
என் தனிப்பட்ட மாயாவி அவர்தான். தனியாய் என்றால், அவர் வீட்டை கடக்காதிருக்க ரொம்பவே சுற்றி போவேன். முதியவர்களுடன் என்றால், அவரது மருந்தகத்தை ஒரு திருட்டுப்பார்வை இட துணிவேன். அட்ரியானா அங்கு கவுன்டருக்கு பின்னால் தையற்பொறியில் தன் ஆயுட் தண்டனையை கழிப்பதை காண்பேன்; படுக்கையறை ஜன்னல் வழி அவர் மூர்க்கமான உந்துதல்களோடு தொங்குபடுக்கையில் ஊஞ்சலாடுவதை பார்ப்பேன்; என்னை மயிர்க்கூர்ச்செறிய வைக்க அதுவே போதுமானதாக இருக்கும்.
யுவான் வெசெண்டே கோமெஸ்ஸின் காட்டு மிராண்டி சர்வாதிகாரத்தில் இருந்து தப்பிக்க லா குவாஜிராவின் எல்லையை தாண்ட இயன்ற எண்ணற்ற வென்சில்வேனியர்களில் ஒருவராய் அவர் இந்நகரத்துக்கு நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்திருந்தார். இரு முரண்சக்திகளால் செலுத்தப்பட்டவர்களில் முதல்வராய் அந்த மருத்துவர் இருந்தார்: சர்வாதிகாரியின் வெஞ்சினம் மற்றும் எங்களது வாழைப்பழ செல்வசெழிப்பு பற்றின மாயத்தோற்றம். வந்ததில் இருந்தே தனது நோய் கண்டறியும் பார்வைப்புலன் மற்றும் – அப்போது பரவலாய் சொல்லப்பட்டது போல் – ஆத்மாவுக்கான நன்னடத்தைகளுக்காக பேர் பெற்றார். எனது தாத்தாபாட்டியினரின் வீட்டுக்கு மிக அடிக்கடி வருகை தருபவர்களில் அவர் ஒருவர்.; புகைவண்டியில் யார் வரபோகிறார்கள் என்று தெரியாது என்பதால் விருந்து மேஜை எப்போதும் தயாராக வைக்கப்பட்டிருக்கும். அவரது மூத்த குழந்தைக்கு என் அம்மா ஞானஸ்தான அம்மா; தாத்தா அதற்கு தற்காப்பு கற்றுத் தந்தார். பின்னர் ஸ்பானிய உள்நாட்டு போரில் நாடு கடத்தப்பட்டவர்களுடன் தொடர்ந்து நான் வளர்ந்தது போலவே, இவர்களின் இடையே நான் வளர்ந்தேன்.
பாலகனாய் இருக்கையில் இந்த மறக்கப்பட்ட குடியொதுக்கப் பட்டவர் என் மீது ஏற்படுத்திய கிலியின் மிச்சம் மீதி அம்மாவும், நானும் அவர் கட்டிலுக்கு அடுத்தபடியாய் அமர்ந்து நகரைத் தாக்கி விட்டிருந்த அந்த துன்பியல் நிகழ்வின் விவரங்களை கேட்கையில் நீர்மூலமானது. அவரது நினைவைத் தூண்டும் ஆற்றலின் தீவிரம் எவ்விதம் என்றால் வெக்கையால் மங்கலாகிப் போன அவ்வறையில் அவரால் விவரிக்கப்பட்ட ஓவ்வொன்றும் காட்சி வடிவம் பெறுவதாய் பட்டது. இன்னல்கள் அனைத்துக்கும் ஊற்றுக்கண், நிச்சயமாய், தொழிலாளர்கள் சட்ட-ஒழுங்கு சக்திகளால் படுகொலை செய்யப்பட்டது தான்; ஆனால் அந்த வரலாற்று உண்மை சார்ந்து சில ஐயங்கள் அப்போதும் நீடித்தன: இறந்தது மூவரா மூவாயிரமா? ஒருவேளை அத்தனை பேர்கள் இருக்க மாட்டார்கள்; ஆனால் ஜனங்கள் தங்கள் துக்கத்திற்கு ஏற்றபடி எண்ணிக்கையை உயர்த்தினர். இப்போது நிறுவனம் ஒரேயடியாக போயாகி விட்டது. “வெள்ளையர்கள் இனி ஒருபோதும் திரும்பி வரமாட்டார்கள்“, அவர் சொல்லி முடித்தார்.
ஒரே உறுதிப்பாடு அவர்கள் எல்லாவற்றையும் தங்களோடு கொண்டு போயினர் என்பதே: பணம், டிசம்பர், ரொட்டிக் கத்தி, மதியம் மூன்று மணிக்கு முழங்கும் இடி, மல்லிகை வாசம், காதல். மிச்சம் இருந்தது எல்லாம் தூசு படிந்த வாதாம் மரங்கள், அலையதிர்வு கொள்ளும் தெருக்கள் மற்றும் நினைவுகளால் நிலைகுலைந்த, பேச்சில் அமர்த்தலான மக்கள் குடியுருக்கும், துருபிடிக்கும் தகரக்கூரை கொண்ட, மரவீடுகள். தகரக் கூரையில் தெறிக்கும் மழை போன்ற கூர்மையான தடதட ஒசை கேட்டு நான் வியப்புற்ற போது தான் அந்த மதிய வேளையில் டாக்டர் என்னிடம் முதன்முறையாக் கவனம் காட்டினார். “அவை வான்கோழிகள்”, அவர் என்னிடம் சொன்னார்; பிறகு மூடியிருந்த கதவை நோக்கி தன் அயர்வான சுட்டுவிரலால் சுட்டி முடிவாக சொன்னார், “ராத்திரியில் படு மோசம், ஏன் என்றால் தெருக்களில் மேலும் கீழுமாக ஆவிகள் நடமாடுவதை கேட்கலாம்”
அவர் எங்களை மதிய உணவருந்த வேண்டினார்; நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளாதிருக்க எந்த காரணமும் இல்லை; ஏன் என்றால் வீட்டு விற்பனையில் சம்பிரதாயங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. குடியிருப்போர் தாம் வாங்குபவர்கள்; தந்திச்செய்தி வழி விபரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாகி விட்டன. எங்களுக்கு நேரம் இருக்குமா? “தேவைக்கு அதிகமாகவே”, அட்ரியானா சொன்னாள், “அதோடு ரயில் வண்டி எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாதே?”
ஆக, நாங்கள் அவர்களுடன் ஒரு உள்ளூர் உணவை பகிர்ந்தோம்; அதன் எளிமைக்கு அவர் உணவு மேஜையில் மட்டுமல்லாது வாழ்வின் எல்லா நடவடிக்கைகளுக்கும் கண்டிப்பாய் பயின்று வந்த மிதத்தன்மையின் திட்டமுறையை தவிர ஏழ்மையுடன் எந்த உறவும் இல்லை. சூப்பை சுவைத்த அந்த கணத்தில் இருந்தே ஒரு முழுமையான தூங்கும் உலகம் என் ஞாபகத்தில் விழித்தெழும் புலனுணர்வு ஏற்பட்டது. ஒவ்வொரு கரண்டி சூப்போடும் பால்யகாலத்தில் எனதாக இருந்து நகரை விட்டு போன பின்னர் நான் தொலைத்து விட்ட சுவைகள் முழுதாக திரும்ப வந்தன; அவை என் இதயத்தை கவ்வின.
nallathai padithen
ReplyDelete