Monday, 12 November 2012
Fire in Babylon: மேற்கிந்திய தீவுகள் அணியின் பண்பாட்டு அரசியல் எழுச்சி
மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்று வெகுவாக மாறி விட்டது. எந்தளவுக்கு என்றால் இன்று அவர்களின் பிரதான பந்து வீச்சாளர் ஒரு சுழல் பந்தாளர். ஒரு இந்தியவர். ராம்நரைன். அவரைக் காட்டித் தான் எதிரணியை அச்சுறுத்துகிறார்கள். இன்னொருவர் வேகவீச்சாளர் தான். ஆனால் அவரும் இந்தியர் தான். ராம்பால். பல-இன சமூக அடையாளத்தை பிரதிநுத்துவப்படுத்தும் இந்த அணி 1975இல் துவங்கி 15 வருட காலம் ஒரு டெஸ்ட் ஆட்டத்தைக் கூட தோற்காமல் உலக சாதனையை நிறுவிய ரிச்சர்ட்ஸ், கிரீனிட்ஜ், லாயிட், ராபர்ட்ஸ் ஆகியோரின் செவ்வியல் அணியிலிருந்து இருவிதங்களில் வேறுபடுகிறது: வேகப்பந்து வீச்சு மற்றும் கறுப்படையாள அரசியல். அந்த செவ்வியல் மேற்கிந்திய அணியின் இந்த இரு பிரதான கூறுகளையும் வரலாற்றுபூர்வமாய் விளக்கும், கலாச்சார பூர்வமாய் கொண்டாடும் ஒரு ஆவணப்படம் தான் Fire in Babylon. இது 2010இல் இங்கிலாந்தில் எடுக்கப்பட்டு வெளியானது. சிறந்த ஆவணப்படத்துக்கான British Independent Film விருதை வென்றது. இரண்டு வருடங்களுக்குப் பின் சமீபமாக இந்தியாவில் இப்படம் வெளியாகி வெகுவான கவனத்தையும் பாராட்டையும் பெற்றது.
முதலில் இப்படம் எழுபது எண்பதுகளில் ஆடின அணியின் முக்கியத்துவத்தை சொல்லுகிறது. அறுபதுகளில் தான் மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெறுகின்றன. அதுவரை மேற்கிந்தியத் தீவுகளில் கிரிக்கெட் ஒரு முக்கிய பண்பாட்டு அடையாளமாக இருந்தது – அதாவது வெள்ளையரின் பண்பாட்டை கறுப்பர்களுக்கு ஊட்ட முன்வைக்கப்பட்ட வடிவமாக இருந்தது. அமெரிக்கர்கள் தாம் ஆக்கிரமிக்கும் அந்நிய தேசங்களில் முதலில் கொக்கொ கோலாவையும் மெக்டொனால்ட்ஸ் கடைகளையும் திறந்து கலாச்சார மூளைச்சலவை செய்வது போல் அக்காலத்தில் காலனிய தேசங்களில் இங்கிலாந்து கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியது. கிரிக்கெட் என்பது ஒழுக்கத்தை கட்டுப்பாட்டை அணி வீரர்களுக்கு கற்பிக்கும் விளையாட்டாக கருதப்பட்டது. கிரிக்கெட்டின் மூலம் அணி உணர்வு எனும் அடிமை மனப்பான்மையை காலனியாதிக்க மக்களுக்குள் உருவாக்க ஆங்கிலேயர்கள் உத்தேசித்தனர். ஆனால் மேற்கிந்திய திவுகளில், இந்தியாவில் போலவே, கிரிக்கெட் ஆங்கிலேய வடிவம் மற்றும் மனப்பான்மையில் இருந்து மாறுபட்ட ஒரு சுதந்திர வடிவமாக உருவெடுத்தது. ஆனால் இதற்கு முழுவெளிப்பாடு கிடைக்கவில்லை. அறுபதுகள் வரை மேற்கிந்திய தீவுகள் தேசிய அணிக்கு தலைவராக ஒரு வெள்ளைக்காரர் தான் இருந்தார். சுதந்திரத்துக்குப் பிறகு முதன்முதலாக பிராங் வோரில் எனும் மண்ணின் மைந்தன் முதன்முதலாக மேற்கிந்தியர்களின் அணித்தலைவராக நியமிக்கப் பட்டார். இது மக்களிடையே இந்த ஆட்டத்துக்கு பெரும் ஈடுபாட்டை வரவேற்பை உருவாக்கியது. மேற்கிந்தியர்கள் தமது கிரிக்கெட்டை திறந்த இதயத்துடன் கொண்டாடத் துவங்கினார்கள்.
இன்னொரு பக்கம் அறுபதுகளுக்குப் பிறகு உலகம் முழுக்க கறுப்பின மக்கள் தம் கலாச்சார அரசியல் அடையாளத்தை மீட்கும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடத் துவங்கினர். அடிமைத்தனத்தை எதிர்த்தும் அடக்குமுறையை எதிர்த்தும் உலகமெங்கும் எழுச்சிகள் தோன்றின. இந்த இனவிடுதலை எழுச்சியின் அடையாளமாகவும் அக்காலத்தைய மேற்கிந்திய கிரிக்கெட் எப்படி இருந்தது என்பதையும் Fire in Babylon சித்தரிக்கிறது. அக்காலத்தைய மே.இ தீவுகளின் பிரதான துவக்க மட்டையாளரான கோர்டன் கிரீனிட்ஜின் குடும்பம் அவருக்கு பத்து வயது இருக்கையில் மேம்பட்ட வாழ்க்கையை தேடி மேற்கிந்திய தீவுகளில் இருந்து இங்கிலாந்துக்கு புலம் பெயர்ந்தது. அறுபதுகளில் இந்த புலம்பெயர்வுகளை இங்கிலாந்து சமூகம் வன்மத்துடன், இனவெறியுடன் இன்று அமெரிக்க சமூகம் மாற்று இனத்தவரிடம் நடந்து கொள்வதைப் போல எதிர்கொண்டது. கறுப்பர்களின் வரவு தங்கள் பொருளாதார வாய்ப்புகளை பறிப்பதால் இது வன்முறைக்கு வழிகோலும் என அரசியல் விமர்சகர்கள் டி.வியில் பேசுவதை இப்படத்தில் காட்டுகிறார்கள். கறுப்பர்களை ஒரு மிருகத்தை போல அவமதித்து கீழ்மட்டமாக நடத்தியதை நினைவுகூரும் கிரீனிட்ஜ் “இங்கிருந்து இழிவுபட்டு ஒரு புழுவைப் போல உணர்வதற்கு பேசாமல் சொந்த ஊருக்கே திரும்பி கஷ்டப்படலாம் என நாங்கள் பலதடவை யோசித்ததுண்டு”. ஆக பின்னர் மே.இ தீவுகளுக்கு திரும்பி தனது தேசிய அணியின் துவக்க மட்டையாளராக அவர் 1976இல் இங்கிலாந்துக்கு திரும்பிய போது ”ஒவ்வொரு இங்கிலாந்து வீரரின் பந்தைப் பார்க்கையில் எனக்குள் அதுவரை தேங்கியிருந்த கோபம், ஆவேசம், பழிவாங்கும் உணர்ச்சி ஆகியவற்றை திரட்டி எழுப்பி ஒவ்வொரு ஷாட்டின் மூர்க்கத்திலும் வெளிப்படுத்தினேன்” என்கிறார் கிரீனிட்ஜ். அத்தொடரில் நான்கு டெஸ்டுகளில் 829 ஓட்டங்களை (இரு இரட்டை சதங்களுடன்) எடுத்த விவியன் ரிச்சர்ட்ஸ் “கிரிக்கெட் மைதானத்தில் நாங்கள் அதுவரையிலான இனவாத வரலாற்றை தான் சந்தித்து துவம்சம் பண்ணினோம். பந்தை அடித்து வெளியே விரட்டும் போது எங்களால் இந்த ஆங்கிலேய சமூகத்தின் மீது நேரடியான காட்ட முடியாத கடும் சினத்தைத் தான் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் வெளிப்படுத்தினோம்.” என்கிறார். இத்தொடர் துவங்கும் முன் இங்கிலாந்தின் அணித்தலைவர் டோனி கிரெய்க் மேற்கிந்தியர்கள் எங்களைப் பார்த்து “பயந்து கெஞ்சக்கூடியவர்கள்” என்ற பொருளில் “we will make them grovel” என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த இழிவுபடுத்தலால் வெகுண்டெழுந்த மே.தீ அணி இங்கிலாந்தை மண்டியிட வைக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தால் ஒன்று பட்டு பெரும் ஆவேசத்துடன் தாக்கி ஆடியது. மைக்கேல் ஹோல்டிங்கும், ராபர்ட்ஸ், கார்னரும் சதா 140 கி.மீருக்கு மேல் வேகத்தில் இங்கிலாந்து வீரர்களின் விலா, தலை, கழுத்து, நெஞ்சு என குறிபார்த்து வீசினர். இங்கிலாந்து வீரர்கள் இந்த வன்முறை வீச்சு தாங்க முடியாது திணறினர். காயமுற்று வெளியேறினர். அதுவரை இனவாத அடக்குமுறையால் மூச்சு முட்டியிருந்த இங்கிலாந்தில் வசித்த கறுப்பின மக்கள் இப்போது பெரும் ஆர்வத்துடன், உற்சாகத்துடன் மைதானத்தை நோக்கி திரண்டு வந்தனர். அரங்கின் ஒருபகுதி முழுக்க அவர்கள் நிரம்பி நின்று மே.இ தீவுகள் அணியை ஆர்வாரமாய் ஆதரித்தனர். கூச்சலிட்டு கத்தி ஆட்டம் போட்டனர். அது வெறுமனே கிரிக்கெட்டுக்கான கூட்டம் அல்ல; ஒரு சமூக விடுதலைக்கான, கலாச்சார எதிர்த்தாக்குதலுக்கான வாய்ப்பாக, சந்தர்ப்பமாக கிரிக்கெட்டை கருதி “போர்க்களத்தைச் சுற்றி திரண்ட” ஆதரவாளர்கள். குறிப்பாக இந்த கறுப்பின மக்கள் கூட்டம் தம்மை பயத்தில் கெஞ்ச வைக்கப்போவதாய் திமிர்த்தனமாய் சவால் விட்ட டோனி கிரெயிக் மட்டையாட வந்த போது “make Tony grovel” (டோனியை கெஞ்சி அழ வையுங்கள்) என்று தொடர்ந்து சேர்ந்திசை போல கோஷமிட்டனர். எப்படி நாளொன்றின் இறுதியில் எல்லோரும் களைத்துப் போயிருக்கும் போது கூட டோனி கிரயிக் மட்டையாட களமிறங்கினால் அவர் மீது உயரப்பந்துகளாக வீசி காயபடுத்தும் மூர்க்க வேகத்துடன் இல்லாத ஆற்றலை எங்கிருந்தே திரட்டி தான் ஓடிச் செல்லுவேன் என மைக்கேல் ஹோல்டிங் ஓரிடத்தில் சொல்கிறார்.
பந்துவீச்சில் மட்டுமல்ல மட்டையாட்டத்திலும் மே.இ தீவினர் அபாரமான தீரத்தைக் காட்டினர். விவியன் ரிச்சர்ட்ஸ் தலைகவசம் அணியாமல் உயரப்பந்து வீச்சை எதிர்கொள்கிறார்கள். ஒரு பந்து அவரது நெஞ்சில் மோதுகிறது. பந்து வீச்சாளர் “எப்படி?” என்று ரிச்சர்ட்ஸை பார்த்து முறைக்கிறார். ரிச்சர்ட்ஸ் அவரை திரும்ப முறைக்கிறார். அவர் ஆடுதளத்தின் துவக்கப் புள்ளிக்கு சென்றதும் எங்கே ரிச்சர்ட்ஸ் வலியில் முகம் சுளிக்கிறாரா என்பதை பார்க்க மெல்ல திரும்புகிறார். இதை எதிர்பார்க்கும் ரிச்சர்ட்ஸ் வேண்டுமென்றே தொடர்ந்து அவரை முறைத்துக் கொண்டிருக்கிறார். ”வலி ஏற்பட்டாலும் அதை அந்த நேரத்தில் காட்ட முடியாது. நீ என்னை இன்னும் ஜெயிக்க வில்லை என்பதே நான் வெளிப்படுத்த விரும்பின சேதி” என்கிறார் ரிச்சர்ட்ஸ். அடுத்த பந்தும் அவரது தலையை நோக்கி மின்னல் வேகத்தில் வருகிறது. ரிச்சர்ட்ஸ் அதை ஹூக் செய்து மைதானத்துக்கு வெளியே அடிக்கிறார். அந்த ஷாட்டின் வேகம், வலிமை கண்டு இங்கிலாந்தினர் ஸ்தம்பிக்கின்றனர். இன்னொரு பந்து ரிச்சர்ட்ஸின் தலையை உரசிப் போகிறது. அவரது தொப்பி கீழே விருகிறது. அவர் அதனை அசட்டையாக எடுத்து அணிந்தபடி கம் மென்றபடி அடுத்த பந்தை மொட்டைமாடியில் இருந்து ராக்கெட் விடுவது போல் பறக்க விடுகிறார். தாம் வாழும் சமூகத்தில் சமநிலை இல்லாமல் இருக்கலாம்; ஆனால் கிரிக்கெட் மைதானத்தில் திறமையும் வீரமும் மட்டுமே தான் பேசும்; அங்கு படிநிலை உருவாக்கும் அநீதி ஆங்கிலேயர்களைக் காப்பாற்றாது என மே.இ தீவினர் நன்றாக அறிந்திருந்தனர். இத்தொடரில் இங்கிலாந்தை முழுமையாக மே.இ தீவுகள் சம்ஹாரம் செய்ததை குறிப்பிடும் விமர்சகர் ஒருவர் “முதலாளியின் பிரம்பை வாங்கி அவரது குண்டியிலே ரெண்டு அடி போடுவதென்றால் இதுதான்” என்கிறார்.
ஆனால் ஒருவருடத்துக்கு முன் மே.இ தீவுகள் அணி ஆஸ்திரேலியா சென்ற போது நிலைமை தலைகீழாக இருந்தது. மைக்கேல் ஹோல்டிங் கிரிக்கெட் என்பது கனவான்களின் ஆட்டம் என்று தான் அதுவரை நம்பியிருந்ததாக சொல்கிறார். ஆனால் ஆஸ்திரேலியர்கள் இங்கிலாந்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்து ஆபத்தான இயற்கையுடன் போராடி பழங்குடிகளை அழித்து நிலைப்பு பெற்றவர்கள். மெக்ராத்தைப் போன்று பல ஆஸி வீரர்கள் இளமையில் பண்ணைகளில் முரட்டுத்தனமாக தோள்வலிக்க உழைத்து நரிகளை வேட்டையாடி போராடி தங்கள் பயிர்களை காப்பாற்றி வளர்ந்து வந்தவர்கள். ரிக்கி பாண்டிங்கைப் போன்ற புறநகர்பகுதியின் வன்முறை கலாச்சாரத்தில் ஊறி வந்தவர்கள். அவர்கள் ஒன்றை அழித்தாலே இன்னொன்று வாழ முடியும் எனும் வலுவான நம்பிக்கை கொண்டவர்கள். பண்பாக சீராக போராடுவதே உன்னதம் எனக் கூறும் தங்கள் தாய்நில இங்கிலாந்து மக்களை பெட்டைகள் எனும் பொருளில் poms என்று கேலியாக மட்டுமே குறிப்பவர்கள். எழுபதுகளில் ஆஸி அணியின் பிரதான வேகவீச்சாளர்களாக இருந்த தாம்ஸன் மட்டும் லில்லி ஒரு ஓவரில் ஒன்றிரண்டு பந்துகளைத் தவிர மிச்சத்தை எல்லாம் மட்டையாளனின் எலும்புகளை நொறுக்குவதற்காக கடும் வன்மத்துடன் உடலை நோக்கி வீசுபவர்கள். மேற்கிந்தியத் தீவினர் அங்கே சென்ற போது அவர்களை தாக்கிய முதல் அதிர்ச்சி இந்த காட்டுமிராண்டித்தனமான சூழல் தான். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஒரே சமயம் பந்த் வீச சீறி வரும் லில்லியை நோக்கி “அவனைக் கொல் லில்லி” என்று இரைகிறார்கள். மட்டையாளர்களின் மண்டை, விலா என நொறுங்கி, ரத்தம் கன்றி அவர்கள் கீழே விழுந்து துடிப்பதை லில்லி, தாம்ஸன் ஜோடி அற்பமான புன்னகையுடன் நோக்குகிறார்கள். அப்போது மே.இ மட்டையாளர்களின் ஒரே நோக்கம் உடம்பில் அடிபடாமல் உயிர் போகாமல் பாதுகாத்துக் கொள்வது தான். வெளியேறாமல் ஆடுவது, ஓட்டம் எடுப்பது இரண்டாம் பட்சமே. லேன்ஸ் கிப்ஸ் எனும் சுழலர் லில்லியிடம் சென்று “பார் எனக்கு குடும்பம் குழந்தைகள் எல்லாம் இருக்கிறார்கள். என் உடம்பை நோக்கி பந்து வீசும் போது கொஞ்சம் கவனமாக இரு.” என்று கெஞ்சுகிறார். ஆஸ்திரேலிய பயணத்தின் துவக்கத்தில் ஆஸி அணித்தலைவர் கிரெக் சாப்பல் “உலகின் மிகச்சிறந்த அணிகள் சிறந்த வேகவீச்சாளர்களை கொண்டிருந்தன. எம்மிடம் உள்ள லில்லி, தாம்ஸன் ஜோடியும் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்கள் தாம்” என பேராசிரியர் தொனியுடன் பேட்டி அளித்த போது மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு என்றால் குறிபார்த்து உடலைத் தாக்குவது என்று மே.இந்தியர்கள் எதிர்பார்க்கவில்லை. எழுபதுகளின் மே.இ அணி பந்துவீச்சாளரான காலின் கிராப்ட் இதைப்பற்றி சொல்லும் போது “பந்துகள் துப்பாக்கி குண்டை போல எங்களை நோக்கி வந்தன. கொஞ்சம் பிசகினால் மரணம் தான். அது மைதானம் அல்ல போர்க்களம். நாங்கள் வெற்றியா தோல்வியா என்றல்ல வாழ்வா சாவா” என்று தான் யோசித்துக் கொண்டு இருந்தோம்.
இன்னொரு புறம் ஆஸ்திரேலியர்களின் இனவெறி வேறு உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. இங்கிலாந்து மக்கள் கூட இனவெறியை இவ்வளவு வெளிப்படையாக காட்ட தயங்குவார்கள். ஆனால் ஆஸிக்ககளுக்கு தான் எந்த விழுமியங்களிலும் நம்பிக்கை இல்லையே! ஆஸி பார்வையாளர்கள் நேரடியாக மே.இ தீவினரை நோக்கி “கறுப்பர்களே உங்கள் முன்னோர்கள் எல்லாம் குரங்குகள் தானே, ஆக மரங்களில் ஏறி தப்பித்துக் கொள்ளுங்கள்” என்றெல்லாம் தொடர்ந்து கூச்சலிட்டு தம்மை அவமதித்ததாக மைக்கேல் ஹோல்டிங் இப்படத்தின் பேட்டி ஒன்றில் கூறுகிறார். தன்னை அவர்கள் “கறுப்பு தேவடியா பையன்” என்று அழைத்ததாக சொல்லும் ரிச்சர்ட்ஸ் “அதை மட்டும் தாங்கிக் கொள்ள மாட்டேன். நான் ஒரு மனிதன், கறுப்பு தேவடியா பையன் அல்ல” என்று கூறுகிறார்; இதைச் சொல்லும் போது இப்போதும் உணர்ச்சிமேலிட்டு அவரது குரல் கட்டிக் கொள்கிறது. இந்த உடல் மற்றும் உளவியல் தாக்குதலை தாங்கவொண்ணாமல் மே.இ தீவினர் உருக்குலைந்து போயினர். விளைவாக அவர்கள் மிக எளிதாக தோற்று வெளியேறினர். இது ஆஸி பார்வையாளர்களுக்கு இனவெறி தாக்குதல் நிகழ்த்த இன்னும் அதிக உற்சாகத்தை தூண்டுதலை அளித்தது. வசைமாரி பொழியும் போது திரும்ப நின்று முறைத்தால் ஆஸி கூட்டத்தினர் உடனே ஏதோ பெரிய வேடிக்கையை பார்த்து விட்டது போல் சிரிக்க துவங்குவார்கள் என்கிறார் காலின் கிராப்ட். அதாவது கறுப்பினத்தவர்கள் கோபப்பதுவது என்பது அவர்களுக்கு கார்டூனில் நாய் பூனை எல்லாம் பேசுவதை பார்ப்பது போல. பார்ரா அட குரங்குக்கு கோவம் கூட வருதே என்கிற மனநிலை தான் ஆஸிக்களுக்கு அப்போது இருந்தது. இன்றும் அது ரொம்பவெல்லாம் மாறி விடவில்லை. முத்தையா முரளிதரனை ஆஸிக்கள் எப்படி கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேல் வயிற்றெரிச்சல் காரணமாக வேட்டையாடினார்கள் என்பதற்கு நாமெல்லாம் சாட்சியாகவே இருந்தோம். நம்மூருக்கு வந்து சரத் பவாரை மேடையில் இருந்து கீழே தள்ளி விட்டு சர்ச்சையில் மாட்டிக் கொண்டார்களே! அப்போது கூட அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை. பின்னர் ஒரு இந்திய வீரர் அங்கு போய் ஒரு கறுப்பின ஆஸ்திரேலிய வீரரை நோக்கி “குரங்கே” என்று பரிகசித்த போது காலசக்கரம் ஒரு சுற்று வந்து நின்றது.
இப்படத்தில் இக்காட்சிகளை எல்லாம் பார்க்கும் போது கிரிக்கெட் இப்போது எவ்வளவு நாகரிகமாக மென்மையானதாக ஏதோ கதராடை நூற்கும் தொழில் போல எந்திரத்தனமாக மாறி விட்டதை உணர்கிறோம். ஒப்பிடுகையில் அன்று கிரிக்கெட்டில் இருந்த ஆவேசம், கட்டற்ற தன்மை, மூர்க்கம் எல்லாம் இன்று மீண்டும் மறுகாலனியப்படுத்தப்பட்டு பந்துக்கும் மட்டைக்குமான எளிய போட்டியாக மாற்றப்பட்டு விட்டது. உலகம் முழுக்க ஆடுதளங்கள் மெத்தனமாகி விட்டன; வேகவீச்சாளர்கள் குறைந்து வருகிறார்கள்; ஓவருக்கு உயரப்பந்துகளும் இரண்டுக்கு மேல் கூடாது எனும் விதிமுறை உள்ளது. இது போக மட்டையாளனுக்கு ஏகப்பட்ட பாதுகாப்பு கவசங்கள் வந்து விட்டன. ஐ.பி.எல் போன்ற தனியார் தொடர்களின் ஒன்றுகூடும் அந்நிய அணி வீரர்கள் பகைமையை மறந்து நண்பர்களாக ஒரு கிரிக்கெட் போட்டி செய்தி நேர போர்க்கள காணொளிகளைப் போல வெறும் பொழுதுபோக்காக மாறி விட்டது. யார் ஜெயித்தாலும் தோற்றாலும் அதற்கு ஒரு பண்பாட்டு முக்கியத்துவம் இல்லாமல் போகி விட்டது. ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் தங்கள் சொந்த ஊருக்கு கனத்த தோல்வியின் கசப்புடன் அவமானத்துடன் ஊருக்கு திரும்பிய போது அத்தேசமே துக்கம் அனுசரித்தது. அவர்களுக்கு அத்தோல்வி என்பது தங்கள் கறுப்பின சமூகங்களின் குறியீட்டு பின்னடைவாக இருந்தது. கறுப்பர்கள் வெள்ளைர்களுக்கு நிகரானவர்கள் என்று ஒரு கிரிக்கெட் மைதானத்தில் நிரூபிக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். காலனிய நாடுகளின் கிரிக்கெட் எனும் ஒரு குறியீட்டு போட்டியின் கலாச்சார முக்கியத்துவம் என்பது அச்சமூகங்களின் எழுச்சிக்கு பெரும் தூண்டுதலை அது அளிக்கும் என்பது. உலக நாடுகளுக்கு நிகராக இந்திய மத்திய வர்க்கம் வளர்ச்சி கண்ட போது அதன் தன்னம்பிக்கைக்கு ஒரு பிரதிநிதியாக சச்சின் டெண்டுல்கரின் ஆட்டவாழ்வு திகழ்ந்ததைப் போன்று தான் எழுபது எண்பதுகளில் உருவான தோற்கடிக்க முடியாத மே.இ தீவு அணியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தம் வரலாற்றுப் பொறுப்பை புரிந்து கொண்ட மே.இ தீவு அணியின் தலைவர் கிளைவ் லாயிட் அடுத்து வரும் தொடர்களுக்காக தயாராக துவங்கினார். ஆஸிக்களின் அதே வழிமுறையை தானும் பின்பற்ற முடிவெடுத்தார். மே.இ தீவுகள் முழுக்க தேடுதல் வேட்டை நடத்தி 140 கி.மீ வேகத்துக்கு மேல் வீசத்தக்க வீரர்களை கண்டறிந்தார். ஆறு அடி எட்டு அங்குல உயரம் கொண்ட ஜோயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங், கிராப்ட், ஆண்டி ரோபர்ட்ஸ் ஆகிய நால்வர் கூட்டணி உருவானது. இன்று அனைத்து அணிகளிலும் இரண்டுக்கு மேல் வேக வீச்சாளர்கள் இருப்பதில்லை. முதல் இருபது ஓவர்களுக்குப் பிறகு மட்டையாளர்களுக்கு ஆசுவாசம் அளிக்கும் படியாய் சுமாரான வீச்சாளர்கள் எதிரணியால் கொண்டு வரப்படுவார்கள். ஆனால் அப்போதைய மே.இ தீவுகளைப் பொறுத்தமட்டில் எதிரணி மட்டையாளர்களுக்கு ஒருநொடி கூட மூச்சு வாங்கி நிதானிக்க அவகாசம் இல்லை. 80 ஓவர்களும் 145 கி.மீக்கு மேல் விலாவை நோக்கி வரும் உயிர்க்கொல்லி பந்துகளை எதிர்கொள்ளுவதென்றால் மட்டையாளர்களின் நிலைமையை கற்பனை செய்து பாருங்கள். விபத்து நேராமல் தப்பினால் போதும் என்று தான் அவர்கள் முதலில் நினைப்பார்கள். அடுத்து மே.இ தீவுகளுக்கு பயணம் வந்த இந்திய அணியும் அவ்வாறே சிந்தித்தது. ஒரு கட்டத்தில் வீரர்களில் பாதி பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் நிலை வர இந்திய அணி முதல் ஆட்டத்தை டிக்ளேர் செய்து தன் கோபத்தை காட்டியது.
இந்தியர்களுக்கு எதிரான தொடரை கைப்பற்ற மே.இ தீவுகளின் அணித்தலைவர் ஆஸ்திரேலிய உடலை தாக்கும் முறையைத் தான் பின்பற்றினார். “இது தான் தோல்வியில் இருந்து கற்றுக் கொள்வது என்பது” என்கிறார் நக்கல் சிரிப்புடன் மைக்கேல் ஹோல்டிங். இந்த அறமற்ற முறையை அறிமுகப்படுத்தியதே இங்கிலாந்து தான். 1932இல் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேறு வழியே இல்லை என்று வந்த போது ஜார்டின் எனும் இங்கிலாந்து அணித்தலைவர் 100% சராசரி கொண்ட மட்டையாள மேதை பிராட்மேனின் கால்பக்கமாய் உயரப்பந்துகள் வீசி ஷார்ட் லெக்கில் காட்ச் கொடுத்து வெளியேற வைத்தார். தொடர்ந்து பிற மட்டையாளர்களையும் இங்கிலாந்து இவ்வாறு வஞ்சகமாய் வீழ்த்த bodyline தொடர் என்று இதற்கு தனிப்பெயரே வந்தது. இதே பாணியை பின்னர் ஆஸ்திரேலியா 1970களில் பிறநாடுகளுக்கு எதிராய் கைக்கொள்ள, மே.தீ அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டு இறுதியாய் இங்கிலாந்துக்கு எதிராகவே வெற்றிகரமாய் பிரயோகித்தது. விளைவைத் தான் கட்டுரையின் ஆரம்பத்தில் கூறினேன்.
மே.இ தீவினர் Bodyline பந்து வீச்சை பயன்படுத்தி இங்கிலாந்தை ரணப்படுத்திய போது அவர்களின் மீடியா இதனை பெருங்குற்றம் என்று சித்தரித்தது. பூமராங் தம்மிடம் இருந்து கிளம்பியது தான் என்று வசதியாக அவர்கள் மறந்து விட்டனர். மே.தீவினரை “கொலைகார கும்பல்” என்று வர்ணித்தனர். மே.தீவினர் கிரிக்கெட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாக கண்டித்தனர். உடலை நோக்கிய உயரப்பந்துகளை கட்டுப்படுத்தும் சட்டம் வேண்டும் என்றனர். இதற்கெல்லாம் இந்த ஆவணப்படத்தில் மைக்கேல் ஹோல்டிங் ஒரே பதில் தான் தருகிறார்: “நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத அணிகள் மட்டுமே உயரப்பந்து வீச்சு அநியாயமானது என்றனர். அது பொறாமை, வயிற்றெரிச்சல் அல்லாமல் வேறில்லை”.
இங்கிலாந்தின் எஜமானர்களை முறியடித்து ஊர் திரும்பிய மே.இ தீவு அணியினர் அங்கு அதிமனித அந்தஸ்தை பெற்றனர். அவர்களுடைய மதிப்பு எப்படி இருந்ததென்றால் சம்பள உயர்வு கேட்டு அவர்கள் நிர்வாகத்துக்கு எதிராய் போராடி தடைவிதிக்கப்பட்ட போது மக்கள் கூட்டம் கூட்டமாய் திரண்டு வந்து தங்கள் நட்சத்திர வீரர்களை திரும்ப அழைக்க வலியுறுத்தினர். பாப் மார்லி போன்ற நட்சத்திரங்கள் டிரெஸ்ஸிங் ரூமுக்கு வந்து ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு தன்னை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியை விவியன் ரிச்சர்ஸ்ட்ஸ் நினைவு கொள்ளுகிறார். பாப் மார்லியின் Get up stand up, stand up for your right பாடலை கிரிக்கெட் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்க விடும் போது அக்காலத்தைய சூடேறிய சூழலின் வெம்மை நம்மையும் பற்றிக் கொள்ளுகிறது.
இப்படம் மே.தீ அணியின் தார்மீக வீழ்ச்சியையும் சித்தரிக்கிறது. 1982இல் இனவாத குற்றங்கள் காரணமாய் தென்னாப்பிரிக்கா அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்தது. அப்போது தென்னாப்பிரிக்கா மே.இ தீவுகளின் வீரர்களை அதிக வெகுமதி தருவதாய் தூண்டி அங்கு டெஸ்டு ஆட அழைத்தது. “எனது இன மக்களை ஆட்டுமந்தை போல சுட்டுக் கொல்லும், அல்சேஷன் நாய்களை ஏவி கடிக்க வைக்கும் தென்னாப்பிரிக்க அரசை ஆதரிக்கும் வண்ணமாய் அங்கு ஒருக்காலும் ஆடச் செல்ல மாட்டேன்” என்று விவியன் ரிச்சர்ட்ஸ் மறுத்து விட்டார். இப்படி கொள்கையில் வலுவாக இருந்தபடியால் ரிச்சர்ட்ஸ் இழந்த தொகை மில்லியன் டாலர்கள் பெறுமதி இருக்கும். இன்றைய ஐ.பி.எல் யுகத்தில் ஒரு கிரிக்கெட் வீரர் கூட இவ்வாறு தியாகம் செய்வார் என நாம் கற்பனை செய்ய முடியாது. அக்காலத்தில் இத்தகைய லட்சியவாதிகள் இருந்தார்கள் என்று யோசிக்க இப்போது மலைப்பாக இருக்கிறது. இந்த தியாகம் விவியன் ரிச்சர்ட்ஸின் மதிப்பை மே.தீவினரிடையே பன்மடங்காக்கியது. பிற்பாடு நெல்சன் மண்டேலாவை அவர் சந்தித்த போது தனது தியாகம் மற்றும் கொள்கை பிடிப்பை அவர் முடிவை வெகுவாக பாராட்டியதாக ரிச்சர்ட்ஸ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். ஆனால் காலின் கிராப்ட், ஆண்டி ராபர்ட்ஸ் போன்ற பிற நட்சத்திரங்களால் அவ்வளவு உறுதியாக இருக்க முடியவில்லை. அக்காலத்தைய வீரர்களுக்கு சம்பாத்தியம் குறைவு. வாழ்நாள் முழுக்க செல்வந்தனாக இருப்பதற்கான வாய்ப்பை கைவிட அவர்கள் தயாராக இல்லை. தென்னாப்பிரிக்கா சென்ற இந்த வீரர்கள் தம்மை கைவிட்டதாய் ஏமாற்றியதாய் மே.தீ சமூகம் கசப்புற்றது; ஒரே நாளில் அவர்கள் வில்லன்கள் ஆயினர். கிரிக்கெட் வாரியமும் அவர்களை தடை செய்தது. பின்னர் ஊர் திரும்பிய இவர்கள் கிரிக்கெட்டையும் புகழையும் அந்தஸ்தையும் துறந்து இருளுக்குள் சென்று மறைந்தனர்.
கேரி பேக்கர் எனும் ஆஸ்திரேலிய வியாபாரி ஆஸ்திரேலியாவில் World Series எனும் தனியார் போட்டித் தொடர்களை நடத்த திட்டமிட்டார். இத்தொடரில் பங்கேற்கக் கூடாது என அனைத்து நாட்டு வாரியங்களும் தடை விதித்தனர். ஆனால் ஐசிஎல்லை போல இது தடையையும் மீறி நிகழ்ந்தது. முதன்முறையாக வண்ண சீருடைகள் வெள்ளைப்பந்துடன் அறுபது ஓவர் ஆட்டங்கள் ஆடப்பட்டன. இத்தொடரில் மே.தீவினரும் தடையை மீறி பங்கு பெற்றனர். ஆனால் தடைபற்றிய பாதுகாப்பின்மை உணர்வு அவர்களின் ஆட்டத்தை பாதித்தது. தொடர்ந்து மட்டமாக அவர்கள் ஆடுவதைப் பார்த்த பேக்கர் ஒருநாள் அவர்களின் டிரெஸ்ஸிங் ரூம் சென்று “நாளையோடு ஊருக்கு கிளம்பிப் போங்கள். இன்று நன்றாக ஆடினால் மட்டும் இங்கே இருங்கள்” என்று கண்டிப்பாக கூறினார். இப்போது பாதுகாப்பின்மை உணர்வு நேர்மறையாக அணியை ஒன்றுசேர்க்க பயன்பட்டது. ஒருவருக்காக மற்றொருவர் போராடினாலே தாக்குப்பிடிக்க முடியும் என்ற தூண்டுதலில் அவர்கள் ஆவேசமாக ஆடினர். ஆஸ்திரேலியாவை வேக உயரப்பந்துகளால் அச்சுறுத்தி அவர்களின் நிலத்திலேயே அவர்களின் ஆயுதம் கொண்டு முறியடித்தது மே.தீ அணி. கேரி பேக்கர் மட்டும் அவ்வாறு அன்று பேசியிராவிட்டால் வரலாறு இவ்வாறு மாறியிருக்காது என்று ஆஸியினர் பின்னர் பலமுறை புலம்ப நேர்ந்தது. ஏனென்றால் மே.தீ அணியினர் பின்னர் 15 வருட காலம் தோல்வியே அறியாது உலகை ஆண்டனர். அதுவரை ஆஸ்திரேலியா “கறுப்பர்களுக்கு” கூஜா தூக்க நேர்ந்தது.
ஐ.பி.எல் எவ்வாறு இந்தியாவின் இளைய வீரர்களுக்கு அபார தன்னம்பிக்கை ஏற்படுத்தி, அவர்களின் களத்தடுப்பு மற்றும் உடல்தகுதி பல மடங்கு உயர்த்தியதோ அதே போன்றே மே.இ தீவினரும் கேரி பாக்கரின் தனியார் ஆட்டத்தொரில் பங்கு கொண்ட பின் சர்வதேச உடற்தகுதி பயிற்சியாளர்களின் உதவியுடன் பெருமளவில் மேம்பாடு அடைந்தனர். பிற்பாடு தம்மால் நன்றாக களத்தடுப்பு செய்யவும் நீண்ட காலம் தொடர்ச்சியாக சளைக்காது வேகப்பந்து வீசவும் இந்த உடல்தகுதி தான் காரணமாகியது என்கிறார் மைக்கேல் ஹோல்டிங்.
இறுதியாக 1984இல் அவர்கள் இங்கிலாந்துக்கு மீண்டும் பயணித்து தொடரை வெல்வதுடன் Fire in Babylon முடிவடைகிறது. அத்தொடரில் தான் மால்கம் மார்ஷல் எனும் மற்றொரு வேகப்பந்து மேதையின் ஆதிக்கம் இங்கிலாந்தை ஒரேயடியாய் பின்வாங்க வைக்கிறது. மேலும் இத்தொடருடன் மே.தீவுகள் அணி உலகம் முழுக்க வியப்பு கலந்த மரியாதையை வெல்லுகிறது. வனங்களில் இருந்து விலங்கிடப்பட்டு கப்பலில் கொண்டு வரப்பட்டு ஐரோப்பா முழுக்க அடிமைகளாய் விற்கப்பட்ட கறுப்பின மக்கள் இதன் வழி தாம் யாருக்கும் சளைத்தவரல்ல என்பது மட்டுமல்ல வெள்ளையர்களை விட மேலானவர்களும் தாம் என்கிற சேதி உலகம் முழுக்க அதிரச் செய்தனர். இங்கிலாந்து மீடியா இந்த தோல்வி whitewash அல்ல blackwash என்றது. ஆம், சூரியன் ஆப்பிரிக்காவில் உதித்தது, குறியீட்டு ரீதியாக ஏனும்.
Fire in Babylon கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு மட்டுமேயான படம் அல்ல. சொல்லப்போனால் அதிக கிரிக்கெட் பரிச்சயமோ ஈடுபாடோ இல்லாதவர்கள் கூட ஒரு மசாலா படத்தை பார்ப்பதை போல இதை ரசிக்க முடியும். நமது ரஜினி படங்களின் அதே அச்சில் வார்த்தது போன்ற திரைக்கதையும் படத்தொகுப்பும். ஒரு அணியின் அவமானகரமான தோல்வியில் ஆரம்பித்து (ரஜினி தன் உதட்டு ரத்தத்தை சுண்டி நாவில் வைத்து ருசித்து திரும்ப வில்லனை தாக்குவது போல) பின்னர் தம்மை துவம்சம் செய்த வெள்ளை அணிகளை தரைமட்டமாக்கும் ஹிரோயின் எழுச்சியை சித்தரிக்கிறது. இதில் வரும் வேகப்பந்து வீச்சில் மட்டையாளர்கள் காயமுற்று துள்ளி துடிக்கும் காட்சிகள் நிச்சயம் எந்த பதறவைக்கும் சண்டைப்படத்துக்கும் நிகரானது தான். சுவாரஸ்யமான மே.இ தீவுகளின் தனித்துவ ஆங்கிலம், பேட்டியில் வரும் தளுக்கான வசனங்களை ஒத்த வசனங்கள், மே.இ பாப், கிரிக்கெட் நாயர்களை போற்றிப் பாடப்பட்ட ரெகே பாடல்கள் என கிட்டத்தட்ட இது ஒரு இந்திய சினிமாவே தான்.
ஒருவிதத்தில் Fire in Babylonஇன் பலவீனமும் அது தான். அது கிரிக்கெட்டுக்கு வெளியே நின்று வெளியாட்களுக்காக ஒரு பண்பாட்டு அரசியல் எழுச்சியின் கதையை சொல்லுகிறது. ஆனால் மே.இ தீவுகளின் கிரிக்கெட்டுக்கு இதைத் தவிர வேறு சில முக்கிய பரிமாணங்களும் உண்டு. குறிப்பாய் மே.தீவுகள் கிரிக்கெட்டின் கவர்ச்சி என்ன, தனித்துவம் என்ன, அவர்கள் உலகை ஆக்கிரமித்ததன் ரகசியம் என்ன ஆகிய கேள்விகளை இப்படம் எதிர்கொள்ள தவறுகிறது. 1975இல் இருந்து தொண்ணூறுகள் வரை இந்த மேதைகளின் அணி அநாயசமாக ஆதிக்கம் செலுத்தியது எந்த ஒரு அடிப்படை கட்டமைப்பின் ஆதரவும் இல்லாமல் தான் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டுகிறார்கள். பின்னர் இந்த அணி ஓய்வுற்ற போது சூனியத்தில் இருந்து தரமான மற்றொரு அணியை அவர்களால் உருவாக்க முடியவில்லை. இந்த செவ்வியல் அணியின் பெரும் வெற்றிகள் மே.இ கிரிக்கெட் ஆரோக்கியமாக இருப்பதாக ஒரு பொய்ச்சித்திரத்தை தக்க வைத்தது. அவர்களின் ஓய்வுடன் அந்த கனவு தகர்ந்தது; அத்துடன் மே.இ கிரிக்கெட்டின் தொடர்வீழ்ச்சி துவங்கி இன்றுவரை தொடர்கிறது. உலகின் மிக வேகமான பந்துவீச்சாளர்களைக் கொண்டு வெற்றி பெற்ற அவ்வணி இந்த மிக மெத்தனமான ஆடுதளங்களில் மட்டுமே நன்றாக ஆட முடிகிற நிலையை அடைந்திருக்கிறது. இந்த பிரச்சனையின் துவக்கம் எதுவென இப்படத்தில் எந்த விசாரணையும் இல்லை.
சி.எல்.ஆர் ஜேம்ஸ் என்பவர் Beyond a Boundary (எல்லைக்கோட்டுக்கு அப்பால்) எனும் ஒரு நூல் எழுதியிருக்கிறார். இதில் 1910களில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார். ஜேம்ஸ் சிறுவனாக இருக்கும் போது அவரது வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஒரு மைதானத்தில் அன்றாட ஊர்க்காரர்கள் கிரிக்கெட் ஆடியபடி இருப்பார்கள். ஒருநாள் இப்படி ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது தோளில் பையுடன் ஒருவர் வருகிறது. தான் பக்கத்து ஊரில் இருந்து வருவதாக சொல்லி தனக்கு சில ஓவர்கள் மட்டையாக வாய்ப்பு வேண்டுகிறார். அவரை ஆட விடுகிறார். அவர் எந்த பந்தையும் தன் விருபப்படி அடிக்கும் திறன் பெற்றவராக இருக்கிறார். அந்த சுற்று வட்டாரத்தில் யாரும் அப்படியான ஒரு தரமான ஆட்டத்தை பார்த்ததில்லை. ஜேம்ஸுக்கு அவரைப் கவனிக்க சர்வதேச வீரரின் ஆட்டத்தை பார்ப்பது போல் இருக்கிறது. அரை சதம் கடந்து சதத்தை நெருங்கும் வேளை அவர் அவசரமாய் கடிகாரத்தை பார்த்து விட்டு ஆட்டத்தை நிறுத்துகிறார். மட்டையை திரும்ப அளித்து பையை தூக்கிக் கொண்டு மாலை நேர ரயிலை பிடிக்க கிளம்புகிறார். ஜேம்ஸ் அவரைப் பற்றி மேலும் விசாரிக்கிறார். ஊர்க்காரர்கள் அவர் ஒரு கிரிக்கெட் மேதை. ஆனால் பொருளாதார சூழ்நிலை காரணமாக கிரிக்கெட்டை கைவிட்டு ஊர் ஊராக அலைந்து தொழில் செய்யும் நிலையில் இருக்கிறார் என்று தெரிவித்தனர். அன்றைய நாள் அவர் செல்ல வேண்டிய ரயில் வர தாமதமானதால் அந்த இடைவேளையில் வந்து அற்புதமாக ஆடி அதையும் பாதியில் விட்டு சென்றிருக்கிறார். இப்படியான அவல நிலை அக்காலகட்டத்தில் ஆடின பல வீரர்களுக்கு இருந்ததாக ஜேம்ஸ் சொல்கிறார். பொருளாதார ஆதரவின்மை, கட்டமைப்புகளின் போதாமை ஆகியவை மே.இ தீவுகளின் கிரிக்கெட்டை இன்றும் கூட கடுமையாக பாதிக்கும் பிரச்சனைகள். கிரிக்கெட் எங்குமே அன்றாட வாழ்வின் நெருக்கடிகள், பொருளாதார மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் பிணைக்கப்பட்ட ஒரு கலைவடிவம் தான். இந்த பரிமாணம் இப்படத்தில் கவனத்துக்குள்ளாக இல்லை.
இப்படத்தின் முக்கிய குறை இது கிரிக்கெட்டை வெறும் அரசியல் வடிவமாக மட்டும் சித்தரிக்க முயலுகிறது என்பது. இது ரஜினியில் இருந்து தனுஷ் வரை திராவிட அரசியலை முன்வைப்பதாக பிரேம் போன்ற பின்நவீனத்துவவாதிகள் கோருவதைப் போன்றது. கால்வாசி உண்மை என்றுமே பொய் தான், அது எவ்வளவுதான் வசீகரமாக தோன்றினாலும்.
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
இந்த ஆவணப்படம் வெளிவந்த போதே இதைப்பற்றி நீங்கள் எழுதுவீர்கள் என்று நினைத்தேன்.நல்ல கட்டுரை.வேக பந்து வீச்சாளர்களின் தொடர்ச்சி ஆம்புரோஸ், வால்ஷ் வரை நீடித்தது என்று நினைக்கிறேன்.1996 உலக கோப்பை என்று நினைக்கிறேன்.தென் ஆப்பிரக்கா கால் இறுதி வரை எந்த ஆட்டத்திலும் தோற்கவில்லை.வெஸ்ட் இண்டீஸூடன் கால் இறுதி.தென் ஆப்பிரக்காதான் ஜெயிக்கும் என்று எல்லோரும் நினைத்தார்கள்.லாரா அந்த ஆட்டத்தில் 111 ரன்கள் எடுத்தார்.சந்திராபால் அரைசதம் எடுத்தார்.சந்திராபால் ஆட்டம் இழந்து வெளியேறும் போது லாரா hugged him.மேற்கிந்திய தீவுகள் வென்றது.மேற்கிந்திய தீவுகள் அணி தங்கள் திறமையினால் மட்டுமே ஆடினர் என்று தோன்றுகிறது.அவர்களை பொருளாதார ரீதியில் ஆதரிக்க ஒரு நல்ல அமைப்பு இல்லாமல் போய்விட்டது துரதரிஷ்டம்.
ReplyDeleteபோஸ்ட் சிம்ப்ளி சூபெர்ப்..!
ReplyDeleteஇப்போதைய இளம் சந்ததி மக்ரா ,லீ,டைட் ,கிலேச்பி போன்றவர்களை கொண்ட அவுஸ் தான் இப்படி மூர்க்கமான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணி என்று சொல்வதுடன் நிறுத்திக்கொள்கிறது.