Friday, 7 December 2012

எல்.ஐ.சியும் ஊனக் கட்டணமும்



கடந்த முறை உடல்நலமில்லாமல் போன போது மருத்துவமனை செலவு லட்சங்களைத் தொட்டதால் இவ்வருடம் ஒரு உடல்நலக் காப்பீடு எடுக்கலாம் என எல்.ஐ.சியை அணுகினேன். முப்பது வயதைத் தொட்டுள்ளதால் (நெஞ்சு எக்ஸ்ரே! உள்ளிட்ட) பல பரிசோதனைகளை பண்ணிக் கொள்ள வேண்டும் என்றார்கள். பொறுமையாக ஒவ்வொன்றாக முடித்து அத்தனை ஆவணங்களும் பணமும் செலுத்திய பின்னும் காப்பீடு அட்டை தாமதமாகி வந்தது.
ஒருநாள் முகவர் போனில் அழைத்து நீங்கள் வருடம் கூடுதலாக 12,000 செலுத்த வேண்டும் என்றார்கள். விசாரித்ததில் அவர் ஒரு விநோதமான காரணம் சொன்னார். எனக்கு கால் ஊனம் என்பதால் கூடுதல் பிரீமியம் தொகை கட்ட வேண்டும் என்று ஒரு சட்டம் இருக்கிறது என்றார். எனக்கு இதன் பின்னுள்ள தர்க்கமே புரியவில்லை.
நாளை எனக்கு வயிற்றுப்போக்கோ காய்ச்சலோ வந்து அட்மிட் ஆனால் அதற்கும் என் கால் ஊனத்துக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது? கால் ஊனம் இல்லாதவர்களுக்கு இந்த நோயெல்லாம் வராதா? நான் ஆஸ்பத்திரியில் சேர்வதற்கு உள்ள எல்லா சாத்தியக்கூறுகளும் ஊனமில்லாத பிறர்க்கும் உரித்தானதே! நான் முகவரிடம் காப்பீட்டை திரும்பப் பெற்றுக் கொள்வதாய் கூறினேன். மூன்று காரணங்கள்.
ஒன்று இந்த விதிமுறை அதர்க்கமாக உள்ளது. இதை எந்த படிப்பறிவுள்ள சுயசிந்தனை உள்ள மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது மிக ஆபத்தான தர்க்கமும் கூட. நாளை சேரியில் வசிக்கும் அல்லது குறைவான பொருளாதார நிலையில் உள்ள ஒரு பிற்படுத்தப்பட்டவர் அவரது உடல்நலத்துக்கு சீர்கேடு வர சாத்தியம் என்பதால் கூடுதல் கட்டணம் தேவை என்று கேட்கலாம். அதைப் போன்றே ஐடி போன்று அதிக மன அழுத்தம் ஏற்படுத்தும் வேலையில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு வர சாத்தியம் அதிகம் என்று அவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்கலாம். என்னவொரு அபத்தம்!
இரண்டு, இது அநியாயமாக உள்ளது. சம்மந்தமில்லாத ஒரு உடல் பிரச்சனைக்காக நான் 12,000 அதிகம் செலுத்த நிர்பந்திப்பது ஒருவித மறைமுகக் கொள்ளை.
மூன்றாவதாக, இப்படி ஊனக் கட்டணம் வசூலிப்பதன் வழியாக அரசாங்கம் என்னைச் சிறுமைப்படுத்தவும் உடற் குறைபாட்டை என் அடையாளமாக ஸ்தாபிக்கவும் முயல்கிறது. நான் என்பவன் இந்த கால் ஊனத்தினால் ஆனவன் அல்ல. அது எனக்கு தெளிவாகவே தெரியும். சொல்லப்போனால் இந்த சமூகத்தில் உள்ள 1% நுண்ணுணர்வுள்ள படைப்பூக்கமும் அறிவும் கொண்ட மனிதர்களில் நானும் ஒருவன். என்னை இந்த பண்புகளால் அடையாளப்படுத்தவே விரும்புவேன். அது தான் உண்மையும். அதில் நான் பெருமையும் அடைகிறேன். அதனால் தான் நிச்சயமாக கூடுதல் பணத்தை செலுத்த முடியாது என மறுத்து விட்டேன். இது பணம் சம்மந்தமான பிரச்சனை அல்ல; என் கொள்கைப் பிரச்சனை. நான் என் நம்பிக்கைகளின் படி நிற்கிறேன்.
கார்கில் நிதி, பூகம்ப நிதி போன்ற ஏதாவது ஒரு நிதிக்காக அரசாங்கம் என்னிடம் மாதம் 12,000 கேட்கட்டும். கொடுத்து விட்டுப் போகிறேன். ஆனால் என் காலை முன்னிட்டு ஐந்து காசு கூட தர மாட்டேன். நான் ஒரு எழுத்தாளனாகவும் பேராசிரியனாகவும் இரட்டிப்பு வேலை செய்கிறவன். தினமும் நான் எழுதுவதற்கு இந்த சமூகம் எனக்கு காலணா கூட தந்ததில்லை. சொல்லப்போனால் இந்த சமூகம் தான் எனக்கு பணம் தர வேண்டும்; நான் சமூகத்துக்கு அல்ல.
இப்படியான அபத்த சட்டங்களை இயற்றி வலியுறுத்துபவர்கள் எந்த வித பண்பாட்டு நடைமுறை சமூக அறிவோ அற்ற அரசு அதிகாரிகள் என அறிவேன். இந்தியா போன்று அறிவியல் அறிவு வெறும் வேலைக்கான உபகரணமாக பயன்படுத்தப்படும் ஒரு நாட்டில் இதற்கு மேல் மக்கள் தர்க்கரீதியாக சிந்திப்பார்கள் என எதிர்பார்க்கவும் முடியாது. நாம் மனிதர்களாகப் பண்பட இன்னும் சில நூறு வருடங்கள் ஆகும் என்பதையே இது காட்டுகிறது. ஏனென்று சொல்கிறேன்.
அமெரிக்காவில் உள்ள நலக் காப்பீட்டு விதிகள் ஒருவருக்கு நீரிழிவு, மாரடைப்பு போன்ற வியாதிகள் இருந்தால் கூட ஏற்றுக் கொண்டு பொருளாதார பாதுகாப்பு தரும். இந்தியாவில் எந்த நோயோ குறைபாடோ இல்லாதவர்களுக்கு மட்டும் தான் காப்பீடு. அவர்களுக்கு எதற்கு காப்பீடு என்கிறேன். அமெரிக்காவில் இந்த முற்போக்கான காப்பீட்டை கொண்டு வந்த ஒபாமாவை பாராட்டும் படியாக Obama Care என்று இதை சிலாகித்த மக்கள் அவரை மீண்டும் ஜனாதிபதியாக்கினார்கள். நம்மூர் மக்களுக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து என்ன தேவை என்கிற தெளிவே இல்லை. தேர்தலுக்கு முந்தின சில மாதங்களில் அவர்களின் மனநிலை விலைவாசி நிலையை பொறுத்து எப்படி அமைகிறதோ அதுவும், சாதி மத ஓட்டுக்களின் விகிதமும் மாநில-தேசியக் கட்சிகளின் பணப் பேரங்களின் வீச்சும் வெற்றியை தீர்மானிக்கின்றன. முக்கியமாக, அமெரிக்காவில் சிரமப்படும் பிற்படுத்தப்படும் மக்களின் நலனை முன்னோக்கி சட்டங்கள் இயற்றப்படுவதை கவனியுங்கள். நம்மூரில் என்றால் ஒருவன் சிரமப்படுகிறான் என்றால் அது அவன் விதி; போன ஜன்மத்தில் பாவம் பண்ணியிருப்பான். அதனால் நலமாக இருப்பவர்களை மட்டும் கவனிப்போம் என்றே சிந்திப்பார்கள். இதைத் தான் பண்படாத காட்டுமிராண்டி மனநிலை என்கிறேன்.
உலகில் உள்ள ஒவ்வொரு இனத்துக்கும் கடவுள் ஒரு உடல் தோற்ற அடையாளத்தை கொடுத்திருக்கிறான். சிலருக்கு சப்பை மூக்கு, சிலர் அட்டைக்கறுப்பு என. இந்தியர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு வாலைக் கொடுத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். நமக்கு அது மட்டும் தான் இப்போதைக்கு ஒரே குறை.
Share This

12 comments :

  1. எல் ஐ சி காப்பீடை தொழிலாக செய்யும் பொதுத்துறை நிறுவனம்.காப்பீட்டின் அடிப்படை தத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள்.இன்சூரன்ஸ் என்ற சேவையின் விலை ஒவொருவருக்கும் வேறுபடும் . வாங்குபவரின் வயது,உடல்நிலை ,தொழில்,குடும்ப வரலாறு ,தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பொறுத்து மாறுபடும்.
    உதாரணமாக ஒரு தீ விபத்து ஏற்படுகிறது என்று வைத்துக்கொண்டால் நல்ல உடல் நிலையில் உள்ளவர் ஓடி தப்பித்து கொள்ளமுடியும்.ஊனமுற்றவர் எளிதாக ஓடமுடியாது.ஆபத்து நிகழ வாய்ப்பு அதிகம்.இருவருக்கும் ஒரே விலையில் இன்சூரன்ஸ் வழங்கினால் ஊனமுற்றவரினால் காப்பீட்டு நிறுவனம் நஷ்டம் அடைய வாய்ப்பு அதிகம்.
    மாற்று திறனாளிகளுக்கு அரசாங்கம் மூலம் இலவச திட்டங்கள் நிறைய உள்ளது. அங்கே தான் நீங்கள் எதிர்பார்க்கும் சேவை கிடைக்கும். எல் ஐ சி உள்பட எல்லா காப்பீட்டு நிறுவனங்களும் வணிக நிறுவனங்களே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.நல்ல உடற்கட்டை கொண்டுள்ளவர்களுக்கு நஷ்டத்தை திணிக்க முடியாது.
    நீங்கள் அதிகப்படி விலையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

    ReplyDelete
  2. அப்படியென்றால் எல்.ஐ.சி அது போன்ற சூழல்களை குறிப்பிட்டு அவற்றின் போது மட்டும் மறுக்கலாம். ஆனால் தீவிபத்தெல்லாம் மிக மிக அரிது. பெரும்பாலும் நான் இந்த காப்பீட்டை ஜுரம், உள்ளுறுப்பு சம்மந்தப்பட்ட உபாதைகளுக்காகத் தான் பயன்படுத்தப் போகிறேன். எல்.ஐ.சியே ஒரு ஆய்வு செய்து பார்த்தால் பெரும்பாலானோர் அப்படித் தான் பெரும்பயன்படுத்தவதை அறியலாம். இது ஒரு அபத்தமான தர்க்கம்.
    நீங்கள் சொல்லுகிறபடி லாபம் தான் முக்கியம் என்றால் அமெரிக்காவில் இப்போது எப்படி நீரிழிவு போன்ற வியாதி உள்ளவர்களுக்கு கூட காப்பீடு அரசு தருகிறது?

    ReplyDelete
  3. நஷ்டங்களை பகிர்ந்து கொள்வதே இன்சூரன்ஸ். இந்த உண்மை சரியாக புரிந்தவர்கள் இன்சூரன்ஸ் எடுப்பதையே யோசிப்பார்கள். லாபம் கொழிக்கும் உன்னத தொழில் இன்சூரன்ஸ். இதில் கம்பெனிக்கும் ஏஜெண்டுகளும் சம்பாதிக்கலாம். இன்சூரன்ஸ் போடுபவர்களுக்கு பட்டை நாமம்தான். கம்பெனியாக பார்த்து நம் காசிலேயே பிச்சை போட்டால் உண்டு.

    ReplyDelete
  4. // ஐடி போன்று அதிக மன அழுத்தம் ஏற்படுத்தும் வேலையில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு வர சாத்தியம் அதிகம் என்று அவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்கலாம். என்னவொரு அபத்தம்/// உங்கள் மனநிலை புரிகிறது நண்பரே. ஆனால் இதில் எந்த அபத்தமும் இல்லை . இன்ஸ்யூரன்ஸ் என்பது ஒரு சிக்கலான financial product . அதன் அடிப்படை விதிகள் இப்படி அமைவதன் மூலமே நட்டம் இன்றி செயல்படுவதும் எண்ணற்றோருக்கு சேவை செய்வதும் சாத்தியமாகிறது.

    //அப்படியென்றால் எல்.ஐ.சி அது போன்ற சூழல்களை குறிப்பிட்டு அவற்றின் போது மட்டும் மறுக்கலாம்.// ஒவ்வொரு வகை குறைபாட்டிற்கும் பொருந்தக் கூடிய சூழல்களை நிர்ணயித்து ப்ரீமியம் கணக்கிடுவது சாத்தியமில்லாதது இப்போதிருக்கும் காப்பீட்டு வரையறைகளே சிக்கலானவை.

    // அமெரிக்காவில் உள்ள நலக் காப்பீட்டு விதிகள் ஒருவருக்கு நீரிழிவு, மாரடைப்பு போன்ற வியாதிகள் இருந்தால் கூட ஏற்றுக் கொண்டு பொருளாதார பாதுகாப்பு தரும் // ஆனால் அதற்கான ப்ரீமியம் ஆரோக்கியமான நபருக்கானதை விட அதிகமாகவே இருக்கும்.

    // இந்த சமூகத்தில் உள்ள 1% நுண்ணுணர்வுள்ள படைப்பூக்கமும் அறிவும் கொண்ட மனிதர்களில் நானும் ஒருவன். என்னை இந்த பண்புகளால் அடையாளப்படுத்தவே விரும்புவேன். // அடிப்படைத் தேவைகள் குறித்துப் பேசுகையில் எதற்கு நண்பரே இந்த உயர்வு மனப்பான்மை.? மனிதர்களிடையே பிறப்பின் அடிப்படையில் மட்டுமன்றி intellectual capacity அடிப்படையிலும் ஏற்றத் தாழ்வு வேண்டாமே ..!

    ReplyDelete
  5. //ஊனமுற்றவர் எளிதாக ஓடமுடியாது.ஆபத்து நிகழ வாய்ப்பு அதிகம்.// அபத்தம். உடல் பருமன் உள்ளவர்களால் கூட ஓட முடியாது. ஏன், ஓடி டச் விட்டுப் போனால் கூட ஓட முடியாது. அப்படிப் பார்த்தால் நம் நாட்டில் பலருக்கு உடல் வருத்தி ஓடியாடி உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை. அவர்கள் யாருக்குமே காப்பீடு கிடையாது என்று சொல்ல வேண்டியதுதான்.

    ReplyDelete
  6. முக்கியமான பிரச்சினையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறீர்கள் அபிலாஷ். இந்த நவீன யுகத்திலும் இவ்வளவு அபத்தமான விதியொன்று இருக்க முடியுமா என்று வியப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  7. நண்பா ,

    உங்கள் மனத்தாங்கள் புரிகிறது .
    ஒரு சராசரி இந்தியன் எப்போதும் அமெரிக்க அரசை சார்ந்து வாழ்கிறான் .
    இருப்பது இந்தியா என்றாலும் வாஷிங்டன் வாழ்க்கை தேவை .

    முதலில் இன்சுரான்சின் அடிப்படை பற்றி புரிந்து கொள்ளுங்கள்.

    நல்ல உடல் நலம் + பிரிமியம் கட்ட தேவையான அளவு வருமானம் இரண்டையும் கொண்டுதான் பாலிசி தரப்படுகிறது
    . ஒருவர் பெரும் கோடிஸ்வரர் ஆக இருந்தாலும் ராகுல் காந்தி என்றாலும் மேற்கண்ட நிபந்தனிகள் கண்டிப்புடன் பொருந்தும்.


    1. நீங்கள் ஹெஅழ்த் இன்சூரன்ஸ் பற்றி பேசுகிறீர்கள் என நினைக்கிறேன் .
    2.நீங்கள் பல லட்சங்களை மருதுவதீர்க்காக செலவு செய்த பின் காப்பீடு கோருகீர்கள்.
    3.நீங்கள் பல லட்சங்களை செலவு செய்த பின் அடுத்து ஒரு இடர் வரலாம் என நீனைத்து ஒரு முன் பாதுகாப்பை ஏற் படுத்த தயார் அகீர்ர்கள்.அதாவது லட்சங்களை சேமிக்க.
    4.இதே பாலிசி நீங்கள் நல்ல உடல் நிலையில் இருந்த பொது கேட்டிருப்பின் கண்டிப்பாக 12000 அதிகபடியன் premium கட்ட தேவை இல்லை.
    5.நல்ல உடல் நிலையல் உள்ளவருக்கான அடிப்படை premium தான் முதலில் வகுக்கபடுகிறது.
    6.அதன் பின் சமூகத்தில் உள்ள 1% முதல் 100./. வரை உள்ள மற்ற மக்களுக்காக பிரிமியம் வகுக்கபடுகிறது.நீங்கள் அதன் அடிபடையில் ஏற்கனவே உள்ள மெடிக்கல் ரிபோர்ட்ஸ் படிதான் பிரிமியம் கேட்க்க பட்டு உள்ளது.
    தேவை எனில் நீங்கள் உங்கள் உடல் நலம் பற்றி
    செகண்ட் ஒபினியன் ஒரு டாக்டர் இடம் கலந்து பேச வேண்டிய அளவில் ஏதோ ஒரு குறை உள்ளது என நினைக்கிறேன்.
    ஏன் எனில் l i c பிரிமியம் பிக்ஸ் செய்வது என்பது வேறு ஒரு டாக்டர் இடம் உங்கள் ரிபோர்ட் கொடுக்க பட்டு அதன் அடிபடியல் lic தீர்மானிக்கிறது.
    7 நம் வீட்டில் பிறந்த பெண்னை திருமணம் செய்து கொடுக்கும்போது எவ்வளவு யோசிப்போம்.
    அவளின் பிற்கால வாழ்வு நன்றாக இருக்கவேண்டும் என்ற கோணத்தில் எவ்வளவு விசாரிப்புகள்.தேடலாக இருக்கும் .அதே போல்தான் ஒவ்வொரு பாலிசி தரும்போதும் இருக்கும்.

    8.12000 பிரிமியம் அதிகம் கட்டி எடுக்கும் பொது அடுத்து கிளைம் இல் பிரச்னை இருக்காது.
    9.அனால் நாம் விவரமாக piraivate இன்சூரன்ஸ் போய் பாலிசி எடுத்து விடுவோம்.ஆனால் கிளைம் பண்ணும் பொது தான் கச்சேரி ஆரம்பம் ஆகும்.
    நீங்கள்

    தினமும் நான் எழுதுவதற்கு இந்த சமூகம் எனக்கு காலணா கூட தந்ததில்லை. சொல்லப்போனால் இந்த சமூகம் தான் எனக்கு பணம் தர வேண்டும்; நான் சமூகத்துக்கு அல்ல.
    கார்கில் நிதி, பூகம்ப நிதி போன்ற ஏதாவது ஒரு நிதிக்காக அரசாங்கம் என்னிடம் மாதம் 12,000 கேட்கட்டும். கொடுத்து விட்டுப் போகிறேன்.

    ( கேட்டால்தான் தரக்கூடிய நிகழ்வுகளா இவை. எழுத்தாளனாகவும் பேராசிரியனாகவும் இரட்டிப்பு வேலை செய்கிற நீங்கள் எழுத கூடிய வார்த்தைகள் அல்ல இவை.)
    என்று எழுதி உள்ள வரிகளில் உங்க சமூக அக்கறை தெரிகிறது.
    இந்தியர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு வாலைக் கொடுத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். நமக்கு அது மட்டும் தான் இப்போதைக்கு ஒரே குறை.

    தயவு செய்து இது போன்று இந்தியனை இழிவு படுத்தாதீர்கள்.

    உங்கள் பாலிசிக்காக அடுத்தவர் பணத்தை தர இயலாது.
    கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைக்க முடியாது.

    கல்லூரன் கூறியது போல்.l i c ஒரு சமூக அக்கறை உள்ள வணிக நிறுவனம்.

    அடுத்தவர் பணத்தை கொண்டு ஓடும் ஈமு கோழி அல்ல...

    நான் எழுதியதில்( எழுத்தில்) நிறைய தவறுகள் உள்ளன.ஆனால் கூறியதில் உண்மை மட்டுமே உள்ளது .

    இதற்க்கு நீங்கள் என்ன பதில் எழுதினாலும் வரவேற்ப்பு உண்டு .

    வாதத்திற்கு மருந்து உண்டு பிவாதத்திற்கு அல்ல...

    ReplyDelete
  8. I have been following abilashs’ writing for quite some time and I do have a great respect for his essays. I am a great admirer of his perception and the details in his writings. I do wonder always why his writings are not appreciated widely and to come to such conclusion the only available measure is the ‘comments and reactions count ‘. Unfortunately, this particular article attracted wider readers and that too just challenge him personally. I claim Abilash is right by all means and I doubt whether this debate has any moral. Shame on you guys,
    Siraj

    ReplyDelete
  9. நன்றி சிராஜ் நவாஸ்

    ReplyDelete
  10. QWERTY
    நீங்கள் எல்.ஐ.சி விதிமுறையை பேசுகிறீர்கள். அதாவது பொதுவாக மருத்துவ நிலை பற்றி. ஒருவருக்கு ரத்த அழுத்தம் இருந்தால் எல்.ஐ.சி கூடுதல் பணம் வசூலிக்கலாம். ஏனென்றால் அதனால் அவரது மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புண்டு. ஆனால் எனக்குள்ளது இடது காலில் வாதம். நான் தினமும் மூன்று மணிநேரம் நின்று வேலை செய்கிறவன். வண்டி ஓட்டுகிறேன். எனது வீடு மூன்றாவது மாடியில் உள்ளது. தினமும் மூன்று மாடிகள் ஏறுகிறேன். இதையெல்லாம் செய்யும் போது கால் சரியாக உள்ளவர்களுக்கே ரொம்ப சிரமமாக உள்ளதாக என்னிடம் கூறுகிறார்கள். ஆக ஒரு காலில் வாதம் இருப்பதனால் என் வாழ்வோ உடல்நிலையோ முழுக்க அப்நார்மல் அல்ல.

    அடுத்து அப்படி அப்நார்மலாக இருந்தாலும் அது எப்படி எனக்கு நோய் உண்டாக்கவோ ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலையை உண்டாக்கும் என புரியவில்லை. கடந்த முறை எனக்கு ஜுரம் வந்தது. அதனால் தான் செலவானது. அதே ஜுரம் உங்களுக்கும் வரலாம். காலுக்கும் அதற்கும் சம்மந்தமில்லை. காலுக்கு சம்மந்தமில்லாத ஓராயிரம் வியாதிகளை என்னால் பட்டியலிட முடியும். என் கால் இதுவரை எந்தவித உபாதையையும் ஏற்படுத்தியதில்லை.

    அவ்வாறே எல்.ஐ.சி என் கால் வாதத்தினால் எனக்கு காயமேற்படக் கூடும் எனக் கருதினால் அதற்கான செலவுகளுக்கு மட்டும் எனக்கு பணம் தர வேண்டியதில்லை. இது எவ்வளவு எளிதானது.

    இதே எல்.ஐ.சி எந்தெந்த சிகிச்சைகளுக்கு எல்லாம் பணம் தராது என்றொரு நீண்ட பட்டியலை தருகிறது. அதில் ஊனமுற்றவர்களுக்கு அவர்களின் குறிப்பிட்ட உறுப்பு சார்ந்த செலவுகளுக்கு பணம் தரப்பட மாட்டாது எனச் சொல்லட்டுமே! எனக்கு மாறுபட்ட கருத்திருக்காது.

    ஆனால் இந்த விதிமுறை முழுக்க அபத்தமாக அதர்க்கமாக உள்ளது.

    ReplyDelete
  11. அபிலாஷ் க்கு ஒரு வேண்டுகோள் .. நீங்களும் உங்கள் வாதத்தை ஆமோதிக்கும் நண்பர்களும் காப்பீட்டின் அடிப்படையை இன்னும் புரியாதவர்களாக இருக்கிறீர்கள் ...
    இந்தியாவில் இன்சூரன்ஸ் முகவராக நடத்தப்படும் IRDA தேர்வுக்கு இன்சூரன்ஸ் institute வெளியிட்டுள்ள IC -33 புத்தகத்தை வாங்கி ஒருமுறை வாசித்துவிட்டு உங்களை தெளிவு படுத்திகொள்ளுங்கள்.யாருடைய வாதம் அதர்க்கம் என்று பிறகு சொல்லுங்கள்.

    ReplyDelete
  12. கல்லூரான் நாங்கள் இந்த விசயத்தை அறம் சார்ந்த ஒன்றாகப் பார்க்கிறோம். ஒர் அரசு நிறுவனம் முழுக்க பணநோக்கோடும் இயங்கக் கூடாது.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates