Showing posts with label எழுத்துலகம். Show all posts
Showing posts with label எழுத்துலகம். Show all posts

Friday, 24 January 2014

ராயல்டி பிரச்சனை குறித்து கரிகாலனின் பின்னூட்டத்துக்கான என் எதிர்வினை


”ராயல்டி விவகாரம்” கட்டுரைக்கு நண்பர் கரிகாலன் இரு பின்னூட்டங்கள் எழுதியிருந்தார். இது குறித்த என் எதிர்வினைகள் இவை:


அன்புள்ள கரிகாலன்,
 இந்த விசயங்களை ஓரளவு உள்ளே இருந்து பார்த்தவன் என்கிற முறையில் இதை சொல்கிறேன்:
//ராயல்ட்டி என்பது அடிப்படையில் பதிப்பகத்திற்கும், எழுத்தாளருக்கும் இடையிலான, சட்டப்பூர்வமான ஒப்பந்தம். எழுத்தாளர் எழுதிய ஒரே ஒரு புத்தகம் விற்றாலும் கூட, அதற்கான ராயல்ட்டியை தருவது தான் நியாயமான செயல் மட்டுமல்ல, சட்டப்பூர்வமானதும் கூட. // 

தமிழில் இந்த ஒப்பந்த முறை முழுக்க வணிக ரீதியிலாய் இயங்குகிற கிழக்கு போன்ற பதிப்பகங்களால் தான் கொண்டு வரப்பட்டது. காலச்சுவடு கண்ணனும் பின்பற்றினார். ஆனால் கணிசமான பதிப்பகங்களில் ஒப்பந்த நடைமுறை இல்லை. இலக்கிய புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகிற அரைநூற்றாண்டாகவே இது தான் நிலைமை. வரதட்சணை வாங்குவது குற்றம், ஆனால் நடைமுறையில் இது வழமை. அது போலத் தான் ஒப்பந்தம் இங்கு. அதனால் தான் நிலைமை மெல்ல மெல்லவே மாற முடியும் என நம்புகிறேன். எந்த தொழிலும் முழுக்க வியாபாரமயமாகும் போது தான் விதிமுறைகளை கணக்கில் எடுக்கும். ராயல்டி விவகாரம் சூடாவதே இங்கு புத்தக விற்பனை காலூன்ற ஆரம்பித்த பின்னர் தான். இது ஒரு கட்டத்தில் சரியாகும் என நம்புகிறேன். ஒரு தார்மீக அடிப்படையில் இதை வழங்க வேண்டும் என்பதே என் கோரிக்கை.


ஏன் என சொல்கிறேன். சில தீவிரமான சிக்கலான புத்தகங்கள் எழுதினால் நான் அதை கிழக்கிடம் கொண்டு செல்ல முடியாது. காலச்சுவடு, தமிழினி போன்ற பதிப்பகங்களில் நட்பு முக்கியம். நான் உயிர்மையிடம் தான் செல்வேன். அல்லது சிறு பதிப்பகம் ஒன்றிடம் போக வேண்டும். ஜெ.மோவின் வெள்ளையானை போல் அவர்கள் சுமாரான தரத்துடன் தான் பதிப்பிப்பார்கள். புது எழுத்தாளன் என்றால் வாசக கவனமும் குறைவாக இருக்கும். ஆக ராயல்டியா பதிப்பா என்றால் நான் புத்தக பதிப்பு தான் முக்கியம் என்பேன். சமரசங்கள் வழியே தான் புது எழுத்தாளர்கள் இங்கு வளர்ந்து மேலே வர முடியும். லஷ்மி சரவணகுமார் போல் நீ ஏன் உணர்ச்சிகரமாய் எதிர்வினையாற்றுவது இல்லை என என் நண்பர்கள் கேட்கிறார்கள். நம் சூழலில் நட்பும், புரிதலும் முக்கியம். இது ஒருவித குடும்பப் பிரச்சனை போல. உங்களுக்கும் அண்ணனுக்கும் சண்டை என்றால் அதை சட்டப் பிரச்சனை என பார்ப்பீர்களா? குடும்ப பிரச்சனைகள் குடும்பத்துக்குள் பேசி சரி செய்யப்பட வேண்டியவை. அதனால் தான் இது போன்ற பொது அரங்கில் உள்ள ராயல்டி பற்றின விவாதஙக்ள் நடைமுறை சாத்தியங்களை கணக்கில் கொண்டவையாக நிதானமாக நடக்க வேண்டும்.
//நான் என் 'நண்பர்களுக்கு' மட்டும் தான் பதிப்பகம் நடத்துகிறேன் என்றெல்லாம் கூவுவது, ஒரு நிலப்பிரபுத்துவ மன நிலையின் வெளிப்பாடுகள்//
 இதை நான் நேர்மறையாகத் தான் பார்க்கிறேன். முழுக்க தொழில்மயமாகாத சூழல் இப்படித் தான் இருக்க முடியும். பல நல்ல புத்தகங்கள் தமிழில் எழுத்தாளன் நண்பர்களால் தான் பதிப்பாகின.
நாம் இந்த விவகாரத்தை இடதுசாரி கதையாடல் கொண்டு பெரிதுபடுத்த அவசியம் இல்லை. அந்த சித்தாந்தங்களை பெரும் பிரச்சனைகளுக்குள் கொண்டு வருவோம்.
//புத்தக விற்பனையில் ஒரு transparent accounting தேவை. ஒரு வருடத்திற்கு, இவ்வளவு புத்தகம் விற்றது என்று ஒரு எழுத்தாளனுக்குச் சொல்வதில் ஒரு பதிப்பாளருக்கு என்ன சிரமம்?// பதிப்பாளர்கள் உணர்ச்சிவசப்படாமல் எந்திரத்தனமாய் செய்ய வேண்டிய விசயம் இது. பிரச்சனை தமிழில் சில பதிப்பகங்கள் கவிஞர்களால் semi-professionalஆக நடத்தப்படுகிறது. இவர்கள் தாம் பிற வணிக ரீதியான பதிப்பாளர்களை விட அணுக்கமாக ஆதரவாக இருப்பார்கள். ஆனால் சில பிரச்சனைகளில் கொந்தளித்து பிரச்சனையை ஊதிப் பெருக்கி விடுகிறார்கள். மாறாக வணிக பதிப்பாளர்கள் உங்களை வெறும் கறிக்கோழியாகத் தான் பார்ப்பார்கள். நட்புரீதியில் எழுத்தாளர்களை வளர்த்து விட மாட்டார்கள். நான் முன்னர் என் முதல் மொழியாக்க நூலை வெளியிட ஒரு பதிப்பாளரை அணுகினேன். “கவிதை எல்லாம் நான் போடுவதில்லை. நீ என்னை இது பற்றி பேச இனிமேல் பார்க்க வராதே” என கிட்டத்தட்ட வெளியே பிடித்து தள்ளினார். மனுஷ்யபுத்திரனை போன்றவர்கள் ஒருக்காலும் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். வீடு தேடி வருகிறவரை மூர்க்கமாய் கழுத்தை பிடித்து வெளித்தள்ள மாட்டார்கள். எந்திரத்தனமான முழுக்க தொழில்ரீதியாய் இயங்கும் பதிப்பாளர்கள் மட்டும் உள்ள சூழலில் எழுத்தாளன் தனிமைப்படுவான். அவனுக்கு எழுதுவதற்கு அணுக்கமான ஒரு சூழலாக அது இருக்காது. எல்லாவற்றுக்கும் இப்படி அனுகூலங்களும் குறைகளும் உண்டு.
Read More

புத்தக பரிந்துரை பட்டியல்களின் மூன்று பிரச்சனைகள்



வாசகனுக்கு பட்டியல் நீட்டி வழிநடத்தும் பண்பாட்டுக்கு எதரானவன் நான். இதற்கு மூன்று காரணங்கள்.
11)  வாசிப்பு என்பது இலக்கியமோ அல்லது ஒரு துறை பற்றி அறிய அல்ல. சுய அறிதல் தான் வாசிப்பின் உண்மை நோக்கம். வாசகனாக அந்தஸ்தை பெற படிப்பவர்கள் போலி படிப்பாளிகள். விரிவாக கூறுகிறேன். சிறுவயதில் இருந்தே வாழ்வு குறித்த நம்பிக்கைகளும் அபிப்ராயங்களும் ரசனையும் நமக்குள் உருவாகிறது. ஆனால் இவற்றை நம்மால் நேரடியாக அறிய முடியாது. வாசிப்பு நம் ரசனைக்கு ஒரு முகம் அளிக்கிறது. அரைகுறையாய் தோன்றிய எண்ணங்களுக்கு தர்க்கமும் கூர்மையும் அளிக்கிறது. சரியான வாசிப்பை கண்டடைவது என்பது நம்மை கண்டடைவது தான். அதனால் தான் வாசகர்கள் தம் தேர்வு பற்றி என்றுமே பிடிவாதமாக இருப்பார்கள்.


 உங்களுக்கு ஆன்மீக நாட்டம் சிறுவயது முதலிலே உண்டென்றால் சிறு ஆன்மீக வெளிச்சம் இல்லாத எதுவும் ஈர்க்காது. காதல் கதையோ துப்பறியும் நாவலோ தத்துவ நோக்கு இருந்தால் தான் ரசிப்பீர்கள். அது போல் சிலருக்கு உறவுகள் மீதும், உணர்ச்சிகள் மீதும் ஒரு பிரேமை இருக்கும். வாழ்க்கை உல்லாசமானது, கொண்டாட்ட்த்துக்கு உரியது என நம்புவார்கள். என்னதான் எதிர்மறை அனுபவங்கள் நேர்ந்தாலும் ஆழ்மனது மீண்டும் மீண்டும் வாழ்க்கையை கொண்டாடுவதையே ஏற்கும். அதனால் அப்படியான புத்தகங்களையே தேடுவர். எனக்கு சிறுவயது முதலே மனிதன் அடிப்படையில் தீமையானவன் என்கிற கருத்து பிடிக்கும். அதனாலே யாரும் பரிந்துரைக்காமலே தாக்கரே எனும் எழுத்தாளரின் Vanity Fair எனும் நாவலை ரசித்து படித்தேன். அந்நாவல் முழுக்க பலவகை மனிதர்களின் பாசாங்கும் தீங்குகளும் தான் விவரிக்கப்பட்டிருக்கும். அதே வயதில் அகிலனின் சித்திரப்பாவையும் பிடித்திருந்த்து. ஆனால் அதன் மேல் நம்பிக்கை வரவில்லை. போலி என நினைத்தேன். தரம் என்பதை இப்படி நம் நம்பிக்கைகள் அல்லது வாழ்க்கை தத்துவம் பொறுத்து தான் தீர்மானிக்கிறோம். புத்தகங்களை தேடி வாசிக்க நேரமில்லை என்பவர்கள் தன்னை அறிய நேரமில்லாதவர்களே. இவர்களுக்கு ஒரு “நல்ல” புத்தகம் படிக்க வேண்டும்; தனக்கு பாதை காட்டுகிற நூல் வேண்டாம். புண்ணியம் கிடைக்கும் என புனித நூல் வாசிப்பது போன்றது இது.
இந்த புத்தகக் கண்காட்சியில் நான் சில மணிநேரங்கள் ஒரு அரங்கில் அமர்ந்து பத்து கவிதை புத்தகங்களை எடுத்து வைத்து பொறுமையாக படித்துப் பார்த்து அவற்றில் மூன்றை தேர்ந்தெடுத்தேன். என் நண்பர்கள் மிக முக்கியமானவை என சொன்ன சில நூல்கள் என்னைக் கவரவில்லை என்பதால் வாங்கவில்லை. ஒரு புத்தகத்தை அப்படியே அட்டையை பார்த்து காசு கொடுத்து வாங்குபவர்கள் வாசிப்பிற்கு முற்றிலும் அந்நியமானவர்கள். ஒரு நாய் அல்லது பூனைக்கு சாப்பிட புது பொருள் கொடுத்து பாருங்கள். முகர்ந்து நக்கிப் பார்த்து பரிசீலித்து தான் தின்னும். உணவை முகர்ந்து ரசித்து எச்சில் ஊறி உண்ணத் தயாராவது போலத் தான் நாம் வாசிப்புக்கும் தயாராக வேண்டும். புத்தகத்தை எடுத்து பின்னட்டை வாசகம், சில பக்கங்கள் என வாசித்து அது உங்கள் இதயத்தை நெருங்குகிறதா என பார்க்க வேண்டும். சில நூல்களை அவற்றின் விநோத்த்தன்மை காரணமாய் கூட வாங்கலாம். ஆனால் பிரியமான வாசிப்பு எப்போதும் அந்தரங்கமான தேர்வின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
புத்தகங்களை தேர்ந்தெடுத்து அறிய சிறந்த பயிற்சிக் களம் பழைய புத்தக கடைகள் தாம். அங்கு அவசரமின்றி ஒவ்வொரு நூலாக எடுத்து வாசித்து யோசித்து தேர்ந்தெடுக்கும் வேளையில் நமக்கான ரசனை தானே உருவாகும். இதற்கு நேரம் ஒரு குறையே அல்ல. ஏனெனில் நம் நோக்கம் நூற்றுக்கணக்கான நூல்களை வாங்கி குவிப்பது அல்ல. தேவையான குறைந்த நூல்களை வாங்கி ஆழமாய் அவற்றில் பயணிப்பது.
நீங்கள் புத்தகங்கள் கடலாய் பிரவாகித்துக் கிடக்கும் ஒரு கடையில் இருக்கிறீர்கள். அங்கு என்ன வாங்க எனத் தெரியவில்லை. அப்போது பட்டியல் இல்லாமல் எப்படி தேர்ந்தெடுப்பது? முதலில் இன்ன நூலைத் தான் வாங்குவேன் எனும் உங்கள் பிடிவாதத்தை கழற்றி வையுங்கள். முடிந்தளவுக்கு புத்தகங்களை கையில் எடுத்துப் பார்த்து புரட்டி அங்கிங்காய் வாசியுங்கள். எதையும் வாங்க வேண்டும் எனும் கட்டாயம் இல்லாமல் வெறுமனே தேடுங்கள். தேடி முடித்ததும் ஏதோ ஒரு புத்தகம் உங்களை மீண்டும் அழைக்கும். அதை வாங்குங்கள். இல்லை என்றால் அடுத்த கடைக்கோ அடுத்த சந்தர்பத்துக்கோ காத்திருங்கள். இந்த புத்தகக் கண்காட்சியில் ஒருவர் வந்தார். பிடல் காஸ்டிரோ வாசித்த ஒரு நாவல் தமிழில் மொழியாக்கப்பட்டு வந்திருக்கிறது. அது தான் வேண்டும் என்றார். என்ன நாவல் என தெரியவில்லை. கடலும் கிழவனுமா என கடைக்கார்ர் கேட்க அவர் தன் நண்பனிடம் போனில் அழைத்து கேட்டு உறுதி செய்தார். கடைக்காரர் அவரை இன்னொரு கடைக்கு போக சொன்னார். அந்த கடையில் என்னென்ன புத்தகம் இருக்கிறது எனப் பார்க்காமலே அவர் கராறாக கிளம்பி விட்டார்.
எனக்கு இரண்டு கேள்விகள் தோன்றின.
ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் நாவலை அவர் எப்படி உதிரியாக எடுத்து படிக்க முடியும்? படிப்புற்கு ஒரு தொடர்ச்சி வேண்டும். ஒரு காலகட்டத்தில் பண்பாட்டில் தோன்றுகிற நாவல்கள் ஒரு தொடர்ச்சி கொண்டவை. அதை அறியாமல் அந்நாவலின் ஆன்மாவை புரிய முடியாது. “கடலும் கிழவனும்” வெறும் கதை அல்ல. பிடல் காஸ்டிரோ படித்தார் என்பதற்காக இவருக்கும் அது பிடிக்க வேண்டும் என்றோ புரிய வேண்டும் என்றோ தேவையானதாக இருக்க வேண்டுமென்றோ அர்த்தமில்லை. ஒருவேளை அவருக்கு பொருத்தமான நூல்கள் வேறாக இருக்கக் கூடும். அவர் நின்று விசாரித்த கடையிலேயே அவை இருந்திருக்கலாம். ஆனால் அவர் தான் கண்ணைத் திறக்காமல் கடிவாளம் பூட்டியபடி அல்லவா ஓடினார்!
22)   இது என் இரண்டாவது பிரச்சனை. ஒவ்வொரு சிறந்த புத்தகமும் அது உருவாகிற சிந்தனைப் பரப்பின் ஒரு பகுதி. அந்த சிந்தனைத் தளம் உங்களுக்கு பரிச்சயமாக அல்லாத பட்சத்தில் உங்களுக்கு அந்த நூல் புரியாது. உதாரணமாக நீட்சேவின் “இவ்வாறு சொன்னான் ஜாருதுஷ்டிரனை” எடுப்போம். இது ஒரு பிரபல நூல். தமிழில் வெளியானதும் முதல் பதிப்பு வேகமாய் காலியானதாய் சொன்னார்கள். எனக்கு வியப்பாக இருந்த்து. ஏனென்றால் மேற்கத்திய தத்துவ வரலாற்றில் ஒரு மைல்கல் அந்த நூல். அதுவரையிலான பல முக்கிய தத்துவ ஞானிகளுக்கான தன் பதிலை நீட்சே அந்நூலில் வைத்திருப்பார். அந்த தத்துவ்வாதிகள் யாரென தெரியாமல், அந்த நூற்றாண்டுகளின் சிந்தனை தடம் என்னவென விளங்காமல் உங்களுக்கு ஜாருதுஷ்டிரனின் கதையும் புரியாது. கருத்துக்களும் விளங்காது. வேகமாய் வாசித்து விட்டாலும் அது நுனிப்புல் மேய்தலாகவே இருக்கும். உள்ளே நுழைய அவ்வளவு சிரமமான புத்தகம் அது. கார்ல் யுங் எனும் உளவியல் ஆய்வாளர், பிராய்டின் மாணவர், ஜாருதுஷ்டிரன் நூல் பற்றி பத்து வருடங்கள் தொடர்ந்து கருத்தரங்குகள் நட்த்தினார். கருத்தரங்க உரைகளை 1000 பக்கம் வருகிற இரு தொகுதிகளாய் வெளியிட்டார் (அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ளன). பத்து வருடங்கள் பேச வேண்டிய நூலை எந்த மேற்கத்திய தத்துவ அறிமுகமும் அற்ற தமிழ் வாசகர்கள் பத்து நாளில் வாசித்து முடித்து விட்டார்களா? இது உண்மையில் ஒரு அபத்தம். நடக்கத் தெரியாதவன் ஓடுவது போன்றது இது. தமிழில் என்ன நடந்த்தென்றால் நீட்சே எனும் கவர்ச்சியான பெயர் காரணமாக அந்நூல் வேகமாய் விற்றது. வாங்கியவர்கள் அவசரமாய் படித்து அதை ஒரு கதை அல்லது கவித்துவமான விவரணை என்கிற அளவில் புரிந்து கொண்டு மூடி வைத்தனர். பெரும்பாலானோருகு புரியவில்லை; ஆனால் நீட்சே வாசித்ததாய் பாசாங்கான திருப்தி மட்டும் அடைந்தனர். இந்நூல் ஆங்கிலத்தில் உருவாக்கிய விவாதங்களில் நூற்றில் ஒரு பகுதி கூட தமிழில் நிகழவில்லை. ஏனென்றால் நாம் அந்நூலுக்கு இங்கு தயாராகி இருக்கவில்லை. நீட்சே பதிப்பிக்கும் முன் மேற்கத்திய தத்துவத்தை எளிதில் விளக்கும் கட்டுரைகளை வெளியிட்டு விவாதித்து வாசகர்களுக்க்கு புரிய வைக்க வேண்டும். ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். பிறகு நீட்சேவை அறிமுகப்படுத்தும் நூல்கள் வர வேண்டும்; அதற்கு பின்னரே நீங்கள் “ஜாருதுஷ்டிரனுக்குள்” பயணிக்க முடியும். எந்த புத்தகத்தையும் அந்தரத்தில் இருந்து கொய்யாக்காய் பறிப்பது போல் எடுத்து வாசிக்க முடியாது. அதற்கு ஒரு தொடர்ச்சி வேண்டும். தொடர்ச்சி அமைய நம் தனிப்பட்ட ரசனை அல்லது தேடல் காரணமாய் நாம் அந்த தளத்தில் பல நூல்களை வாசித்திருக்க வேண்டும். ஒரு புத்தகம் நம்மிடம் வர வேண்டும். நாம் புத்தகத்திடம் செல்லக் கூடாது. பட்டியல்கள் நம்மை தொடர்ச்சியற்று இவ்வாறு பின்னணி புரியாத நூல்களை படிக்க தூண்டுகிறது. மொழி தெரியாத பெண்ணை பெயர் கூட கேட்காமல் முகம் நன்றாக இருக்கிறதென்று கல்யாணம் செய்வது போன்றது இது.
33)  மூன்றாவதாய், புத்தக பரிந்துரை பட்டியல்கள் ஒரு அதிகாரத்தை கட்டுவிக்கின்றன. பத்து சிறந்த நாவல்களை வெளியிடுவது பத்து அடிமைகளை வைத்து உங்களை பல்லக்கில் வைத்து தூக்கி சுமக்க போவதற்கு சம்ம். பட்டியல் உங்களை மேலான அதிகாரமிக்க ஆளாக தோன்ற செய்கிறது. தமிழில் எழுதவும் வாசிக்கவும் துவங்குகிற பலரும் கூட சிறந்த புத்தக பட்டியல்கள் வெளியிடுவது இன்று ஒரு போக்கு. பிறருக்கு வழிகாட்ட வேண்டும் என்கிற மேலான எண்ணத்தினால் மட்டும் அல்ல இது செய்யப்படுவது. பட்டியலில் இருந்து ஒரு நூலை நீக்குவது ஒரு பிளாக்மெயில். தமிழில் மிகக் குறைவாகத் தான் நூல்கள் வெளியாகின்றன. தொடர்ந்து புத்தக கடைகளுக்கு போகிறவர்க்ள் கண்ணில் நிச்சயம் எப்படியும் புது நூல்கள் படும். அவற்றை கவனிக்க வைக்க பட்டியல்களின் அவசியம் இல்லை. கணிசமான பட்டியல்கள் ஒரே நூல்களைத் தான் மீள மீள முன்வைக்கின்றன எனும் போது எதற்கு இத்தனை பட்டியல்கள் என நாம் கேட்க வேண்டும். தமிழில் பட்டியல் வெளியிடுவது மிக மோசமன கிரிமினல் நடவடிக்கையாகவே இருக்கிறது.

முடிவாக, நான் ஆரம்பத்தில் கராறான பட்டியல்களை வைத்து படித்தவன் தான். அதனால் கடும் ஏமாற்றமே எஞ்சியது. தமிழின் கணிசமான வறட்டு தகவல்கள் மட்டும் உள்ள எதார்த்தவாத நாவல்கள் என்னை ஈர்க்கவில்லை. போக போக வேறுபல விசயங்கள் பிடிக்கவில்லை. உதாரணமாய் கீராவின் ரொமாண்டிசிஸம். இப்போது நான் என் வாசிப்பில் யாரையும் குறுக்கிட அனுமதிப்பதில்லை. என் நண்பர்க்ள் அல்லது மதிக்கிறவர்களின் பேச்சில் தென்படும் புத்தகங்களை கவனிப்பேன். அவை கிடைத்தால் வழக்கம் போல் எனக்கானவையா என சோதித்துப் பார்த்தே படிப்பேன். எஸ்.ராமகிருஷ்ணன் இதற்கு நேர்மாறாக எல்லா புத்தகங்களையும் படித்து விட வேண்டும் எனும் நம்பிக்கை கொண்டவர். என் நண்பர் ஒருவர் அவரை புற்றுக்குள் கைவிட்டு பாம்பு பிடிப்பது போன்று வாசிப்பவர் என கூறுவார். ரசனை, விருப்பம், தேடல் ஆகியவற்றை கடந்து பொதுப்படையாய் வாசிக்கலாம். ஆனால் ஆய்வுக்கு மட்டுமே அது சரியாக இருக்கும். எனக்கு தேவதச்சன் பிடிக்கும். ஆனால் தேவதச்சனை விட கவிஞராக பசுவய்யா அதிகம் பிடிக்கும். தேவதச்சனின் கவிதையில் சமூகவியல், வரலாறு சார்ந்த விரிவு இல்லை என்பது என் புகார். இது குறித்து ஒரு முறை மனுஷ்யபுத்திரனிடம் வாதித்த போது அவர் ரொம்ப எரிச்சலாகி விட்டார். மனுஷுக்கு தேவதச்சம் ரொம்ப பிரியமான கவிஞன். மனுஷ் தேடும் ஏதோ ஒரு உலகை தேவதச்சன் திறந்து காண்பிக்கிறார். எனக்கு அதை பசுவய்யாவும், சச்சிதாந்தனும், அவரைப் போன்றவர்களும் செய்கிறார்கள். இரண்டு வாசகர்கள் சந்தித்தால் ஒரு போதும் இணங்க மாட்டார்கள். பொய்யான வாசகர்கள் மட்டுமே ஒரே பட்டியலை பரிமாறி புன்னகைத்து கைகுலுக்குவார்கள்.
Read More

Tuesday, 21 January 2014

ராயல்டி விவகாரம்




நூல்கள் சரியாக விற்காத போது ராயல்டி தரலாமா? இது தான் கேள்வி. ஒரு படம் பயங்கரமாய் தோல்வி அடைகிறது. அதில் நடித்துள்ளோர் மற்றும் இயக்குநருக்கு சம்பளம் கொடுக்கலாமா? எனக்குத் தெரிந்து கொடுக்கிறார்கள். ஆரம்பித்து நின்று போன படங்களில் பாட்டு எழுதியவருக்கு கூட பத்தாயிரம் சுலபமாய் வருகிறது. ஒரு பதிப்பாளர் எப்படியும் ரிஸ்க் எடுக்கிறார். புத்தகம் குறைவாய் விற்பது தவிர்க்க இயலாத பிரச்சனை.குறைவாய் ராயல்டி கொடுங்கள் என்பது என் வேண்டுகோள். முன்னூறோ ஐநூறோ அனுப்பி வையுங்கள். நேற்று கூட ஒரு கவிஞர் தனக்கு அறுநூறு ரூபாய் ஒரு தொகுப்புக்கு ராயல்டி வந்ததாய் சொன்னார். சின்ன தொகை என்றாலும் எழுத்தாளன் திருப்தியாய் உணர்வான். நண்பர் சிவராமன் கூறுவதை நான் ஏற்கவில்லை.

 மேலும் ராயல்டி போன்ற பிரச்சனைகள் ஒரு பதிப்பகத்தின் பெயரை கெடுத்து விடும். இதுவரை சிறு எழுத்தாளர்களுக்கு ராயல்டி தராதவர்களுக்கு இப்போது திடீரென தருவதில் வேறொரு சிக்கல் இருக்கும். பழைய கணக்கை எல்லாம் தூசு தட்டி ஒவ்வொருவருக்காய் அனுப்ப வேண்டும். அது ஒரு மெனக்கட்ட கடுப்படிக்கும் வேலை. ஆனால் இதை சிறுக சிறுக செய்யத் துவங்கலாம்.
நூல்கள் சரியாக விற்காக நிலையில் அந்த எழுத்தாளன் பதிப்பாளனுக்கு காசு தரலாமா? கொடுக்கலாம் என்றால் மிக அதிகமாக விற்கும் எழுத்தாளனுக்கு பதிப்பாளர் வெறும் ராயல்டி தொகை மற்றும் தரக் கூடாது. லாபத்தில் 50% மேல் கொடுக்க வேண்டும். அப்படி நடைமுறை இல்லை. வியாபாரத்தில் இரண்டுக்கும் ஒரே நடைமுறை தானே இருக்க வேண்டும். 5 கோடிக்கு ஒரு படத்தை தயாரித்து 25 கோடி லாபம் என்றால் வெற்றிக்கு பிரதான காரணமான இயக்குனருக்கும் படக்குழுவினருக்கும் சொற்ப தொகை தான் வரும். அதே வேளை தோல்வி என்றால் கடும் நஷ்டம் தயாரிப்பாளருக்கும் வெளியிடுபவருக்கும் தான். இந்த ரிஸ்கை அவர்கள் எடுப்பதால் தான் அதிக பணம் லாபமாக எடுப்பதை யாரும் கேள்வி கேட்பதில்லை. சினிமாவில் 50%மாவது வெற்றி வாய்ப்புண்டு; புத்தக பதிப்பில் அது கூட இல்லையே என ஒருவர் கேட்கலாம். கடந்த மற்றும் இந்த புத்தக சந்தையில் எனக்குத் தெரிந்தே இரு இளைய எழுத்தாளர்களின் நூல்கள் நன்கு விற்பனையாகின. இன்னொன்று, சில புத்தகங்கள் பதிப்பதகத்திற்கு மதிப்பை பெற்றுத் தருகின்றன. தேவசத்தனின் கவிதை நூல் எஸ்.ரா அளவுக்கு விற்காது. ஆனால் தேவதச்சனின் வாசகர்கள் அபூர்வமாக இருந்தாலும் அவர்களையும் தம் பால் இழுப்பது பதிப்பகங்களுக்கு அவசியமே!
சரி பிரபல எழுத்தாளர்களின் அத்தனை நூல்களும் விற்பதில்லையே! சில வருடங்களுக்கு முன் சாரு தனது கட்டுரைகள், கடிதங்கள், அரட்டைகள் அனைத்தையும் சிறு சிறு தொகுப்புகளாக 20க்கு மேல் வெளிக்கொணர்ந்தார். அவரது நாவல் தவிர கட்டுரை நூல்கள் சரியாக விற்பனை ஆகவில்லை என அறிந்தேன். அப்படி இருக்கையில் விற்காத நூல்களுக்கு சாருவுக்கு ராயல்டி வழங்கப்படாதா? வழங்குவார்கள். ஆக ராயல்டி ஒரு எழுத்தாளனின் பேரம் பேசும் மதிப்பை பொறுத்தது. எழுத்தாளன் பொன் முட்டை இடுகிற வாத்து என்றால் அவன் சில கல்முட்டைகள் இட்டாலும் அதற்கும் பணம் கொடுப்பார்கள். சாதாரண வாத்துக்கள் ஒரு பொன் முட்டையாவது எக்கி இடுகிற வரை காத்திருக்க வேண்டும்.
வேறென்ன மாற்றுவழிகள் உள்ளன? ஒன்று மின்நூல்கள். அமேசானில் மின்நூலை ஆங்கிலத்தில் சுயமாக பிரசுரிக்க வாய்ப்புண்டு. லாபத்தில் 60% எழுத்தாளனுக்கு என நினைக்கிறேன். செல்லமுத்து குப்புசாமி தன் நாவலை ஆங்கிலத்தில் இப்படி வெளியிட்டிருக்கிறார். விலை 1 டாலர். எழுபது ரூபாய். நூறு பேர் வாங்கினாலே நல்ல லாபம் தான். தமிழில் இப்படியான ஒரு விற்பனைத்தளத்தை உருவாக்க முயன்று வருவதாக பத்ரி கூறியிருக்கிறார்.
இன்னொரு வழி புத்தகத்தை தாமே விற்கும் சக்தியும் அவகாசமும் ஆர்வமும் கொண்டவர்களுக்கானது. இவர்கள் புத்தக பதிப்பில் 50% அல்லது முழு செலவை தந்து விட்டு புத்தகங்களை தாமே வாங்கி வெவ்வேறு கடைகளில் கொடுத்து விற்க முயல வேண்டும். முத்துக்கிருஷ்ணன் தான் பேசப் போகிற இடங்களில் தன் நூல்களை கொண்டு போய் ஐநூறை கொடுத்து விற்றுத் தர கேட்கிறார். அவர் தன் நூல்களை கணிசமாக இப்படி விற்றுள்ளார். வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பவர்களுக்கும் வேலை நெருக்கடி கொண்டோருக்கும் இது ஒத்து வராது. நூலுக்கு விலை ஐம்பதுக்குள் இருக்கும்படி பார்க்க வேண்டும். ஆனால் கொஞ்சம் முனைந்தால் இதை செய்ய முடியும். காசில் ஒரு பகுதியை பதிப்பாளருக்கு கொடுக்க வேண்டும். அவருடைய லோகோவுக்கு கொடுக்கிற பிரதிபலனாக.
இன்னொரு விசயம். ராயல்டி வந்தாலும் இல்லை என்றாலும் புது எழுத்தாளன் பிரசுர இடத்துக்கு தான் அதிக முக்கியத்துவம் தருவான். அவன் உதவி இயக்குனர் போல. வாய்ப்பு தான் முக்கியம். மிச்சத்தை பொருட்படுத்த மாட்டான். என் நண்பர் ஒருவர் மறியான் படத்தில் கடுமையாக உழைத்தார். அஞ்சு காசு கொடுக்கவில்லை. அப்படத்தில் வேலை செய்த இன்னொரு எழுத்தாளரிடம் கேட்ட போது ஆரம்பத்திலேயே அவங்களுக்கு காசு கொடுக்கிற ஐடியா இல்லஎன்றார். ஆனால் டெக்னீஷியன்களுக்கு கொடுத்திருப்பார்களே என்றேன். அவர்களுக்கு யூனியன் இருக்கிறதே என்றார். வாய்ப்புக்காக கூலியின்றி உழைப்பது பல துறைகளிலும் இருக்கிறது. சுதந்திர போராட்டத்துக்காக செக்கெல்லாம் இழுத்தார்களே! இதென்ன கொஞ்ச காசு தானே என நினைத்து நம்மொழிக்கும் பண்பாட்டுக்காகவும், சுயதிருப்திக்காகவும் எழுத வேண்டியது தான். இந்த மாதிரி கசப்பெல்லாம் தோன்றக் கூடாது என்று தான் நான் எழுதும் போது கேட்கும் எம்.ஜி.ஆர் பாட்டு இது. இதன் பின்னணி இசை நமக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும்
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates