Sunday, 2 March 2014

அதிகாரத்தை எதிர்கொள்ளும் இருமுறைகள்: ரஜினியும் பூக்கோவும்



ரஜினியின் மன்னன் படம் ஒட்டாமை கருத்தாக்கத்தை உறவு மற்றும் சமூக படிநிலைகளில் வைத்து விவாதிக்கக் கூடியது. கிருஷ்ணன் (ரஜினி) மீனாவை (குஷ்பு) காதலிக்கிறார்ன். அவனது முதலாளி சாந்திதேவி (விஜயசாந்தி) அவனது அம்மாவை ஏமாற்றி அவனை திருமணம் செய்து தருவதாய் சத்தியம் செய்கிறாள். ஆரம்பத்தில் “திருமணம் என்பது என் தனிப்பட்ட முடிவை சார்ந்தது” என காதலி மீனாவிடம் அறிவிக்கும் கிருஷ்ணன் தன் அம்மாவின் சத்தியத்தை அறிந்ததும் தன் தனிமனிதவாதத்தை கைவிட்டு, அவரிடம் வாதிட்டு உண்மையை புரிய வைக்க முயலாமல் ஒரு வறட்டு புன்னகையுடன் அம்மாவை அணைத்துக் கொள்கிறான். ஒரு சிறு சத்தியம் தானே, அதை கைவிடலாகாதா? ஆனால் ஏற்கிறான். கிருஷ்ணன் தன் மனதுக்குள் “எமாந்திட்டீங்களே அம்மா” என்கிறான். ஆனால் வெளிப்படையாக அம்மாவிடம் கூறாமல் மறைக்கிறான். இந்த படத்தில் உள்ள பல விநோதமான திருப்பங்களில் இதுவும் ஒன்று. நம் வீடுகளில் வளர்ந்த குழந்தைகள் தம் விருப்பங்களுக்காக தொடர்ந்து வாதிட்டு வற்புறுத்தி ஒவ்வொன்றாய் மெல்ல மெல்ல் அடைவதை பார்க்கிறோம். வீடு என்பதே எதோ ஒன்றுக்காய் சதா பேரம் நடக்கும் இரைச்சலான ஒரு இடம் தானே. சின்ன சின்ன நகர்தலுக்கு கூட லாஜிக் யோசிக்கும் தமிழ் சினிமா இயக்குநர்கள் ரஜினியின் பல படங்களில் அவரது பிம்பத்துக்கு மையமான தத்துவ எண்ணங்களுக்காக லாஜிக்கை தயங்காமல் கைவிடுவார்கள். மிகையான செண்டிமெண்டும், வேகவேகமாய் நகரும் காட்சிகளும், ரஜினியின் ஆளுமைத் தாக்கமும் ரசிகனை அதிகம் யோசிக்கவும் விடுவதில்லை. ஆனால் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இங்கே ரஜினியின் உணர்ச்சியற்ற போக்கு தான்.

சாந்தியை திருமணம் செய்த பின் அவர் அவள் மீது பிரியமுடன் இருப்பதாய் சிறு தடயம் கூட படத்தில் இல்லை. ஆனால் எந்த ஈடுபாடும் இல்லாமல் அவளை புணர்வதிலும், அடிக்கடி காப்பாற்றுவதிலும், அவள் செலவுக்காக தன் சம்பாத்தியத்தில் செலவழிப்பதிலும் அக்கறையாக இருக்கிறார். குஷ்பு தன் காதலை தன் முதலாளிக்காக விட்டுக் கொடுக்கும் இடத்தில் கண்ணீர் விடுகிறார். ஆனால் ரஜினி இறுதியில் தன் அம்மா இறக்கும் இடத்தில் கூட கண்ணீர் விடுவதில்லை. தன் காதலை பிரிய நேர்கையிலும் அவர் வருந்துவதோ குஷ்புவிடம் மன்னிப்பு கேட்பதோ இல்லை. படம் முழுக்க ரஜினி தன் வேலை, பொறுப்பு, உறவுகள், தாம்பத்யம் எதனுடனும் ஒட்டாதவராக, ஆனால் கடமையை மட்டும் முழுதாக நிறைவேற்றுகிறவராக இருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் பத்து சட்டைகளை மாறி மாறி அணிந்து வருகிற ஹீரோவைப் போலத் தான் ரஜினி இப்படத்தில் தன் பல்வேறு பொறுப்புகளை அணிந்து கழற்றி விட்டு எதிலும் பட்டுக் கொள்ளாமல் நீங்கிக் கொள்கிறார்.
இப்படத்தில் பல முத்திரை காட்சிகளுக்கு ஒரு போக்கு உண்டு. ரஜினி வருவார், பேசுவார்/செயல்படுவார், பிறகு வெளியேறுவார். மையமாக சாந்திதேவி அல்லது அவரது அப்பா நின்று கொண்டிருப்பார்கள். ரஜினியின் வெளியேற்றம் இன்னொருவரிடன் நிலைத்த கண்ணோட்டத்தில் இருந்து தான் காட்டப்படும். இது இயல்பாக அமைந்திருக்கலாம் அல்லது திட்டமிட்டு செய்திருக்கலாம். ஆனால் மீள்யோசிக்கும் போது நமக்கு ரஜினி வெளியேறும் பிம்பம் தான் திரும்ப திரும்ப அழுத்தமாக தோன்றுகிறது. இது ஒரு பாத்திரத்தில்/உணர்ச்ச்சியில் இருந்து வெளியேறுவதன் உருவகமாகவும் நாம் பார்க்கலாம்.
 படத்தின் முதல் காட்சியில் அவர் தன் அம்மாவின் உடல்நலம் கருதி மும்பையில் நல்ல பொறுப்பில் உள்ள வேலையை உதறி சென்னை வருகிறார். குஷ்பு அவரை காதலிப்பதாய் கூறும் போது அம்மாவிடம் கேட்டு சொல்வதாய் வெட்கப்பட்டு ஓடுகிறார். ரஜினி தன் அழுத்தமான நிலைப்பாட்டை கூறுவது அவர் தன் காதலை குஷ்புவிடம் தெரிவிக்கும் சில நொடிகள் வரும் சிறு காட்சியில் மட்டும் தான். பின்னர் அவர் மீண்டும் பலூன் போல் மிதக்க ஆரம்பிக்கிறார். இறுதிக் காட்சியில் இறந்து விழும் அம்மாவை தூக்கியபடி மயானம் நோக்கி செல்கிறார். அதைத் தொடர்ந்து அதே காட்சியில் எரியும் வீட்டில் இருந்து தன் மனைவியை தூக்கி வெளியே வருகிறார். அவள் அவரது அம்மாவின் மரணத்துக்கு காரணமாக அமைந்ததற்கு ரஜினியிடம் மன்னிப்பு கேட்கிறாள். ஒன்றுமே சொல்லாமல் நகரும் அவர் அவள் மீண்டும் தீயை நோக்கி தற்கொலைக்காக அடியெடுத்து வைக்கும் போது தன்னை நோக்கி வருமாறு சைகை காட்டுகிறார். அவர் வெறுக்கிறாரா, மன்னித்து விட்டாரா? அவர் மனதில் என்னதான் இருக்கிறது? பொதுவாக பக்கம் பக்கமாய் மனநிலையை வசனமாய் பேசும் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான தருணங்களில் தன்னிலை விளக்கம் தராமல் நாயகன் பூடமான அமைதி காப்பது ரஜினியின் இது போன்ற படங்களில் மட்டும் தான்.
 மகாபாரதத்தில் பாண்டவர்கள் திரௌபதியை மொத்தமாய் மணக்க நேர்கிற சந்தர்ப்பம் நினைவிருக்கும். தன் ஐந்து பிள்ளைகளை ஒற்றுமையாய் வைத்திருக்க குந்தி அவ்வாறு செய்யவில்லை. பிச்சை பொருளை சமமாய் பகிர கூறுகிறாள். பாஞ்சாலியை பெறும் பாண்டவர்கள் வேறுவழியின்றி ஒருசேர மணமுடிக்கிறார்கள். நிஜமாகவே வேறுவழியின்றியா? லாஜிக் உதைக்கிறது தான். மகாபாரதத்தில் பல இடங்களில் தர்க்க மீறல்கள் உண்டு. ஆனால் இந்திய வாழ்க்கையோடு ஆழமாக பாரதக் கதை பொருந்தி போவதற்கும் அது தான் காரணம். இந்த மகாபாரதக் காட்சி இப்படத்தில் ரஜினியின் அம்மாவிடம் விஜயசாந்தி சத்தியம் பெறும் காட்சியை வலுவாக நினைவுபடுத்துகிறது. ஒட்டாமை தத்துவத்தின் ஆதார நூலான கீதையை போதிக்கும் பாரதத்தின் தாக்கம் எதேச்சையானதாக இங்கு இருக்க முடியாது.
ரஜினியின் உணர்ச்சியற்ற மரத்த போக்கு எப்படி தமிழ் மனதுக்கு பிடிக்கிறது? தமிழர்கள் மிக உணர்ச்சிகரமானவர்கள் எனத் தெரியும். எதையும் உடனுக்குடன் வெளிப்படுத்த, செண்டிமெண்டலாக முடிவெடுக்கும் தன்மை கொண்டது தமிழ் மனம். பின் எப்படி ரஜினியின் பிம்பம் இங்கு நேர் எதிராக செயல்படுகிறது? தமிழர்கள் உணர்ச்சிகரமானவர்கள் என்பதும் மேம்போக்காகத் தான். நாம் ஒரு பக்கம் உணர்ச்சிவசப்படும் போது ஆழத்தில் மனம் கல்லாகவே இருக்கிறது. உறவுகள், பந்தங்கள், பணியிட பொறுப்புகளில் மிகுந்த ஈடுபாடு கொள்ளும் போது அவை எப்போதும் உதறி விட்டு போகக் கூடியவை என்பதிலும் தெளிவாகத் தான் இருக்கிறோம். அல்லது குடும்ப அமைப்பில் உள்ள அதிகார அழுத்தத்தை, வன்மத்தை, பரஸ்பரம் மறைமுகமாக நாம் பாராட்டும் கடும் வெறுப்பை தாங்கிக் கொள்ள முடியாது. குழந்தைகளை பிடிக்காவிட்டாலும் அக்கறையோடு வளர்ப்பது, சமைக்க, வீட்டு வேலை செய்ய விரும்பாவிட்டாலும் ஈடுபாட்டோடு செய்வது, தனித்துவம் காட்ட முடியாத வேலைகளில் நம்மை ஈடுபடுத்துவது, பெற்றோரின் முடிவுகளில் விருப்பம் இல்லாவிட்டாலும் நம்பி ஏற்பது, நாம் நிஜவாழ்க்கையில் எப்படி இல்லையோ அதற்கு நேர்மாறான பாத்திரங்களை டிவியிலும் திரையிலும் ரசித்து ஏற்பது, உயிருக்கு உயிராய் காதலித்து விட்டு ரோமம் உதிர்ந்தது போல் கைவிட்டு இன்னொருவரை மணமுடிப்பது என வாழ்வின் பல நிலைகளில் நாம் முரண்பாட்டு முடிச்சுகளாகத் தான் இருக்கிறோம்.
பிடிக்காதவை எதையும் இந்தியர்கள் அதிகாரத்தை பயந்து செய்வதில்லை. சொல்லப் போனால் சாதியை தவிர நமது பிற சமூக அமைப்புகள் இளகலானவை. நீங்கள் ஒன்றை செய்வதாய் நம்பினால், நம்ப வைத்தால், அதற்காக செய்து காட்டினால் போதும் – ஆனால் உண்மையில் செய்ய வேண்டியதில்லை. நாம் எதையும் செய்யாமலே தான் செய்து கொண்டிருக்கிறோம். நான் வேலை பார்த்து நிறுவனத்தில் தினமும் ஒருமணிநேரம் தியானம் மற்றும் ஆன்மீக உரையாடல் நடக்கும். முதலாளியின் இந்த சத்சங்களில் ஆர்வமாக கலந்து கொண்டு ஐக்கியமாகி விடும் பலரில் ஒருவரிடம் அவரது ஆன்மீகக் கருத்து ஒன்று பற்றி பேசிய போது அதிர்ச்சியாக இருந்தது. முதலாளியின் ஆன்மீகக் கருத்து ஒன்று கூட அவருக்கு தெளிவாக புரியவில்லை. ஆனாலும் அவர் ஏமாற்றவில்லை. புரிந்ததாய் தான் அவர் நம்புகிறார். சத்சங்களில் அவர் ஈடுபடுவதாய் ஏமாற்றவில்லை. அங்கு அவர் இருக்கிறார், இல்லாமலும் இருக்கிறார். அவரது முதலாளி ஹிட்லர் என்றால் மெயின் கெம்பை அச்சு பிசகாமல் படித்து அதில் உள்ள அத்தனையும் தனக்கு புரிவதாகவும் நம்புவதாகவும் நினைப்பார், கூறுவார், செயல்படுவார். ஆனால் அவர் எதற்கும் பொறுப்பாக மாட்டார். ஏனென்றால் அவர் வெறும் பாத்திரம் ஒன்றை ஏற்று நடிக்கிறார் அவ்வளவே! ஆனால் எந்த இந்தியனுக்கும் தான் அப்படி செய்கிறோம் என தெரியாது. அவன் தனக்கு விருப்பமில்லாத மனைவியை, சொல்பேச்சு கேட்காத பிள்ளைகளை, மதிக்காத உறவுகளை, ஏற்காத வேலை செய்யும் நிறுவனத்தை இப்படித் தான் சுமூகமாக ஏற்று எந்த எதிர்ப்புமின்றி கடமைகளை ஆற்றுகிறான். வேலை செய்வது, சம்பாதிப்பது, மனைவியிடம் உடலுறவு கொள்வது, குழந்தை வளர்ப்பது, குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, பத்திரிகை வாசிப்பது என அவன் சுயநிறைவை எதிர்பார்ப்பதில்லை. ஏனென்றால் தன் சுயத்தை இதில் எங்கும் அவன் செலுத்துவதில்லை. அவன் சுயம் என்பது எதிலும் இல்லாமல் இருப்பது தான். இந்தியர்கள் அடிமைகள் அல்ல, அடிமைகளாக நடிப்பவர்கள்.
ரஜினியின் உணர்ச்சியற்ற தொன்மம் நம்மை கவர்வதன் முக்கிய காரணம் அது நமது அன்றாட வாழ்வின் ஆதார தொன்மம் என்பது தான். ரஜினியின் தொன்மம் ஒரு அச்சு எனில் அதில் இருந்து புறப்படுகிற ஏராளமான நகல்கள் நாம். நமக்கு அதனாலே ரஜினி படங்களில் அவர் மிக முக்கியமான உணர்ச்சிகரமான சந்தர்பங்களில் பிணம் போல் முகத்தை வைத்துக் கொள்கையில் அது ஒரு தர்க்க பிழையாக தோன்றுவது இல்லை. ஏனெனில் வீதியில், அலுவலகத்தில், குடும்பத்தில் மனம் கசிகிற தருணங்களில் நம் முகம் அப்படித் தான் இருக்கிறது. விதிக்கப்பட்ட இடங்களில் கேட்கப்பட்ட விதங்களில் செயல்படுவது நமக்கு அவ்வளவு சுலபமாக வரும். ஆனால் கமல் இது போன்ற தருணங்களில் கதறிக் கதறி கிட்டத்தட்ட கண்ணீர் துளிகள் நம் மடியில் விழுந்து விடுமோ என தோன்றும்படி அழுவார். இது வேறொரு பண்பாடு, தத்துவம். அனைத்துக்கும் தானே பொறுப்பு என நினைப்பவனின் துயரம் கண்ணீரில் வெளிப்படுகிறது. அதனால் தான் கமல் தமிழ் மனதோடு ஒட்டவில்லை,
இப்படத்தில் ரஜினி தன் முதலாளியை மணந்த அடுத்த நாள் அதே பழைய காக்கி உடையை அணிந்து மெக்கானிக் வேலையை தொடர்கிறார். கிளைமேக்ஸில் மனைவியுடன் சமாதானமாகி, அவளை “அடக்கி ஆண்ட” பின்னரும் கூட அவர் தொழிலாளி வாழ்க்கையை விடுவதில்லை. சில காட்சிகளில் கோமாளித் தனம் பண்ணுகிறவராகவும், பாசத்தில் உருகுகிறவராகவும், சில இடங்களில் மிக சீரியஸான பக்குவமான நபராகவும் வருகிறார். இந்த உணர்ச்சிகளில் எதனோடும் அவர் ஒன்றுபடுவதில்லை. படம் முதலாளியான விஜயசாந்தி தன்னை வீட்டு மனைவியாக்கிக் கொண்டு சமைக்க கற்பதுடன் முடிகிறது. கடுமையான முயற்சி மற்றும் உழைப்பினால் தன் நிறுவனத்தை முதல் இடத்துக்கு கொண்டு வரும் ஒருவரால் எப்படி ஒரே நாளில் வீட்டு மனைவியாக முடியும்? ஒரு மேற்கத்திய பெண்ணாக இயங்குகிற விஜயசாந்தி படத்தின் முடிவில் ஒரு சாட்சாத் இந்தியப் பெண்ணாக மாறுகிறார் எனலாம். முப்பது வயதுக்கு மேல் மிக முக்கிய வேலைகளை, முன்னேற்றங்களை துறந்து விட்டு பெண்கள் வீட்டுப் பொறுப்புகளை கவனிக்க போவதை சகஜமாய் பார்க்கிறோம். சமூக குடும்ப அழுத்தங்கள் இதற்கு காரணமென்றாலும் எப்படி நம் பெண்களுக்கு இந்த பாத்திர மாற்றம் எளிதாக உறுத்தலின்றி நடக்கிறது என்பது விநோதமானது.
படத்தின் இறுதியில் விஜயசாந்திக்கு உதவியாளராக இருந்த குஷ்பு நிறுவன பொது மேலாளராக நியமிக்கப்படுவதும் இது போல் விநோதம் தான். ஒரு பொறுப்பை வகிக்க திறமையும் அறிவும் தேவை அல்லவா! யார் வேண்டுமானாலும் எந்த பொறுப்பிலும் அமர முடியுமா? ஆம், இந்தியாவில் முடியும். பல தனியார், அரசு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் சம்மந்தமே இல்லாத ஆட்கள் செல்வாக்கு, குடும்ப தொடர்பு, சாதிய அதிகாரம் காரனமாய் அமர்ந்திருப்பதை சாதாரணமாய் பார்க்கலாம். இதைக் கூட ஊழல் என புரிந்து கொள்ளலாம். ஆனால் இதை கேள்வியே கேட்காமல் நாம் எளிதில் ஏற்றுக் கொள்கிறோமே! ஒரு வேலையை செய்வதற்கு, பொறுப்பில் இருப்பதற்கு திறமை, ஆளுமை எல்லாம் முக்கியமில்லை. யார் வேண்டுமானாலும் எதையும் செய்யலாம் என்பது ஒரு இந்திய மனப்பான்மை. கொலு பொம்மையை தட்டுகளில் அமர வைப்பது போலத் தான் நாம் வேலைகளில் அமர்கிறோம். இருக்கிற இடம் வெளியே பார்க்க பொருத்தமாக இருந்தால் போதும்.
குஷ்பு முதலாளி ஆகிறதும், ரஜினி தொடர்ந்து தொழிலாளியாகவே இருப்பதும் பொதுவுடைமை விவாதத்துக்கு கீதையின் தரப்பில் இருந்து வைக்கப்படும் ஒரு தீர்வு எனலாம். நிஜவாழ்க்கையில் முதலாளி தொழிலாளியாகவோ, தொழிலாளி முதலாளியாகவோ முடியாது. இருவரும் சமம் கிடையாது. ஆனால் அதிகாரத்தின் பல்வேறு அடுக்களில் இருப்பவர்கள் தம் அடையாளத்தை வலியுறுத்தாமல் (அதாவது அகங்காரம், பகட்டு, அதிகார வெளிப்பாடு இன்றி), ஒட்டாமல் அப்பொறுப்பில் இருந்தால் சமூகம் அமைதியாக இருக்கும் என்பது இதில் உள்ள மறைமுக செய்தி. சமூக அமைப்பை ஒரு நிலவுடைமை நிலையில் வைக்க விரும்புவோர் தொடர்ந்து இவ்வாறான ஒரு மேலோட்டமான சமத்துவத்தை பிரச்சாரம் செய்வார்கள். ரஜினி இப்படத்தில் ஒரு காட்சியில் சொல்கிறார் “பெண்ணை மதிக்கிற ஆணை நான் மதிப்பேன். ஆணை மதிக்கிற பெண்ணை நான் மதிப்பேன்”. அப்படியென்றால் அதிகாரத்தை யார் வைத்திருப்பது?
அதிகாரத்தை பிரயோகிப்பதற்கும் அதே நேரம் அதற்கு பணிவதற்கும் ஒரே நேரம் நாம் தயாராக இருந்தால் அதிகாரம் ஒரு பிரச்சனையே அல்ல என்பது ரஜியினின் தொன்மம் நமக்கு தருகிற பதிலாக இருக்கும். அதனால் தான் இப்படத்தில் ஆரம்பத்தில் குடும்பப் பெண்ணாக விரும்புகிற, அது நடக்காமல் போகிற போது தன்னிச்சையாக கிருஷ்ணனின் அம்மாவை கவனித்துக் கொள்கிற தாய்மை கூடிய குஷ்பு இறுதிக் காட்சியில் விஜயசாந்தியை போல் முதலாளி ஆகிறார். அவர் துறந்த குடும்பப் பெண் பாத்திரத்தை விஜயசாந்தி எடுத்துக் கொள்கிறார். அதிகாரத்துடன் நமக்கு ஒட்டுதல் இல்லை என்றால் இன்று பெண்ணியமும், கம்யூனிசமும் முன்வைக்கிற பல பிரச்சனைகள் எழாது தான். ஆனால் அது எதார்த்தம் இல்லையே. இருந்தும் ரஜினி படங்களில் வரும் இந்த கருத்துநிலை நம் மனங்களை ஆழமாக வசீகரிக்கிறது. ஆணாதிக்கவாத, சாதிய படிநிலையை நம்மால் கைவிடவும் முடியாது, இன்றைய சமத்துவ நவீன சூழலுக்கு எப்படி அதை தகவமைப்பது என யோசிக்கும் மனதுக்கு ரஜினியின் தொன்மம் ஒரு சுவாரஸ்யமான பதில் தருகிறது எனலாம். ஆயிரமாயிரம் வருடங்களாக நம் மரபான சமூக, குடும்ப பிரச்சனைகளுக்கு எதிர்ப்பை தீர்வாக முன்வைக்காமல் ஒட்டாமையை நம் இந்திய மனம் வலியுறுத்தியது. அதிகாரம் யார் வசம் என்கிற கேள்வியே ஒட்டாமையில் எழுவதில்லை.
தொடர்ந்து இரு தரப்புகள் சமர் புரியும் போது உயிர் கொள்வது தான் அதிகாரம் என்றார் பூக்கோ. அதாவது கணவன் மனைவியை அடக்கும் போது அதிகாரம் தோன்றுவதில்லை. அவள் நுட்பமாக, அமைதியாக அல்லது மறைமுகமாக அவனை எதிர்க்கையில் தான் அதிகாரம் தோன்றும் என்றார். யாரும் எதிர்க்காத இடத்தில் அதிகாரம் வறட்சியான பிரதேசத்தில் நுண்ணியிர் போல் உயிரற்று இருக்கும். தொடர்ந்து எதிர்ப்பது தான் அதிகாரத்தை தோற்றுவிக்க மட்டுமல்ல அதிகார சமநிலையை தக்க வைக்கவும், சமூக இயக்கத்தை சுமூகமாக்கவும் அவசியம் என்றார் பூக்கோ. அதாவது அதிகாரம் எதிர்ப்பதனால் காணாமல் போய் விடாது. ஆனால் அதிகாரம் ஓரிடத்தில் மட்டும் குவிந்து தராசு மேல்கீழாவதை நாம் தடுக்க முடியும். அதற்கு தான் எதிர்ப்புணர்வும், நுண்ணரசியலுக்கு எதிர்வினையாற்றுவதும் அவசியமாகிறது. ரஜினியின் படங்கள் அதிகார சமநிலைக்கு அதிகாரத்தோடு ஒட்டாமல் இருப்பதே போதும் என்கின்றன. ஆற்றில் ஓடும் நீரைப் போல் நாம் இருக்க வேண்டும் என்கின்றன. ஆனால் ஆற்றின் அமைப்பை மாற்ற வேண்டியதில்லை.
காந்தி தலித்துகளும், உயர்சாதியினரும் இருக்க வேண்டும் என்றார். இந்த படிநிலை அமைப்புக்கு ஆதாரமான நம்பிக்கைகளை எதிர்க்க தேவையில்லை என்றார். ஆனால் அமைதியை, சமநிலையை தக்க வைக்க தலித்துகளை மரியாதையுடனும், கருணையுடனும் நடத்த வேண்டும் என்றார். மேலே இருப்பவர் கீழே இருப்பவருக்கு மரியாதை காட்டுவது அபத்தம் இல்லையா? ஒருவன் அதிகாரம் கொண்டவனாகவும், அதிகாரத்துக்கு கீழிருப்பவனாகவும் எப்படி ஒரே நேரம் இருக்க முடியும்? உயர்சாதியாகவும் தலித்தாகவும் ஒரே ஆள் எப்படி இருக்க இயலும்? காந்தி அக்காலத்தில் இந்தியாவின் அதிகார உச்சாணிக் கொம்பில் இருந்தார். பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் அவரை மரியாதையுடன் நடத்தியது. பெரும் பணக்காரர்கள் அவருக்கு நண்பர்களாக இருந்தனர். அவர்கள் அவருக்கு பண உதவி நல்கினர். அதே வேளை அவர் தன் தோற்றம் மற்றும் நடவடிக்கைகள் மூலமாய் அதிகாரமற்றவர்கள், விலக்கப்பட்டவர்களில் ஒருவனாகவும் தன்னை காட்டிக் கொண்டார். தன் அரசியல் வாழ்வில் மக்களுக்கு ஆணையிடக் கூடிய கட்டங்கள் வரும் போது உண்ணாவிரதம் மூலம் தன்னை வருத்திக் கொண்டு பிறரை தாமே உடன்படும் படி மறைமுகமாய் செய்தார். காந்தியின் உண்ணாவிரதங்கள் எனும் சுயவன்முறை அல்லது சுய அழிப்பு தன் அதிகாரத்தை வெளிப்படுத்தாமலே வெளிப்படுத்தும், அதைக் குறைப்பது போல் குறைத்து வளர்க்காதது போல் வளர்க்கும் ஒரு தந்திரம் தான். ஒரு கட்டத்தில் இஸ்லாமிய கட்சிகள் மற்றும் இந்துத்துவா கட்சியினர் இரு மத மக்களையும் பிரித்துக் கொண்ட போது காந்தி பதற்றமானார். இரு மதத்தரப்பினரும் தன் அதிகாரத்துக்கு உட்பட வேண்டியவர்களாக இருக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருந்தது. இதனால் தான் இறுதியில் இரு மதத்தினரும் அவரை கைவிட்டனர், எதிர்த்தனர். அவர் அம்பேத்கரை எதிர்த்தது கூட தலித்துகளுக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும் என்று எண்ணியதால் தான். இந்தியாவில் ஒரு சிறு அணு அசைந்தாலும் அது தனக்கு உட்பட்டு தான் இருக்க வேண்டும் என எண்ணினார். அதே வேளை ஒவ்வொரு சிறு அணுவுக்கும் உட்பட்டே தான் இயங்கியதாய் காட்டிக் கொள்ளவும் செய்தார். அவர் பிரம்மச்சரியத்தை போதனை செய்வார். இயல்பாகவே குடும்பஸ்தர்களுக்கு அவர் மீது எரிச்சல் வர வேண்டும் அல்லவா! ஆனால் அவர் தனது பிரம்மச்சரிய வீழ்ச்சிகள், குறைகள் பற்றி வெளிப்படையாக பேசவும் செய்வார். போதனையின் அதிகாரத்தை சமன்படுத்த தானே தன்னை போதித்து கொள்ளும் இடத்துக்கு வந்து மட்டுப்பபடுத்திக் கொள்வார். காந்தியின் நாடக மேடையில் அவரே ஹீரோ அவரே வில்லன். அவரே அவரை அடித்து ஜெயிப்பார். வேறெந்த அரசியல் தலைவரையும் விட பெருமளவில் நாம் காந்தியை ஏற்றுக் கொண்டது அவர் இப்படி அதிகாரமிக்கவராகவும், அதிகாரமற்றவராகவும் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக இயங்கினார் என்பதால் தான்.
என்னுடைய தோழி தான் குழந்தையாக இருக்கும் போது ஷாப்பிங் போன ஒரு சுவாரஸ்யமான கதை சொல்வார். பொதுவாக அவரது குடும்பம் எங்கே போனாலும் பஸ் தான். ஆனால் சில நாட்கள் ஷாப்பிங் முடித்து இரவு வேறு வழியின்றி ஆட்டோவில் வரும் போது வீட்டுக்கு சற்று தொலைவிலேயே நின்று இறங்கிக் கொண்டு வீடுவரை நடந்து போகும் படி அவரது அம்மா வலியுறுத்துவார். அட்டோவில் வந்திறங்குவதை அண்டை வீட்டார் பார்க்கக் கூடாது என்பதில் அவர் மிக கவனமாக இருந்தார். அதாவது நாம் பொருளாதார ரீதியாக முன்னேறலாம். ஆனால் அது பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரியக் கூடாது. இந்திய சமூகம் மிக மிக சமநிலையற்றது என அறிவோம். ஆனால் மத்திய வர்க்கத்தினர் தராசில் மேலே உயரும் போது தான் கீழே இருப்பதாகவே காட்டிக் கொள்ள விரும்புவர். இந்த மேலோட்டமான சமநிலை, அதாவது கக்கன் போன்று ஒரு அமைச்சர் பஸ்ஸில் பயணிப்பது, காமராஜர் ஆடம்பரமின்றி சொத்தின்றி வாழ்வது, சச்சின் கோடீஸ்வரனான பின்னரும் தன் பழைய அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்வது, ஏ.ஆர்.ரஹ்மான் ஆட்டோவில் தொழுகைக்கு போவது, நமது சமூக சமநிலையின்மை நம் நீதியுணர்வை புண்படுத்தாமல் இருக்கவும், மக்கள் இடையே அமைதியை தக்க வைக்கவும் உதவுகிறது. ஆனால் நம்மோடு பஸ்ஸில் போகிற அமைச்சர் நம்மை விட பன்மடங்கு அதிகாரம் கொண்டவர், அதை பிரயோகிப்பவர்; அவர் நம்முடன் பயணிப்பது, எளிமையாக தோன்றுவது நமக்கு ஒரு செயற்கையான சமத்துவத்தை நம்ப உதவுகிறது. அதிகாரத்தின் மீது எரிச்சல் தோன்றாமல் இருக்க செய்கிறது. கலகங்களில் ஈடுபடாமல் தடுக்கிறது. சமீபமாக என் தோழியின் அம்மா தயக்கமின்றி ஆட்டோவில் வீடுவரை போகிறார். இன்று ஆட்டோ கிட்டத்தட்ட கீழ்மத்திய வர்க்கமும் பயன்படுத்துகிற வசதியாகி விட்டது. சமீபமாக அவர் வீட்டுக்கு போன போது ஏ.ஸி வேலை செய்யவில்லை என்றார். பழுதுபார்க்க ஆளை அழைக்கவா என்றால் மறுத்தார். “ஆட்கள் வந்து பழுதுபார்த்தால் நான் ஏ.ஸி வைத்திருக்கிறேன் என பக்கத்து வீட்டாருக்கு தெரிந்து விடும். அதனால் வேண்டாம்” என்றார். இந்திய மத்திய வர்க்கம் இப்படித் தான் ஒரு சமத்துவத்தை பேணுகிறது. 

நன்றி: காட்சிப்பிழை, பிப்ரவரி 2014
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates