Friday, 21 May 2010
என்கவுண்டர் இன்னும் நடக்கவில்லை
என்கவுண்டர் செய்யப்படும் தொழில்முறை கொலைகாரர்களுக்கு அது ஏற்கனவே தெரிய வருவதால் ஒரு மரண தண்டனை கைதியின் மனநிலை அவர்களுக்கு ஏற்படும். சாவை விட அதை எதிர்பார்த்து அச்சத்தில் வாழ்வது இரங்கத்தக்கது.சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள நடராஜனின் பிணத்தை வாங்க பெற்றோர் ஆரம்பத்தில் மறுத்தார்கள். என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தை மட்டும் பார்வையிட்டு விட்டு ஊர் திரும்பினார்கள். ஒருவழியாய் சமாதானமாகி நடஜாஜனின் அப்பா பிணத்தை பெற்று சென்றார். ஒரு குறைந்த பட்ச எதிர்ப்புணர்வாக மட்டுமே இதை பார்க்க முடிகிறது. ஒரு சமூக விரோதிக்கு நீதி விசாரணைக்கு பின்னான மரியாதையான சாவு அவசியமா என்று நீங்கள் கேட்கலாம். பதிலுக்கு இப்படியும் கேட்கலாம்: வெறி நாயை ஏன் கட்டையால் தாக்கி கொல்லக் கூடாது? விவசாய நிலங்களை அழிக்கும் யானைகளை மின்சார வேலி அமைத்து ஏன் சாவடிக்க கூடாது?
இப்படி மிருகங்களோடு நடராஜனை ஒப்பிட்டதற்கு காரணம் உண்டு. மும்பையில் திட்டமிட்டு சிறுகுழந்தைகள் உள்ளிட்ட மனிதர்களை நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்ற கஸாப் போன்றோரை என்கவுண்டர் செய்தோமா? கோடிக்கணக்கில் செலவு செய்து அவன் வழக்கை இன்று வரை நடத்தவில்லை? தமிழகம் முழுவதும் காலாவதி மருந்துகளை விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த சஞ்சய் குமார், மீனாட்சி சுந்தரம் போன்றோர் எத்தனை மனித உயிர்களுக்கு உலை வைத்திருப்பார்கள் என்பது இன்னமும் தெரியாது; தெரியவும் வராது. நிச்சயம் நடராஜன் போன்ற எளிய கொலைஞர்களை விட பலமடங்கு அதிகமே. இந்த போலி மருந்து வியாபாரிகள் என்கவுண்டர் செய்யப்படுவார்களா? தாவூதின் பினாமிகள் மும்பையில் ரியல் எஸ்டேட் வெற்றிகரமாக வியாபாரம் செய்து வளமாக உள்ளார்கள். அவர்கள் அரசுக்கு சொந்தமான கட்டிடத்தையே காலி செய்து விற்ற தமாஷும் நடந்தது. தாவூத்தை நமது போலீஸ் இந்தியாவுக்கு நாடுகடத்தி அனுப்ப வேண்டும் என்று அவ்வப்போது கோரிக்கைகள் வைக்கிறார்கள். அப்படி தாவூதாக விரும்பி இந்தியா வந்தாலும் அவருக்காக வாதிட இந்தியாவின் ஆகச்சிறந்த வக்கீல்கள் வரிசையில் நிற்பார்கள். நமது சமூகத்தின் மின்வேலி உயர்மட்ட குற்றவாளிகளை தாக்காது.
தொழில்முறை கொலைஞர்களின் தேவை மன்னர் காலங்களில் இருந்தே உலகம் முழுக்க இருந்து வந்துள்ளது. அலெக்சாண்டரின் தந்தை பிலிப் ஒரு தொழில்முறை கொலைகாரரால் கொல்லப்பட்டது நாம் அறிந்ததே. ரோம சாம்ராஜ்யத்தின் பெரும்பாலான மன்னர்கள் இப்படியான ஒப்பந்த கொலைகளுக்கு பலியானவர்கள் தாம். இங்கிலாந்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஹென்ரி மன்னர்களுக்கும் இதுவே நேர்ந்தது. அரசியல், புரட்சி, தொழில் என்று ஒப்பந்த கொலைஞர்கள் மூன்று வகைமைகளை சேந்தவர்கள். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவில் இத்தகையவர்கள் பிரத்யேக நிறுவனங்களால் தேர்ச்சி அளிக்கப்பட்டு நிழல் உலகங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறார்கள். ரஷ்யாவில் இவர்களின் பெயரே சுவாரஸ்யமானது. க்ளீனர். போலீசார் அத்துமீறும் வன்முறைத் தொழிலாளர்களை திட்டமிட்டு தீர்த்துக்கட்டுவது கொசு-அடி சாதனை மட்டும் தான். ஆயிரக்கணக்கான வருடங்களின் வரலாற்று நீட்சியுள்ள இந்த குட்டைகளில் இருக்கும் வரையில் என்கவுண்டர்கள் அசட்டு தீர்வுகள் மட்டும்தான். இத்தகைய அதிகாரங்களை போலீசுக்கு அளிப்பதும், இதற்காக அவர்களை கொண்டாடுவதும் நம் சமூகம் மன சமநிலை இழந்துள்ளதை சொல்கிறது.
சமீபமாக என்கவுண்டர் செய்யப்பட்ட மற்றொரு ரவுடியின் என்கவுண்டர் செய்தி ஒரு நிருபருக்கு கசிந்து நேரம் இடம் போன்ற தகவல்கள் நான் வேலை பார்த்த பத்திரிகை ஒன்றுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. செய்தி எழுதி, அச்சுக்கு தயாராக்கப்பட்ட நிலையில் மற்றொரு தொலைபேசி அழைப்பு. ”செய்தியை போட்டு விடாதீர்கள். என்கவுண்டர் இன்னும் நடக்க இல்லை. இடமும் காலமும் மாற்றப்பட்டு விட்டது.” இன்னும் கொஞ்ச நாட்களில் சன் டீவியில் இத்தகைய என்கவுண்டர்கள் நேரலையாக காண்பிக்கப்படலாம். அப்போதும் நாம் அதிர்ச்சியடைய மாட்டோம். மனக்கிளர்ச்சி அடைவோமே தவிர அறவுணர்வுகள் தூண்டப்படாது. தொடர்ந்து லத்திகா சரண் தோன்றி “அத்தனையும் கிராபிக்ஸ்” என்பார். சில காட்சிகள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படி பழகி விட்டோம்
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment