Sunday, 3 November 2013

கிரிக்கெட்டின் புது காலனியாதிக்கமும் சாதக பாதகங்களும்




சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா தொடர்ந்து இரு டெஸ்டு தொடர்களை மிக அசிங்கமாக இழந்ததற்கும் இந்தியா அது போன்றே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் செய்ததற்கும் வேறுபாடு உண்டு. இந்தியா ஓய்வு பெறும் மனநிலையில் இருந்த தள்ளாட்ட வீரர்களை விடாப்பிடியாய் தக்க வைத்து அதை செய்தது. ஆனால் தவறை திருத்தியதும் இந்தியாவின் ஆட்டநிலையில் பெரும் முன்னேற்றம் புலப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா மூத்த வீரர்களை இழந்து, இருக்கிற இளைய வீரர்களில் யாரையெல்லாமோ முயன்று பார்த்தும் மிக மட்டமாக தோற்று வருகிறது.

இளையதலைமுறையின் கீழ்த்தரம் தான் ஆக ஏமாற்றமான ஒன்று; அது அவநம்பிக்கை ஏற்படுத்தும் ஒன்று கூட. பில் ஹியூக்ஸ், உஸ்மான் குவாஜா போன்ற ஓட்டம் எடுக்கும் தன்னம்பிக்கையை முழுக்க இழந்து விட்ட வீரர்களை கூட முதுகில் சுமர்ந்து செல்வதில் இருந்தே ஆஸ்திரேலியாவின் வறட்சியின் அவலமும் பட்டவர்த்தமாகிறது. இந்தியாவுக்கு தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இப்படியான நிலை இருந்தது. சச்சின் தன்னந்ததனியாக அணியை தூக்கி நிறுத்தி ஒரு மொத்த தேசத்துக்கும் தன்னம்பிக்கை அளித்து வந்தார். அதே போன்றதொரு கட்டத்தில் லாராவுக்கு மே.இ தீவுகளுக்கு இதே பெரும்பணியை ஆற்றினார். ஒரு பெரிய திறமை வறட்சி ஏற்படும் போது அதை நிவர்த்தி செய்யும் அளவுக்கு ஒரு மேதை தோன்ற வேண்டும். ஏனென்றால் உள்ளூர் அளவில் புது திறமைகள் தோன்றி மெருகேற எப்படியும் ஐந்து வருடங்களாவது பிடிக்கும்.
ஒரு பத்து வருடம் என்பது ஒரு சுழற்சி. அதில் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு மேல் தோன்றி ஆட சிரமம். இந்த இரண்டு தலைமுறையிலும் சரியான வீரர்கள் தோன்றாமலும் போகலாம். பொதுவாக இதற்கும் ஒரு நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் சூழல் மற்றும் கட்டமைப்புக்கும் அதிக சம்மந்தமில்லை. ஒன்றுமே இல்லாத ஒரு பூஜ்யத்தில் இருந்து தான் சச்சின், திராவிட், கங்குலி தோன்றினார்கள். சிலவேளை ஒரு சில தலைமுறைகளுக்கு நல்ல வீரர்கள் தோன்ற மாட்டார்கள். அதற்கு ஒன்றும் பண்ண முடியாது. தற்சமயம் ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சிக்கு உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெபீல்டு ஆட்டங்களுக்கு முக்கியத்துவம் குறைத்து பி.பி.எல் போன்று T20 தொடர்களுக்கு மிகையான இடமளித்ததை காரணமாக சொல்லுகிறார்கள். அதே போன்று அங்குள்ள ஆடுதளங்கள் மட்டையாட்டத்திற்கு உகந்ததாக அல்லாமல் உள்ளதை கூறுகிறார்கள். ஆனால் இவையெல்லாம் உபகாரணிகள் தாம். ஒரு நாட்டில் ஏன் சிறந்த திறமைகள் தோன்றுவதில்லை என்ற கேள்விக்கு எளிதில் விடை கிடையாது.
சச்சின் எப்படி இந்தியாவுக்கு கிடைத்தார் என்பதே ஒரு புதிர் தான். அவரைப் போன்று ஒருவர் முன்னர் கிடையாது. ஆனால் அவரது முக்கியத்துவம் அவர் கங்குலி, லஷ்மணில் இருந்து சேவாக், கோலி வரை பின்னர் தோன்றுவதற்காக உளவியல் ஊக்கத்தை வரலாற்றுபூர்வமான தன்னம்பிக்கையை தந்தார் என்பது. சச்சின் இல்லாமல் இருந்திருந்தால் பாதுகாப்பின்மை மற்றும் அச்சம் மிகுந்த திராவிட் வகை வீரர்கள் தாம் தோன்றி இருப்பார்கள். சச்சின் இல்லாத இந்திய கிரிக்கெட் வரலாறு வேறு வகையாகத் தான் இருந்திருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு இப்போது தேவை அவரைப் போன்று ஒருவர் தாம். ஆனால் அப்படி ஒருவர் கிடைக்காத பட்சத்தில் வேறு என்ன செய்யலாம்? இதைப் பற்றி தான் பேசப் போகிறோம்.
இங்கிலாந்து இப்படியான திறமை வறட்சியை வெகுமுன்பே உணர்ந்து கெவின் பீட்டர்சனை தென்னாப்பிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தது. பீட்டர்சன் நன்றாக ஆடும் போது இங்கிலாந்து வெற்றி அடைய முயலும். அவர் ஆட்டமிழந்தால் இங்கிலாந்து தோல்வியை தவிர்க்க பார்க்கும். ஆனால் இங்கிலாந்தின் பல முக்கிய வெற்றிகளுக்கு பின்னால் பீட்டர்சனின் பங்கு கணிசமானது. இன்னொரு புறம் இங்கிலாந்து ஸ்வான், பனேசர், ஆண்டர்ஸன் போன்று சில திறமையான ஆனால் பீட்டர்சனுக்கு அடுத்த நிலையில் உள்ள வீரர்களை கண்டெடுத்தது. இவர்களும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் நன்றாக மெருகேற வேறு சில சராசரி வீரர்களையும் கொண்டு அது அட்டகாசமான அணியாக ஒன்று திரண்டது.
இங்கிலாந்து ரொம்ப காலமாகவே தென்னாப்பிரிக்கா, ஐயர்லாந்து போன்ற காலனிய நாடுகளில் இருந்து வீரர்களை இறக்குமதி செய்யும் மரபை கொண்டுள்ளது. அவர்களின் கவுண்டி உள்ளூர் கிரிக்கெட் அமைப்பு பிரசித்தமானது. பல காலனிய நாடுகளை சேர்ந்த இளம் வீரர்கள் இந்த கவுண்டி கிரிக்கெட் ஆடினால் மட்டுமே போதும் என இங்கிலாந்துக்கு இறக்குமதி ஆக சம்மதித்து வந்தார்கள். காரணம் இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் மட்டும் ஆடினாலே நன்றாக சம்பாதித்து நிலையாக வாழலாம். அது போல் பல வீரர்கள் பெற்றோரில் யாராவது ஒருவர் ஆங்கிலேயராக கொண்டவர். இங்கிலாந்துக்கும் அகண்ட பாரதம் போல அகண்ட பிரிட்டன் எனும் சித்தாந்தம் இப்போதும் உண்டு. அவர்களுக்கு ஒரு நியுசீலாந்து, ஆஸி வீரர் கூட தம்மில் இருந்து பிரிந்து போன ஒரு கிளையில் தோன்றியவர் தாம். இந்த இனப் பற்று எந்த சிக்கலையும் களைய உதவும். ஆனாலும் தொடர்ந்து விமர்சனம் காரணமாக இங்கிலாந்துக்கு இன்று பீட்டர்சன் போன்ற நேரடி இறக்குமதி மற்றும் டுரோட், பிரையர் போன்ற மறைமுக இறக்குமதிகளையும் ஏற்பதா விடுப்பதா எனும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வீரர்கள் நன்றாக ஆடி அணி வென்றால் இங்கிலாந்துக்கு கொஞ்சம் சங்கடமாகவும் குற்றவுணர்வாகவும் உள்ளது. அதனாலே சமீபமாக ஜோ ரூட் எனும் ஆக்மார்க் ஆங்கிலேய இளைஞர் நன்றாக ஆட ஆரம்பித்ததும் மீடியா அவரை வானளாவ புகழ ஆரம்பித்தது. இத்தனைக்கும் அவர் நம்மூர் அம்பத்தி ராயுடு அளவு திறன் படைத்தவர் தான். ஆனால் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து எத்தனையோ தொடர்களை வென்று தந்துள்ள கெவின் பீட்டர்சனுக்கு, தன் தேசிய அடையாளம் காரணமாக, இங்கிலாந்தில் கிடைக்காத அங்கீகாரம் சாதாரண வீரரான ரூட்டுக்கு இங்கிலாந்தில் கிடைத்துள்ளது. அந்தளவுக்கு அவர்களுக்கு தம் வெற்றி மீதே சங்கடம் தோன்றும் வண்ணம் இந்த வீரர் இறக்குமதி செயல்திட்டம் மாறி உள்ளது.
அதே போன்று ஒரு சொந்த ஊர் வீரர் நன்றாக ஆடி அவர்கள் பார்த்தும் ரொம்ப நாள் ஆகிறது. எப்போது ஒரு இந்தியரோ தென்னாப்பிரிக்கரோ தான் இங்கிலாந்தின் நட்சத்திர வீரராக இருப்பார். தொடர்ந்து நல்ல புத்தகங்களை மொழிபெயர்ப்பில் மட்டுமே படிக்க நேர்கிற ஒரு தமிழ் வாசகன் அடைகிற எரிச்சலை போன்றது இது. இதனால் தான் இங்கிலாந்து இவ்வளவு வெற்றிகளை சமீபமாக பெற்றும் அது தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அளவுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறவில்லை. சில கடன்பெற்ற வீரர்களை கொண்டு வாங்கின வஞ்சக வெற்றிகள் தானே என்கிற குற்றச்சாட்டு சதா எழுந்தவாறு உள்ளது. இதுவரை 15 நாடுகளை சேர்ந்த 61 வீரர்கள் இங்கிலாந்துக்காக ஆடியிருக்கிறார்கள். இவர்களில் 46 பேர் வெளிநாடுகளில் பிறந்து பின்னர் இங்கிலாந்தில் வளர்ந்து அல்லது வாழ்ந்து ஆடினவர்கள். என்னதான் ஸ்டுராஸ், பிரையர், டுரோட், பனேசர், பொப்பாரா, ஐயன் மோர்கன் போன்றவர்கள் இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் ஆடியிருந்தாலும் அவர்களின் ஆட்டத்தில் சொந்த நாட்டின் பாணியும் சில குணாதசியங்களும் வெளிப்படுவது குறிப்பிடத்தக்கது. திறனை விட பல சமயங்களில் இந்த பன்னாட்டு பண்பாடு தான் இங்கிலாந்தின் வெற்றிகளுக்கு மிக அவசியமான செயலூக்கியாக இருந்துள்ளது. உதாரணமாக சீக்கியரான பனேசரின் சுழல் பந்துவீச்சில் விடாப்பிடியான மனக்குவிப்பு மற்றும் நுட்பங்களில் ஒரு இந்தியத் தனம் உள்ளது. அதே போல் டுரோட், ஸ்டுரோல் மற்றும் பிரையர் போன்றவர்களின் ஆடும் போது தென்னாப்பிரிக்கரின் மனத்திடம் (காலிஸ், கிர்ஸ்டனிடம் நாம் பார்ப்பது) அபாரமாக வெளிப்படுகிறது. போபாராவின் தூய நேர்மறை ஆட்டம், எதிர்பாராத ஷாட்கள் எல்லாம் இந்திய சீக்கிய தன்னெழுச்சி கொண்டவை. ஐயர்லாந்தில் ஹர்லிங் என்றொரு பிரபல ஆட்டம் உண்டு. பலர் ஒரு பந்தை எதிர்பாராத முனைகளில் இருந்து எறிய கணித்து சரியாக அடிக்க வேண்டும். இந்த ஆட்டத்தை இளமையில் நிறைய ஆடிய ஐயன் மோர்கன் பின்னர் இங்கிலாந்துக்கு வந்து அவ்வணியில் சேர்ந்தார். மோர்கனின் விநோதமான பல அட்டகாச ஷாட்கள், வேகமான எதிர்வினைகள் இந்த ஹர்லிங் ஆட்டத்தின் பாதிப்பால் தோன்றியவை என்கிறார்கள். ஆனால் மோர்கன் ஒரு ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வென்றளிக்கும் போது அவர் இங்கிலாந்து பாணியில் அல்லது ஐயர்லாந்தின் தேசிய பண்பாட்டுடன் ஒன்றித் தான் ஆடுகிறார். ஆக இங்கிலாந்தில் பயின்றாலும் பல வீரர்கள் தத்தம் தேசிய இனங்களின் கலாச்சாரத்தை கொண்டு வந்து தான் இங்கிலாந்தை வெல்ல வைக்கிறார்கள். இங்கிலாந்தின் கவனமும் ஒழுக்கமும் மிகுந்த ஆட்ட கலாச்சாரத்தை முன்வைக்கிறவர்கள் குக், ரூட் போன்ற சராசரி இரண்டாம் நிலை வீரர்களாகவே இருக்கிறார்கள். அதனால் தான் இங்கிலாந்தின் வெற்றிகள் கடன் வாங்கியவையாக இருக்கின்றன.
ஆனாலும் வெற்றி வெற்றி தான். தம்மிடம் உள்ளூர் அளவில் அபார திறமைகள் தோன்றாத நிலையில் அதன் அவசியம் உணர்ந்து இங்கிலாந்து வேறு நாடுகளில் இருந்து வீரர்களை இறக்குமதி செய்துள்ளது. ஆனால் இங்கிலாந்தின் இந்த கடன் பெறும் வெற்றிகர முறையை பிற நாடுகள் பின்பற்றலாமா? பயன்பெற முடியுமா? கிரிக்கெட்டின் ஒரு முக்கிய பிரச்சனை திறமைகள் வாய்ப்பதில் உள்ள ஏற்றத்தாழ்வு தான். ஒரு காலகட்டத்தில் ஏகப்பட்ட நல்ல வீரர்கள் தோன்றுவார்கள். விளைவாக இரண்டு பேர் தொடர்ந்து ஆட எட்டு பேர் வாய்ப்பின்றி பத்து வருடங்களை உள்ளூர் கிரிக்கெட் மட்டுமே ஆடி வீணாக்குவார்கள். தமிழகத்தின் பத்ரிநாத்தை உதாரணம் கூறலாம். அவர் பத்து வருடங்கள் முந்தியோ பிந்தியோ பிறந்திருந்தால் நிச்சயம் இந்திய டெஸ்டு அணியில் இடம் பெற்றிருப்பார். இன்று அணியில் இடங்கள் ஏற்படும் போது அவருக்கு வயது ஆகி விட்டிருக்கிறது. இதே போல் தான் முரளி கார்த்திக்குக்கும், அவருக்கு முன் கன்வல்ஜித் சிங்கிற்கும் நடந்தது. கும்பிளே உச்சத்தில் இருந்த காலத்தில் பல நல்ல சுழலர்கள் தேசிய அணிக்கு ஆடும் வாய்ப்பையே மறக்க நேர்ந்தது. சரியாக கும்பிளே காயமுற்ற வேளையில் ஹர்பஜன் வந்து ஒரு புயலை போல் இந்திய கிரிக்கெட் வரலாற்றை ஆஸி டெஸ்டு தொடரை வெல்ல உதவி மாற்றினார். ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் கும்பிளே மற்றும் ஹர்பஜனின் ஆட்டத்தரம் வீழ்ச்சி அடைய இன்னொரு புறம் மெல்ல மெல்ல உள்ளூர் அளவிலும் சுழலின் தரம் குறைந்து வந்தது. ஆனாலும் பவார், பொவார் போன்ற மும்பை சுழலர்கள் மற்றும் முரளி கார்த்திக், ஜோஷி இருந்தார்கள். அவர்களால் நிச்சயம் ஹர்பஜனை இடம் பெயர்க்க முடியவில்லை. ஆனாலும் ஹர்பஜனின் முடிவு ஐ.பி.எல்லுடன் துவங்கியது எனலாம். அஷ்வினுக்கு ஒரு பெரும் கவனத்தை ஐபிஎல் தந்தது. ஹர்பஜனின் வீழ்ச்சி உக்கிரமாகும் வேளையும் திடீரென்று அஷ்வினின் ஆட்டமும் வெகுவாக முதிர்ந்து துலங்கியது. அஷிவின் ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் ஆடியிருந்தால் அவருக்கும் முரளி கார்த்திக் நிலை தான். ஆனால் மிக அரிதாகவே ஒரு சிறந்த வீரர் வீழும் இடத்தில் இருந்து இன்னொரு மாற்று வீரர் சிறப்பாக தோன்றி வருவார். பெரும்பாலும் சிறந்த வீரர்கள் கொத்தாக தோன்றி கொத்தாக மறைவார்கள். ஆஸ்திரேலியா இப்போது சந்திப்பது அப்படியான ஒரு ஒட்டுமொத்த வெற்றிடத்தை தான்.
இந்த சமத்துவமின்மை கிட்டத்தட்ட எல்லா கிரிக்கெட் ஆடும் நாடுகளிலும் ஏதாவது ஒரு துறையில் இருக்கும். பாகிஸ்தானில் உதாரணமாக இன்னும் ஆட வாய்ப்பு கிடைக்காத சிறந்த வேக வீச்சாளர்கள் உள்ளூர் மட்டத்திலேயே நீண்ட வரிசையாக காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் அவர்கள் மூன்று நான்கு பேரை அறிமுகப்படுத்துவார்கள்; ஒருவர் கூட ஏமாற்றமளிக்க மாட்டார். ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக ஒரு நல்ல மட்டையாளரை கூட அவர்களால் கண்டறிய முடியவில்லை. இந்த பாகிஸ்தான் வகை வேகவீச்சு தரம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு கூட கிடையாது. இவ்விசயத்தில் பாகிஸ்தானை ஓரளவு தென்னாப்பிரிக்காவுடன் மட்டுமே ஒப்பிட முடியும். இந்தியாவுக்கு அது போல் அபரிதமான் அளவில் தற்சமயம் நல்ல திறமையான மட்டையாளர்கள் உள்ளூர் அளவில் இருக்கிறார்கள். இவர்களில் பலர் நிச்சயம் அடுத்து பத்து வருடங்களுக்கு தேசிய அணியில் ஆட போவதில்லை. இது ஒரு புறம் குறிப்பிட்ட நாட்டின் உள்ளூர் தரத்தை மேம்படுத்த மட்டுமே உதவும். பத்ரிநாத்தை போன்ற ஒருவர் தொடர்ந்து தமிழ்நாட்டுக்காக சதங்கள் அடித்துக் கொண்டிருந்தால் அது தமிழ்நாட்டுக்கு நல்லது. ஆனால் அவர் நிச்சயம் இந்தியாவுக்காக இனி ஆடப் போவதில்லை என்ற நிலையில் அவரை நாம் ஆஸ்திரேலியாவுக்கு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு கடனாக அளிக்கலாமா? இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டின் தரம் உயரும் அல்லவா? தமிழகமா சர்வதேச கிரிக்கெட்டா எது முக்கியம்?
இதனால் ஒரு நாட்டின் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு பாதிப்பு ஏற்படாதா? அதற்கு ஒரு மாற்று நடவடிக்கையாக நாம் ஒரு ஒப்பந்தம் போட வேண்டும். அதன்படி எந்த வீரரும் நிரந்தரமாக இன்னொரு நாட்டின் வீரராக முடியாது. அவர் ஒப்பந்த வீரர் மட்டுமே. அவர் எந்த ஒரு குறிப்பிட்ட காலம் ஒப்பந்தம் போட வேண்டும் என்பதையும் அவரது நாட்டின் கிரிக்கெட் வாரியம் தீர்மானிக்கலாம். இதன் மூலம் ஒரு வீரர் மற்றொரு அணியில் சேர்ந்து தன் சொந்த நாட்டுக்கு எதிராகவே ஆடும் அபத்தம் நிகழாமல் பார்க்கலாம். அதே போன்று ஒருவருடம் பத்ரிநாத்தோ அல்லது மனோஜ் திவாரியோ ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் போன்ற மட்டையாட்ட வறுமை கொண்ட அணிக்கு ஆடினால் அவர்களின் பக்கமிருந்து தேசிய அணியில் வாய்ப்பளிக்கப்படாத ஒரு வேக வீச்சாளரை நம் நாட்டுக்கு ஒதே ஒப்பந்த அடிப்படையில் அளிக்க வேண்டும். இரு தரப்பு வீரர்களும் அந்த அந்த ஊர்களின் உள்ளூர் ஆட்டங்களிலும் பங்களிக்க வேண்டும். இதன் மூலம் வீரர்கள் அனுபவமும் பெறுவர்; அவர்களின் திறமையும் வாய்ப்பின்றி வீணாகாது. அதே போன்ற சமநிலையின்மையால் ஒரு நாடு அவஸ்தைப்படுகிற நிலையும் ஏற்படாது. இந்தியாவில் மட்டையாளர்கள் அதிகம். ஆனால் வேகவீச்சாளர்களுக்கு பஞ்சம். ஆஸ்திரேலியாவில் சமீபமாய் வாய்ப்பளிக்கப்படாத மிச்சல் ஜான்சனை நமக்கு அளித்தால் அவர் மூலம் நம் வேகவீச்சின் தரம் உயரும். நாம் பதிலாக இங்கு வாய்ப்பளிக்கப்படாத மனோஜ் திவாரியை அவர்களுக்கு கொடுக்கலாம். இது போன்ற கடன் வீரர்களால் ஒரு குறிப்பிட்ட ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு உள்ளூர் அளவில் புது வரவுகள் இல்லாமல் போனாலும் ஒரு நாட்டால் சமாளிக்க முடியும். புது திறமைகள் தோன்றினதும் இது போல் கடன் வாங்குவதை நிறுத்தி கொள்ளலாம். மேலும் பாகிஸ்தான் அல்லது ஆஸ்திரேலிய வேகவீச்சாளர்கள் இந்தியாவில் ஆடுவதன் மூலம் இங்குள்ள உள்ளூர் வீச்சின் தரத்தை உயர்த்தி புது வீரர்களுக்கு ஒரு ஊக்கமாகவும் விளங்க முடியும்.
மைக்கேல் ஹசியையும் பிராவோவையும் சென்னை வீரர்களாக ரசிகர்கள் கொண்டாடுகிற இந்த ஐபிஎல் யுகத்தில் பார்வையாளர்களின் விசுவாசமும் ஒரு பிரச்சனையாக இராது. ஏற்கனவே நாம் இப்படியான ஒரு கலவை கலாச்சாரத்தில் தான் வாழ்கிறோம். இதை இன்னும் வெளிப்படையாக நடைமுறைப்படுத்தினால் என்ன என கேட்கிறேன். இதன் மூலம் அமெரிக்கா, கனடா, சீனா போன்ற பல புது நாடுகளையும் கிரிக்கெட்டிற்கு வரவேற்பது எளிதாகும். உதாரணமாக கனடா அணி அமைத்தால் நம் சச்சினை தலைவராக்கி அனுப்பலாம். காலிஸ், ஸ்மித், ஷேன் வார்ன், ஜெயவர்த்தனேவை அமெரிக்கா, சீனாவுக்கு அனுப்பலாம். அது போல் நிலைப்பட்ட நாடுகளில் உள்ள இளம் வீரர்களும் அங்கு சென்று உள்ளூர் அளவில் ஆடி தேசிய அணிகளை உருவாக்கலாம். கிரிக்கெட் காலனியாதிக்கம் மூலம் பரவிய ஒரு ஆட்டம். மீண்டும் ஒரு “காலனியாதிக்கம்” மூலம் புது நாடுகளை கைப்பற்றுவது தான் எதிர்கால வரலாறாக இருக்க கூடும். யார் கண்டார்?
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates