Sunday, 6 November 2011

எங்கு போகிறது இந்திய கிரிக்கெட்?



உலகக் கோப்பையை வென்று டெஸ்ட் தரப்பட்டியலில் முதல் இடத்தையும் முதன் முறை கைப்பற்றிய நிலையில் இந்தியா ஏகப்பட்ட சவால்களை எதிர்கொள்கிறது. இது ஒரு நகைமுரண். 99இல் இருந்து ஆஸ்திரேலியா தொடர்ந்து மூன்று முறை உலகக்கோப்பை வென்ற போதும், இலங்கை அதற்கு முன் வென்ற போதும் இவ்வணிகள் தமது வெற்றியை தொடர்ந்து சில அல்லது பல வருடங்கள் மிக தரமாக ஆடின. வலுவான அரண்கள் போல நின்றன. ஆனால் இரட்டை சாதனைகளின் அடுத்த நிமிடமே இந்தியா மணல் கோட்டை போல சரிகிறது. இதனால் தான் உலகக்கோப்பை வெற்றிக்கு பின் தோனி சொன்னார் “நமது அணி சேதமாகி துருப்பிடித்த ஒரு பழைய காரை போன்றது; அதை கடைசி வரை ஒழுங்காய் ஓட்டி வந்து இலக்கை அடைந்தது பெரும் திருப்தி அளிக்கிறது. அவர் எதிர்பார்த்தது போல் அணியின் சக்கரங்களும் நட்டும் போல்டுகளும் இப்போது திசைக்கொன்றாய் தெறிக்கின்றன என்பதை மே.இ தீ மற்றும் இங்கிலாந்து பயணங்கள் தெளிவாக்கின. மூத்தவீரர்கள் காயம் காரணமாக விலகுகிறார்கள். அவர்கள் இடத்தில் திணிக்கப்பட்ட இளைய வீரர்கள் மூழ்கும் கப்பலில் இருந்து எலிகளைப் போல் சிதறி ஓடுகிறார்கள். மூத்த வீரர்கள் திரும்புகிறார்கள். அப்போது அணி மேலும் கொஞ்சம் மூழ்குகிறது. உலகக்கோப்பை சாம்பியன்கள் ஆகின கொஞ்ச காலத்திலே இங்கிலாந்திடம் மூன்று ஆட்டங்களை அவசரமாய் இழந்து டெஸ்ட் தரவரிசை முதல் இடத்தில் இருந்து திருதிருவென்று விழித்தபடி இறங்குகிறோம். இது ஒரு பெரும் அவமானமோ இந்திய ரசிகர்களின் நெஞ்சைப் பிழியும் ஏமாற்றமோ அல்ல. இங்கிலாந்து தொடர் முடிந்ததும் நாம் சேம்பியன்ஸ் டுராபி ஆடுவோம். அதற்கு அடுத்து ஆஸ்திரேலியா, இலங்கை, மே.இ தீ ஆகிய அணிகளை சந்திப்போம். கொண்டாடுவதற்கும் கைதட்டுவதற்குமான வாய்ப்புகளின் போது நாம் இந்த அவசர யுகத்தில் ஒரு இங்கிலாந்து தொடரின் கசப்பான நினைவுகளை உள்ளங்கைக்குள் வைத்து அழுத்த என்ன மடையர்களா? கிரிக்கெட் இன்று ஆடப்படும், பார்க்கப்படும் பின்னர் அலசப்படும் வேகத்தில் ஆட்டபலன்கள் ஒன்றும் பொருட்டல்ல. திருவிழா குழந்தை போல் நாம் எல்லா காட்சிகளையும் ஓரப்பார்வையால் கடந்து செல்லவே பிரியப்படுகிறோம். ஆக இந்த வீழ்ச்சியின் சந்தர்பத்தை நாம் ஒரு மீள்நோக்குதலுக்கு பயன்படுத்தலாம். நாம் எங்கே இருக்கிறோம், இங்கிருந்து எங்கே போகிறோம்?
நமது நிலவியலும் வரலாறும் மேற்கத்தியர்களை போன்று சுயக்கட்டுப்பாடு, அணி ஒற்றுமை, தியாகம், மூர்க்கமான போராட்ட குணம் ஆகியவற்றை போதிக்கவில்லை. காலநிலையும் பொதுவான ஆசிய உடலமைப்பும் வலுவான கால்களையும் திடமான தோள்களையும் நமக்கு வழங்கவில்லை. எதையும் திட்டமிட்டு ஒரு வரைமுறைக்குள் தொலைநோக்குடன் செய்யும் பண்பாடு நமக்கிலை. மாபெரும் விசயங்களை வியக்கும்படியாக செய்து காட்டி முக்கியமான சிறுவிசயங்களை கோட்டை விட்டு அதனால் பலத்த நஷ்டமடைவது நம் பழக்கம் தான். நம் அரசியல் எந்திரமும் கல்வி உள்ளிட்ட அறிவுத்துறைகளும் சமூக ஆன்மீக அமைப்புகளும் இதனால் தினமும் நம் எதிர்காலம் பற்றின குழப்பங்களை தினமும் உருவாக்குகின்றன. பல்வேறு சாதி மத மொழி இன மக்கள் இணைந்து வாழும் இத்தேசத்தில் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு தன்முனைப்புடன் எதிர்கால கவலை இன்றி அன்றன்றைய தினத்துக்காக வாழ்வது தான் வெற்றியின் தாரக மந்திரம். இந்திய கிரிக்கெட்டும் இந்திய தேசத்தை போலவே பெரும் குழப்பத்திலும் ஒன்றும் புரியாத இரைச்சலிலும் மூழ்கி இருக்கிறது. தன்முனைப்பு மட்டும் கொண்ட, சுயக்கட்டுப்பாடு அற்ற, நெருக்கடிகளின் போது போராட்ட குணம் குறைவான பலவீன தேகம் கொண்டவர்களாக நாம் இருப்பது ஒரு தனிமனித தனி அமைப்பின் தவறல்ல. கடலின் ஒரு துளி அதே சுவையையும் மணத்தையுமே தானே கொண்டிருக்கும்.
நீண்ட நேரம் ஒரு அணியாக நிலைத்து ஆட வேண்டிய கிரிக்கெட்டிற்கு கொடூரமான பனிக்காலங்களாலும் மூர்க்கமான நிலவியலாலும் தகவமைக்கப்பட்ட மேற்கத்தியர்கள் இயல்பாகவே பொருந்திப் போகிறார்கள். அதனால் வேகப்பந்து வீச்சு, களத்தடுப்பு, வலுவான உடல்தகுதி, அணி உணர்வு, போராட்ட குணம் ஆகியவற்றை நாம் பள்ளி அணியில் இருந்து தேசிய அணி வரை கீழிருந்து மேலாக மெல்ல மெல்ல வளர்த்தெடுக்க வேண்டும். நமது தனிச்சிறப்பு தனிநபர் மேதைமையும் மேதைமையின் இயல்பான சாகச விருப்பமும். கடந்த பதினைந்து வருடங்களில் உலக கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு இணையாக மேதைகளை உருவாக்கிய அணி இந்திய அணி தான். சச்சின், திராவிட், கங்குலி, லக்‌ஷ்மண், சேவாக், யுவ்ராஜ், கும்பிளே, சகீர் கான், ஹர்பஜன் என சிறந்த உலக 11இல் இடம்பெற தகுதியான வீரர்களை பிறப்பித்திருக்கிறோம். இந்த மேதை உற்பத்தி தான் நம் வலிமை. இவர்களின் ஒருமித்த ஆற்றலாலும், இன்னபிற பலவீனங்களை திறமையாக மறைத்த தோனியின் தலைமையாலும் தான் நாம் உலகக்கோப்பையை, டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை அடைந்தோம்.

இன்று இந்திய அணி பலவீனமாகி உள்ள நிலையில் நாம் நமது கட்டமைப்பு, வாரியத்தின் நடத்தை, ஐ.பி.எல்லின் தீயவிளைவு, வீரர்களின் சுயநலம் ஆகியவற்றை பற்றி விவாதிப்பதில் பொருளில்லை. ஏனென்றால் ஒரு அமைப்பின் உள்ளார்ந்த சீரழிவை விவாதங்கள் மாற்றாது. மே.இ.தீ மற்றும் இங்கிலாந்து பயணங்கள் நமது இளைய வீரர்களின் போதாமையை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. அடுத்த தலைமுறையை வழிநடத்தி செல்ல நம்மிடம் போதுமான நட்சத்திரங்கள் இல்லை. நமது இளைய திறமைகள் எங்கே என்பது தான் நாம் தற்போது கேட்க வேண்டிய கேள்வி.
தோனி தலைவரான போது மூத்தவீரரான சவுரவ் கங்குலி மீடியாவாலும் தேர்வாளர்களாலும் ஓய்வு கொள்ளும்படி மறைமுகமாக வற்புறுத்தப்பட்டார். அன்று இந்திய மட்டையாட்டம் ஆரோக்கியமாக இருந்ததாலும் யுவ்ராஜ் சிங் ஆறாவது எண்ணை சுவீகரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டதுமே காரணம். யுவ்ராஜ் ஏமாற்றமளித்தாலும், அவருக்கு பதில் வந்த ரெய்னா அநேகமாக அதே குறைபாடுகள் கொண்டவர் என்றாலும், கங்குலிக்கு அடுத்து திராவிட் ஓய்வு நெருக்கடிக்கு உள்ளானார். ஒரு மூத்தவீரர், அவர் சிறந்த திறமையாளராகவும், நல்ல ஆட்டநிலையிலும் உள்ள பட்சத்தில், ஓய்வு நெருக்கடிக்கு உள்ளாவது அடுத்து வரும் இளையவீரர்களின் திறமைக்கு சான்று. திராவிட் இடத்தை விராத் கோலி எடுத்துக் கொள்வார் என்று கும்பிளே உற்பட்ட முன்னாள் வீரர்களாலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மே.இ.தீ பயணத்தில் கிடைத்த டெஸ்ட் வாய்ப்பை கோலி சரியாக பயன்படுத்தாததால் அத்தொடரில் ஒரே ஒரு சதம் அடித்த நிலையிலும் திராவிடின் இடம் அடுத்த ஒரு வருடத்திற்கு பத்திரமானது. அடுத்து வந்த இங்கிலாந்து தொடரில் திராவிட் இரண்டு சதங்கள் அடிக்க இளைஞர்களுக்கு வாய்ப்பளித்திட கோரும் குரல்கள் ஒரேயடியாய் அமுங்கிப் போயின. இந்திய மீடியா வேறெப்போதும் வழங்காத புகழ்ச்சியையும் கவனத்தையும் திராவிடுக்கு வழங்கியது. திராவிட் ஒருநாள் போட்டிகளில் ஆடி இரண்டு வருடங்கள் ஆகின்றன. பத்தாயிரத்துக்கு மேல் ஒருநாள் ஓட்டங்கள் பெற்றிருந்தாலும் அவரால் சமகால ஆட்டவேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது என்ற காரணத்தால் இதுவரை வாய்ப்பளிக்கப்படாமல் இருந்தார். தற்போது இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஆடுவதற்காக திராவிட் மீண்டும் அழைக்கப்பட்டார். அதற்குப் பொருள் அவர் ரெய்னா அல்லது யுவ்ராஜுக்கு இணையாக அதிரடியாக ஆடப் பழகி விட்டார் என்பதல்ல. சிரமமான ஆடுதளங்களில் ஆட நமது இளைஞர்கள் தற்போது தயாராக இல்லை என்று தேர்வாளர்களும் அணி நிர்வாகமும் கருதுகிறது என்பதாலே. இந்திய தேர்வு போர்ஹெஸின் கதைகளில் வரும் ஒரு புதிர்சுற்றுப்பாதையில் மாட்டிக் கொண்டுள்ளது. ஒரு சீனியர் நன்றாக ஆடவில்லை என்றால் நாம் அவருக்கு பதில் அவரையே கொண்டு வருகிறோம்.  இனி சச்சின் என்று ஓய்வு பெறுகிறார் என்று கேட்பதை விட அவர் எத்தனைக் காலம் ஆட முடியும் என்று விரல்களை மடித்து கணக்கிடுகிறோம். நூறு சதங்கள் அடித்து உலகில் மிக நீண்ட ஆயுள் வரை கிரிக்கெட் ஆடியவர் என்ற சாதனையை அவர் படைக்க மாட்டாரா என்று ஏங்குகிறோம். ஜெயகாந்தன் ஏன் இன்று எழுதவில்லை என்றொரு இலக்கியவாசகர் வருந்துவதை போல் பரிதாபகரமானது இது. அநேகமாக இதே நிலை ஆஸ்திரேலியாவிலும் நிலவுகிறது. கடந்த ஆஷஸை அவர்கள் இழக்கும் தறுவாயில் இருந்த போது அணியை காப்பாற்ற நான் ஓய்வில் இருந்து திரும்ப தயார், ஆனால் என்னை அணித்தலைவராக்க வேண்டும் என்று ஷேன் வார்ன் அறிக்கை விட்டார். உலகக்கோப்பை அணியில் காயம் காரணமாக சேர்க்கப்படாத ஹஸ்ஸியை தொடர் பாதியில் டக் பாலிஞ்சருக்கு காயம் என்று போலியான காரணம் காட்டி உள்ளே கொண்டு வந்தார்கள். பின்னர் உலகக்கோப்பையில் சொதப்பிய பிறகும் தேர்வாளர்கள் அணியில் பெரும் அளவிலான மாற்றத்தை கொண்டு வரவில்லை. தற்போது நடக்கும் இலங்கை தொடருக்கான அணியில் 36 வயதான ரிக்கி பாண்டிங்கும் தான் ஹஸ்ஸியும் இரு தூண்கள். அவர்களின்றி அணியில்லை. ஆஸ்திரேலியா தொண்ணூறுகளில் இருந்து ரெண்டாயிரத்தின் ஆரம்பம் வரை ஸ்டீ வாஹ், மார்க் வாஹ் போன்ற உலகத்தர வீரர்களை வலுக்கட்டாயமாக அணியில் இருந்து விலக்கி புதிய வீரர்களை கொண்டு வரும் சற்று கருணையற்ற மரபை கொண்டிருந்தது. ஆனால் சமீபமாக ஆஸி தேர்வாளர்களால் இதே கரார் நிலைப்பாட்டை மூத்த வீரர்கள் மீது எடுக்க முடியவில்லை. புதிய வீரர்களின் போதாமை வயதானவர்களின் நிலைப்பை காப்பாற்றுகிறது. இருசாராருக்கும் இது பெருமைக்குரியதல்ல. ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் பண்பாடும், தரமும், உள்கட்டமைப்பும் உலகில் சிறந்ததாகவும் அவர்களின் ரெண்டாயிரத்துக்கு பிறகான ஆதிக்கத்திற்கு காரணமாக சொல்லப்பட்டது. இருந்தும் ஆஸ்திரேலியா இன்று இந்தியாவின் வெகுஅருகிலேயே அதே முட்டுசந்தை வெறித்துக் கொண்டு நிற்பதை எப்படி விளக்க? மேதைகளும் அதிதிறமையாளர்களும் தோன்றும் ரகசியம் என்றும் புதிராகவே உள்ளது. பண்பாடு, உள்கட்டமைப்பு போன்ற வெளிக்காரணிகள் தூண்டுதலையும் ஆதரவையும் மட்டுமே தரமுடியும். இவை ஊற்றுமுகம் என்று கருதுவது ஷேக்ஸ்பியர் சின்ன வயதில் மான்வேட்டையாடியதால் நாடகாசிரியர் ஆனார் என்றும் மனுஷ்யபுத்திரனை லேனா தமிழ்வாணன் கண்டுபிடித்தார் என்று சொல்வதையும் போன்றது.
நமது உள்ளூர் கிரிக்கெட் பலவீனமாக உள்ளது என்பதும் நமது இளையவீரர்கள் பழுதான ஆட்ட தொழில்நுட்பம் கொண்டவர்கள் என்பதும் உண்மை தான். உள்ளூர் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துவதும், A பயணத்தொடர்கள் வாயிலாக நமது இளைய வீரர்களுக்கு மேற்கத்திய ஆடுதளங்களை பரிச்சயப்படுத்துவதும், புதிய திறமை கண்டுபிடிப்பில் மேலும் அக்கறை செலுத்துவதும் நிச்சயம் பயன்படலாம். சர்வதேச வீரர்களுக்கு அதிக ஓய்வளிக்கும்படியாய் ஆட்டநிரலை அமைக்க வேண்டும், ஐ.பி.எல்லுக்கு சர்வதேச போட்டிகளுக்கு நிகரான முக்கியத்துவம் வழங்கப்படக் கூடாது ஆகிய கோரிக்கைகளை ஆர்வலர்களும் நிபுணர்களும் முன்வைக்கின்றனர். இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்கு இவை அவசியமே. ஆனால் எந்த ஒரு அற்புதத்திற்கும் இவை உத்தரவாதம் அல்ல.
கும்பிளேவின் தலைமைக்குப் பிறகு காயம் மற்றும் ஆட்டநிலை சரிவு காரணமாய் நமது வேகப்பந்து வீச்சு நிலைகுலைந்தது. இர்பான் பதான், பாலாஜி, ஆர்.பி சிங், முனாப் படேல் போன்றோர் காயம் காரணமாக வீரியம் இழந்தனர். முழுக்க சகீர்கானை நம்பியிருக்க வேண்டிய நிலையை அடைந்தோம். ஆக இந்நிலையை மாற்ற வேகப்பந்து வீச்சை ஊக்குவிக்க வேண்டும் என்று பரவலாக விவாதிக்கப்பட்டு வலியுறுத்தப்பட்டது. இந்தியாவை ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து போல் ஆக்கும் அவசர நடவடிக்கைகளின் பகுதியாக கடந்த ஐந்தாண்டுகளில் நமது மரபான ஆடுதளங்கள் மாற்றப்பட்டு அந்நிய நாட்டு மண்ணால் புது ஆடுதளங்கள் உருவாக்கப்பட்டன. 2009-10 ரஞ்சி தொடரின் போது வேகவீச்சாளர்களுக்கு மிகையான ஆதரவு தருபவையாய் ஆடுதளங்கள் இருந்தன. விளைவாக மிதுன், தியாகி போன்ற சராசரி வீரர்கள் மலிவான விக்கெட்டுகள் வீழ்த்திக் குவித்தனர். மிகையான அங்கீகாரம் பெற்று இவர்கள் சர்வதேச அணியில் தோன்றின பின் சாயம் வெளுத்து வந்த வேகத்திலே வெளியேறினார்கள். மேலும் அதிகப்படியான பரிசோதனை முயற்சிகள் காரணமாக நமது ஆடுதளங்கள் மிக மந்தமாகி தற்சமயம் எந்தவித பந்துவீச்சுக்கும் தோதற்றதாக மாறியுள்ளன. மற்றொரு எதிர்விளைவாக நமது மரபான வலிமையாக கருதப்பட்ட சுழலர்கள் இன்று சவலையாகி விட்டனர். நம்மூரில் எந்த அவசர முயற்சியும் கண்மூடித்தனமாக அமைந்து மேலும் சீரழிவை ஏற்படுத்தக் கூடும் என்பதால் நம்முன் உள்ள ஒரே வழி அந்த இரண்டாயிரமாண்டு பழமையான கொக்கை போல் அமைதியாக காத்திருப்பதே.
இந்த இருட்டில் இருந்து ஒரு ஒளிக்கீற்று தோன்றும்; அது ஒரு நட்சத்திரமாக சந்திரனாக அல்லது சூரியனாகவே மாறி சிறிது காலம் வெளிச்சம் கொடுக்கும். அப்படித்தான் கவாஸ்கரும் சச்சினும், கங்குலியும் திராவிடும், கபில்தேவும் கும்பிளேவும் தோன்றினர். இனிமேலும் தோன்றுவர் என்பது தான் நமது நம்பிக்கை. இவர்கள் வலுவான கட்டமைப்புக்குள் ஒழுங்குக்குள் பயிற்சி முறைக்குள் இருந்து உருவானவர்கள் அல்ல. நமது இந்தியத்துவமான அத்தனை குறைகளில் இருந்தும் தோன்றி அவற்றை கடந்து வளர்ந்து மேலோங்கி வந்தவர்கள். அதற்கு இவர்களுக்கு உதவியது அபார திறமையும் தீராத மன ஊக்கமும். அடுத்த நட்சத்திரத்துக்காக இருட்டில் கண்களை பதித்து காத்திருப்போம்.

(2011 டைம்ஸ் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)
Share This

5 comments :

  1. d,
    இரண்டும் வேறுவேறு. மோசமான தன் முனைப்பு அகங்காரம் எனலாம். உதாரணமாக ஒரு நல்ல எழுத்தாளராக இருக்க முயல்வது தன்முனைப்பு. நான் மட்டுமே நல்ல எழுத்தாளன் என்று நிறுவ முயல்வது அகங்காரம்.

    ReplyDelete
  2. அநேகமா சரிதான். ஆனால் தன்முனைப்பு உள்ளார்ந்த ஒன்று.

    ReplyDelete
  3. தன்முனைப்பு உள்ளார்ந்த ஒன்று என்றால் என்ன? த‌ன்முனைப்பு உள்ளார்ந்த ஒன்று என்றால் அகங்காரம்??????

    புரியவில்லை. என்ன சொல்கிறீர்கள் என்று.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates