Wednesday, 12 May 2010

ஒழுங்கும் முன்னோடியும்



"நடக்கும் போது நாய்க்குட்டி உன்னை
முந்துகிறதா
எதிர்திசையில் மூர்க்கமாய் இழுத்து நட
வில்லென்று கத்தும் --
கண்டுக்காதே

வீட்டுக்குள்
படுக்கையறை போன்ற பிரத்யேக அறைகளில்
நாய்க்குட்டியை விடாதே முக்கியமது
அதுக்கு சில இடங்களில் அனுமதி இல்லைண்ணு
தெளிவாப் புரியட்டும்

உன் சாப்பாட்டில் அதுக்கு
பங்கில்லை
நீ ஏப்பம் விட்டபின் தான்
அதற்கு உணவு

ஒழுங்கு மீறி
சோபாவை கடித்து கட்டில் காலை பிறாண்டுதா
உடனே தனிக்கூட்டில் இட்டு அடை

முதல் ஆறு மாதம் கட்டாயம் சங்கிலியில்

பயிற்சி எத்தனை சீக்கிரமோ
அத்தனை நல்லது

இப்போ நம்ம குமார் சார் வீட்டு லேப்ரடார் பாத்ததில்லை
மிதியடியில் கம்முணு படித்துக்கிட்டு
இன்னா நடந்தாலும் யாரு வந்தாலும்
"come" சொல்லாங்காட்டி அசையாதே
அது பயிற்சிங்க!

Caninie Behavior and Psychology Diploma ஹோல்டர் சார் நான்
நல்லா கேளுங்க --
நாய்களுக்குன்னு ஒரு படிநிலை இருக்கு
ஒரு நாயை முன்னே போக விட்டீங்க
அது தலைவன்
நீங்க தொண்டன்னு பொருள்

அதுனால தான் திரும்ப திரும்ப சொல்றேன்
இதோ இப்போ பண்ணுனீங்க இல்லை, அதைப் போல
வீட்டுக்குள்ள நுழையறச்ச
நாய்க்குட்டியை முன்னே போக விடாதீங்க
முதல் காலடிஉங்களுது .. சரியா? "

எங்களுக்கு முன் தண்ணீர் லாரி
பின்
ஏறத்தாழ முட்டியபடி மாநகர பேருந்து
அப்பால்
ஒரு ராட்சத உறுப்பென நெளியும்
கட்டுமான வாகனம்

சிதறி ஒன்று சேரும் வரிசைகளில்
மீறும் ஜனங்கள்

ஒவ்வொரு வெற்றிடத்தையும் உடனடி
நிரப்பும்
புகை மேகம், ஒலிகள்

லாரி நகர
நாங்களும் முன்னே எத்தனிக்க
இரண்டு பைக்குகள் குறுக்கே பாய்ந்தன

காற்றில் சிறு எம்பலுடன்
கடந்து பாய்ந்தது முன்னால்
தெருநாய் ஒன்று
Share This

2 comments :

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates