Showing posts with label தனிப்பட்ட பகிர்வுகள். Show all posts
Showing posts with label தனிப்பட்ட பகிர்வுகள். Show all posts

Monday, 6 February 2012

மற்றொரு இனிய பயணமும் சுவையான உரையாடல்களும்



கடந்த சனிக்கிழமை (04-02-12) திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளியில் நானும் முத்துக்கிருஷ்ணனும் உரையாற்றினோம். எனக்கு இது இரண்டாம் முறை. முத்துக்கிருஷ்ணன் ஊடகம் பற்றி நான் சிறுகதைகள் குறித்து. அந்த பள்ளியில் உள்ள இனிமையான உபசரிப்பு மற்றும் அமைதியான சூழல் ஒரு பயணியின் உல்லாசத்தை ஏற்படுத்தும். அங்குள்ள புத்திசாலியான மாணவர்கள் தொடர்ந்து இலக்கியம் படிப்பு மீது நமது நம்பிக்கையை வலுப்படுத்துவார்கள். இம்முறை பேசும் போது பெரிய கூட்டம். போன முறை கவிதை பட்டறையில் பார்த்த மாணவர்கள் அன்பாக ஆர்வமாக ஒளிதுலங்கும் கண்களுடன் கூட்டத்தின் நடுவில் இருந்து என்னை பார்த்துக் கொண்டிருந்தனர். நவீன சிறுகதைக்கான பண்புகள், பிரபலமான மேற்கோள்கள், ஏழு வகையான சிறுகதைகள் என அறிமுகப்படுத்தினேன். பின்னர் செக்கோவின் வான்கா கதையை வாசித்து உரையாடினோம். ஒன்றரை மணிநேரம் போனதே தெரியவில்லை.
கடந்த முறை பகலெல்லாம் விருந்தினர் அறையில் தனியாக அமர்ந்திருந்தேன். உள்ளே செல்போன் டவர் எடுக்காது. எந்த மனிதக் குரலும் மனித வாடையும் உணராமல் ஒரு நூதனமாக தனிமை இருக்கும். இம்முறை முத்துக்கிருஷ்ணன் கூட இருந்ததால் அவருடன் பேசி சிரித்துக் கொண்டே இருந்தேன். கல்லூரி விடுதி நினைவுகள் கிளர்வதை தடுக்க முடியவில்லை. மனதுக்கு வயதாவதில்லை என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். நன்றாக மனம் விட்டு சிரிக்க தடை நாம் வாழும் மாறாத இறுக்கமான சூழல்கள் தாம் என நினைத்துக் கொண்டேன்.
வரலாறு மற்றும் கணித ஆசிரியர்கள் முரளி மற்றும் ராதாகிருஷ்ணனை சந்தித்து போன முறை நிறுத்திய இடத்தில் இருந்து தொடர்வது போல் சரளமாக பேசிக் கொண்டிருந்தேன். முரளி தான் வாசிக்கும் நூல்கள் பற்றி சொன்னார். ராதாகிருஷ்ணன் தனக்கு ஒரு நாவல் எழுத திட்டம் உள்ளதாய் சொன்னார். எனது “கிரிக்கெட்டின் மாறும் நிறங்களை புத்தக கண்காட்சியில் வாங்கி வாசித்ததாய் சொன்னார். பொதுவாக கல்வி முறை, அதில் உள்ள ஊழல் என சுவாரசியமாக பேசினார். ஒரு அரசு உதவி பெறும் ஒரு பள்ளிக்கூடத்துக்கு externalஆக சென்றாராம். அங்கு மாணவர்கள் C++ நிரலை மனப்பாடமாய் ஒப்பிக்கிறார்களாம். ஆனால் லேபில் ஒரு கணினி கூட திறந்து பயன்படுத்தப்படாமல் உறைபிரிக்காமல் இருக்கிறதாம். புத்தம் புதுசாய் இருக்கும் கணினிகளை பார்த்து அவருக்கு வியப்பு. விசாரித்தால் கணினி ஆசிரியர்களை நியமிக்கவில்லை என்று தெரிய வந்ததாம். இப்போதைக்கு காம்ர்ஸ் வாத்தியார்கள் தாம் கணினிக்கும் பொறுப்பாம். இப்படி ஆரம்பித்து பள்ளிக்கு externalஆக வந்த உடனே ஒரு வார சாப்பாட்டுக்கான மெனு பட்டியலை அளிக்கும் நபர்கள் வரை குறிப்பிட்டு விரிவாக பேசினார். சமச்சீர் பாடத்திட்டம் மாணவர்களுக்கு மிக கவர்ச்சியாக உள்ளதாக நேரடி பயன்பாட்டு பயிற்சிகள் மிகுந்ததாக உள்ளதாக குறிப்பிட்டார். ஆனால் சற்று அதிகமாக எளிமைப்படுத்துப்படுவதாக, அதனால் தரம் தாழ்ந்து விட்டதாக விசனித்தார். மேலும் அப்பாடத்திட்டத்தின் படி பாடம் எடுக்க நிறைய உதவிக்கருவிகள் தேவைப்படுமாம். அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களே போதுமானதாக இல்லாத நிலையில் யார் கருவிகளை வாங்கப் போகிறார்கள் என்று அவநம்பிக்கை தெரிவித்தார்.
அங்குள்ள மெஸ் உணவில், குறிப்பாக பரோட்டா, நான் படித்த விடுதியின் அதே சுவை கொண்டிருந்தது. பொதுவாக விடுதி உணவு ஒரு சுவையில்லாத சுவையை கொண்டிருக்கும். ஒருவிதமாய் நாவு அதற்கு பழகிப் போய் விடும்.
அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் துளசிதாசன் ஒரு நல்ல இலக்கிய வாசகர், சமூக ஆர்வலர். அவர் எஸ்.ராவுடன் இணைந்து சிறுகதைகளை புதுமையாக கற்பிக்கும் ஒரு புது புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார். ஒரு சிறுகதை வாசிக்கப்பட்டு, நாடகமாக்கப்பட்டு, திரும்ப சொல்லப்பட்டு விளக்கப்படுவதே அந்த முறை. சிறு சிறு பிரிவுகளாய் மாணவர்களை பிரித்து ஒரே கதையில் வேறுபட்ட முறைகளில் இவ்வாறு இயங்க வைப்பார்கள். அவர் தனது புது திட்டங்களை சொல்ல சொல்ல கல்வித்துறை மீது எனக்குள்ள நம்பிக்கை மேலும் மேலும் வலுவானது. தனிநபர்களாலும் ஒரு சீரழிந்த சூழலை ஓரளவுக்கு சீர்திருத்த முடியும். முழுக்க கட்டமைப்புகளையே குற்றம் சொல்லி ஓய்வதில் பயனில்லை. எங்காவது ஓர் அணில் ஒரு சிறுகல்லை தூக்கிப் போட்டால் போதும். எதிர்காலம் நோக்கின பாலம் எழுந்து விடும்.
எஸ்.ஆர்.வி பள்ளியில் ஆண்டுமலரை பார்த்தேன். கனமான பிரம்மாண்ட இதழ். புரட்டியபோது அசோகமித்திரன் உள்ளிட்ட பல முன்னோடிகள் அங்கு வந்துள்ளதை கண்டேன். மிக நெகிழ்ச்சியாக இருந்தது. பள்ளிக்கு வந்த அனுபவத்தைக் குறிப்பாக எழுதுகையில் கூட அசோகமித்திரனின் நகைச்சுவையும் கூர்மையும் பளிச்சிடுகின்றன.
திரும்ப ஞாயிறு சென்னைக்கு திரும்பியதுமே எழுத வேண்டியவை, படிக்க வேண்டியவை, செய்ய வேண்டிய வேலைகள், சாப்பிட வேண்டிய உணவுகள், தூங்க வேண்டிய தூக்கம் என்று பரபரப்பு பழையபடி தொற்றிக் கொண்டது.
Read More

Sunday, 11 December 2011

ஒரு கவிதை உரையாடலும் நிறைய சிரிப்பும்




நேற்று திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் அவர்களின் படைப்பாற்றல் ஸ்டுடியோ எனும் நிகழ்வுக்காக 11ஆம் வகுப்பு மாணவர்களிடம் நவீன கவிதை குறித்து இரு பகுதிகளாக ஐந்து மணிநேரம் உரையாடினேன். நான் எதிர்பார்த்ததை விட மாணவ மாணவிகள் கூர்மையாக ஆர்வமுடன் இருந்தார்கள். 
பொதுவாக என் வகுப்பில் கவிஞர்கள் யாராவது உள்ளார்களா என்று விசாரித்தால் ரொம்ப தயங்கிய பிறகு ஒருவர் இருவர் கை தூக்குவார்கள். ஆனால் இங்கே அநேகமாய் மொத்த வகுப்பும் தம்மை எழுத்தாளர்கள் என்று தன்னம்பிக்கையுடன் அறிவித்தது. பலரும் ஆர்வமுடன் வந்து தம் கவிதையை வாசித்தனர். அதற்கு பிறர் அசட்டுத்தனமாய் கமெண்ட் அடிக்காமல் ஒழுங்காய் கைத்தட்டி ஆதரித்தார்கள், அங்கங்கே பிசிறாய் சிரித்தார்கள். தொடர்ந்து எழுத்தாளர்களை சந்தித்து உரையாடுவது தான் இந்த எழுத்தாள ஆர்வத்துக்கு காரணம் என்று யூகித்தேன்.
யாரெல்லாம் வாழ்வில் தனிமையை உணர்கிறீர்கள் என்று கேட்டால் பத்து பேர் எழுந்து கொண்டார்கள். சற்று அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தாலும் தங்கள் தனிமையின் காரணத்தை தயக்கமின்றி அவர்கள் வெளிப்படுத்தியது ஆறுதல் ஏற்படுத்தியது.
கற்பனாவாத கவிதைக்கும் நவீன கவிதைக்குமான வித்தியாசங்களை விளக்கி நவீன கவிஞர்களை கவிதைகளை அறிமுகப்படுத்துவதில் முடித்தேன். பயர்பாயிண்ட் பயன்படுத்தியது எனக்கு ஒரு வித்தியாசமான உபயோகமான அனுபவமாக இருந்தது. உரையாடல் முடித்ததும் செஸ்லோவ் மற்றும் பசுவய்யாவின் இரு கவிதைகளை காட்டி அவை என்ன வகை மற்றும் அவற்றில் உள்ள கவிதைக்கருவிகளை அடையாளப்படுத்த கேட்டேன். பசங்க எந்தளவுக்கு கூர்மை என்றால் பலரும் பகடி, குறியீடு,படிமம் என்று சரளமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். அதுவும் செஸ்லோவின் கவிதையில் வரும் குறியீடு வீடு தான், அக்குறியீட்டின் பொருள் வாழ்க்கைக் கனவுகள் என்று இரு மாணவர்கள் சொன்னது போது ரொம்பவும் நெகிழ்ந்து போனேன்.
தமிழ் மற்றும் ஆங்கில நவீன எழுத்தாள ஆளுமைகளை விவரித்த போது ரொம்பவும் ரசித்தார்கள். குறிப்பாய் விக்கிரமாதித்யன். பிற்பாடு அவரது “வாழவும் பிடிக்கவில்லை, வாழாமல் இருக்கவும் பிடிக்கவில்லை கவிதையில் வரும் “குடிக்கவும் பிடிக்கவில்லை குடிக்காமல் இருக்கவும் பிடிக்கவில்லை என்று வரிக்கு சிரிப்பலை எழுந்தது. தேவதேவன் எப்படி பேசுவார் என்று பேசிக்காட்டிய போது விழுந்து விழுந்து சிரித்தார்கள். கலாப்பிரியாவின் பெயர்க்காரணம் சொன்ன போதும் அப்படியே.
இரண்டாவது அமர்வில் பிரமிள், நகுலன், பசுவய்யா, மனுஷ்யபுத்திரன், விக்கிரமாதித்யன், குட்டிரேவதி, யுவன், முகுந்த் நாகராஜன், என்.டி ராஜ்குமார், அப்பாஸ், ஆத்மாநாம் ஆகியோரின் கவிதைகளை அதிகமாய் விவாதித்தேன். மனுஷ்யபுத்திரனை ஏதோ சொந்த தம்பி போல் தெரிந்து வைத்திருக்கிறார்கள். என்.டியின் வட்டார மொழி அவர்களை வசீகரித்தது. அவரது இரு கவிதைகளின் எதார்த்தம் பாதித்தது கண்களில் தெரிந்தது. அவர் கவிதைகளை எப்படி ஒரு தாளலயத்துடன் வாசிக்க வேண்டும் என்று காண்பித்தேன். அப்பாஸின் ஒரு பெருவெளியை அவர்கள் உள்வாங்கியது ஆச்சரியம் அளித்தது. யுவனின் குள்ளச்சித்தன் சரித்திரத்தில் வரும் ஒரு சம்பவத்தோடு ஒப்பிட்டு நம் வாழ்வில் எப்படி இத்தகைய அனுபவங்கள் ஏற்படுகின்றன என்று சொன்னேன். எதிர்பார்த்தது போல் பெண்களுக்கு பிடித்தமானவராக முகுந்த் இருந்தார். கூட “எனக்கு இரங்கல் கூட்டங்கள் நடத்த வேண்டாம் என்னால் வர முடியாது என்ற வரி மூலம் நகுலன் சில பெண்களின் ஆதரவையும் புன்னகையையும் பெற்றது ஒரு சின்ன ஆச்சரியம்.
வழக்கம் போல் உரையாடலை முடிக்க மனமின்றி கிளம்பி வந்தேன்.
எஸ்.ஆர்.வி பள்ளியினரின் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது. விடிகாலையில் சென்னை வந்தேன். மனைவியும் நாய்க்குட்டியும் இல்லாத பட்சத்தில் கதவை நெருங்கும் முன்னரே என் பூனை மோப்பம் பிடித்து என்னை அழைத்து, உள்ளே வந்ததும் வளைந்த முதுகும் நிமிர்ந்த வாலுமாய் கொஞ்சியபடி வாழ்வில் முதன்முறையாய் என்னை அப்படி வரவேற்றது. அப்படி ஒரு இனிய அனுபவம் முடிவுக்கு வந்தது.
Read More

Saturday, 3 December 2011

மற்றொரு பிறந்த நாள்



மற்றொரு வருடம் முடிகிறது. இப்பிறந்த நாள் காலம் எனக்களித்த ஒரு பரிசு. போன பிறந்த நாளின் போது மிக மனச்சோர்வுடன் இருந்தேன். அப்போதில் இருந்து வாழ்க்கை ஒன்றும் ரொம்ப மாறி விடவில்லை. ஆனால் சின்ன சின்ன சன்மானங்களின் மதிப்பு தெரிகிறது. எழுதியதற்கு முதன்முறை மூவாயிரம் பணம் கிடைத்தது. பணம் கிடைப்பது பெரிதில்லை. ஆனாலும் எழுதி சம்பாதித்தது ஒரு விநோதமான உணர்வை அளித்தது.
வகுப்பில் சாமர்த்தியமாக பாடம் எடுப்பதே முன்பு வேலை நோக்கமாக இருந்தது. இப்போது என்னைப் பற்றி கவலைப்படுவதில்லை. மாணவர்களுடன் தெளிவாகவும் சுதந்திரமாகவும் உரையாடுவதே முக்கியமாக கொள்கிறேன். நேற்று எப்படியோ பிறந்தநாளை தெரிந்து கொண்டு சில மாணவர்கள் வாழ்த்திய போது அடைந்த நெகிழ்ச்சி எப்போதும் அடைந்ததில்லை. எழுத்தளவுக்கு என் ஆசிரிய வேலையையும் ஆவேசமாய் நேசிக்கிறேன். நேற்று ராஜாஜியின் ஒரு கட்டுரையை அறிமுகம் செய்யும் போது அவர் குலக்கல்வி முறையை நிலுவையில் கொண்டு வர முயன்று தோல்வியுற்று அதனால் ராஜினாமா செய்ததை விளக்கினேன். இந்திய வரலாற்றின் சாதி துவேசத்தை விவரித்த போது பலரது முகங்கள் உக்கிரமாக இருந்தன. என்னை மிகவும் திருப்தியுற வைத்த வகுப்பாக அது இருந்தது. வகுப்புகள் எழுத்தை விட மிக இயல்பான ஒரு பகிர்வு ஆக உள்ளன
இவ்வருடம் என் முதல் நாவலை எழுதி முடித்தேன். அத்திறன் எனக்கு உள்ளது என்று உணர்ந்துள்ளதே மிகுந்த திருப்தி அளிக்கிறது. ஓருமுறை மனுஷ்யபுத்திரனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது “ஒரு நாவல் எழுதலாமே என்றார். “நான் அவ்வளவு பெரிய ஆளெல்லாம் கிடையாது சார் என்றேன். அதற்கு “ஏன் உங்களால் முடியாது? என்று கேட்டார். அந்த கேள்வியை இத்தருணத்தில் நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன்.
இந்த பிறந்த நாளிலும் சற்று சலிப்பாக சோர்வாகத் தான் உள்ளது. ஆனாலும் ஒரு உள்ளார்ந்த திருப்தி இத்தருணத்தை மகத்துவமானதாக ஆக்குகிறது
Read More

Tuesday, 3 May 2011

சுஜாதா விருது நிகழ்ச்சி 2: சில கோரிக்கைகள்



 
தமிழில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு இரு உத்தேசங்கள் இருக்கலாம். ஒரு எழுத்தாளனை வெளிச்சத்துக்கு கொண்டு வருதல். அல்லது ஏற்கனவே வெளிச்சத்தில் டாலடிக்கும் ஒருவரை மேலும் அங்கீகரித்தல். எப்படியும் வெளிச்சம் நல்லது தான். இரண்டாவதாய் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஆளுமைகள் தங்கள் அபிப்பிராயங்களை, விருப்பு வெறுப்புகளை, வாழ்க்கை நோக்கங்களை வெளிப்படுத்துதல் அல்லது ஸ்தாபித்தல். இங்கே ஒரு விஷயம் புலனாகி இருக்கும். அது விருது வாங்கும் எழுத்தாளர்களை பற்றி அல்லது அவரது புத்தகங்களை யாரும் விளக்கமாய் அணுகுவதில்லை என்பது. இரண்டாவது வருட சுஜாதா விருது நிகழ்வில் கவனிக்கத்தக்க கூர்மையான விசயங்களோடு மேற்சொன்ன முரண்பாடுகளும் இருந்தன.
நோபல் பரிசின் போது நாம் நோபல் என்ற புரவலரைப் பற்றியோ விருதை வழங்கும் ஆளுமையின் கருத்துக்களை பற்றியோ அலட்டிக் கொள்வதில்லை. நமது கவனம் முழுக்க விருது வாங்கியவரின் மீதே குவிகிறது. அவரைப் பற்றின குறிப்புகள் எழுதப்பட்டு வாசிக்கப்படுகின்றன. அவரது முக்கியமான நூல்கள் கடைகளில் புதுவரவு பகுதியில் பிரதானப்படுத்தப்படும். அவை பெருமளவில் விற்கப்படும். உலகம் பூரா மொழி பெயர்க்கப்படும். மேற்கில் ஒரு லோசாவை ஒரு விருதுக்காக மார்க்வெஸ் தேர்ந்தெடுத்து பொதுமேடையில் அரவணைத்து அரைமணிநேரம் பிரசங்கிப்பதில்லை. அல்லது விக்ரம் சேத்துக்கு விருது வழங்கும் ஒரு நிகழ்ச்சியை சல்மான் ருஷ்டி ஹைஜேக் செய்யப்போவதில்லை. அங்கே விருதை தேர்ந்தெடுக்கவும். புத்தகங்களை அறிமுகப்படுத்தி விளக்கவும் தொழில்முறை விமர்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ மனச்சாய்வுகளோ இருந்தாலும் அவர்கள் தங்கள் தொழிலை நேர்த்தியாக செய்பவர்கள். அவர்கள் எப்போதும் துணை பாத்திரங்கள். அப்படி இருப்பதில் புகார் அற்றவர்கள்.

தமிழில் அத்தொழிலை பகுதி நேரமாய் செய்வதற்கு ஒரு புனைவெழுத்தாளனோ அல்லது கவிஞனோ தான் இருக்கிறான். அவனும் இல்லாத பட்சத்தில், இரண்டாம் தரமாய், ஒரு மேடை பேச்சாளனோ, பத்திரிகையாளனோ, புரவலனோ அப்பாத்திரத்தை எடுத்துக் கொள்கிறான். இருசாராரும் விமர்சனத்தை ஒரு வேலையாக கருத மாட்டார்கள். அதனால் துணைபாத்திரத்தை ஏற்கவும் அவர்களுக்கு முடியாது. எப்போதும் இங்கு விருதுகளை தேர்ந்தெடுப்பவர்களும் மேடையில் கொடுப்பவர்களும் பேசுபவர்களும் தாம் ஒரே கதாநாயகர்கள். அவர்களது மேடையிலேயே விருதின் நிஜமான நாயகர்கள் சிறிது சிறிதாக குன்றிப் போகிறார்கள். கொஞ்ச நேரத்தில் இந்த அந்நியர்கள் ஏன் மேடையில் இங்கு ஓரமாய் தேவையின்றி அமர்ந்திருக்கிறார்கள் என்று விருதாளர்களை வியக்க தொடங்குகிறோம். சுஜாதா விருது நிகழ்வின் முக்கிய குறையாக இது இருந்தது.
உதாரணமாக விருதாளர்களில் அதிகம் அறிமுகமாகாத ஸ்ரீநேசன் யார், எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள், எந்த வகையை அல்லது பள்ளியை சார்ந்த கவிஞர் ஆகிய தகவல்கள் மேடையில் தந்திருக்க வேண்டும். இதை விளக்க வேண்டிய ஞானக்கூத்தனுக்கு முன் வந்த இந்திரா பார்த்தசாரதி ஒரு சாகித்ய அகாதமி ஜோக்கை நினைவு கூர்ந்தார். இ.பாவுக்கு சா.அ விருது கிடைத்திருப்பதை க.நா.சுவிடம் சொல்லும் ஒரு அகாதமி உதவியாளர் இ.பாவின் கிரக நிலை தான் அதற்கு காரணம் என்கிறார். ஆக இ.பாவிடம் இதை சொல்லி விட்டு அடுத்த நாள் பத்திரிகையில் கிரக ஒரு எழுத்தாளருக்கு பலன் காரணமாய் சாகித்ய அகாதமி விருது கிடைக்கப்படுவதன் விசித்திரம் பற்றி க.நா.சு எழுதினார். இந்த ஜோக் புரியாதனாலோ ஏனோ ஞானக்கூத்தன் சொல்கிறார்: “ஸ்ரீநேசன் ஏரிக்கரையில் வசிப்பவன் என்றொரு கவிதை எழுதியிருக்கிறார். அவருக்கு ஏரிக்கரையில் வசிக்கும் அந்த அம்மன் அருளால் தான் இவ்விருது கிடைத்திருக்கிறது என்று நம்புகிறேன்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீநேசனின் கவிதையல்லாத ஒரு கவிதையை வாசித்து அது ஏன் கவிதையாகிறது என்று சொல்லாமலேயே முடித்துக் கொண்டார். ஞானக்கூத்தனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அவர் மட்டுமே விருதாளரை பற்றி சில நிமிடங்களேனும் பேசியவர். அவரும் இப்படி ஏமாற்றி விட்டார் என்பதால் தான்.
இப்படி இந்நிகழ்ச்சியின் குணாதசியம் புரிந்த பின் நாம் இந்திய மரபுப்படி அதை ஏற்றுக் கொண்டு சமாதானம் அடைந்து மதன், பாரதி கிருஷ்ணகுமார் போன்ற பொழுதுபோக்கு பேச்சாளர்களின் உளறள்களை தாங்க தயாராகலாம். ஏன்? சாருவும், எஸ்.ராவும் பேசும் அந்த ஒரு மணிநேரத்துக்காக. இருசாராரும் நிச்சயம் ஏமாற்றவில்லை.
சாரு இம்முறை punching bag ஆக ஆர்.உண்ணியையும், மனுஷ்யபுத்திரனையும் எடுத்துக் கொண்டார். தமிழ் எழுத்தாளர்கள் பிற மொழிகளில் போதுமான அளவு அறிமுகமாகவில்லை என்பது அவரது முக்கிய புகார். தமிழில் தொழில்முறை விமர்சகர்கள் இல்லாத நிலையில் புத்தகங்களை வரலாற்றில் நிறுவும் பொறுப்பை பல்கலைக்கழக ஆய்வார்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். மலையாளத்தில் இருந்து ஏகப்பட்ட புத்தகங்களை இங்கே மொழியாக்கி கொண்டு வரும் நாம் ஏன் நம் எழுத்துக்களை ஆங்கிலத்துக்கு கொண்டு செல்வதில்லை என்றார். உண்மையில் ஆங்கிலம் தெரிந்த திறமையானவர்கள் தமிழர்களில் இருக்கிறார்கள். துரதிஷ்டவசமாக அவர்கள் இலக்கியத்துக்கு அந்நியமானவர்கள். பால் கறப்பதே தொழிலாக கொண்ட பசுவை போன்றவர்கள். ஹெமிங்வே சொல்வது போல் வீட்டுப்பசுவுக்கும் காளைச் சண்டையில் தோன்றும் காளைக்கும் உள்ள வித்தியாசம் நாய்க்கும் நரிக்குமானது. ஆகவே பல்கலைக்கழக ஆங்கில அறிவார்ந்த குமாஸ்தாக்கள் நவீன தமிழிலக்கியத்தை முன்னெடுக்க மெனெக்கட மாட்டார்கள்.
சாரு சுஜாதாவின் மொழி லாவகத்திற்கு ஏன் இங்கு ஒரு மரபு உருவாகவில்லை என்று கேட்டது சுவாரஸ்யமான கேள்வி. அதற்கு அவரே ஒரு சிறு விடையும் தந்தார். சுஜாதா வாசகர்கள் பெரும்பாலும் வெறும் ரஸிகர்கள். அவர்கள் சாம்பார் சாதத்தையும் ஞாயிற்றுக் கிழமை மேட்டினியையும் ரஸித்தது போல் சுஜாதாவையும் தரிசித்தார்கள். அவர்கள் அவரை தாண்டி வேறு யாரையும் படிக்கவில்லை. ரெய்மண்ட் கார்வரை படிப்பவர்கள் கார்வரை மட்டுமே படிக்க போவதில்லை. அவர்கள் முன்னே போய் ஹெமிங்வே பக்கமாவது வருவார்கள். தமிழில் அசோகமித்திரன் யார் என்று வினவுவார்கள். மினிமலிசம் என்றால் என்னவென்று யோசிப்பார்கள். சுஜாதாவுக்கு இந்த அதிர்ஷ்டம் நிகழவில்லை. மற்றொன்றும் உண்டு. சுஜாதாவின் உரைநடையில் சூட்சுமங்களை கவனித்து உள்வாங்குவதை விடவும் நாம் அவரை படியெடுக்க தான் ஆர்வம் காட்டினோம். தீவிர இலக்கியவாதிகள் ஏன் சுஜாதாவை புறக்கணித்தார்கள்? அவர்களுக்கு அவர் வெறும் ஜனரஞ்சகம் என்ற முன்முடிவு இருந்தது. அவரது பிரபல்யத்தின் புகைமூட்டம் மீது அச்சமும் இருந்தது.
சாரு ஆர்தர் கிளார்க்கின் “இறைவனின் ஒன்பது மில்லியன் பெயர்கள் கதையை குறிப்பிட்டு அதை சுஜாதாவின் “தேவன் வருகையோடு ஒப்பிட்டார். கடவுளை பற்றின இக்கதைகளில் “தேவன் வருகை தான் மேல் என்றார் சாரு. முன்னர் அவர் கு.பா.ரா ஆங்கிலத்தில் சென்றிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும் என்று சொன்னது போல் இருந்தது இது. ஆர்தர் கிளார்க்கின் கதை மேலும் காட்சிபூர்வமானது. கவித்துவம் செறிந்தது. சுஜாதாவினுடையது சாமர்த்தியமானது. ஆனால் இரு கதைகளின் மையமும் ஒன்றே. இதை சாரு அடையாளம் கண்டது நமக்கு நிச்சயம் புதிய திறப்புகளை தருகிறது. ஏனென்றால் எளிமையாக தோற்றமளிக்கும் இரு கதைகளும் புரிய சற்று சிரமமானவையே.
எஸ்.ரா இரண்டு விசயங்களை முன்னிறுத்தி பேசப் போவதாக தெரிவித்தார். சுஜாதா தன் உரையில் புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்துவதில் தீரா ஆர்வம் கொண்டிருந்ததால் கவிதைகள் பற்றியும், சுஜாதா நல்ல பல துப்பறியும் கதைகளை எழுதி உள்ளதால் பொதுவாக துப்பறியும் புனைவுலகம் பற்றியும். இரண்டைப் பற்றியும் பொதுவாக பேசும் போது எஸ்.ரா மற்றொரு தமிழர் முன்முடிவை சுட்டினார். அது தமிழில் பக்தி இலக்கியம் அல்லது மரபிலக்கியம் நவீன வாசகனுக்கு தேவை அற்றது என்பது. இந்த ஒவ்வாமை கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாகவே தீவிரர்களிடையே உண்டு. எஸ்.ரா அருணகிரி நாதர் வெறும் முருக பக்தி கவிஞர் அல்ல, அவரால் சொற்களை நுட்பமாய் கோர்த்து சூனியத்தை நம்முள் உருவாக்கி காட்ட முடியும் என்றார். நகுலன் கவிதைகளின் சித்துகள் ஏற்கனவே அ.கி.நாவிடம் இருந்தன என்றார். எலியட்டின் பிரபலமான மரபும் நவீன இலக்கியமும் பற்றின கட்டுரையை மேற்கோள் காட்டினார். மனுஷ்யபுத்திரனின் கதாபாத்திரத்தின் வருகை கவிதை பற்றி குறிப்பிட்டு அதன் ஒரு புதிய பரிணாமத்தை தொட்டுணர்த்தினார். அடுத்து ஏன் துப்பறியும் நிபுணர் பாத்திரம் உருவானது என்பதன் வரலாற்றுக் காரணத்தை (ஏற்கனவே அவர் ஒரு உயிர்மை கட்டுரையில் குறிப்பிட்டது) சொல்லி விட்டு துப்பறியும் புனைவுக்கு உலகம் முழுக்க முக்கியத்துவம் தரப்படுவதை குறிப்பிட்டார். நாம் அதை வெறும் ஜனரஞ்சகமாகவே இன்றும் கருதுகிறோம். ஆனால் துப்பறியும் எழுத்து குற்ற மனதின் இருண்ட பக்கங்கள் மீது விசாரணை கொள்கிறது. இதனால் அவ்வெழுத்து முக்கியமானது. சுஜாதாவின் துப்பறியும் எழுத்து இருளை நோக்கி செல்கிறதா என்று எஸ்.ரா சொல்லவில்லை; மாறாக சுஜாதா தன் கதைப்போக்கில் ஏகப்பட்ட சிறுபாத்திரங்களை நுட்பமாக சித்தரித்துள்ளதை, அவரது புனைவின் பின் பல மனவியல் சரடுகள் உள்ளதாய் சொன்னார். வெல்லக்கட்டியை இழுத்துக் கொண்டோடும் எறும்பைப் போல் அவர் பெரும்பாலும் தஸ்தாவஸ்கி பக்கமே நகர்ந்தார். உலக துப்பறியும் இலக்கியம் அல்லது தமிழ் துப்பறியும் எழுத்து பற்றி அலச அவர் முயலவில்லை அல்லது அதற்கு அவகாசம் வாய்க்க இல்லை. ஆனால் எஸ்.ராவின் பேச்சின் முக்கிய கவர்ச்சியே இந்த துண்டு துண்டான அவதானிப்புகளாய் இருந்தன.
இந்த கூட்டத்தில் அர்த்தபூர்வமாய் பேசப்பட்ட பகுதிகளில் அநேகமானவை சுஜாதா குறித்தவை என்பதால் சுஜாதாவை கவனிப்போம். சாரு இவ்வருட நிகழ்ச்சியிலும் சுஜாதா ஒரு மேதை என்பதை அழுத்தி சொன்னார். இது உண்மை இல்லை. தமிழில் அவரை விட அதிகம் சாதித்தவர்களை விட அவர் அதிக திறமையானவராக இருந்திருக்கலாம். தமிழ் இலக்கியத்தின் காம்பிளி அவர்; சச்சின் அல்ல. மேதை என்பவன் தன் கலாச்சாரம் அல்லது அறிவு வெளி மீது தன் தனித்துவமான போக்கு காரணமாகவும் புது கண்டுபிடிப்புகள் காரணமாகவும் அழுத்தமான தடங்களை பதிப்பவன். ஒரு ஓட்டத்தின் போக்கை மாற்றி அமைப்பவன். சுஜாதா தன் சிறகுகளை தானே கத்தரித்துக் கொண்டு ஒரு மட்டத்திலேயே பறந்தவர். அவரது நாடகங்களின் தொகுப்பை படிக்கும் போது இது விளங்கும். ஊஞ்சல் எழுதின அதே சுஜாதா தான் அதற்கு முன்னும் பின்னும் அசட்டுத்தனமான மத்தியவர்க்க நாடகங்களையும் எழுதுகிறார். அதை விட அசட்டுத்தனமான ஏகப்பட்ட நாவல்களையும் எழுதியுள்ளார். சுஜாதா மேதை என்பதால் அல்ல ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதாலே கூட நாம் உணர்ச்சிவசப்படாமல் சிலாகிக்காமல் அவரை படிக்க முடியும்.
சுஜாதாவின் ஒரு முக்கிய பங்களிப்பு நாம் நன்றாக அறிந்தது. அது அவர் தமிழ் உரைநடைக்கு புத்துணர்ச்சி அளித்தார் என்பது. எதையும் எதிர்பாராத விதத்தில், சுருக்கமாக, எளிதாக சொல்ல அவருக்கு முடிந்தது. அடுத்து, அவர் நவீன மனதின் பல அபத்தங்களை சிறுகதைகளில் சித்தரித்தார். கூட்டத்தில் சுஜாதா ஒரு இலக்கியவாதிதான் என்று முத்திரை விழவில்லையே என்று மாறி மாறி குத்தினவர்கள் இவ்விஷயத்தை குறிப்பிடவில்லை. தமிழ்ப் புனைவில் அவரது இடம் ஒரு நவீனத்துவவாதியாக இவ்விதம் தான் உறுதிப்படுகிறது. பாரதிகிருஷ்ணகுமார் நினைப்பது போல், அவர் சுவாரஸ்யமாக, தளுக்காக, தமாஷாக எழுதினார் என்பதால் அல்ல.
பொழுதுபோக்கு பேச்சாளர்கள் நார்ஸிஸஸ் என்ற கிரேக்க மித்தாலஜி பாத்திரம் ஒன்றை நினைவுபடுத்துகிறார்கள். அவனுக்கு எங்கு நின்றாலும் தன் அழகு மட்டும் தான் தெரியும். அவன் காதலி முன்னால் வந்து என்னைப் பார் என்று கெஞ்சுவாள். ஆனால் நார்ஸிஸஸால் அது முடியாது. தன் முன் நிற்கும் தன்னையே பார்த்து சிலாகிப்பான். அவன் எல்லாரையும் பார்ப்பான் ஆனால் யாரையும் பார்க்க முடியாது.

பத்மராஜனின் ஒரு பழைய மலையாள படமான கூடெவிடெயில் சுகாசினி ஒரு ஆங்கில பள்ளி ஆசிரியை. அவரிடம் தலைமை ஆசிரியர் தன்னை வந்து பார்க்க உத்தரவிட்டு வகுப்பிற்கு அட்டெண்டர் அனுப்புவார். அப்போது சுகாசினி பாடம் நடத்திக் கொண்டிருக்கும் இரண்டே நொடிகள் வரும். வெர்ட்ஸ்வொர்த்தின் கவிதை. அந்த ஒரு சில நொடிகள் படத்திற்கு முக்கியமே அல்ல. ஆனால் அதற்குள் சுகாசினி பாத்திரம் கற்பனாவாத கவிதை மரபு என்றால் என்ன என்று ஒரே வரியில் விளக்கி விடுவார். பத்மராஜனின் இந்த அக்கறையையும் எளிமையையும் பாருங்கள். ஆனால் ஒரு மூன்று மணிநேர நிகழ்ச்சியில் விருதாளர் அல்லது விருது பெற்ற புத்தகம் பற்றி நேர்த்தியாய் அவதானிக்க யாருக்கும் அக்கறை இல்லை. சம்மந்தமில்லாத விசயங்களை பற்றி அரை மணிநேரம் வேடிக்கைகள் உதிர்த்து விட்டு வெறுமனே ஒருவர் ஏரிக்கரையில் வசிப்பவர் என்றும் மற்றவர் பரதவர் சமூக வாழ்வியல் தகவல்களை தருகிறார் என்றோ சொல்வதல்ல ஒருவர் இப்படியான இலக்கிய நிகழ்ச்சியில் செய்ய வேண்டியது.

இப்படியான நிகழ்ச்சிகளில் யாரும் பேசட்டும். ஆனால்
பேசுவது முக்கியமானதாக நேரடியாக எளிதாக இருக்கட்டும்.
ஒரு போர்னோ படத்தில் கூட இரண்டரை மணிநேரம் நிர்வாணக் குளியலை சகித்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் பொழுதுபோக்கு பேச்சாளர்கள் வருவதற்கு முன் தங்களை கண்ணாடியில் சில மணிநேரம் பார்த்து சிலாகித்து விட்டு வரட்டும். கடவுளை பற்றி பேச அழைத்தால் “எனக்கு கடவுளை பல வருடங்களாகத் தெரியும் என்று ஆரம்பிப்பதை தவிர்க்க வேண்டும்.

Read More

Monday, 17 January 2011

You are my sweet wife


 
ஒரு இரவில் என் மனைவியுடனான உரையாடலின் போது நான் கோமா நிலையின் இருந்த போது எப்படி நடந்து கொண்டேன் என்பது பற்றி விசாரித்தேன். மெல்ல மெல்ல நினைவுபடுத்தி சொன்னாள். கோமாவில் இருந்து பாதி மீண்ட நிலையில் என்னால் மயக்க நிலையில் கண் திறவாமல் பேச மட்டுமே முடிந்தது. அவள் என்னை பார்க்க வந்த போது நான் “எனக்கு ஜீனோவை பார்க்க வேண்டும், கொண்டு வா என்றிருக்கிறேன். ஜீனோ எங்கள் நாய்க் குட்டி. நான் என் நண்பர்களையோ உறவினர்களை குறிப்பிடவில்லை!
பிறகு நான் கண் திறந்த பின் அவள் என்னிடம் மார்க்வெஸின் “One Hundred Year’s of Solitudeநாவலை காட்டி “இது என்ன என்றிருக்கிறாள். நான் புத்தகத்தின் பெயரை சரியாக சொல்லி விட்டு “இதை நான் மொழியாக்கம் செய்து வருகிறேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கிறேன். அது தவறு. நான் மொழிபெயர்த்து வருவது மார்க்வெஸின் சுயசரிதையான “Living to Tell a Tale. இதை மனைவி குறிப்பிட்ட போது எனக்கு தலைப்பு குழம்பிப் போனது பொருட்டாகப் படவில்லை. மொழிபெயர்ப்பை ஏன் மீள மீள அழுத்தி சொன்னேன் என்பதே வியப்பாக இருந்தது. ஏனெனில் உயிரோசையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்த பின் மார்க்வெஸ் மொழிபெயர்ப்பில் இருந்து என் க்வனம் திரும்பி இருக்கிறது. மொழிபெயர்ப்பை விட உரை எழுதுவதை, புதிய தளங்களை அதன் மூலம் கண்டடைவதை மேலும் முக்கியமானதாக கருதி வந்திருக்கிறேன். பாதி கோமாவில் என் பிரக்ஞை அல்ல பேசியது; அபோத மனம். அபோத மனதில் மொழிபெயர்ப்பு பணி ஏன் பிரதானமாக இருந்தது?
ஒரு நாள் கழித்து மாலையில் ஒரு படம் பார்த்து முடித்த போது சட்டென்று தோன்றியது. அந்த மொழியாக்கத்தை சிறிது காலமாய் தூசு படிய விட்டதற்கு என்னுள் ஒரு குற்றவுணர்வு உள்ளது. அபோத நிலையில் மனம் திரையை திறந்து அக்குற்றவுணர்வை வெளிக்கொணர்ந்தது.
அடுத்து அவள் சொன்னது தான் இருப்பதிலேயே சுவாரஸ்யமானது. நான் கோமாவில் இருந்து பாதி விழித்து கண் திறக்க முடிந்த போது அவள் வந்து என் முன்னால் நிற்கிறாள். என்னிடம் கேட்கிறாள் “நான் யார் தெரிகிறதா?. முதலில் அவளிடம் நான் சொன்னது என்ன? “you are my sweet wife. என் வாழ்வில் முழு பிரக்ஞையுடன் இருந்த எந்த வேளையிலும் நான் இப்படி ஒரு வாக்கியத்தை அவளிடம் சொன்னதில்லை.
Read More

Wednesday, 12 January 2011

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்




2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன். 28 ஆம் தேதி விழித்த போது என் வாழ்நாட்களில் நான்கை சுத்தமாய் இழந்திருந்தேன். 24ஆம் தேதி மூச்சு விட சிரமப்பட்டு நினைவிழந்து நான் 28ஆம் தேதி விழித்த போது “சாவில் இருந்து திரும்பி இருக்கிறாய் என்று நண்பர்கள் வந்து வியந்து சொன்னார்கள். நான் ஆச்சரியமாக கேட்டேன். “நன்றாகத் தானே இருந்தேன், மூச்சுத் திணறலில் இருந்து எப்படி கோமாவுக்கு நான் சென்றிருக்க முடியும்? நான் எப்படி மரணத்தை முத்தமிட்டு திரும்பினேன்.?. இந்த கேள்வி பெங்களூரில் இருந்து வந்திருந்த என் அக்காவுக்கும், அம்மாவுக்கும் இருந்தாலும் அவர்கள் மௌனித்தனர். நான் மூச்சுத் திணறல் வந்து 24ஆம் தேதி இரவு ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் படி என் மாமியாரிடம் கேட்டது, பொன்மல்லிகை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்ட நினைவுகள் இருந்தன. அந்த ஓரிரவில் கோமாவுக்கு சென்றேன் என்று நினைத்துக் கொண்டேன். அங்கிருந்து மேடவாக்கத்தில் உள்ள Global என்ற பெரிய தனியார் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறேன். ஆனால் தேதிகள் பற்றின குழப்பம் வேறு என்னை மேற்கொண்டு வினவ தடுத்தன. நான் உயிர் பிழைத்த மகிழ்ச்சியுடன் ஐ.சி.யுவில் உடல் நலத்தை மெல்ல மெல்ல மீட்டுக் கொண்டு வந்தேன். ஐ.சி.யுவில் இருந்து வெளிவந்த பிறகு தான் நான் இழந்த நாட்களின் வரலாற்றை மீட்டுருவாக்கினேன். இந்த கண்டுபிடிப்புகள் ஒரு சின்ன அதிர்ச்சியில் இருந்து மிக எதேச்சையாக ஆரம்பித்தது.
என் முதல் சந்தேகம் என் மாமியார் ஏன் மிகுந்த குற்றவுணர்வுடன் என்னிடம் நடந்து கொண்டார் என்பது. அவர் என் கண்களை சந்திக்கவே தயங்கினார். அடுத்து என் மனைவி என்னிடன் தன்னிச்சையாக நீ இரண்டு நாட்கள் (அதாவது 24-26வரை) பொன்மல்லிகை என்ற ஆஸ்பத்திரியில் இருந்தாய் என்ற போது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அந்த ஆஸ்பத்திரியில் எனக்கு சிகிச்சை தராமல் தாமதித்தார்கள் என்பது நினைவில் இருந்தது. நான் மேலும் துருவினேன். மனைவி மேலும் சொன்னாள். எனக்கு பெரும் கிலி ஏற்பட்டது. அதாவது நானாக கோமா நிலைக்கு செல்ல வில்லை, அப்படி செல்லும் வரை சிகிச்சை தராமல் விடப்பட்டிருக்கிறேன். என் நுரையீரலும், சிறுநீரகங்களும் அவையாக பழுதாக இல்லை. இரண்டு நாட்கள் பழுதாகும் வரை அவை சிகிச்சை இன்றி இயங்க விடப்பட்டிருக்கின்றன. மூளைக்குள் அமிலம் புகுந்து சேர்ந்து எடிமா எனப்படும் நோய் உள்ளிட்ட பத்து கோளாறுகள் உருவாகும் வரை நான் இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறேன். ஏன்? தவறான நோய் அறிதல் மற்றும் அசட்டை காரணமாக. எப்படி இரண்டு நாட்கள்? இக்கேள்வி என்னை தொடர்ந்து வருத்தியது. 24ஆம் நாள் இரவு நடந்ததை என் மனைவி மெல்ல மெல்ல விவரித்தாள்.
22ஆம் நாளில் இருந்து எனக்கு வைரல் ஜுரம் இருந்து வந்தது. டாக்டர் ஹஸன் என்பவர் வீட்டுக்கு வந்து சிகிச்சை அளித்து வந்தார். ஒரு வருகைக்கு ரூ300 விதம் இரண்டு நாளில் ஆயிரத்து இருநூறு மேல் கட்டணம் பெற்றிருந்தார். 24ஆம் நாள் ஜுரம் விட்டாலும் கடுமையான வயிற்று வலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரி கொண்டு செல்லுமாறு என் மாமியாரை வேண்டியபோது அவர் தயங்கினாள். எனக்கு இது மிகவும் வியப்பளித்தது. இதை மனைவி பிற்பாடு விளக்கினாள். டாக்டர் ஹசன் அவளிடன் நுண்பேசியில் எனக்கு உடல்நலம் மிக நன்றாக உள்ளது என்றும் மூச்சுத் திணறல், வயிற்றுவலி என்று நான் வெறுமனே நாடகம் போடுவதாக சொல்லி இருக்கிறார். நான் வெறுமனே வெளியே செல்வதற்க்காக நடிக்கிறேனாம். இதனால் நான் சுமார் இரண்டு மணிநேரம் துடித்தேன். எனக்கு ஏன் வயிற்று வலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டன? நாலு வருடங்களாக எனக்கு நீரிழிவு கோளாறு உண்டு. ஜுரத்தின் போது ரத்த சக்கரை எகிறி நுரையீரலையும் பாதித்தது. அதனால் வலி. டாக்டர் ஹசன் ஏன் அவ்வாறு பொய் சொன்னார்? அவருக்கு நான் வெளியே சென்று ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி விடக் கூடாது. பின்னர் என் துன்பமும் அலறலும் பொறுக்காமல் மாமியாரும் மனைவியுமாக பொன்மல்லிகை ஆஸ்பத்திரியில் சேர்த்த போது டாக்டர் ஹஸன் வந்து கடிந்து கொண்டார். “நான் வீட்டுக்கு வந்து பார்க்க மாட்டேனா?. எனது அபாய நிலை அவருக்கு பொருட்டல்ல. ரூபாய் முன்னூறு அவர் கண்ணுக்கு அறத்தை மறைத்தது.
என் ஊனம் என் மாமியாருக்கு ஒரு மனத்தொந்திரவாக இருந்து வருகிறது. கூட நான் அவரை விட கீழ்சாதி என்பதும். இது காரணமாக என்னை மறைமுகமாக அவமானப்படுத்தி வந்துள்ளதால் நான் என் நீரிழிவை அவரிடம் இருந்து மறைத்தேன். சொன்னால் என்னை மேலும் ஒடுக்குவார் என்பது காரணம். என் ஊகம் போலவே அன்றிரவு நடந்தது. பொன்மல்லிகை ஆஸ்பத்திரியில் அன்றிரவு என் மாமியார் என் நீரிழிவு பற்றி தெரிந்து கொண்டு கடுங்கோபம் கொண்டார். “என் பெண்ணை ஏமாற்றி விட்டான் fraudஎன்று தொடர்ந்து என்னை என் மனைவியிடம் வைது கொண்டு இருந்திருக்கிறார். அவ்வேளையில் என் நிலை? ஆஸ்பத்திரியில் டாக்டர் மருதுபாண்டியன் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற நம்பிக்கையில் இருந்தார். ரத்த சக்கரை எகிறி மூளை நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை தாக்குவதை அவர் கவனிக்க இல்லை. அதனால் எத்தனை வற்புறுத்தியும் அவர் என்னை வெறுமனே படுக்கையில் வைத்திருந்த வாந்தி மாத்திரைகள் தந்து கொண்டிருந்தார். அவர் எனக்கு பைத்தியம் என்ற முடிவுக்கு வந்து நான் வெறுமனே மூச்சுத்திணறல் என்று நடிப்பதாய் என் மாமியாரிடம் சொன்னார். ஏற்கனவே கோபமுற்றிருந்த அவர் இந்த நடிப்பு கதையை உடனடி நம்பினார். இதை கூட இருந்த கவனித்த மனைவி என்னிடம் சொன்னது. உயர் ரத்த சக்கரை மூளையை தாக்கி மனக்குழப்பம் எனும் டெலிரியம் எனக்கு ஏற்பட்டது. அதாவது மூளைக்கு செல்லும் ரத்தத்தில் சக்கரை அறுநூறு எழுநூறுக்கு மேல் சென்று மது அருந்தியது போன்ற நிலை ஏற்படும். டாக்டர் இதை பைத்தியம் என்று நினைத்துக் கொண்டு நேரெதிர் பாதையில் என்னை வைத்தியம் பார்த்தார். ஒரு அறையில் நான் சோர்ந்து கிடந்து டிரிலிரியம் காரணமாக உளற ஆரம்பித்தேன். மூச்சு விட முடியாமல் அலறிக் கொண்டிருந்தேன். அவரும் பிறரும் என்னை எழுப்பி வைத்து கன்னத்தில் மாறி மாறி அறைந்தார்கள். “வேசம் போடாதே ஒழுங்காய் மூச்சு விடு என்று திட்டி என்னை தொடர்ந்து உலுக்கினார்கள்.
என் மனைவிக்கு இச்சூழலை சமாளிக்கும் பக்குவமும், திறனும் போதவில்லை; அவள் இளையவள், களங்கமற்றவள். ஆனால் என் மாமியார் அப்படி அல்ல. ஐம்பத்து இரண்டு வருடங்கள் இந்த மாநகரத்தில் வாழ்ந்து, ஆசிரியையாக பணி செய்த அனுபவமும், ஏராளமான நண்பர்களும், சக்தி வாய்ந்த உறவினர்களும் கொண்டவர். ஆனால் அவ்வேளையில் அவர் மருத்துவமனைக்கு தன் உறவினர்களையோ நண்பர்களையோ அழைக்கவில்லை. மற்றொரு மருத்துவரின் கருத்து கேட்கவில்லை. அவர் உள்ளார்ந்த கோபத்துடனும் விலகலுடனும் நடந்து கொண்டார். ஒரு மூன்றாவது நபர் செய்யக் கூடிய உதவிகளை மட்டுமே செய்தார். அந்தளவு மட்டுமே ஈடுபாடு காட்டினார். பதற்றப்படவே இல்லை. இத்தனை மாற்றங்களும் அவரிடம் எனக்கு நீரிழிவு உள்ளதாய் மருத்துவர் சொன்னதும் 24 அன்று இரவு நிகழ்ந்ததாய் என் மனைவி சொன்னார்.
பிறகு நான் மயக்கமுற்று விழுந்தேன். மெல்ல கோமாவுக்குள் செல்ல ஆரம்பித்தேன். இதுவும் வெறும் நடிப்பு என்று சொல்லப்பட்டது. எனக்கு டிரிப்ஸ் ஏற்றப்பட்டு வெறுமனே விடப்படுகிறேன். தானே சரியாகி விடும் என்று டாக்டர் சொல்கிறார். நான் நினைவு தவறி கிடப்பதை யாரும் கண்டு கொள்ளவே இல்லை. குளத்து தேரை போல் வேடிக்கை பார்த்தார்கள். அடுத்து மாமியார் டாக்டருடன் சேர்ந்து எனக்கு மனநோய்க்கு வைத்தியம் பார்க்க ஆள் விசாரித்துக் கொண்டிருந்தார். 25ஆம் நாள் இரவு முழுக்க நான் முதல் நிலை கோமாவுக்குள் இருக்கிறேன். என் நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் மூளை செயல்பாட்டை மெல்ல நிறுத்தி வருகின்றன. மூளையில் கட்டிகள் உருவாகின்றன. வழக்கம் போல் நான் மனச்சோர்வு கொண்டு நடித்துக் கிடப்பதாக பேசிக் கொள்கிறார்கள். ஆனால் என் வாழ்வில் இதுவரை மனநோய்க்கு எந்த வரலாறும் இல்லை. என் குடும்பத்தில் மரபார்ந்த ரீதியாய் மனநோய் இல்லை. ஆனாலும் டாக்டர் ஹசன் எனக்கு மனச்சோர்வு ஏற்பட்டுள்ளதாய் ஒரு அறிக்கை தயாரிக்கிறார். சென்னையில் எனக்கு மனுஷ்ய்பபுத்திரன், சாரு உள்ளிட்ட பெரும் ஆளுமை நண்பர்களும், விஜய், ஸ்ரீநிவாஸ், பிரகதீஷ், மாமல்லன் கார்த்தி உள்ளிட்ட நெருக்கமான படைப்பாளி நண்பர்கள் ஏராளமானோர் உள்ளனர். பெங்களூரில் என் அம்மாவும், அக்காவும் இருக்கிறாள். ஆனால் 25ஆம் தேதி முழுக்க நான் இருளில் கோமாவுக்குள் நழுவிக் கொண்டிருக்க அம்மா, அக்கா மற்றும் இந்த நண்பர்கள் யாருக்கும் சொல்லப்ப்பட இல்லை. என் நோய் ஒரு ரகசியமாக ஒன்றரை நாட்கள் காக்கப்பட்டது. இது ஏன் என்பது எனக்கு பெரும் புதிராகவே உள்ளது. என் அம்மாவும் அக்காவும் மனுஷ்புத்திரனும் சாருவும் நண்பர்களும் ஓடோடி வந்திருப்பார்கள். 28ஆம் நாள் அதுவரை நேரில் பார்த்திராத என் தோழி சம்பங்கி திருப்பத்தூரில் இருந்து சென்னை வந்து என்னை பார்த்து போனார். ஹமீம் முஸ்தபா அண்ணன் மதுரையில் இருந்து வந்து பார்த்தார். போனில் மட்டுமே பழக்கமான தமிழ்நதி அன்று வந்தார். சரியான நேரத்தில் தகவல் போயிருந்தால் இவர்கள் என்னை காப்பாற்றி இருப்பார்கள்; கண்டிப்பாக கோமாவுக்கு சென்றிருக்க மாட்டேன். ஆனால் என்னுடல் இருட்டில் திரைக்கு பின்னால் வைக்கப்பட்டது. அது சலனமற்று மூச்சு விட திணறியபடி மூளை பிரக்ஞையின்றி கிடந்தது. கிட்டத்தட்ட அரைப்பிணம்.
அது வரை நான் மிக நல்ல உடல்நிலையில் மனப்பிராந்தி காரணமாய் நோய் நடித்துக் கொண்டிருப்பதாய் சொல்லிக் கொண்டிருந்த டாக்டர்களும், மாமியாரும் 26ஆம் நாள் காலையில் என் சிறுநீரகம், நுரையீரல், மூளை உள்ளிட்ட உறுப்புகள் முழுக்க பழுதாகி போய் விட்டதை கண்டு பிடித்தார்கள். சும்மா நடித்துக் கொண்டிருந்த ஒருவன் திடீரென்று அனைத்து உறுப்புகளும் பழுதாகி இரண்டாம் கோமா நிலையில் இருக்கிறான். அட என்ன மாயம்? இரண்டு நாள் அறிக்கைகள் 26ஆம் தேதி ஒரே நாளில் மாறின. எனக்கு பத்து பெரும் அபாயங்கள் இருப்பதை பட்டியலிட்டு டாக்டர் என் மனைவியிடம் சொன்னார். “உயிர் பிழைக்க வாய்ப்பு மிகக் குறைவு என்று அவர் பதற்றத்துடன் தெரிவித்தார். ஆக பாதி செத்து விட்ட என்னைப் பற்றி தகவல் வெளியே விடப்பட்டது. நண்பர்கள் அழைக்கப்பட்டார்கள். என் அக்காவுக்கும் அம்மாவுக்கும் நான் சாகக் கிடப்பதாய் தொலைபேசியில் சொல்லப்பட்டது.
என் அக்கா மாமியாரிடம் என்னை உடனடி குளோபல் ஆஸ்பத்திரிக்கு மாற்றும்படி சொன்னார். அப்போது தான் என் மாமியார் உள்ளதிலேயே ஆக விநோதமாய் நடந்திருக்கிறார். உள்ளுறுப்புகள் நின்று போய் கோமாவில் இருந்த நிலையில் எனக்கு கழிந்து செல்லும் ஒவ்வொரு நிமிடமும் மதிப்பற்றவை. போகப் போக என் உடல் சீரழிந்து கொண்டிருந்தக் கூடும். இதனால் என் மனைவி தான் ஆஸ்பத்திரியில் இருந்து கட்டணத்தை செலுத்தி, டிஸ்சார்ஜ் அறிக்கை வாங்கி வருவதாகவும், தன் அம்மாவிடம் என்னை உடனடி குளோபல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறும் வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் மாமியார் மறுக்கிறார். பொறுமையாக அங்கே நின்று அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்து விட்ட பின்னரே என் அரைப் பிணத்துடன் நகர்ந்திருக்கிறார். என் அக்காவிடம் என் அபாய நிலை பற்றி தெரிவிக்கும் போது 26ஆம் நாள் மதியம் 12 என்னை புது ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்த போது மணி 4. கடந்திருக்கிறது. குறைந்தது மூன்று மணி நேரம் தாமதித்திருக்கிறார். ஒரு பொறுப்பான நிலையில் இருந்து அவர் இன்னும் துரிதமாக விவேகமாக இயங்கி இருக்க வேண்டும். என்ன காரணத்துக்காக தாமதித்தாராம்? தன் மகளை தனியாக விட மாட்டாராம். ஆனால் மகளோ அதே பகுதியில் தனியாக எத்தனையோ வருடங்கள் இருந்திருக்கிறாள். குறைந்தது அவர் ஒரு நண்பரை அழைத்து என் கோமா உடலை புது ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஒப்படைத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
என் நண்பர்கள் வர என் மாமியார் என் அரைபிணத்தை பார்த்து “என் மருமகன் ஒரு ஏமாற்றுக்காரன் என்று சொல்லி சிரிக்கிறார். பிறகு அவர் தொடர்ந்து என்னை பழி சொல்லிக் கொண்டே இருக்கிறார். என் மனைவியை அவளது நெருங்கிய தோழியான மனிஷா அழைத்து “என்ன இருந்தாலும் உன் அம்மா அவரது மருமகனைப் பற்றி இப்படி பிறர் முன்னிலையில் கேவலப்படுத்துவது தப்பு. நீ உன் அம்மாவை இப்படி தொடர அனுமதிக்காதே என்று கண்டிக்கிறாள். என் மனைவி சென்று அவள் அம்மாவை திட்டி வெளியே போக சொல்கிறாள். என் மாமியாரின் மகன் வந்து தன் அம்மாவின் வாயை மூட சொல்கிறான். மாமியார் ரகளையை விடுவதாய் இல்லை தற்காலிகமாய் மூளை செத்துக் கிடக்கும் என்னைப் பார்த்து சொல்கிறார் “ஏமாற்றுக்காரன் என் பெண் வாழ்க்கையை கெடுத்து விட்டான். உண்மையில் என் திருமணத்துக்கு முன்னரே என் நீரிழிவு கோளாறு என் மனைவிக்கு தெரியும். அதை தெரிந்தே என்னை காதலித்தாள். அவள் அதை என்றுமே புகார் ஆக்கினது இல்லை.
என் அக்கா பெங்களூரில் இருந்து சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையை சேர்ந்த நண்பரான டாக்டர் ஜான் தனபாலை அழைத்து நிலைமையை சொல்கிறார். அவரது பரிந்துரையின் பேரில் நான் 26ஆம் நாள் மதியம் குளோபல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறேன். சென்ற உடனே எனக்கு மூச்சுக்கு வெண்டிலேட்டர் வழங்கப்படுகிறது. இரண்டு மணி நேரத்தில் என் சரியான பிரச்சனை கண்டறியப்படுகிறது. இரண்டு நாள் கழித்தே உயிருக்கு உத்தரவாதம் தர முடியும் என்கிறார்கள் குளோபல் மருத்துவர்கள். ரத்த சக்கரை கட்டுக்கு கொண்டு வருகிறார்கள். கோமாவில் இருந்து நான் மெல்ல வெளிவருகிறேன். என் மாமியார் என் மனைவியிடம் சொல்கிறார் “அவன் 24ஆம் தேதி உடல் நிலை சரியில்லை என்று சொன்னது உண்மைதான். அவன் நடிக்கவில்லை. நாம் ரெண்டு நாள் தாமதமாய் வந்து விட்டோம். ஆம் நான் செத்துக் கொண்டு இருந்தேன் என்பதை அவர் ரெண்டு நாட்கள் தாமதமாய் ஏற்றுக் கொண்டார். நான் முழுக்க ஏமாற்றுக் காரன் இல்லை. பைத்தியம் இல்லை. மூச்சுத் திணறல் என்று நடிக்கவில்லை. ஒரு பௌதீக உண்மையை கற்பனையால் மூடி மறைத்து சாகடிக்க பார்த்திருக்கிறார்கள்.

பிறகு இரண்டு விசயங்கள் என்னை மிகவும் தொந்தரவு செய்கின்றன. ஒன்று என் மனைவி கூறியது. நான் ஒன்றரை நாட்கள் “எனக்கு மூச்சு திணறுகிறது காப்பாற்றுங்கள் என்று அங்கு பொன்மல்லிகை மருத்துவமனையில் ஒவ்வொருவரிடமும் கையெடுத்து கெஞ்சியிருக்கிறேன். பிறகு யாரும் உதவாமல் விட “அம்மா காப்பாற்று என்று ஆயிரம் முறையாவது கத்தியிருக்கிறேன். பிறகு இந்த “அம்மா காப்பாற்று கெஞ்சல் வாயில் உறைய நான் கோமா நிலைக்கு சென்றிருக்கிறேன். குளோபல் ஆஸ்பத்திரியில் நான் விழித்ததும் யார் முன்னே வந்தாலும் “அம்மா என்று கைப் பற்றி இருக்கிறேன். யார் முன்னே கொண்டு வரப்பட்டாலும் எனக்கு அம்மா உருவம் தான். கடைசியில் என் அம்மா வரும் போது நான் முக்கால் செத்துப் போய் இருக்கிறேன். இந்த சென்னை மாநகரில் பெரும் நண்பர்கள் இருந்தும் என் உடல் மூச்சுக்காக இரண்டு நாட்கள் கெஞ்சித் துடித்திருக்கிறது. ஒரு வலிமையும் கூர்மையான இளைஞனை ஒரு மிருகம் போல் நடத்தியிருக்கிறார்கள். மயக்க நிலையில் அறைந்திருக்கிறார்கள். சில மணிநேரங்களில் என் உடல் அன்னியர் வசம் ஆனதும் அது கடுமையான வதைக்கு உள்ளாக்கப்பட்டு மரணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒரு படித்த இளைஞனுக்கு மாநகரில் நண்பர்கள் மத்தியில் இப்படி நடக்கக் கூடும் என்பது மிகவும் அதிர்ச்சியாக நம்பமுடியாததாக உள்ளது. ஒரு குடும்பத்துக்குள் கூட இது நிகழலாம். நாம் நம் வசம் இல்லை என்பது உண்மை.
அடுத்து, இரண்டு நாள் ஒரு மனிதனை எப்படி மயக்கநிலையில் விட்டு வைத்தார்கள் என்ற கேள்வி. யாராயினும் என்ன மருத்துவ அறிக்கை இருந்தாலும் ஒரு நாளுக்கு மேல் மூச்சு பேச்சில்லாமல் கிடந்தால் அப்படியே விட்டு வைக்க மாட்டார்கள். புதிய மருத்துவமனைக்கு தூக்கிச் செல்வார்கள். எனக்கு ஏன் இரண்டு நாள் மாற்று சிகிச்சை மறுக்கப்பட்டது? நான் ஏன் இரண்டாம் கோமா நிலைக்கு சென்று சிறுநீரகம் நுரையீரல் மூளை பழுதாகும் வரை காக்க வைக்கப்பட்டேன்? இந்த 24-26 நாட்களில் நிஜமாக நடந்தது என்ன? என் மாமியார் சுட்டியாக சொல்கிறார் “பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்ல உன் மனைவி தான் என்னை தூண்ட வேண்டும்.. எதிர்பாராத சிரமமான வேளைகளில் ஒரு சிறு பெண் அல்ல முடிவெடுக்க வேண்டியது. அவள் குழப்பத்தில் எளிதில் உறைந்து போவாள். அவளுக்கு அனுபவம் போதாது. அப்போது ஒரு மூத்தவரே முடிவெடுத்து செயல்பட வேண்டியவர்.
என்னை ஏன் பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லவில்லை?. என் இழந்த நாட்களை நான் யாரிடம் கேட்க ? இழந்த கௌரவத்தை யாரிடம் கேட்க? நேர்ந்த வதைக்கு யாரிடம் நியாயம் கேட்க? என் காலத்தை களவாண்டது யார்?
இறுதியாக 24ஆம் நாளே என் அம்மா மற்றும் அக்காவிடம் அவர் அறிவிக்காதது ஏன்? இதை செய்ய 26ஆம் நாள் நாம் இரண்டாம் நிலை கோமாவுக்கு சென்று நான் முக்கால் செத்த வரை காத்திருந்தது ஏன்? என் நோயும் சிகிச்சையும் மயக்க நிலையும் ஏன் இருட்டில் ரகசியமாய் வைக்கப்பட்டது?
ஆனால் கோமாவில் இருந்து விழித்த நாள் நான் அடைந்தது ஒரு தெளிவான மகிழ்வான மனநிலை. அதுவரை வாழ்க்கையை ஒரு நோக்கமற்ற அர்த்தமற்ற ஓட்டம் என்றே நம்பி வந்திருந்தேன். பிறகு யோசித்தேன். எத்தனையோ தாமதங்கள், தவறான நோய் அறுதியீடுகள், நோயாளி மீதான அவநம்பிக்கை, தவறான சிகிச்சை, தவறான முடிவுகளுக்கு பிறகும், கோமாவில் சென்ற பின்னரும் வாழ்வின் அகக்கண் என்னை உயிருடன் மீட்டு வைத்துள்ளது. என் உயிர்ச்சுடரை காலம் உள்ளங்கைகளுக்குள் காத்து கொண்டு வந்து தந்துள்ளது. எழுத்துக்காகத் தான் இந்த மறுபிறப்பை கடவுள் எனக்கு தந்துள்ளார் என்று நம்புகிறேன். நான் இப்பிறப்பில் செய்துள்ள ஒரே நல்வினை அது மட்டுமே. கோமாவில் இருந்து மீண்ட இரண்டாம் நாள் என் உடல் பலவீனமாக இருந்தது. தலை விண்ணென்று வலித்தபடி இருந்தது. ஆனால் இரண்டு நாட்கள் உயிர்ப்பற்று கிடந்த கரம் கொண்டு என்னால் மிக சரளமாக உடனடி எழுத முடிந்தது. இரண்டு கவிதைகளும், இரண்டு கட்டுரைகளும் எழுதினேன். என் எழுத்து வேலை தற்காலிகமாய் அமைந்ததல்ல என்று ஆழமாக தோன்றுகிறது. எழுத்தின் முன் மண்டியிடுகிறேன்.
(ஆஸ்பத்திரியில் நடந்த அனைத்துக்கும் என்னிடம் தகுந்த ஆதார ஆவணங்கள் உள்ளன.)
Read More

Saturday, 4 December 2010

பிறந்த நாளின் போது



நேற்று பிறந்தநாளின் போது எப்படி முப்ப்து வயது வரை வாழ்ந்தோம் என்று வியப்பு ஏற்பட்டது. 


கிராமத்து குழந்தைகளுக்கு திருவிழா போல் தான் எனக்கும் பிறந்த நாள் இருந்து வந்துள்ளது.  பருப்பு அப்பளம் கடலை பாயச மதிய உணவுக்காக ஏற்பட்ட நாள். அந்நாளில் வீட்டில் இருந்து பூதத்தான் கோவிலுக்கு அரிசிப் பாயசம் படையல் வைத்து பெரிய போணியில் பள்ளிக் கூட குழந்தைகளுக்கு விளம்புவார்கள். அப்பாயசம் வேறு ஒரு சுவை கொண்டிருக்கும். எத்தனையோ குழந்தைகள் குடித்த பாயச பாத்திரத்தின் ஒரு கரண்டி தரும் ஆழ்நிறைவு தனியானது. இளமையின் பிறந்தநாள் காரணமற்ற உற்சாகம், புத்துணர்ச்சி, தன்னம்பிக்கையின் கூட்டுசேர்க்கை. கல்லூரி வரை பிறந்த நாள் காலத்தின் நினைவூட்டலே அல்ல. அது காலத்தை நினைக்காத காலம். மாநகரத்தில் பிறந்த நாட்கள் வாழ்த்துக்களின், பரிசுகளின், உணவக மதுக்கூட பங்கேற்புகளின் நாள். கிராமத்தில் என்னை யாரும் வாழ்த்தியதாக, பரிசு தந்ததாக நினைவில்லை. என் மிகச் சிறந்த நண்பர்களின் பிறந்த நாளைக் கூட நான் நினைவு வைத்தது இல்லை. அவர்களுமே.
மேற்சொன்ன பண்பாட்டு மாறுபாடு காரணமாக மாமியார், நண்பர்கள், அறிமுகமானவர்கள், கூட பணி செய்பவர்கள் யாருக்கும் சொல்லவில்லை. அப்படி பிறந்த நாளை அறிவிக்கவே கூச்சமாக இருந்தது. அதற்கு வேறொரு காரணம் உள்ளது.
கடந்த சில மாதங்களாக ஒரு கசப்பான மாத்திரையைப் போல நாட்களை விழுங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு இரவு கூட நன்றாக தூங்கவில்லை. தினமும் ஒரு எரிமலை வாயின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதான உணர்வு. இரவு தூங்க முற்படும் போது எப்படி இவ்வேளை வரை உயிரோடு இருந்தோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. பூனையின் கால்நகங்கள் உள்ளடங்கியவை. திடீரென்று பூனையால் தன் நகங்களை வெளிப்படுத்த முடியாமல் போனால் என்னாகும்? இவ்வளவு சலிப்பான அசட்டுத்தனமான வாழ்வை எப்படி அர்த்தமானதாக இதுவரை ஆக்கினோம் என்று வியப்பேற்படுகிறது. வாழ்வில் ஒளி காண்பது நிஜமாகவே ஒரு திறன். அத்திறனை இழப்பது ஒரு புலன் சட்டென்று மூடிக் கொள்வது போல். அப்போது மொழியில் இருந்து கிடைக்கும் பிரதிபலிக்கப்பட்ட வெளிச்சத்தை நம்பி இருக்க வேண்டியதாகிறது. இந்த மாதங்களில் கசப்பு கலந்த வியப்பு மட்டுமே மேலோங்கிய  உணர்வு. ஒரு நிறக்குருடனின் முன் நிறங்களால் பளபளக்கும் உலகம்.
ஆக ஒரு பெரும் கடனாளியான சூதாடியாக உணர்ந்தேன். என் கைகளை யார் பற்றி குலுக்கினாலும் சற்று நெகிழ்ச்சியாகவும் நிறைய கூச்சமாகவும் இருந்தது. கைகளை ஆழமாக சட்டைப்பைக்குள் புதைத்துக் கொண்டேன். நண்பர்கள் மற்றும் பிற உறவுகள் பாலான அவநம்பிக்கையால் அல்ல. இணையம் மூலம் அறிந்து வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.
Read More

Wednesday, 6 October 2010

பல் குத்துவது எத்தனை முக்கியம்?




எனக்கு ராசி, அதிர்ஷ்டம், விதி ஆகிய பிரயோகங்களில் நம்பிக்கை இல்லை. இவற்றில் மானுட மனஊக்கம் கலந்துள்ளது. சந்தர்ப்ப சுழற்சிகளில் ஒரு குருட்டத்தன்மை இருப்பதே உண்மை. அதனால் அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் என்றெல்லாம் சொல்லும் போது ஒரு கருத்து தன்னிச்சையாக உருவாகிறது. சந்தர்ப்ப மாற்றங்கள் ஒரு பெரும் மானுட அல்ல பிரபஞ்ச நன்மையை நோக்கி செலுத்தப்படுவன என்பதே அது. எனக்கு இறுதிகட்ட பிரபஞ்ச நன்மையில் நம்பிக்கை இல்லாததால் முக்கியமற்ற அன்றாட பேச்சில் மட்டுமே இவற்றை புரட்ட தலைப்படுவேன். ஆனால் இப்போது என் வாழ்க்கைப் போக்கின் நெளிவு வளைவுகளை பேச நினைக்கையில் சற்று சங்கடமாகிறது. ஆனாலும் ’ராசியுடனே’ ஆரம்பிக்கிறேன்.


எனக்கு வேலை விசயத்தில் அதிக ராசி இல்லை. அதாவது மனநிறைவு மற்றும் மகிழ்ச்சியை பொறுத்தமட்டில். 2006-இல் மாலைமலரில் செய்த வேலை எனக்கு மிகப்பிடித்தமான முதல் பணி. ஆனால் சில மாதங்களிலேயே எங்கள் குழு கலைந்தது. நானும் கிளம்ப வேண்டியதாகியது. பிறகு கிரீம்ஸ் ரோடில் ஒரு தனியார் நிறுவனத்தில் செய்திகளை சுருக்கி எழுதும் பணி பட்டியலில் இரண்டாவது. சில மாதங்களில் லே ஆப் என்று மென்னியை பிடித்து தள்ளினார்கள். பிறகு மூன்றாவதாக தற்போதுள்ள கல்லூரி வேலை. கல்லூரி வேலையில் மகிழ்ச்சியோடு காலவசதியும் ஒரு தனிச்சிறப்பு. ஆனால் அங்கும் ஒரு சிக்கல்.
எம்.பில் படிப்பை தொலைதூர கல்வி முறையில் முடித்தேன். வெகுவாக தாமதித்து சமீபமாகத்தான் ஆய்வை சமர்ப்பித்தேன். 2009 மேமாதத்துக்குள் எம்.பில் முடிக்காதவர்களை வீட்டுக்கு அனுப்ப ஒரு அரசாணை பிறப்பித்துள்ளார்கள். ஆகையால் கல்லூரியில் இருந்தும் விரைவில் வெளியேற்றப் பட்டு விடுவேன். இதற்கு பின் இன்னொரு கதை உள்ளது. 2005இல் நேரடி எம்.பில் வகுப்பில் சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். அப்பாவுக்கு புற்றுநோய் ஏற்பட்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட நான் நேரடி எம்.பிலில் இருந்து விலகி உடனே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இல்லாவிட்டால் ஒரேயடியாக பி.எச்.டி முடித்துவிட்டுத் தான் கிளம்பியிருப்பேன். கிறித்தவக் கல்லூரி மீது அப்படி ஒரு காதல் எனக்கு. இந்த அரசாணை பற்றி எனது துறைத்தலைவர் அழைத்து சொன்ன போது எனக்கு 2005-இல் பாதி கட்டணத்தை திரும்ப வாங்கி படிப்பில் இருந்து விலக நேர்ந்த அவலம் நினைவு வந்தது. இளங்கலை முதுகலை சேர்த்து ஐந்து வருடங்கள் நான் முதல் மாணவனாக வந்தேன். முதுகலையில் தங்கப்பதக்கம் பெற்றேன். என்னை விட பத்து பதினைந்து சதவீதம் குறைவாக மதிப்பெண்கள் பெற்ற சகமாணவர்கள் வசதியாக எம்.பில் படிக்க முடிந்ததை நினைக்கும் போது அநியாயமாக பட்டது. எத்தனையோ கவனிக்காமல் விடப்படும் அன்றாட தருணங்கள் போல் இச்சம்பவங்களை கோர்த்துப் பார்க்க ஒரு கதை உள்ளதாக தோன்றியது. துரதிஷ்டத்தின் கதை. என் விதியை கொஞ்ச நேரம் நொந்த பிறகு விதியே இல்லையே என்பது நினைவு வந்தது. (பிடிக்காத சில வேலைகளில் இருந்துள்ளேன். அங்கிருந்து நானாக கழன்று கொள்ள வேண்டும். அவர்களாக அனுப்பவே மாட்டார்கள்; எத்தனை மோசமாக பணி செய்தாலும், நடந்து கொண்டாலும்.)

இது போன்ற அல்லது மேலும் மோசமான ராசி பலருக்கும் இருந்திருக்கலாம்/இருக்கலாம். கண்ணீர்க் கதைகள் அதிகம் நினைவில் தங்கி இருக்கின்றன. அவற்றை மீட்டுவதில் அகங்காரம் கொஞ்சம் சுகம் காண்கிறது. சொறிந்து சுகம் காண்பது நமது நோக்கமல்ல அல்ல என்பதால் அதற்காக நான் இத்தனையும் சொல்லவில்லை. இப்படி சந்தப்பங்களை கதைப்படுத்தும் அபத்தம் ஏன் நடக்கிறது? வாழ்க்கையில் அப்படி ஒரு கட்டமைப்பு தர்க்கம் இல்லையே! வாழ்க்கையில் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்பது பற்றி ரசல் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்: Conquest of Happiness. அதில் மனிதனின் ஒரு ஆதாரப் பிரச்சனையை சுட்டுகிறார். சதா வாழ்க்கையை அர்த்தப்படுத்துவது. அதுவும் அகங்காரத்தை சும்மா சும்மா தொட்டு நக்கியபடி. இது குறைபட்ட உண்மையையே நமக்கு காட்டுகிறது. அதனால் மனிதன் வாழ்க்கையை நிறைவு செய்யப்படாத ஒரு கதையாக கற்பித்து அதில் தனக்கு மிகுந்த உணர்வெழுச்சி தரும் சம்பவங்களை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாய் நிரப்பி வருகிறான். பிறரிடம் அரட்டையடிப்பது இதனாலேயே சுகமான ஒன்றாக உள்ளது. ஆனால் தர்க்கரீதியான கதையாக வாழ்க்கையை புனைவு செய்வது மகிழ்ச்சிக்கு எதிரானது. பிரக்ஞையை மறந்து விட்டு மனதின் தர்க்க மாவு மிஷினை அணைத்து விட்டு பிடித்த விசயங்களில் திசை திரும்பி ஈடுபடுவதே மகிழ்ச்சியின் திறவுகோல் என்று வலியுறுத்துகிறார் ரசல். எப்படியாயினும் தர்க்கம் என்கிற அருமையான கருவியைக் கொண்டு அகங்காரத்தை முதுகு சொறிவது வீண் தான். அதற்கு தேமேவென்று ’பொழுது போக்கலாம்’.
அடிக்கடி பல்குத்த வேண்டும் தான். நமது வாழ்க்கை சேதி முக்கியம் தான். ஆனால் ஒன்றும் அத்தனை முக்கியமில்லையே!
Read More

Thursday, 23 September 2010

பயணக் குறிப்புகள்: கலையாத சதுரங்கப் பலகையும், கச்சிதமான நூலகமும்





போன மாத இறுதியில் சில சான்றிதழ்களை எடுத்து வர சொந்த ஊரான குமரி மாவட்டத்துக்கு செல்ல வேண்டி இருந்தது; சில தனிப்பட்ட காரணங்களுக்காக அது ஒரு சற்று நீண்ட சுற்றுப் பயணமாக முடிந்தது. பெங்களூர் சென்று அங்கிருந்து ஊருக்கு சென்றேன். அங்கே இருந்த இரண்டு நாட்களில் முடிந்த வரையில் நண்பர்களை சந்தித்தேன். புதுச்சூழலிலோ அல்லது நீண்ட காலம் கழித்தோ சில நண்பர்களை சந்திக்கும் போது வினோதமான ஒன்று புலப்படுகிறது: அவர்கள் அதே சுற்றுப் பாதையில் அதே பாவனைகளுடன் செல்கிறார்கள் என்பது அது. பிரச்சனைகளும், புகார்களும், தீர்வுகளும் மாறுவதே இல்லை.
கவிஞர் நட.சிவகுமாரை தக்கலையில் அவர் வீட்டில் சந்தித்தேன். அவர் சார்ந்த கலை இலக்கிய பெருமன்றத்தின் கூட்டங்கள் சலிப்பாக இருப்பதால் போவதில்லை என்றார். கடந்த வருடம் நான் பார்த்த போது தக்கலை மன்றக் கிளையின் தலைவராக இருந்தார். பேச்சு சுவாரஸ்யமாக செல்லவில்லை. மின்சாரம் வேறு போனது. அவரது மனைவி வெளியே வந்து “I feel stuffedஎன்று தனக்குள் சொன்னார். திடீரென்று ஊரில் அதைக் கேட்க பயமாக இருந்தது. இருவரும் வெளியே நடக்கச் சென்றோம். சிவகுமாரை நான் கடந்த முறை வீட்டில் பார்த்த போது அவர் குடும்பமும் வேலையும் இல்லாது கவிஞர்.மட்டுமாக இருந்தார் ஆண்கள் மட்டுமே புழங்கிய அவர் வீட்டின் தனித்துவமான வாசனை மற்றும் கலவரத்துடன், பரண் நிறைய புத்தகங்களும் பத்திரிகைகளும் பிதுங்கி வழிய, களங்கமற்ற மனதுடன் ஹி..ஹி என்று சிரித்தபடி உற்சாகமாக பேசுவார். தொண்ணூறுகளின் இறுதியில் அவர் தன் இருபதுகளின் பின்பருவத்தில் இருந்தாலும் ஒரு விடலைத்தனம் அவரைச் சூழ்ந்திருந்தது. அவரது உற்ற நண்பர்களாக அண்மை வீட்டு பள்ளிச் சிறுவர்கள் இருந்தார்கள். அவர்களுடன் பாலியலும், கவிதையும் உரையாடி ஒரு வட்டம் வைத்திருந்தார். கல்யாணமாகி, வேலை கிடைத்து நட இப்போது இறுகி இருந்தார். ஹெச்.ஜி ரசூலை சந்திக்க முடியாமல் போனது. அடுத்த நாள் என்.டி ராஜ்குமாரை சந்தித்தேன். என்.டியிடம் ஒரு முக்கிய குணாம்சம் அவர் எப்போதுமே உணர்ச்சிகரமாக பேசக் கூடியவர். அறிவார்ந்த சொற்களை தேடித் தேடி கோர்க்க முயல மாட்டார். எழுத்தாள உரையாடல்களில் வாழ்க்கை ஞானத்தை உதிர்க்க வேண்டிய தருணங்கள் எப்போதும் வரும். அப்போது எல்லாம் என்.டி இதழ் அலர்ந்த புன்னகையுடன் மௌனிப்பார். இதனால் என்.டியிடம் பேசுவது ஏதாவது ஒருவித மன-எழுச்சியை தந்தபடியே இருக்கும். பெரும்பாலும் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதில் அவருக்கு விருப்பம் உண்டு. ஆனால் கேட்போருக்கு எண்ணங்களால் திணிக்கப்படும் உணர்வு ஏற்படாது. காரணம் அவரது உணர்ச்சிகரம். அந்தக் கண்களில் துளியும் தந்திரம் தென்படாது. அவரது சுயத்தில் எப்போது இருக்கும் கண்ணீரின், அன்பின் வெம்மை நமக்கு மிக நெருக்கமானதாக படும். மேலும் அவர் அடிப்படையில் ஒரு கவிஞனோ அறிவுஜீவியோ அல்ல ஒரு கவிதைப் பாடகன். இசையின் நெகிழ்ச்சி அவர் குரலில் எப்போதும் தொற்றியபடி உள்ளது. என்.டியிடம் நான் சந்திக்கும் போதெல்லாம் ஏதாவது புகார் இருக்கும். இம்முறை கலை இலக்கிய பெருமன்றத்தின் அதிகார போட்டி பற்றி விசனித்தார். ரெண்டாயிரத்துக்கு பிறகு மன்றம் முக்கியமான படைப்பாளிகளை அறிமுகப்படுத்தாதற்கு இதுவே காரணம் என்றார். குறிப்பாக உயிர் எழுத்தில் ஹெச்.ஜி ரசூல் தலித் கவிதை பற்றி எழுதிய கவிதையில் தன்னை போதுமான அளவுக்கு பிரதிநுத்துவப்படுத்த இல்லை என்று வருத்தம் தெரிவித்தார். இந்த ஏமாற்றம் அவருக்கு மன்றத்தின் பிற பெரியண்ணாக்களின் மீதும் உள்ளது. தான் அமைப்பு-ரீதியாக புறக்கணிக்கப்படுவதான வருத்தம் என்.டிக்கு பத்து வருடங்களுக்கு மேலாக நீடிப்பதில் வியப்பில்லை. குமார செல்வாவுக்கு பிறகு மன்றத்தில் உருவாகி வந்த ஒரு அசலான, திறமையான படைப்பாளி ராஜ்குமார். அது அவருக்கு தெரிகிறது என்பது தான் பிரச்சனை. ஒரு அமைப்புக்குள் தாக்குபிடிக்க ஒரு அசலான படைப்பாளி தன்னை சராசரியாக காட்டிக் கொள்ள வேண்டும். அல்லது அவனைச் சுற்றி அமைப்பை எழுப்ப வேண்டும். இரண்டும் நிகழாத போது உரசல்கள் ஏற்பட்டபடியே இருக்கும். இப்படியான சுயபிரக்ஞை உள்ள ஆளுமைகளை கொண்டுள்ள ஒரு அமைப்பு சாத்தானையோ கடவுளையோ நேரில் தரிசித்த பாதிரியாரைப் போல் நெருக்கடிக்கு உள்ளாகும். க-இ பெருமன்றத்துக்குள் சீனியர்கள் தன்னை ஒழித்துக் கட்ட முயன்றதாக என்.டி சில முறை பெயர்களை குறிப்பிட்ட விரிவாக பேசினார். யாருக்கும் அவர் மீது தனிப்பட்ட காழ்ப்பு இல்லை என்று எனக்கு தோன்றியது. என்.டி அல்லது அவரைப் போன்ற எந்த ஒரு நெடிதுயர்ந்த படைப்பாளியின் ஈகோவையும் ஒரு வாசகன் அல்லது நண்பனால் மட்டுமே ரசிக்க முடியும். மன்றத்தின் கருப்பை அவரை உந்தி வெளித்தள்ளுகிறது. கடந்த பத்தாண்டுகளாக அவரது வெளியேற்றம் சுமூகமாக நடக்கவில்லை. மறைமுகமான ஒரு அக்கப்போர் தொடர்ந்து நடக்கிறது. ஆனால் பார்வதிபுரம்-சென்னை பஸ் ரூட்டை விட கண்ணியமாகவும் தனிப்பட்ட காழ்ப்புகள் இன்றியும் இந்த உரசல் அதனளவில் கிராமியப் பண்பாட்டுடன் நடந்து வருவதை கவனிக்க வேண்டும். கலைக்காத சதுரங்கப் பலகையின் காயகளை போல் இம்மனிதர்கள் இன்னும் இடம் பெயராமலே இருப்பது மேலும் சுவாரஸ்யம்.
எல்லா நண்பர்களின்/உறவினர்களின் வீடுகளிலும் எனக்கு குடும்பப் பொறுப்பாளர்களின் கண்டிப்பும் எரிச்சலும் அகநெருக்கடியை ஏற்படுத்தின. குடும்பத் தலைவிகளை பார்த்த உடனே இருக்கையில் நெளிந்தபடி துள்ளி விடுவேன். ஆனால் என்.டியின் வீட்டில் அவரது மனைவியை சமன்செய்ய அவரது அம்மா இருக்கிறார். கசப்பான விசயங்களை சொல்லும் போது அம்முகத்தில் சிரிப்பு முழுக்க வறண்டிருக்காது. அவ்வீட்டில் அவரும் என்.டியும் ஒருவகை. உற்சாகத்தின் ஊற்றுகள். என்.டியின் பெண் குழந்தை கொள்ளை அழகு. பக்கத்து வீட்டுக்காரர்கள் சதா கவர்ந்து சென்று விடுகிறார்கள். மனுஷ்யபுத்திரனை சந்தித்து சந்தித்து குழந்தைகளை பார்த்தவுடன் அன்னியர் முன்னிலையில் கூட தயங்காமல் அள்ளியெடுத்து கொஞ்சாத என்.டி, நட போன்ற கிராமத்து அப்பாக்கள் வினோதமாக பட்டார்கள்.
மரபை மீறாதபடி, நகரத்து இலக்கிய ஆகிருதிகள் பற்றின ஊகங்களையும் வதந்திகளையும் ஊர்க்காரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். இம்முறை என்னிடம் கலைஞரின் மும்முனை இலக்கிய தளபதிகள் கனிமொழி, தமிழச்சி மற்றும் மனுஷ்யபுத்திரன் என்றனர். அதிலும் மனுஷ்யபுத்திரனுக்கு எம்.எல்.சி பதவி கிடைக்கப் போவது உறுதி என்றனர். கனிமொழிக்கும் ம.புவுக்கு பழைய நெருக்கம் இல்லையே என்றேன். இல்லை ... ஒரு காலத்தில் கனிமொழி பத்து கோடி ரூபாயை மனுஷ்யபுத்திரனிடம் தந்து வைத்திருந்தார். அவர்களின் நட்பும், தி.மு.க உறவும் அப்படித்தான் உறுதிப்பட்டது என்றார் நான் நட.சிவகுமார் வீட்டில் இருக்கும் போது ஒருவர் வேலை இடமாறுதலுக்காக தமிழச்சியிடம் பரிந்துரை செய்யுமாறு போனில் அவரை நச்சரித்துக் கொண்டிருந்தார். மற்றொரு நண்பர் மேற்சொன்ன மும்முனை தமிழச்சி-இமையம்-ரவிக்குமார் என்றார். தமிழச்சியிடம் நேரடியாக கேட்டால் எனக்கு அரசு வேலை உத்தரவாதம் என்று அடித்து சொன்னார். பரிச்சயமில்லை என்றேன். மனுஷ்யபுத்திரன் மூலம் முயலச் சொன்னார். கூச்சமாக இருக்கிறது என்று சமாளித்தேன். சாருவிடம் கேட்கலாமே என்றார். சாருவிடம் எதையும் கேட்கும் தைரியம் எனக்கு இருக்கிறது. ஆனால் வேலை பரிந்துரையை விட சிறப்பான இனிமையான காரியங்கள் அவை.
பெங்களூருக்கு திரும்பி இருந்த நான்கு நாட்களில் பல நண்பர்களை காண விரும்பினேன். தமிழவனை சந்திக்க உத்தேசித்தேன். போனில் அழைத்த போது சென்னைக்கு வரும் வெளியூர்க்காரர்களிடம் நான் வழமையாக சொல்வது போல் ஆட்டோ கட்டணம் பற்றி எச்சரித்தார். பொதுவான ஒரு உபசரிப்பு முறை இது. பிக்பசாரில் சந்தித்து அங்குள்ள உணவகத்தில் பழரசம் குடித்தபடியும், பின்னர் தொடர்ச்சியாய் அங்கேயே மதிய உணவருந்தியபடியும் அவருடன் பேசிய மூன்று மணிநேரங்கள் அருமையானவை.
நவீனத்துவம் பற்றி பேசும் போது தமிழில் நகுலனையும் நாகராஜனையும் தவிர வேறு யாரிடமும் அசலான நவீன நுண்ணுணர்வு இல்லை என்றார். எனக்கும் சற்றே ஒத்த எண்ணம் இருந்துள்ளது. தமிழின் பிராமண நவீனத்துவம் மரபை கராறாக பரிசீலிக்கவில்லை. உதாரணமாக டூப்ளினர்ஸ் தொகுப்பில் ஜேம்ஸ் ஜாய்ஸ் ஓரினச் சேர்க்கையாளரான ஒரு பாதிரியாரின் வாழ்வை கத்தோலிக்க பின்னணியில் இருந்து நுட்பமாக, தயக்கமின்றி அலசும் “The Sisters” போன்ற ஒரு முயற்சி இங்கு பெரிதும் நடைபெற இல்லை. மேற்கில் கிறித்துவத்தை உரையில் நீட்சேவோ, ரஸலோ, கவிதையில் டெட் ஹியூக்ஸ் போன்றவர்களோ கராறாக பரீலித்தது போல் நம்மவர்கள் இந்து மரபை நேரிடவில்லை. உதாரணமாக, நீலபத்மநாபனை போல் தெய்வ பக்தியை பத்தாம்பசலித்தனமாக முன்வைக்கும் ஒரு முக்கியமான எழுத்தாளனை மேற்கத்திய மரபில் காட்ட முடியாது. இத்தனைக்கும் அவர்கள் கிறித்துவம் போன்ற ஒரு இறுக்கமான மத இயக்கத்தின் விழுமியங்களுடன் இடையறாது மோதி வளர்ந்திருக்கிறார்கள். இந்த பார்வையை தமிழவன் ஏற்றுக் கொண்டார். சு.ரா போன்றவர்கள் மாற்றுத் தரப்புடன் உரையாட தயங்கியதாக அவர் சொன்னார். க.நாசுவிடம் போல் தன்னால் சு.ராவிடமோ அவரது பள்ளியை சார்ந்தவர்களிடமோ ஒன்றி உரையாட முடிந்ததில்லை என்றார். தமிழவனிடம் ஒரு இலக்கிய வரலாற்று திறனாய்வு ஒழுங்கு ஓடிக் கொண்டிருக்கிறது. பிரதிகளையும் ஆளுமைகளையும் அப்படித்தான் புரிய விழைகிறார். சு.ராவின் ஒரே அசலான நவீனத்துவ படைப்பு “ஜெ.ஜெ சில குறிப்புகள் என்றார். காரணம் அது காலத்தின், சூழலின் வெளிப்பாடு; ஒரு இடைவெளிக்கு பிறகு திரும்பின சு.ரா தன்னை பாதித்த கலாச்சார போக்குக்கு செய்த எதிர்வினை. ஜெ.ஜெ ஒரு மோசமான படைப்பு என்றாலும் தமிழவன் அதன் வரலாறுச் சிறப்பை இங்கு குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொண்டேன். ஜப்பானிய நவீன கவிதையுடன் ஒப்பிடுகையில் நவீன தமிழ் கவிதை ஒருவித ஆர்ப்பாட்டத்தன்மையும், மிகை அழுத்தமும் கொண்டதாக படுவதாக அவரிடம் சொன்னேன். அதற்கு கலாச்சாரம் காரணம் என்றார். ஜப்பானியரின் ஒழுங்கமைதி மத-தத்துவ மரபின் நீட்சியில் திரண்டது. தமிழர்களுக்கு கவிதை என்றால் கோழிக் குஞ்சுக்கு வண்னமடித்து திரியவிடுவது போல் மற்றொன்றாக மாற்றி விடும் ஒரு நடைமுறை உள்ளது என்றார். ஒரு மொழியின் இலக்கியத்தை சரியாக புரிந்து கொண்டு மதிப்பிட மற்றொரு மொழியின் இலக்கிய பரிச்சயம் அவசியம் என்றும் மீண்டும் வலியுறுத்தினார். கர்நாடகாவில் நவீனத்துவம் மேலும் வலிமையாக காத்திரமாக உருவாகி இருப்பதாகவும் அதற்கு காரணம் ஆங்கில இலக்கிய மாணவர்கள் மூலம் அது அறிமுகமாகி வளர்ந்ததே என்றார். இப்படியான ஒரு வரலாற்று பார்வையில் தமிழின் இலக்கிய தத்துவ எழுச்சிகளை ஆய்வதற்கு நிறைய சாத்தியங்கள் இருப்பதாகவும், அதை யாரும் கவனிக்க இல்லை என்றும் விசனித்தார். பேச்சு அவரது உயிரோசை கட்டுரைகளின் பால் திரும்பியது. தன்னை ஒரு முக்கியமான தருணத்தில் மிகுந்த சுதந்திரத்துடன் ஈழப் பிரச்சனை பற்றி எழுத தூண்டி வாய்ப்பளித்தததாக அவர் மனுஷ்யபுத்திரனைப் பற்றி குறிப்பிட்டார். “மனுஷ்யபுத்திரனுக்கு எழுத்தாளர்களுக்கு உள்ளிருக்கும் சிறப்பான திறமையை வெளிக்கொண்டு வர, புது எழுத்தாளர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கான பிரத்யேக திறமை உள்ளது. இது ஒரு முக்கியமான விசயம். இங்கிருந்து உரையாடல் மனுஷ்ய்புத்திரனின் கவிதைகள் நோக்கி சென்றது. ம.பு வின் அனைத்து கவிதைத் தொகுப்புகளையும் ஒருசேர படித்து வருவதாக கூறினார். மனுஷ்யபுத்திரனின் சாரமாக பெர்ஷிய, இஸ்லாமிய சூபி குரல் ஒலிப்பதாக அவர் சொன்னது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முகலாய கலாச்சார வாழ்வின் ஒரு ஏக்கமும் மன்றாடலும் அவரது கவிதையின் மைய தொனி என்றார். இதை தமிழவன் உதாரணங்கள் கொண்டு நிறுவ முயலவில்லை. நான் ம.புவிடம் முழுமையான ஒரு சமகால ஆளுமையை காண்கிறேன் என்றதற்கு தமிழவன் ம.புவின் கவிதைகளை ஒருசேர வாசித்து விட்டு மனதுக்குள் அவற்றின் தொனி ஏற்படுத்தும் அதிர்வை கவனிக்க சொன்னார். இலக்கிய மோஸ்தர்களின் முக்கியத்துவம் பற்றி தமிழவன் முன்வைத்த அவதானிப்பு சுவாரஸ்யமானது. மோஸ்தர்களினால் தூண்டப்பட்ட ஒரு எழுத்தாளனையோ சிந்தனையாளனையோ படிக்க/ அல்லது படிப்பதாய் பாவனை செய்ய ஆரம்பிக்கும் வாசகன் பின்னால் சிறந்த சிந்தனையாளனாக முதிர வாய்ப்புள்ளது என்றார். மோஸ்தர்கள் இன்றி இது சாத்தியப்படாது.
தமிழவன் அவரது எழுத்தைப் போலவே நேரிலும் ஒரு no-nonsense உரையாடல்காரர். அவதூறுகளை கிளறுவதையும், சர்ச்சைகளை வளர்ப்பதையும் கராறாக தவிர்க்கிறார். தன்னைப் பற்றின அவதூறுகளை குறிப்பிடும் போதும் ஜோக் கேட்டது போல் சிரிக்கிறார். உரையாடலின் போது ஒரு பக்கம் அவரது அவதானிப்புகளையும் கூர்மையான, உணர்ச்சி பாசாங்கற்ற வரலாற்று தர்க்க ஒழுங்கையும் தனிப்பட்டு கவனிப்பது சுவாரஸ்யமானது. பின்னர் அவரது வீட்டு நூலகத்தை பார்வையிட்டேன். எழுத்தையும், ஆளுமையையும் போன்றே நூலகமும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.. இலக்கியம், தத்துவம், கலாச்சாரம் ஆகிய துறை நூல்களில் மிகச் சிறந்தவற்றை மட்டுமே அடுக்கி இருந்தார். ஒரு காலத்தில் பிரம்மராஜன், சு.ரா போன்றவர்கள் மிகுந்த பாதிப்படைந்து மொழிபெயர்த்த பெங்குவின் பதிப்பதகத்தின் ஐரோப்பிய கவிஞர்கள் வரிசை நூல்களில் அனைத்தையும் கொண்டிருந்தார். அதைப் போன்றே Fontana Modern Masters என்கிற அறிமுக நூல்களின் வரிசையிலும் பல முக்கிய புத்தகங்களை வைத்திருந்தார். பல நூல்களின் தலைப்புகளை குறித்துக் கொண்டேன். வேறு பல எழுத்தாளர்கள், ஆய்வாளர்களின் நூலகங்களில் தூசு போல் தானாக வந்தடைந்த பல நூல்கள் இருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் தமிழவனின் நூலகம் நன்கு திருத்தப்பட்ட ஒரு தோட்டம். பிடிக்காத/தேவையற்ற புத்தகங்களை அடுத்தவர்களிடம் கொடுத்து விடுவேன் என்றார். கிளம்பும் போது அவரிடம் புத்தகம் ஒன்று கேட்க வேண்டும் என்ற யோசனையை மாற்றிக் கொண்டேன்.
Read More

சில கேள்விகள்: மகிழ்ச்சி விழைவும் பக்தியும்





டீக்கடையில் ஒட்டுக் கேட்டதில் ஒரு குடும்ப விசாரணை உரையாடல். கொஞ்சம் ஆரோக்யமான இடைவெளியுடன் இந்திய பாணியில் கராறாக குடும்பம் பற்றி மட்டுமேயான, அக்கறையும், கவலைகளும், புகார்களும், யோசனைகளும் கலந்த, ஒரு உரையாடல் – நாற்பதைத் தொடும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும்.
ஆண் எனக்கு தெரிந்தவர். மளிகைக் கடைக்கும் ரிலையன்ஸ் ஷாப்பிங் மாலுக்கும் இடைப்பட்ட ஒரு அரை இருட்டு ஸ்டோரில் இருக்கிறார். பேரிளம் பெண் தூக்கில் டீ வாங்க வந்தவர். ஆண் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக நோய் வாய்ப்படுவது பற்றி நொந்தபடி “நான் மட்டும் கல்லு கணக்கா இருக்கேன்” என்றார் மேலெழுந்த விழிகளுடன். ஒவ்வொரு குழந்தைக்காய் சிகிச்சை, பள்ளிச் செலவு என்று ஆயிரம் ஆயிரமாய் கையை விட்டு போனது பற்றி வருந்திக் கொண்டு, ஒரு கட்டத்துக்கு மேல் செலவு சமாளிக்க முடியாத கையாலாகாத உணர்வை வியப்புடன் முகத்தில் காட்டினார். பணத்தில் இருந்து பேச்சு ஒழுக்கத்துக்கு திரும்பியது.
பெண்ணின் கணவன் தொழில்முறை குடிகாரர். அவரை மலைக்கு அனுப்ப முயற்சி நடக்கிறது. “நேத்து கூட அண்ணனைப் பார்த்தேன். செம போதையில் இருந்தாரு”. பெண் அலுத்துக் கொண்டார் “மலைக்கு போறதுக்கு ஒரு மாசமாவது சுத்தமா விரதம் இருக்க வேண்டாமா? அவரை எப்படி புரிய வைக்க போறேனோ”
“ஒரு மாசத்துக்கு மிதமா குடிச்சா பரவாயில்ல. யாருதான் உலகத்துல பெரிசா யோக்கியம் சொல்லுங்க. கொஞ்சம் கண்டுரோல் பண்ணட்டும். அது போதும் விரதம் முடிச்சு மலை ஏறீடலாம்”
பெண் ஆமோதித்தார். மலை சீசன் விவரங்கள் பேசிக் கொண்டனர்.
ஒட்டுக் கேட்ட தகவல்களை வைத்துப் பார்க்க சில வியப்புகள் ஏற்பட்டன. பொருளாதார நெருக்கடியும், தொடர்ச்சியான பற்றாக்குறையும் வாழ்க்கையை இருட்டாக்குகின்றன. அதுவும் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையில் வாழ்க்கை மேலும் கசக்கும். எத்தனையோ மனிதர்கள் இப்படி வாலையும் தலையையும் இழுத்து ஒட்ட வைக்கும் இழுப்பறியில் வாழ்க்கையை நீட்டித்து செல்கிறோம். எதற்கு? ஏதோ கொஞ்சம் எதிர்பார்ப்பும், மகிழ்ச்சியும் மீதமிருப்பதாலா? நிறைய மகிழ்ச்சியை கொண்டு வாழ்வது தான் அன்றாட உய்வின் லட்சியம் என்ற எண்ணம் பொய். மகிழ்ச்சி மிகச் சன்னமாக அங்கங்கே விரவி உள்ளது. எண்ணற்ற குழப்பங்களுக்கும், கச்சப்புகளுக்கும் இடையே அதைத் தேடி அடைவது வாழ்வு. இன்பம் விழைதலே உயிரின் ஒவ்வொரு செயலையும் இயக்கும் தூண்டுதல் என்பது உண்மைதான். ஆனால், சுவாரஸ்யமாக, இன்பத்தை அள்ளி அள்ளி பெறுவது அவசியமோ சாத்தியமோ அல்ல.
அடுத்து, கடுமையான வாழ்வியல் ஏமாற்றங்களுக்கு மத்தியில் பக்திக்கு இருக்கும் மதிப்பு. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத எந்த ஒரு அமைப்பின் மீதும் ஒரு கட்டத்தில் வெறுப்பு வரும்; கேள்விகள் எழும். வாழ்வில் அடுக்கடுக்காக துயரங்கள் முகம் காட்ட மிகச் சிலரே வாழ்வின் மீது, விதியின் மீது, முடிவாக கடவுள் அல்லது சமூகத்தின் மீது கோபிக்கிறார்கள். பொதுமக்கள் இச்சந்தர்பத்தில் அதிக பக்தி கொண்டவர்களாக ஆகிறார்கள். துரதிஷ்டங்கள் மிக எளிதாக மூடநம்பிக்கைகளை வலுவாக்குகின்றன. மதமும், சடங்குகளும் கேள்விக்கு உள்ளாவதை விட ஆவேசமாக நாடப்படுகின்றன. ஒரு தொழில்முறை குடிகாரரை மலை ஏற்றி என்ன சாதிக்கப் போகிறார்கள்? அவர் தனதான முறையில் மகிழ்ச்சியை தேடி ஒரு சுற்றுப் பாதையை கண்டடைந்திருக்கிறார். டாஸ்மாக் போவது மலை ஏறுவது போல் ஒரு சடங்கு தான். ஆசுவாசம், தப்பித்தல் ஆகிய பதில்களைத் தாண்டி மக்கள் ஏன் சடங்குகளை, வழிவழியான நம்பிக்கைகளை வறுமையின் வெறுப்பில் கூட சந்தேகப்படுவதில்லை என்று வியப்பாக உள்ளது. ஒரே ஒரு காரணம் தான் படுகிறது: எதையெல்லாம் கேள்வி கேட்டு நொறுக்குகிறோமோ அதற்கு பதில் மற்றொன்றை உருவாக்க வேண்டி உள்ளது. அதற்கெல்லாம் எங்கே நேரம் சொல்லுங்கள்!
Read More

Saturday, 21 August 2010

மனுஷ்யபுத்திரன்: மனதிற்குள் சொற்களின் ஜெபமாலை



நேற்று ஒரு நண்பருடன் மனுஷ்யபுத்திரனை பார்ப்பதற்காக உயிர்மை சென்றிருந்தேன். நாள் பூரா நாங்கள் நகரத்தில் அலைந்திருந்தோம். உத்தேசமின்றி என்பதால் களைப்பில்லை. தொடர்ச்சியான தூறல்களால் நாள் பூரா பகல் பொழுது சாய்ந்திருந்தது. அடிக்கடி வழியை வேறு தொலைத்ததால் எதிர்பார்த்ததை விட தாமதமாகிக் கொண்டிருந்தது. அத்தனை தாமதமாக ஆறு மணிக்கு மேல் சென்று அவரை சந்திப்பது தொந்தரவாக இருக்குமோ என்று சஞ்சலப்பட்டேன். போன் செய்து இருப்பை உறுதி செய்ய் வேண்டாம் என்று நண்பர் வற்புறுத்தினார். “நமது இன்றைய நாள் இதுவரை அற்புதமாக இருந்தது. மனுஷ்யபுத்திரனை பார்த்துவிட்டால் நிறைவாகி விடும்” என்றார்.
உயிர்மை அலுவலகம் சேர்ந்ததும் மனுஷ் தன் குழந்தையுடன் வீட்டு முன்னறையில் இருப்பது பார்த்ததும் மேலும் தயங்கினேன். அலுவலக அறையில் அவர் எங்களை சந்தித்தார். கார்டூன் கலைஞர் பாபுஜி நோன்புக் கஞ்சியுடன் வந்து சேர்ந்து கொண்டார். அவரை ஒரு கார்டூன் கலைஞர் என்று நம்பவே சிரமமாக இருந்தது. ஒல்லியான தேகத்தில் உருளைக்கண்களுக்கு மேல் தடித்த கண்ணாடி, ஜுப்பா, கலைந்து ஒட்டின சன்னமான தாடி என்றேல்லாம் அவர் இல்லை. “உங்களைப் பார்க்க ஒரு கார்ப்பரேட் கம்பனி மானேஜர் போலிருக்கிறது” என்ற போது “மிகச்சரியாக சொன்னீர்கள்” என்றார் மனுஷ். பாபுஜி தான் நிஜமாகவே கார்ப்பரேட் மேலாளர் தான் என்றார். பாபுஜி மிகப் பணிவானவராக இருந்தார். இடுப்புக்கு கீழ் வெகுநேரம் நெளிந்து விட்டு நான் எழுந்து ”இதோ வந்து விடுகிறேன்” என்று கிளம்பிய போது “என்னால் உங்கள் உரையாடல் தடைபட வேண்டாம். நான் இதோ போய் விடுகிறேன்” என்றார் பாபுஜி. “இல்லை இல்லை” என்று மேலும் நெளிந்து விட்டு “மூச்சா போக வேண்டும்” என்று விளக்கிய பிறகு தான் ஒத்துக் கொண்டார். எதிரில் பேசுபவரின் ஒவ்வொரு வாக்கிய முடிவையும் திரும்பச் சொல்லும் பழக்கம் பாபுஜிக்கு இருந்தது. அது சுவாரஸ்யமாக இருந்தது. உம் கொட்டுவது போல தலையாட்டுவது போல இதுவும் ஒரு சைகை. பாபுஜியிடம் பேசும் போது நாம் என்ன சொல்ல வந்தோம் என்பதை மறப்பது சாத்தியமே இல்லை.

மனுஷ்  ஒத்திசைவான மனநிலையில் இருக்கும் போது மிக நகைச்சுவையாக பேசக் கூடியவர். அதற்கு உடற் களைப்பு ஒரு தடையாகவே இருப்பதில்லை. ஒரு முறை கடுமையான ஜுரத்தில் படுத்திருந்த போது மூன்று மணிநேரங்களுக்கு மேல் என்னிடம் சிரிக்க சிரிக்க பேசினார். பேச்சினிடையே மிகக் கூர்மையான அவதானிப்புகளும் வருத்தம் தோய்ந்த அறிக்கை சொடுக்கல்களும் வரும். நேற்றைய உரையாடலும் அப்படி நீண்ட சிறப்பான ஒன்றாக இருந்தது. நேரத்தை கணிப்பது அவ்வளவு சிரமமாக இருந்தது. பத்து மணிக்கும் எங்களுக்கு அவரை விட்டு பிரிய தயக்கமாக இருந்தது. எங்கள் சம்பாஷணை மிக இயல்பான முறையில் ஒரு பறவை இறகை உதிர்ப்பது போல் பாதியில் முடிந்தது, பார்வையை துண்டித்து முனைமுறிந்த வார்த்தைகளுடன் கிளம்பினோம்.

மனுஷ் அந்த மூன்றரை மணிநேரங்களில் பேசியவற்றை ஒரு சின்ன தொகுப்பாக வெளியிடலாம்: எழுத்து வாசிப்பு கலாச்சாரம் என்ற மையத்தை ஒட்டி அத்தனை விரிவான பன்முக கருத்துக்கள். எஸ்.ரா ஏன் அபுனைவு எழுதுகிறார், சொம்மொழி மாநாட்டைக் கொண்டு கலைஞர் செய்த ”சாதனை” என்ன, பின்னட்டை குறிப்புகளில் இருந்து இலக்கிய, அரசியல் களங்கள் வரை பயன்படுத்தப்படும் உள்ளீடற்ற சொல்லாடல்கள், விமர்சனங்களும், பத்திரிகை செய்ல்பாடுகளும் கேலிக்கூத்தாக மாறி விட்ட சூழல், இந்திய சூழலில் எழுத்தாளன் என்பவனுக்கு உருவாகும் நீதிபூர்வ பொறுப்புக்கும் சாரு-ஜெமோ பூசல் பற்றி வாசகர் புகார் சொல்வதற்குமான தொடர்பு என்று பேசப்பட்ட விசயங்களின் பட்டியல் சற்று நீண்டது. கவிதை உருவாக்கம் அல்லது மனநிலை பற்றி அவர் சொன்னதை மட்டும் இங்கு பதிவு செய்வது என் உத்தேசம்.

  • ஒரு முக்கியமான கவிதையை எழுத அகத்தூண்டலுடன் அறிவும் தேவை என்று அவர் நினைக்கிறார். உதாரணமாக வன்முறை பற்றி கவிதை எழுத வன்முறையின் வரலாற்று, உளவியல, பண்பாட்டு, சமூகவியல், மித்துகள் சார்ந்த ஒரு சிந்தனை ஓட்டம் எழுத்தாளனுக்குள் தொடர்ந்து இருப்பது நல்லது. மனது இப்படி  தொடர்ந்து தீவிரமாக இயக்கப்படும் போது ஒரு எதிர்பாரா தருணத்தில் கவிதை கைவரும். இந்த “தருணம்” நிகழ என்ன செய்ய வேண்டும்?
  • இதற்கு தொடர்ந்து சொற்களுடன், சொற்றொடர்களுடன் “இருக்க” வேண்டும் என்கிறார் மனுஷ். ஏதாவது ஒரு சொல் சட்டென்று படிமமாகி மேலெழுந்து வரலாம். கவிதை  ஆகலாம். இதை ஒரு அபோத நிலை என்று நான் புரிந்து கொள்கிறேன்.ஆனால் இது தி.மு.க மேடை போல் வார்த்தை சிலம்பாட்டம் அல்ல. ஒவ்வொரு கவிஞனும் அவனுக்கான முறையில் மொழியுடன் இப்படி அணுக்கமாக இருக்க முடியும். அல்லது இது மிக இயல்பாக எதேச்சையாக நடக்கலாம். ஆனால் மனுஷ் ஒரு கவிதையை ஒரு “தொழிலாக” கருத வேண்டும் என்று நம்புகிறார் என்பதை இங்கு நினைவுபடுத்த வேண்டும். பகுதிநேர, ஓய்வுக்கால கவிஞர்கள் மீது மனுஷுக்கு நம்பிக்கை இல்லை. ஒரு உடற்பயிற்சியாளன் உண்பதற்காக ஒவ்வொரு முட்டையை உடைப்பது போல் கவிஞன் வார்த்தைகளின் ஜெபமாலையை உருட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
  • எழுதுவது சில சமயம் உரத்து சிந்திப்பதாக இருக்கலாம். ஒரு உரையாடலைப் போல நாம் படித்ததை சிந்தித்தை எழுதிப் பார்க்கும் போது மேலும் தெளிவாக புரிய, யோசிக்காததை கண்டுபிடிக்க முடியும். எண்ணங்களை தீட்டி துலக்கி அடுக்குவதற்கான ஒரு புத்தாற்றலை எழுத்து இயக்கம் தருகிறது. பனிமூட்டமான மனதுக்குள் நெருப்பாய் துலங்குகிறது.
  • “பார்த்து கேட்ட உறுதி செய்யப்பட்ட உண்மையைத்தான் காட்ட வேண்டும் என்று அவசியமில்லை. சொல்லப் போனால் கற்பனை கலக்கப்பட்ட உண்மைதான் மேலும் நிஜமானது” என்று ஒரு ஐரோப்பிய திரைக்கதையாளரின் கருத்தை நண்பர் அன்று காலை உரையாடலின் போது எடுத்தாண்டார். மனுஷ் இதை வேறொரு கோணத்தில் சொன்னார். அதாவது எஸ்.ரா ஒரு குரங்காட்டியை பற்றி எழுதுகிறார் என்றால் அதில் தகவல்களை விட எஸ்.ரா மொழி மூலம் காட்டும் உண்மை தான் முக்கியம். தகவல்களை உருமாற்றத் தெரிந்தவன் மட்டும் தான் எழுத்தாளன்.
  • தீய நண்பர்களைப் போல தான் தொலைக்க விரும்புகிற சில விரும்பாத புத்தகங்கள் என்ன பண்ணியும் தன்னிடம் திரும்பத் திரும்ப வருவதாக மனுஷ் குறிப்பிட்ட போது ஒரு உவமையை  பயன்படுத்தினார்: ”தூக்கிக் கொண்டு போய் விட்டலும் திரும்ப வருகிற நாய்க்குட்டிகள்”. உரையாடலின் போது மிக சாதாரணமாக உதிர்ந்த இந்த உவமை “நீராலானது” தொகுப்பில் ஒரு கவிதையில் பயன்படுத்தப்பட்டு, மிகச் சிறந்த ஒரு நவீன உவமை என்று சுஜாதாவால் முன்னுரையில் பாராட்டப்பட்டது. நமக்கு மிகுந்த மனவெழுச்சியை தந்த ஒரு உவமை அது. அது மிக இயல்பாக அவரது தினசரி சொல்லாடலின் பகுதியாக இருக்கிறது. மொழி ரசவாதத்தின் இந்த பரிமாணம் எனக்கு வியப்பூட்டியது. 

போகும் வழியில் நானும் நண்பரும் ஒரு சின்னக் கடையில் தோசை சாப்பிட்ட்டோம். பிளாஸ்டிக் முக்காலிகளில் சாலையில் அமர்ந்திருந்த போது காலியான என் தட்டில் வானத்து தூறலில் இருந்து சில துளிகள் விழுந்தன. அன்றைய நாள் அப்படியாக என் தட்டில் விழுந்த ஒன்று தான் எனப் பட்டது. நண்பர் என்னை விட ஆறுவயது இளையவர். விடிகாலை குருவியைப் போன்று ஓய்வற்ற ஆளுமை. அன்று முழுக்க அவரது இளமை எனக்குள் உரசி ஒட்டியபடியே இருந்திருக்க வேண்டும். உடல் மற்றும் மனதில் நான் ஒரு புதுமையை உணர்ந்தேன். அவரை விட்டு பிரிந்த பிறகே அன்றைய நாளின் முதல் களைப்பை அறிந்தேன். நேற்றைய நாளை பின்னோட்டும் போது இப்படி சொல்லத் தோன்றுகிறது:
ஒரு நண்பனுடன் உத்தேசமின்றி ஊர் சுற்றுவது தான் அசலான பயணம். அதன் முடிவில், தெய்வத்திடம் உள்ள நம் கடன் அட்டையில் ஒரு நாள் கூடுகிறது.
Read More

Monday, 19 July 2010

விஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம்



விஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் நேற்று மேற்கு கே.கே நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் எனும் புத்தகக் கடையில் நடந்தது. தேர்ந்தவர்களுக்கே உரிய விமர்சன வட்டம் மற்றும் நூற்றுக்கணக்கானோர் கூடி இலக்கியப் பேச்சாளர்களை பாப்பையாவாகத் தூண்டும் பெருங் கூட்டத்துக்கும் மத்தியில் ஒரு புள்ளியில் இருந்தது இந்நிகழ்ச்சி. அதாவது பாப்பையாவுக்கும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் நடுவில். சுமார் இருபத்தைந்தில் இருந்து முப்பதுக்குள் இருப்பார்கள் பார்வையாளர்கள். இதை சரியாக கணிப்பது மிகவும் சிரமம். குறுக்கும் நெறுக்குமான எறும்பு சாரிகள் போல் கூட்டம் தொடர்ச்சியாக கலைந்து கூடிக் கொண்டிருந்தது. முதலில் கூத்துப்பட்டறையை சேர்ந்த தம்பிச்சோழன் சி.மோகன் மற்றும் ரமேஷ் பிரேதனின் கவிதைகளை நிகழ்த்திக் காட்டினார். பிறகு யவனிகா ஸ்ரீராம், ஐயப்ப மாதவன், தாரா கணேசன், பாக்கியம் சங்கர் ஆகியோருடன் நானும் பேசினேன்.

 நான் முதன்முதலாக பேசிய இலக்கியக் கூட்டம். மிகவும் பதற்றமாக கையைப் பிசைந்தபடி குறிப்புகளை மனதில் மேல் கீழாக அடுக்கி குழப்பிக் கொண்டிருந்தேன். முதலில் பேசின யவனிகாவின் பேச்சு அவ்வளவு பிரமாதம். “நவீன உலகின் ஒவ்வொரு பொருளும் பாலியல் வடிவம் கொண்டிருக்கின்றன” என்றார். எழுத்தாளன் பேசும் போது இப்படியான கூர்மையான அவதானிப்புகள் தாம் முக்கியம். யவனிகாவின் சிறப்பான பேச்சுக்கு பிறகு என் பதற்றம் அதிகரித்தது. அவருடன் ஒப்பிட்டால் நான் சொல்லி விடப் போகிறேன் என்ற பயம். நல்ல வேளை என்னை கடைசியாக பேச அழைத்தார்கள். தாரா கணேசன் பேசும் போதே மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டேன். சுருக்கமாக எளிமையாக பேசுவது என்று தீர்மானித்தேன். என்னை அழைத்ததும் மைக்கை தவிர்த்தேன். அந்த கூட்டத்தை ஒரு வகுப்பறையாக நினைத்து பேச ஆரம்பித்தேன். பேச்சு சிலருக்கு பிடித்திருந்ததாக சொன்னார்கள். யவனிகா கைகொடுத்து பாராட்டினார். அங்கீகரிக்க தயக்கமற்ற மனிதர். அவரிடம் ஒரு சொல் கூட அதுவரை நான் பேசி இருந்ததில்லை. களைத்துப் போன நிலையிலும் அவர் மட்டும் கடைசி வரை மேடையில் இருந்தார்.

மூன்று வருடங்களுக்கு பிறகு நண்பர் செல்வப்புவியரசை சந்தித்தேன். அதைப் போன்றே இணைய நண்பரான மாமல்லன் கார்த்தி, லக்கி லுக், அதிஷா, கேபிள் சங்கர் ஆகியோரின் சந்திப்பும். அதிஷாவின் எழுத்து போலே பார்த்ததும் அவரை எனக்கு பிடித்து போனது. மென்மையான குரல், மென்மையான சிரிப்பு, மென்மையான நக்கல் ... இப்படியே.

கூட்டம் முடிந்து தொடர்ந்து மழை பெய்தது. வெளியே கடை ஷட்டரில் சாய்ந்து காத்திருந்து அரட்டை அலசல் புலம்பல் என கழித்து பிறகு நனைந்த படியே புறப்பட்டு செல்வா மற்றும் மகேந்திரனுடன் இரவுணவு அருந்தினேன். சிரமமாக இருந்தாலும் அன்று மழை பெய்தது பிடித்திருந்தது. மழை மனிதர்களுக்குள் ஒரு அன்னியோன்யத்தை கொண்டு வந்து விடுகிறது. நகரத்தின் அழைப்புகளில் இருந்து சற்று நேரம் காப்பாற்றுகிறது.

விஜய் மகேந்திரனை எனக்கு அதற்கு முன் நேரில் பரிச்சயம் இல்லை. போனில் சில வார்த்தைகள் பேசி இருப்போம். என்னுடைய இது போன்ற ஒரு கூட்டப்பதிவை படித்து விட்டு அழைத்து பேசினார். அதற்கு பின்னர் சந்திக்க முயன்று நடக்கவில்லை. அடுத்து அவர் பேசினது கூட்டத்துக்கு அழைக்கத்தான். ஒருநாள் பரிச்சயத்தில் விஜய்யை இப்படி புரிகிறேன். கூர்மையானவர். மனிதர்களை நன்றாக கவனிக்கிறார். நட்பை பேணத் தெரிந்தவர். முக்கியமாக அவரிடம் நட்பு பாராட்டுவது சிக்கலற்றதாக இருக்கும் என்று ஊகிக்கிறேன். இந்த ஊகம் சரியாகவோ தவறாகவோ போகட்டும். அதுதானே சுவாரஸ்யம்.

சில நண்பர்களிடம் பேசியதில் நான் உயிர்மையில் இன்னும் பணி புரிவதாக நினைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இல்லை. கடுமையான முதுகுவலி காரணமாக உயிர்மையில் ஒரு மாதம் மட்டுமே என்னால் பணி செய்ய முடிந்தது. (இதை முன்னரே பிளாகில் அறிவித்திருக்க வேண்டும்). கல்லூரிப் பணி வேறு இருப்பதால் சமாளிக்க முடியவில்லை. மனுஷ்யபுத்திரன் நல்ல வேளை புரிந்து கொண்டார். ஜெயமோகன் எழுதியது போல் நான் காய்நகர்த்தி உயிர்மை ஆசிரியக் குழுவில் சேரவில்லை. அப்படி ஒரு உயர்வான அரசியல் நோக்கம் இருந்திருந்தால் ஒரு மாதத்தில் விட்டிருக்க மாட்டேன். வேறு சிலர் அப்போது நம்பியது போல் நான் ஊதியத்துக்காகவும் மனுஷ்யபுத்திரனை ஆதரித்து அக்கட்டுரைகளை எழுதவில்லை. இதுவரை நான் அவரிடம் எந்த பணத்தையும் எதிர்பார்க்கவோ பெற்றுக் கொண்டதோ இல்லை. அதை விட மேலான உதவிகளை எனக்கு செய்துள்ளார். அவரது ஊக்குவிப்பு இன்றி நான் உரை எழுதி இருக்க மாட்டேன். எழுத்துலகில் எனது சின்னஞ்சிறு இருப்புக்கு அவர் முக்கிய காரணம். இதை எல்லாம் சொல்வதற்கு இச்சந்தர்பத்தை பயன்படுத்துகிறேன். நான் என்றும் உயிர்மையில் தான் இருக்கிறேன். ஆனால் ஊழியனாக இல்லை.

இக்கூட்டத்தில் நான் பார்வையாளனாக கலந்து கொள்ளவில்லை என்பதால் மேலதிகமாக விமர்சிப்பது நியாயமாக இருக்காது. பார்வையாளர் யாராவது அதற்குரிய சுதந்திரத்துடன் கூட்டம் பற்றி எழுத வேண்டும். கண்ணாடி வீட்டுக்குள் இருந்தபடி நானதை செய்ய முடியாது.
Read More

Saturday, 8 May 2010

இருமல் மருந்தும் சுந்தர ராமசாமியின் பிம்பமும்



ஒரு நபரைப் பற்றி பலர் சொல்லிக் கேட்டு சிறுக சிறுக ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொள்வது ஒரு அலாதியான அனுபவம். பல சமயங்களில் திரிபுகளும், இடைசெருகல்களும் கொண்டிருந்தாலும் இந்த சித்திரம் தரும் கற்பனையின் கிளர்ச்சி அபாரமானது. ஒருவரை நேரில் தெரிந்து கொள்வது இப்படி பெயிண்டை உதறி சித்திரம் தீட்டுவது போல் பல்வேறு வாய்களில் இருந்து பொறுக்கி அகவய சித்திரத்தை உருவாக்குவதில் இருந்து வேறுபட்டது.

என்னோடு பணிபுரியும் நண்பர் குமார் சுந்தர ராமசாமியை அவரது வீட்டில் சென்று பார்த்திருக்கிறார். சு.ராவின் “புளியமரத்தின் கதை” நாவலில் தன் முனைவர் ஆய்வை மேற்கொண்டிருந்த ஒரு பார்வையற்ற ஆய்வாளருக்கு சு.ராவிடம் பேட்டி காண தேவை இருந்ததால் குமார் உடன் சென்றிருக்கிறார். ஆய்வாளர் ஒரு தீப்பொறி இடதுசாரி. “சக்கிலியர்களை இந்த நாவலில் நீங்கள் எப்படி கேவலப்படுத்தலாம்?” என்று துழாவும் கண்களுடன் கேள்விகளை எறிந்திருக்கிறார். சு.ராவின் முகத்தில் தீப்பிழம்பு எழுந்து வந்ததாய் குமார் சொல்கிறார். அவர் தாடியை வருடியவாறே தன் வேலைக்காரியை அழைக்கிறார். வந்தவரிடம் “இருமல் மருந்து கொண்டுவாம்மா” என்கிறார். ஒரு கோப்பையில் ஊற்றி கொண்டு வருகிறார். சு.ரா அதை சுவைத்தபடியே மேற்கொண்டு பேசுகிறார். குமார் அப்போது பொருளாதார சுயசார்பற்ற கல்லூரி இளைஞர். எழுத்தாளர்கள் கல்லூரி இளைஞர்களை நெருடல் தோன்றாத வண்ணம் உபசரிக்க வேண்டும் என்ற வலுவான எண்ணம் கொண்டிருந்தவர். உதாரணமாக, சோபாசக்தி இந்தியா வந்திருந்தபோது பார்க்க சென்றிருந்த குமார் மற்றும் அவர் நண்பர் குழாமை அவர் நன்றாகவே டாஸ்மாக்கில் உபசரித்திருக்கிறார். இரவு வரை குளிப்பாட்டி பின் சட்டை பாக்கெட்டில் 100 ரூபாய் நோட்டுகள் திணித்து, திரும்ப பயணத்திற்கு வாகனம் கூட ஏற்பாடு செய்திருக்கிறார். மிச்சமான காசில் குமார் & கோ பிரியாணி தின்றிருக்கிறார்கள். இப்படியான விருந்தோம்பலில் குளிர்ந்து தமிழ் எழுத்தாளர்கள் குறித்த கற்பனாவாத மனக்கிளர்ச்சி கொண்டிருந்த குமாருக்கு சு.ரா தனக்கு தண்ணீர் காட்டியபடி இருமல் மருந்து குடித்ததில் கடும் அதிர்ச்சி. காரணம் அது இருமல் மருந்தல்ல. விஸ்கி. பார்வையற்ற நண்பர் வேறு இடையிடையே “ஏதோ வாசம் வருகிறதே” என்று முணுமுணுக்க அவரை சமாதானம் செய்ய வேண்டி வருகிறது. சு.ரா ஒரு பதிவிசுக்கு கூட “சாப்பிடுறீங்களா” என்று கேட்க மாட்டேன் என்கிறார். தங்களை லாலிபாப் வயதினராக உத்தேசித்து அவர் தன்னை மட்டும் வளர்ந்தவராக காட்டிக் கொள்வதாக குமாருக்கு மேலும் கடுப்பு.

ஜெயமோகனின் “சு.ரா நினைவின் நதியில்” படித்திருக்கிறேன். ஜெ.மோ சு.ரா மது அருந்து பழக்கும் கொண்டிருந்தது தனக்கு மிக ஆச்சரியமான வகையில் எதேச்சையாக தெரிய வந்ததை குறிப்பிடுகிறார். அவரின் சு.ரா வசீகரமானவர்; மனவலிமையும், கூர்மையான அங்கதமும் கொண்டவர். சாமர்த்தியமான உரையாடல்காரர். நான் சு.ராவை தொண்ணூறுகளின் இறுதிகளில் அடிக்கடி சந்தித்திருக்கிறேன். நான் நேரடியாக அவதானித்தவை குறித்த மற்றொரு சந்தர்பத்தில் சொல்கிறேன். பிரமிளின் புகார்களையும் கேள்விப்பட்டிருக்கிறேன். மொத்தமாக சு.ரா பற்றி கிடைக்கும் சித்திரத்தில் எத்தனை முரண்படும் வண்ணங்கள். அவற்றில் இதுதான் தனிப்பட்டு நிற்பது.

சு.ரா மறைந்த நாள் நான் மாலைமலர் பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். சேதி அறிந்ததும் நெஞ்சடைத்துப் போய் “சார் சுந்தர ராமசாமி இறந்து போயிட்டாராம்” என்று என் தலைமை ஆசிரியரிடம் ஒரு உள்தூண்டலில் கூவி விட்டேன். அவர் மழுங்கின முகத்துடன், மேலும் வெறுப்பாக, “யாருங்க அவரு” என்றார்.
Read More

Friday, 7 May 2010

இசை விபத்துக்கள்



திருவனந்தபுரத்தில் வேலை பார்த்து பெங்களூருக்கு நண்பர்களுடன் ரெண்டு நாட்கள் பீரடிக்க வந்துள்ள நண்பன் சபரிநாத் இன்று காலையில் அழைத்து “உன் இசைப்பயிற்சி எல்லாம் எப்படி போகிறது” என்று கேட்க விக்கித்து விட்டேன். காரணம் கேள்வியின் அக்கறையற்ற இலக்கணப் பிழையும் அதனுள்ளோடும் கவித்துவமும்.

நான் ஆறுவருட இடைவேளைகளில் இரண்டு தடவை இசை கற்க முயன்றேன். முதலில், பதினாறாவது வயதில் எங்களூரில் பிரபலமாக இருந்த பாட்டுவாத்தியார் பட்டம்மாளிடம் சென்றேன். பட்டம்மாள் உருண்டையாய் சிவப்பாய் தோற்றம் கொண்டவர். பட்டம்மாளுக்கு இரண்டு அழகான பெண்கள். ஒரு முஞ்சூறு மகன். மகன் என் வகுப்புத் தோழன். முக்கியமாய் பட்டம்மாளின் கணவன் என் கணக்கு டியூசன் வாத்தியார். கணக்கு வகுப்புகளுக்கு அடிக்கடி மட்டம் போடுவேன். குறிப்பாய் அவர் பரிட்சை வைக்கும் போதெல்லாம். ஆனால் பட்டம்மாளின் இசைவகுப்புக்கு சரியாக சென்று விடுவேன். நான் பாடும் போது வேதாளம் அடிக்கடி முருங்கைமரம் ஏறும் என்றாலும் பட்டம்மாளுக்கு என் இசைஆர்வம் பிடித்திருந்தது. எனக்கு உதவி செய்வதற்கு என்பது போல் கூடப் பாடும் பட்டம்மாளின் மகள் மேலும் மோசமாய் கொசு அடித்தபடியே பாடுவான். ஆனால் ஒருநாள் எதிர்பாராமல் பட்டம்மாளின் கணவன் என் வீட்டில் போட்டுக் கொடுத்துவிட்டார். என் மட்டம் போடும் குட்டு வெளிப்பட்டது. ஆனால் அதனால் கவலை இல்லை. பாட்டுவாத்தியாருக்கு இது குடும்பப் பிரச்சனையாக ஆரோகணிக்கும் பட்டதால் இசைவகுப்பை நிறுத்திக் கொண்டேன். அடுத்து எம்.சி.சியில் முதுகலையின் போது ஜெபசீலன் என்றொரு நண்பன் கீபோர்டில் ”அஞ்சலி அஞ்சலி” (டூயட்) பாடல் இசைக்க கற்றுத் தந்தான். ஒரு இரவு முழுக்க அதை பயின்றபடி இருந்தேன். ஜெபசீலன் பற்றி மேலும்: குள்ளமாய் மாநிறமான தோற்றம். ரொம்ப பணிவாய் எல்லோரிடமும் குழைவான். ஆனால் யாரையும் மதிக்க மாட்டான். மிக அரிதாக்வே ஊருக்கு உதவுவது. ஆனாலும் மிகச்சரியான நேரத்தில் உதவி செய்து அனைவரிடமும் நற்பெயர் பெறத் தெரிந்தவன். விடுதியில் அவனை எல்லோருக்கும் பிடிக்கும். இத்தனைக்கும் பெரும்பாலும் விடுதியில் தங்க மாட்டான். பிரமாதமாய் கீபோர்டு இசைப்பான். என்னை விட மூன்று வயது சின்னவன் என்றாலும் என்னை டேய் என்று விளிக்க ஆரம்பித்ததால் அவனிடம் கற்பதை நிறுத்திக் கொண்டேன். எப்போது என்ன செய்வான் என்று எதிர்பார்க்க முடியாது. சும்மா ஊர்சுற்றுவதற்கு என்று வளைத்த 12ஆம் வகுப்பு பெண்ணை ஒருநாள் நிஜமாகவே இழுத்துக் கொண்டு ஓடி விட்டான். இளங்கலை இரண்டாம் வருடம் படிக்கும் போதே திருமணம்.(காஞ்சீபுரக்காரர்களுக்கு: இந்த ஜெபசீலனை எதாவது கச்சேரிகளில் சந்திக்க நேர்ந்தால் எனக்கு தகவல் தரவும்.)

ஒரு முழுஆயுசில் ஒரு கலை மட்டுமே பயில வேண்டும் என்பது கப்சா. உலகில் பல துறைகளில் கலக்கும் எத்தனையோ கலைஞர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக மேற்குலகில் எழுத்தாளர்களில் இருந்து விஞ்ஞானிகள் வரை குறைந்த பட்ச இசைப்பயிற்சியுடனே இருக்கிறார்கள். இது ஒரு கலாச்சாரம் சம்மந்தப்பட்ட சமாச்சாரம். நமது கலாச்சாரத்தில் கிறித்துவர்கள் சிறுவயதில் இருந்தே தேவாலய இசையுடன் பரிச்சயம் பண்ணி கிட்டார் அல்லது கீபோர்டு வாசிப்பவர்களாக இருக்கிறார்கள். எம்.சி.சியில் சிங்கி என்றறிப்படும் மிசோரம், மணிப்பூர் மாநிலப் பையன்களின் அறைகளில் நிச்சயம் ஒரு கிட்டார் சாத்தி வைக்கப்படிருக்கும். இந்துக்களில் பிராமணர்களுடன் இசை முடங்கி விட்டது ஒரு துர்பாக்கியமே. இளம் வயதில் இருந்தே கலாச்சார ரீதியாக அறிமுகமாகும் எந்த கலையையும் பயில்வது எளிதாகி விடுகிறது.

சின்ன வயதில் பயின்ற திறமைகளை வளர்ந்த பின் கைவிடும் எத்தனையோ பேரை பார்க்கிறோம். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எனக்கு பிடித்தது நாவலாசிரியர் ஸ்டீபன் கிங்கின் கூற்று. அவரது மகனுக்கு திடீரென்று டிரம்ஸ் வாசிக்க ஆர்வம் வருகிறது. கருவி வாங்கிக் கொடுத்து ஆசிரியரும் நியமிக்கிறார். சில மாதங்கள் வீடே முழங்குகிறது. பிறகு மெல்ல மெல்ல இசைக்கருவி தூங்குகிறது; பையன் டிரம்ஸ் பக்கம் செல்வதை தவிர்க்கிறான். ஸ்டீபன் மகனை கண்டிக்கவோ வற்புறுத்தவோ இல்லை. அவன் டிரம்ஸுக்காக பிறக்கவில்லை. அது ஒரு தற்காலிக ஆர்வம் மட்டுமே. அவன் தனது திறமையை தேடிக் கொண்டிருக்கிறான். அதுவாக ஒருநாள அவனை தேடி வரும் என்று சமாதானம் கொள்கிறார். இப்படியான முயற்சிகள் காலவிரயமா? வெறும் ஆர்வக்கோளாறா?அசட்டுத்தனமான ஆற்றல் விரயமா?

இந்த கேள்விகள் அன்றாட-வாழ்க்கை மேம்பாட்டுக்கான பயிற்சிகளுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு கலைக்காக கடுகு தாளிக்க்கும் போது நம் ஆன்மா கண் விழிக்கிறது என்று பொருள். சிலருக்குள் அது முழுக்க திறந்து பார்க்கிறது. பலருக்கு கண் சிமிட்டி மீண்டும் தூங்கி விடுகிறது. ஸ்டீபன் கிங் இந்த கலை விழிப்பை எழுத்தாற்றலோடு ஒப்பிடுகிறார். அவரை பொறுத்தவரையில் உலகில் கல்வியறிவு உள்ள அனைவருக்கும் எழுத முடியும். பலர் ஆண்டுக்கணக்காய் முயல்கிறார்கள். ஆனால் மிகச்சிலரே எழுத்தாளர்கள் ஆகிறார்கள். ஆனால் இந்த முயற்சிகளில் நாம் பெறும் சின்னச் சின்ன அகவயமான திறப்புகள் வாழ்வின் ஒளி மிகுந்த தருணங்கள். மொத்தமாய் அறுபது எழுபது வருடங்களில் கிடைக்காத மனஎழுச்சி இந்த சின்ன அனுபவங்களில் தாம் கிடைக்கின்றன.

கைவரும் திறன் என்னவென்று முன்கூட்டியே தெரியாத போது கிடைக்கின்ற கற்களையெல்லாம் உரசிப்பார்த்தால் என்ன? கிடைத்தால் ஒளி, போனால் ...
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates