Tuesday, 5 November 2013

சமூகம் எனும் நான்கு குருடர்களும் ஊனம் எனும் யானையும்





 உச்சநீதிமன்றம் ஊனமுற்றோருக்கான 3% இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும் என கேட்டுள்ளது. அதுவும் போட்டியிடுவோரில் 3% என பார்க்க வேண்டுமே அன்றி தேர்ந்தெடுத்தோரில் மூன்று சதவீதம் என பார்க்கக் கூடாது என்றுள்ளது. இது ஒரு முக்கிய அவதானிப்பு. தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஊனமுற்றோர் இருக்க வேண்டும் எனும் அவசியமே இல்லையே! ஊனமுற்றோரை தேர்ந்தெடுக்காமல் இருக்க அரசும் அதிகாரிகளும் இப்படி பல தந்திரங்களை மேற்கொள்ளுகிறது. அரசைப் பொறுத்தவரையில் ஊனமுற்றோர் ஒரு ஓட்டுவங்கி அல்ல. அதிகாரிகளுக்கு ஊனமுற்றோர் குறித்த முன்தீர்மானங்கள் பல தடையாக உள்ளன. இன்னொரு பக்கம் சமூகத்தில் இடஒதுக்கீடு குறித்த அதிருப்திகள் ஊனமுற்றோர் சமவாய்ப்பை பெறுவதற்கும் தடையாக உள்ளன. ஒவ்வொன்றாக பார்ப்போம்.

(மாற்றுத்திறனாளிகள் என்ற சொல் பாசாங்கானது. ஊனமுற்றவர்களின் சமூக பொருளாதார நிலை மேம்படாதவரை அவர்களை மானே தேனே என்றெல்லாம் அழைத்து கமுக்கமாய் இருப்பது பாசாங்கை விட மோசமான கயவாளித்தனம். அதனால் மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை இங்கு பயன்படுத்தப் போவதில்லை. சொல்லில் இருந்து சமூக மாற்றம் வராது – மாற்றத்தில் இருந்து இயல்பாக புதுசொல் பிறக்கட்டும்)
இந்தியா முழுக்க கோடிக்கணக்கான ஊனமுற்றோர் உள்ளனர். ஆனால் அவர்கள் ஒன்றிணைந்து போராடுவதில்லை. சிறு சிறு அமைப்புகள் போராடும் போதும் தேசிய அமைப்பு என்று ஒன்றில்லை. மக்கள் தொகை அளவு அல்ல சங்கங்களும் அமைப்புகளும் வழி அவர்கள் ஒருங்கிணையும் போது தான் உரிமைகள் கிடைக்கும் என்பதை கடந்த சில பத்தாண்டுகளில் தாழ்த்தப்பட்டவர்கள், அரசு ஊழியர்கள், வக்கீல்கள், மருத்துவர்கள் என பலரும் ஒன்றிணையும் போது பார்த்தோம். அரசியல் தலைவர்கள் கவனிக்க வேண்டும் என்றால் பெரும் எண்ணிக்கையில் மாநாடாக ஒன்று சேர்ந்து காட்ட வேண்டும். சிறு சிறு ஊர்வலங்கள் பயன்படாது. இதற்கு பணமும் நிறுவன ஆதரவும் வேண்டும். பொருளாதார ரீதியாக கீழ்மட்டத்தில் இருக்கும் தலித்துகள் தமக்கு எதிரான அநீதிகள், படுகொலைகளை தேசிய அளவில் கண்டிக்கும் மாநாடுகளை நடத்தியதில்லை, அவர்களுக்கு மீடியா வலு இல்லை. மேலும் தலித் என அடையாளப்படுத்துவதிலும் கணிசமான மக்களுக்கு கூச்சம் உண்டு. ஆக மேல்தட்டினர் ஓர் அடைளாத்தின் கீழ் இணைவது போல் விளிம்புநிலை மக்களுக்கு எளிதில் சாத்தியப்படுவதில்லை. சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகுவோர் வாழ்நிலையில் மேம்பட்டதும் தம்மை பழைய அடையாளத்துடன் பொருத்த விரும்புவதில்லை. ஊனமுற்றோர் அரசு வேலைகளில், தனியார் துறையில் வசதியாய் இருப்பவர்கள் தம்மை வசதி அற்ற ஊனமுற்றோரில் இருந்து பிரித்து பார்க்க விரும்புவார்கள். தலித் அடையாளத்தை தாண்டுவது, ஊன அடையாளத்தை கடப்பது இவர்களுக்குள் ஒரு ஏக்கமாக இருக்கிறது. ஒட்டுமொத்த குடையொன்றின் கீழ் இம்மக்கள் திரளாததற்கும், கட்சிகள் பொருட்படுத்தாதற்கும் இதுவும் ஒரு முக்கிய காரணம்.
ஊனமுற்றோருக்கு போராடுவதில் உள்ள மற்றொரு பிரதான பிரச்சனை நகர்வு. வறுமையில் யாரையாவது அண்டி வாழும் நிலையில் உள்ள ஊனமுற்றோர் உரிமைப் போராட்டங்களில் கலந்து கொள்வதில் நடைமுறை பிரச்சனைகள் பல உள்ளன.
முன்தீர்மானங்களுக்கு வருவோம். இதைப் படிக்கிற உங்களுடன் எத்தனை ஊனமுற்றோர் பள்ளியில் படித்துள்ளார்கள், ஆசிரியர்களாக பாடம் சொல்லித் தந்துள்ளார்கள், அலுவலகங்களில் உங்களுடன் வேலை பார்த்துள்ளார்கள்? கணிசமானோர் இல்லை எனத் தான் சொல்வீர்கள். ஊனமுற்றோர் குறித்த அறிவும் பழக்கமும் நமக்கு மிக குறைவு. விளைவாக நம்மில் சிலர் ஊனமுற்றோரால் பல வேலைகளை செய்ய முடியாது என நினைக்கிறோம். இவ்வாறு நம்பும் அதிகாரிகள் ஊனமுற்றோருக்கு வேலை அளிப்பது கருணை அடிப்படையிலானது, ஆனால் அவர்களால் நிறுவன வேலைகள் தடைபடும் என நினைத்து வேலை உத்தரவுகளை தர தயங்குகிறார்கள். ஆனால் இதே வகையான நம்பிக்கைகளைத் தான் இவர்களுக்கு ஐம்பது வருடங்களுக்கு முன் பெண்கள் மீதும், தாழ்த்தப்பட்டவர் பற்றியும் வைத்திருந்தார்கள். ஊனமுற்றோர் தொடர்ந்து பல துறைகளிலும் வேலைக்கு அமர்த்தப்பட்டு நன்றாக பணியாற்றி தம்மை நிறுவும் பட்சத்தில் மட்டுமே இத்தகைய முன்தீர்மானங்கள் அகலும்.
நான் ஒரு கல்லூரி பேராசிரியர் வேலைக்கான நேர்முகத்தேர்வில் நன்றாக செயல்பட்டு முதலிடத்தில் வந்தேன். ஆனால் ஊனமுற்றோரால் ஆசிரிய வேலை செய்ய முடியாது என்று சொல்லி எனக்கு தர மறுத்தார்கள். பின்னர் இன்னொரு கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு நான்கு வருடங்கள் பணி புரிந்தேன். ஒவ்வொரு நாளும் மூன்று மணிநேரங்கள் நின்று தான் வேலை செய்வேன். என்னைப் போல் கால் ஊனம் இல்லாதவர்கள் ஆசுவாசமாக அமர்ந்து பேசும் போது நான் மட்டும் வகுப்பில் நின்றவாறு தொடர்ந்து பாடமெடுப்பது பார்த்து பலரும் வியப்பார்கள். பொதுவாக நான் நிற்பதை விரும்ப மாட்டேன். ஆனால் வகுப்பில் பேசும் சுவாரஸ்யத்தில் எனக்கு கால் வலியே தெரியாது. களைப்பே ஏற்படாது. ஒரு நாளும் வகுப்புக்கு தாமதமாக போனதில்லை, வகுப்பெடுக்க சோம்பியதில்லை.
சரி, நிற்கவே முடியாத ஒருவர் எப்படி பாடமெடுப்பார்? அவர் சக்கர நாற்காலி பயன்படுத்தலாம். வகுப்புகளும், கட்டிட அமைப்பும் தோதாக இருந்தால் போதும்.
இன்றைய பெரும்பான்மை வேலைகள் மூளை சம்மந்தப்பட்டவை. நியாயமாக அவற்றுக்கு உடல் தகுதி முக்கியமே அல்ல. ஆனால் பள்ளி கல்லூரிகள் போன்ற பழமையான நிறுவனங்கள் கணினி, ஏஸி என்கிற அளவில் தான் நவீனப்பட்டிருக்கும். அங்கு வேலை பார்க்க நீங்கள் நிறைய நடக்கவும் மாடிகள் ஏறவும் முடிபவராக இருக்க வேண்டும். கட்டமைப்பளவில் சிறு மாற்றங்கள் மூலம் இத்தகைய தேவையற்ற சிரமங்களை தவிர்க்க முடியும். ஆனால் பெரும்பாலான நிர்வாகங்கள் ஊனமுற்றோருக்கு ஏற்றாற் போன்ற கட்டமைப்பு மாற்றங்கள் அவசியமற்றவை என நினைக்கின்றன. மிகத் திறமையான ஒரு ஊனமுற்றவருக்கும் சுமாரான ஊனம்ற்றவருக்கும் இடையே தேர்வு என்றால் நிர்வாகம் சுமாரானவரையே தேர்ந்தெடுக்கும். ஊனமுற்றோர், தலித்துகள், மற்றும் பெண்களின் ஒடுக்குமுறை மற்றும் சமூக இருட்டடிப்புக்கு ஒருவிதத்தில் இங்கு அறிவுக்கும் திறமைக்கும் மதிப்பில்லாமல் இருப்பதற்கும் தொடர்புள்ளது. யாரை வைத்தும் எந்த இடத்தையும் நிரப்பலாம் என்கிற எண்ணம் நம்மூரில் வலுவாக உள்ளது.
நான் வேலையில் சேர்ந்த போது விடுப்பில் இருந்த ஒரு சீனியர் பேராசிரியர் பின்னர் திரும்ப வந்ததும் என் தேர்வு குறித்து புகார் செய்தார். ஊனமுற்றோரால் எப்படி எப்படி துறை வேலைகளை செய்ய முடியும் என்று கேட்டார். அவ்வேலைகள் என்ன? கூட்டங்களின் போது மேஜைகளை நகர்த்திப் போடுவது, அலமாரிகளை சுத்தம் செய்வது, நகல் எடுக்க வெளியே போய் வருவது, டீ வடை வாங்கி வருவது போன்ற உதவியாளர் வேலைகளை இங்கு இளநிலை ஆசிரியர்கள் செய்கிறார்கள். அவ்வேலைகளை என்னால் செய்ய முடியாது தான். ஆனால் ஒரு ஆசிரியர் எதற்கு அவ்வேலைகள் பழக வேண்டும்? சில கல்லூரிகள் துப்புரவுத் தொழிலாளர்கள் அல்லது காண்டீனில் சமையல் பண்ண ஆட்கள் காலியாக இருக்கலாம். அதற்காக பேராசிரியராக சேர்பவர்கள் சமைக்க தெரிந்தவர்களாக, கழிப்பறை அலம்புபவர்களாக இருக்க வேண்டும் என நிர்வாகம் கோரலாமா? இந்தியாவில் இப்படியான அபத்தங்கள் நிறைய நடக்கின்றன.
ஒரு பார்வையற்ற ஆசிரியரின் வகுப்பில் மாணவர்கள் கவனிக்காமல் பராக்கு பார்த்தாலோ வெளியே எழுந்து போனாலோ அவரால் கட்டுப்படுத்த முடியாது அல்லவா? ஆம். ஆனால் இது பொருட்படுத்தத் தக்க பிரச்சனை அல்ல. சொல்லப் போனால் முரட்டுத்தனமான மாணவர்களை பெண்களை விட ஆண் ஆசிரியர்கள் தான் இன்னும் எளிதாக கட்டுப்படுத்துகிறார்கள் என்பது ஒரு நடைமுறை உண்மை. இதனை வேலையில் பெண்களின் தேர்வுக்கு எதிராக பயன்படுத்தலாமா? கூடாது. ஆண்கள், பெண்கள், ஊனமுற்றோருக்கு என பல அனுகூலங்களும், குறைகளும் உள்ளன. நான் என் வகுப்பில் ஒருமுறை கூட மாணவர்களுடன் மோதியதில்லை. இத்தனைக்கும் பிற ஆசிரியர்கள் மகா மட்டம் என நினைக்கிற வகுப்புகளை நான் எளிதாக கையாண்டிருக்கிறேன். முதலில் மாணவர்களுக்கு ஆசிரியர் மீது மரியாதை ஏற்பட வேண்டும். மரியாதை இருந்தால் அந்த ஆசிரியருக்கு கை, கால், கண் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் கவனிப்பார்கள். பணிவார்கள். ஆசிரியருக்கு திறமை போதவில்லை என்கிற எண்ணம் மாணவர்களுக்கு வந்து விட்டால் பத்து கை கால் அவருக்கு இருந்தாலும் அடங்க மாட்டார்கள். எப்போது கலவரமாகத் தான் வகுப்புச் சூழல் இருக்கும். மேலும் மாணவர்களை கையாள்வது ஒருவரது தனித்துவமான புத்திசாலித்தனம் மற்றும் மேலாண்மைத் திறன் சார்ந்தது. அதற்கும் ஊனத்துக்கும் சம்மந்தமில்லை. பார்வை என்பது ஒரு புலன். அது இல்லாதவர் வேறு புலன்கள் கொண்டு ஈடுகட்டுவார்கள். கூர்ந்து கவனிப்பார்கள், கூர்மையாக பேசுவார்கள், தம் பேச்சு மூலம் மாணவர்களை அபாரமாக கட்டுப்படுத்துவார்கள். ஊனம் நம் வேலைத்திறனை பாதிக்கும் என நினைப்பது மேலோட்டமான பார்வை மட்டுமே.
இந்தியாவில் இது போல் பார்வையற்ற பல அற்புதமான ஆசிரியர்களை எனக்குத் தெரியும். முதல் கல்லூரி நான் படித்த கல்லூரி. அங்கு நான் மாணவனாக தங்கப்பதக்கம் வாங்கினேன். ஆனாலும் வேலை தரவில்லை. காரணம் தேர்வுக்குழுவில் இருந்தவர்கள் யாருக்குமே என்னைப் போல் ஊனத்துடன் பாடமெடுத்த ஒரு ஆசிரியர் இருந்ததில்லை. ஒருவேளை அவர்களுக்கு அப்படி ஒரு சக ஊழியர் கூட இருந்திருக்க மாட்டார்கள். இனி என் மாணவர்கள் நாளை கல்லூரி முதல்வர், தேர்வுக்குழு உறுப்பினர் அல்லது தாளாளர் ஆனால் ஒரு கால் ஊனமுற்றோருக்கு வேலை அளிக்க தயங்க மாட்டார்கள்.
ஒருவரால் எதையெல்லாம் செய்ய முடியும் என்பது மன ஊக்கத்தையும், வசதி, தொழில்நுட்ப சாத்தியங்களையும் பொறுத்தது. கால் ஊனமுற்றோருக்கு உள்ள பிரதான தடை நம் கட்டிட அமைப்பு. மேற்கத்திய நாடுகளில் போல் சக்கர நாற்காலி இயக்குவதற்கான ரேம்ப் வசதிகள், எளிதில் உள்ளே போய் வரும் வகையிலான வழிகள் நம் கட்டிடங்களிலோ பொதுப் போக்குவரத்திலோ இல்லை. சிறுசிறு மாற்றங்கள் செய்தால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் துணை கொண்டு ஊனமுற்றோரால் பிறருக்கு இணையாகவோ மேலாகவோ செயல்பட முடியும்.
இந்தியாவில் வாய்ப்புக்காக மக்கள் நீண்ட வரிசையில் முந்தி மோதும் சூழலில் ஊனமுற்றோருக்கு ஏன் தனி சலுகை, வசதிகள் என சிலர் கேட்கலாம். இந்த கேள்வி ஒரு நிலப்பிரபுத்துவ மனநிலையில் இருந்து வருவது. இன்று முதலீடு என்பது நிலமோ உடலோ அல்ல. அறிவுத் திறன். இந்தியாவின் முக்கிய அனுகூலம் இங்குள்ள கணிசமான மனித வளம் தான் என்கிறார்கள். அடுத்த ஐம்பதாண்டுகளில் இங்கு வேலை பார்க்கும் தகுதி கொண்ட கோடிக்கணக்கான இளைஞர்கள் வெளிவரப் போகிறார்கள். இன்றைய நவமுதலாளித்துவ சூழலில் இவர்களை முதலீடாக்கி தான் இந்தியா முன்னேற முடியும். நூறு படித்தவர்கள் இருந்த இடத்தில் ஆயிரம் படித்தவர் வந்தால் அங்கு வேலை வாய்ப்பு பத்து மடங்காகுமே அன்றி 900 பேருக்கு வேலை இல்லாமல் ஆகாது. உதாரணமாக மென்பொருள் துறையை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த இருபது வருடங்களில் நாம் மிக அதிகமாக ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணி சம்பாதித்தது மென்பொருள் அறிவு படைத்த இளைஞர்களைத் தான். இது போல் பல்வேறு திறன்கள் கொண்ட இளைஞர்கள் பெருக பெருக உலக சந்தையில் இந்தியாவின் பொருளாதார மதிப்பும் உயரும். இதை உணர்ந்து தான் ஐரோப்பாவில் ஊனமுற்றோருக்கு தனி வசதிகள் பண்ணிக் கொடுத்து அவர்களுக்கு வேலை பார்ப்பதை சுலபமாக்குகிறார்கள். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால் நமக்கு மனித வளம் குறித்த ஒரு துச்சமான எண்ணம் உள்ளது. இது அபத்தமானது.
இன்றைய சூழலில் முன்னேற்றத்துக்கு தேவை உற்பத்தியை பெருக்கும் திறன் கொண்ட நிறைய இளைஞர்களும் உற்பத்தியை துப்பதற்கான ஆட்களும் தான். ஊனமுற்றோரும் பிற விளிம்பு நிலை மக்களும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் மூலம் முன்னேறுவது நம் நாட்டின் முன்னேற்றத்துக்கும் முக்கியமானது. சமீபத்தில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் முதன்முறை மருத்துவரானதை பார்த்தோம். நமக்கு இன்று நல்ல மருத்துவர்களின் பற்றாக்குறை உள்ளது. காரணம் நிறைய பேர் கல்வி வாய்ப்பு பெற்று இத்துறையில் நுழைய முயல்வதில்லை. வெளியே இருப்போருக்கு வாசல்களை நிறைய திறந்தால் தான் சமூகம் மேம்படும். இதற்கும் கருணைக்கும் சம்மந்தமில்லை. ஊனமுற்றோரை தொடர்ந்து இருட்டில் வைப்பதன் வழி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போன்று ஒரு மேதை இன்று தோன்றுவதையும் தானே நாம் தடுக்கிறோம். ஆக இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலை சமூக வளர்ச்சிக்கு எதிரான சுயநல நிலைப்பாடு எனலாம். இன்னொரு காரணமும் சொல்கிறேன்.
நான் முன்னர் வேலை பார்த்த அரசு உதவி பெறும் கல்லூரியில் ஒரு இஸ்லாமியர் கூட கிடையாது. என் துறைத்தலைவர் இஸ்லாமியர் குறித்த தன் கசப்புணர்வை வெளிப்படையாகவே பதிவு செய்பவர். இஸ்லாமியர் ஏன் பொதுப்பரப்பு வருவதில்லை என்பதற்கு பல காரணங்கள் சொல்லலாம். முன்னோடிகள் குறைவு என்பதும் ஒன்று. இந்திய சமூக அமைப்பு ஒரு வட்டப்பாதை போன்றது. அதற்கு முன்வாசலோ பின்வாசலோ இல்லை. நீங்கள் அந்த பாதைக்குள் நுழையவே முடியாது. உள்ளே சுற்றுபவர்கள் ஆண்டாண்டுகளாய் ஓடிக் கொண்டே இருப்பார்கள். கல்விப்புலம், வணிகம், சேவைத்துறை, ஊடகம் என மேற்தட்டு வேலை தளங்களை எடுத்துக் கொண்டால் சில குறிப்பிட்ட சாதிகளே ஆக்கிரமிப்பதை பார்க்கலாம். அவர்கள் பிற சாதிகளை அனுமதிப்பதில்லை என்பதை விட அத்தளங்களில் பிறர் நுழைவதற்கு வாசலே இல்லை என்பது தான் உண்மை. என் பழைய கல்லூரியில் ஒரு பணியிடம் இஸ்லாமியருக்கு மட்டுமே தர வேண்டும் என்கிற சட்டரீதியான கட்டாயம் வந்த போது முதன்முறை ஒரு இஸ்லாமியர் கொண்டு வரப் பட்டார். என் துறைத்தலைவருக்கு அதிகாரம் அளித்தால் அவர் நிச்சயம் இஸ்லாமியரையோ கிறித்துவரையோ அனுமதிக்க மாட்டார். பல இடங்களில் இது தான் நிலை. இனி இந்த இஸ்லாமியர் துறைத்தலைவர் ஆன பின் பிற இஸ்லாமியரை துறைக்குள் கொண்டு வருவார். இப்படியான ஒரு கட்டாய சமத்துவம் தான் நம் நாட்டில் சாத்தியம். எல்லோரும் சமமாக போட்டியிடட்டும் என்கிற வாதம் அபத்தமானது. வாய்ப்பே இல்லாத போது எப்படி போட்டி இட? பொருளாதார தடைகள் போக வேலை தருபவர்களின் முன்தீர்மானங்களையும் தாண்டி ஒடுக்கப்பட்டவர்கள் இங்கே போட்டி வாய்ப்பை அடைவதே கிட்டதட்ட அசாத்தியமானது.
இந்த இஸ்லாமியரை கொண்டு வந்ததை போலத் தான் இனி நம் நிறுவனங்களுக்குள் பார்வையற்றவரை, கைகால் குறைபாடு கொண்டவரை கட்டாயமாக கொண்டு வர வேண்டும். தரம் பாதிக்கப்படாதா? இதுவும் ஒரு போலியான வாதம். நம் ஊரில் எல்லா வேலைகளும் சாதி, மத, ஊழல் அடிப்படையில் தான் தரப்படுகின்றன. அப்போது பாதிக்கப்படாத தரம் இனி இட ஒதுக்கீட்டால் பாதிக்கபட போகிறதா? இல்லை. சொல்லப்போனால் ஒடுக்கப்பட்டவர்கள் தாம் பிறரை விட இன்னும் தீவிரமாக ஆர்வமாக வேலை பார்ப்பார்கள். மேல்சாதியினரின் பொருளாதார சமூக பாதுகாப்பு இல்லாத அவர்கள் உழைப்பும் முனைப்பும் தான் தம்மை தக்க வைக்கும் என அவர்கள் அறிவார்கள். பெண்கள் நல்ல உதாரணம். பொதுவாக அலுவலகங்களில் ஆண்கள் அசட்டையாக இருக்க பெண்கள் இன்னும் முனைப்பாக அக்கறையாக பணி புரிவார்கள். காரணம் இதை விட்டால் அடுக்களை தான் சரணாகதி என அவர்கள் அறிவார்கள்.

ஒடுக்குமுறை என்பது அனைவருக்கும் பொதுவானது. அடிப்படையில் ஒரே வகையான முன்தீர்மானங்களும் விழுமியங்களும் தான் ஊனமுற்றோருக்கும், தலித்துகளுக்கும், பெண்களுக்கும் எதிராக இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. அது உடலைக் கொண்டு ஆட்களை மதிப்பிடுவது – பாலுறுப்பு, பேச்சுமொழி, தோலின் நிறம், பிறப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகிய வித்தியாசங்கள் என்றோ உலகில் மதிப்பிழந்து விட்டன என்பதை உணர இங்கு யாரும் தயாராக இல்லை. பார்வையற்றவர்கள் வேலை கோரி போராடிய போது போலீசைக் கொண்டு அரசு அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய காட்டுமிராண்டித்தனத்தை சமீபமாக பார்த்தோம். அப்போது பார்வையற்றோருக்கு துணையாக பெண்கள், தலித்துகள், இஸ்லாமியர் களமிறங்கி இருக்க வேண்டும். எதிரி பொதுவானவன் என்கிற புரிதல் வராதவரை யாருக்கும் இங்கு சமத்துவம் வாய்க்காது. ஒடுக்கப்பட்டவர் அனைவரும் இனி ஒரே சாதியாக இச்சமூகத்துக்கு எதிராக போராடும் காலம் – ஐரோப்பாவில் ஐம்பது வருடங்களுக்கு முன்பே தோன்றிய சிவில் உரிமை அமைப்புகளின் காலம் – இங்கும் துவங்க வேண்டும். 
நன்றி: அமிர்தா (நவம்பர் 2013) 
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates