எனும் மிகையான தன்னம்பிக்கை கொண்டவர்களாக பேச்சு, கேளிக்கை, புகழ்வேட்டை, பந்தைத் துரத்துவதற்கு சமானமாய் பணத்தையும் துரத்துவதே சாமர்த்தியம் என்று நம்புபவர்களாக ஆனார்கள்.

சச்சின் வாழ்நாளெல்லாம் தன்னை ஒரு குறையற்ற முழுமையான மட்டையாளராக மெருகேற்றுவதற்கே செலவழித்தார். ஒரு பாறை சிற்பமாவது போல் அவர் மெல்ல மெல்ல தன்னையே வேறொன்றாக மாற்றினார். கடந்த முப்பது வருடங்களில் சச்சின் அளவுக்கு தன்னை தொழில்நுட்ப ரீதியாகவும் ஷாட்களின் தேர்வு, ஆட்டவேகம் ஆகிய விசயங்களிலும் தொடர்ந்து மாற்றிக் கொண்டே வந்துள்ள வேறொரு மட்டையாளர் இல்லை எனலாம். உதாரணமாக லாராவும் ரிச்சர்ட்ஸும் கடைசி ஆட்டம் வரை தாம் வாழ்வில் முதலில் மட்டையை ஏந்திய போது இருந்த அதே திறந்த மனதுடன் தான் ஆடினர். ஆனால் சச்சின் மெல்ல மெல்ல இயல்பை மாற்றிக் கொண்டே வந்தார். அதனாலே அவரது ஆவேசமான ரசிகர்களும் கூட அவரை முப்பது வயதுக்கு மேல் வெறுக்கவும் கண்டிக்கவும் தொடங்கினர். சச்சின் அதற்கு பதிலாக ஓட்டங்களை குவிக்கும் சாதனைகளை ஒரு கண்மூடித்தனமான மூர்க்கத்துடன் செய்ய துவங்கினார். ஆடத் துவங்கிய போது கிரிக்கெட் அவருக்கு ஒரு சாகசம், சவால், சுயவெளிப்பாடு என்றால் கடந்த பத்து வருடங்களில் அது ஒரு கச்சிதமாக, தவறின்றி செய்து புரோகிரஸ் கார்டில் முதல் மதிப்பெண் வாங்க வேண்டிய வேலை போல ஆகி விட்டது. யுவ்ராஜ் முதன்முதலில் சச்சின் அதுவரை எதெற்கெல்லாம் முன்மாதிரியாக விளங்கினாரோ அதெல்லாம் நவீன கிரிக்கெட்டில் இனி செல்லாது என்று நிறுவினார். கடந்த வருடம் ஒரு பேட்டியில் சச்சினை அணியில் “தாத்தா என்று செல்லப்பெயரில் அழைப்பதாக யுவ்ராஜ சின்ன நக்கலுடன் கூறினார் (சச்சின் பதிலுக்கு சற்று கோபப்பட்டார்). குறியீட்டு ரீதியாகவும் அது உண்மை தான்.

மிக சுதந்திரமாக நேர்மையாக உந்துதல் படி ஆடத் துவங்கின யுவ்ராஜின் ஆட்டத்தில் அந்த தடையின்மையை தான் ஒவ்வொருவரும் ரசித்தனர். அவர் தலைமுறையில் அந்தளவுக்கு இயல்பான வேறு ஒரு திறமை தோன்றாததால் மீண்டும் மீண்டும் அவரை வியந்தனர். யுவ்ராஜுடன் அறிமுகமான காயிப் இந்த வியப்புக்கு மறைமுகமாக ஒருவிதத்தில் பயன்பட்டார். சச்சின் திராவிட் போல் இந்த முரண்பட்ட ஜோடி இரண்டு விதமான இயல்புகளை அதன் விளைவுகளை நமக்கு காட்டியது. ஒருவர் மிகுதியான திறனும் ஆனால் குறைவான சுயகட்டுப்பாடும் கொண்டவர். மற்றவர் நேர்மாறானவர். காயிப்பின் இயல்பு நவீன கிரிக்கெட்டில் காலாவதியான ஒன்று. கவனம் என்றால் என்னவென்றே மறந்து போன ஒரு யுகம் இது. யுவ்ராஜ் காலத்தின் நாயகனாக பெரும் எழுச்சியை அடைந்தார். காயிப் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட சராசரி மொஜும்தர்களுக்கும் ஜேக்கப் மார்டின்களுக்கும் இடையே காணாமல் போனார். யுவ்ராஜ் சமகாலத்தின் சிறந்த ஒருநாள் மட்டையாளராக பரவலாக பாராட்டப்பட்டார். சச்சினை விட சேவாகுக்கு அடுத்த படியாய் யுவ்ராஜை அணிகள் அதிகம் அஞ்சத் தொடங்கின. அவரது பந்துவீச்சு நன்றாக மெருகேறி ஆல்ரவுன்டர் ஸ்தானத்துக்கு நகர்ந்தார். அவ்வளவு பெரிய உயரத்தை மிக சீக்கிரமாகவே எட்டி விடுவது ஒரு துர்பாக்கியமே. மெல்ல மெல்ல இறங்குமுகம் துவங்கியது. அதன் முதல் அறிகுறியாக யுவ்ராஜ் தனது டெஸ்ட் ஆட்டம் பற்றி விமர்சகர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை சீரியசாக எடுத்துக் கொண்டார். இந்த எதிர்பார்ப்புகளின் நெருக்கடியில் அவர் பதற்றமானவராக இயல்பற்றவராக மாறினார்.
யுவ்ராஜின் இளமைப் பருவம் இப்படியான எதிர்பார்ப்புகளின் கடும் நெருக்கடியில் தான் கழிந்தது எனலாம். அவர் கிரிக்கெட்டை விரும்பி ஏற்றவர் அல்ல. அவரது தந்தை யோக்ராஜ் சிங் ஒரு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். கபில்தேவின் சமகாலத்தவர். நண்பர். இரண்டொரு ஆட்டங்கள் ஆடி விட்டு விலகியவர். அவர் தனது தனிப்பட்ட தோல்விக்கு பரிகாரமாக மகனை கிரிக்கெட்டில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தினார். யுவ்ராஜுக்கு ஸ்கேட்டிங்கில் அபார ஆர்வம் இருந்தது. அதில் சேம்பியனாகி பல கோப்பைகள் வென்றார். ஆனால் இந்த கோப்பைகளை அப்பா எளிதில் உதாசீனப்படுத்தி யுவ்ராஜின் ஆர்வத்தை திருப்ப முயல்வார். இது அவரை கடுமையாக காயப்படுத்தி இருக்கிறது. சிறுவயதில் அம்மா குடும்பத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்த காலத்தில் அவருக்கு வேறு எந்த ஆதரவும் இருந்திருக்கவில்லை. அப்போது நடந்த ஒரு சம்பவத்தை யுவ்ராஜ் தனது ஆரம்ப கால பேட்டிகளில் ஒன்றில் நினைவு கூர்கிறார். குடும்ப நண்பரான நவ்ஜோத் சிங் சித்து வீட்டுக்கு வருகிறார். அப்பா அவரிடம் யுவ்ராஜின் ஸ்கேட்டிங் ஆர்வம் பற்றி புகார் சொல்லி மகனை அறிவுறுத்தும் படி கேட்கிறார். சித்து யுவ்ராஜிடம் இப்படி அறிவுரை சொல்கிறார் “ஸ்கேட்டிங் பெண்களுக்கானது. கிரிக்கெட் தான் ஆண்களின் வீர ஆட்டம். நீ கிரிகெட்டுக்கு வா. மெல்ல மெல்ல யுவ்ராஜ் அப்பாவுக்காக கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்தி அதில் தனக்கு அபார திறன் உள்ளதை அறிகிறார். 2000இல் இலங்கையில் நடந்த 19 வயதுக்கு கீழானவருக்கான உலகக் கோப்பை தொடர் ஒரு திருப்பம். அப்போது அணித்தலைவராக கேயிப்பும் முக்கிய மட்டையாளராக யுவ்ராஜும் இருந்தார். இறுதி ஆட்டத்தில் யுவ்ராஜின் 70 சொச்சம் கோப்பையை இந்தியாவுக்கு வென்று தந்தது. அப்போது கேயிப் தான் எதிர்கால நட்சத்திரமாக பெரிதும் பேசப்பட்டவர். ஆனால் யுவ்ராக் அவரை முந்தினார். பெட்டிங் சர்ச்சை காரணமாக சீனியர்கள் விலக்கப்பட கங்குலிக்கு கீழான புது இந்திய அணியில் கீழ்மத்திய வரிசையில் இடம் பெற்றார். பின்னர் வந்த புகழும் பணமும் யுவ்ராஜை கிரிக்கெட்டை தனது மார்க்கமாக தேர்வு செய்ய தூண்டியது.

ஆனால் எந்த கலைஞனுக்கும் தனது மார்க்கம் அவனது ஒரே முன்னோக்கிய வழியாக இருக்க கூடாது. பின்னர் தன்னலமும் செயற்கையான பிரயத்தனமும் அவனது இயல்பான திறமைக்கு அதன் களங்கமின்மைக்கு ஊறாகும். கிரிக்கெட்டை தான் கொண்டாடும் ஒரு கலை வடிவமாக மட்டும் பார்த்தனாலேயே லாரா சச்சினை விட மேலானவராக பலராலும் கருதப்படுகிறார். யுவ்ராஜ் பாதி லாராவில் இருந்து பாதி சச்சினாக மெல்ல மெல்ல மாறினார். யுவ்ராஜ் டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக துணைக்கண்டத்தில் அணியை காப்பாற்றும் சிறப்பான சதங்கள் அடித்திருந்தாலும் மிக மரபான டெஸ்ட் வடிவம் அவருக்கு வரலாற்று படத்துக்காக நாவை சுழற்றி காவிய வசனம் பேச வற்புறுத்தப்படும் நவீன நடிகனின் சங்கடத்தையே அளித்தது. டெஸ்டில் சிறக்க அவர் விரும்பியதற்கு காரணம் அதற்கான தொழில்நுட்பமும் பிற பண்புகளும் அவருக்கு இருந்ததனால் அல்ல. தன்னால் டெஸ்ட் ஆட முடியாது என்று யாரும் சொல்லக் கூடாது என்பதற்காக அல்லது டெஸ்ட் வடிவை ஆகச்சிறந்த உரைகல்லாக காணும் பல மூத்த கிரிக்கெட் பண்டிதர்களின் ஆமோதிப்புக்காக இருக்கலாம். மைக்கெல் பெவன், அஜய் ஜடேஜா, ஹெர்ஷல் கிப்ஸ் போன்று ஒருநாள் வடிவில் அசாத்தியமான திறமை இருந்தும் சில காரணங்களுக்காக டெஸ்டில் நிலைக்க முடியாத சில கிளாஸிக் உதாரணங்கள் ஏற்கனவே உண்டு. நேர்மாறாக மைக்கெல் கிளார்க், திராவிட், லெக்‌ஷ்மண், மைக்கெல் வான் என டெஸ்டில் உயர்ந்து ஒருநாள் ஆட்டங்களில் முற்றிலும் பொருந்தாமல் போனவர்களின் நீண்ட பட்டியலும் உண்டு. இந்தியர்கள் பொதுவாக மரபானவர்கள் என்பதால் யுவ்ராஜின் டெஸ்ட் சறுக்கல்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

இவ்விசயத்தில் அவருக்கான நியாயங்களும் இருந்தன. அவருக்கு நிரந்தரமான வாய்ப்புகள் டெஸ்ட் அணியில் கிடைக்கவில்லை. அவரது மட்டையாட்டத்தின் மிக உச்சமான காலகட்டத்தில் அவருக்கு அநேகமாக வாய்ப்பே இருக்கவில்லை. முப்பதை எட்டி மெல்ல திறன்கள் மழுங்க துவங்கும் போது உடல்தகுதி தொய்வடையும் போது டெஸ்ட் பாத்திரம் அவர் மீது திணிக்கப்பட்டது. பின்னர் அவர் அடிக்கடி காயமுற்றதும் அவரது முன்னேற்றத்துக்கு உதவவில்லை.

யுவ்ராஜின் பிரச்சனையை மேலும் கூர்மையாக புரிந்து கொள்ள அவரை சேவாகுடன் ஒப்பிடலாம். சேவாக் யுவ்ராஜை விட நல்ல பின்கால் ஆட்டக்காரர் மற்றும் உடல் சமநிலை கொண்டவர். அவர் எந்த ஒரு குறிப்பிட்ட ஷாட்டுக்காகவும் முன்கூட்டி தயார்ப்படுத்திக் கொண்டு நிற்பதில்லை. இதனால் யுவ்ராஜை போல் எதிர்பாராமல் திசைமாறும் பந்துக்கு தடுமாறி சுதாரித்து மென்மையான முறையில் அவர் ஆட்டம் இழப்பதில்லை. சந்திக்கும் புள்ளியில் இருந்து பந்தை எங்கே போக வேண்டும் என்பதை சேவாகுக்கு அவரது மட்டை தான் தீர்மானிக்கிறது. அதுவரை அவர் எந்த திசைமாற்றத்துக்கும் தயாரான ஒரு நிலையில் தன்னை நிறுத்திக் கொள்கிறார். சேவாக் அடிக்கும் பந்தை ஸ்லிப் அல்லது லாங் ஆனில் தான் பிடிக்கலாம். யுவ்ராஜ் தனது மேற்சொன்ன குறைகளால் தொடர்ந்து உள்வட்டத்துக்குள்ளேயே காட்ச் கொடுத்து வெளியேறுவார். மேலும் சில குறிப்பிட்ட நீளங்களில் வீசி யுவ்ராஜை கட்டுப்படுத்துவது போல் சேவாகை முடியாது. குறைந்தது துணைக்கண்ட ஆடுதளங்களில் ஏனும். மேலும் ஒரு துவக்க மட்டையாளராக அப்போதைய அணித்தலைவர் கங்குலி சேவாகுக்கு கொடுத்த பொறுப்பு விரைவாக ஓட்டங்கள் எடுத்து எதிரணியை பின்வாங்க வைப்பதே. அவர் முப்பதோ நாற்பதோ எடுத்தாலும் பூஜ்யத்தில் வெளியேறினாலும் ஏற்பே. சதம் அடித்தால் அது உபரி எண்களாக கருதப்பட்டன. சேவாகை பற்றி பேசும் போது யாரும் அவர் அடிக்கும் ஓட்டங்களின் எண்ணிக்கை பற்றி கவலைப்படுவதில்லை. அவர் ஏற்படுத்தும் பாதிப்பு, ஓட்டங்களின் வேகத்தில், எதிரணியின் பந்து வீச்சு அளவுகளில் அவர் செய்யும் மாற்றம், உளவியல் ரீதியாய் ஏற்படுத்தும் பின்னடைவு ஆகியவை தான் முக்கியம். இது “சேவாக் விளைவு எனப்பட்டது. எதிரணியை நிலைகுலைப்பவர் என்னும் எளிய எதிர்பார்ப்பை மீறி சேவாக் பல டெஸ்ட் சதங்களை உலகெங்கும் அடித்தார். இரு முறை முன்னூறுக்கு மேல் அடித்தார். சேவாகை அவரது முதல் ஆட்டத்தில் கவனித்த ஆடம் கில்கிறிஸ்ட் தனது பத்திரிகை பத்தி ஒன்றில் “இவர் உலகின் சிறந்த ஒருநாள் மட்டையாளராக வருவார் என்று கணித்தார். ஆனால் நடந்ததோ நேர்மாறாக. சிறந்த டெஸ்ட் வீரராகவும் சுமாரான ஒருநாள் வீரராகவும் ஆனார். மேலும் சேவாகுக்கு ஒரு தலைசிறந்த டெஸ்ட் மட்டையாளனாக வரும் ரகசிய விருப்பம் இருந்துள்ளது. சச்சினை தனது வழிகாட்டியாக அவர் கருதி தீவிரமாக அவரது அறிவுரைகளை, குறிப்பாக நிலைத்து ஆடுவது, பின்பற்றி வந்துள்ளார். யுவ்ராஜிடம் சேவாகின் மேற்சொன்ன திறன்களோ, ஆட்ட சுதந்திரமோ இருக்கவில்லை. சச்சினை போல் ஆடும் வேட்கையும் இல்லை. இருவரும் அதிரடியானவர்கள் என்றாலும் சேவாகிடம் டெஸ்ட் வடிவில் சிறப்பதற்கான அந்த X-அம்சம் இருந்தது. தனது ஒருநாள் ஆட்டநிலை சுமாராக இருப்பது சேவாகை அதிகம் பாதித்ததாக தெரியவில்லை. அவர் டெஸ் வடிவத்தில் தான் அதிக கவனம் செலுத்தினார். யுவ்ராஜ் ஒருநாள் பிராந்தியத்தை வென்றடக்கிய பின் அலெக்சாண்டர் தத்துவார்த்தமாக உணர்ந்தது போல் ஒரு பிடி மண்ணை பற்றியபடி நிராசையாக நின்றார்.

கங்குலியின் ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் அணியில் யுவ்ராஜ் தான் வெளியாள் அல்ல எனும் முயற்சியில் தன்னை சுயநிந்தனை செய்வதாகவே தெரிந்தது. அவர் கவலை மிகுந்த முகத்துடன் தனது டெஸ்ட் ஆட்டம் பற்றி அறிக்கைகள் விட்டார், கிடைக்காத வாய்ப்புகள் பற்றி விசனித்தார், எரிச்சலுற்றார்; இவை அத்தனைக்கும் பின் இருந்தது அவநம்பிக்கையும், இல்லாத ஒன்றும் இருக்கிறது என்று நம்பும் அவரது அப்பாவிடம் இருந்து கைவரப்பெற்ற பிடிவாதமுமே. ஒருவர் அனைத்திலும் வல்லவராக இருக்க கமலஹாசன் ஒன்பது வேடங்களில் நடிக்க மட்டும் காட்டும் முனைப்பு வேண்டும். தோனி சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னார் “நான் ஒரு சிறந்த மட்டையாளனோ கீப்பரோ அல்ல, நான் ஒரு பயன்மிக்க மட்டையாளன் மற்றும் கீப்பர். இந்த தெளிவு தான் தோனியின் வலு. சேவாக் எப்படி நல்ல ஒருநாள் மட்டையாளர் அல்லவோ அது போல் யுவ்ராஜ் சுமாரான டெஸ்ட் வீரராகவும் இருக்கலாம். ஒன்று மேலானதாகவும் மற்றது தாழ்வானதாகவும் கருதப்படுவது பொருட்டல்ல.

2011 உலகக் கோப்பையின் போது யுவ்ராஜின் உடல்தகுதி மோசமாக இருந்தது. பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஆதாரமான பிரச்சனை அவரது நுரையீரல் புற்றுநோய் தான். தன்னை மீண்டும் நிரூபிக்கும் ஆவேசத்தில் அவர் அவ்விசயத்தில் அதிக அக்கறை காட்டவில்லை. உலகக்கோப்பை முழுக்க புற்றுநோயுடன் ஆடி அவர் தொடர்நாயகனானது ஒரு அற்புதம் மட்டுமே. மனவலிமையும் தீராத உத்வேகமும் இருந்தால் மனிதனால் நோயின் பாதிப்பில் இருந்து எளிதில் மேலெழுந்து செயல்பட முடியும் என்பதற்கான உதாரணமே அது. ஆனால் ஒரு தீயவிளைவாக யுவ்ராஜின் உடல்நிலை சீரழிந்து கொண்டே வந்தது. உலகக்கோப்பையின் போது அடிக்கடி அவர் வாந்தி எடுத்தார். குறைவாகவே உணவு எடுத்துக் கொண்டார். இது அவரது பதற்றம் காரணமாகவே என்று தோனி உட்பட பலரும் நம்பினர். கோப்பை வென்றபின் யுவ்ராஜ் சிகிச்சை மேற்கொண்டார். ஆரம்பத்தில் தனது நோயை ரகசியமாக வைத்திருந்தார். மே.இ தொடரில் இருந்து தானாகவே விலகினார். பின்னர் அவரது கடப்பாடு குறித்து கேள்வியும் கிண்டலும் எழ அவரது அம்மா வெகுண்டெழுந்து மீடியாவுக்கு உண்மையை தெரிவித்தார். மீடியா வழக்கம் போல் யுவ்ராஜின் டெஸ்ட் தோல்விகளை தற்காலிகமாக மறந்து கண்ணீர் வடித்தது.

அவருக்கு வந்துள்ளது ஒரு அரிய வகை புற்றுநோய். உடலில் தோன்றும் முதல் அணுக்களில் ஏற்படுவது. பொதுவாக பாலுறுப்புகளில் தோன்றுவது. முப்பது வயதினரில் அதிகம் காணப்படும் இந்த நோய் 5 சதம் ஆட்களுக்கு தான் நுரையீரலில் வரும். யுவ்ராஜ் அப்படி ஒருவர். இந்த வகை புற்றுநோய் எளிதில் குணப்படுத்தக் கூடியது என்றொரு கருத்து நிலவுகிறது. ஆரம்பநிலையில் சிகிச்சை மேற்கொண்டிருந்தால் யுவ்ராஜ் இந்நேரம் நன்கு குணமாகி இருப்பார். ஆனால் அவர் சிகிச்சையை தொடர்ந்து தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். தொடர்ந்து கிரிக்கெட் ஆடி தன் மீதுள்ள விமர்சனங்களை பொய்யாக்க விரும்பினார். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஒருநாள் தொடருக்கான அணியில் பங்கேற்பதற்கான இரண்டு தேர்வு ஆட்டங்கள் பெங்களூரில் நடந்தது. உடல்தகுதி தேறியுள்ளதாக அறிவித்து பிரவீன் குமாருடன் அதில் யுவ்ராஜும் பங்கேற்றார். தான் நல்ல ஆட்டநிலையில் உள்ளதாக மீடியாவுக்கு தெரிவித்தார். ஆனால் தேர்வாளர்கள் அவரை எடுக்க உத்தேசிக்கவில்லை என்று அறிந்ததும் இரண்டாவது ஆட்டம் ஆடாமல் ஊருக்கு திரும்பினார். அணி அறிவிக்கப்படும் முன்னரே போதுமான உடல்தகுதி இல்லை என்றும், முழுநேர சிகிச்சை தேவையிருப்பதால் தன்னால் ஆட முடியாது என்றும் முன்பின் முரணாக பேட்டி அளித்தார். அப்போது பலருக்கும் எழுந்த கேள்வி அவரை ஒருவேளை தேர்ந்திருந்தால் புற்றுநோயுடன் ஆஸ்திரேலியா சென்று ஆடி தன் உடலை மேலும் சீரழித்திருப்பாரா என்பது.
யுவ்ராஜ் அமெரிக்காவில் கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்..அவர் மே மாதம் கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என்று அவரது டாக்டர்கள் அறிவித்துள்ளனர். நோய் என்பது மனிதன் தன்னை உணர்ந்து கொள்வதற்கான இயற்கையின் ஒரு மறைமுக சேதியும் தான். தன்னையே கண்ணாடியில் பார்த்துக் கொண்டு சுயமான இருப்பை ஏற்றுக் கொள்வதற்கான ஒரு இறுதி அழைப்பு. கீமோதெரபி போன்ற கடுமையாக உடல்வலிமையை சீரழிக்கும் சிகிச்சைகளுக்கு பிறகு அவர் உடனடியாக சூப்பர்மேன் சீருடையில் மீண்டு வர வேண்டியதில்லை. தனது சாவகாசமான இரண்டாம் வரவில் யுவ்ராஜ் இனி சாதிப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. கடந்த காலத்தில் இளைப்பாறவும் தேவையில்லை. தன்னில் அமைதி கொண்வராக அவர் திரும்பக் வேண்டும். ஒரு விளையாட்டு கலையாக மாறுவது அப்போது தான்.(இந்த மாத அமிர்தாவில் கவர் ஸ்டோரியாக வந்த கட்டுரை)
Read More

திராவிட் ஓய்வு அறிவிப்பு


15
வருடங்களுக்கும் முன் நானும் என் மாமா பையனும் மே.இ தீவுகளில் திராவிட் சச்சினுடன் டெஸ்டில் ஆடுவதை இரவில் பார்த்துக் கொண்டிருப்போம். சச்சின் ஆடினால் கூப்பிடு என்று சொல்லி விட்டு தூங்கி விடுவேன். எழுந்தால் அடுத்த ஓவருக்குள் ஒன்றும் நடந்திருக்காது - திராவிட் ஏமாற்றிருக்க மாட்டார். இப்படி ஓவர் விட்டு ஓவர் எனக்கு ஓய்வளித்த திராவிட் நிரந்த ஓய்வெடுக்க போவது அறிந்ததும் மிகுந்த வருத்தம்!


Read More

Wednesday 7 March 2012

கால்கள்: இதுவரை கவனப்படுத்தாத ஒரு வாழ்வு – இமையம்



கால்கள் நாவல் இதுவரை தமிழ் இலக்கியம் கவனப்படுத்தாத ஒரு வாழ்வை வாசகர் முன் வைத்திருக்கிறது.  அந்த வகையில் இந்த நாவல் முக்கியமானது.  ஒவ்வொரு மனிதனுக்கும் கனவு, லட்சியம், ஆசை, நோக்கம், எதிர்பார்ப்பு என்று பல இருக்கிறது.  அவற்றை நோக்கித்தான் ஒவ்வொரு மனிதனும் ஓடிக்கொண்டிருக்கிறான்.  கனவை, லட்சியத்தை, நோக்கத்தை, ஆசையை, எதிர்ப்பார்ப்பை அடைந்துவிட்டார்களா யாராவது?
  தெரியாது.  கால்கள் நாவலில் வரக்கூடிய மதுவுக்கும் ஆசை, லட்சியம், கனவு, எதிர்பார்ப்பு, நோக்கம் எல்லாம் இருக்கிறது.  அவளும் மனிதப் பிறவிதானே.  ஆனால் அவளுடைய கனவு, ஆசை, லட்சியம், நோக்கம் - மாடி வீடு கட்டுவதல்ல.  கோடீஸ்வரி ஆவது, உலக அழகியாவது, தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து தன்னை சிகப்பியாக்கிக்கொள்வது, படித்த, நாகரீகமான, ரொம்பவும் அழகான- அதேநேரத்தில் ஆடம்பரமான வாழ்க்கைக் கொண்ட, முக்கியமாக அமெரிக்காவில் வேலை செய்கிற- குறைந்தப்பட்சம் இந்தியாவில் பன்னாட்டு ஐ.டி.நிறுவனத்தில் வேலை செய்கிற மாப்பிள்ளை அல்ல.  அவளுடைய கனவு மிகவும் எளியது.  காலிப்பர், சக்கர நாற்காலி, உதவியின்றி சிறிது தூரம் காலாற நடந்து செல்ல வேண்டும் என்பதுதான்.  அது மட்டும்தான் அவளுக்கு சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது.  போலியோவால் சூம்பிப்போன, எதற்குமே உதவாத, உடலில் அனாவசியமாக ஒட்டிக்கொண்டிருக்கும் ஊளைச்சதையாக இருக்கிற, தண்ணீரில் போட்ட துணிமாதிரி கொழகொழத்து கிடக்கிற கால்கள்தான் - அவளுக்கு கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது என்று மருத்துவர் நம்புகிறார்.  சூம்பிப்போன கால்களை கொண்ட பெண்ணையும் நம்ப வைக்கிறார்.  இப்படியான ஆசீர்வாதங்களை மட்டுமே தருகிற கடவுள்கள் எதற்கு?  கர்த்தர் எதற்கு?  கால்கள் நாவலின் வழியே ஆர்.அபிலாஷ் கேட்கிற கேள்விகள்.  இக்கேள்விகள் எழுப்புவதற்காகத்தான் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
    குடலில் இருக்கிற வைரஸ் கிருமி காரணமின்றி நரம்பு மண்டலத்திற்கு வந்து - நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்கிறது.  அதனால் ஒரு குழந்தையின் கால்கள் எதற்கும் உதவாத ஒன்றாகிவிடுகிறது.  கால்கள் என்ற பெயரில் இரண்டு நூல் பந்துகளை கொண்ட மது-என்கிற இளம்பெண்ணைப்பற்றி நாவல் பேசுகிறது.  மது எப்படி வாழ்கிறாள், அவளுடைய உலகம் எப்படி இயங்குகிறது, அவளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், நண்பர்கள் என்று நாவல் அமைந்திருக்கிறது.  சக்கர நாற்காலியில் ஒரு உலகம்.  ஒரு வாழ்க்கை.  மது நடக்கிறாள்.  நடந்து நடந்து உலகையே வலம் வருகிறாள்.  அவள் நடப்பது கால்களால் அல்ல.  மனதால் மட்டுமே.  கண்களால்கூட அவள் நடக்கவில்லை.  கண்கள் பொய்ச்சொல்லும் என்பது மதுவுக்கு தெரிந்திருக்கிறது.  கண்களுக்கு உண்மையும், பொய்யும், நிஜமும் நடிப்பும் ஒன்றுதான்.  அது ஒரு திரை.  அதனால் மது தன் வாழ்வை மனதால் மட்டுமே வாழ்கிறாள்.  மனதால் மட்டுமே நடக்கிறாள்.  அவளுக்கு சாத்தியப்பட்டது அது மட்டும்தான்.  மனதிற்குள்ளாகவே ஒரு வாழ்வை நடததிச் செல்வதும் வாழ்ந்துப் பார்ப்பதும் எளிய காரியமல்ல.  மது சாகசக்காரி.
    மது இருபத்தி ஐந்து வயது பெண்ணாக இருக்கிறாள்.  ஏழு எட்டு வயதில் அவளையொத்த பிற குழந்தைகள் தெருவில் ஓடும்போது, விளையாடும்போது - மது தனி அறையில் முடங்கிக்கிடக்கிறாள்.  அப்போதே அவளுடைய உலகம் கருகிவிடுகிறது.  வாழ்நாள் முழுவதும் அவள் முடங்கித்தானே கிடக்க வேண்டும்.  காலிப்பரை மாட்டும்போதும், கழட்டும்போதும், சக்கர நாற்காலியில் உட்காரும்போதும், இறங்கும்போதும் நான்கு தப்படி தூரத்தை கடப்பதற்கு அந்த உடல் படுகிற அவஸ்தை - பெருவலி.  வாழ்நாள் முழுவதும் குழந்தையாகவே இருக்க வேண்டும் என்பது எவ்வளவு துயரமானது.  பிறரால் கையாளப்படும் ஒரு பொருள்.  மதுவின் உடல் - மனம் கொள்கிற அவஸ்தைதான் நாவல்.  மதுவுக்காக தன் வருத்தத்தை, கண்ணீராக கொட்டியிருக்கிறார் ஆர்.அபிலாஷ்.  உலகிலுள்ள எல்லா எழுத்தாளர்களுமே இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இதைத்தான் செய்ய முடியும்.  மனித உடல் படும் வாதைக்கு - தன் பங்களிப்பாக - கொஞ்சம் கண்ணீர்.
    “ஏன் எனக்கு மட்டும் கால்கள் நடக்க முடியாமல் போச்சி?” (ப.505) இந்த ஒரு கேள்வியில்தான் கால்கள் - என்ற மொத்த நாவலுமே இருக்கிறது.  இந்தக் கேள்வியை கேட்கத்தான் இந்த நாவலே எழுதப்பட்டுள்ளது.  இந்தக் கேள்விக்கு யாரிடமும் இல்லை பதில்.  நரம்பு மண்டலத்தை சீரழித்த வைரஸ் கிருமியிடம்கூட இல்லை.  நம்முடைய எல்லா கடவுளர்களும் அற்புதங்களை நிகழ்த்தி- அந்த அற்புதங்களின் வெளிச்சத்தில் தங்களை ஸ்தாபித்துககொண்டவைதான்.  அந்த அற்புதங்களின் வெளிச்சத்தில் சிறு துளிகூட மதுவின்மீது விழவில்லை.  கருவாக இருக்கும் ஒரு குழந்தை என்ன பாவம் செய்திருக்க முடியும்?  குறிப்பாக கடவுளர்களுக்கு?  எல்லாருக்கும் நோய்வரும் போகும்.  துன்பம்வரும் போகும்.  ஆனால் மதுவுக்கு வாழ்நாள் துயரம்.  நோயிலிருந்து ஒரு கணம்கூட விலகியிருக்க முடியாது.  மனநோயாளிகிற பாலுகூட சரியாகிவிடுகிறான்.  ஆனால் மது?  துயரம்தான் வாழ்க்கை.  கடவுளின் பரிசு.  கடவுளின் அற்புதம்.
    மதுவின் உலகம் கண்ணாடியால் கட்டப்பட்ட கூண்டு.  அந்த கூண்டுக்குள் அவள் மட்டும்தான் இருக்க முடியும்.  அதிலும் சில நேரங்களில் மட்டும்தான் அவளால்கூட இயல்பாக இருக்க முடியும்.  பலநேரங்களில் அவளாலேயே அந்த கூண்டு உடைந்து போகிறது.  அவளே துணிந்து உடைக்கவும் செய்கிறாள்.  அவளால் மட்டுமல்ல பிறராலும் அந்த கண்ணாடி கூண்டு உடைந்துபோகிறது.  அந்த கூண்டில் மனிதர்கள் ஓயாமல் கற்களை வீசிய வண்ணம் இருக்கிறார்கள்.  அன்பு என்ற பெயரில், இரக்கம், பச்சாதாபம், ஐயோ பாவம், சலுகை என்ற பெயரில் முன்னுரிமை, ‘நான் நொண்டியாக’ இல்லையே என்ற ஆதங்கத்தின், மனப்பொறாமையின் வழியாக கற்கள் வீசப்படுகின்றன.  இரண்டு சக்கர வாகனம் ஓட்ட உரிமம் பெற காத்திருப்பதில் கிடைக்கிற முன்னுரிமைக்காகக்கூட பொறாமைப்படுகிற சிறுமைத்தனம்.  மனிதர்களைவிட கீழ்மைப்பட்ட, சிறுமைப்பட்ட விலங்கினம் வேறு உண்டா?  இதைத்தான் நாவல் முழுவதும் ஆர்.அபிலாஷ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
    மதுவின் உலகம் கண்ணாடியிலான கூண்டு மட்டுமல்ல, கற்பனை கூண்டும்கூட.  அவளுடைய உலகில் கற்பனைதான் அதிகம்.  கொஞ்சம் சிந்தனை - அதைவிடவும் சிறியதாக - ஒரு துளிபோல எதார்த்தம்.  அந்த ஒரு துளி எதார்த்தம்கூட அப்பா, அம்மா, நண்பர்கள், மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும்போது கிட்டுகிறவர்கள்.  மொத்தத்தில் மதுவின் வாழ்விடம் வீட்டிலுள்ள சிறிய அறையும், மருத்துவ மனையும்தான்.  பெயருக்குத்தான் கல்லூரி இருக்கிறது.  சதா விழுந்துகொண்டே இருப்பதற்குக் காரணம் வெளி உலகோடு அவள் வாழ விரும்புகிறாள்.  வீட்டிற்கு மருத்துவமனை பெரிய இடம்தானே.  நிறைய மனிதர்கள் இருப்பார்கள்.  நிறைய முகங்களை பார்க்க முடியும்.  அதற்காகத்தான் அவள் அடிக்கடி விழுந்து - அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.  அதனால்தான் நாவலில் வீட்டைவிட மருத்துவமனை முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.  நாவலில் மருத்துவமனையும் சிகிச்சை முறையும்தான் முக்கியமான பாத்திரங்களாக இருக்கின்றன.  தெருவில் கேட்கும் குரல்களின் வழியாக மனிதர்களையும், அவர்களுடைய வாழ்வையும் அடையாளம் காண்கிறாள்.  மதுவின் மன உலகின் வழியே விரியும் உலகைவிட. அதைவிட முக்கியமான பாத்திரம் பேச்சு.  மது மட்டுமல்ல, பேராசிரியர்கள், கண்ணன், சுமி, விஜயா, மருத்துவர் அபிரகாம், காலிப்பர் செய்கிற கிழவர், பாலு என்று எல்லாருமே பேசுகிறார்கள்.  பேச்சு- அவர்களுக்கு உணவாக, வாழ்வாக இருக்கிறது.  அதுதான் அவர்களை வாழ வைக்கிறது.  அவர்களுக்கு விதிக்கப்பட்டது பேச்சு.  நாவலில் வருகிற பலரும் படித்தவர்களாக இருக்கிறார்கள்.  அதிலும் இலக்கியம் படித்தவர்கள். இலக்கியம் படித்தவர்களுக்கு இருக்கிற ஒரே சிக்கல் அவர்களால் ஒருபோதும் இயல்பாக இருக்கவும், வாழவும் முடியாது.  இயல்பாக வாழத் தெரியாதவர்கள் என்பதைவிட அப்படி வாழவும் விரும்பாதவர்கள்.  இதைத்தான் நாவலில் இடம்பெற்றுள்ள உரையாடல்கள் காட்டுகின்றன.  நாவலில் பேசாதவர்கள் இரண்டுபேர் இருக்கிறார்கள்.  ஒருவர் பைத்தியம் என்று சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்.  மற்றொருவர் குடிகாரன் என்று வர்ணிக்கப்படும் ஆட்டோக்கார கணேஷ்.   அவன் சாராயம் குடித்திருக்கிறான்.  ஆட்டோவை வேகமாக ஓட்டுகிறான்.  ஆனால் மரியாதையாக இருக்கிறான்.  சரியான கூலியை மட்டுமே வாங்குகிறான்.  ஆடடோக்காரனின் எளிய பண்பு இலக்கியம் படித்தவர்களிடம் இல்லை.  உலக இலக்கியம் படிக்கிறார்கள், உலகத்தரமான சினிமா பார்க்கிறார்கள், உலக மக்களுக்காக அக்கறைப்படுகிறார்கள், ஓயாமல் சிந்திக்கிறார்கள்.  ஆனால் ஆட்டோக்காரனிடம் இருக்கும் நேர்மை அவர்களிடம் இல்லை.  ஏன்?  ஆட்டோக்காரன் உலகத்தரமான இலக்கியம் படித்தவனில்லை.  உலகத்தரமான சினிமா பார்த்தவனில்லை.  கால்கள் நாவலில் ஆர்.அபிலாஷ் முன் வைக்கிற கேள்விகள் மிகவும் எளியவைகள்தான்.  சின்னச்சின்ன கேள்விகளுக்குக்கூட நம்மிடம் பதிலில்லை.  சௌதாமினியுடன் கொண்ட கள்ள உறவால் தலைமறைவாகிவிடுகிறார் மருத்துவர்.  அவர் புனிதராகிவிடுகிறார். சௌதாமினியை ஊர் வாய் மெல்லுகிறது.  அவளுடைய வயிற்றிலிருக்கும் புற்று கட்டிக்காக மகிழ்ச்சியை கொண்டாடுகிறது.  மனித உயிரின் மதிப்பு சமூக அந்தஸ்தைப் பொருத்தே அமைகிறது.
    கால்கள் நாவலில் கடவுள் சார்ந்த உரையாடல் தொடர்ந்து நிகழ்கிறது.  இருக்கிறாரா - இல்லையா?  தெரியாது.  அமிர்தானந்தமாயி முக்காலத்தையும் உணர்ந்தவராக - அற்புதம் செய்கிறவராக இருக்கிறார்.  அதன்பொருட்டு அவருக்கு பணம் வருகிறது.  பொறியியல், மருத்துவ கல்லூரி என்று சொத்து வருகிறது.  அதன் வழி அவருக்கு உலகமெல்லாம் விளம்பரமும்-வியாபாரமும் பணமும் கிடைக்கிறது.  பாலுவுக்கு மனநோய் சரியாகவில்லை.  மது காலிப்பரின் துணை கொண்டுதான் நடக்கிறாள்.  அப்படியானால் அற்புதங்கள் யாருக்கு நடக்கின்றன?  அமிர்தானந்தமாயிக்கா மதுவுக்கா, பாலுவுக்கா?  பாலுவின் தந்தை ஆங்கிலப் பேராசிரியர்.  அவர் அமிர்தானந்தமாயின் அற்புதங்கள் குறித்து விரிவாக பேசுகிறார்.  மருத்துவர் அபிரகாம் ஏசுவின் அற்புதங்கள் குறித்து பேசுகிறார்.  பேராசிரியரின் வேலை என்ன, மருத்துவரின் வேலை என்ன?  தங்களுடைய வேலையை விட்டுவிட்டு மதப்பிரச்சாரம் செய்கிறார்கள்.  அற்புதங்கள்பற்றிய கதைகள் நோயாளிகளான பாலுவுக்கும், மதுவுக்கும் அலுப்பை உண்டாக்குகின்றன.  அவர்களுடைய வலி குறையாத வரைக்கும் அவர்கள் எந்த அற்புதங்களையும் நம்பப்போவதில்லை என்பதை நாவல் அழுத்தமாகச் சொல்கிறது.  அவள் மனம் திறந்து ஒரு நாளும் சிரித்ததில்லை.  பகவத் கீதையை படித்துக்கொண்டிருக்கும் மருத்துவர் சொக்கலிங்கம் 100% ஊனத்தை 48% என்று மாற்றித்தர ஐநூறு ரூபாய் லஞ்சம் பெற்று சான்றளிக்கிறார்.  பகவத் கீதையை உயிராக மதிக்கும் ஒருவர்தான் ஊனமானப் பெண்ணிடம் கூச்சமில்லாமல் லஞ்சம் வாங்கிக்கொண்டு போலிச்சான்றிதழ் தருகிறார். 

    நாவலில் பெற்றோர்களும் கவலையில் இருக்கிறார்கள்.  குழந்தைகளும் கவலையில் இருக்கிறார்கள்.  பரஸ்பர குற்றச்சாட்டுகளுடனும், பரஸ்பர கழிவிறக்கத்துடனும்.  மதுவின் அப்பா குடிகாரராகிவிடுகிறார்.  பாலுவின் அப்பா பேராசிரியர் அமிர்தானந்தமாயின் பிரச்சார பீரங்கியாகிவிடுகிறார்.  ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கூண்டு தேவைப்படுகிறது.  மனித மனம் என்பது இல்லாத ஒன்று ஏங்குவது.  நொண்டி நடக்கிறான், குருடன் பார்க்கிறான், செவிடன் கேட்கிறான்.  அற்புதங்கள் நிகழ்கின்றன.  யாருடைய கால்கள் நடந்தன.  யாருடைய கண்கள் பார்த்தன.  யாருடைய காது உயிர் பெற்றது.  பெரு வெளிச்சத்தில் வியாபாரம் செழித்து வளர்ந்து கொண்டிருக்கின்றன.  ஆனால் மதுவின் கால்கள் கீரைத்தாண்டுமாதிரிதான் கடைசிவரை இருக்கின்றன.  கடவுள்கள் பெருகுகிறார்கள்.  வியாபாரமும் பெருகுகிறது. 
    கால்கள் நாவல் மதுவை - பின்தொடர்ந்து செல்கிறது.  அந்தப் பயணத்தில் மதுவின் மன உலகுக்குள் இருக்கிற ஏக்கங்களை-நடப்பது என்ற செயலுக்காக அவள் மனம் கொள்ளும் விழைவுகளை ஆர்.அபிலாஷ் வாசகனுக்கு காட்டித்தருகிறார்.  அதில் நாம் அதிர்ந்துபோகிறோம்.  வாசகனை அதிர்ந்துபோக வைப்பது நாவலாசிரியரின் நோக்கமல்ல.  ஆனால் உண்மைகள்-மதுவின் மனதிலுள்ள உண்மைகள் அப்படித்தான் இருக்கின்றன.  உலகிலுள்ள எல்லாப் படைப்புகளுமே வாழ்வை, மனித மனத்தை படம் பிடிக்கத்தான் விரும்புகின்றன.  கடலிலிருந்து கைப்பிடியளவு நீரைத்தான் அள்ள முடிகிறது.  அதுகூட கையில் பிடித்த காற்றாக இருக்கிறது.  படைப்பின் நோக்கமும் காற்றைப் பிடிப்பதுதான்.  ஆர்.அபிலாஷ் தன் காரியத்தில் சரியாகவே வேலை செய்திருக்கிறார்.  கடுமையாகவும்தான்.
    வாழ்விலிருந்து-மனதிலிருந்து ஒரு உலகை உருவாக்கிக் காட்டுவதற்கும், உரையாடலின் வழியாக, தர்க்கங்களின் வழியாக ஒரு உலகை உருவாக்கிக்காட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கிது.  வாழ்க்கை என்று ஒன்று இல்லாவிட்டால் உரையாடலுக்கும், தர்க்கத்திற்கும், நீதிநெறிகளுக்கும் இடமில்லை.  முக்கியமாக கடவுளுக்கு இடமில்லை.  வாழ்வின் சாரம் இல்லாமல் எழுதப்படும் எழுத்து சிமெண்ட் கலவை இல்லாமல் வெறும் செங்கற்களைக்கொண்டு அடுக்கியது போன்றது.  படைப்பு மனம் சார்ந்த உரையாடலுக்கானது.  ஆர்.அபிலாஷ் அறிவு சார்ந்த உரையாடலுக்கு முன்னுரிமை தந்திருக்கிறார்.  தர்க்கத்தைவிட வாழ்விற்கு, உண்மைக்கு அதிக பலம் உண்டு.  “இறந்துபோன ஒரு தொலைபேசிபோல் அவள் தலை இருந்தது” (ப.460) போன்ற வாக்கியங்கள் படிக்கும்போது கவர்ச்சியாக இருக்கும்.  ஆனால் கவர்ச்சி விரைவில் அழிந்துவிடும்.  அனுபவம் இருக்கிறது.  அதற்கான மொழிதான் ஆர்.ஆபிலாவுக்கு கைக்கூடிவரவில்லை. வைதேகி, பேபி, சிவகலா, வடிவு மாமி, குமார், செல்வம் எல்லாம் நாவலுக்குள் வெறும் பெயர்களாக வருகிறார்கள். நிறைய எழுதுவதைவிட குறைவாக எழுதுவது மேலானது என்பது ஆர்.அபிலாசுக்குத் தெரியும்.
    தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்க ஆர்.அபிலாஷ்க்கு - அவருடைய கால்கள் (நாவல்) நிச்சயம் உதவும்.
‘கால்கள்’ - நாவல்
ஆர்.அபிலாஷ்
உயிர்மை பதிப்பகம்
சுப்ரமணியன் தெரு,
அபிராமபுரம்
சென்னை
(இம்மாத உயிர்மையில் வெளியான விமர்சனம்)
Read More

Monday 5 March 2012

ஜப்பானிய மரணக் கவிதைகள்: சிறு அறிமுகம்



ஜப்பானியர்கள் மரணத்தை வாழ்தலுக்கு நிகராக நிறைவு தரும் செயலாக பார்க்கிறார்கள். அதனால் நாட்டுக்காக, மன்னனுக்காக செய்யும் உயிர்த்தியாகங்கள் ஆகட்டும், தனிநபர் தற்கொலைகள், ஜீவசமாதிகள் ஆகட்டும் அவை துர்சம்பவங்களாக பார்க்கப்படுவதில்லை. இலையுதிர் காலத்தில் ஒரு இலை உதிர்வது எவ்வளவு இயல்போ அவ்வளவு இயல்பே அவர்களுக்கு உயிர்நீத்தலும். மேலும் சீனாவில் இருந்து அங்கு பரவிய பௌத்தம் இவ்வுலகம் ஆசை, அநித்யம் ஆகியவற்றாலான துக்கம் நிரம்பியது என்றும், மனிதன் மரணத்துக்குப் பின் மேற்சொன்ன மனக்களங்கங்கள் அற்ற சுவர்க்கத்தை சென்றடையலாம் என்ற ஒரு மித்தை உருவாக்கியது. அதனாலே அங்கு இறந்தவனை பிணம் என்றல்ல புத்தன் என்றழைக்கவே பிரியப்படுகிறார்கள். இறக்கும் தறுவாயில் மோட்சம் கிடைக்க புத்தரை வாய் விட்டு அழைக்க வேண்டும் என்று அவர்களின் மரபு கூறுகிறது. வானில் மேகங்களின் வடிவில் புத்தர் இறந்தவனை அழைத்துப் போக எழுந்தருள்வார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
மற்றொரு பக்கம் நாகார்ஜுனரின் மத்தியம பௌத்தம் ஆகட்டும் சாமுராய்கள் மத்தியில் பின்னர் பிரபலமான ஜென் பௌத்தமாகட்டும் ஆன்மீகப் பேறை அடைவதற்கான தடையாக தர்க்க சிந்தனையை கண்டன. சிந்தனையின் பாரமற்ற தெள்ளத்தெளிந்த மனநிலையே மெய்யறிவு. வாழும் போதை விடவும் இறந்தநிலையில் தான் முழுமையான சிந்தனை விடுவிப்பு சாத்தியம். ஆக மனமற்றுப் போகும் மரணத்தை ஒரு முக்தியாக ஜென் மரபு கருதியதிலும் வியப்பில்லை. சுவர்க்கம் வானத்திலோ ஆழ்மனதிலோ, மரணம் எப்படியும் அவர்களுக்கு வரவேற்புக்குரியதே. இறக்கும் முன் ஒரு கவிதை எழுதி விட்டுப் போவது ஜப்பானியரின் மரபு. இதன் நோக்கம் மேற்சொன்ன ஏற்பு நிலையை சென்றடைய, தனக்குத் தானே உறுதி செய்ய அல்லது பிறருக்கு அறிவிக்க.

ஜப்பானியர் குழுமனப்பான்மை மிக்க ஒரு சமூகம். எதிரே வருபவரிடம் பணிவாக முகமன் சொல்வதற்கும் பதில்கள் உரைப்பதற்கும் அவர்களிடம் நூற்றுக்கணக்கான சொல்லாடல்கள் உள்ளன. ஒரு விரோதியிடம் கூட மிக பணிவாக “உங்களை நேசிக்க என் மனம் அனுமதிக்கவில்லை என்று சொல்பவர்கள் ஜப்பானியர்கள் என்று ஒருமுறை கிண்டலாக சொன்னார் ஜார்ஜ் லூயி போர்ஹெஸ். அத்தனைக்கும் காரணம் அவர்களுக்கு மரபின் மீதுள்ள விடாப்பிடியான பற்று. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்து பதினாலாவது நூற்றாண்டு வரை நீடித்த காமகுரா காலத்தில் சாமுராய்களின் ஆதிக்கமும் அத்துடன் ஜென் தத்துவத்தின் எழுச்சியும் நிகழ்கிறது. உள்நோக்கிய ஜென்னும் சமூகவயமான அவர்களின் மரபும் ஒரு புள்ளியில் இணைகிறது. பதினாறாவது நூற்றாண்டில் இருந்து பத்தொம்பதாவது நூற்றாண்டு வரையிலான இடோ காலத்தில் ராஜவிசுவாசத்தின் பெயரிலான மரணம் என்பது மெச்சப்பட்டது. மன்னனுக்காக தன் வயிற்றைக் கிழித்து கராஹரா எனும் தற்கொலை புரிந்தனர். பல படைத் தளபதிகள் மன்னர் மரணமுற்ற உடனே குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தம் கடமையாக எண்ணினர். இதன் நீட்சியாகவே இரண்டாம் உலகப்போரின் போது பல ஜப்பானிய ராணுவ இளைஞர்கள் வெடிகுண்டுகள் நிரம்பிய விமானங்களில் தன்னிச்சையாக எதிரிநாட்டு படைத்தளங்கள் மீது மோதி தம்மை தம்மை அழித்துக் கொண்டனர். அவர்கள் புத்தருக்காக அல்ல மன்னருக்காக தம்மை அழித்துக் கொண்டாலே போதும், சொர்க்கம் செல்லலாம் என நம்பினர். காதல் தோல்வியுற்றோர் மரணம் தமது பிரச்சனைகளுக்கான ஒரு நியாயமான தீர்வு என நம்பினர். சமூகம் தம் மீது ஏற்படுத்தும் களங்கத்தை துடைக்கவும் தற்கொலை உதவும் என்று நினைத்தனர். அவர்களும் ஒரு மரணக் கவிதையை விட்டுச் சென்றனர். ஆக துறவிகள், சாமுராய்கள், படைத்தளபதிகள் போன்றே காதலர்களும் வீரமரணம் உற்றவர்களும் கூடத் தான் அங்கு மரணக் கவிதைகள் எழுதினர். ஜப்பான் மரணத்தை கொண்டாடும் ஒரு சமூகம் என்கிற நம்பிக்கை இப்படித் தான் மெல்ல மெல்ல ஏற்பட்டது. இதற்கு மற்றொரு பரிமாணமும் உள்ளது.

இந்தியாவில் இருந்து சென்ற பௌத்தத்தின் இகவுலக மறுப்பை அவர்கள் தமது இயல்பான இயற்கை நேசிப்பின் வழியிலே உள்வாங்கிக் கொண்டனர்.  ஜப்பானியர்கள் உலகத் துயரத்தை அழுகும் உடலின் உக்கிர வலியில் காணவில்லை. அவர்கள் அதை அழிந்து மீண்டும் தோன்றும் இயற்கையின் பேரழகில் கண்டனர். ஆரம்பகால மரணக் கவிதைகளில் நிலையாமையின் குறியீடாக மலர்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தபட்டது. பருவச் சுழற்சி எப்படி தவிர்க்க முடியாததோ அதே போன்றே மனித வாழ்வின் நிலையாமையும். இதில் நன்மையும் தீமையும் உண்டு. அழிவும் பிறப்பும் உண்டு. மனிதன் ஒரு பனித்துளியைப் போன்றவன் என பல மரணக் கவிதைகள் சொல்கின்றன. ஒரு பருவத்தில் உறைகின்ற பனி, மற்றொரு பருவத்தில் ஆவியாகிற பனி மீண்டும் வசந்தத்தில் திரும்பும். ஆக இழப்புக்கு துக்கப்படுவதற்கு இணையாக அவர்கள் வாழ்வின் கொடைகளுக்கும் ஆனந்தப்பட தயங்குவதில்லை. முக்கியமாக பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு மனிதன் உள்ளாகிறானே அன்றி அதைக் கட்டுப்படுத்தவோ அறியவோ அதற்கு பொறுப்பாகவோ அவனால் முடியாது. இந்திய விதி தத்துவத்தை ஜப்பானியர்கள் இவ்வாறு மேலும் பௌதிகமாக நேர்மறையாக இயற்கைச் சுழற்சியாக புரிந்து கொண்டனர். ஒரு ஜப்பானிய ஜென் துறவியால் உடலை வெறுக்க முடியாது. ஏனென்றால் உடல் அவனுடையதல்ல. அது பிரம்மாண்டமான இயற்கையின் ஒரு பகுதி. அவன் பணி தன்னை இயற்கையிடம் ஒப்பிவித்து தோன்றும் போது தோன்றி மலரும் போது மலர்ந்து உதிரும் போது தன்னை உதிர்ப்பதே. அதனாலே பிளாத் போன்ற அமெரிக்க கவிஞர்கள் எழுதிய மரணக்கவிதைகளின் நிராகரிப்பும் மனநெருக்கடியுமோ, அல்லது கீட்ஸ் போன்ற கற்பனாவாதிகளின் சாஸ்வத விருப்பமோ இவர்களிடம் இல்லை. மேற்கத்திய மரபு மனநெருக்கடியின் பக்கம் நின்று ஒன்று மரணம் இல்லை என்றோ அது மட்டுமே உண்டு என்றோ மிகையாக பேசுகிறது. ஜென் மரபு மரணம் வேறுபட்ட ஒன்றல்ல, அதுவும் வாழ்வே என்கிறது.

ஆனால் ஜப்பானிய மரணக் கவிதைகள் அத்தனையும் ஜென்மரபை சார்ந்ததோ அதில் இருந்து தோன்றியவையோ அல்ல. அவை ஜப்பானியரின் ஆதிப்பண்பாட்டில் இருந்து தோன்றியவை. பௌத்தமும் ஜென்மரபும் அவற்றுக்கு ஒரு உயர்ந்த தத்துவார்த்த ஆன்மீக நிலையை அளித்தன. அதனாலேயே காதலர்களும் போர்வீரர்களும் எழுதியவற்றில் இருந்து துறவிகளும் ஹைக்கூ கவிஞர்களும் ஜென்மரபை சேர்ந்த சாமுராய்களும் இயற்றியவை மேலும் தரமானவையாக உள்ளன. அவற்றையே நாம் இங்கு காணப் போகிறோம்.

ரெங்கா மற்றும் தாங்கா ஆகியன ஜப்பானியரின் இரு முதன்மை கவிதை வடிவங்கள். ரெங்கா எனும் கூட்டுக் கவிதையின் முதல் சில வரிகளை தனித்தெடுத்து வளர்ந்ததே ஹைக்கூ. ஜப்பானிய மரணக் கவிதைகள் தாங்கா மற்றும் ஹைக்கூவில் தாம் அதிகம் எழுதப்படுகின்றன.

மரணத்துக்கு முன் கவிதை எழுதுவதென்பது வாழ்வை அதன் போக்கில் வாழ அறிவுறுத்தும் ஜென்னுக்கு எதிரானதில்லையா? இந்த கேள்வி மரணக் கவிதைகளின் மீது ஒரு ஐயத்தை தொடர்ந்து ஏற்படுத்துகின்றன. கவிதை ஆசான்களிடம் தம் மனைவிக்கு மரணக் கவிதை எழுதித் தரக் கேட்கிற கணவன்கள் அங்கு உள்ளனர். பொதுவாக இக்கவிதைகள் மரணத்துக்கு சற்று முன்னர் எழுதப்படுகின்றன. போர் வீரர்களும் தற்கொலை புரிபவர்களும் ஏற்கனவே எழுதி எடுத்துச் செல்கின்றனர். எழுத முடியாத நிலையில் மரணப்படுக்கையில் இருப்பவர்கள் படுத்தபடியே சொல்ல பிறர் எழுதிக் கொள்கிறார்கள். நருஷிமா சுஹாசிரோ என்பவர் மரணக் கவிதை எழுதும் முன்னர் தாம் இறந்து விடக் கூடும் என்கிற பயத்தில் 50வது வயதில் இருந்தே மரணக் கவிதைகள் எழுதி அவற்றை தம் ஆசான் ரெய்செய் தமெயெசுவிடம் கொடுத்து கருத்து கேட்டு வந்தார். பல வருடங்கள் கடந்தும் சுஹாசிரோவுக்கு வேளை வரவில்லை. ஆசானும் அலுத்துப் போனார். எண்பதாவது வயதில் சுஹாசிரோ இப்படி எழுதி ஆசானிடம் கொடுத்தார்:

எண்பது வருடங்களுக்கு மேலாக
மன்னர் பெருமான் மற்றும்
பெற்றோர்களின் கிருபையால், வாழ்ந்து விட்டேன்
சாந்தமான இதயத்துடன்
பூக்களுக்கும் நிலவுக்கும் நடுவே

ஆசான் பார்த்து விட்டு சொன்னார் “உனக்கு 90 வயதாகும் போது முதல் வரியை மட்டும் மாற்றி விடு

மற்றொரு கவிஞர் சாகும் முன் ஒரு அங்கத மரணக் கவிதை எழுதினார்
“இந்த கவிதையை இன்னொருவரிடம் இருந்து
கடன் பெற்றேன்
நான் செய்கிற கடைசி இலக்கிய திருட்டு இதுதான்

மரணக்கவிதை எழுதும் சடங்கை எதிர்க்கிற ஜென் துறவிகள் ஒரு பக்கம் இருக்க பலர் தயங்காமல் ஜப்பானிய மரபின் தொடர்ச்சியாக மரணக் கவிதைகளை விட்டுச் செல்கிறார்கள். சில மரணக்கவிதைகள் கவிதைகள் ஜென் போதிக்கும் ஞானத்தை மறுப்பவையாக, இறக்கும் போது முக்தி வாய்க்கும் எனும் தேய்வழக்கை கேலி செய்பவையாகவும் உள்ளன. மரணக்கவிதைகளின் சிறப்பே இது தான். அவை மரணத்தை ஏற்றுக் கொள்ளவும் அப்படி ஏற்றுக் கொள்ளும் மனித மனத்தின் அகங்காரத்தை கேலி பண்ணவும் செய்யும். இதற்கான முழுமுற்றான சுதந்திரத்தை அவை கொண்டுள்ளன.
கீழ்வரும் கேலிக் கவிதையில் உள்ள களங்கமின்மையை பாருங்கள்.
ஹனாபுசா இக்கெய் (இறந்த வருடம் 1843)

இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள்
வாழலாம் என்று தான் எண்ணினேன்
ஆனால் இதோ வருகிறது மரணம்,
எண்பத்தைந்தே வயதான
ஒரு குழந்தையிடம்.

சுவர்க்கம் பற்றின தேய்வழக்கை கேலி பண்ணும் மொரியா செனனின் (இ. 1838) கவிதை:

நான் செத்தால்
ஒரு கள்ளுக்கடையில்
வைன் பீப்பாய் அருகே புதையுங்கள்
அதிர்ஷ்டமிருந்தால்
பீப்பாய் கசியட்டும்.

சிலர் மரணக் கவிதை எழுதி விட்டு சாவில் இருந்து மீண்டும் சங்கடமான சூழ்நிலையில் இருப்பதுண்டு.

“பிழைத்த பின் அவர் தன்
மரணக் கவிதையின் நடையை சீர்செய்கிறார்

இன்னொரு நகைச்சுவை கவிதை.

“மருத்துவர்கள்
அவன் மரணக்கவிதை பாராட்டி
கிளம்புகிறார்கள்

பின்நவீனத்துவ கூறுகளும் காணக் கிடைக்கின்றன.
பாஷோ

“ஒரு பயணத்தில், நோயுற:
என் கனவு திரிகிறது
வறண்ட வயல்களின் மேலாக

இதை ஒருவர் இப்படி பகடி செய்கிறார்:
“அறைக்குள் பூட்டப்பட்டு:
என் கனவு திரிகிறது
விபச்சார விடுதிகள் மேலாக

1.பெய்க்கொ (இறந்த வருடம் 1903)
Baiko
(p.138)

பிளம் பூவிதழ்கள் வீழ்கின்றன
நிமிர்ந்து நோக்க வானம்,
ஒரு துல்லியமான தெளிவான நிலவு.

2.பைர்யு (இ. 1863)
Bairyu

ஓ ஹைடிராங்கியா புதரே
மாறி மாறி அடைகிறாய்
மீண்டும் உன் ஆதிநிறத்தை

குறிப்பு: ஹைடிராங்கியா புதர் கோடையில் பூ பூக்கும். இப்பூக்கள் ஏழுமுறை தொடர்ந்து வண்ணங்கள் மாறும்.

3.பைசெய் (இ. 1745)
Baisei
(p.140)

நித்தியத்தின் தீவு
ஒரு ஆமை தன் ஓட்டை காய வைக்கிறது
வருடத்தின் முதல் சூரிய ரேகைகளில்.

குறிப்பு: இங்கு குறிப்பிடப்படும் ஹொராய் தீவு சொர்க்கத்தின் தீவு என்று கருதப்படுகிறது.
4.பெக்கொ (இ. 1751)
Bako

பள்ளத்தாக்கை திரும்ப நோக்கும் போது:
எந்த வாழ்விடமும் இல்லை,
குயில் கூவல்கள் தவிர


5.பங்கொங்கு (இ. 1748)
Bankoku

ஆக நீண்டதொரு மழைக்கால இரவு.
பிளம் பூவிதழ்கள் உதிர்கின்றன; முடிவாய்
அந்த மேற்குத்திசை நிலா


6.சென்செகி (இ. 1742)
Senseki

ஒருவழியாய் கடைசியில் கிளம்புகிறேன்:
மழையற்ற வானில், ஒரு குளிர்நிலா
என் இதயம் பரிசுத்தமானது

7.செட்சுடொ (இ. 1776)
Setsudo

ஆக இப்போது,
அவ்வுலகுக்கான என் யாத்திரைக்கு
அணிவேன் பூப்போட்ட கவுன் ஒன்று

குறிப்பு: பூப்போட்ட கவுன் ஜப்பானியர் செர்ரிப்பூ பூக்கும் வசந்தத்தில் அணியும் ஒரு அழகான கிமோனொ ஆடை.

8.ஷகாய்(இ. 1795)
Shagai

எதார்த்தம் ஒரு மலரைப் போன்றது:
அந்தியின் ஊடே
மூழ்குகின்றன குளிர்மேகங்கள்

9.ஷியெய்(இ. 1715)
Shiei

இது போன்ற ஒரு வேளையில்
இப்பழமொழி நிஜமாகிறது
இதுவும் கடந்து போகும்

10.கொஹொ கென்னிச்சி (இ. 1316)
Koho Kennichi

இருந்தபடியோ நின்றபடியோ உயிர்நீத்தல் என்பது ஒன்றுதான்
நான் விட்டு விட்டுப் போவதெல்லாம்
எலும்புகளின் குவியலே
வெற்று வெளியில் முறுகி மேலெழுந்து
கீழிறங்குகிறேன் கடலை நோக்கிய
இடியின் முழக்கத்துடன்.

குறிப்பு: ஜென்னில் அமர்ந்தபடி அல்லது நின்றபடி இறப்பது உயர்ந்ததாக கருதப்பட்டது.

11.கொகெய் சொச்சின் (இ. 1597)
Kokei Sochin

அறுபது வருடங்களுக்கு மேலாய்
அடிக்கடி கூவினேன் “கட்சு என, எந்த பயனும் இன்றி.
ஆக இப்போது சாகும் தறுவாயில்
மீண்டும் ஒருமுறை “கட்சு எனக் கூவுதல்
மாற்றி விடப் போவதில்லை ஒன்றையும்

குறிப்பு: ஜென் துறவிகள் விழிப்புணர்வு அடையும் போது “கட்சு எனக் கூவுவார்கள்.

12.நம்போ ஜொம்யொ (இ. 1308)
Nampo Jomyo

காற்று தொலைந்து போகட்டும்!
மழை நாசமாய் போகட்டும்!
நான் கண்டுணரவில்லை எந்த புத்தனையும்.
மின்னல் தாக்கியது போல் ஒரு அடி
உலகம் தனதச்சில் சுழல்கிறது

13.செய்கன் சொய் (இ. 1661)
Seigan Soi

வாழ்க்கையின் களிப்பு,
வாழும் களிப்பு...
ஜென் கொள்கைகள் அர்த்தமிழக்கின்றன
மரணிக்கும் முன்
என் போதனையின் ரகசியம் இதுவே
என் கைத்தடி தலையசைத்து ஆமோதிக்கிறது
“கட்சு

14. ஷிக்கி (இ. 1902)
Shiki

14. பீர்க்கு செடி பூக்கிறது
நான், சளியால் நிறைந்து,
புத்தனாகிறேன்

15. 180 லிட்டர் சளி,
பீர்க்கை நீர் கூட காப்பாற்றாது
என்னை இனி

குறிப்பு: பீர்க்கை கொடியின் சாற்றை காசநோய்க்கு மருந்தாக பயன்படுத்தினார்கள். 1890களில் சீன-ஜப்பானிய போரைப் பற்றி எழுத நிருபராக ஷிக்கி சீனா சென்றார். அங்கு அவருக்கு காசநோய் தொற்ற பல வருடங்கள் படுத்தபடுக்கையாகி இறந்தார். தனது நோயின் பல்வேறு கட்டங்களை கவிதைகளாக எழுதினார். மரணம் நிச்சயமான கட்டத்தில் ஷிக்கி பீர்க்கை சாற்றை நிராகரித்தார்.

16. டைகன் சொஃபு (இ. 1555)
Taigen Sofu

என் வாழ்வின் கண்ணாடியை
என் முகத்துக்கு நேரே உயர்த்துகிறேன்: அறுபது வருடங்கள்.
ஒரே வீச்சில் என் பிரதிபிம்பத்தை நொறுக்குகிறேன்
உலகம் வழக்கம் போல
அனைத்தும் அதனதன் இடத்தில்

17.டெட்டோ கிக்கோ
Tetto Giko

உண்மை ஒருபோதும் மற்றொன்றில்
இருந்து எடுக்கப்படுவதில்லை.
ஒருவன் அதை
எப்போதுமே சுமக்கிறான் தனக்குள்ளே.
கட்சு!

18. தொசுய் உன்கெய் (இ. 1683)
Tosui Unkei
எழுபது வருடங்களுக்கு மேலாக
வாழ்வை உச்சபட்சமாக சுவைத்து விட்டேன்
மூத்திர வாடை என் எலும்புகளில் ஒட்டிக் கொண்டுள்ளது.
இதனால் எல்லாம் என்ன ஆகிவிடப் போகிறது?
ஹோ! நான் திரும்பப் போகிற இடம் எங்கே?
சிகரத்துக்கு மேல் வெளுக்கிறது நிலாவெளிச்சம்
தெளிவாய் ஒரு காற்று அடிக்கிறது.

19. இன்று தான் சமயப் பணிகளின் முடிவு
திரும்பச் செல்லுங்கள், நீங்கள் எல்லாரும், உங்கள் வீடுகளை நோக்கி.
உங்களுக்கு முன் கிளம்புகிறேன்,
கிழக்கு அல்லது மேற்குதிசையில்,
காற்று என்னை எங்கே சுமந்து போகிறதோ அங்கே

20. இச்சிமு (இ. 1854)
Ichimu

நொறுங்கின கனவு
எங்கே செல்லும்
இந்த பட்டாம்பூச்சிகள்


21. இச்சிஷி (இ. 1746)
Ichishi

என்ன புரிகிறது உனக்கு?
ஒரு சப்தம்,
இலையுதிர் பருவத்தின் குரல்

22. இப்பு (இ. 1731)
Ippu

என் குருவின் பாதையில்
நான் தயங்கிச் செல்லும் போதும், எங்களுக்கு மேல் ஜொலிக்கிறது
ஒரு நிலவு.

23. இஸ்ஸோ (1899)
Isso

விலையை குறைக்கக் கூடாதா!
வயது ஐம்பத்தேழு ஆனால் தான் என்ன?
வருஷம் தான் அநேகமாய் முடிந்து விட்டதே!

24. ஜிக்கோ (இ. 1791)
Jikko

குடும்பத்தினர் முணுமுணுக்கிறார்கள்
மருத்துவருடன் அவர்களின் சட்டைக்கைகளின் ஊடே
கடந்து போகின்றன குளிர்கால மழைகள்

குறிப்பு: ஜப்பானியர்க்கு ரகசியம் சொல்லும் போது சட்டைக்கைகளை முகத்தின் மேல் உயர்த்திக் கொள்ளும் வழக்கம் உண்டு.

25. ஜொமெய் (இ. 1766)
Jomei

சொற்களாலான இலைகள்:
இலையுதிர்பருவ வண்ணங்கள்
நிச்சலமாய் ஒரு மலை

26. ஜொவா (இ. 1785)
Jowa

ரெண்டாவது மாதம்:
ஒரு புது மூங்கில் தொப்பி அணிந்து
வீடு திரும்புகிறேன்

குறிப்பு: ஜப்பானிய மொழியில் ரெண்டாவது மாதமான பனிக்காலத்துக்கு கிஸாரகி எனும் சொல் பயன்படுகிறது. அதற்கு ஒன்றின் மேல் மற்றொன்றாய் ஆடை அணிதல் என்று ஒரு பொருள் உண்டு. இங்கு பனியால் தன்னை போர்த்திக் கொள்ளும் இயற்கையும் ஓரு சிறு தொப்பி அணிந்து நடக்கும் ஜொவாவும் ஒன்றாகிறார்கள்.

27. கஃபு
Kafu

செத்து தான் ஆகவேண்டும் என்றால்
சாக அனுமதியுங்கள்
மழைக்காலத்துக்கு முன்னர்

குறிப்பு: ஜப்பானிய பண்பாட்டு மரபில் நான்கு பருவங்கள் வாழ்க்கைச்சுழலுக்கான குறியீடுகளாகின்றன. மழைக்காலத்துக்கு முன் வரும் இலையுதிர் பருவம் மரணத்துக்கானது.

28. ககாய் (இ. 1778)
Kagai

வெற்றுக் கிளைகள்:
இலையுதிர்காலம் விட்டுச் சென்றது
ஒரு சிள்வண்டின் உள்ளீடற்ற கத்தலை

29. கைகா (இ. 1718)

விநோதம் இடம் வலம் என
பறக்கின்றன மின்மினிகள்
தூதுவர்களைப் போல்

30. கைஷோ (இ. 1914)
Kaisho

மாலைநேர செர்ரிப் பூக்கள்:
மைக்கல்லை என் கிமோனோக்குள் சொருகுகிறேன்
ஒரு கடைசிமுறையாய்

குறிப்பு: மைக்கல்லில் மைக்குச்சியை உரசி கவிதை எழுதுவதற்கான கரைசலை செய்வார்கள். கிமோனோ உடையின் இரண்டு மடிப்புகள் இணையும் முன்பகுதியில் பொருள் வைப்பதற்கு ஒரு பை உண்டு.

31. கன்கியு (இ. 1861)
Kangyu

இது நிஜத்தில் இப்படித்தான்
மேலும் நான் முன்னெப்போதும் கவனித்ததில்லை
புற்களில் பனித்துளிகள்

32. கன்ஷு (இ. 1772)
Kanshu

இலையுதிர் நிலா
அஸ்தமித்து விட்டாலும் கூட, இதயத்தில்
தேங்கியுள்ளது அதன் வெளிச்சம்

33. கரி (இ. 1770)
kari
என்னவொரு துக்கம்: செர்ரிப் பூக்கள்
என்னை வரவேற்கும்
மேகங்கள் ஆகின்றன

குறிப்பு: பௌத்த மரபுப்படி மரணத்தறுவாயில் ஒருவரை மேலுலகத்துக்கு அழைத்துப் போக மேற்கில் மேகங்கள் தோன்றும். கரி செர்ரிப்பூக்கள் மலர்கின்ற வசந்தத்தில் இறந்தார். இறுதியாய் அவற்றை காண நேர்ந்த போது அவர் துக்கமுற்றார்.

34. கசான் (இ.: 1818)
Kassan
கோடையில்
இருக்கிறேன்:
ஒரு தாமரை இலை

35. கெய்டொ (இ.: 1750)
Keido

குயிலின் குரல்
இன்னும் புதிரானதாகிறது
என் மரணத்தறுவாயில்

36. கினு (இ. 1817)
Kin’u
எவ்வளவு சாவகாசமாய் பூக்கின்றன
இவ்வருடத்து செர்ரி பூக்கள்
வரும் அழிவு குறித்து அவசரமின்றி

37. கியு (இ. 1820)
Kiyu
மாலை:
என்னைப் பெற்றவர்களின் பனித்துளியாகிய நானும்
அந்தியே

38. கிஸான் (இ. 1851)
Kizan

நான் போன பிறகு
யார் பார்த்துக் கொள்வது
கிரிசேந்தியச் செடிகளை

குறிப்பு: கிரிசேந்தியப் பூக்கள் இலையுதிர் காலத்தின் முடிவிலும் கூட உதிராதவை. இலையுதிர் காலம் இங்கு மரணத்தை குறிக்கிறது.

39. நகமிச்சி (இ. 1893)
Nakamichi

என் வாழ்வு மற்றும் மரணத்தின்
குறுக்குச் சாலையில்
ஒரு குயில் கத்துகிறது.

40. ஒகெனொ கினெமொன் கனெஹைட் (இ. 1703)
Okano Kine’mon Kanehide

நேற்றைய இரவின் பனி
அடர்ந்த வயல்களில்
பிளம் வாசனை

41. ஒனிட்சுரா (இ. 1738)
Onitsura

என் கனவைத் திரும்பத் தா,
அண்டங்காக்கையே! என்னை எழுப்பி நீ காட்டின
நிலவு மூடுபனியில் மறைந்து விட்டது.

42. ரைராய் (இ. 1780)
Rairai

இலையுதிர் பருவத்திலிருந்து விடை பெறுகிறேன்
கோடையின் பிண ஆடை
அணிந்து

குறிப்பு: பௌத்த ஈமச்சடங்குப் படி இறந்தோர் உடலை சணலால் நெய்த துணியால் பொதிவர். கோடைக்காலத்திலும் சணல் ஆடையணியும் வழக்கம் மக்களிடம் உண்டு. இதை ரைராய் குறிப்புணர்த்துகிறார்.

43. Rando
ராண்டோ (இ. 1686)

ஒரு நொடி
படர்கொடி சிவப்பாக வண்ணமேற்றியது
மாறாப் பசுமரத் தடியை

குறிப்பு: ஜப்பான் முழுக்க பரவராக காணப்படும் இக்கொடி இலையுதிர்பருவத்தில் உதிரும் முன் செந்நிறமாகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மரம் தேவதாரு.

44. ரான்செக்கி (இ. 1782)
Ranseki

ஒவ்வொரு நாளும் காணாமல் போனவை
எண்ணிக்கையில் அதிகரிக்கின்றன உறைந்துள்ள
மரக்கிளைகள்

45. ரான்செட்சு (இ. 1707)
Ransetsu

ஓரிலை விட்டு விட
மற்றொன்று பிடித்துக் கொள்கிறது
காற்றை

46. ரொக்குஷி (இ. 1881)
Rokushi

எழுபத்தைந்து வருட கனவில் இருந்து
விழித்தெழுகிறேன்
வரகுக் கஞ்சியின் முன்

குறிப்பு: ஒரு சீன நாட்டுப்புறக்கதையில் ஒருவன் தான் வாழ்வில் உயர்ந்து பெரும் பணக்காரனாவதாய் கனவு காண்கிறான். சட்டென்று விழித்துப் பார்த்தால் தனது வரகுக் கஞ்சி விறகு மூட்டாததால் இன்னும் கொதிக்கவில்லை என்று தெரியவருகிறது.

47. ரையுசை ((இ. 1895)
Ryusai

சல்லிசான பாம்பாஸ் புற்கள்
பிரகாசமானது
சாலை

48. ரையுஷி (இ. 1764)
Ryushi

மனிதனே புத்தன்
பகலும் நானும்
சேர்ந்தே இருள்கிறோம்

49. சைபா (இ. 1858)
Saiba

முழுநிலவுக்கு
பக்கமாய்
தலையணை நகர்த்துகிறேன்

50. சருவொ (இ. 1923)
Saruo

செர்ரிப் பூக்கள் உதிரும்
பாதி தின்ற
அரிசிக் கொழுக்கட்டை மேல்

குறிப்பு: ஜப்பானில் வசந்தத்தில் நிகழும் செர்ரிப் பூ விழாவில் அரிசிக் கொழுக்கட்டை உண்பது சடங்கு.

51. செய்ஜு (இ. 1776)

ஒருநொடி கூட
எதுவும் அசையாது இருப்பதில்லை பாருங்கள்
மரங்களில் நிறங்கள்

52. செய்ரா (இ. 1791)
Seira

படகில் ஏற
செருப்பை கழற்றுகிறேன்:
நீரில் நிலவு

குறிப்பு: ஜப்பானிய மரபுப்படி இறந்தவர்கள் படகில் ஏறி ஒரு நதியைக் கடந்து மறு உலகம் செல்வார்கள்.

53. சென்ச்சொஜொ (இ. 1802)
Senchojo

டியுட்சியா பூக்களில்
பொருத்துகிறேன் என் காதுகளை
குயிலோசை கேட்கத் தவறிடுமோ என

54. டெய்ஷிட்சு ( இ. 1673)
Teishitsu

புத்தாண்டு-
என்னை வாழ்வோடு பிணைப்பது
அரிசிக் கஞ்சி

55. தடாடொமொ (இ. 1676)
Tadatomo

இந்த பனியடர்ந்த மாதம்
சூனியமே ஆனாலும் மீதமுள்ளது
என் பிணத்தின் நிழல்

குறிப்பு: தடாடொமொ ஜப்பானிய மரபான முறையில் தற்கொலை செய்தார். அதற்கு முன் எழுதின ஹைக்கூ இது.

56. டோகோ (இ. 1795)
Toko

மரணக்கவிதைகள்
வெறும் மாயை
மரணம் என்பது மரணம். 
  (இந்த மாத உயிர்மையில் வெளிவந்தது)
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates