Wednesday, 21 November 2012
கசாபின் தூக்குத்தண்டனையை முன்வைத்து
- மும்பை தாக்குதல் குற்றவாளி கசாப் அவசர அவசரமாக தூக்கிக் கொல்லப்பட்ட நிலையில் ஊடகங்களில் மனித உரிமைக்கான குரல்கள் மிக பலவீனமாக ஒலித்தன. அவர்களின் வாதமான மனித உயிரைப் பறிக்கும் உயிர் அரசுக்கு இல்லை என்பது பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் மீடியாக்காரர்களுக்கு ஏற்கும்படியாய் இல்லை. தாக்குதலில் இறந்த நூற்றுக்கணக்கான பேர்களின் குடும்பத்துக்கு இதனால் நியாயம் கிடைக்கும் எனும் ஒரு அசட்டு வாதம் தூக்குத்தண்டனை ஆதரவாளர்களால் வைக்கப்படுகிறது. கசாப் எனும் ஒரு தனிநபர் இறப்பதால் யாருக்கும் லாபமோ நஷ்டமோ இல்லை. இந்த உலகில் நமக்கு சம்மந்தமில்லாமல் பறிபோகும் எத்தனையோ உயிர்களில் ஒன்று தான் கசாபினுடையதும். இவ்விசயத்தில் நியாயம் என்பதன் பொருளை தவறாகவே புரிந்து கொள்கிறோம்.
-
- நியாயம் என்பது ஒருவருக்கு இழைக்கப்படும் அநீதியில் இருந்து மீட்சியும் பிரதிபலனும் அளிக்கக் கூடியது. உதாரணமாக தர்மபுரி ஜாதி வெறித் தாக்குதலில் நூற்றுக்கணக்கான் தலித்துகளின் பணமும் தங்க நகைகளும் கலவரக்காரர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. அவை மீட்கப்பட்டு தரப்பட்டால் அது நியாயம். கலவரக்காரர்களுக்கு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டால் அது தலித் மக்களுக்கு இந்த அரசின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும்; அடுத்து இதே போன்று வன்முறை நிகழ்வதை தடுக்கும். ஆனால் ஆ.மார்க்ஸ் சொல்வது போல கசாபை போன்றவர்கள் போர்முனைக்கு தன் உயிரை துச்சமாக மதித்து செல்லும் படைவீரனை போன்றவர்கள். அவர்களை தண்டனை எனும் பெயரில் கொல்லுவது அவர்களை தம் சமூகத்தில் தியாகியாக்கவும் புனிதப்படுத்தவுமே உதவும். இன்னும் முக்கியமாக கசாபின் மரண தண்டனை புவிசார் தீவிரவாதிகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு.
-
- தீவிரவாதத் தாக்குதல்களில் கசாப் போன்றவர்களின் முக்கியத்துவம் ஆகக் குறைவானது. கசாபை ஏவியவர்கள் அவன் உயிருடன் திரும்பக் கூடாது என்றே விரும்பினார்கள். தீவிரவாத அமைப்பில் கசாபை ஒத்தவர்கள் படிநிலையின் கீழே இருப்பவர்கள். அவர்களின் அழிவு இவ்வமைப்புகளுக்கு பொருட்டல்ல. இது போன்று இயக்கங்களுக்காக உயிர்த்தியாகம் பண்ணுபவர்கள் தொடர்ந்து புறப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். கல்வியும் பொருளாதார வளர்ச்சியும் குறைவான பிரதேசங்களில் இத்தகைய பகடைக்காய்களுக்கு எந்த பஞ்சமும் இராது. பாகிஸ்தானில் சுதந்திரமாக இயங்கும் ஹனீப் போன்ற தீவிரவாத தலைவர்களை நீதியின் முன் கொண்டு வந்து தண்டனை வழங்க முடிந்தால் அது அவ்வியக்கங்களை நிச்சயம் தளர்வடைய வைக்கும். இந்தியாவின் ஒரெ அனுகூலம் இவ்விசயத்தில் கசாபின் அடையாளத்தை பாகிஸ்தானியர் என நிறுவ முடிந்ததே. பாகிஸ்தானுக்கு கசாப் தொடர்ந்து ஒரு சங்கடமாகவே இருந்திருப்பான். அவனை கொல்லாமல் சிறைத்தண்டனை அளித்திருந்தால் இந்தியா பலவீனமான நாடாக அல்ல, நாகரிகமான முதிர்ச்சியான ஒரு தேசமாக தன்னை முன்னிறுத்தியிருக்க முடியும். கசாபை மன்னிப்பதன் மூலம் அரசியல் ரீதியாகவும் நமக்கு லாபமே அதிகம் இருக்கக் கூடும்.
-
- கசாபை மன்னித்தால் அவனைப் போன்ற மேலும் பல தீவிரவாதிகள் முளைத்து வந்து மக்களை கொல்லுவார்கள் என புதிய தலைமுறை டிவியில் ஒரு தமிழக வக்கீல் ஆவேசமாக அறிவித்தார். இது தீவிரவாத நடவடிக்கைகளின் செயல்பாட்டு முறை பற்றின அறியாமையை தான் காட்டுகின்றன. கசாப் என்பவர் தன் விருப்பப்படி ஒரு துப்பாக்கி தூக்கி வந்து மக்களை சுட்டுக் கொண்டவரல்ல. அவர் ஒரு பிரம்மாண்டமான புவிசார் தீவிரவாத திட்டத்தின் சிறு புள்ளி, அவ்வளவே. மும்பையில் நம் மீது இவ்வளவு அப்பட்டமான தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு நம் தண்டனை முறைகள் மென்மையானவை என்பது காரணமல்ல. நிஜமான காரணங்கள் இவை:
-
- அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான போர் எனும் பெயரிலான அரபுலகத்தின் மீதான தாக்குதல்களை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வந்தமை. மும்பையில் உள்ள யூதர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். ஏன்? மும்பை தாக்குதல் புவிசார் அரசியல் கதையாடலின் ஒரு நீட்சி. அதை இந்திய இஸ்லாமிய பயங்கரவாதம் எனப் பார்ப்பதோ, வெறுமனே இந்துக்களின் மீதான பழிவாங்கலாக காண்பதோ வெறும் எளிமைப்படுத்தல்கள் தாம்.
-
- இந்தியாவில் தொடர்ந்து இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பல்வேறு வகைகளில் அந்நியப்படுத்தப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர். கிறித்துவர்கள் அல்லது தலித்துகள் போன்று இஸ்லாமியர் வன்முறையின் வாங்கும் முனையிலே இருக்காமல் இருப்பதற்கு இங்கு இந்து-முஸ்லீம் பகைக்கு ஒரு நீண்ட வரலாறு (அதுவும் பிரித்தானியரின் புவிசார் காலனிய அரசியலின் விளைவாக) இருப்பதும், உலகம் முழுக்க இஸ்லாமியர் சகோதர உணர்வின் கீழ் ஒன்றிணைந்து மேற்குலக அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவதும் முக்கிய காரணங்கள். எளிய இஸ்லாமிய மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை இந்துத்துவா கட்சிகள் 90களின் துவக்கத்தில் இருந்து ரெண்டாயிரம் வரை நிகழ்த்தி வந்தது நிச்சயம் இங்கு தீவிரவாதத்துக்கு வளமான ஒரு சூழலை உருவாக்கி உள்ளதை மறுக்காத வேலையிலும் இந்தியா முழுக்க நடத்தப்பட் குண்டுவெடிப்புகள், சத்ரபதி சிவாஜி ரயில்நிலைய மற்றும் தாஜ் ஓட்டல் தாக்குதல்களை நாம் இந்து தீவிரவாதத்தின் எதிர்விளைவாக மட்டுமே காணக் கூடாது.
-
- முதலில் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் ஆகியற்றின் இந்துத்துவா வன்முறைகளை கண்டிப்பதும் பழிவாங்குவதும் உண்மையில் இத்தாக்குதல்களின் பிரதான நோக்கங்கள் அல்ல. அவ்வாறு இருந்தால் இங்கு பெரும்பாலான இந்துக்கள் கூடும் விழா தலங்களில் அத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக அனைத்து தாக்குதல்களும் எல்லா மத மக்களும் அழியும் படி சந்தைகள், உணவகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தான் நடத்தப்பட்டிருக்கின்றன. ஒரு காலத்தில் நக்ஸல்பாரி போராளிகள் நிலச்சுவன்தார்கள், போலீஸ், அரசியல்வாதிகளை குறிவைத்து கொன்றதை நாம் இந்த வகை தீவிரவாத தாக்குதல்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதுவரை எத்தனை முறை பா.ஜ.கா மாநாடுகள் தாக்கப்பட்டிருக்கின்றன, எத்தனை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்? இந்த தாக்குதல்கள் இந்தியாவில் இஸ்லாமியரின் அரசியல் எதிரிகளை குறிப்பாக முன்வைத்து நடத்தப்பட்டவை அல்ல. மாறாக சரிபாதி இஸ்லாமியர் இத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
-
- தாஜ் ஹோட்டலிலிலும் சத்ரபதி ரயில்நிலையத்திலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு அவை உலகின் கவனத்தை எளிதில் கவரும் என்பது முக்கிய காரணம். அது போலவே மும்பைத் தாக்குதலின் போது செல்வாக்கும் பணமும் படைத்தவர்களை கொல்வதும் லஷ்கர் போன்ற இயக்கங்களின் நோக்கமாக இருந்துள்ளது. அதிக எண்ணிக்கையில் முக்கியமான நபர்களை கொல்வதனால் பெரும் மீடியா கவனமும் உலக அங்கீகாரமும் தமக்கு கிடைக்கும் என இந்த இயக்கங்களுக்கு தெரியும்.
-
- இந்த புவிசார் தீவிரவாத இயக்கங்களுக்கு காஷ்மீர், பாபர் மசூதி கலவரத்தை விட இஸ்ரேல்-பாலஸ்தீனிய மோதல்கள் முக்கியம். அதே போன்றே அமெரிக்காவுக்கு அரபு/இஸ்லாமிய நாடுகளுடனான தொடர் சச்சரவுகளும் போர்களும். இந்தியாவின் அப்பாவி முஸ்லீம்களின் பாதுகாவலர்கள் எனும் பிம்பம் அவர்களுக்கு பாகிஸ்தானிய அரசியல் பரப்பில் தம்மை தக்க வைப்பதற்கு அவசியம். இந்த காரணத்தினாலேயே இவ்வகை தீவிரவாதத்தை இஸ்லாமிய தீவிரவாதம் என குறிப்பிடுவதில் நியாயமோ உண்மையோ இல்லை. உண்மையில் இத்தாக்குதல்கள் இந்திய இஸ்லாமிய மக்களின் போர் அல்ல. இந்திய இஸ்லாமியர்களுக்கு நம்மைப் போன்றே வேறு உருப்படியான வேலைகள் உள்ளன. அவர்கள் சமரசத்தின் வழி தம் இருப்பை நீட்டிக்கும் இந்திய மனநிலையை வலுவாக கொண்டவர்களே.
-
- புவிசார் அரபுலக தீவிரவாதத்திற்கு இங்குள்ள மக்களை இரையாக்கியதில் மதவாத சக்திகளுக்கு நிச்சயம் பங்குள்ளது. ஆனால் அதே வேளை நம் மக்களை வெறும் கூலிகளாக, பயன்பாட்டுக்குப் பின் தூக்கி வீசும் பொருட்களாக உலக தீவிரவாத இயக்கங்கள் மாற்றி வருகின்றன என்பதே உண்மை. உலகுதழுவிய சகோதரத்துவம் வெறும் மாயை. ஜப்பானியர், சீனர், இந்தியர், பாகிஸ்தானியர் என ஆசியர்களுக்கு பொதுவாக பெரும் இயக்கங்களுக்கு அடிமையாக தம்மை மாற்றிக் கொண்டு உயிர்மாய்க்கும் பண்பாட்டு மனநிலை உள்ளது. இங்கு குடும்பங்களில் ஒரு குழந்தை தன்னிலை அற்றதாக வளர்க்க்கப்படுவதில் இருந்தே இந்த அடிமை மனநிலை துவங்குகிறது. தீவிரவாத, மதவாத, கோட்பாடுசார் இயக்கங்களை இம்மனிதர்களை எளிதில் பயன்படுத்திக் கொள்கின்றன.
-
- இப்படியாக பயன்பாட்டுக்குப் பின் தூக்கி வீசப்பட்ட ஒரு குப்பை பொருள் தான் கசாப். அவரை முழுமையாக அழிப்பதன் வழி நாம் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம். இங்கு இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மையநீரோட்டத்தில் வரவேற்கப்பட்டு பாதுகாக்கப்படும் வரை, நமது காவல்துறை மற்றும் உளவுத்துறைகள் மேலும் வலுப்படுத்தப்படும் வரை இது போன்ற ஏராளமான மக்கள் அர்த்தமேயற்ற காரியங்களுக்காக பலியாக்கப்படுவதை தவிர்க்க முடியாது.
-
- நமது மீடியா தொடர்ந்து கசாபை ஒரு சாத்தானாக சித்தரித்ததில் வெற்றி கண்டதன் விளைவாகவே இன்று அவரது தூக்குதண்டனையை கொண்டாடும் மனநிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். கசாப் நாம் எல்லோரையும் போன்று ஒரு எளிய ஆன்மா. வீழ்ந்த ஆன்மா. அவர் இந்தியாவுக்கு எதிராக ஒரு போரை நிகழ்த்துவதாக கருதி இங்கு வந்தவர். எப்படி போரில் கொலை கொலையாகாதோ அது போன்றே அவர் இங்கு அழித்த நூற்றுக்கணக்கான மும்பை பொதுமக்களும் அவருக்கு வெறும் இலக்கை நோக்கிய தடைகளே. போர் மனநிலை மனிதனின் அடிப்படையான அற உணர்வை மழுங்கச் செய்வது. கசாபை விட அதிகமான எதிரிகளை போரில் கொன்ற ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் குற்றவுணர்வு அடையவோ தாம் அறம் பிழைத்ததாக ஒப்புக் கொள்ளவோ மாட்டார்கள். தூக்குக் கயிற்றின் முன் நிற்கும் அந்நொடி வரை கசாபும் அவ்வாறே தன்னை ஒரு இனத்தின் தியாகியாக மட்டுமே கருதியிருப்பார், கொலைகாரனாக அல்ல. வன்முறையும், அதற்கான நியாயப்படுத்தல்களும் இத்தகைய முரடுதட்டின கொலைக்கருவிகளை உருவாக்குகின்றன.
-
- உண்மையில், நாம் இவர்களுக்காக பரிதாபப்பட வேண்டும். இவர்கள் மனிதர்களாக மேனிலை அடைவதற்கான சந்தர்பங்களை வழங்க வேண்டும். முக்கியமாக இப்படியான நியாயப்படுத்தல்கள் சமூகத்தின் பல்வேறு தரப்புகளில் உருவாவதை எதிர்த்து போராட வேண்டும். தண்டனையின் பேரில் ஒரு மனித உயிரை மாய்ப்பது அறமற்றது என்பது மட்டுமல்ல, அதனால் சமூகத்திற்கு எந்த பயனும் இருப்பதில்லை என்பதே இங்கு கவனிக்க வேண்டியது. சிலரை சிறையில் தள்ளி கொல்வதனால் நாம் மிக பாதுகாப்பாக இருப்பதாக நினைப்பதும் அபத்தமே. நாம் வாழும் சமூகத்தில் கசாபை விட ஆபத்தானவர்கள் பலர் எட்டினால் தொடும் தொலைவிலே இருக்கிறார்கள். அவர்கள் கசாபை விட நாகரிகமானவர்களாக தளுக்காக நியாயம் பேசத் தெரிந்தவர்களாக கசாபுகளை உருவாக்குபவர்களக இருக்கிறார்கள் என்பதே வித்தியாசம்.
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
நீங்கள் சொல்கிற தீர்வுகள் எல்லாம் நீண்டகாலத் தீர்வுகள். உடனடி நியாயம் என்று ஒன்றிருக்கிறது. உங்களைப் போல எல்லாவற்றுக்கும் தத்துவ விளக்கங்கள் தந்து கொண்டு சாவகாசமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகள் எண்ணிக்கையில் 100க்குப் பத்து பேர் கூட இருக்க மாட்டார்கள். மற்றத் தொண்ணூறு பேருக்கு உடனடி நியாயம் முக்கியம். உடனடி நியாயம் தான் அரசு என்று ஒன்று இருக்கிறது, அது இயங்குகிறது என்று பெருவாரியான மக்களை நம்ப வைக்க அடிப்படைத் தேவை. அது இல்லாவிட்டால் சமூக ஒழுங்கு கெட்டு விடும்.
ReplyDeleteஉதாரணமாக டெங்கு காய்ச்சலை எடுத்துக் கொள்வோம். முதல் நடவடிக்கை காய்ச்சல் வந்தவர்களுக்கு முதலில் மருத்துவம். அது போல அன்று மும்பையில் ராணுவ நடவடிக்கை. அடுத்தது கொசு மருந்து அடித்துக் கொசுவைக் கொல்வதால் டெங்கு மேலும் பரவாமல் தடுப்பது. இது கசாப் போன்றவர்களுக்கான மரண தண்டனை. (அது தான் அவர்கள் சாகத் துணிந்து விட்டார்களென்று நீங்களே சொல்லி விட்டீர்களே) அடுத்த நடவடிக்கை தான் சிறு வயதிலிருந்தே கொசுக்கள் இல்லாமல் சுற்றுப்புறத்தைப் பேணுவது எப்படி என்று அறிவுரைப்பது, பொது சுகாதாரத்தில் அரசு தீவிரம் காட்டுவது, பாதாளச் சாக்கடைக்குப் பெரிய அளவில் திட்டங்கள் தீட்டுவது, இத்யாதி…..பொருளாதார சமத்துவம், அண்டை நாடுகள், வல்லரசு, மெல்லரசுகளுடன் நட்பு, லொட்டு, லொசுக்கெல்லாம் இந்த வகை. நீண்டகால நோக்குடன் செயல்பாடு. நீங்கள் சாமர்த்தியமாக இரண்டையும் குழப்புகிறீர்கள். கொசு மருந்து அடிக்க வேண்டாம், சின்ன வயதிலிருந்தே குழந்தைகளுக்குப் பொது சுகாதாரத்தைக் கற்றுத் தருவது தான் தீர்வென்று நீங்கள் சொல்கிறீர்கள்.
அடுத்து, இந்தப் பணியில் எளிய ஆன்மாக்களை ஏவுகிற சுத்த வீரர்களுக்கு நேரில் களத்தில் இறங்கத் துணிவிருக்காது. கொரில்லா இயக்கம் என்று சொல்லிக் கொண்டு குகைகளில் ஒளிந்து கொண்டிருப்பார்கள். தலைமைப் பீடத்தில் தாங்கள் சுகமாக இருந்து கொண்டு வேலை இல்லாத ஏழை இளைஞர்களை மூளைச்சலவை செய்து அசுரர்களாக்கி ஏவி விடும் பொட்டைகளுக்கு எய்வதற்கு அம்புகள் தேவை.
நீங்கள் சொன்னது போல் எளிய ஆன்மாக்களை மன்னித்து விட்டால் நட்ட நடு ஊரில் 120 பேரைக் குருவி சுடுவது போல் சுட்டால் கூட நம்மை மன்னித்து விடுவார்கள் என்ற தைரியம் எளிய ஆன்மாக்களுக்கு வந்து விடும். அது வந்து விட்டால் இன்னும் நிறைய எளிய ஆன்மாக்கள் இந்தப் பணிக்கு சுலபமாக முன் வருவார்கள். அம்புகள் சீப்பாகக் கிடைக்கும். பொட்டைகள் வேலையை சுளுவாக முடிப்பார்கள்.
மாறாக எளிய ஆன்மாக்களின் சப்ளை குறைந்து டிமாண்ட் அதிகரித்தால் இந்த ஆன்மாக்களைக் கண்காணிக்கும் அரசு அமைப்புகளின் வேலை எளிதாகும். தீவிர வாத அமைப்புகளின் ரிஸ்க் அதிகரிக்கும்.அது அந்த இயக்கங்களின் செயல் பாட்டுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும்.
பி.கு: பயங்கரவாதத்துக்கு இந்து, இஸ்லாம், தமிழ், சிங்களம், இந்தியா, பாகிஸ்தான் என்று எந்த prefixஉம் தேவை இல்லை. இந்தக் கிருமிகள் உலகம் பூராவும் இருக்கிறார்கள். பொட்டைகள், ஆண்மையற்றவர்கள் என்றழைத்து அவர்களை கௌரவப்படுத்துவதே சரியாக இருக்கும். (பெண்களை, மூன்றாம் பாலினரைப் புண்படுத்துவதாக எண்ணி விட வேண்டாம். மாறாக அவர்களை கௌரவமாக நல்ல சொற்களால் குறிப்பிடலாம்) பாதிப்படைகிற சாமானிய மக்கள் இவர்கள் காட்டிக் கொள்ளும் வெளி அடையாளங்களில் மயங்காமல் இன, மத, மொழி அபிமானத்தை விட்டு இவர்கள் கிருமிகள் என்ற பொது உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
// கசாபை விட அதிகமான எதிரிகளை போரில் கொன்ற ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள்.//
ReplyDeleteநீங்கள் சொல்கிற லாஜிக்கின் மற்றொரு பக்கத்தை முன் வைக்கிறேன்.
1) இதே கசாப் பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து ராணுவத்தின் சார்பாகவே உள்ளே நுழைந்திருந்தால் நீங்கள் சொல்லும் நியாயம் என்ன? நமது ராணுவம் ஊடுருவியவர்களைக் கொல்ல வேண்டும் என்பீர்களா? அல்லது பாவம், இவர்களெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காக ராணுவத்தில் சேர்ந்து இங்கு வந்திருக்கிறார்கள், சமுதாயத்தில் இவர்களை விட மோசமானவர்களெல்லாம் கலந்திருக்கிறார்கள், இவர்களை மன்னித்து மேனிலைப்படுத்தி விடலாம் என்று நினைக்க வேண்டும் என்பீர்களா? அப்படியானால் ராணுவத்தைக் கலைத்துவிட்டு எல்லைகளைக் காக்க சாமியார்களை (நித்தியானந்தா வேண்டாம்) அனுப்பி விடலாமா?
2) இதே கசாப்பின் தோழர்கள் இதே மும்பைத் தாக்குதலின் போது கமாண்டோக்களால் சுடப்பட்டதும் உங்கள் லாஜிக் படித் தவறு தானே? அவர்களையும் கமாண்டோக்கள் மன்னித்து அப்பா, உங்க சொந்த ஊருக்குப் போய் தத்துவ விசாரம் செய்து சமுதாய மேனிலை அடை என்று சொல்லியிருக்க வேண்டுமல்லவா?
ஒரே நபருக்கு இரண்டு மூன்று விதமான நியாயங்களா என்ற கேள்வி எழும் அல்லவா? எங்களைப் போல உடனடி நியாய விரும்பிகளுக்குக் குழப்பம் கிடையாது. கசாப்போ, கோத்ரா ரயில் எரித்தவர்களோ, பெஸ்ட் பேக்கரி எரித்தவர்களோ, தருமபுரியில் குடிசையை எரித்தவர்களோ, மண்ணின் மைந்தர்கள் என்ற பேரால் அப்பாவி பிஹாரிகளைக் கொன்ற சிவ சேனைக்காரர்களோ, ராஜீவ்+ 17 சாமானியர்களைக் கொன்றவர்களோ யாரானாலும் மரண தண்டனை தான் பதில். அதுவும் சாதா மரண தண்டனையாக இல்லாமல் இது போன்ற திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருக்கும் மற்ற கொலை வெறியர்களின் குலை நடுங்கவைக்கும் படியாக தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.
3) சில தினங்கள் முன் உங்கள் பதிவில் ஒரு பின்னூட்டத்துக்கு நீங்கள் அளித்த பதில்:
// ஆண்டோ கிஸ்கர்டு
உறவுகளை மட்டுமல்ல பொதுவாக பிறரை மாற்ற முடியும் என நான் நம்பவில்லை.//
ரத்தமும் சதையுமான உங்கள் சொந்த சாதிசனத்தைத் திருத்துவதில் நம்பிக்கையற்ற நீங்கள் ரத்த வெறி பிடித்தவர்களால் மூளைச் சலவை செய்யப்பட்ட கசாப் வகையறாவைத் திருத்த முடியும் என்று நம்புவது எப்படி?
Hi Abhilash,
ReplyDeleteComment by Poornam is just another substantiation why voice againt Kasab's hanging is feeble or feebled.
Dear Poornam,
I completely agree with Abhilash's view and I am strongly against death sentence to ANYONE, at the risk of being branded anti-national.
I am completely aware that my opinion is not going to make any change to this false euphoria of victory and justice, but I want to register my protest on the hope that people would change one day.
I would like to counter you, but as any amount of my argument will only reach a deaf's ears, I just want to say this :
None, None , NONE of your arguments to Abhilash justify killing a human being. I trust you would be able to understand this one day.
Regards
Arun R
அருண் அவர்களே,வாதங்கள் நீளும், செவித்திறனற்ற செவிகளில் என் சொற்கள் வீணாகும் என்றாலும் எனக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களைக் கேட்டுத்தானே ஆக வேண்டும்?
ReplyDeleteகசாப் தொங்கிய அடுத்த நொடியே நாடு முழுதும் குறிப்பாக இணையம் முழுதும் புத்தர்கள், காந்திகள் வலம் வரும் ரகசியம் என்ன?
உங்களைப் போன்றவர்களின் கருணை உண்மையெனில் நாடு அப்படியே இருப்பது ஏன், தினத்தந்தி ப்ராண்ட் கள்ளக்காதல், கொலை, கொள்ளைகள், இத்யாதிகளோடு? குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்தாகும் செய்திகள் இன்னும் வருவது எப்படி?
மனித உயிரை மனிதன் எடுக்கலாகாதென்ற பல்லவி 126 பேரைக் கொன்ற அப்பாவிகளின் உயிர் போகும் போது மட்டுமே ஒலிப்பது ஏன்? குடித்து விட்டு வண்டி ஓட்டி அடுத்தவர் உயிரைப் பறிப்பது மரண தண்டனையை விட அதிகம் நடக்கிறது.தினமும் நடக்கிறது. இந்த 'ஐயோ, மனித உயிர் போச்சே' மூக்காலழுகை அதற்குக் கிடையாதா? 126 அல்ல, ஒரு புழு, பூச்சிக்குக் கூட துரோகம் நினைக்காத ஒருவன் குடிகாரன் வண்டி ஓட்டிய போது எதிரில் வந்த பாவத்துக்காக மடிகிறான். இந்த தேசத்தில் அதற்கு யாரும் த்சு, பாவம் எனதற்கு மேல் ஃபீலிங்ஸ் காட்டுவதில்லை. உங்கள் பயணப்பாதையில் அப்படி ஒரு சம்பவத்தைப் பார்த்தால் நீங்கள் கூட உச்சுக் கொட்டி விட்டு அடுத்த வேலைக்குப் போய் விடுவீர்கள் அருண். இது தான் நிஜ நாம். இன்றைக்கு மனிதம் என்பதே இவ்வளவுதான்.
ஒரே ஒரு உயிருக்காக உங்களைப் போன்றவர்கள் இவ்வளவு ஃபீலிங்க்ஸ் காட்டுவது உண்மையென்றால்,
புத்தர்களின் சதவீதம் இணையத்தில் அதிகரித்த அதே அளவு உண்மையிலும் அதிகரித்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி அதிகரித்திருந்தால், டாஸ்மாக், தலைப்பாகட்டு கடைகளில் ஒரு சதவீதமாவது விற்பனை குறைந்திருக்க வேண்டுமே? அப்படி எதுவும் நடந்த மாதிரித் தகவல் இல்லியே? ஏனென்றால் இந்தக் கருணை வெறும் சீஸன் கருணை, ஃபேஷன் கருணை.
NONE, NONE, NONE of your arguments can justify your stand against Kasab hanging because these arguments are based on SHEER HYPOCRISY.