Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Saturday, 22 February 2014

சில நம்பிக்கை நட்சத்திரங்கள்

இடது பக்கம் கீழே சாம்சன், வலது பக்கம் மேலே குல்தீப் யாதவ், கீழே கானி



இன்று 19 வயதுக்கு கீழானவர்களுக்கான உலக்க் கோப்பை காலிறுதியில் இந்தியா இங்கிலாந்திடம் தோற்று விட்டது. ஆனால் இது போன்ற தொடர்களில் வெற்றி தோல்வி ஒரு சாதனையொ இழப்போ அல்ல. வீர்ர்கள் அடையாளம் காணப் படுகிறார்கள். ரஞ்சி கோப்பையை விட நெருக்கடி மிகுந்த சூழலில், நல்ல தரமான அணிகளுக்கு எதிரே அவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என பார்க்க ஒரு சந்தர்ப்பம். அந்த அடிப்படையில் இந்த இந்திய அணியின் கணிசமான வீர்ர்கள் கவர்ந்தார்கள்.
Read More

Wednesday, 25 December 2013

சச்சின்: கடவுள் இல்லாத உலகம்




இந்தியாவில் கிரிக்கெட் ஒரு சிறுபகுதியினரால் தான் பார்க்கப்படுகிறது. இந்தியா விளையாட்டு பண்பாடு கொண்ட நாடே அல்ல. ஆனாலும் சச்சினின் இறுதி ஆட்டம் மொத்த நாட்டாலும் கொண்டாடப்பட்டது. கிரிக்கெட் நுணுக்கங்கள் அறியாதோரும் கண்ணீருடன், தாளாத வலியுடன் அவருக்கு விடையளித்தளனர். பிரிவுரையில் சச்சின் தான் சிறுவயதில் கிரிக்கெட் ஆடி களைத்து தூங்குகையில் சாப்பாடு ஊட்டிய அத்தையை பற்றி குறிப்பிடுகையில், தனது முதல் மட்டையை வாங்கித் தந்த அக்காவைப் பற்றி கூறுகையில், அம்மாவை, அப்பாவை நினைவுகூரும் போது மைதானத்தில் கூடியிருந்த, டி,வி முன் வீற்றிருந்த எண்ணற்றோரும் கண் கலங்கினர்.

 வெளிநாட்டு பாணியில் இந்திய பார்கள் சச்சின் குறித்து விநாடிவினா நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு இலவச மது என அறிவித்தன. சச்சின் தன் இறுதி ஆட்டத்தை துவங்கிய அந்த சில மணிநேரங்கள் பல நிறுவனங்கள் இந்தியா முழுக்க தம் ஊழியர்களை வேலையை நிறுத்தி காண்டீன் டிவிகள் முன் குவிய அனுமதித்தன. அமீர்கான் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் படப்பிடிப்பை ரத்து செய்து மீண்டும் மைதானம் நோக்கி விரைந்தனர். சச்சின் ஒரு 14 வயது பையனாக தனது சாரதா விதயாஸ்ரம் பள்ளிக்காக சதம் அடித்த போது பள்ளி தலைமை ஆசிரியர் அதை ஒலிபெருக்கியில் அறிவித்து மொத்த பள்ளிக்கும் விடுப்பு அளித்தார். மொத்த மாணவர்களும் சச்சினைக் காண மைதானத்துக்கு விரைந்தனர். இதோ இப்போது சச்சின் விடைபெறும் இந்த வேளையில் ஒரு சின்ன பள்ளிக்கூடத்துக்கு பதில் மொத்த இந்தியாவுக்கும் லீவு விட்டாயிற்று. நாமெல்லாம் அந்த மாமனிதனின் இறுதி அவதாரம் ஒன்றை தரிசிக்க வேலைகளை, அன்றாட வாழ்க்கையின் அற்பத்தனங்களை சில நிமிடங்கள் மறந்து விட்டு மௌனமாகிறோம். அந்த சில நிமிடங்கள் மொத்த நாடும் ஒருவிதத்தில் ஸ்தம்பித்தது. கிரிக்கெட் பார்க்காதவர்களும் கூட ஏதோ ஒரு மகாசம்பவம் நடப்பதை உணர்ந்திருந்தனர். ஐரோப்பிய நாடொன்றில் வெற்றி வாகை சூடி வந்த ஒரு ராணுவ தளபதிக்கான அன்பும் மரியாதையும் இது. சச்சின் அந்த இறுதி தருணங்களில் மொத்த இந்தியாவுக்குமான சிறந்த மகனாக, தம்பியாக, கணவனாக, மாணவனாக, நம் பண்பாட்டு வளர்ச்சியின் பிரதிநிதியாக தோன்றினார். ஒரு கிரிக்கெட் வீரருக்கு ஏன் பாரத ரத்னா எனக் கேட்கும் பலருக்கு இது தான் புரியவில்லை. இந்திய கூட்டுமனம் சாதிக்க நினைத்த இலக்குகளை அடைந்த, வாழ நினைத்த வாழ்க்கையை வாழ்ந்த ஒரு மனிதராக நம் முன் நின்றார் சச்சின். சச்சினுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்மந்தம்? ஒருவேளை ஒன்றுமே இல்லை எனலாம்!
சச்சின் தன் பங்குக்கு அந்த சில மணிநேரங்கள் இந்தியா-மே.இ தீவுகளுக்கான கிரிக்கெட்டோ அல்லது ஒரு டெஸ்ட் போட்டியோ நடப்பதற்கானவை அல்ல என்பதை உணர்ந்து கொண்டார் – உலகம் முழுக்க மக்கள் ஒரு மேதையின் இறுதிப் படைப்பின் வீச்சை காண்பதற்காக மட்டுமே காத்திருந்தனர். மொத்த உலகமும் தனக்கு மட்டுமேயான மேடை என அவர் அறிந்திருந்தார். தன் ஆகச்சிறப்பான ஆட்டங்களில் நிரூபித்தது போல சச்சின் ஆடும் போது கிரிக்கெட்டுக்குள் மற்றொரு கிரிக்கெட் ஆடப்படுகிறது என மீண்டும் அவர் நிகழ்த்திக் காட்டினார். அந்த எழுபது சொச்ச ஓட்டங்களை கண்ட போது “இவரைப் போய் ஏன் ஓய்வு பெறச் சொல்கிறார்கள்?” என தர்க்கம் கடந்த வியப்பும் சின்ன கோபமும் எழுந்தது. 40 வயதில் தனது பாதி திறமை மட்டுமே மிச்சம் கொண்ட நிலையிலும் கூட சச்சின் விராத் கோலி, ரோஹித் ஷர்மாக்களை விட மேம்பட்டவர் தான். சச்சினின் 10% திறமையை தான் கடவுள் கோலி போன்றவர்களுக்கு அளித்திருக்கிறார்.

 “சச்சின் நீ போகத் தான் ஆக வேண்டுமா?” என நாமெல்லாம் திரும்ப திரும்ப கேட்க நினைத்தோம். தனது திறன்கள் சோர்ந்து போன பின்னரும் தொடர்ந்து ஆடின பல வீரர்கள் கிரிக்கெட்டில் உண்டு. தென்னாப்பிரிக்க அணித்தலைவர் ஸ்மித்தை சொல்லலாம். அல்லது ஆஸ்திரேலியாவுக்காக 35 வயதில் முதல் ஆட்டத்தை ஆடிய கிரிஸ் ரோஜர்ஸை சொல்லலாம். வேறொரு நாட்டில் வேறொரு சூழலில் சச்சின் ஐம்பது வயது வரை கூட ஆடலாம். இப்போதும் கூட அவருக்கு விடைபெற மனமில்லை தான். ஆனால் தான் இதுவரை நிறுவியுள்ள அந்த உச்சபட்ச தரத்தை இனி தன்னால் எட்ட முடியாது என அறிவார். அத்தரத்துக்கு கொஞ்சம் குறைவாக ஆடினாலும் ரசிகர்களின் கடும் அதிருப்தியை சந்திக்க வேண்டி வரும் என அறிவார். தோனியோ கோலியோ ஒரு தொடர் முழுக்க சொற்ப ஓட்டங்களில் வெளியேறினால் நாம் பொருட்படுத்த மாட்டோம். ஆனால் சச்சின் ஒரு எளிய பந்தில் ஒவ்வொரு முறை வீழும் போது அது ரசிகனை காயப்படுத்துகிறது. இப்பந்துகளை தன் இளமையில் சச்சின் நான்குக்கு அநாசயமாக விரட்டி இருப்பார் என அவன் அறிவான். காலம் தன் நாயகனின் பிம்பத்தை மெல்ல மெல்ல சிதைப்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது. சச்சினுக்கு என்றுமே அவரே ஏற்படுத்திக் கொண்ட எதிர்பார்ப்பு தான் பெரும் பாரமாகவும் தடையாகவும் இருந்துள்ளது. சச்சின் இப்போது ஆடும் தரத்தில் ரஹானே அல்லது ராயுடு ஆடலாம். ஆனால் சச்சின் அவ்வாறு ஆடுவது நம் ரசிக மனதை காயப்படுத்துகிறது. சச்சினை தங்க வேண்டும் அதே அன்பு தான் அவரை போகவும் சொல்லுகிறது.
சச்சின் மெல்ல மெல்ல ஒருநாள் ஆட்டங்களில் இருந்து விலகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் சேவாகும் காம்பிரும் ஒரு மிக பிரபல ஜோடியாக களமிறங்கி கவனத்தை அவரில் இருந்து திருப்ப சிறிது காலம் உதவினர். ஆனால் சச்சினை மறப்பது அத்தனை எளிதல்ல. குறிப்பாக ஒரு ஆட்டத்தை அதன் அழகியலுக்காக, நாடகியத்துக்காக, நுணுக்கங்களுக்காக பார்ப்பவர்களுக்கு சச்சின் இல்லாத காலம் நிழல்கள் அடர்ந்த மாலைப் பொழுதாக தோன்றியது. சச்சினின் சிறப்பு அவர் அடித்த நூறு சதங்களோ வென்று தந்த எண்ணற்ற ஆட்டங்களோஅல்ல. அவர் இல்லாவிட்டால் இன்னொருவர் அதை செய்திருக்க முடியும். சொல்லப் போனால் தன் காலத்தில் சச்சினுக்கு இணையாக ஆட்டங்களை தனிப்பட்ட முறையில் கங்குலி வென்றளித்தார். மேலும் இந்த ஓட்டங்களுக்கும், வெற்றிகளுக்கும் ஒரு கட்டத்தில் வெறும் எண்களின் வரலாற்று முக்கியத்துவம் மட்டுமே இருக்கும்.
வித்தியாசம் இது தான்: சச்சின் ஆடுகையில் ஒவ்வொரு ஓவரும் இன்னொரு தனி ஆட்டமாக, ஒரு ஆரம்ப மையம் முடிவு கொண்ட கதையாக இருந்தது. காரணம் அவர் நடைமுறை பிரச்சனைகளை தன் கற்பனை மற்றும் திறன் மூலம் எதிர் கொள்ள முடியும் என தயங்காமல் நம்பினார். உதாரணமாக, ரெய்னாவுக்கு உயரப்பந்தை ஆடுவது பிரச்சனை என்றால் அதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி, எப்படி உயரப்பந்துக்கு வெளியேறாமல் சமாளிப்பது என கவலைப்படுவார். ஆனால் சச்சின் நேர்மாறாக ஒரு சிக்கலான பந்தை ஒரு வித்தியாசமான சவால் என்ற வகையில் மட்டுமே பார்ப்பார். ஷேன் வார்ன் விக்கெட்டை சுற்றி வந்து கால்பக்கமாய் வீசிய போது அதை சச்சின் சிக்ஸ் அடிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகத்தான் கருதினார். சச்சின் சிறுவயதில் இருந்தே கால்பக்க ஆட்டத்தில் பலவீனமானவர். அவருடைய ஆசான் அச்சிரேக்கர் அவ்வாறுதான் பதினாலு வயது சச்சின் குறித்து ஒரு பத்திரிகையாளரிடம் தெரிவிக்கிறார் “அவனுக்கு இன்னமும் கால்பக்கம் சரியாக பந்தை விரட்ட வராது” என்கிறார். தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் சச்சினுக்கு கால் பக்கமாய் வீசப்படும் இடதுகை சுழல்பந்து சிரமமாகத்தான் இருந்தது. நசீர் ஹுசேன் தலைமையில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்த போது பெங்களூர் டெஸ்டில் ஹுசேன் சச்சினுக்கு கால் பக்கம் தான் பொறி வைத்தார். ஆஷ்லி கைல்ஸைக் கொண்டு காலுக்கு வெளியே கராறாக வீச வைத்தார். சச்சின் அன்று பொதுவாக மந்தமாக ஆடினாலும் கால் பக்க சுழல்பந்துகளை சமாளிக்க பேடிஸ் ஸ்வீப் எனும் புதுவகை ஷாட் ஒன்றை பின்னர் அவர் அறிமுகப்படுத்தினார். இன்றும் இந்த ஷாட்டை சச்சினளவுக்கு நுணுக்கமாக அடிக்கக் கூடியவர்கள் மிகச் சிலர்தான் – ஜெயவர்தனே அவர்களில் ஒருவர்.
பேடில்ஸ் வீப் இன்று அறிமுகப்படுத்தப்படும் ரிவர்ஸ் ஹிட் அல்லது தில்ஸ் கூப் போல் அபாயரமானது அல்ல. டெஸ்ட் ஆட்டத்தில் நான்காவது அல்லது ஐந்தாவது நாள் ஆடுதளம் இளகலாகி கால்பக்கம் ஆடுவது ஆபத்தாக மாறும். அப்போது இடது கை சுழலர் கால் பக்கம் வீசுவது கூட அதிரடி முறை தான். ஸ்வீப் செய்தால் எட்ஜ் வாங்கி லெக் ஸ்லிப்பில் பிடிபடலாம். தடுத்தாடினால் கூட சிலவேளை தெரியாமல் ஷார்ட் லெக்குக்கு எட்ஜ் கொடுக்க வாய்ப்புண்டு. இதை முறியடிக்க சச்சின் பந்தை தரையோடு அணைத்து அடிக்கும் வண்ணம் மட்டையை விளக்கை பொத்தும் உள்ளங்கை போல் வைத்து ஸ்வீப் அடிப்பார். சச்சினுக்கு இந்த ஷாட் தடுப்பாட்டமாகவும் அடித்தாடலாகவும் ஒரே நேரத்தில் அமைந்தது. இதே போன்ற இன்னொரு ஷாட் தான் அப்பர் கட். உலகக்கோப்பை போட்டிகளில் ஷோயப் மற்றும் கேடிக்கை அப்பர் கட் செய்து கதிகலங்க வைத்தது நினைவிருக்கும். ஒரு காலத்தில் சச்சின் off பக்கம் விழும் உயரப் பந்துகளைக் கூட புல் செய்து ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் கடையும் மத்து போல் இடுப்பை மட்டும் திருப்பி அடிக்கும் அவரது புல் ஷாட் ஸ்டைல் காரணமாக முதுக்காயம் ஏற்பட அவருக்கு ஒரு புது ஷாட் தேவைப்பட்டது. அதுதான் அப்பர் கட்.
சச்சின் அளவுக்கு நீண்ட காலம் ஆடியவர் மட்டுமல்ல தொடர்ந்து நல்ல ஆட்டநிலையில் நெடுங்காலம் இருந்தவர்களும் கிட்டத்தட்ட யாரும் இல்லை எனலாம். அதற்கு முக்கிய காரணம் அவர் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் குறைபாடுகளுக்கும் மாறி வரும் சூழலுக்கும் ஏற்றபடி தன் ஆட்டத்தை தகவமைத்து வந்தது தான். இருபது வயது சச்சின் ஆடுவதை கவனித்தால் அவர் முன்னங்கால் பின்னங்கால் ஆட்டத்துக்கு கியர் மாற்றும் போது வெகுவாக கால்களை முன்னும் பின்னுமாய் திராவிட் போல் நகர்த்துவதை பார்க்கலாம். இவ்வாறு வெகுவாக முன்னேயோ பின்னேயோ கால் மாற்றுவது பந்தை சந்தித்து விரட்டுவதற்கான மைக்ரோ நொடி அவகாசத்தை கணிசமாக தின்று விடும். சரளத்தையும் பாதிக்கும். திராவிடால் half volley பந்துகளை சரியாக விரட்ட முடியாமல் போவது இவ்வாறு அவர் ஊஞ்சலாக முன்னும் பின்னும் போய் பந்தை சந்திப்பதனால் தான். ஆரம்பத்தில் சச்சினுக்கு அருமையான பார்வைத்திறனும், வேகமான உள்ளுணர்வு சார்ந்த அசைவுகளும் இருந்ததால் இது அவரை அதிகம் பாதிக்கவில்லை. ஆனால் பிற்பாடு சச்சின் ஒரு சின்ன மாறுதல் செய்தார். அழகான மாறுதல் இது. தன் காலாட்டத்தை குறிப்பிட்ட நிலையிலானதாக இல்லாமல் நடுநிலையாக வைத்துக் கொண்டார். பாலிஷான தரையில் வழுக்கி விளையாடும் குழந்தைகளைப் போன்று, பந்து முன்காலில் விழும் போது சின்ன வழுக்கலுடன் காலை முன்னே வைத்து ஆடுவது, அல்லா விட்டால் சட்டென பின்னால் வழுக்கி போய் வெட்டி ஆடுவதும் சச்சினுக்கு அனாயசமான விளையாட்டாகியது.
இதே போன்று தான் ஆரம்பத்தில் சச்சினின் மட்டையாட்ட நிலையமைதியும். ஆரம்பத்தில் அது சேவாக்கை போன்று திறந்ததாக இருந்தது. இது off பக்கம் பிரமாதமாக பந்தை நுட்பமான இடைவெளிகளில் எல்லாம் விரட்ட உதவியது. ஆனால் சேவாக்கை போலவே இது சச்சினை உள்வரும் வேகப்பந்துக்கு எளிதில் இரையாக்கியது. தொண்ணூறுகளில் சச்சின் திடீரென சிலரது பந்துகளுக்கு பவுல்டாவார். குறிப்பாக பாகிஸ்தானின் அப்துல் ரசாக் அவரை சிலமுறை தொடர்ந்து இவ்வாறு வீழ்த்தினார். தொண்ணூற்று எட்டில் மே.தீவுகளில் முதல் டெஸ்ட் ஆடிய போது கோர்ட்னி வால்ஷ் off பக்கம் சில களத் தடுப்பாளர்களை விலக்கி வெற்றிடத்தை உருவாக்கினார். பின்னர் தொடர்ந்து off குச்சிக்கு வெளியே வீசி சச்சினை கவர் பகுதியில் அடிக்கத் தூண்டினார். சச்சின் ஒரு நான்கு அடித்து அடுத்த பந்து உள்வர பவுல்டானார். இதே போலத் தான் சச்சினின் மட்டையை உயரமாய் தூக்கிப் பிடித்த பாணி. சச்சினின் தாக்கத்தில் பின்னர் கணிசமான மும்பை அணி மட்டையாளர்கள் இப்படியாய் உயரமாய் மட்டையை தூக்கிப் பிடித்திருப்பார்கள். வினாயக் மானே, வாசிம்ஜாபர், ரகானேவில் இருந்து ரோஹித் ஷர்மா வரை. உயரத்தில் இருந்து வளைவாக கீழ் வரும் மட்டை பந்தை சரியான மைக்ரோ நொடியில் சந்திக்கையில் அபாரமான டைமிங்கும் வலுவும் கிடைக்கும். இந்த பாணியின் ஒரு குறை பந்து தாழ்வாக வரும் போது அல்லது சட்டென்று எதிர்பாராமல் வேகம் குறைகிற போது சமநிலை குலைந்து ஷாட் தவறாகும் என்பது. இன்று கூட சச்சின் தாழ்வாக வரும் பந்தை எதிர்கொள்ள தவறும் போது சமநிலை குலைந்து ஆடுதளத்திலேயே தவளை அமர்வது போல் விழுந்து விடுவதை பார்க்கலாம். மெத்தனமான ஆடுதளங்களில் சச்சினை விட கங்குலி நன்றாக ஆடக் கூடியவராக இருந்தார். அதற்கு கங்குலியின் தாழ்வாக மட்டையை பிடிக்கும் பாணி ஒரு காரணம். இன்றும் ரோஹித் ஷர்மா மற்றும் யுவ்ராஜ் சிங் இத்தகைய உயரப் பிடிக்கும் பாணி காரணமாய் சுழல்பந்து வீச்சுக்கும் மெதுவாக வரும் பந்துகளுக்கும் சமநிலை இழந்து தடுமாறுவதை பார்க்கலாம். ஆனால் சச்சின் ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் இந்த இரண்டு குறைகளையும் களையும் வண்ணம் திறந்த பாணியை கைவிட்டு இன்னும் நேராக குச்சிகளுக்கு சமமாக நிற்கத் துவங்கினார். இதே போல் மட்டையையும் கொஞ்சம் தளர்வாக இடுப்புயரத்துக்கு மட்டும் தூக்கிப் பிடிக்கத் துவங்கினார். இதற்கு முன்னர் அவர் இடுப்புக்கு மேலேயே மட்டையை கதை போல் தூக்கி நிற்பதை பழைய ஆட்டங்களில் பார்க்கலாம். இந்த சிறுமாற்றங்களால் அவரால் முன்பு போல் off பக்க களத்தடுப்பை அப்பளமாக நொறுக்கி சிறுஇடைவெளிகளில் எல்லாம் பந்தை விரட்ட முடியாமல் போனது. ஆனால் மாறாக இன்னும் நேராக V வடிவில் அடிக்க ஆரம்பித்தார். இவ்வகையான ஷாட்டுகளின் பல்வேறு வகை திரிபுகளை அவர் பயன்படுத்தியதால் எவ்வகையிலும் அவரது ஆட்டம் குறைபட்டதாகவோ மாறி விட்டதாகவோ தோன்றவில்லை. ஆனால் திராவிட் முப்பது வயதான பின் தனது புல் மற்றும் கால் பக்க விரட்டும் ஷாட்களை கத்தரித்த பின் அவரது ஆட்டம் பெருமளவில் ஊனமாகிப் போனதை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். வயதாக வயதாக திராவிட் போன்றவர்கள் தம் ஷாட்களை குறைத்து கொண்டு போனார்கள். ஆஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் முதுகுக் காயம் காரணமாக புல் ஷாட் ஆட முடியாத நிலையில் இன்று தொடர்ந்து உயரப்பந்துக்கு அவமானகரமாய் ஷார்ட் லெக்குக்கு காட்ச் கொடுத்து வெளியேறுவதை பார்க்கிறோம். ஆனால் சச்சின் தன்னால் ஒரு ஷாட் ஆட முடியாமல் போகையில் அந்த இடத்தில் ஒரு புது ஷாட்டை கொண்டு வருவார். எந்த குறைபாடும் அவரை இன்னொரு விதத்தில் மேம்படுத்தியது. சூழலுக்கும் உடல்நிலைக்கும் ஏற்ற அவரது தகவமைவுகள் சீர்கேடாக அன்றி பட்டுப்புழு பட்டாம்பூச்சியாக மாறும் பரிணாமம் போல் இருந்தன.
சச்சின் அளவுக்கு புதுப்புது கட்டுப்பாடுகள் தன் முன் வரும் போதெல்லாம் மேலும் மேலும் சுதந்திரமாய் ஆட முடிந்த இன்னொரு மட்டையாளர் இல்லை. அச்ரேக்கர் கணித்தது போல் சச்சின் தன் ஆட்டவரலாற்றின் ஆரம்பத்தில் கால் பக்கம் பந்தை விரட்டுகையில் சமநிலை இழந்து காற்றில் அடித்தார் அல்லது தவற விட்டு எல்.பி.டபிள்யு ஆனார். லெக் டிரைவ் ஆடும் கணிசமான மட்டையாளர்களை கவனியுங்கள். பந்து வந்து சேரும் முன்னே முன்னங்கால் கால்குச்சிக்கும் பின்னங்கால் நடுக்குச்சிக்கும் போயிருக்கும். பந்தை தவற விட்டால் பெரும்பாலானோர் எல்.பி.டபிள்யோ தான். விதிவிலக்காய் லஷ்மண், அசருதீன் போன்று ரப்பர் மணிக்கட்டு கொண்டவர்கள் தாம் குச்சிகளுக்கு வெளியே நின்றபடியே சுலபமாக தம் மணிக்கட்டையை சுழற்றியே பந்தை off பக்கம் இருந்து கால் பக்கம் எளிதாய் விரட்டக் கூடியவர்கள். சச்சின் பின்னர் இந்த ஷாட்டையும் மெருகேற்றினார். சச்சினின் ஆன்டிரைவ் கிரிக்கெட்டின் ஒரு அற்புதம். கணித நேர்த்தியும் எதிர்பாராத நொடியில் பந்தை சந்திக்கும் அழகியலும் இணைந்த இந்த ஷாட்டையும் சச்சின் தனக்கே உரிய முறையில் ஆடுகிறார். இந்த ஷாட்டுக்காக அவர் பிறரைப் போல் குச்சிகளுக்கு குறுக்கே போவதில்லை. சிறிதளவு மட்டுமே முன்னங்கால் கால்குச்சி நோக்கி உள்செல்ல ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மட்டையை திருப்பி பந்தை மிட் விக்கெட் அல்லது மிட் ஆனுக்கு செலுத்துவார்.
சச்சினை உண்மையில் எவ்வளவு மிஸ் பண்ணுகிறேன் என்பதை உணர்ந்தது சேவாக் மற்றும் கம்பீரின் தொய்வு மற்றும் வெளியேற்றத்தின் பின் ரஹானேவும் பார்த்திவும் இங்கிலாந்தில் துவக்க ஆட்டக்காரர்களாக ஆடிய போது தான். இருவரும் பின்னங்காலில் அபாரமாக ஆடினர். ஆனால் பந்தை முழுநீளத்தில் வீசிய போது முன்னங்காலுக்கு வர தயங்கினர். உலகில் கிட்டத்தட்ட எல்லா மட்டையாளர்களுக்கும் இப்படியான ஏதாவது ஒரு குறைபாடு உண்டு. கெவின் பீட்டர்ஸனே கூட உயரப்பந்தை முன்னங்காலில் சந்தித்து நேர்த்தியின்றி உரிமையாளரை இழுத்துக் கொண்டு ஓடும் நாயைப் போலத் தான் ஆடுவார். லாராவுக்கு அதிவேகப்பந்து ஆட வராது. ஆனால் குறையே இல்லாத கிரிக்கெட்டின் விவிலியம் போல் தோன்றின ஒருவரை பார்த்து பார்த்து பழகி இந்தியர்களுக்கு ரஹானேவை திடீரென பார்க்கையில் திடீரென ஒருநாள் ஆண்மைக்குறைவை சந்தித்த ஒருவனது மனநிலை ஏற்படுகிறது. அவனிடம் உனக்கு வயதாகி விட்டது, இனிமேல் அப்படித் தான் என நீங்கள் ஆற்றுப்படுத்த முடியாது. 20 வருடங்களாய் அவன் அப்பழுக்கற்ற ஒரு ஆட்டத்தை ஏதோ சாதாரணமான அன்றாட செயல் போல் பார்த்து பழகி விட்டான்.
சச்சினின் இறுதிநாளில் Fakenews இணையதளம் இப்படி எழுதியது: “உங்கள் பிறந்தநாள் தேதி பற்றின தகவலை வலைதொடர்பு தளங்களில் இருந்து மறைத்து விடுங்கள். சச்சினின் ஓய்வோடு உங்களுக்கு சட்டென்று வயதாகி விட்டது”. அதோடு ஏழையும் ஆகி விட்டோம் எனலாம். இந்திய அணியில் சச்சினை விட சிறப்பாக சுயேச்சையாய் ஒரு ஆட்டத்தை வெல்லக்கூடிய கோலி, தோனிகள் இருக்கலாம். ஆனால் ஆடவே முடியாத பந்துகளையும், மீளவே முடியாத ஓவர்களையும் தன்னந்தனியாய் ஒருவர் சமாளித்து வெல்வதை, ஆட்டநிலை மற்றும் பிற புள்ளிவிபரங்களை தாண்டி ஒரு ஆட்டத்துக்குள் மற்றொரு சம்மந்தமில்லாத ஆட்டத்தை நிகழ்த்திக் காட்டுவதை இனி நம்மால் பார்க்க முடியாது. ஒரு ஹாஷிம் ஆம்லா அல்லது பீட்டர்ஸன் சற்றுநேரம் நடைமுறை கட்டுப்பாடுகளை, விதிமுறைகளை மீறி கிரிக்கெட்டை ஒரு தேவதைத் கதை போல நிகழ்த்திக் காட்டலாம். ஒருவர் எல்லா அற்புதங்களும் சற்றுநேரம் தான் நிகழ முடியும். ஆனால் ஒருவர் பௌதிக விதிகளை தொடர்ந்து மீறுவதை ஒரு வாடிக்கையாக இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு காட்டுவதை வெறும் குழந்தை விளையாட்டு என வியப்பாக எல்லாவற்றையும் மறந்து பார்த்திருப்பது இனியும் சாத்தியப்படாது!
இந்திய கிரிக்கெட்டின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு டி.வி ஒளிபரப்பு ஒரு முக்கிய காரணமே. ஆனால் டி.வியில் நாம் சச்சினின் முழுமையான விஸ்வரூபத்தை ஒருக்காலும் தரிசிக்க முடியாது. ஒரு செஸ் பலகையின் காய்களைப் போல் சச்சின் ஆடுகளத்தில் எதிரணியின் களத் தடுப்பாளர்களை நகர்த்தி விளையாடுவதை பார்க்க நாம் மைதானத்துக்கு தான் போக வேண்டும். டி.வியின் சதுர வெளி சச்சினுக்கு அநீதி இழைக்கிறது எனத் தான் கூற வேண்டும். அதில் நாம் சச்சின் பந்தை சந்தித்து ஆடுவதை மட்டுமே பார்க்கிறோம். ஆனால் ஒரு பந்தை சந்திக்க அவர் எவ்வளவு எளிதில் தயாராகிறார் என்பதை, ஒரே பந்தை அவரால் எந்த கள அமைப்புக்கும் ஏற்றபடி விரட்ட முடிகிற அநாயசத்தை நாம் டி.வியில் கவனிக்க முடியாது. உதாரணமாய் ஒரு off குச்சி நோக்கி முழுநீள பந்தை சச்சின் மிட் off நோக்கி அடிக்கலாம். அங்கு ஒரு களத்தடுப்பாளர் அனுப்பப்படுவார். அதே பந்தை சச்சின் அடுத்து கவருக்கு தான் என்றல்ல நேராக கூட அடிப்பார். மனநிலை தோதாக இருந்தால் கால் பக்கம் கூட சுலபமாக விரட்டுவார். சச்சினுக்கு களத்தடுப்பு அமைத்து அவரை தம் விருப்பப்படி ஒரே பகுதிக்கு அடிக்க வைப்பது எந்த எதிரணி தலைவருக்கும் சாத்தியமில்லாதது. ஆனால் கோலியை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு வெட்டி ஆடும் ஷாட் வராது. குறைநீளத்தில் off பக்கம் கொஞ்சம் உயரமாய் வைடாய் வீசினால் திரும்பத் திரும்ப பந்தை ஷார்ட் கவர் பகுதியில் களத்தடுப்பாளர் நோக்கியே அடித்துக் கொண்டிருப்பார். இப்படி அவரை கட்டுப்படுத்த முடியும். கணிசமான மட்டையாளர்கள் இது போல் தம்மால் அடிக்க முடியாத பந்துகளுக்கு தயாராகவே இருப்பார்கள். அடிக்கக் கூடிய பந்துக்காக காத்திருப்பார்கள். சச்சின் தான் அடிக்க வேண்டிய நேரத்துக்காக மட்டுமே காத்திருப்பார். பந்து, நீளம், திசை, வேகம், சுழல் இவையெல்லாம் பொருட்டே அல்ல. சச்சின் சுயநலமானவர் என நமக்கு அடிக்கடி ஐயம் ஏற்பட இந்த அதிசாமர்த்தியம் ஒரு காரணமாக இருக்கலாம். கிரிக்கெட்டின் பெரும்பாலான பௌதிக விதிமுறைகள் அவரை கட்டுப்படுத்தாது என்பதால் அவர் தனக்கான வேகத்தில், திட்டத்தின் படி ஆடுவார். சில வேளை அவர் ஷாட்களை ஆடுகிற முறையும் தருணமும் நமக்கு பொறுப்பற்றதாக தோன்றலாம். குறிப்பாக சொதப்பும் போது. அன்றாட வாழ்வின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு தெரிகிறவர்களை பொதுவாக சுயநலவாதிகள், துரோகிகள் என்று தானே அழைப்போம்! சச்சின் என்ன விதிவிலக்கா? தம்மை மீறிய எதையும் சந்தேகிப்பது தானே மானிட குணம்!
சச்சினின் ஓய்வுடன் கிரிக்கெட் வெறும் எண்களும் குறிப்புகளும் உள்ள நாட்காட்டியை போல் ஆகி விட்டது. “இவ்வளவு தான் செய்ய முடியும்” என யாராவது சொன்னால் இனி மறுயோசனை இன்றி ஏற்கத் தான் வேண்டும். இனி யாரும் கிரிக்கெட் மைதானத்துக்குள் பதாகைகளில் கடவுளின் பெயரை குறிப்பிட மாட்டார்கள். கடவுள் இல்லாத உலகம் சரியானதாகவும், அதேவேளை சோர்வானதாகவும் இருக்கும்.

நன்றி: உயிர்மை, நவம்பர், 2013
Read More

Sunday, 3 November 2013

பணம் தானே எல்லாமே!



 
அப்பாடா ஒருவழியா முடிஞ்சுது!
ஒருவழியாய் இந்தியா ஆஸ்திரேலியா போட்டித் தொடர் முடிந்து விட்டது. ஒவ்வொரு போட்டி முடிவிலும் தோனி அதே புகாரை தான் வாசித்தார். தோற்றாலும் பெய்லி ரொம்ப ஏமாற்றம் இல்லாமல் எளிதாக எடுத்துக் கொண்டார். தோனி எப்போதும் அப்படித் தான் என்பதால் தனியாக தெரியவில்லை. ஆனால் வெற்றி தோல்விகளுக்கு கிட்டத்தட்ட மதிப்பே இல்லாமல் போன ஒரு தொடர் என இதை சொல்ல வேண்டும். எதிரணி 350 அடித்தாலும் அவ்வளவு தானே எனும் அசட்டை. இந்திய அணி முதலில் 350 அடித்தால் இவ்வளவு தானா எனும் பயம். யார் ஜெயித்தாலும் இவ்வளவு பிரம்மாண்டமான ஸ்கோர்களை அடித்ததில் பரஸ்பர திருப்தி. எல்லைக் கோட்டுக்கு வெளியே நாற்காலிகளில் இருக்கும் வீச்சாளர்களின் முகங்களில் மட்டும் கலக்கம். 


தோனி பொதுவாக சொற்களை பொறுக்கிப் பார்த்து பத்து தடவை யோசித்து பயன்படுத்துவார். இம்முறை தொடர்ச்சியாக பந்து வீச்சின் அவலத்துக்கு 4 களத்தடுப்பாளர்கள் மட்டுமே எல்லைக் கோட்டில் நிற்க வேண்டும் என்கிற ஐ.சி.சி விதியை மட்டுமே கடிந்து கொண்டார். ஒருமுறை கூட ஐ.பி.எல், சுருங்கிய எல்லைக் கோடு மற்றும் ஆடுதளம் ஆகிய சொற்கள் அவர் வாயில் இருந்து உதிரவில்லை.
மட்டையாளர்கள் துவம்சம் செய்யும் போது தாக்குப்பிடிக்க ஒன்று பந்து வீச்சாளரிடம் நல்ல வேகம் அல்லது விநோதமான பாணி வேண்டும். 145 கி.மீ வீசுபவர்களையோ அஜ்மல் போன்ற சிக்கலான சுழலர்களையோ ஊகித்து எள்தில் ஓவருக்கு 25 ஓட்டங்களுக்கு அடிக்க முடியாது. இறுதி ஆட்ட முடிவில் தோனி கேட்டார்: “ஆஸி பந்து வீச்சாளர்களும் தான் அடி வாங்கினார்கள். தொடர்ந்து அவர்களுக்கு எதிராய் 300 ஓட்டங்கள் எடுத்தோம். இன்று 380 அடித்தோம். ஆனாலும் ஏன் இந்திய வீச்சாளர்களை மட்டும் குற்றம் காண்கிறார்கள் என புரியவில்லை?”. அதற்கான பதில் இது மட்டுமே. ஆஸி வீச்சாளர்கள் வேகமாக கட்டுப்பாட்டுடன் வீசீயதால் அவர்களை அவ்வளவு எளிதாக துச்சமாக நம்மவர்களால் அடிக்க முடியவில்லை. மேலும் அவர்கள் இந்தியர்களை விட அதிக விக்கெட்டுகளை முக்கியமான நேரங்களில் வீழ்த்தினார்கள். முழுநீளத்தில் வீச அஞ்சவில்லை. உயரப்பந்துகளை தோளுக்கு மேல் எகிறும் படி வீசினார்கள். வினய் குமார் போல் இடுப்புக்கு கீழ் வீசவில்லை. ஆஸி பந்துவீச்சை இந்தியர்கள் அன்றி பிறர் இப்படி விளாசியிருக்க முடியாது. இந்திய பந்து வீச்சை வங்கதேசம் கூட இதே போல் துச்சமாக அடித்து கிழிக்கும். 2012 உலகக் கோப்பை முதல் போட்டி நல்ல உதாரணம்.

இம்முறை ஐ.பி.எல் நம் மிதவேக வீச்சாளர்கள் மட்டுமல்ல அஷ்வினை கூட கடுமையாக அச்சுறுத்தி இருந்தது இந்த தொடரில் தான் தெரிந்தது. தொடர்ந்து மட்டையாளர்கள் உங்களை சிக்சர்களாய் விளாசுவதும், அவர்களை கட்டுப்படுத்துவது என்கிற கவலையே ஒரே சிந்தனையாய் இருப்பதும் 50 ஓவர் ஆட்டத்துக்கு உகந்த மனநிலை அல்ல. 20 ஓவர் ஆட்டத்தில் பல்வேறு வகை பந்துகளை வீசி கட்டுப்படுத்துவதும், அடி வாங்கத் தான் போகிறோம் எப்படியும் என்கிற தயார் மனநிலையுடன் இருப்பதும் உதவலாம். ஆனால் வினய் குமார் போன்றவர்கள் முழுநீளப் பந்தை மட்டையாளர்கள் நாலுக்கு அடித்த மறுநொடியில் இடிந்தே குறைநீளத்தில் மட்டுமே வீசத் துவங்குகிறார்கள். அதுவும் 125 கி.மீ வேகத்தில். இங்கிலாந்தில் முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டம் ஒன்றில் இலங்கைக்கு எதிராக வினய் தன் முதல் ஓவரிலேயே 100 கி.மீ மிதப் பந்தை போட்டார். அதைக் கண்ட வாசிம் அக்ரம் ஒரு பந்துவீச்சாளர் தன் முதல் ஓவரிலேயே இவ்வளவு எதிர்மறையாய் யோசிப்பது ஆபத்தானது என்றார். ஆனால் வினய் குமார் முன்னர் 135-140 கி.மீ வேகத்தில் வீசுபவராக இருந்தார். பின்னர் தொடர்ந்து பல ஐ.பி.எல் தொடர்களில் ஆடி ஆடி தன்னை தக்க வைத்துக் கொள்ள வேகத்தை 15 கி.மீ குறைத்து கிட்டத்தட்ட விக்கெட் எடுக்கும் எண்ணத்தையே மறந்து முழுக்க ஓட்டங்களை கட்டுப்படுத்தும் மனநிலைக்கு இப்போது போய் விட்டார். இனி அவர் சர்வதேச ஆட்டங்கள் ஆடாவிட்டாலும் பரவாயில்லை. ஐந்து வருடங்கள் ஐ.பி.எல் ஆடி பல கோடிகள் சம்பாதித்து விடுவார். அதற்கு வேகமோ விக்கெட் வீழ்த்தும் திறனோ தேவையில்லை.
அஷ்வினுக்கும் இது தான் நடந்தது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவர் பந்துக்கு இன்னும் அதிக ஆற்றலும் சுழலும் அளித்தார். ஒவ்வொரு பந்தும் சுழன்று எகிறியது. ஆனால் ஐ.பி.எல் வந்ததும் சுழலை குறைத்து வேகமாய் பந்தை எறியத் துவங்கினார். வேறுபட்ட பந்துகளை நுழைக்கும் அவசரம் காட்டினார். விக்கெட் எடுக்கும் எண்ணத்தை துறந்தார். அடுத்து 50 ஓவர் போட்டிகள் ஆஸிகளுக்கு எதிராக துவங்கியதும் அவருக்கு ஆட்டப்போக்கை உடனடியாக மாற்ற முடியவில்லை. ஆறாவது போட்டியில் மிஷ்ராவை நுழைத்ததும் அந்த அதிர்ச்சியில் மீண்டும் சுழல் மற்றும் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தி தன் திறனை மீட்டார். ஆனால் இப்படி ஆட்டவகைமைக்கு ஏற்றபடி பந்துவீச்சு பாணியை மாற்றுவது நல்லதல்ல. எளிதும் அல்ல. சிறந்த வீச்சாளர்கள் – அஜ்மல், நரேன் போன்றவர்கள் – இந்த தவறை செய்வதில்லை. அஷ்வினை பெய்லி ஸ்வீப் செய்து நான்கு அடித்தால் உடனே அவர் அஞ்சி பந்தை குறைநீளாக்க துவங்கினார். முன்பு அஷ்வின் இதை ஒரு சவாலாக எடுத்து முழுநீளத்தில் மேலும் வீசுவார். அப்படித் தான் அவர் ஆரம்பத்தில் விக்கெட்கள் எடுத்தார். ஆனால் ஐ.பி.எல் அவரை கோர விபத்தை பார்க்க நேர்ந்த குழந்தை போல் மாற்றி விடுகிறது.

ஆடுதளங்கள் இம்முறை இவ்வளவு தட்டையாக இருந்ததற்கு நிச்சயம் வியாபார நோக்கம் உள்ளது. முதல் சில ஆட்டங்களில் மைதானங்கள் பாதி காலியாக இருந்தன. ஆனால் போக போக அவை நிரம்பி வழியத் துவங்கின. ரசிகர்களை ஈர்க்க வேண்டுமானால் 700 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கக் கூடிய ஆடுதளங்கள் தான் வேண்டும் என கிரிக்கெட் வாரியம் நினைத்திருக்கலாம். அத்திட்டம் வெற்றியும் பெற்றது. ஆனால் விளைவு படுமோசமாக பந்துவீச்சாளர்களை மட்டும் பாதித்திருக்கிறது. தோனி இதை ஏற்கனவே நன்கு உணர்ந்திருந்தார். அவர் ஜடேஜா, அஷ்வினை அதிக ஆபத்தில்லாத நேரங்களில் வீச செய்தார். ஆனால் வேறு வழியில்லாமல் ஆன போது மட்டும் இறுதி ஓவர்களில் வீச அழைத்தார். உனக்தத் தனக்கு கிடைத்த ஒரே வாய்ப்பில் மிக நன்றாக வீசினார். ஆனால் அவரை இந்த ரணகளத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு பிற ஆட்டங்களில் ஆட வைக்கவில்லை. புவனேஸ்வரையும் தோனி பாதுகாக்கவே முயன்றார். ஆனால் வினய் குமாரும் இஷாந்தும் மிக சிரமமான பவர் பிளே மற்றும் இறுதி ஓவர்களை வீசும் துர்பாக்கியத்தை திரும்ப திரும்ப பெற்றனர். விளைவாக அவர்களது பெயர் மிக மோசமாக கறைபடிந்தது. ஆனால் தோனியால் எவ்வளவு வீச்சாளர்களை தான் பாதுகாக்க முடியும்?

இந்தியா குறைந்தது சுழல் சாதகமான ஆடுதளங்களை உருவாக்கி இருக்கலாம். அவற்றில் அஷ்வினுடன் மிஷ்ரா, ராகுல் ஷர்மா, தாம்பெ, ஹர்மீத் சிங் போன்றவர்களுக்கு வாய்ப்பளித்திருக்கலாம். எதிர்காலத்தில் ஆட சாத்தியம் உள்ள நல்ல சுழலர்களுக்கான சோதனைக்களமாக இத்தொடரை பயன்படுத்தி இருக்கலாம். 
நம்ம ஊர் சைனாமேன்

குறிப்பாக குல்தீப் யாதவ். அவர் ஒரு இடது கை கால்சுழலர். சைனாமேன் என்பார்கள். பிரேட் ஹோக் போல. அவர் இன்னும் ரஞ்சி ஆடவில்லை. 18 வயது தான் ஆகிறது. இன்னும் முதிராமல் இருக்கலாம். ஆனால் இப்போது இந்திய பந்துவீச்சு உள்ள நிலையில் நமக்கு அஜந்தா மெண்டிஸ் போல் ஒரு விநோதமான சுழலர் தேவைப்படுகிறார். இத்தொடரில் வாய்ப்பளித்திருந்தால் நிச்சயம் கலக்கி இருப்பார்.

இப்படி ஏற்கனவே நல்ல மட்டையாளர்களாக அறியப்பட்ட ரோஹித், தவான், தோனி போன்றவர்கள் ஓட்டங்கள் குவித்ததாலோ ஏற்கனவே மோசமான வீச்சாளர்கள் என திட்டப்பட்ட வினய், இஷாந்த் போன்றவர்கள் அடித்து நொறுக்கப்பட்டதாலோ யாருக்கு என்ன பயன்? ஆஸ்திரேலியாவும் இந்த ஆடுகளங்களில் பாக்னர், மேக்ஸ்வெல், பெய்லி அடித்த ஓட்டங்களை வைத்து ஆஷஸ் தொடருக்கான தேர்வுகளை செய்வது அபத்தமாக இருக்கும்.

யாருக்கும் பயனில்லாத வெறும் அசட்டு பொழுதுபோக்கு மதிப்பு மட்டும் போதுமா? நம் கிரிக்கெட் வாரியத்துக்கு போதும். தரம், திட்டமிடல், எதிர்காலம் இதெல்லாம் யாருக்கும் வேண்டும். ஐ.பி.எல் பாணியில் ஒரே ஆட்டத்தில் 38 சிகஸர்கள் அடித்து மக்கள் கவனம் பெற்று ரசிகர்கள் கூட்டத்தை பெருக்கி கஜானாவை நிரப்ப வேண்டும். பணம் தானே எல்லாம்!
Read More

கிரிக்கெட்டின் புது காலனியாதிக்கமும் சாதக பாதகங்களும்




சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா தொடர்ந்து இரு டெஸ்டு தொடர்களை மிக அசிங்கமாக இழந்ததற்கும் இந்தியா அது போன்றே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் செய்ததற்கும் வேறுபாடு உண்டு. இந்தியா ஓய்வு பெறும் மனநிலையில் இருந்த தள்ளாட்ட வீரர்களை விடாப்பிடியாய் தக்க வைத்து அதை செய்தது. ஆனால் தவறை திருத்தியதும் இந்தியாவின் ஆட்டநிலையில் பெரும் முன்னேற்றம் புலப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா மூத்த வீரர்களை இழந்து, இருக்கிற இளைய வீரர்களில் யாரையெல்லாமோ முயன்று பார்த்தும் மிக மட்டமாக தோற்று வருகிறது.

இளையதலைமுறையின் கீழ்த்தரம் தான் ஆக ஏமாற்றமான ஒன்று; அது அவநம்பிக்கை ஏற்படுத்தும் ஒன்று கூட. பில் ஹியூக்ஸ், உஸ்மான் குவாஜா போன்ற ஓட்டம் எடுக்கும் தன்னம்பிக்கையை முழுக்க இழந்து விட்ட வீரர்களை கூட முதுகில் சுமர்ந்து செல்வதில் இருந்தே ஆஸ்திரேலியாவின் வறட்சியின் அவலமும் பட்டவர்த்தமாகிறது. இந்தியாவுக்கு தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இப்படியான நிலை இருந்தது. சச்சின் தன்னந்ததனியாக அணியை தூக்கி நிறுத்தி ஒரு மொத்த தேசத்துக்கும் தன்னம்பிக்கை அளித்து வந்தார். அதே போன்றதொரு கட்டத்தில் லாராவுக்கு மே.இ தீவுகளுக்கு இதே பெரும்பணியை ஆற்றினார். ஒரு பெரிய திறமை வறட்சி ஏற்படும் போது அதை நிவர்த்தி செய்யும் அளவுக்கு ஒரு மேதை தோன்ற வேண்டும். ஏனென்றால் உள்ளூர் அளவில் புது திறமைகள் தோன்றி மெருகேற எப்படியும் ஐந்து வருடங்களாவது பிடிக்கும்.
ஒரு பத்து வருடம் என்பது ஒரு சுழற்சி. அதில் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு மேல் தோன்றி ஆட சிரமம். இந்த இரண்டு தலைமுறையிலும் சரியான வீரர்கள் தோன்றாமலும் போகலாம். பொதுவாக இதற்கும் ஒரு நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் சூழல் மற்றும் கட்டமைப்புக்கும் அதிக சம்மந்தமில்லை. ஒன்றுமே இல்லாத ஒரு பூஜ்யத்தில் இருந்து தான் சச்சின், திராவிட், கங்குலி தோன்றினார்கள். சிலவேளை ஒரு சில தலைமுறைகளுக்கு நல்ல வீரர்கள் தோன்ற மாட்டார்கள். அதற்கு ஒன்றும் பண்ண முடியாது. தற்சமயம் ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சிக்கு உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெபீல்டு ஆட்டங்களுக்கு முக்கியத்துவம் குறைத்து பி.பி.எல் போன்று T20 தொடர்களுக்கு மிகையான இடமளித்ததை காரணமாக சொல்லுகிறார்கள். அதே போன்று அங்குள்ள ஆடுதளங்கள் மட்டையாட்டத்திற்கு உகந்ததாக அல்லாமல் உள்ளதை கூறுகிறார்கள். ஆனால் இவையெல்லாம் உபகாரணிகள் தாம். ஒரு நாட்டில் ஏன் சிறந்த திறமைகள் தோன்றுவதில்லை என்ற கேள்விக்கு எளிதில் விடை கிடையாது.
சச்சின் எப்படி இந்தியாவுக்கு கிடைத்தார் என்பதே ஒரு புதிர் தான். அவரைப் போன்று ஒருவர் முன்னர் கிடையாது. ஆனால் அவரது முக்கியத்துவம் அவர் கங்குலி, லஷ்மணில் இருந்து சேவாக், கோலி வரை பின்னர் தோன்றுவதற்காக உளவியல் ஊக்கத்தை வரலாற்றுபூர்வமான தன்னம்பிக்கையை தந்தார் என்பது. சச்சின் இல்லாமல் இருந்திருந்தால் பாதுகாப்பின்மை மற்றும் அச்சம் மிகுந்த திராவிட் வகை வீரர்கள் தாம் தோன்றி இருப்பார்கள். சச்சின் இல்லாத இந்திய கிரிக்கெட் வரலாறு வேறு வகையாகத் தான் இருந்திருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு இப்போது தேவை அவரைப் போன்று ஒருவர் தாம். ஆனால் அப்படி ஒருவர் கிடைக்காத பட்சத்தில் வேறு என்ன செய்யலாம்? இதைப் பற்றி தான் பேசப் போகிறோம்.
இங்கிலாந்து இப்படியான திறமை வறட்சியை வெகுமுன்பே உணர்ந்து கெவின் பீட்டர்சனை தென்னாப்பிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தது. பீட்டர்சன் நன்றாக ஆடும் போது இங்கிலாந்து வெற்றி அடைய முயலும். அவர் ஆட்டமிழந்தால் இங்கிலாந்து தோல்வியை தவிர்க்க பார்க்கும். ஆனால் இங்கிலாந்தின் பல முக்கிய வெற்றிகளுக்கு பின்னால் பீட்டர்சனின் பங்கு கணிசமானது. இன்னொரு புறம் இங்கிலாந்து ஸ்வான், பனேசர், ஆண்டர்ஸன் போன்று சில திறமையான ஆனால் பீட்டர்சனுக்கு அடுத்த நிலையில் உள்ள வீரர்களை கண்டெடுத்தது. இவர்களும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் நன்றாக மெருகேற வேறு சில சராசரி வீரர்களையும் கொண்டு அது அட்டகாசமான அணியாக ஒன்று திரண்டது.
இங்கிலாந்து ரொம்ப காலமாகவே தென்னாப்பிரிக்கா, ஐயர்லாந்து போன்ற காலனிய நாடுகளில் இருந்து வீரர்களை இறக்குமதி செய்யும் மரபை கொண்டுள்ளது. அவர்களின் கவுண்டி உள்ளூர் கிரிக்கெட் அமைப்பு பிரசித்தமானது. பல காலனிய நாடுகளை சேர்ந்த இளம் வீரர்கள் இந்த கவுண்டி கிரிக்கெட் ஆடினால் மட்டுமே போதும் என இங்கிலாந்துக்கு இறக்குமதி ஆக சம்மதித்து வந்தார்கள். காரணம் இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் மட்டும் ஆடினாலே நன்றாக சம்பாதித்து நிலையாக வாழலாம். அது போல் பல வீரர்கள் பெற்றோரில் யாராவது ஒருவர் ஆங்கிலேயராக கொண்டவர். இங்கிலாந்துக்கும் அகண்ட பாரதம் போல அகண்ட பிரிட்டன் எனும் சித்தாந்தம் இப்போதும் உண்டு. அவர்களுக்கு ஒரு நியுசீலாந்து, ஆஸி வீரர் கூட தம்மில் இருந்து பிரிந்து போன ஒரு கிளையில் தோன்றியவர் தாம். இந்த இனப் பற்று எந்த சிக்கலையும் களைய உதவும். ஆனாலும் தொடர்ந்து விமர்சனம் காரணமாக இங்கிலாந்துக்கு இன்று பீட்டர்சன் போன்ற நேரடி இறக்குமதி மற்றும் டுரோட், பிரையர் போன்ற மறைமுக இறக்குமதிகளையும் ஏற்பதா விடுப்பதா எனும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வீரர்கள் நன்றாக ஆடி அணி வென்றால் இங்கிலாந்துக்கு கொஞ்சம் சங்கடமாகவும் குற்றவுணர்வாகவும் உள்ளது. அதனாலே சமீபமாக ஜோ ரூட் எனும் ஆக்மார்க் ஆங்கிலேய இளைஞர் நன்றாக ஆட ஆரம்பித்ததும் மீடியா அவரை வானளாவ புகழ ஆரம்பித்தது. இத்தனைக்கும் அவர் நம்மூர் அம்பத்தி ராயுடு அளவு திறன் படைத்தவர் தான். ஆனால் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து எத்தனையோ தொடர்களை வென்று தந்துள்ள கெவின் பீட்டர்சனுக்கு, தன் தேசிய அடையாளம் காரணமாக, இங்கிலாந்தில் கிடைக்காத அங்கீகாரம் சாதாரண வீரரான ரூட்டுக்கு இங்கிலாந்தில் கிடைத்துள்ளது. அந்தளவுக்கு அவர்களுக்கு தம் வெற்றி மீதே சங்கடம் தோன்றும் வண்ணம் இந்த வீரர் இறக்குமதி செயல்திட்டம் மாறி உள்ளது.
அதே போன்று ஒரு சொந்த ஊர் வீரர் நன்றாக ஆடி அவர்கள் பார்த்தும் ரொம்ப நாள் ஆகிறது. எப்போது ஒரு இந்தியரோ தென்னாப்பிரிக்கரோ தான் இங்கிலாந்தின் நட்சத்திர வீரராக இருப்பார். தொடர்ந்து நல்ல புத்தகங்களை மொழிபெயர்ப்பில் மட்டுமே படிக்க நேர்கிற ஒரு தமிழ் வாசகன் அடைகிற எரிச்சலை போன்றது இது. இதனால் தான் இங்கிலாந்து இவ்வளவு வெற்றிகளை சமீபமாக பெற்றும் அது தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அளவுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறவில்லை. சில கடன்பெற்ற வீரர்களை கொண்டு வாங்கின வஞ்சக வெற்றிகள் தானே என்கிற குற்றச்சாட்டு சதா எழுந்தவாறு உள்ளது. இதுவரை 15 நாடுகளை சேர்ந்த 61 வீரர்கள் இங்கிலாந்துக்காக ஆடியிருக்கிறார்கள். இவர்களில் 46 பேர் வெளிநாடுகளில் பிறந்து பின்னர் இங்கிலாந்தில் வளர்ந்து அல்லது வாழ்ந்து ஆடினவர்கள். என்னதான் ஸ்டுராஸ், பிரையர், டுரோட், பனேசர், பொப்பாரா, ஐயன் மோர்கன் போன்றவர்கள் இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் ஆடியிருந்தாலும் அவர்களின் ஆட்டத்தில் சொந்த நாட்டின் பாணியும் சில குணாதசியங்களும் வெளிப்படுவது குறிப்பிடத்தக்கது. திறனை விட பல சமயங்களில் இந்த பன்னாட்டு பண்பாடு தான் இங்கிலாந்தின் வெற்றிகளுக்கு மிக அவசியமான செயலூக்கியாக இருந்துள்ளது. உதாரணமாக சீக்கியரான பனேசரின் சுழல் பந்துவீச்சில் விடாப்பிடியான மனக்குவிப்பு மற்றும் நுட்பங்களில் ஒரு இந்தியத் தனம் உள்ளது. அதே போல் டுரோட், ஸ்டுரோல் மற்றும் பிரையர் போன்றவர்களின் ஆடும் போது தென்னாப்பிரிக்கரின் மனத்திடம் (காலிஸ், கிர்ஸ்டனிடம் நாம் பார்ப்பது) அபாரமாக வெளிப்படுகிறது. போபாராவின் தூய நேர்மறை ஆட்டம், எதிர்பாராத ஷாட்கள் எல்லாம் இந்திய சீக்கிய தன்னெழுச்சி கொண்டவை. ஐயர்லாந்தில் ஹர்லிங் என்றொரு பிரபல ஆட்டம் உண்டு. பலர் ஒரு பந்தை எதிர்பாராத முனைகளில் இருந்து எறிய கணித்து சரியாக அடிக்க வேண்டும். இந்த ஆட்டத்தை இளமையில் நிறைய ஆடிய ஐயன் மோர்கன் பின்னர் இங்கிலாந்துக்கு வந்து அவ்வணியில் சேர்ந்தார். மோர்கனின் விநோதமான பல அட்டகாச ஷாட்கள், வேகமான எதிர்வினைகள் இந்த ஹர்லிங் ஆட்டத்தின் பாதிப்பால் தோன்றியவை என்கிறார்கள். ஆனால் மோர்கன் ஒரு ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வென்றளிக்கும் போது அவர் இங்கிலாந்து பாணியில் அல்லது ஐயர்லாந்தின் தேசிய பண்பாட்டுடன் ஒன்றித் தான் ஆடுகிறார். ஆக இங்கிலாந்தில் பயின்றாலும் பல வீரர்கள் தத்தம் தேசிய இனங்களின் கலாச்சாரத்தை கொண்டு வந்து தான் இங்கிலாந்தை வெல்ல வைக்கிறார்கள். இங்கிலாந்தின் கவனமும் ஒழுக்கமும் மிகுந்த ஆட்ட கலாச்சாரத்தை முன்வைக்கிறவர்கள் குக், ரூட் போன்ற சராசரி இரண்டாம் நிலை வீரர்களாகவே இருக்கிறார்கள். அதனால் தான் இங்கிலாந்தின் வெற்றிகள் கடன் வாங்கியவையாக இருக்கின்றன.
ஆனாலும் வெற்றி வெற்றி தான். தம்மிடம் உள்ளூர் அளவில் அபார திறமைகள் தோன்றாத நிலையில் அதன் அவசியம் உணர்ந்து இங்கிலாந்து வேறு நாடுகளில் இருந்து வீரர்களை இறக்குமதி செய்துள்ளது. ஆனால் இங்கிலாந்தின் இந்த கடன் பெறும் வெற்றிகர முறையை பிற நாடுகள் பின்பற்றலாமா? பயன்பெற முடியுமா? கிரிக்கெட்டின் ஒரு முக்கிய பிரச்சனை திறமைகள் வாய்ப்பதில் உள்ள ஏற்றத்தாழ்வு தான். ஒரு காலகட்டத்தில் ஏகப்பட்ட நல்ல வீரர்கள் தோன்றுவார்கள். விளைவாக இரண்டு பேர் தொடர்ந்து ஆட எட்டு பேர் வாய்ப்பின்றி பத்து வருடங்களை உள்ளூர் கிரிக்கெட் மட்டுமே ஆடி வீணாக்குவார்கள். தமிழகத்தின் பத்ரிநாத்தை உதாரணம் கூறலாம். அவர் பத்து வருடங்கள் முந்தியோ பிந்தியோ பிறந்திருந்தால் நிச்சயம் இந்திய டெஸ்டு அணியில் இடம் பெற்றிருப்பார். இன்று அணியில் இடங்கள் ஏற்படும் போது அவருக்கு வயது ஆகி விட்டிருக்கிறது. இதே போல் தான் முரளி கார்த்திக்குக்கும், அவருக்கு முன் கன்வல்ஜித் சிங்கிற்கும் நடந்தது. கும்பிளே உச்சத்தில் இருந்த காலத்தில் பல நல்ல சுழலர்கள் தேசிய அணிக்கு ஆடும் வாய்ப்பையே மறக்க நேர்ந்தது. சரியாக கும்பிளே காயமுற்ற வேளையில் ஹர்பஜன் வந்து ஒரு புயலை போல் இந்திய கிரிக்கெட் வரலாற்றை ஆஸி டெஸ்டு தொடரை வெல்ல உதவி மாற்றினார். ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் கும்பிளே மற்றும் ஹர்பஜனின் ஆட்டத்தரம் வீழ்ச்சி அடைய இன்னொரு புறம் மெல்ல மெல்ல உள்ளூர் அளவிலும் சுழலின் தரம் குறைந்து வந்தது. ஆனாலும் பவார், பொவார் போன்ற மும்பை சுழலர்கள் மற்றும் முரளி கார்த்திக், ஜோஷி இருந்தார்கள். அவர்களால் நிச்சயம் ஹர்பஜனை இடம் பெயர்க்க முடியவில்லை. ஆனாலும் ஹர்பஜனின் முடிவு ஐ.பி.எல்லுடன் துவங்கியது எனலாம். அஷ்வினுக்கு ஒரு பெரும் கவனத்தை ஐபிஎல் தந்தது. ஹர்பஜனின் வீழ்ச்சி உக்கிரமாகும் வேளையும் திடீரென்று அஷ்வினின் ஆட்டமும் வெகுவாக முதிர்ந்து துலங்கியது. அஷிவின் ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் ஆடியிருந்தால் அவருக்கும் முரளி கார்த்திக் நிலை தான். ஆனால் மிக அரிதாகவே ஒரு சிறந்த வீரர் வீழும் இடத்தில் இருந்து இன்னொரு மாற்று வீரர் சிறப்பாக தோன்றி வருவார். பெரும்பாலும் சிறந்த வீரர்கள் கொத்தாக தோன்றி கொத்தாக மறைவார்கள். ஆஸ்திரேலியா இப்போது சந்திப்பது அப்படியான ஒரு ஒட்டுமொத்த வெற்றிடத்தை தான்.
இந்த சமத்துவமின்மை கிட்டத்தட்ட எல்லா கிரிக்கெட் ஆடும் நாடுகளிலும் ஏதாவது ஒரு துறையில் இருக்கும். பாகிஸ்தானில் உதாரணமாக இன்னும் ஆட வாய்ப்பு கிடைக்காத சிறந்த வேக வீச்சாளர்கள் உள்ளூர் மட்டத்திலேயே நீண்ட வரிசையாக காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் அவர்கள் மூன்று நான்கு பேரை அறிமுகப்படுத்துவார்கள்; ஒருவர் கூட ஏமாற்றமளிக்க மாட்டார். ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக ஒரு நல்ல மட்டையாளரை கூட அவர்களால் கண்டறிய முடியவில்லை. இந்த பாகிஸ்தான் வகை வேகவீச்சு தரம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு கூட கிடையாது. இவ்விசயத்தில் பாகிஸ்தானை ஓரளவு தென்னாப்பிரிக்காவுடன் மட்டுமே ஒப்பிட முடியும். இந்தியாவுக்கு அது போல் அபரிதமான் அளவில் தற்சமயம் நல்ல திறமையான மட்டையாளர்கள் உள்ளூர் அளவில் இருக்கிறார்கள். இவர்களில் பலர் நிச்சயம் அடுத்து பத்து வருடங்களுக்கு தேசிய அணியில் ஆட போவதில்லை. இது ஒரு புறம் குறிப்பிட்ட நாட்டின் உள்ளூர் தரத்தை மேம்படுத்த மட்டுமே உதவும். பத்ரிநாத்தை போன்ற ஒருவர் தொடர்ந்து தமிழ்நாட்டுக்காக சதங்கள் அடித்துக் கொண்டிருந்தால் அது தமிழ்நாட்டுக்கு நல்லது. ஆனால் அவர் நிச்சயம் இந்தியாவுக்காக இனி ஆடப் போவதில்லை என்ற நிலையில் அவரை நாம் ஆஸ்திரேலியாவுக்கு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு கடனாக அளிக்கலாமா? இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டின் தரம் உயரும் அல்லவா? தமிழகமா சர்வதேச கிரிக்கெட்டா எது முக்கியம்?
இதனால் ஒரு நாட்டின் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு பாதிப்பு ஏற்படாதா? அதற்கு ஒரு மாற்று நடவடிக்கையாக நாம் ஒரு ஒப்பந்தம் போட வேண்டும். அதன்படி எந்த வீரரும் நிரந்தரமாக இன்னொரு நாட்டின் வீரராக முடியாது. அவர் ஒப்பந்த வீரர் மட்டுமே. அவர் எந்த ஒரு குறிப்பிட்ட காலம் ஒப்பந்தம் போட வேண்டும் என்பதையும் அவரது நாட்டின் கிரிக்கெட் வாரியம் தீர்மானிக்கலாம். இதன் மூலம் ஒரு வீரர் மற்றொரு அணியில் சேர்ந்து தன் சொந்த நாட்டுக்கு எதிராகவே ஆடும் அபத்தம் நிகழாமல் பார்க்கலாம். அதே போன்று ஒருவருடம் பத்ரிநாத்தோ அல்லது மனோஜ் திவாரியோ ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் போன்ற மட்டையாட்ட வறுமை கொண்ட அணிக்கு ஆடினால் அவர்களின் பக்கமிருந்து தேசிய அணியில் வாய்ப்பளிக்கப்படாத ஒரு வேக வீச்சாளரை நம் நாட்டுக்கு ஒதே ஒப்பந்த அடிப்படையில் அளிக்க வேண்டும். இரு தரப்பு வீரர்களும் அந்த அந்த ஊர்களின் உள்ளூர் ஆட்டங்களிலும் பங்களிக்க வேண்டும். இதன் மூலம் வீரர்கள் அனுபவமும் பெறுவர்; அவர்களின் திறமையும் வாய்ப்பின்றி வீணாகாது. அதே போன்ற சமநிலையின்மையால் ஒரு நாடு அவஸ்தைப்படுகிற நிலையும் ஏற்படாது. இந்தியாவில் மட்டையாளர்கள் அதிகம். ஆனால் வேகவீச்சாளர்களுக்கு பஞ்சம். ஆஸ்திரேலியாவில் சமீபமாய் வாய்ப்பளிக்கப்படாத மிச்சல் ஜான்சனை நமக்கு அளித்தால் அவர் மூலம் நம் வேகவீச்சின் தரம் உயரும். நாம் பதிலாக இங்கு வாய்ப்பளிக்கப்படாத மனோஜ் திவாரியை அவர்களுக்கு கொடுக்கலாம். இது போன்ற கடன் வீரர்களால் ஒரு குறிப்பிட்ட ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு உள்ளூர் அளவில் புது வரவுகள் இல்லாமல் போனாலும் ஒரு நாட்டால் சமாளிக்க முடியும். புது திறமைகள் தோன்றினதும் இது போல் கடன் வாங்குவதை நிறுத்தி கொள்ளலாம். மேலும் பாகிஸ்தான் அல்லது ஆஸ்திரேலிய வேகவீச்சாளர்கள் இந்தியாவில் ஆடுவதன் மூலம் இங்குள்ள உள்ளூர் வீச்சின் தரத்தை உயர்த்தி புது வீரர்களுக்கு ஒரு ஊக்கமாகவும் விளங்க முடியும்.
மைக்கேல் ஹசியையும் பிராவோவையும் சென்னை வீரர்களாக ரசிகர்கள் கொண்டாடுகிற இந்த ஐபிஎல் யுகத்தில் பார்வையாளர்களின் விசுவாசமும் ஒரு பிரச்சனையாக இராது. ஏற்கனவே நாம் இப்படியான ஒரு கலவை கலாச்சாரத்தில் தான் வாழ்கிறோம். இதை இன்னும் வெளிப்படையாக நடைமுறைப்படுத்தினால் என்ன என கேட்கிறேன். இதன் மூலம் அமெரிக்கா, கனடா, சீனா போன்ற பல புது நாடுகளையும் கிரிக்கெட்டிற்கு வரவேற்பது எளிதாகும். உதாரணமாக கனடா அணி அமைத்தால் நம் சச்சினை தலைவராக்கி அனுப்பலாம். காலிஸ், ஸ்மித், ஷேன் வார்ன், ஜெயவர்த்தனேவை அமெரிக்கா, சீனாவுக்கு அனுப்பலாம். அது போல் நிலைப்பட்ட நாடுகளில் உள்ள இளம் வீரர்களும் அங்கு சென்று உள்ளூர் அளவில் ஆடி தேசிய அணிகளை உருவாக்கலாம். கிரிக்கெட் காலனியாதிக்கம் மூலம் பரவிய ஒரு ஆட்டம். மீண்டும் ஒரு “காலனியாதிக்கம்” மூலம் புது நாடுகளை கைப்பற்றுவது தான் எதிர்கால வரலாறாக இருக்க கூடும். யார் கண்டார்?
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates