தமிழில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு இரு உத்தேசங்கள் இருக்கலாம். ஒரு எழுத்தாளனை வெளிச்சத்துக்கு கொண்டு வருதல். அல்லது ஏற்கனவே வெளிச்சத்தில் டாலடிக்கும் ஒருவரை மேலும் அங்கீகரித்தல். எப்படியும் வெளிச்சம் நல்லது தான். இரண்டாவதாய் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஆளுமைகள் தங்கள் அபிப்பிராயங்களை, விருப்பு வெறுப்புகளை, வாழ்க்கை நோக்கங்களை வெளிப்படுத்துதல் அல்லது ஸ்தாபித்தல். இங்கே ஒரு விஷயம் புலனாகி இருக்கும். அது விருது வாங்கும் எழுத்தாளர்களை பற்றி அல்லது அவரது புத்தகங்களை யாரும் விளக்கமாய் அணுகுவதில்லை என்பது. இரண்டாவது வருட சுஜாதா விருது நிகழ்வில் கவனிக்கத்தக்க கூர்மையான விசயங்களோடு மேற்சொன்ன முரண்பாடுகளும் இருந்தன.
நோபல் பரிசின் போது நாம் நோபல் என்ற புரவலரைப் பற்றியோ விருதை வழங்கும் ஆளுமையின் கருத்துக்களை பற்றியோ அலட்டிக் கொள்வதில்லை. நமது கவனம் முழுக்க விருது வாங்கியவரின் மீதே குவிகிறது. அவரைப் பற்றின குறிப்புகள் எழுதப்பட்டு வாசிக்கப்படுகின்றன. அவரது முக்கியமான நூல்கள் கடைகளில் புதுவரவு பகுதியில் பிரதானப்படுத்தப்படும். அவை பெருமளவில் விற்கப்படும். உலகம் பூரா மொழி பெயர்க்கப்படும். மேற்கில் ஒரு லோசாவை ஒரு விருதுக்காக மார்க்வெஸ் தேர்ந்தெடுத்து பொதுமேடையில் அரவணைத்து அரைமணிநேரம் பிரசங்கிப்பதில்லை. அல்லது விக்ரம் சேத்துக்கு விருது வழங்கும் ஒரு நிகழ்ச்சியை சல்மான் ருஷ்டி ஹைஜேக் செய்யப்போவதில்லை. அங்கே விருதை தேர்ந்தெடுக்கவும். புத்தகங்களை அறிமுகப்படுத்தி விளக்கவும் தொழில்முறை விமர்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ மனச்சாய்வுகளோ இருந்தாலும் அவர்கள் தங்கள் தொழிலை நேர்த்தியாக செய்பவர்கள். அவர்கள் எப்போதும் துணை பாத்திரங்கள். அப்படி இருப்பதில் புகார் அற்றவர்கள்.
தமிழில் அத்தொழிலை பகுதி நேரமாய் செய்வதற்கு ஒரு புனைவெழுத்தாளனோ அல்லது கவிஞனோ தான் இருக்கிறான். அவனும் இல்லாத பட்சத்தில், இரண்டாம் தரமாய், ஒரு மேடை பேச்சாளனோ, பத்திரிகையாளனோ, புரவலனோ அப்பாத்திரத்தை எடுத்துக் கொள்கிறான். இருசாராரும் விமர்சனத்தை ஒரு வேலையாக கருத மாட்டார்கள். அதனால் துணைபாத்திரத்தை ஏற்கவும் அவர்களுக்கு முடியாது. எப்போதும் இங்கு விருதுகளை தேர்ந்தெடுப்பவர்களும் மேடையில் கொடுப்பவர்களும் பேசுபவர்களும் தாம் ஒரே கதாநாயகர்கள். அவர்களது மேடையிலேயே விருதின் நிஜமான நாயகர்கள் சிறிது சிறிதாக குன்றிப் போகிறார்கள். கொஞ்ச நேரத்தில் இந்த அந்நியர்கள் ஏன் மேடையில் இங்கு ஓரமாய் தேவையின்றி அமர்ந்திருக்கிறார்கள் என்று விருதாளர்களை வியக்க தொடங்குகிறோம். சுஜாதா விருது நிகழ்வின் முக்கிய குறையாக இது இருந்தது.
உதாரணமாக விருதாளர்களில் அதிகம் அறிமுகமாகாத ஸ்ரீநேசன் யார், எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள், எந்த வகையை அல்லது பள்ளியை சார்ந்த கவிஞர் ஆகிய தகவல்கள் மேடையில் தந்திருக்க வேண்டும். இதை விளக்க வேண்டிய ஞானக்கூத்தனுக்கு முன் வந்த இந்திரா பார்த்தசாரதி ஒரு சாகித்ய அகாதமி ஜோக்கை நினைவு கூர்ந்தார். இ.பாவுக்கு சா.அ விருது கிடைத்திருப்பதை க.நா.சுவிடம் சொல்லும் ஒரு அகாதமி உதவியாளர் இ.பாவின் கிரக நிலை தான் அதற்கு காரணம் என்கிறார். ஆக இ.பாவிடம் இதை சொல்லி விட்டு அடுத்த நாள் பத்திரிகையில் கிரக ஒரு எழுத்தாளருக்கு பலன் காரணமாய் சாகித்ய அகாதமி விருது கிடைக்கப்படுவதன் விசித்திரம் பற்றி க.நா.சு எழுதினார். இந்த ஜோக் புரியாதனாலோ ஏனோ ஞானக்கூத்தன் சொல்கிறார்: “ஸ்ரீநேசன் ஏரிக்கரையில் வசிப்பவன் என்றொரு கவிதை எழுதியிருக்கிறார். அவருக்கு ஏரிக்கரையில் வசிக்கும் அந்த அம்மன் அருளால் தான் இவ்விருது கிடைத்திருக்கிறது என்று நம்புகிறேன்”.
இதைத் தொடர்ந்து ஸ்ரீநேசனின் கவிதையல்லாத ஒரு கவிதையை வாசித்து அது ஏன் கவிதையாகிறது என்று சொல்லாமலேயே முடித்துக் கொண்டார். ஞானக்கூத்தனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அவர் மட்டுமே விருதாளரை பற்றி சில நிமிடங்களேனும் பேசியவர். அவரும் இப்படி ஏமாற்றி விட்டார் என்பதால் தான்.
இப்படி இந்நிகழ்ச்சியின் குணாதசியம் புரிந்த பின் நாம் இந்திய மரபுப்படி அதை ஏற்றுக் கொண்டு சமாதானம் அடைந்து மதன், பாரதி கிருஷ்ணகுமார் போன்ற பொழுதுபோக்கு பேச்சாளர்களின் உளறள்களை தாங்க தயாராகலாம். ஏன்? சாருவும், எஸ்.ராவும் பேசும் அந்த ஒரு மணிநேரத்துக்காக. இருசாராரும் நிச்சயம் ஏமாற்றவில்லை.
சாரு இம்முறை punching bag ஆக ஆர்.உண்ணியையும், மனுஷ்யபுத்திரனையும் எடுத்துக் கொண்டார். தமிழ் எழுத்தாளர்கள் பிற மொழிகளில் போதுமான அளவு அறிமுகமாகவில்லை என்பது அவரது முக்கிய புகார். தமிழில் தொழில்முறை விமர்சகர்கள் இல்லாத நிலையில் புத்தகங்களை வரலாற்றில் நிறுவும் பொறுப்பை பல்கலைக்கழக ஆய்வார்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். மலையாளத்தில் இருந்து ஏகப்பட்ட புத்தகங்களை இங்கே மொழியாக்கி கொண்டு வரும் நாம் ஏன் நம் எழுத்துக்களை ஆங்கிலத்துக்கு கொண்டு செல்வதில்லை என்றார். உண்மையில் ஆங்கிலம் தெரிந்த திறமையானவர்கள் தமிழர்களில் இருக்கிறார்கள். துரதிஷ்டவசமாக அவர்கள் இலக்கியத்துக்கு அந்நியமானவர்கள். பால் கறப்பதே தொழிலாக கொண்ட பசுவை போன்றவர்கள். ஹெமிங்வே சொல்வது போல் வீட்டுப்பசுவுக்கும் காளைச் சண்டையில் தோன்றும் காளைக்கும் உள்ள வித்தியாசம் நாய்க்கும் நரிக்குமானது. ஆகவே பல்கலைக்கழக ஆங்கில அறிவார்ந்த குமாஸ்தாக்கள் நவீன தமிழிலக்கியத்தை முன்னெடுக்க மெனெக்கட மாட்டார்கள்.
சாரு சுஜாதாவின் மொழி லாவகத்திற்கு ஏன் இங்கு ஒரு மரபு உருவாகவில்லை என்று கேட்டது சுவாரஸ்யமான கேள்வி. அதற்கு அவரே ஒரு சிறு விடையும் தந்தார். சுஜாதா வாசகர்கள் பெரும்பாலும் வெறும் ”ரஸிகர்கள்”. அவர்கள் சாம்பார் சாதத்தையும் ஞாயிற்றுக் கிழமை மேட்டினியையும் ”ரஸித்தது” போல் சுஜாதாவையும் தரிசித்தார்கள். அவர்கள் அவரை தாண்டி வேறு யாரையும் படிக்கவில்லை. ரெய்மண்ட் கார்வரை படிப்பவர்கள் கார்வரை மட்டுமே படிக்க போவதில்லை. அவர்கள் முன்னே போய் ஹெமிங்வே பக்கமாவது வருவார்கள். தமிழில் அசோகமித்திரன் யார் என்று வினவுவார்கள். மினிமலிசம் என்றால் என்னவென்று யோசிப்பார்கள். சுஜாதாவுக்கு இந்த அதிர்ஷ்டம் நிகழவில்லை. மற்றொன்றும் உண்டு. சுஜாதாவின் உரைநடையில் சூட்சுமங்களை கவனித்து உள்வாங்குவதை விடவும் நாம் அவரை படியெடுக்க தான் ஆர்வம் காட்டினோம். தீவிர இலக்கியவாதிகள் ஏன் சுஜாதாவை புறக்கணித்தார்கள்? அவர்களுக்கு அவர் வெறும் ஜனரஞ்சகம் என்ற முன்முடிவு இருந்தது. அவரது பிரபல்யத்தின் புகைமூட்டம் மீது அச்சமும் இருந்தது.
சாரு ஆர்தர் கிளார்க்கின் “இறைவனின் ஒன்பது மில்லியன் பெயர்கள்” கதையை குறிப்பிட்டு அதை சுஜாதாவின் “தேவன் வருகையோடு” ஒப்பிட்டார். கடவுளை பற்றின இக்கதைகளில் “தேவன் வருகை” தான் மேல் என்றார் சாரு. முன்னர் அவர் கு.பா.ரா ஆங்கிலத்தில் சென்றிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும் என்று சொன்னது போல் இருந்தது இது. ஆர்தர் கிளார்க்கின் கதை மேலும் காட்சிபூர்வமானது. கவித்துவம் செறிந்தது. சுஜாதாவினுடையது சாமர்த்தியமானது. ஆனால் இரு கதைகளின் மையமும் ஒன்றே. இதை சாரு அடையாளம் கண்டது நமக்கு நிச்சயம் புதிய திறப்புகளை தருகிறது. ஏனென்றால் எளிமையாக தோற்றமளிக்கும் இரு கதைகளும் புரிய சற்று சிரமமானவையே.
எஸ்.ரா இரண்டு விசயங்களை முன்னிறுத்தி பேசப் போவதாக தெரிவித்தார். சுஜாதா தன் உரையில் புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்துவதில் தீரா ஆர்வம் கொண்டிருந்ததால் கவிதைகள் பற்றியும், சுஜாதா நல்ல பல துப்பறியும் கதைகளை எழுதி உள்ளதால் பொதுவாக துப்பறியும் புனைவுலகம் பற்றியும். இரண்டைப் பற்றியும் பொதுவாக பேசும் போது எஸ்.ரா மற்றொரு தமிழர் முன்முடிவை சுட்டினார். அது தமிழில் பக்தி இலக்கியம் அல்லது மரபிலக்கியம் நவீன வாசகனுக்கு தேவை அற்றது என்பது. இந்த ஒவ்வாமை கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாகவே தீவிரர்களிடையே உண்டு. எஸ்.ரா அருணகிரி நாதர் வெறும் முருக பக்தி கவிஞர் அல்ல, அவரால் சொற்களை நுட்பமாய் கோர்த்து சூனியத்தை நம்முள் உருவாக்கி காட்ட முடியும் என்றார். நகுலன் கவிதைகளின் சித்துகள் ஏற்கனவே அ.கி.நாவிடம் இருந்தன என்றார். எலியட்டின் பிரபலமான மரபும் நவீன இலக்கியமும் பற்றின கட்டுரையை மேற்கோள் காட்டினார். மனுஷ்யபுத்திரனின் ”கதாபாத்திரத்தின் வருகை” கவிதை பற்றி குறிப்பிட்டு அதன் ஒரு புதிய பரிணாமத்தை தொட்டுணர்த்தினார். அடுத்து ஏன் துப்பறியும் நிபுணர் பாத்திரம் உருவானது என்பதன் வரலாற்றுக் காரணத்தை (ஏற்கனவே அவர் ஒரு உயிர்மை கட்டுரையில் குறிப்பிட்டது) சொல்லி விட்டு துப்பறியும் புனைவுக்கு உலகம் முழுக்க முக்கியத்துவம் தரப்படுவதை குறிப்பிட்டார். நாம் அதை வெறும் ஜனரஞ்சகமாகவே இன்றும் கருதுகிறோம். ஆனால் துப்பறியும் எழுத்து குற்ற மனதின் இருண்ட பக்கங்கள் மீது விசாரணை கொள்கிறது. இதனால் அவ்வெழுத்து முக்கியமானது. சுஜாதாவின் துப்பறியும் எழுத்து இருளை நோக்கி செல்கிறதா என்று எஸ்.ரா சொல்லவில்லை; மாறாக சுஜாதா தன் கதைப்போக்கில் ஏகப்பட்ட சிறுபாத்திரங்களை நுட்பமாக சித்தரித்துள்ளதை, அவரது புனைவின் பின் பல மனவியல் சரடுகள் உள்ளதாய் சொன்னார். வெல்லக்கட்டியை இழுத்துக் கொண்டோடும் எறும்பைப் போல் அவர் பெரும்பாலும் தஸ்தாவஸ்கி பக்கமே நகர்ந்தார். உலக துப்பறியும் இலக்கியம் அல்லது தமிழ் துப்பறியும் எழுத்து பற்றி அலச அவர் முயலவில்லை அல்லது அதற்கு அவகாசம் வாய்க்க இல்லை. ஆனால் எஸ்.ராவின் பேச்சின் முக்கிய கவர்ச்சியே இந்த துண்டு துண்டான அவதானிப்புகளாய் இருந்தன.
இந்த கூட்டத்தில் அர்த்தபூர்வமாய் பேசப்பட்ட பகுதிகளில் அநேகமானவை சுஜாதா குறித்தவை என்பதால் சுஜாதாவை கவனிப்போம். சாரு இவ்வருட நிகழ்ச்சியிலும் சுஜாதா ஒரு மேதை என்பதை அழுத்தி சொன்னார். இது உண்மை இல்லை. தமிழில் அவரை விட அதிகம் சாதித்தவர்களை விட அவர் அதிக திறமையானவராக இருந்திருக்கலாம். தமிழ் இலக்கியத்தின் காம்பிளி அவர்; சச்சின் அல்ல. மேதை என்பவன் தன் கலாச்சாரம் அல்லது அறிவு வெளி மீது தன் தனித்துவமான போக்கு காரணமாகவும் புது கண்டுபிடிப்புகள் காரணமாகவும் அழுத்தமான தடங்களை பதிப்பவன். ஒரு ஓட்டத்தின் போக்கை மாற்றி அமைப்பவன். சுஜாதா தன் சிறகுகளை தானே கத்தரித்துக் கொண்டு ஒரு மட்டத்திலேயே பறந்தவர். அவரது நாடகங்களின் தொகுப்பை படிக்கும் போது இது விளங்கும். ”ஊஞ்சல்” எழுதின அதே சுஜாதா தான் அதற்கு முன்னும் பின்னும் அசட்டுத்தனமான மத்தியவர்க்க நாடகங்களையும் எழுதுகிறார். அதை விட அசட்டுத்தனமான ஏகப்பட்ட நாவல்களையும் எழுதியுள்ளார். சுஜாதா மேதை என்பதால் அல்ல ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதாலே கூட நாம் உணர்ச்சிவசப்படாமல் சிலாகிக்காமல் அவரை படிக்க முடியும்.
சுஜாதாவின் ஒரு முக்கிய பங்களிப்பு நாம் நன்றாக அறிந்தது. அது அவர் தமிழ் உரைநடைக்கு புத்துணர்ச்சி அளித்தார் என்பது. எதையும் எதிர்பாராத விதத்தில், சுருக்கமாக, எளிதாக சொல்ல அவருக்கு முடிந்தது. அடுத்து, அவர் நவீன மனதின் பல அபத்தங்களை சிறுகதைகளில் சித்தரித்தார். கூட்டத்தில் சுஜாதா ஒரு இலக்கியவாதிதான் என்று முத்திரை விழவில்லையே என்று மாறி மாறி குத்தினவர்கள் இவ்விஷயத்தை குறிப்பிடவில்லை. தமிழ்ப் புனைவில் அவரது இடம் ஒரு நவீனத்துவவாதியாக இவ்விதம் தான் உறுதிப்படுகிறது. பாரதிகிருஷ்ணகுமார் நினைப்பது போல், அவர் சுவாரஸ்யமாக, தளுக்காக, தமாஷாக எழுதினார் என்பதால் அல்ல.
பொழுதுபோக்கு பேச்சாளர்கள் நார்ஸிஸஸ் என்ற கிரேக்க மித்தாலஜி பாத்திரம் ஒன்றை நினைவுபடுத்துகிறார்கள். அவனுக்கு எங்கு நின்றாலும் தன் அழகு மட்டும் தான் தெரியும். அவன் காதலி முன்னால் வந்து என்னைப் பார் என்று கெஞ்சுவாள். ஆனால் நார்ஸிஸஸால் அது முடியாது. தன் முன் நிற்கும் தன்னையே பார்த்து சிலாகிப்பான். அவன் எல்லாரையும் பார்ப்பான் ஆனால் யாரையும் பார்க்க முடியாது.
பத்மராஜனின் ஒரு பழைய மலையாள படமான ”கூடெவிடெயில்” சுகாசினி ஒரு ஆங்கில பள்ளி ஆசிரியை. அவரிடம் தலைமை ஆசிரியர் தன்னை வந்து பார்க்க உத்தரவிட்டு வகுப்பிற்கு அட்டெண்டர் அனுப்புவார். அப்போது சுகாசினி பாடம் நடத்திக் கொண்டிருக்கும் இரண்டே நொடிகள் வரும். வெர்ட்ஸ்வொர்த்தின் கவிதை. அந்த ஒரு சில நொடிகள் படத்திற்கு முக்கியமே அல்ல. ஆனால் அதற்குள் சுகாசினி பாத்திரம் கற்பனாவாத கவிதை மரபு என்றால் என்ன என்று ஒரே வரியில் விளக்கி விடுவார். பத்மராஜனின் இந்த அக்கறையையும் எளிமையையும் பாருங்கள். ஆனால் ஒரு மூன்று மணிநேர நிகழ்ச்சியில் விருதாளர் அல்லது விருது பெற்ற புத்தகம் பற்றி நேர்த்தியாய் அவதானிக்க யாருக்கும் அக்கறை இல்லை. சம்மந்தமில்லாத விசயங்களை பற்றி அரை மணிநேரம் வேடிக்கைகள் உதிர்த்து விட்டு வெறுமனே ஒருவர் ஏரிக்கரையில் வசிப்பவர் என்றும் மற்றவர் பரதவர் சமூக வாழ்வியல் தகவல்களை தருகிறார் என்றோ சொல்வதல்ல ஒருவர் இப்படியான இலக்கிய நிகழ்ச்சியில் செய்ய வேண்டியது.
இப்படியான நிகழ்ச்சிகளில் யாரும் பேசட்டும். ஆனால்
பேசுவது முக்கியமானதாக நேரடியாக எளிதாக இருக்கட்டும்.
ஒரு போர்னோ படத்தில் கூட இரண்டரை மணிநேரம் நிர்வாணக் குளியலை சகித்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் பொழுதுபோக்கு பேச்சாளர்கள் வருவதற்கு முன் தங்களை கண்ணாடியில் சில மணிநேரம் பார்த்து சிலாகித்து விட்டு வரட்டும். கடவுளை பற்றி பேச அழைத்தால் “எனக்கு கடவுளை பல வருடங்களாகத் தெரியும்” என்று ஆரம்பிப்பதை தவிர்க்க வேண்டும்.
இந்த கட்டுரையில் சில முன்னுக்குபின் முரணான கருத்துகள் இருக்கிறது தோழரே.
ReplyDeleteஅபிலாஷ் மிக பட்டவர்த்தமான உண்மை இது...நான் சமிபத்தில் ஜெயந்தன் விருது பெற்றதை அறிவீர்கள்..ஒவ்வொரு புத்தகத்தை தேர்ந்தடுத்த நடுவர்கள்,,,அதை எதற்காய் தேர்ந்தெடுத்தோம் என விளக்கினார்கள்...நாவல் நாடகம் பிரிவில் பிரபஞ்சனும்..கவிதை பிரிவில் இளம்பி...றையும் விளக்கினார்கள்..அடுத்து சிறுகதை பிரிவு வந்தது ...பா.செயபிரகாசம் அவர்கள் எதிரபாராத விதமாக அன்று விழாவுக்கு வர இயலவில்லை...அதனால் என்னை பற்றியும் எனது கதைகள் பற்றியும் அங்கு வந்து இருந்த பாதி பேருக்கு தெரியாமல் போய்விட்டது..வந்து இருந்து உரை நிகழ்த்தி இருந்தார் என்றால் சில பேராவது என் புத்தகத்தை தேடி படித்திருப்பார்கள்.நீங்கள் சொல்லும் விசயங்களை இனியாவது விருது கொடுபவர்கள் யோசிக்க வேண்டும்.
ReplyDeleteமனுஷ்ய புத்திரன் பேச்சில் ஒன்று குறிப்பிட்டார்.
ReplyDeleteசிற்றிதழ் எழுத்தாளர்கள் சுஜாதாவிடம் சில விசயங்கள் கற்று இருக்கலாம். ஒரேடியாகப் புறக்கணித்து அவரிடம் இருந்து சில விஷயங்கள் கற்றுக் கொள்ளத் தவறி விட்டனர் என்று.
அது குறித்தும் உங்கள் கருத்தைப் பகிரவும்(mudinthaal)
நல்லதொரு பகிர்வு.
ReplyDeleteராம்ஜி, விருதுக்கு போட்டியிட்ட அத்தனை புத்தகங்களையும் படிக்காத நிலையில் எனக்கு கருத்தொன்றும் இல்லை. மனுஷ் சொன்னது சரிதான். ஆனால் எழுத்து முறையை தனிநபர்கள் தீர்மானிப்பதில்லை; சூழல், காலகட்டம் என்று வேறு காரணிகள் உள்ளன
ReplyDeleteஅதிஷா அந்த முரண் கருத்துக்கள் என்ன?
ReplyDeleteவிஜய், நான் சொல்வது இந்த அசட்டு பேச்சாளர்கள் நம் தீவிர இலக்கிய சூழலில் இருந்து அகற்ற வேண்டும் என்பது. இவர்களுக்கு சம்பாதித்து குடும்பம் வளர்ப்பது தவிர வேறு கவலை இல்லை. ஒரு இலக்கிய கூட்டத்தில் வந்து அசட்டு ஜோக்கடித்து நம்மை சிரிக்க வைக்க பார்க்கிறார்கள். அதுவும் போன வருடம் உயிர்மை மேடையில் சொன்ன அதே ஜோக்கை. இது என்ன விசுவின் அரட்டை அரங்கமா?
ReplyDeleteநன்றி மஞ்சூர் ராஜா
ReplyDeleteகட்டுரையின் தொடக்கத்தில் விழாவில் பேசியவை அனைத்தும் மொக்கை தேவையில்லாதது என்கிற தொனியில் எழுதப்பட்டுள்ளது. சில பத்திகள் தாண்டி எஸ்ராவும்சாருவும் பேசிய பேச்சு உலகப்புகழ்பெற்ற பேச்சு ஆகச்சிறந்தது என்கிற தொனியில் எழுதப்பட்டுள்ளது.
ReplyDeleteமற்றபடி நீங்களாவது கொஞ்சம் சிரத்தை எடுத்து அந்த விருதுவாங்கியவர்களை பற்றி நான்குவரியோ அவர்கள் பெயரையோவாவது குறிப்பிட்டுருக்கலாம் ;-)
\\ஒரு மூன்று மணிநேர நிகழ்ச்சியில் விருதாளர் அல்லது விருது பெற்ற புத்தகம் பற்றி நேர்த்தியாய் அவதானிக்க யாருக்கும் அக்கறை இல்லை.\\
ReplyDeleteஇது துரதிர்ஷ்டவசமானது.
மேடையில் பேசாவிட்டாலும் பரவாயில்லை.
ReplyDeleteபரிசு பெற்றவர்களைப் பற்றியும்,
அவர்களின் படைப்புகளைப் பற்றியும்
ஒரு சிறு குறிப்பு நூல் வெளியிடலாம்
அந்த விழாவில்.
அதிஷா, தேவையான தேவையில்லாத விசயங்கள் இரண்டும் பேசப்பட்டன என்று முதல் பத்தியிலே சொல்லியிருக்கிறேனே. மொத்தமாக வீண் என்றால் எதற்கு அதைப் பற்றி எழுதப் போகிறேன். கெட்டதை தவிர்த்து எழுத நான் அன்னப்பறவையும் அல்ல.
ReplyDeleteஅடுத்து, விருதாளர்களை சிரத்தையாக படித்து பின் எழுத தோன்றினால் கட்டாயமாக எழுதுவேன். இப்போதைக்கு அது என் வேலை அல்ல
தகவலுக்காக ,
ReplyDeleteவிஷ்ணுபுரம் விருது விழாவில் விருது பெற்ற ஆ.மாதவன் படைப்புகளை (அவரைப்பற்றி கூட அல்ல ) பேசப்பட்டது ,
ஜெயமோகனைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை .