Saturday, 5 November 2011

இருநாள் இலக்கிய விழா: எழுத்தாளர்களும், கதாபாத்திரங்களும், எளிய மனிதர்களும்



 தமிழில் பிரபலமாகாத எழுத்தாளர்கள் கூட தங்கள் பெயருக்கு விருது அறிவித்து ரொம்ப பிரபலமான ஒருவருக்கு அன்றாடம் கொடுத்து விடுகிற ஒரு அதிரடி நிலைமையில் தேசிய பத்திரிகையான தெ ஹிந்து வேறுவழியில்லாமல் போன வருடம் சிறந்த புனைவுக்கான இலக்கிய விருதொன்று அறிவித்தது. அதை பத்திரிகையாளரும் பத்தியாளருமான மனு ஜோசப் தனது Serious Men என்கிற அறிவியல் சமூக பகடி நாவலுக்காக வென்றார். சர்ச்சை ஒன்றும் இல்லை. பரவலாக பாராட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து இவ்வருடம் தற்போதைய மோஸ்தர் படி பெரும் கார்ப்பரேட் விளம்பர ஆதரவுடன் தெ ஹிந்து Lit for Life என்ற தலைப்பில் செப்டம்பர் 29, 30 ஆம் தேதிகளில் இலக்கிய விழா நடத்தியது. தேனாம்பேட்டை ஹயட் ரெசிடென்ஸி அரங்கத்தில். நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்த விதம் நமது தமிழ் கருத்தரங்குகள் மற்றும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கும் இடைப்பட்ட ஒன்றாக இருந்தது. உதாரணமாக பாகிஸ்தானி வங்கதேச இலக்கியம், பயண இலக்கியம், தலித் இலக்கியம், படைப்பாக்கத்தின் சிரமங்கள், இந்திய ஆங்கில பதிப்பகங்களின் நிலைப்பாடு, எதிர்பார்ப்பு, சவால்கள், திரைக்கதை எழுத்து மற்றும் இணைய எழுத்து என்று முதல் நாள் விழா திட்டமிடப்பட்டிருந்தது. காலை பத்தரையில் இருந்து மாலை ஆறரை வரை ஏழு அமர்வுகள். ஒவ்வொரு விவாதப் பொருளுக்கும் அரை மணி நேரம் தான். மிச்ச பொழுது பார்வையாளர் விவாதத்திற்கு தரப்பட்டது. இந்த குறுகின கால அளவில் மேற்சொன்ன தலைப்புகளுக்குள் நுழைந்து வெளியேறவே முடியாது, குறிப்பாய் ஒவ்வொரு அமர்விலும் இரண்டு மூன்று சிறப்பு விருந்தினர்கள் இருக்கும் போது. ஆக அடிப்படையான ஒரு பிரச்சனையோ, அல்லது தொடர்புள்ள ஒரு கருத்தோ எடுத்து அறிமுகப்படுத்தப்பட்டது. சில அமர்வுகளில் எழுத்தாளர்கள் தம் தரப்பை முன்வைத்தனர். சிலர் கடந்த கால நினைவுகளில் தொய்ந்தனர். இவ்விழாவின் நோக்கம் இப்படி பரவலான விசயங்களை தொட்டு நக்கி பார்ப்பதாகவே இருந்தது. மேலும் முதல் நாள் சிறப்பு விருந்தினர்களில் இந்திய ஆங்கில இலக்கிய ஜாம்பவான்கள் யாரும் காட்சி அளிக்கவில்லை. சமீபத்தில் அறிமுகமாகி பிரபலமான முகமது ஹனீப், ராகுல் பட்டாசாரியா, தலித் தமிழ் எழுத்தை தமிழில் துவக்கின கடந்த காலகட்ட எழுத்தாளர்களான பாமா, சிவகாமி போன்றோர், மற்றும் நடுத்தர எழுத்தாளர்களுடன் பத்திரிகையாளர்கள். ஒரு எழுத்தாளனாய் இருப்பது வேறு. அருந்ததி ராய், ஷஷி தாருர், சாரு, எஸ்.ரா போல் மீடியா ஆளுமையாகவும் கூட இருப்பது வேறு. உதாரணமாக எஸ்.ராவில் ஒரு மேடையில் நம்மை பிரமிப்பூட்ட முடியும். ஜெ.மொ சாருவால் இலக்கியம் கலாச்சாரம் குறித்த வலுவான விவாதங்களை மேடையில் ஏற்படுத்த முடியும். அப்படியான வலுவான ஆளுமை எழுத்தாளர்களுக்கு அரிதாகவே அமைகிறது. அநேகமான எழுத்தாளர்கள் கூச்சமிக்கவர்கள், சொல்ல அதிகம் ஒன்றும் இல்லாதவர்கள். வெறும் எழுத்துக் கலைஞர்கள். ஹிந்துவின் இலக்கிய விழா இவர்களை சுற்றித் தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஒரு ஜீரோ வால்ட் பல்புகளின் தோரணம். இருந்தும் இரண்டு விசயங்களுக்காக விழா கவனிக்கத்தக்கதாகிறது.
முதலில் ஒரு விழா சூழலை உருவாக்க முடிந்தது. இதற்கு அரங்கின் வெளியே உள்ள விரிவான லாபியும் தாராளமான காபியும் உதவியது. நம் தமிழ் எழுத்தாளர்களை போல் அல்லாது இந்திய ஆங்கில ஆளுமைகள் தம் பேச்சு முடிந்ததும் மேடையில் இருந்து குதித்தோடி விடவில்லை. அநேகானவர்கள் லாபியில் வாசகர்களுடன் எளிதாக உரையாடிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. அடுத்து நிகழ்ச்சிகள் திட்டமிட்ட கால அளவுக்குள் முடிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் நீண்ட நேரம் இருக்கையில் முடக்கப்படும் மனச்சோர்வும் பார்வையாளர்களுக்கு இல்லை. உள்ளேயும் வெளியேயும் திரைகளில் மேடை நிகழ்ச்சிகள் நேரலையாக ஒளிபரப்பானதால் பார்வையாளர்கள் இருக்கையை இழக்கும் கவலை இன்றி வெளியே வந்து லாபியில் உரையாடியபடி நிகழ்ச்சியையும் கவனிக்க முடிந்தது. அடுத்து விருந்தினர்கள் மேடையில் ஒரு கையை ஊன்றியபடி “நான் என்ன நினைக்கிறேன் என்றால் என்று ரெண்டு மணிநேரம் முதல் வாக்கியத்திலேயே தொக்கியபடி உரையாற்றவில்லை. அதற்குப் பதில் நிகழ்ச்சிக்ள் உரையாடல் வடிவில் அமைந்திருந்தன. இரண்டு எழுத்தாளர்கள், ஒரு ஒருங்கிணைப்பாளர், ஒரு தலைப்பு. ஒருங்கிணைப்பாளரை கட்டுப்படுத்த கீழே ஒரு நிகழ்ச்சி அமைப்பாளர். இரண்டு எழுத்தாளர்களை மேடையில் ஏற்றினால் ஒருபக்கம் ஸ்டார்ட் பொத்தானும் மறுபக்கம் பிரேக்கும் இருக்க வேண்டும் என்பதை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் புத்திசாலித்தனமாக புரிந்து கொண்டிருந்தார்கள். பேச்சாளனை நோக்கி சீட்டு அனுப்புவது, மௌனமான ஆணையிடுவது ஆகிய அவஸ்தைகள் இல்லாமல் இருந்தது. விவாத முறையில் இருந்ததால் பார்வையாளர்களால் பங்கேற்கவும் சற்று மூச்சு விடவும் முடிந்தது.
பொதுவாக பார்வையாளர் கேள்விகள் அசட்டுத்தனமாக சில வேளைகளில் கூர்மையாக இருந்தன. விருந்தினர்கள் அநேகமாக களைப்பாக சில பொழுது பொறுமையாக பதில் சொன்னார்கள். எப்போதும் அறிவார்ந்த விதத்தில் கேட்கும் பாணியில் தமாஷ் செய்யும் இரண்டு பேர் எல்லா அமர்வுகளையும் சுவையானதாக்கினார்கள். அவர்கள் எப்போது கேள்வி கேட்பார்கள் என்று மக்கள் எதிர்பார்க்க தொடங்கினார்கள். உதாரணமாக பயண இலக்கியம் அமர்வில் கையில்லாத பனியன்காரர் ஒருவர் “ஏன் விண்வெளிப் பயணங்கள் குறித்த பயண நூல்கள் அதிகம் வருவதில்லை? என்றார். ஒரு கையில் டாட்டுவும் மறுகையில் ஆப்பிள் ஐபாடுமாக அவர் இப்படி மொத்த அம்ர்வுகளையும் கலக்கினார். மற்றொரு வட இந்தியக் காரர் விக்டோரிய ஆங்கில உச்சரிப்பில் கேட்ட நீளமான கேள்விகள் எந்த எளிய ஜீவனுக்கும் புரியவில்லை. ஒருமுறை “நீங்கள் எழுதும் பிரதியில் நீங்கள் எங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்? என்பதையும் குழப்பமான முறையில் கேட்டார். அதற்கு ஒரு எழுத்தாளர் “பாகிஸ்தானில் என்றார். இப்படி அரங்கம் எழுத்தாளர்களும் “கதாபாத்திரங்களுமாக நிறைந்திருந்தது.
பார்வையாளர் கூட்டம் அநேகமாக முதியவர்களும் இளைஞர்களுமாக கலந்திருந்தது. வெளிமாநிலங்களில் இருந்து ஊடகவியல் மாணவர்கள் வந்திருந்தார்கள். பெண்கள் கூட்டமும் பெருமளவு இருந்தது. நாள் முழுக்க அரங்கம் காலியாகவில்லை. மத்திய வயதினர் அதிகம் வராதது நம் தமிழ் இலக்கிய கூட்டங்களில் கூட ஒரு போக்கு தான். இந்திய மாமாக்களுக்கும் கலாச்சார நடவடிக்கைகளுக்கும் ஏன் இடைவெளி? இது ஏன் என்பது குறித்து நாம் பின்னர் ஆராய்ந்து பார்க்கலாம்.
நாள்பூரா இலவசமாக விநியோகித்த காபுசீனா காப்பி கடைக்காரர் “காபி நல்லா இருக்கிறதா? என்று என்னிடம் சற்று சோகமான முகத்துடன் கேட்டார். பிறகு தன் காபி கசக்கிறது என்று பார்வையாளர்கள் பலர் நிகழ்ச்சிக் குழுவினரிடம் முறையிட்டதாக வருத்தப்பட்டார். காபி கசந்தது உண்மை தான். ஆனால் பிரச்சனை அது இலவசமாக கொடுக்கப்படுகிறது என்பதே. நான் நன்றாக கசக்கிறது என்றவரை பாராட்டினேன்.
கடைசியாக அவர் லாபியில் நின்ற வாசகர்-சூழ் எழுத்தாளர்களை காட்டி “இவர்களிடம் ஏன் கையெழுத்து வாங்குகிறார்கள்? யார் இவர்கள்? என்று கேட்டார். விளக்கினேன். “உள்ளே என்ன கூட்டம் நடக்கிறது? என்றார். விளக்கினேன். “அதானே பார்த்தேன். இவர்களை தான் எங்கேயும் பார்த்ததில்லையே என்று என்றார் அந்த வட-இந்தியர்.
புத்தகக்கடை போட்டிருந்தார்கள். இந்திய ஆங்கில புத்தகங்கள். அநேகமாக நாவல்கள். முகம்து ஹனீபின் A case of Exploding Mangoes என்கிற பாகிஸ்தானிய அரசியல் சமூக நாவல் தான் அதிகமாக வாங்கப்பட்டது. எந்தளவுக்கு என்றால் நான் கடைக்கு சென்று “மாங்காய் கொடுங்கள் என்றவுடன் நூலை கொடுத்து விட்டார்கள். தமிழில் இங்கே நீங்கள் போய் ‘பேன்சி பனியன் கேட்க முடியுமா? கேட்டால் தான் உடனடி கிடைக்குமா? ஓஹ்!
நடைமுறை வசதிகள் தவிர மிச்ச நட்சத்திர வசதிகள் அனைத்தையும் அற்புதமாக செய்து தருவது இந்திய பாணி. அதன் படி ஹியட் ரெஸிடென்ஸியில் வண்டியை ஒரு பாதாளத்தில் பத்திரப்படுத்தி விட்டு மூச்சைப் பிடித்து நடந்து தான் அரங்கை அடைய முடியும். நடக்க முடியாத வயோதிகர்கள், ஊனமுற்றவர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பதை நேரடியாக கேட்க விரும்பாமல் வரவேற்பாளரிடம் இப்படி கேட்டேன் “உங்க ஹோட்டலுக்கு ஊனமுற்றவர்கள் வருவதில்லையா?
அவர் நேர்மையாக சொன்னார் “இல்லை
இன்னொருவரும் இதையே சொன்னார். இறுதியில் ஒரு அதிகாரி வந்து ஹோட்டல் பேஸ்மண்டில் இன்னும் மின் தூக்கி அமைக்கவில்லை, அதனாலே நடந்து வரும் சிரமம் என்றார். முன்னர் ஒருமுறை ஊனம் குறித்து புரிய வைப்பதற்காக என் உறவுக்கார பையனிடம் “உன் கூட பள்ளியில் ஊனமுற்றவர்கள் யாரேனும் படித்துள்ளார்களா? என்று கேட்டேன். யாருமே இல்லை என்று சாதித்தான். இன்னும் கொஞ்ச நாள் போனால் “ஊனமுற்றவர்களா? அப்படி ஒரு உயிர் உள்ளதா? என்று மக்கள் கேட்கும் நிலை வந்தால் மகிழ்ச்சி அடைவேன்.
அமர்வுகளில் தொடர்ந்து ஒரு சிரிப்பலை எழுந்து கொண்டே இருந்தது ஆரோக்கியமானது. இத்தனைக்கும் பேசினவர்கள் வலிந்து ஜோக் சொல்லவோ வலிப்பு காட்டவோ இல்லை. எளிய மெலிதான அங்கதம் கலந்து பேசுவது மேற்தட்டு எழுத்தாளர்களின் பாணியாக உள்ளது. மதியம் படைப்பாக்க பட்டறை நடத்தின ஸ்விச்சர்லாந்து எழுத்தாளர் ஸாக் ஒ யா எதைக் கேட்டாலும் குதர்க்கமாக பதில் முதலில் கூறி விட்டு அடுத்தது நடைமுறை ஞானம் சொட்டினார். உதாரணமாக “நாவலுக்கு கள-ஆய்வு செய்வது எப்படி? ஒரு ஆஸ்பத்திரி பற்றி எழுதுவதானால் என்ன செய்ய?
“அதற்கு சிறந்த வழி காலை உடைத்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவது தான். நானும் அப்படித் தான் பண்ணிக் கொண்டேன். வெளியே வந்த பின் உங்களுக்கு ஆஸ்பத்திரி பற்றி எல்லாம் தெரிந்திருக்கும் சற்று இடைவெளி விட்டு “ஆனால் அது நடைமுறை சாத்தியமானது அல்ல. அதனால் நீங்கள் ஆஸ்பத்திரி பற்றி, மருத்துவர்கள், அறுவை சிகிச்சை, மருந்துகள் குறித்து வந்துள்ள ஏராளமான நூல்களை படித்து பயன்படுத்தலாம் என்றார். கடைசி அமர்வில் சுஹாசினியும் பத்திரிகையாளர் பரத்வாஜ் ரங்கனும் திரைக்கதை குறித்து உரையாடினார்கள். இதைக் குறிப்பிடக் காரணம் வழக்கத்துக்கு மாறாய் சுஹாசினி அன்று மிக தெளிவாக பேசினார் என்பதே.. மிகச் சிறந்த அமர்வு பாமா, சிவகாமி மற்றும் சுசி தரூர் பங்கேற்ற தலித் அமர்வு தான். அதற்கு ஒரு காரணம் உண்டு.
ஹிந்து குழுமத்தினர் தங்களது வழமையான அரசியல் நிலைப்பாட்டை காட்டும் விதத்தில் இவ்வமர்வுக்கு “எழுதுவதை நம்மை குணமாக்குமா? என்ற கேள்வியை தலைப்பாக வைத்திருந்தார்கள். பாமா முதலில் இந்த தலைப்பே அசட்டுத்தனமானது என்றார். சாதி அடக்குமுறை என்பது ஒரு நோய் பாதிப்பு அல்ல. அதற்கு தேவை மருந்து அல்ல, எதிர்ப்பு என்றார். தாக்குபவனை ஆற்றுப்படுத்த அல்ல, தாக்கப்படும் தாழ்த்தப்பட்ட சாதிக்காரர்களை ஒன்று திரட்டி எதிர்க்க தூண்டவே தான் எழுதுவதாக சொன்னார். அந்த கலவையான சபையில் சாதி குறித்த விவாதம் ஒரு புறம் சூடாக ஆரம்பித்தாலும் ஒரு பக்கம் பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் தலித்தியத்துக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் என்றே ஆர்வமின்றி அமர்ந்திருந்தனர். பார்வையாளர்கள் வினா பகுதியில் ஒருவர் எழுந்து தலித்துகள் தம் சாதி அடையாளத்தை பயன்படுத்தி வெட்டி அரசியல் செய்வதாக சொல்லி “ஏன் நீங்கள் தலித்துகளுக்கு நடக்கிற நல்ல விசயங்களைப் பற்றி எழுதுவதில்லை என்று கேட்டார். அதற்கு பாமா “தலித்துகளுக்கு நல்லது ஒன்று கூட நடக்க வில்லையே என்று சொல்ல கரகோஷம் எழுந்தது. பொதுவாக கேள்வி கேட்டவர்கள் ஒரு சின்ன குற்றவுணர்வால் தூண்டப்பட்டு கோபமுற்ற மேற்தட்டு சாதியினர். அவர்கள் “உங்களுக்கு இன்னும் என்ன வேண்டும் என்கிற ரீதியில் எதிர்வினை செய்தனர். இந்த அமர்வின் முக்கியத்துவம் இப்படியான பொது அரங்கில் சங்கடமான அரசியல் பிரச்சனைகளை எழுப்பியது தான். தூய இலக்கியவாதத்தில் இருந்து அரங்கை அது காப்பாற்றியது.
சிவகாமி சற்று தமிழச்சி தங்கபாண்டியன் போல் நளினமான பாதி புரியாத கோட்பாட்டு ஆங்கிலத்தில் பேசினாலும் அவர் சொன்ன சில கருத்துக்கள் குறிப்பிடத்தக்கவை. தலித் மக்கள் இன்று சோரம் போன தங்கள் தலைமை மீது நம்பிக்கை இழந்து நிற்பதாக தெரிவித்தார். அடுத்து முத்துராமலிங்கத் தேவர் மீதுள்ள குற்றக்கறையை குறிப்பிட்ட போது அரங்கம் நிச்சலமாக இருந்தது. ஒரு பார்வையாளர் “தலித் பிரச்சனைகள் ஒழிந்து உலகம் உத்தமமானால் நீங்கள் என்ன எழுதுவீர்கள்? என்றொரு கேள்வியை கேட்டார். அதன் மறைபொருள் உயர்ந்த இலக்கியம் என்பது நிரந்தரமான சில விழுமியங்களை விசாரணை செய்வது. தற்காலிக அரசியல் பிரச்சனைகளை அல்ல, உங்களைப் போன்றவர்கள் எவ்வளவு நாள் தான் அவற்றைக் கொண்டு இலக்கிய அங்கீகாரம் பெறுவீர்கள் என்பது தான். சிவகாமி தனக்கு எழுத பௌத்தம் உள்ளிட்ட ஏகப்பட்ட விசயங்கள் உள்ளதால் அப்படியான கவலைகள் இல்லை என்று நேரடியாக பதில் கூறினார். சுசி அடுத்து பாமாவிடம் மதம் எந்தளவுக்கு சாதி அமைப்பை தக்க வைக்கிறது, தலித் எழுத்தாளராக அவரது கிறித்துவ நிலைப்பாடு என்ன என்றார். பாமா அதற்கு தான் கர்த்தரை நேசிப்பதாக ஆனால் எல்லா மதங்களுக்கும் வெளியே இருக்க விரும்புவதாக சொன்னார். அன்று பல சமயங்களில் பாமா உணர்ச்சிவசப்பட்டே பேசினார். மதம் ஒரு சமூக உறுப்பு என்ற வகையில் அது சாதியவயப்படுவது தவிர்க்க இயலாதது எனினும் இன்றைய நிலையில் பௌத்தம் போன்றொரு மாற்று மதத்தை குறித்து இந்தியாவில் தலித்துகள் ஆழமாக சிந்திக்க வேண்டியது குறித்து அவர் பரிசீலிக்கவில்லை. ஆனால் சிவகாமி அதன் அவசியத்தை வலியுறுத்தினார். மற்றொரு சந்தர்பத்தில் பாமா இட ஒதுக்கீடு தேவையில்லை என்றார். “எங்களுக்கு ஒதுக்கீடு தர நீங்கள் யார்? என்று அவர் கேள்வி எழுப்பிய போது எழுந்த பலத்த மேற்தட்டினரின் கரவொலி எத்தனை சமயோஜிதமானது என்பதை அவர் அறிந்தாரா என்பது தெரியவில்லை. பின்னர் லாபியில் பாமாவை நேரில் சந்தித்து பேசிய போது அவரது முகம் எத்தனை தெளிவானது, அமைதி கூர்ந்தது என்பதை கவனித்தேன்.
இறுதியாக வீர் தாஸ் நிகழ்த்திய stand-up comedy நமது யூகி சேது போன்றவர்கள் செய்யும் டீ.வி ஓரங்க நகைச்சுவைகளில் இருந்து முக்கியமான ஒருவிதத்தில் வித்தியாசப்பட்டது. வீர் தாஸின் ஜோக்குகள் கிரிக்கெட், அரசியல், ஆண்-பெண் உறவுகள் என்பதை சுற்றி மையமிட்டிருந்தன. ஆனால் யூகி சேது போன்றோர் மத்தியதர வாழ்வின் விழுமியங்களின் அடிப்படையில் கிணற்றில் இருந்து எட்டிப் பார்த்து பேசுகையில் வீர் தாஸ் உலக/தேசிய அரசியல், பொதுவான மனிதப் பண்புகள் என்ற விரிவான தளத்தில் பகடி செய்கிறார். உதாரணமாக வாஸ்கோடகாமா வங்காளத்திற்கு வந்து ஒரு கருத்தரங்கில் இறங்கி அங்கொரு அறிவுஜீவியை சந்தித்தால் என்னவாகும் என்கிற கற்பனை உரையாடல்.
இரண்டாம் நாள் ஆறு அமர்வுகள். இலக்கியம், சினிமா, மொழிபெயர்ப்பு, கிரிக்கெட் ஆகியன தலைப்புகள். இறுதியாக ஏழரை மணிக்கு தெ ஹிந்து புனைவு விருது அறிவிக்கப்படும். குறிப்பிடத்தக்க அமர்வுகளாக மொழிபெயர்ப்பு பட்டறை/அமர்வு அமைந்தது. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்ஸில் மொழிபெயர்ப்பு ஆசிரியராக உள்ள மினி கிருஷ்ணனும், வங்காள-ஆங்கில மொழிபெயர்ப்பாளரான அருணவா சின்ஹவாவும் நடத்தினர். இருவரும் வேறுபட்ட ஆளுமைகள் கொண்டவர்கள். மினி அடங்கின குரலில் கூர்மையான அபிப்பிராயங்களுடன் நுட்பமான நகைச்சுவையுடன் பேசினார். அரங்கம் அதிர்ந்த போதும் அவர் அதிரவில்லை. அரங்கம் அமைதியான போது மேலும் அமைதியானார். அறிவார்ந்த மிடுக்குடன் மாணவர்களை சின்னதொரு கையசைவால் கட்டுப்படுத்தும் கௌரவமான பேராசிரியரை நினைவுறுத்தினார். சின்ஹா அநேக குள்ளமான உருவக்காரர்களை போல் ஓரிடத்தில் நில்லாமல் சற்று ஆவேசமாக குரலை உயர்த்தி பேசினார். அடிக்கடி “மிஸ் என்று இருக்கையில் இருந்து துள்ளி எழும் பள்ளிக்குழந்தையை நினைவுபடுத்தினார். அவர் தெளிவாக ஒரு விசயத்தை அறிவுறுத்தினார். மொழிபெயர்ப்பு ஒரு விஞ்ஞானம் அல்ல. அது ஒரு கலை. அது சற்று தன்னிச்சையாக மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யப்பட வேண்டியது. பிரதி படிக்கும்படியாக இருப்பது முக்கியம், சிறிது சுதந்திரம் எடுத்து சொற்களை, வாக்கியங்களை மாற்றியமைத்தால் தவறில்லை. மினி யு.அனந்தமூர்த்தியின் “சம்ஸ்காரா நாவல் மொழிபெயர்பை குறிப்பிட்டார். அதன் ஒரு பத்தியை திரையில் காட்டினார். ஏ.கே ராமானுஜன் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு சின்ன சறுக்கல் சறுக்கியிருந்தார். மையகதாபாத்திரம் தனது நோயுற்ற மனைவியை குளிப்பாட்டுகிறார். ராமானுஜன் அங்கு மனைவியின் உடல் குளிப்பாட்டப்படுவதாக மொழிபெயர்த்திருந்தார். இது அப்பெண் இறந்து போய் விட்டதாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறது..அப்பெண் ஏறத்தாழ மரணித்திருந்த நிலையை குறிக்க ராமானுஜன் அவ்வாறு மொழிபெயர்த்தாரா அல்லது அது கவனப்பிழையா என்று விவாதம் கிளம்பியது. பிறகு ஒரு கன்னடிய பெண் எழுந்து ராமானுஜன் மற்றொரு இடத்தில் மல்லிகார்ஜுனா என்ற பதத்தை மொழிபெயர்த்ததன் தவறை சுட்டிக் காட்டினார். மொழியாக்கும் போது பிரதியின் பின்னுள்ள கலாச்சாரத்தை புரிந்திருக்க வேண்டிய அவசியத்தை மினி வலியுறுத்தினார். எவ்வளவோ சிரமங்களுக்கு பின் ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பாளன் புதுமொழிக்கு கொண்டு வருகிறான். ஆனால் அவன் பெயர் பின்னுக்கு தள்ளப்படுகிறது. இந்த அங்கீகாரம் இன்மை அரங்கில் சற்று நேரம் விசனிக்கப்பட்டது. உதாரணமாக ஷங்கரின் சௌரங்கீ நாவலை சின்ஹா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த போது முன்னட்டையில் அவர் பெயர் வரவில்லை. ஷங்கர் பெயர் மட்டுமே கொட்டை எழுத்தில் அச்சாகியிருந்தது. ஆனால் மொழிபெயர்ப்பாளனுக்கு கிடைக்க வேண்டிய பங்கை எழுத்தாளன் அபேஸ் செய்தில் ஒரு இயற்கை நியதி உண்டு. உதாரணமாக, பிரபலமற்ற ஒரு படைப்பாளியை அறிமுகப்படுத்தினால் மொழிபெயர்ப்பாளனுக்கு அதிகப் புகழ் செல்லும். ஆனால் பிரபலமான படைப்பாளியை அறிமுகப்படுத்தி பிரபலமாக முயன்றாலோ நேர்மாறாக நடக்கும்.
இந்த பட்டறையில் ஒரு சின்ன குறை. பார்வையாளர்களின் பெரும்பான்மையான மொழிப்பரிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. தேன்மொழியின் கதையின் முதல் பத்தியை சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் அழகரசன் அவசரமாக படித்து முடிக்க புரியாமையின் அமைதி அரங்கில் நிலவியது. அடுத்து ஆங்கில மொழிபெயர்ப்பாளர் தோன்றி அதன் மொழிபெயர்ப்பை படித்த போது பெரும் கரகோஷம். பிறகு ஒரு இந்தி பிரதியின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் மூன்று ஒப்பிடப்பட்ட போது சில இந்திவாலாக்கள் பங்கேற்றார்கள். ஆனால் பொதுவாக குழப்பமே நிலவியது. மீரா பஜன் ஒன்றை கல்கி மொழிபெயர்த்து தமிழ் சினிமாவில் பாடலாக்கி உள்ளார். அதன் இரு மொழி வடிவங்களையும் கல்கியின் பேத்தி பாடிக் காட்டினார். சில போனதலைமுறைக்காரர்கள் புளகாங்கிதமடைந்தாலும் இதன் நோக்கமும் விளங்கவில்லை. கல்கி மொழிபெயர்ப்பில் எங்கு சேர்த்தார், எதை விட்டார் என்பதையாவது பேசி இருக்க வேண்டும். ருபயாத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பின் குறைகளை பேசினார்கள். ஆனால் நமது கவிமணியின் மொழியாக்க வரிகளை குறிப்பிடவில்லை. அதே போல் சு.ராவின் “ஒரு புளியமரத்தின் கதை மொழிபெயர்ப்பில் கோயில் கொடை umbrella ஆனதை சொல்லி மேலும் சில நவீன தமிழ் நாவல்கள் எப்படி ஆங்கிலமாக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் விவாதித்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
மாலையில் ஷபானா ஆஸ்மியின் அமர்வு அவரது அம்மாவின் சுயசரிதை பற்றியது இது நம்மூர் இலக்கிய மேடைகளில் சினிமா நட்சத்திரங்கள் செய்யும் சேஷ்டைகளை நினைவுபடுத்தியது. தனது பெற்றோர் குறித்த அவரது சித்தரிப்பில் மிகையும் நாடகத்தனமும் சலிப்பூட்டியது. இப்படிப்பட்ட லட்சிய பெற்றோர்கள் பிற வரலாற்று நாயகர்களுக்கு கிடைத்திருந்தால் நம் வரலாறு வேறு ஒன்றாக இருந்திருக்கும். ஆனாலும் ஷபானா ஆஸ்மியை பார்த்து சில முதிர்-இளைஞர்களுக்கு கண்ணில் நீர் வந்து விட்டது. ஒருவர் எழுந்து சொன்னார் “ஷபானா இளமையாக இருந்த போது நானும் இளமையாகத் தான் இருந்தேன். இந்த பிரச்சனை இல்லாத ஒருவர் இருந்தார். அவர் தமிழ் திரைப்படங்களில் தாடியுடன் கருணை குவிந்த கண்களுடன் எப்போதாவது தோன்றி உள்ள, எல்லா உலக மாற்று சினிமா அரங்குகளிலும் எப்போதும் தோன்றக் கூடிய சத்யேந்திரா Lit for Life அரங்கின் பிற பார்வையாள கதாபாத்திரங்களுடன் அவரும் சரளமாக கலந்து விட்டார். அவருக்கு ஓய்வுபெற்ற நடிகைகள் மீது ஏதோ காண்டு உள்ளது. போன முறை ஒரு திரை அரங்கில் பார்த்த போது குஷ்புவை வைது கொண்டிருந்தார். இம்முறை லாபியில் நின்று சுஹாசினியை திட்டினார். அன்று ஷபானா தான் அறியாத மொழிப்படங்களில் நடித்ததில்லை என்று சொன்னார். இரண்டே விதிவிலக்குகள். கன்னடப் படமொன்றில் வசனமில்லாத வேடம். தெலுங்குப் படமொன்றில் பாட்டு மட்டும் பாடும் ஒரு பாடகியாக. உடனே சத்யேந்திரா குரலெழுப்பினார். “இல்லை நீங்கள் இரண்டு வேற்று மொழி படங்களில் நடித்துள்ளீர்கள்”. ஷபானா அமைதியாக தலையாட்டி இல்லை என்றார். “ஆமாம் நடித்துள்ளீர்கள். ஒன்று கன்னடா, இன்னொன்று தெலுங்கு. இதற்கு எப்படி பதில் சொல்ல என்ற ஷபானாவுக்கு விளங்கவில்லை. பின்னர் லாபியில் என் நண்பரான காப்பிக் கடைக்காரர் ஒரு முக்கியமான கேள்வி கேட்டார். அவர் சத்யேந்திராவை சுட்டிக் காட்டி என்னிடம் கேட்டார் “யார் அவர்? நான் அவரை வேறெங்கும் பார்த்ததில்லையே
இறுதியாக ராகுல் பட்டாசாரியாவின் “The Sly Company of People Who Careநாவலுக்கு இவ்வருடத்துக்கான சிறந்த ஆங்கில இந்திய புனைவு வழங்கப்பட்டது. மேடையில் தேர்வுக்குழுவை சேர்ந்த கவிஞர் சச்சிதானந்தன் தோன்றி காரணங்களை சொன்னார். ஒன்று இந்நாவல் கரீபியன் ஆங்கிலத்தை இந்திய ஆங்கிலத்துடன் கலந்து புதுமொழியை உற்பத்தி செய்துள்ளது. அடுத்து மனிதனின் ஆதார அபத்த நிலையை பகடி செய்துள்ளது. கடைசியாக இந்தியாவையோ மே.இ தீவுகளையோ விநோதமான ஆச்சரியம் தூண்ட சித்தரிக்காமல் எதார்த்தமாக புனைந்தது. ராகுல் உலக அழகிகளுக்கான வியப்பு தோன்றும் ஈரக் கண்களுடன் மேடைக்கு வந்து விருதை வாங்கி நன்றி தெரிவித்தார்.
கூட்டம் கலைந்ததும் லாபியில் சச்சிதானந்தனை வளைத்து இரண்டு கேள்விகளை கேட்டேன். ஒன்று தமிழ் நவீன கவிதைகள் ஒரு விரிவான வரலாற்று/தத்துவ பரப்பை பின்னணியாக கொள்ளாமல் மனிதனின் அகவுலகம் பற்றின சின்னஞ்சுறு தருணங்களை மட்டுமே ஏன் சித்தரிக்கின்றன? தனிமனிதனின் சங்கடங்கள், மிகைப்படுத்தப்பட்ட எளிய துயரங்கள், சஞ்சலங்கள், குற்றவுணர்வுகள், புலம்பல் புகார்கள் என ஏன் நம் கவிதைகள் குறுகிப் போய் விட்டன? தமிழ் நவீன கவிதை குறித்து இதே புகார் தனக்கும் உண்டு என்றார் சச்சிதானந்தன். அடுத்த கேள்வி. கேரள கவிஞர்கள் வெகுமக்கள் அங்கீகாரத்தை பெற்றதற்கு அவர்களின் அரசியல், சமூக ஈடுபாடும் பங்களிப்பும் காரணமா? சச்சிதானந்தன் அது உண்மையே என்றார். அவருக்கு பிரியமான கவிஞர்கள் அனைவரும் மக்கள் வாழ்வினோடு கலந்து பங்களித்தவர்களாக, சமூக அரசியல் பிரச்சனைகளில் அக்கறை கொண்டவர்களாகவே இருந்துள்ளார்கள் என்றார். தமிழ் நவீன கவிதையின் அரசியலின்மையும் சமூக அக்கறையின்மையும் வருந்தத்தக்கது என்றார். இதற்கு காரணம் அநேக நவீன கவிஞர்கள் பிராமணர்களாக இருந்ததும், மத்திய வர்க்க பிராமணர்கள் பொதுவாக வெளிப்படையான அரசியல் நிலைப்பாடு எடுக்க விரும்பாதவர்களாகவும் உள்ளவர்களாக இருப்பதும் என்று இங்கு ஒரு விமர்சன தரப்பு உள்ளதாக சொன்னேன். சச்சிதானந்தன் சாதியக் காரணம் பல காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று சொன்னார். வேறு காரணங்கள் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். திராவிட அரசியல் பால் ஏற்பட்ட மனக்கசப்பு, தூய இலக்கியவாதம், elitism இப்படி தோன்றிக் கொண்டே போனது.
Share This

3 comments :

  1. பகிர்விற்கு நன்றி அபிலாஷ்.

    ReplyDelete
  2. அற்புதமான தொகுப்பு.. நன்றி

    ReplyDelete
  3. நன்றி சுரேஷ் கிருஷ்ணன் மற்றும் சாணக்யன்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates