ஒரு கொலையை ஆதரிக்க
நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல நேர்கிறது!
ஒரு கொலைக்கு
உண்மையில்
துரோகம் செய்வதில் இருந்து
குருதி இழைப்பது வரை
ஒரு களங்கமின்மை, தூய்மை, கனிவு உள்ளது
வன்முறையில் அடிப்படையில் உள்ளது
ஒருவித அன்பு தான்
வன்முறை
அன்பின்
துருபிடித்த ஆயுதமொன்றின் வாசனையும் நிறமும் படைத்த
மொழிதான்
குருதி சிந்துபவரை
உறுப்புகளை நறுக்குபவரை
மனித வலியை ரசிப்பவரை
சதையை சிதைத்து தீக்கிரையாக்குபவரை
கழுத்தில் இட்டு முறுக்கும் கயிறை கவனமாய் சோதிப்பவரை
பாதுகாவலரை தூக்குக்கைதியின் பாதுகாவலரை
இறுதி ஆசையை நிறைவேற்றுவோர், இறுதிக் கவலைக்கு பொறுப்பாகுவோர்
இறுதி நிமிடம் வரை உயிரை தக்க வைக்க உழைப்பவர்
இறுதி நிமிடத்துக்குப் பின்னான இல்லாத எதிர்காலத்தை
மீளமீள
ஸ்வீகரித்து புனைவுகளில் நம்பிக்கைகளில் துர்கனவுகளில்
பத்திரப்படுத்துவோரை
விட
அக்கோலையை செய்கிற அரசை விட
அரசின் குரலில் பேசும் அதிகார எந்திரம், மீடியாவை விட
ஒரு மனிதனின் கொலையை
நியாயப்படுத்த அப்படி தத்தளிப்போர் ஆவேசப்படுவோர்
தம் தர்க்கத்தில் விடாமல் அதை நிகழ்த்திக் கொண்டிருப்போர்
பிணத்தின் குருதியைக் கண்டு அஞ்சுபவர்
கொலையை வெறுப்பவர் மறுப்பவர்
அதனை எப்படியெல்லாம் ஆதரிப்பது என
கனவு காண்பது தான்
துக்கத்திற்கு உரியது.
கொல்லப்பட்டவன்
கோடானுகோடி மனங்களில்
இருப்பது போல்
எதார்த்தத்தில் இருப்பதில்லை
அவன் கோடானுகோடி முறை கொல்லப்படும் போது
ஆயிரம் ஆயிரம் மொழிகளில்
பேசுகிறான்
அழுது இறைஞ்சி குமுறி கண்ணீர் சிந்துகிறான்
அல்லது மொழியற்றவனாக
எதையும் ஏற்றுக் கொள்பவனாக இருக்கிறான்
கொல்லப்படுபவனுக்கு
கோடானுகோடி முகபாவங்களும் குணாதசியங்களும் மனநிலைகளும்
உருவாகின்றன
கொல்லப்படுபவனை
உங்கள் நியாயத்திற்கு வளைக்கும் போது
அவன் கோடானுகோடி முறை கொல்லப்பட்டவாறே
இருக்கிறான்.
அவன் துர்விதி
நம் கடவுளர்களின்
முடிவுறாத பிறப்புகளின் வாதையை ஒத்தது.
ஒரு மனிதனை
சட்டப்படி கொன்று
அவனை
உங்கள் நாட்டின் கோடானுகோடி கடவுளர்களில்
ஒருவர் ஆக்குகிறீர்கள்.
நறுக்கென்று இருக்கிறது...
ReplyDelete