இன்று காலையில் என் கல்லூரி நண்பர்களுடன் ஒரு உஷ்ணமான இலக்கிய விவாதம். மனுஷ்யபுத்திரன் தன்னிரக்க கவிதைகளையே எழுதி வருவதாக ஒரு நண்பர் சொல்லி, பிறகு நான் மறுக்க, அவர் தன் கருத்தை மலைப்பாம்பு போல் விழுங்கி துப்பவும் முடியாமல் பிறகு ஜகா வாங்கினார். நான் ம.புவின் சக்கர நாற்காலியின் அனுகூலங்கள் குறித்த கவிதை அன்றாட வாழ்வின் அபத்தங்கள் குறித்தது என விளக்க, நண்பர் தான் ஒட்டுமொத்த நவீன கவிதை இயக்கமுமே தனிமனித தன்னிரக்கத்தை பேசுவது; அத்தகைய நவீன கவிஞர்களுள் ஒருவர் ம.பு என பொருள்பட சொன்னதாய் ஒரு ஊடுபாதைக்குள் நுழைந்தார்.
ம.பு ஒரே மாதிரியான கவிதைகளை மீண்டும் மீண்டும் எழுதுவதாய் அவதானிப்பது அரைகுறை வாசிப்பின் விளைவுதான். ம.புவின் வாசகனாக மட்டும் அல்ல, பொதுவாக தமிழ் கவிதை வாசிப்பில் உள்ள சிரத்தை இன்மையை குறிப்பிடவே இதை எழுதுகிறேன். நாம் ஒரு எழுத்தாளன் குறித்து ஒற்றை வாக்கியத்தை உருவாக்கி வைத்து தத்தைகளின் கூண்டு வரிசை போல் ஒப்பிக்கிறோம். இன்னும் சில வருடங்களில் முகுந்த் நாகராஜன் என்ன குழந்தைகளைப் பற்றியே திரும்பத் திரும்ப எழுதுகிறார் என்று புகார் செய்வோம்.
ம.பு தனது கவிதை மொழிக்குள் கூறுமுறை மற்றும் கரு சார்ந்து பற்பல சாத்தியங்களை முயன்றுள்ளார். தேவதேவன் அளவுக்கு மீளமீள வரும் ஒரு உருவகத்தை கூட நீங்கள் காட்ட முடியாது. அவருடைய ”நீ” கூட ஒருவர் அல்ல. கீழ் வரும் மனுஷ்யபுத்திரன் கவிதையை பாருங்கள்.
கன்னிமையின் முலைப் பால்
கன்னிமை நீங்கா
உன் முலைகளில்
கசிந்துவரும்
பாலின் மணத்தில்
திடுக்கிட்டு எழுகிறது
இந்த இரவு
காமத்தின் அனல்பறக்கும்
என்முகத்தில் பட்டுத் தெறிக்கிறது
அதன் ஒரு அமிலத் துளி
வெளியே
தொடங்குகிறது
இதற்குமுன் பெய்திராத பெரு மழை
பாலின் வாசனையை
எங்கெங்கும் கொண்டுவரும் ஒரு மழையை
யாரும் அதற்கு முன் பார்த்ததே இல்லை
இன்னும் பிறக்காத
ஆயிரம் ஆயிரம் சிசுக்கள்
இன்னும் திறவாத
கண்களில் நீர் தளும்ப
அம்மையின் முலைதேடி
தவியாய் தவிக்கின்றன
உன் கன்னிமை முலைகளில்
பெருகும் பாலின் விசித்திர சுவையை
ஒரு கணம் தன் நாவால் தொட்டு அறிகிறாய்
பின்
ந்கரவே நகராத
காலத்தின் சுவர்களில்
அதைப் பீய்ச்சுகிறாய்
(31.1.2010
8.32 pm)
மானுட குலம் என்றுமே உணர்ந்து வெளிப்படுத்த முடியாத ஒரு திகைப்பை இந்த கவிதை பேசுகிறது. அதுவும் எத்தனை உக்கிரமாக. பாலமணம் கொண்டு வரும் பெருமழை மிக sensous-ஆன ஒரு படிமம்.
துவங்கி உறைந்து நிற்கும் ஒரு முழுமையை கவனியுங்கள். கன்னிமை, மழைக்கு முன்னான அக்கன்னியின் முலைப்பால் மணம், ஒரே ஒரு துளி இவை துவங்காமலே தேங்கி நின்று விகசிக்கும் தன்மை கொண்டவை.
மழை கூட வாசனையை தான் கொண்டு வருகிறதே ஒழிய பாலை அல்ல. இந்த வராமை, வெளிப்படாமையை கவிதையின் ரகசியமாக, பிரபஞ்ச புதிரின் விடையாக நீங்கள் பல விதங்களில் விளங்கிக் கொள்ளலாம.
”நகரவே நகராக காலத்தின் சுவர்கள்” முக்கியமான வரி. கவிதையின் ஒரே திட்பமான உருவகம் இது. அந்த பெண் அப்படி பீய்ச்சி அடிப்பதில் ஒரு அவலம், குமுறல் அல்லது அவளது வெற்றி உள்ளது. ”சிற்பியின் நகரம்” நினைவு வருகிறது.
இன்னும் எத்தனையோ விதங்களில் படிப்பதற்கான சாத்தியங்களை உள்ளடக்கின கவிதை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
பொதுவாக, கவிதை புரியாதவர்களே விமர்சகர்கள் ஆகிறார்கள். டி.எஸ். எலியட், எஸ்ரா பவுண்ட் முதலியோரும் விமர்சகர்களாகி இயல்கையில் கவிதையை நழுவ விடுகிற அவலத்தையே காண்கிறோம். அது காரணமாகத்தான் அவர்கள் தத்தம் தொழில்நுட்பங்களைப் பெரிதுபேசித் தம் படைப்புகளை நியாயப் படுத்த நேர்ந்திருக்கிறது. (ஒரு படைப்பாளி விமர்சகராகவும் இருக்க நேர்ந்தால், தன் படைப்புகளுக்கு முன்பாக ஏனையோர் படைப்புகளைக் கட்சிகட்டி, தன்னை நியாயப் படுத்துகிற அவ வதைபாட்டில் இருந்து தப்பவே முடியாது). தன் குஞ்சு பொன்குஞ்சுதானே?
ReplyDeleteமனுஷ்ய புத்திரனின் கவிதை பற்றி உங்கள் விளக்கம்..., விடுங்கள், என்னதான் மொழி என்னும் கருவி மூலம் வெளிப்பட்டாலும் கவிதை, அறிவுகொண்டு தீண்டும் கிட்டத்தில் இல்லை. அதை உணர்ந்து கொளுவ மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளை நாடுவதே உரிய வழி.
என்றால் பாவம் ஒரு விமர்சகர் என்ன செய்வார்? சிக்கல்தான். அவர், கவிதை போன்ற உன்னதக் கலைகளை, அறிவுக்கு எடுக்காமல் உணர்வுத் தளத்திலேயே சந்திக்கிற வார்த்தைகளைத் தேர வேண்டும். அவ் வழியாகவே வாசகர்களுக்கு அவர் உதவக் கூடும்.
கன்னிமை - காமம் - இருண்மை - அதிர்ச்சி - பெருமழை - புணர்தலும் நிமித்தமும் - இரவு - பால்மணம் - அமிலம் - தாய்மை - சிசுக்கள் - சிறு பெண் - காலம் - மறிதல் - அறிதல் - தடை - வெளிப்பாடு
இப்படி. மன்னிக்க, நான் விமர்சகன் இல்லை. மேலும் சொல்லளவில் உணர்ந்து தொடவே முயல்கிறேன். உள்ளுறைகள் அவரவர் வாசிப்பில் பல்கி வரக் கூடும்.
- ராஜசுந்தரராஜன்
//பொதுவாக, கவிதை புரியாதவர்களே விமர்சகர்கள் ஆகிறார்கள்.//
ReplyDeleteநண்பர் ராஜசுந்தார்ராஜன் சொல்வது மிகவும் சரி.அந்த வரிகளை இப்படியும் கொள்ளலாம் .
கவிதை புரிந்தவர்கள் விமர்சிப்பதில்லை. இதுவே என் கருத்து,