Saturday, 25 January 2014

மாடிப்படிகள்




ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தினேன். எவ்வளவோ வற்புறுத்திப் பார்த்தார்கள். மறுத்து விட்டேன். எப்பவுமே அப்படித்தான். சட்டென்ற உணர்ச்சிகரமான முடிவு. அதற்குப் பின் யாராலும் தளர்த்த முடியாத பிடிவாதம். என்னென்னமோ சலுகை தருவதாய் சொன்னார்கள்: லேகியம் மருந்து கொஞ்ச நாள் சாப்பிட வேண்டாம். சூம்பின காலை சரி செய்யும் சிகிச்சைகளாக கழுத்து வரை மண்ணில் புதைத்து வைக்கவோ, எண்ணெயிட்டு பிழிந்து, கிழிக்கும் முனைகள் கொண்ட தென்னம்மட்டைகளால் கால்களை கட்டி வைக்க மாட்டோம் என சொன்னார்கள். அண்ணன் எனக்கு நிறைய புது காமிக்ஸ் புத்தகங்கள், சிறுவர் இதழ்கள் வாங்கித் தருவதாக, பாட்டி உண்ணியப்பம், நெய்யப்பம், அச்சுமுறுக்கு பண்ணித் தருவதாக வாக்களித்தார்கள். அம்மா இருந்திருந்தால் அவள் ஒன்றுமே வாக்குறுதி தர வேண்டியதில்லை. அவள் சும்மா சொன்னாலே நான் ஒப்புக் கொண்டிருப்பேன். அம்மா இருந்திருந்தால் என்னன்னமோ நடக்காமல் இருந்திருக்கும்.


ஆனால் நான்மாட்டேன். என்னைக் கொன்றாலும் இனி போக மாட்டேன்என கத்தி பொய்யாக அழுது கொண்டிருந்தேன். பக்கத்தில் உள்ள பொருட்களை தூக்கி எறிந்தபடி, சட்டை, நிக்கரை கழற்றி வீசியபடி, வாயில் வருகிற வசைகளை பிரயோகித்தபடி அழுதேன். யாரிடமும் காரணம் கூற கூச்சமாக இருந்தது. எனக்கே தூலமாய் புலப்படவில்லை. வகுப்பில் என்னால் கடக்க முடியாதபடி ஒரு தனிமை இருந்தது. எல்லோரும் பழகினார்கள், கூட இருந்தார்கள். ஆனாலும் நான் அவர்களுடன் இல்லை எனத் தோன்றியது. எப்போதும் அந்த முக்கியமான தருணத்துக்கு முந்தின நொடி நான் கைவிடப் படுவதாக நினைத்தேன். அன்று வகுப்பில் என்ன நடந்ததென்று இப்போது நினைவில்லை. ஆனால் நான் இனி போக மாட்டேன் என முடிவு செய்துவிட்டேன்.
ஊரில் அது ஒன்றுதான் எனக்கு ஏற்றபடி ஓரளவு பக்கத்தில் இருந்த பள்ளி. மற்ற இரு பள்ளிகளில் என்னை சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார்கள். என் பிடிவாதம் அறிந்த ஒவ்வொருவராய் அங்கிருந்து அகன்றனர். அப்பா மட்டும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். அப்பா என்னை அதுவரை திட்டியதோ கோபமாய் ஒரு பார்வை பார்த்ததோ இல்லை. அவர்தான் என்னை தோளில் சுமந்து வகுப்பில் கொண்டு விடுவார். “அசிங்கமாய் இருக்கிறது அப்பா, இப்படி என்னை சுமந்து போகாதீர்கள்என பலமுறை கெஞ்சலாய் சொல்லி இருக்கிறேன். அவர் புன்னகைத்தபடி மௌனமாய் தூக்கிச் செல்வார். எனக்கு அப்பா மீது தீராத பகை ஏற்படும்.
அப்பா மெல்ல எழுந்து வந்து மூலையில் இருந்த துடைப்பத்திடம் சென்றார். ஈர்க்கில் துடைப்பம். ஒரு ஈர்க்கிலை உருவினார். பக்கத்தில் வந்துபோக மாட்டியா?” என்று கேட்டார். அவர் அவ்வாறு ஈர்க்கிலால் மிரட்டுவது கொஞ்சம் வேடிக்கையாகவும் கொஞ்சம் குரூரமாகவும் இருந்தது. என்னை கேலி பண்ணுவதாக தோன்றியது. நான் இன்னும் சத்தமாக அலறினேன். அவர் ஈர்க்கிலால் என்னை விளாசினார். வலிக்கவெல்லாம் இல்லை, சின்ன எறும்புக் கடி. பிறகு அடிகள் பட்டதாகவே தோன்றவில்லை. ஆனால் எனக்கு முதன்முறையாக அன்று அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அவர் என்னை அவமானப்படுத்துவாக தோன்றிக் கொண்டே இருந்தது. அந்த உணர்வு எனக்குள் தாங்கமுடியாத ஆற்றாமை ஏற்படுத்தியது. அப்பா என்னை அன்றுதான் முதன்முதலாக அடித்தார். ஆனால் அப்பா என்னை நிஜமாகவே அடித்திருக்கலாம் என தோன்றாத நாளில்லை.
அதன் பிறகு நான் வீட்டில் இருந்தே படித்தேன். என்னுடைய இருட்டான அறையில் பெரிய மரக்கட்டிலில் என்னுடைய தனி வாசனை நிரம்பிய அறையில் கிடந்து படித்துக் கொண்டும், நண்பர்களோடு அரட்டை அடித்துக்கொண்டும் இருந்தேன். காலையில் இருந்து மாலை வரை படிப்பு தவிர வேறொன்றும் இல்லை. பிறகு மனசு ஏதாவது ஒரு தெரிந்தவரின் வருகைக்காக ஏங்கும். சில நாள் யாரும் வர மாட்டார்கள். அந்தி விழுந்ததும் நான் போய் குளித்து புது ஆடை அணிந்து பவுடர் போட்டு தலைசீவி மீண்டும் அதே கட்டிலில் அமர்ந்து விட்ட இடத்தில் இருந்து படிப்பேன்.
அந்த அறைதான் என் உலகம். வெளியே எல்லாம் போவதில்லை. சாப்பிடுவதற்கும் டி.வி பார்ப்பதற்கும் வெளியே வருவேன். யாராவது வீட்டுக்கு வந்தால் உடனே அறைக்கு போய் பதுங்கிக் கொள்வேன். ஜனங்களிடையே இருக்கும் போது என்னை எப்படி பார்க்கிறார்கள் என்பதே விடாத எண்ணம். என்னை நோக்கி அந்த தனியான பார்வையை பார்க்காதவர்களே இல்லை எனலாம். ஏனோ தெரியவில்லை, என்னைப் பார்த்தாலே எல்லோருடைய பார்வையிலும் அந்த மாற்றம் வந்து விடுகிறது.
ஆனாலும் எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை வந்து சந்தித்தபடியே இருப்பார்கள். சில நாள் காலை ஆரம்பித்தால் எங்கள் அரட்டை மறுநாள் காலை வரை தொடரும். திண்ணையில் படுத்து உலக இலக்கியம், அரசியல், தத்துவம், சினிமா, நண்பர் விவகாரங்கள், ஊர் வம்புகள் என நாங்கள் பேசாத வியம் இல்லை. ஊரில் உள்ள பெண்களும் என்னிடம் கூச்சமின்றி தம்முடைய அத்தனை அந்தரங்க சோகங்களையும் ஏக்கங்களையும் சொல்வார்கள். ஏதோ கண்ணாடியிடம் பேசுவது போல என்னிடம் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் பள்ளிக்கு போவதைநிறுத்திய பிறகு சக-வயதுப் பெண்களிடம் நான் பேசுவதே இல்லை. எனக்கு அவர்களைப் பார்த்தால்தான் அதிக பயம். அவர்கள் என்னை கேவலமாய் பார்ப்பார்கள் என்கிற எண்ணத்தை தாங்கிக் கொள்ளவே முடியாது. அதனால்தான் நான் ஓரளவு வளர்ந்த பிறகும் பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்ல மறுத்தேன்.
தபாலில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு கல்லூரிக்குப் போய் படிக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது. அப்போது, எப்படி வெளியே போவது என்பதே எனக்கு முதல் பிரச்சனையாக இருந்தது. நான் எந்த வாகனமும் ஓட்டினது கிடையாது. எனக்கு பன்னிரெண்டு வயது இருக்கும் போது என்னுடைய சித்தப்பா எனக்காக ஒரு மூன்று சக்கர சைக்கிள் வாங்கி பக்கத்து ஊரில் இருந்து 80 கிலோமீட்டர்கள் ஒரு வேலையாள் கொண்டு உருட்டிக்கொண்டு சேர்ப்பித்தார். அதை நான் தொட மட்டுமல்ல, பார்க்கவே மறுத்துவிட்டேன். அவ்வளவு அவமானகரமாய் இருந்தது. அதை ஒரு மூலையில் துருவேற போட்டு வைத்திருந்தார்கள். கல்லூரிக்கு போவதற்காக என் அண்ணன் எனக்கு ஒரு ஸ்கூட்டரை வாங்கி உபரி சக்கரம் அமைத்துக் கொடுத்தான். ஆனால் அதை ஓட்டுவதற்கு எனக்கு சாலைப் பயிற்சி போதவில்லை. முதன்முறையாக சாலையில் வண்டியை செலுத்தும் போது அது நாய்க்குட்டியை போல் தெறித்து ஓடியது. முதல் வாரத்தில் நான்கு முறை விழுந்தேன். வேகமும் கட்டுக்குள் வரவில்லை. அதனால் வேறு வழியின்றி அந்த பழைய மூன்று சக்கர சைக்கிளை எடுக்க வேண்டியதாயிற்று. அதை தினமும் ஓட்ட துவங்கினேன். கொஞ்ச நாளில் அந்த அனுபவத்தை ரசிக்கவும் ஆரம்பித்தேன்.
அந்த வாகனம் என்னுடைய உடலின் ஒரு பகுதி போலானது. அதில் அமர்ந்து குளம், கடைத்தெரு, நூலகம் என போய் வர ஆரம்பித்தேன். ஒரு காலத்தில் அப்படி வெறுத்த அந்த சைக்கிள் மீது இப்போது அபார வாஞ்சை.
கல்லூரிக்கு போகும் முந்தின நாள் அங்கு போய் பார்த்தேன். அப்போதுதான் என் வாழ்வில் நான் அடுத்து தொடர்ந்து சந்திக்க போகும் சவாலை காணுற்றேன். மாடிப்படிகள்.
என் வகுப்பு இரண்டாம் மாடியில் இருந்தது. மொத்தம் நாற்பத்து நான்கு படிகள். கையால் ஒவ்வொரு படியாக இருந்து இருந்து ஏற வேண்டும். எனக்கு அந்த தினசரி காட்சியை நினைத்துப் பார்க்கவே கசப்பாக இருந்தது. அன்று வீட்டுக்கு திரும்பும் வழியெங்கும் மாடிப்படிகள் எனக்கு எவ்வளவு பெரிய அநியாயம் இழைக்கிறது என நினைத்தேன்.
மாடி மட்டுமல்ல, புற உலகில் எங்கு பார்த்தாலும் படிகள். என்னுடைய சக்கர நாற்காலி கடந்து போக முடியாத ஏகப்பட்ட தடைகள். இந்த படிகளினால் உண்மையில் என்ன பிரயோஜனம் என யோசித்தேன். மனிதர்களுக்கு அவற்றை வெறுமனே ஏறிக் கடப்பதில் ஒரு வெற்று சாகச உணர்வு இருக்கலாம். மற்றபடி என்னைப் போன்றவர்களை உலகுக்குள் நுழையவே விடாதபடி பேருந்துகளில், காரில், அலுவலகம், வீடுகள், அரங்க மேடைகளில் என என் இடத்தை அடையும் முன் படிகள் என்னை உலகில் இருந்து அந்நியப்படுத்தும் செய்தியை அறிவித்தபடியே இருக்கின்றன. ஆனால் லௌகீக இடைஞ்சல்கள்கூட பரவாயில்லை. உருவகமாக மாடிப்படிகள் என்னை வதைத்துக் கொண்டே இருக்கின்றன. அவை என கனவுகளில் அடிக்கடி தோன்றுகின்றன. ஏதாவது ஒரு மாடிப்படியை பார்க்கும் போது அது கடவுள் எனக்குத் தந்த தீர்க்க முடியாத புதிர் எனத் தோன்றும்.
அடுத்த நாள் காலை எப்படியோ மனதை தேற்றிக்கொண்டு கல்லூரி வாசல் வரை என் சைக்கிளை ஓட்டி வந்து சேர்ந்துவிட்டேன். ஆனால் அதற்கு மேல் உள்ளே போக மனம் மறுத்தது. ஒரு கல்லைப் போல் இறுகி விட்டேன். அப்படியே வளாகத்தினுள் நடமாடும் எத்தனையோ மாணவ மாணவிகளை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தேன். திரும்பிப் போகலாம் என யோசித்து நான் வண்டியை திருப்ப எத்தனித்த போது அந்த பெண்ணை பார்த்தேன். இல்லை முதலில் அவளது குரலைத் தான் கேட்டேன்.
என்ன இங்கே நிக்கிறீங்க?” நாங்கள் சேர்ந்து நுழைவுத் தேர்வு எழுதின போது முகப்பரிச்சயம் கொண்டது. பெயர் லதா. அவள் நினைவு வைத்திருப்பாள் என்றே நான் நம்பவில்லை. அவள் சாதாரணமாக பார்த்து,வாங்க உள்ளே போலாம்என்றாள். அவள் அப்படி சொன்ன விதம் என்னை சட்டென்று தளர்த்தியது. எனக்குள் வருடங்களாய் இறுகி இருந்த ஒன்று உடைந்து சுக்கு நூறானது போன்ற உணர்வு.
இல்லை என் நண்பனுக்காக காத்திருக்கிறேன்.
அதெல்லாம் அவர் வருவார். நீங்க வாங்க. பேசிக்கொண்டே போவோம்”.
எங்கிருந்தோ சட்டென்று பொங்கிய உற்சாகம் என்னை வழிநடத்தியது. ஆனால் உள்ளே கொஞ்ச தூரம் போய் மாடிப் படிகளை அடைந்ததும் மனம் மீண்டும் சுணங்கியது. இனி என்ன செய்ய?
அவள் முன்னிலையில் கையுறை அணிந்து ஊர்ந்து ஏறுவதா? அவள் என்னை பரிதாபமாய் பார்ப்பாளா? அப்படிப் பார்த்தால் எப்படி தாங்குவேன்! பேசாமல் திரும்பிப் போயிருக்கலாம் என மீண்டும் ஒருமுறை யோசித்தேன். வெளியில் யாராவது காத்து நிற்கிறார்கள் எனச் சொல்லி திரும்ப போகலாமா என ஒரு யோசனையை பரிசீலித்தேன். ஆனால் அவள்சரி வாங்கஎன்று சொல்லியபடி வெகுசாதாரணமாக மாடிப்படி ஏறத் துவங்கினாள். எனக்கு கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை. சரி போவோம் என்று கையுறை மாட்டி ஓவ்வொரு படியாய் அமர்ந்து அமர்ந்து ஏறினேன். அவள் தன் குடும்பம் பற்றி, பள்ளிக் கூடம் பற்றி, பார்த்த சினிமா, பிடித்த பாடல்கள் என சரளமாய் பேசிக் கொண்டே சென்றாள். இடையிடையே என்னிடமும் ஏதாவது விசாரித்துக்கொண்டு வந்தாள். நான் அவளது கண்களை உற்றுப் பார்த்தேன். பார்வையில் மாற்றமில்லாதது நிம்மதியாக இருந்தது. அப்படித்தான் என் வாழ்வின் முதல் மாடிப்படிகளை ஏறினேன்.
அதற்குப் பின் தினமும் மாடிப்படி ஏறும்போது கூடப் பேசிப் போக பல தோழிகள் கிடைத்தார்கள். அதற்குப் பின் இன்று வரை எனக்கு தோழிகள்தான் அதிகம். ஆனால் மாடிப்படிகள் என்றுமே ஒரு வதை தான். இளமையில் போல் இப்போது என்னால் விறுவிறுவென தாவி ஏற முடிவதில்லை. முதுகு வலிக்கிறது. கைகள் தளர்ந்து விட்டன. அது மட்டுமல்ல எங்கிருந்தோ வந்து விட்ட ஒரு கூச்சம். தரையின் வாசனையை, அதன் குளிர்ச்சியை, கையின் வியர்வை தரையில் படும் போது அங்கு தோன்றும் தடத்தின் கணப்பொழுது மிளிர்வை, அதில் பிரமை போன்ற உங்கள் பிரதிபலிப்பை, தரையின் ஸ்பரிசமும் கலந்து உள்ளங்கையில் பிறகு வீசும் ஒரு வித கூர்மையான நெடியை யாராவது உணர்ந்திருக்கிறீர்களா? இப்படி தரையோடு தரையாக இருப்பதில் சட்டென ஒரு ஒவ்வாமை வந்து விட்டது. சதா தரைகளில் உள்ள தூசு, காலடி, செருப்பு தடங்கள், அழுக்கு, துர்நாற்றம், பள்ளங்கள் பற்றி கவலைப்பட்டு ஒரு வெறுப்பு வந்து விட்டது. அதன் பிறகு சக்கரநாற்காலியில் இருந்து இறங்கி ஊர்ந்து ஏற மறுத்தேன். சட்டென ஒருநாள் யாராவது என்னை தூக்கிப் போக முடியுமா என கேட்டேன்.
அப்பா இறந்து போன நாளில் இருந்து யாராவது என்னை கைகளில் தூக்கிப் போனாலே நெஞ்சை அடைக்கும் உணர்வு வந்தது. பிறகு அப்படியே சக்கர நாற்காலியுடன் என்னை தூக்கிப் போக கேட்டேன். ஒவ்வொரு முறையும் நான் தலைகுப்புற விழப்போவதாய் தாங்க முடியாத கிலி தோன்றும். நிச்சயம் விழுந்து விடுவேன் என நம்புவேன். நான் என்னை கீழே போட்டு விடாதே என கெஞ்சாத நாளில்லை. ஏனப்படி செய்கிறேன் என தெரியாது. என்னை தூக்குபவர்களும் ஆரம்பத்தில் ஆற்றுப்படுத்த முயன்றார்கள், பிறகு என் அரற்றலை காதில் வாங்குவதே இல்லை. ஆனால் அவர்களின் கைகள் நடுங்குவதை உணர்வேன். ஒரு மேடையில் உட்கார்ந்து இந்த சமூகத்தை நடுங்க வைக்கும் படி உலுக்கி எழ வைக்கும் படி கேள்விகள் எழுப்பி தீர்வுகள் தந்து ஆயிரமாயிரம் கைத்தட்டுகளைக் கடந்து மாடிப்படிகளுக்கு வந்தவுடன் நான் பயத்தில் வியர்த்து கெஞ்ச ஆரம்பித்து விடுவேன். அம்மாவின் கைகளில் இருந்து இறங்க விரும்பாத குழந்தையை போல் நடுக்கம் கொள்வேன். இறங்கி முடியும் போது ஒவ்வொரு முறையும் கண்களில் கண்ணீர் கோடு தெரியும். இறங்குவதற்கு முன் தயாராக கையில் வைத்திருக்கும் கைக்குட்டை மூலம் சட்டென யாரும் பார்க்கும் முன் துடைத்து விடுவேன். அடுத்த நொடி பழைய கிட்டத்தட்ட அகங்காரமாகவே தோன்றும் தன்னம்பிக்கை மிளிரும் எதற்கும் சளைக்காத புன்னகையுடன் என் பயணத்தை தொடர்வேன்.
இன்று காலை ஒரு வேலை வியமாய் அரசு அலுவலகம் ஒன்றுக்கு சென்றேன். அங்கே புதிதாக சக்கர நாற்காலி ஏறுவதற்கான ரேம்ப் வசதி செய்திருந்தார்கள். அனேகமாக அதில் ஏறும் முதல் ஆள் நானாக இருப்பேன். ஒரு தனியான மலைப்பாதையில் ஏறுவது போல் இருந்தது. என்னை தள்ளி வருபவனிடம் ஏதேதோ பேச்சுக் கொடுத்தபடி வந்தேன். ஆனால் அவன் கூறுவதேதும் என் காதில் விழவில்லை. ஒரு பெரிய காற்றுக்குமிழி என் காதுகளுக்குள் அடைத்திருந்தது. பக்கத்தில் உள்ள வளைந்து ஏறும் அகன்ற படிக்கட்டை பார்த்தபடி வந்தேன். இங்கிருந்து பார்க்க அது ஒரு பெண்ணின் அகன்ற இடுப்பு போல் தோன்றியது. பாதி வந்ததும் படிக்கட்டை நடுவில் உள்ள சுவர் மறுத்தது. அங்கு முதல் மாடியில் இருந்து வரும் பாதை படிக்கட்டோடு இணைந்து கொண்டது. ஐந்தாறு பேர் அலுப்பாக ஏறி கடந்து போய்க்கொண்டிருந்தார்கள். கையில் கோப்புகளுடன் இரு கீழ்நிலை ஊழியர்கள் அதிகார மிடுக்கோடு பரஸ்பரம் சிரித்தபடி சென்றனர். ஒரு வயதான பெண்மணி அடிக்கொரு தரம் குனிந்து கால்களை வளைத்து தன் முட்டிகள் இரண்டையும் பற்றி ஆசுவாசப்பட்டுக் கொண்டு நடந்தாள். அவள் தன் தடித்த இமைகளை சுருக்கி ரேம்பில் ஏறும் என்னை அடிக்கடி பார்த்தாள். அவள் காலுக்கு வெகுபக்கமாய் ஒரு இளைஞன் ஊர்ந்து வேகமாய் முன்னேறினான். அவள் அப்போது தான் கவனித்தது போல் சட்டென்று கால்களை விலக்கிக் கொண்டாள். ஏன் தன்னை மிதிக்க வைக்கிறார்களோ என்பது போல் அருவருப்புணர்வை முகத்தில் காட்டினாள். இதற்கு அடுத்து பத்து பேர் கரைவேட்டி வெள்ளை சட்டையுடன் ஒருவரை ஒருவர் மோதியபடி ஏறி வந்தார்கள். அவர்கள் எழுப்பிய இரைச்சலில் அந்த இடம் வேறொன்றாக தோற்றமளித்தது. இந்த அரசியல்வாதிகள் ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறார்கள் என நினைத்தேன். அந்த படிக்கட்டை ஒரு புல்டோசர் சாலையில் வந்தது போல் மறைத்துக் கொண்டார்கள். எத்தனையோ அரசியல்வாதிகளை தினம் தினம் நேரில் பார்த்து பேசுகிறேன். அப்போதெல்லாம் இந்த எண்ணம் எழுந்ததில்லை.
அவர்களுக்கு பின்னே அவள் காலை எழுந்ததும் வாழ்க்கை எவ்வளவு இனிதானது என நினைக்கும் சிலருக்கு மட்டுமே தோன்றும் நளினத்தோடு நடந்து வந்தாள். அவளை லதாவை மீண்டும் பார்க்கிறேன். 22 வருடங்களுக்குப் பார்க்கிறேன். கன்னக்குழி மாறவில்லை. ஆனால் கழுத்து சதை போட்டிருந்தது. கன்னமோரம் நரை. இன்னும் குள்ளமாக தெரிந்தாள். பேசும் போது அதே நெற்றி சுருக்கங்கள். அவள் என்னை கவனிக்கவில்லை. பக்கத்தில் யாரிடமே பேசினபடி வெகு சாதாரணமாய் கடந்து போய்க்கொண்டிருந்தாள்.
நான் அவளை நோக்கி கையை ஆட்டி அழைத்தேன். முதலில் அவளுக்கு கேட்கவில்லை. கூட என்னை தள்ளி வந்தவன் நான் ஏதோ கேட்கிறேன் என நினைத்துதண்ணீர் வேணுமா சார்என்றான். என் குரல் அவ்வளவு மாறி விட்டதா அல்லது அந்த கூச்சல் குழப்பத்தில் நான் கூவுவது ஒரு முனகல் அளவுக்கு தான் கேட்கிறதா? நான் அவளைக் காட்டி எதுவோ கூறினேன். அவனுக்கு புரியவில்லை. “இன்னிக்கு நீங்க பேசுற கூட்டத்துக்கு நடக்கும் இட்த்திற்கு பக்கத்து அறையில் ஒரு அரசாங்க நிகழ்ச்சினு நெனக்கிறேன் சார்.” மீண்டும் பார்த்த போது லதா மறைந்திருந்தாள். வெள்ளை வேட்டி பிருஷ்டங்கள் படிக்கட்டுகளை நிறைத்து குட்டிப்பன்றிகள் கூட்டமாய் முன்னேறும் உணர்வை ஏற்படுத்தின. களைப்பாய் கண்ணை மூடிக் கொண்டேன்.
சில நொடிகளில் கூட வந்தவன் கூப்பிட்டான். விழித்து திரும்பி ஏறிட்டு பார்த்தேன். “உங்களை யாரோ கூப்பிடுறாங்க”. திரும்பிப் பார்க்க மாடிப்படி முடிவின் திருப்பத்தில் இருந்து என்னை நோக்கி புன்னகைத்து கையாட்டினாள். நீண்ட வருடங்களுக்கு பின் பார்ப்பதன் எந்த வியப்பும் இல்லாத அன்னியோன்ய புன்னகை. பிறகு காத்திராமல் போய் விட்டாள். என் கூட்டமும் ஆரம்பிக்கும் வேளை வந்து விட்டது.
கூட்டம் முடிவதற்கு பதற்றத்துடன் காத்திருந்தேன். வெளியே வந்ததும் கூட்டம் இன்னமும் அதிகமாகி இருந்தது. சக்கர நாற்காலி போவதற்கே இடமில்லை. கூட வந்தவனை லதாவை தேடிப் பார்க்க சொன்னேன். அவன் சக்கரநாற்காலிக்கு பிரேக் போட்டு ஓரமாய் என்னை விட்டு விட்டு போனான். அங்கே காத்திருக்கும் போது சில பேர் களைப்பாற என் கைப்பிடியில் வந்து அமர்ந்து கொண்டார்கள். மூக்கைத் தொட்டபடி பெரிய பிருஷ்டங்கள். ஒரு ஆணின் மூக்கை வருடியபடி பின்புறத்தை வைத்து அமர இந்த மத்திய வயது நைலான் சேலை பெண்களுக்கு கூச்சம் சற்றும் இல்லையா? ஒருவேளை என்னை வேறேதாவது வஸ்து என நினைக்கிறார்களா?
அவன் திரும்ப வந்ததும் முகத்தின் களைப்பில் இருந்து புரிந்து கொண்டேன். கேட்கவில்லை. அவனும் சொல்ல மறந்தது போல் பிரேக்கை விடுவித்து என்னை திருப்பி கொண்டு போனான். ரேம்பை அடைந்ததும் ஒரு வழியாய் மூச்சை விட்டபடி என்னை இறக்கினான். ரேம்பில் சிலர் கூட்டங்கூட்டமாய் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு இடையே சிலர் சாவகாசமாய் நடுவழியில் மறைத்தபடி நடந்து போனார்கள். அவர்களை சத்தம் போட்டு விலக வைத்து அவன் சிரமப்பட்டு என்னை இறக்கினான். அப்போது நான் சட்டென்று ஏதோ தோன்ற என்னை படிக்கட்டு வழியாக கொண்டு போக சொன்னேன். “இல்ல சார் இங்க விட அங்க இன்னும் கூட்டமா இருக்கும். உங்களை யாராவது இடிச்சு தள்ளிருவாங்க
இல்ல அங்கெயே போங்க
லதாவை இனி படிக்கட்டிலும் பார்க்க முடியாது என அறிவேன். ஆனாலும் பிடிவாதமாக இருந்தேன்.
அவன் என்னை கீழே தூக்கி இறக்குவதற்கு இன்னும் சில பேரின் உதவியை வேண்டினான். சிலர் முன்வந்தார்கள். என்னை அவர்கள் சக்கரநாற்காலியோடு தூக்கியதும் மூச்சு மீண்டும் நெஞ்சிலே தங்கி இறுகிக் கொண்டது. நெற்றியும் உள்ளங்கைகளும் வியர்க்க தொடங்கின.

நன்றி: தமிழ் பெமினா, டிசம்பர் 2013
Share This

2 comments :

  1. தன்னை ஒரு சக மனிதனாக மட்டும் கருதுங்கள் என்ற இயல்பான கோரிக்கையை சமுதாயம் அனுதாபம், பரிதாபம், ஏளனம், அலட்சியம் போன்ற போர்வைகளால் தொடர்ந்து நிராகரிப்பதை எதிர்கொள்பவனின் மன நிலைகளை (இளமையில் கொள்ளும் இனமறியாக் கோபம், சுய பச்சாதாபம், சமுதாயத்தின் மீது கொள்ளும் ஆதங்கம்/கோபம், உத்வேகம், என) அழகாகச் சித்தரித்துள்ளீர்கள்.


    இந்தக் கதையில் எனக்கு மிகவும் பிடித்தது – லதாவின் சித்தரிப்பு. அது ஒரு நேர்மறையான, எளிதில் நேசிக்கக்கூடிய பாத்திரம் என்பது மட்டுமல்ல காரணம். ஒரு சில வரிகளிலேயே, லதாவின் மனிதாபிமானத்தை மிகைப்படுத்தாமல், நம்பகத்தன்மையோடு சித்தரித்துள்ளீர்கள்.
    சுரணையற்ற சமுதாயத்தில் சக்கர நாற்காலிகள் மாடிப்படிகளிலேயே சுமக்கப்படட்டும் – அமர்ந்திருப்பவன் உள்ளூர நெஞ்சடைத்திருந்தாலும்.


    உலகம் லதாக்களால் நிறைந்திருக்கும் வரை வேறென்ன செய்ய முடியும்?
    நெஞ்சைத் தொடும் கதை!

    ReplyDelete
  2. நன்றி கரிகாலன்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates