சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத்துறையும் பிரசிடென்ஸி கல்லூரியில் தமிழ்த்துறையும் இணைந்து கவிதையில் பற்றி நேற்று ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் தமிழ்ப் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தொல்காப்பிய மெய்ப்பாடு கோட்பாட்டை பச்சை மிளகாய் உதாரணம் கொண்டு மிக எளிதாய் விளக்கினார்.
மெய்ப்பாடு வாசிப்பு எனும் செயல் எப்படி நடக்கிறது என்பதை படிப்படியாய் விளக்கும் ஒரு கோட்பாடு. மெய்ப்பாட்டை புரிந்து கொள்ளும் பார்வை எப்படி சமகாலத்தில் எப்படி மாறி வந்துள்ளது என்பதை பேராசிரியர் அழகரசன் என்னிடம் பின்னர் தனிப்பட்ட முறையில் விளக்கினார். சமகாலத்தில் பிரபலமாய் உள்ள reader response விமர்சன கோட்பாட்டோடு தொல்காப்பிய சிந்தனை எவ்வளவு நெருக்கமாய் உள்ளது என்பது வியப்பான விசயம். இதையெல்லாம் பிறகு பேசுவோம். முதலில் பச்சை மிளகாய்.
ஸ்ரீனிவாசன் ஒரு புத்தகத்தை பச்சை மிளகாயோடு ஒப்பிடுகிறார். பச்சை மிளகாயின் வடிவம் இருக்கிறது அல்லவா அது தான் ஒரு புத்தகம். அதன் உள்ளே உறைந்துள்ள காரம் தான் புத்தகத்தின் உணர்ச்சி அல்லது கருத்து. மிளகாய் கடித்ததும் காரம் உறைக்கிறது அல்லவா இது தான் புத்தகம் வாசித்த்தும் நமக்குத் தோன்றும் மனநிலை. இனி ஒரு நிலை உள்ளது. இது தான் விசயத்தை சிக்கலாக்குகிறது. பச்சை மிளகாயை கடித்த்தும் நீங்கள் ஒரு முகபாவனை வெளிப்படுத்துகிறீர்களே அது போல் புத்தகம் வாசித்த்தும் நீங்கள் மனதினுள் அதை புதைக்காமல் வெளிப்படுத்துகிறீர்கள் என்கிறார் ஸ்ரீனிவாசன். இது புத்தகம் பற்றின உங்கள் மனநிலையோ எதிர்வினையோ ஆக இருக்கலாம். இந்த மனநிலையை நீங்கள் வெளியே சொல்லாமலோ எழுதாமலோ இருந்தால் கூட இது வெளிப்பாடு தான் என்கிறார். குழப்பமாக இருக்கிறதா? இது குழப்பமான ஒன்று தான்.
இன்றைய விமர்சன போக்கு வாசகனையும் படைப்பாளியாகத் தான் பார்க்கிறது. கற்பனை மற்றும் தன் அனுபவம் அல்லது அறிவு மூலம் அவன் ஒரு படைப்பை வாசிக்கையில் விரித்துக் கொண்டே போகிறான். பல சமயங்களில் எழுத்தாளன் உத்தேசிக்காத்து எல்லாம் அவனுக்கு தோன்றுகிறது. இப்போது அவன் எழுத்தாளனுக்கு நிகர் ஆகிறான். அவன் மனதில் தோன்றுகிறது புத்தகத்தில் எழுதப்பட்ட படைப்புக்கு நிகர் ஆகிறது. வாசகனின் படைப்பாக்கம் ஒரு அரூப நிலையில் நடக்கிறது என்பது தான் வித்தியாசம். பச்சை மிளகாய் கடித்து முகம் கோணும் போது வெளியே தெரிகிறது. ஒரு கவிதையை வாசிக்கையில் அது போல் தெரிவதில்லை. ஆனாலும் அதுவும் ஒரு வெளிப்பாடு தான் என்கிறது தொல்காப்பியம்; அல்லது ஸ்ரீனிவாசன் அவ்வாறு மெய்ப்பாட்டை அவதானிக்கிறார்.
இன்றுள்ள ஒரு கோட்பாட்டுக்கான விதை ரெண்டாயிரம் முன்பே விதைக்கப்பட்டுள்ளது என்பது மிக மிக வியப்பானது. நமக்கு எப்படியான ஒரு தொடர்ச்சி இருக்கிறது பாருங்கள். ஒரு விசையை துவக்கவோ அழிக்கவே முடியாது என்ற நியூட்டானிய கருத்தாக்கத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அரிஸ்டாட்டில் பேசி இருக்கிறார். நாம் பேசும் ஒவ்வொரு சொல்லுக்கு பின்னாலும் முன்னோடிகளின் காலடிச் சுவடுகள் நீள்கின்றன. நாம் தனியாகவே இல்லை!
கடைசியாக: இப்படியான செறிவான கூட்டங்கள் நம் இலக்கியப் பரப்பில் நடப்பதில்லை என்பது மிக வருத்தத்திற்குரிய விசயம். இங்கு நடப்பதெல்லாம் புத்தக சந்தைப்படுத்தல் கூட்டங்கள் தாம். கருத்தாக்கம் சார்ந்த, புதிய விசயங்களை விளக்கும் விவாதங்கள் நவீன இலக்கிய பரப்பில் முன்பு போல் நடைபெற வேண்டும். சென்னையில் நடைபெறும் தற்போதைய கூட்டங்கள் விளம்பரங்கள் மட்டுமே இடைவெளியின்றி வரும் ஒரு டிவி சேனல் போல் உள்ளன. இந்நிலைமை மாறும் என எதிர்பார்ப்போம்
மெய்ப்பாடு பற்றிய உங்கள் கருத்துகள் அற்புதம். நாம் விவாதித்ததிலிருந்து அடுத்த கட்டத்திற்கு மெய்ப்பாட்டைக் கொண்டுசெல்வதாக உங்கள் பதிவுகள் உள்ளன. படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நேற்று நாம் விளக்கியது ஒரு பகுதிதான். இதைத் தொடர்ந்து இன்னும் பல விதங்களில் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது. நீங்கள் பெற்றதைக் குறித்துத் தொடர்ந்து எழுதவும். மிளகாயுடன் புத்தகத்தை இணைத்திருப்பது புதுமையாகவும் பொருத்தமாகவும் உள்ளது. நம்முடைய மரபுச் செல்வத்தை இப்படிப் புதிய பார்வையிலும் நோக்கிலும் வெளிப்படுத்த வேண்டும். தொடர்ந்து உங்களிடம் அதை எதிர்பார்க்கிறேன்
ReplyDeleteஇரா. சீனிவாசன்
நன்றி
ReplyDelete