நவம்பர் மாதமே காலச்சுவடில் பி.கிருஷ்ணனின் சமணர்கள் பற்றிய கட்டுரையை படித்ததும் எதிர்வினை எழுதி விட்டேன். தாமரைக்கு கொடுத்தேன். அப்போது பார்த்து ரெஜிஸ்திரேசனில் ஏதோ பிரச்சனை என இதழ் ஒரு மாதம் வரவில்லை. பிறகு ஒரு நண்பர் இன்னொரு இதழுக்கு வேண்டும் என வாங்கி மீண்டும் இழுத்தடித்தார். பின்னர் நானும் பதிவேற்றாமல் கொஞ்ச நாள் தள்ளிப் போட்டேன்.. கிருஷ்ணனின் கட்டுரையை இந்த இணைப்பில் பாருங்கள்
http://www.kalachuvadu.com/issue-167/page09.asp
இனி என் எதிர்வினை
சில மாதங்களுக்கு முன் காலச்சுவடில் பி.ஏ.கிருஷ்ணன் “சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?” என்கிற கட்டுரையை நிறைய சுவாரஸ்யமான தகவல்களுடன் எழுதி இருக்கிறார். சமணர்கள் கழுவேற்றப்பட்டதாய் கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார். அதாவது கல்வெட்டுகள், பட்டயக்குறிப்புகள் என ஒன்றும் இல்லை. பழந்தமிழ் இலக்கிய குறிப்புகளைத் தவிர.
விஷயம் இதோடு முடியவில்லை. ஒருவேளை ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால் ஒன்று நடந்திருக்கவில்லை என்று நம்ப அவசியமில்லை என்பதை அவர் அறிவார். அதனால் சமணர்களை கொல்லும் அவசியம் இந்துக்களுக்கு இல்லை என்பதை நிறுவ முயல்கிறார். பல இடங்களில் சறுக்குகிறார். பொதுவாக பி. ஏ. கிருஷ்ணன் தன் கட்டுரைகளில் சூரியனை நோக்கி கல்லெறிவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்.
முதலில் சமணர்கள் கழுவேற்றப்பட்டதாய் கூறப்படுகிற எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சமணர்களின் கல்வெட்டுகள் நிறைய கிடைத்துள்ளதாகவும், பத்தாம் நூற்றாண்டில் சீவக சிந்தாமணி இயற்றப்பட்டதாகவும், அதே போல் ஜீனகாஞ்சி எனப் படும் சமணக்கோயில் திருப்பத்திக் குன்றத்தில் கட்டப்பட்டதாகவும் கூறி இதனால் சமணர்கள் கொன்றிருக்கப்பட சாத்தியம் இல்லை என்கிறார். இது பிழையான வாதம்.
சமணம் இங்கு வலுவாக இருந்த மதம். ஒரேயடியாக சமணர்கள் அழித்தொழிக்கப்பட்டதாய் கூறுவது மிகை தான். இந்த கூற்றின் அடிப்படையில், அதாவது மிகையான கோரலின் அடிப்படையில், பி.ஏ. கிருஷ்ணன் அவர்கள் பரவலாக இருந்ததே கொல்லப்படவில்லை என்பதற்கு ஆதாரம் என்கிறார். அயோத்திதாசரின் காலத்திலேயே கூட பௌத்தத்தை தீவிரமாக பின்பற்றி ஒரு தனி சமூகமாக வாழ்ந்த மக்கள் இங்கு இருந்தார்கள். அவர்களுக்காக அயோத்திதாசர் தனியார் பத்திரிகை கூட நடத்தினார். அதாவது பௌத்தம் மிக பலவீனமாகி அழிந்து பட்டநிலையிலும் கூட அது வாழ்ந்து கொண்டு தான் இருந்தது. மதம் அழிய நீண்ட காலம் எடுக்கும். கபாலிகர்கள் போன்ற தீவிர சிறு குழுக்களோடு ஒப்பிட்டு அவர்கள் காணாமல் போக வில்லையே எனக் கேட்கிறார் கிருஷ்ணன். சமணம் மக்கள் ஆதரவு இருந்த ஒரு முழுமையான மதம். அதை சிறு குழுவோடு ஒப்பிடல் ஆகாது.
கடுமையான அரச ஒடுக்குமுறைகளுக்கு ஆகிற மதங்கள் உடனடி அழியுமா? இங்கிலாந்தில் பதினாறாம் நூற்றாண்டுக்கு பிறகு கத்தோலிக்கர்கள் மற்றும் பெந்தேகோஸ்துகள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். கத்தோலிக்கர்கள் கம்பத்தில் கட்டி எரிக்கப்பட்டார்கள். அரச விரோதிகளாக, தேச துரோகிகளாக கருதப்பட்டார்கள். இதைப் போன்றே சார்லஸ் II மன்னன் ஆட்சிக்கு திரும்பிய பின் பெந்தேகோஸ்துகளும் ஒடுக்கப்பட்டார்கள். ஆனால் இந்த மதங்கள் அழிந்து போகவில்லையே!
அடுத்து, ஒடுக்குமுறையும் வளர்ச்சியும் வெவ்வேறு நிலைகளில் ஒரே காலகட்டத்தில் நிகழலாம். கடந்த பத்தாண்டுகளில் தலித்துகள் பரமக்குடியில் போல் அரசு எந்திரத்தாலும், தர்மபுரியில் போல் பா.ம.க போன்ற கட்சிகளாலும் மிக அதிகமாக கொல்லப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வந்துள்ளனர். ஆனால் இதே காலகட்டத்தில் தான் அவர்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் அதிகமாக வளர்ச்சியும் அடைந்துள்ளனர். அவர்களுக்கென்று வலுவான கட்சிகள் செயல்படுகின்றன. ஆனால் இதை வைத்து ஐநூறு வருடங்களுக்கு பிறகு ஒருவர் ரெண்டாயிரத்தில் தலித்துகள் ஒடுக்கப்படவே இல்லை என கூற முடியுமா? சமூகத்தில் வளர்ச்சி அழிவு போன்ற முரண்கள் சேர்ந்தே இருக்கும்.
சமணம் கடுமையான நெறிகளைக் கொண்ட பிரபலமற்ற மதம். வணிகளின் மதம். அதனாலே இங்கு வெளிமாநில சமண வணிகர்களின் வீழ்ச்சி அல்லது வெளியேற்றத்துடன் அதுவும் தானே அழிந்தது என்கிறார் பி.ஏ கிருஷ்ணன். அதனால் இது தவறான வாதம். இந்தியாவில் இன்று 34 மாநிலங்களில் சமணர்கள் காணப்படுகிறார்கள். சமணம் இந்தியாவின் ஆறாவது பெரிய மதம். இந்திய மக்கள் தொகையில் 4,200,000 பேர் சமணர்கள். எல்லோரும் வணிகர்களா? அல்ல அவர்கள் எல்லா தொழிலிலும் இருக்கிறார்கள். ராணுவத்தில் கூட. சொல்லப் போனால் முக்குலத்தோரை போல் ஜெயின்கள் போர் சமூகமாகவும் இருந்தார்கள் அப்படி ஒரு வரலாறும் அவர்களுக்கு உண்டு. ஜட், ரஜபுத்திரர்கள், கத்ரி, பண்ட் போன்ற சமூகங்களில் இந்து மதம் மட்டுமல்ல, சமணத்தை பின்பற்றுபவர்களும் கணிசமாக உண்டு. (மேலும் தரவுக்கு http://jainismus.hubpages.com/hub/The-Structure-of-Jain-Community).
இஸ்லாம் கூட கடுமையான நெறிகளைக் கொண்டு இந்து மதத்தின் பக்தி மார்க்க கொண்டாட்டங்கள் இல்லாத மதம் தான். அது பரவலாக பின்பற்றப்படவில்லையா? அரூபமான கடவுளை நம்பவில்லையா? மதம் கடுமையாக இருப்பதற்கும் பின்பற்றப்படுவதற்கும் சம்மந்தமில்லை. நம்பிக்கைகளும், சடங்குகளும், கட்டமைப்பும் தான் தான் மதத்தை உயிருடன் வைத்திருக்கிறது. இந்துமதம் பிரபலமாக இருந்ததற்கு அதற்கு இதிகாசக் கதைகள் இருந்தது காரணம் என்கிறார் கிருஷ்ணன். இதுவும் எல்லா மதங்களுக்கும் உரித்தானது தான்.
சமணம் போன்ற புது மதத்தால் ஆயிரமாண்டு பாரம்பரியம் கொண்ட இந்துமதத்தை எப்படி எதிர்த்திருக்க முடியும்? காலனிய ஆட்சி நடந்த இந்தியாவில் கிறித்துவத்தாலே தாக்குப்பிடிக்க முடியவில்லை. இஸ்லாமியர்கள் படையெடுத்து கோயில்களை அழித்து பரவலாய் கட்டாய மதமாற்றம் செய்ததாய் கூறப்படுகிறது. அப்படி என்றால் ஏன் இஸ்லாம் சிறுபான்மை மதமாக இருக்கிறது? முகலாய சாம்ராஜ்யம் வலுவாக இருந்த காலகட்டத்திலேயே. ஒரு புது மதம் ஏற்கனவே உள்ள பழைய மதத்திற்கு இணையாக வளர முடியாது. ஆனால் பழைய மதத்தின் அதே நம்பிக்கைகள், கட்டமைப்பை சுவீகரித்து அதன் இடத்தை எடுத்துக் கொள்ள முடியும். கிறித்துவம் அப்படித் தான் வளர்ந்தது. மேலும் இந்தியாவில் இந்து மதத்தின் இதயம் சாதியமைப்பு. அதே சாதிய கட்டமைப்பை ஆதரித்து அதற்கான புனைவுகளை உருவாக்கும் மதம் தான் இந்துமதத்திற்கு இணையாக வளர முடியும். இப்படி மதம் தன்னை தக்க வைப்பதும் வளர்வதும் மிக சிக்கலானது. அதற்கு மரபு, பண்பாட்டு சூழல் என பல காரணிகள் உதவ வேண்டும். ஆக சமண மதம் வளரவில்லை என்பதே இந்து மதம் ஆதிக்க மதம் என்பதைத் தான் காட்டுகிறது. ஆனால் வன்முறை நிகழ்த்தப்பட்டதா என்பது ஊகம் மட்டுமே.
கட்டுரையில் ஆரம்பப் பகுதியில் நாயன்மார்களிடம் இருந்து உதாரணங்களை தந்து சமணர்களை கடுமையாக வசை பாடினார்களே ஒழிய வன்முறையில் ஈடுபட்டதாய் பாட்லகளில் தெரியவில்லை என்கிறார். இதை ஒரு ஆதாரமாகவே கருத முடியாது. நான் என் பக்கத்து வீட்டுக்காரனை தினமும் கெட்ட வார்த்தையில் ஏசுகிறேன் என்றால் அது நாளை அவனை அடிக்க மாட்டேன் என்பதற்கு ஆதாரம் ஆகி விடுமா?
சமணர்களை அழிப்பதற்கான என்ன தேவை சைவர்களுக்கு இருந்திருக்கும் என கிருஷ்ணன் கேட்கிறார்? அதாவது கொலைக்கான உத்தேசம். இது ஒரு குழந்தைத்தனமான வாதம். வன்முறைக்கு உத்தேசம் எதுவும் இல்லை. இந்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு அல்லது நாள் தோறும் நடக்கிற கொலைகளுக்கு ஏதேனும் உத்தேசம் உண்டா? இல்லை. வன்முறை என்பது ஒரு மொழி. உரையாடல். அதற்கு தர்க்கம் ஏதும் இல்லை என்று பூக்கோ தெளிவாக விளக்கி உள்ளார். பொதுவாக ஒரு கட்சி வலுப்பெறும் போது பலவீனமான தரப்பை ஒடுக்கவும் வன்முறைக்கு உட்படுத்தவும் செய்யும். தன் அதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு வழிமுறை அது. எந்த அலுவலகத்திலும் பாருங்கள். ஒரு புது மேலாளர் வந்ததும் சில மாதங்கள் தனக்கு கீழ் உள்ளோரை கடுமையாக துன்புறுத்துவார். அப்படித் தான் தன் அதிகாரம் ஸ்திரப்படுவதாய் அவர் உணர்வார். மதங்களுக்கும் இதுவே நிகழும்.
சமணர்கள் கழுவேற்றப்பட்டிருக்கலாம். எண்ணிக்கை எவ்வளவாகவும் இருக்கலாம். இது ஒரேயடியாக அம்மதத்தை அழிப்பதற்காக அல்ல. இந்துக்கள் தம் அதிகாரத்தை உறுதிப்படுத்த இதை செய்திருக்கலாம். தமிழகத்தில் உள்ள பல சமண, பௌத்த கோயில்கள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன. எங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள குமாரகோயிலில் சமணக் கடவுள் முருகனாக மாற்றப்பட்டுள்ளது. இதெல்லாம் சாத்வீகமாக நடந்திருக்க முடியாது. கழுவிலேற்றினார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை தான். ஆனால் கடும் ஒடுக்குமுறைகள் இருந்திருக்கும். இல்லாமல் இந்துமதம் சமணத்தை கபளீகரம் செய்திருக்க முடியாது.
சமணர்கள் கழுவிலேற்றப்பட்ட செய்தி நம்பியாண்டார் நம்பியின் பாடல் ஒன்றில் வரும் சேதி மட்டும் தான். அது வரலாற்று ஆதாரம் அல்ல என்கிறார் கிருஷ்ணன். அப்படி என்றால் நம் வரலாறு முழுக்க கராறான ஆதாரங்களால் எழுதப்பட்டதா? இல்லை. சங்கப்பாடல் தகவல்களில் இருந்து தாம் பழந்தமிழர் வாழ்க்கையை திரும்ப எழுதுகிறோம். ஷேக்ஸ்பியர் வாழ்ந்தது குறித்த ஒரு கராறான ஆதாரம் கூட கிடையாது. ஆனால் அவரது வாழ்க்கை வரலாற்றை அவரது நாடகம் மற்றும் கவிதைகளில் உள்ள சிறு தன்சரித தகவல்களை கொண்டே மீளுருவாக்கம் செய்து ஆயிரக்கணக்கான பக்கங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. கணிசமான வரலாறு இப்படித் தான் மனித கற்பனையுடன் எழுதப்படுகிறது. அதற்கென்று இது பொய் ஆகாது. துளி உண்மை இல்லாமல் தொன்மங்கள் தோன்றுவதில்லை. மேலும் இலக்கிய பிரதி ஒரு சமூகத்தின் ஆழ்மனதில் உள்ள விருப்பத்தை, நம்பிக்கையை மற்றும் சமகால நிகழ்வை தாம் பதிவு செய்கிறது. கற்பனை கலந்த உண்மை ஆவணம் அது. பி.ஏ. கிருஷ்ணன் தர்க்கப்படி பார்த்தால் நாம் 90% வரலாற்றை நிராகரிக்கத் தான் வேண்டும். பட்டயங்கள், கல்வெட்டுகளில் காணப்படுவது கூட வரலாறு எனும் பனிப்பாறையின் சிறுநுனி தானே!
அதிகாரமற்றவர்களின் வரலாறு பதிவாவதில்லை. இதுவரையிலான இந்திய வரலாறு அவ்வாறு ஒருதலை பட்சமானது தான். அதை வைத்து சமணர்கள் ஒடுக்கப்படவில்லை என்பது பலவீனப்படுத்தப்பட்ட தரப்பை மேலும் பலவீனமாக்கும் முயற்சி. சமணர்களின் வரலாற்று ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம், கண்டடையாமல் போயிருக்கலாம், பதிவாகாமலே கூட இருக்கலாம். வரலாறு மதத்தை போன்று நம் விசுவாசத்தையும் கற்பனையும் கோரும் ஒன்று.
ஆக பாடல்களில், இலக்கியத்தில் வரும் தகவல்கள் முழுக்க பொய்யாக இருக்க முடியாது. மிகை இருக்கலாம். ஆனால் சமணர்கள் கொல்லப்பட்டது முழுக்க பொய்யாக இருக்க முடியாது. இவ்வளவு கண்காணிப்பும் சமத்துவமும் நிலவும் இந்த காலத்திலேயே எண்ணற்ற மதப்படுகொலைகள் நடக்கையில் கடந்த காலத்தில் மதம் சார்ந்த வன்முறை இன்னும் வெளிப்படையாகவே நடந்திருக்கும்.
கிருஷ்ணன் பால் டுண்டாஸ் எனும் ஒரு வரலாற்று ஆசியரை குறிப்பிட்டு கழுவிலேற்றப்பட்டது ஒரு குறியீடு என்கிறார். இது நகைப்புக்கு உரியது. யாகம் குறித்த சித்திரம் தான் தூக்கிலிடும் காட்சி என்கிறார். இப்படி ஒரு கொடூரமான அர்த்தமற்ற குறியீடை நான் எந்த புத்தகத்திலும் படித்ததில்லை. நாளை குஜராத் கலவரத்தையும் யாராவது ஒரு குறியீடு என எழுதுவார்கள். மாடுகளை வெட்டி பலி கொடுக்கும் சடங்கு இருந்தது. அது தான் இஸ்லாமியர் தலைகளை வெட்டுவதாக கலவரமாக குறியீட்டு ரீதியாக பத்திரிகை புத்தகங்களில் விவரிக்கப்பட்டது என்பார்கள்.
சரி இலக்கிய குறிப்பை நம்பலாமா? ஊகத்திற்கு மட்டுமே கொள்ள முடியும். ஆனால் மக்களின் வரலாற்று ஓர்மை இப்படியான இலக்கிய புனைவுகள் அல்லது தொன்மங்களை நம்பித் தான் இருக்கிறது. பி.ஏ. கிருஷ்ணனும் விதிவிலக்கு அல்ல. அரச ஆதரவில்லாமல் வைணவர்கள் கடும் ஒடுக்குமுறைகானதாக குறிப்பிடுகிறார். “ராமானுஜர் பல வருடங்கள் தமிழகத்துக்கு வெளியே இருக்க நேர்ந்தது. குரு பரம்பரைக் கதைகள் பல வைணவர்கள் குருடாக்கப்பட்டதைப் பற்றி பேசுகின்றன” என்கிறார். அதாவது வைணவர்கள் ஒடுக்கப்பட்டதற்கு அவர் குருபரம்பரைக் கதையை ஒரு ஆதாரமாக தருகிறார். ஆனால் சமண ஒடுக்குமுறைக்கு அது போன்ற கதையை நம்ப மாட்டார்.
உங்களுக்கு வந்தால் மட்டும் ரத்தமா மிஸ்டர் பி.ஏ. கிருஷ்ணன்?
No comments :
Post a Comment