Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Wednesday, 8 January 2014

ராஜீவ் காந்தி சாலை





விநாயக முருகனின் ”ராஜீவ் காந்தி சாலைக்கு” ஒரு நல்ல நாவலுக்கான சில குணங்கள் உள்ளன. ஒன்று பிரம்மாண்டம். தமிழில் பிரம்மாண்டத்தை கதைத்தளத்தில் உருவாக்க ஆயிரம் வருட குடும்ப / ஜாதி வரலாற்றை புனைவில் கொண்டு வருகிறார்கள். இது சற்று மூச்சு வாங்க வைக்கக் கூடியது. நல்ல நாவல்கள் மாற்றுப் பார்வைகள் அல்லது விவாதங்கள் வழி பிரம்மாண்டத்தை தொனிக்க வைக்கும். உ.தா “விஷ்ணுபுரம்”. வாழ்வின் அர்த்தத்தை காமம், இலக்கியம், ஞானத்தேடல் எனும் மூன்று வழிகளில் தேடுபவர்களின் பாதை ஒரேயளவு தீவிரமானது என விரிவாக பேசும் நாவல் அது. ”ராஜீவ் காந்தி சாலை” விஷ்ணுபுரம் வகையை சேர்ந்தது அல்ல என்றாலும் மாறுபட்ட பார்வையில் ஒரே விஷயத்தை பேசுவதன் வழி ஆசிரியர் ஒரு விரிவை சித்தரிக்கிறார்.

உதாரணமாய், பெண்கள், ஜாதி, திராவிட அரசியல், முன்னேற்றம் குறித்து மென்பொருள் நிறுவன முதலாளிகள், பொறியாளர்கள், அவர்களுக்கு கீழ் உள்ள தொழிலாளர்கள், கடை வியாபாரிகள் வரை எப்படி பேசுகிறார்கள் என திறமையாய் சித்தரிக்கிறார். பிராமணர்களும், சூத்திரர்களும் ஒருசேர பெரியாரை பாராட்டுகிறார்கள். சூத்திரர்கள் அவர் பிராமணர்களை “அடித்து விரட்டியதற்காக”, பிராமணர்கள் தாம் அவ்வாறு தமிழகத்தில் இருந்து துரத்தப்பட்டதால் வெளிமாநிலங்களும் நாடுகளுக்கும் சென்று முன்னேறியதற்காக. தேவர்களும், செட்டியார்களும் பிராமணர்களை தூஷிக்கும் அதே வேளையில் தலித்துகளை கீழாக நடத்துவதில் லஜ்ஜையற்று இருப்பதையும் காட்டுகிறார். இது ஒரு ஆழமான தனித்துவமான பார்வை அல்லாமல் இருக்கலாம், ஆனால் மனிதர்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என வாசகனை வியக்க வைக்கிறது. இது முக்கியம்.
ஒரு நாவலில் அடுத்து முக்கியம் வாசிப்புக்கான சரளமும் சுவாரஸ்யமும். இந்த நாவல் அவ்விசயத்தில் முதல் மதிப்பெண் வாங்குகிறது. சுமார் ஒரே நாளில் இந்நாவலை நீங்கள் டாப் கியரில் வாசித்து முடிக்க முடியும். பெரிய களைப்பில்லாமல் இக்கதையை உள்வாங்க முடியும்.
நிறைய சிறு கதாபாத்திரங்கள் வருகிறார்கள். பாத்திரங்கள் அதிகமாக நாவல் மெல்ல மெல்ல தடுமாறி திசைமாறி சொதசொதவென ஆகி விடும். அல்லாவிட்டால் சில பாத்திரங்கள் ஒரு சில பத்திகளுக்கு என்று உதயமாகி காணாமல் போய் விடுவார்கள். வாசகன் நாவலில் மெல்ல மெல்ல ஆர்வமிழப்பான. இன்னொரு சிக்கல் நிறைய பாத்திரங்கள் வரும் போது ஒரு கட்டத்தில் ஆசிரியனுக்கு பாத்திரங்களும் பெயரும் நோக்கமும் மறந்து போக வாய்ப்புண்டு. ஒரு சில பாத்திரங்களுக்கு மட்டும் அதிக பக்கங்கள் ஒதுக்கி நாவலை அங்கங்கே வீங்க விட வாய்ப்புண்டு. விநாயக முருகன் இந்த விபத்துகளில் இருந்தெல்லாம் நாவலை திறமையாய் காப்பாற்றி இலக்கை சென்று அடைகிறார். முதல் நாவலுக்கு இது பாராட்டத்தக்கது.
சரி இந்த நாவலின் கரு அல்லது நோக்கம் என்ன எனக் கேட்போம். ஒன்று இன்றைய மென்பொருள் யுகத்தில் உருமாறும் ஆண் பெண் உறவுகளும், கட்டற்ற காமத்தின் சிக்கல்களும். முதலாளிகள், ஊழியர்கள், கீழ்த்தட்டு மக்கள் என எல்லா தட்டினருக்கும் பொருத்தி காமம் வர்க்கத்துக்கு வர்க்கம் ஒரே அழுத்தத்துடன் விகாரங்களுடன் வெளிப்படுவதை சொல்லுகிறார். ஏற்கனவே சொன்னது போல் ஒரு விரிவைத் தர இது பயன்படுகிறது. ஆனால் தட்டையாகவும் உள்ளது. பல முறைகேடான காம உறவுகளை கிசுகிசு போல் விவரிக்கிற விநாயக முருகன் நுணுக்கமான சித்தரிப்புகளை உருவாக்கி அவற்றை அணுகிப் போவதில்லை. பெரும்பாலான காட்சிகள் துவங்குகிற இடத்தில் முடிகின்றன. சுஜா தன் திருட்டு காதலன் கௌஷிக்கின் உடலை அறிகிற இடத்தை சொல்லலாம். அந்த கள்ள உறவு அனுபவம் அவளுக்கு எப்படியான வியப்புகள், புதுமைகளை தருகிறது என்பது ஒரு நாவலாசிரியனுக்கு அல்வா போன்ற இடம். ஆனால் விநாயக முருகன் இவர்களின் உறவுகள் விகாரமானவை அல்லது திசை இழந்தவை என சொன்னால் போதும், அதற்கு மேல் அதன் புது கோணங்களை விசாரிக்க வேண்டியதில்லை என முடிவெடுத்து நகர்ந்து விடுகிறார். அவர் இது போல் பல ஜன்னல்களை திறக்கிறார். வெளியே என்ன இருக்கிறது என அவசர பார்வை விட்டு விட்டு அடுத்த ஜன்னலை திறக்க அவசரமாய் கிளம்பி விடுகிறார்.
 கௌஷிக் ஒரு முக்கிய பாத்திரம். அவன் ஒரு ஜிகோலா – ஆண் விபச்சாரி. பெண்களின் மேல் கடும் வெறுப்பு கொண்டவன். சிவப்பு ரோஜாக்கள் கமலின் இன்னொரு இலக்கியத்தனமான வடிவம். சம்பிரதாயமான மென்பொருள் நிபுணர்களான பிரணவ் அல்லது கார்த்திக்கிற்கு கொடுக்கிற இடத்தை நாவலில் கௌஷிக்கு அளித்திருக்கலாம் என தோன்றுகிறது. ஏனெனில் பிரணவோ கார்த்திக்கோ நாவலில் வளர்வதில்லை. ஆனால் கௌஷிக் போன்று அடிப்படையில் சிக்கலான பாத்திரம் தானும் வளர்ந்து பிற பாத்திரங்களின் பாதையையும் குழப்பி நாவலுக்கு மாறுபட்ட கோணங்களை தந்திருக்கக் கூடும். ஆனால் விநாயக முருகன் இந்நாவல் மென்பொருள் துறை வாழ்வின் சீரழிவுகளை பேசுவது என்பதில் கராறாக இருக்கிறார். ஆம், இது நாவலின் இன்னொரு கரு.
மென்பொருள் யுகத்தின் அக மற்றும் புற சீரழிவுகளும் நாவலில் பேசப்படுகின்றன. ஆனால் இச்சித்தரிப்பு தட்டையாகவே உள்ளது. ஒரு விரிவான கான்வாஸ் உள்ளது. அங்கு ஆசிரியர் சில கோடுகளை கிழிக்கிறார். வண்ணம் இல்லாமல் ஜீவன் இல்லாமல் அது வெறும் கான்வாஸாகவே நிற்கிறது. ஆனாலும் நாவல் உருவாக்கும் பிரம்மாண்டமான கட்டமைப்பு, குறிப்பாக கடந்த பத்தாண்டுகளில் நமது புறநகர் பகுதிகளில் வந்துள்ள பொருளாதார மாற்றங்கள், முன்னேற்றம் எனும் பேரிலான பண்பாட்டு அரசியல் சீரழிவு, அநியாயங்கள் இது குறித்த சித்தரிப்பு, தமிழுக்கு புதிது. நாவலின் தனிச்சிறப்பு இது.
வேலையிழப்பு, அதன் நெருக்கடி காரணமாக பிரணவ் எனும் பொறியாளன் மெல்ல மெல்ல மனச்சிதைவுக்கு ஆளாகும் இடம் அழகாக வந்துள்ளது. இதையும் இறுதியில் கொண்டு வராமல் கொஞ்சம் முன்னே அறிமுகப்படுத்தி சாலையில் கைவிடப்படும் பைத்தியங்களுடன், சமூகத்தில் ஒரு மேல் தளத்தில் பிரணவ் மனநிலை பிறழ்ந்து பயணிக்கையில் வரும் விபரீதங்களை சித்தரித்திருக்க முடியும். உ.தா, “பின் தொடரும் நிழலின் குரலில்” அந்த தோழரின் மனச்சிதைவின் சித்திரம் போல் ஒரு அழுத்தமான் பதிவை இங்கு கொண்டு வந்திருக்க முடியும்.
இந்நாவலில் இன்னொரு அழகான பகுதி ரியல் எஸ்டேட் வியாபாரிகள் நிலத்தை எப்படி விழுங்கி கணக்குப்போட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது. இது நிச்சயம் படிக்க வேண்டிய ஒரு இடம்.
ஆண் பெண் உறவுகளில் வந்துள்ள சிக்கலுக்கு ஆசிரியர் ஒரு விளக்கம் தருகிறார். கடினமான வேலைப்பளு, குடும்பத்துக்கு நேரமின்மை, இதனால் வரும் காமவறட்சி, பொருட்களை வாங்கிக் குவிப்பதிலே திருப்தி அடைந்து விடுவது – சுருக்கமாக வேலையும் பொருள் ஆசையும். நாவலின் ஊடாக மீள் மீள தரப்படும் இந்த விளக்கம் வாசகனை யோசிக்க விடாமல் செய்கிறது என்பது ஒரு பிரச்சனை. மேலும் மென்பொருளில் இல்லாதவர்களுக்கும் தான் விநாயக முருகன் குறிப்பிடும் தாம்பத்திய அதிருப்தியும் அநிச்சயமும் உள்ளது. இது ஒட்டுமொத்தமாக நாம் இன்று சந்தித்து வரும் ஒரு பண்பாட்டு பிரச்சனையும் தான். இந்த பிரச்சனையின் பற்பல சிக்கல்களை நோக்கி, விடை காண முடியா புதிர்மையை நோக்கி நம்மை தள்ளி இருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். நாவலில் தற்கொலை செய்யும் காதலர்களின் விசயத்தில் இந்த நுட்பத்தை கையாண்டிருக்கிறார். நாவல் முழுக்க இந்த மௌனம் வந்திருந்தால் இன்னும் அடர்த்தியாக வந்திருக்கக் கூடும்.
நாவலின் இன்னொரு பிரச்சனை முதலாளி-தொழிலாளி ஏற்றத்தாழ்வு, வர்க்க வேறுபாடு தான் சமூகப்பிரச்சனைகளின் அடித்தளம் எனும் இடதுசாரி கோணம். இது தமிழில் பலமுறை அழுத்தமாக பேசப்பட்டு விட்ட ஒரு கோணம். காலம் வந்து பேசும் இடங்களும், குரான் மேற்கோள்களும் செயற்கையான பயன்பாடுகளாக தோன்றுகின்றன.
இன்னும் மேலாக செய்திருக்கலாம் என நான் குறிப்பிட்டுள்ள விசயங்களை இந்நாவலை ஒரு ஜாலியான வாசிப்புக்கான நாவலாக பார்க்கையில் அவசியமற்ற பரிந்துரைகள் என்றும் கூறலாம். அதாவது இந்நாவலை எந்த வகையிலானது என தெளிவுபடுத்துவது அது குறித்த குழப்பங்களை அகற்றும். “ராஜீவ் காந்தி சாலையை” ஒரு வணிக நாவல் என வகைப்படுத்தினால் நான் கூறியுள்ள விமர்சனங்கள் கிட்டத்தட்ட அவசியமற்றவை ஆகும். இலக்கிய நாவல் என்றால் சாரு செய்தது போல் கராறாக பல இடங்களில் நீங்கள் நிராகரிக்கவும் மறுக்கவும் முடியும். ஆனால் இது ஒரு இடைநிலை நாவல். நா.அசோகனின் “போதியின் நிழலில்” அல்லது சேத்தன் பகத்தின் One Night at Call Center, மனு ஜோசப்பின் Serious Men அல்லது குஷ்வந்த சிங்கின் The Company of Women போல் ஒரு படைப்பு. இலக்கிய நயமும் தீவிரமும் கொண்ட ஆனால் கதையை அதிகம் சிடுக்காக்காமல் சரளத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகை எழுத்து. அதனாலே இந்நாவலை சாரு செய்தது போல் கராறாக விமர்சிப்பதும் அநியாயம். ஏனென்றால் இடைநிலை நாவல்களில் நிச்சயம் தேய்வழக்குகளும், கொஞ்சம் பொதுபுத்திக்கு தோதான மிகைகளும் இருக்கும். எழுத்தாளன் தன் ஆளுமையை தன்னை அழுத்தமாக கதைகூறலில் வெளிப்படுத்த மாட்டான். உ.தா, போரும் அமைதியும் நாவலில் ஒரு இளம் சீமாட்டி வருவாள். ஒரு விருந்தில் அமர்ந்திருப்பாள். அவள் கர்ப்பிணி. அதற்கான புஷ்டியும் மிளிர்வும் பூரிப்பும் அவளிடத்து தெரியும். அவளை சந்தித்து பார்க்கும் யாரும் வாழ்க்கை குறித்த ஒரு உற்சாகத்தை, நேர்மறை எண்னத்தை அடைகிறார்கள் என்கிறார் தல்ஸ்தாய். இது தல்ஸ்தாயின் ஒரு தனிப்பட்ட பார்வை. பெண்மையின் உச்சம் தாய்மை என அவர் நம்பினார். தாய்மையை கொண்ட பெண் ஒரு தனித்துவமான நிறைவுடன் இருப்பதாய் கூறினார். இந்த இடத்தில் அதைத் தான் உணர்த்துகிறார். ஒரு இலக்கிய எழுத்தாளன் தான் இப்படி சிறு சித்தரிப்பிலும் தன் பார்வையை நிறுவுவான். இலக்கிய எழுத்தாளனிடம் தேய்வழக்குகள் இருக்கும். ஆனால் அவன் அதை கதைகூறலில் தெரியும் தன் ஆளுமையின் ஆதிக்கம் மூலம் கிட்டத்தட்ட மறைத்து விடுவான். இடைநிலை எழுத்தாளன் இது போன்ற இடங்களில் சத்தமில்லாமல் மறைந்து நின்று எளிமையாய் கதை சொல்லி நகர்ந்து விடவே நினைப்பான். உண்மையில் தேய்வழக்கு என்பது “துக்கம் தொண்டையை அடைக்கிறது” என சில வழமையான வாக்கியங்களை உருவாக்குவது அல்ல. அது ஒரு பொதுவான மொழியில் இயங்குவது. ஒரு சின்ன அப்பாவித்தனத்துடன் எழுதுவது. விநாயக முருகன் நாவலின் இறுதி அத்தியாயங்களில் இலக்கிய மொழியை பயன்படுத்துவதை கவனிக்கலாம். அங்கெல்லாம் தேய்வழக்குகள் தெரியாது.
இடைநிலை நாவலுக்கு விமர்சனமே தேவையில்லை என்பதும் நாவலை தன் நிலையில் இருந்து வெகுவாக கீழிறக்குவதாகும். ஒரு மையமான மனநிலையில் இருந்து ரசித்தும் யோசித்தும் இத்தகைய நாவல்களை வாசிப்பது நலம். அப்படிப் பார்க்கையில் விநாயக முருகன் இன்னும் பல கவனிக்கத்தக்க நாவல்களை எழுதக் கூடியவர் எனத் தோன்றுகிறது. அவருக்கு ஒரு கணிசமான நாவல் வாசகர்களின் தரப்பும் உருவாகும். இந்த வருடம் “ராஜீவ் காந்தி சாலையுடன்” வேறு சில இடைநிலை நாவல்களும் வெளியாகின்றன. அடுத்த சில வருடங்களில் நாவல் தளத்தில் பல முயற்சிகள் நிகழ இருக்கின்றன. புது உலகங்கள் பதிவாகப் போகின்றன.
 ராஜேஷ் குமாருக்கு அடுத்து சுஜாதா. சுஜாதாவுக்கு அடுத்த நிலை பாலகுமாரன், அவருக்கு அடுத்த நிலை தி.ஜா என்றும் கருதுபவர்கள் இருக்கிறார்கள். விநாயக முருகன் தன் சமூக நிலைப்பாடு, அழுத்தமான அரசியல் நம்பிக்கைகள், பார்வைகள் காரணமாய் பாலகுமாரனுக்கும் தி.ஜவுக்கும் இடையிலான ஒரு இடத்தை நிரப்புகிறார். தமிழ் வாசகர்கள் ஒரு சுவாரஸ்யமான காலத்திருப்பத்தில் நிற்கிறோம் எனத் தோன்றுகிறது.
Read More

Saturday, 9 November 2013

திருடப்பட்ட தேசம்


பொதுவாக சூழலியல் கட்டுரைகள் அலுப்பாக இருக்கும். வெறும் தகவல்கோர்வையாக அல்லது வியப்பூட்டும் செய்திகளை ஆச்சரியக்குறிகளால் நிறைத்து மூச்சு முட்ட வைக்கும். ஆனால் நக்கீரன் “பூவுலகு”, கொம்பு, “வலசை” போன்ற சிறுபத்திரிகைகளில் எழுதின கட்டுரைகளின் தொகுப்பான “திருடப்பட்ட தேசம்” மிகவும் வாசிக்கத்தக்க தகவல்பூர்வமான சரியான அணுகுமுறை கொண்ட நூல். ஒரு சூழலியல் ஆர்வலருக்கு அரசியலும் தெரியும் போது தான் இத்தகைய விரிவான பார்வை கொண்ட எழுத்து சாத்தியமாகும்.

பன்னாட்டு நிறுவனங்களின் இன்று இந்தியா முழுக்க வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டி வரும் பின்னணியில் நக்கீரன் இப்பிரச்சனைகளை சூழலியல் அடிப்படையில் இந்நூலில் விவாதிக்கிறார். மருத்துவ ஆய்வுகளின் பேரில் உலகம் முழுக்க பழங்குடிகளின் பாரம்பரிய அறிவு திருடப்பட்டு அலோபதி மருந்துகளாக விற்கப்படும் தொழிலாக நடைபெறும் அவலத்தை குறித்த கட்டுரை “மழைக்காடுகளில் திரியும் மருந்து கொள்ளையர்கள்” முக்கியமானது. அகத்திய மலையில் உள்ள காணிகள் எனும் பழங்குடிகளிடம் இருந்து உடலாற்றலை மேம்படுத்தும் ஜின்செங் எனும் தாவரத்தை அறிந்து கொள்ளூம் ஆய்வாளர்கள் சிலர் இதை ஒரு மருந்து நிறுவனத்துக்கு ஐந்து லட்சத்துக்கு விற்க அவர்கள் ஒரு ஒப்பந்தம் போடுகிறார்கள். பழங்குடிகளுக்கு உரிமைத் தொகையாக ஐந்து லட்சமும் தர வேண்டும். இத்தாவரத்தை அடையாளம் காட்டிய மாதன் குட்டிக்காணி டைம்ஸ் பத்திரிகையில் இடம் பிடிக்கிறார். ஆனால் இன்றும் மாதன் குட்டிக்காணி தன் நோயுள்ள இரு பெண் குழந்தைகளுக்கு மருத்துவம் செய்ய காசின்றி தவிக்கிறார். அவருக்கு மட்டுமல்ல எந்த பழங்குடிக்கும் ஒப்பந்தப்படி பணம் வழங்கப்படவில்லை. மருந்து நிறுவனம் மருந்தின் சூத்திரத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்க விற்பனை கோடிகளில் புரள்கிறது. மருந்து நிறுவனம் காணிகளுக்கு சல்லிப்பைசா தராமல் ஏமாற்றி விட்டது. எதிர்த்து வழக்காட பழங்குடிகளுக்கு சக்தியோ கல்வியோ இல்லை. நக்கீரன் கூறுவது போல் இது சூழ்ச்சி, திருட்டு மற்றும் சுரண்டல் தான். அதாவது அறவியல் படி. சட்டப்படியோ வியாபாரரீதியாகவோ பேட்டண்ட் வாங்காத பாரம்பரிய மருத்துவத்துக்கு நாம் உரிமை கொண்டாட முடியாது. நம்மால் செய்ய முடிவது பழங்குடிகளிடம் இன்று உள்ள மூலிகை அறிவை ஆவணப்படுத்தி பழங்குடிகளுக்கு போதுமான வெகுமதியும் கல்வியறிவும் வழங்கி மேம்படுத்துவது தான். இதை அரசே செய்ய வேண்டும். மாறாக அரசு பழ்ங்குடிகளை துரத்தி கானகங்களை கையகப்படுத்தவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உள்ளூர் முதலாளிகளுக்கும் தாரை வார்ப்பதிலேயே அதிக அக்கறையுடன் இருக்கிறது.
“பிஞ்சு வௌவாலுடன் ஒரு நாள்” வெகுசுவாரஸ்யமான கட்டுரை. ஆசிரியர் ஒரு குஞ்சு வவ்வால் தரையில் ஊர்ந்து போவதை பார்த்து அதை எப்படி காப்பாற்றுவது என யோசிப்ப்தில் இருந்து இது துவங்குகிறது. விளக்குமாறு குச்சியில் அதை ஏந்தி இருட்டான இடத்தில் வைக்கிறார். அதன் தாய் வந்து எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கிறார். கட்டுரை முடிவில் வவ்வால் குஞ்சு அந்த இடத்தில் இல்லை. “தாய் வௌவால் எடுத்து போயிருக்கலாம். அப்படித் தானே நீங்களும் நம்புகிறீர்கள்?” என முடிக்கிறார். அவநம்பிக்கையும் நம்பிக்கையும் கலந்த இந்த பதபதைப்பு சூழலியல் மற்றும் பழங்குடி உரிமை மீது அக்கறை கொண்ட எல்லோருக்குமானது தான். கானுயிரும் கான்வாழ் மனிதரும் இந்த வௌவால் குஞ்சை போல் தொட்டார் நொறுங்கி விடும்படி பலவீனமானவர்கள். இது போன்ற அழகான நெகிழ்ச்சியான முடிவுகளை எழுதுவதில் நக்கீரனுக்கு ஒரு தனி லாவகம் இருக்கிறது. இக்கட்டுரையின் முடிவும் அப்படிப்பட்டது. வௌவால்களை ஏன் இயற்கை உருவாக்கியது (இரவுப்பூச்சிகளின் எண்ணிகையை கட்டுப்படுத்த), வௌவாலால் ஏன் ஒன்றுக்கு மேல் குட்டி ஈன முடிவதில்லை (கர்ப்ப பாரத்தை சுமந்து பறப்பதில் உள்ள சிரமம்) என ஒரு வௌவாலால் 60 வகையான தாவரங்களை ஒரு நிலத்தில்  புதிதாக உருவாக்க முடியும் என பல தகவல்களை அறியும் போது நம் அறியாமை மீது லஜ்ஜையை விட பிரபஞ்ச மனம் மீதான வியப்பு தான் அதிகமாகிறது. இயற்கை அறிவை பொறுத்தவரையில் மனிதனும் மண்புழுவும் ஒன்று தான்.
   “குழந்தைகள் மீது மருத்துவம் நிகழ்த்தும் வன்முறைகள்” தடுப்பூசியின் அபாயங்களை விரிவாக அலசுகிறது. நம் அறிவியல் எவ்வளவு குருட்டுத்தனமான லாபவெறியுடன் இயங்க முடியும் என்பதற்கு பல சான்றுகள் தருகிறார். மனிதர்களுக்காக மருந்துகள் உருவாக்கப்படுவதில்லை, மனிதர்கள் மருந்து நிறுவனங்களின் லாபத்துக்கு பலியாக்கப்படுகிறார்கள் என்கிறார். இது நாம் அறிந்தது தான். ஆனால் குழந்தைகளின் உடலுக்கு இவ்வளவு அலட்சியத்துடன் விஷமான வேதிப்பொருட்கள் பல கலந்த தடுப்புமருந்துகள் செலுத்தப்படுகின்றன என்பதை ஜீரணிக்க வெகுசிரமமாக இருக்கிறது. கணிசமான நோய்கள் தன் பாட்டுக்கு தோன்றி மறையக் கூடியவை. தடுப்புமருந்து தரப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இந்நோய்களால் பின்னர் தாக்கப்படுகிறார்கள். மேலும் இந்த தடுப்புமருந்துகள் மூளை வீக்கம் ஏற்படச் செய்யக் கூடியவை. அமெரிக்காவில் தடுப்பு மருந்துகளால் ஆட்டிசம் எனும் மூளைக்கோளாறு குழந்தைகளுக்கு ஏற்படுவது 3000 மடங்கு பெருகியிருக்கிறது. இத்தகவல்கள் மிகவும் அச்சமூட்டக்கூடியவை. இனிமேலும் செய்தித்தாள்களில் நோய்த்தடுப்பு சொட்டு மருந்து தரப்பட்ட குழந்தைகள் மரணம் எனப் படிக்கும் போது அது ஏதோ அந்த மருந்தில் கோளாறு என அலட்சியமாக நாம் தாண்டி சென்று விட முடியாது. போலியோ தடுப்புமருந்தை கண்டுபிடித்தவரான ஜொனாஸ் சால்க் தன் தடுப்புமருந்து வீணானது என கூறும் போது சொட்டுமருந்து தரப்படாததால் போலியோ வியாதி தாக்கப்பட்ட, அப்படியே இதுநாள் அவரை நம்ப வைக்கப்பட்ட எனக்கு அதை எப்படி எடுத்துக் கொள்ள எனத் தெரியவில்லை.
மஞ்சள் காமாலை தடுப்புமருந்தை அமெரிக்காவில் தடை செய்ய கடும் நஷ்டமடையும் மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக இம்மருந்தை ஆந்திராவில் உள்ள நாலரை லட்சத்துக்கு மேலான பள்ளிக்குழந்தைகளுக்கு பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் அளிக்கிறார்கள். இந்த செலவை பில்கேட்ஸ் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் முதல்தவணை மட்டும் தான். மிச்சதவணைகளுக்கான கோடிக்கணக்கான செலவு அரசின் தலையில் விழுகிறது. இம்மருந்து நிறுவனங்களின் கணிசமான பங்குகளை வாங்கி உள்ள பில்கேட்ஸின் புகழை பரப்பவும் கொடை போல் தெரிந்த இந்த முதலீடு பயன்பட்டு, கோடிக்கணக்கில் லாபமும் ஈட்டித் தந்தது. ஏழை இந்தியர்களை பலியாக்கி அமெரிக்க நிறுவனங்கள் தம்மை தக்க வைத்தும் கொண்டன. HPV வைரஸ் கர்ப்பப்பை நுழைவாயிலில் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடியது. ஆனால் கட்டற்ற பாலுறவில் ஈடுபடும் பெண்களைத் தான் இந்த வைரஸ் தாக்கும். இதற்கான தடுப்பு மருந்தை சோதிக்க அமெரிக்க நிறுவனம் ஒன்று ஆந்திராவில் உள்ள 14,000 14 வயது சிறுமிகளை பயன்படுத்தியது. இதில் 120 சிறுமிகளுக்கு மோசமான பின்விளைவுகள் ஏற்பட்ட அவலம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு புறம் தரப்பட்டு ஐந்து வருடங்கள் மட்டுமே பலன் தரக்கூடிய மருந்தை ஏன் 14 வயதுள்ள, பாலியல் அனுபவமே அநேகமாய் இல்லாத குழந்தைளுக்கு தர வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது. நம்மூரில் மருந்து சோதனைகள் எவ்வளவு அலட்சியமாய் அபத்தமாய் நடக்கிறது என்பதற்கொரு உதாரணம் இது.
“பகன்றை பன்னிரெண்டு” எனும் பகன்றை பூ ஒன்றின் பின்னுள்ள வரலாற்று கதையை, அரசியலை பேசும் கட்டுரையும் வாசிக்கத்தக்கது. “திருடப்பட்ட தேசம்” பிரித்தானிய காலனியாக இருந்த மாலத்தீவின் பகுதியாக இருந்து பின்னர் பிரித்தனால் அமெரிக்காவுக்கு விற்கப்பட்டு ஒருநாளில் தம் வாழ்நிலத்தை இழந்த ஆயிரக்கணக்கான சாகோஸ் தீவு மக்களின் அவலமான கதையை சொல்கிறது. பலவீனமான தேசங்களும் மக்களும் இன்று உலகம் முழுக்க அரசியல்-ஆயுத வியாபார கூட்டு படையெடுப்புக்கு ஆளாகி வருவதை சித்தரிக்கிறது.
 கட்டுரைக்கும் சிறுகதைக்கும் இடையில் உள்ள மெல்லிய கயிற்றில் நடக்கத் தெரிந்தவர்கள் தாம் அற்புதமான கட்டுரையாளர்களாக இருக்கிறார்கள். நக்கீரன் அப்படி ஒருவராக நம்பிக்கை ஊட்டுகிறார்.

Read More

Wednesday, 7 March 2012

கால்கள்: இதுவரை கவனப்படுத்தாத ஒரு வாழ்வு – இமையம்



கால்கள் நாவல் இதுவரை தமிழ் இலக்கியம் கவனப்படுத்தாத ஒரு வாழ்வை வாசகர் முன் வைத்திருக்கிறது.  அந்த வகையில் இந்த நாவல் முக்கியமானது.  ஒவ்வொரு மனிதனுக்கும் கனவு, லட்சியம், ஆசை, நோக்கம், எதிர்பார்ப்பு என்று பல இருக்கிறது.  அவற்றை நோக்கித்தான் ஒவ்வொரு மனிதனும் ஓடிக்கொண்டிருக்கிறான்.  கனவை, லட்சியத்தை, நோக்கத்தை, ஆசையை, எதிர்ப்பார்ப்பை அடைந்துவிட்டார்களா யாராவது?
  தெரியாது.  கால்கள் நாவலில் வரக்கூடிய மதுவுக்கும் ஆசை, லட்சியம், கனவு, எதிர்பார்ப்பு, நோக்கம் எல்லாம் இருக்கிறது.  அவளும் மனிதப் பிறவிதானே.  ஆனால் அவளுடைய கனவு, ஆசை, லட்சியம், நோக்கம் - மாடி வீடு கட்டுவதல்ல.  கோடீஸ்வரி ஆவது, உலக அழகியாவது, தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து தன்னை சிகப்பியாக்கிக்கொள்வது, படித்த, நாகரீகமான, ரொம்பவும் அழகான- அதேநேரத்தில் ஆடம்பரமான வாழ்க்கைக் கொண்ட, முக்கியமாக அமெரிக்காவில் வேலை செய்கிற- குறைந்தப்பட்சம் இந்தியாவில் பன்னாட்டு ஐ.டி.நிறுவனத்தில் வேலை செய்கிற மாப்பிள்ளை அல்ல.  அவளுடைய கனவு மிகவும் எளியது.  காலிப்பர், சக்கர நாற்காலி, உதவியின்றி சிறிது தூரம் காலாற நடந்து செல்ல வேண்டும் என்பதுதான்.  அது மட்டும்தான் அவளுக்கு சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது.  போலியோவால் சூம்பிப்போன, எதற்குமே உதவாத, உடலில் அனாவசியமாக ஒட்டிக்கொண்டிருக்கும் ஊளைச்சதையாக இருக்கிற, தண்ணீரில் போட்ட துணிமாதிரி கொழகொழத்து கிடக்கிற கால்கள்தான் - அவளுக்கு கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது என்று மருத்துவர் நம்புகிறார்.  சூம்பிப்போன கால்களை கொண்ட பெண்ணையும் நம்ப வைக்கிறார்.  இப்படியான ஆசீர்வாதங்களை மட்டுமே தருகிற கடவுள்கள் எதற்கு?  கர்த்தர் எதற்கு?  கால்கள் நாவலின் வழியே ஆர்.அபிலாஷ் கேட்கிற கேள்விகள்.  இக்கேள்விகள் எழுப்புவதற்காகத்தான் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
    குடலில் இருக்கிற வைரஸ் கிருமி காரணமின்றி நரம்பு மண்டலத்திற்கு வந்து - நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்கிறது.  அதனால் ஒரு குழந்தையின் கால்கள் எதற்கும் உதவாத ஒன்றாகிவிடுகிறது.  கால்கள் என்ற பெயரில் இரண்டு நூல் பந்துகளை கொண்ட மது-என்கிற இளம்பெண்ணைப்பற்றி நாவல் பேசுகிறது.  மது எப்படி வாழ்கிறாள், அவளுடைய உலகம் எப்படி இயங்குகிறது, அவளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், நண்பர்கள் என்று நாவல் அமைந்திருக்கிறது.  சக்கர நாற்காலியில் ஒரு உலகம்.  ஒரு வாழ்க்கை.  மது நடக்கிறாள்.  நடந்து நடந்து உலகையே வலம் வருகிறாள்.  அவள் நடப்பது கால்களால் அல்ல.  மனதால் மட்டுமே.  கண்களால்கூட அவள் நடக்கவில்லை.  கண்கள் பொய்ச்சொல்லும் என்பது மதுவுக்கு தெரிந்திருக்கிறது.  கண்களுக்கு உண்மையும், பொய்யும், நிஜமும் நடிப்பும் ஒன்றுதான்.  அது ஒரு திரை.  அதனால் மது தன் வாழ்வை மனதால் மட்டுமே வாழ்கிறாள்.  மனதால் மட்டுமே நடக்கிறாள்.  அவளுக்கு சாத்தியப்பட்டது அது மட்டும்தான்.  மனதிற்குள்ளாகவே ஒரு வாழ்வை நடததிச் செல்வதும் வாழ்ந்துப் பார்ப்பதும் எளிய காரியமல்ல.  மது சாகசக்காரி.
    மது இருபத்தி ஐந்து வயது பெண்ணாக இருக்கிறாள்.  ஏழு எட்டு வயதில் அவளையொத்த பிற குழந்தைகள் தெருவில் ஓடும்போது, விளையாடும்போது - மது தனி அறையில் முடங்கிக்கிடக்கிறாள்.  அப்போதே அவளுடைய உலகம் கருகிவிடுகிறது.  வாழ்நாள் முழுவதும் அவள் முடங்கித்தானே கிடக்க வேண்டும்.  காலிப்பரை மாட்டும்போதும், கழட்டும்போதும், சக்கர நாற்காலியில் உட்காரும்போதும், இறங்கும்போதும் நான்கு தப்படி தூரத்தை கடப்பதற்கு அந்த உடல் படுகிற அவஸ்தை - பெருவலி.  வாழ்நாள் முழுவதும் குழந்தையாகவே இருக்க வேண்டும் என்பது எவ்வளவு துயரமானது.  பிறரால் கையாளப்படும் ஒரு பொருள்.  மதுவின் உடல் - மனம் கொள்கிற அவஸ்தைதான் நாவல்.  மதுவுக்காக தன் வருத்தத்தை, கண்ணீராக கொட்டியிருக்கிறார் ஆர்.அபிலாஷ்.  உலகிலுள்ள எல்லா எழுத்தாளர்களுமே இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இதைத்தான் செய்ய முடியும்.  மனித உடல் படும் வாதைக்கு - தன் பங்களிப்பாக - கொஞ்சம் கண்ணீர்.
    “ஏன் எனக்கு மட்டும் கால்கள் நடக்க முடியாமல் போச்சி?” (ப.505) இந்த ஒரு கேள்வியில்தான் கால்கள் - என்ற மொத்த நாவலுமே இருக்கிறது.  இந்தக் கேள்வியை கேட்கத்தான் இந்த நாவலே எழுதப்பட்டுள்ளது.  இந்தக் கேள்விக்கு யாரிடமும் இல்லை பதில்.  நரம்பு மண்டலத்தை சீரழித்த வைரஸ் கிருமியிடம்கூட இல்லை.  நம்முடைய எல்லா கடவுளர்களும் அற்புதங்களை நிகழ்த்தி- அந்த அற்புதங்களின் வெளிச்சத்தில் தங்களை ஸ்தாபித்துககொண்டவைதான்.  அந்த அற்புதங்களின் வெளிச்சத்தில் சிறு துளிகூட மதுவின்மீது விழவில்லை.  கருவாக இருக்கும் ஒரு குழந்தை என்ன பாவம் செய்திருக்க முடியும்?  குறிப்பாக கடவுளர்களுக்கு?  எல்லாருக்கும் நோய்வரும் போகும்.  துன்பம்வரும் போகும்.  ஆனால் மதுவுக்கு வாழ்நாள் துயரம்.  நோயிலிருந்து ஒரு கணம்கூட விலகியிருக்க முடியாது.  மனநோயாளிகிற பாலுகூட சரியாகிவிடுகிறான்.  ஆனால் மது?  துயரம்தான் வாழ்க்கை.  கடவுளின் பரிசு.  கடவுளின் அற்புதம்.
    மதுவின் உலகம் கண்ணாடியால் கட்டப்பட்ட கூண்டு.  அந்த கூண்டுக்குள் அவள் மட்டும்தான் இருக்க முடியும்.  அதிலும் சில நேரங்களில் மட்டும்தான் அவளால்கூட இயல்பாக இருக்க முடியும்.  பலநேரங்களில் அவளாலேயே அந்த கூண்டு உடைந்து போகிறது.  அவளே துணிந்து உடைக்கவும் செய்கிறாள்.  அவளால் மட்டுமல்ல பிறராலும் அந்த கண்ணாடி கூண்டு உடைந்துபோகிறது.  அந்த கூண்டில் மனிதர்கள் ஓயாமல் கற்களை வீசிய வண்ணம் இருக்கிறார்கள்.  அன்பு என்ற பெயரில், இரக்கம், பச்சாதாபம், ஐயோ பாவம், சலுகை என்ற பெயரில் முன்னுரிமை, ‘நான் நொண்டியாக’ இல்லையே என்ற ஆதங்கத்தின், மனப்பொறாமையின் வழியாக கற்கள் வீசப்படுகின்றன.  இரண்டு சக்கர வாகனம் ஓட்ட உரிமம் பெற காத்திருப்பதில் கிடைக்கிற முன்னுரிமைக்காகக்கூட பொறாமைப்படுகிற சிறுமைத்தனம்.  மனிதர்களைவிட கீழ்மைப்பட்ட, சிறுமைப்பட்ட விலங்கினம் வேறு உண்டா?  இதைத்தான் நாவல் முழுவதும் ஆர்.அபிலாஷ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
    மதுவின் உலகம் கண்ணாடியிலான கூண்டு மட்டுமல்ல, கற்பனை கூண்டும்கூட.  அவளுடைய உலகில் கற்பனைதான் அதிகம்.  கொஞ்சம் சிந்தனை - அதைவிடவும் சிறியதாக - ஒரு துளிபோல எதார்த்தம்.  அந்த ஒரு துளி எதார்த்தம்கூட அப்பா, அம்மா, நண்பர்கள், மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும்போது கிட்டுகிறவர்கள்.  மொத்தத்தில் மதுவின் வாழ்விடம் வீட்டிலுள்ள சிறிய அறையும், மருத்துவ மனையும்தான்.  பெயருக்குத்தான் கல்லூரி இருக்கிறது.  சதா விழுந்துகொண்டே இருப்பதற்குக் காரணம் வெளி உலகோடு அவள் வாழ விரும்புகிறாள்.  வீட்டிற்கு மருத்துவமனை பெரிய இடம்தானே.  நிறைய மனிதர்கள் இருப்பார்கள்.  நிறைய முகங்களை பார்க்க முடியும்.  அதற்காகத்தான் அவள் அடிக்கடி விழுந்து - அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.  அதனால்தான் நாவலில் வீட்டைவிட மருத்துவமனை முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.  நாவலில் மருத்துவமனையும் சிகிச்சை முறையும்தான் முக்கியமான பாத்திரங்களாக இருக்கின்றன.  தெருவில் கேட்கும் குரல்களின் வழியாக மனிதர்களையும், அவர்களுடைய வாழ்வையும் அடையாளம் காண்கிறாள்.  மதுவின் மன உலகின் வழியே விரியும் உலகைவிட. அதைவிட முக்கியமான பாத்திரம் பேச்சு.  மது மட்டுமல்ல, பேராசிரியர்கள், கண்ணன், சுமி, விஜயா, மருத்துவர் அபிரகாம், காலிப்பர் செய்கிற கிழவர், பாலு என்று எல்லாருமே பேசுகிறார்கள்.  பேச்சு- அவர்களுக்கு உணவாக, வாழ்வாக இருக்கிறது.  அதுதான் அவர்களை வாழ வைக்கிறது.  அவர்களுக்கு விதிக்கப்பட்டது பேச்சு.  நாவலில் வருகிற பலரும் படித்தவர்களாக இருக்கிறார்கள்.  அதிலும் இலக்கியம் படித்தவர்கள். இலக்கியம் படித்தவர்களுக்கு இருக்கிற ஒரே சிக்கல் அவர்களால் ஒருபோதும் இயல்பாக இருக்கவும், வாழவும் முடியாது.  இயல்பாக வாழத் தெரியாதவர்கள் என்பதைவிட அப்படி வாழவும் விரும்பாதவர்கள்.  இதைத்தான் நாவலில் இடம்பெற்றுள்ள உரையாடல்கள் காட்டுகின்றன.  நாவலில் பேசாதவர்கள் இரண்டுபேர் இருக்கிறார்கள்.  ஒருவர் பைத்தியம் என்று சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்.  மற்றொருவர் குடிகாரன் என்று வர்ணிக்கப்படும் ஆட்டோக்கார கணேஷ்.   அவன் சாராயம் குடித்திருக்கிறான்.  ஆட்டோவை வேகமாக ஓட்டுகிறான்.  ஆனால் மரியாதையாக இருக்கிறான்.  சரியான கூலியை மட்டுமே வாங்குகிறான்.  ஆடடோக்காரனின் எளிய பண்பு இலக்கியம் படித்தவர்களிடம் இல்லை.  உலக இலக்கியம் படிக்கிறார்கள், உலகத்தரமான சினிமா பார்க்கிறார்கள், உலக மக்களுக்காக அக்கறைப்படுகிறார்கள், ஓயாமல் சிந்திக்கிறார்கள்.  ஆனால் ஆட்டோக்காரனிடம் இருக்கும் நேர்மை அவர்களிடம் இல்லை.  ஏன்?  ஆட்டோக்காரன் உலகத்தரமான இலக்கியம் படித்தவனில்லை.  உலகத்தரமான சினிமா பார்த்தவனில்லை.  கால்கள் நாவலில் ஆர்.அபிலாஷ் முன் வைக்கிற கேள்விகள் மிகவும் எளியவைகள்தான்.  சின்னச்சின்ன கேள்விகளுக்குக்கூட நம்மிடம் பதிலில்லை.  சௌதாமினியுடன் கொண்ட கள்ள உறவால் தலைமறைவாகிவிடுகிறார் மருத்துவர்.  அவர் புனிதராகிவிடுகிறார். சௌதாமினியை ஊர் வாய் மெல்லுகிறது.  அவளுடைய வயிற்றிலிருக்கும் புற்று கட்டிக்காக மகிழ்ச்சியை கொண்டாடுகிறது.  மனித உயிரின் மதிப்பு சமூக அந்தஸ்தைப் பொருத்தே அமைகிறது.
    கால்கள் நாவலில் கடவுள் சார்ந்த உரையாடல் தொடர்ந்து நிகழ்கிறது.  இருக்கிறாரா - இல்லையா?  தெரியாது.  அமிர்தானந்தமாயி முக்காலத்தையும் உணர்ந்தவராக - அற்புதம் செய்கிறவராக இருக்கிறார்.  அதன்பொருட்டு அவருக்கு பணம் வருகிறது.  பொறியியல், மருத்துவ கல்லூரி என்று சொத்து வருகிறது.  அதன் வழி அவருக்கு உலகமெல்லாம் விளம்பரமும்-வியாபாரமும் பணமும் கிடைக்கிறது.  பாலுவுக்கு மனநோய் சரியாகவில்லை.  மது காலிப்பரின் துணை கொண்டுதான் நடக்கிறாள்.  அப்படியானால் அற்புதங்கள் யாருக்கு நடக்கின்றன?  அமிர்தானந்தமாயிக்கா மதுவுக்கா, பாலுவுக்கா?  பாலுவின் தந்தை ஆங்கிலப் பேராசிரியர்.  அவர் அமிர்தானந்தமாயின் அற்புதங்கள் குறித்து விரிவாக பேசுகிறார்.  மருத்துவர் அபிரகாம் ஏசுவின் அற்புதங்கள் குறித்து பேசுகிறார்.  பேராசிரியரின் வேலை என்ன, மருத்துவரின் வேலை என்ன?  தங்களுடைய வேலையை விட்டுவிட்டு மதப்பிரச்சாரம் செய்கிறார்கள்.  அற்புதங்கள்பற்றிய கதைகள் நோயாளிகளான பாலுவுக்கும், மதுவுக்கும் அலுப்பை உண்டாக்குகின்றன.  அவர்களுடைய வலி குறையாத வரைக்கும் அவர்கள் எந்த அற்புதங்களையும் நம்பப்போவதில்லை என்பதை நாவல் அழுத்தமாகச் சொல்கிறது.  அவள் மனம் திறந்து ஒரு நாளும் சிரித்ததில்லை.  பகவத் கீதையை படித்துக்கொண்டிருக்கும் மருத்துவர் சொக்கலிங்கம் 100% ஊனத்தை 48% என்று மாற்றித்தர ஐநூறு ரூபாய் லஞ்சம் பெற்று சான்றளிக்கிறார்.  பகவத் கீதையை உயிராக மதிக்கும் ஒருவர்தான் ஊனமானப் பெண்ணிடம் கூச்சமில்லாமல் லஞ்சம் வாங்கிக்கொண்டு போலிச்சான்றிதழ் தருகிறார். 

    நாவலில் பெற்றோர்களும் கவலையில் இருக்கிறார்கள்.  குழந்தைகளும் கவலையில் இருக்கிறார்கள்.  பரஸ்பர குற்றச்சாட்டுகளுடனும், பரஸ்பர கழிவிறக்கத்துடனும்.  மதுவின் அப்பா குடிகாரராகிவிடுகிறார்.  பாலுவின் அப்பா பேராசிரியர் அமிர்தானந்தமாயின் பிரச்சார பீரங்கியாகிவிடுகிறார்.  ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கூண்டு தேவைப்படுகிறது.  மனித மனம் என்பது இல்லாத ஒன்று ஏங்குவது.  நொண்டி நடக்கிறான், குருடன் பார்க்கிறான், செவிடன் கேட்கிறான்.  அற்புதங்கள் நிகழ்கின்றன.  யாருடைய கால்கள் நடந்தன.  யாருடைய கண்கள் பார்த்தன.  யாருடைய காது உயிர் பெற்றது.  பெரு வெளிச்சத்தில் வியாபாரம் செழித்து வளர்ந்து கொண்டிருக்கின்றன.  ஆனால் மதுவின் கால்கள் கீரைத்தாண்டுமாதிரிதான் கடைசிவரை இருக்கின்றன.  கடவுள்கள் பெருகுகிறார்கள்.  வியாபாரமும் பெருகுகிறது. 
    கால்கள் நாவல் மதுவை - பின்தொடர்ந்து செல்கிறது.  அந்தப் பயணத்தில் மதுவின் மன உலகுக்குள் இருக்கிற ஏக்கங்களை-நடப்பது என்ற செயலுக்காக அவள் மனம் கொள்ளும் விழைவுகளை ஆர்.அபிலாஷ் வாசகனுக்கு காட்டித்தருகிறார்.  அதில் நாம் அதிர்ந்துபோகிறோம்.  வாசகனை அதிர்ந்துபோக வைப்பது நாவலாசிரியரின் நோக்கமல்ல.  ஆனால் உண்மைகள்-மதுவின் மனதிலுள்ள உண்மைகள் அப்படித்தான் இருக்கின்றன.  உலகிலுள்ள எல்லாப் படைப்புகளுமே வாழ்வை, மனித மனத்தை படம் பிடிக்கத்தான் விரும்புகின்றன.  கடலிலிருந்து கைப்பிடியளவு நீரைத்தான் அள்ள முடிகிறது.  அதுகூட கையில் பிடித்த காற்றாக இருக்கிறது.  படைப்பின் நோக்கமும் காற்றைப் பிடிப்பதுதான்.  ஆர்.அபிலாஷ் தன் காரியத்தில் சரியாகவே வேலை செய்திருக்கிறார்.  கடுமையாகவும்தான்.
    வாழ்விலிருந்து-மனதிலிருந்து ஒரு உலகை உருவாக்கிக் காட்டுவதற்கும், உரையாடலின் வழியாக, தர்க்கங்களின் வழியாக ஒரு உலகை உருவாக்கிக்காட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கிது.  வாழ்க்கை என்று ஒன்று இல்லாவிட்டால் உரையாடலுக்கும், தர்க்கத்திற்கும், நீதிநெறிகளுக்கும் இடமில்லை.  முக்கியமாக கடவுளுக்கு இடமில்லை.  வாழ்வின் சாரம் இல்லாமல் எழுதப்படும் எழுத்து சிமெண்ட் கலவை இல்லாமல் வெறும் செங்கற்களைக்கொண்டு அடுக்கியது போன்றது.  படைப்பு மனம் சார்ந்த உரையாடலுக்கானது.  ஆர்.அபிலாஷ் அறிவு சார்ந்த உரையாடலுக்கு முன்னுரிமை தந்திருக்கிறார்.  தர்க்கத்தைவிட வாழ்விற்கு, உண்மைக்கு அதிக பலம் உண்டு.  “இறந்துபோன ஒரு தொலைபேசிபோல் அவள் தலை இருந்தது” (ப.460) போன்ற வாக்கியங்கள் படிக்கும்போது கவர்ச்சியாக இருக்கும்.  ஆனால் கவர்ச்சி விரைவில் அழிந்துவிடும்.  அனுபவம் இருக்கிறது.  அதற்கான மொழிதான் ஆர்.ஆபிலாவுக்கு கைக்கூடிவரவில்லை. வைதேகி, பேபி, சிவகலா, வடிவு மாமி, குமார், செல்வம் எல்லாம் நாவலுக்குள் வெறும் பெயர்களாக வருகிறார்கள். நிறைய எழுதுவதைவிட குறைவாக எழுதுவது மேலானது என்பது ஆர்.அபிலாசுக்குத் தெரியும்.
    தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்க ஆர்.அபிலாஷ்க்கு - அவருடைய கால்கள் (நாவல்) நிச்சயம் உதவும்.
‘கால்கள்’ - நாவல்
ஆர்.அபிலாஷ்
உயிர்மை பதிப்பகம்
சுப்ரமணியன் தெரு,
அபிராமபுரம்
சென்னை
(இம்மாத உயிர்மையில் வெளியான விமர்சனம்)
Read More

Monday, 5 March 2012

ஜப்பானிய மரணக் கவிதைகள்: சிறு அறிமுகம்



ஜப்பானியர்கள் மரணத்தை வாழ்தலுக்கு நிகராக நிறைவு தரும் செயலாக பார்க்கிறார்கள். அதனால் நாட்டுக்காக, மன்னனுக்காக செய்யும் உயிர்த்தியாகங்கள் ஆகட்டும், தனிநபர் தற்கொலைகள், ஜீவசமாதிகள் ஆகட்டும் அவை துர்சம்பவங்களாக பார்க்கப்படுவதில்லை. இலையுதிர் காலத்தில் ஒரு இலை உதிர்வது எவ்வளவு இயல்போ அவ்வளவு இயல்பே அவர்களுக்கு உயிர்நீத்தலும். மேலும் சீனாவில் இருந்து அங்கு பரவிய பௌத்தம் இவ்வுலகம் ஆசை, அநித்யம் ஆகியவற்றாலான துக்கம் நிரம்பியது என்றும், மனிதன் மரணத்துக்குப் பின் மேற்சொன்ன மனக்களங்கங்கள் அற்ற சுவர்க்கத்தை சென்றடையலாம் என்ற ஒரு மித்தை உருவாக்கியது. அதனாலே அங்கு இறந்தவனை பிணம் என்றல்ல புத்தன் என்றழைக்கவே பிரியப்படுகிறார்கள். இறக்கும் தறுவாயில் மோட்சம் கிடைக்க புத்தரை வாய் விட்டு அழைக்க வேண்டும் என்று அவர்களின் மரபு கூறுகிறது. வானில் மேகங்களின் வடிவில் புத்தர் இறந்தவனை அழைத்துப் போக எழுந்தருள்வார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
மற்றொரு பக்கம் நாகார்ஜுனரின் மத்தியம பௌத்தம் ஆகட்டும் சாமுராய்கள் மத்தியில் பின்னர் பிரபலமான ஜென் பௌத்தமாகட்டும் ஆன்மீகப் பேறை அடைவதற்கான தடையாக தர்க்க சிந்தனையை கண்டன. சிந்தனையின் பாரமற்ற தெள்ளத்தெளிந்த மனநிலையே மெய்யறிவு. வாழும் போதை விடவும் இறந்தநிலையில் தான் முழுமையான சிந்தனை விடுவிப்பு சாத்தியம். ஆக மனமற்றுப் போகும் மரணத்தை ஒரு முக்தியாக ஜென் மரபு கருதியதிலும் வியப்பில்லை. சுவர்க்கம் வானத்திலோ ஆழ்மனதிலோ, மரணம் எப்படியும் அவர்களுக்கு வரவேற்புக்குரியதே. இறக்கும் முன் ஒரு கவிதை எழுதி விட்டுப் போவது ஜப்பானியரின் மரபு. இதன் நோக்கம் மேற்சொன்ன ஏற்பு நிலையை சென்றடைய, தனக்குத் தானே உறுதி செய்ய அல்லது பிறருக்கு அறிவிக்க.

ஜப்பானியர் குழுமனப்பான்மை மிக்க ஒரு சமூகம். எதிரே வருபவரிடம் பணிவாக முகமன் சொல்வதற்கும் பதில்கள் உரைப்பதற்கும் அவர்களிடம் நூற்றுக்கணக்கான சொல்லாடல்கள் உள்ளன. ஒரு விரோதியிடம் கூட மிக பணிவாக “உங்களை நேசிக்க என் மனம் அனுமதிக்கவில்லை என்று சொல்பவர்கள் ஜப்பானியர்கள் என்று ஒருமுறை கிண்டலாக சொன்னார் ஜார்ஜ் லூயி போர்ஹெஸ். அத்தனைக்கும் காரணம் அவர்களுக்கு மரபின் மீதுள்ள விடாப்பிடியான பற்று. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்து பதினாலாவது நூற்றாண்டு வரை நீடித்த காமகுரா காலத்தில் சாமுராய்களின் ஆதிக்கமும் அத்துடன் ஜென் தத்துவத்தின் எழுச்சியும் நிகழ்கிறது. உள்நோக்கிய ஜென்னும் சமூகவயமான அவர்களின் மரபும் ஒரு புள்ளியில் இணைகிறது. பதினாறாவது நூற்றாண்டில் இருந்து பத்தொம்பதாவது நூற்றாண்டு வரையிலான இடோ காலத்தில் ராஜவிசுவாசத்தின் பெயரிலான மரணம் என்பது மெச்சப்பட்டது. மன்னனுக்காக தன் வயிற்றைக் கிழித்து கராஹரா எனும் தற்கொலை புரிந்தனர். பல படைத் தளபதிகள் மன்னர் மரணமுற்ற உடனே குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தம் கடமையாக எண்ணினர். இதன் நீட்சியாகவே இரண்டாம் உலகப்போரின் போது பல ஜப்பானிய ராணுவ இளைஞர்கள் வெடிகுண்டுகள் நிரம்பிய விமானங்களில் தன்னிச்சையாக எதிரிநாட்டு படைத்தளங்கள் மீது மோதி தம்மை தம்மை அழித்துக் கொண்டனர். அவர்கள் புத்தருக்காக அல்ல மன்னருக்காக தம்மை அழித்துக் கொண்டாலே போதும், சொர்க்கம் செல்லலாம் என நம்பினர். காதல் தோல்வியுற்றோர் மரணம் தமது பிரச்சனைகளுக்கான ஒரு நியாயமான தீர்வு என நம்பினர். சமூகம் தம் மீது ஏற்படுத்தும் களங்கத்தை துடைக்கவும் தற்கொலை உதவும் என்று நினைத்தனர். அவர்களும் ஒரு மரணக் கவிதையை விட்டுச் சென்றனர். ஆக துறவிகள், சாமுராய்கள், படைத்தளபதிகள் போன்றே காதலர்களும் வீரமரணம் உற்றவர்களும் கூடத் தான் அங்கு மரணக் கவிதைகள் எழுதினர். ஜப்பான் மரணத்தை கொண்டாடும் ஒரு சமூகம் என்கிற நம்பிக்கை இப்படித் தான் மெல்ல மெல்ல ஏற்பட்டது. இதற்கு மற்றொரு பரிமாணமும் உள்ளது.

இந்தியாவில் இருந்து சென்ற பௌத்தத்தின் இகவுலக மறுப்பை அவர்கள் தமது இயல்பான இயற்கை நேசிப்பின் வழியிலே உள்வாங்கிக் கொண்டனர்.  ஜப்பானியர்கள் உலகத் துயரத்தை அழுகும் உடலின் உக்கிர வலியில் காணவில்லை. அவர்கள் அதை அழிந்து மீண்டும் தோன்றும் இயற்கையின் பேரழகில் கண்டனர். ஆரம்பகால மரணக் கவிதைகளில் நிலையாமையின் குறியீடாக மலர்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தபட்டது. பருவச் சுழற்சி எப்படி தவிர்க்க முடியாததோ அதே போன்றே மனித வாழ்வின் நிலையாமையும். இதில் நன்மையும் தீமையும் உண்டு. அழிவும் பிறப்பும் உண்டு. மனிதன் ஒரு பனித்துளியைப் போன்றவன் என பல மரணக் கவிதைகள் சொல்கின்றன. ஒரு பருவத்தில் உறைகின்ற பனி, மற்றொரு பருவத்தில் ஆவியாகிற பனி மீண்டும் வசந்தத்தில் திரும்பும். ஆக இழப்புக்கு துக்கப்படுவதற்கு இணையாக அவர்கள் வாழ்வின் கொடைகளுக்கும் ஆனந்தப்பட தயங்குவதில்லை. முக்கியமாக பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு மனிதன் உள்ளாகிறானே அன்றி அதைக் கட்டுப்படுத்தவோ அறியவோ அதற்கு பொறுப்பாகவோ அவனால் முடியாது. இந்திய விதி தத்துவத்தை ஜப்பானியர்கள் இவ்வாறு மேலும் பௌதிகமாக நேர்மறையாக இயற்கைச் சுழற்சியாக புரிந்து கொண்டனர். ஒரு ஜப்பானிய ஜென் துறவியால் உடலை வெறுக்க முடியாது. ஏனென்றால் உடல் அவனுடையதல்ல. அது பிரம்மாண்டமான இயற்கையின் ஒரு பகுதி. அவன் பணி தன்னை இயற்கையிடம் ஒப்பிவித்து தோன்றும் போது தோன்றி மலரும் போது மலர்ந்து உதிரும் போது தன்னை உதிர்ப்பதே. அதனாலே பிளாத் போன்ற அமெரிக்க கவிஞர்கள் எழுதிய மரணக்கவிதைகளின் நிராகரிப்பும் மனநெருக்கடியுமோ, அல்லது கீட்ஸ் போன்ற கற்பனாவாதிகளின் சாஸ்வத விருப்பமோ இவர்களிடம் இல்லை. மேற்கத்திய மரபு மனநெருக்கடியின் பக்கம் நின்று ஒன்று மரணம் இல்லை என்றோ அது மட்டுமே உண்டு என்றோ மிகையாக பேசுகிறது. ஜென் மரபு மரணம் வேறுபட்ட ஒன்றல்ல, அதுவும் வாழ்வே என்கிறது.

ஆனால் ஜப்பானிய மரணக் கவிதைகள் அத்தனையும் ஜென்மரபை சார்ந்ததோ அதில் இருந்து தோன்றியவையோ அல்ல. அவை ஜப்பானியரின் ஆதிப்பண்பாட்டில் இருந்து தோன்றியவை. பௌத்தமும் ஜென்மரபும் அவற்றுக்கு ஒரு உயர்ந்த தத்துவார்த்த ஆன்மீக நிலையை அளித்தன. அதனாலேயே காதலர்களும் போர்வீரர்களும் எழுதியவற்றில் இருந்து துறவிகளும் ஹைக்கூ கவிஞர்களும் ஜென்மரபை சேர்ந்த சாமுராய்களும் இயற்றியவை மேலும் தரமானவையாக உள்ளன. அவற்றையே நாம் இங்கு காணப் போகிறோம்.

ரெங்கா மற்றும் தாங்கா ஆகியன ஜப்பானியரின் இரு முதன்மை கவிதை வடிவங்கள். ரெங்கா எனும் கூட்டுக் கவிதையின் முதல் சில வரிகளை தனித்தெடுத்து வளர்ந்ததே ஹைக்கூ. ஜப்பானிய மரணக் கவிதைகள் தாங்கா மற்றும் ஹைக்கூவில் தாம் அதிகம் எழுதப்படுகின்றன.

மரணத்துக்கு முன் கவிதை எழுதுவதென்பது வாழ்வை அதன் போக்கில் வாழ அறிவுறுத்தும் ஜென்னுக்கு எதிரானதில்லையா? இந்த கேள்வி மரணக் கவிதைகளின் மீது ஒரு ஐயத்தை தொடர்ந்து ஏற்படுத்துகின்றன. கவிதை ஆசான்களிடம் தம் மனைவிக்கு மரணக் கவிதை எழுதித் தரக் கேட்கிற கணவன்கள் அங்கு உள்ளனர். பொதுவாக இக்கவிதைகள் மரணத்துக்கு சற்று முன்னர் எழுதப்படுகின்றன. போர் வீரர்களும் தற்கொலை புரிபவர்களும் ஏற்கனவே எழுதி எடுத்துச் செல்கின்றனர். எழுத முடியாத நிலையில் மரணப்படுக்கையில் இருப்பவர்கள் படுத்தபடியே சொல்ல பிறர் எழுதிக் கொள்கிறார்கள். நருஷிமா சுஹாசிரோ என்பவர் மரணக் கவிதை எழுதும் முன்னர் தாம் இறந்து விடக் கூடும் என்கிற பயத்தில் 50வது வயதில் இருந்தே மரணக் கவிதைகள் எழுதி அவற்றை தம் ஆசான் ரெய்செய் தமெயெசுவிடம் கொடுத்து கருத்து கேட்டு வந்தார். பல வருடங்கள் கடந்தும் சுஹாசிரோவுக்கு வேளை வரவில்லை. ஆசானும் அலுத்துப் போனார். எண்பதாவது வயதில் சுஹாசிரோ இப்படி எழுதி ஆசானிடம் கொடுத்தார்:

எண்பது வருடங்களுக்கு மேலாக
மன்னர் பெருமான் மற்றும்
பெற்றோர்களின் கிருபையால், வாழ்ந்து விட்டேன்
சாந்தமான இதயத்துடன்
பூக்களுக்கும் நிலவுக்கும் நடுவே

ஆசான் பார்த்து விட்டு சொன்னார் “உனக்கு 90 வயதாகும் போது முதல் வரியை மட்டும் மாற்றி விடு

மற்றொரு கவிஞர் சாகும் முன் ஒரு அங்கத மரணக் கவிதை எழுதினார்
“இந்த கவிதையை இன்னொருவரிடம் இருந்து
கடன் பெற்றேன்
நான் செய்கிற கடைசி இலக்கிய திருட்டு இதுதான்

மரணக்கவிதை எழுதும் சடங்கை எதிர்க்கிற ஜென் துறவிகள் ஒரு பக்கம் இருக்க பலர் தயங்காமல் ஜப்பானிய மரபின் தொடர்ச்சியாக மரணக் கவிதைகளை விட்டுச் செல்கிறார்கள். சில மரணக்கவிதைகள் கவிதைகள் ஜென் போதிக்கும் ஞானத்தை மறுப்பவையாக, இறக்கும் போது முக்தி வாய்க்கும் எனும் தேய்வழக்கை கேலி செய்பவையாகவும் உள்ளன. மரணக்கவிதைகளின் சிறப்பே இது தான். அவை மரணத்தை ஏற்றுக் கொள்ளவும் அப்படி ஏற்றுக் கொள்ளும் மனித மனத்தின் அகங்காரத்தை கேலி பண்ணவும் செய்யும். இதற்கான முழுமுற்றான சுதந்திரத்தை அவை கொண்டுள்ளன.
கீழ்வரும் கேலிக் கவிதையில் உள்ள களங்கமின்மையை பாருங்கள்.
ஹனாபுசா இக்கெய் (இறந்த வருடம் 1843)

இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள்
வாழலாம் என்று தான் எண்ணினேன்
ஆனால் இதோ வருகிறது மரணம்,
எண்பத்தைந்தே வயதான
ஒரு குழந்தையிடம்.

சுவர்க்கம் பற்றின தேய்வழக்கை கேலி பண்ணும் மொரியா செனனின் (இ. 1838) கவிதை:

நான் செத்தால்
ஒரு கள்ளுக்கடையில்
வைன் பீப்பாய் அருகே புதையுங்கள்
அதிர்ஷ்டமிருந்தால்
பீப்பாய் கசியட்டும்.

சிலர் மரணக் கவிதை எழுதி விட்டு சாவில் இருந்து மீண்டும் சங்கடமான சூழ்நிலையில் இருப்பதுண்டு.

“பிழைத்த பின் அவர் தன்
மரணக் கவிதையின் நடையை சீர்செய்கிறார்

இன்னொரு நகைச்சுவை கவிதை.

“மருத்துவர்கள்
அவன் மரணக்கவிதை பாராட்டி
கிளம்புகிறார்கள்

பின்நவீனத்துவ கூறுகளும் காணக் கிடைக்கின்றன.
பாஷோ

“ஒரு பயணத்தில், நோயுற:
என் கனவு திரிகிறது
வறண்ட வயல்களின் மேலாக

இதை ஒருவர் இப்படி பகடி செய்கிறார்:
“அறைக்குள் பூட்டப்பட்டு:
என் கனவு திரிகிறது
விபச்சார விடுதிகள் மேலாக

1.பெய்க்கொ (இறந்த வருடம் 1903)
Baiko
(p.138)

பிளம் பூவிதழ்கள் வீழ்கின்றன
நிமிர்ந்து நோக்க வானம்,
ஒரு துல்லியமான தெளிவான நிலவு.

2.பைர்யு (இ. 1863)
Bairyu

ஓ ஹைடிராங்கியா புதரே
மாறி மாறி அடைகிறாய்
மீண்டும் உன் ஆதிநிறத்தை

குறிப்பு: ஹைடிராங்கியா புதர் கோடையில் பூ பூக்கும். இப்பூக்கள் ஏழுமுறை தொடர்ந்து வண்ணங்கள் மாறும்.

3.பைசெய் (இ. 1745)
Baisei
(p.140)

நித்தியத்தின் தீவு
ஒரு ஆமை தன் ஓட்டை காய வைக்கிறது
வருடத்தின் முதல் சூரிய ரேகைகளில்.

குறிப்பு: இங்கு குறிப்பிடப்படும் ஹொராய் தீவு சொர்க்கத்தின் தீவு என்று கருதப்படுகிறது.
4.பெக்கொ (இ. 1751)
Bako

பள்ளத்தாக்கை திரும்ப நோக்கும் போது:
எந்த வாழ்விடமும் இல்லை,
குயில் கூவல்கள் தவிர


5.பங்கொங்கு (இ. 1748)
Bankoku

ஆக நீண்டதொரு மழைக்கால இரவு.
பிளம் பூவிதழ்கள் உதிர்கின்றன; முடிவாய்
அந்த மேற்குத்திசை நிலா


6.சென்செகி (இ. 1742)
Senseki

ஒருவழியாய் கடைசியில் கிளம்புகிறேன்:
மழையற்ற வானில், ஒரு குளிர்நிலா
என் இதயம் பரிசுத்தமானது

7.செட்சுடொ (இ. 1776)
Setsudo

ஆக இப்போது,
அவ்வுலகுக்கான என் யாத்திரைக்கு
அணிவேன் பூப்போட்ட கவுன் ஒன்று

குறிப்பு: பூப்போட்ட கவுன் ஜப்பானியர் செர்ரிப்பூ பூக்கும் வசந்தத்தில் அணியும் ஒரு அழகான கிமோனொ ஆடை.

8.ஷகாய்(இ. 1795)
Shagai

எதார்த்தம் ஒரு மலரைப் போன்றது:
அந்தியின் ஊடே
மூழ்குகின்றன குளிர்மேகங்கள்

9.ஷியெய்(இ. 1715)
Shiei

இது போன்ற ஒரு வேளையில்
இப்பழமொழி நிஜமாகிறது
இதுவும் கடந்து போகும்

10.கொஹொ கென்னிச்சி (இ. 1316)
Koho Kennichi

இருந்தபடியோ நின்றபடியோ உயிர்நீத்தல் என்பது ஒன்றுதான்
நான் விட்டு விட்டுப் போவதெல்லாம்
எலும்புகளின் குவியலே
வெற்று வெளியில் முறுகி மேலெழுந்து
கீழிறங்குகிறேன் கடலை நோக்கிய
இடியின் முழக்கத்துடன்.

குறிப்பு: ஜென்னில் அமர்ந்தபடி அல்லது நின்றபடி இறப்பது உயர்ந்ததாக கருதப்பட்டது.

11.கொகெய் சொச்சின் (இ. 1597)
Kokei Sochin

அறுபது வருடங்களுக்கு மேலாய்
அடிக்கடி கூவினேன் “கட்சு என, எந்த பயனும் இன்றி.
ஆக இப்போது சாகும் தறுவாயில்
மீண்டும் ஒருமுறை “கட்சு எனக் கூவுதல்
மாற்றி விடப் போவதில்லை ஒன்றையும்

குறிப்பு: ஜென் துறவிகள் விழிப்புணர்வு அடையும் போது “கட்சு எனக் கூவுவார்கள்.

12.நம்போ ஜொம்யொ (இ. 1308)
Nampo Jomyo

காற்று தொலைந்து போகட்டும்!
மழை நாசமாய் போகட்டும்!
நான் கண்டுணரவில்லை எந்த புத்தனையும்.
மின்னல் தாக்கியது போல் ஒரு அடி
உலகம் தனதச்சில் சுழல்கிறது

13.செய்கன் சொய் (இ. 1661)
Seigan Soi

வாழ்க்கையின் களிப்பு,
வாழும் களிப்பு...
ஜென் கொள்கைகள் அர்த்தமிழக்கின்றன
மரணிக்கும் முன்
என் போதனையின் ரகசியம் இதுவே
என் கைத்தடி தலையசைத்து ஆமோதிக்கிறது
“கட்சு

14. ஷிக்கி (இ. 1902)
Shiki

14. பீர்க்கு செடி பூக்கிறது
நான், சளியால் நிறைந்து,
புத்தனாகிறேன்

15. 180 லிட்டர் சளி,
பீர்க்கை நீர் கூட காப்பாற்றாது
என்னை இனி

குறிப்பு: பீர்க்கை கொடியின் சாற்றை காசநோய்க்கு மருந்தாக பயன்படுத்தினார்கள். 1890களில் சீன-ஜப்பானிய போரைப் பற்றி எழுத நிருபராக ஷிக்கி சீனா சென்றார். அங்கு அவருக்கு காசநோய் தொற்ற பல வருடங்கள் படுத்தபடுக்கையாகி இறந்தார். தனது நோயின் பல்வேறு கட்டங்களை கவிதைகளாக எழுதினார். மரணம் நிச்சயமான கட்டத்தில் ஷிக்கி பீர்க்கை சாற்றை நிராகரித்தார்.

16. டைகன் சொஃபு (இ. 1555)
Taigen Sofu

என் வாழ்வின் கண்ணாடியை
என் முகத்துக்கு நேரே உயர்த்துகிறேன்: அறுபது வருடங்கள்.
ஒரே வீச்சில் என் பிரதிபிம்பத்தை நொறுக்குகிறேன்
உலகம் வழக்கம் போல
அனைத்தும் அதனதன் இடத்தில்

17.டெட்டோ கிக்கோ
Tetto Giko

உண்மை ஒருபோதும் மற்றொன்றில்
இருந்து எடுக்கப்படுவதில்லை.
ஒருவன் அதை
எப்போதுமே சுமக்கிறான் தனக்குள்ளே.
கட்சு!

18. தொசுய் உன்கெய் (இ. 1683)
Tosui Unkei
எழுபது வருடங்களுக்கு மேலாக
வாழ்வை உச்சபட்சமாக சுவைத்து விட்டேன்
மூத்திர வாடை என் எலும்புகளில் ஒட்டிக் கொண்டுள்ளது.
இதனால் எல்லாம் என்ன ஆகிவிடப் போகிறது?
ஹோ! நான் திரும்பப் போகிற இடம் எங்கே?
சிகரத்துக்கு மேல் வெளுக்கிறது நிலாவெளிச்சம்
தெளிவாய் ஒரு காற்று அடிக்கிறது.

19. இன்று தான் சமயப் பணிகளின் முடிவு
திரும்பச் செல்லுங்கள், நீங்கள் எல்லாரும், உங்கள் வீடுகளை நோக்கி.
உங்களுக்கு முன் கிளம்புகிறேன்,
கிழக்கு அல்லது மேற்குதிசையில்,
காற்று என்னை எங்கே சுமந்து போகிறதோ அங்கே

20. இச்சிமு (இ. 1854)
Ichimu

நொறுங்கின கனவு
எங்கே செல்லும்
இந்த பட்டாம்பூச்சிகள்


21. இச்சிஷி (இ. 1746)
Ichishi

என்ன புரிகிறது உனக்கு?
ஒரு சப்தம்,
இலையுதிர் பருவத்தின் குரல்

22. இப்பு (இ. 1731)
Ippu

என் குருவின் பாதையில்
நான் தயங்கிச் செல்லும் போதும், எங்களுக்கு மேல் ஜொலிக்கிறது
ஒரு நிலவு.

23. இஸ்ஸோ (1899)
Isso

விலையை குறைக்கக் கூடாதா!
வயது ஐம்பத்தேழு ஆனால் தான் என்ன?
வருஷம் தான் அநேகமாய் முடிந்து விட்டதே!

24. ஜிக்கோ (இ. 1791)
Jikko

குடும்பத்தினர் முணுமுணுக்கிறார்கள்
மருத்துவருடன் அவர்களின் சட்டைக்கைகளின் ஊடே
கடந்து போகின்றன குளிர்கால மழைகள்

குறிப்பு: ஜப்பானியர்க்கு ரகசியம் சொல்லும் போது சட்டைக்கைகளை முகத்தின் மேல் உயர்த்திக் கொள்ளும் வழக்கம் உண்டு.

25. ஜொமெய் (இ. 1766)
Jomei

சொற்களாலான இலைகள்:
இலையுதிர்பருவ வண்ணங்கள்
நிச்சலமாய் ஒரு மலை

26. ஜொவா (இ. 1785)
Jowa

ரெண்டாவது மாதம்:
ஒரு புது மூங்கில் தொப்பி அணிந்து
வீடு திரும்புகிறேன்

குறிப்பு: ஜப்பானிய மொழியில் ரெண்டாவது மாதமான பனிக்காலத்துக்கு கிஸாரகி எனும் சொல் பயன்படுகிறது. அதற்கு ஒன்றின் மேல் மற்றொன்றாய் ஆடை அணிதல் என்று ஒரு பொருள் உண்டு. இங்கு பனியால் தன்னை போர்த்திக் கொள்ளும் இயற்கையும் ஓரு சிறு தொப்பி அணிந்து நடக்கும் ஜொவாவும் ஒன்றாகிறார்கள்.

27. கஃபு
Kafu

செத்து தான் ஆகவேண்டும் என்றால்
சாக அனுமதியுங்கள்
மழைக்காலத்துக்கு முன்னர்

குறிப்பு: ஜப்பானிய பண்பாட்டு மரபில் நான்கு பருவங்கள் வாழ்க்கைச்சுழலுக்கான குறியீடுகளாகின்றன. மழைக்காலத்துக்கு முன் வரும் இலையுதிர் பருவம் மரணத்துக்கானது.

28. ககாய் (இ. 1778)
Kagai

வெற்றுக் கிளைகள்:
இலையுதிர்காலம் விட்டுச் சென்றது
ஒரு சிள்வண்டின் உள்ளீடற்ற கத்தலை

29. கைகா (இ. 1718)

விநோதம் இடம் வலம் என
பறக்கின்றன மின்மினிகள்
தூதுவர்களைப் போல்

30. கைஷோ (இ. 1914)
Kaisho

மாலைநேர செர்ரிப் பூக்கள்:
மைக்கல்லை என் கிமோனோக்குள் சொருகுகிறேன்
ஒரு கடைசிமுறையாய்

குறிப்பு: மைக்கல்லில் மைக்குச்சியை உரசி கவிதை எழுதுவதற்கான கரைசலை செய்வார்கள். கிமோனோ உடையின் இரண்டு மடிப்புகள் இணையும் முன்பகுதியில் பொருள் வைப்பதற்கு ஒரு பை உண்டு.

31. கன்கியு (இ. 1861)
Kangyu

இது நிஜத்தில் இப்படித்தான்
மேலும் நான் முன்னெப்போதும் கவனித்ததில்லை
புற்களில் பனித்துளிகள்

32. கன்ஷு (இ. 1772)
Kanshu

இலையுதிர் நிலா
அஸ்தமித்து விட்டாலும் கூட, இதயத்தில்
தேங்கியுள்ளது அதன் வெளிச்சம்

33. கரி (இ. 1770)
kari
என்னவொரு துக்கம்: செர்ரிப் பூக்கள்
என்னை வரவேற்கும்
மேகங்கள் ஆகின்றன

குறிப்பு: பௌத்த மரபுப்படி மரணத்தறுவாயில் ஒருவரை மேலுலகத்துக்கு அழைத்துப் போக மேற்கில் மேகங்கள் தோன்றும். கரி செர்ரிப்பூக்கள் மலர்கின்ற வசந்தத்தில் இறந்தார். இறுதியாய் அவற்றை காண நேர்ந்த போது அவர் துக்கமுற்றார்.

34. கசான் (இ.: 1818)
Kassan
கோடையில்
இருக்கிறேன்:
ஒரு தாமரை இலை

35. கெய்டொ (இ.: 1750)
Keido

குயிலின் குரல்
இன்னும் புதிரானதாகிறது
என் மரணத்தறுவாயில்

36. கினு (இ. 1817)
Kin’u
எவ்வளவு சாவகாசமாய் பூக்கின்றன
இவ்வருடத்து செர்ரி பூக்கள்
வரும் அழிவு குறித்து அவசரமின்றி

37. கியு (இ. 1820)
Kiyu
மாலை:
என்னைப் பெற்றவர்களின் பனித்துளியாகிய நானும்
அந்தியே

38. கிஸான் (இ. 1851)
Kizan

நான் போன பிறகு
யார் பார்த்துக் கொள்வது
கிரிசேந்தியச் செடிகளை

குறிப்பு: கிரிசேந்தியப் பூக்கள் இலையுதிர் காலத்தின் முடிவிலும் கூட உதிராதவை. இலையுதிர் காலம் இங்கு மரணத்தை குறிக்கிறது.

39. நகமிச்சி (இ. 1893)
Nakamichi

என் வாழ்வு மற்றும் மரணத்தின்
குறுக்குச் சாலையில்
ஒரு குயில் கத்துகிறது.

40. ஒகெனொ கினெமொன் கனெஹைட் (இ. 1703)
Okano Kine’mon Kanehide

நேற்றைய இரவின் பனி
அடர்ந்த வயல்களில்
பிளம் வாசனை

41. ஒனிட்சுரா (இ. 1738)
Onitsura

என் கனவைத் திரும்பத் தா,
அண்டங்காக்கையே! என்னை எழுப்பி நீ காட்டின
நிலவு மூடுபனியில் மறைந்து விட்டது.

42. ரைராய் (இ. 1780)
Rairai

இலையுதிர் பருவத்திலிருந்து விடை பெறுகிறேன்
கோடையின் பிண ஆடை
அணிந்து

குறிப்பு: பௌத்த ஈமச்சடங்குப் படி இறந்தோர் உடலை சணலால் நெய்த துணியால் பொதிவர். கோடைக்காலத்திலும் சணல் ஆடையணியும் வழக்கம் மக்களிடம் உண்டு. இதை ரைராய் குறிப்புணர்த்துகிறார்.

43. Rando
ராண்டோ (இ. 1686)

ஒரு நொடி
படர்கொடி சிவப்பாக வண்ணமேற்றியது
மாறாப் பசுமரத் தடியை

குறிப்பு: ஜப்பான் முழுக்க பரவராக காணப்படும் இக்கொடி இலையுதிர்பருவத்தில் உதிரும் முன் செந்நிறமாகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மரம் தேவதாரு.

44. ரான்செக்கி (இ. 1782)
Ranseki

ஒவ்வொரு நாளும் காணாமல் போனவை
எண்ணிக்கையில் அதிகரிக்கின்றன உறைந்துள்ள
மரக்கிளைகள்

45. ரான்செட்சு (இ. 1707)
Ransetsu

ஓரிலை விட்டு விட
மற்றொன்று பிடித்துக் கொள்கிறது
காற்றை

46. ரொக்குஷி (இ. 1881)
Rokushi

எழுபத்தைந்து வருட கனவில் இருந்து
விழித்தெழுகிறேன்
வரகுக் கஞ்சியின் முன்

குறிப்பு: ஒரு சீன நாட்டுப்புறக்கதையில் ஒருவன் தான் வாழ்வில் உயர்ந்து பெரும் பணக்காரனாவதாய் கனவு காண்கிறான். சட்டென்று விழித்துப் பார்த்தால் தனது வரகுக் கஞ்சி விறகு மூட்டாததால் இன்னும் கொதிக்கவில்லை என்று தெரியவருகிறது.

47. ரையுசை ((இ. 1895)
Ryusai

சல்லிசான பாம்பாஸ் புற்கள்
பிரகாசமானது
சாலை

48. ரையுஷி (இ. 1764)
Ryushi

மனிதனே புத்தன்
பகலும் நானும்
சேர்ந்தே இருள்கிறோம்

49. சைபா (இ. 1858)
Saiba

முழுநிலவுக்கு
பக்கமாய்
தலையணை நகர்த்துகிறேன்

50. சருவொ (இ. 1923)
Saruo

செர்ரிப் பூக்கள் உதிரும்
பாதி தின்ற
அரிசிக் கொழுக்கட்டை மேல்

குறிப்பு: ஜப்பானில் வசந்தத்தில் நிகழும் செர்ரிப் பூ விழாவில் அரிசிக் கொழுக்கட்டை உண்பது சடங்கு.

51. செய்ஜு (இ. 1776)

ஒருநொடி கூட
எதுவும் அசையாது இருப்பதில்லை பாருங்கள்
மரங்களில் நிறங்கள்

52. செய்ரா (இ. 1791)
Seira

படகில் ஏற
செருப்பை கழற்றுகிறேன்:
நீரில் நிலவு

குறிப்பு: ஜப்பானிய மரபுப்படி இறந்தவர்கள் படகில் ஏறி ஒரு நதியைக் கடந்து மறு உலகம் செல்வார்கள்.

53. சென்ச்சொஜொ (இ. 1802)
Senchojo

டியுட்சியா பூக்களில்
பொருத்துகிறேன் என் காதுகளை
குயிலோசை கேட்கத் தவறிடுமோ என

54. டெய்ஷிட்சு ( இ. 1673)
Teishitsu

புத்தாண்டு-
என்னை வாழ்வோடு பிணைப்பது
அரிசிக் கஞ்சி

55. தடாடொமொ (இ. 1676)
Tadatomo

இந்த பனியடர்ந்த மாதம்
சூனியமே ஆனாலும் மீதமுள்ளது
என் பிணத்தின் நிழல்

குறிப்பு: தடாடொமொ ஜப்பானிய மரபான முறையில் தற்கொலை செய்தார். அதற்கு முன் எழுதின ஹைக்கூ இது.

56. டோகோ (இ. 1795)
Toko

மரணக்கவிதைகள்
வெறும் மாயை
மரணம் என்பது மரணம். 
  (இந்த மாத உயிர்மையில் வெளிவந்தது)
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates