நாம் கலைஞரை விமர்சிப்பது போல் ஏன் ஜெயாவை செய்வதில்லை?
1.கலைஞரின் குடும்ப அரசியல் தான் விமர்சிக்கப்படுகிறது. மேலும் குடும்பத்துக்கு முன்னுரிமை கொடுக்கிற பேரில் அவர் எல்லாரையும் குழப்பி தன்னை மட்டும் தக்க வைக்கிற அரசியல் எரிச்சலூட்டுகிறது. ஜெயலலிதாவிடம் குடும்ப அரசியல் இல்லை. உதிரியாக ஒன்றிரண்டு காட்டலாமே ஒழிய அவருடையது குடும்ப அரசியல் அல்ல, தனிமனித அதிகார அரசியல். ரெண்டையும் குழப்ப முடியாது.
2. ஜெயாவின் சர்வாதிகாரத்தை விமர்சிக்க வேண்டிய கட்டத்தில் விமர்சித்திருக்கிறோம். குறிப்பாக அண்ணா நூலகத்தை பெயர்க்க நினைத்த போது. ஜெயா யாரையும் அதற்காக உள்ளே போடவில்லை. ஜெயாவைப் பார்த்து பேஸ்புக் அல்லது இணையத்தில் இயங்குபவர்கள் பயந்து நடங்குவதாக கூறுவது அபத்தமான பார்வை.
3. கலைஞர் மிகவும் தனிப்பட்ட முறையில் தாக்க்கப்படுகிறார் என்பது உண்மை தான். இங்கு இரண்டு விசயங்கள் சொல்ல வேண்டும். அவதூறு அரசியல் நம் நடைமுறை அரசியலின் பகுதி. பொதுமேடைகளில் பரஸ்பரம் கேவலமாக திட்டிக் கொள்வது நம் அரசியல் பண்பாடு. இன்று இணையத்தில் எழுதப்படுகிற விமர்சன்ங்களிலும் அதுவே பிரதிபலிக்கிறது. அடுத்து, கணிசமான ஈழத்தமிழர்கள் கலைஞர் தம்மை ஏமாற்றி விட்டதாக நம்புகிறார்கள். அவர்களின் கோபம் நியாயமானது. அவர்கள் காறித் தான் உமிழ்வார்கள். ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
4. ஜெயாவின் ஆட்சியின் குற்றங்களை கண்டுபிடித்து எழுத வேண்டியது மீடியாவின் பொறுப்பு. நம் மீடியா பொருளாதார லாபத்துக்காக ஆப்பில் உட்கார்ந்த குரங்கு போல் இவ்விசயத்தில் கையை கட்டி இருக்கிறது. இது நம் தவறல்ல. விமர்சனமும், ஊழல் போன்ற குற்ற வெளிப்பாடுகளும் மீடியாவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அது ஜெயாவை விமர்சிப்பதற்கான சூழலை உருவாக்கும். வலைதொடர்பு தளங்களில் விமர்சனங்கள் அப்போது தான் ஆரம்பிக்கும்.
5. பொதுவாக திமுக ஆட்சியிலும் நம் மீடியா ஜெயா மீது மயிலிறகால் தான் வருடுகிறதா? இது தான் விவாதிக்க வேண்டிய விசயம். எந்தெந்த பத்திரிகை என்று முன்பு டான் அசோக் ஒரு பதிவில் எழுதியதாய் நினைவு. இப்போது இந்த பத்திரிகைகளை வெளியே கொண்டு வந்து விவாதிப்போம். அது நியாயம். இதில் பார்ப்பனிய அரசியல் செயல்படுகிறதா? அதையும் விவாதிப்போம். ஆனால் பிரச்சனை பார்ப்பனியம் மட்டும் அல்ல என்பது நிச்சயம். திமுக தான் விழ வேண்டிய ஏகப்பட்ட குழிகளை போன ஆட்சியிலும், மத்திய மந்திரிசபை பங்கேற்பிலும் செய்து வைத்திருக்கிறது. விழுந்து தான் எழ முடியும்.
6. திமுக விழ வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருக்கிறதா? ஒரு சமூக மறுமலர்ச்சி கட்சியாக திமுகவின் காலம் என்றோ முடிந்து விட்ட்து என பலரும் எழுதி இருக்கிறார்கள். வேறு மாற்றுகள் இல்லாத்தாலும், பெரியாரியத்தின் வலுவாலும் தான் திமுக இன்றும் உயிர்க்கிறது. திமுக அழிய வேண்டியதில்லை. அது தன்னை புதுப்பிக்கட்டும். கோட்பாட்டளவிலும் இயக்க அளவிலும் இது நடக்கட்டும். அதனோடு இணையாக சாதிக்கட்சிகள் அல்லாமல் லட்சியவாத்த்தின் அடிப்படையில்னான ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் (ஆம் ஆத்மியே அல்ல) இங்கு தோன்ற வேண்டும்.
மத்திய வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குறுகிய சாதிய நோக்கம் களைந்த கட்சிகள் நமக்கு இன்று தேவையுள்ளன. அந்த வெற்றிடத்தை இனி தி.மு.கவில் நிரப்ப முடியாது. திமுகவின் நம்பிக்கைகள் மிக மிக பழையன. மக்களின் மனநிலையும் பொருளாதார தேவைகளும் சமூக எதிர்பார்ப்புகளும் மாறி விட்டன.
தி.முக. நிலைப்பதற்கு இன்னொரு காரணம் சாதிய எதிர்ப்பரசியலுக்கு மாற்று கோட்பாடு அல்லது அமைப்போ இல்லாதது. இடதுசாரிகளோ அதிமுகவோ வேறு திசை நோக்கி நகர்ந்து நீண்ட காலம் ஆகி விட்டது. நமக்கு இன்று தேவை மத்திய சாதிகளையும் ஒடுக்கப்பட்ட சாதிகளையும் இணையும் இரு தரப்புகளாய் இணைத்து சமரசம் கொண்டு வரும் மற்றொரு கட்சி. அப்படி இணைப்பதற்கான லட்சிய வலுவை கழக கட்சிகள் இழந்து விட்டன என்பதற்கு சமீபமாய் நடந்தேறிய சாதிய படுகொலைகளும், மீனவர் பிரச்சனையில் கழக கட்சிகள் விட்டேந்தியாக நடந்து கொண்ட முறையும் காட்டுகின்றன. சாதிய கட்சிகளுக்கான் ஒரு சமூகவியல் தேவை இருந்தாலும் அரசியலில் அவை மேலும் பிளவையும் படுகொலைகளையும் தான் நிகழ்த்துகின்றன. அறுபதுகளில் நடந்த்து போன்ற ஒரு சமூக மாற்றம் மீண்டும் தேவைப்படுகிறது. கேஜ்ரிவாலின் டெம்பிளேட்டில் (சில குறைகளைக் களைந்து) மற்றொரு அண்ணாதுரை இங்கு வர வேண்டும். கழகக் கட்சிகளின் இடத்தில் சாதிக்கட்சிகள் வரக் கூடாது.
7. இறுதியாய், கலைஞர் ஒரு காலத்தில் மிகத் துடிப்பான தைரியமான தமிழர் தலைவராக இருந்தார். ஏதோ ஒரு கட்ட்த்தில் அவரது சீரழிவு நடக்கத் தொடங்கியது. அது குடும்ப அரசியலினால் என்று மட்டும் என நான் நினைக்கவில்லை. ஒரு தனிமனிதராக அவர் வெகுவாக மாறிப் போனார். இப்போது அவர் மீது எழும் கோபம் ஒரு கட்சி மீதானது அல்ல. சீரழிந்து போன தலைவர் மீதானது. ஜெயலலிதா முகேஷ் அம்பானி, இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசன் போல் ஒரு வர்த்தக முதலாளி. கம்பெனிக்கு லாபம் சம்பாதித்து தமக்கும் கொஞ்சம் அரிசி, மிக்ஸி வரும் வரை மக்க்ள் பொறுத்துக் கொள்வார்கள். உண்மையில் ஜெயல்லிதாவை வைத்து என்ன செய்வதென்றே மக்களுக்கு புரியவில்லை. எதிர்பார்ப்பும் இல்லை, ஏமாற்றமும் இல்லை. வெயில்காலம் வந்தால் சிலருக்கு கொப்புளம் வரும் அல்லவா. அது போல் சகித்துக் கொள்ள வேண்டிய ஒரு தோல் வியாதி. தானே போய் விடும்!
No comments :
Post a Comment