”ராயல்டி விவகாரம்” கட்டுரைக்கு நண்பர் கரிகாலன் இரு பின்னூட்டங்கள் எழுதியிருந்தார். இது குறித்த என் எதிர்வினைகள் இவை:
அன்புள்ள கரிகாலன்,
இந்த விசயங்களை ஓரளவு உள்ளே இருந்து பார்த்தவன் என்கிற முறையில் இதை சொல்கிறேன்:
//ராயல்ட்டி என்பது அடிப்படையில் பதிப்பகத்திற்கும், எழுத்தாளருக்கும் இடையிலான, சட்டப்பூர்வமான ஒப்பந்தம். எழுத்தாளர் எழுதிய ஒரே ஒரு புத்தகம் விற்றாலும் கூட, அதற்கான ராயல்ட்டியை தருவது தான் நியாயமான செயல் மட்டுமல்ல, சட்டப்பூர்வமானதும் கூட. //
தமிழில் இந்த ஒப்பந்த முறை முழுக்க வணிக ரீதியிலாய் இயங்குகிற கிழக்கு போன்ற பதிப்பகங்களால் தான் கொண்டு வரப்பட்டது. காலச்சுவடு கண்ணனும் பின்பற்றினார். ஆனால் கணிசமான பதிப்பகங்களில் ஒப்பந்த நடைமுறை இல்லை. இலக்கிய புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகிற அரைநூற்றாண்டாகவே இது தான் நிலைமை. வரதட்சணை வாங்குவது குற்றம், ஆனால் நடைமுறையில் இது வழமை. அது போலத் தான் ஒப்பந்தம் இங்கு. அதனால் தான் நிலைமை மெல்ல மெல்லவே மாற முடியும் என நம்புகிறேன். எந்த தொழிலும் முழுக்க வியாபாரமயமாகும் போது தான் விதிமுறைகளை கணக்கில் எடுக்கும். ராயல்டி விவகாரம் சூடாவதே இங்கு புத்தக விற்பனை காலூன்ற ஆரம்பித்த பின்னர் தான். இது ஒரு கட்டத்தில் சரியாகும் என நம்புகிறேன். ஒரு தார்மீக அடிப்படையில் இதை வழங்க வேண்டும் என்பதே என் கோரிக்கை.
ஏன் என சொல்கிறேன். சில தீவிரமான சிக்கலான புத்தகங்கள் எழுதினால் நான் அதை கிழக்கிடம் கொண்டு செல்ல முடியாது. காலச்சுவடு, தமிழினி போன்ற பதிப்பகங்களில் நட்பு முக்கியம். நான் உயிர்மையிடம் தான் செல்வேன். அல்லது சிறு பதிப்பகம் ஒன்றிடம் போக வேண்டும். ஜெ.மோவின் வெள்ளையானை போல் அவர்கள் சுமாரான தரத்துடன் தான் பதிப்பிப்பார்கள். புது எழுத்தாளன் என்றால் வாசக கவனமும் குறைவாக இருக்கும். ஆக ராயல்டியா பதிப்பா என்றால் நான் புத்தக பதிப்பு தான் முக்கியம் என்பேன். சமரசங்கள் வழியே தான் புது எழுத்தாளர்கள் இங்கு வளர்ந்து மேலே வர முடியும். லஷ்மி சரவணகுமார் போல் நீ ஏன் உணர்ச்சிகரமாய் எதிர்வினையாற்றுவது இல்லை என என் நண்பர்கள் கேட்கிறார்கள். நம் சூழலில் நட்பும், புரிதலும் முக்கியம். இது ஒருவித குடும்பப் பிரச்சனை போல. உங்களுக்கும் அண்ணனுக்கும் சண்டை என்றால் அதை சட்டப் பிரச்சனை என பார்ப்பீர்களா? குடும்ப பிரச்சனைகள் குடும்பத்துக்குள் பேசி சரி செய்யப்பட வேண்டியவை. அதனால் தான் இது போன்ற பொது அரங்கில் உள்ள ராயல்டி பற்றின விவாதஙக்ள் நடைமுறை சாத்தியங்களை கணக்கில் கொண்டவையாக நிதானமாக நடக்க வேண்டும்.
//நான் என் 'நண்பர்களுக்கு' மட்டும் தான் பதிப்பகம் நடத்துகிறேன் என்றெல்லாம் கூவுவது, ஒரு நிலப்பிரபுத்துவ மன நிலையின் வெளிப்பாடுகள்//
இதை நான் நேர்மறையாகத் தான் பார்க்கிறேன். முழுக்க தொழில்மயமாகாத சூழல் இப்படித் தான் இருக்க முடியும். பல நல்ல புத்தகங்கள் தமிழில் எழுத்தாளன் நண்பர்களால் தான் பதிப்பாகின.
நாம் இந்த விவகாரத்தை இடதுசாரி கதையாடல் கொண்டு பெரிதுபடுத்த அவசியம் இல்லை. அந்த சித்தாந்தங்களை பெரும் பிரச்சனைகளுக்குள் கொண்டு வருவோம்.
//புத்தக விற்பனையில் ஒரு transparent accounting தேவை. ஒரு வருடத்திற்கு, இவ்வளவு புத்தகம் விற்றது என்று ஒரு எழுத்தாளனுக்குச் சொல்வதில் ஒரு பதிப்பாளருக்கு என்ன சிரமம்?// பதிப்பாளர்கள் உணர்ச்சிவசப்படாமல் எந்திரத்தனமாய் செய்ய வேண்டிய விசயம் இது. பிரச்சனை தமிழில் சில பதிப்பகங்கள் கவிஞர்களால் semi-professionalஆக நடத்தப்படுகிறது. இவர்கள் தாம் பிற வணிக ரீதியான பதிப்பாளர்களை விட அணுக்கமாக ஆதரவாக இருப்பார்கள். ஆனால் சில பிரச்சனைகளில் கொந்தளித்து பிரச்சனையை ஊதிப் பெருக்கி விடுகிறார்கள். மாறாக வணிக பதிப்பாளர்கள் உங்களை வெறும் கறிக்கோழியாகத் தான் பார்ப்பார்கள். நட்புரீதியில் எழுத்தாளர்களை வளர்த்து விட மாட்டார்கள். நான் முன்னர் என் முதல் மொழியாக்க நூலை வெளியிட ஒரு பதிப்பாளரை அணுகினேன். “கவிதை எல்லாம் நான் போடுவதில்லை. நீ என்னை இது பற்றி பேச இனிமேல் பார்க்க வராதே” என கிட்டத்தட்ட வெளியே பிடித்து தள்ளினார். மனுஷ்யபுத்திரனை போன்றவர்கள் ஒருக்காலும் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். வீடு தேடி வருகிறவரை மூர்க்கமாய் கழுத்தை பிடித்து வெளித்தள்ள மாட்டார்கள். எந்திரத்தனமான முழுக்க தொழில்ரீதியாய் இயங்கும் பதிப்பாளர்கள் மட்டும் உள்ள சூழலில் எழுத்தாளன் தனிமைப்படுவான். அவனுக்கு எழுதுவதற்கு அணுக்கமான ஒரு சூழலாக அது இருக்காது. எல்லாவற்றுக்கும் இப்படி அனுகூலங்களும் குறைகளும் உண்டு.
அன்புள்ள அபிலாஷ்,
ReplyDeleteஎன் பின்னூட்டத்தைத் திரும்பப் படித்த போது, கொஞ்சம் மிதமாக எழுதியிருக்கலாமோ என எண்ணத் தோன்றியது.
இலக்கியத் தரமறிந்து, புதிய கவிஞசர்களை பிரசுரிக்கும்/ஊக்குவிக்கும் பதிப்பாளர்கள், வியாபார நோக்கோடு மாத்திரம் செயல்படும் பதிப்பாளர்கள்,என இரு வகையாகப் பிரிக்கிறீர்கள். இந்த வருட புத்தகச் சந்தையில் சில 'இலக்கிய' பதிப்பாளர்கள் சாதாரணமான சில மழைக் கால ஈசல்கள் எழுதிய புத்தகங்களை சந்தைப் படுத்த எடுத்த முஸ்தீபுகளைப் பார்த்தால், உண்மையிலேயே பதிப்பத்தாரிடையே இப்படிப் பட்ட வேறுபாடு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
இத்தகைய ராயல்ட்டி பற்றிய விவாதங்கள், ஒருவேளை, தற்சமயம் நிலவும் semi-professional attitude-ஐ மாறுவதற்கான சூழலை உருவாக்கலாம்.
இருந்தாலும், உங்களைப் போல, எனக்கு இந்த விஷயங்களில் நேரடி அனுபவம் கிடையாது. நடைமுறை சார்ந்த உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்.
அன்புடன்,
ராஜா
அன்புள்ள ராஜா
ReplyDeleteஇன்று சூழல் மிக மிக கவலையாக மாறி வருகிறது. ஆனால் தீவிரமான விசயங்களுக்கும் இடம் உள்ளது. அதனால் நாம் இதை மேலும் நாசூக்காக நிதானமாக கையாள வேண்டும் என நினைக்கிறேன். தவறு இருந்தால் விமர்சிப்போம். ஆனால் நாம் இங்கு வேலை செய்வதே சூழலை மேம்படுத்த உதவும். உங்கள் கருத்துக்கு நன்றி