இப்போது இலக்கிய பொது கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி நடக்கும் அரங்குகள் கட்டாய வதை முகாம்கள் போல இருக்கின்றன. பிடிக்கவில்லை என்றால் எழுந்து வீட்டுக்குத் தான் போக வேண்டும். இவ்வளவு தூரம் வந்து விட்டு என்ற சலிப்பில் பலரும் அப்படியே அமர்ந்து விடுகிறார்கள்.
மூடப்பட்ட அரங்குகள் சிறைக்கூடங்கள் போல் தோன்றுகின்றன. எனக்கு பல சமயங்களில் உள்ளே போனதும் மாட்டிக் கொண்டு விட்ட உணர்வு தோன்றும். மனிதனை தொடர்ந்து மணிக்கணக்காக ஓரிடத்தில் அமர வைப்பது ஒரு சர்வாதிகார நடவடிக்கை தானே!
இதை ஒட்டி எனக்கு சில கோரிக்கைகள் உள்ளன. அவை கீழே:
- நம்மூர் இலக்கிய கூட்டங்கள், நாடகங்களை ஒரு பெரிய திறந்த வெளியில் நடத்த வேண்டும்.
- ஓரிடத்தில் கூட்டம் நடக்க பக்கத்தில் பார், புட் கோர்ட், நீச்சல் குளம், லவுஞ்ச், WiFi தொடர்பு எல்லாம் இருக்க வேண்டும்.
- கூட சின்னதாய் ஒரு தியான அறையும் வைக்கலாம். அங்கு எந்த சத்தமும் வராது.
- பார்வையாளர்கள் விருப்பப்படி அமர்வதும் எழுந்து போய் வேறு வேலை பார்ப்பதுமாக இருக்கலாம்.
- கூட்டங்கள் சலிப்பாகும் போது, மூச்சு முட்டும் போது, அல்லது நமக்கே பேசும் ஆசை வரும் போது ஒரு வெளிப்பாடாக இது அமையும்.
- கூட்டங்களில் மொக்கையானவர்களை முதலிலும் சிறந்த பேச்சாளர்களையும் கடைசியிலும் பேச வைக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் தந்திரத்தை இதன் மூலம் ஒருங்கிணைக்கலாம்.
சில எச்சரிக்கைகள்:
- குடிப்பவர்களுக்கு நீச்சல் குளத்தில் அனுமதி இல்லை.
- கூட்டம் நடக்கும் ஹாலுக்குள்ளும் ஓரளவுக்கு மேல் குடித்தவர்களுக்கு இடம் இல்லை.
- லவுஞ்சில் புகைப்பவர்களுக்கு தனி இடம்.
- வெளியே பேசும் இரைச்சல் கூட்டம் நடக்கும் ஹாலில் கேட்காதபடி அமைப்பு வேண்டும்.
- கண்டிப்பாக உள்ளே கூட்டம் பிடிக்காதவர்கள் வெளியே தனியே ஒரு கூட்டம் போட்டு “அன்புள்ள மதிப்புற்குரிய” என்று பேச்சு நிகழ்த்தக் கூடாது.
- நீச்சல் குளத்தில் இருந்து சொட்ட சொட்ட கூட்டத்துக்குள் நுழையக் கூடாது. அதே போன்று சாப்பாடு, சரக்கையும் கொண்டு போகக் கூடாது.
- கூட்டத்தில் பேச இருப்பவர்களுக்கு குடிக்கவோ நீந்தவோ உரிமை இல்லை.
- கூட்டத்தை நேரலையாக டிவியில் வெளியே காட்டக் கூடாது.
இது ஜனநாயக பூர்வமாகவும் இருக்கும். வசதி உள்ள இடம் கிடைக்காதவர்கள் கடற்கரை போன்ற திறந்த வெளிகளில் நடத்தலாம். லவுஞ்ச், நீச்சல் குளம், புட் கோர்ட் எல்லாம் தேவை இல்லை.
ஏன், சமீபத்தில் எங்காவது சென்று மாட்டிக்கொண்டீர்களா?
ReplyDeleteசென்னை வந்த பிறகு தொடர்ந்து இதே போல் கசப்பான அனுபவங்கள் தான்.
ReplyDelete