Showing posts with label உளவியல். Show all posts
Showing posts with label உளவியல். Show all posts
Thursday, 20 February 2014
Tuesday, 4 February 2014
ஓரின செக்ஸ் ஈர்ப்பு இக்காலத்தின் தேவையா?
செக்ஸுக்கு பால் நாட்டத்துக்கும் ஒரு சின்ன ஆனால் முக்கியமான வித்தியாசம் உள்ளது. ஓரின உறவுக்கு எதிரான சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு பால் நாட்டமாக நம் சமூகத்தில் ஓரின உறவுக்கு உள்ள முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை என்பதே பிரச்சனை. ஓரின உறவு குடும்ப அமைப்புக்கு எதிரானதாக, அதனாலேயே ஒழுங்கீனமாக, பண்பாட்டுக்கு ஊறுவிளைவிப்பதாக பார்க்கப்படுவது ஒரு அறியாமையினால் ஏற்படுவது தான்.
முதலில், ஓரின உறவுக்கு இயற்கை மாறானது அல்ல. பரிணாமவியல் கோட்பாடு படி இயற்கை நமக்குள் தேவையற்ற ஓரின உறவைத் தூண்டுகிற ஒரு மரபணுவை இத்தனை கோடி வருடங்களாய் விட்டு வைக்காது. ஓரின உறவு குழந்தைப் பேறுக்கு எதிரானது என்றால் அதனால் மக்கள் தொகை குறையும்; மற்றும் ஒரு தனிமனிதனின் மரபணு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாது. இது உண்மை என்றால் அப்படியான ஒரு உயிரியல் கூறு ஏன் இன்னும் நம் உடலுக்கு உயிர்ப்பாக இருக்கிறது? ஆக ஓரினச் சேர்க்கை விழைவால் நமக்கு ஒரு முக்கியமான பயன் உள்ளது. அது என்னவென யோசிப்போம்.
பொதுவாக ஒரு ஆண் ஒரு ஆணருகே இருப்பதை விட பெண்ணருகே இருக்கத் தான் விரும்புவான் என அறிவோம். ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு பற்றின விளக்கமே பெண்ணருகே இருக்கையில் நேரம் சிட்டாய் போவது குறித்த உதாரணத்தை பயன்படுத்துகிறது. சரி, ஆனால் நம் சமூகத்தில் ஏன் ஆண்கள், பெண்கள் தம் பாலினத்தோடு தனித்து இருப்பதற்கான இடங்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். ஏன் ஒரு வேலைக்காகவோ, பொழுதுபோக்குக்காகவோ கூட்டமாக செல்லும் போது தத்தமது பாலினத்தோடு தான் சேர்கிறார்கள்? தாராளவாத பாலுறவை அனுமதிக்கும் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் மட்டுமல்ல ஒழுக்கவியல் அழுத்தங்களை அறியாத பழங்குடிகள் இடையே கூட பெண்கள் பெண்களோடும், ஆண்கள் ஆண்களோடும் தான் கணிசமாக இருக்க விரும்புகிறார்கள். ஆண்களுக்கு மட்டுமேயான வகுப்புகளுக்கு பாடமெடுக்கையில் அங்கு மாணவர்கள் உணரும் சுதந்திரமும், உற்சாகமும் வேறு ஒரு நிலையில் இன்னும் தீவிரமாக இருக்கும். சில பெண்கள் வகுப்பில் இணைந்தாலே ஆண் மாணவர்களின் உடல்மொழி இறுக்கமானதாக அழுத்தங் கொண்டதாக மாறுவதை பார்த்திருக்கிறேன். எதிர்பாலினத்தோடு இருப்பதை நாம் ரசிக்கிறோம். அதேவேளை அது ஏற்படுத்தும் கடுமையான அழுத்தம், எதிர்பார்ப்புகளை நம்மால் கொஞ்ச நேரத்துக்கு மேல் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதனாலே நமக்கு நம் பாலினத்தோடு தனித்திருப்பதற்கான காலமும் வெளியும் கணிசமாய் தேவைப்படுகிறது.
எதிர்பாலினத்தோடு இருப்பதை விட சகபாலினத்தோடு இருப்பது இன்னும் ஆசுவாசமாக இருக்கிறது – தகராறுகள், சச்சரவுகள் குறைகின்றன, சுலபமாக வேலை செய்வது சாத்தியமாகிறது, பரஸ்பரம் இன்னும் சுலபமாக உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள முடிகிறது. திருமணமான பல ஆண்கள் வீட்டில் இருந்து தப்பிப்பது பற்றி சதா கவலைப்படுவது தன்னால் முற்றிலும் புரிந்து கொள்ள முடியாத, சமாளிக்க சிரமமான ஒரு மாறுபட்ட பிராணியை வீட்டில் தொடர்ந்து எதிர்கொள்வதில் உள்ள நெருக்கடி காரணமாகத் தான். ஆண்கள் டாஸ்மாக்கில் அடைக்கலம் தேடினால் பெண்கள் வேலையிடங்களை நாடி சென்று தப்பிக்கிறார்கள்.
ஆண்களுக்கு ஆண்கள் மீது வரும் வெறுப்புக்கு பெண் விருப்பம் சார்ந்த போட்டி உணர்வு தான் முதல் காரணம். அடுத்தது அதிகாரமும், படிநிலைப் போட்டியும். யார் யாருக்கு அடங்கிப் போவது என ஒரு புரிந்துணர்வு வந்ததும் ஆண்கள் கூட்டத்தில் இயல்பாகவே ஒரு அமைதி வந்து விடும். விடுதலைப்புலிகள் போன்ற இயக்கத்தில் திருமணமும், காதலும் ஆரம்பத்தில் தடைசெய்யப்பட்டதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் பெண்கள் மட்டுமே இருக்கும் வேலையிடங்களில் அல்லது அமைப்புகளில் மிக எளிதாக மனஸ்தாபங்களும், வெறுப்பும், கோபமும் மேலிடுகின்றன. பெண்களோடு சேர்ந்து வேலை செய்ய முடியாது என பெண்களே வெளிப்படையாக ஒப்புக் கொள்வார்கள். இதற்கு முக்கிய காரணம் பெண்கள் மற்றொரு பெண்ணை பாலுறவுக்கான போட்டியாக ஆழ்மனதில் கருதுவது தான். அல்லது ஒரு பெண் தான் எங்கு வேலை செய்தாலும் அதை தன் குடும்பத்தின் நீட்சியாக பார்க்கிறாள். ஒரு அலுவலகத்தில் பெண் மேலாளராக இருந்தால் அதை ஒரு கணவனில்லாத குடும்பமாக கருதி மிகுந்த அதிகாரமும் கட்டுப்பாடும் செலுத்தி நிர்வகிக்க முயல்கிறாள். சதா பதற்றம் மிக்கவளாக இருக்கிறாள். பெண் விடுதலை என்றால் ஆணிடம் இருந்து விடுபடுவதல்ல; குடும்பத்தில் இருந்து தப்பிப்பது. இந்த அர்த்தத்தில் நன்றாக படித்த, ஆணை சார்ந்திருக்காத பெண் கூட மனதளவில் ஒரு குடும்பப் பெண்ணாகவே எங்கு போனாலும் இருப்பாள்.
சரி ஆண்கள் இணைந்து சுலபமாக பணியாற்றுவது போல் ஏன் பெண்களுக்கு இயலுவது இல்லை? இதற்கு பொதுவாக சொல்லப்படும் காரணம் வரலாறு நெடுக ஆண்கள் வெளிவேலைகளில் குழுவாக செயல்பட்டும் பெண்கள் குடும்பத்துக்குள் மட்டும் இயங்கியும் வந்திருக்கிறார்கள், பழகி விட்டது என்பது. ஆனால் இது முழுக்க உண்மை அல்ல. இணைந்து சுமூகமாக மகிழ்ச்சியாக செயல்படும் பெண்களையும் பார்க்கிறோம். எப்படி செக்ஸ் உணர்வு ஒரு குடும்ப பொறுப்பாக பரிணமித்து பெண்களிடம் பொறாமையையும் வெறுப்பையும் தூண்டுகிறதோ, இதே செக்ஸ் உணர்வு அவர்களை குழுவாக இனிது இயங்கவும் உதவக் கூடும். ஆனால் சகபாலினத்தோர் மீதானதாக அப்போது அது இருக்கக் கூடும்.
மிகச்சிறந்த, நெருக்கமான நண்பர்களிடம் ஒரு பண்பை பார்க்கலாம். ஒருவர் சற்று அடங்கி, அமைதியாக இருப்பார்; இன்னொருவர் ஆதிக்கம் செலுத்தும், ஆவேசமானவராக இருப்பார். பொதுவாக இந்த வேதியல் மிக நுணுக்கமாக கண்ணுக்கு தெரியாத படி செயல்படும். இருவரும் ஆண்மை மிக்கவராக அல்லது பெண்மை அதிகமானவளாக தம்மை காட்டிக் கொள்வர். ஆனால் சிற்சில சூழ்நிலைகளில் பரஸ்பரம் அடங்கியும் ஏற்றும் நடந்து கொள்வர் – இந்த உறவில் தராசு எப்போதும் ஒரு பக்கம் சாய்ந்தும் உயர்ந்துமே இருக்கும். சிறந்த தோழிகளில் ஒருவர் ஆண்மை மிக்கவராகவும் ஒருவர் பெண்மை மிக்கவராகவும் இருப்பார். இரண்டு பெண்மை மிக்க பெண்களாலோ அல்லது ஆண்மை மிக்க ஆண்களாலோ நல்ல நண்பர்களாக இருப்பது மிக மிக சிரமம்.
பொதுவாக இன்று நிர்வாகவியலிலும் உளவியலும் வலுவாக உருவாகி வருகிற ஒரு கருத்து பெண்களால் நல்ல மேலாளர்களாக இருக்க முடியாது, அவர்கள் தமக்கு கீழுள்ள ஆண்களை கடும் நெருக்கடிக்கும், வதைக்கும் உள்ளாக்குகிறார்கள் என்பது. ஆனால் ஒரு ஆண்மை மிகுந்த, ஆண்கள் மத்தியில் மட்டுமே தம்மை சகஜமாக உணரும் பெண்ணால் (tomboy) பெண்மை மிகுந்த, உள்ளூர ஆண்கள் பால் விருப்பமும், அச்சமும் கொண்ட சம்பிரதாய பெண்ணை விட நல்ல மேலாளராக முடியும்.
இங்கு இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. ஒன்று, செக்ஸை நாம் உடலுறவு மற்றும் சந்ததி உருவாக்கம் சம்மந்தப்பட்ட ஒன்றாக மட்டும் பார்க்கக் கூடாது. இரண்டு, ஓரின விழைவுக்கு இன்றைய வேலையிடங்களில் ஒரு முக்கியத்துவம் உள்ளது. சம்பிரதாயமான பெண்களை விட லெஸ்பியன் உணர்வு கொண்ட பெண்கள் இன்னும் மகிழ்ச்சியாக இணைந்து பணியாற்ற முடியும். இந்த உணர்வு நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கலாம்.
நாம் பாலியல் ரீதியாக விரும்புகிற அல்லது ஈர்க்கப்படுகிற அத்தனை பேரையும் படுக்கைக்கு அழைக்க நாம் விரும்புவதில்லை. ஒருவருடன் உடலுறவு கொண்டு பந்தத்தை உருவாக்குவது ஒரு இன்ஷுரன்ஸ் பாலிஸி எடுப்பதற்கு சமம். அது கணிசமான பணத்தை, ஆற்றலை, நேரத்தை கோருகிற ஒன்று. ஆனால் நாம் படுக்கைக்கு அழைக்காத அதேவேளை ஈர்க்கப்படுகிற நபர்களுடன் இருப்பதும் இணைந்து வேலை செய்வதும் மன அமைதியும் மகிழ்ச்சியும் தருவதாக இருக்கிறது. ஆக செக்ஸ் என்பது 90% உடலுறவுக்கான அல்ல; இன்று செக்ஸ் சார்ந்த உடலுறவற்ற உறவுகள் நம் சமூக உறவாடலில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றுகின்றன.
அதாவது உடலுறவு ஜலேபி என்று நினைத்தால் நீங்கள் அதை மிகக் குறைவாக தான் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் நாம் நாள் முழுக்க சாப்பிடும் உணவு மற்றும் மருந்துகளில் இனிப்பு வெவ்வேறு வடிவங்களில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. செக்ஸ் விழைவு நம் மொழியில், உரையாடல்களில், மீடியா பிம்பங்களில், இறைநாட்டத்தில், குழந்தை மீதான பிரியத்தில், கட்டிட அமைப்பில், வன்முறையில் எங்கும் பரவலாக நுணுக்கமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நேரடியான ஆண் பெண் உடல் வழியாக அன்றி இவ்வாறு தான் செக்ஸ் இனிப்பை நுகர விரும்புகிறோம்.
மனித குல வளர்ச்சி வெற்றிகரமான கூட்டு செயல்பாடுகளால் ஏற்பட்டது. நம் வகுப்புகளில் இருந்து வேலை செய்யும் இடங்கள் வரை மனிதர்களோடு எப்படி சரியாக இணைந்து செயல்படுவது என்பது குறித்தே மீள மீள அக்கறையாக சொல்லித் தருகிறார்கள். கூட்டுசெயல்பாட்டின் எஞ்ஜின் ஆயில் செக்ஸ் தான். ஆண்கள் இத்தனைக் காலமாய் விவசாயத்தி, வணிகத்தில், போர்களில், கட்டுமான பணிகளில் கூட்டாக இயங்கி வந்திருக்கிறார்கள். இதை சாத்தியமாக்கியது ஆண்களுக்கு இடையிலான ஓரினப் பாலுணர்வு தான் என ஒரு பரிணாமவியல் கோட்பாடு உணடு.
உறவுகளைத் தீர்மானிப்பதில் உடலுக்கு ஒரு முக்கிய பங்குள்ளது. ஏன் சிலபேரை பார்த்ததும் பிடிக்கிறது, சிலரை கண்டதும் வெறுக்கிறோம்? அவர்களின் முகத்தோற்றம், பாவனை, உடல்மொழி, நிறம், குரல் இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக தனியாகவோ ஒரு ஒவ்வாமையை நமக்குள் ஏற்படுத்துகின்றன. அலுவலகத்தில் நமக்கு பல விநோதமான எதிரிகள் தோன்றுவது இதனால் தான். மனம் தான் உறவை தீர்மானிக்கிறது என்றால் நாம் கிட்டத்தட்ட யாரையும் வெறுக்க மாட்டோம். மனதளவில் நாம் கிட்டத்தட்ட ஒன்று தான். மேலும் சுவாரஸ்யமாக உடலளவில் பிடித்துப் போகிற ஒருவரைத் தான் அணுகி மனதளவில் அறிய முயல்கிறோம். இப்படித் தான் நட்புகள் ஆரம்பிக்கின்றன. உதாரணமாக, மனதளவில் பெண்மை ஒத்த நளினமமும் மென்மையும் கொண்ட ஒரு ஆணுக்கு முற்றிலும் மாறுபட்ட முறுக்கான முரட்டுத்தனமான ஒரு ஆணைக் கண்டதும் நல்ல அபிப்ராயம் ஏற்படலாம். அவருக்கு தன்னுடைய இயல்பான பெண்மை மீது கூச்சமும் வெறுப்பும் உண்டென்றால் தன்னை ஒத்த பெண்மையான ஆணைக் கண்டால் பரம விரோதியாக பாவிக்கவோ விலகிச் செல்லவோ நேரலாம். இதன் பொருள் நெருக்கமான நண்பர்கள் ஹோமோ என்றல்ல. இவர்களின் உறவாடலில் ஓரின விழைவின் ஒரு சிறு கூறு உள்ளது என்பதே என் கருத்து.
பாலியல் இயங்கியல் முரண்பாட்டை அடிப்படையாக கொண்டது. இரு ஆண்கள் ஈர்க்கப்படும் போதும் அவர்கள் தம்மிடையே ஆண்மையும் பெண்மையும் வெவ்வேறு அளவுகளில் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சரி, இது உண்மையென்றால் பெண்கள் இடையே அவஸ்தைப்படும் ஆணும், ஆண்கள் இடையே அசௌகரியமாக உணரும் பெண்கள் ஏன் இருக்கிறார்கள்? இது தான் இங்கு மிக முக்கியமான கேள்வி. ஆண் பெண் உறவாடலில் உள்ள சிக்கல் குழந்தைப் பேறு தான். குழந்தைப்பேறு உடமை, அதிகாரம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. உறவை இறுக்கமானதாக சட்டதிட்டங்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக ஆக்குகிறது. இரு காதலர்கள் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பதை அனுமதிக்கும் நாம் கணவன் மனைவி ஒரே இடத்தில் வேலை பார்க்கையில் அதை எளிதில் ஏற்பதில்லை. காரணம் அவர்கள் நிர்வாகம் எனும் அமைப்புக்குள் இன்னொரு தனி அமைப்பாக இயங்குகிறார்கள். ஆனால் ஓரினச் சேர்க்கையின் முக்கிய குறையாக கருதப்படுகிற குழந்தையின்மையே இங்கு ஒரு சுதந்திரத்தை, இறுக்கமின்மையை, லகுத்தன்மையை கொண்டு வருகிறது. அதனாலேயே தாம்பத்ய பந்தம் போல் சிக்கலானதாக நட்பு இருப்பதில்லை. நண்பர்களிடையே அடிக்கடி சச்சரவுகள், வன்முறை, கொலை இதெல்லாம் அன்பின் பெயரில் நடப்பதில்லை. ஆனால் காதலுக்கு இணையான தீவிரத்தன்மையும் அணுக்கமும் நட்பிலும் உருவாகிறது – இதற்குக் காரணமும் கண்ணுக்கு தெரியான ஓரின விழைவின் வேதியல் தான்.
இங்கு தான் இரண்டாவது முடிவுக்கு வரலாம். உறவாடலை குடும்பம் சார்ந்ததாக மட்டும் யோசிக்கும் பாணியை நாம் கைவிட வேண்டிய வேளை வந்து விட்டது. இன்று வேலை மற்றும் வேறு நாட்டங்களுக்காக எண்ணற்ற பரிச்சயமற்ற பேர்களுடன் உரையாடவும், சேர்ந்து இயங்கவுமான சாத்தியங்கள் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகளால் ஏற்பட்டுள்ளன. இன்றைய யுகத்தில் கண்ணுக்கு தெரியாத அந்நியர்களுடனான உரையாடலும், பரஸ்பர புரிந்துணர்வும் சமூக வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன. மென் திறன் பயிற்சி என்ற பெயரில் குழந்தைகளுக்கு கல்லூரிகளிலும், அணி செயல்பாடு என்ற பெயரில் நிறுவனங்களிலும் இதற்குத் தான் பயிற்சி அளித்து அழுத்தம் கொடுக்கிறார்கள். ஒரு காலத்தில் குடும்ப உறவு சார்ந்த்த சாதிய பந்தங்கள் வழியாகத் தான் நாம் வேலைகளை அடைந்தோம், வணிகம் செய்தோம். இன்று உலகம் விரிந்து வரும் நிலையில் உறவுகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிமாணம் கிடைத்துள்ளது. தினசரி புது நபர்களை சந்திப்பதும், வலைதொடர்புகளை உருவாக்குவதும் வாழ்வில் நம் வெற்றியை தீர்மானிக்கிற காரணியாக இருக்கிறது.
சமூக வளர்ச்சி என்பது குடும்பம், மகப்பேறு போன்ற சிறுவட்டங்களை தாண்டி சென்று விட்டது. இதற்கு மற்றொரு உதாரணம் இன்று உலகு முழுக்க கணிசமாக குறைந்து வரும் உடலுறவும், மகப்பேறும். கடந்த வருடத்தில் மட்டும் இந்தியாவில் மலட்டுத்தன்மையின் அளவு 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய தம்பதியினரிடையே உடலுறவில் ஆர்வம் இழப்பு குறித்த இந்தியா டுடே கட்டுரையில் ஒரு சுவாரஸ்யமான அவதானிப்பு வருகிறது. உடலுறவு இன்மைக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கிய தொடர்பு இருப்பதாக கட்டுரை கூறுகிறது. மனிதர்கள் சமூக பொருளாதார ரீதியாக பெரும் முன்னேற்றங்கள் அடைகையில் செக்ஸை மகப்பேறுக்கான ஒரு சம்பிரதாயமாக எண்ணாமல் ஒரு பொழுதுபோக்கு கேளிக்கையாக மாற்ற விழைகிறார்கள். இந்த செக்ஸ் கேளிக்கையை படுக்கையறை வழியாக அன்றி வேறு பல கலாச்சார பொழுதுபோக்குகள், விருப்ப நிறைவேற்றல்கள் வழி அடையவே விரும்புகிறார்கள். உதாரணமாக ஒரு ஸ்போர்ட்ஸ் கார் வாங்குவது மிக அழகான பெண்ணைப் புணர்வதை விட கிளர்ச்சியானதாக கிளுகிளுப்பானதாக இன்று பார்க்கப்படுகிறது.
இன்று இந்தியாவில் செக்ஸ் உறவு கொள்ளாத தம்பதியினர் அதிகமாகி வருகிற தகவலும் நமக்குத் தெரியும். பிரம்மச்சரிய தம்பதியினர் என இவர்களுக்கு என்று ஒரு பெயரே உள்ளது. இன்றைய தம்பதியினர் ஒன்று செக்ஸ் வைத்துக் கொள்வதில்லை அல்லது குழந்தைப்பேறை வெகுவாக தள்ளிப் போடுகிறார்கள். காரணங்கள் நேரமின்மை, களைப்பு, ஆர்வமிழப்பு, தகவல் தொடர்பின் பெருக்கம் என பலவாறு கருதப்பட்டாலும் இவை வெறும் சப்பைக்கட்டு தான். முக்கியமான காரணம் இரண்டும் அவசியம் அல்ல என்கிற எண்ணம் சமகாலத்தில் வலுப்பெற்று வருகிறது.
கணிசமான ஜோடிகள் திருமணம் செய்து பெயருக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே அன்றி உடலுறவு, சந்ததி நீட்டிப்பு என்கிற நோக்கத்தில் இருந்து குடும்ப அமைப்பு வெகுவாக விலகி போய்க் கொண்டிருக்கிறது. குடும்ப அமைப்பு அடிப்படையில் குறுகுதலை வேண்டுவது. ஆசைகளை, விருப்பங்களை, செக்ஸை குறுக்கி ஆற்றலை மொத்தமாக உறவுகளின் பேரில் செலவழிப்பது. ஆனால் இன்றைய காலகட்டம் நம்மை ஒரு சப்பாத்தியை பரத்துவது போல முழுக்க விரித்துக் கொள்ளக் கேட்கிறது. வேலை செய்வது, தொடர்ச்சியாக பயணிப்பது, குலம் கோத்திரம் கடந்த உறவுகளை உருவாக்குவது, பணம் சம்பாதிப்பது, பொருட்களை வாங்கி குவிப்பது, அதிகாரத்தை அடைவது, அது குறித்த கனவுகளில் மூழ்குவது, தீரத்தீர ஆசைகளை தேடித்தேடி நிறைவேற்றுவது, கட்டற்ற இன்பத்தை தேடுவது என இன்றைய காலத்தின் போக்கு குடும்பம் எனும் குவிமையத்தில் இருந்து சிதறிப் போவது. காலத்தின் திசையை நாம் மாற்ற முடியாது. எதிர்கால மனிதன் செக்ஸ் அற்றவனாகக் கூட இருக்கலாம். அவனுக்கு ஓரின உறவுகளே அதிக சௌகரியமாகக் கூட இருக்கலாம். இந்த முடிவை நோக்கிய பண்பாட்டு அசைவுகளை தாம் இப்போது கண்டு வருகிறோம். இதைப் புரிந்து கொள்ளாதவர்களே இயற்கையான செக்ஸ் குறித்தும், குடும்பத்தின் பவித்திர தன்மை பற்றியும் ஓரின சேர்க்கைக்கு எதிராக ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உடலுறவும், குழந்தைப்பேறும் குறைவதற்கான காரணம் மனிதனின் அக்கறை இதைக் கடந்து போய் விட்டது என்பதே. இது ஒரு சமூக பொருளாதாரம் சார்ந்த பண்பாட்டு சுழல். இந்த சுழலில் சிக்கி புலன்வழி உலகை மேலும் மேலும் அறிவதற்கான விருப்பம் இன்றைய மனிதனுக்கு மிக அதிகமாகி உள்ளது. செக்ஸ் இன்றியே குழந்தைப்பேறு இன்று சாத்தியமாகி பரவலாகி வருவதும் இன்னொரு காரணம். ஒரு பண்பாட்டுப் போக்கு மனித குலத்தின் உள்ளார்ந்த இச்சை, சமூக பொருளாத வீச்சை அடிப்படையாக கொண்டது. ஓரின சேர்க்கையை எதிர்க்கும் வலதுசாரிகள் இதே கோளாறான அணுகுமுறையைத் தான் நவீன முன்னேற்றங்கள் மற்றும் விழுமியங்களுக்கு எதிராக வைக்கிறார்கள். நாம் காலத்துக்குள் இருக்கிறோம், காலத்தில் இருந்தபடியே காலத்தை மாற்ற நினைப்பது காருக்குள் இருந்தபடியே காரைத் தள்ளுவதைப் போன்றது என அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ராமர் ஆட்சியை, காமராஜர் ஆட்சியை வேண்டுவோர் தான் ஓரினச் சேர்க்கையையும் எதிர்க்கிறார்கள்.
மனிதர்கள் பண்படாத வனவாசிகளாக இருந்த காலத்தில் கூட்டாக ஆண்கள் வேட்டையாடவும் போரிடவும் ஒரு இணைப்பு பாலமாக ஓரின ஈடுபாடு இருந்திருக்கலாம். ஆனால் பின்னர் மனிதர்களை எந்திரம் போல் வேலை வாங்கி உபரி மதிப்பு பணமாக சொத்தாக மாற்றும் இறுக்கமான நிலப்பிரபுத்துவ அமைப்பு உருவானதும் உடல் சொத்தின் நீட்சியாக பார்க்கும் போக்கு உருவானது. செக்ஸ் அளக்கப்பட்டு கராறாக பரிந்துரைக்கப்பட்டது. படிநிலை தக்க வைக்கும் பொருட்டு குடும்பத்துக்கு மிகுதியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதனாலேயே செக்ஸில் ஆண்-பெண்ணுக்கு இடையிலானது மட்டுமே சரியானது, உத்தமமானது என வலியுறுத்தப்பட்டது. சுயபுணர்வு, வயதில் குறைந்தவர்கள், மூத்தவர்கள், ஒருபாலினத்தவர் மீதான இச்சைகள் ஒடுக்கப்பட்டன. இன்று மீண்டும் எதேச்சையாக வரலாற்றில் ஒரு உடைப்பு நேர்ந்திருக்கிறது. உலகுதழுவிய உரையாடலை நோக்கியும், இனம் கடந்த பண்பாட்டு பகிர்தல்கள் நோக்கியும் உலகம் விரையும் இவ்வேளையில் குழந்தைப்பேறு கடந்த ஒரு செக்ஸ் உறவாடலுக்கான தேவை கனிந்துள்ளது.
இருபால் உறவு எப்படி கடந்த காலத்துக்கான மார்க்கமோ ஓரினச்சேர்க்கை இக்காலத்து உறவாடலுக்கு உதவுகிற ஒன்று என நாம் புரிந்து கொள்ளும் அவசியமும் எழுந்துள்ளது. நாம் இன்னொரு காலத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். அதை உணராதவர்கள் தாம் இயற்கைக்கு மாறானவர்கள்.
நன்றி: உயிர்மை, ஜனவரி 2014
Labels:
உளவியல்
Tuesday, 23 October 2012
பெண் உயரதிகாரிகளும் வீட்டு மனைவி மனப்பான்மையும்
கடந்த வாரம் ஒரு கல்லூரியின் துறைத்தலைவர் வேலைக்கு ஆண் பேராசிரியர்களை குறிப்பாக தேடிக் கொண்டிருந்தார். ஏற்கனவே ஒரு பெண் விண்ணப்பித்திருப்பதாகவும், ஆனால் அவரை வேலைக்கு எடுக்க தயக்கமாக உள்ளதாகவும் கூறினார். காரணம் விசாரித்தால் பெண்கள் ரொம்ப அரசியல் பண்ணுகிறார்கள் என்று விநோதமான காரணம் ஒன்றை கூறினார். பின்னர் நான் வேலைக்கு சேர்ந்த இடத்திலும் இன்னும் சில ஆண் பேராசிரியர்களை குறிப்பாய் தேடுவதாகவும் சொல்லி என்னை பரிந்துரைக்க கேட்டார்கள். இது இப்போது ஒரு பாணியாக உருவெடுக்கிறதா? பெண்கள் வேலையிடங்களில் அதிகம் தொல்லை தருகிறார்களா?
பெண்களிடத்து ஒற்றுமை இல்லை என்பதை கவனித்திருக்கிறேன். அதாவது பத்து ஆண்கள் சகஜமாக சேர்ந்து பணியாற்றுவார்கள். கருத்துவேறுபாடுகள், பரஸ்பர வெறுப்பு இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் பெண்கள் பத்தை மூன்று நான்கு பிரிவுகளாக்கி பரஸ்பரம் ஜென்மப் பகை பாராட்டுவார்கள். இதற்கு உயிரியல் பின்னணி ஒன்று உள்ளதை அறிவோம். அதைப் பற்றி பிறகு பேசலாம்.
பொதுவாக அமர்ந்து செய்யும் மேஜை வேலைகளுக்கு பெண்களை அமர்த்தவே நிர்வாகங்கள் விரும்புகின்றன. பெண்கள் பொறுமையானவர்கள், கனிவானவர்கள் என்கிற பொதுப்புத்தி காரணமாய் கல்வித்துறையிலும் அவர்கள் கணிசமாக அமர்த்தப்படுகிறார்கள். நாம் இங்கு இரண்டு கேள்விகளை கேட்க வேண்டும்.
ஒன்று பெண்கள் இருக்கும் இடங்களில் சண்டை சச்சரவுகள் எளிதில் மூள்கின்றன. பொதுவாக பெண் உயரதிகாரிகள் கொடுங்கோலர்களாக இருப்பதாக உலகம் முழுக்க இன்று புகார் எழுகிறது. இதைப் பெண்களே ஏற்றுக் கொள்கிறார்கள். பெண்கள் பெண் மேலதிகாரிகளிடத்து விட ஆண்களின் கீழ் தான் வேலை பார்க்க விரும்புகிறார்கள். பெண் உயரதிகாரிகள் பெண் ஊழியர்களை கீழ்த்தரமாய் நடத்துவதாய், தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாய், அவர்களுக்கு பதவியுயர்வு மறுப்பதாய் சர்வதேச அளவில் செய்யப்பட்ட ஆயுவுகள் கூறுகின்றன. இதற்கும் பெண்கள் பொதுவாக குழுக்களுக்குள் பரஸ்பரம் பகைமை பாராட்டுபவர்களாய் இருப்பதற்கும் தொடர்பு உண்டா? இந்த கேள்விகளை பரிசீலிப்போம்.
பெண்கள் அரசியல் தலைமைக்கு வரும் போது எளிதில் சகிப்புத்தன்மை அற்றவர்களாக, பண்பற்றவர்களாக மாறிப் போவதற்கு நம் நாட்டிலேயே ஜெயலலிதா, மம்தா பேனர்ஜி, மாயாவதி என உதாரணங்கள் பார்க்கிறோம். பெண் மேலதிகாரிகளின் இந்த மனப்பான்மைக்கு ஆய்வாளர்கள் ராணித்தேனீ நோய்க்குறி (queen bee syndrome) என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது இன்றும் வேலையிடங்களில் ஆண்களின் ஆதிக்கம் தான் அதிகம். பெண்கள் உயர்பதவிகளுக்கு வருவதற்கும் ஆண்களை சார்ந்திருக்க வேண்டி உள்ளது. அதனால் ஒரு பெண் உயரதிகாரி நிலைமைக்கு வருவதற்கு கடுமையாக போராட அதிக திறமை படைத்தவராக இருக்க வேண்டும். மேல் பதவியை எட்டியதும் அவர்களுக்கு பாதுகாப்பின்மை மனநிலை ஏற்படுகிறது. கீழிருக்கும் பிற பெண்களை அவர்கள் போட்டியாளர்களாக நினைக்கிறார்கள். அதனால் அவர்களை தொடர்ந்து மட்டம் தட்டி நெருக்கடி அளித்து வளர்ந்து விடாதபடி பார்த்துக் கொள்கிறார்கள். கேலப் வாக்களிப்பு ஆய்வின் படி 32% பெண்கள் ஆண் மேலதிகாரியின் கீழ் வேலை பார்க்கத் தான் விரும்புகிறார்கள். பெண் மேலதிகாரிகளை ஏற்கும் பெண்கள் 23% தான். ஒரு தேனீக் கூட்டுக்குள் ஒரே ஒரு ராணித்தேனீயும் அதற்குக் கீழ் எண்ணற்ற அடிமை ஆண் தேனீக்களும் இருப்பது போல் தான் இருக்க வேண்டும் என பெண் உயரதிகாரிகள் நினைக்கிறார்கள். இது தான் சமூக உளவியலாளர்களின் கணிப்பு.
ஆனால் இந்த கணிப்பு பிரச்சனையின் ஒரு பக்கத்தை மட்டுமே பரிசீலிக்கிறது. போட்டியும் பாதுகாப்பின்மையும் மனிதர்களை கசப்பானவர்களாக வன்மமானவர்களாக மாற்றும் என்பது உண்மை தான். ஆனால் பெண்ணதிகாரிகளின் சர்வாதிகார மனநிலைக்கு இது மட்டும் காரணம் அல்ல. முக்கியமாக இந்த கணிப்பு மேலோட்டமாக இருக்கிறது. பிரச்சனை உண்மையில் ஆழமானது.
பொதுவாக தமக்கு கீழுள்ள பெண்களை ஊக்குவித்து மேலே கொண்டு வரும் பெண் உயரதிகாரிகளை பார்த்துள்ளேன். ஒரு குழுவை மிகத்திறமையாக வழிநடத்தும் பண்பாக பெண் உயரதிகாரிகளும் சமமாக உள்ளார்கள். ஆக நாம் பெண் உயரதிகாரிகளின் பிரச்சனையை பொதுமைப்படுத்தல் ஆகாது. சில பெண்கள் முழுக்க சகிப்புத் தன்மை அற்றவர்களாக வன்மம் மிக்கவர்களாக ஆகி தனக்கு கீழுள்ளவர்களை பழிவாங்கும் போக்கில் வேட்டையாடுகிறார்கள். இது பல அலுவலகங்களில் நடக்கிறது. இன்னொரு புறம் பல பெண்கள் தமது சகிப்பின்மை, பதற்றத்தை கடந்து சிறந்த உயரதிகாரிகளாக் உருவெடுக்கிறார்கள். இதுவும் நடக்கிறது தான். முதலில் மோசமான உயரதிகாரிகளின் உளவியலை பார்ப்போம். இறுதியில் நல்ல பெண் உயரதிகாரிகளின் மன-அமைப்பை அலசுவோம்.
சகிப்பின்மை, பதற்றம், தொடர்ந்த வன்மம் ஆகியவை பொதுவான பெண் பண்புகளாக உள்ளன. இது உண்மையில் பெண்கள் பற்றிய பொதுபிம்பத்துக்கு மாறாக உள்ளது. பெண் பொறுமையின் உறைவிடம், அன்பின் உருவானவள் என்பதெல்லாம் ஆண்களின் பகற்கனவு மட்டுமே. பெண்கள் அவர்களுக்கான மனச்சிக்கல்களை கொண்டவர்கள். இவை தான் அவர்களின் வேலையிடத்து நடவடிக்கைகளுக்கு அடிப்படை காரணம். சில உதாரணங்களைப் பார்ப்போம்.
பெண்கள் அழகான பெண்களை வெறுக்கிறார்கள். ஆண்கள் அழகான ஆண்களை வெறுப்பது குறைவு. அதை விட பல மடங்கு அதிகமாய். ஆண்களுக்கு பொதுவாய் பிற ஆண்களின் அந்தஸ்தும் அதிகாரமும் தான் பொறாமையை வயிற்றெரிச்சலை கிளப்புகிறது. ஆனால் பெண்களுக்கு உடல் தோற்றம் பற்றின பிரக்ஞை அதிகம். அவர்களை உடல் அடையாளம் சஞ்சலப்படுத்துகிறது. என் மனைவியின் அலுவலகத்தில் ஒரு பெண் கவர்ச்சியாக ஆடை அணிந்து வரும் ஒரே காரணத்துக்காக சக பெண் ஊழியர்களை அவளை தனிமைப்படுத்தி பகைமை பாராட்டி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்து வேலையை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு கொண்டு போனார்கள். அந்த பெண்ணுக்கு ஒரு கட்டத்தில் மன-அழுத்தம் முற்றி அலுவலகத்திலெயே மயக்கம் போட்டு விழுந்து விட்டாள். பள்ளிகளில் கல்லூரிகளில் காதலை அதிக ஆவேசத்துடன் எதிர்ப்பவர்கள் பெண் ஆசிரியர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் கண்கள் சதா எந்த ஆண் விழிகள் எந்த பெண்ணுடலை தீண்டுகிறது என்பதை கவனித்தபடியே உள்ளன. பெண்கள் நவீனமாய் ஆடையணிவதை பெண் ஆசிரியர்கள் உக்கிரமாய் எதிர்க்கிறார்கள். இதற்குக் காரணம் சக பெண்ணுடல் மீதான (ஆணின் பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான) பெண்ணின் அக்கறையா அல்லது பாலியல் பொறாமையா என்கிற விவாதத்துக்குள் இப்போது செல்ல வேண்டாம். பெண்கள் பாலியல் நெருக்கடி மற்றும் பதற்றம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். பாலியலை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உடல்களை அஞ்சுகிறார்கள்.
சுதந்திரமான பாலியலை ஆண்களும், குறிப்பாக வலதுசாரி ஆண்கள், எதிர்க்கிறார்களே, அது ஏன் என்ற கேள்வியும் வருகிறது. அதற்குக் காரணம் அவர்களுக்குள் உள்ள பெண்மை தான். இந்த பெண்மையை நாம் வேறு பெயரால் அழைக்க வேண்டும்.
பெண்களின் இந்த ஒழுக்கப் போலீஸ் மனநிலைக்கும் குடும்ப அமைப்புக்கும் ஒரு தொடர்புள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக பெண்கள் குடும்பத்தை நிர்வகிப்பவர்களாக இருந்து வந்துள்ளதால் குடும்ப கட்டமைப்பின் பாதுகாப்பு அவர்களுக்கு அதிமுக்கியமாய் இருந்துள்ளது. வேட்டையாடியும் வேலை செய்தும் குடும்பத்துக்கு பொருள் கொண்டு வரும் ஆணை அவர்கள் தக்க வைத்தாக வேண்டும். பிற பெண்களை அவர்கள் போட்டியாளர்களாக நினைப்பது இங்கிருந்து துவங்கி இருக்க வேண்டும். அடுத்து நவீன காலத்தில் பெண்கள் வேலைக்கு வரும் போது அவர்கள் வேலை இடத்தை ஒரு குடும்பமாக பாவிக்கிறார்கள். அங்கு அவர்கள் முழுமையான அதிகாரத்தை ஸ்தாபிக்க, கட்டுபாட்டை நிறுவ முயல்கிறார்கள். பிற பெண் போட்டியாளர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிற தூண்டுதல் இயல்பாகவே ஏற்படுகிறது.
பொதுவாக பெண்களை வேலைக்கு வைப்பதில் உள்ள அனுகூலம் அவர்கள் எதையும் கவனத்துடன் அக்கறையும் சின்ன சின்ன தகவல்களில் ஆர்வம் காட்டி செய்வார்கள் என்பது. சுருக்கமாக அவர்கள் ஆண்களை விட பொறுப்பானவர்கள். இது உண்மையே. ஆனால் பிரச்சனை பெண்கள் இந்த சின்ன விசயங்களின் மீதான பொறுப்புணர்வை பல சமயங்களில் மிகைப்படுத்தி பதற்றமாகிறார்கள் என்பது. குழந்தையின் சட்டைக்காலரில் உள்ள அழுக்கைப் பற்றி இடிந்தகரை அணு உலை அளவுக்கு கவலைப்படும் பெண்களை பார்த்திருக்கிறேன். ஒழுங்கில் சின்னதாய் குலைவு ஏற்பட்டாலே பெண்கள் மிகவும் பதற்றமாவார்கள். அனைத்தும் மிக ஒழுங்காக கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இதை ஒரு பள்ளிக்கூட ஆசிரிய மனநிலை எனலாம்.
பொதுவாக பள்ளிக்கூட ஆசிரியர்கள் மாணவர்களை முழுக்க கட்டுப்படுத்தலாம் எனும் கற்பனையோடு இருப்பார்கள். குழந்தை என்பது அவர்களுக்கு ஒரு இயந்திரம். அதை தொடர்ந்து முறுக்கேற்றி சரி பார்த்துக் கொண்டே இருப்பார்கள். பல ஆசிரியர்கள் வகுப்புகளில் கட்டுபாட்டை இழந்து கத்துவது, மாணவர்களை பெருங்குற்றம் இழைத்தது போன்று தண்டிப்பது எதற்கென்று பார்த்தோமானால் ஒரு சின்ன விசயமாக இருக்கும். பெண்கள் மேலதிகாரியனதும் இந்த “பள்ளி ஆசிரியர் மனநிலையை” அலுவலகத்துக்கு கொண்டு வருவார்கள். பல சமயங்களில் ஒரு அலுலகத்தில் பீதிச் சூழலை ஏதாவது அற்பக் காரணத்துக்காக ஏற்படுத்துவார்கள். நிலநடுக்கம் வந்தது போல் ஊழியர்கள் கையை பிசைந்தபடி நிற்பார்கள். சர்வாதிகார பெண் மேலதிகாரிகள் இது போன்ற பீதிச் சூழல்களில் திளைக்கக் கூடியவர்கள். அவர்கள் தமக்கு மேல் கூரை பற்றி எரியும் போது உள்ளூர அமைதியை உணர்கிறார்கள்.
இப்படியான பெண்கள் சின்ன சின்ன ஒழுக்கப்பிசகுகள் ஒரு வேலையின் பெரிய இலக்கை பாதிப்பதில்லை என்பதை உணர்வதில்லை. வேலையிடத்தில் தவறு நேர்வது இயல்புதான், தவறிழைத்தவரை ஒரு சட்டைக்காலரைப் போல போட்டு தேய் தேயென்று தேய்க்க வேண்டியதில்லை என்று புரிந்து கொள்வதில்லை. பல மாதிரியான மனிதர்கள் ஒரு வேலைக்குழுவில் இருப்பார்கள். அவர்கள் இயந்திரத்தனமாக துல்லியமாக இயங்க வைப்பது சாத்தியமல்ல. அவரவர் கோணலுடன் தனித்துவ பாணியுடன் வேலை பார்த்தாலும் இறுதியில் இலக்கை எப்படியும் எட்டி விட முடியும் என்ற உண்மையை ஏற்பதில்லை. மருமகள் சமையலை சதா குற்றம் கண்டுபிடிக்கும் மாமியார் போல பெண் உயரதிகாரிகள் நீதிவான் மனநிலையில் எப்போதும் இருக்கிறார்கள். வேலைக்காரி பெருக்கி விட்டுப் போன தரையை மீண்டும் ஒருமுறை பெருக்கி திருப்தி அடையும் வீட்டு மனைவி போல் அவர்கள் அனைத்து வேலைகளை தம்மால் மட்டுமே சரியாக செய்ய முடியும் என விடாப்பிடியாய் நம்புகிறார்கள். அற்பமான காரியங்களை மிகைப்படுத்தி அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆவேசம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பொதுவாக சுத்தம் செய்யும் பொருட்கள் பற்றிய விளம்பரங்கள் (தரை துடைக்கும் லோஷனில் இருந்து துணி துவைக்கும் பொடி வரை) ஏதோ பாக்டீரியாவால் குடும்பமே அழிந்துபடும் எனும் பீதியை பெண் வாடிக்கையாளரிடத்து உருவாக்குவதைப் பாருங்கள். பெண்கள் ஒரு அலுவலகத்தில் நுழைந்ததும் அங்குள்ள மாறுபட்ட ஊழியர்களை பாக்டீரியாக்களாக நினைக்கிறார்கள். அவர்கள் மனதில் ஒரு மூடி டார்மெக்ஸ் ஊற்றி அவர்களை அழித்து இடத்தை சுத்தமாக்கும் கற்பனை தோன்றுகிறது. பெண்களின் சர்வாதிகாரமும் சகிப்பின்மையும் வீட்டு மனைவியின் கட்டுப்பாட்டு வெறியில் இருந்து தோன்றுகிறது. இது ஒரு அடிப்படையான உளவியல்/உயிரியல் பிரச்சனை.
பெண்கள் உயரதிகாரிகளாக இருக்க தகுதியானவர்களா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. ஒரு ஊழியனாக நான் ஆண்களின் கீழ் வேலை பார்க்க விரும்புவேன் என்றாலும் நான் ஒரு நிறுவனம் நடத்தினால் நிர்வாகப் பொறுப்பை ஒரு பெண்ணை நம்பித் தான் ஒப்படைப்பேன். தொண்ணூறு சதவீதம் பெண்கள் கராறாக அக்கறையாக எந்த வேலையையும் செய்து முடிக்கக் கூடியவர்கள். ஆக இந்த பிரச்சனைக்கு தீர்வு உள்ளதா என யோசிக்க வேண்டி உள்ளது.
ஒரு கலாச்சார அளவில் பெண்கள் குடும்பப் பொறுப்புகளில் இருந்து மெல்ல மெல்ல விலகி சமூகப் பொறுப்புகளை ஏற்பவர்களாக மாறும் போது அவர்கள் மேற்சொன்ன பள்ளி ஆசிரியர் மனநிலையில் இருந்து விலகக் கூடும். நிர்வாகம் என்பது தனிமனிதர்களை அவர்கள் போக்கில் பணி செய்ய அனுமதித்து இலக்கை எட்டச் செய்யும் உத்தி என்பதை அவர்கள் புரிந்து கொள்ளக் கூடும். தமக்குப் தொழிலில் போட்டி பெண்கள் அல்ல ஆண்கள் தாம் எனும் முடிவுக்கு அவர்கள் வரக் கூடும். தோற்றத்தை விட அதிகாரமும் அந்தஸ்துமே முக்கியம், பாலியல் அச்சுறுத்தல் வெறும் கற்பிதம் என அவர்கள் உணரக் கூடும். நிஜமான பெண் விடுதலை என்றால் பெண்கள் ஆண்களிடம் இருந்து விடுபடுவதல்ல; பெண்கள் தம் மிகுதியான “பெண்மை” மனநிலையில் இருந்து கொஞ்சம் வெளியேறி கொஞ்சம் ஆண்மையை வரிப்பது தான். இங்கிருந்து நாம் ஒரு உளவியல் தீர்வுக்கு செல்வோம்.
பெண்மை என்பது மனநிலை மற்றும் பௌதீகமாக பெண்கள் சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல. “குடும்ப மனைவி மனப்பான்மை” பல ஆண்களிடம் இருப்பதை காண்கிறோம். சச்சின் அணித்தலைவராக இருந்த போது அப்படித் தான் இருந்தார். அவர் பதினோரு பேரின் வேலையையும் தன் பாணியில் தானே செய்ய நினைத்தார். செயற்கையான பதற்றத்தை உருவாக்கினார். தோனி அமைதியாக சற்று விலகல் மனநிலையுடன் அணியை சுலபமாக கட்டுப்படுத்துகிறார். அவரது நிர்வாகத்தின் சிறப்பு கீழிருப்போர் அவரது அதிகாரத்தின் கடுமையை உணர்வதில்லை என்பது. சச்சினிடம் பெண்மை மிகுதி. தோனியிடம் ஆண்மையும் பெண்மையும் சமநிலையில் இருக்கிறது. இந்த் சமநிலை குலையும் போது மனிதன் தன்னம்பிக்கையை அமைதியை இழக்கிறான், நெருக்கடிக்குள்ளாகி பலவீனமாகிறான். ஆண்கள் எந்தளவு தமக்குள் ஆண்மையை மிகுதியாக விடக் கூடாதோ பெண்களும் அதுபோல் பெண்மை அதிகமாக அனுமதிப்பது ஆகாது. அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் ஆண்களைப் போல் நடக்க முயல்கிறார்கள் என்பது பொய். அவர்கள் மிகுதியான பெண்மையுடன் இயங்குகிறார்கள், “பெண்மை” என்பது நாம் கற்பனாவாதமாய் புரிந்து கொள்வது போல் அத்தனை சாதகமானது அல்ல என்பதே உண்மை.
பெண்கள் முதலில் முழுக்க ”பெண்ணாவதில்” இருந்து தம்மை பாதுகாக்க வேண்டும். அதற்கு அவர்கள் நவீன விழுமியங்களை ஏற்க வேண்டும். சுதந்திர சிந்தனை கொண்ட பெண்களை நிர்வாகங்கள் உயர்பதவிகளில் அமர்த்துவது மேற்குறிப்பிட்ட பிரச்சனையின் தீவிரத்தை குறைக்க உதவும். ஒரு பக்கம் ஏற்கனவே வேலையில் உள்ள சர்வாதிகார பெண் உயரதிகாரிகளுக்கு பக்குவம் ஏற்படுத்தும்படியான மேலாண்மை பட்டறைகளை நிர்வாகங்கள் நடத்த வேண்டும். கீழுள்ள ஆண் பெண்களை கனிவாக நடத்தி அடிப்படை மரியாதை நல்கியே கூட கட்டுப்படுத்த முடியும் என்பதை கற்பிக்க வேண்டும். இந்த அடிப்படை அறத்தை நிறுவன விதிகளில் ஒன்றாக வலியுறுத்த வேண்டும். பெண்களை வேலைக்கு தேர்வு செய்யும் போது அவர்களுக்கு உளவியல் தேர்வு வைத்து அவர்களது ஆளுமையை அளவிடுவதும் உதவும்.
ஆண்கள் உலகை ஆண்டதால் தான் இத்தனை போர்கள், வன்முறை, உயிரிழப்புகள் என்று பெண்ணியவாதிகள் இதுவரை பேசி வந்தார்கள். ஆனால் இப்போது பெண்கள் விடுதலை பெற்று ஒரு சின்ன அளவில் உயரதிகாரி நிலையை அடையும் போது பிற பெண்கள் அவர்களிடம் இருந்து தலைதெறிக்க ஓடித் தப்ப பார்க்கிறார்கள். இன்று இந்தியாவை ஆளும் ஒரு பெண் மிகக் குரூரமாக ஈழப்போரை நடத்தி லட்சோபலட்சம் மக்கள் கொன்று அதைப் பற்றி எந்த அக்கறையும் குற்றவுணர்வும் இன்றி இருக்கிறார். ஜெயலலிதா இங்கு அவிழ்த்து விட்ட சர்வாதிகாரத்தை, இரக்கமின்மையை பார்த்தோம். ஆக ஆண்மை அளவுக்கு பெண்மையும் ஆபத்தானது தான்.
இனி இந்த உலக சமூகத்துக்கு ஆண்மையும் பெண்மையும் மிகாதவர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களால் தான் மற்றொரு உலகப்போரை தடுக்கவும் மானுட அறத்தை தக்க வைக்கவும் முடியும்.
Labels:
உளவியல்
Monday, 9 January 2012
ஆண்-பெண் நட்பு: காமம் மற்றும் சமஅந்தஸ்து
வெறும் தோழியான ஒரு girl friendஐ எப்படி அழைக்க? நான் பங்கேற்ற ஆண்-பெண் சமநிலை பற்றின ஒரு நீயாநானா விவாத படப்பிடிப்பின் போது இந்த சிக்கலை பல பங்கேற்பாளர்கள் ஏதோ புதுசு என்பது போல் திடுக்கிட்டவாறு எதிர்கொண்டனர். கோபிநாத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் “அந்த கெர்ல் பிரண்ட் இல்லீங்க” என்று சொல்ல நேர்ந்தது. Female friend என்ற சொல் ஏதோ மிக்ஸி கிரைண்டர் போன்ற இரைச்சலை கொண்டுள்ளது. சிநேகிதி, தோழி ஆகிய பதங்களை வானம்பாடிகளில் இருந்து இடதுசாரிகள், பெண் பத்திரிகைகள் வரை அர்த்தம் திரித்து விட்டனர். ஆண்நண்பர்களும் இருக்கும்பட்சத்தில் ஒரு பெண்ணின் தோழி கெர்ல் பிரண்டா வெறும் பிரண்டா? ஆனால் இது ஒரு சொல்லாக்கம் பற்றின பிரச்சனை அல்லவே! ஆண்-பெண் நட்பு அதன் உள்முரண் காரணமாக ஒரு சங்கடமான உறவாகவே இருந்து வருகிறது.
முதலில் இருவரும் செக்ஸை உட்படுத்துவதா, குறைந்த அளவில் பரஸ்பர கவர்ச்சி மற்றும் அடியோடும் கிளர்ச்சிக்காகவேனும், வேண்டாமா வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
அடுத்து இருவரும் காமம் மேலிட்டால் உறவை முறிப்பதா அல்லது தொடர்வதா என்றும் தீர்மானிக்க வேண்டும். இவ்விசயத்தில் பெண்கள் தாம் அதிகம் கவனமாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இங்கு ஒரு சுவாரஸ்யமான விசயம். ஒரு நட்பில் காமம் மேலிட்டால் அது காதலாக வேண்டிய அவசியம் இல்லை. அங்கும் இதை வெளிப்படையாக பேசி தங்களது தேவைகள் என்னவென்பதை விவாதித்து காமத்தை நேரடியாக எதிர்கொண்டு தொடர்ந்து நட்பாகவே தொடரும் ஜோடிகள் உள்ளனர். இவர்கள் 66% மேல் என்கின்றது ஒரு ஆய்வு. காமத்தை முழுக்க தவிர்ப்பது ஆண் பெண் நட்பை வலுப்படுத்தும் ஆழமாக்கும் எனும் ஒரு தரப்பும் உள்ளது. எப்படியும் வெளிப்படைத்தன்மை நல்லது என்கிறார்கள் உளவியலாளர்கள். அதற்கு நம்மூரில் “சிஸ்டர்” என்றொரு சொல் எளிதாக பலருக்கும் பயன்படுகிறது. அல்லது ஒரு சஞ்சலமான தருணத்தில் தத்தமது பரஸ்பர கணவன் மனைவி பற்றி விசாரிப்பது (பலருக்கும் நண்பனின் மனைவி பால் பெரிய அக்கறை இல்லையென்றாலும்). ஆண்கள்/பெண்கள் குழுவில் ஒரே பெண்/ஆண் மட்டும் இருப்பதும் இறுக்கத்தை தளர்த்த மற்றொரு உத்தி.
அடுத்த முக்கிய தடை சம உரிமை.
அலுவலக உரையாடல்களின் போது “இந்த ஆம்பளைங்களே/பொம்பளைங்களே இப்படித்தான்” என்று மெல்லிய கிண்டலுடன் எதிர்பாலினத்தை தாழ்த்த முயல்வது சகஜம். திருமணமானவர்கள் என்றால் கணவன்/மனைவி ஜோக்ஸ், திருமணம் எனும் படுகுழி வகை புலம்பல், குடும்பம் மீதான புகார்கள் ஆண்-பெண் நண்பர்களுக்கு உறவில் தமது படிநிலை என்னவென்பதை நிறுவ பயன்படுகின்றன. பெண்கள் வெறும் குடும்பப் பெண்களாக இருந்த காலத்தில் இந்த வகை நட்பே அவசியமற்றதாக கருதப்பட்டது. இன்று காஸ்மோபொலிடன் கல்லூரிகளில் இருந்து கார்பரேட்டு உறவுநிலைகள் வரை இவ்வுறவு ஊக்குவிக்கப்படுகிறது, அதற்கான ஒரு கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு தராசு சதா ஆண்-பெண் நட்பின் முன் தொங்குகிறது. அநேகமாய் ஆண்கள் தாம் அதிகாரமும் அந்தஸ்தும் மிக்கவராக இவ்வுறவு நிலையில் இருக்கிறார்கள். ஒரு பெண்ணை வழிநடத்தும், பாதுகாக்கும், ஊக்குவிக்கும் பாத்திரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். ஆண்களும் பெண்களும் சமநிலையாக பழகுவதாய் தெரியும் வகுப்புகள், அலுவலகங்களில் கூட இந்த நுட்பமான படிநிலையை காண்கிறோம். எப்படியும் கிண்டலும் கேலியும் பரஸ்பர அக்கறைக்கு நிகராக தேவைப்படுகிறது.
ஆண்-பெண் உறவுக்கு ஒரு இயல்பற்ற தன்மை உள்ளது. இருவேறுபட்ட உணர்வுநிலைகள், சிந்தனை மற்றும் செயல்பாட்டு முறைகள் கொண்ட ஆண்-பெண்கள் தங்கள் பாலினத்துக்குள் பழகும் போது ஒரு இயல்பான பாதுகாப்பை, கூட்டுணர்வை, புரிந்துணர்வை அடைகின்றனர். ஒரு கூட்டத்திலோ அமர்விலோ விளையாட்டு விருந்துகளிலோ அவரவர் குழுவிலாய் ஆண்-பெண்கள் சென்று சேர்ந்து மனம் திறப்பது ஒரு கட்டாயமோ சமூக கூச்சமோ காரணமாக அல்ல, அதன் காரணம் ஒரு இயல்பான சமூகமயமாக்கம். ஆக ஆண்-பெண் நட்புக்கான சந்திப்பு தளங்கள் உயிரியல் மற்றும் சமூக ரீதியாக மிகவும் குறுகிப் போய் விடுகின்றன. சமூக tabooக்கள் போன்ற தடைகளையும் ஆண்-பெண் நட்புகள் கடந்தாக வேண்டும்.
திருமணத்துக்கு பிறகு ஆண்-பெண் நட்பு ஆபத்தானதா அதற்கு எல்லைகள் உண்டா ஆகிய கேள்விகளையும் நாம் இன்றைய கலாச்சார வேளையில் விவாதித்தாக வேண்டும். உள்ளார்ந்த ஆபத்துக்களையும் கடந்து திருமணத்துக்கு பின்பான எதிர்-பால் நட்புகள் திருமணத்தை வலுப்படுத்துகின்றன என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். கணவன் மனைவிகள் முயற்சியெடுத்து அடுத்தவரின் ஆண்-பெண் நட்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பல சம்பவங்களை தினசரி காண்கிறோம். வேறெப்போதையும் விட ஆண்-பெண் நண்பர்கள் மோசமாய் காயம்படுவது அப்போது தான். உதாரணமாய் ஒரு மனைவி தனது கணவனின் தோழியை வன்மமாக உறவுப்பரப்பில் இருந்து நீக்குவது நீண்ட கால கசப்புக்கு வழிவகுக்குகிறது. அவமதிக்கப்பட்ட ஒரு தோழி “உன்னை புரிந்து கொள்ளாத ஒரு மனைவிக்காக என்னை நிராகரிக்கிறாயே” என்று நண்பனை நொந்து கொண்டு பிறகு திருமணமான நண்பர்கள் மீது அநாவசிய ஜாக்கிரதையுடன் பழக நேரலாம். “என் மனைவி ரொம்ப பொஸஸிவ்” என்று ஒரு ஆண் சுயசமாதானம் செய்து கொண்டாலும் தாம்பத்ய அவநம்பிக்கை அத்தருணமே ஸ்தாபிக்கப்படுகிறது. அதற்கு மேல் நீங்கள் ரெண்டு பக்கமும் பார்த்துக் கொண்டே புன்னகைப்பீர்கள். பிறகு அதற்கும் சேர்த்து குற்றவுணர்வு கொள்வீர்கள். உண்மையில், ஆண்-பெண் உறவு தனக்கு எந்த அனுகூலமும் தராது என்கிற ஒரு தவறான முன்தீர்மானம் தான் இதற்கு காரணம். ஒரு புத்திசாலியான மனைவி தன்னில் இருந்து வேறுபட்ட ஒரு பெண்ணை கணவனின் தோழியாக அனுமதிக்கவே செய்வாள். ஏன்?
அநேகமான தம்பதிகளுக்கு பரஸ்பர ஆர்வங்களும், ஒத்த நிலைப்பாடுகளும் இருப்பதில்லை. காதல் திருமணங்களில் கூட. திருமண உறவுகள் பொருந்துவதற்கு இந்த ஆளுமை வேறுபாடு தேவையும் கூட. அதனால் தம்மை ஒத்த ஒருவருடன் நட்பை அனுமதிப்பதன் மூலம் ஒரு கணவனோ மனைவியோ தமது உறவில் உள்ள குறையை சமனம் செய்ய முடியும். உதாரணமாய் ஒரு பெண் தன் நண்பனிடம் இலக்கிய ஆர்வத்தை பகிர அனுமதிப்பதன் மூலம் வீடுதிரும்பும் கணவன் திராபையான பல உரையாடல்களில் இருந்து தப்பிக்க முடியும். மேலும் பரஸ்பர பொருத்தமின்மை குறித்து குற்றவுணர்வோ வெறுப்போ உற்று அதை வன்மமாக புகாராக வெளிப்படுத்த நேராது.
ஆண்-பெண் நட்பு சுமூகமாக இயங்குவதற்கான தேவை நடைமுறையில் உள்ளதை அறிவோம். இதைக் கடந்து மற்றொரு உளவியல் அனுகூலமும் உள்ளது. இருபாலினமும் உளவியல் ரீதியாக மாறுபட்டவர்கள் என்பதால் தம்மவர்களிடம் கிடைக்காத சில விசயங்கள் எதிர்பாலின நட்பில் கிடைக்கின்றன. உதாரணமாக பெண்கள் வாழ்வின் உணர்ச்சிகரமான பிரச்சனைகளை தர்க்கப்படுத்தாமல் தீர்வு கேட்காமல் வெறுமனே வெளிப்படுத்த பகிர விரும்புபவர்கள். ஆண்கள் ஒன்று சேர்ந்தால் சமூக, அரசியல், கலாச்சார தளங்களில் சில பொதுவான அபிப்பிராயங்களை வைத்து உரையாடுவார்கள். தனிப்பட்ட நெருக்கடிகளை வெளிப்படையாய் உரையாடுவதில் ஆண்களுக்கு அதிக உவப்பில்லை, அவர்கள் அதை ரொம்ப பாதுகாப்பாயும் நினைப்பதில்லை. பெண்களின் குற்ற ஒப்புதல்களும், கண்ணீர் மன்றாடல்களும் சரி ஆண்களின் நிதானமான உலக நடப்பு ஆய்வுகளும் சரி அதன் மிகை காரணமாய் சலிப்பேற்படுத்துகின்றன. போலியாக படுகின்றன. இந்த மிகையை ஓரளவு மட்டுப்படுத்த ஆண்-பெண் உரையாடல்கள் உதவுகின்றன. ஆண் தன்னை எளிதாக மனதளவில் ஒப்புக் கொடுத்து வெளிப்படுத்த ஒரு பெண் தோழியின் அருகாமை தேவை இருக்கிறது. அங்கு அவன் பயமின்றி தன் அந்தரங்க நெருக்கடிகளை பேச முடியும். அதன் உக்கிரமான ஒரு நிலையில் தஸ்தாவெஸ்கியின் ரஸ்கோல்நிக்கோவுக்கு ஒரு சோன்யா போல.
பெண்களுக்கு ஆணுடனான உரையாடல் ஒரு நல்ல மாற்றாக உள்ளது. குறிப்பாக அறிவுத்தேடல் அல்லது கலை ஆர்வம் கொண்ட பெண்கள் நம் சமூகத்தில் ஆண் நட்பை வேண்டுவது இதனாலே. பெண்களுடன் அழுது புரண்டு களைத்து பின் ஒரு ஆணுடன் உரையாடுகையில் அவர்களுக்கு நிச்சயம் ஆசுவாசமாக உள்ளது. எப்படியும் ஆண்-பெண் உரையாடலில் ஆண்களே அதிகம் உளவியல் ரீதியாய் பயன்பெறுவதாய் மற்றொரு ஆய்வு சொல்லுகிறது.
ஆண்-பெண் நட்பு நடைமுறை அவசியமாக வளர்ந்து வரும் சூழலில் ஆண்மை பெண்மை ஆகிய மரபான அடையாளங்களும் மெல்ல கலைந்து வருகின்றன. இறுக்கமான பால் அடையாளத்தை வைத்துள்ள ஆணோ பெண்ணோ தனது படிக்கும்/வேலை செய்யும் சூழலில் லகுவான எதிர்பால் உறவுகளை ஏற்படுத்த இயலாது. ஆண்கள் சற்று ஆண்மை கொண்ட பெண்களையும், பெண்கள் சற்று பெண்மை கொண்ட ஆண்களையுமே நட்பாக ஏற்று பழக விரும்புவதாய் பல ஆய்வுகள் சுட்டுகின்றன. இதை நடைமுறை வாழ்விலும் எளிதில் காண்கிறோம். Androgynous நபர்களுக்கு ஆண்-பெண் நட்பு சுலபமாவது ஏன்?
முதலில் சம்பிரதாயமான அந்தஸ்து மற்றும் அதிகார உரசலை இது வெகுவாக குறைக்கிறது. சுயபாலின பண்புகள் ஒரு அணுக்கத்தை நட்புக்குள் எளிதாக ஏற்படுத்துகிறது. ஒரு அடையாளம் என்ற நிலையில் நவீன சமூகம் இன்று androgynousஆக மாறி வருவது வேறு விசயம். தைரியமான உறுதியான பெண்ணும் நெகிழ்ச்சியான கவித்துவமான ஆணும் அச்சமூகத்தின் லட்சிய பிரதிநிதிகள். இந்த புள்ளியில் இருந்து காமம் மெல்ல மெல்ல ஒரு பிரச்சனையாக தேய்ந்து போவதும் சுவாரஸ்யமான விசயம்.
Saturday, 12 November 2011
மனச்சோர்வும் நகரத்து பெண்களும்
உலகமெங்கும் நகரவாசிகள் அதிகமாக மனச்சோர்வினால் பாதிக்கப்படுகிறார்கள். நகரங்களில் மிகுதியான மக்கள் தொகை மற்றும் போதிய உறவுநிலைகள் இன்மை ஆகியன ஒரு முக்கிய காரணங்கள். மனிதர்கள் பொதுவாக ஜனநெருக்கடி உள்ள இடங்களில் ஒருவித பதற்றத்தை, பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள். மேலும் பரிச்சயமற்ற மனிதர்கள் பொருளாதார தேவை எனும் பொதுநோக்கத்திற்காக தொடர்ந்து வந்து குவிந்து விலகிக் கொண்டிருக்கும் நகரத்தில் இருநூறு பேர் நிரந்திரமாய் வசிக்கும் ஒரு கிராமத்தில் உள்ள சாஸ்வதமான உறவுகள் ஒரு மனிதனுக்கு எளிதில் அமைவதில்லை. கோடிக்கணக்கானோர் வாழும் நகரத்தில் ஒரு மனிதன் தனிமையில் தவிப்பதற்கு இதுவே காரணம். இது மனச்சோர்வை தூண்டாவிட்டாலும் அதற்கு ஏற்ற ஒரு சூழலை உருவாக்குகிறது. நகரங்கள் மனச்சோர்வுக்கு தோதாக நம் மூளை அமைப்பையே மாற்றுகின்றன என்னும் ஒரு தரப்பும் உண்டு. நியூயார்க்கில் இவ்வருடம் நடந்த ஒரு ஆய்வில் நகரங்களில் பிறந்த வளர்ந்தவர்கள் எதிர்மறை விமர்சனங்களை நேரிடும் மனவலிமை அற்றவர்கள் என்கிறது. மாறாக கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் ஒரு சிறுபுன்னகையுடன் எதையும் தாங்கிக் கொள்கிறார்கள்.
மத்தியபிரதேசத்தில் உள்ள டாட்டாமோட்டார்ஸ் ஆஸ்பத்திரியில் பணி புரியும் டாக்டர் அகர்வால் தனது ஆஸ்பத்திரியில் நூற்றுக்கணக்கானோர் தினமும் வரிசையில் நிற்பதாக சொல்கிறார். பெரும்பாலானோர் இளைஞர்கள். வேலை நெருக்கடி ஒரு முக்கிய காரணம் என்கிறார். 2009இல் சென்னை நீரிழிவு ஆய்வு நிறுவனம் டாக்டர் மோஹன் நீரிழிவு சிறப்பு மையத்துடன் இணைந்து ஒரு முக்கிய ஆய்வு நடத்தியது. 26,000 சென்னைவாசிகள் உள்ளடக்கிய இவ்வாய்வில் புரிய வந்தது இங்கு 15% மனச்சோர்வாளர்கள் உண்டு, அவர்களில் அதிகம் பேர் பெண்கள், திருமணமாகாதவர்கள், மணமுறிந்தவர்கள். மேலும் கீழ்த்தட்டை சார்ந்த மக்கள் எளிதில் மனச்சோர்வடைகின்றனர். நகரம் மனச்சோர்வை தூண்டினாலும் குறிப்பாக பெண்களும், துணையற்றவர்களும், பணவசதி இல்லாதவர்களும் அதிகம் பலியாகின்றனர் என்ற தகவல் மனச்சோர்வை பொறுத்தவரையில் உயிரியல், குடும்பம் சார் மற்றும் பொருளாதார காரணிகள் மேலும் அபாயகரமானவை என்று புரிய வருகிறது.
குடும்ப துணையற்றவர்களும் ஏழைகளும் பாதிப்புக்குள்ளாவதை எளிதில் புரிந்து கொள்ளலாம். பெண்கள் ஏன் ஆண்களை விட அதிகம் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள்?
பூப்படையும் போது பெண் உடல் அடையும் மாற்றங்கள், குடும்ப வாழ்வையும் வேலையயையும் ஒருமித்து சமாளிக்கும் போராட்டத்தின் நெருக்கடிகள், உடலழகு குறித்த கவலைகள் ஆகியன பொதுவான காரணங்கள். மேலும் பிரசவத்திற்கு முன்னரும் பின்னருமான மாதங்களிலும், மாதவிடாய் காலங்களிலும் பெண்களின் உடலில் நேரும் ஹார்மோன் சுரப்பு மற்றும் பிற ரசாயன மாற்றங்கள் அவர்களை எளிதில் மனசோர்வுக்கு தள்ளுகின்றன. பெரும்பாலான சமூகங்களில் பெண்கள் கடுமையான கண்காணிப்புக்குள் வாழ்வதால் தங்கள் மனச்சோர்வை,ஏமாற்றத்தை, நிராசையை ஆண்களைப் போன்று போதைப் பழக்கங்கள் மற்றும் வெளிப்புற செயல்பாடுகள், சமூக தொடர்புறுத்தல்கள் வழி வெளிப்படுத்தும் வாய்ப்புகள் குறைவு. அவர்கள் வெளிப்பாட்டு மார்க்கமின்றி தமக்குள்ளே புழுங்கி மேலும் சோர்ந்து போகிறார்கள். அடுத்து பொதுவாக ஆண்கள் தமது எளிதில் தீராத பிரச்சனைகளை எளிதில் தள்ளிப் போடும் மனப்போக்கு கொண்டவர்கள். பெண்கள் அதே பிரச்சனைக்கு முடிவு காணும் வரை மனதுக்குள் உழன்று கொண்டிருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் பெண்கள் பிரச்சனைகளுக்கு அழுவதன் மூலம் தீர்வு காணும் உள்விழைவு கொண்டவர்கள். அழுகை ஒரு நல்ல நிவாரணமாக இருந்தாலும் அது ஒருவிதத்தில் நம் துக்கத்தை பௌதிக ரீதியாக உறுதிப்படுத்துகிறது. அழுது முடித்து விட்டு எந்த பிரச்சனையும் இல்லை என்று ஒருவர் மறந்து போக முடியாது. வருத்தப்பட்ட அனுபவங்களை விட அழுகின்ற பௌதிக அனுபவங்கள் தான் நம் நினைவில் தங்கி நிற்கின்றன. அழுகை கசப்பான நினைவுகளின் ஊற்று.
மேலும் நமது பல்லாண்டு கால ஆணாதிக்கவாத வரலாற்றின் விளைவாக பெரும்பான்மையான பெண்கள் தம்மை பலவீனர்களாக பாதுகாப்பற்றவர்களாக உள்ளுக்குள் கருதி வருகின்றனர். இந்த சுயபிம்பம் மனச்சோர்வுக்காக மனதை தயாரிப்பதில் முக்கிய பங்களிக்கிறது. சமூகத்தில் ஆண்களை விட ஏழ்மையின் கரம் பெண்களை நோக்கித் தான் எளிதில் நீள்கிறது.
மனச்சோர்வுற்ற நகரம் ஆணை விட பெண்ணையே அதிகம் நசுக்குகிறது.
(டைம்ஸ் தீபாவளி மலர் 2011இல் வெளியான கட்டுரை)
Wednesday, 9 November 2011
வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் ...
நேர்மறைவாதம் ஒரு வலுவான சமூக தொடர்புறுத்தல் பண்பு. பொதுவாக முழுக்க நேர்மறையானவர்கள் எதிர்மறையானவர்கள் என இருசாராரையும் உடனடியாக நம்ப மக்கள் தலைப்படுகிறார்கள். இவர்களில் நேர்மறையானவர்களுக்கு ஆரம்பத்தில் மக்களிடையே பரவலான வரவேற்பு இருக்கும். நேர்மறையானவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவார்கள் என்று எண்ணற்ற முறை பேசி, எழுதப்பட்டுவிட்டது. வெற்றிப்படிக்கட்டுகள் என்பது நமது ஊடகங்களில் அதிகம் தொய்ந்து போன ஒரு உருவகம். வாழ்வில் வெற்றிபெறுவது எப்படி என்று மேடையில் நீங்கள் பேச்சை ஆரம்பித்தால் எந்த கூட்டத்திலும் பார்வையாளர்கள் நிமிர்ந்து கவனிப்பார்கள். தோல்வி வெற்றியின் முதற்படி, ஆகையால் துவளாதீர்கள்,.தொடர்ந்து போராடுங்கள் என்று கர்ஜித்தால் பலத்த கைத்தட்டுகள் நிச்சயம். வாழ்வில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு, தோல்விகள் என்பது மாயை என்று நாம் நம்ப தலைப்படுகிறோம். தொடர்ந்து நம்ப வைக்கப்படுகிறோம். இப்படி தோல்விக்கு அப்பாற்பட்டவர்களாக கருதிக் கொள்பவர்கள் அதிகமான மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். நீண்ட நெடும் வெற்றிப் படிக்கட்டுகளை கீழே நின்று நிமிர்ந்து பார்த்து கொண்டிருப்பவர்கள் கடும் கழுத்துவலிக்கு ஆளாகி மீட்க முடியாத துயரத்துக்குள் ஆழ்வதாக சொல்கிறது நவீன உளவியல்.
நேர்மறையானவர்கள் வெளிமுகமானவர்களாக (extrovert) அதிகம் இருக்கிறார்கள். அரசியல், ஊடகங்கள், மக்கள் தொடர்பு, வணிகம் என எங்கும் இவர்கள் இயல்பாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இப்படி அதிகம் சமூகப்பார்வையில் உள்ளவர்களும் வெற்றியின் குறியீடுகளாகவும் தெரிபவர்களும் இவர்களே. வாழ்க்கையில் வெற்றி அடைய நினைப்பவர்கள் எளிதாக ஒரு ஊடகக் காட்சி போல் ஆக உத்தேசிக்கிறார்கள். நமது ஊடக அறிவுஜீவியாக கோபிநாத்தும், கலை உலக அறிவுஜீவியாக சினிமாக்காரர்களும் (முன்னர் நடிகர்களும் தற்போது உலகசினிமா எடுக்கும் தமிழ் இயக்குநர்களும்) முன்னிறுத்தப்படுகிறார்கள். மேற்தட்டினருக்கு ஸ்டீவ் ஜோப்சும், நாராயண மூர்த்தியும். ஆக பள்ளியில் இருந்து வேலை பார்க்கும் இடங்களில் வரை ஒருவர் நேர்மறையாக, வெளிமுகமானவராக வெற்றியாளராக இருக்கும்படி நெருக்கடி உள்ளது. இயல்பாக உள்முகமானவர்கள் (introvert) கூட தம்மை வெளிமுகமானவர்களாக போலியாக காட்டிக் கொள்ள தலைப்படுகிறார்கள். சமகால ஜப்பானிய நாவலாசியர்களில் உலகப்புகழ் பெற்றவரான ஹருகி முராகாமி ஆரம்பத்தில் ஒரு இசைத்தட்டு கடை வைத்து இருந்தார். அப்போது அவர் தினமும் ஏராளமான வாடிக்கையாளர்களுடன் பேச வேண்டி இருந்தது. முப்பது வயது தாண்டின பின் தனது வியாபாரம் தொய்வடையவதை, தான் நாள்தோறும் மிகவும் சோர்ந்து சுரத்தின்றி மாறி வருவதை உணர்ந்தார். அவரது பிரச்சனை அவருக்கு பிற்பாடு தெரிய வந்தது. அவர் இயல்பில் ஒரு உள்முகமானவர். தொடர்ந்து மக்களோடு பேசி தொடர்புறுத்துவது அவரது ஆளுமை பண்பல்ல. சுயவிருப்பமின்றி தினமும் நூற்றுக்கணக்கானவரோடு பேசும் ஒரு வேலையை வருடக்கணக்காய் செய்து கொண்டிருந்தார். விழித்துக் கொண்டதுடன் முராகாமி தான் இனி விருப்பமின்றி யாரிடமும் பேசப் போவதில்லை என்று முடிவு செய்தார். எழுத்தாளராகின பின் அவரது “நார்வேஜியன் வுட்” நாவல் 36 லட்சம் பிரதிகள் ஜப்பானில் மட்டுமே விற்றது. வாசகர்கள் அவரை வழிபட்டார்கள். இளைஞர்கள் மத்தியில் ஒரு மைக்கேல் ஜாக்சன், செகுவேரா, ரஜினி காந்த் போல ஆனார். பலரும் தம்மை முராகாமியன் என்று சொல்லிக் கொள்ள விரும்பினார்கள். மீடியாவில் மழை பெய்தாலும் வெயிலடித்தாலும் அவரிடம் கருத்து கேட்டார்கள். சுருக்கமாக முராகாமி நமது சமூகம் மற்றும் வணிக நிறுவனங்களால் ஒரு விளம்பர லேபிளாக, பிராண்ட் பெயராக மாற்றப் பட்டார். ஆனால் இந்த புகழ் மழையில் நனையும் சாக்கில் ஒரு விற்பனைப் பண்டமாகும் விபத்துக்கு ஆளாகாமல் முராகாமி ஜப்பானை விட்டு ஓடி தலைமறைவானார். பல காலம் அமெரிக்காவில் ஐரோப்பிய நாடுகளிலுமாக வாழ்ந்தார். வெற்றி கிடைத்தாலும் இல்லாவிடிலும் அது ஒரு உபாதை தான். நமது நவீன கலாச்சாரத்தில் வேகமாக பரவி வரும் ஒரு வைரஸ் இது.
சினிமாவில் பெரும் துரதிஷ்டங்களை சந்திக்கும், சுமக்கும் விளிம்புநிலை பாத்திரங்கள் கூட தன்னம்பிக்கை சுடர்விடும் ஒரு புன்னகையுடன் வாழ்வை ஏற்றுக் கொண்டு இயல்பானவர்களுக்கான நேர்மறை உதாரணங்களாகத் தான் வருகிறார்கள். கடைசியாக நாம் பார்த்த எதிர்மறையான நோயுற்றவரோ குருடனோ யார்?
வாழ்வின் பிரச்சனைகள் சிக்கலானவை. பெரும்பாலானவற்றுக்கு நேரடியான சுமூகமான தீர்வுகள் இல்லை. ஊடகங்கள், பொதுநம்பிக்கைகள், மித்துகளுக்கு வெளியே நாம் பிரச்சனைகளை ஏற்று வாழும் எண்ணற்ற ஜன்மங்களை தான் காண்கிறோம். வாழக் கற்றுக் கொள்வது அது என்னவென்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டே முடிப்பது தான். மாறாக வாழ்க்கை கலை என்ற ஒன்றே இல்லை. வணிகப் போட்டியாளர்கள் சொல்வது போல் வெற்றியை ஒருவர் நாடி அடைய முடியாது. சமீபமாக பல அறிவியல் ஆய்வு முடிவுகள் இந்த வெற்றி எனும் தொன்மத்தின் காற்றை இறக்கி உள்ளன.
அடுத்து மகிழ்ச்சியாக அல்லது நிம்மதியாக இருப்பது. அதுவும் எளிமைப்படுத்தலுக்கு ஆளாகிறது. வெற்றி அடைந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நாம் வெற்றிக்கு பின்னால் பாய்கிறோம். மற்றொரு தரப்பு வெற்றியாளர்கள் நிம்மதி இழக்கிறார்கள் என்று மறுத்து ஆன்மீகமும் சமூகத் தொண்டும் மட்டுமே நிம்மதியை தரும், அதை நாங்கள் அரைமணி நேரத்தில் தருகிறோம் கட்டணம் இவ்வளவு என்று நம்மை இழுக்கிறார்கள். சற்று நின்று நிதானித்து பார்த்தால் மகிழ்ச்சியும் நிம்மதியும் முழுமுதல் பொருட்களாக அனுபவங்களாக நம் வாழ்வில் என்றுமே இருந்ததில்லை, மிக சின்ன வயதில் இருந்தே நாம் அவற்றை தேடியதில்லை என்று புரிய வருகிறது. உண்மையில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தேடி சிந்திக்கும் வரையில் நாம் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் தான் இருக்கிறோம். துக்கம் கூட இதே அளவில் கட்டி விநியோகிக்கப்படுகிறது. “ஸ்டீவ் ஜோபுஸுக்காக உலகமே கண்ணீர் வடிக்கிறது” என்ற கட்டுரை ஒன்றை படித்து விட்டு உலகமே கலங்கும் இவ்வேளையில் நீ ஏன் ஸ்டீவ் ஜோபுசுக்காக வருத்தப்படவில்லை என்று ஒரு நண்பன் என்னை திரும்பத் திரும்ப கேட்கிறான். என்ன பதில் சொல்ல? அந்த பிரச்சனை முடியும் முன் முருகதாஸ் குழுவினர் ஒரு மைக்கை எடுத்துக் கொண்டு “போதி தர்மர் யார் என்று தெரியுமா?” என்று சென்னை மகாஜனங்களை கேட்கிறார்கள். அதற்கு தாறுமாறாக பதில் அளித்தால் ஜப்பானில் எல்லாருக்கும் தெரிந்த ஒரு மாபெரும் பல்லவ-பௌத்த துறவியை, ஒரு மாபெரும் தமிழரை உங்களுக்கு தெரியவில்லையா, ஐயோ பரிதாபம் என்று கேட்கிறார்கள். எதற்கு தெரிய வேண்டும்? ஏன் தமிழ்ப் பெருமை அல்லது குற்றவுணர்வு என்ற இருமை நிலைக்கு தள்ளப்பட வேண்டும்? இதனிடையே, சாமிப் பாட்டு இசைத்தட்டு விற்பவர்கள் பாடல்கள் நடுவே வந்து “பக்தர்களே திருட்டு சி.டி வாங்காதீர்கள். அப்படி செய்தால் உங்களுக்கு கண்டிப்பாய் புண்ணியம் கிடைக்காது” என்று எச்சரிக்கிறார்கள். இதே வரிசையில் வரும் மத்தியவர்க்க ஊழல் எதிர்ப்பு போராளிகள் தாம் பின்வாசல் வழியாக ஊழலை ஆதரித்தபடியே அன்னா ஹசேராவுக்காக உண்ணாவிரதம், பேரணி என்று திரள்கிறார்கள். அன்னா பக்கம் நிற்காதவர்கள் சமூகப் பொறுப்பற்றவர்கள் என்கிறார்கள். “நீயா நானாவில்” முத்துக்கிருஷ்ணன் சில வலுவான வாதங்களை அன்னாவின் அமைப்புக்கு எதிராக வைத்த போது கிட்டு போன்ற பிரபல அறிவுஜீவுகள் “இவனெல்லாம் ஒரு மனிதனா” என்று கிருஷ்ணனை நோக்கி அருவருப்பான பார்வையை பார்த்தார்கள். எந்த அசட்டுத்தனமும் ஆயிரக்கணக்கான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நேர்மறையான ஒரு உடனடி தீர்வை தருவதாக பட்டால் அதனை உடனடியாய் ஏற்றுக் கொண்டு கொண்டாடுவதே இன்றைய பிரபல அறிவுவாத போக்கு. ஆழமான விசாரணைக்கும் தொலைநோக்குக்கும் இடமில்லை. யாருக்கும் அவகாசமில்லை. இவர்கள் பரவாயில்லை. அன்னா ஹசாரேயை ஆதரித்து தொடர்கட்டுரைகள் எழுதின ஜெயமோகன் அன்னாவை ஆதரிக்காதவர்கள் வாழ்வை எதிர்மறையாக பார்க்கும் இடதுசாரி சிந்தனையாளர்கள் மட்டுமே என்றார். ஜப்பானில் அணு உலைகள் கசியும் முன்னர் பலகாலமாய் அவற்றின் கடும் விமர்சகர்களாய் இருந்து வந்த ஒரு சிறுபான்மை குழுவினரை பெரும்பான்மை சமூகம் இதே போன்று எதிர்மறைவாதிகள் என்று தான் திட்டியது. கதிரியக்கம் எங்கும் நிறைந்ததும் ஜப்பானிய மக்கள் இன்று கையில் கதிரியக்கம் அளக்கும் கருவியுடன் ஆறு, குளம், குட்டை என்று நீரை மொண்டு எடுத்து ஆராய்ந்தபடி பித்து பிடித்து அலைகிறார்கள். ஒரேயடியாக நேர்மறை மனநிலையில் இருந்து எதிர்மறைவாதத்துக்கு தாவி விட்டார்கள்.
புஷ் அரசின் போர் வெறியாட்டத்தில் அமெரிக்கர்களுக்கும் கூட பொருள் உயிர் இழப்புகள் இருந்தன. பொருளாதாரம் மெல்ல மெல்ல சாய்ந்து வந்தது. பல்-இன கலாச்சாரம் ஒரு சமூக ஆபத்தாக கருதப்பட்டது. வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து மீடியாவில் விவாதிக்கப்பட்டது. அதற்கு இந்தியா போன்ற மூன்றாம் உலக பி.பி.ஓ நாடுகள் குற்றம் சாட்டப்பட்டன. இதனை அடுத்து ஒபாமா “நம்மால் முடியும்” என்ற ஒரு பிரபல ஊக்குவிக்கும் பேச்சுடன் புத்துணர்ச்சி ஊட்டும் மாற்றுத் தலைவராக தன்னை மீடியாவில் முன்னிறுத்தி வெற்றி பெற்றார். இன்று ஒபாமா அன்னாவை போல் அதிகார மிக்க பன்னாட்டு நிறுவனங்களின் கருவி மட்டுமே என்று வெளிப்படையாகி விட்டது. புஷ்ஷின் அதே வேகத்துடன் அமெரிக்காவின் உலகப் போர் தொடர்கிறது. அவர்களின் உள்ளூர் பொருளாதார சரிவையும் அவரால் தடுத்த நிறுத்த முடியவில்லை. திரும்பவும் we can என்றால் காறித் துப்புவார்கள். அன்னா ஹசாரே தான் தூய்மையான காந்தியவாதி என்று பட்டம் விட்டவர். ஆனால் அவரது இயக்கத்துக்கு கோடிக்கணக்கிலான பண ஆதரவு எங்கிருந்து வந்தது, என்.ஜி.ஓக்களின் நிதிநிலவரத்தை விசாரனை செய்ய அவர் ஏன் மறுக்கிறார் என்பது போன்ற முக்கிய கேள்விகளுக்கு அச்சுபிச்சென்று அவர் பதில் உளறுவதும், தன்னை விமர்சிக்கும் அரசியல் தலைவர்களை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்ப பணிப்பதும், ஆர்.எஸ்.எஸ் தன் பின்னே தானே சேர்ந்த கூட்டம், நானாக அழைக்கவில்லை என்று ரஜினி வசனம் பேசுவதும் அவர் எந்த பிரச்சனைக்கும் தொலைநோக்காக யோசிக்க தெரியாத பிரச்சனைகளின் ஆழம் புலப்படாத ஒரு எளிய அரசியல்வாதி என்று புரியவருகிறது. ஜெயமோகன் இத்தகைய அசட்டு களப்பணியாளர்கள் தான் நமது சமூகத்துக்கு இன்று தேவை என்கிறார். ஆனால் விழிப்புணர்வற்றவர்கள் இன்றைய சமூகத்தில் எளிதில் கைப்பாவையாகி கட்டுப்படுத்தப்படுவார்கள். அவர்கள் ஆபத்தானவர்களாக் மாறுவார்கள். முராகாமி இதே போன்றதொரு பெரும் சமூகப் புயலில் இருந்து தப்பித்து போனதன் காரணம் இது தான். ஒபாமாவின் ஆளுமையை ஆராயும் உளவியல் நிபுணர்கள் அவர் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு நாடும் ஒரு வெளிமுகமான மனிதர். ஆழமான பிரச்சனைகளை ஏற்றுக் கொள்ள மறுத்து அதனோடு தொடர்ந்து மோதி காயம் பட்டு ஒரு கட்டத்தில் முழுக்க மனம் தளர்ந்து போகக் கூடியவர் என்கிறார். எதற்கும் பொறுமையற்றவர்களாக, இந்திய அரசியலமைப்பையே நிராகரித்து (அவ்விடத்தில் சர்வாதிகாரி வரவேண்டும் என்று விரும்பும் காவி) எண்ணம் கொண்டவர்களாக அன்னாவின் கட்சியினர் இருப்பதும் இந்த எளிமையான நேர்மறைவாதத்தால் தான்.
நவீன உளவியல் நேர்மறையானவர்களை விட எதிர்மறையானவர்கள் தாம் பிரச்சனைகளை நடைமுறை சாமர்த்தியத்தத்துடன் சமாளிக்கிறார்கள் என்கிறது. ஒரு பிரச்சனையை இரண்டு விதத்தில் நேரிடலாம். எளிதில் தீர்க்க முடிவது முடியாதது என்று பிரச்சனையை வகைப்படுத்தலாம். நேர்மறையானவர்கள் இப்படி வகைப்படுத்துவதில்லை. அவர்கள் எல்லாவற்றுக்கும் தம்முன் ஒரு தீர்வு உள்ளது, அதை அடைவது தான் தம் பணி என்று மூர்க்கமாய் முனைகிறார்கள். இதனால் ஒரு போக்குவரத்து நெருக்கடியில் மாட்டினாலோ கழிவுநீர் தேங்கி சாலை குளமானாலோ அதற்கு காரணம் என்ன என்று நின்ற வாக்கில் யோசித்து “நாட்டை படித்த எலைட்டுகள் ஆண்டால் எல்லாம் சரியாகி விடும், ஊழலை கடுமையாக தண்டித்தால் இந்தியா ஒரே நாளில் ஒளிர்ந்து விடும்” என்று கற்பனை செய்கிறார்கள்..ஒரு தீவிரவாத குண்டுவெடிப்பு நிகழ்ந்தால் அப்சல் குருவையோ கசாப்பையோ தூக்கிலிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று குரலெழுப்புகிறார்கள். எதிர்மறைவாதிகள் பிரச்சனைகள் எளிதில் மாயாது, அவை இருந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறார்கள். ஆக போக்குவரத்து நெரிசலில் நின்று சமூகப் புரட்சியை சிந்திக்காமல் வேறு பாதையில் சிந்தனையை திருப்பி விடுகிறார்கள். தீராத பிரச்சனையை தற்காலிகமாய் மறப்பது நல்லது தான். வாழ்க்கை சிக்கல்களின் பிரம்மாண்டம் உணரும் மனிதன் எளிமையுடன் அவற்றின் முன் தலைவணங்குகிறான். வேளை வரும் போது தீர்வை நாடுகிறான். அதுவரை பொறுமையுடன் கவனிக்கிறான். “வெற்றிப்படிக்கட்டுகளில்” ஏறிக் கொண்டே இருப்பேன் என்று விரைகிறவர்கள் பிரச்சனை என்பது முட்டுசந்து என்றாலும் அதை தொடர்ந்து மோதினால் ஒரு வாசலாக மாற்றிடலாம் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் தூக்கம் இழந்து உடல் மன நலத்தை இழந்து வீழ்ச்சியை நோக்கி சறுக்குகிறார்கள். பிறகு சற்று சுதாரித்து மீண்டும் ஒரு விட்டிலை போல் சுடரை நோக்கி எகிறுவார்கள். இப்போதைக்கு ஊழல், அடுத்து காஷ்மீர் என்று அன்னா கூறுவது இதனால் தான்.
கொஞ்சம் எதிர்மறையாகவும், அவநம்பிக்கையுடனும் இருப்பது தொடர்ந்து பொய்கள் விற்கப்படும் சமூகத்தில் நல்லது. தராசின் எந்த தட்டிலும் ஏற மறுப்போம். நாம் ஊழலை எதிர்க்கவும் வேணாம், வெற்றியை துரத்தவும் வேண்டாம். துக்கப்படவும் வேண்டாம் பெருமைப்படவும் வேண்டாம். நாளை ஒரு டாக் ஷோவில் கலந்து கொண்டால் நீங்களும் நானும் கூட எண்ணற்ற கதைகளில் ஒன்றாக மாற்றப்படுவோம். நமது அசலான வாழ்க்கை இவற்றுக்கு வெளியே இருக்கிறது.
(நவம்பர் 2011 உயிர்மையில் வெளியானது)
(நவம்பர் 2011 உயிர்மையில் வெளியானது)
Subscribe to:
Posts
(
Atom
)






