Thursday, 9 January 2014

இலக்கிய விழாக்களில் காணாமல் போகும் சமத்துவம்





ஜனவரி மாத உயிர்மையில் முருகேச பாண்டியன் சிறுபத்திரிகை பண்பாட்டு பற்றி சொல்லும் போது எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலான சமத்துவம் பற்றி குறிப்பிடுகிறார். ஒரு காலத்தில் எழுத்தாளனை பெயரால் தான் அழைத்தார்கள். சின்னப் பையன் என்றாலும் மூத்த எழுத்தாளனை பெயரால் தான் அழைத்து பேசினான். அவர்களும் சமமாக நடத்தினார்கள். இலக்கியமும், எழுத்து, சமூக அக்கறை சார்ந்த விழுமியங்களும் இப்பரப்புக்குள் வருபவர்களை சமமாக்கியது. நீங்கள் ஒரு வரி கூட எழுதாமல் இருக்கலாம். ஆனால் இலக்கியம் வாசிக்கும் ஒரே தகுதி உங்களை சு.ராவுக்கும் ஜெயமோகனுக்கும் இணையாக்குகிறது.

 ஏனென்றால் சிறுபத்திரிகை உலகம் மனிதன் தன் எண்ணங்களால் தான் தகுதியை அடைகிறான் என்று நம்பியது. உயர்ந்த எண்ணங்கள் ஒரு 16 வயது பையனைக் கூட நாற்பது வயது ஆளுக்கு நிகராக்குகிறது. நான் ஜெயமோகனை சந்தித்த காலத்தில் அவருக்கு நாற்பதின் துவக்கம். எனக்கு 14 இருக்கும். நான் அவரைப் பெயரால் தான் அழைத்து பேசுவேன். அண்ணே சார் எல்லாம் கிடையாது. ஆனால் மரியாதை நிமித்தமாக ஒருவரை அண்ணே என அழைப்பதிலும் தவறில்லை தான். ஆனால் நான் முன்னர் நிலவிய சமத்துவம் சார்ந்த நம்பிக்கை பற்றி பேசுகிறேன்.
சமீபத்தில் நடந்து வரும் இலக்கிய அறிமுக “விழாக்கள்” இந்த சமத்துவத்திற்கு நேர் எதிரானவை. நாம் பத்திரிகைகளில் தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், ஏழைகள், பாட்டாளிகளின் ஒடுக்குமுறை பற்றி ஆவேசப்பட்டு எழுதுகிறோம், படித்து விட்டு பேசுகிறோம். ஆனால் இந்த விழாக்கள் பணமும் செல்வாக்கும் இல்லாத எழுத்தாளனை தற்போது உ.பியில் முதல்வரும் குடும்பமும் சல்மான்கான் நடனத்தை மேடையில் பார்த்து ரசிக்க தற்காலிக முகாம்களில் வாடும் ஏழைகளைப் போல் கிட்டத்தட்ட ஆக்குகின்றன. இது ஒரு வழக்கமான நடைமுறை, இது வெறும் சடங்கு என உ.பி முதல்வர் நியாயப்படுத்துவது போல் புத்தக வியாபாரத்துக்கு விழாக்களும் அவற்றில் நட்சத்திரங்கள் கலந்து கொள்வதும் அவசியம் என பதிப்பாளர்கள் கூறலாம். தவறில்லை. ஆனால் கொண்டாட்டமும் வெளிச்சமும் எல்லாருக்கும் சமமாக இருக்க வேண்டும். பைசா இல்லாதவனுக்கு ஒரு எளிய அரங்கில் விழா, பணக்காரனுக்கு பிரம்மாண்ட அரங்கில் அறிமுகக் கொண்டாட்டம் என்பது நாம் நம்பும் பேசும் சமத்துவத்திற்கு எதிரானது.
இந்த நாட்டில் ஏழைகளும் பணக்காரர்களும் இருந்து தானே ஆகிறார்கள், அவர்கள் தம்மால் முடிந்ததை பண்ணுவது தவறில்லை என நாம் யோசிக்கலாம். ஆனால் சமூக நீதியையும் சமத்துவத்தை தன் லட்சியமாக கருதும் பதிப்பகங்கள் இதற்கு கடை விரிக்கக் கூடாது என்பதே என் வாதம். ஒரு பணக்கார செல்வாக்கான எழுத்தாளன் நட்சத்திர ஹோட்டலில் கேப்ரே நடனத்துடன் கூட தன் நூல் வெளியீட்டை வைக்கலாம். அது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். அது பதிப்பக பதாகையுடன் நடக்கும் போது சிக்கலாகிறது. உண்மையில் ஆங்கிலப் பதிப்பகங்கள் கூட இப்படிப் பண்ணுவதில்லை. அங்கு எல்லா எழுத்தாளனுக்கும் ஒரே மேடை, ஒரே வகையான நிகழ்ச்சி. இங்கு தமிழில் அதிகார படிநிலையை வலியுறுத்துவது, பகட்டை காட்டுவது சமீபத்தில் இலக்கிய நிகழ்ச்சிகளில் மோசமாக தலையெடுத்துள்ளது.
தமிழில் இலக்கிய, இடைநிலை புத்தகங்களுக்கு விளம்பரமோ வாங்க வாசகர் பரப்போ இல்லை என்பதால் எழுத்தாளன் தான் தன்னால் முடிந்த அளவுக்கு சந்தைப்படுத்த வேண்டும், அதை பதிப்பகம் ஆதரித்து தான் ஆக வேண்டும் என ஒரு நியாயமும் கோரப்படலாம். ஆனால் பதிப்பகம் தான் நடத்தும் விழாக்களும் ஒரு வரைமுறையை உருவாக்குவதும், எல்லாருக்கும் சமமாக அதை வலியுறுத்துவதுமே சரியாக இருக்கும். உதாரணமாக, நான் பா.ஜ.கவை, இந்துத்துவாவை என் எழுத்து மற்றும் பேச்சு மூலமும் பத்திரிகை வழியாகவும் கடுமையாக எதிர்க்கிறவன் என கொள்ளுங்கள். நாளை நான் ஒரு பா.ஜ.க ஆதரவாளரின் புத்தகத்தை பிரசுரிக்கிறேன். அவர் மோடியைக் கொண்டு லட்சக்கணக்கான ஆட்கள் கூடுகிற இடத்தில் நேரடி டி.வி ஒளிப்பரப்புடன் வெளியிட ஆசைப்படுகிறார். அங்கு நான் போய் மேடையில் அமர்ந்து அந்த புத்தகத்தை ஆதரித்து பேசினால் மோடியையும் அவர் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டதாகவும் அது ஆகும். அங்கு கடுமையான மது துவேஷ கருத்துக்கள் பேசப்படலாம். அதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்து விட்டு அடுத்த நாள் மோடியை எதிர்த்து நான் எழுத முடியாது. இதை வெறும் வியாபார நடைமுறை என கடந்து விட முடியாது. நியாயமாக நான் அவரை தனியாக என் அங்கீகாரம் இன்றி, பதாகை இன்றி விழாவை நடத்த சொல்ல வேண்டும்.
நாம் சமூகத்தை ஒட்டுமொத்தமாக சமத்துவமாக மாற்ற முடியாது. ஆனால் சில இடங்களில் சமத்துவத்தை கோருகிறோம் பள்ளிக்கூடம், எழுத்து என சில இடங்களில் மட்டும். ஏனென்றால் அங்கு தான் லட்சியங்களை கற்கிறோம். ஒரு பள்ளிக்கூடத்தில் உங்கள் குழந்தையை பெஞ்சிலும், உங்களை விட அதிகம் பணத்தை கொடையாக பள்ளிக்கு அளிக்கிற பணக்கார குழந்தையை சோபாவிலும அமர்த்தினால் ஏற்பீர்களா? மாட்டீர்கள். அதனால் தான் பள்ளிக் கூடத்தில் சீருடை இருக்கிறது. அங்கு தான் வாழ்க்கையின் அடிப்படையை கற்கிறார்கள். ஆனால் படித்து முடித்ததும் வேலையிடத்தில் முதலாளி முன் நின்று தான் பேச வேண்டி இருக்கும். பரவாயில்லை. ஆனால் சமத்துவம் தான் சரி என்கிற ஒரு சிறு நம்பிக்கையாவது உங்களுக்குள் இருக்கும். இலக்கியம், அரசியல் சிந்தனை, சமூகக் கோட்பாடுகள் ஆகியவை சமத்துவம் என்கிற விழுமியத்தின் மீது நிற்பவை. அதை எடுத்து விட்டால் எல்லாம் விழுந்து விடும். வியாபாரத்துக்காக நாம் தற்காலிகமாக நாற்காலியை நீக்கி விட்டு அந்தரத்தில் உட்கார்ந்திருக்க முடியாது.

ஒரு தலையாய எழுத்தாளனை அங்கீகரிக்க கூட தனி நிகழ்ச்சிகள் வைக்கலாம். ஆனால் அங்கு தேவையற்று அந்த எழுத்தாளனை புகழ்ந்து கொண்டே இருப்பது வாசகர்களை எரிச்சலடைய வைக்கும். ஏனென்றால் எழுத்து அதிகாரத்துக்கு எதிரானது. சமீபமாக அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் நிகழ்ச்சியிலேயே ஒரு அதிகார மையம் இயல்பாக உருவாவதை பார்க்கிறோம். இதற்குக் காரணம் அதிகார எதிர்ப்பரசியல் பற்றி ஏதும் தெரியாத, ஆழமான சமூகப் பார்வை அற்ற வெகுஜன, சினிமா ஆட்கள் இலக்கிய பரப்பை ஊடுருவதால் தான். இவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து சம்மந்தமே இல்லாமல் தன்னை பேச அழைத்த ஒரே காரணத்துக்காக நிகழ்ச்சி நடத்துபவரைப் பற்றி அரைமணி புகழ்வார்கள். இவர்களுக்கு கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக இலக்கிய எழுத்தாளர்கள் கடந்து வந்த பாதையும் கொண்டுள்ள நம்பிக்கைகளும் மரபும் தெரியாது. இப்படியான தனிமனித புகழ்ச்சி பேச்சுகள் இருக்கலாம். ஆனால் பிறந்த நாள் விழா, திருமண விழா போன்ற தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் இருக்க வேண்டும். இலக்கிய அறிமுகக் கூட்டங்களில் கருத்துக்களும் விழுமியங்களும் தாம் முக்கியம்.
ஒரு மேடையில் டி.ஆரும் ஜெயமோகனும் சேர்ந்து இருக்கலாம், அல்லது சாருவும் திரிஷாவும் ஒரு டி.வி நிகழ்ச்சியில் தோன்றலாம். நீங்கள் ஒரு சாதாரண ரியாலிட்டி ஷோவில் கூட போய் பேசலாம். ஆனால் அங்கே ஒரு எழுத்தாளனின் இருப்பு ஒரு சிறுவெளிச்சத்தை உருவாக்குகிறது. ஆனால் ஜெயலலிதாவின் பாராட்டு விழாக்களின் பாணியை நாம் இலக்கிய மேடைக்கு கொண்டு வந்தால் இருக்கிற வெளிச்சத்தை துரத்தி மொத்தமாய் இருட்டில் மூழ்குகிறோம் என அர்த்தம். நாம் இருட்டான இடத்திற்கு வெளிச்சத்தை கொண்டு போகிறோம். அவர்கள் ஏற்கனவே வெளிச்சமாக உள்ள நம் இடத்தில் இருட்டை கொண்டு வருகிறார்கள். பணமும் அதிகாரமும் இருக்கிறவனின் காலில் நாம் விழுவதே நியாயம் என நம்மிடமே வந்து சொல்கிறார்கள்.
நம் பண்பாட்டை அங்கே கடன் கொடுக்கலாம், ஆனால் அவர்களின் பாசாங்கான அதிகார போதையின் பண்பாட்டை நாம் கடன் வாங்குவது அபத்தத்தின் உச்சம்.
வெகுஜன, அரசியல் மேடைகள் ஏற்கனவே குப்பை மேடு. வெகுஜன மக்களுக்கு பாதை காட்டுவது சிந்தனையாளனின் பணி. பாதை காட்ட வேண்டியன் குருடர்களின் பஜனையில் கலந்து கொள்ளலாம். ஆனால் குருடாக இருப்பதே சிறந்தது என தன் மேடையில் வந்து அவர்கள் பேச நாம் அனுமதிக்கக் கூடாது. ஏற்கனவே சுத்தமாக உள்ள இடத்தில் குப்பையை கொட்ட விடக் கூடாது..

சமூகம் நம்மை கவனிக்கவில்லை, நியாயமான அங்கீகாரத்தை அளிக்கவில்லை என்பது இலக்கிய பதிப்பாளர்களின் நியாயமான வருத்தம் தான். ஆனால் அதற்காக நாம் நம் அடிப்படை நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. இதையெல்லாம் பார்த்து வளர்கிற ஒரு இளைய எழுத்தாளன் என்ன நினைப்பான்? நிறைய பணமும் செல்வாக்கும் வந்து விட்டால் நாமே மேடை அமைத்து இந்த எழுத்தாளர்களையும் சினிமா நட்சத்திரங்களையும் நம்மைப் பற்றி பேச வைத்து விடலாம். எழுத்து மீது கடப்பாடோ ஈடுபாடோ தேவையில்லை என்று தான் நினைப்பான். இன்று அப்படியான சூழல் வந்து விட்டது. முன்னர் இரண்டு சீனியர் எழுத்தாளர்கள் தாம் நட்சத்திர இரவுகள் நடத்தினார்கள். விதிவிலக்கு என நினைத்தோம். ஆனால் இன்று முதல் புத்தகம் போடுகிறவர்களே தனியாக கட் அவுட், பேனர் வைத்து நடிக நடிகைகளை வைத்து தன்னை மணிக்கணக்காய் புகழச் செய்து விளம்பரம் செய்து கிளுகிளுப்பு அடைகிறார்கள். அங்கு மேடையில் நம் இலக்கிய எழுத்தாளர்களும் போய் தம்பி நல்ல எழுத்தாளர் என அங்கீகாரம் கொடுக்கிறார்கள். பணம் இருந்தால் நல்ல எழுத்தாளனா?

ரித்தேஷ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்கள் சினிமாவில் செய்வதை விட மோசமான சீரழிவை இங்கு இலக்கியத்தில் சில போலி எழுத்தாளர்கள் சந்தைப்படுத்தலின் பெயரில் செய்கிறார்கள். மஞ்சள் எழுத்தை எதிர்க்கலாச்சார எழுத்து, டிஜிட்டல் பின்நவீனத்துவம் என்றெல்லாம் கூறி மக்களை இவர்கள் ஏமாற்றுவதை பார்த்தால் பவர் ஸ்டால் உண்மையில் எவ்வளவு நல்லவர் எனத் தோன்றுகிறது. அவர் தன்னைத் தானே கோமாளி ஆக்குகிறார். இந்த போலி எழுத்தாளர்களை மக்களை கோமாளி ஆக்குகிறார்களே!

நாம் ஒரு விடாப்பிடியான லட்சியவாதியாக இருக்க வேண்டியதில்லை. அதே நேரம் எல்லாம் வியாபாரம் என்றும் இருக்க முடியாது. நடுவில் ஒரு கோட்டில் பயணிக்கிறோம் என நினைக்கலாம். ஆனால் அதற்காக நாம் இருக்கும் கட்டிடத்தின் அஸ்திவாரத்தை தகர்க்க அனுமதிக்கக் கூடாது. நாம் எதை எழுத்தில் வலியுறுத்துகிறோமோ அதை முடிந்தவரை செயலிலும் காட்ட வேண்டும். ஒருவனது தரமும் தீர்க்கமான பார்வையும் பொறுத்து ஒரு இலக்கிய அரசியல் பத்திரிகையில் இடம் அளிக்கிறோம் என்றால் அதன் பதிப்பகத்தின் வெளியீட்டு விழாவிலும் அதே கரார் தன்மை இருக்க வேண்டும். எழுத்தில் எல்லோரும் சமம் என்றால் மேடையில் அப்படியே இருக்க வேண்டும்.

பணம், பகட்டு, சரக்கு விநியோகம், வலைதொடர்பாக்கம், அற்ப விளம்பரம் மூலம் மக்களின் கவனம் கவரும் பாசாங்கு எழுத்தாளர்கள் எவ்வளவு நாள் நிலைப்பார்கள்? ஒரு மாதம், மூன்று அல்லது ஆறு மாதங்கள்? இவர்களிடம் நாம் கை கொடுக்கலாம், ஆனால் நம் நம் நம்பிக்கைகளை கைமாறக் கூடாது. எம்.ஜி சுரேஷ் என்றொருவர் இருந்தார். அசோகமித்திரனையே மிரட்டி தன்னை பாராட்டி எழுத வைத்தார். தன் ராஜேஷ் குமார் பாணி நாவலை குயூபிசம் என்று பாவ்லா பண்ணி வாசகர்களை குழப்பினார் - சிலர் ஏமாந்து வாசித்து காறி துப்பினார்கள். அவர் நாவலை சென்னை பல்கலையின் பாடத்திட்டத்தில் கூட வைத்தார்கள். ஆனால் இப்போது அவர் எங்கே போனார்? புத்தக வாசிப்பே இல்லாத இயக்குநர்களை மேடைக்கு கொண்டு வந்து கூட்டம் சேர்த்து தன்னை எழுத்தாளனாக நிறுவ முயல்பவர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். ரொம்ப நாள் ஏமாற்ற முடியாது. ஊரில் திடீரென்று புது ஆட்கள் விநோதமாய் திரித்தால் புள்ள புடிகாரன் வரான் போல என்று தாய்மார்கள் குழந்தைகளை பூட்டி வைப்பார்கள். போலி எழுத்தாளர்களிடம் இருந்து வாசகர்களை அப்படிக் கூட காப்பாற்ற முடியாது.

Share This

3 comments :

  1. நல்ல கருத்துகள், ஆனாலும் எழுத்தாளர்களை ஒருமாதிரிப் பார்ப்பனர்கள் ஆக்குகிறீர்களோ என்றும் தோன்றுகிறது. (ஞானிகளாக விலகி இருக்க வேண்டும் என்றே நான் புரிந்துகொண்டேன்.)

    அருமையான எழுத்துநடையில் அமைந்திருக்கிறது இந்தக் கட்டுரை. வாழ்க!

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை நண்பரே. ஒரு நோக்கமுள்ள எழுத்து!

    நேற்று எழுத வந்த குஞ்சு குளுவான்களும் "ஜே .ஜே .சில குறிப்புகள்" ஒரு fake novel என்று விமர்சிக்கும் போது சிரிப்பும் ஒரு விதமான மகிழ்ச்சியும் கூடவே வருகிறது . ஏனெனில் காலம் கடந்து இந்த நாவல் விமர்சிக்கப்பட்டாலே சு ராவின் எண்ணம் நிறைவேறியது .(அதில் அவர் செய்த வடிவ பரிசோதனை என்ன !மொழியின் நடை என்ன ! )எந்த இலக்கியப் படைப்புக்கும் விமர்சனம் உண்டு. ஆனால் என்னுடைய விமர்சனத்தை ஒரு வரியில் முக நூல் பதிவாகப் போடமாட்டேன் .
    ஆனால் இவர்கள் விமர்சிக்கும் அளவுக்கு பக்குவப் பட்டார்களா என்றால் இல்லை. நான் முகநூலில் நிறைய தமிழ் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன் .வெகு சிலரையே எனது நட்பு வட்டாரத்தில் வைத்துள்ளேன். அவர்களின் வாசிக்கும் திறன் மற்றும் ரசனை நன்றாக இருப்பதால் மட்டும் . ஒரு இளையராஜா பாப் மார்லேயையும் பாப் டிலனையும் நிராகரிக்கலாம். அதற்கு ஒரு தகுதி உள்ளது, நேற்று முளைத்த காளான்கள் ஒரு உன்னதமான இலக்கிய முயற்சியை புரிந்து கொள்ளாமல் விமர்சிக்கும் போது கடுங்கோபம் வருகிறது . சரி தான் அவர்களின் ரசனை அவ்வளவுதான். நாம் மேற்கொண்டு நல்ல எழுத்துக்களை எழுத பிரயத்தனப் படுவோம். சு ராவின் "இல்லாத ஒன்று" சிறுகதையில் வருவது போல குப்பைகளே இங்கு அதிகம்.

    Regards,
    Srinivasan
    Chennai

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates