சினிமா பார்வையாளனுக்காக எடுக்கப்படுகிறது. இலக்கியம் வாசகனுக்காக எழுதப்படுகிறது. கிரிக்கெட் மட்டும் ஆட்டக்காரர்களுக்காகவே ஆடப்படுகிறது.
கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்காகவே (தங்களுக்கு உள்ளாகவே) பேசிக் கொள்கிறார்கள். ஆட்டத்தொடர் இழப்புகள் தற்போதெல்லாம் தேர்தல் முடிவு அறிக்கைகளை நினைவு படுத்துகின்றன. இந்தியாவுக்கு வந்து டெஸ்ட் தொடரை இழந்த ஆஸி அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் பெரும்பாலும் நாங்கள் தான் சிறப்பாக ஆடினோம் என்று பிடிவாதம் பிடித்தார். சமீபமாக இந்தியாவில் பந்து வீச்சு காரணமாக இரு தொடர்களில் தோற்ற இலங்கை அணி தலைவர் சங்கக்காரா நன்றாகவே பந்து வீசினோம் என்று வாதித்தார். இந்தியா-தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் ஆட்டம் நடந்து வரும் போது துலிப் கோப்பை எனும் உள்ளூர் மண்டல ஆட்டத்தின் கடைசி நாள் நடந்தது. இரண்டும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகின. இந்தியாவின் சர்வதேச பந்து வீச்சுக்கும் உள்ளூர் வீச்சு மற்றும் பீல்டிங்குக்கும் மிகச்சிறு வித்தியாசமே. தெற்கு மண்டல அணி நிர்ணயித்த 536 ஓட்டங்களை அடைந்து மேற்கு மண்டல அணி உலக சாதனை படைத்தது. யூசுப் பதான் கடுமையான கால் வலியைப் பொறுத்துக் கொண்டு அசுர ஆட்டம் ஆடினார். 190 பந்துகளில் 210 ஓட்டங்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 290 சொச்சம் எடுத்தது. ஒப்பிடுகையில் சர்வதேச ஆட்டம் மிக மந்தமாக இருந்தது. பந்து வீச்சு எதிர்மறையாகவும் சோர்வுடனும் இயங்கியது. ஹர்பஜன் சிங் கற்பனைக் குச்சிகளுக்கு குறி வைத்து வீசினார். காஷ்மீர் குடிமக்களை விட சற்று குறைவாகவே பாதுகாப்பின்மையை உணரும் அமித் மிஷ்ரா பத்து ஓவர்களுக்குள் விக்கெட் விழாத ஆத்திரத்தில் தாறுமாறாக வீசினார். ஏற்கனவே மூன்று மட்டையாளர்களை காயத்தினால் இழந்த வெறுப்பில் இருந்த தோனி தெ.ஆ 100 தாண்டியதும் எப்படியாவது டி.ரா செய்வது என்று வினோதமாக சிந்திக்க தொடங்கினார். இதை தெற்கு மண்டல அணித்தலைவர் தினேஷ் கார்த்திக்கின் அணுகுமுறையுடன் ஒப்பிடுவோம்.
கார்த்திக்கின் அணி ஆட்டத்தின் முதல் நான்கு நாட்களும் வலுவாக இருந்தது. 149 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் மேலும் ஒரு நாள் ஆடி டிரா செய்திருந்தால் ஓட்ட முன்னிலை காரணமாக கோப்பையை கைப்பற்றி இருக்கலாம். ஆனால் டிக்ளேர் செய்து இலக்கை தந்து மேற்கை ஆட அழைத்த கார்த்திக்கின் முடிவு மிக ஆரோக்கியமான நேர்மறையான ஒன்று. அதை விட முக்கியமாக சட்டென்று சோர்விலிருந்து மீண்ட மேற்கு அணி இறுதி ஒன்றரை நாட்களும் மிக ஆவேசமாக ஆடி எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஆட்டத்தை வென்றது. முதல் நாள் ஆட்ட முடிவில் தோனி சொன்னது இதை எல்லாம் விட கொடுமையானது.
எந்த வித ஈடுபாடோ தன்னம்பிக்கையோ இன்றி தெ.ஆவை கிட்டத்தட்ட முன்னூறு ஓட்டங்கள் எடுக்க விட்ட தன் அணியின் “பந்து வீச்சு நன்றாகவே இருந்தது” என்றார் தோனி. உள்ளூர் ஆட்டக்காரர்களை விட பலமடங்கு அதிகமாக கோடிகளில் சம்பாதிக்கும் இந்தியாவின் சர்வதேச அணியினர் கிரிக்கெட் ஒரு கேளிக்கை ஆட்டம் என்பதை மறந்து பல வருடமாகிறது. தங்கள் இடம் மற்றும் அந்தஸ்தை தக்க வைக்க 22 பேர் மூக்கு நோண்டுவதை பொது அரங்கில் ஏன் நடத்த வேண்டும்; நேரடி ஓளிபரப்பு செய்ய வேண்டும்? டெஸ்டு ஆட்டத்தின் கட்டமைப்பில் எந்த மாற்றத்தையும் அனுமதிக்க இவர்கள் தொடர்ந்து மறுத்து வருவதன் காரணம் இந்த நீரோ மனநிலைதான். யூசுப் பதான் பத்து ஆறுகள் மற்றும் 19 நாலுகள் விளாசி ஆட்டத்தை மிக விறுவிறுப்பாக கொண்டு செல்ல தெ.ஆ-வின் சர்வதேச மட்டையாட்டம் பொக்கை வாயர்கள் வெற்றிலை மடித்து மெல்லுவதற்கு சமமாக இருந்தது. மிகப் பொருத்தமாக இவர்களின் இந்த மெத்தன ஆட்டம் போன தலைமுறை கிரிக்கெட் எச்சமான கவாஸ்கருக்கு ரொம்ப பிடித்திருந்தது.
வங்கதேசத்துக்கு எதிரான இந்திய தொடர் நிகழ்ந்து கொண்டிருந்த போது இங்கே கர்நாடக மற்றும் மும்பை அணிகள் மோதிய ரஞ்சி இறுதி ஆட்டம் நடந்தது. அது சர்வதேச ஆட்டத்தை விட தரமானதாக இருந்தது மட்டுமில்லை, மைதானம் ரொம்பி வழிந்தது. நம்ப மாட்டீர்கள்! அரங்கத்தில் இடம் கிடைக்காமல் மரங்கள் மற்றும் பக்கத்து கட்டிடங்கள் மீதெல்லாம் நின்று கர்நாடக அணி ஆதரவாளர்கள் பார்த்தார்கள். ஒருவர் தெருவிளக்கு கம்பத்தில் தொங்கினபடி கர்நாடக கொடியை அசைத்தபடி இருந்தார். சர்வதேச ஆட்டங்கள் பார்த்தால் கொட்டாவி விட்டு வாய் ஒரே அடியாக கோணி விடும். ஆனால் இந்த உள்ளூர் ஆட்டத்திற்கான மொத்த கூட்டமும் திருவிழா மனநிலையில் இருந்தது. இறுதி சில மணிநேரங்களில் ஒவ்வொரு பந்துக்கும் ஆரவாரம் மற்றும் பெருமூச்சு. தவறான முடிவு தந்த நடுவருக்கு எதிராக “டவுன் டவுன் அம்ப்யர்” கோஷம். ஐந்து நாட்களும் மனக்கிளர்ச்சி, ஏமாற்றம் என்று ராட்சத ராட்டினத்தில் போல் அவர்களின் உணர்வுகள் உச்ச-இறக்கங்களை கண்டன. சமீபத்தில் இந்தியாவில் நடந்த எந்த சர்வதேச டெஸ்டுகளுக்கும் இத்தனை கூட்டம் வந்ததில்லை.
வங்க அணித்தொடர் மிகத் தமாசாக இருந்தது. இந்தியா நாம் ஜெயிக்க வேண்டாம் அவர்களே தோற்று விடுவார்கள் என்ற மனநிலையில் இருந்தது. வங்கதேசம் கௌரவமாக தோற்க விரும்பியது. அதனாலே வங்கதேசத்தால் 20 விக்கெட்டுகளை விழ்த்த முடியாது என்று சேவாக் போட்டு உடைத்ததும் குஷ்பு சர்ச்சை போல் ஒன்று அங்கு கிளம்பியது. வங்கதேச சுயதோல்விகள் முடிந்ததும் மீண்டும் வங்கதேசத்திற்கு சர்வதேச அங்கீகாரம் தந்தது தவறு என்று மற்றொரு சர்ச்சை ஆரம்பித்தது. தெருக்கோடியில் சிறுவர்கள் ஆடுவதைப் போன்ற டெஸ்டுகளை பார்த்த ஒரு வெறுப்பில் உருவானதே இந்த சர்ச்சை. சரி தரம் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்ற கேள்வி எழலாம்.
ரஞ்சி இறுதி ஆட்டத்தில் மோதின கர்நாடக மற்றும் மும்பை அணிகளுக்கு வங்க தேசத்தை விட ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. இந்தியாவில் கிரிக்கெட் 18-ஆவது நூற்றாண்டில் இருந்தே ஆடப்படுகிறது. நமது உள்ளூர் மட்டையாளர்களின் தொழில் நுட்பம், பொறுமை மற்றும் மன-ஒழுக்கம் 35 வருட பாரம்பரியம் கொண்ட வங்கதேச வீரர்களை விட சிறப்பாக உள்ளது. முக்கியமாக வங்கதேச அணிக்கு உயர்தரமான, நெருக்கடி ஆட்டங்களை வென்ற பழக்கம் இல்லை. வெற்றி பெறும் கலை அவர்களுக்கு தெரியாது. சிம்பாப்வே, கென்யா போன்ற சர்வதேச குட்டி நாட்டு அணிகளுக்கும் இதுவே நிலைமை. இவற்றை விட இந்திய, தென்னாப்பிரிக்க, ஆஸி உள்ளூர் அணிகள் பிரமாதமாக ஆடும். ஆனால் தனி நாடு அந்தஸ்து உள்ளதனாலே தங்களின் மட்டமான அணிகளுக்கு சர்வதேச அரங்கில் அந்தஸ்து பெற்றுத்தர இத்தேசங்களால் முடிகிறது. உள்ளூர் அரசியலில் என்ன குழப்படிகள் நடந்தாலும் தமிழ் ஈழத்தில் போல் அங்கு ஆளாளுக்கு நேரடியாக தலையிட முடிவதில்லை. இங்கு ஆ.முத்துலிங்கம் தமிழ் அழியும் என்பதற்கு சொன்ன காரணத்தை நினைவுறுத்த விரும்புகிறேன்.
மீண்டும் அந்த ரஞ்சி இறுதிப் போட்டிக்கு. தற்போது உள்ளூர் ஆட்ட ஓட்டங்கள் மற்றும் விக்கெட்டுகளுக்கு தேர்வு அணியினர் மதிப்பளிப்பதில்லை. குறிப்பாக 28 வயது தாண்டியவர்கள் மற்றும் எதிர்மறை பிம்பம் பெற்றவர்கள் என்னதான் கரணம் அடித்தாலும் சர்வதேச வாய்ப்பு கிடைக்காது. மும்பை அணி முழுக்க இத்தகைய நிராகரிக்கப்பட்ட பிளாட்பார்ம் வாசிகளால் ஆனது: அகார்க்கர், பொவார், ஜாபர், சால்வி ... கர்நாடக அணியில் மிதுன் மற்றும் மனிஷ் பாண்டே மட்டுமே ஓரளவு தேர்வாளர் கவனத்தில் உள்ளவர்கள். பிறர் புதுமுகங்கள். இரு அணிகளுக்கும் போட்டி முடிவினால் அணித்தேர்வு போன்ற அனுகூலங்கள் பெரிதாக இல்லை. இருந்தும், அவர்கள் நம் சர்வதேச நட்சத்திரங்களை விட தீவிரமான அணுகுமுறை மற்றும் அதிக ஊக்கத்துடன் ஆடினர். இந்திய-ஆஸி ஆட்டத்தில் நிகழும் சச்சரவுகள் சில இங்கும் காணக் கிடைத்தன.
அகார்க்கருக்கு ஒரு பழக்கம்: ஒவ்வொரு ஷாட் அடித்த பின்னரும் கிரீசிலிருந்து சில இஞ்சுகள் வெளியேறி நிழற்பயிற்சி செய்வார். இதை கவனித்த எதிரணி கீப்பர் கவுதம் ஒருமுறை அகார்க்கர் இப்படி வெளியேறிய போது பந்தை வீசி ரன் அவுட் செய்தார். தனது சர்வதேச ஆட்டங்களின் போது டக்கடித்தாலும் பொருட்படுத்தி இராத அகார்க்கர் இம்முறை கொதித்து போனார். அவுட் அளித்த நடுவருடன் நீண்ட வாதம் நடத்தினார். கர்நாடகாவின் ஸ்பின்னரும் சர்வதேச ஆட்டங்களில் அகார்க்கருடன் ஆடியுள்ளவருமான சுனில் ஜோஷி குறிக்கிட்டு அகார்க்கரை மேலும் வெறுப்பேற்றினார். இதனால் அகார்க்கருக்கும் எதிரணியினருக்கும் இடையே ஒரு தனிப்பட்ட பகைமை ஆரம்பித்தது. அகார்க்கர், தவல் குல்கர்னி மற்றும் உத்தப்பாவின் ஆட்ட சம்பளத்தில் 50 சதம் அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த இன்னிங்சில் அகார்க்கரை காட்ச் பிடித்து வெளியேற்றி கர்நாடக தலைவர் உத்தப்பா பந்தை தரையில் ஆவேசமாய் வீசியபடி கொண்டாடினார். அகார்க்கர் நடுவரிடம் முறையிட்டு வெளியேற சற்று நேரம் மறுத்தார்.
மும்பையின் அணி உணர்வு அபாரமானது. சச்சின் கூட மும்பைக்காக ஆடும் போது அதிக ஒன்றுதலுடன் கூடுதல் ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார். முதல் நான்கு நாட்களிலும் மும்பை தனது 38 முறைகள் கோப்பை வென்ற பாரம்பரியம், அபிமானத்தை காப்பாற்றும் வெறி மற்றும் ஒருங்கிணைவு காரணமாய் சிறு முன்னணி பெற்றிருந்தது. அதற்கு நெருக்கடி நிலைமையில் மட்டையாடிய அபிஷேக் மற்றும் குல்கர்னியின் போராட்ட குணம் மற்றும் மன-ஒருமை காரணமாக இருந்தது. அபிஷேக் தனது கவனத்தை மேம்படுத்த மூன்றரை மணி நேரமும் ஒவ்வொரு பந்துக்கும் இடையே ஏதோ மந்திரத்தை விடாமல் ஜெபித்தது வினோதமான காட்சி. சர்வதேச அணியில் நுழைந்தால் நம்மவர்களுக்கு இந்த அர்ப்பணிப்பு மறந்து விடும்.
337 இலக்கை மும்பை கர்நாடகாவுக்கு நிர்ணயித்தது. கர்நாடகா மட்டையாட வந்த போது அகார்க்கர் தனது கோபத்தை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி வெளிப்படுத்தினார். அகார்க்கரை தவிர்க்க நான்காவதாக் இறங்கி ஆடின துவக்க ஆட்டக்காரர் உத்தப்பாவை வெளியேற்றிய போது அகார்க்கர் அவரை உசுப்பேற்ற சற்று கூடுதலாகவே கொண்டாடினார். 46க்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து தோல்வியை நோக்கி விரைந்து கொண்டிருந்தது கர்நாடக அணி. முந்தின நாள் காற்றில் பறந்து ஒரு கேட்ச் பிடித்த மனிஷ் பாண்டே அதிரடியாக 144 அடிக்க ஆட்டத்திசை மாறியது (http://www.youtube.com/watch?v=kL1E4nGqOQA&feature=youtube_gdata). ஆனாலும் மும்பையினர் விட்டுக் கொடுக்க இல்லை. விழுந்து புரண்டு மிகச்சிறப்பாக பீல்டிங் செய்து பல நாலுகளை தடுத்தனர். இந்த அணி விசுவாசம் கடைசியில் அவர்களை காப்பாற்றியது ஆறே ஓட்ட வித்தியாசத்தில் வென்றனர். நமது வரலாற்றிலேயே எந்த இந்திய அணியும் இத்தனை அணியுணர்வு மற்றும் ஆவேசத்துடன் போராடியதில்லை. ஆனால் இவ்வளவும் நடந்து கொண்டிருந்த போது நம்மவர்கள் வங்க தேசத்தில் தூங்கி வழிந்து கொண்டிருந்தனர். சேவாக்கும் யுவ்ராஜும் எளிய கேட்சுகளை கோட்டை விட்டு முழித்தனர். வங்கதேசம் இவ்விசயத்தில் மட்டும் இந்தியாவுடன் போட்டி இட்டது.
இரண்டு உள்ளூர் இறுதி ஆட்டங்களிலும் தோற்ற அணித்தலைவர்கள் நாங்கள் தான் ஜெயித்தோம் என்று முரண்டு பிடிக்கவில்லை. எதிரணியை பாராட்டினார்கள்.
இன்று பொதுத் தளங்களில் ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் தாம் போலிகளை நட்சத்திரங்களாக்கி முன்வைக்கின்றன. இவர்களின் அசட்டுத்தனங்கள் செய்தியாக பெருக்கப்பட எதை பொருட்படுத்த என்ற பெருங்குழப்பம் நமக்கு ஏற்படுகிறது. திருதிராஷ்டிரனின் ஒவ்வொரு தடுமாற்றத்துக்கும் அபாரமான அசைவுகள் ஆஹா என்று கை தட்டுகிறோம். அசலான நட்சத்திரங்களைக் காண கொண்டாட்ட மேடைகளின் பின்னே செல்ல வேண்டி உள்ளது. இருட்டில் ஒளி விடுவது நட்சத்திரங்களின் விதி போலும்.
No comments :
Post a Comment