Showing posts with label அறிந்ததும் அறியாததும். Show all posts
Showing posts with label அறிந்ததும் அறியாததும். Show all posts

Sunday, 29 December 2013

தீமையும் திறமையும்: சலீம் கௌஸும் மோகன்லாலும்



மோகன்லாலின் முக்கிய படமாக அறியப்படுகிற, எம்.டி திரைக்கதை எழுதி, பரதன் இயக்கிய தாழ்வாரம்பார்த்த போது ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அது வில்லனாக வரும் சலீம் கௌஸின் நடிப்பு.
கௌஸின் ராஜு என்கிற பாத்திரம் சுவாரஸ்யமான ஒன்று. அவன் தீமையின் உருவம் ஒன்றும் அல்ல. அவனுடைய ஒரே பிரச்சனை அறவுணர்வோ குற்றம் செய்யும் தயக்கமோ இல்லை என்பது. அச்சமும் ஆசையும் அவனை தொடர்ந்து பிடித்தாட்டுகிறது. கொலைகள் செய்ய வைக்கிறது. அங்கங்கே வரும் சிறு சிறு வசனங்கள் மூலம் அவனை புரிந்து கொள்கிறோம்.


 ஒரு கள்ளக்காதலியை காணப் போகும் போது அங்கே எதிர்பாராமல் அவள் கணவன் இருக்க ஒரு பயத்தில் ராஜு அவனை குத்தி விடுகிறான். அது போன்றே போலீசிடம் இருந்து தப்பித்து ஊர் ஊராய் ஓடி பின்னர் தன் நண்பனான பாலனிடம் (மோகன்லால்) திரும்ப தஞ்சம் கோருகிறான். அப்போது அவன் கெஞ்சி தன் அவல நிலையை விளக்கும் இடங்களில் கௌஸ் அற்புதமாக நடித்திருக்கிறார்.
அவர் நடிக்கையில் கண்களின் தீவிரம், கைகளின் சைகைள், உடல் மொத்தமும் ஒரு கண்ணாடியாக பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் என அட்டகாசமாக இருக்கும். அதுவும் சட்டென தன் மனநிலையை காட்டும் அந்த வேகம் மோகன்லாலுக்கும் வராது. இந்த பாவனைகளை மாற்றும் வேகம் காரணமாக கௌஸ் நடிப்பதில் உள்ள முயற்சி துளியும் தெரியாது.
ராஜு பின்னர் தான் தமிழ்நாட்டுக்கு தப்பித்து போகப் போவதாக கூறுகிறான். பாலன் சிறுக சிறுக 40,000 சேர்த்து வைத்திருக்கிறான். பாலனின் திருமண இரவென்று வந்து அவனுக்கு மது வாங்கிக் கொடுத்து அன்பைக் காட்டுகிறான் பாலன். அது ஒரு விநோதமான காட்சி. ஏனென்றால் அன்றிரவு அவன் தன் நண்பனின் பணத்தை திருடிப் போக முடிவெடுத்திருக்கிறான். அது தான் ராஜு. அவனிடம் அன்பு, நட்பு, குரூரம், குற்றத்திற்கான விழைவு எல்லாம் தனித்தனியாக இருக்கின்றன. குற்றவுணர்வு ஏற்படாத, குற்றத்தின் ருசி பழகிய, மரத்த ஒரு மனதுக்கு தான் அது சாத்தியமாகும் போல. நம்மை கட்டித் தழுவி பிரியத்தை காட்டியபடி மறுநொடி கழுத்தில் உள்ள செயினுக்காக சங்கை அறுப்பார்கள். இவர்களுக்கு இரண்டு செயலுக்கும் முரண்பாடு தெரியாது. ராஜு திருடுகையில் பாலனின் மனைவி வந்து தடுக்க அவளை குத்தி விடுகிறான். பணத்தோடு தப்பிக்கிறான். மனைவியையும், தன் மொத்த சேமிப்பையும் இழக்கிற பாலன் தன் நண்பனை பழிவாங்க தேடி அலைகிறான்.
ராஜூ தீராத அச்சத்துடன் அலைந்து திரிந்து ஒரு தாழ்வாரத்துக்கு வருகிறான். அங்கு ஒரு சந்தையில் நாணு என்கிற ஒரு சிறு விவசாயியை காண்கிறான். அந்த சம்பவத்தை பற்றி பின்னர் குறிப்பிடுகையில் நாணு: “இவனுக்கு இருட்டை பார்த்தாலும் வெளிச்சத்தை பார்த்தாலும் பயம், மக்களை பார்த்தால் பதுங்குவான். நான் தான் பேசி பேசி ஒருவாறு ஆற்றுப்படுத்தி மலையில் நாலு ஏக்கர் நிலம் வாங்க வைத்து இங்கேயே வாழ செய்தேன்” என்பார்.
நாணு மிக சுவாரஸ்யமான பாத்திரம் அவர் தொணதொணவென பேசிக் கொண்டே இருக்கிறார். அவர் இறந்து போன மனைவி அவருக்கு வைத்த வட்டப்பெயர் வெட்டுக்கிளி. அந்த மலைப்பிரதேசத்தில் நான்கே பேர் தான். ராஜுவும், அவனைத் தேடி அங்கு வரும் பாலனும் மௌனமாக ஒருவரை ஒருவர் மூர்க்கமாக கவனித்தபடி கொலை செய்யும் கொல்லப்படும் உக்கிரத்துடன் இருப்பார்கள். நாணுவின் மகள் எப்போதும் எறும்பு போல் ஏதாவது வேலை பார்த்தபடி இருப்பாள். அப்போது இடைவிடாது பேசும் நாணுவின் குரல் அங்குள்ள மௌனத்தை அப்படி கனக்க செய்கிறது. ஒரு காட்சியில் நாணு ஏதோ சத்தம் கேட்டு நள்ளிரவில் எழுந்து கொள்கிறார். காயமுற்று கிடக்கும் பாலனை ராஜு கொல்ல முயல்கிறான். அவன் எதிர்த்து போராடும் போது கேட்கும் ஓசையில் அவர் அங்கு வர ராஜு ஓடி விடுவான். பாலன் தனக்கும் ராஜுவுக்கும் உள்ள பிரச்சனையை ரகசியமாக வைத்திருப்பான். அப்போது நடந்த போராட்டத்தை பற்றி சொல்ல மாட்டான். பாலன் ஏதோ மூத்திரம் பெய்ய எழுந்து நடக்கையில் விழுந்து விட்டான் போல என நினைக்கும் நாணு அவன் அருகே அமர்ந்து கொள்வார். அந்த நள்ளிரவில் தன் பழைய வாழ்க்கை பற்றி தொணதொணவென மீண்டும் பேச ஆரம்பிப்பார். அந்த சூழலில் அவரது பேச்சு உருவாக்கும் அபத்தம் நுட்பமான ஒன்று.
நாணுவும் கிட்டத்தட்ட ராஜுவை போல சமூகத்துக்கு பயந்து மலையில் வந்து தனியே வாழ்பவர் தான். அவர் ஒரு உயர்சாதி பெண்ணை காதலித்து அவளது சொந்தங்களை அஞ்சி ஓடி அந்த மலைப்பிரதேசத்துக்கு வந்து கடுமையாக உழைத்து சமூகத்தில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார். அதனால் தான் எதேச்சையாக ராஜுவை காண அவனிடம் அப்படிப் போய் ஒட்டிக் கொள்கிறார். அவர் மனம் முழுக்க வருடங்களாய் பேசாத பேச்சு சலசலத்துக் கிடக்கிறது. அவருடைய பாத்திரத்தை ராஜுவின் பின்னணியில் பார்க்கையில் அந்த மொத்த மலையும் அங்குள்ள தனிமையும் நமக்கு மனதின் குறியீடாக கூட தோன்றுகிறது. நகரத்தின் சின்ன ஒரு அறையில் கூட ராஜுவையும் நாணுவையும் போல தமக்குள் ஒளிந்து ஒடுக்குபவர்கள் இருக்கக் கூடும்.
இன்னொரு காட்சியில் தன்னை நாடி வந்து நாணுவின் வீட்டில் தங்கி இருக்கும் பாலனை பற்றி ராஜு தவறாக சித்தரித்து நாணுவிடம் பேசுகிறான். அதாவது தன்னுடைய சுபாவத்தை அப்படியே பாலன் மீது திணிக்கிறான். இதை ராஜுவே ஒரு விலகல் மனநிலையில் தன்னை தானே கண்டு சித்தரிப்பது எனலாம். “அவனை நம்ப முடியாது. பேசுகிற ஒவ்வொரு சொல்லும் பொய். ஏமாந்த நேரம் பார்த்த பொன்னையும் பொருளையும் அபகரிப்பதே நோக்கம். அதற்காக கொலை கூட பண்ணுவான்.”
“அப்படி என்றால் இப்பவே அனுப்பி விடலாமே”
“இல்லை பாவமாக இருக்கிறது. கொஞ்ச நாள் காத்திருந்து விட்டு என்னிடம் பரிதாபமாக பேசுவான். கெஞ்சுவான். எல்லாம் பணத்துக்காகத் தான். கொடுத்து விட்டால் போய் விடுவான். அவன் குணம் அப்படி.” இப்படி குற்றங்கள் பண்ணுவது, பிறகு நண்பனிடம் மன்றாடி தன்னை காப்பாற்ற கேட்பது, மீண்டும் அவனை ஏமாற்றி குற்றம் பண்ணுவது ஆகிய விசயங்களை அதற்கு முன் வந்த காட்சிகளில் ராஜு தான் செய்திருப்பான்.
மிக சுவாரஸியமான வசனம் இது. ஈகோ இல்லாத மனிதனால் தான் தன் சுபாவத்தை இந்தளவுக்கு விலகி நின்று இன்னொருவர் மீது சுமத்த முடியும். ஈகோவுக்கும் நன்மைக்கும் ஒரு தொடர்பு உள்ளது. நம்மை நாமே மதித்து நேசித்து போற்றும் போது தான் குற்றம் பண்ணுவது சிரமமாகிறது. எந்த பிடிப்பும் இல்லாமல் ஆகும் போது கண்ணாடிக் கோப்பைக்குள் நீர் போல் மனம் ஆகும் போது செயல் தான் பிரதானமாகிறது. குற்றச்செயலே ஆனாலும் அதை நான் பண்ணவில்லை சூழல் தான் பண்ண வைத்தது என நம்ப ஆரம்பிப்போம். இப்படியே ஒழுகிப் போகிற குற்ற மனதுக்கு எல்லையே இல்லை. ராஜுவின் இந்த ஒட்டிக் கொள்ளாத பாத்திரத்தை சலீம் கௌஸ் அழகாக புரிந்து கொண்டு செய்திருப்பார். தொடர்ச்சியாக மாறிக் கொண்டே இருக்கும் உடல் மொழியை கொண்டு வந்திருப்பார். மோகன்லால் மாறாக ஒரு இறுக்கமான நிரந்தரமான உடல் மொழியுடன் படத்தில் இருப்பார். ஒரு இடத்தில் லால் கௌஸிடம் நாணுவின் மகளை ஒன்றும் பண்ணி விடாதே என்பார். “அவள் உனக்கு யார்?” என கௌஸ் கேட்க, லால் “எனக்கு யாரும் இல்லை, ஆனால் அவளிடம் இருந்து ஒரு வாய் சோறு வாங்கி தின்றிருக்கிறேன். அந்த நன்றி உணர்வு எனக்கு இருக்கிறது. அது உனக்கு புரியாது” என்கிறான். கௌஸ் ஒரு துச்சமான புன்னகையை செய்வான். இது முக்கியமான அவதானிப்பு. ராஜுவுக்கு விழுமியங்களில் நம்பிக்கை இல்லை; அதனால் யாருடனும் உணர்வுரீதியான ஒட்டுதலும் இல்லை. அவனால் நேசிக்க முடியும். ஆனால் நேசத்துக்காக விசுவாசமாக இருக்க முடியாது.
இந்த படத்தில் சலீம் கௌஸ் நடிப்பில் லாலை பல மடங்கு கடந்து சென்றிருப்பார். இது ஆச்சரியமான ஒன்று. இவ்வளவு சிறந்த நடிகன் வெறும் வில்லன் பாத்திரங்கள் மட்டுமே சொற்பமாய் செய்திருக்கிறாரே என்று ஆற்றாமை ஏற்படுகிறது. “வெற்றிவிழாவில்” படத்தில் அவரது நடிப்பு இதே போல் தனித்துவமாக இருக்கும். “ரெட்”, “வேட்டைக்காரன்”, “திருடா திருடாவிலும்” நடித்திருக்கிறார். சில நொடிகள் தனக்கென ஒரு ஆளுமையை நிறுவிக் கொள்ளும் அபாரமான திறமை படைத்த கலைஞன். வில்லன் முகத்தில் அவர் காட்டும் புன்னகையும் களிப்பும் வெறுப்பும் கலந்த அந்த பாவனை ஒரு குற்றமனம் பற்றின அவரது சித்தரிப்பும் தான்.
கௌஸ் சென்னையில் பிறந்து பிரசிடென்ஸி கல்லூரியில் படித்தவர். பூனே திரைப்பட கல்லூரியிலும் பயின்றார். ஒரு நல்ல கராத்தே கலைஞரும் கூட. கொஜு ரையு கராத்தே அவரது ஸ்டைல். அது போல் வர்மக் கலை மற்றும் தைச்சிசுவான் போன்ற சண்டைக்கலைகளிலும் நிபுணர். பொதுவாக கராத்தே அல்லது குங் பூ பயின்றவர்கள் உடலை நேராக வைத்து கொஞ்சம் தலையை பின்சாய்த்து விரைப்பாக நிற்பார்கள். சினிமாவில் கௌஸின் இயல்பான உடல்மொழியே அப்படித் தான். அவரது பயிற்சியின் தாக்கம் அது. சூபி தத்துவத்திலும் ரூமியின் கவிதைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் கௌஸ். மும்பையில் Pheonix Players என்கிற ஒரு நாடகக்குழு நடத்துகிறார். ஷேக்ஸ்பியரின் “ஹேம்லட்” போன்ற பல நாடகங்களை இயக்குகிறார். ஒரு நாடக நடிகராக மிக முக்கியமானவராக கருதப்படுகிறார். “வெனிஸ் நகர வணிகன்” நாடகத்தின் கொடூர யூத வில்லனான ஷைலாக் பாத்திரத்தை கௌஸ் ஏற்று நடிப்பது காண வேண்டிய ஒன்று. வன்மம் பற்றியும், பழிவாங்கு உணர்ச்சி பற்றியும் பேசுகையில் அவரது இடுங்கின கண்களில் ஒரு தூயமிருக நிலையை பளிச்சிட வைக்கிறார். ரிச்சர்ட் III எனும் நாடகத்தில் வரும் கூன் கொண்ட ஊனமுற்ற மன்னனின் பாத்திரத்தையும் கௌஸ் அவ்வளவு அழகாக வெளிப்படுத்தி இருப்பார் – ஊனத்தின் பொருட்டு சமூகத்தால் ஒதுக்கப்படுவதன் கசப்பையும், சமூகத்தை மறுக்கும் வீம்பையும், அதனால் விளையும் அகந்தையையும் சில பாவங்களில் கற்கள் உரசுவது போன்ற தன் குரலின் கரகரப்பு வழி சித்தரித்திருப்பார். அதே போன்றே தன் மிகுதியான அன்பின் விளைவாக மனைவி டெஸ்டிமோனாவை கொல்லும் ஒத்தெல்லோவின் பாத்திரம் – அதை நடிக்கையில் மிகுந்த அன்பின் அக்கறையும் பதற்றமும் உருவாக்கும் களைப்பை முகத்தில் கொண்டு வருவார் (இதன் காணொளிகள் இணையத்தில் கிடைக்கின்றன). இந்த பாவனைகள் கௌஸின் சொந்த அவதானிப்புகள் எனலாம். ஷேக்ஸ்பியரை தன் கற்பனை வழி அறிந்து கொண்ட நடிகனால் மட்டுமே இதை செய்ய முடியும். நடிப்பு என்பது பிரதியில் இருப்பது வெளிப்படுத்துவது அல்ல, அதை தன் வழி அறிந்து அர்த்தப்படுத்துவது – ஒரு நல்ல நடிகன் ஒரு தத்துவவாதியாகவும் படைப்பாளியாகவும் இருக்கிறான். 

தனக்கென வாழ்க்கை குறித்த தத்துவ நிலைப்பாடு கொண்ட ஒரு ஆழமான மனிதர். கௌஸின் திரை வாழ்க்கை கொண்ட பாதையை பார்க்கையில் மோகன் லால் எந்தளவுக்கு அதிர்ஷ்டசாலி என தோன்றுகிறது. அழகான தோற்றம், நல்ல இயக்குநர்களின் அரவணைப்பு, தொடர்ந்து நூற்றுக்கணக்கான படங்களில் இயங்கும் வாய்ப்பும் ஆர்வமும் அவரை இன்று இந்தியாவின் தலை சிறந்த நடிகராக மாற்றி இருக்கிறது. இதே விசயங்கள் கௌஸின் வாழ்விலும் நடந்திருந்தால் அவர் பத்து மடங்கு மேலான நடிகராக ஒருவேளை பரிணமித்திருப்பார். அல்லது இர்பான் கான் போல் இந்திய மாற்றுசினிமாவின் நாயகனாகவும் ஆகியிருக்கலாம். ஆனால் சிலருக்கு சாதனை என்பதன் பொருள் சுயஅறிதலாகவும் கலாபூர்வமான பயணமாகவும் இருக்கும் – லௌகீக வெற்றிகளை பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் நிலவின் ஒளி சிறு குட்டையில் விழுந்தால் என்ன தாஜ்மஹால் அருகாமையில் யமுனா நதியில் ஜொலித்தால் என்ன ரெண்டுமே ஒன்று தானே!  

(நன்றி: அமிர்தா, டிசம்பர் 2013, “அறிந்ததும் அறியாததும்”)
Read More

Wednesday, 9 October 2013

இதோ பாருங்க சார் ஒரு குறியீடு



அஞ்சாதே


தமிழில் பொதுவாக சொல்லப்படுவது போல் அசலான மாற்று சினிமா என ஒன்று உண்டா என்கிற சந்தேகம் எனக்கு நிரந்தரமாகவே உண்டு. கடந்த பத்தாண்டுகளில் பல நல்ல சுவாரஸ்யமான அசலான ஆழமான நவஎதார்த்த படங்கள் வந்துள்ளன. பின்நவீனத்துவ கூறுகளுள்ள பகடிகள் தோன்றியுள்ளன. ஆனால் இவையும் கணிசமாய் வாழ்வின் காத்திரமான பிரச்சனைகளை அலச முயல்பவை அல்ல. வித்தியாசமாக, சமூக, உளவியல் பார்வையுடன் சொல்லப்பட்ட பழைய கதைகளே.
முன்னரும், அதாவது தொண்ணூறுகளிலும், நல்ல படங்கள் வந்தன. இயக்குநர்கள் எந்த ஒளிவட்டமும் இன்றி வெறும் கதைசொல்லி என்கிற பட்டத்துடன் திருப்தி உற்றனர். ஆனால் இன்றைய இயக்குநர்களுக்கு தாம் கலைஞர்கள் என்று தொடர்ந்து நிரூபிக்க வேண்டிய ஒரு அநாவசிய கட்டாயம் உள்ளது. அதனால் படங்களில் தேவையற்ற அலங்காரங்களை நுழைப்பார்கள். ஜீரணிக்காத பெரும் தத்துவ பிரச்சனைகளை திணிப்பார்கள். 

ஒரு காலத்தில் வெறும் நேர்த்தியான கதைசொல்லி என்கிற கோரலுடன் திருப்தியுற்றிருந்த மணிரத்னம் கூட கடந்த பத்தாண்டில் மனதின் அகங்காரங்கள், தீமை மீதான மோகம் (“ராவணன்”), நன்மை தீமைக்கு இடையிலான இடையறாத பிரபஞ்ச போராட்டம் (”கடல்”) ஆகிய விசயங்களை பேசும் அழுத்தத்துக்கு உள்ளாகி கல்வாரி மலையில் சிலுவை தூக்க முடியாமல் சுமந்து சிரமப்பட்டார். இது எளிய கதைகள் எனும் நோஞ்சான் குதிரை மீது கலை எனும் மலையை ஏற்றி துன்புறுத்தும் நட்சத்திர இயக்குநர்களின் காலகட்டம். சாதாரண காட்சிகளில் கூட உச்சியில் இருந்து பம்பரம் போல் படக்கருவியை சுழற்றி இறக்கி காட்டும் (”அரவான்”), தேவையில்லாமல் கிராமத்து படங்களில் பியோனா இசையும், சேப்பியார் வண்ணமும் கொண்டு உலகத் தரம் காட்ட முயலும் காலகட்டம். இந்த இயக்குநர்களின் ஒரு குறிப்பிட்ட உபாதை தேவையில்லாமல் குறியோடு அல்லது உருவகங்களை காட்டுவது – அதோடு நின்றால் பரவாயில்லை. நீங்கள் அவற்றை கவனிக்கவில்லை என்றால் அவர்களே “இதோ பாருங்க சார் குறியீடு, இதன் பொருள் இது, இது, இதையெல்லாம் நீங்க கவனிப்பீங்கன்னு ராப்பகலா யோசித்து வச்சது சார்” என மைக் பிடித்து பேச ஆரம்பிப்பார்கள். குறியீட்டை கவனிக்கவில்லை அல்லது பார்க்கவில்லை என்றால் அது யார் தவறு?
குறியீடு, உருவகம், உவமை போன்றவை டி.வி, மின்விசிறி போன்று உபகரணங்கள். சில பேர் டி.வியை போட்டுக் கொண்டே போனில் பேசிக் கொண்டே நகம் வெட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் குறிப்பாய் எதைத்தான் பண்ணுகிறார்கள் என சொல்ல முடியாது. ”மிருகம்” மற்றும் ”விருமாண்டி” போன்ற படங்களில் காளையை காட்டித் தான் நாயகனின் ஆண்மையை, வீரியத்தை, வலிமையை வலியுறுத்த வேண்டிய அவசியம் இல்லை. சும்மா அலங்காரத்துக்காக காளை சுற்றிக் கொண்டிருக்கும்; பார்வையாளர்கள் அதை ஒரு உருவகமாகவே பார்க்க மாட்டார்கள். கொசு பறப்பதை என்றாவது உன்னிப்பாக பார்ப்பீர்களா? ஆனால் சுர்ரென்று கடிக்கும் போது தான் கவனிப்போம். அது போலத் தான் இந்த அலங்கார உருவகங்களை நீங்கள் இயக்குநரே பேட்டியில் விளக்கும் போது தான் ஒரு எரிச்சலுடன் கவனிப்பீர்கள். மிஷ்கினின் “நந்தலாலாவில்” நகராட்சி குப்பை தொட்டியை கவிழ்த்து விட்டது போல் எங்கு நோக்கினும் உருவகமாய் சிதறிக் கிடக்கும். மற்ற படங்களில் அங்கங்கே சொருகி இருப்பார். அவர் தனது “அஞ்சாதே” பற்றி பேசும் போது இடைவேளையின் போது வரும் ஒரு உச்சி கோண காட்சியில் நாயகன் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் நிற்பதை காட்டி அது அவன் வாழ்க்கையில் நேரும் சிக்கலுக்கு ஒரு குறியீடு என்றார். அக்காட்சி பார்க்க அழகாக இருக்கும். ஆனால் அந்த சிக்கல் தான் ஏற்கனவே படத்தில் அதுவரை விரிவாக விளக்கப்பட்டு ஆயிற்றே! பிறகு எதற்கு திரும்பவும் அழுத்தி சொல்ல ஒரு குறியீடு? இயக்குநர்களுக்கு தம் கலையறிவு பற்றி சிலாகிப்பதற்கும், அடிக்கடி “இதோ பார்” என்ற பார்வையாளனுக்கு வகுப்பெடுப்பதற்கும் அன்றி இந்த மாதிரி குறியீடுகளுக்கு கடற்கரை ஜோசியக்காரிகள் வைத்திருக்கும் குச்சி அளவுக்கு கூட மதிப்பு கிடையாது.
இந்த மாதிரி உருவகங்களை இலக்கியத்தில் சர்வசாதாரணமாக ஆரம்ப நிலை எழுத்தாளர்களே அங்கங்கே தூவி வைத்திருப்பார்கள். உதாரணமாய் தன் விவாகரத்தான மனைவியின் வீட்டுக்கு நாயகன் வருகிறான் என கொள்வோம். அப்போது வருகிற பாதை, வீட்டின் கதவு, ஜன்னல், அல்லது பூனை, காக்கா, எச்சில் தட்டு எதையாவது குறியீடாக்க எழுத்தாளனின் கை பரபரக்கும். ஆனால் நேரடி கூறலில் இயலாது போகிற ஒரு விசயத்தை சுட்டத் தான் குறியீடுகள் அவசியம். பெரும்பாலும் அரூபமான, காட்சிப்படுத்த சிக்கலான மனநிலை, ஒரு தத்துவார்த்த நிலை ஆகியவை. மௌனி இதில் விற்பன்னர். அவர் கதை கூற அல்ல, ஒரு அரூப நிலையை பேசவே எழுதுகிறார் என்பதால் அவர் ஒரு நிலப்பரப்பையோ சும்மா வீட்டுக்கு வந்து போவதையோ குறியீடாக மாற்றும் போது நியாயமாக இருக்கிறது. மௌனியால் அவர் உத்தேசிக்கிற விசயங்களை எதார்த்த மொழியில் சித்தரிப்பது மிக மிக கடினம். ஆனால் மிஷ்கினிக்கோ “எலிப்பத்தாயத்தில்” அடூருக்கோ இந்த சொல்லமுடியாத அரூப நிலையை சித்தரிக்கும் பிரச்சனை இல்லை. ஒரு கெத்துக்காகத் தான் எலிப்பொறியை அடூர் படத்தில் கொண்டு வருகிறார்.
குறியீட்டை கதையின் ஒரு பகுதியாக பார்வையாளனுக்கு தனியாய் தெரியாத படி பயன்படுத்துவதற்கு கீஸ்லாவஸ்கியின் “வெள்ளை” படத்தின் ஒரு காட்சி நல்ல உதாரணம். நாயகன் தொடர்ந்து தன் மனைவியால் உதாசீனிக்கப்படுகிற எல்லாராலும் கேலிக்கும் அவமானத்துக்கும் உள்ளாகிற ஒரு பாத்திரம். அவன் தன்னை விட்டுப் போன மனைவியை தேடி புது ஊருக்கு போகிறான். நன்றாக அடையணிந்து கவனமாக படிக்கட்டு ஒன்று ஏறுகையில் மேலே இருந்து புறா அவன் மீது எச்சமிடுகிறது. அங்கதமும் அவலமும் கலந்த ஒரு உணர்வை இது நம்மிடம் தோற்றுவிக்கிறது. இது வழக்கமான ஒரு சம்பவம் என்பதால் குறியீடாக தனித்து நிற்பதில்லை. ஆனால் உன்னிப்பாய் பார்ப்பவர்களுக்கு இது ஒரு குறியீடும் தான்.
உம்பர்த்தோ ஈக்கோவின் “ஒரு டி.வி நிகழ்ச்சியை நடத்துவது எப்படி?” என்கிற பகடிக் கட்டுரையில் அவர் ஒரு புது ஊருக்கு போயிருந்த போது அங்குள்ள மக்களின் ஒரு விநோத பழக்கத்தை கவனித்ததை கூறுகிறார். அந்த மக்கள் விருந்தினர் வீட்டுக்கு வந்தால் கதவை திறந்ததும் “இதோ கதவை திறந்து விட்டேன்” என்பார்களாம். அது போல் நாற்காலியை காட்டி “இதோ நாற்காலி, இதோ உட்கார்ந்து விட்டீர்கள், இதோ தண்ணீர், இதோ குடித்து விட்டீர்கள்” என்று எல்லாவற்றையும் விளக்கி கூறுவார்களாம். அந்த ஊர் நாடகங்களில் “இப்போது நகைச்சுவை காட்சி ஒன்று வரப்போகிறது, இப்போது அழகான நடனம் ஒன்று பார்க்கப் போகிறீர்கள்” என அறிவிப்பார்களாம். இதைப் படிக்கிற போது “அட நம் டிவி நிகழ்ச்சிகளிலும் இதே குரங்குத் தனம் தானே பண்ணுகிறார்கள்” என நமக்குத் தோன்றும். “இப்போது சூப்பரான காமெடிக் காட்சி ஒன்று வரப் போகிறது” என்று ஆதித்யா சேனல் போன்று முழுநேர நகைச்சுவை அலைவரிசையிலே சொல்லுவார்கள். அதில் நகைச்சுவை காட்சி அல்லாமல் பாட்டா வரும்? என்னுடைய அம்மா ஊரில் இருந்து வந்தால் எங்க வீட்டில் உள்ள ஏதாவது ஒரு காலி டப்பாவை பார்த்தால் போதும் அதை துடைத்தபடி “இது காலியாக இருக்கிறது, இதில் ஏதாவது பிஸ்கட்டோ சிப்ஸொ மிக்சரோ இருந்தால் போட்டு வைக்கலாம்” என டி.வி ஒருங்கிணைப்பாளர் போலவே பேசுவார். நான் “நீயா நானா” நிகழ்ச்சிக்கு போகும் போதெல்லாம் அவர்கள் மைக்கில் கிளாப்ஸ் என்று கத்தும் போது மொத்த கூட்டமும் கைத்தட்டுகையில் “என்ன அபத்தம், எதற்காக யாருக்காக கை தட்டுகிறோம்” என யோசிப்பேன். வகுப்பில் ஆங்கில ஆசிரியர் வந்ததும் கரும்பலகையில் மேலே “ஆங்கிலம்” என கொட்டையாக எழுதுவார். கிரிக்கெட் வர்ணனையில் ரவிசாஸ்திரி ஒவ்வொரு ஓவர் முடிந்ததும் 55க்கு 1 என்றோ 98க்கு 2 என்றோ சொல்லாமல் முடிக்க மாட்டார். பல சமயங்களில் திரையில் உள்ளதை அப்படியே வாசித்து காட்டுவதன்றி வர்ணனையாளர்களுக்கு பேச ஒன்றும் இருக்காது அல்லது அப்படி சொல்லுவது ஒரு தவிர்க்க இயலாத சடங்காகவும் இருக்கலாம். என்னுடைய ஒரு நண்பன் போன் பண்ணி “நீ தான் என்னை அழைப்பதில்லை; அதான் நானே கூப்பிட்டேன்” என்பான். நானும் “ரொம்ப வேலையாய் போயிடுச்சு. அதான் கூப்பிடலடா” என்பேன். நான் கூப்பிடவில்லை, காரணம் அவகாசமில்லாமல் போய்விட்டது என்பது இருவருக்கும் தெரியும்; ஆனாலும் இந்த வசனங்களை ஒவ்வொரு முறையும் சொல்லுவோம். காப்பி பொடி பாக்கெட்டின் மேல் இங்கே கத்தரிக்கவும் என கோடு போட்டிருப்பார்கள். சரியாக அங்கே வெட்டாமல் கொஞ்சம் மேலே கீழே வெட்டினால் காப்பித் தூள் வராதா? சில எழுத்தாளர்களுக்கு என்று “ ‘ஒரு வாசகர் என்னிடம் இப்படி…’ அல்லது ’வாழ்க்கையில் நாம்’” என்கிற மாதிரி ஆரம்பிக்காமல் எழுதவே முடியாது. பெரும்பாலான பத்திரிகை கட்டுரைகளை நான் பாதியில் தான் படிப்பேன், அது போல் பாதியிலே நிறுத்தியும் விடுவேன். முன்பும் பின்பும் வெறும் அலங்காரம் தான். விஷயம் பாதியில் தொடங்கி பாதியிலே முடிந்து விடும். எழுத்தாளர் தான் சொல்ல வந்ததற்கு சின்ன குற்றவுணர்வுடன் முகாந்திரம் அமைத்து சாஷ்டாங்கமாய் ஆரம்பித்து “இவ்வளவு தூரம் நான் சொன்னதை சரியாய் புரிந்து கொண்டிருக்க மாட்டீர்கள், அதனால் கடைசியாய் மன்னித்து கொள்ளுங்கள்” என்கிற கணக்கில் ரெண்டு பத்தியை முடிவில் பின்ன்யிருப்பார். முதல் ரெண்டு பத்தியில் இறுதி ரெண்டு பத்தியும் வழுக்கைத் தலையர் ஈடுகட்டுவதற்கு பங்க் முடியும் கட்டாய் மீசையும் தாடியும் வளர்ப்பது போல். இதைப் போல் ”தோசை சாப்பிடுங்க” என தட்டை நீட்டுவது போல, “குட்டித் தூக்கம் போடப் போறேன்” என்று விட்டு அடுத்த நொடி அசந்து தூங்குவது போல் குறட்டை எல்லாம் விட்டு பாவனை பண்ணுவது போல பல சந்தப்பங்களில் நாம் தினமும் எத்தனையோ அர்த்தமற்ற சொற்றொடர்களை கூறிக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் எதுவும் நம் தமிழ் சினிமாவின் நட்சத்திர “உலகப்பட” இயக்குநர்கள் வகுப்பெடுப்பது போல் வராது

Read More

Sunday, 22 September 2013

விபச்சாரம்: உடல் எனும் பெரும் “தடை”




தமிழோடு ஒப்பிடுகையில் மலையாள சினிமாவில் விபச்சாரம் பற்றி நேர்மறையாக அல்லது மனிதாபிமானத்தோடு விவாதிக்கும் படங்கள் அதிகமாக வந்துள்ளன. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் விபச்சாரி தீமையில் விழுந்து நாயகனால் காப்பாற்றத்தக்க ஒரு அபலை மட்டும் தான். மலையாளத்தில் சில முக்கிய படங்கள் விபச்சாரத்தின் பின்னுள்ள விழுமியங்களை தீவிரமாக விசாரித்தன. 


குறிப்பாக பத்மராஜனின் ”தூவானத் தும்பிகளை” சொல்லலாம். இதில் இரண்டு நாயகிகள். ஒருவள் கிளாரா. ஒரு வறிய கிறுத்துவ குடும்பத்தில் இருந்து வந்து தன் சுதந்திரத்துக்காக விபச்சாரத்தை தேர்கிறவள். அவளுக்கு விபச்சாரம் பற்றின குற்றவுணர்வுகள் அதிகம் இல்லை. ஆனால் ஆண்களின் அற்பத்தனங்கள் பற்றின புரிதல் உண்டு. உலகம் ஒரு எலிப்பந்தயம் என்பதை அறிவாள். அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதில் சாமர்த்தியசாலி. ஆண்கள் தைரியமற்ற பாசாங்கானவர்களாகவும் பெண்கள் தைரியமிக்க தெளிவானவர்களாகவும் இப்படம் காட்டுகிறது. மோகன்லால் நாயகன். பெயர் ராதாகிருஷ்ணன். அவர் ஒருவித இரட்டை ஆளுமை கொண்ட பாசாங்கு ஆசாமி. அவர் மனதுக்கு என்ன ஓடுகிறது என்பது படம் முழுக்க ஒரு புதிராகவே இருக்கும். அவர் தங்ஙள் எனும் பாலியல் தரகருக்கு உதவும் நோக்கத்துடன் கிளாராவை விபச்சாரத்துக்குள் கொண்டு வருவார். பின்னர் அவருக்கு இது குறித்த குற்றவுணர்வு ஏற்பதும். ஆனால் அப்போதே அவர் அறிந்து கொள்வார் கிளாரா பாலியல் தரகரையும் அவரையும் ஏமாற்றி தப்பி சென்று சுயமாய் விபச்சாரம் பண்ண ஆரம்பித்து விட்டாள் என. “கிளாராவை நாம் ஏமாற்றவில்லை; அவள் தான் நம்மை பயன்படுத்திக் கொண்டாள்” என தங்ங்கள் மோகன்லாலிடம் சொல்வார்.
விபச்சாரம் என்பது பொருளாதார மேம்பாட்டுக்கான ஒரு தொழில் என்பது இப்படத்தின் ஒரு அவதானிப்பு. சரி, பணம் சம்பாதிக்க, விடுதலைக்கு, சுயசார்புக்கு விபச்சாரம் மட்டும் தான் ஒரே வழியா? இல்லை. ஆக கிளாராவுக்கு அது மட்டும் நோக்கம் அல்ல. பத்மராஜன் கிளாராவின் பாத்திரத்தை நுட்பமான அறிவு படைத்தவளாக காட்டியிருப்பார். அவளுக்கு விபச்சாரத்தில் உள்ள விளையாட்டுத்தனம் பிடித்திருக்கிறது. ராதாகிருஷ்ணனை பிற்பாடு சந்திக்கையில் அவள் அவனிடம் தனது வாடிக்கையாளர்களின் அற்பத்தனங்களை, வேடிக்கை பாவனைகளை விவரிக்கிறாள். இருவரும் அதை சொல்லி சிரிக்கிறார்கள்.


ராதாகிருஷ்ணன் கிளாராவை நேசிக்கிறான். ஆனாலும் இப்போது இருவருக்குள்ளும் ஒரு திறந்த உறவு உள்ளது. ஆனால் ஆண்களின் உலகில் பெண்களை தளையின்றி வைத்திருக்க முடியுமா? கிளாராவின் பையைத் திறந்து பார்க்கையில் ராதாகிருஷ்ணனுக்கு அவளது ஒரு பணக்கார வாடிக்கையாளரின் விசிட்டிங் கார்டு கிடைக்கிறது. அவர் இந்தியா முழுக்க பல கிளைகள் வைத்துள்ள வியாபாரி. அவன் ஒரு துச்ச புன்னகையுடன் “கிழவராக இருக்கும்” என சொல்லுகிறான். அதற்கு கிளாரா “அவருடன் உன்னை ஒப்பிட்டு ஏன் வீணாய் பொறாமை” என சிரித்தபடி கூறுகிறாள். அவ்வளவு சீக்கிரம் அவள் பிறரின் மனதை படிக்கக் கூடியவளாக இருக்கிறாள்.
ஒரு நள்ளிரவில் கிளாராவை ரயில் நிலையத்தில் இருந்து அழைத்து வருகிறான். ராதாகிருஷ்ணன். “இந்த இரவில் எங்கே போவது? ஏதாவது ஒரு லாட்ஜில் அறையெடுக்கலாம்” என கூறுகிறான். அவள் “எனக்கு அறைகளுக்குள் முடங்கி அலுப்பாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் சுவர்கள் அல்லது ஜன்னல்கள். அதனால் லாட்ஜ் வேண்டாம். வெட்டவெளியில் இருக்க ஆசையாக இருக்கிறது. சும்மா நடந்து வரலாம்” என அவனை அழைத்து போகிறாள். அவர்கள் போகையில் சில ஆண்கள் கடக்கிறார்கள். “இவளை எங்கிருந்து தள்ளிக் கொண்டு வந்தாய்?” என கிண்டலடிக்க கிளாரா அதை வேடிக்கையாக எடுத்துக் கொள்கிறாள். ராதாகிருஷ்ணன் “ஏதாவது பிரச்சனையாகி விடப் போகிறது. ஒரு கார் வாடகைக்கு எடுக்கலாமே” என, கிளாரா “வேணாம். என்னை அப்படியே இந்த நள்ளிரவில் யாராவது பிடித்து தின்பதாக இருந்தால் தின்று விட்டு போகட்டுமே” என்கிறாள்.
கிளாராவின் அடிப்படை பண்பே இந்த விலகல் பாவம், ஒட்டாமை தான். எதிலும் ஒட்டாமல் திரிவதால் அவளுக்கு பிறர் தன்னை ஏளனம் செய்வது பொருட்டில்லை. பிறரை பொருட்படுத்தாததால் பிறரை கையாள்வது எளிதாகிறது. சரி, நடைமுறையில் விபச்சாரிகள் குற்றவுணர்வால் வருந்துகிறார்களா?
ஒரு சின்ன முயற்சி எடுத்தால் சென்னையில் உள்ள பல தரப்பட்ட விபச்சாரிகளை சந்திக்க முடியும். அவர்களிடமும் இதே விலகல் மனப்பான்மையை காணலாம். குறிப்பாக, உடல் பற்றின ஏளனங்கள், பேச்சுகளை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. பணத்துக்காக ஒரு தொழில் பண்ணுகிறோம் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இத்தொழில் தம்மை சமூக விளிம்புநிலையில் வைத்திருக்கிறது என்பதையும் அறிந்திருக்கிறார்கள். ஆனால் இந்த சிக்கல் அவர்களுக்கு பெரும் பாரமாக இருப்பதில்லை.
மனித மனதின் ஒரு விபரீத குணம் எல்லாவற்றையும் தனித்தனியாக பார்க்க முடிவது. ஒரு விபச்சாரி எப்போதும் விபச்சாரி இல்லை. அது ஒரு சீருடை அணிவது போலத் தான். இங்கு திருமணம் புரிந்து ஆறு மாத குழந்தையை வைத்துக் கொண்டு வீட்டிலேயே விபச்சாரம் பண்ணுகிறவர்கள் இருக்கிறார்கள். தொழில் முடிந்ததும் பழையபடி ஒரு அம்மாவாக, மனைவியாக மாறி விடுகிறார்கள். சமூக மையநீரோட்டத்தில் கலந்து விடுகிறார்கள்.
பத்மராஜன் இந்த விலகல் மனப்பான்மையை ஒரு ஆன்மீக தளத்துக்கு எடுத்து போயிருப்பார். கிருஷ்ணனின் இளவயது லீலைகளின் தொன்மம் பற்றி அறிவோம். லட்சோபலட்சம் காதலிகளை மோகிப்பது என்பது நிஜமாகவே காதலிப்பது அல்ல. அது ஒரு கற்பனை. காதல் எனும் விளையாட்டு மூலம் உலக இயக்கமே ஒரு விளையாட்டு என உணர்த்தும் கற்பனை. ஒரு நேர்மாறான உதாரணம் பார்த்தால், கர்த்தர் தன்னை சிலுவையில் அறைந்து ஒரு மனிதன் தன்னை பலி கொடுத்து எப்படி உலகின் பாவத்தை சீர் செய்யலாம் என உணர்த்தியது போல எனலாம். “தூவானத் தும்பிகளில்” ராதாகிருஷ்ணனே ரெட்டை வேடம் போடுபவன். ஊரில் அவன் ஒரு கஞ்சத்தனமான ஒழுக்கமான பண்ணையார். நகரத்துக்கு போனால் அங்கு ஊதாரியான ஒழுக்கமற்ற நபர். ஊரில் யாருக்கும் அவனது நகரத்து முகம் தெரியாது. ஆனால் அவனது உண்மை ஆளுமை இதன் இரண்டுக்கும் நடுவே ஒளிந்திருக்கிறது. கிளாராவும் விபச்சாரம் மூலம் எண்ணற்ற ஆண்களின் அற்பத்தனங்களை கடந்து போகிறாள். ஆண் உலகின் லீலைகளை தனது ஒட்டாமை மூலம் புறக்கணித்து ஜெயிக்கிறாள். ராதாகிருஷ்ணனின் லீலையை விட இது கட்டற்றதாக மகத்துவமாக இருக்கிறது. ஏனென்றால் ராதாகிருஷ்ணன் போல அவள் குடும்பம், சமூக நம்பிக்கை சார்ந்த எந்த பிணைப்புகளும் இல்லாம ஒழுகிக் கொண்டே இருக்கிறாள். கிருஷ்ணனின் உருவகத்தில் மிகச்சரியாக பொருந்துவது ராதாகிருஷ்ணன் அல்ல கிளாரா தான். பத்மராஜன் கண்ணன் ஒரு “விபச்சாரி” என்கிறார்.
நாம் அன்றாட வாழ்வுக்கு வருவோம். விபச்சாரம் ஒரு குற்றமா? குற்றமெனில் எப்படியான குற்றம்? ஒழுக்க குற்றம். அதனளவில் அல்ல சமூகம் அதனை எப்படி பார்க்கிறது என்பதைப் பொறுத்தே விபச்சாரம் ஒரு குற்றமாகிறது. பாலுறவை திருமண பந்தம் இல்லாமல் ஆனால் பரஸ்பர விருப்பத்துடன் கொள்ளும் போது அது குற்றம் ஆவதில்லை. இது சட்டம். நாம் இன்று ஒரு சமூகமாக இதை ஓரளவு ஏற்கிற நிலைக்கு வந்துள்ளோம். சமீபமாக உயர்நீதிமன்றம் வழங்கிய சேர்ந்து வாழும் உறவை சட்டபூர்வமாக்கும் தீர்ப்பையும் உதாரணமாய் சொல்லலாம். ஆனால் காசுக்காக இதை பண்ணுவது குற்றம்.
சரி, காசுக்காக மூளையை விற்கிறோம், காசுக்காக திறமைகளை விற்கிறோம், வீட்டை, சொந்த பொருட்களை வாடகைக்கு விடுகிறோம். உடலை மட்டும் விற்றால் என்ன தப்பு? இந்த கேள்வியை சமீபமாக வெளியான Trivandrum Lodge எனும் ஒரு மலையாள படத்தில் அதன் நாயகன் கேட்கிறான். அவனது அம்மா திருமணத்துக்கு பிறகு ஒரு விபச்சாரியாக மாறி நிறைய சொத்து சேர்க்கிறாள். அந்த சொத்துக்களை முதலீடாக கொண்டு அவன் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து பெரும்பணக்காரன் ஆகிறான். அவன் அப்பாவுக்கு இது பிடிக்கவில்லை. இறுதி வரை அவருக்கு தன் மனைவியின் ஒழுக்கக்கேடான பணத்தை அனுபவிப்பதில் சிக்கல் உள்ளது. அவர் மகனிடம் இருந்து பிரிந்து ஒரு சின்ன ஓட்டல் நடத்தி வாழ்கிறார். தன் அப்பாவிடம் தான் நாயகன் மேற்சொன்ன கேள்வியை கேட்கிறான்.
உடலையும் மூளையையும் பயன்படுத்தி சம்பாதிப்பது ஒன்றா? ஆதிகாலம் தொட்டே, அதாவது உழைப்பு முதலீடாக மாறி, பணம் புழக்கத்துக்கு வந்து, சம்பாத்தியம் ஒரு அரூபமான ஒன்றாக மாறி விட்ட பிறகு உடல் மெல்ல மெல்ல அவமானத்துக்குரிய ஒன்றாக மாறி விட்டது எனலாம். இன்னொரு நபரின் பயன்பாட்டுக்கு நம் உடலை ஒப்புவிப்பது ஒரு கீழ்மையான காரியமாக என்றும் இருந்துள்ளது. ஒரு மனிதனை அவமானப்படுத்துவது, தண்டிப்பது எல்லாமே உடலை மையமிட்டு தான் இருந்துள்ளது. பொதுவில் வைத்து சாட்டையடிப்பது, கல்லால் அடிப்பது, தூக்கிலிடுவது, அல்லது உடல்ரீதியாக ஒருவரை சிறையில் வைத்து கட்டுப்படுத்துவது என சொல்லலாம். மனித உடல் எப்படி ஒழுக்கத்துக்கான கருவியாக மாற்றப்படுகிறது என்பது பற்றி பூக்கோ நிறைய விளக்கினார். இன்றுள்ள பி.பி.ஓக்களிலும், மேற்கில் பல பொதுவிடங்களிலும் CCTV கண்காணிப்பு படக்கருவிகள் பொருத்தப்படுவது மறைமுகமாக உடலை கட்டுப்படுத்தும் ஒரு முறை தான். உடல் பிறரால் கட்டுப்படுத்தப்படும் போது அல்லது பயன்படுத்தப்படும் போது மனிதன் ஒரு ஆழமான அவமதிப்புணர்வுக்கு உள்ளாகிறான். இதற்கு அஞ்சி அவன் அதிகாரத்திடம் பணிகிறான். விபச்சாரத்தில் உடல் பயன்படுத்தப்படுவதும் இதே வகையான சிக்கல் தான்.
பொதுவாக பெண்கள் இன்று தம்முடைய கல்வி, அறிவு, பண்பாட்டு ரசனை சார்ந்து அடையாளப்படுத்தப்படுகிறார்கள். ஒரு பெண் தன்னை வெறும் உடம்பாக பார்க்கப்படுவதை பெரும் அவமானமாக நினைப்பாள். ஆனால் அவள் விபச்சாரத்துக்கு வந்ததும் சட்டென்று அவள் தன் உடலால் அடையாளப்படுத்தப்படுகிறாள். மற்ற குற்றங்களுக்கும் செக்ஸ் குற்றங்களுக்கும் இது தான் வித்தியாசம். செக்ஸ் குற்றம் பண்ணுகிறவர் தனக்கான அத்தனை மரியாதையும் இழந்து வெறும் துச்சமான உடலாக மாறி விடுகிறார். மனித உடல் மீது நமக்கு உள்ள அத்தனை வெறுப்பையும், கூச்சத்தையும், குற்றவுணர்வையும் ஒரு விபச்சாரி மீது காட்டுகிறோம்.
விபசாரிக்கு உடல் என்பது ஒரு கருவி. நாம் நமது தொழில் உற்பத்தி, கல்வி, பண்பாடு, மூலம் உடலை கடந்து உடலற்றவர்களாக நவீனப்பட்டு வருகையில் ஒரு விபச்சாரி அத்தனையையும் மீறி தன்னை வெறும் உடலாக முன் வைக்கிறாள். இதைத் தான் நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. நம்முடைய பிரச்சனை விபச்சாரம் அல்ல, அதை மேற்கொள்ளும் அப்பெண் அல்ல, அதற்கு கருவியாகும் உடல் தான். அதனால் தான் உடலை பயன்படுத்தி சம்பாதிக்கக் கூடாது என்கிறோம்.
Trivandrum Lodge படத்தில் விபச்சாரம் முழுக்க முழுக்க நேர்மறையாக காட்டப்படுகிறது. இயக்குநர் வி.கெ.பிரகாஷ் பத்மராஜனின் “தூவானத் தும்பிகளுக்கு” ஒரு ஹோமெஜ் கூட செய்கிறார். அப்படத்தில் இருந்து அதே தங்ஙள் பாத்திரத்தை இறுதியில் மீள் அறிமுகம் செய்கிறார். அவர் ஏழ்மையில் இருக்கும் ஒரு விபச்சாரிக்கு உயர்குடியை சேர்ந்த வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்தி பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகை செய்கிறார். அவளுடைய கணவன் பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக உள்ளான். படத்தின் இறுதிக் காட்சியில் அவள் பணக்காரியாகி ஒரு கார் வாங்கி தன் கணவனை அதில் ஏற்றி போகிறாள்.
விபச்சாரம் இந்த அளவுக்கு நேர்மறையான, உபத்திரவம் இல்லாத ஒரு நல்ல தொழிலா? அல்ல. விபச்சாரத்தின் பிரதான பிரச்சனை சமூகம் அதை விரும்பவில்லை, ஆனாலும் விபச்சாரம் அதற்கு தேவைப்படுகிறது என்பது. இந்த பாசாங்கு காரணமாக போலீஸ்-மாபியா-அரசியல்வாதிகளின் ஒரு வலைப்பின்னலில் விபச்சாரிகள் மாட்டிக் கொள்கிறார்கள். இது அவர்களை சக்கையாக உறிஞ்சி சுதந்திரம் அற்றவர்களாக ஆக்குகிறது. விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குவது போலீஸின் தொந்தரவுகளில் இருந்து அவர்களை பாதுகாக்க உதவும். ஆனால் அதேவேளை மாபியா இதை பயன்படுத்தி பாலியல் தொழிலை இன்னும் விரிவாக வெளிப்படையாக நேர்த்தியாக செய்ய வாய்ப்புள்ளது. சிறு குழந்தைகள், பெண்கள் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுவது அதிகமாகும்.
அனுகூலம் என பார்த்தால் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது எயிட்ஸை கட்டுப்படுத்தவும் பயன்படும். இன்றுள்ள பிரதான பிரச்சனை பாலியல் தொழிலில் உள்ளவர்களின் ஒரு தகவல் கிடங்கை உருவாக்கி அவர்களின் மருத்துவ நிலையை தொடர்ந்து சோதித்து அதன் வழி எயிட்ஸை கட்டுப்படுத்துவது சிரமமாக இருப்பது தான். இத்தொழிலில் உடல் சார்ந்த ஆபத்துக்கள் அதிகம். வாடிக்கையாளரால் காயப்படுத்தப்பட்டால் ஒரு விபச்சாரியால் சட்ட உதவியை நாட முடியாது. சட்டபூர்வமாக்குவது ஒரு பக்கம் அவர்களின் பாதுகாப்பையும் அதிகமாக்கும்.
குடும்ப உறவுக்கும் பாலியல் தொழிலுக்கும் உள்ள உறவையும் நாம் அலச வேண்டும். எப்போதும் நன்மை தான் தீமையை தோற்றுவிக்கிறது. பேஸ்புக்கில் பிரபலங்களை குறி வைத்து அவதூறு எழுதுபவர்களை பாருங்கள். அவர்கள் முழுக்க முழுக்க எதிர்ப்பதன் வழியாக தான் தம் அடையாளத்தை உருவாக்குவார்கள். ஒரு பிரபலம் தன் கணக்கை அழித்து விட்டு பேஸ்புக்கை விட்டு விலகினால் அவரை எதிர்ப்பதை மும்முரமாக செய்பவர்கள் அனாதரவாகி விடுவார்கள். அவர்களின் உயிர்மூச்சே அந்த பிரபலம் தான். அவரது ஒவ்வொரு சொல்லையும் இவர் திரித்து தனதாக்கி கொள்வார். அவர் மௌனித்தால் இவரும் மௌனமாக வேண்டியது தான். குடும்பமும் விபச்சாரமும் இப்படித் தான். குடும்பம் இல்லாவிட்டால் விபச்சாரமும் இல்லை. இதையே திருப்பியும் சொல்லலாம்.
ஆக, விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கினால் குடும்ப அமைப்பு சீர்குலையும் என்பது ஒரு அபத்தமான வாதம். ஏனென்றால் ஏற்கனவே பல வாடிக்கையாளர்கள் திருமணமான ஆண்கள் தாம். குடும்ப அமைப்பின் கடுமையான இறுக்கம், அலுப்பு, சிக்கல்களில் இருந்து ஒரு தற்காலிக விடுதலையாக விபச்சாரம் இந்த ஆண்களுக்கு பயன்படுகிறது. சட்டபூர்வமாக்குவதன் முன் அழியாத குடும்ப அமைப்பு புதிதாக இப்போதும் ஒன்றும் அழியப்போவதில்லை. சொல்லப்போனால் குடும்ப அமைப்பு தன் நிலைப்புக்கு பாலியல் தொழிலுக்கு கடன்பட்டுள்ளது எனலாம்.
சட்டபூர்வமாக்குவதன் பிரச்சனை விபச்சாரத்துக்கு, அதன் மூலம் உடலை பயன்படுத்துவதற்கு, சமூக அங்கீகாரம் வழங்குதில் தான் உள்ளது. தொலைபேசி மூலமாக செக்ஸ், இணைய அரட்டை மூலமாக காட்சிபூர்வ செக்ஸ் ஆகியவற்றை சட்டபூர்வமாக்கி பாருங்கள். கிட்டத்தட்ட யாருமே எதிர்க்க மாட்டார்கள். கற்பு என்பது ஒரு கற்பனை என அறிவியல் நிரூபித்து விட்டது. மேலும் இன்றைய பெண்களில் திருமணத்துக்கு முன் கணிசமானோர் கன்னியாக இருப்பதில்லை. இதையும் இன்றைய நகர்வாழ் இளைஞர்கள் ஏற்க தயாராக இருக்கிறார்கள். உடலுறவு என்பது ஒரு தற்காலிக செயல், அது ஒரு பெண்ணின் உடலையோ மனதையோ மாற்றி விடாது என அவர்கள் அறிவர். அப்படி இருக்கையில் விபச்சாரம் நமக்கு பிரச்சனைக்கு உரியதாக இருப்பதன் காரணம் அதன் பௌதிக தன்மை தான். அது நாம் பார்க்க விரும்பாத ஒரு நிர்வாண தேகத்தை பட்டவர்த்தமாக்கி விலை பேசுகிறது. செக்ஸ் அல்ல இந்த உடலின் பௌதிக தன்மையை ஏற்பது தான் நம் அடிப்படை சிக்கல்.
இறுதியாக ஒரு கேள்வி. விபச்சாரத்தை ஆதரிப்பவர்கள் தங்களது சகோதரி அல்லது குழந்தை விபச்சாரி ஆவதை விரும்புவார்களா? மாட்டார்கள். ஏன்? முதலில் ஒரு நல்ல தொழிலுக்கான பண்புகள் அதில் இல்லை. ஒன்று அதை தொடர்ந்து செய்து ஒருவர் திறன்களை அதிகரித்து சமூகத்தின் மேல்மட்டத்தை அடைய முடியாது. விபச்சாரம் ஒரு தற்காலிக தொழில். அதன் வருமானத்தை வியாபாரத்தில் முதலீடு பண்ணி முன்னேறி நாற்பது வயதில் ஓய்வு பெறத் தான் உத்தேசிக்கிறார்கள். இன்னும் இரு பிரச்சனைகள் எய்ட்ஸும், சமூக அவமானமும். நாம் ஒரு வேலை மூலம் சமூக அங்கீகாரத்தையும் தான் வேண்டுகிறோம். ஆக யாரும் இங்கு விபச்சாரத்தை ஆதரிப்பது இல்லை. அது சமூக முன்னேற்றத்தில் பங்கு பெற முடியாமல் எங்கோ ஒரு கட்டத்தில் முடங்கிப் போனவர்களுக்கு ஆன ஒரு தற்காலிக தொழில். இத்தொழிலை தக்க வைப்பவை எவை என்கிற கேள்வியை தான் ஆதரவாளர்கள் கேட்க விரும்புகிறார்கள். விபச்சாரத்தை நேரடியாக முடக்குவது என்பது சாத்தியம் அல்ல. அதை இருட்டுக்குள் வைத்திருக்க நாம் விரும்புவது ஆரோக்கியமானதும் அல்ல.
விபச்சாரத்தின் ஊற்றுக்கண் என குடும்ப அமைப்பு மற்றும் ஆணாதிக்கவாதத்தை சொல்லலாம். நம் குடும்ப அமைப்பை தளர்த்துவது, சுதந்திரமானதாக மாற்றுவது ஒரு தீர்வு. ஒரு ஆண் ஒரே பெண்ணுடன் இறுதி வரை வாழ்வதை சமூகம் கட்டாயமாக்குகிறது. இதை தளர்த்த வேண்டும். ஆணும் பெண்ணும் குடும்பமாக அல்லாமலும் சேர்ந்து வாழ்வதை ஒரு நடைமுறையாக ஏற்பதும் மற்றொரு தீர்வு. அடுத்து பெண்களுக்கு போதுமான கல்வியறிவும், வேலை வாய்ப்புகளும் அளித்து ஆண்களின் பிடியில் இருந்து அவர்களை விடுவிப்பது. பெண்கள் முழுக்க முழுக்க சுயசார்பு கொண்டவர்களாக இருப்பதை ஒரு ஒழுக்க குற்றமாக இன்று பார்க்கிறோம். குடும்ப வாழ்வை முன்னிறுத்தாமல் பொருளாதார முன்னேற்றம் தான் ஒரு பெண்ணின் சிறப்பு என இந்த சமூகம் ஏற்றால் அதுவும் பயன்படும். இன்று தம் குடும்பத்தை காப்பாற்ற விபச்சாரத்துக்குள் ஈடுபடுகிற பல பெண்கள் இருக்கிறார்கள். சிறுவயது முதலே சம்பாதித்து சுயசார்பை அடைவதை கற்றுக் கொடுத்து வலியுறுத்தி, அதற்கான வாய்ப்புகளையும் வழங்கி இருந்தால் இப்பெண்களின் வாழ்வு வேறு விதமாக இருக்கும். பாலியல் தொழில் என்பது ஆண்கள் பெண்கள் மீது செய்யும் ஒரு பொருளாதார சுரண்டலும் தான். ஒரு சமத்துவ சமூகத்தில் விபச்சாரத்தை விட நன்றாக பணம் ஈட்டுகிற வேலை வாய்ப்புகளும் அதற்கான தகுதிகளும் பெண்களுக்கு ஏராளமாக இருக்கும்.
இந்த இரண்டு பிரச்சனைகளும் சரியாகும் போது மாபியாக்களின் கையில் இருந்து விபச்சாரத்தை விடுவிப்பது எளிதாகும். ஆனாலும் இன்னொரு காரணத்தால் விபச்சாரம் ஒரு சின்ன அளவில் இருந்து கொண்டு தான் இருக்கும். செக்ஸில் ஈடுபடும் முன் நாம் கடுமையான தேர்வுக்கு நம் எதிர்தரப்பை உள்ளாக்குகிறோம். உடல் குறை உள்ளவர்கள், வசதி, வாய்ப்பு, அறிவு இல்லாதவர்கள் இந்த தேர்வில் தோற்பார்கள். இதன் பின் இயங்குவது சிறந்தவர்களுடன் இணைந்து சிறந்த வாரிசை உருவாக்குவதற்கான ஒரு உயிரியல் விழைவு. இத்தேர்வினால் புறம் ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஒரு சுதந்திரமான பாலியல் சமூகத்தில் கூட போதுமான செக்ஸ் துணைகள் இருக்காது. அது ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். இந்த தேவை ஒரு புறம் பாலியல் தொழிலை உயிரோடு தான் வைத்திருக்கும். ஆனால் ஒரு ஆரோக்கியமான சமூகத்தில் விபச்சாரம் இந்தளவுக்கு அவமானகரமானதாக, ஆபத்தானதாக, மாபியாவால் கட்டுப்படுத்தப்படுகிற ஒன்றாக இருக்காது. யுனானி மருத்துவம் போல் அது ஒரு ஓரமாக இருக்கும்.
(”அறிந்ததும் அறியாததும்” அமிர்தா பத்தித் தொடரில் இம்மாத கட்டுரை)
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates