Thursday, 6 May 2010
கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 18
வாழைப்பழ நிறுவனத்தின் நாட்களில் இந்த மருந்துக்கடை கொடி கட்டி பறந்தது. ஆனால் காலியான இழுப்பறை பெட்டிகளில் உள்ள பழைய புட்டிகள் மற்றும் ஜாடிகளில் இப்போது மீதமிருப்பவை எல்லாம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பீங்கான் ஜாடிகளே.
தையற்பொறி, மருந்தக தராசு, கைக்கோல், ஊசற் கண்டு அசைவதை நிறுத்தாத கடிகாரம், ஹிப்போகிரடசின் சபதம் புடைப்பகழ்வு செய்யப்பட்ட பலகை, பழுதான சாய்ந்தாடும் நாற்காலிகள், சிறுவனாயிருக்கையில் நான் கண்ட இந்த பொருட்கள் எல்லாம் அப்படியே இருந்தன; அதே இடத்தில் இருந்தன. ஆனால் அவை காலத்தின் துருவால் உருமாறி இருந்தன.
அட்ரியானாவே ஒரு பலிதான். முன்பு அணிந்திருந்ததை போல அவள் பெரிய வெப்பமண்டல் பூக்கள் கொண்ட ஆடை அணிந்திருந்தாலும், முதிர்ச்சி பருவம் வரை அவளை பிரபலப்படுத்திய அதிரடித்தன்மை மற்றும் குறும்பை சிறிது கூட இப்போது கண்டு பிடிக்க முடியாது. இப்போது குறைவின்றி அவளிடம் இருக்கும் ஒரே விசயம் பூனைகளை உன்மத்தம் கொள்ளச் செய்த சடாவல்லி வாசம் தான். என் மிச்சமுள்ள வாழ்வெல்லாம் அதை ஒருவித கலவரத்துடன் நான் நினைவு கூர்ந்தேன். அட்ரியானாவுக்கும் அம்மாவுக்கும் கண்ணீர் ஏதும் மிச்சம் இல்லாத நிலையில் எங்களை கடையின் பின்பகுதியில் இருந்து பிரித்த மெல்லிய மரத்தட்டிக்கு பின் இருந்து நாங்கள் கனமான ஒரு குறுகிய இருமலை கேட்டோம். “டாக்டர்”, அவள் சொன்னாள், “யார் வந்துள்ளார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்”
ஒருதிடமான மனிதனின் கடூரக்குரல் மறுபக்கத்தில் இருந்து ஆர்வமற்று கேட்டது: “யார்?” அட்ரியானா பதில் உரைக்கவில்லை; ஆனால் எங்களை பின்னறைக்கு செல்லச் சொல்லி சமிக்ஞை செய்தாள். ஒரு குழந்தைப் பருவ பெரும்பீதி அவ்விடத்திலேயே என்னை செயலிழக்க செய்தது; வாய் இளநீல உமிழ்நீரால் நிரம்பியது; ஒரு காலத்தில் அந்த மருந்தகத்தின் ஆய்வுக்கூடமாக விளங்கி பின்னர் தேவைக்கு உகந்த உபகரணங்களுடன் அவசரநிலை படுக்கை அறையாக மாற்றப்பட்டிருந்த அந்த நெரிசலான இடத்துக்குள் அம்மாவுடன் நுழைந்தேன். அங்கே முதியவர்கள் மற்றும் நிலம்-, நீர்-வாழ் மிருகங்களுக்கு எல்லாம் முத்தவரான டாக்டர் அல்பிரீடோ பர்போசோ தன் புராணிக பிரபல்யம் பெற்ற, கழுவாய் மேற்கொள்வோர் அணியும் விளிம்பு அமைவற்ற தளராடையை ஒத்த பருத்தி பைஜாமா அணிந்து தனது சாஸ்வத தொங்கு சணல் படுக்கையில் மல்லாந்து கிடந்தார். அவர் கூரையை முறைத்தபடி கிடந்தார்; ஆனால் நாங்கள் உள்ளே நுழைவதை கேட்டதும் தலையை திருப்பி என் அம்மாவை இறுதியில் அடையாளம் காணும்வரை தன் துலக்கமான கண்களை எங்களை நோக்கி நிலைக்க வைத்தார். “லூயிசா சாண்டியாகா!”, அவர் கூவினார். அவர் ஒரு பழைய மரசாமான் போல தன் படிந்துள்ள அசதியுடன் தொங்குபடுக்கை மீது எழுந்து அமர்ந்தார்; மனிதப் பண்புகளை முழுமையாக அடைந்தார்; அத்தோடு தன் படுசூடான கைகளால் வேகமாக அழுத்தி எங்களுக்கு முகமன் சொன்னார். என் ஆச்சரியத்தை உணர்ந்து சொன்னார், “ஒரு வருடமாக எனக்கு காய்ச்சல்”. தொங்கு படுக்கையிலிருந்து நீங்கி படுக்கையில் அம்ர்ந்து ஒரே மூச்சில் எங்களிடம் சொன்னார், “இந்த நகரம் எதை எல்லாம் கண்டிருக்கிறது என்று உங்களால் கற்பனையே செய்ய முடியாது”. ஒரு முழுவாழ்வையே சுருக்கி விட்ட அந்த ஒற்றை வாக்கியம் அவர் எப்போதும் எவ்வாறு இருந்திருப்பார் என்பதை எனக்கு காட்ட போதுமானதாக இருந்தது: ஒரு சோகமான, தனிமை வயப்பட்ட மனிதன். அவர் உயரமாக ஒல்லியாக, அழகான உலோக வண்ணத்தில், அலட்சியமாய் திருத்தப்பட்ட கேசம் மற்றும் என் பால்யகால படுபயங்கர கிலிகளுள் ஒன்றான தீவிர மஞ்சள் கண்களுடன் இருந்தார். மதிய வேளையில் பள்ளி விட்டு திரும்புகையில் அச்சத்தின் லகரியால் கவரப்பட்டு ஜன்னல் ஏறி அவரது படுக்கையறைக்குள் பார்ப்போம். வெக்கையை தணிக்க தொங்குபடுக்கையை மூர்க்கத்துடன் முன் எம்ப செய்தபடி அவர் அங்கு ஆடிக் கொண்டிருப்பார். எங்கள் விளையாட்டு இதுவாக இருந்தது: நாங்கள் அங்கிருப்பதை அவர் அறிந்து திரும்பி முன்-எச்சரிக்கை இன்றி தன் எரியும் கண்களால் எங்களை பார்க்கும் வரை அவரை முறைப்போம். எனக்கு ஐந்தோ ஆறோ வயதிருக்கும் போது ஒரு நாள் காலை என் வகுப்பு தோழர்களுடன் சேர்ந்து அவரது மரத்து பிரம்மாண்ட மாங்கனியை பறிக்க அவர் வீட்டு புழக்கடை வழியே நுழைந்த போதுதான் அவரை முதன்முறை கண்டேன். பிறகு தோட்டத்தின் ஒரு மூலையில் நின்றிருந்த மர வெளிவீட்டின் கதவு திறந்தது; தன் லினன் உள்கால்சட்டையை இறுக்கி மாட்டியபடி அவர் வெளியே வந்தார். வெளிறி, எலும்புகள் புடைக்க, என்னை விடாது எப்போதும் பார்த்த நரகத்து நாயின் மஞ்சள் விழிகளுடன், மருத்துவமனை இரவுச்சட்டையில் நரகத்தில் இருந்து தோன்றிய ஒரு பிசாசு போல் அவர் எனக்கு தெரிந்தார். வேலியின் ஓட்டைகள் வழி பிறர் தப்பித்து போயினர்; ஆனால் அவரது அசைவற்ற விழிகளால் நான் உறைந்து போயிருந்தேன். அப்போதுதான் மரத்தில் இருந்து நான் பறித்திருந்த மாம்பழங்களை வெறித்துப் பார்த்தார்; தன் கரங்களை என்னை நோக்கி நீட்டினார், “அவற்றை என்னிடம் கொடு”, அவர் ஆணையிட்டார். அத்தோடு என்னை மேலும் கீழுமாக தீவிர வெறுப்புடன் பார்த்து இதையும் சேர்த்துக் கொண்டார், “இழிவான் புழக்கடை திருடா!”
நான் மாங்கனிகளை அவர் கால்கள் கீழே வீசி விட்டு பீதியில் தப்பித்தேன்.
Share This
Labels:
கதை சொல்ல வாழ்கிறேன்
,
மார்க்வெஸ்
,
மொழியாக்கம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment