Monday, 1 February 2010

பர்தாவை தடை செய்யலாமா?

முகத்திரை கொண்ட பர்தாவை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வர பிரஞ்சு அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. இது ஒரு முக்கிய அரசியல் பிரச்சனையை முன்வைக்கிறது. இஸ்லாமிய சமூகத்தை தம்முடன் ஒன்றிணைப்பதா தவிர்ப்பதா என்ற ஐரோப்பிய தேசங்களின் கவலையின் மற்றொரு பெயரே பர்தா தடை. பிரான்ஸ் சொல்வது வெறும் சப்பை காரணம்: மதசார்பின்மை. உண்மையில் இத்தகைய ஒரு தடைச்சட்டம் மதசகிப்பின்மைக்கே வழிவகுக்கும். மேலும் அத்தகைய தடை அடிப்படைவாதத்துக்கு வழிகோலும் வாய்ப்பும் உண்டு. அடுத்து ஜனாதிபதி சர்கோஸி பர்தாவை பெண்ணடிமைத்தனமாக அடையாளம் காண்கிறார். பர்தா ஒரு நகரும் சிறை என்கிறது பிரான்ஸ் பாராளுமன்ற அறிக்கை. ஆனால் முரணாக, இத்தடை நிலுவையில் வந்தால் இஸ்லாமிய பெண்களால் பொதுஇடங்கள் மற்றும் அலுவலகங்கள், மருத்துவமனை போன்ற அன்றாட தேவைக்கான இடங்களுக்கும் செல்ல முடியாது. இது முஸ்லீம் பெண்களை வீட்டுச்சிறைக்குள் மேலும் அடிமைப்படுத்தும் பின்னோக்கிய விளைவாகவே முடியும். நிஜக்காரணங்கள் இரண்டு.



பிரான்ஸில் மிக வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். ஆறு மில்லியன் பேர் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். இத்தனை இஸ்லாமியரையும் உள்ளிட்ட புலம்பெயர் வெளிநாட்டவரின் குழந்தைகளுக்கு வேலை, வீடு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் வாய்ப்புகள் உருவாக்க பிரான்ஸ் அரசால் முடியவில்லை. இந்த வலுவான குற்றச்சாட்டை மறைக்கும் ஒரு முயற்சியாக அரசியல் நிபுணர்களால் இந்த தடைச்சட்டம் நோக்கப்படுகிறது. அடுத்து, பிரஞ்சுக்காரர்களிடம் உள்ளதாக பாராளுமன்ற அறிக்கை சுட்டிக்காட்டும் islamophobia எனும் இஸ்லாமிய பீதி.



இந்த மதவெறுப்பு இஸ்லாமியர் அனைவரும் தீவிரவாதிகள் எனும் பொதுப்புத்தியில் இருந்து கிளைப்பது. குறிப்பாக மேற்கத்திய சமூகங்களிடம் இது ஒரு ஆழ்பிம்பமாகவே உறைந்து போய் உள்ளது. இத்தாலியில் ஏற்கனவே இத்தகைய தடைச்சட்டம் உள்ளது. ஆஸ்திரிய, பெல்ஜிய, டச்சு மற்றும் 3.7 சதவீதம் இஸ்லாமியரைக் கொண்டுள்ள ஜெர்மனி அரசும் தற்போது இதேவித தடையை கொண்டு வர உத்தேசிக்கின்றன. 2.4 மில்லியன் இஸ்லாமிய மக்கள் தொகை கொண்ட இங்கிலாந்தில் இஸ்லாமிய மாணவர்கள் மீது கண்காணிப்பை தீவிரமாக்கவும் இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களை தடை செய்யவும் அரசு மீது நெருக்கடி இறுகி வருகிறது. டோனி பிளேர் பர்தாவை பெண்கள் இங்கிலாந்தில் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அமெரிக்க மண்ணில் நுழையும் ஒவ்வொரு இஸ்லாமியனையும் ஒரு ஏவுகணையாகத்தான ஊடகங்கள் சித்தரிக்கின்றன. சென்னையில் உள்ள அமெரிக்கன் கவுன்ஸில் நூலகத்தில் ஒரு அலமாரி முழுக்க இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த நூல்களே. குறிப்பாக, ஒரு முஸ்லீம் ஏன் மெனக்கட்டு தீவிரவாதி ஆகிறான் என்பதே இப்புத்தகங்களின் ஆசிரியர்கள் விளக்க முயன்றுள்ள கேள்வி. இது இன்று மொத்த அமெரிக்க சமூகத்தின் முன்னுள்ள புதிர்தான். Terrorists, Victims and Society என்ற நூலில் ஆண்டிரூ சில்கே என்பவர் இஸ்லாமிய தீவிரவாதிகள் பைத்தியக்காரர்கள் என்ற கருத்துருவை நிறுவ மனவியல் ஆய்வாளர்கள் பல தில்லுமுல்லுகளை கையாண்டுள்ளதை விளக்குகிறார். பாலஸ்தீன தீவிரவாதிகள் மனநலம் கொண்ட சகஜர்களே என்கிறார் சில்கே. பெரும்பான்மையினரின் மனக்கிலேசத்தை அகற்ற சிறுபான்மை சமூகத்தின் மத-அடையாளங்களை தடை செய்வது என்ற பிரான்ஸின் முடிவு விசித்திரமானது.

பர்தா ஒரு ஆணாதிக்கவாத உடை என்ற விவாதத்துக்கு சமகால முக்கியத்துவம் இல்லை. நாம் இதை ஒரு அரசியல் பிரச்சனையாகவே அணுக வேண்டும். துரதிஷ்டவசமாக, விவாதத்தில் பங்கு கொள்ளும் பெரும்பான்மை இஸ்லாமிய பொதுப்புத்தியும் சரி, எதிரான வலதுசாரிகளும் இதை ஒரு மதச்சட்டம மற்றும் ஒழுக்கவாதம் சார்ந்த சிக்கலாகவே அணுகுகின்றனர். உலகம் முழுக்க ஒடுக்கப்படும் இஸ்லாமியருக்கு தமது மத, பண்பாட்டு அடையாளங்கள் அழிந்து போவதான அச்சம் உண்டு. மேலும், இதற்கு காரணம் தங்களது மதஈடுபாடின்மையே என்ற குற்றமனப்பான்மையும் ஏற்படுகிறது. விளைவாக, சமகாலத்தலைமுறையினர் தங்கள் அடையாளங்கள வலுவாக நிலைப்படுத்தும் முயற்சியில் வஹாபிசம் போன்ற அடிப்படைவாத சித்தாந்தங்கள் பக்கமும் சாய்கின்றனர். தீவிர மத-ஈடுபாடு மற்றும் அடிப்படைவாத சாய்வு சகமனித வெறுப்போ சமூக வன்மத்தின் வெளிப்பாடோ அல்ல. இது ஒரு சமூக பண்பாட்டு மற்றும் இருப்பு தொடர்பான பிரச்சினை.


இதை சமகால இந்தியாவின் இஸ்லாமியச் சமூக வரலாற்றை நோக்கியே நாம் புரிந்து கொள்ளலாம். குமரிமாவட்டத்தில் என் சொந்த ஊரான தக்கலையில் அரசு உயர்மேல்நிலை பள்ளிக்கூடத்துக்கு அருகிலே இஸ்லாமியர் பெருமளவில் வசிக்கும் பகுதி இருந்தது. ஏராளமான இஸ்லாமியர் அப்பள்ளியில் படித்தார்கள். 98 வரை ஒரு பர்தா கூட தென்படவில்லை. விடுங்கள், தலையில் முக்காடு கூட அந்த இஸ்லாமிய மாணவிகள் அணிந்ததில்லை. ஆனால் அப்பகுதியில் எப்போதுமே காவிப்படையினருக்கும் இஸ்லாமியருக்கும் இடையிலான பூசல் மெலிதாக புகைந்து வந்திருந்தது. 99-க்கு பிறகு நான் படித்த ஸ்காட் கிறித்துவ கல்லூரியில் ஹமீதா மற்றும் கதீஜா எனும் இரண்டு இஸ்லாமிய பெண்கள் படித்தார்கள். அவர்கள் தாம் அணிந்த பர்தா காரணமாக தனித்து தெரிந்தார்கள். அடிக்கடி பர்தாவுக்கான காரணத்தை நண்பர்களிடம் விளக்கி ஓய்ந்து போனார்கள். ஹமீதா ஒரு தீவிர பெண்ணியவாதி. மத ஈடுபாடும் குறைவே. 98க்கு பிறகே அவர் பர்தா அணிய ஆரம்பித்தார். என்ன காரணம்? பர்தா மூலம் தம்மைச் சூழ்ந்த பிற சமூகத்தினருக்கு ஒரு சேதி விடுக்க விரும்பினார்.



பாபர் மசூதி இடிப்பின் பிறகு பா.ஜ.க ஆட்சி அதிகாரம் பெற்று இஸ்லாமியருக்கு எதிரான அடக்குமுறை வெளிப்படையான ஆதரவு பெற்ற கட்டம் அது. 99-இல் மட்டும் தினமும் ஏழு பேர் மதக்கலவரத்தால் பாதிக்கபட்டனர் என்றார் பிரிந்தா காரத். மகராஷ்ட்ரா, குஜராத், மத்திய பிரதேசம் என்று பல்வேறு மாநிலங்களில் 600-க்கு மேற்பட்ட கலவரங்கள் வெடித்தன. குறிப்பாக கார்கில் போர் மற்றும் பா.ஜ.காவின் ரதயாத்திரையின் போது இது உச்சம் அடைந்தது. இந்தியா முழுக்க இஸ்லாமியர் கடுமையான சமூக பண்பாட்டு நெருக்கடியை, தனிமைப்படுத்தலை நேரிட்டனர். இந்த நெருக்கடியை இந்த இருப்பெண்களும் குறியீட்டு ரீதியாக சந்தித்ததன் விளைவே கிறித்துவ கல்லூரியில் தெரிந்த பர்தா. பெண்ணியவாத, மத ஈடுபாடற்ற தனிநபரைக் கூட பா.ஜ.க போன்ற அடிப்படைவாத இயக்கத்தின் வன்முறை தங்கள் அடையாளங்களை தேடி எடுத்து முன்னிறுத்த தூண்டியது. இஸ்லாமியருக்கு எதிரான சர்வதேச வணிக மற்றும் பண்பாட்டு போர் நிகழும் இன்றைய சூழலில் பர்தா சர்வ சாதாரணமாகி விட்டது..

பர்தா திணிக்கப்படுகிறதா? சிந்திக்கும், பெண்ணிய இஸ்லாமிய பெண்கள் கூட தங்கள் மதஅபிமானத்துக்காக விருப்பப்பட்டே அணிகின்றனர். இஸ்லாமிய சமூகம் இன்னும் நவீனப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். நம் கல்வி அமைப்பிலும் அவர்கள் அதிகம் ஈடுபடுவதில்லை. பண்பாட்டு அரசியல் நேருக்கடிக்கு உள்ளாகும் போது அவர்கள் ஆண்களை ஒட்டியே செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது தான். இஸ்லாமிய சமூகம் நவீனப்பட்டு பொது நீரோட்டத்துக்கு வந்தால் அவர்கள் இரு கட்டங்கள் வழி பயணிப்பார்கள். முதல் கட்டத்தில் இன்றைய இளந்தலைமுறை பிராமண பெண்களைப் போல் குறைந்த பட்ச சுதந்திரத்துடன் இயங்குவார்கள். வீட்டுக்குள் மடிசார் வெளியே ஜீன்ஸ். நவீனத்தின் அனைத்து வசதிகள் மற்றும் கலாச்சார அம்சஙக்ளை பேணியபடியே அசட்டு சம்பிரதாய நம்பிக்கைகளுடன் ரெட்டை வாழ்க்கை. ஒருவேளை ரெண்டாவது கட்டத்தில் பட்டுப்புழு இறகுகளை அடையலாம். அப்போது மட்டுமே நாம் பர்தாவை ஒரு பெண்ணிய கோணத்தில் அணுக முடியும்.

******************************************************************

பர்தாவின் இந்திய கோணத்தை மேலும் விளங்கிக் கொள்ள
புதிய காற்று இதழின் ஆசிரியரும் தாமரை இதழின் இணை ஆசிரியருமான ஹமீம் முஸ்தபாவிடம் சிறு பேட்டி ஒன்று கண்டேன்.



1. பர்தா மீதான் உங்கள் நிலைப்பாடு என்ன?

ஆதி இஸ்லாத்தில் பர்தா அனைவருக்குமானதகாக இருக்கவில்லை. நபிகளின் ரத்த உறவுகள் மட்டுமே அணிந்து வந்ததாக ஒரு குறிப்பு உள்ளது. பிறகு பலவிதங்களில் திரிபுற்று இன்று அரசியல் காரணங்களுக்காக அது முன்வைக்கப்படுகிறது.
இந்திய முஸ்லீம்களிடையே பரவி வரும் அரபிய கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இங்கு பர்தாவை பார்க்கலாம். பர்தாவில் இன்றொரு மேட்டிமைத் தனம் வந்து விட்டது. பெண்கள் தங்கள் அழகியலை காட்டும்படி மெருகேறிய விலை உயர்ந்த பர்தாக்களை தேடி அணிகிறார்கள். அதாவது அதன் அடிப்படை நோக்கம் மெல்ல தோற்கடிப்படும் முரணை குறிப்பிட்டேன்.

2. பொதுஅரங்குகள் மற்றும் கல்லூரிகளில் சேலை அணிவது கட்டாயமாக உள்ளது. திரைக்கலைஞர்கள் நடத்திய விழாவில் ஸ்ரேயா கலைஞர் முன்னிலையில் குறைவான் ஆடைகளுடன் தோன்றி கண்டிக்கப்பட்டு பின் அடுத்த நிகழ்ச்சியில் சேலை அணிந்து வர நிர்பந்திக்கப்பட்டார். இப்படியான நிர்பந்தத்தை பர்தா கலாச்சாரத்துடன் ஒப்பிட முடியுமா? சேலை நம்மூர் பர்தாவா?

முடியும். சேலை காமக்கிளர்ச்சி ஊட்டும் படி வடிவமைக்கப்பட்டது. பர்தா உடலை மறைக்கும் நோக்கம் கொண்டது. இருப்பினும் இரண்டுமே பெண்ணை நுகர்வுப் பொருளாக கொள்ளும் நோக்கம் கொண்டவையே. இது தொடர்பாக ஒரு முல்லாக் கதை உண்டு.

முதலிரவில் முல்லாவிடம் தன் முகத்திரையை விலக்கும் மனைவி அவரிடம் கேட்கிறார்: “ நான் இனி பிற ஆண்களிடத்து முகத்திரை விலக்கலாமா?”
முல்லா சொல்கிறார்: “எத்தனை ஆண்களிடம் வேண்டுமானாலும் உன் முகத்தை நீ இனி காமி. ஆனாலும் என்னிடம் மட்டும் தயவு கூர்ந்து காட்டாதே!”

3. பெண்கள் நிர்பந்திக்கப்படுகிறார்களா? நுட்பமாக கலாச்சார ரீதியில் ஏனும்?

பெண்களுக்கு பர்தா இன்று கலாச்சார அந்தஸ்தாகி விட்டது. பொருளாதார மற்றும் லௌகீக வசதிகளும் இதற்கு உண்டு. உதாரணமாக இரண்டு பர்தாவை வைத்துக் கொண்டு ஒரு ஏழைப்பெண் வசதி படைத்தவருக்கு நிகராக தன்னை காட்டிக் கொள்ள முடியும். ஒரு நைட்டியை உள்ளே இட்டு பர்தா மேலே அணிந்து செல்லும் சுதந்திரமும் முக்கியமானதாக உள்ளது. இப்படியாக இன்று 80 சதவீத பெண்கள் சுயவிருப்பமாகவே பர்தா அணிகிறார்கள்.

4. பர்தா பரவலாகி இருப்பதில் பா.ஜ.கவின் பங்கு என்ன?

நிறைவே. ஆனால் முன்னிருந்த இந்திய பண்பாட்டை களைந்து அரபிய கலாச்சாரத்தை அணைக்க விரும்பும் இந்திய முஸ்லீமின் போக்கையும் குறிப்பிட வேண்டும். இது உலகளாவிய அளவில் இஸ்லாமியர் சந்திக்கும் நெருக்கடியின் எதிர்விளைவுதான்.

5. இதை சற்று பரிவோடு நோக்கலாமா?

பார்க்கலாம். ஆனால் பர்தாவின் பேரிலான ஒழுக்க அறவியலை நாம் மறுக்க வேண்டும்.

ஏன்?

பெண் பாதுகாப்பு என்ற பர்தா ஆதரவு காரணம் போலியானது. சவுதி அரேபியாவுக்கு சென்று வந்த என் நண்பர் மீரான் மைதீன் சொன்னார்: ‘அங்கு ஒரு அரபிய பெண்ணுக்கு வாடகை கார் வேண்டும் என்றால் இந்திய ஓட்டுநனை நம்புவாள், அரபியனை நம்ப மாட்டாள்’. அரபு தேசங்களை விட இந்திய முஸ்லீம் பெண்கள் இங்கு பாதுகாப்பாக உள்ளனர்.

6. இஸ்லாமிய சமூகம் நவீனப்பட்டு பொது நீரோட்டத்துக்கு வந்தால் பர்தா நிலைக்குமா?

பர்தா பேணாத பேணுகின்ற இரு போக்குகள் அருகருகே இருக்கும். பாக்கிஸ்தானிய சுடிதார் வகை ஆடை ஒருவேளை பர்தாவின் இடத்தை அப்போது பிடிக்கலாம்.



அடுத்து, இஸ்லாம் தொடர்பான சில சங்கடமான கேள்விகளை எழுப்பியமைக்காக ஊர்விலக்கு செய்யப்பட்ட கவிஞர் ஹெச்.ஜி ரசூலிடம் மேலும் சில ஆபத்தான கேள்விகள்.

1. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரை ஆதரிக்கிறது இந்திய கம்யூனிஸ்டு கட்சி. ஆனால் பிரான்ஸில் இஸ்லாமியருக்கு எதிரான தடைச்சட்டத்தை ஆதரிப்பவர் ஆண்டுரே கெரின் எனும் ஒரு கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. இந்த முரணை எப்படி புரிந்து கொள்ள?

பிரான்ஸில் முகம் மூடும் பர்தாவை மட்டும் தான் எதிர்க்கிறார்கள். இந்திய இடதுசாரிகளே ஒடுக்குமுறையை ஆதரிப்பவர்கள்தாம். இஸ்லாமுக்குள்ளே மாற்றுக்கருத்தை ஒடுக்கும் போக்குகள் உள்ளன. ஓட்டுவங்கிக்காக அஞ்சி இந்த கருத்தியல் ஒடுக்குமுறையை ஆதரிக்கிறார்கள் நம்மூர் இடதுசாரிகள்.

முகத்திரை தடை என்றாலும் கூட அது தனிநபர் உரிமையை பறிப்பது ஆகாதா? அநியாயம் தானே?

இது மனித உரிமை மீறல்தான். மறுக்க முடியாது. அங்கு தடை வஹாபிசத்தை மேலும் வலுவாக்கும். சட்டம் அல்ல, இது குறித்த ஒரு வெளிப்படையான பண்பாட்டு விவாதமே உதவும்.

2. இந்துத்துவா கட்சிகள் இஸ்லாமியருக்கு ஏற்படுத்தி உள்ள நெருக்கடியின் எதிர்விளைவாக பர்தாவை காணலாமா?

இல்லை. இது இந்திய இடதுசாரிகள் முன்வைக்கும் ஒரு பொய் மட்டுமே. இந்திய முஸ்லீம் இளம்தலைமுறையினரில் பெரும்பாலானோருக்கு அரசியல் பிரக்ஞை குறைவு. மதத்தலைமை கூறுவதை அப்படியே பின்பற்றுகிறார்கள். அவர்கள் பரிந்துரைப்பதை மட்டுமே படிப்பார்கள் பார்ப்பார்கள்.

3. பர்தா அணிவதை ஒரு எதிர்ப்புணர்வாக காண முடியாதா?

இல்லை. பர்தா அணிபவர்களே ஒழுக்கசீலர்கள் மற்றவர்கள் மதஎதிரிகள் என்பதான ஒரு கலாச்சார அழுத்தம் இச்சமூகத்தில் உள்ளது. உதாரணமாக, என் மகள் பள்ளிப் பருவம் வரை தலையில் முக்காடு கூட போட்டது கிடையாது. ஆனால் கல்லூரியில் சேர்ந்த பிறகு எனக்கே தெரியாமல் முக்காடு போடத் தொடங்கினாள். விசாரித்த போது பர்தா அணியும் தோழிகளை போல் அவள் இருக்க விரும்பவதாக தெரிந்தது.

மேலும் பர்தா கலாச்சாரத்தின் பின்னால் பிற்போக்கு சமயத்தலைவர்கள் உள்ளனர். எங்கும் இப்படி முழுக்க மூடும் வழக்கம் இல்லையே. உதாரணமாக கேரளா. அவர்கள் முக்காடு மட்டும் அணிவதே வழக்கம்.

கமலாதாஸ் அணிந்தாரே?

இஸ்லாத்தை வெற்றுமதத்தவர் தழுவும் போது தீவிர போக்காளர்களாகி விடுவார்கள்.

4. பர்தாவை வற்புறுத்துபவர்கள் அது பெண்களுக்கு பாலியல் பாதுகாப்பு தரும், ஒழுக்கவழியில் அவர்களை செலுத்தும் என்கிறார்கள். உண்மையா?

இது தவறு. பர்தாவினால் ஒழுக்க வாழ்வுக்கு சில பாதகங்கள் ஏற்படலாம். அரபு நாடுகளுக்கு சென்று வந்த என் நண்பர்கள் கூறியதுபடி அங்கு பர்தாவின் மறைவில் பின்–திருமண பாலுறவுகள் தாம் நிகிழ்கின்றன. மேலும், பர்தா எனும் உடல் மறைப்பு ஆண்களுக்கு உளவியல் ரீதியான தூண்டுதலை அளிக்கலாம்.

5. ஒரு பெண்ணியவாதியாக பர்தாவை எப்பிடி காண்கிறீர்கள்?

பர்தாவின் சமூகக் காரணத்தை பார்ப்போம். அரேபியர்கள் பாலைப் புழுதியில் இருந்து தங்களை காத்துக் கொள்ள உடலை மொத்தமாய் மூடும் அங்கியை அணிந்தனர். பெண்களுக்கான அத்தகைய ஆடை பர்தா. பெண்களை பர்தா அணிய வற்புறுத்தும் இந்திய இஸ்லாமிய ஆண்கள் தாம் மட்டும் அரபிய ஆண்களின் முழு அங்கியை அணிய மறுப்பது ஏன். இந்த முரணே ஆணாதிக்க மனப்பான்மையை காட்டிக் கொடுக்கிறது.

****************************************************************

பல்வேறு பண்பாட்டு அரசியல் காரணங்களால் இஸ்லாம் பற்றிய இத்தகைய விவாதங்களை பொதுத்தளங்களில் முன்னெடுக்க முடியாது. ஏற்கனவே ஒடுக்கப்பட்டுள்ள அச்சமூகம் காயப்படாமல் இருக்க நாம் கவனம் கொள்ள வேண்டும். பெண்ணுரிமை, மத-அடையாளம் மற்றும் உலகளாவிய அரசியல் நெருக்கடி என பன்முகம் கொண்ட இப்பிரச்சனையை அறிவியக்கங்கள் முன்னெடுக்க வேண்டும்.



Share This

13 comments :

  1. there is some limit dont across it.
    Mr.Mustafa first read the Al-Quran and Hadeed properly...
    U have answer to RAB(Allah)

    ReplyDelete
  2. ஹமீம் முஸ்தபா போன்ற குரல்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் ஒலிக்க எந்த ஆதரவு தளமுமே இருப்பதில்லை ,

    ஏன் , அந்த சமுதாயத்தின் பிரட்சனையை நன்கு அறித்தவரின் குரலுக்கும் , அந்த சமுதாயத்திற்கு வெளியில் நிற்கும் உங்கள் குரலுக்கும் சம்பந்தமே இல்லையே .

    காரணத்தை வெளியில் தேடுவதுதான் உங்களுக்கு சரி போல.

    ReplyDelete
  3. //there is some limit dont across it.
    Mr.Mustafa first read the Al-Quran and Hadeed properly...
    U have answer to RAB(Allah)//

    ஆரம்பிச்சிட்டாங்க பாருங்க , இவங்க முதல்ல குரானை படிச்சாங்களாக்கும் , அவர் கேட்கும் கேள்விக்கு பதில் இல்லை எனில் குரானை திணித்து வாயை மூட நினைப்பது .

    ReplyDelete
  4. Please check the judgement by Supreme court regarding use of Farta while taking photo for Election ID.

    ReplyDelete
  5. அரபு தேசங்களில் பிற மதத்தினர் பொது இடங்களில் தங்கள் மத வழிபாடுகள் கூடாது என்று சட்டம் போட்டால் அது அவர்கள் தேசம், அப்படி சட்டம் போடுவது அவர்கள் உரிமை என்கிறோம். ஆனால், பிரான்ஸ் தேசம் தன் நாட்டில் தன் இஷ்டப்படி சட்டம் போட்டால் மட்டும் குற்றமா? இது அவர்களின் நாடும் நாட்டு மக்களும் போடும் சட்டம். அதை எதிர்த்து கருத்து சொல்லுதல் எப்படி சரியாகும்?

    பர்தாவை தடை செய்யவேண்டுமா, இல்லையா என்பதல்ல என் வாதம். ப்ரான்ஸ் சட்டம் போட்டது தவறு என்பவர்கள், அரபு தேசங்களில் உள்ள சட்ட திட்டங்களை முதலில் விமர்சியுங்கள்...

    அதுசரி. ஏன் எதற்கெடுத்தாலும் பா.ஜ.க என்று உளருகிறார்களோ தெரியவில்லை. முஸ்லீம்கள் பர்தா போட்டால் அதற்கு காரணம் பா.ஜ.க.வா?

    //பர்தாவை வற்புறுத்துபவர்கள் அது பெண்களுக்கு பாலியல் பாதுகாப்பு தரும், ஒழுக்கவழியில் அவர்களை செலுத்தும் என்கிறார்கள். உண்மையா?//

    பாலியல் பாதுகாப்பு. எவரிடமிருந்து? ஆடவரிடமிருந்து. ஆண்கள் ஒழுங்காக இருந்தால் இந்த கேள்வியே தேவையில்லையே? இந்த கேள்வி, "ஆண்கள் அப்படித்தான். நாம் தான் ஒடுங்கி போகவேண்டும்" என்பது போல் இருக்கிறது.

    சரி! அரபு தேசங்களில் எதற்கு பர்தா? எந்த ஆண்களிடமிருந்து பாதுகாப்பு தேவைப்படும்? சொந்த அரபு தேச ஆண்களிடமிருந்தா? அப்போ அவர்களெல்லாம் ஒழுக்கம் இல்லாதவர்களா?

    //அரேபியர்கள் பாலைப் புழுதியில் இருந்து தங்களை காத்துக் கொள்ள உடலை மொத்தமாய் மூடும் அங்கியை அணிந்தனர். பெண்களுக்கான அத்தகைய ஆடை பர்தா. பெண்களை பர்தா அணிய வற்புறுத்தும் இந்திய இஸ்லாமிய ஆண்கள் தாம் மட்டும் அரபிய ஆண்களின் முழு அங்கியை அணிய மறுப்பது ஏன். இந்த முரணே ஆணாதிக்க மனப்பான்மையை காட்டிக் கொடுக்கிறது.//

    நச்.

    ReplyDelete
  6. sir BJP enna pannuchu ??? ithukum athukum enna relation??? vitta sila muslim families ponnungala padika anupamattengaranga enna BJPthan karanamnu solluvengala?

    ReplyDelete
  7. சிந்திக்கத் தூண்டும் பதிவு. உண்மையை உடைத்துப் போட்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். அதற்கு சீனு எழுதிய பின்னூட்டம் அருமை. அதற்கு யாரவது பதில் சொல்ல விரும்பினால், தெளிவாக, சால்ஜாப்பு சொல்லாமல், மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பதில் கூறுங்கள். நடுவே சம்மந்தம் இல்லாதவர்கள் வந்து விஷயத்தை திசைத் திருப்ப வேண்டாம். ஒரு ஆரோக்கியமான விவாதம் நடக்க வழிவிட்டு விடுங்கள்.

    ReplyDelete
  8. மதி, ஒரு பிரச்சனைக்கு பல கோணங்கள் அல்லது உண்மை அம்சங்கள் உள்ளன. அனைத்தும் சம்மந்தப்பட வேண்டிய தேவை இல்லை. இவ்விசயத்தில் நாம் திரு.முஸ்தபா மற்றும் ரசூல் ஆகிய ஒரே சமுதாயக்காரர்களே முரண்படுவதை கவனிக்க வேண்டும். காரணங்களை நான் வெளியே தேடவில்லை. பல சாத்தியங்களை முன்வைக்கிறேன்.

    ReplyDelete
  9. சீனு, உங்களது கண்ணுக்கு கண் தர்க்கம் இங்கே பொருந்தாது. மனித உரிமை எங்கு மீறப்பட்டாலும் தவறே. பிரான்ஸில் அது முஸ்லீம்களுக்கு எதிராக உள்ளது அவ்வளவே.

    வலதுசாரி பாஸிஸ்டுகள் இந்திய இஸ்லாமியர் மீது செலுத்தும் எதிர்மறை பாதிப்பை நாம் மறுக்க முடியாது. சரி, பங்களூரில் குண்டு வெடித்தது போல் இங்கு ஏன் நிகழவில்லை. தமிழர்களின் சகிப்புத்தன்மை மற்றும் பா.ஜ.க நிலைபெறாதது தான் முக்கிய காரணங்கள். சொறியும் புண்ணும் போல் பா.ஜ.கவும் தீவிரவாதமும்.

    ReplyDelete
  10. LK, இஸ்லாமிய பெண்கள் படிப்பது இப்போது அதிகமாகி உள்ளது. நான் பா.ஜ.கவின் பங்கை பெரிதுபடுத்தவில்லை. பார்ப்பன வலதுசாரிகள் காந்தியை கொன்று பாபர் மசூதியை இடித்தது வரை தேவைக்கு அதிகமாகவே இந்தியாவின் ஆன்மாவை காயப்படுத்தி இருக்கிறார்கள்.

    ReplyDelete
  11. பர்தா ஒழுக்கத்தை நிறுத்திப் பிடிக்கும் என்று நம்புவதற்கில்லை. 'ஆயிரத்தி ஓர் இரவுகள்' வாசித்து அறியலாம். வள்ளுவரும், 'சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை' என்கிறார். நமக்கும் அது சரி என்றே படுகிறது.

    மத்தியகிழக்கில் தோன்றிய மறைநூல்கள், சைத்தான் இடையிட்டதைத் தொட்டடுத்தே ஆடைக்கான அவசியம் வந்ததாகக் கூறுகின்றன. குற்ற உணர்வு காரணமாக உருவான ஒன்று ஆளையே மூடிவிட்டது, விடுங்கள்.

    வெளித்தெரிய ஒருவர் பூணூலையோ சிலுவையையோ போட்டுக்கொண்டு அலைந்தால் நன்றாகவா இருக்கும்? சீக்கியர்கள் உட்பட தாடி தலைப்பாகை இல்லாத ஒரு தோற்றம் சாத்தியப் படும் என்றால் நல்லதுதான். ஆனால் சமயம் என்பதே கட்டுப்பாடுதானே? அதற்குள் என்ன விடுதலை பற்றிய பேச்சு!

    ஒரு கட்டுப்பாட்டு அமைப்பை (சமயம்) இன்னொரு கட்டுப்பாடு (அரசியல் அமைப்பு) கட்டுப்படுத்த எகிறுவதும் வழிவழியாக வரும் வழக்கம்தானே? ஒருவர் விடுதலை உணர்வுள்ளவர் என்றால் இதில் கட்சி ஆடுவதற்கு என்ன இருக்கிறது?

    நாளை நமக்கும் இது நடக்கலாம் என்றால்... அலுப்பான அச்ச உணர்வின் நீட்டல்களுக்கும் அறிவுக்கும் என்ன வேறுபாடு?

    ReplyDelete
  12. anbaana anaithunanbarkalukkum orupen thanathu udalai,udal;alagai moodi maraiththirunthaal yaarukkukastam,allathu yaarukkunastam yenakkutherinthavarai pombalai porikkikalukkuthan "ISLAM"oru matham alla "MAARKAM" ATHUYELLORUKKUMPURIYATHU PURINTHUKONDAVARKAL antha MAARKATHAI PINPATRUKIRAKAL 1431 aandukalaga valrnthuvarum maarkam islaam, aanaal 1431aandukalaga pira" MATHANGAL "kurukivarukindarana kaaranam islaathil ulla samathuvamay orupen parthavai anivathum aniyaathathum avalinviruppamey nee aniyakkootathu yenbathu thanimanitha urimaimeeral.saathikalillayadipaapaayendrusonna baarathi orutheeviramaana kaalipakthan.kadavuleyILLAIyendrusonna "PERIYAR"PIRAPPAAL! biraamanan parthavukku yenna kadamai yenbathai neeengal ariyavendumaa? vaarungal ISLAAM UNGALAIARAVAINATTHUKKOLNDU NAER VALIKAATTI ATHANAIUNGALUKKU "ARIYAVAIKKUM"

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates