Friday, 16 November 2012
சொந்தக்காரர்களும் சாதியமும்
தந்துகி: சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயம் எனும் கட்டுரையில் ஆதவன் தீட்சண்யா தன் கொள்கைக்கு எதிராக சடங்குகளை பின்பற்ற நேரும் சிக்கலை பேசுகிறார். உண்மை தான். ஆனால் இதற்கு எளிய தீர்வு அவர் சொல்லுவது போல மேலும் வலுவான கொள்கைப்பிடிப்பு அல்ல.
உறவினர்களை தேவையில்லாமல் ஒட்டிக் கொண்டிருப்பதை நிறுத்துவது சரியான தீர்வு. நம் உயிரணுக்களை சுமக்கிறார்களே அன்றி அவர்கள் நாம் அல்ல.
நான் ஆரம்பத்தில் இருந்த இம்மாதிரி பிரச்சனைகளை இவ்வாறு தான் தவிர்த்து வருகிறேன். சாதியத்தை கடப்பதற்கு முதலில் உறவினர்களை கடக்க வேண்டும். நாம் ஒரு உயர் அறிவு மற்றும் கலாச்சார சமூகம். உலகு தழுவிய சமூகம். நம்மோடு உரையாடும் பண்பாட்டு தகுதியில்லாத உறவினர்கள் நமக்கு எதற்கு? விட்டொழியுங்கள்.
என் அப்பாவின் நினைவுநாள் சடங்குகளை செய்ய அம்மா வற்புறுத்தினார். மறுத்து விட்டேன். அத்தை இறந்த போது போய் பார்த்து சடங்குகளில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு அவசியமில்லை. ஆனால் என் எழுத்தோடு சிந்தனைத் தளத்தோடு இதயத்தோடு நெருக்கமுள்ளவர்களின் தேவை என்றும் நான் இருப்பேன். ரத்த சொந்தம் அல்ல புத்தி சொந்தம், இதய அணுக்கம் தான் முக்கியம். அப்படிருந்தால் இப்படியான இரட்டை வாழ்க்கையை வாழ நேராது.
குழந்தைகளுக்கும் சாதியத்தை கற்றுக் கொடுப்பது சொந்தக்காரர்களும் அவர்களின் சடங்குகளும் தான்.சொந்தங்கள் ஒரு நீட்டித்த குடும்பம் போன்று செயல்படுகிறார்கள். இரண்டு முறை எனக்கு நண்பர்கள் சொந்தங்கள் தவிர்க்க முடியாதவை என வலியுறுத்தி இருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் போது கலை இலக்கிய பெருமன்ற கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்வேன். அங்கு பிரேம்குமார் என்றொரு எழுத்தாளர் இருந்தார். அவர் என்னிடம் ஒரு உரையாடலில் சொன்னார்: “நீ என்னதான் சாதி வேண்டாம் என்றாலும் திருமணம் என்றதும் அங்கு சாதி வந்து விடும். உன் உறவினர்களின் கேள்வியை நீ சமாளிக்கவே முடியாது” என்றார். நான் பின்னர் சாதி கடந்து மணம் புரிந்தேன். என் உறவினர்கள் ஆட்சேபித்தார்கள். ஆனால் அவர்களை நான் பொருட்படுத்தவே இல்லை. இன்று வரை அவர்களின் அபிப்ராயங்களை நான் கேட்பதோ கவனிப்பதோ இல்லை. எனது மதிப்பை நான் மதிக்கும் நபர்களிடம் தான் தேடுவேன். நான் மதிக்காதவர்கள் எனக்கு மனிதர்களே அல்ல. இன்னும் சொல்வதானால் மிருகக்காட்சி சாலையில் உள்ளவற்றை பார்க்கும் ஆர்வத்துடன் தான் இவர்களை கவனிக்கிறேன். படிப்பினால் கிடைக்கும் பண்பாட்டு மேம்பாட்டை அடையாதவன் கவனிக்கத்தக்கவன் அல்ல.
அடுத்த இயக்குநர் ராம் ஒரு காலத்தில் பழக்கத்தில் இருந்தார். அப்போது என் மனைவி என்னை மணப்பதற்கு அவளது குடும்பமும் உறவுகளும் கடுமையாக எதிர்த்ததனர். ராம் என் மனைவி தன் குடும்பத்தின் சம்மதத்தை பெற முயலவேண்டும் என்றார். நான் அவர்கள் முக்கியமல்ல என்றேன். அவர் “இல்லை வாழ்வில் பலசமயங்களில் அவர்கள் இன்றியமையாதவர்களாக இருப்பார்கள்” என்றார். பிறகு குடும்பம் உறவை எதிர்த்து மணம் புரிந்து இத்தனை ஆண்டுகளில் எங்களுக்கு எந்த சொந்தங்களும் தேவைப்படவில்லை. இதை இரக்கத்துடன் சொல்லவில்லை. உண்மையிலே அவர்கள் எங்கள் உலகில் இல்லை. என் வாழ்வில் நான் மரணத்தை மிக நெருக்கமாக சென்று பார்த்து வந்து விட்டேன். அப்போதும் என் நண்பர்களும் வாசகர்களும் தான் முதலில் வந்து ஆதரவு தந்தார்கள். என் எழுத்தின் வாசகியாக மட்டுமே அப்போது அறிமுகம் இருந்த தோழி சம்மங்கி திருவண்ணாமலையில் இருந்து வந்து ஆஸ்பத்திரியில் என் உள்ளங்கையை திறந்து ஐநூறு ரூபாய் வைத்து வாங்கிக் கொள்ள வற்புறுத்தினார். நான் எவ்வளவோ மறுத்துப் பார்த்தேன். பிறகு என் கண் கலங்கிப் போயிற்று. தமிழ்நதி வந்ததையும் நான் மறக்க முடியாது. இவர்கள் தான் சொந்தங்கள். இவர்கள் சொந்தமாக இருப்பதிலேயே எனக்கு பெருமை.
நாம் எவ்வளவு தான் வாசித்தாலும் தீவிரமாக இயங்கினாலும் சாதியம் நமக்குள் இருந்து கொண்டு தான் இருக்கும். காரணம் சாதியவாதிகளான நம் உறவினர்களுடன் இருந்து தான் நம் சமூகமயமாக்கல் சிறு வயதில் இருந்து துவங்குகிறது. பிறகு ஊர்க்காரரகளிடம் பழகுகிறோம். அவர்களும் அநேகமாக நம் சாதியே. ஆனால் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று பல்வேறு சாதிகளுடன் இருக்கும் போது அடையாளக் குழப்பம் ஏற்படுகிறது. ஆனால் அந்நேரம் நமது சாதிய அடையாளம் உளவியல் ரீதியாக வலுப்பெற்றிருப்பதால் வெளிசாதிகளை அரைமனதாய் ஏற்று பாசாங்கு பண்ண துவங்குவோம். இந்தியர்களின் பிரச்சனையே இது தான்.
அதற்காக குழந்தைகளை சொந்தங்களின் அணுக்கமே இன்றி வளர்க்க முடியுமா என்ன? முடியாது. நாம் அதற்குப் பதில் விரிவான சிந்தனை கொண்ட ஒரு நட்பு வட்டத்தை வெளியில் தோற்றுவிக்க வேண்டும். இவர்களுடன் இவர்களின் குடும்பங்களுடன் நம் குழந்தைகளை பழக விட வேண்டும். சிறு வயதில் இருந்தே கலவையான சாதி அடையாளங்களுடன் விரிவான அறிவு பண்பாட்டுச் சூழலில் பழக நேரும் குழந்தைகளுக்கு சொந்தங்களை விட உயர்ந்த மனிதர்களே முக்கியம் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு உலக சமூகத்தோடு தம்மை அடையாளப் படுத்தும் குழந்தைகளை நாம் பயிற்றுவித்து மேலெடுக்க முடியும்.
இது ஒரு கருத்தியல் தான். முயன்று பார்ப்போமே.
மேலும் வாசிக்க: http://aadhavanvisai.blogspot.in/2012/06/blog-post_18.html
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
இதென்னவோ மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துகிற காரியமாக எனக்குத் தோன்றுகிறது.
ReplyDelete//ஆனால் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று பல்வேறு சாதிகளுடன் இருக்கும் போது அடையாளக் குழப்பம் ஏற்படுகிறது. ஆனால் அந்நேரம் நமது சாதிய அடையாளம் உளவியல் ரீதியாக வலுப்பெற்றிருப்பதால் வெளிசாதிகளை அரைமனதாய் ஏற்று பாசாங்கு பண்ண துவங்குவோம். இந்தியர்களின் பிரச்சனையே இது தான்.// இதை வேறு மாதிரியாகத் தீர்க்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. வெளி சாதிகளை அரை மனதாக ஏற்றுப் பாசாங்கு பண்ணுவதற்கு பதில் நமது சாதி, உறவு, பழக்க வழக்கங்களை அரை மனதாகப் பாசாங்குடன் ஏற்றுக் கொண்டு உள் மனதில் சாதி உணர்வைத் துறக்கத் தொடர்ந்த பயிற்சிகளை மேற் கொள்ளலாமே? என்னுடைய அம்மா சொல்லித்தந்த வழி இது. என் அம்மா கட்டுப்பெட்டியான பார்ப்பனக் குடும்பத்தில் வந்தவர். அக்காலத்தில் பெண்களுக்குப் புரட்சிகரமான சிந்தனைகளை வெளியில் சொல்லக் கூட உரிமை இல்லாத நிலையில் தனது சாதி எதிர்ப்புக் கருத்துகளை எனக்குள் பற்ற வைத்தார். அதை இன்னும் அணையாமல் பாதுகாத்து வருகிறேன். அதே சமயம் உறவுகளை முறித்துக் கொண்டால் வாழ்க்கை சிக்கலாகி விடும் என்ற யதார்த்தத்தையும் என் அம்மா கற்றுத் ததிருக்கிறார்.
தற்போது எனக்கும் குடும்ப நிர்ப்பந்தங்கள் இருப்பினும் மதச் சடங்குகளை விடா விட்டாலும் சாதி உணர்வை வெல்லுவதில் என் அம்மாவை விடப் பல அடிகள் முன்னெடுத்து வைத்திருக்கிறேன். எனது வாரிசுகளை மேலும் பல அடிகள் முன்னெடுத்துச் செல்கிற உறுதியும் எனக்கு இருக்கிறது.
சாதி உணர்வை அழிப்பது குழந்தைகளிடமிருந்து தான் தொடங்க வேண்டும். ஒவ்வொரு சாதி சமூகத்திலும் படித்தவர்கள் தங்கள் குழதைகளைப் பள்ளியில் சேர்க்கும் போது சாதி, மதம் எழுதுவதில்லை என்று முடிவு செய்து கொண்டு ஒரு சமூக இயக்கமாக இதை நடத்த வேண்டும்.(நாங்கள் அப்படித்தான் முடிவு செய்திருக்கிறோம்) நண்பர்கள் மத்தியில் பியர் ப்ரஷருக்காகவும் ஃபேஷனுக்காகவும் பலர் செய்யத் தொடங்கினாலும் அதுவே பேஷனாக மாற வாய்ப்புண்டு. சாதியை அழிக்க இப்படி எத்தனையோ வழிகள் உண்டு.
ஆனால் அதற்காக உறவுகளை அழிப்பது தேவை இல்லை. அவர்களையும் நாளடைவில் மனம் மாறச் செய்வதே சரியான தீர்வாக இருக்கும். உலக சமுதாயம் முழுதையும் நேசிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு சொந்த சமுதாயத்தை வெறுத்து ஒதுக்குவது ஒரு பாசாங்கை விட்டு வேறொரு பாசாங்குக்கு மாறுவதாக இருக்கும். சமூக மாற்றம் வெறுப்பிலிருந்து உண்டாக முடியாது, அன்பிலிருந்து தான் தொடங்க முடியும்.
நான் இதை ஒரு கருத்தியலாக மட்டுமே முன்வைக்கிறேன் பூர்ணம். நடைமுறையில் இதை மாற்றங்களுடன் பரிசீலிக்கலாம் என்பதே உத்தேசம். சொந்தங்களை வெறுக்க சொல்லவில்லை. ஆனால் ரத்த உறவு என்பதாலே அவர்களுக்கு அதிகப்படியான இடத்தை அளித்து அப்படியே ஏற்கிறோம். ஏனென்றால் அவர்கள் நம் பண்பாட்டு பழக்கங்கள் கொண்டவர்கள், நம் மரபணுக்களை சுமப்பவர்கள். இது ஒரு குறுகின மனப்பான்மைக்கு இட்டு செல்கிறது. நம் சொந்தங்களை நாமே அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆதவன் தீட்சண்யாவுக்கு நிகழ்ந்தது போல் சமரசங்கள் செய்ய நேரிடும். என்னதான் கருத்தியல் கடப்பாடு இருந்தாலும் தலைவணங்க நேரிடும். என் மனைவி தாலி அணிவதில்லை. நான் ஊருக்கு போகும் போது பண்பாட்டு ஒழுக்க காவலர்களை பொருட்படுத்தி பதில் சொல்வதில்லை. வாழ்க்கை நமக்கு தரும் மிகப்பெரிய சுதந்திரம் தேர்வு தான். அதை கைவிடல் ஆகாது.
ReplyDeleteசாதி விஷயத்தில் நான் உங்களுடன் முழுக்க உடன் படுகிறேன். சாதியைத் துறக்க வேண்டு மென்றால் முதலில் சொந்தக் காரர்களிடமிருந்து விலகி வர வேண்டும்; அவர்களுடன் இருந்து கொண்டே சாதியைத் துறப்பது அத்தனை சுலபமில்லை.
ReplyDeleteஅபிலாஷின் அருமையான கட்டுரை. முழுக்க முழுக்க உடன்படுகிறேன். என் வாழ்க்கைப் பார்வையும் இதுதான். இந்த அடிப்படையில்தான் நானும் என் சிநேகிதி பத்மாவும் கடந்த 30 வருடங்களாக வாழ்ந்து வருகிறோம். ஒரு சிக்கலும் இல்லை. வெல் டன் அபிலாஷ்! அன்புடன் ஞாநி
ReplyDeleteஉறவுகளை விட்டுதான் சாதியை ஒழித்தாக வேண்டுமென்பதில்லை. அதேசமயம், உறவுகளால் ஏற்படுகிற சாதியின் நீட்சிகளை தவிர்க்க வேண்டுமானால் நீங்கள் கூறுவது போல சொந்தங்களை தவிர்க்கலாம். உறவுகளை திருத்த முயல்வதிலும் தவறில்லை. அது முயற்சியளவிலேயே தோற்றுப்போனாலும், ஏற்கக்கூடியதுதான். பரிசீலிக்கலாம் என்றதற்கு ஒப்பான மனநிலை அளிக்கிற கட்டுரை. நீங்கள் மருத்துவமனையில் இருந்த தகவல் அறிந்து, அவ்வளவாக பழக்கமில்லாத போதும் மனம் பதைத்துதான் போனது. அப்போது அலைபேசியில் அழைத்துப் பேசியதும் அப்படிதான். உறவுகள் என்பது சொந்தமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை என்பது உண்மை. நல்ல பகிர்வு. வாழ்த்துகள் அபிலாஷ்.
ReplyDelete//ஆனால் அதற்காக உறவுகளை அழிப்பது தேவை இல்லை. அவர்களையும் நாளடைவில் மனம் மாறச் செய்வதே சரியான தீர்வாக இருக்கும். உலக சமுதாயம் முழுதையும் நேசிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு சொந்த சமுதாயத்தை வெறுத்து ஒதுக்குவது ஒரு பாசாங்கை விட்டு வேறொரு பாசாங்குக்கு மாறுவதாக இருக்கும். சமூக மாற்றம் வெறுப்பிலிருந்து உண்டாக முடியாது, அன்பிலிருந்து தான் தொடங்க முடியும்.// - I completely agree to this, you need to love everyone and try to change them, else doesn't matter too. How can you say that you can live in this world without relations - so 20 years down - would you ask your kids to part apart and just be with their spouses alone - definitely an invalid concept. Also you can't have many much close friends and also you can't expect them to help you in need. But relatives are huge in number mostly. It is the relations that are there for ever. I am not sure if you are brought up in a city atmosphere you can't really feel the importance of the relatives. But if you look a village/town setup you can see the real love of the relatives and how they are of big support to us. I like you being bold enough - but I can't take the points you have put forth. I really love all my relatives so much - good or bad, friends to me or not - doesn't matter.
ReplyDeleteநன்றி திரு ஞாநி
ReplyDeleteநன்றி திரு அகநாழிகை வாசுதேவன்
ReplyDeleteநன்றி திரு.சோ.சுப்புராஜ்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆண்டோ கிஸ்கர்டு
ReplyDeleteஉறவுகளை மட்டுமல்ல பொதுவாக பிறரை மாற்ற முடியும் என நான் நம்பவில்லை. மாற்றம் உள்ளிருந்து வருவது. அதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஒருவேளை அளிக்கலாம். அவ்வளவே.
நான் கிராமத்தில் பிறந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட உறவினர்களுடன் வளர்ந்தவன் தான். உறவினர்கள் மட்டுமல்ல இந்த உலகில் யார் வேண்டுமானாலும் உதவுவார்கள். மனிதர்கள் அடிப்படையில் பிறருக்கு உதவும் ஒத்துழைக்கும் குணம் படைத்தவர்கள். உறவினர்கள் இன்றியமையாதவர்கள் அல்ல. அவர்கள் மட்டுமே நம்பத்தகுந்தவர்களும் அல்ல. அவர்களும் பிறரைப் போலவே.
அடுத்து, எனக்கு குழந்தை பிறந்தால் அதை எதிர்காலத்தில் நிச்சயம் தனியாக போய் தனியாக யோசித்து வாழவே தூண்டுவேன். ஒருமனிதன் இன்னொருவருடன் ஒட்டிக் கொண்டிருப்பது ஒரு ஆன்மீக அவலம்.
அருமையான கட்டுரை. பாதுகாப்பாக ரோட்டை கடப்பதற்கு வழி தெரியாமல் இருக்கும் போது தான் நமக்கு ஒரு கை தேவைப்படுகிறது.அந்த கையை இறுகபிடித்துக்கொள்கிறோம். ஒரு கட்டத்தில் அந்த கையே நம்மை சிறை படுத்தும்போது அதை உதறிவிட்டு ரோட்டை கடக்க முற்படுகிறோம்.
ReplyDeleteஅபிலாஷ் அருமையான கட்டுரை. உங்களுக்கு வாழ்த்துக்கள். நானும் இதுமாதிரி ரெட்டையான போலி வாழ்க்கைதான் நடத்திக் கொண்டிருக்கிறேன். என்வீட்டிலும் ஜாதித் தீண்டாமை இருக்கிறது. சடங்குகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. நிலையான பணியைத் தேடிக் கொள்ள இயலாமால் சொந்தக்காரர்களுடன் தொழில் செய்ய வேண்டிய நிலையிலுள்ளவன் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது புரியவில்லை. வீட்ட்டிலிருந்து வெளியே தங்கியிருந்த நாட்களில் சுதந்திரமாகவும், இங்கு இருப்பது தர்மசங்கடமாகவும் இருக்கிறது. நகரத்திற்கு இடம்பெயர்ந்தவன் விருப்பட்டமாதிரி வாழ வாய்ப்பிருக்கிறது. உதறிவிடவும் முடியாமல், அவர்களை நேசிக்கவும் முடியாமல் வாழ வேண்டிய நிலை. இணையத்தில் மட்டுமே இளைப்பாற முடிகிறது.
ReplyDeleteநன்றி ஸ்வர வைத்தி
ReplyDeleteநன்றி தமிழானவன். குடும்ப வணிகத்தில் சொந்தங்களோடு இணைந்து இசைந்து போவது முக்கியம் தான்.
ReplyDelete