Tuesday 21 August 2012

மூன்றாவது நபர்



நான் உன்னிடம்


ஒரு எதிரியாக

முழுமையாக ஒப்புக் கொண்ட போது

உன்னிடம் பேச வார்த்தைகளே

இருக்கவில்லை


உன்னிடம் காட்ட

உணர்ச்சிகளே இல்லை

எதிரியை இவ்வளவு

நெருக்கமாய் பார்ப்பதைப் போல்

திக்குமுக்காட செய்வது

வேறொன்று இல்லை என்கிறாய்

புணர்ச்சியின் போது

சட்டென்று ஒளியின் பிம்பம் விழுவது போல்

நீ என்னை அவ்வளவு

சந்தேகமாய் பார்க்கிறாய்.

என்னிடம் பேச நினைத்தது அத்தனையும்

வேறொருவருக்கானது

என்று உணர்கிறாய்

ஒரு குழந்தையின் பழுதான பொம்மைகளைப் போல

உனது ஆயுதங்களை மறைக்கிறாய்

உனது கூர்நகங்கள் நெகிழ்ந்து

என் மயிர்க்கால்களை மிருதுவாக ஸ்பரிசிக்க

நான்

ஒரு பனிப்பிரதேசத்தை போல விரிசல் காண்கிறேன்.



பிறகு

என் கையை பிடித்துக் கொண்டு

விறுவிறுவென்று

என்னை அழைத்துச் சென்று நிறுத்துகிறாய்

துலங்கும் ஒரு கண்ணாடி முன்பு

நான் சொன்னேன்

“இந்த கண்ணாடி ஒரு குறியீடு

இந்த கண்ணாடி காட்டுவது

என்னை அல்ல

உனது பிம்பத்தை தான்”

நீ சொன்னாய்

”நான் அதைப் பார்க்க

உன்னை அழைத்து வரவில்லை”

அப்போது சட்டென்று நீ

என் கையை விடுத்து

விலகிச் செல்கிறாய்

காலதாமதித்த ஒரு பனித்திரையைப் போல.



உற்றுப் பார்க்க

அக்கண்ணாடியில் மூவர் இருப்பது

புலப்படுகிறது

நீ என்னை தனியே விட்டுப் போன

பின் இத்தனைக் காலமும்

நான் இங்கெயே தான்

நிற்கிறேன்

அந்த மூன்றாவது நபரின்

அடையாளம் தேடியபடி.

ஒருநாள் எதேச்சையாய்

நீ

கடந்து சென்ற போது கேட்டேன்

மூன்றாவது நபர் யாரென்று

கண்ணாடியை பார்ப்பவன் முதலாவது ஆள் என்றாய்

கண்ணாடியில் பார்க்கப்படுபவன் இரண்டாவது ஆள் என்றாய்

கண்ணாடியை குறியீடாய் பார்ப்பவன் மூன்றாவது ஆள்

ஒரு எதிரியை

இவ்வளவு பக்கத்தில் வந்து

அறிந்து விட்ட

உன்னை

மூன்றாவது நபரைக் கொண்டல்லாவது

வேறு எப்படி கொல்வது என்றாய்.

Read More

Tuesday 14 August 2012

ஒரு நீண்ட நகைச்சுவைப் படம் முடிவுக்கு வருகிறது





கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் தலைமையிலான தேர்வுக்குழுவின் பணிக்காலம் ஒரு முடிவுக்கு வருகிறது. தமது இறுதித் தேர்வான நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் T20 ஆட்டங்கள் மற்றும் T20 உலகக்கோப்பைக்கான அணிகளிலும் சில அதர்க்கமான மற்றும் விளக்கவே முடியாத தேர்வுகளை செய்து விட்டு அவர் விடைபெறும் போது நமக்கு ஒரு நீண்ட நகைச்சுவை படத்தை பார்த்த நிறைவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இப்படங்களிலும் இது போல் நிறைவில் ஒரு நகைச்சுவை இருக்கும்; எல்லாரும் சிரிப்பது போல் காட்சியை உறைய வைத்து முடிப்பார்கள்.



இம்முறை ஸ்ரீகாந்த் பியுஷ் சாவ்லாவை திடீரென்று டெஸ்ட் அணியில் தேர்வு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினது போதாது என்று வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஏதாவது தர்க்கம் இருக்கும் என்று நம்புபவர்களை வயிற்றை புரட்ட செய்துள்ளார். இம்முறையும் அவர் பத்திரிகையாளர்களிடம் விரிவாக உரையாடவில்லை. தேர்வு பற்றி விளக்க நேரமெல்லாம் இல்லை என்று முனகி விட்டு இடத்தை காலி செய்திருக்கிறார். இதற்கு முன் ஒரு தடவை தனது தேர்வுக்குழப்படி பற்றி கேள்வி கேட்ட நிருபர் ஒருவரிடம் “என்ன பாஸ் என்னை எரிச்சல்படுத்துகிறார்களா? என்னாலும் திருப்பி இது போல் பேச முடியும் என்ன!” என்று கத்த இந்த அதர்க்கமான பதில் புரியாமல் அந்த நிருபர் தலை கிறுகிறுத்திருக்கிறார். பொதுவாக ஸ்ரீகாந்த் பேசும் போது அவரது மூளை வேலை செய்வதை நிறுத்தி விடும். மூளை வேலை செய்யும் போது அவர் பேச மாட்டார். ஆனால் சிக்கல் அவர் பொதுவாக பேசுவதை நிறுத்தவே மாட்டார் என்பது.

பியுஷ் சாவ்லாவுக்கு வருவோம். அவர் கடந்த சில ஆண்டுகளாக மோசமான ஆட்டநிலையில் இருக்கிறார். அவருக்கு கால்சுழல் பந்து போடவே வராது. கூக்ளி மட்டும் தான். கடந்த ஐபிஎல்லிலும் அவர் சரியாக ஆடவில்லை. ஒரு டெஸ்ட் மேட்ச் முன்னர் இங்கிலந்துக்கு எதிராக ஆடினார். அதில் அவர் பந்து வீசிய போது அவரது ஒரு பந்தைக் கூட பீட்டர்சன் ஆப் பக்கம் அடிக்கவில்லை. ஒரு கால்சுழல் பந்துவீச்சாளருக்கு இதை விட அவமானம் வேறில்லை. ஆனால் தனது குறைவான திறமையை நன்றாக பிரயோகிக்க தெரிந்தவர் தான் சாவ்லா. அவரை போன உலகக்கோப்பையில் இது போல் ஸ்ரீகாந்த் அதிரடியாக தேர்ந்த போது எல்லாரும் விக்கித்து போனார்கள். சாவ்லாவின் பிரச்சனை அவரால் நெருக்கடியை கையாளத் தெரியவில்லை என்பது. சாவ்லாவை போன்றவர்கள் தாம் மே.தீவுகளின் பிஷுவும், தெ.ஆவின் தாஹிரும். ஆனாலும் இருவருக்கும் ஒரு வேட்டை மிருகத்தின் ஆளுமை உள்ளது; சாவ்லா முணுக்கென்றால் பதுங்குகிற ஒரு முயல். அவரால் மக்கள் எதிர்பார்ப்பின் பெரும் வெளிச்சத்தின் முன் உறையாமல் இருக்க முடியாது. எல்லா முயல்களும் எக்காலத்திலும் அப்படித்தான்.

சாவ்லா போன்ற ஒருவர் மீது தேர்வாளரோ அணித்தலைவரோ நம்பிக்கை வைப்பதில் தவறில்லை. ஆனால் எங்கிருந்தோ திடீரென்று அவரை கொண்டு வருவது தான் தவறு. ஒரு உலகக்கோப்பை தயாராவதற்கு நமக்கு நான்கு வருடங்கள் உள்ளன. இக்காலத்தில் நம் இரு வருடங்களாவது ஒரு வீரருக்கு வாய்ப்பளித்து தயாரிக்க முடியும். ஆனால் போன உலகக்கோப்பைக்கு முன் ஒரே ஒரு தொடரில் தான் சாவ்லா தேர்ந்தெடுக்கப்பட்டு உலகக் கோப்பைக்காக தயாராக்கப் பட்டார். இப்போது ஸ்ரீகாந்த் அவரை தன் மாந்திரிக தொப்பிக்குள் இருந்து சட்டென்று மீண்டு இழுத்தெடுத்து ஒரு டெஸ்ட் போட்டிக்கு அனுப்புகிறார். இதுவரை இரண்டாம் நிலை சுழலராக உருவாக்கப்பட்ட அமித் மிஷ்ரா, ராகுல் ஷர்மாவின் நிலை தான் என்ன? இவர்கள் இருவரையும் விட சாவ்லா எவ்விதத்தில் மேலானவர்?

ஸ்ரீகாந்தின் தேர்வுகள் எப்போதும் இப்படியாகத் தான் இருந்திருக்கின்றன. அவர் உள்ளுணர்வின் அடிப்படையில் ஆட்களை தேர்ந்தெடுக்கும் சூதாட்ட மனநிலை கொண்டவர். 2011 உலகக்கோப்பையின் போது இந்திய அணியின் கணிசமானவர்கள் பாதி ஆரோக்கியத்துடன் ஆட்டத்தகுதியுடன் தான் இருந்தனர். இது குறித்து ஒரு பரவலான கவலை அப்போது இருந்தது நினைவிருக்கலாம். பின்னர் தோனியே சொன்னது போல் ஒரு துருபிடித்த பழைய காரைக் கொண்டு ஒரு வழியாக கோப்பையை வென்று சாதனை செய்தோம். அதே சூதாட்ட அணுகுமுறை அதற்கு அடுத்து வந்த இங்கிலாந்து தொடரில் கைகொடுக்கவில்லை. இந்தியாவின் இரண்டு முக்கிய பந்து வீச்சாளர்களான ஹர்பஜனும், சஹீர்கானும் காயம் காரணமாக பாதி தொடரில் விலக இந்தியா பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. தோல்வியை விட இவ்வளவு மோசமான தயாரிப்புடன், உடல்தகுதி இல்லாத வீரர்களை ஒரு பயணத்துக்கு அனுப்பும் அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீகாந்த அதெற்கெல்லாம் அசந்து விடவில்லை. எந்தவித ஆட்டத்தயாரிப்பும் இன்றி இந்தியாவுக்கு ஆடும் கனவுகளை எல்லாம் இழந்து ஒரு புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த ஆர்.பி சிங்கை பாதியில் அழைத்து இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார். தொப்பையும் ஊளைச்சதையுமாக மூச்சு வாங்கியபடி 120 கி.மீ வேகத்தில் அவர் இங்கிலாந்தில் பந்து வீசுவது பார்க்க வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது. தேர்வின் போது ஸ்ரீகாந்த் ஆர்.பி சிங்கின் அப்போதைய ஆட்டநிலையையோ தயாரிப்பையோ பற்றி அக்கறை கொள்ளவில்லை. இதற்கு முன்பான இங்கிலாந்து தொடரில் (பல ஆண்டுகளுக்கு முன்பு) ஆர்.பி சிங் நன்றாக பந்து வீசியிருக்கிறாராம். உண்மையில் இங்கிலாந்தில் நமது சிறந்த பந்து வீச்சாளர் கபில் தேவ் தான். அவர் இப்போதும் கூட ஒன்றும் மோசமான வீச்சாளர் அல்ல.

இன்னும் கொஞ்சம் பின்னால் போனோம் என்றால் இந்தியாவில் தெ.ஆ அணி சுற்றுப்பயணம் செய்த போது முதல் டெஸ்டில் உடற்தகுதி இல்லாத ல்க்ஷ்மணை தேர்வு செய்து, ஒரு மட்டையாளன் குறைவாகவும் ஒரு பந்துவீச்சாளர் அதிகமாகவும் ஒரு சமநிலை அற்ற அணியை சீக்கா தேர்வு செய்ய கடைசி நேரத்தில் லக்ஷ்மண் காயமுற அப்போது அருகில் இருந்த ரோஹித் ஷர்மாவை அவரசமாய் அவருக்கு பதில் அனுப்ப அவரும் ஆட்டம் அன்று காலை கால்பந்தாட்டம் ஆடும் போது காயமுற இந்திய அணி ஒரு மட்டையாளன் குறைகிறது என்று சாஹாவை அணியில் எடுத்து இரு விக்கெட் கீப்பர்களுடன் ஆடியது நினைவு வரும். இப்படியான ஒரு குழப்படி உலகில் வேறெந்த அணிக்கும் நிகழ்ந்ததில்லை. இப்படியே நாம் பின்னால் சென்று கொண்டிருந்தால் ஸ்ரீகாந்த் எத்தனையோ தகிடுதித்தங்களை ஒரு வழமையாகவே செய்து கொண்டு வந்துள்ளது தெரியும். தமிழ்சினிமாவில் பிரேக் இல்லை என்று தெரிந்தும் அதை ஆவேசமாக மீண்டும் மீண்டும் மிதித்தபடி கதாநாயகிகள் காரை ஓட்டுவது போல் ஸ்ரீகாந்தின் பயணம் மிக சாகசமானதாகவும் பொழுதுபோக்கு மிக்கதாகவும் அமைந்துள்ளது புரியும். என்ன யாரும் காப்பாற்ற வரப் போவதில்லை என்று அவருக்கு தெரியும். சீக்காவின் கார் மோதினால் அடுத்தவர்களுக்கு தான் ஆபத்து என்பதால் தன்னை யாரும் காப்பாற்ற வேண்டியதில்லை என்றும் அவருக்கு தெரியும்.

திரும்பத் திரும்ப அபத்தங்களை செய்து செய்து இப்போதெல்லாம் ஸ்ரீகாந்தின் தேர்வுகள் ஒரு விமர்சனத்தை கடந்த நிலையை அடைந்து விட்டது. மீடியா அவரது தேர்வுகளை வெறுமனே அறிவித்து விட்டு நின்று கொள்கிறது. யாராவது சூடேறி விமர்சிக்கக் கிளம்பினால் அவர் ஸ்ரீகாந்தைப் போன்றே வேடிக்கையாக தோன்ற துவங்கி விடுகிறார். என்னதான் ஸ்ரீகாந்த ஒன்றிரண்டு அசட்டுத்தனங்கள் செய்தாலும் இந்திய அணி கடந்த சில வருடங்களாய் நிலைத்த ஒன்றாக இருப்பதால் நன்றாக ஆடி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதால் பார்வையாளர்களும் ஸ்ரீகாந்தை தவிர்த்து கிரிக்கெட்டை பார்க்க பழகி விட்டார்கள். சரி போகட்டும் ஸ்ரீகாந்தின் சாதனைகள் என்று, சீரியசான சாதனைகள் என்று, எவற்றை சொல்லலாம்?

முன்பு இந்திய தேர்வாளர்களுக்கு அணித்தலைவருக்கு தொடர்ந்து ஒரு அதிகாரப் போட்டி இருந்தவாறு இருக்கும். தேர்வாளர்கள் எப்படியெல்லாம் அணித்தலைவரை வெறுப்பேற்றலாம் என்று யோசித்து யோசித்து வேலை செய்வார்கள். உதாரணமாக சச்சினின் தலைமைப் பொறுப்பு இவ்வளவு தலைவலியாய் அமைந்ததற்கும் அவர் ஒருகட்டத்தில் வேண்டாவெறுப்பாக தலைவராக இயங்கி பின் ராஜினாமா செய்ததற்கும் அவர் காலத்து தேர்வாளர்களின் அதிகார மமதை கூடிய நடத்தை தான் என்கிறார்கள். சச்சினின் தலைமையிலான மே.இ தீவு பயணத்தின் போது ஸ்ரீநாத் காயப்பட்டார். இந்திய அணித்தலைமை ஒரு ஆப்சுழலரை அனுப்பும்படி தொலைபேசியில் தேர்வாளர்களிடம் வேண்டினார்கள். சச்சின் ஹைதராபாதை சேர்ந்த கன்வல்ஜித் சிங்கை கேட்டார். கன்வல்ஜித் மிகத் திறமையான சுழலர். அனுபவஸ்தர். பந்தை நன்றாக சுழற்றுபவர், நல்ல பவுன்ஸ் பெறுபவர். ஆனால் அவருக்கு பதில் நோயல் டேவிட் என்பவை தேர்வாளர்கள் அனுப்பினார்கள். நோயல் டேவின் நியுசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்களைப் போன்றவர். அவர் பந்து வீச்சு, மட்டையாட்டம், களத்தடுப்பு என எதையும் செய்வார், என்ன எதையும் உருப்படியாக செய்ய மாட்டார். அவரை வைத்து என்ன பண்ணுவது என்று சச்சினும் அப்போதைய பயிற்சியாளரும் குழம்பிப் போனார்கள். என்னவானாலும் சச்சின் கேட்டதை நாம் கொடுக்கக் கூடாது என்பதே தேர்வாளர்களின் நிலைப்பாடாக இருந்தது. இதைப் போன்றே அசாரும் மோங்கியாவும் வேண்டுமென்றே மோசமாக ஆடுகிறார்கள் (அதாவது சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்) என்ற சந்தேகம் சச்சினுக்கு இருந்தது. அதனால் அவர்களை நீக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். அக்காலத்தில் அசார் படுமோசமான் ஆட்டநிலையில் இருந்ததால் ஒரே ஒரு தொடருக்கு மட்டும் அவரை நீக்கி விட்டு உடனே திரும்ப கொண்டு வந்தார்கள். அணிக்குள் சச்சினுக்கு நிகரான ஒரு அதிகார வட்டத்தை நிலைக்க வைத்து அவருக்கு நெருக்கடி அளிப்பதே தேர்வாளர்களின் உத்தேசம். சச்சின் ராஜினாமா செய்தார். பின்னர் ராஜ்சிங் துங்கர்பூர் வற்புறுத்தி அவரை மீண்டும் தலைவராக்கினார். ஒரே பேரம் தான். அசார் மீண்டும் தேர்வாகக் கூடாது. அந்த நிபந்தனை பின்னர் மீறப்பட்டதும் சச்சின் உடனே அணியில் இருந்து மீண்டும் ராஜினாமா செய்தார்.

இந்த அவலநிலைமை தோனிக்கு இல்லை. அவர் ஒரு வெற்றிகரமான தலைவர் என்பதும் அவருக்கு உதவுகிறது தான். இருந்தும் தோனியுடன் முடிந்தவரை ஒரு இணக்கமான உறவை இந்த தேர்வுக்குழுவினர் மேற்கொண்டனர் என்பது பாராட்டத்தக்கது. ரவீந்திர ஜடேஜா, ரெய்னா போன்றோரின் தொடர்ந்த தேர்வுகள் தோனியின் விருப்பத்தின் படி நடந்தன என்பது கண்கூடு. சில வீரர்கள் அணித்தலைவரின் விருப்பம் மற்றும் நம்பிக்கையின் படி அமைய வேண்டும் என்பது அவசியம். எந்த அணியும் ஒரு தலைவரின் எதிர்பார்ப்புகள் மற்றும் தரிசனத்தின் படி தான் உருவாகின்றது. அப்போது சில வீரர்களின் அருகாமை தலைவரின் தன்னம்பிக்கைக்கும் அணிக்குள் அவரது அதிகார நிலையை தக்க வைப்பதற்கும் உதவும். இவ்விசயத்தை சீக்கா நன்கு உணர்ந்து கொண்டுள்ளார். ஆஸ்திரேலிய பயணத்தின் போது விரேந்திர சேவாக் கலகம் செய்ததால் அவர் பின்னர் ஆசியக் கோப்பையில் நீக்கப் பட்டார். சேவாக் போன்ற ஒரு வீரரை நீக்குவது எவ்வளவு உறுதியான வலுவான முடிவு என்று யோசியுங்கள். இக்கட்டத்தில் தேர்வாளர்கள் தோனியை ஆதரித்தது ஒரு முக்கியமான முடிவு. இதே உத்தேசத்தில் தான் சேவாக்கின் ஆதரவாளராக சில கட்டங்களில் மீடியாவில் தோனியை விமர்சித்து பேசின காம்பிரை உதவித்தலைவர் ஆக்காமல் அப்பொறுப்பை கோலிக்கு கொடுத்தார்கள். இரண்டு முடிவுகளும் நிச்சயம் நல்ல விளைவுகளை தந்துள்ளன. தோனிக்கும் சீக்காவுக்குமான இணக்கத்துக்கு இருவரும் CSKகாரர்கள் என்ற காரணமும் உதவியிருக்கும் தான்.

இன்று இந்திய அணியில் உள்ள முக்கியமான இளைய வீரர்கள் இதற்கு முன்னர் தேர்வாளர் தலைவராக இருந்த வெங்சார்க்கரால் கவனிக்கப்பட்டு அணிக்கு கொண்டு வரப்பட்டவர்கள். பிறர் ஐபிஎல்லில் தொடர்ந்து ஆகர்சித்து அந்த அழுத்தத்தினால் அணிக்குள் வந்தவர்கள். ஸ்ரீகாந்தாக யாரையும் புதிதாக கண்டுபிடித்து அணிக்கு கொண்டு வரவில்லை. அப்படி அவர் நம்பிக்கை வைத்த புதியவர்களான அபினவ் முகுந்த், உனக்தத் போன்றவர்கள் சோபிக்கவில்லை. ஆனால் ஸ்ரீகாந்த ஒரு நிலைத்த அணியை உருவாக்கும் விசயத்தில் கணிசமான சாமர்த்தியத்தை காட்டியுள்ளார். குறிப்பிட்ட நம்பிக்கையூட்டும் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கும் அவரது விடாப்பிடியான தேர்வு முறை பரவலாக கண்டிக்கப்பட்டாலும் அது பெரிதும் பயனளித்து உள்ளது என்றே கூற வேண்டும். குறிப்பாக அவர் ரெய்னா, கோலி ஆகியோரில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பளித்தது, யுவ்ராஜ் சிங்கை 2011 உலகக்கோப்பையின் முக்கிய துருப்புச்சீட்டாக நம்பி தேர்வு செய்தது ஆகியன் பாராட்டத்தக்கவை.

ஸ்ரீகாந்த் தனது தேர்வுக்காலத்தை துவங்கி முடிக்கும் போது பெருமளவு லாபத்தை ஈட்டவோ நட்டத்தை உருவாக்கவோ இல்லை என சொல்லலாம். ஆவேசமாக சூதாடும் ஒருவனைப் போல் அவர் தன் கையிருப்பை சிலவேளை இழந்தும் சிலவேளை மீட்டும் உள்ளார். இறுதியில் பூஜ்யமே எஞ்சியதே என்றாலும் ஆரம்பத்திலும் அதுவே இருந்தது என்பதால் நாம் அவரை மன்னித்து விடலாம் தானே. 1983க்கு பிறகு ஒரு உலககோப்பையை வென்ற, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையில் முதலாவது இடத்துக்கு இந்திய அணியை கொண்டு வந்த பெருமைகளும் தன்னை சாரும் தானே என அவர் கோரினாலும் நாம் கொஞ்ச பெருந்தன்மையுடன் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அவர் தேர்வாளராக இருந்தும் இதையெல்லாம் நடக்க விட்டிருக்கிறார் இல்லையா!

Read More

Friday 10 August 2012

அசோகமித்திரனிடம் வன்முறை உண்டா?

அசோகமித்திரனிடம் வன்முறை இல்லை என்று சுந்தரரமசாமி ஒருமுறை கூறினார். வன்முறை என்று அவர் சொன்னது அடிதடியோ ரத்தமோ அல்ல; தமிழ் பின்நவீனத்துவ எழுத்தில் பார்க்கும் மிகை-ஆர்வமான ஒழுக்கமீறலையோ கூட அல்ல. நமது தினசரி கலாச்சாரத்தில், மனம் சிந்தனையாக செயலாக மறைமுகமாக வெளிப்படும் விதத்தில் உள்ள வன்மத்தை சொன்னார்.

வாழ்வின் தீமையை பேசும் எழுத்தில் எல்லாம் இந்த வன்மம் உண்டு தான். நவீன இலக்கியத்தில் இதை இரண்டு விதங்களில் உக்கிரமாக கொண்டு வந்தார்கள். ஒன்று நாடகீயமாக. அதாவது பாத்திரங்களின் மனமோதல்களை சித்தரிப்பதன் வழி.

அடுத்து அறிவார்ந்தும் உணர்வுரீதியாகவும் ஒரு உன்னத நிலையில் இயங்கும் சாமான்யமற்ற மனிதர்களைப் பேசுவதன் மூலம். சு.ராவின் “ஜெ.ஜெ சில குறிப்புகளில்” வரும் ஜெ.ஜெ இப்படியான சாமான்யமற்ற பாத்திரத்துக்கு நல்ல உதாரணம். அவரது பிற பாத்திரங்கள் எளிய கணக்குப்பிள்ளையாக, கடிதம் எழுதும் பெண்ணாக, ஊனமுற்றவனாக இருந்தாலும் ஒரு பெரும் சமூக அழுத்தத்துடன் தான் மூர்க்கமாக மோதிக் கொண்டிருப்பார்கள். அது சமூகமோ வரலாறோ காலமோ அறிவியலோ ஆக இருக்கலாம். எந்த ஒரு மேற்கண்ட இயக்கமும் ஒரு அதிகார ஆற்றலாக செயல்பட்டு அவனை நசுக்க பார்க்கும். இந்த மீபொருண்மை வன்மத்தை தான் சு.ரா குறிப்பிட்டார்.

அசோகமித்திரனிடம் வன்முறை உண்டா? உண்டு. ஆனால் அது ஒரு செயலற்ற சாமான்ய மனிதனின் சிந்தனை பலமற்ற சன்னமான மூர்க்கம். ஒரு கொசு கடிப்பது போன்ற, பேருந்தில் காலை யாரோ மிதிப்பது போன்ற, ஒரே கேள்வியை திரும்பத்திரும்ப கேட்டு அழுவது போன்ற வன்முறை. அவரது கதைகளில் நாம் காணும் ஒவ்வொன்று அன்றாட அவஸ்தையிலும் ஒரு தனிமனிதன் மேல் காலத்தால் பிரயோகிக்கப்படுகிற இந்த வன்மம் உண்டு. எப்போதும் அவன் இந்த வன்முறைக்கு நேரடியாக எதிர்வினை ஆற்றுவது இல்லை. கலகமாகவோ அறிவார்த்தமாகவோ கவித்துவமாகவோ இப்படி எதிர்வினை செய்வது மிகையானது, செயற்கையானது என்பதே அசோகமித்திரனின் நிலைப்பாடு.

அவரது பாத்திரங்கள் அற்பமான அபத்தமான வழிகளில் தம் வன்முறையை காட்டுகிறார்கள். அது ஒரு ஓட்டல் பணியாளன் பூட்டப்பட்ட அறைக்குள் ஒரு “பூனையை” அடிப்பதோ ஒரு ஸ்டுடியோ பணியாளன் ஒரு நட்சத்திர நடிகனை காரணமின்றி தாக்குவதோ (”வெறி”) ஆகலாம். இந்த அபத்தமான வன்முறை உலகம் முழுக்க நவீனத்துவ புனைவின் ஒரு முக்கிய அம்சமே. ஒரு சிறந்த உதாரணமாக காம்யுவின் “அந்நியனை” சொல்லலாம். இதில் மெர்சால்ட் என்பவன் தன் அம்மா இறந்து போனதற்கோ தன் காதலியை பிரிவதற்கோ எந்த வருத்தத்தையும் இழப்பையும் உணராதவன். ஆனால் அவனே ஒரு கடற்கரையில் வெயிலின் உக்கிரம் தாளாமல் தன்னை எவ்விதத்தில் சீண்டாத ஒரு அரபியை சுட்டுக் கொல்கிறான். பிறகு அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அப்போதும் அவன் தான் குற்றம் செய்வதாகவே உணர்வதில்லை. மெர்சால்டிடம் நாம் காண்பது சமூகத்திடம் இருந்து தத்துவார்த்தமாக விலகுபவனின் அபத்தம். அசோகமித்தினிடம் நாம் காண்பது எந்த தத்துவசார்போ ஆன்மீக வலுவோ இல்லாதவனின் அபத்தமான வன்முறை.

இன்னும் ஆதாரமான ஒரு வேறுபாடு அசோகமித்திரன் மனித இயல்பிலும் வாழ்வின் போக்கிலும் உள்ள இந்த அபத்தத்தை ஏற்கிறார் என்பது. அவரது புனைவுலகில் எவ்வளவு தான் கீழ்மையில் வாழ்ந்தாலும் மனிதன் தனது மேம்பட்ட தன்மையை அங்கு தக்க வைக்கவே செய்கிறான். அவன் புகார் செய்வதோ சமூகத்தை எதிர்த்து நிராகரிப்பதோ இல்லை. காரணமற்ற அன்பும் வெறுப்பும் அவரது கதைகளில் பரவலாக வருகின்றன. அவரது பாத்திரங்கள் வாழ்வின் அநீதியை துயரத்தை கீழ்மையை ஒரு புன்னகையுடன் ஏற்கிறார்கள். அதில் எந்த மேன்மையும் உண்டு என்று அல்ல. வாழ்வது ஆனது அதனளவில் எந்த சிந்தனையையும் கோருவதில்லை; அநேகமானவர்களுக்கு அதற்கான அவகாசங்கள் இருப்பதில்லை என்பதால்.

இந்த ‘ஏற்பு’ தான் அசோகமித்திரனை சு.ரா வகை நவீனத்துவாதிகளிடம் இருந்து வேறுபடுத்துகிறது. உதாரணமாக சு.ராவின் கதையில் ஒரு பிணியாளி தன் படுக்கை அருகே தனக்கும் உலகுக்குமான ஒரே தொடர்பான ஜன்னல் நிரந்தரமாக மூடப்பட்டால் தனக்கு “மூச்சு முட்டுகிறது” என்று கத்தி எதிர்ப்பான். ஆனால் அசோகமித்திரன் இதே கதையை எழுதினால் அவன் தனது ஜன்னல் மூடப்பட்டு விட்ட அவலத்தை உணர்ச்சியற்ற குரலில் சொல்லி விட்டு, அதன் விளைவாக தன் வாழ்வில் ஏற்படும் ஒரு அபத்த வன்முறையை ஒரு கரிப்பான புன்னகையுடன் சித்தரித்து அந்த இழப்பை அவன் கடந்து செல்வதை சித்தரிப்பார். அசோகமித்திரனின் பாத்திரத்துக்கு மருந்துகளும், வசதியின்மையும், நாவின் சுவையின்மையும், தன்னை பராமரிப்பவரின் அவஸ்தைகளும் தான் நிஜமாக இருக்கும். தனிமையை உணரவே அவனுக்கு அவகாசமிருக்காது; அப்படி உணர்ந்தாலும் “பார் எவ்வளவு தனிமையாக இருக்கிறேன்” என்று சொல்லிக் கொள்ள மாட்டான். அசோகமித்திரன் எப்போதும் வன்முறையை எதிர்கொள்வதை அல்ல, அதை சிந்தனையின்றி ஏற்பவனின் வலியை தான் சொல்கிறார். அவனே பின்னர் தனது இந்த வலியை தாங்க முடியாத நிலையில் மற்றொருவரிடம் வன்மமாக தர்க்கமற்ற முறையில் வெளிப்படுத்துவதையும் காட்டுகிறார். அசோகமித்திரன் வன்முறையை எப்போதும் அவலம் கொண்டு தான் அடிக்கோடு இடுகிறார்.

இந்த பண்பை நாம் அவரது “வெறி” சிறுகதையில் நுணுக்கமாக பார்க்கலாம். இக்கதை த.மு.எ.சகாரரகளால் எளிதில் கொண்டாடக் கூடிய வகையான “அதிகார வர்க்கத்தால் சுரண்டப்படும் பாட்டாளி வர்க்கம் தன் எதிர்ப்பை காட்டுவதை” சொல்லும் கதை தான். ஆனால் அசோகமித்திரன் நமது கோபத்துக்கு எந்த கருத்தியல் பின்புலமும் இருப்பதில்லை என்று சொல்லுமிடத்தில் அவர்களிடம் இருந்து வேறுபடுகிறார். உழைக்கும் வர்க்கம் தமக்குள் உணரும் நட்பு கூட வர்க்க போதம் அல்ல ஒரு அபத்தமான அன்பு என்கிறார்.

“வெறியில்” கதைசொல்லி ஒரு ஸ்டுடியோவில் கீழ்நிலை பணியாளனாக இருக்கிறான். தருண் முகர்ஜி எனும் ஒரு பத்திரிகை புகைப்பட கலைஞனை ஒரு நாள் தெரியாமல் உள்ளே போக அனுமதித்து அதனால் நிர்வாகத்திடம் திட்டு வாங்குகிறான். ஆனால் அதனால் அவனுக்கு முகர்ஜி மீது கோபம் ஏற்படுவதில்லை. முகர்ஜிக்கும் தன்னால் திட்டு வாங்கின அவன் மீது பிரத்யேக பரிவேதும் இல்லை. அவன் மன்னிப்பு கேட்பதும் இல்லை. ஆனால் அடுத்தமுறை ஸ்டுடியோவுக்குள் நுழையும் போது கதைசொல்லிக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறான். இப்படி எந்த ஒரு பரஸ்பர ஆதரவோ அன்போ தேவைப்படாத ஒருவித தற்செயலான உறவற்ற உறவு அவர்களுக்குள் உருவாகிறது. அவன் தருண் முகர்ஜியை பார்க்க அவன் வீட்டுக்கு இருமுறை செல்கிறான். இருமுறையுமே தற்செயலாகத் தான். ஒருமுறை குழாய் ரிப்பேர்க்காரனை தேடியும், மற்றொரு முறை எலக்டிரிசியனை தேடியும் முகர்ஜியின் வீட்டுப் பக்கம் செல்ல நேரும் போது சென்று சந்திக்கிறான். மௌனி, நகுலன் ஆகியோர் கதைகளில் நண்பர்கள் சந்திப்பதன் முகமாகவே சந்திப்பார்கள். ஆனால் அசோகமித்திரன் இங்கு மேற்கண்டவர்களிடம் மாறுபட்டு எவ்வளவு கூர்மையாக மனித சந்திப்புகளின் சாதாரணத்தன்மையை காட்டுகிறார் பாருங்கள்.

இந்த தற்செயலான நட்பும் சந்திப்புகளும் தான் அவனுக்கு முகர்ஜியின் கடுமையான வறிய வாழ்க்கைச் சூழலையும் அவனது வாழ்வில் காதலும் திருமணமும் குழந்தையின் பிறப்பும் மரணமும் எப்படி அசந்தர்பமாக அனர்த்தமாக நிகழ்ந்து முடிகிறது என்பதையும் காட்டுகின்றன. முதல்முறை அவர் முகர்ஜியை பார்க்கும் போது அவன் ஒரு அழுக்கான உணவகத்தின் மேல்-அறையில் எந்த அடிப்படை வசதியும் அற்று வாழ்ந்து வருவதை பார்க்கிறான். அவன் அப்போது தன் நண்பனிடம் “உடனே நீ வேறு இடம் பார்த்து மாறி விடு” என்கிறார். அதற்கு முகர்ஜி “பதினைந்து ரூபாய் வாடகையில் இதைவிட வேறு எங்கு இடம் கிடைத்தாலும் அடுத்த நிமிடம் போய் விட தயார்” என்கிறான். தான் எடுக்கும் படங்களின் நெகட்டிவை கழுவுவதற்கு வெளியே செலவு செய்ய கட்டுப்படி ஆகாததால் அவன் அந்த புறாக்கூண்டு அறைக்குள் ஒரு சின்ன பெட்டி செய்து வைத்திருக்கிறான். அந்த பெட்டி தான் அவனது “இருட்டறை”. அங்கு ஒரு மனிதனால் கைகாலை மடித்து கூட ஒழுங்காய் இருக்க முடியாது. இதில் கழுவும் ரசாயனங்களின் நெடி வேறு புரட்டுகிறது. அங்கிருந்து வெளியே வரும் கதை சொல்லி தன் நண்பன் எப்படி ஏதாவதொரு வியாதி தொற்றி அரசு ஆஸ்பத்திரியில் கிடந்து அவஸ்தைப் படாமல் தப்பித்து வருகிறான் என்று வியக்கும் அளவுக்கு அவலமான வாழ்க்கைத்தரம் முகர்ஜியினுடையது.

இரண்டாம் முறை முகர்ஜியை பார்க்கும் போது அவனுக்கு ரகசியமாய் மணமாகி விட்டதாய் தெரிய வருகிறது. தன்னிடம் ஏன் தகவல் சொல்லவில்லை என்று அவன் முகர்ஜியை கடிகிறான். அவன் தனது காதலியுடன் தெருவில் போகும் போது அவளது சகோதரன் தன்னை செருப்பால் அடித்ததாய், பின்னர் இருவரும் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக் கொண்டதாக, இந்த அமளியில் யாருக்கும் ஒழுங்காய் அறிவிக்க முடியாமல் போய் விட்டதாக வருத்தத்துடன் சொல்கிறான். முகர்ஜி தனக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது என்றும் சொல்கிறான். ஆனால் அவன் சொல்லாமல் விட்ட ஒன்று உள்ளது. அது அவனது குழந்தைக்கு இரவு உடம்பு முடியாமல் போய் விடுகிறது. ஒரு பெண் மருத்துவரிடம் எடுத்துப் போகிறார்கள். அவள் மிகவும் எரிச்சலுடன் நடந்து கொள்கிறாள். வேண்டாவெறுப்பாக அவள் எழுதித் தரும் மருந்து குழந்தைகள் உட்கொள்ளவே கூடாது; வளர்ந்தவர்களுக்கே குறைவாக தர வேண்டிய அளவு வீரியமிக்க மருந்தை அக்குழந்தைக்கு தந்ததால் அது மேலும் நலமில்லாமல் ஆகி ஜுரத்தில் கொதிக்கிறது. அடுத்த நாள் காலை அதை வேறு ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக முகர்ஜியிடம் பணம் போதுமானதாக இல்லை. இருக்கிற கொஞ்சம் காசும் அவன் அன்று அவசரமாக சத்யன் குமார் என்கிற நட்சத்திர நடிகரை படம் எடுக்க வேண்டியதற்காக அலைந்ததில் பயணச் செலவாக கழிந்து விட்டது. அந்த நடிகரை தேடி அவன் ஸ்டுடியோவில் காத்திருக்கும் போது தான் கதைசொல்லியை அங்கு சந்திக்கிறான். அவன் தன் குழந்தையின் நிலைமையை பற்றி ஒன்றுமே சொல்வதில்லை. சத்யன் குமாரை போனில் திரும்பத் திரும்ப அழைக்கிறான். அவர் குளியறையில் உள்ளதாய் நாள் முழுக்க மாறி மாறி அவரே பொய்க் குரலில் சொல்கிறார். கதைசொல்லி தருண்முகர்ஜிக்கு படமெடுக்க வாய்ப்பு வாங்குவதற்காக முயன்று தோல்வி அடைகிறார். அன்று மாலை சத்யன் குமார் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறான்; ஆனால் அங்கும் அவன் தன் பிரத்யேக புகைக்கபடக்காரர்களைத் தவிர வேறு எவரையும் அனுமதிக்கவில்லை. ஒருநாள் முழுக்க காத்திருந்து பணத்தையும் இழந்து முகர்ஜி வீட்டுக்கு சென்றால் குழந்தை இறக்கும் தறுவாயில் இருக்கிறது. மனைவியிடம் காலையில் இருக்கிற பணத்தை கொண்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கேட்டிருந்தான். அவள் தனியே வெளியே போக பயந்து செல்லவில்லை. இப்போது ஒரு அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடுகிறான். அங்கே செலைன் இல்லை என்று அவனை வாங்கி வர அனுப்புகிறார்கள். ஜுரத்திற்கு வைக்க அங்கு ஐஸும் அப்போது இல்லை. முகர்ஜியின் மனைவி தான் ஈரத்துணியை வைத்து வைத்து எடுக்கிறாள். அப்போது இருந்த செவிலி அக்கறையின்றி நடந்து கொள்கிறாள். செலைன் தாமதமாக கிடைத்ததால் குழந்தையின் நிலைமை இன்னும் மோசமாகி விடிகாலை இறந்து விடுகிறது. அப்போது கதைசொல்லி தனது வீட்டில் மின்சாரம் பியூஸ் போனதால் அதை சரிசெய்ய ஆள் தேடி முகர்ஜி தன் மனைவியுடன் குடி இருக்கும் புது வீட்டுப் பக்கம் வருகிறான். அப்போது தான் சத்யன் குமாரை நாடி அவன் வந்த நாளில் நிகழ்ந்த இந்த சம்பவங்கள் எல்லாம் அவனுக்கு தெரியவருகின்றன.

முகர்ஜியின் குழந்தை இறந்ததற்கு யார் தான், எது தான் காரணம்?

அசிரத்தையாக மருந்து அளித்த பெண் மருத்துவரா? முகர்ஜி கடன் வாங்கியாவது தன் குழந்தையை அடுத்தநாள் வேறு மருத்துவரிடம் கொண்டு செல்லாமல் நடிகரை படமெடுக்கும் அவசர வேலையில் மூழ்கிப் போனதா? அவனது மனைவி வெளியே செல்ல தயங்கி குழந்தையை வீட்டிலேயே வைத்திருந்ததா? அரசு மருத்துவமனையில் செலைன் இல்லாமல் போனதா? ஐஸ் இல்லாமல் இருந்ததா? செவிலி அக்கறையின்று நடந்ததா?

பொதுவாழ்வின், சமூக அமைப்புகளின் ஊழலா, தனிமனித அசிரத்தையா, பெற்றோர்களின் சமயோஜிதமற்ற முடிவுகளா, அல்லது இந்தியர்கள் நாம் பொதுவாக நம்பத் தலைப்படுவது போல் விதியா? இவை எதுவுமே அல்ல சம்பவங்கள் அவ்வாறு அமைந்து விட்டன என்கிறார் அசோகமித்திரன். இந்த இடத்தில் உங்களுக்கு சுஜாதாவின் “நகரம்” நினைவுக்கு வரும். அதில் நகரம் எனும் ஒரு அமைப்பு மனிதனை எப்படி தனிமைப்படுத்துகிறது, அந்நியப்படுத்துகிறது என்று காட்டியிருப்பார். எந்த ஒரு அமைப்பின் சீரழிவும், அது மனிதனுக்காக அன்றி, புற்றுநோய் வந்த உடல் போல், வைரஸ் தொற்றின கருவி போல் தனக்காக மட்டும் செயல்பட துவங்குவதில் தான் இருக்கிறது. ஜெயமோகன் “ஒன்றுமில்லை” என்றொரு கதையில் நவின மருத்துவம் எப்படி மனிதனை ஒரு எளிய நோய்க்கூறைக் காட்டி சிகிச்சை என்கிற பெயரில் மரணத்தை நோக்கி தள்ளுகிறது என்று சித்தரித்திருப்பார். அசோகமித்திரனின் பாத்திரம் தன்னை சூழ்ந்துள்ள சீரழிவில் தானும் ஒரு பகுதி தான், இதையெல்லாம் எதிர்ப்பதில் விமர்சிப்பதில் அர்த்தமில்லை என்கிறான். “இந்த ஊழலை எல்லாம் நோண்டி வெளியே கொண்டு வந்து போராட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எவ்வளவு காலம் போராட முடியும்? மேலும் அதனால் என் போன குழந்தை திரும்பி வருமா?” என்று கேட்கிறான் முகர்ஜி. சுஜாதாவையும் ஜெயமோகனையும் போலன்றி அசோகமித்திரன் வாழ்வின் அத்தனை தீமைகளுக்கும் தனிமனிதர்களோ அமைப்போ அல்ல இவை அத்தனையையும் உள்ளடக்கிய வாழ்வின் பிரம்மாண்டமாக பிரவாகம் தான் என்கிறார். இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திக்கிட்டு நிற்கிறான். அவனது பிரமிப்பு தான் அவனை செயலற்றவனாக எதிர்க்க திராணியற்றவனாக மாற்றுகிறது. “நீ என்னிடமோ பக்கத்து வீட்டாரிடமோ கடன் வாங்கி குழந்தையை காப்பாற்றி இருக்கலாமே” என்று கதைசொல்லி கேட்க முகர்ஜி “நான் என்னென்னமோ செய்து குழந்தையை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அந்த தருணத்தில் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.” என்கிறான். இந்த நாட்டில் ஒவ்வொரு சாமான்யனும் ஏகப்பட்ட சீரழிவுகள், அநியாயங்களுக்கு மத்தியில் இப்படித் தான் கேள்வியே கேட்காமல் வாழ்கிறான். ஒன்றும் செய்யாமல் இருப்பது கூட அவனுக்கான நியாயம் தான். ஒரு குழந்தையை புதைத்து விட்டு வந்து அவன் எந்த கேள்வியும் இன்றி வாழ்வை விட்ட இடத்தில் இருந்து நாளை அவன் தொடரக் கூடும்.

கதைசொல்லி இந்த அநீதிக்கு இழப்புக்கு எப்படி எதிர்வினை பண்ணுகிறான் என்பது தான் கதையின் முக்கிய சுவாரஸ்யம். குழந்தையின் மரணத்துக்கு மிகவும் மறைமுகமாக, மிகவும் சன்னமாக தொடர்புடைய சத்யன் குமாரை அவன் அடிக்கிறான். அவன் அப்படி அடிக்கக் கூடியவன் என்று ஸ்டுடியோவில் யாரும் எதிர்பார்க்கவில்லை. அவனே கூட தான் அப்படி அடிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு அடி அடித்து விட்டு அதை விரும்பியது போல், ஒரு பயின்ற வன்முறையாளன் போல், அடுத்த அடிக்கு தயாராக கையை ஓங்குகிறான். அப்போது பிறர் அவனை பிடித்து காவலர்துறையிடம் ஒப்படைக்கிறார்கள். ”ஒரு நட்சத்திர நடிகனை அடித்தால் என்ன ஆகும் என்று பாடம் கற்பிப்பதற்காக” அவனுக்கு தண்டனையும் கிடைக்க செய்கிறார்கள். ஆனால் அவன் ஏன் தாக்கினான் என்று யாரும் அக்கறை கொள்ளவில்லை. அது தான் அமைப்பில் உள்ள அந்நியமாதல். ஏனென்றால் கதைசொல்லிக்கு நோக்கமே கிடையாது. இருட்டில் சத்தம் வரும் போது காற்றை நோக்கி கையை வீசுவது போன்றது தான் அவனது செய்கை.

குழந்தையின் மரணத்தோடு நேரடியாக தொடர்புடைய மருத்துவரையோ செவிலியையோ அவன் ஏன் தாக்க முனையவில்லை என்பது தான் முக்கிய கேள்வி. சொல்லப்போனால் அவர்களை தாக்கி விட்டு அவன் எளிதில் தப்பித்திருக்க முடியும்; வேலையையும் தக்க வைத்திருக்கலாம். சித்தாந்தங்களும் ஒழுக்க விழுமியங்களும் அறிவியல் தர்க்கமும் இந்த கேள்விக்கு பற்பல விடைகள் வைத்திருக்கின்றன. ஆனால் மனிதனின் பிரச்சனை அவன் அன்பு அல்லது வெறுப்பின் வழி தன்னை திறந்து கொண்டு வெளிப்படுத்தும் போது மேற்சொன்ன எதுவுமே அவனுக்கு துணையாக வருவதில்லை என்பது. அதனாலேயே “வெறி” கதைசொல்லியின் வன்மம் சுந்தரராமசாமியின் மீபொருண்மை வன்முறையும் அல்ல, மேலாண்மை பொன்னுசாமியின் வர்க்க எதிர்ப்பும் அல்ல. ஏனெனில் இந்திய வாழ்வில் இவை இரண்டுமே இல்லை.

இங்கு உள்ளது ஒன்று மட்டுமே: அபத்தம்.

நன்றி: அமிர்தா
Read More

Thursday 9 August 2012

ஆரோக்கியமான காலம்




நோயில் இருந்து மீண்டு வந்த மனிதன்


ஆஸ்பத்திரிகளிலும்

விண்ணப்ப படிவங்களிலும்

கௌரவ உரையாடல்களிலும்

பெண்களின் அருகாமையிலும்

தன் வயதை குறைத்து குறிப்பிடுபவன் போல்

இருக்கிறான்




அவன் எரிச்சலாக

இருக்கிறான்

தூங்கிக் கொண்டிருக்கும் போது

திருடிச் சென்ற நண்பனைத் தேடுபவனைப் போல்



வேகமாய் இயங்குவதும்

காலத்தை சேமிப்பதும் ஒன்று என

நம்புகிறான்

ஆனால்

எல்லாம் தப்பாகவே நடக்கிறது



எல்லாரும் அவன்

பல்வேறு விதங்களில் மாறி விட்டதாக

சொல்லுகிறார்கள்

எடை இழந்ததாய்

எடை கூடியதாய்

புன்னகைப்பதாய்

முகம் சுளிப்பதாய்

முடி கொட்டியதாய்

நகம் கடிப்பதாய்

சற்றே நொண்டுவதாய்

வேகமாய் நடப்பதாய்…

இப்போது யோசிக்க

இது தானே அல்ல

எனப் பட்டது அவனுக்கு



தான் காலத்துக்கு

வெகுபிந்திப் போய் விட்டதாய்

அவனுக்கு அப்போது

சந்தேகம் வந்தது



அவன் ஒவ்வொன்றையும்

பாதி வேகத்தில் செய்ய

தீர்மானித்தான்

காலை எழுந்து தூங்கும் வரை

மிக மிக மெல்ல இயங்குவது

எளிதே

ஒரே சிரமம்

எதற்கும்

நேரம் போதுமானதாக இருப்பதில்லை

என்பது



ஆரோக்கியம் முழுக்க மீட்டு

திரும்பிய போது

அவனது ஒரு வாரம்

பிறருக்கு

ஒரு நாளாக இருந்தது

அவன் தூங்கிக் கொண்டே

அல்லது விழித்தபடியே

பெண்களை அனுபவித்த்தபடியே

அல்லது வேலை செய்து கொண்டே

சதா இருப்பதாய்

அவர்கள் புகார் சொன்னார்கள்



நோயில் இருந்து முழுக்க மீண்ட பின்

அவனுக்கு புரிந்தது

நோயில் இருப்பது தான்

ஆரோக்கியமான காலம் என

Read More

Wednesday 8 August 2012

இன்று நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டி வருகிறது பாருங்கள்!



ரோஹித் ஷர்மா 16 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் ஆடிக் கொண்டிருந்த போது ஒருநாள் பயிற்சி முகாமுக்கு அவசர அவசரமாக ரயிலில் பயணித்து தாமதமாக வந்தார். அவரது பயிற்சியாளருக்கு பயங்கர கோபம் வந்து கத்தி விட்டார்: அவசரத்தில் ரோஹித் தனது மட்டை உள்ளிட்ட பொருட்களை எடுத்த வர மறந்து விட்டார். இது தான் ரோஹித் ஷர்மா என்று கூற வரவில்லை. இது தான் அவர் குறித்த பொது பிம்பம்.



அவரது கொழுத்த சரீரம், இரண்டு லட்டுக்களை பதுக்கியது போன்ற முக அமைப்பு, சோம்பலான நடை, சோம்பலான புன்னகை, சோம்பலான அழகான மட்டையாட்டம் எல்லாமே இந்த பிம்பத்துக்கு வலு சேர்க்கின்றன. ஆக ரோஹித் ஷர்மா இந்தியாவின் மிகத்திறமையான ஆக சோம்பலான மட்டையாளராக அடையாளப்படுத்தப் பட்டார். அவர் மீது பெரும் எதிர்பார்ப்புகள் கொண்டிருந்தவர்களும் திறமையான சோம்பேறிகளை பொதுவாக வெறுக்கும் மனநிலையாளர்களும் அவரை சேர்ந்து கண்டிக்க துவங்கி விட்டனர். ராகுல் ஷர்மா மீது மயக்கமருந்து குற்றச்சாட்டு உள்ள நிலையில் அவரிடம் கேள்வி கேட்க வந்த நிருபர் ஒருவரை ரோஹித் ஷர்மா தடுத்து பவ்யமாக திருப்பி அனுப்பியதாக ஒரு தகவல் வருகிறது. பின்னவர் எப்படி தன் அணி மீது பொறுப்புணர்வுடன் இருக்கிறார் என்று நிறுவவே இது சொல்லப்படுகிறது. அதற்கு ஒரு வாசகர் இப்படி பதில் உள்ளிடுகிறார்: ”ரோஹித் ஷர்மாவுக்கு ஏற்ற வேலை வாட்ச்மேன் வேலை என்பது இதனால் தெரியவருகிறது”.

இப்படி கடும் துவேசத்துடன் மீடியாவும் பொதுமக்களும் நடந்து கொள்வது இன்று ஒரு வலுவான போக்காகவே உள்ளது. ஒரு படம் தோல்வியடைந்தால் அதை மலம் என்று அழைக்கிறோம். இந்தியர்கள் அதிகமாய் பார்த்து அலசும் கிரிக்கெட்டும் சினிமாவும் இன்று இப்படியான மலிவான அபிப்ராயங்களைத் தான் உருவாக்குகின்றன. நாம் நிஜமாகவே அதிகமாக எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து அதனால் கோபமாக எதிர்வினையாற்றுகிறோமா? இதற்கான வாய்ப்பு மிகக் குறைவு தான். உண்மையில் சினிமாவோ கிரிக்கெட்டோ அரசியலோ, அதை ஊன்றி கவனிப்பவர்கள் பெரும் ஏமாற்றங்களையோ பெரும் மன-எழுச்சிகளையோ நொடிக்கொரு தரம் தாம் ஒரு சகாப்தத்தின் திருப்பத்தில் நிற்பதான கிளர்ச்சி நிலையையோ அடைவதில்லை.

இம்மூன்றையும் குறித்து கருத்து சொல்பவர்களை மீடியாவை நுகர்பவர்கள் என்று சொல்லலாம். இவர்கள் தாம் இன்றைய காலகட்டத்தின் அசலான பிரதிநிதிகள். ஒரு கலாச்சார/அரசியல் நிகழ்வு அவர்களுக்கு கொண்டாட்டத்துக்கான கொந்தளிப்புக்கான ஒரு சாக்காக சந்தர்ப்பமாக இருக்க வேண்டும். அப்படி தோதுபடவில்லை என்றால் முதல் ஐந்து நிமிடத்திலேயே எழுந்து வந்து கருத்து சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அடுத்து இவர்கள் எளிய சராசரி பிரச்சனைகளை எல்லாம் சீரியஸாக எடுத்து பேசத் துவங்குவார்கள். தேர்தலில் திமுக தோல்வியடைந்த வேளையில் ஒரு “வளர்ந்த” தமிழ்க்கவிஞரை பார்க்கப் போயிருந்தேன். தான் கடந்த இரண்டு நாட்களாக தன் நண்பர்களுடன் இரவுபகலாக மதுவருந்தி தி.மு.க வீழ்ச்சியை கொண்டாடியதாக சொன்னார். இன்னமும் கொண்டாட்டம் முடியவில்லை என்றார். எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. தேர்தல் தோல்வி என்பது ஒரு கட்சிக்கு தண்டனையா அல்லது ஓய்வுக் காலமா? ஏனென்றால் ஊழல் பண்ணும் பெரும் நன்மைகள் ஏதும் பண்ணாத அரசுகள் கூட சில வேளை தேர்தலில் தக்க வைத்துக் கொள்கின்றனவே? ஒரு தேர்தல் முடிவால் மக்களுக்கு நீதி கிடைத்து விடுமா? திமுகவை விட மேலானதாக அதிமுக இருக்கும் என்று அவ்வளவு நம்பிக்கையா? இதெல்லாம், மேற்சொன்ன கவிஞரையும் சேர்த்து, சாமான்யர்களுக்கு கூட தெரிந்தது தான். ஆனால் நாம் தினமும் தீபாவளி கொண்டாடுகிற மனநிலையில் இருக்கிறோம்; நமது தினங்கள் ஒவ்வொன்றும் மகத்தான/மகா கொடூரமான கணங்களால் நிரம்பி இருப்பதாக நம்பத் தலைப்படுகிறோம்.

மூன்றாவதாக எல்லாமே பெயரளவில் பார்க்கப் படுகிற இக்காலத்தில் மனிதர்கள், அதாவது சாமான்ய மனிதர்கள் கூட, தமது பிம்பம் குறித்து அக்கறையாக இருக்க வேண்டியுள்ளது. தகவல் பரிமாற்றத்தின் அபரித வசதிகள் மனிதர்களை அறிந்து கொள்ளும் அக்கறையை மிகவும் குறைத்து விட்டது. உதாரணமாக நீங்கள் இணையத்தில் திடீரென்று சம்மந்தமில்லாத ஆட்களால் திட்டப்படுவீர்கள். திட்டிக் கொண்டிருந்தவர்கள் ஏன் திட்டுகிறார்கள் என்று புரிந்து கொள்ளும் முன்பே அவர்கள் பனி போல் மறைந்து விடுவார்கள். திட்டுவதற்கு முன்பும் அவர் யாரோ நீங்கள் யாரோ; திட்டியதற்கு பின்னும் அவர் யாரோ நீங்கள் யாரோ. தாம் காட்டும் வெறுப்புக்கான பாத்தியதையை கொஞ்சம் கூட எடுத்துக் கொள்ள மனிதர்கள் தயாராக இல்லை. இப்போது நாம் ரோஹித் ஷர்மாவின் கதைக்கு திரும்புவோம். அவர் கடந்த பத்து ஆட்டங்களாக 17.33 சராசரியில் தான் ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதொன்றும் மகாகுற்றம் அல்ல.. ஆனால் அவர் மிகத்திறமையான சோம்பேறி என்ற பெயரில் விமர்சிக்கப்படுகிறார். அதனால் தான் அவரால் தொடர்ச்சியாக உயர்ந்த ஸ்கோர்களை எடுக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. அவருக்கு அளிக்கப்படும் தொடர் வாய்ப்புகள் பிற இளைஞர்களின் வாய்ப்புகளை பறிப்பதாக சொல்லப்படுகிறது. சற்று முன்னால் தான் ரோஹித் ஷர்மா மே.தீவுகளில் தொடர்ந்து நன்றாக ஆடி ஆட்டங்களை தன்னந்தனியாக ஆடி வென்று தந்தார் என்பதை மறந்து விடுகிறோம். எத்தனையோ நல்ல மட்டையாளர்கள் இதற்கு முன்னரும் இது போல் ஓட்டங்களை எடுக்க தொடர்ந்து பல ஆட்டங்கள் திணறி உள்ளதை மறந்து விடுகிறோம்.

மிக நம்பகத்தன்மை கொண்டவராக அறியப்பட்ட ராகுல் திராவிட் இரண்டு ஆஸ்திரேலிய பயணங்களில் ரோஹித் ஷர்மா போலத் தான் ஆடினார். அதற்கு வெகுமுன்னர் 1999இல் உலகக் கோப்பையில் மிக அதிகமாக ஓட்டமெடுத்ததற்காக விருது வென்ற பின் அவர் தொடர்ந்து சில மாதங்கள் மிக மோசமான ஆட்டநிலையில் திணறினார். கங்குலி அவரை பந்து வீச வைத்து அணியில் ஒரு வீச்சாளராக தக்க வைத்தார். திராவிட் கடுமையாக உழைப்பவர் தான். உக்கிரமாக மனதை குவிப்பவர் தான். ஆனால் ஆட்டநிலையை இழந்த போது ஓட்டங்களை எப்படி எடுப்பதென்றே அவர் மறந்து விட்டார்; அவருக்கு தெரிந்த எந்த வித்தையும் உதவவில்லை. இக்கட்டங்களில் எல்லாம் ராகுல் திராவிடின் தொழில்நுட்பம் பற்றிக் கூட கேள்விகள் எழுப்பப்பட்டு பரிந்துரைகள் வைக்கப்பட்டன. சச்சின் சின்னப் பையனாக தனக்கு சொந்தமாக ஒரு மட்டை வாங்குவதற்காக தனது பயிற்சியாளர் அச்சிரேக்கருடன் கடைக்கு சென்றார். அப்போது அவர் தனது உடலமைப்புக்கு சற்று பெரிதான கனமான மட்டை ஒன்றை தேர்ந்து எடுத்தார். அச்சிரேக்கர் அதை வைத்து விட்டு மெலிதான ஒன்றை எடுக்க சச்சினை வற்புறுத்தினார். ஆனால் சச்சின் விடாப்பிடியாக அது தான் வேண்டுமென்றார். அச்சிரேக்கர் அதற்கு மேல் வலியுறுத்தவில்லை. பின்னர் அந்த மட்டை கொண்டு ஆயிரமாயிரம் ஓட்டங்கள் எடுத்த நிலையில், தனது அணித்தலைமையின் பிந்திய காலகட்டத்தில் சச்சின் சட்டென்று தன் ஆட்டநிலையை (form) இழந்தார். அதை மீட்க அவர் போராடிய கட்டத்தில் பல விமர்சகர்கள் சச்சின் மெலிதான மட்டையை கொண்டு ஆட வேண்டும் என்று கோரினர். இதே போல் விரேந்திர சேவாக் தொடர்ந்து உள்வரும் பந்துக்கு இரையாகிக் கொண்டிருந்த போது அவரது மட்டையாட்ட தொழில்நுட்பத்தை மாற்ற வேண்டும் என்று பேசினர். லக்ஷ்மண் ஸ்லிப்பில் பிடி கொடுத்து வெளியேறும் போது அவர் போதுமான அளவுக்கு காலை முன்னகர்த்துவது இல்லை என்று பார்க்கும் நாம் ஒவ்வொருவருக்கும் தோன்றியது.

உண்மையில் லக்ஷ்மண இவ்விசயத்தில் ரோஹித் ஷர்மாவுக்கு மிக இணக்கமாக வரக்கூடியவர். லக்ஷ்மணைப் பார்க்கும் போதெல்லாம் இவர் இன்னும் அதிகமாக உழைத்திருந்தால் இன்னும் பெரிதாய் சாதித்திருப்பார் என்று மீண்டும் மீண்டும் தோன்றும். ஆனால் இதை ஒரு மயக்கவழு (fallacy) என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருமுறை இந்திய அணி சேப்பாக்கில் பயிற்சி நடந்து கொண்டிருந்த போது நண்பர்களுடன் சென்றிருந்தேன். தொலைவில் இருந்து பார்த்த படியே வலைப்பயிற்சியில் லக்ஷ்மணின் உடல்மொழியைப் பார்த்து “ரொம்ப சோம்பேறி பார்” என்று நண்பர்கள் திரும்பத் திரும்ப கூறினார்கள். ஆனால் உண்மையில் லக்ஷ்மண் இதைக் கூறும் இவர்கள் எல்லாரையும் விட கடுமையாக உழைக்கக் கூடியவர்; அதனால் தான் அவர் இந்தியாவை பிரதிநுத்துவப்படுத்தி பதினைந்து வருடங்களுக்கு மேலாக அணியில் நிலைத்து உள்ளார். நாம் வெளியே இருந்து அவரைப் பார்த்து விமர்சிக்கிறோம்; நாம் புரிந்து கொள்ளும் இந்த சின்ன விசயம் கூட இவனுக்கு தெரியாதா என்று நினைக்கிறோம். இங்கு தான் தவறு நேர்கிறது. பத்து வயதில் இருந்தே கிரிக்கெட்டை வாழ்க்கையாக வரித்தவர்களுக்கு அது குறித்து கணிசமான அனுபவ/தகவல் அறிவு இருக்கும். சச்சினுக்கு பாரமான மட்டை எப்படி ஒரு இடையூறாக இருக்கப் போகிறது என்பது அச்சின்ன வயதில் அச்சிரேக்கருடன் கடையில் இருக்கும் போதே தெரியும். ஆனால் சின்னச் சின்ன எதிர்மறைகளை ஏற்றுக் கொண்டு தானே முக்கியமான முடிவுகளை எப்போதுமே எடுக்கிறோம். சேவாகுக்கும் லக்ஷ்மணுக்கு அப்படியே. அவர்களின் தொழிநுட்ப குறைகள் தாம் அவர்களுக்கு ஷாட்களை அடிக்கும் பெரும் சுதந்திரத்தை, நேரத்தை, நளினத்தை அளிக்கிறது என்று தெரியும். மிக தொழில்நுட்ப வலு கொண்ட மட்டையாளன் ஓட்டமெடுக்காமல் தோல்வியடைவதில்லையா? இன்று விமர்சிக்கிறோம் என்ற பெயரில் எல்லாவற்றையும் அவசரமாக ஒற்றைபட்டையாக பார்க்கத் துவங்குகிறோம்.

அசட்டையாக தோன்றுவது சிலரின் இயல்பு. அவர்கள் அன்றாட விசயங்களில் அக்கறை காட்ட மறுக்கும் போது அவர்கள் வேண்டுமென்றே அசட்டையாக இருப்பதாக நமக்குத் தோன்றும். ஆனால் தத்தமது வேலையை பொறுத்த மட்டில் யாரும், குறிப்பாக தொழில்முறை கலைஞர்கள், வேண்டுமென்றே அசட்டையாக சோம்பேறியாக இருப்பதில்லை. பொதுவாக ஒழுக்கம், கட்டுப்பாடு, மனக்குவிப்பு, உழைப்பு ஆகியவை தன்னம்பிக்கையில் இருந்து தான் பிறக்கின்றன. தன்னம்பிக்கை ஒரு தெளிவைத் தருகிறது. உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்று தெரிந்தால் அதற்கு மேல் நீங்கள் உழைப்பதற்கு வேறு எந்த ஊக்கமும் தேவையில்லை. ஒரு கலைஞர் குடிகாரராக பெண்மோகியாக இருந்து செத்துப் போனால் அவர் “சீரழிந்த மனிதராக” இரங்கல் குறிப்புகளில் எழுதப்படுவார். ராஜமார்த்தாண்டன் குறித்து ஜெயமோகன் எழுதியுள்ள நீண்ட இரங்கல் கட்டுரைகளை உதாரணமாக எடுக்கலாம். ராஜமார்த்தாண்டனை தனிப்பட்டு அறிந்தவர்களும் அவரது எழுத்துக்களை படித்தவர்களும் அவர் தன்னால் முடிந்த வேலையை செய்து விட்டுத் தான் உயிர்நீத்தார் என்று புரிந்து கொள்வார்கள். ஒரு போலியான சட்டகத்துள்ள நடைமுறையில் இல்லாத விழுமியங்கள் கொண்டு ஆணியடிக்க மாட்டார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கேயான திறமையும் மன-அமைப்பும் உள்ளது. அது அவனது வாழ்க்கைப் போக்கை அணுகுமுறையை தீர்மானிக்கிறது. நவீன கவிஞரான கலாப்பிரியா தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரென்றால் அது “சீரழிவா?”. அவர் எம்.ஜி.ஆர் ரசிகராக இல்லாமல் தினமும் பிரம்மராஜனின் உலக இலக்கிய கவிஞர்களின் மொழிபெயர்ப்பு தொகுப்பை வரிக்கு வரி வாசித்திருந்தால், லக்கான், தெரிதா, நீட்சே எல்லாம் கரைத்து குடித்து விட்டு விட்டத்தை பார்த்து அமர்ந்திருந்தால் இன்னும் மேலான கவிஞராக இருந்திருப்பாரா? விக்கிரமாதித்யன் சொல்வது போல் மனுஷ்யபுத்திரன் சின்ன கவிதைகள் மட்டுமே எழுதியிருந்தால் மேம்பட்டு போயிருப்பாரா? யார் வாழ்க்கையை இங்கு யார் தீர்மானிப்பது? உண்மையில் நமக்குக் கொடுக்கப்பட்ட கோப்பை நீரை முடிந்தளவுக்கு குடித்து விட்டுத் தான் உலகில் இருந்து விடை பெறுகிறோம். எந்தளவுக்கு குடித்தோம் என்பது நம் உரிமை மற்றும் சுதந்திரம். மனித வாழ்வின் அழகே இந்த “சீரழிவதற்கான” சுதந்திரம் தான்.

ரோஹித் ஷர்மா 84 ஒருநாள் ஆட்டங்களில் 31.26 சராசரியில் ஓட்டங்களை எடுத்துள்ளார். இரண்டு சதங்களும் 12 அரை சதங்களும் அடித்துள்ளார். 40ஆவது ஓவருக்கு மேல் அதிகம் ஆடுதளத்துக்கு வருபவருக்கு இது ஒன்றும் மோசமான சராசரி அல்ல. முன்னாள் மட்டையாளர் ஆகாஷ் சோப்ரா ரோஹித்துக்கு பொறுமை இல்லை என்கிறார். பொறுமை இல்லாதவர் எப்படி 2 சதங்கள் அடித்தார்? இதே ஆகாஷ் சோப்ரா முன்னர் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் தொடர்ந்து உள்வரும் பந்துக்கு வீழ்ந்து கொண்டிருந்தார். பின்னர் ஐ.பி.எல்லின் போது அவர் ரிக்கி பாண்டிங்கிடம் ஆலோசனை கேட்ட போது ”உனக்கு அப்படி ஒரு குறை இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்” என்றார். ஏன் சோப்ராவால் தன் குறையை சரி செய்து இந்திய அணிக்கு மீள முடியவில்லை? ஏனென்றால் வாழ்க்கை அவ்வளவு எளிதானது இல்லை. ரோஹித் ஷர்மா கடந்த சில ஆட்டங்களில் பத்து சொச்சம் சராசரியில் ஓட்டம் எடுத்து வருவதால் அவர் மீது அப்படி ஒரு நெருக்கடி மீடியா மற்றும் பொதுமக்களின் விமர்சனத்தால் ஏற்பட்டிருந்தது. நடந்து வரும் இலங்கைக்கு எதிரான தொடரில் நாலாவது ஆட்டத்தில் அவர் களமிறங்கிய போது என் மனம் ரோஹித்தை நோக்கி நேராக ஆடு நேராக ஆடு என்று இறைஞ்சியது. அவர் எப்படியெல்லாமோ ஆடி பத்து பந்துகளுக்கு தாக்குப் பிடித்தார். பின்னர் என்னாலும் முடியும் பார் என்று ஒரு வானுயர ஷாட் அடித்தார்; அது களத்தடுப்பாளர்களுக்கு வெகுஅருகில் சென்று வீழ்ந்தது. பிறகு கொஞ்சம் நிதானித்தார். பின்னர் பிரதீப்பின் வேகமான முழுநீள பந்து ஒன்றை கால்பக்கம் ஆடும் போது நிலைகுலைந்ததால் எல்.பி.டபிள்யு ஆனார். அப்போது அவரது தலை உடலுக்கு சீராக இல்லாம சாய்ந்து இருப்பதை கவனித்தேன். பந்தை அவர் தொட முடியாததற்கு அதுவும் காரணம். எனக்கு ரோஹித்தின் போதாமை மீது எரிச்சல் ஏற்பட்டது. பார், தலையை நேராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லத் தோன்றியது. பிறகு உணர்ந்தேன் “ரோஹித்துக்கு அது தெரியாதா” என்று. வாழ்வில் எத்தனையோ தருணங்களில், ஆஸ்பத்திரிகளில், வேலையில், விபத்து நடுவில் தெரிந்தே எவ்வளவோ தவறுகளை தவிர்க்க முடியாமல் செய்கிறோம்; அப்போதெல்லாம் நம் மூளை ஸ்தம்பித்து விடுகிறது. வாழ்வின் ஆகச்சிறந்த மற்றும் ஆக மோசமான முடிவுகளை அதிக யோசிக்காமல் தான் எடுக்கிறோம். ஒரு கிரிக்கெட்டர் மட்டும் எப்படி வேறாக இருக்க முடியும். நம் சாலைகளில் எத்தனையோ பாதசாரிகள் பத்திரமாக கடந்து போகிறார்கள். சிலர் மட்டும் வாகனங்கள் முன்னே மாட்டி “எருமை மாடு சாவு கிராக்கி” என்று திட்டு வாங்குகிறார்கள். ரோஹித் ஷர்மாவின் நிலைமையும் கிட்டத்தட்ட இது போலத் தான்.

ரோஹித் ஷர்மாவின் பிரச்சனைகள் உண்மையில் இரண்டு. கடவுள் அவருக்கு அபரிதமான திறமை அளித்திருக்கிறார். சொல்வதானால் சச்சினுக்கு பிறகு இவ்வளவு தாராள திறமையுடன் வேறொருவர் தோன்றவில்லை. கவுதம் கம்பீர் சொல்வது போல் இந்தியாவின் எதிர்காலம் ரோஹித்தின் தோள்களில் இருக்கலாம். அப்படி இல்லாமலும் போகலாம். இரண்டும் அவரது தவறு அல்ல. பொதுவாக சிறு குழந்தைகள் திறமை இருப்பவர்களாக அடையாளம் காணப்பட்டு பள்ளிகளில் வீடுகளில் வேட்டையாடப்படும் அவலங்களை பார்த்திருக்கிறோம். வேலை பார்க்கும் நிறுவனங்களிலும் திறமையில்லாத சராசரிகளை விட திறமையான அக்கறையற்றவர்களே அதிகம் கண்டனத்துக்கு உள்ளாவார்கள். உழைப்பாளிகளும் சோம்பேறிகளும் ஒருமித்தே உலகில் வெற்றிகரமாக வாழ்கிறார்கள் என்று நம்ப நாம் மறுக்கிறோம். “உழைப்பால் வெற்றி கண்டவர்” என்பது ஒரு நவீன தொன்மம் மட்டுமே. கூட்டிக்கழித்தால் வாழ்க்கை சமானமாகவே எல்லோருக்கு வருகிறது.

அபரிதமான திறமையுடன் இருப்பதே இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புகளும் பெரும் கண்டனங்களும் ரோஹித்தை நோக்கி கட்டுவிக்கப்பட காரணம். தனது திறமையை அவரால் மறைக்க முடியாது. ஆனால் அவர் வேறொன்றை செய்யலாம். தனது பிம்பத்தை சீர்படுத்தலாம். தனது சுயசரிதையில் ஆண்டிரூ பிளிண்டாப் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை குறிப்பிடுகிறார். இங்கிலாந்து அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிதில் அவர் ஒருநாள் குடித்து விட்டு இரைவதை அப்போதைய பயிற்சியாளர் பிளட்சர் பார்த்து விடுகிறார். பிளிண்டாப் ஒரு போக்கிரி என்ற எண்ணம் அவருக்குள் உருவாகி விடுகிறது. அதற்குப் பின் சின்ன சின்ன தவறுகளுக்கெல்லாம் பிளிண்டாப் பதில் சொல்ல வேண்டி வருகிறது. இயல்பான நடத்தை விபரங்கள் கூட அவரது எதிர்மறை பிம்பத்தை வலுப்படுத்த உதவுகிறது. பின்னர் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிளிண்டாப் வெற்றிகரமான் ஆட்டக்காரர் ஆவது மட்டுமில்லாமல் மிக தீவிரமான பொறுப்பான நபராக தன் பிம்பத்தை மறுகட்டமைத்தார். தனது மட்டையை ரயில்வே நிலையத்தில் மறந்து விட்டு பயிற்சிக்கு வருகிற ஒரு இளைஞனால் இன்று சச்சினின் வாரிசு என்று அறியப்படுகிற நிலைக்கு வளர முடிந்திருக்கிறது. அவர் தனது விளையாட்டில் போதுமான உழைப்பும் அக்கறையும் செலுத்தாமல் இது நடந்திருக்காது. அவர் இது போன்றே தொடர்ந்தும் “அசட்டையாக” இருக்கலாம். ஆனால் உடல் எடையை குறைத்து, ஆடுகளத்தில் துறுதுறுப்பாக இயங்குவது போல் பாவித்து, முகத்தில் சில தீவிர தமிழ் இலக்கியவாதிகளின் “ஆழ்ந்த சோகத்தை” கொண்டு வந்து தன்னை பொறுப்பானவராக காட்டிக் கொள்ள துவங்க வேண்டும். அவர் தனது சிறந்த ஆட்டநிலைக்கு விரைவில் திரும்பக் கூடும். ஆனால் எதிர்காலத்தில் அடுத்தவர்களின் கசப்புணர்வுகள் ஏமாற்றங்கள் தொடர்ந்து தன் மீது சுமத்தப்படுவதை, நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதை தவிர்ப்பதற்கு வேறு ஒருவராக அவர் நடிக்கத் துவங்க வேண்டும்.

இன்று நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டி வருகிறது பாருங்கள்!

Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates