உலகமெங்கும் நகரவாசிகள் அதிகமாக மனச்சோர்வினால் பாதிக்கப்படுகிறார்கள். நகரங்களில் மிகுதியான மக்கள் தொகை மற்றும் போதிய உறவுநிலைகள் இன்மை ஆகியன ஒரு முக்கிய காரணங்கள். மனிதர்கள் பொதுவாக ஜனநெருக்கடி உள்ள இடங்களில் ஒருவித பதற்றத்தை, பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள். மேலும் பரிச்சயமற்ற மனிதர்கள் பொருளாதார தேவை எனும் பொதுநோக்கத்திற்காக தொடர்ந்து வந்து குவிந்து விலகிக் கொண்டிருக்கும் நகரத்தில் இருநூறு பேர் நிரந்திரமாய் வசிக்கும் ஒரு கிராமத்தில் உள்ள சாஸ்வதமான உறவுகள் ஒரு மனிதனுக்கு எளிதில் அமைவதில்லை. கோடிக்கணக்கானோர் வாழும் நகரத்தில் ஒரு மனிதன் தனிமையில் தவிப்பதற்கு இதுவே காரணம். இது மனச்சோர்வை தூண்டாவிட்டாலும் அதற்கு ஏற்ற ஒரு சூழலை உருவாக்குகிறது. நகரங்கள் மனச்சோர்வுக்கு தோதாக நம் மூளை அமைப்பையே மாற்றுகின்றன என்னும் ஒரு தரப்பும் உண்டு. நியூயார்க்கில் இவ்வருடம் நடந்த ஒரு ஆய்வில் நகரங்களில் பிறந்த வளர்ந்தவர்கள் எதிர்மறை விமர்சனங்களை நேரிடும் மனவலிமை அற்றவர்கள் என்கிறது. மாறாக கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் ஒரு சிறுபுன்னகையுடன் எதையும் தாங்கிக் கொள்கிறார்கள்.
மத்தியபிரதேசத்தில் உள்ள டாட்டாமோட்டார்ஸ் ஆஸ்பத்திரியில் பணி புரியும் டாக்டர் அகர்வால் தனது ஆஸ்பத்திரியில் நூற்றுக்கணக்கானோர் தினமும் வரிசையில் நிற்பதாக சொல்கிறார். பெரும்பாலானோர் இளைஞர்கள். வேலை நெருக்கடி ஒரு முக்கிய காரணம் என்கிறார். 2009இல் சென்னை நீரிழிவு ஆய்வு நிறுவனம் டாக்டர் மோஹன் நீரிழிவு சிறப்பு மையத்துடன் இணைந்து ஒரு முக்கிய ஆய்வு நடத்தியது. 26,000 சென்னைவாசிகள் உள்ளடக்கிய இவ்வாய்வில் புரிய வந்தது இங்கு 15% மனச்சோர்வாளர்கள் உண்டு, அவர்களில் அதிகம் பேர் பெண்கள், திருமணமாகாதவர்கள், மணமுறிந்தவர்கள். மேலும் கீழ்த்தட்டை சார்ந்த மக்கள் எளிதில் மனச்சோர்வடைகின்றனர். நகரம் மனச்சோர்வை தூண்டினாலும் குறிப்பாக பெண்களும், துணையற்றவர்களும், பணவசதி இல்லாதவர்களும் அதிகம் பலியாகின்றனர் என்ற தகவல் மனச்சோர்வை பொறுத்தவரையில் உயிரியல், குடும்பம் சார் மற்றும் பொருளாதார காரணிகள் மேலும் அபாயகரமானவை என்று புரிய வருகிறது.
குடும்ப துணையற்றவர்களும் ஏழைகளும் பாதிப்புக்குள்ளாவதை எளிதில் புரிந்து கொள்ளலாம். பெண்கள் ஏன் ஆண்களை விட அதிகம் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள்?
பூப்படையும் போது பெண் உடல் அடையும் மாற்றங்கள், குடும்ப வாழ்வையும் வேலையயையும் ஒருமித்து சமாளிக்கும் போராட்டத்தின் நெருக்கடிகள், உடலழகு குறித்த கவலைகள் ஆகியன பொதுவான காரணங்கள். மேலும் பிரசவத்திற்கு முன்னரும் பின்னருமான மாதங்களிலும், மாதவிடாய் காலங்களிலும் பெண்களின் உடலில் நேரும் ஹார்மோன் சுரப்பு மற்றும் பிற ரசாயன மாற்றங்கள் அவர்களை எளிதில் மனசோர்வுக்கு தள்ளுகின்றன. பெரும்பாலான சமூகங்களில் பெண்கள் கடுமையான கண்காணிப்புக்குள் வாழ்வதால் தங்கள் மனச்சோர்வை,ஏமாற்றத்தை, நிராசையை ஆண்களைப் போன்று போதைப் பழக்கங்கள் மற்றும் வெளிப்புற செயல்பாடுகள், சமூக தொடர்புறுத்தல்கள் வழி வெளிப்படுத்தும் வாய்ப்புகள் குறைவு. அவர்கள் வெளிப்பாட்டு மார்க்கமின்றி தமக்குள்ளே புழுங்கி மேலும் சோர்ந்து போகிறார்கள். அடுத்து பொதுவாக ஆண்கள் தமது எளிதில் தீராத பிரச்சனைகளை எளிதில் தள்ளிப் போடும் மனப்போக்கு கொண்டவர்கள். பெண்கள் அதே பிரச்சனைக்கு முடிவு காணும் வரை மனதுக்குள் உழன்று கொண்டிருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் பெண்கள் பிரச்சனைகளுக்கு அழுவதன் மூலம் தீர்வு காணும் உள்விழைவு கொண்டவர்கள். அழுகை ஒரு நல்ல நிவாரணமாக இருந்தாலும் அது ஒருவிதத்தில் நம் துக்கத்தை பௌதிக ரீதியாக உறுதிப்படுத்துகிறது. அழுது முடித்து விட்டு எந்த பிரச்சனையும் இல்லை என்று ஒருவர் மறந்து போக முடியாது. வருத்தப்பட்ட அனுபவங்களை விட அழுகின்ற பௌதிக அனுபவங்கள் தான் நம் நினைவில் தங்கி நிற்கின்றன. அழுகை கசப்பான நினைவுகளின் ஊற்று.
மேலும் நமது பல்லாண்டு கால ஆணாதிக்கவாத வரலாற்றின் விளைவாக பெரும்பான்மையான பெண்கள் தம்மை பலவீனர்களாக பாதுகாப்பற்றவர்களாக உள்ளுக்குள் கருதி வருகின்றனர். இந்த சுயபிம்பம் மனச்சோர்வுக்காக மனதை தயாரிப்பதில் முக்கிய பங்களிக்கிறது. சமூகத்தில் ஆண்களை விட ஏழ்மையின் கரம் பெண்களை நோக்கித் தான் எளிதில் நீள்கிறது.
மனச்சோர்வுற்ற நகரம் ஆணை விட பெண்ணையே அதிகம் நசுக்குகிறது.
(டைம்ஸ் தீபாவளி மலர் 2011இல் வெளியான கட்டுரை)
நல்ல ஒரு ஆழ்ந்த அலசல் வாழ்த்துக்கள்...!!!
ReplyDeleteநன்றி நாஞ்சில் மனோ
ReplyDeleteநல்ல கட்டுரை.. எதையும் மறுக்கமுடியவில்லை. தெளிவான எழுத்து.. வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி சுபத்ரா
ReplyDelete