Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, 9 January 2014

சமணர்கள் தூக்கிலப்படவில்லை என நிரூபிக்கும் அவசரங்கள்



நவம்பர் மாதமே காலச்சுவடில் பி.கிருஷ்ணனின் சமணர்கள் பற்றிய கட்டுரையை படித்ததும் எதிர்வினை எழுதி விட்டேன். தாமரைக்கு கொடுத்தேன். அப்போது பார்த்து ரெஜிஸ்திரேசனில் ஏதோ பிரச்சனை என இதழ் ஒரு மாதம் வரவில்லை. பிறகு ஒரு நண்பர் இன்னொரு இதழுக்கு வேண்டும் என வாங்கி மீண்டும் இழுத்தடித்தார். பின்னர் நானும் பதிவேற்றாமல் கொஞ்ச நாள் தள்ளிப் போட்டேன்.. கிருஷ்ணனின் கட்டுரையை இந்த இணைப்பில் பாருங்கள்
http://www.kalachuvadu.com/issue-167/page09.asp

இனி என் எதிர்வினை



சில மாதங்களுக்கு முன் காலச்சுவடில் பி.ஏ.கிருஷ்ணன் “சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?” என்கிற கட்டுரையை நிறைய சுவாரஸ்யமான தகவல்களுடன் எழுதி இருக்கிறார். சமணர்கள் கழுவேற்றப்பட்டதாய் கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார். அதாவது கல்வெட்டுகள், பட்டயக்குறிப்புகள் என ஒன்றும் இல்லை. பழந்தமிழ் இலக்கிய குறிப்புகளைத் தவிர.

விஷயம் இதோடு முடியவில்லை. ஒருவேளை ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால் ஒன்று நடந்திருக்கவில்லை என்று நம்ப அவசியமில்லை என்பதை அவர் அறிவார். அதனால் சமணர்களை கொல்லும் அவசியம் இந்துக்களுக்கு இல்லை என்பதை நிறுவ முயல்கிறார். பல இடங்களில் சறுக்குகிறார். பொதுவாக பி. ஏ. கிருஷ்ணன் தன் கட்டுரைகளில் சூரியனை நோக்கி கல்லெறிவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்.
முதலில் சமணர்கள் கழுவேற்றப்பட்டதாய் கூறப்படுகிற எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சமணர்களின் கல்வெட்டுகள் நிறைய கிடைத்துள்ளதாகவும், பத்தாம் நூற்றாண்டில் சீவக சிந்தாமணி இயற்றப்பட்டதாகவும், அதே போல் ஜீனகாஞ்சி எனப் படும் சமணக்கோயில் திருப்பத்திக் குன்றத்தில் கட்டப்பட்டதாகவும் கூறி இதனால் சமணர்கள் கொன்றிருக்கப்பட சாத்தியம் இல்லை என்கிறார். இது பிழையான வாதம்.
சமணம் இங்கு வலுவாக இருந்த மதம். ஒரேயடியாக சமணர்கள் அழித்தொழிக்கப்பட்டதாய் கூறுவது மிகை தான். இந்த கூற்றின் அடிப்படையில், அதாவது மிகையான கோரலின் அடிப்படையில், பி.ஏ. கிருஷ்ணன் அவர்கள் பரவலாக இருந்ததே கொல்லப்படவில்லை என்பதற்கு ஆதாரம் என்கிறார். அயோத்திதாசரின் காலத்திலேயே கூட பௌத்தத்தை தீவிரமாக பின்பற்றி ஒரு தனி சமூகமாக வாழ்ந்த மக்கள் இங்கு இருந்தார்கள். அவர்களுக்காக அயோத்திதாசர் தனியார் பத்திரிகை கூட நடத்தினார். அதாவது பௌத்தம் மிக பலவீனமாகி அழிந்து பட்டநிலையிலும் கூட அது வாழ்ந்து கொண்டு தான் இருந்தது. மதம் அழிய நீண்ட காலம் எடுக்கும். கபாலிகர்கள் போன்ற தீவிர சிறு குழுக்களோடு ஒப்பிட்டு அவர்கள் காணாமல் போக வில்லையே எனக் கேட்கிறார் கிருஷ்ணன். சமணம் மக்கள் ஆதரவு இருந்த ஒரு முழுமையான மதம். அதை சிறு குழுவோடு ஒப்பிடல் ஆகாது.
கடுமையான அரச ஒடுக்குமுறைகளுக்கு ஆகிற மதங்கள் உடனடி அழியுமா? இங்கிலாந்தில் பதினாறாம் நூற்றாண்டுக்கு பிறகு கத்தோலிக்கர்கள் மற்றும் பெந்தேகோஸ்துகள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். கத்தோலிக்கர்கள் கம்பத்தில் கட்டி எரிக்கப்பட்டார்கள். அரச விரோதிகளாக, தேச துரோகிகளாக கருதப்பட்டார்கள். இதைப் போன்றே சார்லஸ் II மன்னன் ஆட்சிக்கு திரும்பிய பின் பெந்தேகோஸ்துகளும் ஒடுக்கப்பட்டார்கள். ஆனால் இந்த மதங்கள் அழிந்து போகவில்லையே! 
அடுத்து, ஒடுக்குமுறையும் வளர்ச்சியும் வெவ்வேறு நிலைகளில் ஒரே காலகட்டத்தில் நிகழலாம். கடந்த பத்தாண்டுகளில் தலித்துகள் பரமக்குடியில் போல் அரசு எந்திரத்தாலும், தர்மபுரியில் போல் பா.ம.க போன்ற கட்சிகளாலும் மிக அதிகமாக கொல்லப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வந்துள்ளனர். ஆனால் இதே காலகட்டத்தில் தான் அவர்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் அதிகமாக வளர்ச்சியும் அடைந்துள்ளனர். அவர்களுக்கென்று வலுவான கட்சிகள் செயல்படுகின்றன. ஆனால் இதை வைத்து ஐநூறு வருடங்களுக்கு பிறகு ஒருவர் ரெண்டாயிரத்தில் தலித்துகள் ஒடுக்கப்படவே இல்லை என கூற முடியுமா? சமூகத்தில் வளர்ச்சி அழிவு போன்ற முரண்கள் சேர்ந்தே இருக்கும்.
சமணம் கடுமையான நெறிகளைக் கொண்ட பிரபலமற்ற மதம். வணிகளின் மதம். அதனாலே இங்கு வெளிமாநில சமண வணிகர்களின் வீழ்ச்சி அல்லது வெளியேற்றத்துடன் அதுவும் தானே அழிந்தது என்கிறார் பி.ஏ கிருஷ்ணன். அதனால் இது தவறான வாதம். இந்தியாவில் இன்று 34 மாநிலங்களில் சமணர்கள் காணப்படுகிறார்கள். சமணம் இந்தியாவின் ஆறாவது பெரிய மதம். இந்திய மக்கள் தொகையில் 4,200,000 பேர் சமணர்கள். எல்லோரும் வணிகர்களா? அல்ல அவர்கள் எல்லா தொழிலிலும் இருக்கிறார்கள். ராணுவத்தில் கூட. சொல்லப் போனால் முக்குலத்தோரை போல் ஜெயின்கள் போர் சமூகமாகவும் இருந்தார்கள் அப்படி ஒரு வரலாறும் அவர்களுக்கு உண்டு. ஜட், ரஜபுத்திரர்கள், கத்ரி, பண்ட் போன்ற சமூகங்களில் இந்து மதம் மட்டுமல்ல, சமணத்தை பின்பற்றுபவர்களும் கணிசமாக உண்டு. (மேலும் தரவுக்கு http://jainismus.hubpages.com/hub/The-Structure-of-Jain-Community).
இஸ்லாம் கூட கடுமையான நெறிகளைக் கொண்டு இந்து மதத்தின் பக்தி மார்க்க கொண்டாட்டங்கள் இல்லாத மதம் தான். அது பரவலாக பின்பற்றப்படவில்லையா? அரூபமான கடவுளை நம்பவில்லையா? மதம் கடுமையாக இருப்பதற்கும் பின்பற்றப்படுவதற்கும் சம்மந்தமில்லை. நம்பிக்கைகளும், சடங்குகளும், கட்டமைப்பும் தான் தான் மதத்தை உயிருடன் வைத்திருக்கிறது. இந்துமதம் பிரபலமாக இருந்ததற்கு அதற்கு இதிகாசக் கதைகள் இருந்தது காரணம் என்கிறார் கிருஷ்ணன். இதுவும் எல்லா மதங்களுக்கும் உரித்தானது தான்.
சமணம் போன்ற புது மதத்தால் ஆயிரமாண்டு பாரம்பரியம் கொண்ட இந்துமதத்தை எப்படி எதிர்த்திருக்க முடியும்? காலனிய ஆட்சி நடந்த இந்தியாவில் கிறித்துவத்தாலே தாக்குப்பிடிக்க முடியவில்லை. இஸ்லாமியர்கள் படையெடுத்து கோயில்களை அழித்து பரவலாய் கட்டாய மதமாற்றம் செய்ததாய் கூறப்படுகிறது. அப்படி என்றால் ஏன் இஸ்லாம் சிறுபான்மை மதமாக இருக்கிறது? முகலாய சாம்ராஜ்யம் வலுவாக இருந்த காலகட்டத்திலேயே. ஒரு புது மதம் ஏற்கனவே உள்ள பழைய மதத்திற்கு இணையாக வளர முடியாது. ஆனால் பழைய மதத்தின் அதே நம்பிக்கைகள், கட்டமைப்பை சுவீகரித்து அதன் இடத்தை எடுத்துக் கொள்ள முடியும். கிறித்துவம் அப்படித் தான் வளர்ந்தது. மேலும் இந்தியாவில் இந்து மதத்தின் இதயம் சாதியமைப்பு. அதே சாதிய கட்டமைப்பை ஆதரித்து அதற்கான புனைவுகளை உருவாக்கும் மதம் தான் இந்துமதத்திற்கு இணையாக வளர முடியும். இப்படி மதம் தன்னை தக்க வைப்பதும் வளர்வதும் மிக சிக்கலானது. அதற்கு மரபு, பண்பாட்டு சூழல் என பல காரணிகள் உதவ வேண்டும். ஆக சமண மதம் வளரவில்லை என்பதே இந்து மதம் ஆதிக்க மதம் என்பதைத் தான் காட்டுகிறது. ஆனால் வன்முறை நிகழ்த்தப்பட்டதா என்பது ஊகம் மட்டுமே.
கட்டுரையில் ஆரம்பப் பகுதியில் நாயன்மார்களிடம் இருந்து உதாரணங்களை தந்து சமணர்களை கடுமையாக வசை பாடினார்களே ஒழிய வன்முறையில் ஈடுபட்டதாய் பாட்லகளில் தெரியவில்லை என்கிறார். இதை ஒரு ஆதாரமாகவே கருத முடியாது. நான் என் பக்கத்து வீட்டுக்காரனை தினமும் கெட்ட வார்த்தையில் ஏசுகிறேன் என்றால் அது நாளை அவனை அடிக்க மாட்டேன் என்பதற்கு ஆதாரம் ஆகி விடுமா?
சமணர்களை அழிப்பதற்கான என்ன தேவை சைவர்களுக்கு இருந்திருக்கும் என கிருஷ்ணன் கேட்கிறார்? அதாவது கொலைக்கான உத்தேசம். இது ஒரு குழந்தைத்தனமான வாதம். வன்முறைக்கு உத்தேசம் எதுவும் இல்லை. இந்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு அல்லது நாள் தோறும் நடக்கிற கொலைகளுக்கு ஏதேனும் உத்தேசம் உண்டா? இல்லை. வன்முறை என்பது ஒரு மொழி. உரையாடல். அதற்கு தர்க்கம் ஏதும் இல்லை என்று பூக்கோ தெளிவாக விளக்கி உள்ளார். பொதுவாக ஒரு கட்சி வலுப்பெறும் போது பலவீனமான தரப்பை ஒடுக்கவும் வன்முறைக்கு உட்படுத்தவும் செய்யும். தன் அதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு வழிமுறை அது. எந்த அலுவலகத்திலும் பாருங்கள். ஒரு புது மேலாளர் வந்ததும் சில மாதங்கள் தனக்கு கீழ் உள்ளோரை கடுமையாக துன்புறுத்துவார். அப்படித் தான் தன் அதிகாரம் ஸ்திரப்படுவதாய் அவர் உணர்வார். மதங்களுக்கும் இதுவே நிகழும்.
சமணர்கள் கழுவேற்றப்பட்டிருக்கலாம். எண்ணிக்கை எவ்வளவாகவும் இருக்கலாம். இது ஒரேயடியாக அம்மதத்தை அழிப்பதற்காக அல்ல. இந்துக்கள் தம் அதிகாரத்தை உறுதிப்படுத்த இதை செய்திருக்கலாம். தமிழகத்தில் உள்ள பல சமண, பௌத்த கோயில்கள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன. எங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள குமாரகோயிலில் சமணக் கடவுள் முருகனாக மாற்றப்பட்டுள்ளது. இதெல்லாம் சாத்வீகமாக நடந்திருக்க முடியாது. கழுவிலேற்றினார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை தான். ஆனால் கடும் ஒடுக்குமுறைகள் இருந்திருக்கும். இல்லாமல் இந்துமதம் சமணத்தை கபளீகரம் செய்திருக்க முடியாது.
சமணர்கள் கழுவிலேற்றப்பட்ட செய்தி நம்பியாண்டார் நம்பியின் பாடல் ஒன்றில் வரும் சேதி மட்டும் தான். அது வரலாற்று ஆதாரம் அல்ல என்கிறார் கிருஷ்ணன். அப்படி என்றால் நம் வரலாறு முழுக்க கராறான ஆதாரங்களால் எழுதப்பட்டதா? இல்லை. சங்கப்பாடல் தகவல்களில் இருந்து தாம் பழந்தமிழர் வாழ்க்கையை திரும்ப எழுதுகிறோம். ஷேக்ஸ்பியர் வாழ்ந்தது குறித்த ஒரு கராறான ஆதாரம் கூட கிடையாது. ஆனால் அவரது வாழ்க்கை வரலாற்றை அவரது நாடகம் மற்றும் கவிதைகளில் உள்ள சிறு தன்சரித தகவல்களை கொண்டே மீளுருவாக்கம் செய்து ஆயிரக்கணக்கான பக்கங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. கணிசமான வரலாறு இப்படித் தான் மனித கற்பனையுடன் எழுதப்படுகிறது. அதற்கென்று இது பொய் ஆகாது. துளி உண்மை இல்லாமல் தொன்மங்கள் தோன்றுவதில்லை. மேலும் இலக்கிய பிரதி ஒரு சமூகத்தின் ஆழ்மனதில் உள்ள விருப்பத்தை, நம்பிக்கையை மற்றும் சமகால நிகழ்வை தாம் பதிவு செய்கிறது. கற்பனை கலந்த உண்மை ஆவணம் அது. பி.ஏ. கிருஷ்ணன் தர்க்கப்படி பார்த்தால் நாம் 90% வரலாற்றை நிராகரிக்கத் தான் வேண்டும். பட்டயங்கள், கல்வெட்டுகளில் காணப்படுவது கூட வரலாறு எனும் பனிப்பாறையின் சிறுநுனி தானே!
அதிகாரமற்றவர்களின் வரலாறு பதிவாவதில்லை. இதுவரையிலான இந்திய வரலாறு அவ்வாறு ஒருதலை பட்சமானது தான். அதை வைத்து சமணர்கள் ஒடுக்கப்படவில்லை என்பது பலவீனப்படுத்தப்பட்ட தரப்பை மேலும் பலவீனமாக்கும் முயற்சி. சமணர்களின் வரலாற்று ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம், கண்டடையாமல் போயிருக்கலாம், பதிவாகாமலே கூட இருக்கலாம். வரலாறு மதத்தை போன்று நம் விசுவாசத்தையும் கற்பனையும் கோரும் ஒன்று.
ஆக பாடல்களில், இலக்கியத்தில் வரும் தகவல்கள் முழுக்க பொய்யாக இருக்க முடியாது. மிகை இருக்கலாம். ஆனால் சமணர்கள் கொல்லப்பட்டது முழுக்க பொய்யாக இருக்க முடியாது. இவ்வளவு கண்காணிப்பும் சமத்துவமும் நிலவும் இந்த காலத்திலேயே எண்ணற்ற மதப்படுகொலைகள் நடக்கையில் கடந்த காலத்தில் மதம் சார்ந்த வன்முறை இன்னும் வெளிப்படையாகவே நடந்திருக்கும்.
கிருஷ்ணன் பால் டுண்டாஸ் எனும் ஒரு வரலாற்று ஆசியரை குறிப்பிட்டு கழுவிலேற்றப்பட்டது ஒரு குறியீடு என்கிறார். இது நகைப்புக்கு உரியது. யாகம் குறித்த சித்திரம் தான் தூக்கிலிடும் காட்சி என்கிறார். இப்படி ஒரு கொடூரமான அர்த்தமற்ற குறியீடை நான் எந்த புத்தகத்திலும் படித்ததில்லை. நாளை குஜராத் கலவரத்தையும் யாராவது ஒரு குறியீடு என எழுதுவார்கள். மாடுகளை வெட்டி பலி கொடுக்கும் சடங்கு இருந்தது. அது தான் இஸ்லாமியர் தலைகளை வெட்டுவதாக கலவரமாக குறியீட்டு ரீதியாக பத்திரிகை புத்தகங்களில் விவரிக்கப்பட்டது என்பார்கள்.
சரி இலக்கிய குறிப்பை நம்பலாமா? ஊகத்திற்கு மட்டுமே கொள்ள முடியும். ஆனால் மக்களின் வரலாற்று ஓர்மை இப்படியான இலக்கிய புனைவுகள் அல்லது தொன்மங்களை நம்பித் தான் இருக்கிறது. பி.ஏ. கிருஷ்ணனும் விதிவிலக்கு அல்ல. அரச ஆதரவில்லாமல் வைணவர்கள் கடும் ஒடுக்குமுறைகானதாக குறிப்பிடுகிறார். “ராமானுஜர் பல வருடங்கள் தமிழகத்துக்கு வெளியே இருக்க நேர்ந்தது. குரு பரம்பரைக் கதைகள் பல வைணவர்கள் குருடாக்கப்பட்டதைப் பற்றி பேசுகின்றன” என்கிறார். அதாவது வைணவர்கள் ஒடுக்கப்பட்டதற்கு அவர் குருபரம்பரைக் கதையை ஒரு ஆதாரமாக தருகிறார். ஆனால் சமண ஒடுக்குமுறைக்கு அது போன்ற கதையை நம்ப மாட்டார்.
உங்களுக்கு வந்தால் மட்டும் ரத்தமா மிஸ்டர் பி.ஏ. கிருஷ்ணன்?
Read More

Sunday, 24 November 2013

மோடியும் காதலியும்





அன்பும் கருணையும் பற்றி சதா பேசுகிறவர்கள் மற்றவர்களை வதைப்பதில் அதீத விருப்பம் கொண்டிருப்பார்கள். பிரம்மச்சாரிகளும் இப்படித் தான் – மனம் முழுக்க காமத்தால் நிரம்பி இருக்கும். சட்டசபையில் போர்னோ பார்ப்பதாகட்டும், மனநலமில்லாத பெண்ணை கற்பழிப்பதாகட்டும் காவிப்படையினர் நிபுணர்களாக இருக்கிறார்கள். ஆனால் குஜராத்தில் அப்பாவி சிறுபான்மையினரை படுகொலை செய்யத் தூண்டிய, அவ்வன்முறையாளர்களை இந்நாள் வரை பாதுகாத்து வரும் மோடி ஒரு குரூரமான கொலையாளி என்கிற சித்திரமே நமக்குள் இருக்கிறது. இன்னொரு புறம் அவர் அத்வானியை வெளியேற்றிய விதம் அவர் எந்தளவுக்கு தயக்கமற்ற அதிகார வெறியர் என்பதையும் காட்டியது. இதோடெல்லாம் ஒப்பிடுகையில் பங்களூர் இளம்பெண்ணை அவர் போலீஸைக் கொண்டு பின் தொடர்ந்தது, தொலைபேசியை ஒட்டுக் கேட்டது போன்றவை சிறு குற்றங்கள் தாம்.

இவ்விசயத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா ஒரு விநோதமான தகவல் கூறுகிறார். இப்பெண் தன்னை மோடிக்கு அறிமுகப்படுத்தி விட்டதற்காக “நீங்கள் என் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தீர்கள். என்றும் கடன்பட்டிருக்கிறேன்” என நன்றி கூறுகிறார். பிரதீப் சர்மா மீது மோடி பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளியதும் அப்பெண்ணும் குடும்பத்தினரும் அவரை பார்க்க செல்கிறார்கள். அப்பெண் ஜெயிலில் பிரதீப் சர்மாவுடன் பேசுகிறாள். அந்தளவுக்கு நன்றி உணர்வு ஏன்? மோடி எனும் ஒரு வயதான, சகஜமான செக்ஸ் உறவு சாத்தியப்படாத ஒருவரை காதலிக்க வாய்ப்பு உருவாக்கி கொடுத்தமைக்கா? ஏன் இளம் பெண்கள் இது போல் அதிகாரமிக்க ஆனால் ஆண்மைக்குறைவான முதியவர்களால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பது நாம் விரிவாக அலச வேண்டிய ஒரு நுணுக்கமான விவகாரம்.
ஒரு கோணத்தில், மோடியைப் போன்று இரும்பிதயம் கொண்ட மனிதருக்கு இப்படியான பலவீனங்கள் இருப்பது அறிய ஆசுவாசமாகத் தான் இருக்கிறது. இளம் வயதிலேயே அவர் அழகான பெண்கள் மீது ஆர்வம் செலுத்தி இருந்தால் குஜராத் கலவரம் இவ்வளவு கொடூரமாக நடந்திருக்காது. பணமும், அதிகாரமும் சம்பாதிக்கும் வெறி பொதுவாக கட்டுப்படுத்தப்பட்ட பாலியலலில் இருந்து தான் வருகிறது. இன்னொரு பக்கம், ஆண்களின் காம வறட்சிக்கு அதிகாரத்தையும் பணத்தையும் பிரதான அளவுகோலாய் கணிசமான பெண்கள் கருதுவதும் ஒரு காரணம். ஒரு அர்த்தத்தில் சர்வாதிகாரிகளை இது போன்ற இளம்பெண்கள் தாம் தோற்றுவிக்கிறார்கள். அவர்களுக்கு வயதான பின் மட்டும் அருகாமையில் சென்று கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.
இந்த சர்ச்சை மோடியின் வீழ்ச்சிக்கு வழிகோலுமா? வாய்ப்பு குறைவு தான். அத்வானி, வாஜ்பாய் போல் மோடிக்கு ஒரு கனிவான, நாகரிகமான, ஒழுக்கவாத பிம்பம் இல்லை. அவர் ஒரு மேம்பட்ட காடுவெட்டி குரு. தந்திரங்களில் கைதேர்ந்த யாரையும் தள்ளி விட்டு முன்னேற தயங்காத அரசியல்வாதி. வாஜ்பாய்க்கு நேர் எதிர்முகம். குஜராத் கலவரத்தின் போது மோடியை தண்டிக்கவே வாஜ்பாய் விரும்பினார் என்பது ஒரு எளிய தகவல் அல்ல. மோடி ஒரு விதத்தில் அறத்திலும், பொறுமையிலும் நம்பிக்கையற்ற, அதிகாரம், பணம் அடைவதில் அவசரம் மிக்க, சாதி மத வெறி மிக்க இன்றைய இளைய தலைமுறையின் சரியான பிரதிநிதி எனலாம். தான் விரும்புகிற பெண் மீது சந்தேகம் வந்தால் இன்றைய தலைமுறை ஆண் இப்படியே தான் நடந்து கொள்வான். மோடிக்கு கட்டற்ற அதிகாரமும் பணமும் இருப்பதால் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாரை கூட இந்த வேலைக்கு பணிக்க முடிகிறது. அதனால் தான் இன்றைய இளைஞன் இதை ஒரு பெரிய குற்றமாக, கறையாக, இழுக்காக எண்ண மாட்டான். மோடியின் அரசியல் வாழ்க்கையில் இது கடந்து போகும். ஆனால் குஜராத் வன்முறை நிற்கும். ஏனென்றால் அவர் ஆட்சிக்கு வந்த பின் மேலும் பல வன்முறைகள் தேசமெங்கும் கட்டவிழ்த்து விடப்படும். அப்படித் தான் பா.ஜ.க தன்னை வலுப்படுத்தி வந்துள்ளது.
தருண் தேஜ்பால் வழக்குக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. தேஜ்பால் தன் அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு கீழே வேலை பார்க்கும் பெண்ணை பால்யல் ஒடுக்குமுறை செய்ய முயல்கிறார். இந்த கொடுமை நம் நாட்டில் உள்ள பல பெண் ஊழியர்களுக்கு நடந்து வருவது. தருணுக்கு வலுவான தண்டனை அளிப்பது நம் பெண்களுக்கு பொதுவாக இப்படியான வழக்குகளில் முனைந்து சட்ட உதவியை நாட தன்னம்பிக்கை அளிக்கும். மோடியின் குற்றம் கணவன் மனைவி சச்சரவு போல ஒருவித குடும்ப குற்றம் எனலாம். தன்னை நாடி வந்த, பாலுறவில் ஈடுபட தயங்காத ஒரு பெண் மீதான சந்தேகத்தால் ஒருவர் செய்கிற குற்றம் அது. கணவன் மனைவியின் செல்போனை ஒட்டுக்கேட்பது போன்ற குற்றம் இது.
பிரதீப் சர்மா அதிகார வர்க்கத்தை சேர்ந்த மற்றொரு ஆள். அவரால் இதில் இருந்து தப்பிக்க தெரியும். அதற்கான தொடர்புகளும், அறிவும் அவருக்கு உண்டு. ஒரு அடிமட்ட நபர் மோடியால் நசுக்கப்பட்டால் நாம் அவரை ஆதரிக்கலாம். ஆனால் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆதரவளிக்க ஏற்கனவே ஆயிரம் கரங்கள் மீடியாவில் இருந்து நீளுகின்றன. மேலும் அவர் இந்த விவாகாரத்தை வெளியே விட்டதே தன்னை பாதுகாக்கத் தான். அவ்வளவு நல்லவர் என்றால் ஏன் இத்தனை நாள் தேமேவென இருந்தார்? நாளை ஒரு சமரசத்திற்காக இதையெல்லாம் மீண்டும் மறைத்து மௌனமாக மாட்டார் என்று என்ன நிச்சயம்?
அரசியல் தலைவர்களின் காதலிகள் அரசியலுக்கு வருவது எவ்வளவு ஆபத்தானது என அறிவோம். பொதுவாக அதிகார வெறியும், வன்முறையும் மிக்கவர்களாக அத்தகைய பெண் தலைவர்கள் இருப்பார்கள். எம்.ஜி.ஆர் சபலப்படாமல் இருந்திருந்தால் தமிழகம் நிச்சயம் பிழைத்திருக்கும். அவ்விதத்தில் நாம் இந்த பெங்களூர் பெண்ணுக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்னும் சில வருடங்கள் தாக்குப் பிடித்து பா.ஜ.க எம்.பியாக அவர் வளர்ந்திருந்தால் இன்னொரு தலைவலி நமக்கு ஆரம்பித்திருக்கும். அழகிகள் அரசியல் தலைவர்களின் கடைக்கண்ணில் மட்டுமே இருப்பது தேசத்திற்கு நல்லது.  
Read More

Tuesday, 6 September 2011

மகாஎழுத்தாளரும் நீதிவான்களும்




ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் குறித்த கட்டுரை (மூவருக்கு தூக்கு தள்ளிவைப்பு) ஒன்றில் ஜெ.மோ சொல்கிறார் இந்திய நீதிமன்றங்கள் நேர்மையானவை, இதுவரை உச்சநீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லாமல் யாரையும் தண்டித்ததில்லை, அதனால் சாந்தன், முருகன், பேரறிவாளன் குற்றவாளிகளே என்று. அவ்வப்போது நீதிபதிகள் சி.பி.ஐயை கேள்வி கேட்டு நெளிய வைப்பதை வைத்து ஜெ.மோ இந்த முடிவுக்கு வருவது வருத்தத்துக்கு உரியது. முதலில் எல்லா நாட்டு நீதிமன்றங்களும் அரசுக்கு சார்பாகவே தீர்ப்பளிக்கின்றன. ஒருவர் தீவிரவாதி என்று நிறுவ போதிய சான்றுகள் இல்லாத பட்சத்திலும் அவர் அப்படியே என்று நீதிமன்றம் நம்புமானால் அந்த ஊகத்தின் அடிப்படையிலும், மக்களின் உணர்வுகள் குற்றவாளிக்கு எதிராக திரண்டால் அதற்கு ஏற்றபடியும் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. அமெரிக்காவில் அறுபதுகளில் எதிர்கம்யூனிஸ் அலை வீசப்பட்ட போது மின்நாற்காலியில் எரித்து கொல்லப்பட்ட ரோஸன்பெர்குகளில் இருந்து சதாம் ஹுசேன் வரை இதுவே நடக்கிறது. முஷாரப், ஹுசேன் உள்ளிட்ட எந்த ஆட்சியாளரும் பதவி கவிழ்க்கப்பட்டவுடன் நீதிமன்றம் அவர்களை குற்றவாளிகள் என்று எளிதில் தீர்ப்பு வழங்குகிறது. இதன் மூலம் ஒன்று விளங்குகிறது அரசும், மக்களும், விசாரணை அமைப்புகளும் தான் ஒரு வழக்கின் போக்கையும் முடிவையும் தீர்மானிக்கிறார்கள். இவர்களை மீறி எந்த நீதியும் வெல்ல முடியும். இவர்களால் எந்த அநீதியும் வெல்ல முடியும். மக்களின் குவிக்கப்பட்ட உணர்வுகள் என்றும் நீதியின் பக்கம் இருந்ததில்லை. ஜெர்மானியர்களில் இருந்து சிங்களர்கள் வரை இன அழிப்பை ஆதரித்து வந்ததை நாம் காண்கிறோம். அந்த நாடுகளிலும் நீதியமைப்புகளும் கர்த்தரும் புத்தனும் இருந்தார்கள். அரசுகள் முதலாளித்துவம் மற்றும் மதநிறுவனங்களின் கருவியாகத் தான் இதுவரை வரலாற்றில் இருந்து வந்துள்ளன. விசாரணை அமைப்புகள் தனியாக செயல்பட முடியாதவை ஆக நீதிமன்றம் ஒரு கிளிப்பிள்ளை. (எந்த கிளியையும் போல அது சில வேளை உண்மையும் சொல்லலாம்.)
இந்தியாவில் ஊழலுக்கு படுகொலைகளுக்கும் காரணமான எந்த அரசியல்வாதியும் இதுவரை தண்டிக்கப்படாததற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று பெரும்பான்மை மக்கள் மறைமுகமாக அநீதியை ஆதரிப்பது. அது ஊழலோ மதவாதமோ விளிம்புநிலை மக்கள் மீதான வன்முறையோ ஆக இருக்கலாம். பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து சமீப காலம் வரையிலான இந்துத்துவா படுகொலைகள் பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவுடன் நடந்ததால் ஒரு எதிர்க்கட்சி அரசால் கூட அத்வானியையோ மோடியையோ வேடிக்கை பார்த்த காவலதிகாரிகளையோ தண்டிக்க முடியவில்லை. மாறாக கோத்ரா படுகொலையில் மோடியின் நேரடி பங்கை வெளியிட்ட ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தற்காலிக பணிநீக்க செய்யப்பட்டு அவருக்கு எதிராக பழைய வழக்கொன்று துடைத்தெடுக்கப்பட்டு நடக்கிறது.
இரண்டு, வளர்ச்சி என்ற பெயரில் வியாபார நிறுவனங்களுக்கு ஆதரவான சலுகை மனப்பான்மை. அதிகார வர்க்கத்தினரை நீதியின் பெயரால் அதிகமாக தொந்தரவு செய்யக்கூடாது என்பது இங்கு மீடியாவும் அரசியல்வாதிகளும் முன்வைக்கும் நிலைப்பாடு. கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக எந்த நியாய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதனால் இந்தியாவின் வணிக வளர்ச்சி பாதிக்கப்படுவதாக இந்தியா டுடே போன்ற வலதுசாரி பத்திரிகைகள் எழுதும். வளர்ச்சிக்காக வணிக நிறுவனங்களின் விதிமுறை அத்துமீறல்களை பொருட்படுத்தக் கூடாது என்பதே இன்று நம்மிடையே நடைமுறையில் உள்ள ஒரு வாதம். மேலும் பன்னாட்டு முதலாளிகளால் எளிதில் சி.பி.ஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளையும் அரசு எந்திரத்தையும் விலைக்கு வாங்கிட முடியும். ஆக மக்களின் மிகை உணர்வுகளை, அது மதவாதமாக இருந்தாலும், கார்ப்பரேட்டுகளின் அத்துமீறல்களை, அது குற்றமாக இருந்தாலும், கண்மூடி ஏற்க வேண்டும் என்பதே இதன் பொருள். இந்த காரணத்தினாலே 2011 மே மாதம் போபால் குற்றத்திற்காக யூனியன் கார்பைடுக்கு எதிராக தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் மறுத்தது. 2G வழக்கில் இன்றும் அம்பானியோ டாட்டாவோ சிறைக்கு செல்லாமல் இருக்கிறார்கள். மும்பையில் போலீசுக்கே தெரிந்தே இண்டர்போலால் தேடப்படும் சர்வதேச குற்றவாளிகள் பதினைந்து பேர் நட்சத்திர ஹோட்டல் நடத்துகிறார்கள், தாவூதின் சகோதரனை சோட்டா ஷக்கீலின் அடியாள் தாக்க முயன்றால் போலீஸ் பாதுகாப்பு தருவதுடன் உடனடியாக ஒரு பெரும் குற்றவாளிக்காக மற்றொரு சிறு குற்றவாளி கைது செய்யப்படுகிறார். தாவூத் மும்பையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்வது அனுமதிக்கப்படுகிறது. இந்தியாவில் வெள்ளைக்காரனில் இருந்து கொள்ளைக்காரன் வரை வியாபாரம் தொழில்வளர்ச்சி என்ற பெயரில் குற்றங்களை பட்டவர்த்தமாக இழைக்க முடிகிறது. இஸ்லாமியரை படுகொலை செய்ததற்காக அத்வானியில் இருந்து இன்று மோடி வரை தண்டிக்கப்படாமல் அப்பழுக்கற்ற சூட்டுகளில் தோன்றி மீடியா வலம் வருகிறார்கள்; ஜெயின் கமிஷன் சந்தேகம் எழுப்பிய சந்திராசாமி மற்றும் சுப்பிரமணிய சாமி வரை தப்பிக்க விடப்பட்டு ஆனால் சிவராசனால் அச்சுறுத்தப்பட்டு வீடு ஆக்கிரமிக்கப்பட்ட குற்றத்திற்காக புலி என்றே சொல்லே தெரியாத ஒரு கன்னடியர் பத்து வருடம் ஜெயில் தண்டனை அனுபவிக்கிறார். இந்தியாவில் மேற்சொன்ன இரு எழுதப்படாத விதிகளை மீறி நீதி செயல்பட முடியாது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கில் இடப்படவுள்ளவர்கள் நேரடியாக சம்மந்தப்படாதவர்கள் என்பது நாம் அறிந்தது. பேரறிவாளன் குண்டு தயாரித்தார் என்பதற்கு சி.பி.ஐ தரும் ஆதாரம் அவர் குண்டுக்கான பாட்டெரிகளை வாங்கித் தந்தார் என்பதே. ஆனால் குண்டுக்கான வெடிமருந்தை சப்ளை செய்த கெ.பியை தான் நாம் இங்கு கொண்டு வந்து தூக்கில் இட வேண்டும். அல்லது ராஜீவுக்கு ஆபத்து வரப்போகிறது என்று தெரிந்திருந்தும் தடுக்காத வாழப்பாடி ராமமூர்த்தி, சுப்பிரமணியம் சாமி போன்றோரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி இருக்க வேண்டும். முயன்றிருந்தால் பேட்டரி வாங்கியதற்கான பில்லை ஆதாரமாக தந்ததை போல் ஒரு தேசலான ஆதாரத்தை இவர்களுக்கு எதிராக சி.பி.ஐயால் திரட்டியிருக்க முடியும். மேலும் சி.பி.ஐயின் கூற்று உண்மை என்றாலும் இவர்கள் செய்தது ஒரு குறைந்தபட்ச குற்றம் மட்டுமே அதற்கு தூக்குத்தண்டனை அதிகப்படியான தண்டனை. ஜெ.மோ சொல்வது போல் இவர்கள் ராஜீவ் கொலையாளிகளோ இவர்களுக்கு நாம் தயைகூர்ந்து மன்னிக்க வேண்டியதோ இல்லை. இவர்களுக்கு அதிகப்படியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது; அநீதி நிகழ்ந்துள்ளது. ஒருவரை குற்றவாளி என்று தீர்மானித்து மன்னிப்பது தண்டிப்பதற்கு சமானமானது. இந்த குற்றம் சுமத்தி மன்னிக்கும் தாராளமனப்பான்மை ஒருவித குரூரத்தின் விளைவு. தண்டிக்கும் போதும் குற்றம் சுமத்தி ‘தப்பித்து ஓடிப் போ என்று அனுமதிக்கும் போதும் நாம் அதே சாடிஸ திருப்தியை தான் உணர்கிறோம்.
அடுத்து உச்சநீதிமன்றத்தின் மீது அபார நம்பிக்கை உள்ள ஜெ.மோ ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை “ஒரு வரலாற்று தருணம், மக்களின் உணர்வுகளை ஊழலுக்கு எதிரான போராட்டம் நோக்கி திருப்பும் வல்லமை கொண்டது என்று கொண்டாடுகிறார். 2G, CWG, அம்மாவின் சொத்துக்குவிப்பு என்று ஏகப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தின் விசாரணையில் நிலுவையில் தானே உள்ளன. சர்வ வல்லமை பொருந்திய அறம் பிழைக்காத (ஆனால் ஊழல் மற்றும் நில அபகரிப்பு குற்றங்களுக்காக பதவி விலக்கப்படும் சௌமித்ர சென்களும் தினகரன்களும் ஆளும்) நீதிமன்றங்கள் இருக்கும் போது அன்னா ஹசேரேவின் உண்ணாவிரத போராட்ட எதற்கு? இத்தனை டி.வி சேனல்கள், மற்றும் வலதுசாரிகள், தன்னார்வ குழுக்களின் ஆதரவுடன் தொடர்ந்து பத்துநாட்கள் இந்தியா மொத்தத்தையும் டிராபிக் ஜாம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? லோக் பாலின் தேவை என்ன? ரேஷன் கார்டில் இருந்து 2G, 3G வரை என்ன பிரச்சனை இருந்தாலும் ஒரு எளிய பாமரர் தன்னார்வ வழக்கு தொடுத்தால் போதுமே! ராஜீவ் கொலைவழக்கில் சுருக்கமாக முடித்து நீதியை நிலைநாட்டிய சி.பி.ஐ சான்றுகளை தந்து நீதிவான்கள் தீர்ப்பளித்து ஊழலை அழிக்க மாட்டார்களா? அப்பழுக்கற்ற நீதிபதிகளும், நேர்மையான விசாரணை அதிகாரிகளும் உள்ள போது அன்னா ஹசேரேயின் தேவை என்ன?  உண்மை என்னவெனில் கோணலாக சிந்திக்கும் ஒரு இந்துத்துவ சமூகமும், ஊழல் மலிந்த காவல்துறை, சி.பி.ஐ அதிகாரிகள், அரசியல்வாதிகளையும் தாண்டி நீதிமன்றங்களில் உள்ளதாக நம்பப்படும் ரட்சகர்களாலோ, லோக்பால் குழுவில் நியமிக்கப்படும் அதே குட்டையை சேர்ந்த தனிமனிதர்களாலோ ஊழலை அழிக்க முடியாது. இதை ஜெயமோகனே முன்னர் தீராநதியில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஊழல் நம் சமூகத்தில் என்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக உள்ளது என்று திருவிதாங்கூர் சமஸ்தான வரலாற்றை சுட்டிக் காட்டி அன்று ஜெ.மோ எழுதினார். அரசின் நலத்திட்டங்களுக்கான பணம் மக்களை சென்று சேருமுன் பல வாய்கள் கொஞ்ச கொஞ்சமாக கடித்து கடைசியில் எலும்பு மட்டுமே மக்களுக்கு எஞ்சும் என்பது ஒரு நடைமுறை உண்மை. ஊழலை அழிக்க முடியாது மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் குறைக்கலாம் என்றார் ஜெ.மோ. அப்படியென்றால் லோக்பாலால் மட்டும் மக்கள் பணத்தை காப்பாற்ற முடியும்?
மற்றொரு கட்டுரையில் (“மேலிருந்து ஊழலை அழிக்க முடியுமா) நேர்மையான தலைவர்கள் மேல் இருந்தால் ஊழல் குறையும் என்கிறார். முன்பை விட இன்று அரசியல் தலைவர்கள் ஊழல் குறைவாக செய்வதாக சொல்கிறார். மக்கள் சகித்துக் கொள்வதில்லையாம். உண்மை என்ன? முன்னெப்போதையும் விட இன்று தான் செல்வந்தர்களும், வணிகர்களும் அரசியலில் ஈடுபடுகிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விபரத்தை வெளியிட்ட போது நமது நாட்டில் கோடிக்கணக்கில் பணமில்லாமல் ஒருவர் தேர்தலில் நிற்க முடியாது என்ற உண்மை தெரிய வந்தது. ஊடகங்களில் இது பரவலாக பேசப்பட்டது. கவுன்சிலர்களில் இருந்து எம்.எல்.ஏக்கள் வரை இன்று தங்கள் தொகுதியில் தாம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. நான்கு வருடங்களில் எவ்வளவு சுருட்ட முடியுமோ அது போதும் என்று வெளிப்படையாகவே மக்களிடம் சொல்லி ஐம்பதில் இருந்து ஐம்பதாயிரம் வரை கிஸ்தி கேட்கிறார்கள். இன்று அரசியல் என்பது மீடியா மற்றும் பன்னாட்டு நிறுவன துணையுடன் செய்யும் ஒரு வியாபாரம். ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன் அளவுக்கு நம் வரலாற்றிலேயே யாரும் ஊழல் செய்ததில்லை. இன்றைய தலைமுறை அரசியல் தலைவர்கள் மேம்பட்டவர்கள் என்பதற்கு நித்தீஷ்குமாரை மட்டும் உதாரணம் காட்டும் ஜெ.மோ எந்த காலத்தில் வாழ்கிறார்? எறும்புகள் வாழும் காட்டில் சில யானைகளும் வாழலாம். அதற்காக யானைகள் தான் இன்று இருக்கின்றன என்பதா?
விழிப்புணர்வு என்றால் என்ன? அது அன்னா ஹசாரே போன்றவர்கள் தூண்டி விடும் பொதுப்புத்தி கிளர்ச்சியா? திரண்டெழும் மக்கள் சக்தியின் ஆவேசமா? இல்லை. CNNIBN பேட்டியில் அருந்ததி ராய் இதைத் தான் கேள்வி கேட்கிறார்: “இதைவிடப் பெரிய கூட்டத்தை நான் காஷ்மீர் போராட்டங்களில் பார்த்திருக்கிறேன், பாபர் மசூதி இடிப்பின் போதும் பார்த்திருக்கிறேன்
1965இல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இதே போல் மக்கள் கிளர்ச்சி நடந்தது. அதைப் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் ராபர்ட் ஹார்டுகிரேவ் என்பவர் அப்போராட்டம் மக்களின் அடிப்படையான அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இருந்தது என்கிறார். அதாவது அப்போராட்டத்தை நடத்தியது தி.மு.கவோ இடதுசாரிகளோ அல்ல. அது மக்களின் அன்றாட பிரச்சனை சார்ந்த கோபத்தின் வெளிப்பாடு. மக்களுக்கு மூன்று மொழி படிக்கிறோமா என்பதல்ல, மூன்று வேளை சோறு கிடைக்குமா என்பது தான் ஆதார பிரச்சனை. விழிப்புணர்வு என்பது அரசியல் பிரக்ஞை, சமூகப் பொறுப்புணர்வு, கலாச்சார பங்களிப்பு, கோட்பாட்டு அறிவு போன்ற பல்வேறு காரணிகளால் உருவாவது. பத்து நாள் மீடியா ஸ்டண்டால் அன்னாவால் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாது. தூண்டவும் முடியாது. மக்கள் பொதுவாக விலையுயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளால் அதிருப்தியுற்றிருக்கிறார்கள். ஆதற்கு இந்த போராட்டம் ஒரு வடிகால் அவ்வளவே. ஜெயலலிதா அரசு ஊழியர்களை கைது செய்த போது இதே மத்தியவர்க்கத்தினர் அந்த நடவடிக்கையை ஆதரித்தார்கள். அதன் பொருள் சமூகம் அரசு ஊழியர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளது, அவர்களை நீக்க விரும்புகிறது என்றல்ல. ஒரு எளிய வடிகால் அவ்வளவே. மற்றபடி அன்னா ஹசாரேவுக்காக களமிறங்கிய மத்திய உயர்மத்திய வர்க்கத்தினர் ஊழலை தொடர்ந்து ஆதரிக்க போகிறார்கள். ஒரு அரசாங்க வேலையை சுளுவாக முடிக்க அதிகாரிகளுக்கு அன்பளிப்பு வழங்குவது ஒரு கலாச்சார பிரச்சனை. நண்பர் என்ற ஒரே காரணத்துக்காக “இலக்கிய நுட்பமோ உபபிரதிகளோ இன்றி எழுதுபவர் என்று தானே விமர்சித்த நாஞ்சில் நாடனுக்காக ஜெ.மோ பலமுறை விழா எடுத்துள்ளதும் இதே ஊழல் கலாச்சாரத்தின் மற்றொரு பகுதி தான். ஊழல் நம் நூற்றாண்டு கால கலாச்சார வரலாற்றோடு தொடர்புடையது. ஜெ.மோவின் முந்தைய தர்க்கப்படி கறை நல்லது என்பது போல ஊழலும் நல்லதே; நமக்கு இரண்டுக்குமான தேவை உள்ளது.
இந்தியா என்பது மத்திய வர்க்கம் மற்றும் உயர்வர்க்கத்தினால் மட்டும் ஆனதல்ல. அருந்ததி ராய் சொல்வது போல் நிலமற்ற, பணமற்ற, வாழ வழியற்ற, மீடியா ஆதரவற்ற கோடானு கோடி மக்களால் உருவானது இந்தியா (“யானை வாழும் காட்டில் தான் சின்ன எறும்புகள் வாழ்கின்றன்). எளிய மக்களுக்கான கல்வி, அடிப்படை வசதிகளில் இருந்து அவர்களின் நிலங்களும் உரிமைகளும் பறிக்கப்படுவது, இந்திய அரசியல் அமைப்பை  சர்வதேச சக்திகளும், பன்னாட்டு நிறுவனங்களும் மறைமுகமாக கட்டுப்படுத்துவது, இயற்கையையும் சூழலையும் சீரழிப்பது என நமக்கு விவாதிக்கவும் எதிர்த்து போராடவும் இன்று ஏகப்பட்ட உடனடி முக்கிய பிரச்சனைகள் உள்ளன. நமது கால்களை கரையான்கள் தின்னும்போது தலையில் நரைமயிர் பிடுங்குவதே அன்னாவும் ஆதரவாளர்களும் செய்வது.
லோக்பாலை ஜெ.மோ தேர்தல் கமிஷனுடன் ஒப்பிட்டு தேர்தலை அது ஒழுங்காக நடத்தியது போல் லோஜ்பாலும் களையெடுக்க உதவும் என்கிறார். ஆனால் தே.க போல் லோக்பால் ஒரு தனியதிகாரம் கொண்ட அமைப்பாக செயல்பட முடியாது. தேர்தலின் போது மட்டுமே அரசின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் உரிமை தே.கமிஷனுக்கு வழங்கப்படுகிறது. ஏனெனில் அப்போது கொள்கை அடிப்படையில் அரசு தற்காலிக நீக்கத்தில் உள்ளது. மற்றொரு அரசை மக்கள் தேர்ந்தெடுக்கும் வரை முந்தைய அரசு முழுஅதிகாரமற்றதாகிறது. தேர்தல் முடிந்ததும் அனுமார் மீண்டும் குரங்கானது போல் தே.க சிறுத்து விடும். லோக்பால் என்பது ஒரு காலவரையறை அற்ற தேர்தல் கமிஷன். அது அரசை காவல்காப்பதற்கு என்றால் அதனை யார் காவல் காக்க? கோழி முட்டை விவகாரம் போல் இது நீண்டு கொண்டே போகும். இதற்கு பதில் சொல்லும் ஜெ.மோ லோக்பால் குழுவினரின் நேர்மையை சந்தேகிக்கிறவர்கள் அடிப்படையில் நேர்மையற்றவர்கள். நேர்மையற்றவர்கள் தம்மைச் சுற்றிலும் நேர்மை இல்லை என்று நம்ப விரும்புகிறார்கள் என்கிறார். குற்றவுணர்வு கொண்டவர்களே பிறரை குற்றவாளிகள் என நம்புகிறார்கள் எனும் ஒரு ஒழுக்கவாத தர்க்கம் இது. ஒழுக்கவாதம் அடிப்படையில் மக்கள் மிக நல்லவர்கள், நல்லவர்களாகவே வாழ வேண்டும், இல்லையென்றால் தண்டிப்போம் என்று நன்மையை கொண்டு அச்சுறுத்துவது. “நான் நல்லவன் நான் நல்லவன் என்று திரும்பத் திரும்ப சொல்வது. ஒழுக்கவாதம் தாழ்வுமனப்பான்மையின் திரிந்த வடிவம். மனிதன் அடிப்படையில் தன்னிடம் இல்லாததைத் தான் அடுத்தவரிடம் பார்க்க விரும்புகிறான். காந்தி தன் சபர்மதி ஆசிரமத்தில் காதலித்த ஒரு பெண்ணை மொட்டையடிக்க வைத்து தண்டித்தார். ஏனென்றார் காந்தியால் படுக்கையில் தனிப்பட்ட தன் காமத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நம்மிடம் எது இல்லையோ அதைப் பற்றித் தான் சதா சிந்திக்கிறோம். காமம், பணம், நேர்மை என எல்லா விசயங்களிலும் இதுவே நடக்கிறது. அறம், ஒழுக்கம், கருணை பற்றி ஆயிரக்கணக்கில் எழுதிக் கொண்டே இரங்கல் கட்டுரைகளில் தனிநபர்களை அவதூறு செய்யும் ஜெ.மோவே இதற்கு சிறந்த உதாரணம். இந்நாட்டில் லோக்பாலை நிர்வகிக்கும் அளவுக்கு நேர்மையான தலைவர்கள் மலிந்து கிடக்கிறார்கள் என்றால் லோக்பால் எதற்கு? அவர்களே நாட்டை ஆளலாமே? எலிகள் இல்லாத சாமியாருக்கு பூனையும், பால்காரியும் எதற்கு?

வலதுசாரிகளால் நடத்தப்பட்ட ஒரு போராட்டத்தை ஒரு வலதுசாரி எழுத்தாளர் ஆதரித்து புத்தகமாக எழுதி அதை ஒரு வலதுசாரி பதிப்பகம் வெளியிடுவதில் உள்ள குறைந்தபட்ச தர்க்கம் கூட அவரது முன்னுக்குபின் முரணான ஊழல் எதிர்ப்பு விவாதத்தில் இல்லை என்பது பரிதாபத்துக்குரியது.
Read More

Sunday, 4 September 2011

ராஜீவ் மற்றும் குற்றவாளிகளின் கொலைகள்: அமைதியான கண்களுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்


ராஜீ கொலை வழக்கு குற்றவாளிகளை நீதிபதி வி.நவநீதம் ஒரு ஊர்வலத்தில் பங்கெடுப்போர்களுடன் ஒப்பிட்டார். ஒரு ஊர்வலத்தை நடத்துபவர்கள் ஒரு பிரிவு, ஒருங்கிணைப்பவர்கள் அடுத்த பிரிவு, வந்து இணைந்தபடியும், பிரிந்தபடியும் இருப்பவர்கள் இறுதிப் பிரிவு. இக்கொலை வழக்கின் மூளையாகிய பிரபாகரனை இந்திய அரசு மறைமுகமாக தீர்த்துக் கட்டியது. கே.பியை இங்கே கொண்டு வந்து விசாரிப்பது இந்திய அரசியல்வாதிகளுக்கு சிக்கலானது என்று சொல்லப்படுகிறது. இரண்டாவது பிரிவினரான சுபா, தனு உள்ளிட்டோர் உயிரோடில்லை, சிவராசன் சிறப்பு விசாரணைக் குழுவால் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. கடைசியில் எஞ்சியவர்களில் 26 பேர் “ராஜீவ் கொலைகாரர்கள் என்று மீடியாவால் முத்திரை குத்தப்பட்டு 98இல் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டனர். உச்சநீதிமன்றம் இவர்களில் 4 பேருக்கு மட்டுமே மரண தண்டனை என்று தீர்ப்பை திருத்தியது. நளினி மன்னிக்கப்பட்டு விட்ட நிலையில் சாந்தன், முருகன், பேரறிவாளன் மட்டும் தூக்கிலப்படுவர். இந்த மரணதண்டனையை ரத்து செய்யக் கோருபவர்கள் இடையே பல தரப்புகள் உள்ளன.
முதலில் மரணதண்டனையை எதிர்ப்பவர்கள். ராஜீவ் குற்ற்வாளிகள், அப்சல் குரு போன்றோர்களை வெளிப்படையாக ஆவேசமாக ஆதரிக்கும் மனிதஉரிமையாளர்கள் அஜ்மல் கசாப் விசயத்தில் அதே நிலைப்பாட்டை எடுக்கப்போவதில்லை. தமிழக ஈழ ஆதரவாளர்கள் ஏன் அதே போன்ற உரிமைக்காக போராடும் காஷ்மீர் தீவிரவாதிகளை ஆதரிப்பதில்லை என்ற கேள்விக்கான விடையே இதற்கும். தேசியவாதம். மற்றொன்று அப்சல் குரு, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோர் கொலைத்திட்டத்தில் பங்கு வகித்ததாக மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கசாப்பை போல் துப்பாக்கி ஏந்தி நிற்கும் கொலைகார சித்திரம் இவர்களைப் பற்றி பொது மனநிலையில் இல்லை. நீதிபதி நவநீதம் ராஜீவ் குற்றவாளிகளை கொலையின் வெளிவட்டத்தில் இருப்பவர்கள் என்றே குறிப்பிட்டார். மேலும் இவர்களின் குற்றத்தை புலனாய்வாளர்கள் தீர்மானமாக நிரூபிக்கவில்லை. தோராயமான சந்தேகத்தின் அடிப்படையில் குற்றத்தின் பின்னணியில் மட்டும் இருந்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கலாமா என்பதே மீடியா நிபுணர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் எழுப்பும் வினா. இங்கு நாம் இரண்டு விசயங்களை கவனிக்க வேண்டும்.
போலீஸ் என்றுமே ஒரு குற்றத்தை ஆராயும் போது முன்முடிவுகளுடன் தான் செயல்படுகிறது. குற்றமற்றவர்கள் தொடர்ந்து பலியாவதற்கு இது ஒரு முக்கிய காரணம். இது ஒரு உலகளாவிய பிரச்சனை. ஈராக்கில் சதாம் ஆதரவாளர்களுக்கு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள், எப்போதாவது நலம் விசாரித்தவர்கள், தூரத்து உறவினர்கள் என பலர் அமெரிக்க ராணுவத்தால் அள்ளிக் கொண்டு போகப்பட்டு தேசலான சந்தேகத்தின் அடிப்படையில் மாதக்கணக்காக சித்திரவதை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட போது அவர்கள் மனநோயாளிகளாக திரும்பினர். சிரியாவிலும், இலங்கையிலும், முன்னர் சோவியத்திலும் அரசுக்கு எதிரானவர்கள் என்ற பெயரில் லட்சக்கணக்கானவர்கள் காணாமல் போவது, கொன்று புதைக்கப்படுவது வாடிக்கை. ராஜீவ் புலனாய்வு குழுவின் தலைவரான கார்த்திகேயன் இந்திய அமைதிப்படைக்கும் புலிகளுக்கும் போர் நடந்த போது அதைப் பற்றி புலனாய்ந்து அறிக்கை தயாரிக்க இலங்கை சென்றவர். புலிகளைக் குறித்த முன்தீர்மானம் கொண்டவர். அவர் ராஜீவ் வழக்குக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்ததுமே “இது புலிகளின் வேலை என்று தனக்கு புரிந்து விட்டதாய் சொல்கிறார். அதற்கு பின் அவர் செய்ததெல்லாம் அதற்கான ஆதாரங்களை ஒன்று திரட்டியது தான். அவர் அந்த வேலையிலும் தோல்வி அடைந்தார் என்றே சொல்ல வேண்டும். தடாவின் கீழ் விசாரணை நடந்ததால் மட்டுமே சிறப்பு நீதிமன்றம் கார்த்திகேயனின் மரபுக்கு மாறான, குறைவான ஆதாரங்களை ஏற்றுக் கொண்டது. குற்றவாளிகளை வதைத்து மிரட்டி வாங்கப்பட்ட, பின்னர் அவர்களே நீதிமன்றத்தில் மறுத்த, வாக்குமூலங்கள் முக்கிய சாட்சியமாக கருதப்பட்டது இன்றளவிலும் விமர்சிக்கப்படுகிறது. வழமையான நடைமுறை என்றால் சி.பி.ஐ அடிக்கடி செய்வது போல் நீதிமன்றம் முன் சாட்சிய போதாமை காரணமாய் கார்த்திகேயன் முழிபிதுங்கி நின்றிருப்பார். பேரறிவாளன் குண்டு தயாரித்தார் என்பதற்கு அவர் வழ்ங்கிய ஆதாரம் தான் இருப்பதிலேயே வேடிக்கை. ஒன்பது வால்ட் பேட்டரிகள் இரண்டு வாங்கியதற்கான பில். இதுவும் போலியாக தயாரிக்கப்பட்டது என்கிறார் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள்.
மூன்றாம் நிலை குற்றவாளிகளை பிடித்தது, பங்களூரில் சிவராசனின் இருப்பிடத்தை அடைந்து தாக்கியது ஆகியவை கார்த்திகேயனுக்கு உடனடி நட்சத்திர அந்தஸ்தை மீடியாவில் பெற்றுத் தந்தது. பூஜ்யத்தில் இருந்து விசாரணையை ஆரம்பித்து யாரும் எதிர்பாரா வகையில் குற்றவாளிகளை அவர் கண்டடைந்து வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது வெகுவாக பாராட்டப்பட்டது. ஆனால் இன்று அவரது இந்த சாமர்த்தியம் கேள்விக்குள்ளாகிறது. ராஜீவ் கொலையில் இந்திய அரசியல்வாதிகளுக்கு, குறிப்பாக காங்கிரஸ், தி.மு.க, தொடர்புள்ளதாக ஜெயின் கமிசன் சந்தேகித்தது. தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் மீடியாவிடம் இது உண்மை என்று உறுதி செய்தனர். ரஹோத்தமன், ராஜீவ் சர்மா ஆகியோரின் சமீப புத்தகங்களும் இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட விசாரணையோ என்ற ஐயத்தை எழுப்புகின்றன. அன்று விடுதலைப்புலிகளுக்கு நம் அரசியல்வாதிகளிடையே பொதுவான ஆதரவு இருந்தது உண்மை. இதை நாம் இரண்டு கோணங்களில் பார்க்க வேண்டும்.
ஒன்று ராஜீவ் கொலைக்கு முன் புலி ஆதரவு மத்திய அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாடாக இருந்தது. கொலைக்கு சில மாதங்கள் வரை ராஜீவுக்கு புலிகளின் பிரதிநிதிகளுடன் தொடர்பு இருந்தது. இது ஜெயின் அறிக்கையில் தெரிய வருகிறது. தூக்கில் தொங்கப் போகும் சாந்தனை தனது கோவை பண்ணைவீட்டில் பதுக்கி வைத்தவர் இன்று எம்.பியாக உள்ள தி.மு.கவின் சுப்புலட்சுமி ஜெகதீசன். தி.கவின் டி.எஸ் மணி இரண்டரை கிலோ தங்கம் புலிகளின் செயல்பாட்டுக்காக அளித்ததாக சொல்லப்படுகிறது. இக்கொலையில் முக்கிய பங்கு வகித்த சந்திரஹாசனை (வேலை முடிந்த பின் இவரை கத்தியால் குத்த வேண்டாம், துப்பாக்கியால் சுட்டு விடு என்று பிரபாகரன் சிவராசனுக்கு கட்டளையிடுகிறார்) சென்னையில் கொலை நடந்த நாள் ஒரு உயர்தர ஓட்டலில் அப்போது மத்திய அமைச்சராக இருந்த சுப்பிரமணியம் சாமி சந்திக்கிறார். அதே நாளில் டிரைடெண்ட் ஹோட்டலில் ராஜீவின் எதிரி என்று அறியப்பட்ட சந்திராசாமி வந்து தங்குகிறார். கொலைக்கு முன் நரசிம்மராவின் குருவான இந்த சந்திராசாமியிடம் ஒரு பூஜையின் போது சிவராசன் ஆசீர்வாதம் பெற்றார். இந்தியாவில் புலிகளின் புழக்கம் முதல் மும்பை குண்டுவெடிப்புக்கு முன் தாவூத்துக்கு இந்தியாவில் இருந்த ஆதரவுக்கு நிகரானது. ஆனால் ஒரு சில நொடிகளில் வரலாறு மாற, அதுவரை புலிகளுடன் நெருக்கம் காட்டிய அதிகார மட்டத்தினர் பதுங்கத் தொடங்கினர். ராஜீவ் மரணத்துக்குப் பின் ஏற்பட்ட அவநம்பிக்கையான சூழலில் பழைய புலி நண்பர்கள் யார் வேண்டுமானாலும் சந்தேகிக்கப்பட்டிருக்கலாம். இந்த அடிப்படையில் தான் வைக்கோ, கலைஞர் உள்ளிட்ட பல தமிழக அரசியல்வாதிகள் ஏன் தீர விசாரிக்கப்படவில்லை என்று ஜெயின் கேட்டார். புலிகளை ஒரு விடுதலை இயக்கமாக கொள்கை ரீதியாக ஆதரிப்பவர்கள் அவர்களது படுகொலைகளுக்கு பொறுப்பாக முடியாது. ஜெயின் தனது முதல் அறிக்கையில் ஒட்டுமொத்தமாக தமிழர்களை குற்றம் சாட்டி இருந்தார். தனது இந்த அவரச புத்தியை கடிந்து கொண்டு இரண்டாது அறிக்கையில் இதை திருத்திக் கொண்டார். புலி ஆதரவு இந்திய அரசியல்வாதிகள் ராஜீவ் கொலைக்கு எந்தளவு பொறுப்பாக முடியும் என்பது ஒரு சிக்கலான கேள்வி. அடுத்து இக்கொலையால் பயன்பெறும் அரசியல்வாதிகள் யார் என்ற கோணத்திலும் ஜெயின் யோசித்தார். இதை மேலும் துப்புத்துலக்கிய Frontline பத்திரிகை ராஜீவ் கொலைக்கு பின்னணியில் உள்ள இரட்டையராக நரசிம்மராவ் மற்றும் சந்திராசாமியை சாடியது. சந்திராசாமி அத்னான் கஷோகி என்ற ஆயுத கடத்தல்காரருடன் சேர்ந்து ராஜீவ் கொலைக்கு பண ஆதரவு தந்ததாக சொல்லப்படுகிறது. BCCI எனும் புலிகள் பயன்படுத்தின வெளிநாட்டு வங்கியில் அவர் பெயரில் செலுத்தப்பட் 11 மில்லியன், அவரது ஆதரவாளர் பெர்னாண்டோ எனும் இலங்கைக்காரருக்கு கொடுத்த ஒன்பது லட்சம் ரூபாய் போன்றவை அவர் பெயரில் சந்தேகங்களை கிளப்பின. “ராஜீவ் அவரது அம்மாவை போல சாகப் போகிறார் என்று சந்திராசாமி பக்த்ர்கள் முன்னிலையில் சபித்ததாகவும், அவர் தொடர்ந்து எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து ராஜீவை கவிழ்க்க சதி செய்தததை ரா அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளதாகவும் ஜெயின் கூறுகிறார். ராஜீவின் உட்கட்சி எதிரிகளின் ஒருமித்த முகம் தான் சந்திராசாமி. இந்தியாவில் சாமியார்கள் என்றும் பினாமிகளாகவும், மத்தியஸ்தர்களாகவும் அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்து வந்துள்ளனர். சிவராசன் குழுவினருக்கு அடைக்கலம் அளித்த பெங்களூரை சேர்ந்த ஜெயராம் ரங்கநாத் சிவராசன் சந்திராசாமியை பற்றி அடிக்கடி குறிப்பிட்டவதாக சொல்லுகிறார். (“ஜெயின் சாமியார் என்னை நேரடி விமானம் மூலம் வெளிநாடு அனுப்புவார். அதற்குத் தான் நேரடியாக பெங்களூர் வந்தேன்). சந்திராசாமியை சந்திரகுப்தனின் சாணக்கியனாக ஊகிப்பதற்கான முகாந்திரங்கள் ஏராளம். ராஜீவ் மரித்த பின் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், நரசிம்ம ராவ் பிரதமரானதும், அவர் தனது குருநாதரை விடாப்பிடியாக காப்பாற்ற முயன்றதும் இந்த ஊகங்களை வலுவாக்கின. இந்துத்துவ காங்கிரஸ்காரரான ராவ் பிரதமரானதால் அயோத்தி இடிப்பது பி.ஜெ.பிக்கு சாத்தியமானதாகவும், அதனாலேயே அவர்கள் மத உணர்வின் அடிப்படையில் அடுத்து ஆட்சிக்கு வந்ததாகவும். இதனால் இக்கொலைக்கு பின் பி.ஜெ.பியின் கரமும் உண்டு என்று ஊகித்துக் கொண்டே போகலாம். ஜெயின் மேலும் பாலஸ்தீன, சீக்கிய பயங்கரவாதிகள் மீதும் சந்தேகம் எழுப்புகிறார். கொலையை நடத்தியது சி.ஐ.ஏவாக இருக்கவும் கூடும் என்றார். விடுதலைப்புலிகளுக்கு அப்பால் நூலில் சர்மா இலங்கைப் பிரதமர் பிரேமதாசாவை சந்தேகிக்கிறார். பால்ஸ்தீன் பிரதமர் அராபத் ராஜீவ் மீது கொலை சதி உள்ளதாக தெரிவித்தும் கொலைக்கு சில நாட்களுக்கு முன் ராஜீவின் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை பெருமளவில் குறைத்தது, தமிழகத்தில் பாதுகாப்பான சூழல் இல்லை என்று அஞ்சப்பட்ட போதும் அவரை இங்கு அழைத்து வர சில தமிழக தலைவர்கள் வற்புறுத்தியது, பிரச்சார நிகழ்ச்சிக்கான மேடை போலீஸ் அனுமதி இல்லாத இடத்தில் அமைத்தது, குண்டு வெடித்த போது எந்த அரசியல் தலைவரும் ராஜீவ் அருகில் இல்லாமல் இருந்தவை பல சந்தேகங்களை எழுப்புகின்றன. விசாரணைக்கு நரசிம்ம ராவ் ஒத்துழைக்கவில்லை என்றும், சந்திராசாமி தொடர்பான முக்கிய ஆவணங்களை அவர் மறைத்து விட்டதாகவும் ஜெயின் குற்றம் சாட்டினார். கொலை நடந்த சில நாட்களில் குற்றம் துலங்காத நிலையில் தான் ஒரு விடுதலைப் புலி பெண் ஒரு கூடையில் வெடிகுண்டுடன் செல்வதை பார்த்ததாக வாழப்பாடியார் தெரிவித்தார். விடுதலைப்புலிகள் ராஜீவை தாக்கியிருக்கக் கூடும் என்ற நம்பிக்கை காங்கிரஸ் அதிகார மட்டத்தில் நிலவியது என்பதை இது சொல்கிறது. ஆனால் தாக்கியது பெண் என்று அவருக்கு எப்படித் தெரியும்? சிறப்பு புலனாய்வு குழுவினர் மத்தியில் சிலருக்கு விசாரணைப் போக்கு அதிருப்தி அளித்தது. அரசியல் பிரமுகர்கள் விசாரிக்கப்படாதது, சிவராசன் தங்கி உள்ள விபரம் கிடைத்தும் உடனடியாக அவனை பிடிக்காமல் ஒன்றரை நாள் தாமதித்தது, இந்த விசாரணைக்கான அவசர தொலைபேசி எண்ணில் வரும் அழைப்புகளை எடுத்து பேச தமிழறியாத தெலுங்கர் ஒருவரை நியமித்தது ஆகியன சில காரணங்கள். ஒரு அதிகாரி விசாரணையின் இந்த மெத்தன போக்கை குறித்து தன் நணபர் மூலம் மூப்பனாரின் பரிச்சயக்காரர் ஒருவரிடம் தெரிவித்திருக்கிறார். “வழக்கு அப்பிடியா போகுது என்று கேட்டு மூப்பனார் மகிழ்ச்சியில் சிரித்தாராம். (யூடியூபில் உள்ள குமுதம் டாட்காம் பேட்டியில் காணலாம்). ஆக ராஜீவ் கொலை ஒரு உள்ளூர் சதியா, சர்வதேச சதியா? இதற்கு பொறுப்பு காங்கிரஸ், பி.ஜெ.பி, திமுக, தி.கவா அல்லது சி.ஐ.ஏ, பிரேமதாசாவா? தொடர்ந்த எச்சரிக்கைகளை மீறி ராஜீவ் தமிழகம் வருகிறார். அதற்கு முன் வெளிநாட்டில் உள்ள தன் மகனை அழைத்து கவனமாக இருக்கும் படி எச்சரிக்கிறார். சற்று முன் சந்திரசேகர் அரசால் அவரது பாதுகாப்பு பலவீனமாக்கப்படுகிறது. முந்தின நாள் அவரது விமானம் பழுதாகி பயணம் ஒரு நாள் தள்ளி வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் அவசரமாக அதை பழுதுபார்த்து ராஜீவை அன்று மாலையே தமிழகம் அனுப்புகிறார்கள். “அவர் தில்லியில் இருந்தால் கொல்லுவது மிக மிக சிரமம். தமிழகம் வந்தால் எளிது என்று சிவராசன் பிரபாகரனிடம் வயர்லெசில் சொன்னதை ரா உளவாளிகள் ஒட்டுக் கேட்கிறார்கள். ஆனால் குறியீட்டு மொழியை தமிழில் இருந்து மொழியாக்கும் நபர் அப்போது அங்கில்லாததால் அச்செய்தியை அவர்கள் உடனடியாக டீகோட் செய்யவில்லை. மூன்று நாட்களுக்கு பிறகு புரிந்து கொள்ளும் போது அது பழைய பத்திரிகை செய்தியாகி விடுகிறது. வெடிகுண்டுடன் ராஜீவின் அருகில் செல்லும் தனுவை ஒரு பெண் உதவி ஆய்வாளர் திரும்பத் திரும்ப விரட்டியடிக்கிறார். ராஜீவே குறுக்கிட்டு தனுவை அருகில் வர அனுமதிக்கும்படி சொல்கிறார். சர்வதேச உள்ளூர் சதியாலோசனைகளை கடந்து இக்கொலை நாம் விவாதிக்க விவாதிக்க மேலும் மர்மம் கூடும் ஒரு புனைவாக மாறுகிறது. ஒரு அர்த்தத்தில் மார்க்வெஸின் முன்கூறப்பட்ட மரணத்தின் வரலாற்றில் போல் ராஜீவ் தன் மரணத்தை நோக்கி ஒவ்வொரு தடையாக கடந்து நடந்து செல்கிறார். ஒரு துயரநாடக நாயகனைப் போல் அவர் தப்பிக்க ஆயிரம் வழிகள் இருந்தும் சாவை நோக்கி அந்த குறுகின வழியை தேர்ந்தெடுக்கிறார். அவர் கால்கள் பயணிப்பதை வியாசனின் துயரக் கண்களுடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தோம்.
ஆனால் மேற்சொன்ன ஊகங்களுக்கு நீதி விசாரணையில் மதிப்பில்லை. இருந்தும் சமூக கோபம், மீடியா நெருக்கடி காரணமாக இதே போன்ற ஊகங்களின் அடிப்படையில் தான் மூன்றாம் நிலை புலிகளையும், அவர்களின் ஆதரவாளர்களையும் கார்த்திகேயன் குற்றவாளிகளாக முன்னிறுத்தினார். எப்போதும் போல் நீதிபதிகள் வெளி நெருக்கடிக்கு பணிந்து அவசர தீர்ப்பு வழங்கினர். நீதித்துறை பொதுப்புத்தியின் ஆயுதமாவது கண்டனத்துக்குரியது, விவாதத்துக்குரியது. ஆனால் எல்லா நாடுகளிலும் இதுவே நீதிபதிகளின் நடைமுறை. அவர்கள் காவல் அதிகாரிகளின் தரப்பை நம்பத்தான் முதலில் ஒப்புகிறார்கள். மீடியாவின் திருகலுக்கு வளைகிறார்கள். ஒரு கூட்டத்தில் கண்டனக்குரல்களுக்கு மத்தியில் தயங்காமல் ஊடகங்களை இக்காரணத்துக்காக குற்றம் சாட்டினார் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள். “எந்த தடயமும் இல்லாத பட்சத்திலும் இந்தியா டுடே என் மகனின் போட்டோவை போட்டு ‘ராஜீவ் காந்தி கொலைகாரன் என்றது. அது ஒரு திருப்புமுனை. இது என்ன நியாயம்? என்றார். பிரவீன் சாமி போன்ற ஆங்கில பத்திரிகையாளர்கள் போலீஸ் தம் காதில் சொல்லும் அரைகுறை ஊகத்தை கூட இரட்டிப்பு நம்பிக்கையுடன் ஆவேசமாக எழுதுபவர்கள். அது மக்களிடம் சென்று பூம்ராங் போல் நீதித்துறையிடமும் காவலர்களிடம் திரும்ப வருகிறது. இறையாண்மைக்கு எதிரான குற்றத்துக்கு மரணத்தண்டனையை ஒப்புக் கொள்பவர்கள் கூட போதுமான ஆதாரங்கள் இல்லாமல் தண்டிப்பதை எதிர்க்கிறார்கள். மேலும் முதல், இரண்டாம் நிலை குற்றவாளிகள் ஏன் உயிரோடு பிடிக்கப்படவில்லை, வெடிமருந்தை அனுப்பிய கே.பியை விசாரிக்க ஏன் தயங்குகிறோம், பின்னணியில் இருந்த அரசியல் தலைவர்கள் ஏன் காப்பாற்றப்பட்டார்கள் என்பதைக் கேட்டு இதனால் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் ஒரு மாபெரும் குற்றத்தை மறைப்பதற்கான பலிகடாக்கள் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
நளினி மட்டும் ஏன் மன்னிக்கப்பட்டார்? அவர் ஒரு தாய் என்ற சலுகை உச்சநீதிமன்ற நீதிக்குழுவால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டது. கொலை பற்றின சங்கடமான சில உண்மைகளை முருகன் புத்தகமாக எழுத தீர்மானித்ததாகவும் அதை தடுப்பதற்கான சமரசம் தான் மன்னிப்பு என்று ஒரு ஊகம் உள்ளது. நளினி மூளைச்சலவை செய்யப்பட்டார், பின்னர் வருந்தினார், ஆனால் அப்போது சதியாலோசனையில் இருந்து வெளியேற முடியாதபடி மாட்டி இருந்தார் எனப்படுகிறது. இதே தர்க்கம் பேரறிவாளனுக்கு செல்லுபடியாகும். குண்டு தயாரித்ததோ ரெண்டு பாட்டரிகள் வாங்கிக் கொடுத்ததோ அவரும் இளமையின் உந்துதலில் செயல்பட்டிருக்கலாம்.
மரண தண்டனையின் நோக்கம் என்ன? தேசத்துரோகம் செய்யாதபடி மக்களை அச்சுறுத்துவது  அடுத்து தேசத்துக்கும் மக்களுக்கும் ஆபத்தானவர்களை அழிப்பது. புலிகள் இயக்கம் விழுந்து விட்ட நிலையில் இம்மூவரையும் தூக்கிலிடுவது யாரையும் அச்சுறுத்தவோ, இறந்த பாம்பான புலிகள் இயக்கத்தை அடிப்பதன் மூலம் இந்திய சமூகத்தை பாதுக்காக்கவோ பயன்படாது. குறைந்தது ஐந்து வருடங்களுக்கு முன்னாவது நாம் பாபர் மசூதி இடித்தவர்களை தூக்கிலிட்டிருந்தால் குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இறந்திருக்க மாட்டார்கள். குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். காஷ்மீர் மற்றும் வடமேற்கு பிரதேச மக்களை சமமாக பாவித்து அவர்களுக்கான உரிமைகளை அளித்து வளர்ச்சியில் கவனம் காட்டி இருந்தால், வனப்பிரதேசத்தை, விவசாய நிலங்களை தொழிலதிபர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் பறிக்க அனுமதிக்காதிருந்தால் ஏகப்பட்ட தீவிரவாத நக்சலைட் தாக்குதல்களை, அதைத் தடுப்பதற்கான ராணுவ செலவுகளை தவிர்த்திருக்கலாம். ஆனால் நாம் என்றும் நிழல்யுத்தம் செய்து கரகோசம் பெறத் தான் விரும்புகிறோம்.
அமெரிக்க ஜனாதிபதி கென்னடி 1963இல் ஓஸ்வால்ட் என்பவரால் கொல்லப்ப்பட்டார். ஆனால் ஓஸ்வால்ட் இரண்டு நாட்களில் உண்மையை மறைக்கும் நோக்கத்துடன் ஜேக் ரூபி என்பவரால் கொல்லப்பட்டார். கென்னடியின் படுகொலை ஒரு தனிப்பட்ட தாக்குதல் என்று வாரென் கமிஷன், எப்.பி.ஐ மற்றும் சி.ஐ.ஏவால் ஆரம்பத்தில் கூறப்பட்டது அமெரிக்க மக்கள் அதை நம்ப தலைப்பட இல்லை. அவர்கள் பின்னணியில் உள்ள நிஜத்தை அறிய தலைப்பட்டார். நூற்றுக்கணக்கான புத்தகங்கள், மீடியா அறிக்கைகள், விவாதங்கள் நடந்தன. 79இல் ஹவுஸ் செலக்ட் குழு அமைக்கப்பட்டு அதன் விசாரணை முடிவில் புலனாய்வு அதிகாரிகளின் தவறுகளும், அவர்கள் உண்மையை மூடி வைக்க முயன்றதும், சதியாலோசனை என்ற கோணத்தில் விசாரிக்க மறுத்ததும் கண்டறியப்பட்டன. அடுத்து வந்த அரசுகள் ராக்பெல்லர் மற்றும் சர்ச் கமிட்டிகள் விசாரித்து சி.ஐ.ஏ மீது சந்தேகத்தை எழுப்பின. உண்மையை அறிவதற்கான மக்களின் இந்த தொடர் நிர்பந்தம் அமெரிக்காவில் விசாரணையை இன்றும் செலுத்துகிறது. இறுதியில் மாபியா திட்டமிட்டு இக்கொலையை நடத்தியிருக்கலாம் என்றும், அரசியல் தலைவர்களின் குறுக்கீடு காரணமாய் சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ தடயங்களை அழித்தது, சதியாலோசனை பின்னணியை ஆராய தயங்கியது என்றும் தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்ல 92இல் சமூக அழுத்தத்தின் விளைவாக இக்கொலை வழக்கு சம்மந்தமான 98 சதவீத ஆவணங்களை அமெரிக்க அரசு வெளியிட்டது. 2004இல் நடந்த கணக்கெடுப்பில் 75 சதவீக அமெரிக்கர்கள் தங்களுக்கு இக்கொலை வழக்கில் இன்னமும் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர். ஓஸ்வால்ட் எனும் தனிமனிதரை பலி வாங்கியதும் அவர்கள் நம்மைப் போல் அமைதியடையவில்லை. 32 வருடங்களுக்குப் பின் Science and Justice என்ற பத்திரிகையில் ஒருவர் விஞ்ஞான ஆய்வு செய்து கென்னடியின் கொலையாளி ஒருவர் அல்ல, இரண்டாவது ஒருவர் இருந்திருக்கலாம் என்று கண்டறிந்துள்ளார். அவர்கள் அநீதியின் சிதையை அணைய விடுவதே இல்லை. ஆனால் இதற்கு மாறாக, நம்மைப் போன்ற ஒரு சமூகம் தேசத்தலைவரின் கொலையின் ஆதார காரணத்தை அறிய விரும்பாது புனைவுகளை எளிதில் நம்பத் தலைப்படுகிறது என்றால் அதன் பொருள் நாம் அக்கொலையை மறைமுகமாக ஆதரிக்கிறோம் என்பதே. சமூகத்தின் கொலை விழைவு தான் தனிநபர் தாக்குதலாக வெடிக்கிறது.
ராஜீவை கொன்றது நாமா அல்லது முருகன், சாந்தன், பேரறிவாளனா? இருட்டில் தெரியும் அவ்விரு கண்கள் யாருடையவை?
Read More

Saturday, 20 March 2010

இயக்குனர் ராமின் முத்துக்குமார் இறுதி ஊர்வல பதிவு


இயக்குனர் ராம் தமிழுணர்வாளர். திறமையான எழுத்தாளரும் கூட. ஈழத்துக்காக உயிர் துறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அது தொடர்பான அரசியலில் பங்காற்றிய ராம் இச்சம்பங்கள் குறித்து இனியொரு தளத்தில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். பழ. நெடுமாறன், வை.கோ, திருமாவளவன் போன்றோர் நடிப்பது இயக்குனருக்கு எளிதில் புலனாகிறது. இந்த எழுச்சியான கட்டத்தில் இனவுணர்வுடன் கலந்து கொள்ளும் திரைத் துறையினர் முன் அரசியல்வாதிகள் அரங்கேற்றும் சினிமாவின் திரைக்கதையின் சூழ்ச்சியும் பொய்மையும் கொண்டு எதிர்பாரா திருப்பங்களுடன் எழுதப்பட்டது.



திருமாவும் அவர் கட்சியினரும் மாணவர்களை தாக்குவது, வலுக்கட்டாயமாக பிணத்தை கைப்பற்றி, ஏற்கனவே திட்டமிட்டிருந்த சுடுகாட்டுப் பாதையை மாற்றி தங்கள் ஆதரவாளர்களின் பாதையில் கொண்டு செல்வது, பின்னர் மாணவர்களை அராஜகவாதிகள் என்பது, ஆளுங்கட்சிக்காரர்கள் மாணவ்ர்களை திசை திருப்ப விடுப்பு அறிவிப்பது போன்றவை ஒன்று சொல்கின்றன. போராட்ட அரசியல் நமது கலகவாத தலைவர்களுக்கு ஆரம்ப முதலீடு மட்டுமே. இன்று பங்குசந்தை நிபுணர்கள் போல் அரசியல் செய்யவே அவர்கள் விரும்புகிறார்கள். ராம் மற்றொரு முக்கிய அரசியல் பாத்திரம் குறித்து அவதானிக்கிறார்: பழ. நெடுமாறன் முத்துக்குமரன் பிணத்தை உடனடி எடுப்பதற்கு ஒரு காரணம் சொல்கிறார். சனிக்கிழமை வரை தாமதிக்கக் கூடாது. ஏனென்றால் சனிப்பிணம் தனியே போகாதாம். என்ன பிற்போக்கான மனிதர். இவர் எந்த தலைமுறையின் எச்சம்.

ராம் இக்கட்டுரையை நிதானமாக, நேரடியாக எழுதியுள்ளார். உண்டு துய்ப்பதை தவிர வேறெதற்கும் வாய் திறக்காத ஒரு சமூகத்தின் அவலத்தையும், தலைவர்களின் பாசாங்கை உணர்ச்சிவசப்படாமல் நுட்பமாக எழுதுகிறார். இதுவே நம்மை சுருக்கென்று குத்துகிறது. இந்த வலி நமக்கு அவசியம்.
Read More

Monday, 1 February 2010

பர்தாவை தடை செய்யலாமா?

முகத்திரை கொண்ட பர்தாவை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வர பிரஞ்சு அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. இது ஒரு முக்கிய அரசியல் பிரச்சனையை முன்வைக்கிறது. இஸ்லாமிய சமூகத்தை தம்முடன் ஒன்றிணைப்பதா தவிர்ப்பதா என்ற ஐரோப்பிய தேசங்களின் கவலையின் மற்றொரு பெயரே பர்தா தடை. பிரான்ஸ் சொல்வது வெறும் சப்பை காரணம்: மதசார்பின்மை. உண்மையில் இத்தகைய ஒரு தடைச்சட்டம் மதசகிப்பின்மைக்கே வழிவகுக்கும். மேலும் அத்தகைய தடை அடிப்படைவாதத்துக்கு வழிகோலும் வாய்ப்பும் உண்டு. அடுத்து ஜனாதிபதி சர்கோஸி பர்தாவை பெண்ணடிமைத்தனமாக அடையாளம் காண்கிறார். பர்தா ஒரு நகரும் சிறை என்கிறது பிரான்ஸ் பாராளுமன்ற அறிக்கை. ஆனால் முரணாக, இத்தடை நிலுவையில் வந்தால் இஸ்லாமிய பெண்களால் பொதுஇடங்கள் மற்றும் அலுவலகங்கள், மருத்துவமனை போன்ற அன்றாட தேவைக்கான இடங்களுக்கும் செல்ல முடியாது. இது முஸ்லீம் பெண்களை வீட்டுச்சிறைக்குள் மேலும் அடிமைப்படுத்தும் பின்னோக்கிய விளைவாகவே முடியும். நிஜக்காரணங்கள் இரண்டு.



பிரான்ஸில் மிக வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். ஆறு மில்லியன் பேர் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். இத்தனை இஸ்லாமியரையும் உள்ளிட்ட புலம்பெயர் வெளிநாட்டவரின் குழந்தைகளுக்கு வேலை, வீடு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் வாய்ப்புகள் உருவாக்க பிரான்ஸ் அரசால் முடியவில்லை. இந்த வலுவான குற்றச்சாட்டை மறைக்கும் ஒரு முயற்சியாக அரசியல் நிபுணர்களால் இந்த தடைச்சட்டம் நோக்கப்படுகிறது. அடுத்து, பிரஞ்சுக்காரர்களிடம் உள்ளதாக பாராளுமன்ற அறிக்கை சுட்டிக்காட்டும் islamophobia எனும் இஸ்லாமிய பீதி.



இந்த மதவெறுப்பு இஸ்லாமியர் அனைவரும் தீவிரவாதிகள் எனும் பொதுப்புத்தியில் இருந்து கிளைப்பது. குறிப்பாக மேற்கத்திய சமூகங்களிடம் இது ஒரு ஆழ்பிம்பமாகவே உறைந்து போய் உள்ளது. இத்தாலியில் ஏற்கனவே இத்தகைய தடைச்சட்டம் உள்ளது. ஆஸ்திரிய, பெல்ஜிய, டச்சு மற்றும் 3.7 சதவீதம் இஸ்லாமியரைக் கொண்டுள்ள ஜெர்மனி அரசும் தற்போது இதேவித தடையை கொண்டு வர உத்தேசிக்கின்றன. 2.4 மில்லியன் இஸ்லாமிய மக்கள் தொகை கொண்ட இங்கிலாந்தில் இஸ்லாமிய மாணவர்கள் மீது கண்காணிப்பை தீவிரமாக்கவும் இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களை தடை செய்யவும் அரசு மீது நெருக்கடி இறுகி வருகிறது. டோனி பிளேர் பர்தாவை பெண்கள் இங்கிலாந்தில் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அமெரிக்க மண்ணில் நுழையும் ஒவ்வொரு இஸ்லாமியனையும் ஒரு ஏவுகணையாகத்தான ஊடகங்கள் சித்தரிக்கின்றன. சென்னையில் உள்ள அமெரிக்கன் கவுன்ஸில் நூலகத்தில் ஒரு அலமாரி முழுக்க இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த நூல்களே. குறிப்பாக, ஒரு முஸ்லீம் ஏன் மெனக்கட்டு தீவிரவாதி ஆகிறான் என்பதே இப்புத்தகங்களின் ஆசிரியர்கள் விளக்க முயன்றுள்ள கேள்வி. இது இன்று மொத்த அமெரிக்க சமூகத்தின் முன்னுள்ள புதிர்தான். Terrorists, Victims and Society என்ற நூலில் ஆண்டிரூ சில்கே என்பவர் இஸ்லாமிய தீவிரவாதிகள் பைத்தியக்காரர்கள் என்ற கருத்துருவை நிறுவ மனவியல் ஆய்வாளர்கள் பல தில்லுமுல்லுகளை கையாண்டுள்ளதை விளக்குகிறார். பாலஸ்தீன தீவிரவாதிகள் மனநலம் கொண்ட சகஜர்களே என்கிறார் சில்கே. பெரும்பான்மையினரின் மனக்கிலேசத்தை அகற்ற சிறுபான்மை சமூகத்தின் மத-அடையாளங்களை தடை செய்வது என்ற பிரான்ஸின் முடிவு விசித்திரமானது.

பர்தா ஒரு ஆணாதிக்கவாத உடை என்ற விவாதத்துக்கு சமகால முக்கியத்துவம் இல்லை. நாம் இதை ஒரு அரசியல் பிரச்சனையாகவே அணுக வேண்டும். துரதிஷ்டவசமாக, விவாதத்தில் பங்கு கொள்ளும் பெரும்பான்மை இஸ்லாமிய பொதுப்புத்தியும் சரி, எதிரான வலதுசாரிகளும் இதை ஒரு மதச்சட்டம மற்றும் ஒழுக்கவாதம் சார்ந்த சிக்கலாகவே அணுகுகின்றனர். உலகம் முழுக்க ஒடுக்கப்படும் இஸ்லாமியருக்கு தமது மத, பண்பாட்டு அடையாளங்கள் அழிந்து போவதான அச்சம் உண்டு. மேலும், இதற்கு காரணம் தங்களது மதஈடுபாடின்மையே என்ற குற்றமனப்பான்மையும் ஏற்படுகிறது. விளைவாக, சமகாலத்தலைமுறையினர் தங்கள் அடையாளங்கள வலுவாக நிலைப்படுத்தும் முயற்சியில் வஹாபிசம் போன்ற அடிப்படைவாத சித்தாந்தங்கள் பக்கமும் சாய்கின்றனர். தீவிர மத-ஈடுபாடு மற்றும் அடிப்படைவாத சாய்வு சகமனித வெறுப்போ சமூக வன்மத்தின் வெளிப்பாடோ அல்ல. இது ஒரு சமூக பண்பாட்டு மற்றும் இருப்பு தொடர்பான பிரச்சினை.


இதை சமகால இந்தியாவின் இஸ்லாமியச் சமூக வரலாற்றை நோக்கியே நாம் புரிந்து கொள்ளலாம். குமரிமாவட்டத்தில் என் சொந்த ஊரான தக்கலையில் அரசு உயர்மேல்நிலை பள்ளிக்கூடத்துக்கு அருகிலே இஸ்லாமியர் பெருமளவில் வசிக்கும் பகுதி இருந்தது. ஏராளமான இஸ்லாமியர் அப்பள்ளியில் படித்தார்கள். 98 வரை ஒரு பர்தா கூட தென்படவில்லை. விடுங்கள், தலையில் முக்காடு கூட அந்த இஸ்லாமிய மாணவிகள் அணிந்ததில்லை. ஆனால் அப்பகுதியில் எப்போதுமே காவிப்படையினருக்கும் இஸ்லாமியருக்கும் இடையிலான பூசல் மெலிதாக புகைந்து வந்திருந்தது. 99-க்கு பிறகு நான் படித்த ஸ்காட் கிறித்துவ கல்லூரியில் ஹமீதா மற்றும் கதீஜா எனும் இரண்டு இஸ்லாமிய பெண்கள் படித்தார்கள். அவர்கள் தாம் அணிந்த பர்தா காரணமாக தனித்து தெரிந்தார்கள். அடிக்கடி பர்தாவுக்கான காரணத்தை நண்பர்களிடம் விளக்கி ஓய்ந்து போனார்கள். ஹமீதா ஒரு தீவிர பெண்ணியவாதி. மத ஈடுபாடும் குறைவே. 98க்கு பிறகே அவர் பர்தா அணிய ஆரம்பித்தார். என்ன காரணம்? பர்தா மூலம் தம்மைச் சூழ்ந்த பிற சமூகத்தினருக்கு ஒரு சேதி விடுக்க விரும்பினார்.



பாபர் மசூதி இடிப்பின் பிறகு பா.ஜ.க ஆட்சி அதிகாரம் பெற்று இஸ்லாமியருக்கு எதிரான அடக்குமுறை வெளிப்படையான ஆதரவு பெற்ற கட்டம் அது. 99-இல் மட்டும் தினமும் ஏழு பேர் மதக்கலவரத்தால் பாதிக்கபட்டனர் என்றார் பிரிந்தா காரத். மகராஷ்ட்ரா, குஜராத், மத்திய பிரதேசம் என்று பல்வேறு மாநிலங்களில் 600-க்கு மேற்பட்ட கலவரங்கள் வெடித்தன. குறிப்பாக கார்கில் போர் மற்றும் பா.ஜ.காவின் ரதயாத்திரையின் போது இது உச்சம் அடைந்தது. இந்தியா முழுக்க இஸ்லாமியர் கடுமையான சமூக பண்பாட்டு நெருக்கடியை, தனிமைப்படுத்தலை நேரிட்டனர். இந்த நெருக்கடியை இந்த இருப்பெண்களும் குறியீட்டு ரீதியாக சந்தித்ததன் விளைவே கிறித்துவ கல்லூரியில் தெரிந்த பர்தா. பெண்ணியவாத, மத ஈடுபாடற்ற தனிநபரைக் கூட பா.ஜ.க போன்ற அடிப்படைவாத இயக்கத்தின் வன்முறை தங்கள் அடையாளங்களை தேடி எடுத்து முன்னிறுத்த தூண்டியது. இஸ்லாமியருக்கு எதிரான சர்வதேச வணிக மற்றும் பண்பாட்டு போர் நிகழும் இன்றைய சூழலில் பர்தா சர்வ சாதாரணமாகி விட்டது..

பர்தா திணிக்கப்படுகிறதா? சிந்திக்கும், பெண்ணிய இஸ்லாமிய பெண்கள் கூட தங்கள் மதஅபிமானத்துக்காக விருப்பப்பட்டே அணிகின்றனர். இஸ்லாமிய சமூகம் இன்னும் நவீனப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். நம் கல்வி அமைப்பிலும் அவர்கள் அதிகம் ஈடுபடுவதில்லை. பண்பாட்டு அரசியல் நேருக்கடிக்கு உள்ளாகும் போது அவர்கள் ஆண்களை ஒட்டியே செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது தான். இஸ்லாமிய சமூகம் நவீனப்பட்டு பொது நீரோட்டத்துக்கு வந்தால் அவர்கள் இரு கட்டங்கள் வழி பயணிப்பார்கள். முதல் கட்டத்தில் இன்றைய இளந்தலைமுறை பிராமண பெண்களைப் போல் குறைந்த பட்ச சுதந்திரத்துடன் இயங்குவார்கள். வீட்டுக்குள் மடிசார் வெளியே ஜீன்ஸ். நவீனத்தின் அனைத்து வசதிகள் மற்றும் கலாச்சார அம்சஙக்ளை பேணியபடியே அசட்டு சம்பிரதாய நம்பிக்கைகளுடன் ரெட்டை வாழ்க்கை. ஒருவேளை ரெண்டாவது கட்டத்தில் பட்டுப்புழு இறகுகளை அடையலாம். அப்போது மட்டுமே நாம் பர்தாவை ஒரு பெண்ணிய கோணத்தில் அணுக முடியும்.

******************************************************************

பர்தாவின் இந்திய கோணத்தை மேலும் விளங்கிக் கொள்ள
புதிய காற்று இதழின் ஆசிரியரும் தாமரை இதழின் இணை ஆசிரியருமான ஹமீம் முஸ்தபாவிடம் சிறு பேட்டி ஒன்று கண்டேன்.



1. பர்தா மீதான் உங்கள் நிலைப்பாடு என்ன?

ஆதி இஸ்லாத்தில் பர்தா அனைவருக்குமானதகாக இருக்கவில்லை. நபிகளின் ரத்த உறவுகள் மட்டுமே அணிந்து வந்ததாக ஒரு குறிப்பு உள்ளது. பிறகு பலவிதங்களில் திரிபுற்று இன்று அரசியல் காரணங்களுக்காக அது முன்வைக்கப்படுகிறது.
இந்திய முஸ்லீம்களிடையே பரவி வரும் அரபிய கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இங்கு பர்தாவை பார்க்கலாம். பர்தாவில் இன்றொரு மேட்டிமைத் தனம் வந்து விட்டது. பெண்கள் தங்கள் அழகியலை காட்டும்படி மெருகேறிய விலை உயர்ந்த பர்தாக்களை தேடி அணிகிறார்கள். அதாவது அதன் அடிப்படை நோக்கம் மெல்ல தோற்கடிப்படும் முரணை குறிப்பிட்டேன்.

2. பொதுஅரங்குகள் மற்றும் கல்லூரிகளில் சேலை அணிவது கட்டாயமாக உள்ளது. திரைக்கலைஞர்கள் நடத்திய விழாவில் ஸ்ரேயா கலைஞர் முன்னிலையில் குறைவான் ஆடைகளுடன் தோன்றி கண்டிக்கப்பட்டு பின் அடுத்த நிகழ்ச்சியில் சேலை அணிந்து வர நிர்பந்திக்கப்பட்டார். இப்படியான நிர்பந்தத்தை பர்தா கலாச்சாரத்துடன் ஒப்பிட முடியுமா? சேலை நம்மூர் பர்தாவா?

முடியும். சேலை காமக்கிளர்ச்சி ஊட்டும் படி வடிவமைக்கப்பட்டது. பர்தா உடலை மறைக்கும் நோக்கம் கொண்டது. இருப்பினும் இரண்டுமே பெண்ணை நுகர்வுப் பொருளாக கொள்ளும் நோக்கம் கொண்டவையே. இது தொடர்பாக ஒரு முல்லாக் கதை உண்டு.

முதலிரவில் முல்லாவிடம் தன் முகத்திரையை விலக்கும் மனைவி அவரிடம் கேட்கிறார்: “ நான் இனி பிற ஆண்களிடத்து முகத்திரை விலக்கலாமா?”
முல்லா சொல்கிறார்: “எத்தனை ஆண்களிடம் வேண்டுமானாலும் உன் முகத்தை நீ இனி காமி. ஆனாலும் என்னிடம் மட்டும் தயவு கூர்ந்து காட்டாதே!”

3. பெண்கள் நிர்பந்திக்கப்படுகிறார்களா? நுட்பமாக கலாச்சார ரீதியில் ஏனும்?

பெண்களுக்கு பர்தா இன்று கலாச்சார அந்தஸ்தாகி விட்டது. பொருளாதார மற்றும் லௌகீக வசதிகளும் இதற்கு உண்டு. உதாரணமாக இரண்டு பர்தாவை வைத்துக் கொண்டு ஒரு ஏழைப்பெண் வசதி படைத்தவருக்கு நிகராக தன்னை காட்டிக் கொள்ள முடியும். ஒரு நைட்டியை உள்ளே இட்டு பர்தா மேலே அணிந்து செல்லும் சுதந்திரமும் முக்கியமானதாக உள்ளது. இப்படியாக இன்று 80 சதவீத பெண்கள் சுயவிருப்பமாகவே பர்தா அணிகிறார்கள்.

4. பர்தா பரவலாகி இருப்பதில் பா.ஜ.கவின் பங்கு என்ன?

நிறைவே. ஆனால் முன்னிருந்த இந்திய பண்பாட்டை களைந்து அரபிய கலாச்சாரத்தை அணைக்க விரும்பும் இந்திய முஸ்லீமின் போக்கையும் குறிப்பிட வேண்டும். இது உலகளாவிய அளவில் இஸ்லாமியர் சந்திக்கும் நெருக்கடியின் எதிர்விளைவுதான்.

5. இதை சற்று பரிவோடு நோக்கலாமா?

பார்க்கலாம். ஆனால் பர்தாவின் பேரிலான ஒழுக்க அறவியலை நாம் மறுக்க வேண்டும்.

ஏன்?

பெண் பாதுகாப்பு என்ற பர்தா ஆதரவு காரணம் போலியானது. சவுதி அரேபியாவுக்கு சென்று வந்த என் நண்பர் மீரான் மைதீன் சொன்னார்: ‘அங்கு ஒரு அரபிய பெண்ணுக்கு வாடகை கார் வேண்டும் என்றால் இந்திய ஓட்டுநனை நம்புவாள், அரபியனை நம்ப மாட்டாள்’. அரபு தேசங்களை விட இந்திய முஸ்லீம் பெண்கள் இங்கு பாதுகாப்பாக உள்ளனர்.

6. இஸ்லாமிய சமூகம் நவீனப்பட்டு பொது நீரோட்டத்துக்கு வந்தால் பர்தா நிலைக்குமா?

பர்தா பேணாத பேணுகின்ற இரு போக்குகள் அருகருகே இருக்கும். பாக்கிஸ்தானிய சுடிதார் வகை ஆடை ஒருவேளை பர்தாவின் இடத்தை அப்போது பிடிக்கலாம்.



அடுத்து, இஸ்லாம் தொடர்பான சில சங்கடமான கேள்விகளை எழுப்பியமைக்காக ஊர்விலக்கு செய்யப்பட்ட கவிஞர் ஹெச்.ஜி ரசூலிடம் மேலும் சில ஆபத்தான கேள்விகள்.

1. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரை ஆதரிக்கிறது இந்திய கம்யூனிஸ்டு கட்சி. ஆனால் பிரான்ஸில் இஸ்லாமியருக்கு எதிரான தடைச்சட்டத்தை ஆதரிப்பவர் ஆண்டுரே கெரின் எனும் ஒரு கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. இந்த முரணை எப்படி புரிந்து கொள்ள?

பிரான்ஸில் முகம் மூடும் பர்தாவை மட்டும் தான் எதிர்க்கிறார்கள். இந்திய இடதுசாரிகளே ஒடுக்குமுறையை ஆதரிப்பவர்கள்தாம். இஸ்லாமுக்குள்ளே மாற்றுக்கருத்தை ஒடுக்கும் போக்குகள் உள்ளன. ஓட்டுவங்கிக்காக அஞ்சி இந்த கருத்தியல் ஒடுக்குமுறையை ஆதரிக்கிறார்கள் நம்மூர் இடதுசாரிகள்.

முகத்திரை தடை என்றாலும் கூட அது தனிநபர் உரிமையை பறிப்பது ஆகாதா? அநியாயம் தானே?

இது மனித உரிமை மீறல்தான். மறுக்க முடியாது. அங்கு தடை வஹாபிசத்தை மேலும் வலுவாக்கும். சட்டம் அல்ல, இது குறித்த ஒரு வெளிப்படையான பண்பாட்டு விவாதமே உதவும்.

2. இந்துத்துவா கட்சிகள் இஸ்லாமியருக்கு ஏற்படுத்தி உள்ள நெருக்கடியின் எதிர்விளைவாக பர்தாவை காணலாமா?

இல்லை. இது இந்திய இடதுசாரிகள் முன்வைக்கும் ஒரு பொய் மட்டுமே. இந்திய முஸ்லீம் இளம்தலைமுறையினரில் பெரும்பாலானோருக்கு அரசியல் பிரக்ஞை குறைவு. மதத்தலைமை கூறுவதை அப்படியே பின்பற்றுகிறார்கள். அவர்கள் பரிந்துரைப்பதை மட்டுமே படிப்பார்கள் பார்ப்பார்கள்.

3. பர்தா அணிவதை ஒரு எதிர்ப்புணர்வாக காண முடியாதா?

இல்லை. பர்தா அணிபவர்களே ஒழுக்கசீலர்கள் மற்றவர்கள் மதஎதிரிகள் என்பதான ஒரு கலாச்சார அழுத்தம் இச்சமூகத்தில் உள்ளது. உதாரணமாக, என் மகள் பள்ளிப் பருவம் வரை தலையில் முக்காடு கூட போட்டது கிடையாது. ஆனால் கல்லூரியில் சேர்ந்த பிறகு எனக்கே தெரியாமல் முக்காடு போடத் தொடங்கினாள். விசாரித்த போது பர்தா அணியும் தோழிகளை போல் அவள் இருக்க விரும்பவதாக தெரிந்தது.

மேலும் பர்தா கலாச்சாரத்தின் பின்னால் பிற்போக்கு சமயத்தலைவர்கள் உள்ளனர். எங்கும் இப்படி முழுக்க மூடும் வழக்கம் இல்லையே. உதாரணமாக கேரளா. அவர்கள் முக்காடு மட்டும் அணிவதே வழக்கம்.

கமலாதாஸ் அணிந்தாரே?

இஸ்லாத்தை வெற்றுமதத்தவர் தழுவும் போது தீவிர போக்காளர்களாகி விடுவார்கள்.

4. பர்தாவை வற்புறுத்துபவர்கள் அது பெண்களுக்கு பாலியல் பாதுகாப்பு தரும், ஒழுக்கவழியில் அவர்களை செலுத்தும் என்கிறார்கள். உண்மையா?

இது தவறு. பர்தாவினால் ஒழுக்க வாழ்வுக்கு சில பாதகங்கள் ஏற்படலாம். அரபு நாடுகளுக்கு சென்று வந்த என் நண்பர்கள் கூறியதுபடி அங்கு பர்தாவின் மறைவில் பின்–திருமண பாலுறவுகள் தாம் நிகிழ்கின்றன. மேலும், பர்தா எனும் உடல் மறைப்பு ஆண்களுக்கு உளவியல் ரீதியான தூண்டுதலை அளிக்கலாம்.

5. ஒரு பெண்ணியவாதியாக பர்தாவை எப்பிடி காண்கிறீர்கள்?

பர்தாவின் சமூகக் காரணத்தை பார்ப்போம். அரேபியர்கள் பாலைப் புழுதியில் இருந்து தங்களை காத்துக் கொள்ள உடலை மொத்தமாய் மூடும் அங்கியை அணிந்தனர். பெண்களுக்கான அத்தகைய ஆடை பர்தா. பெண்களை பர்தா அணிய வற்புறுத்தும் இந்திய இஸ்லாமிய ஆண்கள் தாம் மட்டும் அரபிய ஆண்களின் முழு அங்கியை அணிய மறுப்பது ஏன். இந்த முரணே ஆணாதிக்க மனப்பான்மையை காட்டிக் கொடுக்கிறது.

****************************************************************

பல்வேறு பண்பாட்டு அரசியல் காரணங்களால் இஸ்லாம் பற்றிய இத்தகைய விவாதங்களை பொதுத்தளங்களில் முன்னெடுக்க முடியாது. ஏற்கனவே ஒடுக்கப்பட்டுள்ள அச்சமூகம் காயப்படாமல் இருக்க நாம் கவனம் கொள்ள வேண்டும். பெண்ணுரிமை, மத-அடையாளம் மற்றும் உலகளாவிய அரசியல் நெருக்கடி என பன்முகம் கொண்ட இப்பிரச்சனையை அறிவியக்கங்கள் முன்னெடுக்க வேண்டும்.



Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates