Monday, 3 May 2010
சுஜாதா விருதுகள் கூட்டம்: சில உதிரி குறிப்புகள்
சுஜாதா விருதுகள் கூட்டத்தில் வாஸந்தி, தமிழச்சி, இ.பா, கு.ஞானசம்பந்தம், பார்த்திபன், பாலுமகேந்திரா உள்ளிட்டவர்கள் பேசினாலும் சாரு நிவேதிதா தான் எப்போதும் போல சிறப்பம்சம். அவர் தோன்றியதும் கூட்டத்தில் ஒரு பரபரப்பு தென்பட்டது. காரணம் அவர் ஆரம்பித்த தோரணை. “நான் பொதுவாக இணையத்தில் தான் எழுதுகிறேன். அதனால் (கூட்டத்தினருக்கு இணைய வாசிப்பு பரிச்சயமற்ற பட்சத்தில்)இங்கு வந்திருப்பவர்களுக்கு குறிப்பாக 12 விசயங்களை சொல்லப் போகிறேன்”. ஆனால் ஜெ என்று ஆரம்பத்து ன் என்று முடிபவர் பற்றி அவர் ஏதும் சொல்லாததால் மொத்த பேர் பெருமூச்சும் பெரியதொரு பலூன் போல் இறங்கியது. இதன் பொருள் வெளிப்படையான கண்டனங்களும், உண்மைத் திறப்புகளும் இல்லை அவர் உரையில் இல்லை என்பதல்ல.
“நான் அதிகம் பேசப் போவதில்லை. எனக்கு அடுத்து தமிழச்சி மற்றும் கு.ஞானசம்பந்தம் பேச வருகிறார்கள். அவர்கள் எப்படி பேசுவார்கள் என்று உங்களுக்கு தெரியும். அப்படியே ஆரம்பித்தார்க்ள் என்றால்” என்று தொடங்கிய சாரு உடனே சுதாரித்து “சும்மா அருவி மாதிரி பிரமாதமாக பேசுவார்கள். அவர்களின் பேச்சுக்கு நான் ரஸிகன்” என்று ‘ஸியை’ இழுத்து முடித்தார்.
சாரு பேச்சில் ஒரு தனித்துவம் என்னவென்றால் காலக்குழப்பம் தான். முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் சென்று ”சித்திரப்பாவைக்கு” ஞானபீட விருது வழங்கப்பட்டதை கண்டித்தார். அதை ஒரு குப்பை நாவல் என்று ‘ப்’பை அழுத்தி இருமுறை சொன்னபோது உல்லாசமாக பலரும் கையடித்தனர். அடுத்து நாற்பத்தி ஏழு வருடங்கள் பின்னால் பாய்ந்து வேங்கையின் மைந்தனுக்கு சாகித்ய அகாதமி வழங்கப்பட்டதை தாக்கினார். பிறகு கலைஞருக்கு விருதுகள் வழங்கப்படுவதையும் ஒரு சைடுவாக்கில் இடித்தார். ஆர்வமாய் மேடையில் அமர்ந்திருக்கும் தமிழச்சியை கவனித்தால் சின்னதாய் சங்கட நெளிவும் எதிர்ப்பார்ப்பு சிரிப்பும். பிறகு சமகாலத்துக்கு வந்து புவியரசுக்கு இரண்டு முறை சா.அ விருது வழங்கப்பட்டதை குறிப்பிட்டு தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கா பஞ்சம் என்றார். கடைசியாக, தமிழில் பாரதிக்கு அடுத்து சுஜாதா தான் என்று அவர் பிரகடம் செய்த போது காலக்குழப்பம் மேலும் அதிகமாகியது. என்னுடன் வந்திருந்த தமிழாசிரிய நண்பர்கள் இலக்கிய வரலாறு நூல்களில் இப்படி சொல்லவில்லையே என்று நினைவில் பக்கங்கள் புரட்டினார்கள். சாருவிடம் இருந்து தான் தமிழ் இலக்கியம் ஆரம்பிக்கிறது என்று அடிக்கடி வெடி கொளுத்தும் நண்பன் ஒருவன் காலம் பின்னோக்கி ஓடுகிறது என்று ராபர்ட் பிளையின் வரியை புலம்பிக் கொண்டிருந்தான். சாலையில் மௌனம் காக்கும் சிலைகள் தாம் காலவரிசையை தீர்மானிப்பதற்கான ஸ்தூல அளவுகோல் என்று வேறு சில நண்பர்கள் கருத்து தெரிவித்தனர்.
சாரு தான் கடந்த ஒரு வாரமாக கவிதைகள் எழுதி வருவதாக சொன்னதும் கூட்டத்தினரிடையே சிதறலான சிரிப்பு ஏன் எழுந்ததென்று விளங்கவில்லை. அடுத்து அக்கவிதைகளை தான் மனுஷ்யபுத்திரனுக்கு அனுப்பியும் அவர் இன்னும் தன் அபிப்பிராயத்தை சொல்லவில்லை என்று விசனித்ததும் அவர்கள் பலமாகவே சிரித்தனர். இக்கதையை சாரு மேலும் வளர்த்தெடுத்தார். மனுஷ்யபுத்திரனின் நீண்ட “ஆழமான” அமைதி பொறுக்காமல் சாரு அவருக்கு ஒரு நாள் இரவு குறுஞ்செய்தி ஒன்று தட்டி விடுகிறார். ம.பு பதறிப்போய் சாருவின் நுண்பேசிக்கு தொடர்ந்து அழைக்கிறார். அது என்ன குறுஞ்செய்தி? “நித்யானந்தர் தற்கொலை பண்ணிக் கொண்டார்”. இதை பேசிக் கொண்டிருக்கும் போது மேடையில் அமர்ந்திருந்த மனுஷ்யபுத்திரன் நிஜமாகவே பதற்றம் கொண்டிருக்கக் கூடும். அருகில் இருந்தவரிடம் மேலதிக சைகைகளுடன் ‘சும்மா பொய் சொல்கிறார்’ என்று சொல்வதை ஊகிக்க முடிந்தது. சமீபமாக சாரு மனுஷ்யபுத்திரன் தன்னை போதுமானளவு அங்கீகரிப்பதில்லை என்ற செல்ல ஆதங்கங்களை வெளிப்படுத்தி வரும் பின்னணியில் இதை பார்க்கலாம்.
அடுத்து தர்வீஸை விட மனுஷ்யபுத்திரன் மேலான கவிஞர் என்று சாரு சொன்னார். ஆனால் சாரு ’தர்வீசை உங்களுக்கு தெரியுமே’ என்று பார்வையாளர்களிடம் கேட்டு ஆரம்பித்த உடனே அவர் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்பதை ஊகிக்க முடிந்தது. எப்படி என்றால் மனுஷ்யபுத்திரன் முகத்தில் கூச்சம் அப்போதிலிருந்தே வழிய தொடங்கி விட்டது. சாரு சொல்லாமல் விட்ட ஒன்று: ஆங்கிலோஇந்திய இலக்கியம் வழி முன்னிறுத்தப்படும் கவிஞர்கள் பலரை விட மனுஷ்யபுத்திரனின் படைப்புகள் சக்தி வாயந்தவை. அவரையும் அவரையொத்த தமிழ் படைப்பாளிகளையும் சிறப்பாக மொழியாக்கி உலக அரங்கில் முன்னிறுத்த வேண்டும் என்று சாரு சொல்வது முக்கியமானது. எத்தனைக்காலம் திருவள்ளுவரையும் சங்கக்கவிஞர்களையும் மட்டும் ஆங்கிலத்தில் சிலாகித்துக் கொண்டிருப்பது. பாராட்டு, உலகளவிலான அங்கீகாரம் என்பவற்றை விட முக்கியமாய் ஆங்கிலம் வழி உலக வாசகருடனான தொடர்பும் உரையாடலும் நமக்கு இன்று அவசியம் தேவைப்படுகிறது. சமகால ஆங்கில மற்றும் அமெரிக்க கவிதை தொகுப்புகளை படிக்கையில் இப்படிப் படுகிறது: வடிவாக்கம், தொனி மற்றும் உள்ளடக்க விரிவில் வேறுபாடு இருந்தாலும் நவீன மற்றும் சமகால தமிழ்க்கவிதை தரத்தில் எந்த மொழியினோடும் குறைந்ததல்ல. இரு பக்கம் இருந்தும் தொடர்ச்சியாக மொழியாக்கப்பட்டு சர்வதேச தளத்தில் உரையாடல்கள் சாத்தியமானால் நமது கவிதை வளர்ச்சிக்கும் அது பெருமளவில் பயன்படும்.
சாரு முடித்ததும் கைதட்டினவர்கள் பேச ஆரம்பிக்கும் முன்னர் கைதட்டின அதே வாசகர்கள் தானோ என்ற ஒரு பலத்த சந்தேகம் நிலவுகிறது. அந்த பன்னிரெண்டில் எத்தனையை அவர் சொல்லி முடித்தார் என்பது மற்றொரு குழப்பம். சாருவுக்கு பிறகு பேசிய கு.ஞானசம்பந்தம் அதிக கைதட்டல்களை பெற்றார். குறிப்பாக அவர் பேச்சை “பொதுவாக் இன்று கைதட்டல்கள் குறைவாக உள்ளன” என்று தான் ஆரம்பித்தார். அடுத்து கு.ஞானசம்பந்தம் கூட்டத்தினரை வகுப்பறை மாணவர்களுடன் மறைமுகமாக ஒப்பிட்டதும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. முடிவாக திருமதி.சுஜாதா “எனக்கு என் ஆத்துக்காரரின் எழுத்து பற்றி அக்கறை இருந்ததில்லை. அவர் எழுதினார் நான் குடும்பத்தை கவனித்துக் கொண்டேன்” என்று ஐந்து நிமிடங்களே பேசி முடித்ததும் ஆயிரத்தொரு ஜோக்குகள் சொன்ன ஞானசம்பந்தனுக்கு கிடைத்த அளவுக்கு கூட்டத்தினரின் ஆர்ப்பரிப்பை பெற்றார். இந்த மூன்று கைதட்டல்களுக்கும் ஆன காரணங்கள் வேறுபட்டவை. இந்த கூட்டம் சற்று வினோதமான கலவை. விளக்குவது சிரமம் என்றாலும் எனது கலங்கலான மனப்பதிவை இப்படி பட்டியலிடுகிறேன்.
தவறாமல் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலை அடிக்கடி உறிஞ்சியபடி எதிர்வினை காட்டாமல் இருப்பதில் கவனமாக இருந்த தனித்த முதியவர்கள், முதிய ஜோடிகள். மற்றொரு துருவத்தில், நகைச்சுவை தென்பட்டால் ஒவ்வொரு முறையும் உடனே பக்கத்தில் இருப்பவரிடம் திரும்பி திரும்பி பொக்கை வாய் முழுக்க திறந்து சிரித்த ஒரு தாத்தா. பக்கத்து இருக்கைகாரர் கடைசி வரை அசரவே இல்லை.
கு.ஞானசம்பந்தம் ஜோக்குகளாக வெடித்துக் கொண்டிருக்க நானும் நண்பரும் அவரை பகடி செய்து சிரித்துக் கொண்டிருந்தோம். பின்னிருக்கையில் இருந்து நடுவயதுக்காரர் ஒருவர் வருத்தம் தோய்ந்த முகத்துடன் தனது பெரிய நுண்பேசியால் நண்பரின் தோளைத் தட்டினார்: “கொஞ்சம் கேட்க விடுங்களேன்”. அப்புறம் எங்களுக்கு சிரிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை.
சரிசமமாக இளைஞர்கள், பாந்தமான முகத்துடன் மத்திய வயது ஆண்கள், நுண்பேசியில் மேய்ந்தபடி கவனித்துக் கொண்டே சிரித்தபடியே ஒரே சமயத்தில் பக்கத்து நண்பரிடமும் அரட்டையடிக்கும் சமகால யுவதிகள், தீவிரமாய் கவனிப்பவர்கள், ஒரே போன்ற அர்மானி கண்ணாடியும், தாடியும் பாவித்த இயக்குனர் ராமின் உதவி இயக்குனர்கள் ... இப்படி.
கூட்டம் முடிந்து கிளம்பிய கலாப்பிரியா என் தோளை அன்பாய் தட்டி நட்புடன் புன்னகைத்து சென்றார். அடிவயிறு சில்லிட்டது. காரணம், வாசகன் என்பதைத் தவிர எனக்கு கலாப்பிரியாவுடன் எந்த நேரடிப் பரிச்சயமும் இல்லை. ஒரு சொல் கூட இதுவரை பேசினதில்லை. அவருக்கும் எனக்கும் என்ன உறவு? அனைத்து தரப்புகளின் பாலும் காரணகாரியமற்று கவிஞன் காட்டும் அபார பிரியமா அது? கவிஞர்களுக்கே சாத்தியமான மனநிலையா?
திரும்பிச் செல்லும் போது நானும் நண்பனும் கூடணையும் வரை சர்ச்சித்துக் கொண்டே இருந்தோம். சிற்றிதழ் ஆளுமைகள் சமரசம் செய்து மையநீரோட்டத்துக்கு வந்தது குறித்து நண்பனுக்கு கடும் கோபம். அது அவர்களின் தனிப்பட்ட தேவை மற்றும் முடிவு என்பது என் தரப்பு. “பாரதிக்கு பிறகு சுஜாதா என்றால் நாம் அன்றே சுஜாதாவுக்கு நேரடியாக சென்றிருப்போமே” என்றான் அவன். தீவிர இலக்கியவாதிகளின் பாத்திர மாற்றம் அல்லது நிலைப்பாடு குறித்து ஒரு வாசகனோ அல்லது இளைய எழுத்தாளனோ கவலைப்பட வேண்டியதில்லை என்பது என் வாதம். தன் சுயமான தேடலின் திசைதான் அவன் அக்கறையாக இருக்க வேண்டும். “ஆனாலும் சமரசம் செய்து கொள்ளும் இலக்கியவாதிகளை விமர்சிக்கும் கடமை நமக்கு இல்லையா?” என்றான் அவன். மூத்த தீவிரர்கள் நாளை மொத்தமாக திமுகவில் இணைந்தாலும், சினிமா நடிகர்கள் ஆனாலும், மேம்பாலங்களுக்கு குண்டு வைத்து தகர்த்தாலும் வாசகன் அதிர்ச்சி அடைய வேண்டிய அவசியம் இல்லை. அவன் பாதையை அவனது கால்கள் தாம் தீர்மானிக்கும் என்று தொடர்ந்து வாதித்துக் கொண்டிருந்தேன். “இல்லை வரலாற்று மாற்றங்கள் அனைவரையும் பாதிக்கக் கூடியவை; மூத்த எழுத்தாளர்களின் பாதையை நோக்கி நம் பாதைகள் சுழித்து திரும்புவதை தவிர்க்க முடியாது” என்றான் நண்பன். அதிலும் சற்று உண்மை உள்ளது தான்.
மையநீரோட்டத்திற்கு தீவிரர்கள் வருவதில் சமூகத்துக்கு சில அனுகூலங்களும் உள்ளன. பாடபுத்தகமும், தொடர்கதைகளும் மட்டுமே படித்து வளர்ந்தவர்களுக்கு நவீன இலக்கியம், சிந்தனை, கோட்பாடு போன்ற விசயங்கள் அறிமுகமாகின்றன. உலக இலக்கியம் பரிச்சயமாகிறது. “சாரு டி.வியில் தோன்றினாலும், சினிமாவில் எழுதினாலும் நாம் பெருமை கொள்ளலாம். ஏனெனில் அவர் தன்னை ஒரு எழுத்தாளனாக பிரகடனப்படுத்திக் கொண்டே இத்தனையும் செய்கிறார்” என்று செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி புரியும் மற்றொரு நண்பர் தமிழ்ச்செல்வன் ஒருமுறை சொன்னது நினைவு வருகிறது. பாலகுமாரன்களையும் ராஜேஷ் குமார்களையும் விட ஜெ.மோ, எஸ்.ரா, சாரு ஆகியோர் எழுத்தாளர்களாய் மேடை வெளிச்சம் பெறுவது நலம் தானே? அவர்கள் தங்களை சற்றே தாழ்த்திக் கொண்டாலும் தராசின் மற்றொரு பாத்திரம் மேலெழுகிறதல்லவா?
தீவிர எழுத்தாளர்கள் பத்தி எழுதித் தான் நீர்த்துப் போனார்கள்; பத்தி என்பதே ஜன்ரஞ்சக வடிவம் என்பது நண்பனின் மற்றொரு புகார். நான் மறுத்தேன். ரோலாண்ட் பார்த்த், மார்க்வெஸ் போன்றவர்கள் பத்தி எழுதித் தான் எழுத்து வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். தினசரி பத்திரிகை ஒன்றில் ஒரு எளிய செய்தி அறிக்கை வடிவில் மார்க்வெஸ் ஆரம்பித்த "Story of a Shipwrecked Sailor" மிக நுட்பமான ஒரு குறுநாவலாக உருவெடுத்ததே! பத்தியின் தரம் நாட்டின் கலாச்சார சூழலுக்கு ஏற்றபடி மாறுபடும் என்றான் நண்பன். இல்லை, எழுத்தாளனே தன் பத்தியின் தரத்தை தீர்மானிக்கிறான். லேசாக எழுதுவது மட்டுமே பத்தி அல்ல, சிக்கலான, கனமான கருத்துக்களை கூட எளிதாக, சுருக்கமாக பத்தியில் சொல்ல முடியும். அது ஒரு சிரமமான வடிவம் என்றேன் நான்.
எழுத்து வகைமை அல்ல, தனது எல்லையை எழுத்தாளனே தீர்மானிக்கிறான். மிக நீண்ட, கலைச்சொற்கள் மலிந்த ஆழமற்ற கட்டுரைகளையும் தாம் படிக்கிறோமே. இதற்கு நேர்முரணான கோணம் உள்ளது. சமீபத்தில் ஒரு பதிப்பாள நண்பர் நீளமான கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர்களை பற்றி சலித்துக் கொண்டார். “ஒரு பக்கத்தில் சொல்ல முடிகிறதை வீணாக பத்து பக்கங்களாய் எழுதுகிறார்கள். பக்கம் பக்கமாய் எழுதுவதை எல்லாம் வாசகன் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு எழுத்தாளர்கள் ஏசு அல்லது நபியைப் போன்று அவதாரங்களாக இருக்க வேண்டும்” என்றார் அவர்.
மேடை, புகழ் ஒளி, கைதட்டல், அரைஇருள் குகைக் கூட்டம், விலகல், தீவிர தொனி, கலைச்சொற்கள் ஆகியவை உதிரிகள். இவற்றுக்கு அப்பாற்பட்டு உள்ளடக்கம் சார்ந்ததே தீவிரம்.
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
good post.well done abilash.very correct reporting.
ReplyDeleteஅடடா, கூட்டத்தில் உங்களை பார்க்கவில்லையே..??
ReplyDeleteகடைசியாய் என்னதான் சொல்றீங்க?
ReplyDeleteசூர்யா நீங்கள் வந்திருந்த விசயம் தெரியாது. தெரிந்தால் சந்தித்திருக்கலாம்.
ReplyDeleteநன்றி விஜயமகேந்திரன் மற்றும் ராம்ஜி
ReplyDeleteஉங்களுடன் சேர்ந்து யோசிப்பதே என் நோக்கம் மதுமிதா. ’கடைசியாய்’ சொல்வதற்கு ஒன்றுமில்லை.
ReplyDeleteசுஜாதாவின் ரசிகன் என்ற முறையில் மனுஷ்ய புத்ரனுக்கும் , உயிர்ம்மை குழுமத்தாருக்கும் என் மனம் நிறைந்த நட்ன்ரிகள், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்,
ReplyDeleteவாழ்க நீ எம்மான் - மனுஷ்ய புத்திரன்.
நல்ல பதிவு... உங்களுக்கு இரண்டு வரிசை பின்னாடி தான் நான் இருந்தேன்.நீங்க வெளிய வருவீங்கன்னு கொஞ்ச நேரம் காத்திருந்தேன். உடன் வந்த நண்பனின் அவசரம் காரணமாக சந்திக்காமலேயே கிளம்பி விட்டேன்.
ReplyDelete