Wednesday, 7 March 2012
கால்கள்: இதுவரை கவனப்படுத்தாத ஒரு வாழ்வு – இமையம்
கால்கள் நாவல் இதுவரை தமிழ் இலக்கியம் கவனப்படுத்தாத ஒரு வாழ்வை வாசகர் முன் வைத்திருக்கிறது. அந்த வகையில் இந்த நாவல் முக்கியமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் கனவு, லட்சியம், ஆசை, நோக்கம், எதிர்பார்ப்பு என்று பல இருக்கிறது. அவற்றை நோக்கித்தான் ஒவ்வொரு மனிதனும் ஓடிக்கொண்டிருக்கிறான். கனவை, லட்சியத்தை, நோக்கத்தை, ஆசையை, எதிர்ப்பார்ப்பை அடைந்துவிட்டார்களா யாராவது?
தெரியாது. கால்கள் நாவலில் வரக்கூடிய மதுவுக்கும் ஆசை, லட்சியம், கனவு, எதிர்பார்ப்பு, நோக்கம் எல்லாம் இருக்கிறது. அவளும் மனிதப் பிறவிதானே. ஆனால் அவளுடைய கனவு, ஆசை, லட்சியம், நோக்கம் - மாடி வீடு கட்டுவதல்ல. கோடீஸ்வரி ஆவது, உலக அழகியாவது, தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து தன்னை சிகப்பியாக்கிக்கொள்வது, படித்த, நாகரீகமான, ரொம்பவும் அழகான- அதேநேரத்தில் ஆடம்பரமான வாழ்க்கைக் கொண்ட, முக்கியமாக அமெரிக்காவில் வேலை செய்கிற- குறைந்தப்பட்சம் இந்தியாவில் பன்னாட்டு ஐ.டி.நிறுவனத்தில் வேலை செய்கிற மாப்பிள்ளை அல்ல. அவளுடைய கனவு மிகவும் எளியது. காலிப்பர், சக்கர நாற்காலி, உதவியின்றி சிறிது தூரம் காலாற நடந்து செல்ல வேண்டும் என்பதுதான். அது மட்டும்தான் அவளுக்கு சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது. போலியோவால் சூம்பிப்போன, எதற்குமே உதவாத, உடலில் அனாவசியமாக ஒட்டிக்கொண்டிருக்கும் ஊளைச்சதையாக இருக்கிற, தண்ணீரில் போட்ட துணிமாதிரி கொழகொழத்து கிடக்கிற கால்கள்தான் - அவளுக்கு கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது என்று மருத்துவர் நம்புகிறார். சூம்பிப்போன கால்களை கொண்ட பெண்ணையும் நம்ப வைக்கிறார். இப்படியான ஆசீர்வாதங்களை மட்டுமே தருகிற கடவுள்கள் எதற்கு? கர்த்தர் எதற்கு? கால்கள் நாவலின் வழியே ஆர்.அபிலாஷ் கேட்கிற கேள்விகள். இக்கேள்விகள் எழுப்புவதற்காகத்தான் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
குடலில் இருக்கிற வைரஸ் கிருமி காரணமின்றி நரம்பு மண்டலத்திற்கு வந்து - நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்கிறது. அதனால் ஒரு குழந்தையின் கால்கள் எதற்கும் உதவாத ஒன்றாகிவிடுகிறது. கால்கள் என்ற பெயரில் இரண்டு நூல் பந்துகளை கொண்ட மது-என்கிற இளம்பெண்ணைப்பற்றி நாவல் பேசுகிறது. மது எப்படி வாழ்கிறாள், அவளுடைய உலகம் எப்படி இயங்குகிறது, அவளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், நண்பர்கள் என்று நாவல் அமைந்திருக்கிறது. சக்கர நாற்காலியில் ஒரு உலகம். ஒரு வாழ்க்கை. மது நடக்கிறாள். நடந்து நடந்து உலகையே வலம் வருகிறாள். அவள் நடப்பது கால்களால் அல்ல. மனதால் மட்டுமே. கண்களால்கூட அவள் நடக்கவில்லை. கண்கள் பொய்ச்சொல்லும் என்பது மதுவுக்கு தெரிந்திருக்கிறது. கண்களுக்கு உண்மையும், பொய்யும், நிஜமும் நடிப்பும் ஒன்றுதான். அது ஒரு திரை. அதனால் மது தன் வாழ்வை மனதால் மட்டுமே வாழ்கிறாள். மனதால் மட்டுமே நடக்கிறாள். அவளுக்கு சாத்தியப்பட்டது அது மட்டும்தான். மனதிற்குள்ளாகவே ஒரு வாழ்வை நடததிச் செல்வதும் வாழ்ந்துப் பார்ப்பதும் எளிய காரியமல்ல. மது சாகசக்காரி.
மது இருபத்தி ஐந்து வயது பெண்ணாக இருக்கிறாள். ஏழு எட்டு வயதில் அவளையொத்த பிற குழந்தைகள் தெருவில் ஓடும்போது, விளையாடும்போது - மது தனி அறையில் முடங்கிக்கிடக்கிறாள். அப்போதே அவளுடைய உலகம் கருகிவிடுகிறது. வாழ்நாள் முழுவதும் அவள் முடங்கித்தானே கிடக்க வேண்டும். காலிப்பரை மாட்டும்போதும், கழட்டும்போதும், சக்கர நாற்காலியில் உட்காரும்போதும், இறங்கும்போதும் நான்கு தப்படி தூரத்தை கடப்பதற்கு அந்த உடல் படுகிற அவஸ்தை - பெருவலி. வாழ்நாள் முழுவதும் குழந்தையாகவே இருக்க வேண்டும் என்பது எவ்வளவு துயரமானது. பிறரால் கையாளப்படும் ஒரு பொருள். மதுவின் உடல் - மனம் கொள்கிற அவஸ்தைதான் நாவல். மதுவுக்காக தன் வருத்தத்தை, கண்ணீராக கொட்டியிருக்கிறார் ஆர்.அபிலாஷ். உலகிலுள்ள எல்லா எழுத்தாளர்களுமே இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் செய்ய முடியும். மனித உடல் படும் வாதைக்கு - தன் பங்களிப்பாக - கொஞ்சம் கண்ணீர்.
“ஏன் எனக்கு மட்டும் கால்கள் நடக்க முடியாமல் போச்சி?” (ப.505) இந்த ஒரு கேள்வியில்தான் கால்கள் - என்ற மொத்த நாவலுமே இருக்கிறது. இந்தக் கேள்வியை கேட்கத்தான் இந்த நாவலே எழுதப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கு யாரிடமும் இல்லை பதில். நரம்பு மண்டலத்தை சீரழித்த வைரஸ் கிருமியிடம்கூட இல்லை. நம்முடைய எல்லா கடவுளர்களும் அற்புதங்களை நிகழ்த்தி- அந்த அற்புதங்களின் வெளிச்சத்தில் தங்களை ஸ்தாபித்துககொண்டவைதான். அந்த அற்புதங்களின் வெளிச்சத்தில் சிறு துளிகூட மதுவின்மீது விழவில்லை. கருவாக இருக்கும் ஒரு குழந்தை என்ன பாவம் செய்திருக்க முடியும்? குறிப்பாக கடவுளர்களுக்கு? எல்லாருக்கும் நோய்வரும் போகும். துன்பம்வரும் போகும். ஆனால் மதுவுக்கு வாழ்நாள் துயரம். நோயிலிருந்து ஒரு கணம்கூட விலகியிருக்க முடியாது. மனநோயாளிகிற பாலுகூட சரியாகிவிடுகிறான். ஆனால் மது? துயரம்தான் வாழ்க்கை. கடவுளின் பரிசு. கடவுளின் அற்புதம்.
மதுவின் உலகம் கண்ணாடியால் கட்டப்பட்ட கூண்டு. அந்த கூண்டுக்குள் அவள் மட்டும்தான் இருக்க முடியும். அதிலும் சில நேரங்களில் மட்டும்தான் அவளால்கூட இயல்பாக இருக்க முடியும். பலநேரங்களில் அவளாலேயே அந்த கூண்டு உடைந்து போகிறது. அவளே துணிந்து உடைக்கவும் செய்கிறாள். அவளால் மட்டுமல்ல பிறராலும் அந்த கண்ணாடி கூண்டு உடைந்துபோகிறது. அந்த கூண்டில் மனிதர்கள் ஓயாமல் கற்களை வீசிய வண்ணம் இருக்கிறார்கள். அன்பு என்ற பெயரில், இரக்கம், பச்சாதாபம், ஐயோ பாவம், சலுகை என்ற பெயரில் முன்னுரிமை, ‘நான் நொண்டியாக’ இல்லையே என்ற ஆதங்கத்தின், மனப்பொறாமையின் வழியாக கற்கள் வீசப்படுகின்றன. இரண்டு சக்கர வாகனம் ஓட்ட உரிமம் பெற காத்திருப்பதில் கிடைக்கிற முன்னுரிமைக்காகக்கூட பொறாமைப்படுகிற சிறுமைத்தனம். மனிதர்களைவிட கீழ்மைப்பட்ட, சிறுமைப்பட்ட விலங்கினம் வேறு உண்டா? இதைத்தான் நாவல் முழுவதும் ஆர்.அபிலாஷ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மதுவின் உலகம் கண்ணாடியிலான கூண்டு மட்டுமல்ல, கற்பனை கூண்டும்கூட. அவளுடைய உலகில் கற்பனைதான் அதிகம். கொஞ்சம் சிந்தனை - அதைவிடவும் சிறியதாக - ஒரு துளிபோல எதார்த்தம். அந்த ஒரு துளி எதார்த்தம்கூட அப்பா, அம்மா, நண்பர்கள், மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும்போது கிட்டுகிறவர்கள். மொத்தத்தில் மதுவின் வாழ்விடம் வீட்டிலுள்ள சிறிய அறையும், மருத்துவ மனையும்தான். பெயருக்குத்தான் கல்லூரி இருக்கிறது. சதா விழுந்துகொண்டே இருப்பதற்குக் காரணம் வெளி உலகோடு அவள் வாழ விரும்புகிறாள். வீட்டிற்கு மருத்துவமனை பெரிய இடம்தானே. நிறைய மனிதர்கள் இருப்பார்கள். நிறைய முகங்களை பார்க்க முடியும். அதற்காகத்தான் அவள் அடிக்கடி விழுந்து - அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அதனால்தான் நாவலில் வீட்டைவிட மருத்துவமனை முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. நாவலில் மருத்துவமனையும் சிகிச்சை முறையும்தான் முக்கியமான பாத்திரங்களாக இருக்கின்றன. தெருவில் கேட்கும் குரல்களின் வழியாக மனிதர்களையும், அவர்களுடைய வாழ்வையும் அடையாளம் காண்கிறாள். மதுவின் மன உலகின் வழியே விரியும் உலகைவிட. அதைவிட முக்கியமான பாத்திரம் பேச்சு. மது மட்டுமல்ல, பேராசிரியர்கள், கண்ணன், சுமி, விஜயா, மருத்துவர் அபிரகாம், காலிப்பர் செய்கிற கிழவர், பாலு என்று எல்லாருமே பேசுகிறார்கள். பேச்சு- அவர்களுக்கு உணவாக, வாழ்வாக இருக்கிறது. அதுதான் அவர்களை வாழ வைக்கிறது. அவர்களுக்கு விதிக்கப்பட்டது பேச்சு. நாவலில் வருகிற பலரும் படித்தவர்களாக இருக்கிறார்கள். அதிலும் இலக்கியம் படித்தவர்கள். இலக்கியம் படித்தவர்களுக்கு இருக்கிற ஒரே சிக்கல் அவர்களால் ஒருபோதும் இயல்பாக இருக்கவும், வாழவும் முடியாது. இயல்பாக வாழத் தெரியாதவர்கள் என்பதைவிட அப்படி வாழவும் விரும்பாதவர்கள். இதைத்தான் நாவலில் இடம்பெற்றுள்ள உரையாடல்கள் காட்டுகின்றன. நாவலில் பேசாதவர்கள் இரண்டுபேர் இருக்கிறார்கள். ஒருவர் பைத்தியம் என்று சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர். மற்றொருவர் குடிகாரன் என்று வர்ணிக்கப்படும் ஆட்டோக்கார கணேஷ். அவன் சாராயம் குடித்திருக்கிறான். ஆட்டோவை வேகமாக ஓட்டுகிறான். ஆனால் மரியாதையாக இருக்கிறான். சரியான கூலியை மட்டுமே வாங்குகிறான். ஆடடோக்காரனின் எளிய பண்பு இலக்கியம் படித்தவர்களிடம் இல்லை. உலக இலக்கியம் படிக்கிறார்கள், உலகத்தரமான சினிமா பார்க்கிறார்கள், உலக மக்களுக்காக அக்கறைப்படுகிறார்கள், ஓயாமல் சிந்திக்கிறார்கள். ஆனால் ஆட்டோக்காரனிடம் இருக்கும் நேர்மை அவர்களிடம் இல்லை. ஏன்? ஆட்டோக்காரன் உலகத்தரமான இலக்கியம் படித்தவனில்லை. உலகத்தரமான சினிமா பார்த்தவனில்லை. கால்கள் நாவலில் ஆர்.அபிலாஷ் முன் வைக்கிற கேள்விகள் மிகவும் எளியவைகள்தான். சின்னச்சின்ன கேள்விகளுக்குக்கூட நம்மிடம் பதிலில்லை. சௌதாமினியுடன் கொண்ட கள்ள உறவால் தலைமறைவாகிவிடுகிறார் மருத்துவர். அவர் புனிதராகிவிடுகிறார். சௌதாமினியை ஊர் வாய் மெல்லுகிறது. அவளுடைய வயிற்றிலிருக்கும் புற்று கட்டிக்காக மகிழ்ச்சியை கொண்டாடுகிறது. மனித உயிரின் மதிப்பு சமூக அந்தஸ்தைப் பொருத்தே அமைகிறது.
கால்கள் நாவலில் கடவுள் சார்ந்த உரையாடல் தொடர்ந்து நிகழ்கிறது. இருக்கிறாரா - இல்லையா? தெரியாது. அமிர்தானந்தமாயி முக்காலத்தையும் உணர்ந்தவராக - அற்புதம் செய்கிறவராக இருக்கிறார். அதன்பொருட்டு அவருக்கு பணம் வருகிறது. பொறியியல், மருத்துவ கல்லூரி என்று சொத்து வருகிறது. அதன் வழி அவருக்கு உலகமெல்லாம் விளம்பரமும்-வியாபாரமும் பணமும் கிடைக்கிறது. பாலுவுக்கு மனநோய் சரியாகவில்லை. மது காலிப்பரின் துணை கொண்டுதான் நடக்கிறாள். அப்படியானால் அற்புதங்கள் யாருக்கு நடக்கின்றன? அமிர்தானந்தமாயிக்கா மதுவுக்கா, பாலுவுக்கா? பாலுவின் தந்தை ஆங்கிலப் பேராசிரியர். அவர் அமிர்தானந்தமாயின் அற்புதங்கள் குறித்து விரிவாக பேசுகிறார். மருத்துவர் அபிரகாம் ஏசுவின் அற்புதங்கள் குறித்து பேசுகிறார். பேராசிரியரின் வேலை என்ன, மருத்துவரின் வேலை என்ன? தங்களுடைய வேலையை விட்டுவிட்டு மதப்பிரச்சாரம் செய்கிறார்கள். அற்புதங்கள்பற்றிய கதைகள் நோயாளிகளான பாலுவுக்கும், மதுவுக்கும் அலுப்பை உண்டாக்குகின்றன. அவர்களுடைய வலி குறையாத வரைக்கும் அவர்கள் எந்த அற்புதங்களையும் நம்பப்போவதில்லை என்பதை நாவல் அழுத்தமாகச் சொல்கிறது. அவள் மனம் திறந்து ஒரு நாளும் சிரித்ததில்லை. பகவத் கீதையை படித்துக்கொண்டிருக்கும் மருத்துவர் சொக்கலிங்கம் 100% ஊனத்தை 48% என்று மாற்றித்தர ஐநூறு ரூபாய் லஞ்சம் பெற்று சான்றளிக்கிறார். பகவத் கீதையை உயிராக மதிக்கும் ஒருவர்தான் ஊனமானப் பெண்ணிடம் கூச்சமில்லாமல் லஞ்சம் வாங்கிக்கொண்டு போலிச்சான்றிதழ் தருகிறார்.
நாவலில் பெற்றோர்களும் கவலையில் இருக்கிறார்கள். குழந்தைகளும் கவலையில் இருக்கிறார்கள். பரஸ்பர குற்றச்சாட்டுகளுடனும், பரஸ்பர கழிவிறக்கத்துடனும். மதுவின் அப்பா குடிகாரராகிவிடுகிறார். பாலுவின் அப்பா பேராசிரியர் அமிர்தானந்தமாயின் பிரச்சார பீரங்கியாகிவிடுகிறார். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கூண்டு தேவைப்படுகிறது. மனித மனம் என்பது இல்லாத ஒன்று ஏங்குவது. நொண்டி நடக்கிறான், குருடன் பார்க்கிறான், செவிடன் கேட்கிறான். அற்புதங்கள் நிகழ்கின்றன. யாருடைய கால்கள் நடந்தன. யாருடைய கண்கள் பார்த்தன. யாருடைய காது உயிர் பெற்றது. பெரு வெளிச்சத்தில் வியாபாரம் செழித்து வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மதுவின் கால்கள் கீரைத்தாண்டுமாதிரிதான் கடைசிவரை இருக்கின்றன. கடவுள்கள் பெருகுகிறார்கள். வியாபாரமும் பெருகுகிறது.
கால்கள் நாவல் மதுவை - பின்தொடர்ந்து செல்கிறது. அந்தப் பயணத்தில் மதுவின் மன உலகுக்குள் இருக்கிற ஏக்கங்களை-நடப்பது என்ற செயலுக்காக அவள் மனம் கொள்ளும் விழைவுகளை ஆர்.அபிலாஷ் வாசகனுக்கு காட்டித்தருகிறார். அதில் நாம் அதிர்ந்துபோகிறோம். வாசகனை அதிர்ந்துபோக வைப்பது நாவலாசிரியரின் நோக்கமல்ல. ஆனால் உண்மைகள்-மதுவின் மனதிலுள்ள உண்மைகள் அப்படித்தான் இருக்கின்றன. உலகிலுள்ள எல்லாப் படைப்புகளுமே வாழ்வை, மனித மனத்தை படம் பிடிக்கத்தான் விரும்புகின்றன. கடலிலிருந்து கைப்பிடியளவு நீரைத்தான் அள்ள முடிகிறது. அதுகூட கையில் பிடித்த காற்றாக இருக்கிறது. படைப்பின் நோக்கமும் காற்றைப் பிடிப்பதுதான். ஆர்.அபிலாஷ் தன் காரியத்தில் சரியாகவே வேலை செய்திருக்கிறார். கடுமையாகவும்தான்.
வாழ்விலிருந்து-மனதிலிருந்து ஒரு உலகை உருவாக்கிக் காட்டுவதற்கும், உரையாடலின் வழியாக, தர்க்கங்களின் வழியாக ஒரு உலகை உருவாக்கிக்காட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கிது. வாழ்க்கை என்று ஒன்று இல்லாவிட்டால் உரையாடலுக்கும், தர்க்கத்திற்கும், நீதிநெறிகளுக்கும் இடமில்லை. முக்கியமாக கடவுளுக்கு இடமில்லை. வாழ்வின் சாரம் இல்லாமல் எழுதப்படும் எழுத்து சிமெண்ட் கலவை இல்லாமல் வெறும் செங்கற்களைக்கொண்டு அடுக்கியது போன்றது. படைப்பு மனம் சார்ந்த உரையாடலுக்கானது. ஆர்.அபிலாஷ் அறிவு சார்ந்த உரையாடலுக்கு முன்னுரிமை தந்திருக்கிறார். தர்க்கத்தைவிட வாழ்விற்கு, உண்மைக்கு அதிக பலம் உண்டு. “இறந்துபோன ஒரு தொலைபேசிபோல் அவள் தலை இருந்தது” (ப.460) போன்ற வாக்கியங்கள் படிக்கும்போது கவர்ச்சியாக இருக்கும். ஆனால் கவர்ச்சி விரைவில் அழிந்துவிடும். அனுபவம் இருக்கிறது. அதற்கான மொழிதான் ஆர்.ஆபிலாவுக்கு கைக்கூடிவரவில்லை. வைதேகி, பேபி, சிவகலா, வடிவு மாமி, குமார், செல்வம் எல்லாம் நாவலுக்குள் வெறும் பெயர்களாக வருகிறார்கள். நிறைய எழுதுவதைவிட குறைவாக எழுதுவது மேலானது என்பது ஆர்.அபிலாசுக்குத் தெரியும்.
தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்க ஆர்.அபிலாஷ்க்கு - அவருடைய கால்கள் (நாவல்) நிச்சயம் உதவும்.
‘கால்கள்’ - நாவல்
ஆர்.அபிலாஷ்
உயிர்மை பதிப்பகம்
சுப்ரமணியன் தெரு,
அபிராமபுரம்
சென்னை
(இம்மாத உயிர்மையில் வெளியான விமர்சனம்)
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
நல்ல மதிப்புரை. முதல் நாவல் எழுதிஇருக்கிற உங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஜெகதீஷ்
ReplyDelete