பொதுவாக சூழலியல் கட்டுரைகள் அலுப்பாக இருக்கும். வெறும் தகவல்கோர்வையாக அல்லது வியப்பூட்டும் செய்திகளை ஆச்சரியக்குறிகளால் நிறைத்து மூச்சு முட்ட வைக்கும். ஆனால் நக்கீரன் “பூவுலகு”, கொம்பு, “வலசை” போன்ற சிறுபத்திரிகைகளில் எழுதின கட்டுரைகளின் தொகுப்பான “திருடப்பட்ட தேசம்” மிகவும் வாசிக்கத்தக்க தகவல்பூர்வமான சரியான அணுகுமுறை கொண்ட நூல். ஒரு சூழலியல் ஆர்வலருக்கு அரசியலும் தெரியும் போது தான் இத்தகைய விரிவான பார்வை கொண்ட எழுத்து சாத்தியமாகும்.
பன்னாட்டு நிறுவனங்களின் இன்று இந்தியா முழுக்க வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டி வரும் பின்னணியில் நக்கீரன் இப்பிரச்சனைகளை சூழலியல் அடிப்படையில் இந்நூலில் விவாதிக்கிறார். மருத்துவ ஆய்வுகளின் பேரில் உலகம் முழுக்க பழங்குடிகளின் பாரம்பரிய அறிவு திருடப்பட்டு அலோபதி மருந்துகளாக விற்கப்படும் தொழிலாக நடைபெறும் அவலத்தை குறித்த கட்டுரை “மழைக்காடுகளில் திரியும் மருந்து கொள்ளையர்கள்” முக்கியமானது. அகத்திய மலையில் உள்ள காணிகள் எனும் பழங்குடிகளிடம் இருந்து உடலாற்றலை மேம்படுத்தும் ஜின்செங் எனும் தாவரத்தை அறிந்து கொள்ளூம் ஆய்வாளர்கள் சிலர் இதை ஒரு மருந்து நிறுவனத்துக்கு ஐந்து லட்சத்துக்கு விற்க அவர்கள் ஒரு ஒப்பந்தம் போடுகிறார்கள். பழங்குடிகளுக்கு உரிமைத் தொகையாக ஐந்து லட்சமும் தர வேண்டும். இத்தாவரத்தை அடையாளம் காட்டிய மாதன் குட்டிக்காணி டைம்ஸ் பத்திரிகையில் இடம் பிடிக்கிறார். ஆனால் இன்றும் மாதன் குட்டிக்காணி தன் நோயுள்ள இரு பெண் குழந்தைகளுக்கு மருத்துவம் செய்ய காசின்றி தவிக்கிறார். அவருக்கு மட்டுமல்ல எந்த பழங்குடிக்கும் ஒப்பந்தப்படி பணம் வழங்கப்படவில்லை. மருந்து நிறுவனம் மருந்தின் சூத்திரத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்க விற்பனை கோடிகளில் புரள்கிறது. மருந்து நிறுவனம் காணிகளுக்கு சல்லிப்பைசா தராமல் ஏமாற்றி விட்டது. எதிர்த்து வழக்காட பழங்குடிகளுக்கு சக்தியோ கல்வியோ இல்லை. நக்கீரன் கூறுவது போல் இது சூழ்ச்சி, திருட்டு மற்றும் சுரண்டல் தான். அதாவது அறவியல் படி. சட்டப்படியோ வியாபாரரீதியாகவோ பேட்டண்ட் வாங்காத பாரம்பரிய மருத்துவத்துக்கு நாம் உரிமை கொண்டாட முடியாது. நம்மால் செய்ய முடிவது பழங்குடிகளிடம் இன்று உள்ள மூலிகை அறிவை ஆவணப்படுத்தி பழங்குடிகளுக்கு போதுமான வெகுமதியும் கல்வியறிவும் வழங்கி மேம்படுத்துவது தான். இதை அரசே செய்ய வேண்டும். மாறாக அரசு பழ்ங்குடிகளை துரத்தி கானகங்களை கையகப்படுத்தவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உள்ளூர் முதலாளிகளுக்கும் தாரை வார்ப்பதிலேயே அதிக அக்கறையுடன் இருக்கிறது.
“பிஞ்சு வௌவாலுடன் ஒரு நாள்” வெகுசுவாரஸ்யமான கட்டுரை. ஆசிரியர் ஒரு குஞ்சு வவ்வால் தரையில் ஊர்ந்து போவதை பார்த்து அதை எப்படி காப்பாற்றுவது என யோசிப்ப்தில் இருந்து இது துவங்குகிறது. விளக்குமாறு குச்சியில் அதை ஏந்தி இருட்டான இடத்தில் வைக்கிறார். அதன் தாய் வந்து எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கிறார். கட்டுரை முடிவில் வவ்வால் குஞ்சு அந்த இடத்தில் இல்லை. “தாய் வௌவால் எடுத்து போயிருக்கலாம். அப்படித் தானே நீங்களும் நம்புகிறீர்கள்?” என முடிக்கிறார். அவநம்பிக்கையும் நம்பிக்கையும் கலந்த இந்த பதபதைப்பு சூழலியல் மற்றும் பழங்குடி உரிமை மீது அக்கறை கொண்ட எல்லோருக்குமானது தான். கானுயிரும் கான்வாழ் மனிதரும் இந்த வௌவால் குஞ்சை போல் தொட்டார் நொறுங்கி விடும்படி பலவீனமானவர்கள். இது போன்ற அழகான நெகிழ்ச்சியான முடிவுகளை எழுதுவதில் நக்கீரனுக்கு ஒரு தனி லாவகம் இருக்கிறது. இக்கட்டுரையின் முடிவும் அப்படிப்பட்டது. வௌவால்களை ஏன் இயற்கை உருவாக்கியது (இரவுப்பூச்சிகளின் எண்ணிகையை கட்டுப்படுத்த), வௌவாலால் ஏன் ஒன்றுக்கு மேல் குட்டி ஈன முடிவதில்லை (கர்ப்ப பாரத்தை சுமந்து பறப்பதில் உள்ள சிரமம்) என ஒரு வௌவாலால் 60 வகையான தாவரங்களை ஒரு நிலத்தில் புதிதாக உருவாக்க முடியும் என பல தகவல்களை அறியும் போது நம் அறியாமை மீது லஜ்ஜையை விட பிரபஞ்ச மனம் மீதான வியப்பு தான் அதிகமாகிறது. இயற்கை அறிவை பொறுத்தவரையில் மனிதனும் மண்புழுவும் ஒன்று தான்.
“குழந்தைகள் மீது மருத்துவம் நிகழ்த்தும் வன்முறைகள்” தடுப்பூசியின் அபாயங்களை விரிவாக அலசுகிறது. நம் அறிவியல் எவ்வளவு குருட்டுத்தனமான லாபவெறியுடன் இயங்க முடியும் என்பதற்கு பல சான்றுகள் தருகிறார். மனிதர்களுக்காக மருந்துகள் உருவாக்கப்படுவதில்லை, மனிதர்கள் மருந்து நிறுவனங்களின் லாபத்துக்கு பலியாக்கப்படுகிறார்கள் என்கிறார். இது நாம் அறிந்தது தான். ஆனால் குழந்தைகளின் உடலுக்கு இவ்வளவு அலட்சியத்துடன் விஷமான வேதிப்பொருட்கள் பல கலந்த தடுப்புமருந்துகள் செலுத்தப்படுகின்றன என்பதை ஜீரணிக்க வெகுசிரமமாக இருக்கிறது. கணிசமான நோய்கள் தன் பாட்டுக்கு தோன்றி மறையக் கூடியவை. தடுப்புமருந்து தரப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இந்நோய்களால் பின்னர் தாக்கப்படுகிறார்கள். மேலும் இந்த தடுப்புமருந்துகள் மூளை வீக்கம் ஏற்படச் செய்யக் கூடியவை. அமெரிக்காவில் தடுப்பு மருந்துகளால் ஆட்டிசம் எனும் மூளைக்கோளாறு குழந்தைகளுக்கு ஏற்படுவது 3000 மடங்கு பெருகியிருக்கிறது. இத்தகவல்கள் மிகவும் அச்சமூட்டக்கூடியவை. இனிமேலும் செய்தித்தாள்களில் நோய்த்தடுப்பு சொட்டு மருந்து தரப்பட்ட குழந்தைகள் மரணம் எனப் படிக்கும் போது அது ஏதோ அந்த மருந்தில் கோளாறு என அலட்சியமாக நாம் தாண்டி சென்று விட முடியாது. போலியோ தடுப்புமருந்தை கண்டுபிடித்தவரான ஜொனாஸ் சால்க் தன் தடுப்புமருந்து வீணானது என கூறும் போது சொட்டுமருந்து தரப்படாததால் போலியோ வியாதி தாக்கப்பட்ட, அப்படியே இதுநாள் அவரை நம்ப வைக்கப்பட்ட எனக்கு அதை எப்படி எடுத்துக் கொள்ள எனத் தெரியவில்லை.
மஞ்சள் காமாலை தடுப்புமருந்தை அமெரிக்காவில் தடை செய்ய கடும் நஷ்டமடையும் மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக இம்மருந்தை ஆந்திராவில் உள்ள நாலரை லட்சத்துக்கு மேலான பள்ளிக்குழந்தைகளுக்கு பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் அளிக்கிறார்கள். இந்த செலவை பில்கேட்ஸ் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் முதல்தவணை மட்டும் தான். மிச்சதவணைகளுக்கான கோடிக்கணக்கான செலவு அரசின் தலையில் விழுகிறது. இம்மருந்து நிறுவனங்களின் கணிசமான பங்குகளை வாங்கி உள்ள பில்கேட்ஸின் புகழை பரப்பவும் கொடை போல் தெரிந்த இந்த முதலீடு பயன்பட்டு, கோடிக்கணக்கில் லாபமும் ஈட்டித் தந்தது. ஏழை இந்தியர்களை பலியாக்கி அமெரிக்க நிறுவனங்கள் தம்மை தக்க வைத்தும் கொண்டன. HPV வைரஸ் கர்ப்பப்பை நுழைவாயிலில் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடியது. ஆனால் கட்டற்ற பாலுறவில் ஈடுபடும் பெண்களைத் தான் இந்த வைரஸ் தாக்கும். இதற்கான தடுப்பு மருந்தை சோதிக்க அமெரிக்க நிறுவனம் ஒன்று ஆந்திராவில் உள்ள 14,000 14 வயது சிறுமிகளை பயன்படுத்தியது. இதில் 120 சிறுமிகளுக்கு மோசமான பின்விளைவுகள் ஏற்பட்ட அவலம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு புறம் தரப்பட்டு ஐந்து வருடங்கள் மட்டுமே பலன் தரக்கூடிய மருந்தை ஏன் 14 வயதுள்ள, பாலியல் அனுபவமே அநேகமாய் இல்லாத குழந்தைளுக்கு தர வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது. நம்மூரில் மருந்து சோதனைகள் எவ்வளவு அலட்சியமாய் அபத்தமாய் நடக்கிறது என்பதற்கொரு உதாரணம் இது.
“பகன்றை பன்னிரெண்டு” எனும் பகன்றை பூ ஒன்றின் பின்னுள்ள வரலாற்று கதையை, அரசியலை பேசும் கட்டுரையும் வாசிக்கத்தக்கது. “திருடப்பட்ட தேசம்” பிரித்தானிய காலனியாக இருந்த மாலத்தீவின் பகுதியாக இருந்து பின்னர் பிரித்தனால் அமெரிக்காவுக்கு விற்கப்பட்டு ஒருநாளில் தம் வாழ்நிலத்தை இழந்த ஆயிரக்கணக்கான சாகோஸ் தீவு மக்களின் அவலமான கதையை சொல்கிறது. பலவீனமான தேசங்களும் மக்களும் இன்று உலகம் முழுக்க அரசியல்-ஆயுத வியாபார கூட்டு படையெடுப்புக்கு ஆளாகி வருவதை சித்தரிக்கிறது.
கட்டுரைக்கும் சிறுகதைக்கும் இடையில் உள்ள மெல்லிய கயிற்றில் நடக்கத் தெரிந்தவர்கள் தாம் அற்புதமான கட்டுரையாளர்களாக இருக்கிறார்கள். நக்கீரன் அப்படி ஒருவராக நம்பிக்கை ஊட்டுகிறார்.
Added to my booklist.. thanks Abilash!!
ReplyDelete