Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Tuesday, 26 November 2013

செக்ஸ் கிளப், பெற்றோர் மற்றும் ஆருஷி




ஆருஷி தல்வாரை யார் கொன்றார், எதற்கு கொன்றார் என்பதை விட தொடர்ந்து இக்குற்றத்தில் இருந்து தப்பிக்க ஆருஷியின் பெற்றோரான ஒரு மேல் மத்தியவர்க்க தம்பதியினரால் இத்தனைக் காலம் எப்படி போலீஸ், மீடியாவை விலைக்கு வாங்கி கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது என்பது இன்னும் வியப்பூட்டும் கேள்வி.

2008 மே 15ஆம் நாள் ஆருஷி தன் வீட்டு வேலைக்காரனுடன் சேர்த்து கழுத்தறுத்து கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட பின் அவரது உடல் அலம்பப்பட்டு தடயங்கள் அழிக்கப்பட்டு படுக்கையறையில் கிடத்தப்பட்டது. வேலைக்காரர் ஹேம்ராஜின் உடல் ஒரு நாள் அழுகுகிற வரை மொட்டைமாடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இரு கொலைகளும் நடக்கும் போது ஆருஷியின் பெற்றோர் தாம் அருகில் உள்ள படுக்கை அறையில் தாம் தூங்கிக் கொண்டிருந்ததாய் கூறினர். பூட்டின ஏஸி அறைக்குள் இருந்ததால் தமக்கு ஏதும் கேட்கவில்லை என அவர்கள் கோருகிறார்கள். ஆனால் இது நம்பும்படியாய் இல்லை. அப்படியே நம்பினாலும் வீட்டில் எப்பகுதியையும் உடைக்காமல் கொலையாளி எப்படி உள்ளே நுழைந்திருக்க முடியும்? கொன்ற பின் தல்வாரின் மறைவான இடத்தில் உள்ள மினிபாரில் இருந்து விஸ்கி பாட்டிலை எடுத்து கொலையாளி குடிக்கிறார். குருதிக் கறை அதில் உள்ளது. மேலும் கழுத்தில் இருந்து மூளைக்கு ஆக்ஸிஷன் செல்லும் நரம்பை மிக சரியாய் அறுக்க ஒரு மருத்துவரால் மட்டுமே முடியும். கொலையை ஒன்று அப்பாவான ராஜேஷ் தல்வார் செய்திருக்க வேண்டும். அல்லது செய்தவரை அவர் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். ஐந்து வருடங்களுக்கு மேலாக அவர் வேறு யார் பெயரையும் வெளியிடாத நிலையில் அவர் மீதே குற்ற வளையம் விழுந்தாக வேண்டும்.
மேலும் கொலை நடந்த இடத்தை சுத்தமாய் அலம்பி சாட்சியங்களை அழித்தது, சம்மந்தமில்லாமல் வேலைக்காரர் ஹேம்ராஜ் மீது ஆரம்பத்திலேயே பழி சுமத்தியது, இறந்து மாடியில் கிடக்கும் அவரைப் பிடிக்க போலிசாருக்கு 25,000 லஞ்சம் தர முயன்றது, தொடர்ந்து உ.பி போலீஸ் இவ்வழக்கில் மெத்தனமாகவே இருந்தது, பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர்களை தொடர்பு கொண்டு அறிக்கையை மாற்ற முயன்றது, காணாமல் போன ஆருஷியின் நுண்பேசி எண்ணில் சற்று நேரம் மட்டும் யாரோ பஞ்சாபில் இருந்து பேசியது (தல்வார்கள் பஞ்சாபியர்) என பெற்றோர் மீது சந்தேகம் வலுக்க பல காரணங்கள். முக்கியமான வேறு இரு காரணங்கள் உண்டு.
ஹேம்ராஜ் இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு தன் மனைவியிடம் ராஜேஷ் தல்வாரால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறினார். ராஜேஷின் ரகசியங்கள் சில தனக்கு தெரியும் என்பதால் அவர் தன்னை கொன்று விடுவதாய் மிரட்டி இருப்பதாக கூறினார். என்ன ரகசியம் என்பதற்கு பிறகு வருவோம். ஹேம்ராஜின் பல மாத சம்பளத்தை ராஜேஷ் வைத்திருந்தார். ஹேம்ராஜ் இறந்த பிறகு அத்தொகையை எதிர்பார்த்து அவரது மனைவி இவ்விசயத்தை வெளியே விடாமல் மௌனம் காத்தார். ஆனால் மூன்று வருடங்கள் ஆகியும் சம்பளத் தொகையை ராஜேஷ் தராமல் இருக்க ஹேம்ராஜின் மனைவி தன் வக்கீல் மூலம் இவ்விசயத்தை வெளிக்கொணர்ந்தார். உண்மையை நிலைநாட்டுவது எளியவர்களுக்கு இந்நாட்டில் எவ்வளவு சிரமம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். ஹேம்ராஜை ராஜேஷ் முன்னர் துரத்தி தாக்கி இருக்கிறார். இரவு அவர் கொல்லப்படும் முன் ஹேம்ராஜ் ராஜேஷ் குடும்பத்துடன் 10 மணிக்கு இருந்ததாய் சாட்சியம் உள்ளது.
இந்த ரகசியம் குறித்த தகவலை அளித்தது ஆருஷியின் உற்ற நண்பனான அன்மோல். போலீஸ் விசாரணையில் அவர் ஆருஷி தன் அப்பாவுக்கு அனிதா துரானி எனும் மற்றொரு பெண் மருத்துவருடன் கள்ள உறவு இருப்பதாக வருந்தியதாக கூறினார். சமீபமாக ஒரு பெண் தன் கணவர் மற்றும் மாமனாருக்கு எதிராக அவர்கள் தன்னை மனைவி பகிர்தலுக்கு (wife swapping) கட்டாயப்படுத்துவதாக காவல் துறையிடம் புகார் செய்தார். இதை விசாரித்த போலீசார் மனைவி பகிர்தல் கிளப்பில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என ஒரு பட்டியல் தயாரித்த போது எதேச்சையாக தல்வார் தம்பதியினரும் உட்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த கேங்கின் தலைவர் ஒரு பெரும் தொழிலதிபர். அவர் தற்போது சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். கொலை நடந்ததற்கு முந்தின தினம் ஹேம்ராஜ் இந்த தொழிலதிபருக்கு துபாய்க்கு போன் பண்ணி இருக்கிறான். ஏன் என தெரியாது. ஆனால் இந்த மனைவி பகிர்தல் குழுவின் உள்விவரங்கள் அறிந்தவர் ஹேம்ராஜ் என ஊகிக்க முடிகிறது. பிரேத பரிசோதனையில் ஆருஷி கொலைக்கு முன்னர் உடலுறவு கொண்டிருப்பதாய் புலனாகி உள்ளது. என்ன நடந்திருக்கும் என நான் இதற்கு மேல் கூறத் தேவையில்லை. நீங்களே புள்ளிகளை இணைத்துக் கொள்ளலாம்.
பெற்ற தகப்பனே கொல்வானா? ஷோபா டே தனது பதிவு ஒன்றில் ஆருஷி இந்த தம்பதியினரின் வளர்ப்பு மகள் என கூறினார். இது உண்மையா என தெரியவில்லை. ஆனால் உண்மையெனில் குழப்பங்கள் மேலும் தெளிவாகின்றன.
ராஜேஷ் தல்வார் பட்டென கோபப்பட்டு வன்முறையில் ஈடுபடக் கூடியவர் என ஹேம்ராஜ் தன் மனைவியிடம் கூறி உள்ளான். இந்த தகவல்களை எல்லாம் இணைத்து தான் சி.பி.ஐ வழக்காடு மன்றம் தல்வார் தம்பதியினர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது.
வெறும் சந்தர்ப்ப சூழ்நிலையை வைத்து அவர்களை குற்றவாளி எனலாமா? பெரும்பாலான கொலை வழக்குகளில் அப்படித் தான் இதுவரை தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. நம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கூடத் தான். கொலையை யாரும் சாட்சியத்தோடு செய்வதில்லை. தெளிவாக சாட்சியத்தை அழித்து கொலைக்கருவியையும் மறைத்து விட்டால் நேரடியாக நிரூபிப்பது மிக மிக சிரமம். ஆதலால் சில சந்தர்பங்களில் சூழ்நிலையை தான் சாட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டி வருகிறது.
சரி, அது நீதிமன்றத்தின் தலைவலி. ஒரு மருத்துவ தம்பதியினரால் எப்படி காவல் துறை, சி.பி.ஐ வரை கடந்த ஐந்து வருடங்களில் தாக்கம் செலுத்த முடிந்தது? தெஹல்கா, NDTV போன்ற மீடியாக்களை கையில் வைத்து தனக்கு சாதகமாய் பேச வைக்க எப்படி முடிந்தது? NDTVயில் இதற்காக தனி நேரம் ஒதுக்கி தல்வார்களின் சொந்தக்காரர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்புகிறார்கள். ஒரு நிகழ்ச்சி முழுக்க தல்வார்களின் ஆதரவு ஆட்களை மட்டுமே பேச விடுகிறார்கள். பேட்டி எடுக்கும் ரிப்போர்ட்டர் வேறு அழுகிறார். ஒரு 13 வயதுப் பெண்ணை கொன்று விட்டார்களே என்றா? இல்லை. பாவம் தல்வார் தம்பதியினருக்கு எதிராக தீர்ப்பு வந்து விட்டதே என்று. அரசியல் தலைவர்கள் ஜெயிலுக்கு போன போது கூட மீடியா இப்படி கண்ணீர் வடித்ததில்லை. ஏன் இந்த நாடகம்?
தல்வார்களின் மனைவி பகிர்வு கிளப்பில் தெஹல்கா, பிற மீடியா ஆட்கள் மற்றும் பல பெரும்புள்ளிகள் அடக்கம் என்கிறார்கள். இந்த கிளப் மிக மிக ரகசியமானது. தல்வாரை காப்பாற்றுவது தம் பாதுகாப்புக்கும் முக்கியம் என கிளப்பின் செல்வாக்கான நபர்கள் அறிவார்கள். இந்தியாவில் அதிகாரம் பணத்தில் மட்டுமல்ல செக்ஸிலும் தாம் என அறிந்தவர்களில் கார்ப்பரேட் சாமியார்களுக்கு அடுத்தபடியாய் தல்வார்களும் பிரதானமானவர்கள். செக்ஸ் ரகசியங்கள் என்றுமே தலைகாக்கும்!
Read More

Tuesday, 5 November 2013

சமூகம் எனும் நான்கு குருடர்களும் ஊனம் எனும் யானையும்





 உச்சநீதிமன்றம் ஊனமுற்றோருக்கான 3% இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும் என கேட்டுள்ளது. அதுவும் போட்டியிடுவோரில் 3% என பார்க்க வேண்டுமே அன்றி தேர்ந்தெடுத்தோரில் மூன்று சதவீதம் என பார்க்கக் கூடாது என்றுள்ளது. இது ஒரு முக்கிய அவதானிப்பு. தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஊனமுற்றோர் இருக்க வேண்டும் எனும் அவசியமே இல்லையே! ஊனமுற்றோரை தேர்ந்தெடுக்காமல் இருக்க அரசும் அதிகாரிகளும் இப்படி பல தந்திரங்களை மேற்கொள்ளுகிறது. அரசைப் பொறுத்தவரையில் ஊனமுற்றோர் ஒரு ஓட்டுவங்கி அல்ல. அதிகாரிகளுக்கு ஊனமுற்றோர் குறித்த முன்தீர்மானங்கள் பல தடையாக உள்ளன. இன்னொரு பக்கம் சமூகத்தில் இடஒதுக்கீடு குறித்த அதிருப்திகள் ஊனமுற்றோர் சமவாய்ப்பை பெறுவதற்கும் தடையாக உள்ளன. ஒவ்வொன்றாக பார்ப்போம்.

(மாற்றுத்திறனாளிகள் என்ற சொல் பாசாங்கானது. ஊனமுற்றவர்களின் சமூக பொருளாதார நிலை மேம்படாதவரை அவர்களை மானே தேனே என்றெல்லாம் அழைத்து கமுக்கமாய் இருப்பது பாசாங்கை விட மோசமான கயவாளித்தனம். அதனால் மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை இங்கு பயன்படுத்தப் போவதில்லை. சொல்லில் இருந்து சமூக மாற்றம் வராது – மாற்றத்தில் இருந்து இயல்பாக புதுசொல் பிறக்கட்டும்)
இந்தியா முழுக்க கோடிக்கணக்கான ஊனமுற்றோர் உள்ளனர். ஆனால் அவர்கள் ஒன்றிணைந்து போராடுவதில்லை. சிறு சிறு அமைப்புகள் போராடும் போதும் தேசிய அமைப்பு என்று ஒன்றில்லை. மக்கள் தொகை அளவு அல்ல சங்கங்களும் அமைப்புகளும் வழி அவர்கள் ஒருங்கிணையும் போது தான் உரிமைகள் கிடைக்கும் என்பதை கடந்த சில பத்தாண்டுகளில் தாழ்த்தப்பட்டவர்கள், அரசு ஊழியர்கள், வக்கீல்கள், மருத்துவர்கள் என பலரும் ஒன்றிணையும் போது பார்த்தோம். அரசியல் தலைவர்கள் கவனிக்க வேண்டும் என்றால் பெரும் எண்ணிக்கையில் மாநாடாக ஒன்று சேர்ந்து காட்ட வேண்டும். சிறு சிறு ஊர்வலங்கள் பயன்படாது. இதற்கு பணமும் நிறுவன ஆதரவும் வேண்டும். பொருளாதார ரீதியாக கீழ்மட்டத்தில் இருக்கும் தலித்துகள் தமக்கு எதிரான அநீதிகள், படுகொலைகளை தேசிய அளவில் கண்டிக்கும் மாநாடுகளை நடத்தியதில்லை, அவர்களுக்கு மீடியா வலு இல்லை. மேலும் தலித் என அடையாளப்படுத்துவதிலும் கணிசமான மக்களுக்கு கூச்சம் உண்டு. ஆக மேல்தட்டினர் ஓர் அடைளாத்தின் கீழ் இணைவது போல் விளிம்புநிலை மக்களுக்கு எளிதில் சாத்தியப்படுவதில்லை. சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகுவோர் வாழ்நிலையில் மேம்பட்டதும் தம்மை பழைய அடையாளத்துடன் பொருத்த விரும்புவதில்லை. ஊனமுற்றோர் அரசு வேலைகளில், தனியார் துறையில் வசதியாய் இருப்பவர்கள் தம்மை வசதி அற்ற ஊனமுற்றோரில் இருந்து பிரித்து பார்க்க விரும்புவார்கள். தலித் அடையாளத்தை தாண்டுவது, ஊன அடையாளத்தை கடப்பது இவர்களுக்குள் ஒரு ஏக்கமாக இருக்கிறது. ஒட்டுமொத்த குடையொன்றின் கீழ் இம்மக்கள் திரளாததற்கும், கட்சிகள் பொருட்படுத்தாதற்கும் இதுவும் ஒரு முக்கிய காரணம்.
ஊனமுற்றோருக்கு போராடுவதில் உள்ள மற்றொரு பிரதான பிரச்சனை நகர்வு. வறுமையில் யாரையாவது அண்டி வாழும் நிலையில் உள்ள ஊனமுற்றோர் உரிமைப் போராட்டங்களில் கலந்து கொள்வதில் நடைமுறை பிரச்சனைகள் பல உள்ளன.
முன்தீர்மானங்களுக்கு வருவோம். இதைப் படிக்கிற உங்களுடன் எத்தனை ஊனமுற்றோர் பள்ளியில் படித்துள்ளார்கள், ஆசிரியர்களாக பாடம் சொல்லித் தந்துள்ளார்கள், அலுவலகங்களில் உங்களுடன் வேலை பார்த்துள்ளார்கள்? கணிசமானோர் இல்லை எனத் தான் சொல்வீர்கள். ஊனமுற்றோர் குறித்த அறிவும் பழக்கமும் நமக்கு மிக குறைவு. விளைவாக நம்மில் சிலர் ஊனமுற்றோரால் பல வேலைகளை செய்ய முடியாது என நினைக்கிறோம். இவ்வாறு நம்பும் அதிகாரிகள் ஊனமுற்றோருக்கு வேலை அளிப்பது கருணை அடிப்படையிலானது, ஆனால் அவர்களால் நிறுவன வேலைகள் தடைபடும் என நினைத்து வேலை உத்தரவுகளை தர தயங்குகிறார்கள். ஆனால் இதே வகையான நம்பிக்கைகளைத் தான் இவர்களுக்கு ஐம்பது வருடங்களுக்கு முன் பெண்கள் மீதும், தாழ்த்தப்பட்டவர் பற்றியும் வைத்திருந்தார்கள். ஊனமுற்றோர் தொடர்ந்து பல துறைகளிலும் வேலைக்கு அமர்த்தப்பட்டு நன்றாக பணியாற்றி தம்மை நிறுவும் பட்சத்தில் மட்டுமே இத்தகைய முன்தீர்மானங்கள் அகலும்.
நான் ஒரு கல்லூரி பேராசிரியர் வேலைக்கான நேர்முகத்தேர்வில் நன்றாக செயல்பட்டு முதலிடத்தில் வந்தேன். ஆனால் ஊனமுற்றோரால் ஆசிரிய வேலை செய்ய முடியாது என்று சொல்லி எனக்கு தர மறுத்தார்கள். பின்னர் இன்னொரு கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு நான்கு வருடங்கள் பணி புரிந்தேன். ஒவ்வொரு நாளும் மூன்று மணிநேரங்கள் நின்று தான் வேலை செய்வேன். என்னைப் போல் கால் ஊனம் இல்லாதவர்கள் ஆசுவாசமாக அமர்ந்து பேசும் போது நான் மட்டும் வகுப்பில் நின்றவாறு தொடர்ந்து பாடமெடுப்பது பார்த்து பலரும் வியப்பார்கள். பொதுவாக நான் நிற்பதை விரும்ப மாட்டேன். ஆனால் வகுப்பில் பேசும் சுவாரஸ்யத்தில் எனக்கு கால் வலியே தெரியாது. களைப்பே ஏற்படாது. ஒரு நாளும் வகுப்புக்கு தாமதமாக போனதில்லை, வகுப்பெடுக்க சோம்பியதில்லை.
சரி, நிற்கவே முடியாத ஒருவர் எப்படி பாடமெடுப்பார்? அவர் சக்கர நாற்காலி பயன்படுத்தலாம். வகுப்புகளும், கட்டிட அமைப்பும் தோதாக இருந்தால் போதும்.
இன்றைய பெரும்பான்மை வேலைகள் மூளை சம்மந்தப்பட்டவை. நியாயமாக அவற்றுக்கு உடல் தகுதி முக்கியமே அல்ல. ஆனால் பள்ளி கல்லூரிகள் போன்ற பழமையான நிறுவனங்கள் கணினி, ஏஸி என்கிற அளவில் தான் நவீனப்பட்டிருக்கும். அங்கு வேலை பார்க்க நீங்கள் நிறைய நடக்கவும் மாடிகள் ஏறவும் முடிபவராக இருக்க வேண்டும். கட்டமைப்பளவில் சிறு மாற்றங்கள் மூலம் இத்தகைய தேவையற்ற சிரமங்களை தவிர்க்க முடியும். ஆனால் பெரும்பாலான நிர்வாகங்கள் ஊனமுற்றோருக்கு ஏற்றாற் போன்ற கட்டமைப்பு மாற்றங்கள் அவசியமற்றவை என நினைக்கின்றன. மிகத் திறமையான ஒரு ஊனமுற்றவருக்கும் சுமாரான ஊனம்ற்றவருக்கும் இடையே தேர்வு என்றால் நிர்வாகம் சுமாரானவரையே தேர்ந்தெடுக்கும். ஊனமுற்றோர், தலித்துகள், மற்றும் பெண்களின் ஒடுக்குமுறை மற்றும் சமூக இருட்டடிப்புக்கு ஒருவிதத்தில் இங்கு அறிவுக்கும் திறமைக்கும் மதிப்பில்லாமல் இருப்பதற்கும் தொடர்புள்ளது. யாரை வைத்தும் எந்த இடத்தையும் நிரப்பலாம் என்கிற எண்ணம் நம்மூரில் வலுவாக உள்ளது.
நான் வேலையில் சேர்ந்த போது விடுப்பில் இருந்த ஒரு சீனியர் பேராசிரியர் பின்னர் திரும்ப வந்ததும் என் தேர்வு குறித்து புகார் செய்தார். ஊனமுற்றோரால் எப்படி எப்படி துறை வேலைகளை செய்ய முடியும் என்று கேட்டார். அவ்வேலைகள் என்ன? கூட்டங்களின் போது மேஜைகளை நகர்த்திப் போடுவது, அலமாரிகளை சுத்தம் செய்வது, நகல் எடுக்க வெளியே போய் வருவது, டீ வடை வாங்கி வருவது போன்ற உதவியாளர் வேலைகளை இங்கு இளநிலை ஆசிரியர்கள் செய்கிறார்கள். அவ்வேலைகளை என்னால் செய்ய முடியாது தான். ஆனால் ஒரு ஆசிரியர் எதற்கு அவ்வேலைகள் பழக வேண்டும்? சில கல்லூரிகள் துப்புரவுத் தொழிலாளர்கள் அல்லது காண்டீனில் சமையல் பண்ண ஆட்கள் காலியாக இருக்கலாம். அதற்காக பேராசிரியராக சேர்பவர்கள் சமைக்க தெரிந்தவர்களாக, கழிப்பறை அலம்புபவர்களாக இருக்க வேண்டும் என நிர்வாகம் கோரலாமா? இந்தியாவில் இப்படியான அபத்தங்கள் நிறைய நடக்கின்றன.
ஒரு பார்வையற்ற ஆசிரியரின் வகுப்பில் மாணவர்கள் கவனிக்காமல் பராக்கு பார்த்தாலோ வெளியே எழுந்து போனாலோ அவரால் கட்டுப்படுத்த முடியாது அல்லவா? ஆம். ஆனால் இது பொருட்படுத்தத் தக்க பிரச்சனை அல்ல. சொல்லப் போனால் முரட்டுத்தனமான மாணவர்களை பெண்களை விட ஆண் ஆசிரியர்கள் தான் இன்னும் எளிதாக கட்டுப்படுத்துகிறார்கள் என்பது ஒரு நடைமுறை உண்மை. இதனை வேலையில் பெண்களின் தேர்வுக்கு எதிராக பயன்படுத்தலாமா? கூடாது. ஆண்கள், பெண்கள், ஊனமுற்றோருக்கு என பல அனுகூலங்களும், குறைகளும் உள்ளன. நான் என் வகுப்பில் ஒருமுறை கூட மாணவர்களுடன் மோதியதில்லை. இத்தனைக்கும் பிற ஆசிரியர்கள் மகா மட்டம் என நினைக்கிற வகுப்புகளை நான் எளிதாக கையாண்டிருக்கிறேன். முதலில் மாணவர்களுக்கு ஆசிரியர் மீது மரியாதை ஏற்பட வேண்டும். மரியாதை இருந்தால் அந்த ஆசிரியருக்கு கை, கால், கண் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் கவனிப்பார்கள். பணிவார்கள். ஆசிரியருக்கு திறமை போதவில்லை என்கிற எண்ணம் மாணவர்களுக்கு வந்து விட்டால் பத்து கை கால் அவருக்கு இருந்தாலும் அடங்க மாட்டார்கள். எப்போது கலவரமாகத் தான் வகுப்புச் சூழல் இருக்கும். மேலும் மாணவர்களை கையாள்வது ஒருவரது தனித்துவமான புத்திசாலித்தனம் மற்றும் மேலாண்மைத் திறன் சார்ந்தது. அதற்கும் ஊனத்துக்கும் சம்மந்தமில்லை. பார்வை என்பது ஒரு புலன். அது இல்லாதவர் வேறு புலன்கள் கொண்டு ஈடுகட்டுவார்கள். கூர்ந்து கவனிப்பார்கள், கூர்மையாக பேசுவார்கள், தம் பேச்சு மூலம் மாணவர்களை அபாரமாக கட்டுப்படுத்துவார்கள். ஊனம் நம் வேலைத்திறனை பாதிக்கும் என நினைப்பது மேலோட்டமான பார்வை மட்டுமே.
இந்தியாவில் இது போல் பார்வையற்ற பல அற்புதமான ஆசிரியர்களை எனக்குத் தெரியும். முதல் கல்லூரி நான் படித்த கல்லூரி. அங்கு நான் மாணவனாக தங்கப்பதக்கம் வாங்கினேன். ஆனாலும் வேலை தரவில்லை. காரணம் தேர்வுக்குழுவில் இருந்தவர்கள் யாருக்குமே என்னைப் போல் ஊனத்துடன் பாடமெடுத்த ஒரு ஆசிரியர் இருந்ததில்லை. ஒருவேளை அவர்களுக்கு அப்படி ஒரு சக ஊழியர் கூட இருந்திருக்க மாட்டார்கள். இனி என் மாணவர்கள் நாளை கல்லூரி முதல்வர், தேர்வுக்குழு உறுப்பினர் அல்லது தாளாளர் ஆனால் ஒரு கால் ஊனமுற்றோருக்கு வேலை அளிக்க தயங்க மாட்டார்கள்.
ஒருவரால் எதையெல்லாம் செய்ய முடியும் என்பது மன ஊக்கத்தையும், வசதி, தொழில்நுட்ப சாத்தியங்களையும் பொறுத்தது. கால் ஊனமுற்றோருக்கு உள்ள பிரதான தடை நம் கட்டிட அமைப்பு. மேற்கத்திய நாடுகளில் போல் சக்கர நாற்காலி இயக்குவதற்கான ரேம்ப் வசதிகள், எளிதில் உள்ளே போய் வரும் வகையிலான வழிகள் நம் கட்டிடங்களிலோ பொதுப் போக்குவரத்திலோ இல்லை. சிறுசிறு மாற்றங்கள் செய்தால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் துணை கொண்டு ஊனமுற்றோரால் பிறருக்கு இணையாகவோ மேலாகவோ செயல்பட முடியும்.
இந்தியாவில் வாய்ப்புக்காக மக்கள் நீண்ட வரிசையில் முந்தி மோதும் சூழலில் ஊனமுற்றோருக்கு ஏன் தனி சலுகை, வசதிகள் என சிலர் கேட்கலாம். இந்த கேள்வி ஒரு நிலப்பிரபுத்துவ மனநிலையில் இருந்து வருவது. இன்று முதலீடு என்பது நிலமோ உடலோ அல்ல. அறிவுத் திறன். இந்தியாவின் முக்கிய அனுகூலம் இங்குள்ள கணிசமான மனித வளம் தான் என்கிறார்கள். அடுத்த ஐம்பதாண்டுகளில் இங்கு வேலை பார்க்கும் தகுதி கொண்ட கோடிக்கணக்கான இளைஞர்கள் வெளிவரப் போகிறார்கள். இன்றைய நவமுதலாளித்துவ சூழலில் இவர்களை முதலீடாக்கி தான் இந்தியா முன்னேற முடியும். நூறு படித்தவர்கள் இருந்த இடத்தில் ஆயிரம் படித்தவர் வந்தால் அங்கு வேலை வாய்ப்பு பத்து மடங்காகுமே அன்றி 900 பேருக்கு வேலை இல்லாமல் ஆகாது. உதாரணமாக மென்பொருள் துறையை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த இருபது வருடங்களில் நாம் மிக அதிகமாக ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணி சம்பாதித்தது மென்பொருள் அறிவு படைத்த இளைஞர்களைத் தான். இது போல் பல்வேறு திறன்கள் கொண்ட இளைஞர்கள் பெருக பெருக உலக சந்தையில் இந்தியாவின் பொருளாதார மதிப்பும் உயரும். இதை உணர்ந்து தான் ஐரோப்பாவில் ஊனமுற்றோருக்கு தனி வசதிகள் பண்ணிக் கொடுத்து அவர்களுக்கு வேலை பார்ப்பதை சுலபமாக்குகிறார்கள். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால் நமக்கு மனித வளம் குறித்த ஒரு துச்சமான எண்ணம் உள்ளது. இது அபத்தமானது.
இன்றைய சூழலில் முன்னேற்றத்துக்கு தேவை உற்பத்தியை பெருக்கும் திறன் கொண்ட நிறைய இளைஞர்களும் உற்பத்தியை துப்பதற்கான ஆட்களும் தான். ஊனமுற்றோரும் பிற விளிம்பு நிலை மக்களும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் மூலம் முன்னேறுவது நம் நாட்டின் முன்னேற்றத்துக்கும் முக்கியமானது. சமீபத்தில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் முதன்முறை மருத்துவரானதை பார்த்தோம். நமக்கு இன்று நல்ல மருத்துவர்களின் பற்றாக்குறை உள்ளது. காரணம் நிறைய பேர் கல்வி வாய்ப்பு பெற்று இத்துறையில் நுழைய முயல்வதில்லை. வெளியே இருப்போருக்கு வாசல்களை நிறைய திறந்தால் தான் சமூகம் மேம்படும். இதற்கும் கருணைக்கும் சம்மந்தமில்லை. ஊனமுற்றோரை தொடர்ந்து இருட்டில் வைப்பதன் வழி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போன்று ஒரு மேதை இன்று தோன்றுவதையும் தானே நாம் தடுக்கிறோம். ஆக இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலை சமூக வளர்ச்சிக்கு எதிரான சுயநல நிலைப்பாடு எனலாம். இன்னொரு காரணமும் சொல்கிறேன்.
நான் முன்னர் வேலை பார்த்த அரசு உதவி பெறும் கல்லூரியில் ஒரு இஸ்லாமியர் கூட கிடையாது. என் துறைத்தலைவர் இஸ்லாமியர் குறித்த தன் கசப்புணர்வை வெளிப்படையாகவே பதிவு செய்பவர். இஸ்லாமியர் ஏன் பொதுப்பரப்பு வருவதில்லை என்பதற்கு பல காரணங்கள் சொல்லலாம். முன்னோடிகள் குறைவு என்பதும் ஒன்று. இந்திய சமூக அமைப்பு ஒரு வட்டப்பாதை போன்றது. அதற்கு முன்வாசலோ பின்வாசலோ இல்லை. நீங்கள் அந்த பாதைக்குள் நுழையவே முடியாது. உள்ளே சுற்றுபவர்கள் ஆண்டாண்டுகளாய் ஓடிக் கொண்டே இருப்பார்கள். கல்விப்புலம், வணிகம், சேவைத்துறை, ஊடகம் என மேற்தட்டு வேலை தளங்களை எடுத்துக் கொண்டால் சில குறிப்பிட்ட சாதிகளே ஆக்கிரமிப்பதை பார்க்கலாம். அவர்கள் பிற சாதிகளை அனுமதிப்பதில்லை என்பதை விட அத்தளங்களில் பிறர் நுழைவதற்கு வாசலே இல்லை என்பது தான் உண்மை. என் பழைய கல்லூரியில் ஒரு பணியிடம் இஸ்லாமியருக்கு மட்டுமே தர வேண்டும் என்கிற சட்டரீதியான கட்டாயம் வந்த போது முதன்முறை ஒரு இஸ்லாமியர் கொண்டு வரப் பட்டார். என் துறைத்தலைவருக்கு அதிகாரம் அளித்தால் அவர் நிச்சயம் இஸ்லாமியரையோ கிறித்துவரையோ அனுமதிக்க மாட்டார். பல இடங்களில் இது தான் நிலை. இனி இந்த இஸ்லாமியர் துறைத்தலைவர் ஆன பின் பிற இஸ்லாமியரை துறைக்குள் கொண்டு வருவார். இப்படியான ஒரு கட்டாய சமத்துவம் தான் நம் நாட்டில் சாத்தியம். எல்லோரும் சமமாக போட்டியிடட்டும் என்கிற வாதம் அபத்தமானது. வாய்ப்பே இல்லாத போது எப்படி போட்டி இட? பொருளாதார தடைகள் போக வேலை தருபவர்களின் முன்தீர்மானங்களையும் தாண்டி ஒடுக்கப்பட்டவர்கள் இங்கே போட்டி வாய்ப்பை அடைவதே கிட்டதட்ட அசாத்தியமானது.
இந்த இஸ்லாமியரை கொண்டு வந்ததை போலத் தான் இனி நம் நிறுவனங்களுக்குள் பார்வையற்றவரை, கைகால் குறைபாடு கொண்டவரை கட்டாயமாக கொண்டு வர வேண்டும். தரம் பாதிக்கப்படாதா? இதுவும் ஒரு போலியான வாதம். நம் ஊரில் எல்லா வேலைகளும் சாதி, மத, ஊழல் அடிப்படையில் தான் தரப்படுகின்றன. அப்போது பாதிக்கப்படாத தரம் இனி இட ஒதுக்கீட்டால் பாதிக்கபட போகிறதா? இல்லை. சொல்லப்போனால் ஒடுக்கப்பட்டவர்கள் தாம் பிறரை விட இன்னும் தீவிரமாக ஆர்வமாக வேலை பார்ப்பார்கள். மேல்சாதியினரின் பொருளாதார சமூக பாதுகாப்பு இல்லாத அவர்கள் உழைப்பும் முனைப்பும் தான் தம்மை தக்க வைக்கும் என அவர்கள் அறிவார்கள். பெண்கள் நல்ல உதாரணம். பொதுவாக அலுவலகங்களில் ஆண்கள் அசட்டையாக இருக்க பெண்கள் இன்னும் முனைப்பாக அக்கறையாக பணி புரிவார்கள். காரணம் இதை விட்டால் அடுக்களை தான் சரணாகதி என அவர்கள் அறிவார்கள்.

ஒடுக்குமுறை என்பது அனைவருக்கும் பொதுவானது. அடிப்படையில் ஒரே வகையான முன்தீர்மானங்களும் விழுமியங்களும் தான் ஊனமுற்றோருக்கும், தலித்துகளுக்கும், பெண்களுக்கும் எதிராக இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. அது உடலைக் கொண்டு ஆட்களை மதிப்பிடுவது – பாலுறுப்பு, பேச்சுமொழி, தோலின் நிறம், பிறப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகிய வித்தியாசங்கள் என்றோ உலகில் மதிப்பிழந்து விட்டன என்பதை உணர இங்கு யாரும் தயாராக இல்லை. பார்வையற்றவர்கள் வேலை கோரி போராடிய போது போலீசைக் கொண்டு அரசு அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய காட்டுமிராண்டித்தனத்தை சமீபமாக பார்த்தோம். அப்போது பார்வையற்றோருக்கு துணையாக பெண்கள், தலித்துகள், இஸ்லாமியர் களமிறங்கி இருக்க வேண்டும். எதிரி பொதுவானவன் என்கிற புரிதல் வராதவரை யாருக்கும் இங்கு சமத்துவம் வாய்க்காது. ஒடுக்கப்பட்டவர் அனைவரும் இனி ஒரே சாதியாக இச்சமூகத்துக்கு எதிராக போராடும் காலம் – ஐரோப்பாவில் ஐம்பது வருடங்களுக்கு முன்பே தோன்றிய சிவில் உரிமை அமைப்புகளின் காலம் – இங்கும் துவங்க வேண்டும். 
நன்றி: அமிர்தா (நவம்பர் 2013) 
Read More

Friday, 25 October 2013

இடஒதுக்கீடு தேவையா?


சில மாதங்கள் முன் நடந்த TET எனும் ஆசிரியர் தகுதித் தேர்வின் போது தமிழக அரசு இடஒதுக்கீடு விதிகளின் கீழ் ஆசிரியர்களை நியமனம் செய்யவில்லை. 20,000 ஆசிரியர்கள் இவ்வாறு பொதுப் பிரிவில் நியமிக்கப்பட்டார்கள். இது தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய அநியாயம் என்பதில் சந்தேகமில்லை.


 NCETஐ பொறுத்தமட்டில் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால் அரசுக்கு அந்த தார்மீக கடமை இருந்தது. அது இந்த் சமூகத்தில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து முன்னேற வேண்டியிருக்கிற ஒரு பிரிவு மக்களை கைகொடுத்து தூக்கி விட வேண்டிய கடமை. இந்த வாதம் இப்படியிருக்க இன்னொரு புறம் எதற்கு கைதூக்கி விட வேண்டும், அனைவரையும் சமமாகத் தான் நடத்த வேண்டும் என்றொரு வாதமும் இன்று மேற்தட்டினரால், குறிப்பாக நகர்மய இளையதலைமுறையினரால் வைக்கப்படுகிறது. சமீபமாக ஒரு டி.வி விவாத நிகழ்ச்சியில் ஒரு இடஒதுக்கீடு பற்றின விவாதம் வந்த போது ஒட்டுமொத்த பங்கேற்பவர்களுமே அதற்கு எதிராக ஆவேசமாக பேசினர். ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட மாணவர் அப்போது தோன்றி “இடஒதுக்கீடு தேவையில்லை என்றே நினைக்கிறேன். அது என்னை மேலும் அந்நியப்படுத்துவதாக அவமானகரமானதாக உள்ளது” என்றார். அவருக்கு இடஒதுக்கீடு மறுப்பாளர்களிடம் இருந்து பலத்த கரவொலி. இதைப் பார்க்கையில் இன்றைய இளையதலைமுறை எத்தகைய வரலாற்று உணர்வுடன், சமூக அறிவுடன், லட்சியவாதத்துடன் இருக்கிறது என்கிற அதிர்ச்சி நமக்கு ஏற்படுகிறது. இன்று சமூக முன்னேற்றம் என்பது தனிமனிதனின் சுயமுன்னேற்றம் தான் என அபத்தமாக நம்பும் ஒரு தலைமுறையுடன் நாம் இருக்கிறோம்.
வரலாற்று நியாயத்தை விடுங்கள், இடஒதுக்கீடு என்பது தமது வாய்ப்பை தட்டிப்பறிக்கும் ஒரு உரிமைத் திருட்டுக்காக அவர்கள் கருதுகிறார்கள். கிரீமி லேயர் வாதம் அடிக்கடி முன்வைக்கப்படுவது. அதாவது இடஒதுக்கீட்டின் போர்வையில் தாழ்த்தப்பட்ட சாதிகளில் உள்ள பல பணக்காரர்கள் தாம் வேலை மற்றும் படிப்பில் முன்னுரிமைகள் மற்றும் பண உதவிகளைப் பெறுவதாக சொல்லுகிறார்கள். சில குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளில் உதிரியாக இப்படியான சுரண்டல்கள் நடந்தாலும் கூட ஒட்டுமொத்தமாக இதனைக் கொண்டு இடஒதுக்கீடு ஒரு சமூக ஏமாற்று என கோருவது உண்மையாகாது. இந்த கிரீமி லேயர் விவகாரத்தை நாம் வேறு கோணத்தில் பார்க்க வேண்டும்.
இந்திய சமூகத்தில் மக்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்கள், மானியங்கள், பாதுகாப்புக்கான சட்டங்கள் அனைத்தும் ஏதாவதொரு முறையில் ஊழலுக்குள்ளாகின்றன. பொதுவிநியோகத் திட்டம் உட்பட. எப்போதும் ஒரு கையளவு நன்மை தான் குறிப்பிட்ட மக்களுக்கு போய் சேர்கிறது. இது ஒரு பொதுவான துர்விதி. அதற்காக எந்த மக்கள் நலத்திட்டமும் இனி வேண்டாம் என பொத்தாம்பொதுவாக முடிவுக்கு வரமுடியுமா? இடஒதுக்கீட்டு விசயத்திலும் அவ்வாறு தான். எனக்குத் தெரிந்த ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் முழுக்க நந்தனத்தில் உள்ள விடுதியின் காரணத்தினாலும் சலுகையை பயன்படுத்தியும் தான் கல்லூரிப் படிப்பு வரை முடித்திருக்கிறான். இலக்கிய ஆர்வமும் எழுத்துத் திறமையும் கொண்ட அவனை விடுப்பின் போது சொந்த ஊருக்கு போக வேண்டாம் என நான் வலியுறுத்துவேன். அங்கு சென்றால் அவன் கரும்பு வெட்ட போக நேரிடும். வெட்டும் போது பட்ட காயம் அவன் கையில் வடுவாக பதிருந்திருப்பதை பார்க்கும் போது எனக்கு மனம் பதறும். எழுத வேண்டிய அவனது கைவிரல் ஒன்று கரும்பு வெட்டுகையில் துண்டிக்கப்பட்டால் என பலசமயம் யோசித்து நடுங்கியிருக்கிறேன். இப்படியான எத்தனையோ இளைஞர்கள் அரசின் இட ஒதுக்கீட்டு சலுகையால் தான் படிக்கவும் தம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் முடிகிறது.
இன்று ஒவ்வொரு சமுதாயமும் தனக்கான சலுகைகளை போராடிப் பெறட்டும், நாம் முடிந்தவரை இதை ஒரு போட்டியாக நினைத்து தடுக்க வேண்டும் என்கிற ஒரு பிளவுபட்ட மனப்பான்மை மக்களிடம் இன்று அழுத்தமாக உருவாகி விட்டது. அதனால் தான் தாழ்த்தப்பட்ட சாதிகளே கூட தமக்கு கீழுள்ள சாதியினரின் ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குத் தொடுப்பதை பார்க்கிறோம். இந்த அணுகுமுறை பிழையானது. எல்லா பிரிவனரிடையேயும் மிகத்திறமையான கடுமையான உழைப்பாளிகள் இருக்கிறார்கள். அவர்களை மேலெழ ஊக்குவிக்கும் போது ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கு அது பெரிதும் பயன்படும். வேலை மற்றும் தொழில் வாய்ப்புக்கள் இன்று அபரிதமாக உள்ள நிலையில் வேலை செய்யும் திறனும் மனப்பான்மையும் உள்ளவர்கள் தாம் குறைவு. உண்மையில் இங்கு யாரும் யார் இடத்தை ஆக்கிரமித்து இருப்பதில்லை. தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கைத்தரமும் கல்விநிலையும் உயரும் போது ஒட்டுமொத்த இந்தியாவின் வாழ்க்கைத்தரமும் தான் மறைமுகமாக உயரப்போகிறது. தாழ்த்தப்பட்டவர்களிடம் இருந்து தோன்றும் ஒரு சிறந்த மருத்துவர், ஆசிரியர், எழுத்தாளரால் உங்கள் எல்லாருக்கும் தான் பயன் ஏற்படும்.
இடஒதுக்கீடு எதிர்ப்பு இரண்டு விசயங்களைச் காட்டுகிறது. ஒன்று ஒரு வாய்ப்பை பொருண்மையான நேரடியான ஒன்றாக பார்க்கும் நிலப்பிரபுத்துவ மனப்பான்மை தான் இன்று இந்த எதிர்ப்பாளர்களிடம் செயல்படுகிறது. நவமுதலாளித்துவ கட்டற்ற வாய்ப்புகளின் சமூகத்தில் இந்த அச்சத்துக்கு எந்த மதிப்பும் இல்லை. அடுத்து, கிரீமி லேயர், சம-உரிமை வாதங்கள் இட-ஒதுக்கீட்டை முடக்குவதற்கான தந்திரமான தர்க்கங்கள் மட்டும் தான். மேலும் அரசும் அதிகாரமட்டமும் இட-ஒதுக்கீட்டை வாக்கு வங்கியை உத்தேசித்து தக்க வைத்தாலும் கிடைக்கிற சந்தர்பங்களில் எல்லாம் அதனை புறக்கணிக்கவும் பலவீனப்படுத்தவும் முயல்கிறது. TET ஒரு நல்ல உதாரணம். உண்மையில் இன்றும் எத்தனையோ காலியிடங்கள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படாமல் இருக்கின்றன. சில பதவி உயர்வுகள் தாழ்த்தப்பட்டவர்கள் அங்கு வரக்கூடாது என்ற உத்தேசத்தில் தொடர்ந்து தரப்படாமல் இருக்கின்றன. எம்.எட், முனைவர் பட்டம் வரை முடிந்த பார்வையற்றோர் ரயில்களின் கைப்பேசி உறைகளும் கிளிப்புகளும் கூவி விற்று பிழைக்கும் நிலையில் இருக்கிறார்கள். இடஒதுக்கீட்டை கராறாக செயல்படுத்த வேண்டிய தேவையுள்ள சூழலில் அதை எதிர்ப்பது போன்ற குரூரம் மற்றொன்று இருக்க முடியாது.
Read More

Monday, 9 January 2012

ஆண்-பெண் நட்பு: காமம் மற்றும் சமஅந்தஸ்து



 வெறும் தோழியான ஒரு girl friendஐ எப்படி அழைக்க? நான் பங்கேற்ற ஆண்-பெண் சமநிலை பற்றின ஒரு நீயாநானா விவாத படப்பிடிப்பின் போது இந்த சிக்கலை பல பங்கேற்பாளர்கள் ஏதோ புதுசு என்பது போல் திடுக்கிட்டவாறு எதிர்கொண்டனர். கோபிநாத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் “அந்த கெர்ல் பிரண்ட் இல்லீங்க என்று சொல்ல நேர்ந்தது. Female friend என்ற சொல் ஏதோ மிக்ஸி கிரைண்டர் போன்ற இரைச்சலை கொண்டுள்ளது. சிநேகிதி, தோழி ஆகிய பதங்களை வானம்பாடிகளில் இருந்து இடதுசாரிகள், பெண் பத்திரிகைகள் வரை அர்த்தம் திரித்து விட்டனர். ஆண்நண்பர்களும் இருக்கும்பட்சத்தில் ஒரு பெண்ணின் தோழி கெர்ல் பிரண்டா வெறும் பிரண்டா? ஆனால் இது ஒரு சொல்லாக்கம் பற்றின பிரச்சனை அல்லவே! ஆண்-பெண் நட்பு அதன் உள்முரண் காரணமாக ஒரு சங்கடமான உறவாகவே இருந்து வருகிறது.
முதலில் இருவரும் செக்ஸை உட்படுத்துவதா, குறைந்த அளவில் பரஸ்பர கவர்ச்சி மற்றும் அடியோடும் கிளர்ச்சிக்காகவேனும், வேண்டாமா வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
அடுத்து இருவரும் காமம் மேலிட்டால் உறவை முறிப்பதா அல்லது தொடர்வதா என்றும் தீர்மானிக்க வேண்டும். இவ்விசயத்தில் பெண்கள் தாம் அதிகம் கவனமாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இங்கு ஒரு சுவாரஸ்யமான விசயம். ஒரு நட்பில் காமம் மேலிட்டால் அது காதலாக வேண்டிய அவசியம் இல்லை. அங்கும் இதை வெளிப்படையாக பேசி தங்களது தேவைகள் என்னவென்பதை விவாதித்து காமத்தை நேரடியாக எதிர்கொண்டு தொடர்ந்து நட்பாகவே தொடரும் ஜோடிகள் உள்ளனர். இவர்கள் 66% மேல் என்கின்றது ஒரு ஆய்வு. காமத்தை முழுக்க தவிர்ப்பது ஆண் பெண் நட்பை வலுப்படுத்தும் ஆழமாக்கும் எனும் ஒரு தரப்பும் உள்ளது. எப்படியும் வெளிப்படைத்தன்மை நல்லது என்கிறார்கள் உளவியலாளர்கள். அதற்கு நம்மூரில் “சிஸ்டர் என்றொரு சொல் எளிதாக பலருக்கும் பயன்படுகிறது. அல்லது ஒரு சஞ்சலமான தருணத்தில் தத்தமது பரஸ்பர கணவன் மனைவி பற்றி விசாரிப்பது (பலருக்கும் நண்பனின் மனைவி பால் பெரிய அக்கறை இல்லையென்றாலும்). ஆண்கள்/பெண்கள் குழுவில் ஒரே பெண்/ஆண் மட்டும் இருப்பதும் இறுக்கத்தை தளர்த்த மற்றொரு உத்தி.
அடுத்த முக்கிய தடை சம உரிமை.
அலுவலக உரையாடல்களின் போது “இந்த ஆம்பளைங்களே/பொம்பளைங்களே இப்படித்தான் என்று மெல்லிய கிண்டலுடன் எதிர்பாலினத்தை தாழ்த்த முயல்வது சகஜம். திருமணமானவர்கள் என்றால் கணவன்/மனைவி ஜோக்ஸ், திருமணம் எனும் படுகுழி வகை புலம்பல், குடும்பம் மீதான புகார்கள் ஆண்-பெண் நண்பர்களுக்கு உறவில் தமது படிநிலை என்னவென்பதை நிறுவ பயன்படுகின்றன. பெண்கள் வெறும் குடும்பப் பெண்களாக இருந்த காலத்தில் இந்த வகை நட்பே அவசியமற்றதாக கருதப்பட்டது. இன்று காஸ்மோபொலிடன் கல்லூரிகளில் இருந்து கார்பரேட்டு உறவுநிலைகள் வரை இவ்வுறவு ஊக்குவிக்கப்படுகிறது, அதற்கான ஒரு கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு தராசு சதா ஆண்-பெண் நட்பின் முன் தொங்குகிறது. அநேகமாய் ஆண்கள் தாம் அதிகாரமும் அந்தஸ்தும் மிக்கவராக இவ்வுறவு நிலையில் இருக்கிறார்கள். ஒரு பெண்ணை வழிநடத்தும், பாதுகாக்கும், ஊக்குவிக்கும் பாத்திரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். ஆண்களும் பெண்களும் சமநிலையாக பழகுவதாய் தெரியும் வகுப்புகள், அலுவலகங்களில் கூட இந்த நுட்பமான படிநிலையை காண்கிறோம். எப்படியும் கிண்டலும் கேலியும் பரஸ்பர அக்கறைக்கு நிகராக தேவைப்படுகிறது.
ஆண்-பெண் உறவுக்கு ஒரு இயல்பற்ற தன்மை உள்ளது. இருவேறுபட்ட உணர்வுநிலைகள், சிந்தனை மற்றும் செயல்பாட்டு முறைகள் கொண்ட ஆண்-பெண்கள் தங்கள் பாலினத்துக்குள் பழகும் போது ஒரு இயல்பான பாதுகாப்பை, கூட்டுணர்வை, புரிந்துணர்வை அடைகின்றனர். ஒரு கூட்டத்திலோ அமர்விலோ விளையாட்டு விருந்துகளிலோ அவரவர் குழுவிலாய் ஆண்-பெண்கள் சென்று சேர்ந்து மனம் திறப்பது ஒரு கட்டாயமோ சமூக கூச்சமோ காரணமாக அல்ல, அதன் காரணம் ஒரு இயல்பான சமூகமயமாக்கம். ஆக ஆண்-பெண் நட்புக்கான சந்திப்பு தளங்கள் உயிரியல் மற்றும் சமூக ரீதியாக மிகவும் குறுகிப் போய் விடுகின்றன. சமூக tabooக்கள் போன்ற தடைகளையும் ஆண்-பெண் நட்புகள் கடந்தாக வேண்டும்.
திருமணத்துக்கு பிறகு ஆண்-பெண் நட்பு ஆபத்தானதா அதற்கு எல்லைகள் உண்டா ஆகிய கேள்விகளையும் நாம் இன்றைய கலாச்சார வேளையில் விவாதித்தாக வேண்டும். உள்ளார்ந்த ஆபத்துக்களையும் கடந்து திருமணத்துக்கு பின்பான எதிர்-பால் நட்புகள் திருமணத்தை வலுப்படுத்துகின்றன என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். கணவன் மனைவிகள் முயற்சியெடுத்து அடுத்தவரின் ஆண்-பெண் நட்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பல சம்பவங்களை தினசரி காண்கிறோம். வேறெப்போதையும் விட ஆண்-பெண் நண்பர்கள் மோசமாய் காயம்படுவது அப்போது தான். உதாரணமாய் ஒரு மனைவி தனது கணவனின் தோழியை வன்மமாக உறவுப்பரப்பில் இருந்து நீக்குவது நீண்ட கால கசப்புக்கு வழிவகுக்குகிறது. அவமதிக்கப்பட்ட ஒரு தோழி “உன்னை புரிந்து கொள்ளாத ஒரு மனைவிக்காக என்னை நிராகரிக்கிறாயே என்று நண்பனை நொந்து கொண்டு பிறகு திருமணமான நண்பர்கள் மீது அநாவசிய ஜாக்கிரதையுடன் பழக நேரலாம். “என் மனைவி ரொம்ப பொஸஸிவ் என்று ஒரு ஆண் சுயசமாதானம் செய்து கொண்டாலும் தாம்பத்ய அவநம்பிக்கை அத்தருணமே ஸ்தாபிக்கப்படுகிறது. அதற்கு மேல் நீங்கள் ரெண்டு பக்கமும் பார்த்துக் கொண்டே புன்னகைப்பீர்கள். பிறகு அதற்கும் சேர்த்து குற்றவுணர்வு கொள்வீர்கள். உண்மையில், ஆண்-பெண் உறவு தனக்கு எந்த அனுகூலமும் தராது என்கிற ஒரு தவறான முன்தீர்மானம் தான் இதற்கு காரணம். ஒரு புத்திசாலியான மனைவி தன்னில் இருந்து வேறுபட்ட ஒரு பெண்ணை கணவனின் தோழியாக அனுமதிக்கவே செய்வாள். ஏன்?
அநேகமான தம்பதிகளுக்கு பரஸ்பர ஆர்வங்களும், ஒத்த நிலைப்பாடுகளும் இருப்பதில்லை. காதல் திருமணங்களில் கூட. திருமண உறவுகள் பொருந்துவதற்கு இந்த ஆளுமை வேறுபாடு தேவையும் கூட. அதனால் தம்மை ஒத்த ஒருவருடன் நட்பை அனுமதிப்பதன் மூலம் ஒரு கணவனோ மனைவியோ தமது உறவில் உள்ள குறையை சமனம் செய்ய முடியும். உதாரணமாய் ஒரு பெண் தன் நண்பனிடம் இலக்கிய ஆர்வத்தை பகிர அனுமதிப்பதன் மூலம் வீடுதிரும்பும் கணவன் திராபையான பல உரையாடல்களில் இருந்து தப்பிக்க முடியும். மேலும் பரஸ்பர பொருத்தமின்மை குறித்து குற்றவுணர்வோ வெறுப்போ உற்று அதை வன்மமாக புகாராக வெளிப்படுத்த நேராது.
ஆண்-பெண் நட்பு சுமூகமாக இயங்குவதற்கான தேவை நடைமுறையில் உள்ளதை அறிவோம். இதைக் கடந்து மற்றொரு உளவியல் அனுகூலமும் உள்ளது. இருபாலினமும் உளவியல் ரீதியாக மாறுபட்டவர்கள் என்பதால் தம்மவர்களிடம் கிடைக்காத சில விசயங்கள் எதிர்பாலின நட்பில் கிடைக்கின்றன. உதாரணமாக பெண்கள் வாழ்வின் உணர்ச்சிகரமான பிரச்சனைகளை தர்க்கப்படுத்தாமல் தீர்வு கேட்காமல் வெறுமனே வெளிப்படுத்த பகிர விரும்புபவர்கள். ஆண்கள் ஒன்று சேர்ந்தால் சமூக, அரசியல், கலாச்சார தளங்களில் சில பொதுவான அபிப்பிராயங்களை வைத்து உரையாடுவார்கள். தனிப்பட்ட நெருக்கடிகளை வெளிப்படையாய் உரையாடுவதில் ஆண்களுக்கு அதிக உவப்பில்லை, அவர்கள் அதை ரொம்ப பாதுகாப்பாயும் நினைப்பதில்லை. பெண்களின் குற்ற ஒப்புதல்களும், கண்ணீர் மன்றாடல்களும் சரி ஆண்களின் நிதானமான உலக நடப்பு ஆய்வுகளும் சரி அதன் மிகை காரணமாய் சலிப்பேற்படுத்துகின்றன. போலியாக படுகின்றன. இந்த மிகையை ஓரளவு மட்டுப்படுத்த ஆண்-பெண் உரையாடல்கள் உதவுகின்றன. ஆண் தன்னை எளிதாக மனதளவில் ஒப்புக் கொடுத்து வெளிப்படுத்த ஒரு பெண் தோழியின் அருகாமை தேவை இருக்கிறது. அங்கு அவன் பயமின்றி தன் அந்தரங்க நெருக்கடிகளை பேச முடியும். அதன் உக்கிரமான ஒரு நிலையில் தஸ்தாவெஸ்கியின் ரஸ்கோல்நிக்கோவுக்கு ஒரு சோன்யா போல.
பெண்களுக்கு ஆணுடனான உரையாடல் ஒரு நல்ல மாற்றாக உள்ளது. குறிப்பாக அறிவுத்தேடல் அல்லது கலை ஆர்வம் கொண்ட பெண்கள் நம் சமூகத்தில் ஆண் நட்பை வேண்டுவது இதனாலே. பெண்களுடன் அழுது புரண்டு களைத்து பின் ஒரு ஆணுடன் உரையாடுகையில் அவர்களுக்கு நிச்சயம் ஆசுவாசமாக உள்ளது. எப்படியும் ஆண்-பெண் உரையாடலில் ஆண்களே அதிகம் உளவியல் ரீதியாய் பயன்பெறுவதாய் மற்றொரு ஆய்வு சொல்லுகிறது.
ஆண்-பெண் நட்பு நடைமுறை அவசியமாக வளர்ந்து வரும் சூழலில் ஆண்மை பெண்மை ஆகிய மரபான அடையாளங்களும் மெல்ல கலைந்து வருகின்றன. இறுக்கமான பால் அடையாளத்தை வைத்துள்ள ஆணோ பெண்ணோ தனது படிக்கும்/வேலை செய்யும் சூழலில் லகுவான எதிர்பால் உறவுகளை ஏற்படுத்த இயலாது. ஆண்கள் சற்று ஆண்மை கொண்ட பெண்களையும், பெண்கள் சற்று பெண்மை கொண்ட ஆண்களையுமே நட்பாக ஏற்று பழக விரும்புவதாய் பல ஆய்வுகள் சுட்டுகின்றன. இதை நடைமுறை வாழ்விலும் எளிதில் காண்கிறோம். Androgynous நபர்களுக்கு ஆண்-பெண் நட்பு சுலபமாவது ஏன்?
முதலில் சம்பிரதாயமான அந்தஸ்து மற்றும் அதிகார உரசலை இது வெகுவாக குறைக்கிறது. சுயபாலின பண்புகள் ஒரு அணுக்கத்தை நட்புக்குள் எளிதாக ஏற்படுத்துகிறது. ஒரு அடையாளம் என்ற நிலையில் நவீன சமூகம் இன்று androgynousஆக மாறி வருவது வேறு விசயம். தைரியமான உறுதியான பெண்ணும் நெகிழ்ச்சியான கவித்துவமான ஆணும் அச்சமூகத்தின் லட்சிய பிரதிநிதிகள். இந்த புள்ளியில் இருந்து காமம் மெல்ல மெல்ல ஒரு பிரச்சனையாக தேய்ந்து போவதும் சுவாரஸ்யமான விசயம்.
Read More

Friday, 30 December 2011

ஜோசியம் பித்தலாட்டமா?



நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஜோசியம் வெறும் பித்தலாட்டம் என்று சமீபமாய் சொன்னது இந்தியர்கள் பலரை எரிச்சலூட்டியுள்ளது. இதன் பொருள் இந்தியர்கள் அறிவியல் பார்வை இல்லாதவர்கள் என்று அல்ல; நமக்கு அறிவியல் புரியும். ஆனால் நாம் வாழ்வை தர்க்கரீதியாக அளந்து கூறு போட விரும்பாதவர்கள். நடைமுறையிலும் தத்துவார்த்தமாகவும் வாழ்வு சிடுக்கானதாக உள்ளது இங்கே. நாம் உள்ளுணர்வு சார்ந்து இயங்க தலைப்படுகிறோம். ஜோசியம் பொய்யாக இருந்தாலும் நமக்கு அது தேவையாக உள்ளது. மேலும் அறிவியல் பூர்வமாக சிந்திக்கும் சமூகமே முன்னேறும் என்று வெங்கி சொல்வது முழுக்க உண்மையல்ல. அறிவியலும் ஊகங்களையும் கற்பனையையும் தர்க்கரீதீயாக ஸ்தாபிக்க முயல்கிறது என்று நிரூபித்துள்ளார்கள். கூச்சலும் குழப்பமுமாக உலகமே நமக்கு சௌகரியம். ஜோசியமும், மித்துகளும் இந்த சமூகத்தின் மாய-எதார்த்த கதைகள்.
Read More

Sunday, 25 December 2011

நவீன இலக்கியமும் கல்வித்துறையும்



நமது கல்வி அமைப்புகளுக்கும் இலக்கியத்துக்கும் இடையே ஒரு பெரும் இடைவெளி நிலவியது. அது ஓரளவு தற்போது குறைந்துள்ளது. பெரும்பாலான தமிழாசிரியர்களுக்கு நவீன இலக்கிய பரிச்சயம் இல்லை. நவீன தமிழில் நேர்ந்துள்ள மாற்றங்கள் பற்றியும் போதம் இல்லை. இந்த இடைவெளி எப்படி உருவானது? இதற்கு வரலாற்று கலாச்சார ரீதியான காரணங்கள் உண்டு. ஆரம்பத்தில் தமிழாசிரியர்கள் சைவ, வைணவ இலக்கியங்களில் தோய்ந்தவர்களாக இருந்தனர். இந்த சமயப்பற்று தான் மொழிப்பற்றாக இருந்தது. பின்னர் திராவிட கழகங்கள் தமிழகத்தில் புயலாக கிளம்பியதும் தமிழாசிரியர்களில் ஒரு பகுதியினர் திராவிடப் பற்றாளர்களாக மாறினர். திராவிட இலக்கிய மறுமலர்ச்சி தமிழின் விபூதியை அழிக்கும் மேலோட்ட புரட்சியை தான் செய்தது. அது இலக்கியத்தை மொழி மற்றும் இனப்பற்றாக சுருக்கியது. இலக்கியத்தை மேலும் அணுகி அறிய கோட்பாடுகளும் தத்துவமும் அவசியம். இந்த மாற்றத்தை எழுபதுகளில் இடதுசாரிகளும் வானம்பாடிகளும் கல்வித்துறை தமிழ் அறிஞர்களிடத்து கொண்டு வந்தனர். தமிழ்ப்புதுக்கவிதை வடிவத்தை கல்விப்புலத்தில் பிரபலமாக்கிய பெருமை தமிழன்பன், மூ.மேத்தா, அப்துல் ரகுமான், வைரமுத்து போன்ற வானம்பாடிகளை சேரும். துரதிஷ்டவசமாக பிறகு ஒரு தேக்கம் ஏற்பட்டது. நவீன தமிழ் இலக்கியத்தில் நிகழ்ந்த மாபெரும் மாற்றங்களை, பரீட்சார்த்த முயற்சிகளை, முக்கிய சாதனைகளை அறியாமலே ஒரு தலைமுறை தமிழ்படித்து வந்தது. அவர்கள் வரையில் நவீன புனைகதை என்பது ஜெயகாந்தனில் ஆரம்பித்து தொடர்ந்து முடிந்தது. இதற்கு திராவிட×ஆரிய அரசியல் கோஷம் ஒரு காரணம்.
தமிழின் நவீனத்துவ பிதாமகர்களில் அநேகமானவர்கள் பிராமணர்கள். திராவிட கட்சிகள் சமூக ஏற்றத்தாழ்வுக்கும் சீரழிவுக்கும் பார்ப்பன சதியே ஏக காரணம் என்று கருதின. திராவிட ஆதரவு ஆசிரியர்களிடத்து பார்ப்பன விரோதம் வலுவான இருந்தது. அவர்கள் நவீனத்துவ இலக்கியத்தை பிராமண இலக்கியம் என்று மேலோட்டமாக புரிந்து கொண்டனர். தமிழ் நவீனத்துவவாதிகளோ திராவிட, மார்க்ஸிய தரப்பின் சமூகத் தரப்பை காண மறுத்தனர். இப்படி இரு தரப்பினரும் கண்களை இறுக்கக் கட்டிக் கொண்டு தொட்டுத் தடவி புரிந்து கொண்டதில் யானை கையடக்க பொருளாக மட்டுமே தென்பட்டது.
க.நா.சு, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோர் தங்களது முன்னோடிகளாக பிரெஞ்சு, ஜெர்மானிய, அமெரிக்க எழுத்தாளர்களையே கண்டார்கள். கம்பனையோ இளங்கோவையொ வள்ளுவனையோ அல்ல. சு.ராவும் அவரது வழிவந்தவர்களும் வள்ளுவம் இலக்கியம் அல்ல என்று மறுத்தனர். க.நா.சு இலக்கியத்தை தமிழ் ஆசிரியர்களிடம் இருந்து காப்பாற்றுவதே தலையாய பணி என்று நினைத்தார். இவ்வாறு நவீன எழுத்தாளர்களுக்கு மரபின் தொடர்ச்சி இருக்கவில்லை. தமிழாசிரியர்களில் அநேகம் பேருக்கு அன்று ஆங்கில பயிற்சியோ உலக இலக்கிய வாசிப்போ இருக்கவில்லை. நவீன தமிழ் இலக்கியம் மக்கள் இலக்கியம் அல்ல என்று தமிழாசிரியர்கள் வெகுகாலமாய் மறுத்தனர். பிராமணியம் போக, இது அவர்களின் முக்கிய புகாராக இருந்தது நவீனத்துவவாதிகளுக்கு வெகுஜன ரசனை என்பது ஒவ்வாமையாக இருந்தது. இது ஏற்படுத்திய பிளவு காரணமாய் இரு தரப்பினருக்கும் இழப்பு ஏற்பட்டது.
மரபை புத்துருவாக்குவதன் மூலமே நாம் நவீனத்துவத்தை அறிய முடியும். மரபை அறியாமல் நாம் பத்மவியூகத்தில் மாட்டிக் கொள்வோம். அனைத்து விதிகளையும் உடைத்துக் கொண்டு உள்ளே செல்லலாம்; ஆனால் வெளியேறத் தெரியாது. மரபுக்கும் நவீனத்துக்கும் இடையிலான இணைவு தான் படைப்பூக்கத்தை தூண்டும் என்றார் டி.எஸ் எலியட். மரபை புறக்கணித்தது நவீன தமிழுக்கு ஒரு இழப்பு தான். மேலும் மேற்கத்திய நாடுகளில் போல் இங்கு நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தி வாசிக்க வைக்கும் பயிற்சியை தமிழ் கல்வியாளர்கள் செய்யவில்லை. முந்நூறு பிரதிகள் விற்ற சிற்றிதழ்கள் மூலம் நவீன இலக்கியம் ஒரு ரகசிய இயக்கமாகவே அரைநூற்றாண்டு இயங்கியது. நவீனத்துவவாதிகளுக்கு வெகுஜன ஊடகத்தில் எழுதுவதில் உவப்பின்மை இருந்ததால் தீவிர இலக்கியம் மீதான அரை-இருட்டு முழு இருட்டானது.
இருபதாம் நூற்றாண்டில் ஏகப்பட்ட அறிவுத்துறைகள் இலக்கிய வாசிப்பில் பாதிப்பை ஏற்படுத்தின. இலக்கியம் வாசிக்க ஒருவர் அரசியல், உளவியல், மொழியியல், தத்துவம், பண்பாட்டு தத்துவம், மானுடவியல், வரலாற்றுவாதம் போன்ற எண்ணற்ற கருத்தியல்களை அறிய வேண்டியதானது. இந்தப் புதுவாசிப்பு முறைகள் தமிழர்களுக்கு நவீன இலக்கியம் வழியாகவே அறிமுகமானது. கண்ணை மூடி பால்குடித்துக் கொண்டிருந்த தமிழய்யாக்கள் உலகம் மாறி வருவதை அறியாமல் விமர்சனம் என்பதை எளிய பொழிப்புரையாக களிம்பேறிய மொழியில் கற்பித்தார்கள். இதன் காரணமாக தொண்ணூறுகள் வரை தமிழ் படித்தவர்கள் சமகால போக்குகள் குறித்த எந்த பிரக்ஞையும் இல்லாதவர்களாக உருவானார்கள். இன்றும் தமிழ்ப்பேராசியர்களில் இருந்து தமிழின் சிறந்த படைப்பாளிகளாக உருவாகி வந்தவர்களை அரிதாகவே பார்க்க முடியும். மேற்கில் இதற்கு முற்றிலும் மாறான நிலை நிலவுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
அண்மையில் தமிழ் கலாச்சார பரப்பில் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் நடந்தன. சிற்றிதழ்-வெகுஜன லட்சுமணக் கோடு அழிந்தது. சிற்றிதழ்வாதிகள் வெகுஜன ஊடகங்களை ஆக்கிரமித்தனர். பாலகுமாரனையும் பட்டுக்கோட்டை பிரபாகரையும் வாசித்தவர்கள் ஜெயமோகனையும் எஸ்.ராமகிருஷ்ணனையும் நாடி வந்தனர். நவீன இலக்கியத்தை நிராகரிப்பது இனிமேல் இயலாது என்ற நிலை கல்வியாளர்களுக்கு ஏற்பட்டது. திராவிட-மார்க்ஸிய சிந்தனைக்கு மாற்றாக பின்நவினத்துவமும் தலித்தியமும் பெயரளவிலேனும் தமிழ் வகுப்புகளுக்குள் பிரவேசித்தன. இன்று தமிழ்ப்படித்து வரும் பலருக்கும் தீவிர இலக்கியம் தெரிந்திருக்கிறது; குறைந்தபட்ச பரிச்சயமாவது உள்ளது. பாடத்திட்டத்திலும் ஓரளவு நவீன மற்றும் சமகால இலக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஒரு முக்கியமான குற்றச்சாட்டு வருகிறது.
சென்னை பல்கலையில் பாடத்திட்டத்தில் நவீனத் தமிழ் பகுதி எந்த எழுத்தாளனிடம் இருந்து துவங்குகிறது? கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. அவரைத் தொடர்ந்து பாரதியும், பாரதிதாசனும் வருகிறார்கள். பிறகு கொஞ்சம்  வானம்பாடி கவிதைகள். அதன் தூய அர்த்தத்தில் இவர்கள் நவீன எழுத்தாளர்கள் அல்ல என்று நாம் அறிவோம். இந்த வெளிநபர்களுடன் நீங்கள் சில அசல் நவீனத்துவ கவிஞர்களையும், சமகால பெண்கவிஞர்களையும் சேர்த்து படிக்கும் போது ஒரு வரலாற்றுக் குழப்பம் ஏற்படுகிறது. தோட்டக்காரரின் கத்திரிக்கோலை கொண்டு மீசை திருத்த முடியாதே? பிரமிளிலும் பாரதிதாசனிலும் நாம் ஒரே பண்புக்கூறுகளை காண முடியாது. புனைவிலும் தொ.மு.சி, ஜெயகாந்தன், மு.வா ஆகியோரை சு.ரா, எஸ்.ரா, ஜெ.மோவுடன் ஒரே தட்டில் வைத்து படிக்க முடியது. ஆக பொத்தாம்பொதுவாக நவீன இலக்கியத்தை புகட்டும் இந்த போக்கு கல்வியாளர்களின் அக்கறையின்மையை காட்டுகிறது. நவீன இலக்கியத்தில் திராவிட இலக்கியம், மார்க்ஸிய இலக்கியம், நவீனத்துவ இலக்கியம், பின்நவீனத்துவ இலக்கியம், பெண்ணிய இலக்கியம், தலித் இலக்கியம் என்ற தெளிவான பகுப்புகள் வேண்டி உள்ளது.
அடுத்து மரபிலக்கியத்தின் நவீன கோட்பாடுகளை கொண்டு காத்திரமான ஆய்வுகளை செய்யவும் அந்த புரிதலை மேற்கொண்டு பாடத்திட்டம் மற்றும் படிப்பித்தல் வழி மாணவர்களை ஏற்படுத்தவும் செய்ய வேண்டும். சென்னை பல்கலைக்கழக ஆய்வரங்கங்கள், அமெரிக்கன் கல்லூரியின் பாடத்திட்டம் ஆகியவை இதை நோக்கி நல்ல முயற்சிகள் என்றாலும் நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டி உள்ளது. 
 (2011 டைம்ஸ் நவ் தீபாவளி மலரில் வெளியானது)
Read More

Sunday, 27 November 2011

காதல் சந்திக்கும் சவால்கள் – குருதியும் ஊடகங்களும்



காதலுக்காக எக்காலத்திலும் குருதி சிந்தப்பட்டுள்ளது. இது பணம், சமூக அந்தஸ்து, சாதிப் பற்று ஆகிய காரணங்களினால் நடந்து வருவது. வடக்கில் இதற்கு honor killing என்று பெயர் உண்டு. ஆனால் சமகாலத்தில் தான் காதலுக்காக அல்ல காதலை தடை செய்யும் காரணத்துக்காக கடுமையான வன்முறை செயல்களில் குறிப்பாய் இளம் தலைமுறையினர் ஈடுபட்டு வருவதை காண்கிறோம்.
காதலில் ஈடுபவதை எதிர்த்ததற்காக அம்மாவை அம்மிக் குழவியால் இடித்து கொன்று தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கி கொல்லும் பெண்கள். பெற்றோர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து காதலன் துணையோடு நெரித்து கொல்லும் சகோதரிகள், வேறு பெண்தொடர்புகள் கொண்டிருந்ததால் உடற்பயிற்சி நிலைய பயிற்சியாள கணவனை கூலிப்படையை ஏவி மின்வயர்களை சுற்றி கொல்லும் மனைவிகள், காதலனை பழிவாங்க அவனது குழந்தையை கொல்லும் கள்ளக்காதலிகள் என இன்று நாம் காணும் இந்த வன்முறை வெளிப்பாட்டில் ஒரு விநோத தன்மை உள்ளது. இது சாதியம், மதம், ஒழுக்கம், காதல் என்ற லட்சியங்களுக்காக செய்யப்படும் கொலைகள் அல்ல. உறவுகளுக்குள் நாம் சகிப்புத்தன்மையை இழந்து வருவதை, பரஸ்பர சந்தேகத்தினால் தனிமையுணர்வை அடைந்து வருவதை காட்டுகின்றன. இவை காதலுக்கான கொலைகள் அல்ல, வெறும் காதல் கொலைகள்.
காதல் எனும் வெட்டவெளி
நுண்பேசி படக்கருவியும் முகநூல் போன்ற சமூகவலைதொடர்பு தளங்களும் ஆண் பெண் உறவை பொதுமேடைக்கு நகர்த்தி உள்ளன. ஒரு உறவை திரைகளுக்கு பின்னே இருட்டில் ஒளித்து வைப்பதும் வெட்டவெளியில் பலர் முன்னிலையில் கொண்டு வருவதற்கும் ஒரே நோக்கம் தான். அந்த உறவின் நெருக்கடியில் இருந்து தப்பித்தல்.
நுண்பேசியில் படம்பிடிக்கப்பட்ட ஏகப்பட்ட அந்தரங்க காட்சிகள் எம்.எம்.எஸ்களாகவும் இணையத்தில் மலிந்து வருகின்றன. இவை ரகசியமாக அல்ல இருசாராரின் அறிவுடன் தான் படம் பிடிக்கப்படுகின்றன. படக்கருவி முன் நிர்வாணமாய் தோன்றுவதிலும் உறவில் ஈடுபடுவதிலும் நமக்கொரு கிளர்ச்சி உள்ளது. இக்காட்சிகள் பின்னர் நண்பர்களிடம் பரவி இணையத்தில் சென்று போர்னோவாகின்றன. இணையத்தில் போர்னோ பார்ப்பவர்களுக்கு எந்நேரமும் தமக்கு தெரிந்த ஒரு முகம் அதில் தோன்றி அதிர்ச்சியுறும் அபாயம் உள்ளது. இணையை பின்னர் மிரட்டவும், பிறரிடம் தன் பாலியல் அந்த ஆற்றலை காண்பிக்கவும் உத்தேசித்தாலும் படம் பிடிப்பவர்கள் அந்தரங்க காட்சிகள் பல்கி பெருகும் ஒரு வைரஸ் கிருமி போன்றது என்பதை அதை செய்யும் போது உணர்வதில்லை. ஒரு கட்டத்தில் அவர்களின் அந்தரங்கம் அவர்களுக்கு அல்லாததாகிறது. அது கோடானுகோடி கோடி கண்களால் கொட்டாமல் பார்க்கப்படுவதை அவர்களால் என்ன முயன்றும் தடுக்க முடியாது.  இப்படி வெட்டவெளிச்சத்துக்கு காம உறவை கொண்டு வருவதன் மூலம் நமது தலைமுறை ஆண்-பெண் உறவை அதிக மதிப்பற்ற ஒரு தற்செயல் நிகழ்வாக மாற்றுகிறது. இன்று ஒரு பிரபலம் மீது ஊடகத்தில் பாலியல் புகார் ஆதாரத்துடன் வந்தாலும் அது ஒரு போர்னோவாக விரைவில் மாற்றப்பட்டு பரவலாக புழங்கியபின் மறக்கப்பட்டு விடுகிறது. பாலியல் குற்றங்களை நாம் இன்று அசட்டையாக பார்ப்பது போல் ஒன்றை நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் கற்பனையே செய்ய முடியாது. இதற்கு ஊடகங்கள் ஒரு முக்கிய காரணம்.
ஒரு திருமணமான நண்பர் தனக்கு நல்ல வாழ்க்கை துணை இல்லாமல் தவிப்பதாய் முகநூல் நிலைத்தகவலில் கூறுகிறார். அவரது ஆயிரக்கணக்கான நண்பர்களில் ஒருவர் அவரது சுவரில் “உங்களுக்கு விரைவில் திருமணமாகி நல்ல வாழ்க்கை துணை அமையட்டும் என்று வாழ்த்துகிறார். இதை அவர் மனைவி வாசித்தால் எப்படி குழம்பி போவார். பல தம்பதிகள் தமது குடும்ப விரிசல்களை இப்படி நிலைத்தகவல்கள் மூலம் பிரஸ்தாபித்து கோபத்தை வெளிக்காட்டுகிறார்கள். உதாரணமாக கீர்த்தனா மோகந்தாஸுக்கு தன் கணவனை பிடிக்காமல் போனால் உடனே இரண்டாவது பெயரை மாற்றி அப்பா பெயரை போட்டு கீர்த்தனா சந்திரசேகர் ஆகி விடுகிறார். இதன் மூலம் தனது திருமண உறவு நிலையை நண்பர்களை ஊகிக்க விடுகிறார். வேறு பல திருமண ஜோடிகள் முகநூலில் நேரடியாக ஒருவரை ஒருவரை தாக்கிக் கொள்கிறார்கள். தனிப்பட்ட வெளியில் நமது உறவுச் சிக்கல்களின் தீர்க்கும் சாத்தியங்களோ மன உறுதியோ நேர்மையோ இல்லை என்ற நிலையில் தான் முகநூல் போன்ற பொதுவெளியில் தம்பதிகள் மோதிக் கொள்கிறார்கள். ஜனநெரிசலில் பாதுகாப்பு உள்ளதாய் நினைக்கிறார்கள். நெருக்கமான நண்பர்களிடம் பிரச்சனையை விவாதிப்பதற்கும் நம்மை பரிச்சயமே இல்லாத ஆயிரக்கணக்கான முகநூல்வாசிகளிடம் தனிப்பட்ட கவலைகளை பகிர்வதற்கும் வித்தியாசம் உண்டு. இது நமது தனிமனித உறவுகள் எவ்வளவு பலவீனப்பட்டு போயுள்ளது, கட்டற்று தொடர்பு சாத்தியங்கள் உள்ள யுகத்தில் நாம் நம் முன் உள்ள ஒரு மனிதரிடம் மனம் திறந்து பேச எவ்வளவு அஞ்சுகிறோம் என்று காட்டுகிறது. வெளிப்படைத் தன்மையை சதா ஊக்குவிக்கும் ஊடகங்களால் சூழப்பட்ட இந்த வேளையில் தான் நாம் தினசரி வாழ்வில் நேரடியாக பேச கூட தயங்குகிறோம்.
நமக்குத் தேவை சில சொற்களை தனிமையில் பயமின்றி பேசும் அவகாசம். நான்கு கண்கள் மட்டுமே உள்ள அந்தரங்கம். அந்த கணத்தில் நம் மீதே நமக்கு நம்பிக்கை பிறக்கிறது. உடனே காதலியை / காதலனை முழுமையாக நம்பத் தொடங்குகிறோம்.
Read More

Thursday, 17 November 2011

ஆங்கிலம் – நமக்கு இடையிலான ஒரு பள்ளத்தாக்கு


ஒரு சமூக அந்தஸ்து, நாகரிக அடையாளம் என்பதை விட ஆங்கில கற்பதன் நோக்கம் இன்று வேறொன்றாக இருக்கிறது. அது நம்மை நோக்கி விரிந்துள்ள பல்துறை அறிவை பெற, சமூக வலைதளங்களை அணுக மற்றும் பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்புகளை அடைவதே ஆங்கிலம் வெறும் ஒரு மொழி, நமது பண்பாட்டிலே எல்லா அறிவுப் பொக்கிஷங்களும் உள்ளன, வெறும் திருக்குறள் படித்தாலே உலக தத்துவ நூல்களை படித்ததற்கு நிகர் போன்ற அசட்டு வாதங்கள் இன்று பின்னே தள்ளப்பட்டு விட்டன. மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த ஐம்பதுகளில் மொழி உணர்வை வழிபட்டதற்கான ஒரு சமூக அரசியல் தேவை இருந்தது. அது இன்று இல்லை.
இன்று கட்டற்ற அறிவும் உயர்ந்த வேலைகளும் நம் விரல் நுனியின் அருகில். நம்மை அணுக முடியாமல் செய்வது ஆங்கில பரிச்சயமின்மை. இது கலாச்சார அந்தஸ்து பற்றின சிக்கல் அல்ல, ஒரு நடைமுறை பிரச்சனை. இதை மிக அதிகமாக சந்தித்து வருபவர்கள் நமது நகர் மற்றும் மாநகர்வாழ் கீழ், கீழ்மத்திய மற்றும் மத்திய வர்க்க இளைஞர்கள்.
இன்று பன்னாட்டு நிறுவனங்களில் உள்ள வேலைகளில் நமக்கு தொழில்நுட்ப அறிவும் மொழியறிவும் தேவையாக உள்ளது. இரண்டும் தனித்தனியாக தேவைப்படும் வேலைகளும் உள்ளன. அந்த தேவைப்படும் மொழி அதிகமும் ஆங்கிலம். ஜப்பானிய மொழி, பிரஞ்சு ஆகியவற்றும் நல்ல சந்தை மதிப்பு உள்ளது. ஆனால் சமீப காலத்தில் திறந்துள்ள இந்த எண்ணற்ற வாய்ப்புகளுக்கும் நம் இளைஞர்களுக்கும் இடையில் ஒரு பெரும் பள்ளத்தாக்கு உள்ளது.
கல்லூரி ஆசிரியனாக என்னுடைய முதல் வகுப்பில் மாணவர்கள் ஆங்கிலத்தை தமிழில் கற்பிக்க கேட்ட போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. மொழியல்லாத பிற பாடங்களை கூட பல ஆசிரியர்கள் தமிழில் கற்பிக்க தயங்குகிறார்கள். ஒவ்வொரு தமிழக கல்லூரியிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆங்கிலம் புரியாததால் பாடம் புரியாமல் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். இளங்கலையில் தேர்வுகளை தமிழில் எழுதலாம். ஆனால் ஆங்கிலத்தில் வகுப்புகள் கேட்டு புரியாத போது தமிழிலோ அர்மேனியாவிலோ தேர்வு எழுதுவதில் அர்த்தமில்லை.
முதல் வருடத்தில் இப்படியான ஏமாற்றத்தை சந்திக்கும் மாணவர்கள் சுயமுயற்சியில் ஆங்கிலம் கற்க முயல்கிறார்கள். சின்ன சின்ன வார்த்தைகளை கற்க முயல்வது, இலக்கணம் படிப்பது ஆகிய முயற்சிகளில் ஈடுபடுகிறார். ஆனால் தோதான சூழல் இன்றி இந்த ஆர்வத்தை தக்க வைக்க முடிவதில்லை. சிலர் ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தி Veta போன்ற அரைவேக்காட்டு ஆங்கில பயிற்சி வகுப்புகளில் சேர்கிறார்கள். பெரும்பாலும் இதிலும் ஏமாற்றம் தான். கல்லூரியில் ஆங்கில ஆசிரியர்கள் மாணவர்களின் போதாமை பள்ளிக்கூட கல்வி அமைப்பின் தவறு என்கிறார்கள். மற்றொரு புரிதல் உள்ளது. ஆங்கிலம் கற்க ஆங்கிலம் மட்டும் கற்றால் போதாது, ஆங்கிலம் புழங்கும் சூழலில் வாழ வேண்டும் என்பது. இதற்காக ஐந்து வயது குழந்தைக்கு ஐம்பதினாயிரத்துக்கு மேல் கட்டணம் கட்டி மேற்தட்டு பள்ளிகளில் சேர்க்கிறார்கள். பெற்றோர்களின் இந்த மிகை ஆர்வத்தில் நியாயம் உள்ளது. ஆனால் இந்த சமூகப் போக்கு கீழ்த்தட்டினரை ஒரேயடியாய் அந்நியப்படுத்துவதிலும் குழந்தைப்பருவத்தில் இருந்தே வர்க்க உணர்வை வலுவாக ஏற்படுத்துவதிலும் போய் முடிகிறது. ஆங்கிலம் பேசினால் தண்டனை, ஆங்கிலம் பேசாத குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது போன்ற பாசிஸ விதிமுறைகள் உருவாகின்றன. நாம் என்ன செய்து இந்த “ஆங்கில மாயையை எதிர்கொள்ள முடியும்?
முதலில் நமது இளையதலைமுறையினர் அனைவரும் மேற்தட்டினர் போல் சரளமாக உடனடியாக பேசப் போவதில்லை என்று உணர வேண்டும். நமது நோக்கம் அதுவல்ல. ஒரு பரந்துபட்ட திட்டம் அமைக்க வேண்டும். அதன் நோக்கம் பள்ளி அளவில் மொழிக் கல்வியை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். சமீபமாக நமது பள்ளிக் கூட ஆங்கில நூல்களில் ஏகப்பட்ட இலக்கண பயிற்சிகள் இருப்பதை கவனிக்கிறோம். உண்மையில் ஆங்கிலம் பழக நமக்கு ஏட்டுப் பயிற்சி மட்டும் போதாது. முதலில் நாம் பள்ளிக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் அதிக சம்பளம் கொடுத்து உயர்ந்த மதிப்பெண்கள் உடன் முதுகலை வரையாவது படித்தவர்களை மட்டுமே நர்சரி அளவில் இருந்தே நியமிக்க வேண்டும். அடுத்து நடைமுறையில் ஆங்கிலம் கற்பதற்கான சூழலை, உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஊடகங்களை பள்ளியில் மேலும் அதிக அளவில் மொழிப் பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும். ஏட்டைத் தாண்டி பண்பாட்டு கலை செயல்பாடுகளை தொடர்ந்து நிகழ்த்துவதன் வழி நமது மொழி அறிவை இன்னும் எளிதாக வளர்க்க முடியும்.
ஒரு மொழியில் சரளமாக மூன்று மாதங்கள் அதில் முழுக்க “இருக்க வேண்டும் என்றொரு கோட்பாடு உள்ளது. இதனை மூழ்குதல் என்கிறார்கள். அதாவது எந்த ஒரு கவனச் சிதறலோ பிறமொழி குறுக்கீடோ இன்றி ஒரு மொழியில் தொடர்ந்து ஈடுபடுதல். தொடர்ந்து மூன்று மாதங்கள் ஒரு மொழியை கேட்டுக் கொண்டே, பேசிக் கொண்டே, படித்துக் கொண்டே, எழுதிக் கொண்டே இருந்தால் சுளுவில் படித்து விடலாம். ஆனால் கல்விக்கூடங்களில் நாம் படிப்பதை மட்டுமே பிரதானமாக செய்கிறோம். நம் கல்வியியலில் உள்ள குறை அது. BCL நூலகத்தில் சென்னையில் நடத்தும் ஆங்கில பயிற்சி வகுப்புகளில் சின்ன சுவாரஸ்யமான விளையாட்டுகள் மூலம் மாணவர்களை பங்கேற்க வைக்கிறார்கள். ஆசிரியரின் கண்காணிப்பின் கீழ் சுயமாக கற்கிறார்கள். ஓரளவு அடிப்படை அறிவு கொண்டவர்களுக்கு அடுத்த படியில் ஏற இந்த முறை மிகவும் உதவும். உதாரணமாக பள்ளியில் அரைமணி நேரம் வெர்ட்ஸ்வொர்த்தின் Daffodils எனும் பழம் ஆங்கில கவிதையை விளக்குவதை விட உரையாடல் மிகுந்த ஒரு ஆங்கில படக்காட்சியை சப்டைட்டிலுடன் போட்டுக் காட்டி அதே வசனங்களின் பொருளை சொல்லி மாணவர்களை உச்சரிக்க வைக்கலாம். இத்ற்கு மொழி ஆய்வகங்களை பயன்படுத்தலாம். டப்பிங் தியேட்டர்களில் கூட பழகலாம். சொற்களின் பொருள் அறியும் அளவுக்கு அச்சொற்கள் நம் காதுகளில் மீள மீள ஒலிப்பதும், நாமே பேசிக் கேட்பதும் முக்கியம்.
வேற்றுமொழிக்காரர்களுடன் படித்து வளரும் சூழல் ஆங்கிலம் போன்ற ஒரு பொதுமொழியை கற்பதற்கு தகுந்தது. இணைய பயன்பாடும் சமூக வலை தளங்களும் கூட ஆங்கில பயன்பாட்டை ஊக்குவிக்கின்றன. மேலும் மேலும் நாம் வாழும் உலகம் மேற்சொன்ன கலவை கலாச்சாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆங்கிலம் - தமிழ் என்றில்லை எந்த மொழியும் இனி அதன் கலாச்சார சாரத்தை மற்றொன்றிடம் இழந்து வேறொரு வடிவில் திரும்ப பெறப் போகிறது. மொழி இனி ஒரு தொடர்புக்கான நடைமுறை சாதனமாக மட்டுமே இருக்கும். உள்ளூர் மொழியை போன்று ஒரு பொதுமொழியும் நமக்கு இனி தொடர்ந்து தேவைப்படும். ஆங்கிலம் வீழ்ந்தாலும் அது மற்றொரு மொழியாக இருக்கும். வீட்டில், வெளியே நிறுவனங்களில், சமூக சந்திப்புகளில் நாம் கலாச்சார தூய்மையை காப்பாற்றுவதை விட ஒரு கலவை மொழி சூழலை ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். ஒரு மொழியை ஆழமாக தெரிந்து கொள்வதை விட பல மொழிகளை அரைகுறையாய் புரிந்து கொள்வது மேல் என்று நம்ப தலைப்படுவோம். சமூகத்தின் அனைத்து தட்டினரும் இப்படியான ஒரு பல்மொழி கலாச்சாரத்தை நோக்கி நகர்வதே ஒரு சூழல் கட்டாயம். வலுவான மரபை கொண்ட மொழி நமது என்றால் அது இச்சூழலில் இருந்து வளமடையுமே அன்றி அழியாது. காப்பிக்கடையை குளம்பியகம் என்றும் கோழிக்கடையை இறைச்சியகம் என்றும் கடை பெயர்ப்பலகைகளை திருத்தும் வேளையில் நாம் ஒரு புது பண்பாட்டை நோக்கி நம் மனதை திறக்கும் ஒரு புது வேற்றுமொழிச் சொல்லை கற்றுக் கொள்ளலாம்.
(2011 டைம்ஸ் தீபாவளி மலரில் வெளியானது)
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates