பொதுவாக கல்லூரியில் சில வகுப்புகள் பாடமெடுக்க கடுமையானவை என சொல்வார்கள்.
நான் படிக்கும் போது வரலாறு துறைக்கு போக ஆசிரியர்கள் பயப்படுவார்கள். பின்னர் ஆசிரியராக சேர்ந்த பிறகு அது பொருளாதாரம், கார்ப்பரேட் செக்ரடிஷிப் போன்றவையாக இருந்தது. இத்துறை மாணவர்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள், கூச்சலிடுவார்கள், கவனிக்க மாட்டார்கள், பண்பற்று நடந்து கொள்ளுவார்கள் என சக ஆசிரியர்கள் சதா நீளமான புகார் பட்டியல் வைத்திருப்பார்கள். இந்த வகுப்புகளை விட நல்ல வகுப்புகளுக்கு போவதையே விரும்புவார்கள்
. எனக்கும் புத்திசாலியான பண்பான மாணவர்கள் உள்ள வகுப்புகளோ பிடித்தது. டைம்டேபிளில் எனக்கு அம்மாதிரி வகுப்புகள் கிடைக்கும் படி பார்த்துக் கொண்டேன். கடந்த மூன்று வருடங்களில் அவ்வகுப்புகளில் என பல இனிமையான அனுபவங்கள் ஆசிரியனாக வாய்த்துள்ளன. முன்னால் மட்டமான வகுப்புக்கு போவது நினைத்தாலே மனதுக்குள் கலவரமாக கசப்பாக இருக்கும். ஏதோ தண்டனை என நினைத்துக் கொள்வேன். ஆனாலும் ஒரு கட்டத்தில் இந்த நிலைப்பாடு மாறியது.
எனக்கு எல்லா வகுப்புகளும் ஒன்று தான் என தோன்ற ஆரம்பித்தது. மாணவர்கள் தம் அறிவு/பண்பாட்டு நிலையை தாண்டி ஒரே மாதிரியானவர்கள் தாம். அவர்களின் மனப்புள்ளியை தொட்டு விட்டால் நாம் பேசுவதை கவனிப்பார்கள். பரிவாக மரியாதையாக நடந்து கொண்டால் நம்மை திரும்ப மதிப்பார்கள். நட்பு பாராட்டினால் நண்பர்கள் ஆவார்கள். இதில் நல்ல மாணவன் கெட்ட மாணவன் எல்லாம் இல்லை.
படிக்கும் படிக்காத வகுப்புகள் எனக்கு ஒன்றாக தோன்ற ஆரம்பித்தது தான் நான் பின்னால் சொன்ன மாற்றம். வகுப்புக்கு ஏற்றபடி நான் பேசுவதும் நடந்து கொள்வதும் நுட்பமான வகையில் வேறுபட்டிருக்கும். ஆனால் நான் தொடர்ந்து உரையாடுவது முகமற்ற ஒரு மக்கள் கூட்டத்துடன் தான் என்கிற உணர்வு எனக்கு இப்போதெல்லாம் வகுப்பில் ஏற்படுகிறது. அவர்களுக்கு என் மொழியும் உணர்வுகளும் அபிப்ராயங்களும் புரியும். அவர்களுக்கு தேவையானதை சொன்னால் கவனிப்பார்கள். பின்னால் மறந்து விடுவார்கள் அல்லது நினைவில் வைப்பார்கள். ஆனால் உரையாடுவதை தவிர ஒன்றுமே பொருட்டல்ல என்ற நிலைக்கு வந்து விட்டேன்.
மாணவர்களை திருத்துவதில் மாற்றி அமைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் கவனிக்கும் மாணவர்கள் முதிர்ச்சியானவர்களாக புத்திசாலிகளாகவே எப்போதும் படுகிறார்கள். அவர்களுக்கு நான் அதனால் அறிவுரை சொல்வது இல்லை. அவர்களுக்கு நான் பொறுப்பெடுப்பதில்லை. அவர்களே அவர்களுக்கு பொறுப்பு. அதனால் எனக்கு எந்த மாணவர் இடத்தும் ஏமாற்றம் இல்லை. நான் வகுப்பில் இதுவரை ஒருவரிடம் கூட கத்தினதில்லை. கோபம் என்பது ஆசிரியரின் இயலாமையில் இருந்து தோன்றுவது. வகுப்பில் ஏதாவது ஆசிரியர் கத்துவது பார்த்தால் எனக்கு அவரிடத்து தான் பரிதாபம் தோன்றும்.
இம்முறை புதுக்கல்லூரியிலும் ஒரு குறிப்பிட்ட துறையை குறிப்பிட்ட ஒரு சக ஆசிரியர் அம்மாணவர்கள் ரொம்ப சேட்டைக்காரர்கள் என்றார்கள். நான் புன்னகைத்தேன். உண்மையில் எனக்கு இதுவரை கூச்சலிடும் ஒழுக்கமற்ற வகுப்புகளால் பிரச்சனையே வந்ததில்லை. நான் அவர்களை கையாள சின்ன உத்திகள் சில வைத்துள்ளேன்.
நாய்ப் பயிற்சியில் ஒன்று சொல்வார்கள். நாயிடம் ஆணை கொடுக்கும் போது நிமிர்ந்து நின்று வலுவான குரலில் சொல்ல வேண்டும் என்று. கொஞ்சம் தயங்கினால் தன்னம்பிக்கை இன்றி கட்டளையிட்டால் நாய் எளிதில் நம் அச்சத்தை கிரகித்து விடும். நாயைப் பொறுத்த மட்டில் ஒன்றில் நீங்கள் அதன் எஜமானன் அல்லது அது உங்களுக்கு எஜமானன். அதற்கு சமத்துவம் எல்லாம் புரியாது. அதனால் உடல்மொழி ரொம்ப முக்கியம். வகுப்பிலும் இதுவே உண்மை.
மெல்ல புன்னகைத்து நாணிக் கோணி தயங்கிப் பேசும் வாத்தியார்களை மாணவர்கள் பார்த்தமட்டிலும் ஆதிக்கம் பண்ண துவங்கி விடுவார்கள். சீண்டி சத்தம் போட்டு பூனை எலியுடன் போல் விளையாடுவார்கள். ஆசிரியருக்கு கோபம் மிக மிக மாணவர்களுக்கு அதிக உற்சாகம் பிறக்கும். அவர்கள் மேலும் மேலும் சீண்டுவார்கள். ஆசிரியர் மிரட்டுவார்; அறிவுரை சொல்லுவார். இதெல்லாம் கேட்க மாணவர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கும். இது ஒரு மாணவனாக என் தனிப்பட்ட அனுபவம்.
ஆக நான் முதலில் வகுப்பில் நுழைந்ததும் சிரிக்கவோ மாணவர்களின் கண்களில் பார்க்கவோ பதற்றத்தை காட்டவோ மாட்டேன். ஒன்றுமே நடக்காதது போல் நுழைந்து யாருமே பொருட்டில்லை என்கிற பாவனையில் புத்தகத்தை எடுப்பேன். முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொள்வேன். யாராவது பேசுவது பார்த்தால் “பேசாதே” என்று கத்தவோ ஸ்ஸ் புஸ் என்று குரலெழுப்பவோ மாட்டேன். எழுப்பி விடுவேன் அல்லது வெளியே நிற்க வைப்பேன். கொஞ்ச நேரத்தில் திரும்ப அனுமதிப்பேன். ஆனால் வகுப்பு தொடர்ந்து கூச்சலிடுகிறதென்றால் அதை என் குறைபாடாக நினைத்து ஆத்திரப்பட மாட்டேன். 80 பேர் கொண்ட வகுப்பில் நாற்பது பேரை வெளியே அனுப்ப தயங்க மாட்டேன். அப்போதும் அடங்க மாட்டார்கள் என்றால் அவர்களின் துறை ஆசிரியர்கள் நடமாடும் பகுதியாய் பார்த்து நிற்க வைப்பேன். எப்போதும் பத்து பேரை வெளியே அனுப்பும் போது வேறு பத்து பேரை மன்னித்து உள்ளே சேர்த்துக் கொள்வேன். இது ஒரு சுழற்சி முறையில் நடந்து கொண்டே இருக்கும். பெரும்பாலும் எழுந்திரு, வெளியே போ கூட சொல்ல மாட்டே. சைகை தான். இதுவும் முக்கியம். வகுப்பில் வெளியே அனுப்புவது எழுந்து நிற்க வைப்பது எல்லாம் பண்ணிக் கொண்டே வகுப்பெடுத்துக் கொண்டு இருப்பேன். நீங்கள் சத்தம் போடுவதெல்லாம் எனக்கு பொருட்டல்ல என்பது நான் அவர்களுக்கு மறைமுகமாக சொல்லும் சேதி.
அடுத்து வகுப்பில் இடையிடையே பிரேக் கொடுத்து அப்போது நேரடியாக மாணவர்களிடம் சென்று அவர்களது குடும்பம் பற்றி விசாரிப்பேன். பாடத்தில் ஏதாவது திரும்ப சொல்ல வேண்டுமா எனக் கேட்பேன். ஆங்கில இலக்கணம் என்றால் பல மாணவர்களுக்கு பயிற்சி கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கும். அவர்கள் பிறர் முன்னிலையில் கூச்சம் காரணமாக சந்தேகம் கேட்க மாட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கு தனித்தனியாக சொல்லித் தந்து விடையும் எழுதிக் கொடுப்பேன். எவ்வளவு மட்டமான மாணவனாக இருந்தாலும் அவமானப்படுத்த மாட்டேன். சில பேருக்கு என்ன சொல்லிக் கொடுத்தாலும் புரியாது. அவர்களுக்கு விடை மட்டும் சொல்லித் தந்து உதவி செய்வேன். நாம் அவர்களை கண்டிக்காமல் உதவி செய்கிறோம் என்பதே அவர்களுக்கு வெகுவாக பிடித்துப் போகும்.
தண்டனை அளித்த மாணவர்களிடம் சென்று அறிவுரை எல்லாம் சொல்ல மாட்டேன். அவர்களை புன்னகையோடு அணுகி நட்பார்ந்த முறையில் பேசுவேன். சிலர் மன்னிப்பு கேட்பார்கள். அசட்டையாக கேட்பது போல விட்டு விடுவேன். வெளியே பார்க்கும் போதும் நான் வகுப்பில் சேட்டை பண்ணும் மாணவர்களிடம் தான் அதிக நட்போடு பழகுவேன். ஆனால் அதே மாணவர்களை அடுத்த வகுப்பில் பேசி கூச்சலிடும் போது தயவு பார்க்காமல் வெளியே அனுப்பி விடுவேன். சார் நம்மை தண்டித்தாலும் அவருக்கு நம்மை பிடிக்கும் என்கிற சித்திரம் அவர்களுக்கு ஏற்படும். நம் மீது வெறுப்பு தோன்றாது. இதுவரை நான் வகுப்பில் அதிகம் தண்டித்த மாணவர்கள் தான் என்னிடம் அதிக பிரியமாக இருந்திருக்கிறார்கள்.
முக்கியமாக, மாணவர்களிடம் நியாய உணர்வு அதிகம். தவறுக்கு தண்டனையை தயக்கமின்றி ஏற்பார்கள். தண்டிக்காத ஆசிரியர்களை அசடு என்றும் நினைப்பார்கள். தண்டனை என்பது வெறும் சடங்கு தான். முதிர்ச்சியற்ற கலவர வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு இந்த சடங்கு முக்கியம். இந்த சடங்கு வழி தான் நாம் அவர்களை நெருங்குகிறோம்.
எல்லா வகுப்பிலும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பவர்கள் இருப்பார்கள். சின்ன வகுப்பென்றால் யாரையும் வெளியே அனுப்ப மாட்டேன். ஓரளவுக்கு மேல் நிற்க வைத்தும் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது குறிப்பிட்ட மாணவரிடம் சென்று தனிப்பட்ட முறையில் பேசுவேன். ஏன் பேசுறீங்க என்றோ அமைதியா இரேன் என்றோ கெஞ்ச மாட்டேன். அவர்கள் அப்பா அம்மா பற்றி விசாரிப்பேன். நான் கவனித்ததில் மத்திய கீழ்மத்திய மாணவர்களிடம் குடும்பம் பற்றி விசாரித்ததும் நம்மிடம் ஒரு கூச்சம் வந்து விடும் அவர்களுக்கு. பிறகு நம் முன்னிலையில் பேச தயங்குவார்கள். எளிதில் நெருங்கி விடுவார்கள்.
இறுதியாக ஒருங்கிணைந்த பாணியில் கூச்சலிடும் மாணவர்கள் இருக்கிறார்கள். ஒரு பக்கம் கட்டுப்படுத்தினால் இன்னொரு பக்கம் கூச்சல் எழும். நம்மை மிகவும் களைத்துப் போக வைப்பார்கள். இவர்களிடம் ரொம்ப லகுவாக நடந்து கொள்வேன். இனிமையாக நடந்து கொள்வேன். அவர்களுக்கு தேவையானபடி வகுப்பெடுப்பேன். சில வகுப்புகளில் நம்மிடம் நெருங்கி விடுவார்கள். இவர்களின் பிரச்சனை தொடர்ந்து பிற ஆசிரியர்கள் மட்டம் தட்டி அந்நியப்படுத்துவது தான். அவர்களை சமமாக நடத்தி அக்கறை காட்டினால் நெருங்கி பண்பாகி விடுவார்கள். இப்படியான மாணவர்கள் பொதுவாக பிடித்த ஆசிரியர்களிடம் பாச மழை பொழிவார்கள். ஆசிரியர்கள் தாம் தம் எல்லை அறிந்து நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றி விதூஷகன் ஆக்கி விடுவார்கள்.
இன்னொரு விசயம் நம் ஈகோ. மாணவர்கள் நாம் பாடமெடுக்கும் போது பேசினால் நம்மை மதிக்கவில்லை என்று ஆத்திரம் பொங்கும். இது உண்மையல்ல. நாம் பேசுவது அவர்களுக்கு புரியாமலோ ஆர்வம் ஏற்படுத்தாமலோ இருக்கலாம். எழுபது எண்பது பேருக்கு புரியும்படி ஆர்வமூட்டும் படி பாடமெடுப்பது சாத்தியம் அல்ல. பாடம் கசப்பான மருந்து தான். ஓரளவுக்கு மேல் அதனை சுவையாக்கவும் கூடாது. ஆக, சிலர் தூங்கினால் கொட்டாவி விட்டால் பராக்கு பார்த்தால் கொஞ்சம் முணுமுணுத்தால் பொருட்படுத்த மாட்டேன். அவர்களை கவனிப்பதாகவே காட்டிக் கொள்ள மாட்டேன்.
குறிப்பாக யாராவது நாம் பேசும் போது சிரித்தால் நம்மை கேலி பண்ணுவதாக தவறாக நினைத்துக் கொண்டு ஆத்திரப்படுவோம். பொதுவாக ஆசிரியர்களுக்கு ஆகப்பெரிய குற்றமாக படுவது வகுப்பில் மாணவர்கள் தமக்குள் சிரிப்பது தான். நாம் மகத்தான காரியங்களை பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு இன்னும் சுவாரஸ்யமான தகவல்கள் தமக்குள் பரிமாற வேண்டி இருக்கலாம். தனிப்பட்ட ஜோக்குகளை சொல்ல நேரலாம். இது ஒன்றும் குற்றமல்ல.
ஒரு வகுப்பில் நாற்பது நிமிடங்கள் உரையில் 15 நிமிடங்கள் தாம் ஆதாரமானதாக இருக்கும். பெரும்பாலும் சொன்னதையே திரும்ப சொல்லி ஆதாரம் காட்டி நிறுவிக் கொண்டிருப்போம். ஒருவர் வகுப்பில் கொஞ்ச மட்டுமே கவனித்து தேவையானதை கிரகித்துக் கொள்ளலாம். சிலருக்கு தொடர்ந்து கவனிக்கும் திறன் அடிப்படையில் இருக்காது. அவர்களை எல்லாம் என்னை மட்டுமே கேள் என துன்புறுத்துவது கூடாது. ஆக நான் பேசுவதை முழுமையாக கேட்க விரும்பினால் கேட்கலாம், இல்லை கவனம் சிதறினாலும் பரவாயில்லை. அதிகம் தொந்தரவில்லாமல் கவனம் சிதற விடுபவரை நான் பொருட்படுத்துவதில்லை.
எழுபது பேர் நிசப்தமாக நம்மை கவனிப்பது போல் சில வகுப்புகளில் ஒரு தோற்றம் எழும். அது சில வகுப்புகளின் பண்பாடு. ஆர்வம் இல்லையென்றாலும் கவனிப்பது போல் மாணவர்கள் நடிப்பார்கள். பல ஆசிரியர்களுக்கு தம் உரையை எழுத்து விடாமல் மாணவர்கள் உள்வாங்குவதாய் ஒரு கிளுகிளுப்பு தோன்றும். அமைதியான வகுப்பில் இயல்பாகவே ஆசிரியருக்கு ஒரு நிறைவைத் தரும். ஆனால் இது வெறும் போலித் தோற்றமே.
எப்போதும் 70 இல் 25 பேர் தான் கவனிப்பார்கள். அவர்களில் 15 பேருக்கு என்னமோ பேசுகிறார் என்கிற அளவில் தான் புரியும். பத்து பேருக்கு சில விசயங்கள் தெளிவாக புரியும். ஐந்து பேருக்கு பெரும்பாலும் புரியும். சில வகுப்புகளில் இந்த ஐந்து ஒன்றாகக் கூட இருக்கலாம். நல்ல குரல் வளம், சரளமான மொழி, தெளிவான வெளிப்பாடு, நாடகியமான தன்னம்பிக்கையான உடல்மொழி கொண்ட ஆசிரியர்கள் ஒன்றும் புரியாத மாணவர்களை கூட ஆர்வமாக பார்க்க வைப்பார்கள். அவர்களுக்கு இந்த ஆசிரியர் குறித்து நல்ல அபிப்ராயம் இருக்கும். ஆனால் என்ன சொன்னார் என்று கேட்டால் தெரிந்திருக்காது.
வகுப்பில் எல்லாரையும் ஈர்ப்பதை விட எல்லாருக்கும் முழுமையாக புரிய வேண்டும் என எதிர்பார்ப்பதை விட அங்குள்ள மனங்களுடன் ஒரு தொடர்புநிலையை நம் பேச்சில் தக்க வைப்பது, நமது பேச்சின் ஆதார தொனியை மனதில் பதிக்க வைப்பது ஆகியவை மிகுந்த உத்வேகம் தரும் காரியங்கள். ஒரு கட்டுரையாக எழுதுவதை காட்டிலும் நேரடியாக நூற்றுக்கணக்கான் இளம் மனங்களுடன் தொடர்புறுத்துவது அதிக மன எழுச்சி தருவது. உண்மையில் மனிதர்களுடன் தொடர்ந்து பேசுவதும் அதற்கான ஒரு வெளியை எளிதாக பெறுவதும் ஆசிரிய வேலையில் தான் சாத்தியம். நம்மில் மிகச்சிலருக்குத் தான் அந்த பாக்கியம் வாய்க்கிறது.
எத்தனை பேர் தம் கருத்துக்களை யாரிடமாவது பகிர தவிக்கிறார்கள். இன்று மிகப்பெரிய தனிமை நம்மை சூழும் நிலையில் வகுப்புகள் நம்மை மனிதர்களில் ஒரு மனிதராக உணர வைக்கின்றன. இதனாலேயே மூன்று மணிநேரங்கள் தொடர்ந்து வகுப்புகளில் பேசியும் நான் களைப்பாக உணர்ந்ததில்லை. ஏனென்றால் வேறெங்கும் நம் குரலை கவனிக்க செவிகள் இல்லை. தனிமை தானே நம்மை எளிதில் களைக்க வைக்கிறது.
இந்த காரணங்களால் தான் எனக்கு நல்ல மாணவர்கள் - கெட்ட மாணவர்கள் என்கிற எதிர்நிலை போலியாக தோன்றுகிறது. எல்லா வகுப்புகளில் இருப்பதும் ஒரே முகங்கள் தாம். அவர்களின் குரலாக மாறி அவர்களோடு உரையாடுவது ஒரு மகத்துவமான அனுபவம். ஒருமுறை கல்வியில் ஒதுக்கீடு பற்றி விவாதம் வந்தது. அப்போது குலக்கல்வி முறையை எதிர்த்து திராவிடர் கழகம் போராடியது, அந்த முறையை கொண்டு வராமல் போன ஏமாற்றத்தில் ராஜாஜி ராஜினாமா செய்தது பற்றி சொன்னேன். பிறகு “குலக்கல்வி முறை இருந்திருந்தால் நீங்கள் எல்லாம் இன்று கல்லூரிக்கு வந்து இந்த வகுப்பில் அமர்ந்து கொண்டிருக்க மாட்டீர்கள்” என்றேன். அப்போது மாணவர்களின் முகங்களில் தென்பட்ட பல்வேறு பாவனைகளை கண்ணில் கடந்து போன நிழல், வெளிச்சங்களை என்னால் மறக்க முடியாது. இது தான் ஆக முக்கியமான அம்சம். மனிதர்களோடு அவர்களின் ஆதார வாழ்க்கைப் பிரச்சனை பற்றி அணுக்கமாக உரையாட வேறு எங்குமே வாய்ப்போ வெளியோ இல்லை. வாசக-எழுத்தாள உறவை விட உக்கிரமானதாக ஆசிரிய-மாணவ உறவு அங்கு மாறுகிறது.
No comments :
Post a Comment