ஒரு சமூக அந்தஸ்து, நாகரிக அடையாளம் என்பதை விட ஆங்கில கற்பதன் நோக்கம் இன்று வேறொன்றாக இருக்கிறது. அது நம்மை நோக்கி விரிந்துள்ள பல்துறை அறிவை பெற, சமூக வலைதளங்களை அணுக மற்றும் பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்புகளை அடைவதே ஆங்கிலம் வெறும் ஒரு மொழி, நமது பண்பாட்டிலே எல்லா அறிவுப் பொக்கிஷங்களும் உள்ளன, வெறும் திருக்குறள் படித்தாலே உலக தத்துவ நூல்களை படித்ததற்கு நிகர் போன்ற அசட்டு வாதங்கள் இன்று பின்னே தள்ளப்பட்டு விட்டன. மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த ஐம்பதுகளில் மொழி உணர்வை வழிபட்டதற்கான ஒரு சமூக அரசியல் தேவை இருந்தது. அது இன்று இல்லை.
இன்று கட்டற்ற அறிவும் உயர்ந்த வேலைகளும் நம் விரல் நுனியின் அருகில். நம்மை அணுக முடியாமல் செய்வது ஆங்கில பரிச்சயமின்மை. இது கலாச்சார அந்தஸ்து பற்றின சிக்கல் அல்ல, ஒரு நடைமுறை பிரச்சனை. இதை மிக அதிகமாக சந்தித்து வருபவர்கள் நமது நகர் மற்றும் மாநகர்வாழ் கீழ், கீழ்மத்திய மற்றும் மத்திய வர்க்க இளைஞர்கள்.
இன்று பன்னாட்டு நிறுவனங்களில் உள்ள வேலைகளில் நமக்கு தொழில்நுட்ப அறிவும் மொழியறிவும் தேவையாக உள்ளது. இரண்டும் தனித்தனியாக தேவைப்படும் வேலைகளும் உள்ளன. அந்த தேவைப்படும் மொழி அதிகமும் ஆங்கிலம். ஜப்பானிய மொழி, பிரஞ்சு ஆகியவற்றும் நல்ல சந்தை மதிப்பு உள்ளது. ஆனால் சமீப காலத்தில் திறந்துள்ள இந்த எண்ணற்ற வாய்ப்புகளுக்கும் நம் இளைஞர்களுக்கும் இடையில் ஒரு பெரும் பள்ளத்தாக்கு உள்ளது.
கல்லூரி ஆசிரியனாக என்னுடைய முதல் வகுப்பில் மாணவர்கள் ஆங்கிலத்தை தமிழில் கற்பிக்க கேட்ட போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. மொழியல்லாத பிற பாடங்களை கூட பல ஆசிரியர்கள் தமிழில் கற்பிக்க தயங்குகிறார்கள். ஒவ்வொரு தமிழக கல்லூரியிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆங்கிலம் புரியாததால் பாடம் புரியாமல் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். இளங்கலையில் தேர்வுகளை தமிழில் எழுதலாம். ஆனால் ஆங்கிலத்தில் வகுப்புகள் கேட்டு புரியாத போது தமிழிலோ அர்மேனியாவிலோ தேர்வு எழுதுவதில் அர்த்தமில்லை.
முதல் வருடத்தில் இப்படியான ஏமாற்றத்தை சந்திக்கும் மாணவர்கள் சுயமுயற்சியில் ஆங்கிலம் கற்க முயல்கிறார்கள். சின்ன சின்ன வார்த்தைகளை கற்க முயல்வது, இலக்கணம் படிப்பது ஆகிய முயற்சிகளில் ஈடுபடுகிறார். ஆனால் தோதான சூழல் இன்றி இந்த ஆர்வத்தை தக்க வைக்க முடிவதில்லை. சிலர் ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தி Veta போன்ற அரைவேக்காட்டு ஆங்கில பயிற்சி வகுப்புகளில் சேர்கிறார்கள். பெரும்பாலும் இதிலும் ஏமாற்றம் தான். கல்லூரியில் ஆங்கில ஆசிரியர்கள் மாணவர்களின் போதாமை பள்ளிக்கூட கல்வி அமைப்பின் தவறு என்கிறார்கள். மற்றொரு புரிதல் உள்ளது. ஆங்கிலம் கற்க ஆங்கிலம் மட்டும் கற்றால் போதாது, ஆங்கிலம் புழங்கும் சூழலில் வாழ வேண்டும் என்பது. இதற்காக ஐந்து வயது குழந்தைக்கு ஐம்பதினாயிரத்துக்கு மேல் கட்டணம் கட்டி மேற்தட்டு பள்ளிகளில் சேர்க்கிறார்கள். பெற்றோர்களின் இந்த மிகை ஆர்வத்தில் நியாயம் உள்ளது. ஆனால் இந்த சமூகப் போக்கு கீழ்த்தட்டினரை ஒரேயடியாய் அந்நியப்படுத்துவதிலும் குழந்தைப்பருவத்தில் இருந்தே வர்க்க உணர்வை வலுவாக ஏற்படுத்துவதிலும் போய் முடிகிறது. ஆங்கிலம் பேசினால் தண்டனை, ஆங்கிலம் பேசாத குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது போன்ற பாசிஸ விதிமுறைகள் உருவாகின்றன. நாம் என்ன செய்து இந்த “ஆங்கில மாயையை” எதிர்கொள்ள முடியும்?
முதலில் நமது இளையதலைமுறையினர் அனைவரும் மேற்தட்டினர் போல் சரளமாக உடனடியாக பேசப் போவதில்லை என்று உணர வேண்டும். நமது நோக்கம் அதுவல்ல. ஒரு பரந்துபட்ட திட்டம் அமைக்க வேண்டும். அதன் நோக்கம் பள்ளி அளவில் மொழிக் கல்வியை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். சமீபமாக நமது பள்ளிக் கூட ஆங்கில நூல்களில் ஏகப்பட்ட இலக்கண பயிற்சிகள் இருப்பதை கவனிக்கிறோம். உண்மையில் ஆங்கிலம் பழக நமக்கு ஏட்டுப் பயிற்சி மட்டும் போதாது. முதலில் நாம் பள்ளிக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் அதிக சம்பளம் கொடுத்து உயர்ந்த மதிப்பெண்கள் உடன் முதுகலை வரையாவது படித்தவர்களை மட்டுமே நர்சரி அளவில் இருந்தே நியமிக்க வேண்டும். அடுத்து நடைமுறையில் ஆங்கிலம் கற்பதற்கான சூழலை, உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஊடகங்களை பள்ளியில் மேலும் அதிக அளவில் மொழிப் பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும். ஏட்டைத் தாண்டி பண்பாட்டு கலை செயல்பாடுகளை தொடர்ந்து நிகழ்த்துவதன் வழி நமது மொழி அறிவை இன்னும் எளிதாக வளர்க்க முடியும்.
ஒரு மொழியில் சரளமாக மூன்று மாதங்கள் அதில் முழுக்க “இருக்க” வேண்டும் என்றொரு கோட்பாடு உள்ளது. இதனை மூழ்குதல் என்கிறார்கள். அதாவது எந்த ஒரு கவனச் சிதறலோ பிறமொழி குறுக்கீடோ இன்றி ஒரு மொழியில் தொடர்ந்து ஈடுபடுதல். தொடர்ந்து மூன்று மாதங்கள் ஒரு மொழியை கேட்டுக் கொண்டே, பேசிக் கொண்டே, படித்துக் கொண்டே, எழுதிக் கொண்டே இருந்தால் சுளுவில் படித்து விடலாம். ஆனால் கல்விக்கூடங்களில் நாம் படிப்பதை மட்டுமே பிரதானமாக செய்கிறோம். நம் கல்வியியலில் உள்ள குறை அது. BCL நூலகத்தில் சென்னையில் நடத்தும் ஆங்கில பயிற்சி வகுப்புகளில் சின்ன சுவாரஸ்யமான விளையாட்டுகள் மூலம் மாணவர்களை பங்கேற்க வைக்கிறார்கள். ஆசிரியரின் கண்காணிப்பின் கீழ் சுயமாக கற்கிறார்கள். ஓரளவு அடிப்படை அறிவு கொண்டவர்களுக்கு அடுத்த படியில் ஏற இந்த முறை மிகவும் உதவும். உதாரணமாக பள்ளியில் அரைமணி நேரம் வெர்ட்ஸ்வொர்த்தின் Daffodils எனும் பழம் ஆங்கில கவிதையை விளக்குவதை விட உரையாடல் மிகுந்த ஒரு ஆங்கில படக்காட்சியை சப்டைட்டிலுடன் போட்டுக் காட்டி அதே வசனங்களின் பொருளை சொல்லி மாணவர்களை உச்சரிக்க வைக்கலாம். இத்ற்கு மொழி ஆய்வகங்களை பயன்படுத்தலாம். டப்பிங் தியேட்டர்களில் கூட பழகலாம். சொற்களின் பொருள் அறியும் அளவுக்கு அச்சொற்கள் நம் காதுகளில் மீள மீள ஒலிப்பதும், நாமே பேசிக் கேட்பதும் முக்கியம்.
வேற்றுமொழிக்காரர்களுடன் படித்து வளரும் சூழல் ஆங்கிலம் போன்ற ஒரு பொதுமொழியை கற்பதற்கு தகுந்தது. இணைய பயன்பாடும் சமூக வலை தளங்களும் கூட ஆங்கில பயன்பாட்டை ஊக்குவிக்கின்றன. மேலும் மேலும் நாம் வாழும் உலகம் மேற்சொன்ன கலவை கலாச்சாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆங்கிலம் - தமிழ் என்றில்லை எந்த மொழியும் இனி அதன் கலாச்சார சாரத்தை மற்றொன்றிடம் இழந்து வேறொரு வடிவில் திரும்ப பெறப் போகிறது. மொழி இனி ஒரு தொடர்புக்கான நடைமுறை சாதனமாக மட்டுமே இருக்கும். உள்ளூர் மொழியை போன்று ஒரு பொதுமொழியும் நமக்கு இனி தொடர்ந்து தேவைப்படும். ஆங்கிலம் வீழ்ந்தாலும் அது மற்றொரு மொழியாக இருக்கும். வீட்டில், வெளியே நிறுவனங்களில், சமூக சந்திப்புகளில் நாம் கலாச்சார தூய்மையை காப்பாற்றுவதை விட ஒரு கலவை மொழி சூழலை ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். ஒரு மொழியை ஆழமாக தெரிந்து கொள்வதை விட பல மொழிகளை அரைகுறையாய் புரிந்து கொள்வது மேல் என்று நம்ப தலைப்படுவோம். சமூகத்தின் அனைத்து தட்டினரும் இப்படியான ஒரு பல்மொழி கலாச்சாரத்தை நோக்கி நகர்வதே ஒரு சூழல் கட்டாயம். வலுவான மரபை கொண்ட மொழி நமது என்றால் அது இச்சூழலில் இருந்து வளமடையுமே அன்றி அழியாது. காப்பிக்கடையை குளம்பியகம் என்றும் கோழிக்கடையை இறைச்சியகம் என்றும் கடை பெயர்ப்பலகைகளை திருத்தும் வேளையில் நாம் ஒரு புது பண்பாட்டை நோக்கி நம் மனதை திறக்கும் ஒரு புது வேற்றுமொழிச் சொல்லை கற்றுக் கொள்ளலாம்.
(2011 டைம்ஸ் தீபாவளி மலரில் வெளியானது)
(2011 டைம்ஸ் தீபாவளி மலரில் வெளியானது)
This comment has been removed by the author.
ReplyDeleteஆனால் மொத்த தலைப்புகளும் வராது தான்
ReplyDeleteகிரிக்கெட் லேபிளை கிளிக் செய்தால் அந்த categoryயில் உள்ள அத்தனை போஸ்ட்டுகளையும் ஒரே பக்கத்தில் காண முடியாது. Older posts என்பதை கிளிக் செய்து கொண்டே இருக்க வேண்டும். I dont have patience...பலருக்கு older posts என்பதை கிளிக் செய்ய வேண்டும் என்பதும் தெரியாது.
ReplyDelete