Monday, 31 May 2010

சுஜாதாவின் “கடவுள் வந்திருந்தார்”: தனிமையும் எந்திர நட்பும்

மே 24 மாலை ஏழு மணிக்கு சுஜாதாவின் ”கடவுள் வந்திருந்தார்” நாடகம் சென்னை கிருஷ்ணகான சபாவில் குருகுலம் குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. இயக்குனர் மற்றும் மையபாத்திரமாக நடித்தவர் எம்.பி.மூர்த்தி. எம்.பி மூர்த்தி பயங்கர தன்னடக்கவாதி. எந்தளவுக்கு என்றால் தொடர்பு கொண்டு கேட்டபோது நாடகத்தை இயக்கியது தான் என்பதை ஒத்துக் கொள்ள மறுத்தார்; ஒரு மாந்திரிக எதார்த்த பாணியில், மறைந்த பூர்ணம் விஸ்வனாதன் தான் இயக்கினார் என்று தெரிவித்தார். அவர் பூர்ணமின் ஆத்மீக வழிகாட்டலை உத்தேசித்திருக்கக் கூடும். இந்நாடகம் 1975-ஆம் வருடத்தில் இருந்து பூர்ணம் விச்வநாதனின் New Theatre-ஆல் 250 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப் பட்ட ஒன்று.

”கடவுள் வந்திருந்தார்” அறிவியல் புனைவின் பூச்சு கொண்ட சமூக பகடி இந்நாடகம். ஒரு நகைச்சுவை நாடகமாக இது முழுமையான கேளிக்கை அனுபவத்தையும் தரலாம். ஒரு தனிமனிதன் தன்னை சூழ்ந்துள்ள ஆதமார்த்தமான தனிமையை உணர்ந்து கொள்ளும் பிரச்சனையும் பேசப்படுகிறது. அந்நிலையின் வெறுமையை, கசப்பை, கைவிடப்படலை பேசும் சூட்சுமமான பகுதி வெளிப்படையாக காட்டப்பட இல்லை என்பதே சுஜாதாவின் மிகப்பெரிய சாமர்த்தியம். அதாவது மையபாத்திரமான ஸ்ரீனிவாசன் ஓய்வு பெற்ற பின் சிறுக சிறுக குடும்ப உறவுகளின் மரியாதையை, சமூக பயன்பாட்டு வாழ்வின் மீதான பிடிப்பை இழந்து வரும் மனிதர். துயரம் என்னவென்றால் அவர் அதை மிக துல்லியமாய் உணர்ந்து கொள்கிறார். அல்லது மிகச் சரியாக ஏற்கனவே எதிர்பார்த்து இருந்துள்ளார். தீமையைப் போன்று தனிமை நம் வெகுஅருகில் எப்போதுமே காத்திருக்கிறது. மிகப்பலர் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் தனது இடம் காலியாக உள்ளதை, அதன் விளைவாக தனிமைப்பட்டுப் போவதை உள்ளார்ந்து உணர்வதில்லை. உணர்ந்தால் கூட ஏற்றுக் கொள்வதில்லை. இந்நாடகத்தில் ஸ்ரீனிவாசனுக்கு வேலையில் இருந்து ஓய்வு தனது தனது உள்ளார்ந்த தனிமையை சுட்டும் போதி மரமாக உள்ளது. அவர் கிடைக்கிற பொழுதில், மனைவி, மகள் இல்லாத வீட்டின் தனிமையில், சுஜாதா (நாடகத்துள் வரும் எழுத்தாளர்) எழுதிய ”எதிர்காலமனிதன்” என்ற விஞ்ஞான புனைகதையை படிக்கிறார். இங்கே ஸ்ரீனிவாசன் படிப்பது செய்தித்தாளோ, எளிய பாகவத சுருக்கமோ அல்ல என்பது முக்கியம்.

அறிவியல் புனைவுகளில் கணிசமானவை விண்வெளி மனிதன் பற்றிய அலாதியான கற்பனை சித்திரங்களால் உருவாக்கப்பட்டவை. வெறுமனே விண்வெளியின் தன்மை என்றல்லாமல், விண்வெளியின் உயிர் சாத்தியப்பாடுகளே அறிவியல் புனைவிலக்கியம் அல்லது விண்வெளி ஆய்வின் ஒரு பிரதான தேடலாக உள்ளது. தனது கட்டுரை ஒன்றில் இந்த தேடலை பற்றி அவதானிக்கும் சுஜாதா அண்டத்தில் தான் மட்டுமே ஒரே மனித இனம் என்ற எண்ணம் தரும் தனிமையுணர்வு, கோடானுகோடி கோளங்கள் பூமியைச் சுற்றி அனாதையாக சுற்றுவது என்பது மனிதனுக்கு மிகுந்த பிரயாசை தரும் எண்ணமாக இருக்கலாம் என்கிறார். இந்த விண்வெளித் தனிமையை ஜீரணிக்க முடியாமல் தான் மனிதன் ஒரு சக-கோள உயிரை கற்பிக்கவோ கண்டறியவோ முனைகிறான். ஸ்ரீனிவாசன் படிக்கும் அறிவியல் புனைகதையில் காலப் பயணம் குறித்து பேசப்பட்டுள்ளது. அதாவது 2080இல் மனிதன் கால-எந்திரங்களில் எந்த நூற்றாண்டுக்கு வேண்டுமானாலும் சென்று வர முடியலாம். அப்படியான ஒரு மனிதன் இந்த நூற்றாண்டுக்கு வந்தால் அவனிடம் எதிர்காலம் குறித்து, அம்மனிதர்களின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் குறித்து விசாரிக்கலாமே என்று அவர் சத்தமாக யோசிக்கிறார். அப்போது 2080இல் இருந்து ஒரு மனிதன் நிஜமாகவே இந்த நூற்றாண்டுக்கு ஒரு கால-எந்திரத்தில் வந்து அவர் வீட்டுக்குள் குதித்து விடுகிறான். அவனால் உருவாகும் சிக்கல்களும், குழப்பங்களுமே நாடகத்தின் பிற அங்கங்களை நகர்த்துகின்றன. உறவாட ஒரு எதிர்கால மனிதன் வரும் அளவுக்கு முதியவர் வாழ்வின் விளிம்புக்கு நகர்த்தப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் எதிர்கால மனிதன் மீது வெறுப்பு காட்டி, அவனை துரத்த முயன்றாலும் அவன் மீது அவர் கொள்ளும் தீவிர பிடிப்பு ஒவ்வொரு காட்சியினூடும் சுஜாதாவால் நுட்பமாக காட்டப்டுகிறது. முதிய்வர் ஆரம்பத்தில் எதிர்கால மனிதனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். மனிதப்பெயர் வைக்க வேண்டுகிறார். எண்கள் மட்டுமே அடையாளமாய் கொண்ட எ.கா மனிதனுக்கு ஜோ என்று பெயர் முடிவாகிறது. பூஜை மணியால் ஒரு முறை கிணுக்கினால் அவன் தோன்ற வேண்டும் . இரண்டு முறை என்றால் அவன் மறைந்து விட வேண்டும். பிறர் முன்னிலையில் அவனிடம் பேசுவது சங்கடமாகவும், பிரச்சனைகள் தருவதாகவும் இருப்பதால் இந்த ஏற்பாடு என்கிறார் ஸ்ரீனிவாசன். அதனால அவர் தனியாக இருக்கும் போது ஒரு மணிச்சத்தம் எழுப்புவார். ஜோ ”தனியா என்றால் என்ன” என்கிறான். தனது அகராதியில் தேடி அது ஒரு மளிகைப் பொருளாச்சே என்கிறான். முதிய்வர் “இல்லை இல்லை இது lonely” என்கிறார். ஜோ அதை அவன் மொழியில் ’லூனிமா’ என்கிறான். ஸ்ரீனிவாசன் உடனே “இங்கே எல்லாரும் லூனிமா தான் ” என்கிறார். இது நாடகத்தின் சாவி போன்ற வசனம். இறுதியில் எ.கா மனிதன் தன் காலத்துக்கு திரும்ப வேண்டி வருகையில் ஸ்ரீனிவாசன் தடுமாறிப் போகிறார். அவனை தடுக்க, மேலும் தங்கிட வைக்க போராடுகிறார். அவன் கிளம்பின உடன் பழைய மணியை எடுத்து அடித்துப் பார்க்கிறார். இந்த கையறு நிலைமை நாடகத்தின் மையக் கரு. எ.கா மனிதனால் விளையும் லௌகீக பயன்களை முதியவர் தன்னுடைய சுயவசதிக்காக பயன்படுத்திக் கொள்வதில்லை. அவனுடைய பிரிவு ஒரு லௌகீக் இழப்பல்ல. ஆதமார்த்த நிலையில் தனக்கான ஒரு பிடிப்பை, அணுக்கமான இருப்பை, பாசாங்கற்ற உறவை இழந்து விட்டதாக உணர்கிறார். இது தான் அவரது பெரும் ஆற்றாமை. அடுத்து ஜோ எனப்படும் இந்த எ.கா மனிதன் ஒரு மின்சாரம் உண்டு வாழும், கணினியால் இயக்கப்படும் எந்திரம் என்ற குறிப்பு சுவாரஸ்யமானது. அதாவது நவீன மனிதன் ஒரு எந்திரத்துடன் உறவாடும் படியாக தனிமைப்படுத்தப் பட்டுள்ளான் என்பது எத்தனை முக்கியமான அவதானிப்பு! இந்த நெருக்கடியின் உருவகம் தான் ஸ்ரீனிவாசன். அவர் ஒரே நிலையில் மக்களால் பைத்தியமாகவும் கடவுள் அவதாரமாகவும் பார்க்கப்படுகிறார். இந்த முரண்பாடுகளால் பிளவுபடும் சமூகமும் வேறொரு நிலையில் தனிமைப்பட்டு தான் உள்ளது. எந்திர விலைமாதுகள், மீடியா சாமியார்கள் மற்றும் விர்ச்சுவல் காம பரிவர்த்தனையின் இன்றைய காலகட்டத்தில் அறுபதுகளில் சுஜாதா பேசிய இச்சங்கதியை நாம் மேலும் மேலும் காத்திரமாக உணர்ந்து வருகிறோம்.



நாடகம் முழுக்க ஸ்ரீனிவாசன் பேசும் தன்னுரைகள் மேலும் முக்கியமானவை. அவர் எ.கா மனிதனிடம் பேசும் போது அடுத்தவர்களுக்கு அவனது உருவமோ, குரலோ பார்க்க முடியாது, கேட்காது. இதனால் முதியவ்ர் தனக்கு தானே பேசிக் கொள்வதாய் தவறாய் புரிந்து கொண்டு அவரை பைத்தியம் என்று முடிவு கட்டுகின்றனர். இந்த “பைத்திய” வசனங்களும் ஒரு வித தன்னுரைகள் தாம். அடுத்து ஸ்ரீனிவாசனின் அறிவார்ந்த நகைச்சுவை வசனங்கள். சதா தான் எதிர்கொள்ளும் மனிதர்களின் போலித்தனங்களை, அசட்டு பாவனைகளை பகடி செய்து கொண்டே போகிறார். அவரது நெருக்கடிகள் தீவிரம் ஆக ஆக இந்த பகடியும் கேலியும் மிகுதியாகிய படி செல்கின்றன. இது ஏன்? மக்கள் ஏன் உண்மையை தொடர்ந்து மறுக்கிறார்கள் என்ற வருத்தமே இந்த நகைச்சுவை தோலுரிப்பில் வெளிப்படுகிறது. ஒரு துன்பியல் பாத்திரமாக அவர் தோற்றம் கொள்ளாமல் காப்பாற்றுவது இந்த அங்கதச்சுவை மிக்க வசனங்கள் தாம். ஸ்ரீனிவாசனின் துயரம் கண்டு பார்வையாளன் உள்ளார்ந்து நுட்பமாய் இரங்கி, மனம் கலங்கினாலும் அவன் காணும் பிரதான ரசம் வேடிக்கையும், மகிழ்ச்சியும் தான். மேலோட்டமான தளத்தில் “கடவுள்வந்திருந்தார்” ஒரு எளிய வேடிக்கை நாடகமாக, horse play-ஆக தெரிவதற்கான நிறைய சந்தர்பங்கள் உள்ளன. மருத்துவர், போலீஸ், காதலன், காது டமாரமான கிழம் என்று தட்டையான, தேய்வழக்கு கதாபாத்திரங்கள் மற்றும் இவர்கள் உருவாக்கும் நகைச்சுவை சந்தர்பங்கள் ஆகியன் உயர்தர நாடகத்துக்கு உரியன அல்ல. ஆனால் ஒரு எளிய ஷெரிடன், காங்கிரீவ் அல்லது நம்மூர் கிரேசி மோகன் பாணியிலான குணாதிசய நகைச்சுவை நாடகமாக (comedy of manners) தாழ்ந்து விடாமல் உயர்த்துவது மேற்சொன்ன துன்பியல்-நகைச்சுவை அம்சம் தான். இருக்கையில் இருந்து துள்ளித் துள்ளி சிரித்தவர்களில் நுண்ணுணர்வு கொண்டவர்களை ஆழமாய் அலைகழிக்கும் ஒரு இருத்தலியல் துயரம் ஸ்ரீனிவாசனின் வரிகளிலும், அவர் சந்திக்கும் நூதனமான, மிகுகற்பனை சூழல்களிலும் உண்டு. ஆனால் ஒரு தீவிர நாடகத்தின் எந்த தோற்றமும் ஏற்பட்டு விடாமல் சுஜாதா கவனமாக எழுதியுள்ளார்.





நகைச்சுவை நாடகம் சூழ்நிலை அல்லது வசனங்களை மையமாக கொண்டு இயங்கலாம். சுஜாதா உருவாக்கும் சூழ்நிலைகள் நகைச்சுவை பாந்தமாக எப்போதும் இருப்பதில்லை. குறிப்பாக இந்நாடகத்தில் சாமர்த்தியமான மதிநுட்ப நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் தான் அவரது பலவீனமான காட்சியமைப்புகளை தாங்கி நிறுத்துகின்றன. சூழல் ரீதியான நகைச்சுவையில் வசனம் மழுங்கினாலும், நடிகர்கள் சிறிது சொதப்பினாலும் கூட காட்சியமைப்பின் சிறப்பு பார்வையாளனை சிரிப்பில் ஆழ்த்தும். பார்வையாளன் காட்சியின் தன்மையை எண்ணி அனுபவிப்பதால் நடிகர்கள் சும்மா முட்டுக் கொடுத்தாலே அவ்விடம் வெற்றியடையும். ஆனால் வசனம்-சார் நகைச்சுவையில் நடிகர்களின் டைமிங் மிக முக்கியம். பொதுவாக நடிப்பில் பிரக்ஞைபூர்வமாக இருந்தாலும் இந்நாடகத்தில் நடித்தவர்கள் டைமிங் மற்றும் குரலின் ஏற்ற இறக்கம் போன்ற வெளிப்பாட்டுகளில் சோபித்தார்கள். ஸ்ரீனிவாசனாக நடித்த எம்.பி மூர்த்தி மற்றும் மருத்துவராக நடித்த விஸ்வனாதன் ரமேஷை இவ்விசயத்தில் பாராட்ட வேண்டும். வினோதமாக சில்லறை பாத்திரங்களில் இயங்கினவர்களே மிக நன்றாக நடித்தார்கள். குறிப்பாக செவிட்டு மாமனார் பாத்திரத்தில் நடித்த விஷ்ணு மற்றும் பக்கத்து வீட்டு சேஷகிரி ராவாக வந்த ஆர்.பாஸ்கர். இருவருக்கும் உணர்ச்சி வெளிப்பட்டில் கட்டுப்பாடும் தேர்ச்சியும் இருந்தது. எம்.பி மூர்த்திக்கு சிறு இடைவேளைகளும், பார்வையாளரை நோக்கி பிரசங்கிக்க வேண்டிய கட்டங்களும் சோதனைகள் தாம்..இப்படி கியர் மாற வேண்டிய தருணங்களில் பிரக்ஞைபூர்வமாகி விடுவார். உக்கிரமான கட்டங்களில் நன்றாகவே நடித்தார். ஆனால் வெளிவந்ததும் உடனே வேறுபட்ட காட்சிக்கான மனநிலைக்கு செல்ல முடியாமல் தத்தளித்தார், சுத்த தமிழ் உச்சரிப்பை விட பிராமணத் தமிழ் பேசும் இடங்களில் தான் மிக சரளமாக நடித்து ஸ்ரீனிவாசன் பாத்திரத்துக்கு அவர் ஒரு தனி அடையாளமே தந்து விடுகிறார். குறிப்பாக, அவர் முகத்தை தொங்கப் போட்டபடி, அமர்த்தலான தொனியில் பேசும் தோரணை இந்த பாத்திரத்தை பற்றிய ஒரு நடிகருக்கான சிறந்த அவதானிப்பு எனலாம்.. ஆனால் பிற பாத்திரங்களில் வந்தவர்களின் நடிப்பு பிரக்ஞைபூர்வமாகவும் அதனால் சொதப்பலாகவும் இருந்தது. மகள் பாத்திரத்தில் வசுமதியாக நடித்தவர் ஷாந்தி கணேஷ். பிதாமகனில் வில்லனுக்கு மனைவியாக வந்தவர். அவர் நடிப்பு தான் உள்ளதிலேயே கடுமையான விஷப்பரிட்சையாக இருந்தது. எழுபதுகளில் பூர்ணம் விசுவநாதனுடன் இயங்கிய நடிகர் குழு தான் இம்முறையும் நடித்திருந்ததால் பாத்திர அமைப்புக்கு பொருத்தமற்ற தோற்றம் ஒரு நெருடலாகவே இருந்தது. இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்தது அம்பியாக நடித்த சிறுவன் மட்டும்தான்.

குருகுலம் குழுவினரின் அடுத்த நாடகம் ”யாதுமாகி நின்றாய்” ஜூன் 16 அன்று ராமகிருஷ்ணா மிஷன் ஸ்கூலில் நிகழ உள்ளது.
Share This

2 comments :

  1. சீனிவாசானந்த ஜோ வை மேடையேற்றினார்களா...?நல்ல விஷயம்...

    ஆனால் கடவுள் வந்திருந்தார் சுஜாதாவின் பிரமாதமான நாடகம் இல்லை என்றே தோன்றுகிறது. டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு, ஆகாயம் போல இதில் ஒரு த்ரில் குறைந்து இருப்பதாக தோன்றியது!அதாவது அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எதிர்பார்க்க வைக்கும் தன்மை "கடவுள் வந்திருந்தார்"ல் இல்லையெனினும் அந்த நாடகம் எழுதிய காலம் மற்ற பலவீனங்கள் எதையும் யோசிக்க விடாது!

    ReplyDelete
  2. நன்றி ரெட்டைவால்ஸ்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates